Wednesday, 29 April, 2009

என் ஓட்டு அம்மாவுக்குதாண்ணே…

நம்ம எல்லாம் அமெரிக்காவுல இருந்தாலும் அம்பானி பரம்பரை எல்லாம் இல்லீங்கண்ணே..சோத்துக்கே சிங்கி அடிச்சவயிங்க தாண்ணே..வீட்டில வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி படிக்க வச்சாயிங்கண்ணே….அந்த விசயத்துல அம்மாவ மறக்க முடியாதுண்ணே…எத்தனையோ நாளு நான் படிக்கிறதுக்கு தன்னோட வாழ்நாளை தியாகம் பண்ணியிருக்காங்கண்ணே..

எங்க அம்மாவுக்கு என் மேல அம்புட்டு பாசம்ணே..உயிரே விட்டிடுவாயிங்கண்ணே…நேத்து கால் பண்ணியிருந்தாங்கண்ணே..சோக்காலிங்களோட(நண்பர்கள்) பேசிக்கிட்டு இருந்தேன்..எப்போதும் அம்மா பேசுனா ஸ்பீக்கர்ல தான் போடுவேன்..காதுல கேக்குறத விட மனசால கேக்கலாம்ல..

“தம்பி ராசா, உடனே கிளம்பி வந்துருடா..”

“ஏன்மா..ஏதாவது பிரச்சனையா..”

“இல்லடா ராசா, ஏதோ பன்னி காயிச்சலாம்பா…டி.வில காமிக்கிறாயிங்கப்பா..குலை நடுங்குதுப்பா..சம்பாதிச்சது போதும்பா..வந்துருடா ராசா..”

பக்கத்துல இருக்குற சோக்காளி சும்மா இருக்காம,

“அம்மா, நீங்க கவலைப்படாதிங்கம்மா..ராசவ ஒன்னும் பண்ணாது…பன்னில இருந்து மனுசனுக்கு தான் பரவுதுதாம்..பன்னில இருந்து பன்னிக்கு பரவாதாம்..”

“அடி செருப்பால..நீதான்டா எறுமை..” அம்மா செல்லமா திட்டுனாயிங்கண்ணே..

அம்மா இப்படித்தாண்ணே…எல்லாத்துக்கும் பயப்புடுவாயிங்கண்ணே…ஓரு நாள் எல்லாரும் இங்க இருக்குறப்ப அவசரமா அம்மாகிட்டயிருந்து கால்..

“தம்பி, ஓடிடா..நிலநடுக்கம் வருதாம்..”

என் சோக்காளி அப்பிடியே டேபிளுக்கு அடியில போயிட்டாண்ணே..என்ன ஒரு முன்ஜாக்கிரதை பாருங்கண்ணே. நானும் நடுங்கி போயிட்டேண்ணே..

“அம்மா, என்ன சொல்லுறீங்க..”

“சன் டிவில பிளாஸ் நியுஸ் போடுறாயிங்கடா ராசா..ஜப்பானுல நிலநடுக்கமாண்டா..அமெரிக்கா ஜப்பான் பக்கத்துல தானே இருக்கு..ஓடிடுடா..”

ஒரு பக்கம் சிரிப்பா வந்தாலும், குழந்தைப் பாசம்ணே..

இப்படித்தான் நான் சென்னையில வேலை பார்க்கும்போது மதுரையில இருந்து சென்னைக்கு ரயிலுல கிளம்புவேண்ணே..என்னை உக்கார வச்சுட்டு தண்ணி பாட்டில் வாங்க போனாங்கண்ணே..பக்கத்துல உக்கார்ந்திருக்குரவர் அறிமுகம் செஞ்சுகிட்டாருண்ணே..ஏதோ பிஸ்கட் சாப்பிட்டு இருந்தார்..அம்மா வந்துட்டாங்கண்ணே..

“தம்பி ராசா, பத்திரமா போயிச்சேருப்பா..நிறைய திருட்டுப்பசங்க ரயில்ல வராயிங்களாம்பா..எதாவது பிஸ்கட் குடுத்தா வாங்கி சாப்பிடாதப்பா..கெரகம் புடிச்சவயங்க, மருந்து வச்சிருப்பாயிங்க..ஒன்னுக்கு போறப்ப பேக்க எடுத்துட்டே போப்பா..”

