Sunday 7 February 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார கண்டணம்

இந்த வார கண்டனம் நடிகர் ஜெயராமுக்கும், அவரை எதிர்த்து அவருடைய வீட்டை தாக்கியவர்களுக்கும். என்னதான் நகைச்சுவையாக இருந்தாலும் “தடித்த, கறுத்த தமிழச்சியான வேலைக்காரி” என்று சொன்னது தவறு. ஏன் தடித்து கறுத்து, வீட்டு வேலை செய்தால் அவ்வளவு இளக்காரமா..ஒருநாள் உங்கள் வீட்டு வேலைக்காரி விடுமுறை எடுக்கட்டும், அப்புறம் பாருங்கள் உங்கள் வீடு எவ்வளவு நாறிப் போகிறது என்று. பவுடர் போட்டு நடிக்கத் தெரிந்தால் மட்டும் பத்தாது, அடுத்தவர்களின் மனது புண்படாமல் பேசுதலோ, இருத்தலோதான் மனிதனுக்கு அடையாளம். உங்கள் நடிப்பை பார்த்து சிரித்து, மகிழ்ந்த மக்கள், உங்கள் கருத்தைக் கேட்டு சிரிப்பார்கள் என்று நினைத்தால் “சாரி ஜெயராம் சார்..” நாங்கள் மனிதர்கள்..

அடுத்த கண்டனம், ஜெயராமுக்கு கண்டனம் தெரிவிப்பதாக சொல்லி அவருடைய வீட்டை உடைத்தவர்களுக்கு. எந்த ஒரு கருத்தாக இருந்தாலும், அதைக் கருத்தாலும், கண்டனத்தாலும் எதிர் கொள்ள வேண்டுமே தவிர வன்முறையால் அல்ல. தவிர, அவர் அனைத்து தமிழ்பெண்களை பற்றியும் தவறாக கூறவில்லை. வீட்டு வேலை செய்பவர்களை வேண்டுமானால் தவறாக கூறிவிட்டார் என்று போராடுங்கள், “தமிழர்களை இழிவுப்படுத்திவிட்டார்” என்றல்ல. அப்படி போராடும் முன்பு, நம் வீட்டு வேலை செய்பவர்களை எப்படி நடத்துகிறோம் என்று ஒருதடவை சுயஆராய்தல் நலம்.

இந்த வார கருத்து

நடிகர் அஜீத் மேடையேறி பேசி அவ்வளவாக பார்த்ததில்லை. ஒருமுறை காவிரி தண்ணீருக்காகவோ, ஈழத்தமிழர்களுக்காகவோ பேசியதாக ஞாபகம். அதுவும் “நன்றி வணக்கம்” என்று பேசி முடிக்கவே எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது. பொதுவாக அவருக்கு மேடைப்பேச்சு பழக்கமில்லை என்பது என் கருத்து. மேடையிலேறி பேசுவதற்கு தனி ஆற்றல் வேண்டும். பச்சையாக சொல்வதென்றால் கொஞ்சம் பொய் பேசத் தெரிந்திருக்க வேண்டும். சக்கரை தடவ தெரிந்திரிக்க வேண்டும். யாரைப் பற்றி பேசுகிறோமோ அவரே “ கொடுத்த காசுக்கு மேல கூவுறான்யா” என்று சொல்லும் அளவுக்கு ஐஸ் வைக்க தெரிந்திருக்க வேண்டும். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் அரசியல் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இவை எதுவுமே அஜீத்திற்க்கு தெரியவில்லை..நேற்று திரைப்பட உலகினர் கலைஞருக்கு எடுத்த விழாவில் மனதில் பட்டதை அப்படியே சொல்லி விட்டுப்போனார்..”எந்த விழாவுக்கும் கட்டாயப்படுத்தி கூப்பிடிகின்றனர்..” காலையில் பேப்பரை திறந்து பார்த்தால் விழாவில் நடனமாடாத நடிகைகளுக்கு திரையுலகம் நோட்டிஸ் என்று இருந்தது. எனக்கு ஒரு சந்தேகம். “நம்ம நாடு சுதந்திரம் வாங்கிருச்சுல்ல…???”

இந்த வாரக் கொடுமை

விஜய் டீ.வியில் ‘வாங்க பேசலாம்” என்று ஒரு நிகழ்ச்சி.. நடத்துபவர்கள் நம்ம டெல்லி கணேஷ் சாரும், ஐயா பெரியார்தாசனும். இந்த வாரம் கலந்து கொண்டவர் நடிகை பத்மப்பிரியா அவர்கள். இரண்டு பேரும் வழிவழியென்று வழிந்ததாக எனக்குப் பட்டது. அதற்கு பத்மப்பிரியா அவர்கள் கொடுத்த எக்ஸ்பிரசன்களால் பார்ப்பவர்களுக்கே வெட்கம் வந்துவிட்டது. பெரியார்தாசன் ஐயா, உங்கள் கருத்துகளைக் கண்டு, உங்கள் மேல் மரியாதை வைத்திருக்கும் ஆட்களில் நானும் ஒருவன்..ஆனால் அந்த நிகழ்ச்சியை நீங்களே ஒருமுறை பாருங்கள். எப்படி பேசி இருக்கிறீர்கள் என்று.. தேவைதானா இது..அதுவும் எந்தவித தயாரிப்பும் இல்லாமல் நீங்களும் டெல்லிகணேஷ் ஐயாவும் போடும் மொக்கைகள் “தாங்க முடியலீங்க..”

இந்த வார சந்தேகம்

சின்னத்திரை பாலியல் கொடுமைகளுக்கு,டைரக்டரை தண்டிக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேறி இருக்கிறதாம். ஆனால், தினம் தினம் அழுது , எங்களுக்கு சோறு கிடைக்க விடாமல் செய்யும் சின்னத்திரை சீரியல் நடிகைகளையும், டைரக்டர்களையும் தண்டிக்க நாங்கள் என்ன தீர்மானம் போடுவது..

இந்த வார சாப்பாட்டுக்கடை

நீங்கள் ஊட்டி செல்கிறீர்களா..நிம்மதியாக தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் ஒரு ஹோட்டல் இருக்கிறது..”ஹோட்டல் பிரீத்தி க்ளாசிக் டவர்ஸ்”. அவ்வளவு தரம் மற்றும் சேவை. உண்மையிலேயே சொர்க்கத்தில் இருப்பதுபோல் இருக்கிறது. ஏதும் பிரச்சனை என்றால் ஒரு நிமிடத்தில் ஓடி வந்துவிடுகிறார்கள். அறை முழுவதும் அவ்வளவு சுத்தம். வடிவேலு பாணியில் சொல்லவேண்டுமானல் “அமெரிக்கா” வுல கூட இப்படி ஒரு ஹோட்டல் பார்த்ததில்லைன்னா பார்த்துக்குங்களேன்..


Tuesday 2 February 2010

சாருக்கு ரெண்டு புரோட்டா பார்சல்

“சாருக்கு ரெண்டு புரோட்டா பார்சல்..”

“அண்ணே..அப்படியே சாப்பிடுறதுக்கு ஒரு புரோட்டா சொல்லியிருங்கண்ணே….”

“ஹாய்..விஜி குட்டி..எப்படி இருக்க…”

“என்ன தம்பி...ஒரு வாரமா சாப்பிடுறதுக்கு ஆளைக் காணோம்..”

“ஆபிஸ் வேலை விசயமா இருந்தேன்..அதுதான்..எப்படி இருக்கிங்க..”

