Saturday, 10 August, 2013

தலைவா - முழுமையான விமர்சனம்இரண்டு நாட்களாக கொலைப்பசியாக இருக்கிறீர்கள். அப்படிபட்ட நேரத்தில், ஒரு ஹோட்டலுக்கு செல்கிறீர்கள்..ஏற்கனவே அருமையான சாப்பாடு போட்ட இடம். கண்டிப்பாக நல்ல சாப்பாடு கிடைக்கும் என்ற நினைப்பில் செல்கிறீர்கள்..இலைமேல் வகை, வகையான பதார்த்தம் வைக்கிறார்கள்...பொரியலை எடுத்து சாப்பிடால், ஒரே உப்பு..சரி கூட்டு எடுத்து சாப்பிடால், ஒரே புளிப்பு..ஆனால், ரசம், தயிர் மற்றும் சூப்பர்..சோறும் வைக்கவில்லை..எப்படி இருக்கும் உங்களுக்கு..

அப்படிப்பட மனநிலைதான் தலைவா படம் பார்த்து முடித்து வந்தது. நண்பன், துப்பாக்கி என்று விஜய் நம்பிக்கையளித்து கொண்டிருந்த நேரத்தில், தலைவா என்ற தலைப்பே, பல எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டிருந்தது. மற்றபடி,இயக்குநர் விஜய்யும், கிரீடம், மதராசபட்டினம், தெய்வதிருமகள் என்று மிகுந்த நம்பிக்கை அளித்திருந்தார்..அப்படிபட்ட் மனநிலையில் படத்திற்கு சென்று ஏமாற்ற மனநிலையில் வெளிவந்ததன் விளைவே, நான் முன்பு எழுதிய "குருவி, சுறாவை மிஞ்சிய விமர்சனம்.." அதை விமர்சனம் என்று சொல்வதை விட ஒரு ஏமாற்ற மனநிலை என்றே சொல்லலாம்..படத்தில், நன்றாக இருந்த சில விஷயங்களை, அந்த ஏமாற்ற மனநிலையில் எழுத தவறவிட்டுவிட்டேன்..இதோ முழுமையான விமர்சனம்..

மும்பையில் ஒரு பெரிய டான் இறந்துவிட்டார், இனிமேல் எனக்குதாண்டா மும்பை என்று வில்லன் கர்ஜித்ததோடு ஆரம்பித்தது..அப்படிப்பட்ட கலவரத்தில், நாசர் குழந்தையை காப்பாற்றும் சத்யராஜ், சந்தர்ப்ப சூழ்நிலையால், தன்னுடைய குழந்தையான விஜய்யையும், நாசரோடு அனுப்பி விட்டு, அம்மக்கள் கூட்டத்துக்கு தலைவராகிறார்..

நாசரோடு ஆஸ்திரேலியாவில் வளரும் விஜய் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் கம்பெனியும், "தமிழ்பசங்க" என்று ஒரு டான்ஸ் குரூப்பும் வைத்திருக்கிறார். அமலாபாலை எதேச்சையாக சந்தித்து காதல் வசப்பட்டு, அமலாபாலின் அப்பா கேட்டு கொண்டதால், சத்யராஜை பார்க்க சொல்லாமல் கொள்ளாமல், மும்பை வருகிறார்கள். வந்த இடத்தில் சத்யராஜ், ஒரு டான் என்று தெரிந்து அதிரும் நேரத்தில், வில்லன்கள் சதியால் கொல்லப்பட, விஜய் அந்த கூட்டத்துக்கு தலைவராவதுதான் கதை..

ஆஸ்திரேலியாவில் சந்தானம், விஜய் செய்யும் லூட்டிகள் கண்டிப்பாக சிரிக்கவைக்கிறது. அதுவும் சந்தானம் அடிக்கும் பஞ்ச்சுக்கள் செம..அவரும், விஜய்யும், சேர்ந்து "ப்ரோ.." என்று கலாய்க்கும் இடங்கள், "அடுத்தவன் ஆட்டோவுக்கு ஆயுதபூஜை போட நினைக்ககூடாது ப்ரோ" போன்ற டயலாக்குகள் அருமை..சந்தானம், முதல் பாதிவரை கலகலப்பாக கொண்டு செல்கிறார். போதாதுக்கு, சாம் ஆண்டர்சன் வந்து டான்ஸ் ஆடி கலகலக்க வைக்கிறார்..