பக்கத்தில இருப்பவன் நிலமைய யோசிச்சு பாருங்கண்ணே..அப்படியே பிஸ்கட்ட மறச்சு வச்சிட்டு சிரிக்கிறாருண்ணே…அவருக்கும் அம்மா இருக்கும்தாண்ணே…அம்மா கண் நெறய தண்ணி..ரயில் கிளம்பும்போது சேலைய கையில புடுச்சிக்கிட்டு கூடவே ஓடி வாராங்கண்ணே…75 வயசுண்ணே…அப்பிடியே ரயில் சங்கிலிய புடிச்சி இழுத்துராம் போல இருந்துச்சுண்ணே…பாசத்துல எல்லா அம்மாவும் குழந்த மாதிரிண்ணே…

எனக்கு எங்க கம்பனியிலிருந்து அமெரிக்கா அனுப்புனாங்கண்ணே..எங்க வூட்டுல இருந்து வழியனுப்ப சென்னை வந்துந்துராயிங்கண்ணே..நமக்குத்தான் அமெரிக்க சான்சுன்னா பிரண்ட்ஸ் பார்ட்டி தான்னே..பிரண்ட்ஸ் கூட ஒரே பார்டிண்ணே..வீட்டுல இருந்து அம்மா வந்ததே மறந்துட்டேண்ணே..ஏர்போர்ட் வந்து எல்லாருக்கும் டாடா சொல்லுறப்ப தான் அம்மா நிக்குறதே ஞாபகம் வருது..சிலையா நிக்குறாங்கண்ணே…அப்படியே வந்து கட்டிப்பிடிச்சு அழுதாங்க பாருங்க..அவுங்க நெஞ்சுக்கூட்டுல இருக்குற பாசம் இன்னைக்கும் என் நெஞ்ச தொட்டுப்பார்த்தா தெரியும்னே….

“ராசா..விட்டிட்டு போறியடா..உன்னப் பார்க்காம எப்பிடிடா இருக்க போறென்..”

“2 வருசம் தானம்மா..வந்துடுவேன்மா…”

எங்க அம்மா பணம் வைக்கிறதுக்கு ஒரு சுருக்குப்பை வைச்சிருப்பாங்கண்ணா..அதுக்குள்ள கைய விட்டு எல்லாப் பணத்தையும் எடுத்து என் கையில திணிச்சாங்கண்ணே..எல்லா பணமும் அழுக்குண்ணே…ஆனா இப்பவும் மோந்து பார்த்தா எங்கம்மா வாசம்ணே…

“ராசா..செலவுக்கு வச்சிக்கடா..அப்பாகிட்ட சொல்லாதேடா..உடம்ப பத்திரமா பார்த்துக்கடா..”

“அம்மா, எதுக்கும்மா..அங்க எல்லாம் டாலர் தான்மா..”

“பரவாயில்லடா..எப்பவாவது உதவும்…”

பொஞ்சாதி தெய்வம்னு ஒரு பதிவுல எழுதினேன்னே..தெய்வம் கூட இருக்கா இல்லயான்னு தெரியாதுண்ணே..அம்மா தெய்வத்துக்கும் மேலண்ணே..பகுத்தறிவுக்கு எட்டாத ஒன்னுன்னா அது அம்மா பாசம்தாண்ணே…

இந்த தேர்தல்ல கண்ட காவாளிங்களுக்கு நல்ல ஓட்டுப் போடுறத விட எங்கம்மாவுக்குத்தாண்ணே கள்ள ஓட்டு போடப்போறேன்..ஒரு சீட்ல “எங்கம்மா”ன்னு எழுதி வச்சிட்டு வந்துடப் போறேன்..

உணர்ச்சிவசப்பட்டு நீங்க எனக்கு வோட்டுப் போடாம இருந்துராதிங்கண்ணே..கீழ உள்ள வோட்ட போட்டுங்கண்ணே நம்ம அம்மாவை நினச்சுக்கிட்டு…. 

