Tuesday, 1 February, 2011

நீ இல்லாம எப்படிடா…

(ஏதாவது புதிதாக எழுதலாமென்ற நப்பாசையால், இந்த பதிவுக்கு மூன்று கிளைமாக்ஸ் வைத்துள்ளேன், படித்துவிட்டு செருப்பால் அடிக்காமல் இருந்தால் தன்யனாவேன்)

சென்னையில் தென்றல் அடித்து பார்த்திருக்கிறீர்களா, அதுவும் மே மாதத்தில், நான் பார்த்தேன் அதுவும் கண்ணுக்குள். கொஞ்சம் குழப்பமாக இருந்தால், நீங்கள் அவளை இன்னும் பார்க்கவில்லை என்று அர்த்தம். அர்த்தமற்று கிடந்த என் வாழ்வில், விளக்கமாய் இருந்த அவளை, அன்று பார்த்தநாளிலிருந்து ஏனோ, தெரியவில்லை, சென்னை பிடித்துப்போனது.

அவளுக்காக தினமும் 4 தடவை பல்விளக்க ஆரம்பித்தேன். என் வீட்டு பாத்ரூம் சன்னலைத் திறந்தால் பக்கத்து வீட்டில் அவள், கூந்தலுக்கு சிக்கெடுத்துக் கொண்டு, என் மனதோ சிக்கலாகிப்போனது. அவளிடம் எப்படியாவது பேசிவிடவேண்டும் என்ற வைராக்கியமே, இந்த செமஸ்டரில் பாசாகிவிடவேண்டும் என்ற வைராக்கியத்தை விட மேலோங்கி நின்றது.

குத்துப்பாடல்களின் ரசிகனாய் இருந்த எனக்கு, அன்று முதல் காதல் பாடல்களையே கேட்க தோன்றியது. அவள் நினைப்பாகவே தடம்மாறிய மனதால், பேருந்தின் தடமும் மறந்து போக, கல்லூரிக்கு தாமதமாக செல்ல ஆரம்பித்தேன்

அப்படி ஒருநாள் கல்லூரிக்கு செல்லும் பேருந்தில்தான், அவள் கூவ மன்னிக்க பேசக்கேட்டேன்,

“எக்ஸ்க்யூஸ்மி..ஸ்டெல்லா மேரிஸ் ப்ளீஸ்..”

அவள் அப்பன் சம்பாதித்த பணமாக இருந்தாலும், அவள் கைபட்டதால், அவள் பணமாகி, என் சட்டைப்பைக்குள் அடைபட்டு போனது, என் அப்பன் சம்பாதித்த பணம், கண்டக்டருக்கு சென்றது.

“ஏங்க..எதிர்த்த வீட்டுலதான இருக்கீங்க..”

எங்கிருந்து அந்த தைரியம் வந்ததென்று தெரியவில்லை. கேட்டேவிட்டேன்

ஏதோ பருந்தைப் பார்க்கும் கோழிக்குஞ்சு போல பார்த்து மிரண்டாள். போட்ட “பேர் அண்ட் லவ்லி” பத்தலையோ என்று நினைத்துக்கொண்டேன், அவமானமாகவும் நினைக்க ஆரம்பித்தேன். இதெல்லாம் அவமானமாக நினைத்தால், ஒருவனுக்கும் காதல்திருமணம் ஆகாது என்ற சீனியர்களின் தத்துவத்தை மனது நினைத்தாலும் “பெரிய இவளாக்கும்..” என்ற ஆணாதிக்கமனப்பான்மையே ஜெயித்தது

“எக்ஸ்க்யூஸ்மி…” மீண்டும் பி.சுசிலா குரல் என் காதருகே. இந்த முறை ஆவலாக திரும்பவில்லை, ஏனோ வைராக்கியம்.

“எஸ்..வாட் டூ யூ வாண்ட்டு..(கனவிலும் இங்க்லீபீசு பேசுவேன் என நினைக்கவில்லை)

“சாரிங்க..அன்னைக்கு நீங்க கேள்வி கேட்டப்ப பதில் சொல்லமுடியலை..நீங்க எதிர்த்த வீடுதானே” என்றாள்.

எனக்கோ, காதுக்குள் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அமர்ந்துகொண்டு வாசிப்பது போல் இருந்தது. அதற்கு மேல் பேச ஆரம்பித்தேன், பேச ஆரம்பித்தேன், என்ன பேசினேன் என்று எனக்கே தெரியவில்லை. அதற்குமேல் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவள் என்னிடமும், வாய்ப்பு கிடைக்காதபோதும் நானும் அவளிடம் பேச ஆரம்பித்தோம்.

