Wednesday, 30 November, 2011

மயக்கம் என்ன – விமர்சனங்களுக்கு ஒரு விமர்சனம்

விமர்சனம் எப்படி இருக்கவேண்டும் தெரியுமா என்று ஆரம்பித்தால், என்னை அடிக்கவிரட்டுவீர்கள் என்று தெரியும்..ஏனென்றால், விமர்சனத்தையே விமர்சனம் பண்ணுவதற்கு நான் நீதிபதியும் இல்லை, இப்படித்தான் விமர்சனம் செய்யவேண்டும் என்று சொல்ல எனக்கு எந்த தகுதியும் இல்லை. ஆனால் இப்படி இருந்தால் நலம்(கமல் மாதிரி குழப்புறேனா…) என்பதை சொல்லவே, இந்த விமர்சனங்களின் விமர்சனப் பதிவு.(குழம்புறீங்களா..இதுக்கு பேர்தான் சைடு நவீனத்துவம்..மார்க்கெட்டுல புதுசா வந்துருக்கு).

ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். எனக்கு நன்றாக இருக்கும் படம், இன்னொருவருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதை எப்படி விமர்சிக்கிறோம் என்ற முறை உள்ளது. அதிலும் ஒரு நியாயம் வேண்டும் என்றே கருதுகிறேன். எடுத்துக்காட்டாக, ஒரு மூன்றாந்தர பிட்டு படத்தை விமர்சனம் செய்யும்போது, “சரியான மொக்கைடா”(அதெல்லாம் எவனும் சொல்ல மாட்டாய்ங்க) என்று சொல்லும்போது, அந்த படத்திற்கு அது தேவைதான். ஏனென்றால், அந்த படத்தில் எதுவும் சரியாய் இருக்கப்போவதில்லை.(தேவையில்லாத மனக்கிளர்ச்சியை தூண்டிவிடுவதைத் தவிர).

ஆனால் மயக்கம் என்ன என்ற படத்தைப் பற்றி சில விமர்சனங்களைப் படித்தபோது, கோபம் கோபமாக வந்தது. நம் பதிவுலகத்தில் ஒரு வழக்கம் உள்ளது. ஏதாவது ஒரு படத்தை கலாய்க்கவேண்டுமானல் போச்சு, அந்த படத்தைப் பற்றி ஒன்றும் தெரியவேண்டியதில்லை..”மரண மொக்கைடா..”, “தியேட்டருல எல்லாரும் ஓடியே போய்ட்டாய்ங்கடா..”வயிறு வலிடா..” “கொடுமைடா..” என்று நான்கு கேட்சியாக கேப்சன்களை போட்டால் போதும்அவ்வளவுதான், நானும் சிறந்த விமர்சகர்..

இன்னொரு டைப்பான விமர்சனம்..பாராட்டுறேன்னா திட்டுறரேன்னா கூடத்தெரியக்கூடாது..வார்த்தைகள் புரியக்கூடாதுவைட் ஆங்கிள் சரியில்லை..கேமிராவுல கொஞ்சம் அழுக்கு இருந்துச்சு., ஜீம் லென்ஸ் கோணிக்கிட்டு இருந்துச்சு என்று கொஞ்சம் டெக்னிக்கலாக அடிச்சுவிட்டால் போதும், “ஆஹா..என்னமா எழுதுறான்யா..” என்று ஒரே பாராட்டு மழைதான். பதிவின் முடிவில் கண்டிப்பாகஇன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஒரு காவியம் கிடைத்திருக்கும்..” என்று சேர்த்துவிட்டால் போதும், நீங்கள் தான் சூப்பர் விமர்சகர்..

அப்புறம் முக்கியமானதை மறந்துவிடக்கூடாது, படத்தலைப்பினை வைத்துதான், கேட்சியாக முடிக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, அரை மயக்கம்குறை மயக்கம், பாலைதொல்லை, ஆறாம் அறிவேஅறிவே இல்லை, ரௌத்திரம்தரித்திரம்..இப்படி..இதெல்லாம் இல்லாமல் ஒரு விமர்சனமாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

சரி, மயக்கம் என்ன படத்திற்கு வருவோம். சில விமர்சனங்கள் சொல்லுவது போல் படம் மரணமொக்கையா, முதலில் மொக்கை என்பதற்கே என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. சரி, மொக்கை என்பதை,வேஸ்டு என்றே எடுத்துக்கொள்ளுவோம்..ஒரு வாதத்துக்காக மரணமொக்கை என்றால் எல்லாம் வேஸ்டு என்றே கொள்வோம்..மயக்கம் என்ன படம் எல்லாத்துறையிலும் வேஸ்டா..அப்படி என்றால் படத்தின் பாடல்கள் ஹிட் என்பது தவறா..படத்தின் ஒளிப்பதிவு சரியில்லையா. யாருடைய நடிப்பு சரியில்லை

சரி, நாயகன் சைக்கோவாகத்தான் இருக்கிறான் என்றால், ஏன் இருக்ககூடாது….எல்லோரிடம் ஒரு சைக்கோத்தனம் இல்லையா..ஏன் ஹீரோ, எல்லாரையும் காப்பாற்றும் சூப்பர்மேனாகத்தான் இருக்கவேண்டுமா..எனக்கு புரியவில்லை

ஒரு நண்பன் கேட்ட கேள்விதான் எனக்கு கடுப்பை கிளப்பியது..”என்னடா படத்தை இருட்டுலயே எடுத்துருக்காய்ங்கஇதற்கு நான் என்ன பதில் சொல்வது..காட்டுக்குள்ள நாலு ட்யூப் லைட்டு போட்டா எடுக்கமுடியும். படத்துல கேமிரா சூப்பருல்ல என்று சொன்னால், “நானும் படம் முழுக்க பார்த்தேன், கேமிரா எங்கேயுமே தெரியலையேடா..” என்று சொல்லும் அபத்தம் போல் இருக்கிறது.

அதற்காக படத்தின் குறைகளை விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கண்டிப்பாக குறைகளை விமர்சிக்கவேண்டும். அதுவே முறையான நடுநிலையான விமர்சனம். ஆனால் நியாயமில்லாத காரணங்களை சொல்லிவிட்டு, கடைசியாகமரணமொக்கைஎன்று சொல்லுவது, அந்த படைப்பையும், படைப்பாளியின் உழைப்பையும் அவமானப்படுத்துதல் போல் அல்லவா..

ஏதோ மனதில் உள்ளதை ஆதங்கமாக எழுதியிருப்பதாகவே நினைக்கிறேன். யாருடைய மனதையும், புண்படுத்தியிருந்தால், உடனடியாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் தானே மனிதன்என்ன சொல்லுறீங்க

Tuesday, 29 November, 2011

மயக்கம் என்ன – விமர்சனம்படத்தில் ஒரு காட்சி..காட்டு வாழ்க்கையை படம்பிடிக்க செல்லும், தனுஷ் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும்போது, அந்த மரத்தில் உள்ள இலை ஒன்று அப்படியே தவழ்ந்து, வந்து அவருடைய முகத்தில் மென்மையாக வருடும். அப்போது கண்ணை மூடிக்கொண்டு அதை அனுபவிப்பார்..அந்த காட்சியைப் பார்க்கும்போது, அந்த மெல்லிய உணர்வு உங்களுக்குள்ளும் இறங்காவிட்டால், தியேட்டரை விட்டு எழுந்து வந்து விடுவது நலம். இருக்கவே இருக்கிறது, வேலாயுதம், குருவி படங்கள்..விசிலுக்கு விசிலுமாச்சு, குத்துப்பாட்டுக்கு குத்துமாச்சு…

மெல்லிய உணர்வுகளை படம்பிடிப்பதில் ஒன்று, இரண்டு இயக்குநர்களே, வெற்றி பெற்றதுண்டு., பாலுமகேந்திரா போல், அவரும், சிலநேரங்களில் அதில் சறுக்கி, காம்பரமைஸ் பண்ணிய படங்கள் இருக்கின்றன. ஆனால் செல்வராகவன், காதல் படங்களை இயக்கும்போது, அந்த உணர்வுகளை அப்படியே கொண்டு வந்துவிடுகிறார்.

படத்தின் கதையை சொல்லி உங்களை போரடிக்கவிரும்பவில்லை. வைல்ட் லைப் போட்டோகிராபராக விரும்பும் தனுஷ்ஷின் வாழ்க்கையில் காதல் குறுக்கிடுவதே கதை. இல்லை, அனுபவங்களின் தொகுப்பே இந்த படம். எந்த ஊருலடா, இப்படி ஆணும் பெண்ணும் ஒன்னா டேட்டிங்க் பண்ணுறாய்ங்க என்று கேட்டால், “சாரி சார்..இதோ பக்கத்தில், பக்கத்து ஊர் பெங்களூரில், நிறைய டேட்டிங்குகள்..சென்னைக்கும் வந்துவிட்டது..கூடிய சீக்கிரம் அதுவும் நம் கலாசாரத்துக்குள் புகுந்துவிடும், நாம் அருவருப்பாக நினைத்தாலும் கூட..

இந்த பயலுக்கு எப்படிடா நேஷனல் அவார்டு கொடுத்தாய்ங்க..ஒருவேளை அரசியலா இருக்குமோ, என்று நினைத்தவர்கள் இந்த படத்தைப் பார்த்தால் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். இதற்கு மேல் என்ன நடிப்பு வேண்டும் ஒரு நடிகனுக்கு..”ஏதோ தப்பா இருக்குதே..” என்று நாயகியை பார்த்துவிட்டு முணங்குவதாக இருக்கட்டும், நண்பன் காதலியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகட்டும்,..”மச்சி, அவ வேணாண்டா..” என்று தண்ணியைப் போட்டு புலம்புவதாகட்டும், மனைவியாய் அமைந்த காதலியை, கொடுமைப்படுத்தவதாகட்டும், பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

நாயகியாக ரிச்சா…மாடர்ன் நாயகியாக திடுக்கிடவைத்தாலும், மனைவியாய் அசத்துகிறார். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நண்பன் “நீ அவனை விட்டுட்டு என் கூட வந்துடு..” என்று சொல்லும்போது, “நீ என்ன பண்ணுவ..நீயும் ஆம்பளைதான” என்று கேட்கும்போது, பலபேருக்கு சுருக்கென்று இருக்கும். எத்தனை பேர், இந்த சந்தர்ப்பத்தில் நல்லவராக இருப்பார்கள் என்று அவரவரர் மனசாட்சியை கேட்டால் தெரியும்..முதல் பாதியில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் தான் எனக்கு புரியவில்லை..ஒருவேளை பின்நவீனத்துவமாக இருக்குமோ…

ஒளிப்பதிவாளர் ராம்ஜியைப் பற்றி சொல்லாவிட்டால் கண்டிப்பாக, கொடுத்த காசுக்கு புண்ணியம் வராது. ஹூரோ, புகைப்பட கலைஞன் என்பதே, ஒளிப்பதிவாளருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி..ராம்ஜி மாதிரியான கலைஞனுக்கு சொல்லவா வேண்டும்..காட்டுக்குள் சென்று கேமிரா கவிதை பேசியது போல் இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டும்..அட..அட..


பிண்ணனி இசை, மற்றும் பாடல்கள் படத்தின் பெரிய பலம். ஜி.வி பிரகாஷுக்கு அநேகமாக 21 வயதுதான் இருக்கும் என நினைக்கிறேன்..ம்..நம்மெல்லாம், அந்த வயசுல….அநேகமாக, இனிமேல் செல்வா படங்களுக்கு, யுவன் இசை அமைக்கும் வாய்ப்பு கஷ்டம்தான்..”நான் சொன்னதும்.,”, “காதல் என் காதல்..” , “ஓட, ஓட..தூரம்” போன்ற பாடல்கள் ஏற்கனவே ஹிட்..காட்சியமைப்புகளோடு பார்க்கும்போது, இன்னும் ஸ்வீட்..இடைவேளைக்கு பின்வரும் காட்சிகளில் டயலாக்குகளை, பிண்ணனி இசை அழகாக நிரப்புகிறது..அப்படியே மனத்தையும்.

செல்வராகவன்..காதல், நட்பு, போன்ற அழகியல் உணர்வுகளை படம்பிடிப்பதில் முதலிடத்தில்..இந்த படமும் அதற்கு சாட்சி..இவரை தமிழ்சினிமா புறம்தள்ளினால், இது போன்ற உணர்வுகளை சொல்லும் படங்கள் வாய்ப்பது மிகக்கடினம்.

படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை. கொஞ்சம் மெதுவாக செல்லும் திரைக்கதை..அண்ணாமலை பட டைப் பல்லி காட்சிகள்,  டேட்டிங்க்னாலும், இது ரொம்ப ஓவரோ, என எண்ணத் தோன்றும் காட்சிகள், செல்வராகவனுக்கேயுரிய சில கிளிஷேக்கள்..என்று ஆங்காங்கே…

இறுதியாக செல்வராகவன் படங்களை பிடிக்காதவர்களுக்கு, வழக்கம் போல, இது “மொக்கைப் படமாக” இருக்கலாம்…ஆனால், அனுபவங்களில் லயிப்பவர்களுக்கு, இது மறக்கமுடியாத படம்..எனக்கும்தான்


Sunday, 27 November, 2011

விலையேற்றம், குண்டுகுழியான ரோடுகள் – யார் காரணம்அதிமுக, திமுகவோ, காங்கிரசோ, பிஜேபியோ, யார் வந்தாலும், மக்கள் நிலைமை மாறப்போவதில்லை என்று ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது, தற்போதைய அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மூலமாக. மாதம் 45,000 வாங்கும் சாப்ட்வேர் இஞ்சினியர்கள் வேண்டுமானால், “இட்ஸ் டூ காஸ்ட்லியா..” என்று சர்வசாதரணாமாக கடந்து செல்லலாம். ஆனால், 2000 ஆயிரம், 3000 ஆயிரம் வாங்கும் கூலித்தொழிலாளி என்ன செய்வான் என்று நினைக்கும்போதே பயமாக உள்ளது.

வாங்கும் சம்பளம், பேருந்திற்கும், பால் வாங்குவதற்கும், மின் கட்டணம் செலுத்துவதற்கே செலவானால், சாப்பிடுவதற்கு. அநேகமாக, தஞ்சை டெல்டா பகுதிகளில் மட்டுமல்ல, சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில்கூட எலிக்கறி சாப்பிடும் நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏற்கனவே விலையேற்றத்தால் நொந்து போயிருக்கும் தமிழனுக்கு, கூடிய சீக்கிரம் பெட்ரோல் விலையேற்றம் வந்து பம்படிக்கும்..

எனக்கு ஒன்றுதான் புரியவில்லை. பெட்ரோல் விலையேற்றம் ஏன் என்று கேட்டால், “கச்சா விலை ஏறிவிட்டது, தவிர்க்கமுடியாதது” என்று சப்பைக்கட்டு கட்டும் அரசிற்கு ஒரே கேள்விதான், “அது என்னங்கண்ணா..கச்சா விலை என்ன, ராக்கெட்டா, மேல்நோக்கியே போய்கிட்டு இருக்குமா..கண்டிப்பா குறையுதுல்ல..அப்படி குறையும்போது, ஏன், பெட்ரோல் விலையும் குறைய மாட்டுங்குது..” என்று ஒரு பய கேள்வி கேட்டுடக்கூடாது..கேட்டால் அவ்வளவுதான்..”ஜி.டி.பி என்ன தெரியுமா..இண்டெர்நேசனல் மார்க்கெட்டு நிலவரம் என்ன தெரியுமா..” என்று பயப்படுத்தும் அளவுக்கு பதிலளிக்கப்படும்..

“அடங்கொய்யாலே, ஜி.டி.பி என்ன இருந்தா என்னய்யா..காலையில போய் 1 லிட்டர் போடணும்னா, பெருங்கொள்ளையா இருக்கு” என்று நம்மளுக்குள்ளே புலம்ப வேண்டியதை தவிர வேறு வழியில்லை..என்ன செய்யமுடியும்..ஓட்டு போட்டாகிவிட்டது..

சமீபத்தில் ஒரு நகைச்சுவை துணுக்கை கேட்டு, வயிறும் மனதும் சேர்ந்து வலித்தது. ஒரு கருத்தரங்கத்தில் சைனாக்காரன், “எங்கள் நாடுதான் உயர்ந்தது. நாங்கள், கடலுக்கு அடியில் இவ்வளவு ஆழம் வரை செல்லக்கூடிய கப்பல் வைத்திருக்கிறோம்” என்றானாம். அமெரிக்காகாரனுக்கு சொல்லவா வேண்டும், “அதை அழிக்ககூடிய போர்க்கப்பல் எங்களிடம் உள்ளது..” என்றானாம். இப்படி ஒவ்வொரு நாடும் பெருமையை எடுத்துவிட, இந்தியா சார்பாக போயிருந்த தமிழ்நாட்டுக்காரன் எல்லாத்தையும் பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தானாம், எல்லாருக்கும் வியப்பு..கடைசியாக தமிழன் சொன்னானாம்..

“நீங்க எல்லாம் கடலுக்கு அடியில் தான் கப்பல் விடுவீர்கள்..எங்கள் சென்னை வந்து பாருங்கள், நாங்கள் ரோடு மேலேயே, நீர்மூழ்கி கப்பல் விடுவோம்..” என்றானாம்..

இதை விட கொடுமையான நிலைமையில்தான் சென்னை உள்ளது..ஓங்கி ஒரு மழை அடித்தால் போதும், சாக்கடை தண்ணீர் எல்லாம் வீட்டுக்குள். தெருவில் போகவேண்டுமானால், படகுதான்..இருக்கிற குப்பை கூளம் எல்லாம் தெருவில் அப்படியே..அப்புறம் ஏன் காலரா, சிக்கன் குனியா வராது. ஒரு வருடம், இரண்டு வருடம் ஆனாலும் பரவாயில்லை. இந்த கொடுமை காலங்காலமாக தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது. “ஏன் இதையெல்லாம் மாற்றவே முடியவில்லை. அல்லது மாற்றவே முடியாதா” என்று கேட்டால் ஒரே பதில்தான். “மக்கள் மாறும் வரை..”

ஒரேயடியாக அரசை சொல்லியும் பிரயோஜனம் இல்லை, மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.. கொஞ்சம் நிலம் இருந்தால் போதும், அங்கே ஒரு அபார்ட்மெண்ட், அல்லது வீடு கட்டிவிட்டு “15 ஆயிரம்” ரூபாய் வாடகைக்குவிடுவது., அதுதான் குடிவருவதற்கு சாப்ட்வேர் இஞ்சினியர்கள் இருக்கிறார்களே அப்புறம் என்ன கவலை. குப்பையை அப்படியே ரோட்டில் எறிவது. அப்புறம் சாக்கடை அடைக்காமல் என்ன செய்யும்.

ரோட்டில் ஒரு மரத்தையும் விடுவதில்லை. ஏதாவது மரம் இருந்தால் போதும், அதை வெட்டி, விற்றுவிடுவது..அப்புறம் எப்படி சுற்றுபுறம் நன்றாக இருக்கும். “ஐயோ கூவம் நாறுதே” என்று மூக்கைபிடித்துக்கொண்டு ஓடவேண்டியது. கூவம் இப்படி மாறுவதற்கு தான் மட்டுமே காரணம் என்று பிரக்ஞை எதுவுமில்லாமல் இருப்பது..அப்புறம் எப்படி உருப்படும் இந்த நாடு..

கடைசியில் ஐந்து வருடம் பல்லை கடித்து பொறுத்துக்கொண்டு, அடுத்த எலக்சனில் “ரெட்டை இலைக்கும், உதயசூர்யனுக்கும்” மாறி, மாறி ஓட்டு போட்டுவிட்டு, “ஐயோ விலையேத்துறானே, ரோடு சரியில்லையே” என்று புலம்புவது…

விளங்குமுறீங்க…?????

Sunday, 20 November, 2011

8MM – திரை விமர்சனம்(18+)

“பேஸ் ஆப்” படத்தை பார்த்தபோது அதில் நடித்த நிக்கோலஸ் கேஜ் மற்றும் டிரவால்டோ நடிப்பினைப் பார்த்து மயங்கியவன் தான். இவர்கள் நடித்த எந்த படத்தின் டிரெய்லரை பார்த்தாலும், கண்ணை மூடிக்கொண்டு(எப்படின்னு கேட்ககூடாது) பார்த்துவிடுவேன். அதே மாதிரி, நம்ம தல டென்சல் வாஷிங்க்டன் படம் என்றால் சொல்லவே வேண்டாம்..;முதல் ஷோ, முதல் டிக்கெட்டுதான்..நெட்பிளிக்சை மேய்ந்தபோது, இரண்டு பழைய படங்களை பார்க்கநேர்ந்தது..அப்படி பார்த்த படங்கள், நிக்கோலஸ் கேஜ் நடித்த 8MM மற்றும் டென்சல் வாஷிங்க்டன் நடித்த The SIEGE.

முதலில் 8MM. பிரைவேட் டிடெக்டிவாக இருக்கும் நம் நாயகன் கேஜ்ஜூக்கு ஒரு பெரிய இடத்திலிருந்து அழைப்பு வருகிறது. அழைத்தவர், ஒரு பணக்கார, வயதான பெண்மணி. செல்வந்தரான தனது கணவர் இறந்து போக, தனியாக அந்த பங்களாவில் வாழ்ந்து வருபவர். “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எனக்கு நீங்கள் உதவ வேண்டும்” என்று நாம் டாக்டரிடம் கேட்பது போல் கேட்கிறார். நிக்கோலஸ் கேஜ் குழப்பமாக, அவருடைய கையில் ஒரு படச்சுருளை திணிக்கிறார். இது தன்னுடைய கணவரின் ரகசிய லாக்கரில் இருந்து எடுத்ததாகவும், அதைப் பார்க்கவேண்டும் என்று சொல்கிறார். அதை தனியறையில் பார்த்த நிக்கோலசுக்கு அதிர்ச்சியோ, அதிர்ச்சி, பஸ் கட்டணைப் பார்த்த நமக்கு ஏற்பட்டது போல்.. அந்த வீடியோவில், ஒரு பெண் பாதி போதையில் இருக்கிறார். ஒரு முகமூடி அணிந்த ஒருவன் கையில் ஆயுதத்தோடு நெருங்கி சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறான். கடைசியாக, கத்தியை எடுத்து சதக்..சதக்..நம் மேல் ரத்தம் தெறிக்கிறதா என்று பயப்பட வேண்டியிருக்கிறது..


பார்த்து விட்டு வெளியே வரும் ஹீரோவிடம், “இவள் யாரென்று தெரியவேண்டும்..அவள் உயிரோடு இருக்கிறாளா..அல்லது, இதெல்லாம் நாடகமா” என்று கண்டுபிடிக்கவேண்டியது உன் வேலை என்று சொல்லி அனுப்பிவிடுகிறாள் பணக்காரப் பாட்டி..தனக்கு தெரிந்த ஆபிஸரை வைத்து அந்த வீடியோவில் உள்ள பெண் யாரென்று தெருகிறது. சினிமாவில் சேர ஆசைப்பட்டு ஹாலிவுட் வந்த பெண் என்று தெரிந்து ஹாலிவுட் வீதிகளில் சுற்றி கடைசியாக பலான புத்தகங்கள் விற்கும், ஜாக்வின் என்றவரின் அறிமுகம் கிடைக்கிறது..

ஹாலிவுட் தெருக்களில் அலைந்து திரிந்து கடைசியாக அந்த வீடியோவை யார் எடுத்தது கண்டுபிடிக்கிறார். அவனைப் போய் பார்த்து, நானும் அதுபோல ஒரு படம் எடுக்கவேண்டும்..எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, அந்த மாஸ்க் அணிந்தவன்தான் வேண்டும் என்று செட் அப்பாக சொல்ல, ஷூட் செய்வதற்காக ஹீரோவை ஒரு இடத்திற்கு வரச்சொல்கிறார்கள்..அந்த இடத்திற்கு சென்ற ஹீரோவிற்கு கிடைக்கும் அதிர்ச்சி, நமக்கும் ஏற்பட,மீதியை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்..

முதலில் கண்டிப்பாக இந்த படம் 18+வயதினருக்கு மட்டுமே..”போர்ன்” என்று அழைக்கப்படும், பலான இண்டஸ்டரியைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக சொல்லியிருக்கிறார்கள். அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்காக, அனைத்து பலான வீடியோக்களையும் ஹீரோ பார்க்கும்போது, நாமும் பார்க்கவேண்டியிருக்கிறது, என்பதை நீங்கள் புண்ணியம் என்று சொன்னால், ஏற்று கொள்ளமுடியவில்லை..ஏனென்றால் அந்த படங்களின் முடிவில், கத்தியை எடுத்து சதக்..சதக்… அமெரிக்காவில் இப்படிப்பட்ட தெருக்களும் உண்டு என்பதை அறியமுடிகிறது..எங்கு பார்த்தாலும், பாதி போதையில் பெண்கள்..பலான புத்தகங்களையே பிரிவுவாரியாக பிரித்து விற்கப்படும் சி.டிக்கள் புத்தகங்கள் என்று ஒரு தொழிற்சாலையே நம் கண்முன் நிறுத்துகிறார்கள்...(யாருண்ணே, இப்பவே சி.டி வாங்குறதுக்கு ஓடுறது)


நிக்கோலஸ் கேஜ் பற்றி சொல்லவா வேண்டும்..வீடியோவை பார்த்து திடிக்கிடுவதாகட்டும், தெரு தெருவாக, அந்த பெண்ணைத் தேடி அலைவதாகட்டும், கடைசியில் அந்தகும்பலோடு நடக்கும் சண்டையாகட்டும், மனைவி, குழந்தை மேல் காட்டும் அன்பிலாகட்டும், நிக்கோலஸ் கேஜ் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்லுவது, “சங்கரன் கோவில்” இடைத்தேர்தலிலும் இரட்டை இலைதான் ஜெயிக்கும் என்று சொல்லுவது போல் இருக்கும்.

ஒருவேளை பலான படம் எடுத்திருப்பாரோ என்று சந்தேகப்படவைக்கும் அளவுக்கு, அந்த ஏரியாக்களில் பிரித்து மேய்ந்திருக்கிறார், டைரக்டர் “ஜோயல் ஷூமேக்கர்..” அவரோடு கண்போல கூடவே செல்லும் கேமிராமேனுக்கும் ஒரு சபாஷ்….முகத்தை மறைத்துக்கொண்டு, மாஸ்க் அணிந்து, அனைத்து பெண்களையும் கொலை செய்யும், வில்லன், தான் அப்படி செய்வதற்கான காரணத்தை சொல்லும்போது, “அடங்கொன்னியா என்று சொல்லவேண்டியிருக்கிறது.

மத்தபடி, பலான படம் பார்க்கபோகிறோம் என்று பார்க்காமல், ஒரு திரில்லரை எதிர்நோக்கி சென்றால், இந்த படம் ஒரு 60% வது திருப்திப்படுத்தும் என்பது உறுதி..

(அடுத்து நம்ம தல டென்சல் வாஷிங்க்டன் நடித்த “தி சீஜ்” படத்தின் விமர்சனம் கூடிய சீக்கிரம்)Saturday, 5 November, 2011

கோட்டூர்புரம் நூலகம் இடம் மாற்றம் – மங்காத்தாடா….
அயர்ச்சியாக இருக்கிறது “ஐயோ..அம்மா, இடத்தை மாத்திட்டாங்க..சமச்சீர் கல்வியை தடை பண்ணுறாங்க, அமைச்சரை நீக்குறாங்க, துப்பாக்கிச்சூடு நடத்துறாங்க..” என்று கோஷத்தைக் கேட்கும்போது…அப்படிக் கேட்பவர்களைப் பார்த்து, நாக்கை பிடுங்கிக்கொள்ளுதல் போன்று, இதைத்தான் கேட்கத்தோன்றுகிறது..”ங்கொய்யால...மாறி, மாறி, சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சித்தேர்தலிலும், ஓட்டுப்போட்டீங்கள்ள..அப்புறம் என்ன சவுண்டு..சவுண்டு என்ன ஜாஸ்தியா இருக்கு…இன்னும் அஞ்சு வருசத்துக்கு அப்படித்தான்..எங்களுக்கு எது தோணுதோ அதைத்தான் பண்ணுவோம்….நூலகத்து தூக்கி, ஹைகோர்ட் பக்கம் வைப்போம்..ஹைகோர்ட்டை தூக்கி, நூலகத்துல வைப்போம்..தலைமைச்செயலகத்தை தூக்கி, கடலுக்கு நடுவுல வைப்போம்..இல்லாட்டி துறைமுகத்தை அட் எ டயத்துல தூக்கிட்டு தலைமைச்செயலகத்துல வைப்போம்..

என்ன சவுண்டு..என்ன சவுண்டுங்குறேன்..உங்களோட வேலை என்ன…காலங்காத்தால க்யூவுல நின்னு ஓட்டு போடவேண்டியது..பல்லு விளக்காம காபிதண்ணிய குடிச்சுப்புட்டு, மாநகரப் பேருந்துல படியில தொங்கிக்கிட்டு, ஆபிஸுக்கு போகவேண்டியது..என்னது பஸ்ஸூ கூட்டமா இருக்கா, இன்னும் பஸ்ஸு விடணுமா..அடிங்க…இதுவே ரொம்ப ஜாஸ்தி…

அப்புறம் என்ன..நூலகம் ரொம்ப முக்கியமா..அத மாத்தக்கூடாதா..ஆமா..எல்லாம் படிச்சு அப்படியே ஐ.ஏ.எஸ் ஆகப்போறீங்க பாருங்கா..போங்கயா..போயி, அரசுப்பள்ளியில போய் குழந்தைகளைப் படிக்க வைக்கிற வேலையைப் பாருங்க..அதுதான் டெய்லி, ரெண்டு முட்டை தர்றோமுல்ல..ரொம்ப பேசுனா அதையும் கட் பண்ணிருவோம்..ஜாக்கிரதை…
ஐய்யோடா..சமச்சீர் கல்வி வேண்டுமாமில்ல..கல்வியே அதிகம்..இதுல சமச்சீர் கல்வியாமய்யா..புத்தகத்தை எல்லாம் எதிர்கட்சிக்காரய்ங்க கெடுத்து வைச்சிருக்காய்ங்க..அதையெல்லாம் படிச்சா உங்க குழந்தைங்க கதி என்ன ஆகுறது..என்னது நாலு மாசமா, புள்ளைங்க ஸ்கூலுக்கு போகலையா..போகலைன்னா என்னாங்குறேன்..எல்லாம், நாளைக்கு டாக்டராக போகுதுங்களா..அதுதான் இலவச கிரைண்டரு, மிக்சி, பேன் எல்லாம் தர்றோமுல்ல..அதையெல்லாம் போட்டுவிட்டு, வீட்டுல நல்லா சட்னி அரைச்சு சாப்பிடுங்க..

என்னது கரண்டு இல்லையா..ஒருநாளைக்கு 4 மணிநேரம் கரண்டு ஆப் பண்ணிடுறாய்ங்களா..அதுதான் பனஓலையில செஞ்ச விசிறி எதுக்கு வைச்சிருக்காய்ங்க..முகத்து பக்கத்துல வைச்சு வீசு..நல்லா காத்து வரும்…பின்ன..இம்புட்டு பேருக்கு கரண்டு கொடுக்கணும்னா சும்மாவா..யோவ்..அப்படித்தான்யா..இனிமேல் அப்படித்தான்யா…இருந்தா இரு..இல்லன்னா, செயின் திருடர்களோட சேர்ந்து நீயும் ஆந்திராவுக்கு ஓடிப்போயிடு..அங்க “தல்லி தெலுங்கானா” ன்னு கோஷம் போடலைன்னா வாயிலேயே அடிக்கிறாய்ங்களாம்…பிச்சு..பிச்சு..

ஏய்..இந்தா பாரு…இந்த ஆட்சிய விமர்சிக்குறவியிங்கலாம் நல்லா கேட்டுக்குங்க..ஓட்டு போடுறதோட உங்க கடமை முடிஞ்சு போச்சு..அத மீறி, சமச்சீர் கல்வி, நூலகம், துப்பாக்கிச்சூடுன்னு சவுண்டு..அதென்ன சவுண்டு..மூச்சு விட்டீங்க..இருக்குடி…

போறதுக்கு முன்னாடி, கடைசியா, உங்களுக்கெல்லாம் ஒரே டயலாக்குதான்…

“மங்காத்தாடா…”