Monday, 27 April, 2009

“மரியாதை”யா ஓடி போயிடு

நான் வேலை பார்க்குற அமெரிக்க ஆபிஸில் “சாம்” ன்னு அமெரிக்க கிளையன்ட் ஒருத்தர் இருக்காருண்ணே..சரியான சிடுமூஞ்சிண்ணே..எப்ப பார்த்தாலும் வள்,வள்ன்னு விழுவான்..அவன பழி வாங்குறதுக்கு சரியான சந்தர்ப்பத்த எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேண்ணே..

ஒரு நாள் சரியா எங்கிட்ட மாட்டினான்..அவனுக்கு இந்தியாவோட கலாச்சாரம் பத்தி தெரிஞ்சுக்க ஆசை வந்துருச்சி போல..

“ராஜா..என்னை ஒருநாள் இண்டியன் சினிமாவுக்கு கூட்டிட்டு போயேன்..”

ஆஹா..பட்சி செமையா வந்து மாட்டிகிச்சு..அந்த நேரம் பார்த்து இங்க ஒரு தியேட்டர்ல விஜயகாந்த் நடிச்ச “மரியாதை படம்” ரீலிஸ் ஆச்சுண்ணே..

“சாம், இந்த வாரம் ஒரு இண்டியன் படத்துக்கு கூட்டிட்டு போறேன்..”

வெட்டப் போறோம்னு தெரியாம பலியாடு தல ஆட்டுச்சுண்ணே..

ஆளை “மரியாதை”(சப்டைட்டில்) படத்துக்கு கூட்டிட்டு போயிட்டேண்ணே..

நியுஸ் ரீல் போடுறப்ப நம்ம ஆளு..

“ரொம்ப தேங்க்ஸ் மேன்..ஒரு நல்ல இண்டியன் மூவி பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்..இது நல்ல மூவியா இருக்கும்னு நினைக்கிறேன்..”

இருடி மவனே..போக, போக பாரு…

விஜயகாந்த் அறிமுகக் காட்சி..

“ராஜா, இது யாரு..இந்த படத்தோட காமெடியனா..”

“இல்ல சாம்..இதுதான் ஹீரோ..”

அவன் மூஞ்சி லைட்டா மாறுச்சுண்ணே..

“பார்க்க வயசானவர் மாதிரி இருக்காரேப்பா..”

நான் அடிச்சு விட்டேன்..

“உங்க ஹாரிசன் போர்டு இல்லயா..அது மாதிரி..”

எங்கே சுவர் ஏறி குதிச்சுறுவானோன்னு முன்னெச்சரிக்கையா சொன்னேன்..

“சாம், எங்க இந்தியாவுல ஒரு பழக்கம் இருக்கு..யாராவது படத்துக்கு கூட்டிட்டு போனா முழுப்படமும் பார்க்கணும், அதுதான் அவுங்களுக்கு குடுக்குற மரியாதை..”

“ஓ.கே..ராஜா..”

நல்லா கேட் போட்டு வச்சிட்டேண்ணே..நேரம் ஆக, ஆக விஜயகாந்த் நடிப்ப பார்த்துட்டு பய துடிக்க ஆரம்பிச்சுட்டாண்ணே..

“ராஜா..அது என்ன படத்துல லா..லா..லா..ன்னு ஒரு சத்தம்”

“எங்க வூருல செண்டிமென்ட் சீனுக்கு இதுதான் பின்னனி இசை சாம்”

ஒரு கட்டத்துல பையன் வாய் விட்டு கதறிட்டாண்ணே..

“ராஜா..எனக்கு ஒரு வேலை இருக்கு..நான் வேனா இன்னொரு நாள் பார்க்கட்டா..”

எங்கடி எஸ்கேப் ஆகப் பார்க்குற..

“இல்ல சாம், முழுப்படமும் பார்க்கனும்..அதுதான் நீங்க எனக்கு குடுக்குற மரியாதை..”

பாவம்னே அவன்..எனக்கே கஷ்டமா போச்சு..துடிக்குறாண்ணே..

