Friday 13 November, 2009

ச்சீ..போடா..நாயே..

உறவுகளை விட்டு பணத்துக்காக என்னதான் பிரிந்து இருந்தாலும், மனம் ஒரு மாதிரி வெறுமையுடன் தான் இருக்கும். நான் சென்னையை விட்டு இங்கு அமெரிக்காவுக்கு வரும்போது ஏதோ ஒரு உலகத்தை வீட்டு பிரிந்து ஆளே இல்லாத இன்னொரு உலகத்திற்கு வந்த மாதிரி உணர்ந்தேன். பாசத்தை தவிர வேறு எதுவும் உணர்த்தாத சொந்தங்கள், என் கூடவே பிறந்த மாதிரி என்னோடே ஒட்டியிருக்கும் பல்சர் பைக், காலையில் கண் முழித்தவுடன் கேட்கும் பக்கத்து வீட்டு சுப்ரபாதம்..இப்படி பல..இங்கு யாராவது ஒரு சிறிய அன்பை வெளிப்படுத்தினால் போதும், மனம் குதூகலிக்கும்.

அப்படி நான் உணர்ந்த அன்புதான் என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் “டாரத்தி” என்ற அமெரிக்க பெண். போன வருடத்தில் ஒருநாள் எப்போதும் போல வேலை பார்த்து கொண்டிருந்த போது, பக்கத்தில் “எக்ஸ்கியூஸ்மி” என்ற குரல் கேட்டு அவசரமாய் திரும்பி பார்த்தபின்புதான் அவரை முதல் முதலாய் பார்த்தேன். என்னுடைய அம்மா வயது. அவரை இப்போதுதான் அலுவலகத்தில் முதல்முதலாய் பார்க்கிறேன். ஒருவேளை யாராவது பிராஜெக்ட் மேனேஜர் புதிதாய் சேர்ந்திருக்கிறார்களோ…,

“எஸ் மேடம்..உங்களை அலுவலத்தில் புதிதாக பார்க்கிறேனே..”

"ஆமாம்.இன்றுதான் வேலைக்கு சேர்ந்தேன்..”

“என்னுடைய பெயர் ராஜா..உங்கள் பெயர்..”

“டாரத்தி..”

“ஓ..புதிதாக பிராஜெக்ட் மேனேஜர்..??”

“இல்லை..”

“அப்புறம். ஹெச். ஆர். அட்மின்..??”

மெலிதாக சிரித்தார்கள்..

“ம்ம்..எனக்கு யாரன்று கண்டுபிடிக்க முடியவில்லை..ஏதாவது டாக்குமெண்ட் வேணுமா..”

“இல்லை..உங்கள் கேபினில் இருக்கும் குப்பைத் தொட்டியை எடுத்து கொடுக்க முடியுமா..நான் இங்கு ஸ்வீப்பராக(சுத்தம் செய்பவர்) சேர்ந்துள்ளேன்..”

அதிர்ந்தே போனேன். என்னுடைய அம்மா வயது. அவர்களால் சரியாக பார்க்க முடியும் என்று கூட எனக்கு தோணவில்லை. அப்படியே எழுந்து விட்டேன். உங்கள் அம்மா வயதுள்ளவர் உங்களிடம் வந்து குப்பை கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்..

“ஐயோ..மேடம்..இந்த வயதில் போய்..”

“ஏன்..எனக்கு என்ன வயதாகி விட்டது..இப்போதுதான் 30 முடிந்து 2 மாதம் ஆகிறது..”

எனக்கு முதல் சந்திப்பிலேயே தெரிந்து விட்டது. முதுமையைப் பழித்து மூலையில் ஒடுங்கிப் போகும் சாதரணப் பெண் இல்லை அவர்கள். முதுமையை சவாலுக்கு அழைத்து, ஜெயிக்க நினைக்கும் பெண். அப்புறம் தினமும், அவர்கள் குப்பை எடுக்க வரும்போது என்னால் எழுந்து நிற்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் வரும் அந்த பத்து நிமிடமும் என் அம்மா எனக்க்கருகில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்.

ஒருமுறை அவர்கள் வரும்போது என் நண்பனுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். அடிக்கடி நான் அவனை “சீ..போடா..நாயே..” என்று சொல்வது வழக்கம். அதை அவர்கள் கவனித்திருக்க வேண்டும் போல்,, அடுத்த முறை வரும்போது கேட்டார்கள்..

“அது என்ன..சீ..போடா நாய்..”

“அது..வந்து..செல்லமாக திட்டுவோம் இல்லையா..எங்கள் மொழியில் நாயைச் சொல்லி செல்லமாக திட்டினேன்..”

“ஹா..அது ஏன் நாயைச் சொல்லி திட்டவேண்டும்..நாய் நல்ல பிராணிதானே..”

“ம்..எங்கள் ஊரில் அப்படி இல்லை நீங்கள் நாயை குழந்தைப் போல் வளர்ப்பீர்கள். நாங்கள் அப்படி இல்லை..காவலுக்கு மட்டும்தான்..”

“ஓ..ஓ..மனிதர்களை விட நாய்கள் எவ்வளவு மேல் தெரியுமா..”

டாரத்தி, நகைச்சுவைக்காக சொன்னாலும் குரலில் ஒரு விரக்தி..

“என்ன ஆச்சு..மேடம்..எதுவும் பிரச்சனையா..நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.உங்களுக்கு மகன், மகள் யாராவது..”

“எல்லாம் இருக்கிறார்கள்..வேறு ஊரில்..மாதத்திற்கு ஒருமுறை வந்து பார்ப்பார்கள், உயிரோடு இருக்கிறேனா என்று..”

சொல்லும்போதே குரல் உடைந்து போனது..இன்னும் ஏதாவது பேச முயன்றால் அழுது விடுவார்கள் என்று தோன்றியது….