“என்னடா செல்லம்..ஒரு பத்து தடவையாவது கால் பண்ணியிருப்பேன் எடுக்கவே மாட்டிங்குற..வாட்ஸ் கோயிங்ங் ஆன்..வாட்ஸ் ஹேப்பண்ட் யா..”

“ஏதோ இருக்கேன் தம்பி..வாழ்க்கை ஓடுது..மெட்ராஸ் வாழ்க்கை நரகம்தான்பா..”

“ஏண்ணே..இவ்வளவு விரக்தியா பேசுறீங்க..எல்லாம் சரியாகிடும்ணே..”

“விஜி..இப்ப மட்டும் நீ போனை கட் பண்ணினே..நான் செத்தே போயிடுவேன்..என் வாழ்க்கையே நீதான்பா..நீ இல்லாம நான் எப்படிடா..ஜஸ்ட் திங்க் டா..”

“தம்பி..நம்பளே நொம்பலத்துல இருக்கோம்..பக்கத்துல போன் பேசுறவன் பகுமானத்த பாருங்க..ஒரு காபியை வாங்கிக்கிட்டு ஒன்றரை மணிநேரமா பேசிக்கிட்டு இருக்கான்..ஒரு பத்து பொண்ணுங்க கூடயாவது போன் பேசியிருப்பான் தம்பி..இதுக எல்லாம் எப்ப தம்பி உருப்படும்..”

“விடுங்கண்ணே..கடையின்னா பத்து பேரு வரதான் செய்வாங்க..சரிண்ணே..உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும்னு சொன்னீங்களே..ஏதாவது வரன் வந்திச்சா..”

“நாளைக்கு காபிடே வந்துரு..நான் எல்லாத்தையும் எக்ஸ்பிளையின் பண்றே..ஓகேயாடா “

“இருங்க தம்பி..புரோட்டா ரெடி ஆகிடுச்சு..எடுத்துட்டு வர்றேன்..”

“அண்ணே..சட்னி வேண்டாம்..குருமா மட்டும் போதும்..”

“பிளிஸ்டா..என்னை நம்பு..லவ்வுன்னா நம்பிக்கை வேணும்டா..நாளைக்கு உனக்கு பிடிச்ச வெஜ் பர்கரோட வெயிட் பண்றேன்..நீ வரலைன்னா..”

“இந்தாங்க தம்பி நல்லா வைச்சி சாப்பிடுங்க..பொண்ணுக்கு எத்தனையோ வரன் பார்த்தேன் தம்பி..எதுவும் சரிப்பட்டு வரல..எல்லாரும் ஒரு லட்சத்துக்கு மேலே வரதட்சணை கேக்குறாயிங்க தம்பி..நான் மாசம் வாங்குற நாலாயிரம் சம்பளத்தை வைச்சு எப்படி தம்பி….”

“ஏண்ணே..ஓனர் கிட்ட ஏதாவது கேட்டுப் பார்க்க வேண்டியதுதானே..”

“டியர்..உன் கோபம் நியாயமானதுதான்.ஐ அண்டர்ஸ்டாண்ட்..பட் என் லவ் ரியல்டா..யோசிச்சு பாரு..உனக்காக நான் எவ்வளவு தியாகம் பண்ணியிருப்பேன்..என்னோட மொபைல் பில் மட்டும் மாசம் எட்டாயிரம்..எல்லாம் உன்னோட, உன்னோட மட்டும் பேசுனதுக்குதான்..நீ என்னடான்னா..”

"எங்க தம்பி..அடிமை மாதிரி வேலை வாங்குறாரு..100 ரூபா அதிகம் கேட்டா..நீ இல்லைன்னா ஆயிரம் பேரு இருக்காங்கன்னு நன்றியே இல்லாம சொல்றாரு..”

“கஷ்டம்தாண்ணே..”

“நீ சொல்லுடா இப்ப..உன்னோட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாத வேலை எனக்கு தேவையே இல்லைடா..இப்பவே சொல்லு, நான் வேலையை ரிசைன் பண்ணிடுறேன்…”

“ஆமாம் தம்பி..வயசுக்கு வந்த பொண்ணை ரொம்ப நாள் வீட்டுல வைச்சிருக்குறது வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு.காலம் ரொம்ப கெட்டுப் போயிடுச்சுல்ல தம்பி..”

“எல்லாரும் அப்படி இல்லைண்ணே..”

“சரிடா விஜி..நான் அன்னைக்கு அப்படி பிஹேவ் பண்ணியிருக்கு கூடாதுதான்..ஆனா அன்னைக்கு என் மனசு எங்கிட்ட இல்லைப்பா..ஒரு மாதிரி இருந்துச்சு..அதுதான் கிஸ் பண்ண டிரை பண்ணினேன்..ஆனா அதுல லவ்தாண்டா இருந்துச்சு..லஸ்ட் இல்லைடா..பிளீஸ் என்னை நம்பு..”

“வேற எதுவும் வேணுமா தம்பி….தப்பா எடுத்துக்காத தம்பி..ஒரு 100 ரூபா கடன் கிடைக்குமா..சம்பளம் வந்ததும் குடுத்துறேன்..”

“இதுல என்னண்ணே இருக்கு வாங்கிக்குங்க..”

“செல்லம்..எவ்வளவு நேரம்தான் உனக்கு சமாதானம் சொல்லுறது..நான் போன வாரம் வாங்கி குடுத்த கிப்டை இன்னொரு முறை திறந்து பாரு..அதுல என்னோட லவ் தெரியும்..அந்த கிப்ட் எவ்வளவு தெரியுமா..பத்தாயிரம்..”

“ரொம்ப நன்றி தம்பி..”

“சரிண்ணே..லேட் ஆகிடுச்சு..நான் வர்றேன்..”

“விஜி..விஜி..கட் பண்ணிட்டியா..விஜி..ஹல்லோ..ஹல்லோ..இருக்கியா..கேட்குதா..ஹலோ..ஹலோ..விஜி..ஷிட்....”

“அடிக்கடி வாங்க தம்பி..உங்க கிட்ட பேசுறப்ப கொஞ்சம் கஷ்டம் குறையுது தம்பி..”

“கண்டிப்பாண்ணே..”

“ஹலோ..ஹலோ..ஹலோ..பிரீத்தி டியர்..வருண் ஹியர்..ஹவ் ஆர் யூ..என்னடா பிசியா..உன்னை பார்த்தே நாலு நாள் ஆகிடுச்சு..ஐ மிஸ் யூ டா…”

“சரிங்க தம்பி..பில்லை கவுண்டரில குடுத்துருங்க..”

“சரி..”

“யோவ்..தம்பிக்கு எவ்வளவு பில்லு..”

“43 ரூபா அண்ணாச்சி..”

“ஓனர் அண்ணே..இந்த போஸ்டரை உங்க கடையில ஒட்டிக்கிரவா..”

“டேய்..என் கடை என்ன சத்திரமா..அதெல்லாம் ஒட்ட கூடாது..ஓடிப்போயிடு..”

“ஓனர் அண்ணே..எப்போதும் உங்க கடையில ஒரு போஸ்டர் ஒட்டுவோம்ல..இன்னைக்கு மட்டும் ஏன் திட்டுறீங்க..”

“முடியாதுன்னா முடியாதுடா..அப்படி என்ன புடுங்கி போஸ்டர்..”

“அதுதாண்ணே..போன வருசம் முத்துக்குமாருன்னு செத்துப் போனாருல்ல..அவருக்கு ஏதோ நினைவஞ்சலியாம்..”


