Sunday 15 May, 2016

கோழிக்குஞ்சு






சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்ப்பார்கள்..அதுவும் கலர், கலராக..பார்ப்பதற்கே வண்ணமயமாக இருக்கும்..அது பாட்டுக்கு தோட்டத்தையே சுற்றி, சுற்றி வரும்..

அம்மா, ஒவ்வொரு கோழிக்குஞ்சுகளும் பெயர் வைக்கச் சொல்லுவார்கள்..அண்ணன்மார்கள் அவர்களுக்கு என்று ஒரு கோழிக்குஞ்சுக்கு பெயர் வைத்தார்கள்..எனக்கு பிடித்த கோழிக்குஞ்சு, ரோஸ் கலரில் இருந்ததால், “ரோசி” என்றுதான் பெயர் வைத்தேன்.

பள்ளிக்கூட தருணங்களில் எப்போதும் “ரோசி” யைப் பற்றியே சிந்தனை இருக்கும்..அம்மா கொடுக்கும், பத்துபைசாவை சேர்த்துவைத்து, கம்பு, திணை என்று வாங்கிவருவேன்..பள்ளி முடிந்து வீடு வந்தவுடன், பையைத் தூர எறிந்துவிட்டு ரோசியை நோக்கித்தான் ஓடுவேன்..அதை கைகளில் தூக்கி கொண்டு கொஞ்சிக் கொணடே, நான் வாங்கி வந்த திணை, கம்பு எல்லாவற்றையும் என் கைகளில் கொத்தி, கொத்தி சாப்பிடுவதை பார்த்தபின்புதான் எனக்கு மூச்சுவரும்..

ஒருமுறை பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது, “ரோசியை” காணவில்லை..அம்மாவிடம் அழுது புரண்டேன்..எங்கயோ ஓடி போய்விட்டது என்றார்கள்..அன்று இரவு முழுதும் அழுது கொண்டே இருந்தேன்..தூக்கமே இல்லை.

அடுத்த நாள் மதியம் உணவுக்கு அமரும்போது தான், சிக்கன் குழம்பு வைத்தார்கள். என் அண்ணன்மார்கள் கிண்டலாக உன் ரோசியைத்தாண்டா குழம்பு வைத்திருக்கோம் என்று சொன்னபோது, தட்டை தட்டிவிட்டு ஓடிப்போய் படுக்கையில் குப்புற படுத்து கொண்ட அழுத தருணங்களையெல்லாம் மறக்கமுடியவில்லை..அன்று சிக்கன் சாப்பிடாதவன்தான் , கல்லூரி முடிந்து வேலை தேடும்வரை சைவப்பிள்ளையாகவே இருந்தேன்..சிக்கனை கையில் தொடக்கூடாதென்று அவ்வளவு வைராக்கியம்..

நாட்கள் போனது..கடந்த பிப்ரவரி மாதம், நானும், பெனிட்டோவும்(என் பையன்) கடைத்தெருவுக்கு சென்றபோது, கலர் கோழிக்குஞ்சுகளை, ஒரு பெரிய கூடையில் விற்று வந்தார்கள்.. பெனிட்டோ, “அப்பா வாங்கலாம்பா” என்றான்..நான் இருக்கும், 3 பெட்ரூம் அபார்ட்மெண்டில் எப்படி வளர்ப்பது என்று எனக்கு பெரியதயக்கம்..”வேண்டாண்டா செல்லம்” என்று சொல்லிக்கொண்டே கவனித்தேன்..ரோஸ் கலரில் ஒரு கோழிக்குஞ்சு என்னையே பார்ப்பதுபோல் இருந்தது. எனக்கு என் ரோசி ஞாபகம் வந்தது..

ஒரு நொடி கூட யோசிக்கவில்லை..”எவ்வளவுங்க” என்றேன்..100 ரூபாய்க்கு 6 என்றார்கள்..ஒரு பையில் கொடுத்தார்கள்..வீட்டில் எப்படி வளர்ப்பது என்ற யோசனை கொஞ்சம் கூட இல்லை..ரோசி என்ற பெயர் கொடுத்த உந்துதல் அப்படி..
வீட்டிற்கு வந்து ஒரு சின்ன அட்டைப்பெட்டியில் 6 கோழிக்குஞ்சுகளையும் போட்டு வளர்த்தேன். பெனிட்டோ, “என்னப்பா பேர் வைக்கலாம்” என்றான்..தயங்காமல் “ரோசி” டா என்றேன்..