“மேடம்..என்ன இதற்கு போய் அழுது கொண்டு..நீங்கள் வேணால் பாருங்கள்..உங்கள் மகன் உங்களை அவர்கள் வீட்டிற்கு கூடிய சீக்கிரம் கூட்டி செல்வார்..”

இந்த ஆறுதலை தவிர எனக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவர்கள் கண்களில் கண்ணீரோடு கூடிய ஏக்கத்தை உண்ர்ந்தேன்..

“மேடம்..உங்களுக்கு ஒன்று தெரியுமா..நீங்கள் அழுகும்போது 30 வயதிலிருந்து 28 வயதாக தெரிகிறீர்கள்..”

சிரித்து விட்டார்கள்..பொய்க்கோபத்தோடு..சொன்னார்கள்..

“சீ..போடா..நாயே…”

அப்புறம் எனக்கு அலுவல வேலை காரணமாக அவர்களை கவனிக்க முடியவில்லை..நீண்ட நாளைக்கு அப்புறம், நேற்றுதான் அவர்களை சந்தித்தேன்..அவர்கள் முகத்தில் சந்தோசம் புரண்டோடியது..

“என்ன மேடம்..என்ன ஆச்சு..ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி தெரியுது..”

“ஆமாம் ராஜா..என் மகன் நேற்று வந்திருந்தான்..என்னை 1 மாதத்திற்கு வீட்டில் வந்து தங்குமாறு கேட்டுள்ளாம்..அடுத்த திங்களிலுருந்து ஒரு மாதம் லீவு..”

“வாவ்..நான் ஏற்கனவே சொன்னேன் இல்ல மேடம்..என்னை மறந்து விட மாட்டீர்களே..”

“ஹே..ஒரு மாதம்தான்..அப்புறம் தினமும் இங்குதான்..”

“இல்லை..மேடம்..அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நான் ஊருக்கு கிளம்புறேன்..இனிமேல் வருவது கடினம்..”

அப்படியே அவர்கள் முகம் செத்து விட்டது..எவ்வளவு சந்தோசம் முகத்தில் இருந்ததோ அதற்கு நேர் எதிர்…

“ராஜா.ஏன்..என்ன ஆச்சு..”

“இல்லை மேடம்..பிராஜெக்ட் முடிந்து வீட்டது..”

“ம்ம்ம்…இன்று என்னை ஒரு மகன் வீட்டிற்கு அழைக்கிறான்..இன்னொரு மகன் என்னை விட்டுட்டுப் போறான்..”

அதிர்ந்து போனேன்..எதார்த்தமாக சொன்ன வார்த்தைகள் இல்லை அவை…அடி மனதில் ஆழத்தில் இருந்து வந்தது. ஒரு நிமிடம் என் நெஞ்சை அசைத்துப் போட்டு விட்டது..எனக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. அவர்கள் முகத்தை மட்டுமே பார்க்கிறேன்..

“சரி ராஜா..நீ என்ன செய்ய முடியும்..உனக்கென்று உலகம் இருக்கிறது….உனக்க்காக உன்னுடைய அம்மா, அப்பா காத்து கொண்டிருப்பார்கள்..சந்தோசத்தோடு போய் வா..”

எனக்கு இன்னும் பேச்சு வரவில்லை..அவர்களாலும் அங்கு நிற்க முடியவில்லை..என்னை விட்டு அவர்கள் நகர்ந்து போவதை அப்போதுதான் உணர்ந்தேன்….

“மேடம்..”

திரும்பி பார்த்தார்கள்..”நான் செல்ல மாட்டேன்..சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என்று சொல்லுவேனோ என்ற ஏக்கம் அந்த கண்களில் தெரிந்தது..கண்களில் திரும்பவும் கண்ணீர்..

“நீங்கள் அழுதால் 30 வயதிலிருந்து 28 வயதாக தெரிகிறீர்கள்..”

சிரித்து வீட்டு சொன்னார்கள்..

“சீ..போடா..நாயே…”

Monday 9 November, 2009

நீயா நானாவில் விளக்காமாத்தடி

“தேங்க்யூ..தேங்க்யூ..வெல்கம் டூ, லயன் டேட்ஸ் சிரப் நீயா, நானா..இந்த சமூகத்தில் விளக்குமாறுக்கு முக்கியப் பங்கு உண்டு. பொதுவாக சுத்தம் செய்வதற்கு பயன்படும் இந்தப் பொருள் சமீபகாலமாக தண்டிக்கும் பொருளாக பயன்படுகிறது..உதாரணமாக சொல்வதனால் மனைவியிடம் வெளக்கமாத்தடி வாங்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்..அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்று நாம் விவாதிக்கப் போகும் தலைப்பு, கணவர்கள் அதிகம் விளக்கமாத்தடி வாங்குவது திருமணத்திற்கு முன்பா, திருமணாத்திற்கு பின்பா..”

(கணவர்கள் தரப்பிலிருந்து ஒருவர்)

“சார்..வெலக்கமாறு என்று சொல்லவேண்டுமா..வெளக்கமாறு என்று சொல்ல வேண்டுமா..”

“ரொம்ப முக்கியம்..அடிவாங்குறப்ப “ஐயோ அம்மா..காப்பத்துங்க” என்று சொன்னால் உயிருக்கு உத்திரவாதம் உண்டு..நான் மனைவிகள் சைடுல இருந்து வர்றேன்..நீங்க சொல்லுங்க..கணவர்களை அடிக்க ஆயிரத்தெட்டு ஆயுதங்கள் இருக்க ஏன் விளக்குமாறு..”

(மனைவி அழுக ஆரம்பிக்கிறார்) தொகுப்பாளர் மெதுவாக அருகில் சென்று

“ஏம்மா..இப்பவே அழுகாதீங்கம்மா..நாங்க சொன்னா மட்டும் அழுதால் போதும்..அப்படியே நீங்க அழுகலைன்னாகூட நாங்க கேள்வி கேட்டே அழுக வைச்சிடுவோம்..”