Wednesday 27 January 2010

ஹிட்லர்

“பியூரர்..சோவியத் படைகள் பெர்லினை நெருங்கி விட்டன” படைத்தளபதி, ஹிட்லரை நோக்கி தயங்கி தயங்கி சொன்னார்..சொன்னபோது ஹிட்லரை உற்று நோக்கினார்..ஹிட்லரின் முகத்தில் தோல்விபயம் தெரிந்தது. அவருடைய உதடுகள் துடிதுடித்தன. தளபதியால் நம்ப முடியவில்லை. தோல்வியே கண்டிராத ஹிட்லரா இது. நடந்தால் சிங்கம் போல இருக்குமே. தன் பேச்சால் லட்சக்கணக்கான மக்களை கட்டிப்போட்ட ஹிட்லரா நடுங்குவது. பிரான்ஸை வென்று விட்டு, பாரிஸில் வெற்றி நடை போட்ட ஹிட்லரா நடுங்குவது..

ஹிட்லரால் இன்னும் தோல்வியை நம்ப முடியவில்லை..”ஜெர்மனியா தோற்கப் போவது. ஐரோப்பா முழுவதும் அகண்ட ஜெர்மனியாக்க நினைத்த நாடா தோற்கப் போவது..எங்கே தவறு நடந்தது..” இன்னும் ஹிட்லருக்கு நம்பிக்கை இருந்தது. கடைசியாக ஏதாவது ஒரு மேஜிக் நடந்து ஜெர்மனி ஜெயித்து விடும்..ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை. ஒருபுறம் சோவியத் படைகள் பெர்லினை முற்றுகையிட, இன்னொரு பக்கம் பிரிட்டன், அமெரிக்கப் படைகள் பெர்லினை நெருங்கியிருந்தன. ஹிட்லருக்கு தெரிந்து விட்டது…”தோற்கப் போகிறோம்..”

மெதுவாக நடந்து தன் அறை நோக்கி சென்றார்..தன் செல்ல நாய் கூட தன் கேவலமாய் பார்ப்பது போல் தோன்றியது..அதை தன் அருகில் அழைத்து அதனுடன் விளையாட முயற்சித்து தோற்றுப் போனார்..தன் நெருங்கிய தளபதியான கெப்பல்ஸை(கோயபல்ஸ் என்று தமிழில் கூப்பிடிகிறோம்..அவர் கோயபல்ஸ் அல்ல, கெப்பல்ஸ்) அழைத்தார்..

“கெப்பல்ஸ்..உடனே ஏற்பாடு செய்யுங்கள்..நான் ஈவா பிரவுனை மணக்க வேண்டும்..”

ஈவா பிரவுன்..ஹிட்லரின் காதலி..ஹிட்லர் தான் செய்யும் எல்லா வேலைகளிலும் வெற்றி எதிர்பார்ப்பவர். சாவதற்கு முன்னால் கூட தன் காதல் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார். கெப்பல்ஸ்க்கு ஆச்சர்யமாக இல்லை. ஒரு சிறிய அறையில் ஹிட்லர், ஈவா பிரவுன், கெப்பல்ஸ், ஒரு பாதிரியார்..திருமணம் நடந்தது..எப்படி நடந்து இருக்க வேண்டிய திருமணம்..உலகத்தையே ஆட்டிப் படைத்த ஒரு மனிதரின் திருமணமா இது. ஐரோப்பா முழுவதுமே கொண்டாட்டமாக இருந்து இருக்க வேண்டுமே..ஒரு சின்ன அறையில், ஒருத்தர் முகத்திலும் சந்தோசம் இல்லாமல்..கெப்பல்ஸால் இதை தாங்க முடியவில்லை..

ஹிட்லர் நடந்து தன் அறைக்கு சென்றார்.. தன் தளபதிகள் அனைவரையும் அழைத்தார்..”உடனே எல்லா ஆவணங்களையும் அழித்து விடுங்கள். எதிரிகளிடம் எதுவும் மிஞ்சக்கூடாது..” தளபதிகள் ஹிட்லரிடம் மன்றாடினர்..”பியூரர்..இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை..தப்பித்து சென்று விடுங்கள்..நீங்கள் ஜெர்மனிக்கு தேவை.இப்போது இல்லா விட்டாலும், எப்போதாவது வென்று விடலாம்..”. ஹிட்லர் மெலிவாக சிரித்தார்..”என்ன சொல்கிறீர்கள்..ஜெர்மனி என் தேசம்..இந்த தேசத்தை விட்டு நான் எங்கு செல்வேன். நான் போய்விட்டால், இந்த தேசத்துக்காக போராடும் என் வீரர்கள் என்ன நினைப்பார்கள்..” ஹிட்லர் உறுதியாக சொன்னாலும் குரலில் நடுக்கம் தெரிந்தது..சொல்லி விட்டு மெதுவாக எழுந்து தன் படுக்கை நோக்கி சென்றார்..

அப்படியே திரும்பி தன் மனைவியைப் பார்த்தார்.. மனைவி தூங்கிக் கொண்டிருந்தார்..இல்லை..இல்லை..செத்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே தன் மனைவிக்கு விஷம் கலந்து கொடுத்திருந்தார்..தன் மேசையில் உள்ள உலகப்படத்தை ஆசையுடன் தடவிப் பார்த்தார்..மெதுவாக தன் மேசையில் இருந்த டிராயரை இழுத்தார். ஹிட்லரை சாகடிக்கப் போகிறோம் என்ற பெருமையில் அந்த துப்பாக்கி தூங்கிக் கொண்டிருந்தது.. அதை மெதுவாக எடுத்து தன் தலையில் வைத்தார்..

“திருப்பி வைத்து விடலாமா..” சிறிது நேரம் யோசித்தார்..திடிரென்று அந்த நினைப்பை தூக்கிப்போட்டார்..


“நான் யார்..ஹிட்லர்..எனக்கு தோல்வியா..ஹா..”. தன் சுண்டுவிரல் ட்ரிக்கரை அழுத்த..

“ட்ரக்..”

அந்த மனிதரோடு சேர்ந்து ஒரு அகண்ட சாம்ராஜ்ய கனவும் மரித்துப் போனது..

Sunday 24 January 2010

செக்ஸ்

இந்த வாரம் ஒரு உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். உறவினர் வீட்டில் இல்லை. 12 ஆம் வகுப்பு படிக்கும் அவருடைய மகன் மட்டும் வீட்டில் இருந்தான். நான் வருவதைப் பார்ப்பதும் அவசரமாக கையில் இருந்ததை மறைத்தான். என் கண்ணில் தெரியாதவாறு மறைக்க நினைத்தவன், பக்கத்தில் உள்ள அலமாரியில் திணிக்க நினைத்து தோற்றுப் போனதால், அவன் கையில் உள்ள அந்தப் புத்தகம் தவறி கீழே விழுந்தது. பார்த்தால் பிளாட்பாரத்தில் விற்கும் ஒரு செக்ஸ் புத்தகம். அவன் முகம் பயத்தால் முழுவதுமாக மாறியிருந்தது. ஏதோ கொலைக் குற்றம் செய்தாற்போல் பதைபதைத்தான்..

“அங்கிள்..சாரி அங்கிள்..பிரண்ட் கொடுத்தான்..தெரியாம வாங்கிட்டேன்..அப்பாகிட்ட சொல்லிடாதீங்க அங்கிள்..” குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது..

“ஹே..ஒன்னும் சொல்ல மாட்டேன்..ஆமா..இதெல்லாம் ஏன் படிக்கிற..”