நேரம் ஆக, ஆக நாக்கு வெளியே தள்ளாத குறை தான்..படம் முடிஞ்சதும் எங்கிட்ட ஒன்னுமே பேசலை.. வெளியே வந்து கேட்டேன்

“என்ன சாம், படம் எப்படி இருந்துச்சு..” நமக்கு ஒரு ஆனந்தம்

அவன் என்னை ஒரு கொலைவெறி பார்த்தான் பாருங்கண்ணே..என் பொண்டாட்டி கூட கோவப்பட்டா அப்படி பார்த்ததில்லைண்ணே..

ஒன்னுமே சொல்லாம காரை எடுத்துட்டு போயிட்டான்னே..

எனக்கு அவன சரியா பழி வாங்கிட்டோம்னு ஒரு திருப்திண்ணே..

அடுத்த நாள் ஆபிஸ் போறேன்..சீட்டுல ஆளை காணோம்..பக்கத்துல இருக்குற ஆள்கிட்ட கேட்டேண்ணே..

“சாம் எங்க ஆளைக் காணோம்..”

“உனக்கு விசயம் தெரியாதா ராஜா..நேத்து நைட்டுல இருந்து அவருக்கு செம காய்ச்சல்..ஆஸ்பத்திரி போயிருக்காரு..டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு..”

இந்த அளவுக்கு போகும்னு நான் எதிர்பார்க்கலைண்ணே.."


Sunday, 26 April, 2009

தமிழனா பொறந்தது குத்தமாண்ணே….

வாழ்க்கையே வெறுப்பா இருக்குண்ணே. எங்க போனாலும் அடிக்கிறாய்ங்கண்ணே..ஏண்டா தமிழனா பொறந்தோம்னு இருக்குண்ணே

இலங்கையிலே தமிழனை துடிக்க, துடிக்க கொல்றாய்ங்கண்ணே..இத தட்டிக் கேட்க முடியாம நாமெல்லாம் உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கோம்ணே..ஏண்ணே, தெரியாமத்தான் கேக்குரேன்..நாமெல்லாம் ஒரே இனம் தானே..தமிழர்களைக் காப்பாத்த ஏண்ணே ஆயிரத்தெட்டு இயக்கங்கள்..எல்லாரும் ஒரே இயக்கமா ஏண்ணே போராட முடியலை..அதிமுக, திமுக, பா.., .தி.மு.(அய்யோ..)….எல்லாம் ஓட்டுக்குண்ணே.. நேத்துக்கி வரைக்கும் எங்க தெருவுல கஞ்சா குடிச்சுக்கிட்டுருந்த ஒரு ஆளு இன்னைக்கு கையில நோட் எடுத்துக்கிட்டு கலெக்சன் வராண்ணே..கேட்டா இலங்கைத் தமிழர்களுக்காம்..அவன் அதை வாங்கி என்ன பண்ணுவான்னு தெரியும்ணே..கொடுமைண்ணேஎனக்கு தெரிஞ்சு ஒரு ஆள்தான், இன்னும் இலங்கைத் தமிழ் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கலை, அவர்தாண்ணே ராஜபக்சே..வர்ற கலெக்சன் பார்த்தா அவரும் ஒன்னு ஆரம்பிச்சிடுவார் போல இருக்குண்ணே

நேத்தைக்கு பக்கத்து வீட்டு குஜராத்தி பையன்(10 வயசுண்ணே), வந்து முதுகுல குத்திட்டு போறான்..ஏன்டா குத்திணேன்னு கோவப்பட்டா, “அங்கிள், கர்னாடகா அடிச்சா வாங்கிகிரீங்க, கேரளாக்காரன் அடிச்சா வாங்கிகிரீங்க, ஸ்ரீலங்காகாரன் அடிச்சா வாங்கிகிரீங்க, நான் அடிச்சா மட்டும் ஏன் கேட்குறீங்க…” ன்னு சொல்லுராண்ணே..எப்படியெல்லாம் பேசுறாயிங்க பாருங்கண்ணே

