Saturday, 26 February, 2011

அவியிங்க ராசாவும், அண்டார்டிகாவில் பென்குயின் ஆய் போகும் இடமும்

(சும்மா சிரிச்சுட்டு போகத்தேன் இந்த பதிவு..யாரையும் காயப்படுத்த அல்ல..மனசுல ஏதாவது வைச்சிக்கிட்டு மீனம்பாக்கம் வர்றப்ப போட்டு தாக்கிராதீங்கப்பூ..புள்ளைகுட்டிக்காரன்..)

சே சே சே…..போனை எடுத்தா, ஒரே நொச்சு, நொச்சுன்னு ஒரே தொல்லைண்ணே..ஏதோ அண்டாட்டிகாவாம்..அங்கேயிருந்து போன்..அங்கேயிருக்கிற பென்குயிங்களுக்கெல்லாம் ஆய் போனா கழுவிவிடுற வேலையில இருக்காராம்..அங்க இருக்குற பென் குயினெல்லாம், நம்ம எழுதுற பதிவை படிச்சுட்டுதான் டெய்லி ஆய் போகுதாம்..நான் அண்டார்டிகா வந்து அந்த பென்குயினை எல்லாம் பார்த்தே ஆகணும்னு, அந்த ஊரில கடையடைப்பு நடத்துறாயிங்களாம்..என்னை அடுத்த பிளைட்டுல வந்துடுங்கன்னு அடம்புடிக்கிறாருண்ணே..இந்த மனுசபயபுள்ளைங்கதான் நம்ம ப்ளாக்கை படிச்சி தினமும் வாசகர் கடிதம் எழுதுறாயிங்கன்னா, இந்த பென்குயின் வேற ஒரே குஷ்டமப்பா..இது கஷ்டமப்பா…

நான் தெளிவா கேட்டுப்புட்டேன், மூணுவேளை ஓசி பர்கரும், குடிக்க ஓசி சரக்கும் கொடுத்துடுவீங்கள்ளன்னு..பின்ன, பதிவரா இருந்துட்டு, யாராவது பார்க்கணும்னு கூப்பிட்டா, காசு கொடுத்து போறதுக்கு நான் என்ன கேனையனா..கண்டிப்பா பர்கர் கொடுக்குறேன்னு சொன்னப்புறம்தான் பொட்டியவே கட்ட ஆரம்பிச்சேன்..தக்காளி வீட்டுல எவ்வளவு வேலை இருக்கு..(வாசகர் கமெண்ட் : ஏன் உங்கள் பதிவுகளில் அடிக்கடி தக்காளி என்ற கெட்டவார்த்தையை உபயோகிக்கிறீர்கள். பதில் : தக்காளி..அது ரொம்ப முக்கியம்..தக்காளி புடிக்கலைன்னா பிளாக்கு பக்கம் வராதே…)

சும்மா சொல்லக்கூடாது….என்னை இவ்வளவுபேர் படிக்கிறாயிங்கன்னு அன்னைக்குதான் தெரிஞ்சுச்சு..பிளைட் ஓட்டுற கேப்டனே, நம்ம ப்ளாக்கை படிக்கிறவராம்..மரியாதை தெரிஞ்சவரு..என் காலை தொட்டு கும்புட்டுதேன் பிளைட்டே எடுக்குறாரு..ஏர்ஹோஸ்டசும் நம்ம பிளாக்குக்கு அடிமைதான்..ஹி..ஹி..தக்காளி இவ்வளவு எழுதிப்புட்டு ஒரு பெண் வாசகர் கூட இல்லைனா கேவலமுல்ல..அந்த பெண் என்னிடம் பேசியதைப் பற்றி அடுத்த கொத்து சாண்ட்விச்சில் எழுதுகிறேன்..

அண்டார்டிகா ஒரு அருமையான நாடு…அங்கு இருக்கும் எல்லா மனிதர்களுக்கும், இரண்டு கண், இரண்டு காது, ஒரு மூக்கு இருப்பது இன்னும் ஆச்சரியம். நன்றாக பேசுகிறார்கள். அந்த நாட்டில் அனைவரும் நம்ம பிளாக்குக்கு ரசிகர்கள் என்று சொன்னபோது, என் பிறவிப் பயனை அடைந்தேன். ஒரு டாலர் இல்லாமல் அமெரிக்கா வந்தேன். இதோ, அந்த முக்குகடை ஆயா தான் எனக்கு பர்கரும் பிட்சாவும் தந்தார். ஏதோ எனக்கு தோன்றியதை பதிவுகளில் எழுதுகிறேன். ஆனால், ஒரு தேசமே என் பதிவுகளுக்கு அடிமை என்று நினைக்கும்போது…(இங்கு கண்ணீர் விடுவதாக போட்டுக்கொள்ளவும்)

அடுத்து பென்குயின்களைப் பார்க்க சென்றேன். எல்லாரும் என்னை எழுந்து நின்று வரவேற்றனர். அதுவும் பாவம், அந்த கையில்லாத ஜூவன்களுக்கு இந்த அவியிங்க பிளாக்கு ஏதாவது செய்யவேண்டும். என் பிளாக்கை படித்துவிட்டுதான் ஆய் இருக்க செல்வதாக எல்லா பென்குயின்களும் சொல்லியது எனக்கு வியப்பாக இருந்தது.

தக்காளி, அமெரிக்கா வந்ததுக்கு, அப்பவே அண்டார்டிகா வந்து இருக்கலாமோ எனத் தோன்றியது. நான் எதிர்பார்த்து இருந்த ஓசி சரக்கும் வந்தது. நம்ம ஊரு பட்டை சாராயம் போல் இல்லை. கொஞ்சம் காட்டம் கம்மி..மிக்சிங்க் சரியாக செய்யவில்லை என நினைக்கிறேன். ஒரு பாட்டிலை எடுத்து மறக்காமல் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.

பென்குயின்களுக்கு ஆய் கழுவிவிடும் வேலை செய்யவும் மார்க் ரொம்ப இயல்பாக பேசினார். 20 வருடங்களாக இந்த தொழில் செய்கிறாராம். தொழில் நன்றாக போவதாக சொன்னார்..மிகவும் சிரித்து சிரித்து பேசினார்..நான் கண்டிப்பாக எழுதுவதை நிறுத்தக்கூடாது என்று சொன்னார். நான் எழுதுவதை நிறுத்தப்போவதாக இதுவரைக்கும் சொல்லவே இல்லை.

பேசிக்கொண்டிருக்கும் வேளையில் “அஞ்சரைக்குள்ள வண்டி” பட டைரக்டர் போன் பண்ணி, அவர் படத்திற்கு விமர்சனம் செய்ய சொன்னார். நேற்றே பார்த்துவிட்டேன். சர்ச்சைக்குரிய படம் அது. சிறுவயதிலிருந்தே பலான புத்தகங்கள் படித்துவிட்டு வெறியேறிப் போன ஹீரோ, பக்கத்து வீட்டு 70 வயது கிழவியை பலாத்காரம் செய்கிறான்.. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் கலாசார காவலர்கள். கிழவி பாவமாம்...காலையில் பேப்பரை தொறந்தா, எத்தனை கிழவி கற்பழிப்பு செய்தி படிக்கிறீங்க.. என்ன புடலங்காய் கலாசாரம். தக்காளி இந்த படத்தை பார்த்துட்டு எல்லா கிழவிகளும் போலீஸ் கமிஷனருக்கிட்டே வந்து பாதுகாப்பா கேக்குது..அப்படி என்ன கலாசாரத்திற்கு கேடு வந்தது..தக்காளி நல்லா வாயில வருது..இலக்கணம் மட்டும் அல்ல, தக்காளி, வரலாறு, புவியியல் எல்லாத்தையும் ரோட்டில் போட்டு உடைக்கப்போகும் படமாக இருக்கப்போகிறது.

தக்காளி, கோபம் நிறைய வருவதால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

(குறிப்பு – அடுத்த வாரம் முடிவெட்டுவதற்காக செவ்வாய் கிரகம் வரைக்கும் செல்கிறேன். என் பிளாக் படிக்கும் ஏலியன்கள் முடிந்தால் சரக்கோடு தொடர்பு கொள்ளவும். எண் – 00000000000)

“சூப்பர் தல”

“கலக்கல் பதிவு”

“நீங்க பாட்டுக்கு லெப்ட் எடுத்து ஸ்ட்ரெயிட்டா போய்கிட்டே இருங்க”

இதுபோன்ற பின்னூட்டங்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. அப்படி வராத பின்னூட்டங்கள், மேல்கூறியவாறு எடிட் செய்யப்பட்டு, வெளியிடப்படும் என்பதை தாழ்மையுடன் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்..