“சரிங்க சார்..அது வந்து..இந்த வெளக்கமாறு பாருங்க..இதுதான் சரியான ஆயுதம் சார்..சல்லி விலையில கிடைக்குது..பிஞ்சு போனாக்கூட 10 ரூபாயில வாங்கிக்குருவோம்..இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா..நாங்க அடிக்கிறப்ப கணவர் உயிருக்கு பாதிப்பு இல்லை பாருங்க..”

தொகுப்பாளர் கண்கலங்குகிறார்..

“என்ன ஒரு அன்பு..என்ன ஒரு அன்பு..இப்படி ஒரு அன்பு நான் இதுவரை பார்த்ததில்லை..இவர்கள்தான் இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்..உங்களை பார்த்து நாங்கள் பெருமை கொள்கிறோம்..இந்த பெண்ணுக்கு ஒரு ஸ்டாண்டிங்க் ஓவேசன் கொடுக்கலாமே..”

தொகுப்பாளர் எல்லோரையும் எழுந்திருக்க சொல்ல அனைவரும் எழுகின்றனர்..பிண்ணணி இசையில் கிளாப் சௌண்ட்..

“நன்றி..,நன்றி..இப்ப கணவர்கள் பக்கம் வருவோம்.அடி அடிவாங்கியே, ஆடிப்போய் உக்கார்ந்து இருக்கிற நீங்க சொல்லுங்க..உங்க பொண்டாட்டி, விளக்கமாத்தால அடிக்கிறப்ப உங்களுக்கு எப்படி இருக்கும்..”

(கேமிராமேன் அழகாக அமர்ந்திருக்கும் பெண்களையே போகஸ் பண்ணா, தொகுப்பாளர் டென்சனாகிறார்)

“கேமிராமேன்..கொஞ்சம் இந்த பாவப்பட்ட ஜென்மங்கள் மேலயும்

கொஞ்சம் போகஸ் பண்ணுங்கப்பா..நீங்க சொல்லுங்க சார்..”

“சார்..அந்தப் பக்கம் வெளக்கமாத்தால அடிவாங்குறத எவ்வளவு சாதரணமா சொல்லிட்டாங்க..எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா சார்..உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் ஊமைக்காயம் சார்..5 நிமிசம் காதுக்குள்ளா “கொய்ங்க்” ன்னு ஒரு சத்தம் கேட்கும்..வெளியில கூட சொல்ல முடியாது சார்..”

குமுறி, குமுறி அழ ஆரம்பிக்கிறார்..கேமிரா நன்றாக போகஸ் பண்ண ஆரம்பிக்கிறது..

“நன்றி..நன்றி..நீங்க நல்லா அழுதுக்கிட்டே இருங்க..வெளக்கமாத்தடி பற்றி பல சூடான விவாதங்கள் ஓரு சிறிய விளம்பர இடைவெளிக்குப் பிறகு..”

(சிறிய விளம்பர இடைவெளிக்குப் பிறகு)

“வெல்கம் பேக் டூ லயண்டேட்ஸ் சிரப் நீயா…நானா….இப்ப டாபிக்குக்கு வருவோம்..மனைவிகள் பக்கத்துல சொல்லுங்க..நீங்கள் வெளக்கமாத்தால அதிகம் அடித்தது, திருமணத்திற்கு முன்னா, திருமணத்திற்கு பின்னா..”

“திருமணத்திற்கு பின்பு சார்..”

“கொஞ்சம் எக்ஸ்பிளையின் பண்ண முடியுமா..”

“அது வந்து சார்..நாங்க நல்ல பிள்ளைகளா, சீரியல் பார்த்துக்கிட்டு இருப்போம்..அப்ப வந்து…கடுப்பேத்துற மாதிரி, சோறைப் போடு, குழம்பை ஊத்துன்னு, டிஸ்டர்ப் பண்ணின எந்த பொண்ணுக்கு சார் கோபம் வராமல் இருக்கும்

“நியாயமான கோபம்..ஏங்க..கணவன்மார்களே..இது நியாயமான கோபம்தானுங்களே..”

“இல்லை சார்..மனுசன் ஆபிஸுக்கு போய்ட்டு டயர்டா வந்தா..இந்த சீரியல் இருக்கே சார்..ஏண்டா கல்யாணம் பண்ணினோம்னு இருக்கு சார்..திருமணத்திற்கு முன்பு நிறைய தடவை விளக்கமாத்தடி வாங்கிருக்கோம்..ஆனா, அதுதான் சார் சுகம்..உண்மைய சொல்லப்போனா திருமணத்திற்கு முன்புதான் சார் அதிகம் அடிவாங்கிருக்கோம்..ஆனால் அதில் எல்லாம் ஒரு காதல் தெரியும்..ஆனா திருமண்த்திற்கு முன்பு வாங்குகிற அடி இருக்கே..அதுல ஒரு வெறி தெரியுது சார்..வாங்குற அடியில 2 நாளைக்கு எந்திருக்கவே முடியலை சார்..”

திரும்பவும் கண்கலங்கிறார்..மனைவியை பார்த்து கத்துகிறார்..

“அடியே..நீயும் அழுதுறுடி..அப்பதான் டீ.வியில காண்பிப்பாயிங்க..”

இப்போது மனைவியும் அழுகிறார்..

“ஆஹா..இதுவல்லவோ தம்பதி..உண்மையான அன்பு..வாங்க ரெண்டு பேரும் எந்திரிச்சு இங்க வாங்க..”

ரெண்டு பேரும் எழுந்து வருகின்றனர்..

“சொல்லுங்க மேடம்..இப்படி பாசமா இருக்கிற கணவரை அடிப்பது தப்பில்லையா..”

“தப்புதான் சார்..தப்புதான்..ஆனாலும் நான் என்னதான் அடி, அடின்னு அடிச்சாலும், அவரு ரொம்ப நல்லவரு சார்..எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டாரு சார்..”