“பசங்கதான் சொன்னாங்க அங்கிள்..இதெல்லாம் படிச்சாதான் பெரிய பையன் ஆக முடியுமாம்..இல்லையின்னா, அவியிங்க கூட்டத்தில் சேர்த்துக்கமாட்டேன்னு சொல்லிட்டாயிங்க அங்கிள்..”

பதட்டமாக சொன்னான். குற்ற உணர்ச்சியில் இருந்த அவனுக்கு விளக்கி சொல்லி விட்டு, என் பைக்கை எடுத்துக் கொண்டு ஒரு பொருள் வாங்குவதற்கு பாண்டி பஜார் வந்தேன். பாண்டி பஜார் சென்றிருப்பிர்கள் என நினைக்கிறேன். வெளிநாட்டுப் பொருட்களின் கண்காட்சி போல இருக்கும். கொஞ்சம் உஷார் ஆக இல்லையென்றால் மாலை போட்டு ஒரு ரூபாயை நெத்தியில் ஒட்டிவிடுவார்கள்..பைக்கை நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பிக்கும்போது ஒரு ஆள் அருகில் வந்தார்..
“இன்னா சார்..ஏதாவது பொருள் வேண்டுமா..”
“இல்லைண்ணா..நான் பார்த்துக்குறேன்..”
கூடவே நடந்தார்..
“சார்..சி.டி, டிவிடி வேணுமா..”
“இல்லைண்ணே..”
“சார்..டிரிபிள் எக்ஸ் இருக்கு..பார்க்குறீங்களா..”
“…”
“சார்..சூப்பரா இருக்கும் சார்..தமிழ், இங்கிலிஸ் ரெண்டுமே இருக்கு..”

நான் எதுவும் பதில் சொல்லவில்லை..கொஞ்சதூரம் நடந்து வந்தேன்..ஒரு கடையில் டீ சாப்பிடுவதற்காக நின்றவன் அந்தப் பத்திரிக்கையை கவனித்தேன்..

“செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் கோர்ட் வருகை..மகளிர் போராட்டம்..” “திவாரி செக்ஸ் வீடியோ..ஆந்திர கொந்தளிப்பு..”

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நம்மை சுற்றி நடப்பது எல்லாமே செக்ஸ் மற்றும் செக்ஸ் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது..இங்கு செக்ஸ் என்பது, ஒரு குற்றம் அல்லது விவாதிக்க அஞ்சப்படும் ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறது..செக்ஸ் என்பது மறைத்து மறைத்து பார்க்கப்படும் மற்றும் பேசப்படும் அல்லது வெட்கப்படவைக்கும் உணர்வுகளின் தொகுப்பாக உள்ளது..ஒரு பலான படம் ஓடும் தியேட்டரில் டிக்கெட் வாங்க கியூவில் நிற்பவர்களின் முகத்தைப் பார்த்தால் அந்த வித்தியாசம் தெரியும். அனைவரின் முகத்திலும் ஒரு சங்கடம். அல்லது வெட்கத்துடன் கூடிய ஒரு பதபதைப்பு.

ஏன் இப்படி என்று யோசித்துப் பார்த்தால், நாம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கும் கலாசாரம் என்ற போர்வையே என்று சொல்லலாம்..நம்முடைய கலாசாரத்தில் செக்ஸ் என்பது நாலு சுவற்றுக்குள் மூடி வைக்கப்படவேண்டிய ஒரு விஷயம் என்ற கருத்து வலுக்கட்டாயமாக ஒவ்வொருவர் மனதிலும் ஆணித்தரமாக பதியப்பட்டுள்ளாது. ஆனால் செக்ஸ் என்பது ஒரு உணர்வு..பசி, தூக்கம், அழுகை, சிரிப்பு என்று எந்த உணர்வு வந்தாலும் அதை வெளிப்படுத்த நினைக்கும் இந்த சமூகம் அதற்கு சமமான செக்ஸ் என்ற உணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்த கூடாத அளவிற்கு விலங்கு போட்டுள்ளாது.

யோசித்துப் பாருங்கள்..பசி வந்தால் என்ன கிடைக்கிறதோ அவசரமாக சாப்பிட ஆரம்பிக்கிறோம். நகைச்சுவை காட்சிகளைப் பார்க்கும்போது விழுந்து விழுந்து சிரிக்கிறோம். துக்கம் வந்தால் வாய்விட்டு கதறி அழுகிறோம். தூக்கம் வந்தால் படுக்கையில் சென்று சாய்கிறோம். ஆனால் செக்ஸ் வந்தால்..எப்படி வெளிப்படுத்துகிறோம்..கண்டிப்பாக சொல்வேன்..கட்டுப்படுத்த நினைக்கிறோம்..ஆனால் உணர்வு என்பது ஒரு காட்டாற்று வெள்ளம் போல், கட்டுப்படுத்த நினைக்க, நினைக்க திமிறிக் கொண்டு வரும்..அதற்கு வடிகால் தேடுவதற்காக நாம் அடைவதுதான் மேலே சொன்ன செக்ஸ் புத்தகங்கள், டிவிடிக்கள்..

பிரச்சனை என்னவென்றால் குற்றங்கள் ஏற்படுவது அங்கேதான். பிளஸ்டூ படிக்கும் பையன் வடிகாலாக செக்ஸ் புத்தகங்களை தேர்ந்தெடுக்கிறான்.. கொஞ்சம் கையில் காசு உள்ளவர்கள், பலான படம் தியேட்டருக்கோ, அல்லது டிவிடியோ வாங்கி கொள்கிறார்கள். இன்னும் பணம் படைத்தவர்கள், இன்னும் ஒரு படி மேலே போய், பெண்களைத் தேடுகிறார்கள். ஆனால் சமூகத்தைப் பற்றி கவலைப்படாதவன் என்ன செய்கிறான். கற்பழிப்பு..நாம் தினமும் படிக்கும் கற்பழிப்பு செய்திகளுக்கு மூலமே இதுதான்.இன்னும் பயத்துடன் சொல்லப்போனால், ஒரு கட்டத்தில் மேல் யாருமே சந்தர்ப்பம் கிடைக்கும்போது இந்த தவறை செய்யக்கூடும்..

இதைக் கட்டுப்படுத்த முடியுமா என்று கேட்டால்..முடியாது என்றுதான் சொல்வேன். ஒரு உணர்வை எப்படி கட்டுப்படுத்த முடியும்.தும்மல் வந்தால் உங்களால் தும்மாமல் இருக்க முடியுமா…இந்த நிலைமையை வியாபரமாக்கி சம்பாதிப்பவைகள்தான், பலான புத்தகங்கள், மற்றும் பலான டிவிடிக்கள். இந்தப் புத்தகங்கள் செக்ஸ் உணர்வுக்கு வடிகாலாக மற்றும் இருப்பதில்லை…சந்தர்ப்பம் கிடைக்கும்போது நம்மை குற்றம் செய்ய தூண்டிவிடுகின்றன.ஒரு செக்ஸ் புத்தகம் படித்து விட்டோ, அல்லது செக்ஸ் படம் பார்த்து விட்டோ வருவபன், அனைத்து பெண்களையும் அந்த கோணத்திலேயே பார்க்க நினைக்கிறான். ஆனால் சமூக உறவுகளின் நிர்ப்பந்தத்தால் அந்த உணர்வை அவசரமாக மனத்தில் இருந்து அகற்றுகிறான். அப்படி அகற்ற மறுப்பதன் விளைவே நீங்கள் தினசரி செய்திகளில் படிக்கும் தந்தை-மகள், ஆசிரியர்-மாணவி கற்பழிப்புகள்..