“என்னை எப்படி பிரண்டா ஏத்துக்கிட்ட” என்று கேட்கும்போதெல்லாம் அவள் என்னிடம் சொல்லும் வார்த்தை “நீ இல்லாம எப்படிடா..”

எனக்கென்னமோ, பீச்சில் விற்கும் கடலையை விட, இந்த கடலை நிறைய பிடித்திருந்தது. நீயூட்டனின் மூன்றாம் விதிப்படி, நட்புக்கு எதிர்விசையாக காதலும் எனக்குள் எட்டிப்பார்த்தது.

“நீ இல்லாமல் எப்படிடா” என்று மூச்சுக்கு மூணு தடவை சொல்பவள், “ஐ.லவ்.யூ” என்று நான் சொல்லும்போதும் “நீ இல்லாமல் எப்படிடா” என்று சொல்லுவாள் என்ற நினைப்பே நெஞ்சில் அகர்வால் ஸ்வீட் போல இனித்தது.

காதலை வைத்து கடையை ஓட்டும் பணக்கார “ஆர்ச்சீஸ்” கிரீட்டிங் கார்டு கடைக்குள் அன்றுதான் முதல்முறையாக நுழைந்தேன். பலகார்டுகளை ரிஜெக்ட் செய்து ஒரு கார்டை மட்டும் செலக்ட் செய்து பில்போடும் வேளையில் “அண்ணே..இருங்க..வேற கார்டு” என்று ஆரம்பிக்க, “தம்பி..இதுக்குமேல கடைய பூட்டிடுவோம், 9 மணி ஆச்சு” என்ற கடைக்காரர் மிரட்டலால் வெளியே வந்தேன்.

காதல் கொண்டேன் தனுஷ் போல க்ரீட்டிங்க் கார்டை சட்டைக்குள் மறைத்துக்கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் காதலை சொல்ல முற்பட, அவள் சொன்னாள்.

“இரு, மனோஜ் வரட்டும்..”

திடுக்கிட்டு போனேன். வில்லனாகிய மனோஜூம் வந்தான். என்னைவிட அழகாக இருந்தான், அதுவே எனக்கு புளியோதரையை வயிற்றில் கரைத்தது.

“ஏ..திஸ், இஸ் மனோஜ்..மை பெஸ்ட் பிரண்ட்” என்று அறிமுகம் செய்ய, பக்கத்துக் கடையில் ஜெராக்ஸ் மிஷின் சத்தம் பலமாக கேட்டது.

“நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க..நான் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வர்றேன்” என்று எங்கயோ சென்று விட்டாள்.

“அப்புறம் சார்..எப்படி இருக்கீங்க..” என்றான்

“போடா..கொலைவெறியில இருக்கேன்” என்று சொல்லத்தான் ஆசை..முடியாமல் சிரித்துவைத்தேன்.

அவனே ஆரம்பித்தான்..

“நல்ல பொண்ணு..நல்ல பிரண்டு கூட… அவகூட எப்படி பிரண்ட்ஷிப் ஆரம்பித்ததுன்னா..” என்று பேச ஆரம்பித்தபோது, ஏதோ என்னுடைய கதையை நானே கேட்பது போல் இருந்தது..எனக்கு குலையே நடுங்கும்போல் இருந்தது. வைத்தகண் வாங்காமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

“நான் அவள லவ் பண்ணுறேன் சார்” என்று பாதகத்தன் முடித்தான். எனக்கு வந்த கடுப்பில்

“சார்..அவுங்க உங்களைத்தான் லவ் பண்றாங்கன்னு எப்படி தெரியும்….பிரண்டா பழகலாம் இல்லையா..” என்று கத்தினேன். வயிறுவேறு எறிய ஆரம்பித்தது. அவனும் உறுதியான குரலில்

(முதல் கிளைமாக்ஸ்)

“எப்படி சார்..பிரண்டு யாராவது “நீ இல்லாம எப்படிடா” என்று சொல்லுவார்களா..அவ மூச்சுக்கு மூணு தடவ “நீ இல்லாம எப்படிடா” ன்னு சொல்லுறா சார்..கண்டிப்பாக அவளுக்கும் லவ் இருக்கு சார்”

என்றான்..எனக்கு குமட்டிகொண்டு வந்தது. “வயிறு எறியுது சார்” என்று சொல்ல ஆசைப்பட்டு முடியாமல் “வலிக்குது சார்” என்று சொல்லி அவசரம் அவசரமாக வீடு வந்தேன்..