Friday, 25 February, 2011

டே தகப்பா..

உலகத்திலே கஷ்டமான வேலை எது தெரியுமா?? எவெரெஸ்டில் ஏறுவது, இல்லை..நிலவுக்கு ஆள் அனுப்புவது..இல்லீங்கோ....சீனமொழியை எழுத பழகுவது..இல்லீங்கோ இல்லை...உலகத்தில் கஷ்டமான வேலை எது தெரியுமா..உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் அவனை/அவளை வளர்க்கும் அந்த முதல் ஒரு மாதம்தான்.

நம்ம ஜீனியர் பொறந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. வழக்கம்போல் எல்லார் வாழ்த்துக்களையும் பெற்று, ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்து அசதியா, ராத்திரி 12 மணிக்கு கண்ணசருறேன்..நாட்டாமை படத்துல வர்ற கவுண்டமனி ஸ்டைலில் “டே தகப்பா..” அப்படின்னு குரல் கேட்குதுண்ணே..எனக்கு ஆச்சர்யமா போச்சு..நம்ம புள்ளையா பேசுறான்..ஆஹா..இருக்காதே..பொறந்து 4 நாளுதான் ஆகுது..அதுக்குள்ளயா..அதுவும் நம்ம புள்ளை மரியாதை தெரிஞ்ச பய. அப்பனை இம்புட்டு தரக்குறைவா பேசமாட்டானேன்னு நினைச்சுக்கிட்டு திரும்பவும் கண்ணசருறேன்..இப்ப சத்தமா குரல் கேக்குதுண்ணே..

“டே..தகப்பா..இதெல்லாம் உனக்கு நியாயமாடா..நான் ஒன்னுக்கடிக்க போறேன்..டையபர் மாத்துறதை விட்டுட்டு அப்படி என்னடா முரட்டு தூக்கம்”

ஆஹா..அவசரம் அவசரமா எழுந்து வீட்டுக்காரியை எழுப்புனேன்..

“அடியே..பய பேசனுனான்..????”

“சும்மா விளையாடாதீங்க..பொறந்து நாலு நாளு தான் ஆகுது..அதுக்குள்ளயா..பய அழுதுக்கிட்டு இருக்கான்..கொஞ்சம் பாருங்க..”

ஹா..அழுதுக்கிட்டுதான் இருக்கானா..அதுதான் எனக்கு கவுண்டமனி குரலுல கேக்குதான்னு நினைச்சுகிட்டு போறேன்..பயபுள்ள ஒரே அழுகை சத்தம்..என்னை பார்த்ததுமே அழுகையை நிறுத்திக்கிட்டான்..திடிரீன்னு ஒரு பார்வை பார்த்தான் பாருங்க..நான் வேற கருப்பா பயங்கரமா இருக்கேனா..ஒரு பூச்சாண்டியை பார்த்த எபெக்ட் கொடுக்குறான்..

“ச்சூ..ச்சூ..ச்சோ..செல்லமுல்ல..அப்பா உனக்கு டையபர் மாத்துவனாம்..அப்படியே தூங்குவயாம்..ஏன்னா அப்பாவும் தூங்கணுமாம்..” ன்னு சொல்லிகிட்டே டையபரை கழட்டுனேன்..டையபர் க்ளீனா இருக்கு..ஆச்சர்யமா இருந்துச்சுண்ணே..அப்ப ஏன் அழுகுறான்..அப்படின்னு டையபரை தூக்கி பார்த்தேன்..பார்த்த அவசரத்துல ஏன் மூஞ்சி இருந்த பொசிசனை கவனிக்கலை..அடிச்சான் பாருங்கண்ணே..ஒன்னுக்கு..பம்புசெட்டுல வர்ற மாதிரி..நான் வேற அந்த சமயத்துல கொட்டாவியை விட்டுப்புட்டேன்..செடிக்கு தண்ணீ ஊத்துற மாதிரி ஸ்ட்ரெயிட்டா என் வாயிக்குள்ளேதான்..

வேற என்ன பண்ணுறது..நம்ம ரத்தமாயிட்டான்..பக்கத்துல இருந்த பழைய துணியை எடுத்து முகத்தை துடைக்கிறேன்..லைட்டா பேட் ஸ்மெல் வந்தது..பார்த்தா, அந்த துணி குழந்தை ஆய் துடைக்குற துணியாம்..வீட்டுக்காரம்மா குழந்தை ஆய் துடைச்சுட்டு பக்கத்துல போட்டுவைச்சிருக்கா..சரி என்ன பண்ணுறதுன்னு,பாத்ரூம் போயி முகத்தை கழுவிட்டு, திரும்பவும் வந்து பயனுக்கு டையபர் மாத்தி மணி பார்க்குறேன்..காலை 1 மணி…

சரி..பயபுள்ளைய தூங்கவைப்போம்ன்னு தட்டிக் கொடுத்தா, “உன்னையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு” ங்குற ரேஞ்சுல பார்க்குறான்..”அப்படியெல்லாம் பார்க்காதடா..அப்பா தூங்கணும்டா….நீயும் தூங்குடா” ன்னு தட்டிக் கொடுத்தேன்..ஆரம்பிச்சான் பாருங்க அழுகைய..அப்புறம் அவனை வீட்டுக்காரம்மாகிட்ட கொடுத்து, அவனுக்கு உணவு கொடுத்து..திரும்பவும் அவனை துங்கவைக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட, மணியைப் பார்த்தேன்…மணி 3..அய்ய்யோ..கொஞ்ச நேரத்துல விடிஞ்சுடுமேன்னு..அவனை தூங்கவைக்க முயற்சி பண்ணினேன்..ம்..ஹீம்..அப்பதான் வீட்டுக்காரம்மா ஒரு ஐடியா சொன்னா..

“ஏங்க..நீங்க ஏன் ஒரு தாலாட்டு பாடக்கூடாது..”

ஆத்தாடி..பயபுள்ளை ஏற்கனவே பயந்து போயிருக்கும்..திரும்பவும் கொடுமைப்படுத்தக்கூடாதுன்னு யூடியூப்பில் “ஆரிரரோ” ன்னு தட்டுறேன்..ஏதோ ஒரு பாட்டு வந்துச்சு..அதை பிளை பண்ணி பயபுள்ளைய தட்டிக்கொடுத்தா, அது பாடுது..

“ஆராரோ..ஆரிரரோ..கண்ணைத் தொறக்கணும் சாமி..கைய புடிக்கணும் சாமி..”

அப்படியே பாய்ஞ்சு போய் ஆப் பண்ணிட்டேன்..சரி..பாட்டுதான் பாட தெரியலை..பயபுள்ளைக்கு ஒரு கதையாவது சொல்லுவோம்ன்னு கதைய ஆரம்பிச்சேன்..

“ஒரு ஊருல..ஒரு பதிவர் இருந்தாராம்..அவருக்கு நிறைய வாசகர் கடிதம் வந்துச்சாம்..ஆனாலும் தமிழிஸ்ல 2 ஓட்டுதாம் விழுந்துச்சாம்..என்ன பண்ணுறதுன்னு தெரியாம...”

அப்படின்னு பயபுள்ள முகத்தை பார்க்குறேன்..செம இன்ட்ரஸ்டிங்கா “நெக்ஸ்ட்” ங்கிற மாதிரி கவனிக்குறான்..அப்படியே திரும்பி கடிகாரத்தை பார்க்குறேன்..மணி 04:30..லைட்டா கண்ணை சொருகுச்சு..லைட்டா கண்ணா மூடுறேன்…சைரன் அடிச்ச மாதிரி ஒரு சவுண்டு..நம்ம பயதான்..காலங்காத்தால் அப்படி என்ன தூக்கம்கிற மாதிரி பார்க்குறான்...அப்புறம் என்ன…பதிவர் கதைய, ஒரு பேக்ரவுண்ட் ம்யூசிக்கோட சொல்லிட்டு தட்டி கொடுக்குறேன்..

“டே..தகப்பா..பசிக்குதுடா..ரோதனை பண்ணாதடா..”ங்குற மாதிரி சவுண்ட் கொடுக்க..திரும்பவும் பயலை வீட்டுக்காரம்மாவுடம் கொடுத்துட்டு..ஒரு காபி போட்டு குடிச்சுப்புட்டு மணி பார்க்குறேன்..மணி காலை 6..திரும்பவும் கதையெல்லாம் சொல்லாம பயலை தூங்க் வைச்சுட்டு லைட்டா கண்ணசருறேன்..காதுக்குள்ள், ரிங்கு, ரிங்கு ன்னு சத்தம்..பார்த்தா கோவாலு..