ஆகவே இந்த உணர்வைக் கட்டுப்படுத்த நினைத்து தோல்வியடைவதை விட்டு விட்டு இதை வழிப்படுத்த நினைப்போம். பாலியல் கல்வியை கட்டாயமாக்குவோம். படிக்கும் மாணவர்கள் மற்றும் நம்முடைய குழந்தைகளுக்கு செக்ஸ் என்பது ஒரு வெட்கப்பட அல்லது ஒளிந்து பார்க்க நினைக்கும் உணர்வல்ல என்பதைப் போதிப்போம். அவர்களுக்கு உடம்பில் நடக்கும் மாற்றங்களை தெளிவாக புரிய வைப்போம். குற்றங்கள் இல்லாத சமுதாயத்தை கட்டி எழுப்ப ஒரு செங்கல்லையாவது கொடுத்திருக்கிறோம் என்ற திருப்தி வரும்..

இந்தப் பதிவின் மூலம் நான் ஒரு செங்கல்லை எடுத்து வைத்து விட்டதாக நினைக்கிறேன். அப்புறம் நீங்கள்…..??????


Thursday 21 January 2010

மிக்சர் ஜீஸ்

புத்தாண்டு சபதம்
இந்த புத்தாண்டில் ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். இனிமேல் ஹெல்மெட் அணிவதில்லை என்று. இரண்டு வாரங்களுக்கு முன்னால் திருநெல்வேலி மாவட்டத்தில் ஹெல்மெட் அணிந்ததால், ஆள் மாறி ஒரு சப் இன்ஸ்பெக்டர் வெட்டப்பட்டார். நானோ ஏற்கனவே பார்ப்பதற்கு ரவுடி மாதிரி இருக்கேனா..யாரையோ வெட்டப்போய் ஆளை மாற்றி என் கழுத்துக்கு கத்தி வந்துவிட்டால்..ஹெல்மெட் அணிந்து செல்லாததால், 100 ரூபாய்தான் அபதாரம். ஆனால் ஹெல்மெட் போட்டு சென்றால் உயிரே அபதாரம். 100 ரூபாயா, உயிரா என்று நினைக்கும்போது எனக்கு உயிரே பிரதானமாக இருக்கிறது. இதைக் கேட்பதற்கு முட்டாள் தனமாக இருந்தாலும், உங்கள் கழுத்திற்கு கத்தி வரும்போது, தெரிய வரும்..ஹி..ஹி..

இந்த மாத சாப்பாட்டுக்கடை
இந்த மெஸ் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. மேற்கு மாம்பலத்தில் பேச்சிலர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது காமேஸ்வரி மெஸ். ஒரு பிராமணர் இந்த மெஸ்ஸை நடத்துகிறார். காலையில் சென்று அங்கு ஒரு பூரி சாப்பிட்டுப் பாருங்கள். திவ்யமாக இருக்கும். அங்கு தரப்படும் காபியின் சுவை, இரவு வரை அடிநாக்கில் தித்திக்கும். மாலையில் வத்தக்குழம்பு சாதம் என்று சமைத்து தருவார்கள், பாருங்கள். ஒருதடவை சாப்பிட்டால் தினமும் அங்குதான் செல்வீர்கள். இரவு சப்பாத்தி சாப்பிடுவதற்கு அங்கு ஒரு க்யூவே நிற்கும். கண் எதிரிலியே சப்பாத்தி சுட்டு தருவர். சப்பாத்திக்கு தினமும் ஒரு சைட்ட்டிஸ்.அரிசி உப்புமா இன்னும் கலக்கல். அமர்ந்து சாப்பிட இடமில்லாததும், கஷ்டமர்களை சரிவர கவனிக்காததும் இந்தக் கடையின் மைனஸ். மேற்கு மாம்பலம் சென்றால் ஒருமுறை சென்று வாருங்களேன். மேற்கு மாம்பலம், ஜங்க்சன், மார்க்கெட் அருகில் உள்ளது.

இந்த மாத புத்தகம்
திரு,மருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர் தான் நான் தற்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம். வரலாறு பிடித்தவர்கள் அனைவரும் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம். இரண்டாம் உலகப்போர் எப்போது துவங்கியது, எப்படி முடிந்தது, ஹிட்லரின் அராஜகங்கள் என அனைத்தையும் தெளிவான தமிழில் இதற்கு மேல் யாரும் சொல்ல முடியாது. முதல் பக்கத்தைப் படிக்க ஆரம்பித்தவன், கடைசி பக்கம் முடியும் வரை 4 மணி நேரத்தில் முடித்து விட்டேன். நீங்களும் நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்களேன்.

இந்த மாத அநியாயம்
இரண்டு வாரங்களுக்கு முன்னால் சன்.டிவியில் ராஜா ராணி நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அந்தக் காலத்தில் ஏதாவது அடல்ஸ் ஒன்லி நிகழ்ச்சி பார்ப்பதற்கு சனிக்கிழமை இரவு வரை இளைஞர்கள் காத்திருப்பர். ஆனால் இந்த நிகழ்ச்சி அதையும் மிஞ்சி விட்டது. இதில் பங்கேற்கும் ஒரு நடிகை உடுத்திய உடை ஆபாசத்தில் எல்லை. ஏறக்குறைய ஒரு கர்சீப் துணிதான் உடுத்தியிருந்தார். அதுவும் எப்படா விழும் என்று தொங்கிக் கொண்டு இருந்தது இன்னும் கொடுமை(இல்லையென்றால் சிறப்பு). சன்.டீ.விக்கு என்ன ஆனது. விஜய் டீ.விக்கு போட்டி கொடுக்க வேண்டியதுதான்..அதற்காக இப்படியா..இப்படி நிகழ்ச்சிகளால் சன் டீ.வி பார்க்கும் குடும்பங்களின் எண்ணிக்கை குறையவும், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு

இந்த வார வேண்டுகோள்


சென்னை வந்து 10 வருடங்கள் ஆகிறது.,இன்னும் ஒரு சினிமா சூட்டிங்க் கூட பார்த்ததில்லை. சினிமா அல்லது தொலைகாட்சி உலகத்தில் இருப்பவர் யாரேனும் இந்தப் பதிவை பார்க்க நேர்ந்தால் என்னை ஒரு சூட்டிங்க்கிற்கு கூட்டி செல்ல இயலுமா..ஒரு ஓரமாக நின்று பார்த்து விட்டு ஓடி வந்து விடுகிறேன். என் மேல இருக்கிற கடுப்புல் ஏதாவது பைட் சூட்டிங்கிற்கு கூட்டிட்டு போயிராதிங்கப்பூ…

Saturday 16 January 2010

ஊர்ப்பொங்கல்


உங்களுக்கு ஒரு புதிர். நீங்களும் நானும் ஜென்ம விரோதிகள். நானோ பரம ஏழை. குறைந்த செலவில் உங்களை தீர்த்துக்கட்ட வேண்டும். எவ்வளவு செலவாகும்…யோசியுங்கள்..யோசியுங்கள்..விடை என்ன தெரியுமா..2 ரூபாய்..எப்படியா?? விளக்கத்தை பதிவின் கடைசியில் தெரிந்து கொள்ளுங்கள்..