சரி, தெருவுலதான் அடிக்கிறாய்ங்கன்னு, டி.வி போட்டா, பேரரசு மூஞ்சிய க்ளோசப்ல காமிச்சிட்டாயிங்க போல, என் பொண்டாட்டி மயக்கம் போட்டு விழுந்துட்டா..ஆஸ்பத்திரி அது, இதுன்னு ஏகப்பட்ட செலவுண்ணேஅவரு சிவகாசில பஞ்ச் டயலாக் பேசுரப்பவே யாராவது தட்டிக் கேட்டிருந்தா என் பொண்டாட்டிக்கு இந்த நிலைமை ஆயிருக்குமாண்ணேஏண்டா பொறந்தோம்னு இருக்குண்ணே..

பொண்டாட்டியை டிஸ்சார்ஜ் பண்ணி, அவ கேக்குறான்னு மானாட மயிலாட போட்டா, குஷ் மேடமும், கலா அக்காவும் ஒரு ஆட்டம் போட்டதுல, நிலநடுக்கம் உண்டாகி,லேப்டாப் உடஞ்சு போயி ரொம்ப செலவுண்ணே..ஏண்டா பொறந்தோம்னு இருக்குண்ணே.

டி.வி பார்த்துக்கிட்டு இருந்த பாட்டி, திடிர்ண்ணு மயக்கம் போட்டுட்டாங்கண்ணேதண்ணி தெளிச்சு எழுப்பி உக்கார வச்சா, “செல்வம் லாக்கப்புல அடிபட்டு செத்துருவானான்னு கேக்குறாங்கண்ணே..தாத்தா யாருடி செல்வம்ன்னு சந்தேகமா கேட்கதிருமதி செல்வம்சீரியல்ல வர்ற ஹீரோவாம்ணே..இப்ப தாத்தா மயக்கம் போட்டு விழுந்துட்டாருண்ணே,,,ஏண்டா பொறந்தோம்னு இருக்குண்ணே.

என்னிக்கும் இல்லாம பொண்டாட்டி பூஜை அறையில ரொம்ப நேரம் சாமி கும்பிட்டாண்ணே..எனக்கு கண் கலங்கிடுச்சுண்ணே..புருசன் நல்லா இருக்கணும்தானே வேண்டிக்கிட்டேன்னு கேட்டா,,”இல்லிங்க, ஏர்டெல் சூப்பர் சிங்கர் காட்டு அட்டை(wild card – மன்னிச்சுருங்க ராமதாஸ் அய்யா) ரவுண்டுல ராகினிஸ்ரீ செலெக்ட் ஆகக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டேண்ராங்க..ஏண்டா பொறந்தோம்னு இருக்குண்ணே

தாத்தா சன் செய்திகள் பார்ப்பாரேண்ணு சன் செய்திகள் போட்டேண்ணே…”40 தொகுதிகளும் ஜெயிப்பேன்னுடி.ராஜேந்தர் சொல்ல, தாத்தா விழுந்து, விழுந்து சிரிக்க இருந்த ஒரு பல்லும் காலிண்ணேஅதே நேரத்துல டி.வி பார்த்த என் அஞ்சு வயசு அக்கா பொண்ணு டி.ராஜேந்தரை பூச்சாண்டின்னு நெனச்சு பயத்துல சிலை ஆகிட்டாண்ணேபேச்சு மூச்சு வரலை..மசூதில கூட்டிட்டு போயி மந்திரிச்சு, நிறைய செலவுண்ணேபச்ச மண்ணுன்னே.

சரி கொஞ்ச நேரம் பிளாக் படிப்போம்னு இன்டெர்நெட் பக்கம் வந்தா, அதிர்ஷ்டப்பார்வை(லக்கி லுக்- மறுபடியும் மன்னிச்ச்ருங்க ராமதாஸ் அய்யா) அண்ணனும், சக்கரை அண்ணனும் கன்னா பின்னான்னு அடிச்சுக்கிராயிங்கண்ணே..

ஒரு தமிழனுக்கு வர்ற சோதனைய பாருங்கண்ணேஏண்டா பொறந்தோம்னு இருக்குண்ணே