“ஆஹா..நீயா நானா இது போன்ற தம்பதிகளை சேர்த்து வைப்பதில் பெருமை கொள்கிறது..”

“ஆமா சார்..என் சிட்பெண்ட்..சீ..ஹஸ்பெண்ட்..நான் கடுப்பா இருக்குறப்ப எவ்வளவு பாடுவார் தெரியுமா..அவர் பாட்டைக் கேட்கும்போது எனக்கு அழுகை அழுகையா வரும் சார்..(அழுகிறார்)..அவ்வளவு உருக்கமா பாடுவார் தெரியுமா..”

“ஆஹா..அப்படியா..எங்க, மைக்க அவருகிட்ட கொடுங்க..சார் நீங்க பாடுங்க….மேடம் , நீங்க அழுக ஆரம்பிங்க..”

(கணவர் உருக்கமாக பாட ஆரம்பிக்கிறார்)

“டாய்..டாய்…டிங்கிரிடோய்..டாய்..டாய்..டிங்கிரிடோய்..

கத்திருக்கோலு..”

மனைவி விசும்பி விசும்பி அழுகிறார்..

“அடப்பாவி..நீ பாடுற பாட்டைக் கேட்டா, மனைவி மட்டுமல்ல, பாக்குறவியிங்க எல்லாருமே அழுவாயிங்களே..”

(தொகுப்பாளரும் கண்கலங்குகிறார்..)

மனைவி கணவரைப் பார்த்து

“ஐ..லவ் யூ புருசா..”

“ஐ..லவ் யூ..பொண்டாட்டி..”

எல்லாரும் உணர்ச்சிப் பெருக்கால் கைதட்டுகின்றனர்..

“நீயா நானா வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று இது..இதுபோன்ற உணர்ச்சிமிக்க வரலாற்றை, நீயா நானா பதிவு செய்வதில் பெருமை கொள்கிறது..மேடம்..இதுல இருந்து..நீங்க உங்க கணவர் மேலே அன்பு வைச்சிருக்கிறது இவ்வளவு தெளிவா தெரியுது..நீங்க எப்படி அவரை விளக்காமாத்தால அடிச்சீங்க..கொஞ்சம் டெமான்ஸ்ட்ரேசன் பண்ணிக் காட்ட முடியுமா..”

“அதுக்கு விளக்கமாறு வேண்டுமே சார்..”

“நீயா..நானா..உங்களுக்கு அதைக் கொடுக்கும்..”

எங்கிருந்து ஒரு விளக்காமாறு பறந்து வர, மனைவி அதை மனைவி லாவகமாக கேட்ச் செய்கிறார்..

தொகுப்பாளர் கண்வனைப் பார்த்து..

“கிட்ட வாங்க சார்..கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் அடிவாங்குறதுக்கு ஓடி வர்றீங்கள்ள..இப்ப வந்து வாங்கிங்க”

மனைவி வெறியுடன் கணவரை சாத்து சாத்து என சாத்த கணவர் கதறுகிறார்..

“அடப்பாவிங்களா..டாபிக்கை விட்டுட்டு இப்படி அடிவாங்க வைக்கிறீங்களேயா..வீட்டிலதான் அடிவாங்குறோமுன்னா இங்கேயுமா….”

கதறுகிறார்..கேமிரா அவர்களையே போகஸ் பண்ண..அங்கு இருக்கும் பெண்களெல்லாம் அவர்களை போகஸ் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில், ஆளுக்கு ஒரு விளக்காத்தை எடுத்துக் கொண்டு கணவன்மார்களை நோக்கி ஓடிவர கணவன்மார்கள் எல்லாம் உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறார்கள்..

(ஆத்தாடி..நீங்க எங்க ஓடுறீங்கப்பூ..கீழே உள்ள ஓட்டைப் போட்டுட்டு ஓடுங்க...))

Friday 6 November, 2009

பத்துக்கு பத்து

“என்னையும் ஒரு பதிவராய் நினைத்து இந்த தொடர் பதிவுக்கு அழைத்த” என்று எழுததான் ஆசை.ஆனா ஒரு பயபுள்ள எழுத கூப்பிடாததால், நானே எழுதலாம் என்று நினைத்து எழுத ஆரம்பிக்கும்போது அன்புடன் மணிகண்டன் என்னை அழைத்ததை சாக்காக எடுத்துக் கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்(என்ணண்ணே, ஒரு மாதிரி விசு ஸ்டைலுல வருதா..ஆத்தாடி, எம்புட்டு கஷ்டப்படவேண்டிருக்கு)

ஆமா..எல்லாரும் கவனிச்சீங்களா..ஒவ்வொரு தொடர்பதிவு ஆரம்பிக்கும்போது யாரு தொடங்குறாங்கன்னு தெளிவா தெரியுது..ஆனால், யாரிடம் முடியுதுன்னு யாராவது கண்டுபிடிச்சீங்களா…(ஆஹா..என்ணண்ணே இதுக்கெல்லாம் போ விருதெல்லாம் கொடுத்துக்கிட்டு..அதுவா வருதுண்ணே..)

இந்த பதிவோட விதிகள்னு சொல்லிருக்காயிங்க..கண்ணை மூடிக்கிட்டு கீழே உள்ளதை படிச்சிருங்க பாப்போம்(நோ..நோ..நோ பேட் வேர்ட்ஸ்)

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

எனது பதில்கள்

  1. அரசியல் தலைவர்

பிடித்தவர் : அப்பழுக்கற்ற நல்லகண்ணு, எங்கள் குடும்பத்திற்கு சோறு போடும் கலைஞர்(அரசு ஊழியர் குடும்பம்ல..)