தமிழ்நாட்டு நியதிப்படி, இந்த பொங்கலை ஊருக்கு சென்று கொண்டாடுவது என தீர்மானித்திருந்தேன். புதன் கிழமை இரவு பஸ் பிடிப்பதற்கு கோயம்பேடு சென்றேன். சென்ற புதன் கிழமை கோயம்பேடு சென்றீர்களா..சென்றிருக்க மாட்டீர்கள். ஏனென்றால் சென்றிருந்தால் இதைப் படித்துக் கொண்டு இருக்க முடியாது. எங்கு பார்த்தாலும் டிராபிக்..சென்னையில் உள்ள 20% மக்கள் அனைவரும் கோயம்பேடு சென்றால் , டிராபிக் போலிஸ் என்னதான் செய்வார்கள். பாவம் முழி பிதுங்கி விட்டது…வடபழனியிலிருந்து கோயம்பேடு செல்வதற்குள் நடுவில் உள்ள தியேட்டரில் ஒரு முழு படம் பார்த்து விடலாம்..யப்பா..எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.இன்னும் 2012ல் உலகம் அழிகிறதோ இல்லையோ, சென்னை அழிந்து விடும். ஒரு நரகத்தை சாரி ஒரு நகரத்தை ஒரு கோடிபேர் அழுத்தினால் அது என்னதான் செய்யும்..

பஸ் போக்குவரத்து விதிப்படி, 10:30 மணிக்கு கிளம்ப வேண்டிய பஸ் 12:30க்குதான் கிளம்பியது. ஒரு டிராவல்ஸ் பஸ்தான். டிரைவர் “அடியே..நாங்களும் வால்வோ பஸ் ஓட்டுவோம்ல” என்றபோதே நான் சுதாரித்து இருக்கவேண்டும். நடுவழியில் அரசு பேருந்துக்கு இதழோடு இதழாக முத்தம் கொடுத்ததன் விளைவு, அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொருங்கியிருந்தது. அதுகூட எனக்கு கோபமில்லை. இவ்வளவு நடந்திருக்கிறது. என் பஸ்ஸில் இருக்கும் அனைவரும் குறட்டை விட்டு தூக்கம்..ஒரு பயபுள்ளையும் எழுந்து வரவில்லை. தூக்கம் கலைஞ்சிடுமாம்.இதில் என் பக்கத்தில் உள்ள ஒரு ஆள்
“ஏ.சி” யைப் போடுங்கப்பா, என்று சொல்லியபோது எனக்கு கடுப்பு உச்சத்தில் ஏறியது. ஒருவழியாக எல்லா பார்மாலிட்டிகளும் முடிந்து மதுரை வருவதற்கு 09:30 ஆகி இருந்தது. அங்கிருந்து என்னுடை ஊர் சோழவந்தான் அடைந்தேன்.

4 வருடம் கழித்து செல்கிறேன். நாகரித்தின் பூச்சு, சில இடங்களில் தெரிந்தாலும் இன்னும் மண் மணம் மாறாமல் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமை. காண கண் கோடி வேண்டும். பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் காற்று வந்து உங்களை தாக்கும் பாருங்கள்..புழுதி, பெட்ரோல் கலக்காத காற்று..ஆஹா..இதெல்லாம் கிராமத்தில் மட்டுமே கிடைக்கும். வருடத்திற்கு ஒருமுறையாவது கிராமத்திற்கு சென்று விடுங்கள்..நல்ல காற்றாவது கிடைக்கும்..

வீடு சென்று கதவைத்தட்டினேன். அம்மாதான் திறந்தார்கள்..அப்படியே வந்து கட்டிக் கொண்டார்கள்..மாசு கலக்காத அன்பு. அம்மாவிடம்தான் கிடைக்கும்..கண்களை கவனித்தேன்..கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது..

“ராசா..நல்லா இருக்கியாப்பா..பயணம் நல்லா இருந்ததா..”
“நல்லா இருந்ததும்மா..அப்பா எங்க..”
“உள்ள இருக்காங்கப்பா..இங்கேருங்க..இங்கேருங்க..பையன் வந்து இருக்கான் பாருங்க..”

அப்பா எழுந்து ஓடிவந்தார்..அவருடைய கண்களிலும் தண்ணீர்..

“ராசா..இப்பதான் வந்தியா..2 மாசமாயிடுச்சுடா உன்னைப் பார்த்து” கலங்கினார்கள்..

“அழுகாதிங்கப்பா..ஏற்கனவே அவியிங்க ராசா அடிக்கடி நெஞ்சை நக்குற மாதிரிதான் பதிவு போடுறாரு..போரடிக்குதுன்னு கமெண்ட் வருது..இதுக்குமேல போனா ஓவராயிடும்…”

“என்னப்பா ராசா..ஒன்னும் புரியலையே..”

“இல்ல..குளிக்கனும்..வெண்ணித்தண்ணி போடுறீங்களா..”

“ப்ரூ இருக்கேடா” என்பது மாதிரி “ஹீட்டர் இருக்கேடா” என்று சொன்னார்கள். பாத்ரூம் முழுவதும் கீசர் ஹீட்டர்தான் அடைத்து இருந்தது.. எனக்காக ஒரு ரூமில் ஏ.சி போட்டிருந்தார்கள். ஏதோ நான் ஏசியிலே பிறந்து தவழ்ந்த மாதிரி..கடைசி வரைக்கும் நான் ஏசி போடவேயில்லை. அதற்குள் என் நண்பர்கள் வந்துவிட்டார்கள்.

“வாடா..அமெரிக்கா பங்க்ஸ்(பங்காளியின் சுருக்கமாம்)..நீ வர்றதா அம்மா சொன்னாங்க..அதான் வந்தோம்..துண்டை எடுத்துட்டு வாடா..ஆத்துக்கு போவோம்..”
“டே..நான் இங்கிட்டே குளிச்சிக்குறேன்..”
“பாருடா..அமெரிக்காகாரனுக்கு வெக்கத்தை..நாலாப்பு படிக்குறப்ப துணியில்லாம ஆத்துல குளிச்ச பயதான நீயி..புதுசா எங்கிட்டு வெக்கம்.”

இதற்கு மேல் போனால் மானம், மரியாதை போய்விடும் என்பதால் துண்டை எடுத்துக் கொண்டு உடனே கிளம்பி சென்றேன். கிராமத்து நட்பு இருக்கிறதே, அது வித்தியாசமானது. கூப்பிடுவது கூட கெட்ட வார்த்தையில்தான் கூப்பிடுவார்கள்..ஆனால் ஏதாவது ஒன்னுன்னா உசிரையே கொடுப்பார்கள். எங்கள் ஊர் ஆறு இன்னும் சுருங்கியிருந்தது. ஆனால் ஆற்றை சுற்றிலும் உள்ள தென்னைமரங்கள்..வயல்வெளி..பச்சை பசலேன்று..அதுவும் காலைவேளையில்..கிராமத்தை விட்டு வரவே மாட்டீர்கள்…ஆற்றில் குளிக்க சில பழக்கங்கள் இருக்கின்றன.ஓடும் தண்ணீரில் கன்னாபின்னவென்று குளிக்க மாட்டோம். ஏனென்றால் கரையோரம் ஒதுங்குபவர்கள் எல்லாம் ஓடும் தண்ணிரீல்தான் கழுவிவிடுவார்கள். அதனால் அழகாக ஒரு ஊற்று தோண்டுவோம். அதுவும் ஆங்கில “டீ” வடிவத்தில். புதிய தண்ணீர் ஊற்று எடுத்து வரும். சுத்தமாக இருக்கும்..அதில்தான் குளியல்..4 சுவற்றில் நாம் குளிப்பதெல்லாம் என்ன குளியல்..பசுமை சூழ வெட்டவெளியில் ஊற்றுதண்ணியில் ஒரு முறை குளித்துப் பாருங்கள்..சொர்க்கமே கிடைக்கும்..