முதல்பாதியில், விஜய்-அமலாபால் சம்பந்தமான காதல் காட்சிகள் கொஞ்சம் போரடித்தாலும், அமலா பால் இந்த படத்துக்கு பொருத்தமான காஸ்டிங்கா என்று யோசிக்க வைக்கிறது. 

இடைவேளை வரை அருமையாக சென்று கொண்டிருந்த திரைக்கதை, இரண்டாவது பாதியில் அப்படியே யூடர்ன் அடிக்கிறது. இயக்குநர் விஜய் ஏதாவது புதிதாக ஏன் இரண்டாவது பாகத்தை எடுக்காமல், ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்தும், புளித்தும்போன, தேவர்மகன், தளபதி போன்ற படங்களில் பார்த்த அதே சீன்களை எடுத்திருக்கிறார் என்ற கோபம் வருவதை தவிர்க்கமுடியவில்லை. ஒவ்வொரு காட்சியையும் எளிதாக யூகிக்க முடிவது பலவீனம். அதுவும், கூட்டத்தில் இவர்தான் துரோகியாக இருப்பார் என்று குழந்தை கூட சொல்லிவிடும்.

விஜய் முடிந்தவரைக்கும் நன்றாக செய்திருக்கிறார். முதல் பாதியில் சந்தானத்தோடு சேர்ந்து கலாய்க்கும் இடங்களாகட்டும், தலைவராக மாறியபின் காட்டும் அழுத்தமாகட்டும், முடிந்தவரை நியாயம் செய்திருக்கிறார். ஆனால், இடைவேளைக்கு அப்புறம் திரைக்கதை சொதப்பியதால்..ப்ச்..அனைத்தும் விழலுக்கு இழைத்த நீர்...

நான் பார்த்தவரையில் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதாக தெரியவில்லை. பில்டப் காட்சிகள் வேண்டுமானல் நிறைய இருக்கிறது. குறிப்பாக "அய்யா, நீங்கதான் இதுக்கு நியாயம் சொல்லணும்..." வகையான காட்சிகள்...

இடைவேளை அப்புறம் உள்ள போர்சன்களை புதிதாக எடுத்திருந்தால், விஜய்க்கு இன்னொரு வெற்றியாக இருந்திருக்கும். "வாங்கண்ணா, வணக்கங்கண்ணா"  பாட்டு தவிர, ஜி.வி பிரகாஷ் எந்த பாடல்களிலும் ஜொலிக்க முடியாதது துரதிருஷ்டம்..ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் கூட கைகொடுக்காதது சோகம். குறிப்பாக, விஜய் முதல் முதலில் கத்தியை பிடிக்கும் இடம் எப்படி இருந்திருக்கவேண்டும். இதுபோன்ற படங்களில் ஆக்சன் பிளாக்குகளில், ஒரு ஸ்டைலிஸ் இருக்கவேண்டும்..ஆனால், இந்த படத்தில் அது சுத்தமாக மிஸ்ஸிங்க்..

முடிவாக தலைவா - இடைவேளை வரை டாப்பு..இடைவேளைக்கு அப்புறம் ஆப்பு..

Friday, 9 August, 2013

எழுதுறேன்யா நானும் சாப்பாட்டுக்கடை இல்லாட்டி உணவக பதிவுஇந்த கோவாலு இருக்கான்ல கோவாலு..எமகாதக பயபுள்ளைண்ணே..அன்னைக்கி அவன் கண்ணுல படக்கூடாதுண்ணு, அப்படியே கொல்லைப்புறமா எஸ்கேப் ஆகலாம்னு ஓடுறேன், வந்தாண்ணே குறுக்கால...

"ராசா..எங்குட்டுடா ஓடுற.."

"கோவாலு..அதுவந்து..ஆரம்பம் படம் யூடிபுல வந்துருச்சுன்னு யாரோ சொன்னாய்ங்க..அதுதாண்டா ஓடுறேன்.."

"படம் பார்க்கவா.."

"அய்யோ..கோவாலு..சிஸ்டத்தை தூக்கி கடாசுறதுக்கு..ஆமா..நீ ஏண்டா குறுக்கால வந்து ஜெர்க் அடிக்குற.."

"ராசா..நீயெல்லாம் பிரபல பதிவரா.."