படுக்கையில் குமுறி, குமுறி அழ ஆரம்பித்தேன். டி.வியில் “குத்துங்க எசமான் குத்துங்க..இந்த பொண்ணுங்களே இப்படித்தான்” என்ற நகைச்சுவை காட்சி ஓடிக்கொண்டிருந்தது

(தொடர்ச்சியான இரண்டாவது கிளைமாக்ஸ்)

தொலைபேசி அழைக்க, கண்ணீரை துடைத்துக்கொண்டு எடுத்தேன்..ஊரிலிருந்து அம்மா தான்..

“எப்படிபா இருக்க”

“ம்..இருக்கேன்..” என்றேன், ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு..

“மதுரைக்கு எப்ப வர்ற..”

“ம்..தெரியலை..”

“கண்டிப்பா வரணும்..நீ வந்தாதான் வீடு நிறைஞ்சது மாதிரி இருக்கும்..”

ஏற்கனவே நான் இருந்த கடுப்பில், ஏனோ இன்னமும் கடுப்பு வந்தது

“ப்ச்..ஒரு மாசம் வரலைன்னா என்ன குடியா முழுகிப்போயிடும்..விடுங்களேன்..”

எதிர்முனையில் சத்தமே வரவில்லை..சிலநொடிகள் மௌனத்திற்கு பிறகு அம்மா சொன்னார்கள்..

“நீ இல்லாம எப்படிடா..

(தொடர்ச்சியான மூன்றாவது கிளைமாக்ஸ்)

அந்த வார்த்தைக்கு, அப்போதுதான் அர்த்தம் உண்ர்ந்தேன். பக்கத்து வீட்டுப்பெண், அன்பாகவும், உரிமையாகவும் சொல்லிய அந்த வார்த்தைகளை தவறாக எடுத்துக்கொண்டு காதலிக்க ஆரம்பித்த என் அறியாமையை நினைத்து எனக்கே என்மேல் கோபமாக வந்தது. திரும்பவும் தொலைபேசி அடிக்க எடுத்தேன். இந்த முறை அவள்

“என்னாச்சுப்பா..ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வர்றதுக்குள்ள கிளம்பிட்ட.. எங்க போன”

“இல்ல..கொஞ்சம் உடம்பு சரியில்ல..அதுதான்..வீட்டுக்கு வந்துட்டேன்.”

“மனோஜ் வர்றதுக்கு முன்னாடி ஏதோ சொல்ல வந்தியே..என்னது..”

பரபரப்பானேன்..என்னை நானே அடக்கிக் கொண்டேன்..

“ப்ச்.ஒன்னுமில்லை..விடு..”

“இல்ல..ஏதோ சொல்ல வந்த..சொல்லு..”

“ஒன்னுமில்லைன்னா விடேன்..”

கொஞ்ச நேரம் மௌனத்திற்கு பிறகு அவளே ஆரம்பித்தாள்..

“இல்ல..”ஐ..லவ்..யூ” சொல்லுவேன்னு நினைச்சேன்…”

(இதற்கு யாராவது நாலாவது கிளைமாக்ஸ் சுருக்கமாக எழுதமுடியுமா..ஒரே ஒரு கண்டிஷன், இந்த மூன்று கிளைமாக்ஸ்களிலிருந்து வேறுபட்டு இருக்கவேண்டும்)

13 comments:

வெறும்பய said...

என்னண்ணே இது... எப்பவோ பார்த்த படம் மாதிரி இருக்கே... ஆனாலும் நல்லாயிருக்கு...

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா க்ளைமாக்ஸ் எழுதத்திரிஞ்சா நாங்க ஏன் மொக்கைப்பதிவு போடறோம்.. ஹா நல்லாருக்கு..சார்

சி.பி.செந்தில்குமார் said...

>>“எஸ்..வாட் டூ யூ வாண்ட்டு..(கனவிலும் இங்க்லீபீசு பேசுவேன் என நினைக்கவில்லை)

நல்ல சொல்லாடலில் வந்த எள்ளாடல்..

taaru said...

//“எஸ்..வாட் டூ யூ வாண்ட்டு..(கனவிலும் இங்க்லீபீசு பேசுவேன் என நினைக்கவில்லை)//
இங்கேர்ரா !!!!

//காதுக்குள் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அமர்ந்துகொண்டு வாசிப்பது போல் //
மாண்டலின்ன்னா, நம்ம ஊரு கருப்பசாமி, பாடைக்கு முன்னாடி வாசிப்பாரே அதாண்ணே?!!! [ i mean அப்பவே உன்னோட climax தெரிஞ்சு இருக்குன்னு சொல்ல வந்தேன். :):):)]

// புளியோதரையை வயிற்றில் கரைத்தது//
u mean புளிசோறு? அப்போ நீ அவீங்க ராசா இல்ல, tiger ராசா ....