அப்போதுதான் ரோசியை கவனித்தேன்..ஒரு கால் உடைபட்டிருந்தது..அதனால் மற்ற கோழிக்குஞ்சுகளை போல் நடக்க முடியவில்லை..நொண்டி, நொண்டிதான் நடந்தது..
தினமும், ஆபிஸ் முடிந்து வரும்போது, அவைகளுக்கு, திணை, கம்பு, கொத்தமல்லி வாங்கி வருவேன்..இன்னும் கூடுதல் கவனம் ரோசி மீது எனக்கு..அதை மட்டும் ஒரு கையால் தூக்கி கொண்டு, மற்றொரு கையில், திணை, கம்பு வைப்பேன்..அது கொத்தி, கொத்தி சாப்பிடும்போது, ஏதோ, என் பால்ய கனவுகளை மீட்டெடுத்த வெறி..

முதல் ஒரு மாதம் தான், இரண்டு கோழிக்குஞ்சுகள் இறந்தன..கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது..ஆபிஸ் முடிந்து வந்தவுடன், நானும் அவைகளும் பேசிக்கொள்ளும் மொழியே தனி..”பக்..பக்..பக்..பக்..” என்றுதான் அழைப்பேன்..
எங்கே இருந்தாலும், நான் “பக்..பக்..பக்..பக்..” என்று அழைக்கும்போது, துள்ளி குதித்து ஓடி வரும் அழகே தனி..அதுவும் என் ரோசி, ஒரு காலை மட்டும் ஊன்றி கொண்டு, ஓடி வரும் அழகை காண, கண் கோடி வேண்டும்..

ஆனால், என்னால் அவைகளால், நீண்ட காலம் வளர்க்க முடியவில்லை..வீடு முழுவதும் அசுத்தம் செய்தன..வீடு சுத்தம் செய்வதே, பெரிய வேலையாக இருந்தது..பெனிட்டோவுக்கு வேறு அவ்வப்போது காய்ச்சல் வந்தபோது, டாக்டர் “வீட்டில் எதுவும் பெட் அனிமல் வளர்க்குறீங்களா” என்று கேட்டபோது, அந்த பயம் இரட்டிப்பானது..அதனாலேயே அவைகளிடம் கொஞ்ச நாள் நெருங்க பயமாக இருந்தது..

எப்போதும் காலை எழுந்தவுடன், முதலில் நான் செல்வதே அந்த அட்டைப்பெட்டியை நோக்கித்தான்..இன்றும் வழக்கம்போல் அட்டை பெட்டி நோக்கி சென்று பார்த்தபோது, ரோசி அசைவின்றி கிடந்தது..அதனுடய தலையை மற்ற கோழிக்குஞ்சுகள் கொத்தி எழுப்ப முயன்று கொண்டிருந்தன..எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியவில்லை..ஒரு கையில் அதை தூக்கி “ரோசி, ரோசி” என்று கத்தினேன்..ஒரு சலனமும் இல்லை..இறந்திருந்தது..அதை அந்த கோலத்தில் பார்க்க கடினமாக இருந்தது..

அதை வெளியே சென்று அடக்கம் செய்துவிட்டபின் ஒரு முடிவெடுத்தேன்..இனிமேல் கோழிக்குஞ்சுகளை என்னால் வளர்க்க முடியாது..மனதைக் கல்லாக்கிகொண்டு, ஒரு பாலித்தின் பையில் மிஞ்சி இருந்த, 3 கோழிக்குஞ்சுகளை தூக்கிகொண்டு, செட்டிநாடு மருத்துவமனையின், பின்புறம் கொஞ்சம் தோப்போடு ஒட்டிய வீட்டு முன்பு, விட்டு, விட்டு, திரும்பி பார்க்காமல் காரை எடுத்து வந்துவிட்டேன்..

காலை சர்ச் முடித்து, மதிய உணவு சாப்பிட ஹோட்டலுக்கு சென்று ஆர்டர் செய்தேன்..என்னவோ மனம் முழுதும் அந்த கோழிக்குஞ்சுகளே நிறைந்திருந்தன..வளத்திருக்கலாமோ, என்ற எண்ணம் வாட்டி எடுத்தது..சாப்பாட்டை, ஒரு வாய் கூட வைக்கவில்லை..அவசரம், அவசரமாக காரை எடுக்க ஓடினேன்..
செட்டிநாடு மருத்துவமனை பின்பு, அவைகளை இறக்கி விட்ட இடம் நோக்கி விரைந்தேன்..அவைகளை இறக்கிவிட்ட இடத்தில், ஒன்று கூட காணவில்லை..கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது..

முதன்முறையாக மனதிலிருந்து அழுதேன்..பெருங்குரலடுத்து கத்தினேன் அந்த இடம் முழுக்க அதிர “பக்..பக்..பக்..பக்...”

ஒரு பயனும் இல்லை..ஏதோ இதயத்தை ஒரு நிமிடம் பறித்து தூர எறிந்தார்போல் இருந்தது..காரை ஓட்டிக்கொண்டு வீடு வந்தபார்த்தபோது, ஒரமாய் இருந்த அட்டைப்பெட்டி..எட்டிப்பார்த்தேன்..

வெறுமையாய் இருந்தது...