பிடிக்காதவர் : முன்னாள் முதலைமைச்சர்(வீட்டிற்கு ஆட்டோ வர விருப்பமில்லாததால் பெயர் குறிப்பிடப்படவில்லை..அப்படியே, வந்தாலும், வரும் கட்சியினர்கேற்ப பெயர் மாற்றப்படலாம்)

  1. எழுத்தாளர்

பிடித்தவர் : ஞானி, பாமரன்

பிடிக்காதவர் : சுஜாதா(யாருண்ணே, அங்க அடிக்க வர்றது), பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ.

  1. கவிஞர்

பிடித்தவர் : அறிவுமதி, முத்துக்குமார்

பிடிக்காதவர் : சினேகன்

  1. இயக்குனர்

பிடித்தவர் : செல்வராகவன், மிஸ்கின், மணிரத்னம், சசிகுமார், அமீர், ராம்(கற்றது தமிழ்)

பிடிக்காதவர் : பேரரசு(தாங்கலண்ணே)

  1. நகைச்சுவை நடிகர்

பிடித்தவர் : சந்தானம், லொல்லுசபா ஜீவா, சிவகார்த்திகேயன்(கண்டிப்பா எதிர்காலம் இருக்குண்ணே..என்ன ஒரு டைமிங்க் சென்ஸ்)

பிடிக்காதவர் : பிரா ஜட்டி நடிகர்(சமீபகாலமாக)

  1. நடிகை

பிடித்தவர் : நயன் தாரா(ஹீ.,..ஹீ)

பிடிக்காதவர் : திரிஷா(பின்ன..தலைவிக்கு போட்டிக்கு வந்தா)

  1. இசையமப்பாளர்

பிடித்தவர் : ஆஸ்கார் நாயகன், இசைராஜா

பிடிக்காதவர் : சங்கர் கணேஷ்

  1. நிகழ்ச்சி தொகுப்பாளர்

பிடித்தவர் : சிவகார்த்திகேயன்(அது, இது எது)

பிடிக்காதவர் : கோபிநாத்(கடுப்பு ஏறுதுண்ணே), திவ்யதர்சினி(பயமா இருக்குண்ணே)

  1. ரியாலிட்டி ஷோ

பிடித்தது : அது, இது, எது(என்ன ஒரு கலகலப்பு)

பிடிக்காதது : மானாட, மயிலாட, குரங்காட(சாகடிக்கிறாயிங்கண்ணே), திருவாளர் திருமதி(வீட்டுல ஓரே சண்டைண்ணே)

  1. பதிவர்

பிடித்தவர்

நக்கலுக்கு : வானம்பாடிகள், விசா பக்கங்கள்

கவிதைக்கு : கதிர், அன்புடன் மணிகண்டன்

சுவைக்கு : பிரதீப்(ஈ.எஸ்), சக்கரை சுரேஷ்(எப்படிண்ணே மறக்கமுடியும்)

கவுஜ கவிதைகளுக்கு : ஞானப்பித்தன், வால்பையன்

விமர்சனத்திற்கு : கேபிள் சங்கர், ஜாக்கி சேகர்

பல்சுவைக்கு : உண்மைத் தமிழன், லக்கிலுக்

கோபத்திற்கு : அப்பாவி முருகன்

சமையலுக்கு : ஜலீலா

கலகலப்பிற்கு : கலகலப்பிரியா, துளசி அய்யா

பின்னூட்டத்திற்கு : தாரு என்கிற பெரும்படை அய்யானர்(ஊருக்கு வர்றப்ப இருக்கு உங்களுக்கு)

ஜொலிப்பிற்கு : நான் ஆதவன், செந்தில்வேலன்

சுவாராசியமான இம்சைக்கு : செந்தழல் ரவி

பிடிக்காதவர்

டோண்டு, இட்லிவடை

Tuesday 3 November, 2009

தொலைக்காட்சி சீரியல்கள் – ஒரு அகோரப் பார்வை

நேத்து கொஞ்சம் உடம்புக்கு முடியாததுனால ஆபிஸ்ஸுக்கு லீவு போட்டுருந்தேண்ணே..கொஞ்சம் காய்ச்சலால்(பன்னிக் காய்ச்சல் இல்லைண்ணே) எழுந்து நடக்க முடியலை. உடம்பு அசதியில நல்ல தூக்கம் வேற. கரெக்டா 9 மணிக்கு அலாரம் அடிச்ச மாதிரி, “அம்மி, அம்மி மிதிச்சி..அருந்ததி முகம் பார்த்து..” ன்னு காது பக்கத்துல கொய்ங்க்ன்னு ஒரு சத்தம்..கடுப்புல கண்ணைத் திறந்து பார்த்தா, “மெட்டி ஒலி” ன்னு ஒரு சீரியல். என் பொண்டாட்டி வைச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருக்காண்ணே..சீரியல் பாக்குறதுக்காக அலாரம் வைச்சிருப்பா போல.

“ஏம்மா..ஒரு மாதிரி தலை வலிக்குது..ஒரு காபி..”

“கொஞ்சம் இருங்க..மெட்டி ஒலி போட்டுடாயிங்க..ஒரு ½ மணி நேரம்”

சரி அரை மணி நேரம்தான்னு நம்பி சீரியல் பாத்ததுதான் நான் வாழ்க்கையில பண்ணின முதல் தப்புண்ணே..என்னம்மா நடிக்கிறாயிங்கண்ணே அந்த சீரியலுல..அரவிந்த்சாமி அப்பா தான் இந்த சீரியலுல மெயின் கேரக்டர். அவருக்கு 5 பொண்ணுங்க..ஒவ்வொரு பொண்ணும் முறை வைச்சி தினமும் அழுவாறாயிங்கண்ணே..இதுல என்ன கொடுமைண்ணா..சீரியல்லுல ரோட்டுல நடக்குற துணைநடிகர்கள் கூட அந்த குடும்பத்தைப் பார்த்து அழுவாறாயிங்கண்ணே..என்னடா பக்கத்துல விசும்புற சத்தம் கேட்குதேன்னு திரும்பிப் பார்த்தா, என் பொண்டாட்டி கேவி, கேவி அழுவுறாண்ணே..கல்யாணம் பண்ணி வீட்டை விட்டு வர்றப்ப கூட இப்படி அழுவலண்ணே..