பொங்கல்தான் கிராமங்களுக்கு தீபாவளி பண்டிகை. தெருவெங்கும் கோலாகலம்..தெருவுக்கு தெரு மைக் செட் போட்டு கலக்குவார்கள்..முதலில் “விநாயகனே..வினை தீர்ப்பவனே..” என்றுதான் ஆரம்பிக்கும்..அடுத்த பாட்டே “நான் அடிச்ச தாங்க மாட்ட..” என்று களைகட்ட ஆரம்பிக்கும்.அனைவர் முகத்திலும் உற்சாகம்..தெருவில் நடந்தால் பார்ப்பவர் அனைவரும் மாமன் மச்சான் தான்..ஒவ்வொரு வீதியிலும் ஒரு இளைஞர் நற்பணி மன்றம் இருக்கும்..ஒலிம்பிக் ரேஞ்சுக்கு விளையாட்டுப் போட்டிகள் தூள் பரக்கும்..தெருவில் இறங்கி நடந்தால் தெரு முழுவதும் வண்ணக்கோலம் தான். சிறந்த கோலத்திற்கு பரிசு வேறு.. “இந்த விழாவை சிறப்பிக்க வந்திருக்கும் நம்ம மாமா ஒச்சுப்புலி அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்” என்று குரல் மைக் செட்டில் கேட்கும்..ஒச்சுப்பிலி மாமா போன வாரம்தான் ஜெயிலில் இருந்து வந்திருப்பார்..புல் மப்பில் வேறு இருப்பார்..”இங்கு குழுமியிருக்கும் கோடான கோடி பெருமக்களே” என்றுதான் ஆரம்பிப்பார்..அவரைத் தள்ளிக் கொண்டு போவதற்குள் படாதபாடு ஆகிவிடும்..

சாயங்காலம் ஆனால் கபடிப்போட்டி, சைக்கிள் போட்டி, இன்னிசை நிகழ்ச்சி..ஆடல் பாடல்..இன்னிசை நிகழ்ச்சியில் ஏழு கட்டையில் பாடகர் பாடினாலும்..”ங்கொய்யாலே..என்னாமா பாடுறான்யா..” என்று மார்கழி பஜனை மாதிரி தொடையைத் தட்டிக்கொண்டு ரசிப்போம்..ஆடல் பாடல் நிகழ்ச்சி ஆரம்பித்தால் போதும், முன்வரிசையில் அமர்ந்திருக்கும் சின்னஞ்சிறுசுகளை துரத்தி விடுவோம்..வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் பெண்கள் “களவாணிப் பசங்க” என்று சாபம் கொடுத்தபடியே உள்ளே செல்வர்..அவ்வளவுதான் குத்தாட்டம் ஆரம்பிக்கும்..யாராவது ஒரு பெண் ஆடினால் போதும்..அதகளாமாகி விடும்..நம்ம ஒச்சுமாமா புல் மப்பில் 100 ரூபாய் நோட்டை எடுத்து கொண்டு புயலாக கிளம்பி விடுவார்..அவரை தடுத்தி நிறுத்துவதற்கு ஒரு பாதுகாப்பு படையே தேவைப்படும்..ஊரே குத்தாட்டம் போட்டு ஆடி ஒரே அலப்பறைதான்….பாதிபேர், புல் மப்பில் தெருவிலே சாக்கடை பக்கதிலேயே தூங்கி விடுவாயிங்க..

அடுத்த நாளில் பார்த்தால் இதற்கெல்லாம் நேர் எதிர்..எல்லாரும் நல்ல பிள்ளை மாதிரி, கோயிலை நோக்கி படையெடுப்பாயிங்க..திருநீரை முகம் முழுவதும் அப்பிக் கொண்டு “துண்ணூரை வைச்சிக்க பங்ஸ்” என்ற பயபக்தியுடன் நீட்டும்போது அடப்பாவிகளா..நேத்து தண்ணியப் போட்டு இவ்வளவு அலப்பறை பண்ணுனவனாடா நீ என்று கேட்க தோன்றும்..ஹீம்..இதெல்லாம்..சுகமான அனுபவம்..கிராமத்தில் மட்டும்தான் கிடைக்கும்..

பொங்கல் விடுமுறை அனுபவித்து விட்டு நேற்று இரவு சென்னை நோக்கி கிளம்பினேன்..இன்று காலை கிண்டியில் இறக்கி விட்டார்கள்..ஊரே இழவு வீடு மாதிரி இருந்தது..ஒருவேளை பொங்கல் எல்லாம் இங்கிட்டு கொண்டாட மாட்டயிங்களோ..வேளச்சேரிக்கு ஆட்டோ புடித்தேன்..வழக்கம் போல் முகமூடி மாட்டாமல் கொள்ளைக் காசு கேட்டார்கள்..ஆட்டோவில் வரும்போது ஆட்டோக்காரர் பேச்சு கொடுத்தார்..
”என்னப்பா..இன்னா ஊரு”
“மருத அண்ணே..”
“ஆளப்பார்த்தாலே தெரியுது..” (எப்படித்தான் கண்டுபிடிப்பாயிங்களோ)
“ஏண்ணே..பொங்கல் இங்க கொண்டாட மாட்டாயிங்களா,.,.தெருவில ஒன்னையும் காணோமே..”
“தெருவில என்ன பண்ணனும்..அதுதான் வீட்டுல பொங்கல் வைக்கிறோம்ல”

எனக்கு கோபமாக வந்தது..

“ஏண்ணே..ஊராண்ணே..இது..பொங்கல் திருவிழா மாதிரியா இருக்கே,.”

அவ்வளவுதான் ஆட்டோ டிரைவர் காண்டாகிவிட்டார்..

“அடியே..ஊர்க்காரயிங்களுக்கெல்லாம் கொழுப்பு ஜாஸ்தியாகிடுருச்சுடி..ஊரில இருந்து வர்றப்ப ஒரு மஞ்சப்பையே தூக்கிக்கிட்டு வர்றது..நல்லா முன்னேறுன பிறகு சென்னையை திட்டுறது..அடீங்க..”

இதற்கு மேல் பேசினால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாததால் அமைதியாகி விட்டேன்..வீடு செல்லும்முன் பக்கத்து வீட்டுக்காரருக்கு பொங்கல் வாழ்த்து சொல்லிவிடலாம் என்று கதவை தட்டினேன்..ரொம்ப நேரம் கழித்து பக்கத்து வீட்டுக்காரர் கதவைத் திறந்தார்..அதுவும் கால் கதவுதான்..கதவின் இண்டு வழியாக எட்டிப் பார்த்தார்..

“இன்னா..இன்னா வேணும்..”
“நான் பக்கத்து வீட்டுலதான் இருக்கேன்..”
“இருந்துக்கோ..அதுக்கு என்ன இப்ப..”
“பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லலாம்னு.,,.”
“ஓ..ஹேப்பி பொங்கல்..”

சொல்லி விட்டு கதவை சாத்திக் கொண்டார்..டி.வி ஓடும் சத்தம் மட்டுமே காதில் கேட்டது..

“இந்தப் பொங்கலை வேட்டைக்காரனோடு கொண்டாடுங்கள் உங்கள் சன் டீ.வியில்..டீலா..நோ டீலா.,.”