எனக்கு மூக்குமேல சுர்ருன்னு கோவம் வந்துருச்சுண்ணே..எனக்கு மூக்கு வேற கொஞ்சம் பெரிசு வேறயா..இன்னும் அதிகமாயிடுச்சு..

"கோவாலு..என்னப் பார்த்து இந்த கேள்வி எப்படிடா கேக்கலாம்..டெய்லி ஆயிரம் பேரு படிக்கிறாய்ங்க..10 வாசகர் கடிதம் வருது..20 போன் காலு வருது..நாலு பேரு கமெண்டு போடுறாய்ங்க..என்னைப்போயி எப்படிடா அந்த கேள்விய கேட்கலாம்.."

"போடா ராசா..என்னைக்காவது ஒரு சாப்பாட்டுக்கடை அல்லாட்டி உணவக பதிவு எழுதியிருக்கயா.."

"அப்படின்னா.."

"இப்ப..இங்க ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போற..சாப்பிட்டு என்ன பண்ணுவ.."

"கைய கழுவுவேன்.."

"போடாங்க..கைய கழுவுயோ, மாட்டாயோ..உடனே லேப்டாப்பை தூக்கிட்டு ஒரு பதிவை போட்டுடணும்.."

"ஆங்க்..சாப்பாட்ட பத்தி என்னடா எழுதுறது.."

"அட ராசா..எம்புட்டு இருக்கு..கிரேவி திக்கா இருக்கு...முட்டை சரியா வேகலை....சர்வ பண்ணுன ஆளு, மஞ்சக்கலர் சட்டை போட்டுருந்தாரு..கோழி கால்மேல கால் போட்டு உக்கார்ந்துருச்சு..அப்படியே நடு நடுவுல மானே தேனே பொன்மானே மாதிரி..டிவைன்..ம்ம்..எக்சலண்ட்..வொண்டர்புல்..ப்யூட்டிபுல்..அப்படின்னு நாலு வார்த்தை கோர்த்து விடணும்..."

"ஆஹா..அம்புட்டு ஈசியா..எழுறேண்யா நானும் சாப்பாட்டுக்கடை பதிவு..இந்த வார பதிவு கீழே.."

சிட்டிக்கு நடுவுல நட்ட நடுவுல இருக்கு இந்த உணவகம்..என்ன கொஞ்சம் காஸ்ட்லி..ஏன்னா,.வர்றதுக்கு நீங்க விசா எடுக்கணும்..பிளைட் புடிக்கணும்..டிக்கெட் எடுக்கணும், முக்கியமா, இன்சூரன்ஸ் எடுக்கணும்.."

பிளைட்டு கிடைக்கலைன்னா, இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடலுல ஒரு சுவிம்மிங்க போட்டிங்கன்னா பாடி 1 மாசத்துல வந்துரும்..இது..ஒரு மாசத்துல ஆளு வந்துருவிங்க..ஆமாண்ணே..அமெரிக்காலதான் இருக்கு...

நிறைய பசியோடு உள்ளே சென்றேன்..மனம் நிறைய அன்போடு வரவேற்கவில்லையென்றாலும், முகம் சுழிக்கவில்லை..இந்த இடத்தில் ஓனரை பற்றி சொல்லி ஆகவேண்டும்..அவ்வளவு சிரித்தமுகம்..நன்றாக பேசினார்..அம்மா, அப்பா, குடும்பம் பற்றி எல்லாம் விசாரித்தார்..ஸ்கைப்பில் பயன்களைப் பற்றி பேச, பேச வியந்தே போனேன்..

பசி வயிற்றை கிள்ள, என் மனம் அறிந்து ஒரு டம்ளரில் என் மனம் போல நிறைய ஒரு வஸ்து வைத்தார்கள்..அந்த வஸ்து என்ன கலர் என்று என்னால் கணிக்க முடியவில்லை...இருக்கின்ற பசியில் அதை எடுத்து மடமடவென்று குடித்துமுடித்தேன்..வாவ்..வொண்டர்புள்..டிவைன்..பேர் என்ன என்று கேட்டேன்..கேட்டதற்கு ஏதோ "தண்ணீர்" என்று பேர் சொன்னார்கள்..என் வாழ்க்கையில் இப்படி ஒன்றை சாப்பிட்டதே இல்லை..அட..அட..அட..புயூட்டிபுல்..ஊருக்கு சென்றால், இன்னும் நான்கு டம்ளர் குடிக்கவேண்டும்..ஓ..வாட் எ நேம்.."தண்ணீர்.." வாவ்..