“ராசா..9 மணிக்கு என்னடா தூக்கம்..ஆபிசுக்கு ஏற்கனவே லேட்டு..உடனே கிளம்பு”

“கோவாலு..இன்னும் நான் தூங்கவே இல்லடா..நான் வேணா, ஒரு தூக்கம் போட்டுட்டு..””

“மவனே ராசா…அப்படி மட்டும் பண்ணினே..ஆபிசுல உனக்கு சங்குதாண்டி” ங்கிறான்..அப்புறம் எழுந்து குளிச்சுட்டு, பல்லுவிளக்கி, கிளம்பி ஆபிசுக்கு போயிட்டு, திரும்ப வீட்டுக்கு வந்தா “டே தகப்பா” ன்னு குரலு..

ஆனாலும், அப்படியே மெதுவாக பக்கத்துல போயி, சத்தம் போடாம குழந்தை முகத்த பார்த்தேன்.. மெதுவா, சின்னதா..க்யூட்டா..ஒரு ஸ்மைல் பண்ணினான் பாருங்க..

போங்கண்ணே..அந்த சின்ன, கள்ளம் கபடமில்லாத, அந்த சிரிப்புக்கு உலகத்தையே எழுதி தரலாம்ணே..ஏதோ ஆஸ்கார் அவார்டு வாங்குன மாதிரி..தூக்கம் என்னண்ணே தூக்கம்..

Monday, 21 February, 2011

கொத்து திரைவிமர்சனம்

கடந்த ஒரு வாரமாக தூக்கம் வராமல் கன்னாபின்னாவென்று படங்களை பார்க்கநேர்ந்தது. இப்படியே இன்னும் ஒரு வாரத்திற்கு படம் பார்க்க நேர்ந்தால், நடுநிசிநாய்கள் வீராவாக மாறிவிடுவேனோ என்ற பயத்தாலேயே, படம்பார்ப்பதை, இந்த வாரம் நிறுத்திவைத்திருக்கிறேன். அடுத்தவாரம், ஔவையார், காளிதாஸ், ஹரிதாஸ் போன்ற படங்களை பார்த்து விமர்சனம் பண்ணலாம் என்ற திட்டம் உள்ளதால், தயவுகூர்ந்து உங்கள் பொன்னான ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இனி படங்கள் பற்றிய என் பார்வை, உங்கள் பார்வைக்கு

நடுநிசிநாய்கள்

கவுதம்மேனனுக்கு அரிப்பு வந்தால் எப்படி சொரிந்துகொள்வார் என்பதற்கு இந்தபடம் ஒரு உதாரணம். ஒரு கிரைம் திரில்லர் எடுக்க ஆசைப்பட்டு, ஒரு பாடாவதியான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். 18+ வயதினர் மட்டுமல்ல, 75+வயது ஆனால் கூட பார்க்ககூடாத ஒரு படம். தந்தை மகனை வண்புணர்ச்சி செய்வதும், மகன் வளர்ப்புத்தாயை புணர்வது போன்ற செய்திகள், செய்தித்தாளில் வந்தாலே, கொஞ்சம் தர்மசங்கடத்தோடு அடுத்தபக்கத்திற்கு தாவும் இந்த சமூகத்திற்கு அதை திரைப்படத்தில் காட்டமுயன்றிருக்கிறார். பரங்கிமலை ஜோதியில் பார்க்கும் படங்களில் கூட முறையற்ற உறவுகளை காட்சிப்படுத்துவதில்லை. மின்னலே, காக்க காக்க போன்ற படங்கள் எடுத்து, ஒரு படி ஏறியிருந்த கவுதம்மேனன், இரண்டு படிகள், தலைகுப்புற தவறிவிழுந்திருக்கிறார். இந்த பாவத்தை கழுவுவதற்கு, ஔவையாரை ஹீரோயினாக போட்டு ஒரு தமிழ்படம் எடுத்து, பிரயாசித்தம் தேடுமாறு, வேண்டுகோள் விடுக்கிறேன்.

I saw the devil(கொரியன் மொழி திரைப்படம்)


வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து “காண்டாமிருகம்” ன்னு பேர் வைச்சானாம்கிற மாதிரி, கேபிள் சங்கர் விமர்சனத்தை படிச்சுட்டு சும்மா இல்லாம நம்மளும் ஒரு ஒலகப்படம் என்று இந்த படத்தை பார்த்ததின் விளைவே, அன்று இரவு தூக்கம் போச்சு. தனியே சிக்கும் பெண்களை வண்புணர்ந்து கொடூரமாக(கொடூரம்னா , உங்கவீட்டு கொடூரம் எங்கவீட்டு கொடூரம் இல்லைண்ணே..வடிவேலு பாணியில் சொல்லப்போனால் கர்ணகொடூரம்) கொலை செய்யும் சைக்கோ, எப்போதும் போல ஒரு பெண்ணை கொலைசெய்கிறார். தேன்கூட்டில் கைவிட்ட கதையாக, கொலைசெய்யப்பட்டவள், ஹீரோவின் காதலியாகப் போக, நம்ம ஊரு ஹீரோவாக இருந்தால், ஒருரீலில் கதையை முடித்திருப்பார். ஆனா, இங்கதான் வைக்கிறாரு, நம்ம சப்பைமூஞ்சி கொரியன் டைரக்டரு, ஒரு ட்விஸ்டு. “நீ சாதரணமா செத்தா, ஒன்னும் இல்லைடா..என் காதலி சாகுறப்ப எவ்வளவு வலி அனுபவிச்சாளோ, அதைவிட 10000 மடங்கு வேதனை அனுபவிக்கணும். அப்புறம் தான் உன்னை கொல்லுவேன்” என்று சபதம் எடுக்கிறார். அவனுக்கே தெரியாமல் கேப்சூல் வடிவில் , ஜீ.பி.எஸ்சை முழுங்கவைத்து,வில்லன் எந்த பெண்ணை தொட நினைத்தாலும் அங்கு சென்று மரண அடி கொடுக்கிறார் ஹீரோ..அடி ஒன்னும் மரண அடிண்ணே..குழம்பி போகிறான் வில்லன். அதன் பின்பு, ஜீ.பி எஸ்சை கண்டுபிடித்து கக்கா(சுத்த தமிழில் ஆய் என்று கூட சொல்லலாம்) வழியாக அதை வெளியேற்றி, ஆடுபுலி ஆட்டம் ஆரம்பிக்கிறான் வில்லன். அதற்கப்புறம் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் ஜிவு,ஜிவு. இந்த வில்லனா நடித்த ஒரு நடிகன், பிறவியிலே சைக்கோவா இருக்கணும் போல. ங்கொய்யாலே, என்னாமா ஆக்டு கொடுக்குறான்யா.. வில்லனை மாட்டிவிட்டு, கடைசியாக கூலாக ஹீரோ நடந்துவரும்போது, நான் எழுந்து கைதட்டினேன். உங்களுக்கு கோவாலு மாதிரி இளகிய மனசு இருந்துச்சுன்னா படத்தை பார்க்காதீங்கப்பு..அப்புறம் ஒரு வாரத்துக்கு சிக்கன் கூட சாப்பிட மாட்டீங்க..

பயணம்


கந்தகார் விமான கடத்தலை மையமாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். செண்டிமெண்டில் அவிங்க ராசாவை மிஞ்சும், டைரக்டர் ராதாமோகன், வேறு ஒரு தளத்தில்(செகண்ட் புளோர் இல்லீங்க) பயணித்த ஒரு களம்(தளம் – களம்..ராசா..வரவர உன் எலக்கிய அறிவு கூடிக்கிட்டே போகுது). 20, 30 ஆட்களை ஒரே கையால் அடிக்கும் தெலுங்கு பார்முலாவை விட்டுவிட்டு நாகர்ஜூன் அடக்கிவாசித்திருக்கிறார். கடத்தலுக்கு நடுவில் நடக்கும், சிறு சிறு நிகழ்வுகள் சுவாரஸ்யம். பயணம் , கண்டிப்பாக நல்லபடம் என்ற போதிலும் எனக்கு ஒரு டவுட்டு. அது என்னப்பா, எல்லா படத்திலயும் பாதிரியார்களை எல்லாம் வெள்ளை அங்கி போட்டு “காட் பிளஸ் யூ மை சன்” என்று தவறாக சிலுவை அடையாளம் போடுறமாதிரியே காட்டுறீங்க.. சர்ச் விட்டுவெளியே வந்தால் அதிகபட்ச பாதிரியார்கள், ஜூன்ஸ் கூலிங்கிளாஸ், ரீபாக் ஷூ ல போடுறாங்க..