(பதிவின் தொடக்கத்தில் கேட்கப்பட்ட புதிருக்கான விளக்கம்..2 ரூபாயில் உங்களை தீர்த்துக்கட்டுவது எப்படி..தமிழ்நாட்டில் உள்ள 2 ரூபாய் கொடுத்து போகும் எந்த நவீன பொதுக் கழிப்பறையில் உங்களைத் தள்ளி கதவை சாத்திவிடுவேன்..நாற்றம் தாங்க முடியாமல் நீங்களே தற்கொலை பண்ணிக் கொள்வீர்கள்..யப்பா என்னா கப்பு…)

கழிப்பறை ஓனர்களுக்கு ஒரு வேண்டுகோள்..தயவு செய்து “கழிப்பறை” என்று மட்டும் எழுதுங்கள்..”நவீன கழிப்பறை” என்று எழுத வேண்டாம்..எழுதியே தீருவேன் என்று அடம்பிடித்தால்
“பின்நவீனத்துவ” கழிப்பறை என்று வேண்டுமானால் எழுதிக் கொள்ளுங்கள்..

Friday 15 January 2010

ஆயிரத்தில் ஒருவன் – விமர்சனம்

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் எழுதாவிட்டால், ஆயிரத்தில் ஒருவனாகிவிடுவேன் என்ற பயத்தாலே விமர்சனத்தை எழுதவேண்டியது அவசியமாகிறது. விமர்சனத்தை ஆரம்பிக்கும்முன், கை கொடுங்கள் செல்வராகவன். தமிழில் இது போன்ற படம் இதுவரை வந்ததில்லை, இனிமேல் வரப் போவதில்லை. இந்த படம் மூலம், நீங்கள் தைரியமாக சொல்லலாம் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் டைரக்டர் என்று. அடுத்த கைகொடுத்தல் தயாரிப்பாளருக்கு..இவ்வளவு செலவு பண்ண கண்டிப்பாக தைரியம் வேண்டும். வேறு ஏதாவது பிசினஸ் வைத்திருக்கிறீர்களா..?? இந்தக் கடனை அடைப்பதற்கு..கண்டிப்பாக உங்கள் அடுத்த தலைமுறை வரைக்கும் கஷ்டப்பட வேண்டி இருக்கும்..

கதை இதுதான்..சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நடைபெற்ற போரில், பாண்டியர்கள் வசம் உள்ள ஒரு சிலையை, சோழர்கள் கைப்பற்றுகிறார்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில், சோழர் அரசர், தன்னுடைய மகனை அந்த சிலையுடன் கண்தெரியாத தீவுக்கு அனுப்பிவிடுகிறார்..அதுவும் எப்படி, ஏழு கடுமையான பாதுகாப்புகளோடு(ஜீபூம்பா படம் மாதிரி..) கதை இப்போது, இந்த நூற்றாண்டுக்கு வருகிறது..தொலைந்து போன தன் அப்பாவை தேடுவதற்காக, ஆண்ட்ரியா, ரீமா சென், மற்றும் கார்த்தி & கோ வியட்நாம் தீவை நோக்கி போகிறது. அவர்கள் ஒவ்வொரு தடையாக தாண்டி, கடைசியாக சிலை இருக்கும் இடத்துக்கு செல்கிறார்கள். அங்கு இன்னும் உயிரோடு வாழும் சோழர்களின் கூட்டத் தலைவன் பார்த்திபனால் சிறை பிடிக்கப்படுகிறார்கள். திடிர் திருப்பமாக, ரீமா சென், பாண்டிய மன்னர் தலைமுறையில் இருந்து வருபவர் என்றும், சோழர்களை பழி வாங்கி அந்த சிலையை கவர்ந்து செல்பவர் என்றும் தெரிகிறது..இதற்கு மேல் கதையை சொன்னால் , நீங்கள் படம் பார்க்க மாட்டீர்கள் என்பதால், இதோடு நிறுத்திக் கொள்ளலாம்..

ரீமா சென்னை பாராட்டுவதற்கு முன்னால் இதில் நடித்த துணை நடிகர்களை பாராட்ட வேண்டும். உடல் முழுவதும் கருப்பு பெயிண்ட் அடித்து, காட்டுவாசிகளாக கலக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கும் சம்பளம் தரப்படவில்லை என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. குடுத்திருங்கப்பு..அடுத்து கார்த்தி..இந்த படத்தை அவர் வாழ்நாளில் மறக்க முடியாது..அவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்..ஆனால் சில காட்சிகளில் பருத்திவீரன் பாதிப்பு தெரிகிறது..ரீமாசென்..கண்டிப்பாக விருது கொடுக்கலாம்.இந்த ஒரு படம் போதும், இனிமேல் சினிமாவிலிருந்து விலகி கொள்ளலாம்..படம் முழுதும் அவர் ஆளுமைதான். அணிந்திருக்கும் ஆடை பற்றி கூட கவலைப்படாமல் அப்படி ஒரு வெறியுடன் கூடிய நடிப்பு..முன் வரிசை கூட்டம் விசிலடித்தே மாய்ந்து போகிறது..

அடுத்து பார்த்திபன்..சில காட்சிகளில் ஓவர் ஆக்டிங்க்..ஆனால் அந்த ராஜா வேஷத்திற்கு கனகச்சிதம். அவர் கொடுக்கும் அசைவுகள், தமிழ் சினிமாவிற்கு புதிது..ஆண்ட்ரியாவும் கஷ்டப்பட்டிருக்கிறார். ஆனால் இடைவேளைக்கு அடுத்து படத்தில் இருப்பதே தெரியவில்லை.. செல்வராகவன், இந்தப் படம் அவரை எங்கோ கொண்டு போய் விட்டுவிடும்..அடுத்து எந்தப் படம் எடுத்தாலும், இந்தப் படத்துடன் ஒப்புமை செய்யப்படும் வாய்ப்பு உண்டு..சில காட்சிகள் ஹாலிவுட்டிற்கு சவால். சில காட்சிகள் ராமநாராயணுக்கு சவால்..இடைவேளைக்கு அடுத்து வரும் காட்சிகள் கொஞ்சம் பாமரனுக்கும் புரியும் படி எடுத்திருக்கலாம். தியேட்டரில் நெளிகிறார்கள். அவர்கள் பேசும் தமிழைப் புரிவதற்கு டிக்சனரி எடுத்து செல்வது நல்லது. சில காட்சிகளில் டைரக்டர் கோட்டை விட்டுள்ளது தெரிகிறது..ஹெலிகாப்டரில் போக முடிந்த இடத்திற்கு, ஏழு பாதுகாப்பு தாண்டி ஏன் பயணம்.. அடிக்கடி வரும் மாயாஜாலக் காட்சிகள் ஏன்..இயல்பாக சொல்லி இருக்கலாமே..

ஒளிப்பதிவாளர்,இசையமப்பாளர் நிறைய ஹோம்வொர்க் செய்துள்ளனர். கேமிராவும், இசையும் நம்மோடே பயணிப்பது, அவர்களின் வெற்றி..இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் விருதுக்கு தகுதியுள்ளவர்கள். இதுபோன்ற படங்கள் கண்டிப்பாக வரவேற்கப்படவேண்டும்..ஆனால், மசாலா படங்களுக்கு விசில் அடித்தே பழகிப்போன நமக்கு இந்தப்படம் கண்டிப்பாக கடுப்பைத் தரும் என்பதில் ஐய்யமில்லை. கடையில் நடைபெறும் போர்க்காட்சி(300 படத்தின் காப்பி) படத்திற்கு புதிது. வெறியுடன் தாக்கும் காட்டுவாசிகளின் ஒவ்வொரு அசைவும் நடிப்பு.. தோற்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் கத்தியை வைத்து தற்கொலை செய்யும் அந்த பத்து பேர், அதிர்ச்சி..

மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் – உலகத்தரத்தில் ஒரு தமிழ்படம்(கமல் சார் கோவிச்சக்கூடாது..)