இன்னும் என்ன கொண்டு வருவார்களோ என்ற அவா, என்னுள் மேலோங்கியது..ஆவலாக பார்த்தேன்..என் மனத்தை அறிந்து ஒரு பண்டத்தை அழகாக வைத்தார்கள்..அது சதுரமாக இருந்தது..சற்று வெள்ளையாகவும் இருந்தது..நான்கு புறங்களிலும், சற்று பூசினார் போல, சாம்பல் நிறத்தில் இருந்தது..எனக்கு எழுந்த ஆசைக்கு, ஒரு பத்தாவது சாப்பிட்டுவிடுவேன் போல இருந்தது..

அதை அப்படியே பிய்த்து, ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டேன்..டிவைன்..ஒரு மாதிரி க்ரேவி மாதிரி இல்லாமல், திக்காகவும் இல்லாமல், மொருமொருவென்றும் இல்லாமல்,,ஏதோ புதுமாதிரி அயிட்டமா இருந்தது..அடக்கமுடியாமல் பேர் என்ன என்று கேட்டேன்..அதன் பெயர் "பிரட்" டாம்..வாவ்..வாட் எ நேம்..அதற்கு தொட்டுக்கொள்ள, ரோஸ் கலரில் திக்காக, ஒரு பாட்டிலும், கத்தியும் வைத்தார்கள்..

நான் சாப்பிட்ட சாப்பாட்டு கடைகளிலே இதுபுதுமாதிரி அனுபவம்..அந்த கத்தியை எடுத்து, அந்த பாட்டிலில் உள்ள க்ரேவியை எடுத்து பிரட்மேல் தடவி சாப்பிடவேண்டுமாம்..க்ரேசி..தித்திப்பாக இருந்தது..டோட்டலா அதற்கு பேர் என்ன என்று கேட்டேன்..பெயர் ப்ரட்டும் ஜாம்முமாம்..சூப்பர்..இரண்டு பிரட்டுகளை சாப்பிட்டவுடன் பாத்ரூம் நோக்கி விரைந்தேன்..வாந்தி எடுத்துவிட்டு வந்தபோது, அன்று முழுவதும் தொல்லைப்படுத்தி கொண்டு இருந்த தலைவலி முற்றிலுமாக காணாமல் போயிருந்தது..உணவுக்கு மட்டுமில்லாமல், நம் ஆரோக்கியம் மேலும் அவ்வளவு அக்கறையான உணவகத்தை இதுவரை கேள்வியே பட்டதில்லை..வாவ்...

இவ்வளவு அருமையாக இருக்கிறதே..பயங்கர காஸ்ட்லியாக இருக்குமே என்று பயந்து, பயந்து எவ்வளவு என்று கேட்டேன்..என்ன ஒரு ஆச்சர்யம்..காசெல்லாம் வேண்டாமாம்..மாசம், சம்பாதிக்கிற பணத்தை, ஒழுங்கா கையில கொடுத்தா போதுமாம்..

ஓ மை காட்..வாட் எ டிவைனான, தித்திப்பான, க்ரேவியான, திக்கான, ஹெல்த்தியான் வொண்டர்புல்லான உணவகம்...

குருவி, சுறாவை மிஞ்சிய தலைவா - விமர்சனம்அண்ணா..வணக்கம்ணா...அது என்னண்ணா உங்களை புரிஞ்சுக்கவே முடியலண்ணா..நடிச்சா துப்பாக்கி மாதிரி ஹிட்டு கொடுக்குறீங்க..இல்லாட்டி, குருவி, சுறா..அப்புறம் இந்தப்படம் அப்படின்னு சூரமொக்கைகளை அடிச்சுவிடுறீங்க..எதுவோ..ஆனா, இன்னைக்கு நான் செலவழிச்ச 10 டாலரை திருப்பி கொடுத்துருணும்..இல்லாட்டி, தியேட்டர் முன்னாடி மறியல் பண்ணுவேன்னா..

ஆனா ஒன்னுண்ணா, உங்களுக்கு எதிரி வெளியில இருந்தெல்லாம் இல்லீங்கண்ணா...கொஞ்சம் எட்டி பார்த்தீங்கண்ணா உங்களுக்கே தெரியும்..