“அடியே..என்ன ஆச்சு..சாதாரண காய்ச்சல்தாண்டி..நாளைக்கு சரியாகிடும்..இதுக்கு போய் சின்னப்புள்ளை மாதிரி அழுவுற..”

“அதுக்காக அழுவலைங்க…இங்க பாருங்க “சரோ” வுக்கு நடந்த கொடுமைய..கர்ப்பிணி பொண்ணை இப்படியா கொடுமைப்படுத்துவாயிங்க..இதுல லீலா வேற..பாவங்க..”

“அடியே..கட்டுன புருசன இப்படி சீரியல் போட்டு கொடுமைப்படுத்திறியேடி..என்னால எந்திரிச்சு ஓட முடியாதுன்னு தானே இப்படியெல்லாம் பண்ற..ஒரு காபியாவது..”

“கொஞ்சம் இருங்க..திருமதி செல்வம் முடியட்டும்..”

எனக்கு தலைசுத்தி வந்துருச்சு..திருமதி செல்வம் வேற போட்டுடாயிங்க..சரி கொஞ்ச நேரம்தான் பார்ப்போமே, பார்த்தேன்..கதையில் செல்வம்னு ஒருத்தர் நடிக்கிறார்ண்ணே..ஆஸ்கர் ரேஞ்சுக்கு நடிப்புண்ணே..இயேசுநாதருக்கு அடுத்தப்படியா அவருதான் நல்லவருண்ணே..அவரையும் கூட்டம் கூட்டமா கொடுமைப்படுத்துறாயிங்க..அவரும் குமுறி குமுறி அழுவுறாரு…இதுல சேது படத்துல நடிச்ச அபிதா வேற, பிச்சு உதறுராயிங்க..திரும்பவும் பக்கத்துல அழுகைச் சத்தம்..எனக்கு யாருண்ணு தெரிஞ்சு போச்சு..

“இங்க பாருங்க..பாவம் செல்வங்க..அவரை..”

“அப்படியே நிறுத்திக்க..பக்கத்துல காபி தண்ணி கூட குடிக்காம படுத்த படுக்கையா புருசன் கிடக்குறேன்..இதுல சீரியல் பார்த்து அழுவுறியா..”

“ஏங்க..தினமுமா இப்படி பண்றேன்..இன்னைக்கு வீட்டுல பிரியா தானே இருக்கீங்க..”

“அடிப்பாவி..ஏதோ..வொக்கேசன் லீவு போட்டு ஜாலியா இருக்குற மாதிரி சொல்லுறீயா..”

“அய்யோ இருங்க..நானே காபி போட்டுத்தர்றேன்..”

அப்பா..இப்பத்தாண்ணே..உசிரு வந்துச்சு..கிளம்புறப்ப அப்படியே ஒரு யூ டர்ன் போட்டு திரும்புனாண்ணே..

“ஏங்க..இந்த “செல்லமே” சீரியலை போடுறீங்களா..நான் அடுப்பறையில இருந்தே கேட்டுக்கிட்டு இருக்கேன்..”

சரி, நமக்குதான் காபி கிடைக்குதேன்னு சீரியலைப் போட்டேன்..அட, நம்ம ராதிகா அக்கா..இந்த சீரியலுல ஒரு பெரிய பொரியல்..சீ..கூட்டு குடும்பம்ணே..கன்னா பின்னானு அடிச்சுக்கிறாயிங்க….ஏதாவது தப்பு பண்ணினா விளக்காமத்தால..சீ..காய்ச்சலுல வாய் குழறுது பாருங்க..விளக்கு முன்னாடி நிக்க வைக்கிறாயிங்க..இந்த சீரியலுலயும் யாரையாவது யாரோ கொடுமைப்படுத்துக்கிட்டே இருக்காயிங்க..கடைசியில “செல்லமே” அப்படின்னு ஒரு பேக்கிரவுண்டு மியூசிக்கோட நம்ம உசிரை எடுக்குறாயிங்க..ஒரு நிமிசம் இருங்கண்ணே காபி வந்துருச்சு..

ஆசையா எடுத்து காபியை ஒரு மடக்கு குடிக்கிறேன்..காபியெல்லாம் உப்புண்ணே..ராதிகா அழுவுறத கேட்டுட்டே வீட்டுக்காரம்மா சக்கரைக்கு பதிலா உப்பு போட்டுடுச்சு….

“ஆத்தா..இதென்ன உப்பு காபி..”

“அதை விடுங்க..சீரியலுல செல்லம்மாவை என்ன சொல்லி திட்டுனாயிங்க..”

“சீரியல் பாத்தே நாசமா போங்கன்னு திட்டுனாய்ங்க..”

“விளையாடாதீங்க..என்ன சொல்லி திட்டுனாய்ங்க..”

“நீ, எனக்கு சக்கரை காபி போட்டுதா..அப்பதான் சொல்லுவேன்..” எப்படியெல்லாம் யூஸ் பண்ணே வேண்டி இருக்கு..நமக்கு காபி வேணும்ல..

“சரிங்க..இப்ப போட்டு தர்றேன்..அப்படியே “உறவுகள்” சீரியல் போட்டு விடுறீங்களா..கேட்டுக்கிட்டே காபி போட்டு தர்றேன்..”

காலங்காத்தால ஒரு காபிதண்ணி கேட்டது தப்புங்களாண்ணே..