//தொலைபேசி அழைக்க, கண்ணீரை துடைத்துக்கொண்டு எடுத்தேன்..ஊரிலிருந்து அம்மா தான்.//
என்னடா அண்ணாத்தே இன்னும் இந்த பக்கம் வரலியேண்டு பாத்தேன்... :)

//“இல்ல..”ஐ..லவ்..யூ” சொல்லுவேன்னு நினைச்சேன்…// இது அவுங்க..
இப்போ நீ : இதே dialogue அ மனோஜ் கிட்ட சொன்னிய?அவன் என்னா சொன்னான்?
[background இல் அப்போ போல மாண்டலின் ஸ்ரீநிவாஸ்மற்றும் கருப்பசாமி வாசித்துக்கொண்டு இருந்தார்.]
இதான் நாலாவது climax. சந்தோசம் தானே... சாப்டுண்ணே..

taaru said...

jokes apart.....
இது உன்னோட கதைகள்ல இருந்து மாறுபட்டு இருக்குண்ணே!! இந்த தம்பியையும் மதிச்சு வேற மாதிரி கதை எழுதி இருக்கே.நன்றி..[என்னது அப்டி எல்லாம் இல்லியா!! rite விடு ... நமக்கு என்னா அசிங்கப்படுறது என்னா புதுசா..?!!]

அரபுத்தமிழன் said...

கண்ணே ராசா, மிக மிக மிக அருமை. Suuuuuperb.
உங்களுக்கும் வில்லன் மனோஜ்தானா. நீங்க மனோஜ நேர்ல பாத்தீங்க, நானு போட்டோவுல பாத்தேன்.
இன்னொரு சூப்பர் கிளைமாக்ஸ் உண்டு,
ஆனா நான் எழுதுனா அது என்னோடதுன்னு சொல்வாய்ங்களே ராசா :( :)))

ηίαפּάʞиίнτ ™ said...
This comment has been removed by the author.
தமிழ் said...

வீடு வந்து சேர்ந்ததும் ,
அவளிடமிருந்து அழைப்பு வந்தது .

"ஏன் டா சொல்லாமையே வந்துட்ட"
"சும்மா தான்." (இந்த சும்மா ன்ற வார்த்தை வாழ்க்கைல எத்தனை சந்தர்ப்பத்தில் பயன்படுத்துகிறோம்.
இந்த வார்த்தை இல்லைனா எவ்ளோ கஷ்டம் )

"அப்படியே மூவி போலாம் னு நெனச்சேன் "
"ஹ்ம்ம் . அதுகென்ன நீங்க போக வேண்டியதான "
" நீ இல்லாம எப்படி டா "

Anonymous said...

(தொடர்ச்சியான 4 வது கிளைமாக்ஸ்)
'சொன்னா போச்சு, சரி, செமஸ்டர் வருது கொஞ்சம் படிக்கணும்?'
சற்றே பிகு பண்ணி கொண்டேன்

'கொஞ்சம் என்ன? நெறையவே படிடா...ராஸ்கல்' திட்டி கொண்டே போனை அனைத்தாள்! (ஹலோ! போனை தான்)
அன்றிரவு எப்போது தூங்கி போனேன் என்றே தெரியவில்லை!

-
வெங்கடேஷ்

Anonymous said...

நல்ல இருக்கு ராசா, வித்தியாசமான முயற்சி! உங்க சாய்ஸ் 2 வது கிளைமாக்ஸ் தானே?

-
வெங்கடேஷ்

அவிய்ங்க ராசா said...

வெறும்பய, எல்லாப் படத்திலயும் இதைத்தானே எடுக்குறாயிங்க..))

நன்றி சி.பி அண்ணா..நம்மளும் மொக்கைபதிவர்தேன்..))

தாரு(அய்யனாரே) கலக்கல் கிளைமாக்ஸ்ங்கோ..வழக்கம்போல் அசத்தல் கமெண்ட்ஸ்..

அரபுத்தமிழன் அண்ணே..இது என் கதை இல்லண்ணே..குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிராதீங்க...)))

தமிழ்..கிளைமாக்ஸ் நன்று..ஆனால், மேலே உள்ள மூன்றாவது கிளைமாக்சில் இது பொருந்துகிறதே..

வெங்கடேஷ்..நன்றி கிளைமாக்சுக்கு..கரெக்ட்..))

ILA(@)இளா said...

அட்டகாசமான பதிவு :)

safi said...

அவ் அவ் அவ் அவ் அவ் அவ்வ்வ்வவ்வ்

Post a Comment