ஆடுகளம்


“இங்கேரா..இவிங்களை” என்று ஆரம்பிக்கும்போது, ஆஹா, இன்னொரு மதுரைப்படத்தை ஆரம்பிச்சுட்டாயிங்களா என்று கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை. நல்லவேளையாக டைரக்டர் வெற்றிமாறன், சேவல் சண்டை என்ற கதைக்களத்தை எடுத்து ஜெயித்திருக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு அப்புறம் பேட்டைக்காரன், கருப்பு, மற்றும் கிஷோர் கதாபாத்திரங்களுக்கு இடையே வரும் மைண்ட் கேம்(மேஜர் சுந்தர்ராஜன் ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால்..எஸ்..மைண்ட் கேம்.அதாவது மனவிளையாட்டு) எடுத்து செல்லும் விதம் அற்புதம். சாரு சந்தித்தால் மட்டும் அவருக்கு பிடித்ததாக சொல்லப்பட்ட இசையமப்பாளார் ஜீ.வி பிரகாஷ் நன்றாக செய்திருக்கிறார். மூன்று மணிநேரம், ஏதோ, மதுரைப் புழுதியில் புரண்டு வந்தமாதிரி ஒரு அனுபவம். ஒருவரியில் சொல்லவேண்டுமென்றால் “கலக்கிப்புட்டாயிங்க பங்க்ஸ்..”

யுத்தம் செய்


செண்டிமெண்ட் காட்சிகளில், புருவத்தை உயர்த்தி மோட்டுவளையை பார்த்து, கண்களை, கசக்கி, தானும் அழுது, பார்ப்பவர்களையும் “ஏண்டா வந்தோம்” என்று அழவைத்த சேரனா, இது. நம்பமுடியவில்லை. சி.பி.சி.ஐ.டி போலிஸ் வேடத்தில் கச்சிதம். திடிரென்று ஒரு அட்டைப்பெட்டியில், மனித உறுப்புகள் வெட்டப்பட்டு முக்கியமான இடங்களில் வைக்கப்பட, தியேட்டர் வெளிச்சத்தில் அவசரம் அவசரமாக தத்தம் கை, கால்களை சரிபார்த்து கொள்கிறோம். இப்படியெல்லாம் நடக்கிறதா என்று யோசிக்கும்முன்பு, கதைக்குள் நம்மை இழுத்து சென்று விடுகிறார், குளிக்கும்போது கூட கூலிங்கிளாசை கழட்டாத இயக்குநர் மிஷ்கின். குறிப்பாக, நெயில் கட்டரை எடுத்துக்கொண்டு, சேரன் போடும் அந்த சண்டை, நிமிர்ந்து உக்காரவைக்கிறார் அதற்கு பின்பு வரும் காட்சிகள், குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில், நிறைய அப்ளாஸ். ஆனால், “நாய் கடிச்சிடுச்சுப்பா” என்று சொல்வது மாதிரி, மிஷ்கின் ஆட்டிவைக்கும் கதாபாத்திரங்கள், ஒருமாதிரி வியாதி வந்தமாதிரி தலையை குனிந்துகொண்டே பேசுவது, “ம்” என்றால் லாங்க் ஷாட் என்று ஒரே மாதிரி ஸ்டைலில் படம் எடுப்பதை மிஷ்கின் நிறுத்தாவிட்டால், அவருடைய அடுத்த படத்திலிருந்து அவருக்கு ஆப்பு ஆரம்பம் என்பதை உணரமுடிகிறது.

மந்திர புன்னகை


குடைக்குள் மழை என்ற படத்தை எடுத்த, அடுத்து எப்படி படம் எடுப்பது என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் பார்த்திபன் வரிசையில், இதோ இன்னொரு இயக்குநர் கருபழனியப்பன். மனநிலை பிறழ்ந்தவனின் பார்வையில் கதை ஆரம்பிக்கிறது. அந்த கதாபாத்திரம் பேசும் டயலாக்குகள் “அடடே” போடவைத்தாலும், படம் முழுவதும் ஒரே மாதிரியாக பேச ஆரம்பித்தது மிகவும் சலிக்கவைக்கிறது. நல்லவேளையாக சந்தானம் காமெடி ஆறுதலாக இருந்து படத்தை ஒரு அளவுக்கு காப்பாற்றுகிறது. படத்தின் தயாரிப்பாளர், இன்னமும் விநியோகிஸ்தர்களிடம் பேரம் பேசுவதாக நினைத்துக்கொண்டு தனியாக பேசிக்கொண்டு இருப்பதாக கேள்வி.

ஈசன்


இடைவேளையின் போது ஈசனாக நடிப்பவர், வில்லனை பின்மண்டையில் ஒரு கட்டையால் ஓங்கி ஒரு அடிஅடிக்கிறார், அப்படியே சசிகுமாரை நம்பி, தியேட்டருக்கு வந்த ரசிகர்களையும்தான். ஆனாலும் போலீசாக நடித்த சமுத்திரக்கனியின் பாத்திரபடைப்பு, கொஞ்சம் வித்தியாசப்படவைக்கிறது. ஆனாலும், மெதுமெதுவாக செல்லும் திரைக்கதை, சுப்பிரமணியபுரத்தை நம்பி வந்த ரசிகர்களுக்கு, திருநெல்வேலி அல்வாவை ஊட்டுகிறது. கொடுத்த காசுக்கு , “ஜில்லா, விட்டு ஜில்லா வந்த” என்ற பாடலை முனுமுனுத்துக் கொண்டு , ரசிகன், தியேட்டரின் வெளியே வரும்போது, ஒவ்வொருவர் காதிலும் ரத்தம். “இதுக்குதான் ரொம்ப பேசக்குடாதுன்னு சொல்லுறது..”

Thursday, 17 February, 2011

என் ஓட்டு கலைஞருக்குதான்..

இந்த பதிவுக்கு அப்புறம், என் தளத்திற்கு வரும் வருகையாளர்கள் குறைந்து போகலாம், அல்லது என்னை நிறைய பேருக்கு பிடிக்காமல் போகலாம் அல்லது “ச்சீ..நீயெல்லாம் ஒரு ஆளாடா..” என்று திட்டலாம். ஆனால், என்னமோ தெரியவில்லை, உண்மையை சொல்லி எவ்வளவு திட்டு வாங்கினாலும் பரவாயில்லை, ஏதோ மனம் நிறைந்ததாய் இருக்குமே.. பொய்யை சொல்லி எவ்வளவோ பாராட்டு வாங்கிப் பாருங்கள், ஏதோ மனது அரித்துக்கொண்டே இருக்கும், ஆனால் ஒரு உண்மையை சொல்லி ஒரு திட்டு வாங்கினாலும், மனசுக்கு ஏதோ இதமாக இருப்பதாக ஒரு நினைப்பு.

ஆமாம், இந்த தேர்தலில் எனக்கு ஓட்டுப்போட வாய்ப்பு கிடைக்குமானால், கலைஞருக்குதான் ஓட்டுப்போடப்போகிறேன். இந்த ஒரு ஓட்டுக்கு பின்னால், ஒரு தாயின் சபதம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா.

எப்போதும் போலத்தான் அன்றைக்கும் பொழுது போயிற்று. எனது கல்லூரி காலமாய் ஞாபகம். எவ்வளவுதான் சாப்பிட்டாலும், சிறிது நேரம் அம்மா மடியில் தலைவைத்து விட்டுதான் தூங்கப்போவேன். அம்மா, ஏதாவது பேசிக்கொண்டே, தலையை தடவி கொடுக்கும்போது, ஏனோ இன்னுமொரு பிறவி எடுக்கவேண்டும் போல இருக்கும், இதே மடியில் தூங்குவதற்கு.

அன்றும் அப்படித்தான் தூங்கிக் கொண்டிருந்தேன். திடிரென்று கதவை யாரோ, நாலைந்து பேர் சேர்ந்து தட்டுவதாய் ஒரு சத்தம். திடிக்கிட்டு எழுந்தேன். என் தூக்கம் கலையகூடாது என்பதற்காக அம்மாதான் சென்று கதவை திறந்தார்கள். வெளியே நான்கு காக்கிச்சட்டை அணிந்த காவலர்கள். முகத்தில் கோபத்தோடு.

“சார் இருக்காங்களா..”

அம்மா முகத்தில் குழப்பரகை..

“இருக்காரு..எதுக்கு..”

“ம்..அரசு ஊழியர்கள் எல்லாம் ஸ்டிரைக் பண்ணுறாங்கள்ள..எல்லாத்தையும் ஜெயில்ல அடைக்க சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு..கொஞ்சம் வரச்சொல்லுங்க..”

அம்மா முகம் பயத்தில் மாறியது..