சரீங்கண்ணா..டைரக்டரு விஜய் கூட எம்புட்டு நேரம் பேசிருப்ப்பீங்க..கதைன்னு ஏதாவது சொன்னாரா...பயபுள்ள சொல்லியிருக்க மாட்டாருண்ணே..தளபதி, நாயகன், தேவர் மகன்ன்னு மூணு சீ.டியை கொடுத்துருப்பாரே..என்னது எப்படி தெரியுமா..அதுதான் தியேட்டருல்ல கொடுத்தாவுகளே...

அது எப்படிங்கண்ணா, அந்த டைரக்டரு, மனசாட்சியே இல்லாம ஒரு சீனு கூட புதுசா இல்லாம, எல்லா படத்துல இருந்து மூணு, மூணு சீனு எடுத்து படம் பண்ணியிருக்காரு..ஆனா ஒன்னுண்ங்கனா, ரொம்ப நாளைக்கப்புறம், முழுநீள காமெடி படம் பார்த்த திருப்தின்னா..இடைவேளை வரைக்கும், சந்தானம்..இடைவேளைக்கு அப்புறம், தலைவர் வேடத்தில் நீங்க..பிச்சிப்புட்டீங்க..விழுந்து விழுந்து சிரிச்சோம்னா பார்த்துங்களேன்..

படத்தில ஒரு சீனு வருதுண்ணே..ஆஸ்பத்திரியில படுத்து கிடக்குற ஏழைங்களுக்கு, பொன்வண்ணன் குடிக்க ஏதோ கொடுப்பாருண்ணே..அதுக்கு அவிங்க.."இது வேணாம், கொஞ்சம் விஷம் கொடுங்க" அப்படின்னு கேட்பாய்ங்கண்ணே..வீட்டுக்கு வந்து கழுத, அந்த விஷ பாட்டில தேடுறேன்..கிடைக்கவே இல்லீங்கண்ணா..

ஆங்க்..அப்புறங்கன்னா..கதையை ..சொல்லலின்னா, பசங்க கோவிச்சுருவாய்ங்க..சொல்லிறேன்..அதாவது, நீங்க ஆஸ்திரேலியாவில இருக்கீங்க.உங்க அப்பா சத்யராஜ், மும்பையில பெரிய டான்..துரோகம் பண்ணி உங்கள மும்பைக்கு கூட்டி வந்து சத்யராஜ கொன்னுருறாய்ங்க..அப்புறம் அந்த இடத்தை புல்லப் பண்ண, நீங்க தலைவராகி, மிச்சம் சொச்சம் தியேட்டருல இருக்குறவய்ங்களையும் சேர்த்து கொல்லுறீங்க...

ஆனா ஒன்னுண்ணே..இதுவரைக்கும் பாட்டு சீனுக்குதான் தம்மடிக்க வெளியே போய் கேள்விப்பட்டிருக்கேன்..இடைவேளைக்கு அப்புறம், தியேட்டருல இருக்குற அம்புட்டு பேரும் தியேட்டருல இருந்து இன்னைக்குதான்னா பார்க்குறேன்..செம வியாபரம்ணா.. அதுவும், ஒரு வீடியோ கேசட்டுக்காக, நீங்களும், வில்லனும், நடத்துற கூத்து இருக்கே..அண்ணா..அங்க புரியலண்ணா..வீட்டுக்கு வந்து யோசித்தப்பதான் தெரிஞ்சது..அண்ணா.....முடியலங்கண்ணா...

இதுல பக்கத்துல இருக்குற பயபுள்ள, அமலா பாலை பார்த்தவுடேனே., "ராசா, நம்ம குருவித்துறையில கொய்யாப்பழம் விக்குற பொண்ணு மாதிரி இருக்குதுங்குறாண்ணே.." என்னா நக்கலு பாருங்கண்ணா..அப்புறம், என்னண்ணா, மும்பையில இருக்குற எல்லாருமே இந்திய தவிர எல்லாத்தையும் பேசுறாய்ங்க..அதுவும், மஹாராஷ்டிர மக்களுக்கு, நீங்க கொடுத்த அறிவுரை ஒன்னு இருக்கே..அப்ப தூங்குனவய்ங்க தான்னா..

அண்ணா...ஒரு வேண்டுகொள்னா..படத்துல ஏத்தி விடுற மாதிரி அரசியலுக்கு கண்டிப்பா வந்துருங்கன்னா..சுப்ரமணிய சாமிக்கு அப்புறம் அந்த இடம் இன்னும் காலியாத்தாங்கன்னா இருக்கு...

தலைவா - நாலு கொள்ளி கட்டைய நம்ம காசுபோட்டு வாங்கி, நடுமுதுகுல நாமேளே சொரிஞ்சுவிட்ட மாதிரி இருக்குங்கணா...

Sunday, 4 August, 2013

சேரன் - ஒரு தந்தையின் வலி"மச்சி..இந்த சினிமாங்காரய்ங்களே இப்படித்தாண்டா..காதல், காதல்ன்னு படம் எடுத்துட்டு சம்பாதிச்சுட்டு, தனக்குன்னு வந்தவுடனே, என்னா வேலை பண்ணுறாய்ங்கன்னு பார்த்தயா...ஊருக்குத்தாண்டா உபதேசம்..."

சேரன் மகள் தாமினி அழுதுகொண்டே "என் அப்பா, எங்க காதலை பிரிக்க முயற்சி செய்கிறார்..கொலை மிரட்டல் விடுக்கிறார்" என்று மீடியாவில் குமுறியபோது, பல இளைஞர்களின் விவாதங்கள் மேல் கூறியவாறுதான் இருந்திருக்கும்..

நடுத்தர வர்க்கத்தினரின் துன்பங்களை அழகியலுடன் படம்பிடித்த இயக்குநர், ஒரு நிமிடத்தில், தெலுங்கு பட வில்லன் போல தெரிந்திருப்பார் பல இளைஞர்களுக்கு...ஏனென்றால் நம்ம ஊர் சினிமாக்கள் இளைஞர்களை பழக்கியிருப்பது அப்படித்தான்..

கதாநாயகனும், நாயகியும் தெய்வீக காதல் புரிவார்கள்..மீசையை முறுக்கிகொண்டு, "எங்க குடும்ப மானத்தை கெடுக்க வந்தவ இனிமேல் எங்களுக்கு தேவையில்லடா..அவிங்க ரெண்டு பேரையும் வெட்டித்தள்ளுங்கடா" என்று அருவாளை தூக்கும் அப்பாக்களை நமக்கு தமிழ்சினிமாக்கள் பழக்கப்படுத்தியிருக்கிறது..

நாயகனும், நாயகியும், இந்த காதலில் எப்படி ஜெயித்தார்கள்..அல்லது எப்படி உயிர்தியாகம் செய்து, காதலை காப்பாற்றினார்கள் என்று காதலுக்கு உரம்போடாத சினிமாக்கள் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை..

ஆனால் நிஜம் அப்படியா இருக்கிறது. அப்பா, ஏதாவது ஒரு ஆசிரியராகவோ, அரசு அலுவகலத்தில் ஒரு இடைநிலை ஊழியராகவோ இருப்பார்..எல்லா ஆசைகளையும் அடக்கி கொண்டு, மாதத்திற்கு ஒரு சினிமா என்று கணக்குபோட்டு கொண்டு, வங்கியில் லோன் போட்டு, மேனேஜர்களின் திட்டுகளை வாங்கிகொண்டு, முகத்தில் அனைத்தையும் மறைத்துகொண்டு, வீட்டுக்கு வந்து "செல்லக்குட்டி.." என்று மகள்களை அணைத்துக்கொண்டு முத்தமிடும்போது, அந்த வலி, மகள்களுக்கு தெரியுமா என்பது பெரிய கேள்விக்குறி..

பல காதல் சினிமாக்களை பார்த்துவிட்டு "ஹே..அவன் ஹேண்ட்சம்மா இருக்கான்ல..உன்னைய பார்க்குற மாதிரி இருக்குதுடி.." என்று நண்பிகள் ஏத்திவிடுவதால், சட்டென ஒரு பார்வை பார்த்துவிட்டு "நம்மைத்தான் பார்க்குறானோ.." என்ற குறுகுறுப்புடன் தூங்கும் மகள்களுக்கு அன்று தூக்கம் வராது..

அலைபாயுதே மாதவன் போல பஸ்ஸிலோ, ரயிலிலோ அருகில் வந்து அமர்ந்து "எக்ஸ்க்யூமி..நீங்க ரொம்ப அழகு" என்று சொந்த சரக்கே இல்லாமல், கேணத்தனமாக சிரித்தாலும் "ப்ச்..இவன் நம்ம ஹஸ்பெண்டா வந்தா எப்படி இருக்கும்" என்று அவனுடைய சட்டையில் மணக்கும் செண்ட் வாசனையில் , சாயங்காலம், அலுப்புடனும் அசதியுடனும் வந்து கட்டிக்கொள்ளும் அப்பாவின் வியர்வை வாசனை எப்படி ஞாபகம் இருக்கும்..

தன்னை ஷாஜகான் விஜய் போல காட்டிக்கொள்வதற்காவே, "மச்சி..அவ உன்னை காதலிக்கிறாதான..தூக்குறோம்டா..நீ மாலையோட கோயிலுல ரெடியா இரு..அவளை தூக்கவேண்டியது எங்க பொறுப்பு" என்று அப்பன் பாக்கெட்மணியாக கொடுத்த ஐநூறு ரூபாய்க்கு காதலின் காப்பளராக நினைத்துகொண்டு, தீவிரவாதிகள் போல ஒரு வேனை ஏற்பாடு செய்து, அவளை கடத்திவிட்டு பெருமிதத்துடன் காலரை தூக்கிவிடும்போது, அவன் வீட்டில் வயதுக்கு வந்த தங்கையெல்லாம் நினைவுக்கு வருவதில்லை

"மெளனம் பேசியதே" படத்தில் சிலகாட்சிகளைத் தவிர, காதலை தூக்கிபிடிக்கும் தமிழ்சினிமாக்களில், எங்கும் அப்பன்களின் வலியை காட்டியதாக ஞாபகம் இல்லை..

இன்னும் திருமணம் ஆகாத இளைஞராக இருந்து, சேரனின் பேட்டியை பார்த்தால், "நல்லா நடிக்கிறான்யா" என்றுதான் தெரியும்..ஆனால், ஒரு நிமிடம், ஒரு பெண்ணின் தந்தையாக, நடுத்தர வர்க்கத்தின் முகமூடியை அணிந்து கொண்டு பாருங்கள்..அது ஒரு பேட்டி அல்ல, "ஒரு தந்தையின் வலி"

தன் மகள்கள் நல்ல துணி உடுத்தவேண்டும் என்று  காசை கணக்கு பார்த்து காலத்திற்கே ஒவ்வாத கட்டம்போட்ட சட்டையுடனேயே  இன்னமும் சுத்தி கொண்டிருக்கும் அப்பாக்களை காட்டிலும், "அய்யோ..என் மவளை என்ன பண்ணிருப்பானோ" என்று மனதுக்குள் அழுதுகொண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமலும், மனைவியை கட்டிகொண்டு அழும் அப்பாக்களை காட்டிலும், "எம்மவ, இங்க்லீசு என்னமா பேசுறா தெரியுமா சார், ராணி மாதிரி ஆக்குவேன் சார்..பெரிய படிப்பெல்லாம் படிச்சு, தங்கமா வாழப்போறா சார்" என்று ஆயிரம் தடவை அலுவகத்தில் அலுக்காமல் சொல்லாமல் அப்பாக்களாய் காட்டிலும், "மவளை ரொம்ப நேரம் கண்முழிச்சு படிக்கவேணாம்னு சொல்லு..உடம்பு கெட்டுபோகும்..முதல்ல அவளுக்கு ஒரு டீ போட்டு கொடுக்காம என்ன புடிங்கிட்டு இருக்க" என்று மனைவியிடம் கோபம் காட்டும் அப்பாக்களை காட்டிலும் , "என் மவ வயசுக்கு வந்துட்டா சார்..ரெண்டு நாள் லீவுவேணும்" என்று அலுவலகத்தில், தன்னை விட இளவயதான மேனேஜர் முன்னால் கைகட்டி குறுகி நிற்கும் அப்பாக்களை காட்டிலும், ரெண்டு வருடம் பல்லைக் காட்டி பின்னாடியே சுற்றி "ஹே..நீ ரொம்ப அழகா இருக்க" என்றும் "ஐ.லவ்.யூ டியர்" என்று எஸ்.எம்.எஸ் விடும் அழகன்கள் தான் உங்களுக்கு வேண்டும் என்றால், ஒரே வரியில் சொல்வேன்..

"போங்கடி..நீங்களும் உங்க இழவெடுத்த புண்ணாக்கு காதலும்..."