Sunday 1 November, 2009

இரு கோடுகள்

நவம்பர் கடைசியில் சென்னை வருவதால் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருக்கிறேன். அப்போதுதான் நண்பன் ஒருவன் மேற்கு மாம்பலத்தில் வீடு காலி பண்ணி வேறு வீட்டிற்கு செல்வதாக சொன்னான்..நான் அந்த வீட்டை எனக்கு வாடகைக்கு தரும்படி வீட்டு ஓனரிடம் கேட்கச் சொல்லியிருந்தேன்.. அவன் தான் தொலைபேசியில் அழைத்தான்..

“ராசா..எப்படிடா இருக்க..”

“நல்லா இருக்கேன்டா..நீ எப்படி இருக்க..என்ன வீடு விசயமா, வீட்டு ஓனர்கிட்ட பேசினயா?

“டே..இப்ப வீட்டு ஓனர்கிட்ட இருந்துதான் பேசுறேன்..அவர் உங்கிட்ட பேசணுமாம்..கொடுக்கிறேன்..”

“வணக்கம் சார்..நான் ஆனந்த் நண்பன் பேசுறேன்..நல்லா இருக்கீங்களா..”

“ஹலோ..ஐ யாம்..பார்த்தசாரதி..ஐ ஆம் பைன்..ஹவ் ஆர் யூ..வாட் ஆர் யூ டூயீங்க்..”

“சார்..நான் சென்னையில ஒரு கம்பெனியில வேலை செய்யுறேன்..வேலை விசயமா அமெரிக்கா வந்திருந்தேன்..நவம்பர் கடைசி சென்னை வர்றேன்..அதுதான் வீடு விசயமா ஆனந்த் கிட்ட பேச சொன்னேன்..”

“யா..ஹீ டோல்டு மீ….ஐ யாம் வொர்கிங்க் அஸ் அக்கௌண்ட் மேனேஜர் இன் ரெபியூட்டட் கம்பெனி..ஐ யாம் பிரம் திருச்சி..”

(உங்ககிட்ட சொல்றதுக்கு என்னண்ணே..எனக்கு அலுவலக வேலை விசயம் தவிர மற்ற நேரங்களில் நம்மவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது பிடிக்காது..ரத்தத்திலே ஊறிக்கிடக்கிற தமிழை விட வேறு என்ன வேண்டும்..பிடிவாதமாக அவர் ஆங்கிலத்திலேயே பேசவே எனக்கு பின்பக்கம் யாரோ நெருப்பு வைத்த மாதிரி கொதித்தது..ஆற்றாமையுடன் அவரிடம் கேட்டே விட்டேன்)

“சார்..திருச்சின்னு சொல்லுறீங்க..தமிழிலிலே பேசலாமே..”

“ஹி..ஹி…அதுவா தம்பி..அப்படியே பழகிடுத்து..எங்களுக்கு நல்ல குடும்பம்தான் முக்கியம்..”

“கண்டிப்பா சார்..என்னால உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது..”

"ஓகே..உங்க பிரண்ட் 7000 வாடகை கொடுத்தார்..நீங்க 10,000 கொடுத்துடுங்கோ..ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்துடுங்கோ..”

“சார்…பத்தாயிரமா...நான் சென்னை வந்து வந்து முதல்ல வாங்கின சம்பளமே 3000 தான் சார்….ரொம்ப அதிகம் சார்..அதுவும் ஒரு லட்சம்….மிகவும் அதிகம் சார்..”

“என்னப்பா தம்பி..எந்த காலத்தில் இருக்கீங்க..சென்னையில இந்த ஏரியாவுல கம்மிங்க..நீங்க இல்லைன்னா, சாப்ட்வேர் கம்பெனியில வேலை பார்க்குற ஆயிரம் பேர் வர்றாங்க..எல்லாம் பேச்சிலர்ஸ் பசங்க..15,000 ரூபா கொடுக்க கூட தயாரா இருக்கா….”

“நானும் சாப்ட்வேர் கம்பெனியில்தான் சார் இருக்கேன்..வீட்டுல கொஞ்சம் கமிட்மெண்ட் இருக்கு….அதனால தான்..கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாமே..”

“சரி..தம்பி, ஆனந்த் பிரண்டா வேற போயிட்டீங்க..9000 கொடுத்திடுங்கோ..ஓகே..”

எனக்கு இது அதிகப்படியா தெரிந்தாலும் மறுக்க முடியவில்லை..

“சரிங்க சார்..நான் அங்கு வந்து உங்களை நேரா பார்க்குறேன்..”

“ஓகே தம்பி..உங்க பேரைக் கேட்க மறந்துட்டேன்..உங்க பேர் என்ன..?”

பேரைச் சொன்னேன்..பேரைச் சொன்னவுடன் எதிர்பக்கத்தில் கனத்த மௌனம்.. சிறிது நேரம் கழித்து கட் ஆகி விட்டது…ஒரு 10 நிமிடம் கழித்து நண்பனுக்கு போன் பண்ணினேன்..

“டே….ஆனந்த்..ராசா பேசுறேன்..என்னடா கட் ஆகிடுச்சு..ஓனர் ஓகே பண்ணிட்டார்ன்னு நினைக்கிறேன்….மீதியெல்லாம் அங்க வந்து பேசிக்கிறேன்..”

“ராசா..அந்த வீடு வேணான்டா..உனக்கு நல்ல வீடு பார்க்குறேன்..”

“ஆனந்து..என்னடா ஆச்சு..வீட்டு ஓனர் கூட ஓகே சொல்லிட்டாருலடா..அப்புறம் என்ன..”

“இல்லடா..கடைசியா வேணாம்னு சொல்லிட்டார்..”

“டே..ஏண்டா..நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தார்..”

“ப்ச்..வேணான்டா..விட்டுடு…”

“டே..வெண்ணை..இப்ப காரணத்தை சொல்லலே, அங்க வந்து அடிப்பேன்..சொல்லுடா..”