“என்ன சார்..நைட்டு 10 மணி ஆயிடுச்சு..இப்ப போயி..நாங்க எல்லாம் அரசாங்க ஊழியர்கள் சார்..எங்கயும் போயிர மாட்டோம்..காலையில வரலாமே சார்..”

“ப்ச்..அதெல்லாம் எங்களுக்கு தெரியும்..இப்ப விலகிக்கிரீங்களா..இல்லையா..”

அம்மாவிற்கு அவர்களை உள்ளே விட மனசில்லை. அப்பா கொல்லைப்புறத்தில் இருப்பதால். அப்படியே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர் அவர்கள் மூர்க்கத்தோடு..

அடுத்தவர் வீடு என்று பார்க்காமால், ஒவ்வொரு அறை முழுக்க தேடினார்கள். கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், கட்டிலின் அடியில் பார்த்தபோது அம்மா கூனிப் போனார்கள்

“எங்க ஒளிஞ்சிக்கிட்டு இருக்காரு..அவரு..இப்ப வரச் சொல்லுறீங்களா இல்லையா..”

ஏதோ கிரிமினலைத் தேடுவது போல தேடினார்கள். கண்களில் அவ்வளவு வெறி. கடைசியாக கொல்லைப்புறம் சென்றபோது அம்மா பதறிப்போனார்கள். அதிர்ஷ்டவசமாக அப்பா அங்கு இல்லை. அவர்கள் வெளியே நிற்பதைப் பார்த்ததுமே, அப்பா வேறு வழியாக வெளியே சென்றிருந்தார்.

அப்பா கிடைக்காத கோபம் அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது..

“எங்க ஒளிச்சு வைச்சிருக்கீங்க..நாங்க இவ்வளவு அரசு ஊழியர்களை கைது செய்திருக்கோமுன்னு கணக்கு காட்டணும்..”

கோபத்தில் வார்த்தை வெளிவரவே அம்மா பயந்து போனார்கள். அம்மாவிற்கு இவ்வளவு அதட்டெல்லாம் கேட்டு பழக்கமில்லை. கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

“இல்லீங்க..அவர் எங்க இருக்காருண்ணு தெரியாது.."

“ம்..ஊரை விட்டு எங்க போயிரப்போறாரு…எப்படியும் எங்ககிட்டதான் வந்தாகணும்….ஒழுங்கா ஸ்டேசனுக்கு வரச்சொல்லுங்க..”

கிடைக்காத கடுப்பில் கதவை படிரென்று அறைந்துவிட்டு வெளியே போனார்கள். அந்த நிகழ்வுக்கு சாட்சியாக இருந்ததை தவிர நான் ஒன்றும் பேசமுடியவில்லை. அம்மாவை கவனித்தேன். முகம் வெளிறி போயிருந்தது. முகத்தில் அவமானம்.

இந்த சூழ்நிலையில் அம்மாவை பார்த்ததில்லை. இதுவரை முட்டிக்கொண்டிருந்த கண்ணீர் சாரை சாரையாக வழிந்தது. அப்படியே குலுங்கி குலுங்கி அழுதார்கள்..என்னால் தாங்க முடியவில்லை..

“யம்மா..விடுங்கம்மா..அதான் அப்பா கொல்லைப்புறத்தில இல்லையே..”

“ப்ச்..இல்லைடா..நம்ம என்ன தப்பு செஞ்சோம். .நடுராத்திரில இப்படி வந்து ஏதோ திருடன புடிக்கிற மாதிரி…”

சேலைத்தலைப்பை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார்கள்..என்னால் தாங்கமுடியவில்லை. அப்படியே சென்று அவர்கள் தலையை பிடித்துக்கொண்டேன்..சிறிது நேரம் அழுதவர்கள், என்ன நடந்ததென்று தெரியவில்லை, ஏதோ தீர்மானம் வந்தவர்களாய் கண்ணீரை துடைத்துக்கொண்டார்கள். என்னை அப்படியே இழுத்துக்கொண்டு சாமிபடம் முன்னால் சென்றார்கள்.

“சத்தியம் பண்ணு..என் கையில அடிச்சு சத்தியம் பண்ணு..இதுவரைக்கும் எப்படியோ, இனிமேல் அந்தம்மாவுக்கு ஓட்டு போட போறதில்லைன்னு..”

அம்மாவை பார்த்தேன்.

“சத்தியம் பண்ணுடா..கலைஞருக்குதான் ஓட்டுபோடுவேன்னு..”

“ஏம்மா..”

“அப்பதான் அந்தம்மா வரமுடியாது..சத்தியம் பண்ணு..”

ஒன்றும் பேசாமல் என் கையை எடுத்து அம்மா கைமேல் வைத்தேன். ஒருநிமிடத்தில் அம்மா அன்பிற்கு முன்னால் பகுத்தறிவெல்லாம் தூள்தூளாகிப்போனது.

Thursday, 10 February, 2011

புரச்சி எலுத்தாளர் சாருநிவேதிதா வாளுக வாளுக

கொடியரசு தினத்தன்னைக்கு கொடியேத்தி முட்டாய் கொடுக்குறது மாதிரி, சாரு நிவேதிதாவை புகழ்ந்து ரெண்டு வார்த்தை பேசினா, அவரு சைட்டில நம்ம ப்ளாக்கு லிங்கை கொடுக்கறாயிங்களாமே..அப்படி கொடுத்தா நம்ம ஹிட்கவுண்டரு கன்னாபின்னான்னு ஏறுதாமே..

இது தெரியாம இம்புட்டு நாளு ஏமாந்துட்டேண்ணே..இந்த பாழ்ப்போன ஹிட்கவுண்டரு பார்க்கவே கடுப்பா இருக்குண்ணே..எப்ப பார்த்தாலும் 100, 200 ன்னுதான் ஏறுது. அட் எ டையத்துல 1000, 2000 ன்னு ஏறுனாத்தானே பார்க்க அம்சமா இருக்கும். நானும் ஹிட்கவுண்டரை எச்சி தொட்டு அழிச்சுடலாமுன்னு எவ்வளவோ டிரை பண்ணுனோமுன்னே..

ஆனா கழுத நைட்டு தூங்கிட்டு காலையில பார்த்தா திரும்பவும் பழசுலயே வந்து நிக்குது. நண்பன் மாரப்பகவுண்டரை புரிஞ்சுகிட்ட அளவுக்கு, இந்த ஹிட்கவுண்டை புரிஞ்சுக்கமுடியலையண்ணு வெறி ஏறுதுண்ணே.

அப்பதான், அந்த சேதிய நண்பன் கோவாலு சொன்னான்.

“ராசா..நீ ஏன் யாருக்காவது கண்டனம் தெரிவிக்ககூடாது..”

“யாருக்குடா..”

“யாருக்காவது தெரிவிக்கணும்டா..உதாரணமாக சாரு எழுதுகிட்டு இருக்குறப்ப ஏதாவது கொசு கடிச்சிருக்கும், அதுக்கு கண்டனம் தெரிவி..அல்லாட்டி காலையில பால்காரன், பேப்பர்காரன் லேட்டா வந்துருப்பான், அவனுக்கு கண்டனம் தெரிவி..அப்படியும் இல்லாட்டி அவரு ரோட்டுல வர்றப்ப சிக்னலு லேட்டா போட்டுருப்பாயிங்க. அதை எதிர்த்து, கவர்மெண்டுக்கு ஒரு கண்டனம் தெரிவி..இப்படி எதையாவது தெரிவிச்சாதான், உன் பிளாக் எல்லாரு கண்ணுல படும்”

“இங்கேர்ரா..பிச்சு உதறுரியேடா..ஆனா, இதை விட போர்சா வேணும்டா..” அப்படின்னு கோவாலை அர்த்தத்தோட பார்க்குறேன்..கோவாலு கையெடுத்து கும்புட்டு கதர்றான்

“ராசா..தயவு செஞ்சு எனக்கு கண்டனம் தெரிவிச்சுடாதேடா..”

இப்ப யாருக்காவது கண்டனம் தெரிவிக்கணும்னு மோட்டுவளைய பார்த்துகிட்டு உக்கார்றேன், ஒரு பயலும் அம்புட மாட்டிங்குறாயிங்க..எல்லாரும் கதறியடிச்சுகிட்டு ஓடுறாயிங்க..

பார்த்தா வீட்டுக்காரம்ம டெர்ராயிட்டா..

“இப்ப யாருக்கு கண்டனம் தெரிவிக்குறதுக்கு இப்படி மோட்டுவளைய பார்த்துட்டு உக்கார்ந்துட்டீங்க..”

“அடியே..சாரு..”

“கரும்புச்சாறா..புளிச்சாறா..ஏங்க..ஏங்க,,புளிச்சாறு பண்ணலாங்க..சோத்துக்கு நல்லா இருக்கும்..”

“அடியே..நான் எந்த நிலைமையில உக்கார்ந்திருக்கேன்..இப்ப நான் யாருக்காவது கண்டனம் தெரிவிச்சாகணுமே..அய்யோ..” ன்னு தலைய பிச்சுக்குறேன், விட்டுக்காரம்மா சொல்லுறா..

“இப்படியே உக்கார்ந்தா..உங்களுக்குதான் நான் கண்டனம் தெரிவிப்பேன்..”

அப்படியே என் மண்டையில பல்பு எரிஞ்சதுண்ணே..ஆஹா,,கண்டுபிடிச்சுட்டேன்.. போடுறேன்யா கண்டனம்..

“இதுவரை சாரு நாவல் ஒன்னு கூட படிக்காமல் இலக்கியத்திற்கு துரோகம் செய்த எனக்கு நானே கண்டனம் தெரிவிக்கிறேன்..”

ஏண்ணே..அவரு ஏதோ பேண்டசி டவுசரோ அல்லது பனியனோ எழுதியிருக்காராமே..சூப்பரா எழுதியிருக்காருண்ணே..அந்த நாவலு லிங்கு இருந்தா கொஞ்சம் குடுங்கண்ணே..புரச்சி எளுத்தாளர் சாரு வாளுக, வாளுக..யுத்தம் செய் படத்துல, ஆர்மோனியத்தை எடுத்துகிட்டு ஒரு ஆட்டம் போட்டுருப்பார் பாருங்க..அட..அட..அந்த நாட்டிய சரசுவதிய நேரா பார்ர்குறாப்புல இருந்துச்சுண்ணே..அவருதாண்ணே உண்மையாம எலுத்தாளரு..

ஏண்ணே..என் பிளாக்கும் அவரு சைட்டுல வருமாண்ணே..ஹிட்கவுண்டரு ஏறுமாண்ணே..

Monday, 7 February, 2011

கேபிள் ஜாக்கி அண்ணே, மன்னிச்சிருங்க - கொத்து சாண்ட்விச்

(ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, கேபிள் சங்கர், ஜாக்கி அண்ணே, இந்த பதிவு சும்மாகாச்சிக்கும் ஜாலிக்குத்தான். படிச்சிட்டு சிரிப்பு வந்தா சிரிச்சுடுங்க..ஏன்னா சிரிப்புதான், பல கொலைகளை தடுக்குதாம்..ஊருக்குள்ள சொல்லுறாயிங்க..))))

சிந்தனையத் தூண்டுறதுல நம்ம கோவாலுக்கு நிகர் கோவாலுதாண்ணே. சும்மா இருந்த ஆளை சொரிஞ்சு வுடுறது மாதிரி ஒரு கேள்வி கேட்டுப்புட்டான்

“ராசா..பதிவரா இருந்து இந்த சமூகத்திற்கு என்ன செஞ்சிருக்க..”

ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்.

“என்னடா கோவாலு, இப்படி சொல்லிப்புட்டே..வாரத்திற்கு ஒரு பதிவு போடுறேன். டெய்லி 100 வாசகர் கடிதம் வருது. அலெக்சா ரேட்டிங்குல வேற 10 லட்சத்தை கொடுத்துப்புட்டாயிங்க.. நான் டெய்லி எழுதாம இருக்குறதே, இந்த சமூகத்திற்கு செஞ்ச சேவை இல்லையா..”

“போடா..டுபுக்கு..சமூகத்திற்கு என்னடா செஞ்ச..”

“கோவாலு..அவசரமாக ஒன் பாத்ரூம் போகணும். போயிட்டு வந்துட்டுனா, சமூகத்திற்கு ஏதாவது செய்யவா..”

“அதெல்லாம் போகக்கூடாது..இந்த சமூகத்திற்கு ஏதாவது செஞ்சிட்டு போ..”

கோவாலுகிட்டு புடிக்காதது இது ஒன்னுதான், பயபுள்ள குழந்தை மாதிரி அடம் புடிப்பான்..

“சரி கோவாலு..இப்ப என்னதான் பண்ணனும்..சொல்லு..”

“இப்ப கேபிள் சங்கர், ஜாக்கிசேகர் எல்லாம் கொத்து புரோட்டா, சாண்ட்விச், இதுமாதிரி எழுதி, சமூகத்தை தட்டி எழுப்புறாங்கள்ள..அதுமாதிரி நீ ஏதாவது..”

“டே கோவாலு..அவுங்க எல்லாம் சூப்பரா எழுதுவாங்கடா..நம்மளே சரக்கில்லாம எழுதிக்கிட்டு இருக்கோம்..இதுல இது வேறயா.. ஆள விடுடா..”

“ராசா..அப்புறம் எப்படி சமூகத்தை தட்டி எழுப்புறது..நீ கண்டிப்பா அந்த மாதிரி கலவையா எழுதியே ஆகணும்..”

“கோவாலு..அவ்வளவு எழுதுறதுக்கு எங்கிட்ட மேட்டரே இல்லையேடா..”

“ப்ச்..நீயெல்லாம் ஒரு பதிவரா..”

இப்படி கேட்டவுடனே எனக்கு நாடி நரம்பெல்லாம் துடிப்பு ஏறிருச்சுண்ணே..

“கோவாலு..என்னைப்பார்த்து இப்படி சொல்லிப்புட்டியே..எழுதுறேண்டா நானும் கொத்துப்புரோட்டா, மினி சாண்ட்விச்சு.. ஆமா இதுக்கு என்னதான் பேரு வைக்கிறது”

“ராசா..கொத்துப்புரோட்டாவுல உள்ள புரோட்டா கட்டு, மினி சாண்ட்விச்சுல உள்ள மினி கட்டு..கொத்து சாண்ட்விச்..எப்படி..”

“சூப்பர்டா கோவாலு..போடுறேண்டா நானும் கொத்து சாண்ட்விச்…”

(சும்மா ஜாலிக்குதாண்ணே, இந்த பதிவு..சீரியசா எடுத்துக்கிட்டு எதுவும் நடவடிக்கை எடுத்துப்புடாதீங்க..ஹி..ஹி..)

இனி உங்களுக்காக கொத்து சாண்ட்விச். போறவாக்குல சமூகம் தூங்கிக்கிட்டு இருந்துச்சுன்னா, நீங்களே தட்டி எழுப்பி வுட்றுங்க

கொத்து சாண்ட்விச்சு

காலையில் 9 மணிக்கெல்லாம் எழுந்து வெளியே பார்த்தேன்..சூரியன் வட்டமாக இருந்தது..

****************************************************************************************

9 மணிக்கு சுடசுட காபி வந்தது..காபியில் சீனி கம்மி..

இந்த முறை பல்லுவிளக்கும்போது, நாலு இழுவைக்கு பதில் இரண்டுமுறைதான் இழுத்தேன்

இட்லி சுத்தமாக வேகவே இல்லை. சூடாக சாப்பிட்டால்தான் நன்றால் இருக்கும்..

சாப்பிட்டு விட்டு வெளியே சென்றேன்..அப்போதுதான் அந்த பெண்ணைப் பார்த்தேன். அவ்வளவு அழகு..வயது ஒரு 65 இருக்கும். இவ்வளவு சிறிய வயதில் ஏன் தள்ளாடி நடக்கிறார் என்று தெரியவில்லை..என்னைப் பார்த்து சிரித்தார்

வாசகர் கடிதம்

அன்புள்ள அவிங்க ராசா,

உங்களின் நெடுங்கால வாசகன். எனக்கு வயது 25. கடந்த 25 வருடங்களாக உங்கள் ப்ளாக்கை படித்துவருகிறேன். என்ன குழப்பமாக உள்ளதா..கண்டிப்பாக நம்பித்தான் ஆகவேண்டும். நான் டெலிவரி ஆகும்போது, முதலில் பார்த்தது, உங்கள் பதிவுகளைத்தான். டெலிவரி செய்யும் டாக்டர், ஒருமுனையில் கத்தி, மறுமுனையில் லேப்டாப்பில் உங்கள் பதிவுகளைப் படித்துக்கொண்டேதான் பிரசவம் பார்ப்பாராம்..உங்களுக்குதான் எவ்வளவு ரசிகர்கள். நான் “குவா, குவா” என்றுகூட அழவில்லை, “அவிங்க ராசா..அவிங்க ராசா” என்றுதான் அழுதேனாம். நர்ஸ் சொன்னார்..அந்த மருத்துவமனையில் எம்.டி யிலிந்து வார்டுபாய் வரை, உங்கள் பதிவுகளை படிக்காமால் வேலையை தொடங்க மாட்டாராம். உங்கள் பதிவுகள்தான் பலபேருக்கு தமிழ்நாட்டில் வேலை கொடுக்கிறது. எவ்வளவு தன்னம்பிக்கை கொடுக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது, ஏனோ ஷேக்ஸிபியர் தான் ஞாபகம் வருகிறார்..தயவு செய்து எழுதுவதை நிறுத்திவிடுங்கள்..ஐயோ..சாரி..நிறுத்துவிடாதீர்கள்..நாட்டில் பலபேருக்கு நீங்கள் வழிகாட்டி..கடந்த சிலமாதங்களாக செவ்வாய் கிரக மனிதர்களோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. என்ன ஆச்சர்யம் என்றால், அவர்களும் உங்கள் வாசகர்களாம். அவர்கள் மொழியில் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லச்சொன்னார்கள். இதோ உங்களுக்காக அந்த வாழ்த்துக்கள்..”கிர்…கிர்ர்ர்…கொர்ர்…கிர்ர்…”

இப்படிக்கு,

உங்கள் தீவிர ரசிகன்

அவிங்க ராசா..மன்னிக்கவும் அஷோக் கிருஷ்ணா..

ஏ ஜோக்கு

அப்போதுதான் அந்த நிகழ்வைப் பார்த்தேன். தெருவை மறைத்துக்கொண்டு, இரண்டு தெரு நாய்கள்..ச்சி..ச்சி..ச்சீ..

இந்த பதிவைப் படித்ததும், கத்துங்க எசமான்..கத்துங்க..

நீங்கள் அண்டார்டிகாவில் பிறந்திருந்தாலும், இந்த பதிவை 2100 ஆம் ஆண்டு பார்த்தாலும் பரவாயில்லை..தமிழ்மணத்திலும், தமிஸ்லயும் ஒரு ஓட்டு போட்ருங்க..ஓட்டு போடுறது எப்படின்னு, உங்க நாட்டு தேர்தல் கமிசனருக்கிட்டே, கேளுங்க சொல்லுவாரு..

Friday, 4 February, 2011

காதலிச்சே சாவுங்கடா

இப்போதுதான் காதலர்தினம் வெளிப்படையாக கொண்டாடப்படுகிறது. நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் எல்லாம் காதலர் தினம் என்றாலே பலபேருக்கு வெட்கம் வந்துவிடும். மனதுக்குள்ளே பல பட்டாம்பூச்சி பறந்தாலும், வெளிக்காட்ட முடியாத உணர்வுதானே காதல். நிறைய பேர் காதலர் தினம் கொண்டாடுவதற்கே காதலிகளை தேடி அலைந்தார்கள்.

அவர்களை எல்லாம் கிண்டல் செய்யும் கூட்டத்திலே நானும் ஒருவன். வேறு என்ன செய்ய, எங்களுக்கு காதலி கிடைக்கவில்லையே..

மச்சான்..எப்படித்தான் இந்த லவ்வு கருமத்தைப் பண்ணுராயிங்களோ..தூ..”

ஒரு பொண்ணு பின்னாடி அலையுறதுக்கு பதிலா நாயா பொறக்காலம்டா

சுடிதார் பின்னாடி போறவியிங்க எல்லாம் ஆம்பிளையே இல்லைடா..”

இப்படிப்பட்ட டயலாக்குகள்தான் நாங்கள் அதிகம் பேசுவது. மெல்ல மெல்ல இந்த உணர்வுகளே எங்கள் மனதை ஆக்கிரமிக்க, நாங்களே எங்களுக்கு ஒரு திரையைப் போட்டுக் கொண்டோம்..அல்லது திரை இருப்பதாக சொல்லிக் கொண்டோம். இதுபோன்ற கருத்துக்களைக் கொண்டவர்களை கொண்டு எங்கள் வகுப்பறையில் தனியாக அணி உருவாக்கப்பட்டது. “காதலை மதிக்காத ஆம்பிளைங்கடாஎன்று காலரை தூக்கி விட்டுக் கொண்டோம். வகுப்பறையில் எந்த பெண்ணிடமும் பேசவில்லையா, உடனே எங்கள் அணியில் இடம் அளிக்கப்பட்டது..”மனுசன்டா..” என்று புளகாங்கிதம் அடைந்தார்கள். பெண்களோடு பேசும் பையன்கள் புழுவைப் போல் பார்க்கப்பட்டனர். “நீயெல்லாம் சுடிதார் வாங்கிப் போட்டுக்கடா..இந்தப் பொழைப்புக்கு..” என்று கேலிப்பேச்சாலேயே எங்கள் அணிக்கு வந்தவர்கள் அதிகம். இன்னும் உண்மையைச் சொன்னால் அப்படி வந்தவன் தான் நானும்.ஹி..ஹி..

எங்கள் அணியின் தலைவன் என் நண்பன் ஆனந்த். இந்த அணியின் தலைவனாவதற்கு முன்பு வகுப்பறையில் அவனுக்கு ஒரு பெண் நண்பி இருந்தாள். பெயர் பிரீத்தி. இரண்டு பேரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்றார்கள். தினமும் அவளிடம் இருந்து சாக்லேட் வாங்கி இருப்பதை பெருமையாக காண்பித்தான். “ஒரு பயலும் அவ வீட்டுக்கு போகமுடியாதுடா..நான் மட்டும்தாண்டா போவேன்..அவங்க வீட்டுல அம்மா, அப்பா கூட உக்கார்ந்து சாப்பிடிருக்கேண்டாஎன்று பெருமையாக சொல்லிக் கொள்வதைக் கேட்டு பலபேருக்கு அல்சர் வந்திருக்கிறது. அழகான பெண் வீட்டுக்கு அடுத்தவன் சென்றால் வயிறு பத்திக் கொள்ளதா..அது போலதான். “நாங்கதாண்டா..உண்மையான நட்பு..அவதாண்டா..பிரண்ட்சிப்பின் அடையாளம்பெருமையாக சொல்லுவான்

டே..ஆனந்து..அவளை லவ் பண்ணுறியா..”

சீ..போடாங்க..தூய்மையான நட்புடா..லவ்வுன்னு சொல்லி கொச்சைப்படுத்தாதடா..”

அவனுடைய நட்பைப் பார்க்கும்போதெல்லாம் எல்லாருக்கும் பொறாமையாக இருந்தது. அவனுக்கென்று அவளிடம் இருந்து ஸ்பெசல் கிரீட்டிங் கார்டுகள். வாழ்த்துக்கள். சாக்லெட்டுக்கள். எல்லாமேமூழ்காத ஷிப்பே பிரண்ட்சிப்தான் என்று பாட்டு பாடியது. அனைவரும் கண் போட்டதாலோ என்னவோ அவனுடைய நட்பு ஒருநாள் அறுந்து போனது அவனை கண்டாலே அவள் எறிந்து விழ ஆரம்பித்தாள். அவனுக்கு கோபம் தலைக்கேறியது. “பொம்பளைக்கே இவ்வளவு திமிர் இருக்கும்போது ஆம்பிளைக்கு திமிர் இருக்கும்என்று அவளை வேண்டுமென்றே கடுப்படித்தான்.

அவனுக்கு எங்கள் அணி முழு ஆதரவு தந்தது. “அப்பவே சொன்னோம் கேட்டியா..இந்த சுடிதார் போட்டவியிங்களை நம்பாதேன்னு..முதுகிலேயே குத்துவாள்கடா மச்சான்..” என்று ஏத்திவிடப்பட்டு அவன் எங்கள் அணியின் தலைவனாக்கப்பட்டான். பலபேருக்கு இதில் உள்ளூர சந்தோசம். அவளைப்பற்றி கோபமாக சொல்லி, சொல்லியே வெறி ஏற்றப்பட்டான்..”இனிமேல் பசங்கதாண்டா மச்சான் எனக்கு பிரண்ட்ஸ்..ஒரு பொண்ணு கூடயும் பேச மாட்டேன். அப்படி யாராவது ஒருத்தன் பேசுனாலும் அவனுக்கு ரெட்கார்டு போட்டுருவோம்..” வெறியாக பேசினான். ரெட்கார்டுக்கு பயந்தே எங்கள் அணியில் பலர் சேர்ந்தனர். பின்னே, வகுப்பறையில் மட்டும்தான் கேர்ஸ். ஆனால் வெளியில் பசங்ககூடதானே சுற்ற வேண்டும். இந்த நிர்ப்பந்தத்தாலேயே பலபேர் அணியில் சேர்க்கப்பட்டனர். பெண்கள் மேல் வெறுப்பு என்ற உணர்வு அனைவருக்குள்ளும் திணிக்கப்பட்டதால் வகுப்பறையே இரு தீவுகளாய் ஆனது

பெண்கள், பெண்களோடும், ஆண்கள் ஆண்களோடு மட்டும்தான் நட்பு வைத்தனர்..பேசிக் கொண்டனர். இப்படியே இரண்டு வருடங்கள் ஓடிப்போய் கல்லூரி இறுதி நாள் வந்தது. அப்பவும் இருபுறமும் இருமாப்பாகவே திரிந்தனர். ஆட்டோகிராப் கூட வாங்காத அளவிற்கு வெறுப்பு. எல்லாம் அன்று ஒரு நாளைக்குத்தான். கல்லூரி வாழ்க்கை முடிந்து போனது.. கல்லுரிக்கு செல்லாத அடுத்த நாள் ஏதோ அடுப்பில் நிற்பது போல் இருந்தது. என்னதான் பெண்கள் பிடிக்கவில்லை என்று நினைத்தாலும் அவர்கள் அந்த இடத்தில் இருந்தாலே தென்றல் இருந்தது. சண்டையோடு பார்க்கும் அந்த ஓரக்கண் பார்வை கூட சுகமாக இருந்தது,. ஆனால் இன்றோ ஏதோ பாலைவனத்தில் இருப்பது போல் இருந்தது. சண்டை போடுவதற்கு கூட பெண்கள் இல்லை. ஆற்றாமையுடன் நண்பன் ஆனந்த் வீட்டிற்கு சென்றேன்.

நண்பன் அவனுடைய அறையில் அடங்கிக் கிடந்தான் என்று சொல்லுவதை விட புழுங்கி கிடந்தான் என்றே சொல்ல வேண்டும். என்னைப் பார்த்ததுமே அப்படியே கலங்கி விட்டான். கண்கள் முழுவது தண்ணீர்..

ராசா..தப்பு பண்ணிட்டமோ..அவளுக கூட சண்டை போட்டிருக்க கூடாதுடா..”

ஏண்டா..”

இல்லைடா..என்ன இருந்தாலும் அவளுக நம்ம கிளாஸ் பொண்ணுங்க தானே..நாம கொஞ்சம் விட்டு கொடுத்திருக்கலாமோ..”

ம்ம்..”

ஒரு மாதிரி இருக்குடா..ஏதோ பாலைவனத்தில் இருக்குற மாதிரி..காலேஜ் லைப்பை வேஸ்ட் பண்ணிட்டோம்டா..”

சரி விடுடா..”

ஏண்டா..ராசா..திரும்பவும் காலேஸ் போயிருவோமாடா..பர்ஸ்ட் இயர் திரும்பவும் படிப்போமாடா..”

விடை தெரிந்து கொண்டே கேட்டான். வாழ்க்கையில் கொடுமையான நாள் எது தெரியுமா..கல்லூரி முடிந்த அடுத்த நாள் தான். கல்லூரி வாழ்க்கையை அனுபவித்தால்தான் அதை உணர முடியும். அதுவும் நீங்கள் காதலித்து அதை சொல்லாமல் இருந்துவிட்டால்….

மச்சான்..ஆனந்து கேட்க மறந்துட்டேன்..காலேஜ்ஜூல யாரையாவது லவ் பண்ணியாடா..”

“…”

டே..வெண்ணை..அடப்பாவி..சொல்லவே இல்லை..யாருடா..”

ப்ச்..விடுடா..”

அடி வாங்குவ..சொல்லுடா..”

ம்ம்ம்தப்பா நினைக்காதடா..நம்ம பசங்ககிட்டயும் சொல்லாதடா..பிரீத்தி..அவளைதாண்டா லவ் பண்ணினேன்..”

எனக்கு தூக்கிவாரிப்போட்டது. “பிரண்ட்ஸ்டாஎன்று பெருமையாக சொன்னதெல்லாம் பொய்யா….”எங்களுக்குள்ள இருப்பது தூய்மையான நட்புடா..” என்று சொன்னதெல்லாம் நடிப்பா..

டே..அவ உன்னை லவ் பண்ணிளாடா..”

தெரியலைடா..”

போடாங்க..சரி..உன் லவ்வையாவது சொன்னியா..”

ராசா..என்னடா..ஒன்னுமே தெரியாத மாதிரி பேசுற..நம்ம அணி பத்திதான் உனக்கு தெரியுமே..அதுவுமில்லாம நான் அவகூட எப்படி சண்டை போட்டிருக்கேன்..எத்தனை தடவ கெட்ட வார்த்தையில திட்டியிருக்கேன். எந்த மூஞ்சிய வைச்சிக்கிட்டு அவகிட்ட போய்..”

இதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை.உடைந்து அழுதே போனேன். இதற்கு மேல் அவனுக்கு ஆறுதல் சொல்ல கூட என்னால் முடியவில்லை. எந்த துக்கத்திற்கும் ஆறுதல் சொல்லலாம், காதலை இழந்தால் அழுகைதான் ஆறுதல். வாய்விட்டு அழுதாலே பாதி துக்கம் போய் விடும்.

சரிடா..ஆனந்து இப்ப என்ன காலம் கெட்டுப்போச்சு..இப்பவாவது சொல்லாம்ல..”

என்னை ஏறெடுத்துப் பார்த்தவன் பக்கத்தில் உள்ள அலமாரியைத் திறந்து அந்த இன்விடேசனை எடுத்துக் கொடுத்தான்..

பிரீத்தி வெட்ஸ் வெங்கட்..”

அதற்கு மேல் என்னால் அங்கு இருக்க முடியவில்லை..கிளம்பி விட்டேன். இது நடந்து பல வருடங்கள் ஓடி, நண்பனை எப்பவாவது சந்திப்பேன். அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. காரணம் கேட்டால்ப்ச்..பிடிக்கலைடா…” என்பான்., காரணம் எனக்கு மட்டும்தான் தெரிந்தது. அவனால் அவளை மறக்க முடியவில்லை. இன்னும் அவன் மனதில் அவள்தான் இருந்தாள்..

போனவாரம் ஸ்பென்சர் பிளாசாவில் எதேச்சையாக பிரீத்தியை சந்தித்தேன்..பிரீத்தியா அது..என்னால் நம்பமுடியவில்லைவகுப்பறை அழகியான அவள் ஒடுங்கி போயிருந்தாள்..காலம் அவள் தலைமுடியில் இரண்டை வெள்ளையாக்கி இருந்தது..

ஹே..ராசா..எப்படி இருக்க..”

நல்லா இருக்கேன்..”

பார்த்து 10 வருசம் ஆகிடுச்சுல்ல..இப்பதான் காலேஜ் முடிச்ச மாதிரி இருக்கு..”

ஆமா..மேரேஜ் லைப் எப்படி இருக்கு பிரீத்தி..”

போய்கிட்டு இருக்கு..அப்புறம் ராசா..,காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாத்தையும் பார்ப்பியா..”

சில நேரம்..”

யாரெல்லாம்..”

ம்ம்..விஜய்..ஷேக்..ராம்..ம்ம்,,யுவா..”

அப்புறம்..வேற யார்..”

ம்..சிவா..செந்தில்..”

ம்ம்..வேற யாரைப் பார்ப்ப..”

எனக்கு புரிந்துபோனது. அவள் எதிர்பார்க்கும் பெயர்ஆனந்த்..”

சரி ராசா..நம்ம வகுப்புல யார் யாரெல்லாம் லவ் பண்ணினாங்க..”

ஹே பிரீத்தி..என்ன கேக்குற..நம்ம கிளாஸ்ஸுல எல்லாம் எலியும் பூனையுமில்லாம இருந்தோம்..அப்புறம் எங்கிட்டு லவ்வு எல்லாம்..”

ஹா..ஆமா..அதை இப்ப நினைச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருதுல்ல..எவ்வளவு சின்னப்புள்ளத்தனமா இருந்துருக்கோமில்ல..”

ஆமா..இப்ப நினைச்சா..ஏண்டா அப்படி இருந்தோமின்னு தோணுது. ஒரு பேக்வேர்ட் பட்டன் இருக்குமா..திரும்பவும் கல்லுரி வாழ்க்கை வாழ்ந்து அதெயெல்லாம் சரி செய்துவிடுவோம்..”

விழுந்து விழுந்து சிரித்தாள்..எனக்கு எங்கிருந்துதான் வேகம் வந்தது என்று தெரியவில்லை..அதைக் கேட்டே விட்டேன்..

ஹே..பிரீத்தி..நீ யாரையாவது லவ் செய்தியா..”

அவளிடமிருந்து பதிலே காணவில்லை. சிறிது நேர தயக்கத்திற்கு பிறகு சொன்னாள்..

ஆமாம்..ஆனா அவன் கிட்ட சொல்லலை..”

ஹே..யாரது..”

ஆனந்த்…..