“ராசா..நீ ஏண்டா அவர்கிட்ட உன் பெயரை சொன்ன..உன் பெயரைக் கேட்டதுமே நீ கிறிஸ்டியன்னு தெரிஞ்சு போச்சு..வேற பெயர் சொல்லி இருக்கலாம்ல..”

“டே..வீட்டுக்காக பேரை எப்படிடா மாத்த முடியும்..”

“ராசா..இங்க மாத்திதான் ஆகணும்..இல்லைனா இந்த ஏரியாவுல வீடு கிடைக்காது….”

“டே..நான் என்ன பண்ணினேன்டா..ஏண்டா, நானும் தமிழ்நாட்டுலதானடா பிறந்தேன்..நான் யாருக்கும் எந்த தப்பும் பண்ணலையேடா..”

“ராசா..கொஞ்சம் பிராக்டிகலா திங்க் பண்ணு..உனக்கு இந்த ஏரியாவுலதான் வீடு வேணும்னா இதைத் தவிர வேற வழியில்லை..ஒன்னு பண்ணுவோம்..கொஞ்ச நாள் எங்கயாவது மேன்சனில தங்கு….நான் எனக்குன்னு சொல்லி இந்த ஏரியாவுல வீடு தேடுறேன்..அதுக்கப்புறம் நீ வந்து குடியேறிக்க..ஓனர் கிட்ட சொல்லி அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம்..”

எனக்கு மனசு கேட்கவில்லை..ஆனால் வேற வழியும் தெரியவில்லை..

“ம்ம்….சரி..நீ வீடு தேடுறப்ப என்னையும் கூப்பிடு நானும் வர்றேன்..”

“டே..ராசா..வேணான்டா..உன்னைப் பார்த்தா கொஞ்சம் கஷ்டம்..”

“ஏண்டா..”

தயங்கி தயங்கி சொன்னான்..

“இல்லடா..நீ கருப்பா வேற இருக்கியா..அதனால உன்னை ********* ******** ********* ************** “

எனக்கு செருப்பை கழட்டி அடித்த மாதிரி இருந்தது..இதற்கு மேல் அவனிடம் பேச முடியவில்லை..

பல கேள்விகள் என் மனதில் ஓடின..அதைக் கலைத்தாற்போல் தொலைபேசி அழைத்தது..அம்மா தான்..

“அம்மா..எப்படி இருக்கீங்க..”

“நல்லா இருக்கேம்பா..” அம்மா குரலில் சந்தோசம் தெறித்தது..

“ஏம்மா..குரலில ரொம்ப சந்தோசம் தெரியுது..என்ன விஷயம்..”

“இல்லப்பா..பக்கத்து ஐயர் வீட்டு மாமி வந்திருக்காங்க..நீ ஊரில இருந்து வர்றத சொன்னேன்..ரொம்ப சந்தோசப்பட்டாங்க..இந்த நீயும் பேசு..”

மாமியிடம் கொடுத்தார்கள்..

“மாமி..எப்படி இருக்கிங்க..”

“நல்லா இருக்கேன் ராசா..அம்மா விஷயம் சொன்னாங்க..நேக்கு ரொம்ப சந்தோசமா இருக்குப்பா..பத்திரமா ஊரில இருந்து வாப்பா..நீ பத்திரமா வரணும்னு நான் பக்கத்துல பெருமாள் கோயிலுல போய் வேண்டிக்கிட்டு பிரசாதம் கொண்டு வந்து அம்மாகிட்ட கொடுத்திருக்கேன்..நீயும், உன் மனைவியும் எங்க வீட்டுல வந்து சாப்பிட்டுதான் போகணும், சொல்லிப்புட்டேன்..அப்புறம் உங்க சர்ச்ல ஏதோ திருவிழாவாம்..அம்மா சொன்னாள்..அம்மாவை வேண்டிக்க சொன்னேன்..நீ எதுவும் கவலைப்படாதே..நான் கும்புடுற பெருமாளும், நீங்க கும்புடுற ஏசு சாமியும் உன்னை பத்திரமா கொண்டு வந்து சேர்த்திடும்..நான் வர்றேன்பா..”

அப்போதுதான் அதை உணர்ந்தேன்..இன்னும் மனிதம் செத்து விடவில்லை..சில பேரிடம் தற்காலிகமாக செத்து கிடந்தாலும் பல பேரிடம் உயிரோடுதான் இருக்கிறது..

“என்னங்க..அம்மா பேசினாங்களா..” என் மனைவி..

“ஆமா….பக்கத்து வீட்டு மாமி கூட இருந்தாங்க..அவுங்க கூடயும் பேசினேன்..”

“ஓ..யாரு..நான் கல்யாணம் ஆகி உங்க வீட்டுக்கு வந்தப்ப, “நாந்தான் உங்க குழந்தைக்கு பெயர் வைப்பேன்” னு சொல்லி கேலி பண்ணினாங்களே..அந்த மாமியா..”

என் மனைவியின் சந்தோசம் கண்களில் தெரிந்தது..

“ரொம்ப நல்லவங்க..ம்..அதுசரி..நமக்கு குழந்தை பிறந்தா நான் தான் பெயர் வைப்பேன்..” என் மனைவி செல்ல அடம் பிடித்தாள்..

“சரிங்க மேடம்..எங்க ஒரு பெயர் சொல்லுங்க பார்ப்போம்..”

“ம்..நாலு பெயர் யோசித்து வைத்திருக்கேன்..நல்லா இருக்கா பாருங்க..ஜோசப், மாத்யூ, தாமஸ், லெவின்..”

“ஏம்மா..எல்லா கிறிஸ்டியன் பெயரா இருக்கே..வேற ஏதாவது பெயர்….”

அவசரமா குறுக்கிட்டாள்..

“ஏங்க..நாம கிறிஸ்டியன் தானே..”

எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை..

“ஜாதி மதங்களைப் பாரோம் -

உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே -
அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே”

பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் “பாரதி” படத்திலிருந்து பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது…