Tuesday 31 August, 2010

பிரபல பதிவர்கள் பங்குபெற்ற நீயா நானா??

அண்ணே..ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சொல்லிரேன். முழுவதும் கற்பனையான பதிவு இது. யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல..படிச்சிப்புட்டு கல்லைக் கொண்டி அடிக்கிறதெல்லாம் செய்யக்கூடாது..சொல்லிப்புட்டேன்.

கோபிநாத் : தேங்க்யூ..தேங்க்யூ..வெல்கம் டூ லயன் டேட்ஸ் வழங்கும் நீயா நானா..அனைவருக்கும் கோபிநாத்தின் அன்புவணக்கங்கள்..

(கூட்டத்தில் இருந்து ஒருவர்..)

“உன் வணக்கத்தை தூக்கி உடப்புல போடு..ஒரு நையா பைசா தேறாது…உன் வணக்கத்தை வைச்சு அட்லீஸ்ட் தமிழ்மணத்துல ஒரு ஓட்டு வாங்க முடியுமாயா..”

கோபிநாத் : யாருங்க அங்க எகத்தாளம் பேசுறது..ஆஹா..ஆண்டனி..பதிவர்களை கூப்பிடாதீங்கன்னு தலையால அடிச்சுக்கிட்டேன்..கேட்டீங்களா..கடவுளே என்ன நடக்க போகுதோ…ஓகே..ஓகே..லெட்ஸ் கம் டூ த பாயிண்ட்..

பைத்தியக்காரன் : எச்சூயூஸ்மி..என்ன நோக்கத்துக்கு சங்கம் அமைக்கப் போறீங்க..யாரு யாரெல்லாம் மெம்பர்..முக்கியமா யாரு பொருளாளர்..

கோபிநாத் : என்னது சங்கமா….அண்ணே..இது நீயா நானா..

பைத்தியக்காரன் : (அதிர்ச்சியுடன்) என்னது நீயா நானாவா,.உண்மைத்தமிழன் சங்கம் வைக்கிறதுக்கு கூட்டமில்ல சொன்னாரு..இட்ஸ் ஓகே..நான் வெளியிலிருந்து ஆதரவு தர்றேன்..

கோபிநாத் : சந்தோசம்..நீயா நானா கண்டிப்பாக இதை வரவேற்கும்.ஓகே..இன்று நாம் எடுக்கப்போகும் தலைப்பு..பிரபல பதிவராக இருப்பது அவஸ்தையா..குஜாலா….(கேபிள் சங்கரைப் பார்த்து) எங்க..பெரியவரே நீங்க சொல்லுங்க…

கேபிள் சங்கர் : ஏய்..யாரைப்பார்த்து பெரியவருன்னு சொன்ன..கடையடைப்பு..உண்ணாவிரதம்..சைதாபேட்டைல ரெண்டு பஸ்ஸ் கொளுத்துங்கடா..நாங்க எல்லாம் யூத்து தெரியுமா..25 முடிஞ்சு இப்பதான் 26 ஆகுது..

கோபிநாத் : யாருக்கு..??

கேபிள் சங்கர் : யாருக்கோ..முதல்ல நீங்க எப்படி சொல்லலாம்..

கோபிநாத் : அய்யோ அண்ணே..தெரியாம சொல்லிட்டேன்..தண்டனையா நீங்க எழுதுற எண்டர் கவிதைகள் தினமும் படிக்கிறேன்..போதுமா..ஒகே..இப்ப இந்தப்பக்கம் வரலாம்..சொல்லுங்க மிஸ்டர் நர்சிம்..உங்களைப்பற்றி உங்கள் பதிவில் என்ன எழுதி இருக்கிறீர்கள்

நர்சிம் : நாமார்க்கும் குடி….

அப்துல்லா : ஆஹா..அண்ணே..சொல்லவே இல்லை பார்த்தீங்களா..எந்த பாரு....விட்டுட்டு போயிட்டீங்க பார்த்தீங்களா..

கோபிநாத் : மிஸ்டர் நர்சிம்..இதை தமிழுல சொல்ல முடியுமா..

நர்சிம் : ஆஹா..சங்க இலக்கியத்துல இருந்து ஒரு வார்த்தை பேசுனா கிண்டல் பண்ணுறாயிங்களே..இன்னைக்கு போறப்ப டி.வி கிடைக்காது போலிருக்கே….ஆக்சுவலி..

கோபிநாத் : வாவ்.வாவ்..இதுவல்லவோ தமிழ்..நீயா நானா பற்றி இரண்டு வார்த்தைகள்..

நர்சிம்: ம்..என்ன சொல்ல..சங்க கால இலக்கியத்தில் திரூமூலர்..

கோபிநாத் : அவர் கிடக்கட்டும்..நீங்க என்ன சொல்லுறீங்க…

நர்சிம் : வேணுமின்னா..இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு புனைவு எழுதட்டுமா..

கோபிநாத் : சூப்பர்..எழுதுங்களேன்..

அதிஷா : (மெல்லிய குரலில்) ஆஹா..கோபிநாத்து ஓணானை எடுத்து கோட்டுக்குள்ள விடுறாரே..மிஸ்டர் கோபிநாத்..நாங்களும் இருக்கோம்..எங்களையும் கேளுங்க..

கோபிநாத் : கண்டிப்பா..அதுக்கு முன்னாடி உங்க பக்கத்துல் உக்கார்த்து புத்தகம் படிச்சிக்கிட்டு இருக்காரே..அவர் யாரு..

அதிஷா : நண்பர் லக்கிலுக்..

கோபிநாத் : அவருகிட்ட கொடுங்க..நீங்க சொல்லுங்க சார்..பிரபலபதிவராக இருப்பது..

லக்கிலுக் : ஆளப்பிறந்தவன்..ஆத்திரப்படமாட்டேன்..

கோபிநாத் : ஒன்னும் புரியலையேப்பா..

அதிஷா : யாருக்குதான் புரியுது..

கோபிநாத் : ஓகே..யாருப்பா அங்க விஜய் டி.வியுல இவ்வளவு பெரிய கேமிரா இருக்குறப்ப குட்டி கேமிராவை வைச்சு படம் புடிக்கிறது..

ஜாக்கிசேகர் : நாந்தான் ஜாக்கி சேகர்..ஆங்கிள் பார்க்கிறேன்..

கோபிநாத் : நீங்க சொல்லுங்க..பிரபலபதிவரா இருக்குறதுனால அவஸ்தையா..

ஜாக்கிசேகர் : கண்டிப்பா சார்..ஒரு நாளைக்கு 40 மெயில் வருது…ரோட்டுல நடமாட முடியலை..யாரப்பார்த்தாலும், நீங்க ஜாக்கிசேகரா..ஜாக்கிசேகாரான்னு ஒரே குஷ்டமப்பா..இது..ஒரே கஷ்டமப்பா..இப்படித்தான்..

கோபிநாத் : ஆஹா..ரெண்டு எபிசோட் போகும் போலிருக்கே..நீங்க சொல்லுங்க உண்மைத்தமிழன்..

உண்மைத்தமிழன் : எம்பெருமான் முருகப்பெருமானுக்கு..

கோபிநாத் : ஆஹா..ஆறு எபிசோட் ஆகும் போலிருக்கே..

நிகழ்ச்சி தொகுப்பாளார் ஆண்டனி அலறியடித்து ஓடிவர..எலலோரும் கலவரமாகின்றார்கள்..

“நிறுத்துங்க..நிறுத்துங்க..எல்லாத்தையும் நிறுத்துங்க..”

ஆண்டனி : தற்காலிகமா எழுதுறதை நிறுத்தியிருந்த பிரபல பதிவர் சக்கரை சுரேஷ்ஷூ இன்னையிலிருந்து எழுதப்போறாராம்..மீட்டிங்க் நடக்குறதைக் கேள்விப்பட்டவுடனே தானும் கலந்துக்கணுமுன்னு வந்துகிட்டு இருக்காராம்..உடனே ஓடுங்க..ஓடுங்க..

(எல்லாரும் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்..ஓடும் வழியில் பிரபலபதிவர் டோண்டு ராகவன் “சரியாக எட்டு மணிக்கு டோண்டு ராகவன் கார்..இடத்தை விட்டு எஸ்கேப் ஆனது..” என்று தொடங்க..கொத்து கொத்தாக தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள்..)

Sunday 29 August, 2010

ஆத்தா எனக்கு டிரெயின் டிக்கெட் கிடைச்சிருச்சி…

நண்பன் நேற்று தொலைபேசியிருந்தான். குரலில் சந்தோசம் தெறித்தது. அவ்வளவு சந்தோசமாக அவன் குரலைக் கேட்டதில்லை.

“என்னடா..இவ்வளவு சந்தோசம்..எதுவும் புரோமசன் கிடைச்சிருச்சா..”

“ம்ம்ம்ம்..ஹூம்..”

“பின்ன..வேறு ஏதாவது கம்பெனியில ஆபர்???”

“இல்லடா..”

“எந்திரன் படம் ரீலீஸ் அன்னைக்கு போஸ்டர் ஒட்டுற பாக்கியம் ஏதாவது கிடைச்சிருச்சா..??”

“டே..வேற வேலை இல்லையா..நான் எதுக்கு ஒட்டுறேன்”

“நீ பெரிய ஆளா வரவேணாமா..???”

“போஸ்டர் ஒட்டினா எப்படிடா பெரிய ஆளா வரமுடியும்…”

“என்னடா இப்படி சொல்லிட்ட..தாமரைக்கனி, கருப்பசாமி பாண்டியன், சேடபட்டி முத்தையா போன்ற விடுதலைப் போராட்ட தலைவர்கள் எல்லாம் போஸ்டர் ஒட்டிதான முன்னுக்கு வந்தாங்க..”

“டே..ராசா..கொலைவெறியை கிளப்பாத…”

“ப்ச்..சொல்லுடா..சஸ்பென்ஸ் தாங்கலை..”

“சந்தோசமா இருக்குடா..தீபாவளிக்கு மதுரைக்குப் போக டிரெயினில டிக்கெட் கிடைச்சிருச்சு..”

என்னால் நம்பமுடியவில்லை..என்னது ஒரு சாமானியனுக்கு தீபாவளி சமயத்தில் ரயில் டிக்கெட் கிடைக்கிறதா..சும்மா புரூடா விடுறான்னு ஒரு சந்தேகம்

“டே நண்பா..சும்மா விடாதே..அமெரிக்க விசா கூட கிடைச்சிரும்..தீபாவளி அன்னைக்கு டிரெயின்ல டிக்கெட்டா..எப்படிடா..”

“ரொம்ப கஷ்டப்பட்டோம்ல..போன தீபாவளிதான் ஏமாந்துட்டேன்..இந்த தீபாவளி எப்படியாவது..”

“நிறுத்து..போன தீபாவளி எப்படி ஏமாந்த..”

“ஆமாண்டா..காலையில சீக்கிரம் போய் லைனுல நின்னா, முதல்ல வாங்கிரலாமுன்னு நைட் 1 மணிக்கெல்லாம் மேற்கு மாம்பலம் ரெயில்வே ஸ்டேசனுக்குப் போறேன்..எனக்கு முன்னாடியே ஒரு பத்து பேருடா..சும்மா கைலியைக் கட்டிக்கிட்டு பீடியை வழிச்சிக்கிட்டு, “இன்னாமே..டிக்கெட்டா..அப்பால லைனுல வந்து குந்திக்க நைனா..” ங்குறாங்கே..எல்லாரு கையிலயும் ஹிண்டு பேப்பர்..”

“என்னது ஹிண்டு பேப்பரா..”

“விரிச்சு தூங்க தான்.”

“யாருடா அவிங்க எல்லாம்..”

“எல்லாம் ஏஜண்டுகள் ஏற்பாடு பண்ணுன ஆளாம்டா..உள்ளாற டிக்கெட் குடுக்கிறவியங்களுக்கும் இவிங்களுக்கும் ஒரு லிங்க் இருக்காம்டா..கொத்து கொத்தா டிக்கெட் வாங்குற மாதிரி பிளானுடா. ஆடிப்போயிட்டண்டா..சரி நானும் பதினொன்னாவது ஆளா குந்திக்கிட்டு…அய்யோ..உக்கார்ந்துகிட்டே தூங்கிட்டேன்..”

“அப்புறம்..”.

“நானும் எப்படியாவது வாங்கிடாலாம்னு பதினோறாவது ஆளா நின்னு பார்த்தேண்டா..பத்து பேரு டிக்கெட் வாங்கிட்டாயிங்க..நான் கரெக்டா கவுண்டருக்கு போறப்ப..”

“நீ ஏண்டா கவுண்டருக்கு போற..முதலியாருகிட்ட போயிருக்க வேண்டியதுதான..”

“மவனே கடிக்கிறீயா..சொல்லுறத கேளு..டிக்கெட் கவுண்டருக்கு போறேன்..ரேஷன் கடையில பாமாயில் இல்லைங்கிற மாதிரி, “சாரிங்க, டிக்கெட் இல்லைங்கிறாயிங்க..நானும் விடலையே..எந்த டிரெயினாலும் பரவாயில்லைங்க..போடுங்க ஒரு டிக்கெட் போடுங்கண்ணேன்..தீபாவளி முடிஞ்ச அடுத்த நாளைக்கு இருக்கு..அதுவும் வெயிட்டிங்க் லிஸ்ட் 151 ன்னு சொல்லுறாயிங்கடா..நைட் புல்லா சாக்கடைக்கு பக்கத்துல உக்கார்ந்து இருந்த எனக்கு எப்படி இருக்கும்..”

“அடப்பாவி..இண்டெர்நெட்டுல டிரை பண்ண வேண்டியதுதான..”

“எது..இண்டர்நெட்டா.,..கடுப்ப கிளப்பாத..8 மணி வரைக்கும் சரியா வேலை செய்யும்..கரெக்டா 8 மணிக்கு “நீங்கள் தொடர்புகொண்ட சர்வர்கள் அனைத்தும் இப்போது உபயோகத்தில் உள்ளன..தயவு செய்து அனைத்து டிக்கெட்டுகளும் ஏஜெண்டுகள் புக் பண்ணி காலியான பிறகு டிரை பண்ணவும்” னு சொல்லுதுடா..

“கொடுமைடா..அதுசரி..இந்த தீபாவளிக்கு எப்படி கிடைச்சிருச்சு..”

“நான் என்ன மடையானா..ஒரு ஏஜண்டுகிட்ட போனேன்..சார் ரேட் ரெண்டு மடங்காகுமுன்னு சொன்னான்..போயிட்டு போகுதுன்னு கொடுத்தேன்..டிக்கெட் கையில வந்துருச்சு..”

“சூப்பருடா..டே..ஒரு ஹெல்ப்டா..அடுத்த வருச தீபாவளிக்கு அண்ணன் கிட்ட இப்பவே எனக்கு ரெண்டு டிக்கெட் சொல்லிடுறா..”

“கண்டிப்பாடா....”

“தேங்க்ஸ்டா..இப்படித்தான் அமெரிக்காவுல..”

“டே..லைன் சரியா கிடைக்க மாட்டிங்குது..நான் அப்புறம் போன் பண்ணவா..”

“டே..இரு..இரு..நான் முடிச்சுக்கிறேன்.இப்படித்தான் அமெரிக்காவுல...”

“ஹலோ..ஹலோ..ஹலோ..சரியா கேக்கலை....ஹலோ…ஹலோ…

ஒரு பயபுள்ள மதிக்குதாண்ணு பாருங்கண்ணே…

Saturday 28 August, 2010

நான் மகான் அல்ல – விமர்சனம்

முதல் பாதிக்கும், இரண்டாவது பாதிக்கும் இவ்வளவு வித்தியாசம் காட்ட முடியுமா?? முடியுமே என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் சுசிந்தீரன். அதே ஒரு அரதப்பழசான பழிவாங்கும் கதைதான்.

தமிழ்ப்பட கதாநாயகனுக்குரிய அத்தனை இலக்கணத்தையும் பொருந்திய கார்த்திக் வழக்கம்போல் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுகிறார். கணவனை விட கார்த்திக்கிடமே அதிகம் பேசும் நண்பியின் திருமணத்திற்கு செல்லும் கார்த்தி, இளைஞர்களின் ஜொள்ளுக்கு காரணமான காஜல் சுவீட்கடையை கணடதும் காதலிக்கிறார். வழக்கம்போல், அவர் இவரை விரட்ட, இவர் அவரை விரட்ட இளைஞர்களுக்கு வயிறு பற்றிக் கொண்டு வருகிறது.

எப்போதும் போதை அடித்தபடியே திரியும் அந்த ஐந்து கல்லூரி நண்பர்களை காட்டும்போது படம் ஸ்டார்ட் ஆகிறது. போதை தலைக்கேற, கடற்கரைக்கு வரைக்கும் பெண்களை கற்பழிக்கின்றனர். அதன் உச்சகட்டமாக அடைக்கலம் கேட்டு வரும் நண்பனின் காதலியைக் கற்பழித்து கொன்றுவிட, கார்த்தியின் அப்பா அதற்கு சாட்சியாகிறார்.

வில்லன்களின் இலக்கணப்படி சாட்சியான கார்த்தியின் அப்பாவை லோக்கல் ரவுடியின் உதவியுடன் போட்டு தள்ள, வெகுண்டெழுந்த கார்த்தி, ஒரு நிமிடத்தில் காஜல் அகர்வாலை மறந்து, ஆக்சன் ஹீரோவாகிறார்..ரன், சண்டைக்கோழி கிளைமாக்ஸ் மாதிரி அந்த போதை இளைஞர்களை போட்டு தள்ளி, நான் மகான் அல்ல என்று நிரூபிக்கிறார்.

முதல் பாதி, இளமை துள்ளலாக செல்கிறது. கார்த்தி காஜலிடம் செய்யும் குறும்புகள், மௌன ராகத்தை நினைவுப்படுத்தினாலும் ரசிக்கும்படியாக உள்ளது. அந்த 5 போதை இளைஞர்களை காட்டும்போது, திக்கென்று இருக்கிறது. இதே சூழ்நிலையை கவுதம்மேனன் “வேட்டையாடு, விளையாடு” படத்தில் காண்பித்திருப்பார். அவர்களை பார்க்கும்போதெல்லாம், நமக்கும் கொஞ்சம் உதறல் எடுப்பது, இயக்குநரின் வெற்றி எனலம்.

கார்த்தி பருத்தி வீரனின் பாதிப்பில் இருந்து வெளியேறி, பக்கத்து வீட்டு பையனாக வருகிறார். இளமைக்குறும்புகளில் கண்டிப்பாக சிரிக்க வைக்கிறார். அப்பா இறந்தவுடன், வேறு தளத்திற்கு செல்லும் அந்த சேஞ்ச் ஓவரை ரசிக்க முடிகிறது.

எங்கே பிடித்தார்கள் அந்த ஐந்து இளைஞர்களை. எப்போதும் டோப் அடித்துக் கொண்டே அவர்கள் செய்யும் காரியம் பகீர் ரகம். அதுவும், ஒரு பெண்ணின் தலையை தனியே வெட்டி, அதை கொத்தும்போது, என் கழுத்தை தடவிப் பார்த்துக் கொண்டேன். குறிப்பாக, நந்தா படத்தில் சிறுவனாக வரும் அந்தப் பையன், பரட்டைத் தலையுடன் கண்களில் வெறியுடன் திரியும் அந்த இளைஞன், உண்மையிலேயே பயமுறுத்திகிறார்கள். அவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு தரும் அந்த லோக்கல் ரவுடி, கார்த்திக்கு உதவும் அந்த பெரிய தாதா என, கேரக்டருக்கு அப்படியே பொருந்துகின்றனர். பாத்திரப்படைப்பில், இயக்குநரின் திறமை தெரிகிறது

விறுவிறுவென செல்லும் இரண்டு மணிநேரத்தில், இயக்குநர், திரைக்கதையே, ரசிக்கும்படி அமைத்திருக்கிறார். ஊரே பேசும் அந்த பெரிய தாதாவை, இளைஞர்கள் சர்வசாதரணமாக கொலை செய்வது நம்பும்படி இல்லையென்றாலும், அந்த இளைஞர்களின் வெறி ஆச்சர்யபடவைக்கிறது. பாஸ்கர் சக்தியின் வசனமும், மதியின் கேமிராவும், யுவனின் இசையும் படத்திற்கு பெரிய பிளஸ். வன்முறையை கொஞசம் தவிர்த்திருக்கலாம். படம்பார்த்து விட்டு தூங்கினால், என் தலையை யாரோ வெட்டி, என் கையில் கொடுப்பதாக கனவு வந்து பயமுறுத்திகிறது

இறுதியாக நான் மகான் அல்ல – குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் - இடைவேளை முன்பு வரை .

Sunday 22 August, 2010

மிக்சர் ஜீஸ்


இந்த வார கருத்து

ரந்தீவ் நோ பால் போட்ட விஷயத்தை மீடியாக்களும், பிளாக்கர்களும் அலசி காயப்போடுவதாக கேள்விப்பட்டேன். இந்த விஷயத்தில் எனக்கு வேறு மாதிரியான அணுகுமுறை உண்டு. கண்டிப்பாக இதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வர் என்று தெரியவில்லை. ரந்தீவ் செய்தது தவறில்லை என்பது என் கருத்து. ஷேவாக் 100 அடிப்பதற்கு எதிரணியினரான ரந்தீவ் எதற்கு உதவவேண்டும். முதலில் நோபால் என்று ஒன்று இருப்பதனாலேதானே அதை ரந்தீவ் உபயோகப்படுத்தினார். அவர் நோபால் போட்டது தவறென்றால் கிரிக்கெட் விதியும் தவறுதானே. இதில் என்ன ஒழுக்கம், பண்பு வேண்டிக் கிடக்கிறது. ஒரு விளையாட்டு வீர்ராக எதிரணி பேட்ஸ்மேன் 100 அடிக்ககூடாது என்று கிரிக்கெட்டில் அனுமதிக்கப்பட்ட நோபாலை உபயோகப்படுத்துவதில் தவறில்லை என்பது என் கருத்து. திட்ட விரும்புவர்கள் பின்னூட்டத்தில் திட்டலாம்.

இந்த வார படங்கள்

மனோஜ் நைட் சியாமளனின் “ஹேப்பனிங்க்” என்ற படத்தைப் பார்த்து மிரண்டுவிட்டேன். என்ன ஒரு மேக்கிங்க். மனிதர் மிரட்டு, மிரட்டென்று மிரட்டியிருந்தார். தாவரங்கள், செடி, கொடிகள், மரங்கள் வில்லனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் கரு. மனிதருக்கு கண்டிப்பாக எதிர்காலத்தில் ஆஸ்கார் உண்டு.

அடுத்து “மிஸ்டர் ப்ரூக்ஸ்” என்று ஒரு படம். ஆரம்பிக்கும்போது சுவாரசியமில்லாமல்தான் பார்த்தேன். ஆனால் போக, போக காட்சியமைப்புகள் சீட்டின் நுனிக்கே கொண்டு வந்தன. யாரையாவது கொல்லவேண்டும் என்று வெறிபிடித்த வியாதி கொண்ட ஒரு பெரியபுள்ளி, அடக்கமாட்டாமல் காதலர்கள் இரண்டு பேரை கொலை செய்கிறார். அதை எதிர்வீட்டில் அபார்ட்மெண்டில் உள்ள ஒருத்தர் புகைப்படம் எடுத்துவிடுகிறார். தடயங்களை அழிக்க அவர் கேட்கும் விலை என்ன தெரியுமா..அவர் அடுத்த கொலை செய்யும்போது இவரும் பார்க்கவேண்டும்.. சரி மிரட்டல். முடிந்தால் பாருங்களேன்.

இந்த வார கொடுமை

சன்.டிவியில் வரும் நிகழ்ச்சிகள் கொடுமை என்பது ஊருக்கே தெரியும். ஆனால் மகாகொடுமை என்பது “சங்கீத மகா யுத்தம்” என்ற நிகழ்ச்சி பார்த்தபோது தெரிந்தது. படு அமெச்சூர்தனமாக உள்ளது. அதில் வரும் நடுவர்கள் யாருக்கும் இந்த நிகழ்ச்சியில் விருப்பம் இருப்பதாக தெரியவில்லை. ஏதோ கடனுக்கு நிகழ்ச்சி நடத்தி, முடித்து விடுகிறார்கள். என்னுடைய ஆசை என்ன தெரியுமா..கிராமங்களில் எத்தனையோ பேர் நிறைய திறமைகளை அடக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சான்ஸ் கொடுப்பதற்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சி…

இந்த வார நகைச்சுவை

யாருண்ணே இந்த சாம் ஆணடர்சன். நான் விவேக், வடிவேல் நகைச்சுவைககு கூட இப்படி சிரித்ததில்லை. இன்று முழுவதும் சாம் ஆண்டர்சன் டான்ஸ் வீடியோ பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன். ஞாயிற்று கிழமையில் நான் செய்த முதல் காரியம், தலைவர் நடித்த உலகப் புகழ்பெற்ற “யாருக்கு யாரோ” படத்தை புல் டௌன்லோட் செய்த்துதான். இந்த வார முழுக்க தலைவர் ஆடிய “ராசாத்தி” பாடல்தான் பார்க்கப்போறேன். யார் யாருக்கோ பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த தலைவனுக்கு ஊத்தினா என்னப்பா..யாராவது ஊத்துங்கப்பா..நாங்க கண்டிப்பா எதிர்த்து பதிவுபோடமாட்டோம். மணிரத்னம் படத்தில் அடுத்த ஹூரோவாக சாம் நடித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை பண்ணி பார்த்தேன்….கண்டிப்பா 250 நாள்தாண்ணே…

இந்த வாரவேண்டுகோள்

பதிவுலத்தில் வாரத்திற்கு ஒரு சண்டையாவது வரவேண்டும் என்று நேர்த்தி கடன்போல..திரும்ப ஆரம்பித்து விட்டது. தயவுசெய்து..ஹல்ல்ல்லோ..ஹல்லோ..பேசிக்கிட்டிருக்கும்போது யாருப்பா கல்லை கொண்டி எறியிறது..ஹல்லோ..பேச..யோவ்..எவன்யா கல்லை எடுத்து திரும்ப திரும்ப எறியிறது…கூட்டுங்கயா சபைய…

இந்த வார வரவேற்பு

நர்சிம் திரும்ப எழுத வந்தவிட்டார் போல இருக்கிறது. அவருடைய பதிவுகளை மிகவும் ரசிப்பேன்(சில புனைவுகளைத் தவிர). வந்த வேகத்திலேயே சிக்ஸர் அடித்த அந்த கவிதை அபாரம். வெல்கம் பேக் நர்சிம். இதைதவிர நான் தினமும் திறந்து பார்க்கும் சில பிளாக்குகள்.

1. லக்கிலுக், அதிஷா (நக்கலுக்காக)

2. கேபிள் சங்கர்(கொத்து புரோட்டாவுக்காக..களவாணி விமர்சனம் ஏமாற்றமே)

3. ஜாக்கிசேகர்(ஆங்கில பட விமர்சனத்திற்காக)

4. பரிசல்காரன்(பல்சுவைக்கு)

5. பட்டா பட்டி(செம..லொள்ளுக்காக.)

6. வெளியூர்க்காரன் (லொள்ளு பிளஸ்)

7. அறுசுவை.காம்(சோறு ஆக்குவதற்கு..)

8. தமிழ்சினிமா.காம்(அடுத்து யாருக்கு கோயில் கட்டப்போறாயிங்க என்பதை தெரிந்து கொள்ள)

9. தட்ஸ்தமிழ்.காம்(அமெரிக்காவில் தினத்தந்தி கிடைக்காத்தால்)

இந்த வார சந்தேகம்

பதிவுகளில் எப்படி யூடியூப் வீடியோக்களை இணைப்பது. நிறைய இணைக்க ஆசை. விளக்குபவர்களுக்கு நம்ம ஊருக்கு வரும்போது ஒரு ஐபோன் வாங்கிவரலாம் என்று ஆசையாய் இருந்தது. ஆனால் ஐபோன் – 4ஜீ இப்போது பெயிலியர் ஆகி, நிறைய பேர் இங்கு திருப்பிதருவதால், நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள் என்பது தெரியும்..

Wednesday 18 August, 2010

எனக்கு வந்த சில மிரட்டல் கடிதங்கள்…

என்னை தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். தினமும் என்னைப் பாராட்டி ஆயிரம் கடிதங்கள் வருவதால், அமெரிக்க அஞ்சலக துறை என் வீடு அருகில் புதிதாக ஒரு போஸ்ட் ஆபிஸ் ஆரம்பிப்பதாக உள்ளனர். நம்மால நாலு பேருக்கு வேலை கிடைக்குதுன்னா சந்தோசம்தானே. அப்புறம்ணே, புதிதாக போஸ்ட் ஆபிஸ் ஆரம்பிப்பதால், என்னுடைய போஸ்ட் பாக்ஸ் நம்பரும் மாறியுள்ளது. இதுவரை இருந்த போஸ்ட் பாக்ஸ் நம்பரான 420 என்பது, இப்போது 420A என்று மாறியுள்ளது. வாசகர்கள், புது நம்பருக்கு வழக்கம்போல் கடிதம் அனுப்பி குஜாலாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கண்டிப்பாக தபால் தலை ஒட்டவேண்டுமென்று கேட்டுக் கொள்ள படுகிறார்கள். தினமும் ஆயிரம் கடிதங்கள் வருவதால், அதில் சிலுக்கு..அய்யோ வாய் குழறுதே..குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதில் அனுப்பப்படுவர். அந்த அதிர்ஷ்டக்காரராக இருப்பதற்கு உடனே முந்துவீர்.

எனக்கு போனவாரம் வந்த சில கடிதங்களை உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமைப்படுகிறேன்.

முதல் கடிதம்

திரு அவியிங்க ராசாவுக்கு, ஆட்டையாம்பட்டி ஆனந்தகோபால் அண்டார்டிகாவிலிருந்து எழுதுவது. நான் உங்கள் பிளாக்கை கடந்த 40 வருடங்களாக படித்து வருகிறேன். சூப்பரா எழுதுறீங்க..நான் இங்கு அண்டார்டிகாவுக்கு போன வருடம்தான் வந்தேன். கை நிறைய சம்பளம். 9-6 வேலை. இங்கு அண்டார்டிகாவில் உள்ள கம்பெனிக்கு ஆப்ஸோர்ஸாக என் கம்பெனி உள்ளது. வேலை மிகவும் சுலபமதான். வேலை என்னவென்றால் இங்கு பென்குயின்கள் கக்கா போனால் கழுவிவிடுவது.முதலில் அதனுடைய பாஷையை கற்று கொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.கண்ட இடத்தில் கக்கா போய்விடும். இப்போது ஒவ்வொரு பென்குயின்க்கும் ஸ்னக்கீஸ் கட்டி விட்டு விடுவதால் வேலை சுலபமாக உள்ளது.

உங்கள் பிளாக் படிக்காமல் தூக்கம் வருவதில்லை. ஒவ்வொரு நிமிடத்திற்கும் F5 பிரஸ் பண்ணி, அந்த எழுத்தே கீபோர்டில் அழிந்து விட்டது.

நான் படிப்பது கூட ஆச்சர்யம் இல்லை. இங்குள்ள பென்குயின்கள் உங்கள் எழுத்தைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. காலையில் எழுந்து உங்கள் எழுத்தைப் படித்தபின்புதான் கக்கா போகின்றன என்றால் பார்த்து கொள்ளுங்களேன். நீங்கள் போனவாரம் எழுதிய “ங்கொக்காமக்கா” என்ற பதிவை படித்து பென்குயின்கள் எல்லாம் ஒரே அழுவாச்சி. எப்படி இப்படியெல்லாம் உருக்கமாக எழுதிகீறீர்கள்.போன மாதம் நீங்கள் எழுதிய “அக்கா மக வயசுக்கு வந்துட்டா” என்ற சமுதாய விழிப்புணர்வுமிக்க பதிவுக்கு இங்கே ஒரே அப்ளாஸ். தொடர்ந்து இதுபோன்ற சமுதாயத்தை தட்டி எழுப்பக்கூடிய பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள், தயவுசெய்து எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள். அப்படி நிறுத்திவிட்டால், நானும், பென்குயின்களும் கூட்டத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என்று எச்சரிக்கிறேன்…

இரண்டாம் கடிதம்

பாசமுள்ள அவியிங்க ராசா…

“கிர்,,,க்க்க்,,க்க்க்க்கிர்,,,,கிர்….கிர்…”

சாரி..தமிழிலிலேயே சொல்லிவிடிகிறேன். எங்கள் பாஷையில் “காலை வணக்கம்” என்று அர்த்தம். நாந்தான் செவ்வாய் கிரகத்திலிருந்து ஏலியன் நம்பர் 45 பேசுகிறேன். நம்புவதற்கு கஷ்டமாக இருக்கலாம். ஆமாம் நான் ஒரு ஏலியன். இங்கு 400 வருடங்களாக உள்ளேன். உங்கள் பதிவை அறிமுகம் செய்துவைத்தது திரு.ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள். அவர்கள் போனமுறை நிலாவுக்கு வந்துவிட்டு திரும்பும் வேளையில் ஒன்னுக்கடிப்பதற்காக செவ்வாய் கிரகத்தில் இறங்கினார். அப்படி ஒரு சந்திப்பின்போது அவர் எனக்கு அறிமுகம் செய்ததுதான் உங்கள் பிளாக்..

உங்கள் பதிவின் தீவிர ரசிகன் நான். உங்கள் எழுத்துக்கு அடிமை என்றே சொல்லலாம். காலையில் பல்கூட விளக்காமல் உங்கள் பதிவை படிப்பதில் அப்படி ஒரு ஆர்வம்.. சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்துள்ளீர்கள் தெரியுமா..ஏ.ஆர் ரகுமான் வாங்கிய 2 ஆஸ்காரை விட 10 மடங்கு சாதனை அது. ஆனால் அப்படி ஒரு சாதனை செய்துவிட்டு அமைதியாக இருக்கீறீர்கள் தெரியுமா..அதுதான் உங்களிடம் எனக்கு பிடித்தது. என்ன புரியவில்லையா..நீங்கள் எழுதிய போன பதிவு 19 ஓட்டு வாங்கி தமிழ்மணத்தில் வாசகர் பரிந்துரையில் வந்ததைதான் சொல்கிறேன். எப்பேர்பட்ட சாதனை என்பது உங்களுக்கு தெரியுமா..நீங்கள் ஒரு வருடத்தில் எழுதிய அத்தனை பதிவுக்கும் சேர்த்து வாங்கிய 18 ஓட்டை, ஒரே பதிவில் வாங்கி விட்டீர்கள். இதுவரை கடந்த 50 வருடங்களாக தமிழ்மணம் பரிந்துரையில் வரும் அந்த நாலுபேரைத் தவிர உங்கள் பதிவும் வந்தது பெரும் ஆனந்தம். ஆனால் எதற்கும் தமிழ்மணம் அட்மினிஸ்டிரேட்டரிடம் ஒரு வார்த்தை விசாரித்து கொள்ளுங்கள். ஏதாவது டெக்னிக்கல் மிஸ்டேக் என்று சொல்லக்கூடாது பாருங்கள்..

தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எழுத்துக்கு வாசகராக இருப்பதற்கு எங்கள் ஏலியன் கூட்டம் பெருமைப்படுகிறது. முடிந்தால் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு ரவுண்ட் வாங்களேன். வரும்போது ஆலன்ஷோலி ஜட்டியும், சுடர்மணி பனியனும் வாங்கிவரவும். தயவுசெய்து எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள். அப்படி நிறுத்தி விட்டால், அதை தடுப்பதற்கு பூமி மீது போர் தொடுப்போம் என்று “இண்டிபென்டென்ஸ் டே” மீது ஆணையிட்டு கூறுகிறேன்..

=======================================================================

இதுபோன்று தொடர்ந்து வரும் பாசமிகு கடிதங்களைப் பார்க்கும்போது கண்ணுல தண்ணி வருது. அதை கொண்டாடுவதற்காக பக்கத்து தெருவில் உள்ள பாருக்கு செல்ல வேண்டியுள்ளது. டாக்சி மற்றும் இதர செலவுகளுக்கு வாசகர்கள் தயவுசெய்து ஒரு பத்தாயிரம் ருபாயை, என்னுடைய ஐ.சி.ஐ.சி.ஐ அக்கௌண்டில்..ஹலோ..எங்க ஓடுறீங்க..ஹலோ..ஹலோ…எச்சூயூஸ்மி.

Saturday 14 August, 2010

மவனே, இனிமேல் யாராவது எந்திரனைப் பத்தி தப்பா பேசினீங்க…!!!!

எங்கள் குலத்தெய்வம், ஏழைமக்களின் பங்காளன், தமிழகத்தின் விடிவெள்ளி, தமிழகத்தைக் காக்க வந்த வருங்கால முதலைமச்சர் சூப்பர்ஸ்டாருக்கு..

தலைவா..தங்கமே..எப்படி தலைவா இருக்கீங்க..நாந்தான் தலைவா, மருத வாடிப்பட்டி ஒன்றியம் 13 வது வட்ட ரசிகர் மன்ற செயலாளர் முத்து வீரப்பன் பேசுறேன்..

தலைவா..புல்லரிக்குது தலைவா..எந்திரன் ரிலீஸாமே..அப்படியே தெருவுக்குப்போய் “எந்தலைவன்” படம் வருது பாருன்னு கத்தணும் போல இருக்கு தலைவா..இந்த தடவை அவிங்க ரசிகர் மன்றத்துக்கு ஆப்படிக்கணும் தலைவா..கண்டிப்பா வெள்ளிவிழாதான் தலைவா..நீ கவலைப்படாதே தலைவா..நாங்க பார்த்துக்கறோம்..

அவிங்க ஆளுதான் பெரிய ஆக்டருன்னு ஊருல சொல்லிக்கிட்டு திரியுறாயிங்க தலைவா..உம்முன்னாடி அவிங்க நிக்க முடியுமா தலைவா..இப்பவே தோரணம், கட்அவுட்டுக்கு பால் ஊத்தறதுக்கு செலவுக்கு ரெடி பண்ணிறோம் தலைவா..ம்….கருமம் இந்த காசுதான்..அதவிடு..பத்துநாள் நைட் டூட்டி பார்த்தா சரியாகிடும்..என்ன காலையிலும் மூட்டைய தூக்கிட்டு, நைட்டுலயும் மூட்டைய தூக்குறதுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்..ஆனா அதைல்லாம் பார்க்க முடியுமா..நீ ஸ்டைலா வந்து முடியைக் கோதிவிட்டாலே, அந்த கஷ்டமெல்லாம் பஞ்சாய் பறந்து போயிடும்..

என் தெய்வமே..சின்னபுள்ளையிலிருந்து, உன்பேரைதான் தெய்வமே கையில கூட பச்சை குத்திவைச்சிருக்கேன்..ஒருநாளைக்கு என் கூட்டாளி நாக்குமேல பல்லைப் போட்டு “போடா உன் தலைவனை மறந்துருவ” ன்னு சொல்லிபுட்டான்..சுள்ளுனு கோவம் வந்துருச்சு..எடுத்தேன் பாரு, ஒரு ஆணி..எடுத்து “சூப்பர் ஸ்டார் வாழ்க” ன்னு கையிலயும் மாருலயும் கிறுக்கி புட்டேன்..கருமம் துருபுடிச்ச ஆணி போல..செப்டிக் ஆகி..ரெண்டுநாள் கவருமெண்டு ஆஸ்பத்திரியில படுத்து கிடந்தேன்..காய்ச்சல் வேற..கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில கக்கூஸு பக்கத்துல படுக்க வைச்சுட்டாயிங்க தலைவா..நாத்தம்..தாங்கலை..விடு தலைவா..நம்ம ஆட்சி வந்தப்புறம் மாத்திக்குவோம்..

அப்புறம் தலைவரே.உன்னை நேருல பார்த்தேன்பூ..அதுவும் மருதையில..எம்புட்டு ஸ்டைலா இருக்க நீயி..அதான் தலைவரே..10 வருசம் முன்னாடி ஷூட்டிங்குன்னு வந்தியே..மருத ஏர்போர்ட்டுல உள்ள விட மாட்டிங்குறாயிங்க..நாம் விடுவோமா..எந்தலைவன பார்க்காம எதுக்கு இந்த லைப்பு..சுவரேறி குதிச்சுப்புட்டோம்ல..என்ன..சுவத்துல பீங்கான் பதிச்சிருப்பாயிங்க போலிருக்கு..காலில குத்திருச்சு..அதெல்லாம் ஒரு வலியா தலைவா..உசுரே குடுப்போம் தலைவா..ரத்தம் ஒழுகுது..நான் துடைக்கலையே..”தலைவா…சூப்பர்ஸ்டார் ..வாழ்க..” ன்னு நீ வர்றப்ப கத்துனேன் தலைவா..நீதான் அப்படியே, பிளசர் காருல ஏறி போயிட்ட….ப்ச்..நீ என்ன பண்ணுவ..உனக்கு ஆயிரம் வேலை இருக்கும்..எனக்கு ஒன்னும் வருத்தம் இல்லை தலைவா..

தலைவா..ஆனா ஒன்னு..இந்த கட்சிக்காரயிங்க ஏமாத்திபுட்டாயிங்க..நீ சொல்லிப்புட்டேன்னு உசுரைக் கொடுத்து வேலை செஞ்சோம் தலைவா..ஒரு மாசமா வேலைக்கு போகலையே.. நீ அவிங்களை செயிக்க வையின்னு ஒரு வார்த்தை சொல்லிப்புட்டலே..அப்புறம் எப்படி தூங்குவோம்..என்ன வீட்டுலதான் அவளும், குழந்தையும் ரெண்டுவேளை பட்டினி..இருக்கட்டுமே தலைவா..உனக்கில்லாத உசிரு எதுக்கு இந்த மசிரு..அவ கூட வந்து சத்தம் போட்டா..குழந்தைக்கு பால் வாங்க காசு வேணுமாம்..விட்டேன் ஒரு அறை..அங்கிட்டு போயி விழுந்தா..ரெண்டு வேலை கஞ்சி சாப்பிடலைன்னா செத்தா போயிடுவோம்..என் தலைவனுக்காக வேலை பார்க்கறப்ப இதெல்லாம் ஒரு பொருட்டா தலைவா..

தலைவா..அப்புறம் நீ சினிமாவுக்கு வந்து 25 வருசம் ஆச்சுல..மதுரையில கூட விழா கொண்டாடுனாயிங்க..காலையில வந்துடோம்ல..என்ன எண்ரிடி பீஸு தான் ஜாஸ்தி..அப்புறம் ஸ்டிக்கரு, பனியன்னு கொடுத்தாயிங்க..ஆனாலும் அதுக்கெல்லாம் காசு வாங்கிட்டாயிங்க தலைவா..அன்னிக்கு பார்த்து கையில காசு வேற இல்லையா..நம்ம சுப்பிரமணிட்ட சொல்லி என் சைக்கிள வித்து காசு கொண்டு வர சொல்லிட்டேன்..இப்ப சைக்கிள் இல்லைன்னா குறைஞ்சா போகப்போறோம்..உன் ஸ்டிக்கரை நெஞ்சில குத்துனப்ப எப்படி இருந்துச்சு தெரியுமா..அப்படியே நீ என் நெஞ்சுக்குள போயி, உசிருல கலந்துட்ட தலைவா..இன்னும் இந்த இடம் சூடா இருக்கு பாரு..

தலைவா..ஊருக்குள்ளாற நிறைய பேரு பொறாமை புடிச்சு திரியிறாயிங்க தலிவா..நீயி..கலைஞர மூத்த தலைவருன்னு சொல்லிக்கிட்டே, அந்த அம்மா ஆட்சிக்கு வந்தவுடனே “தைரியலட்சுமின்னு” சொன்னில..அத கிண்டல் பண்ணுராயிங்க தலைவா..எனக்கு தெரியும்..அது சாணக்கியத்தனம்தானே..இத புரிஞ்சுக்காம..சரி விடு..நீ எது பண்ணுனாலும் அதில ஒரு அர்த்தம் இருக்கும்..

உன் கண்ணசவைக்கு காத்திருக்குறோம் தலைவா..எப்ப அரசியலுக்கு வர்ற..நீ முத்து படத்துலயே சொல்லிபுட்டயே..”நான் எப்ப வருவேன்..எப்படி வருவேன்….” புரிஞ்சிருச்சு தலைவா..இந்த ஒரு டயலாக்குகாகவே சினிபிரியா தியேட்டருல 100 நாள் ஓட்டிபுட்டோம்ல..சீக்கிரம் வா தலைவா..நீ எதுக்கும் கவலைப்படாதே தலைவா..நாங்க இருக்கோம்ல…கடைசி வரைக்கும் உசிரேயே கொடுப்போம்ல..உனக்குதான் தலைவா..எடுத்துக்கோ..பொண்டாட்டி, குழந்தைன்னு யாரும் வேண்டாம் தலைவா..நீ ஒருத்தன் போதும்..

அய்யோ தலைவா..நேரம் ஆகிப்போச்சு..எந்திரன் வேற வருது..கட் அவுட்டுக்கு பால் ஊத்தணும்..தோரணம் கட்டணும்..பேனர் வாங்கணும்..செலவு கொஞ்சம் இருக்கும்..ஒரு வாரம் எக்ஸ்டிரா டூட்டி பார்த்தோம்னா சம்பாதிரிச்சரலாம்..என்ன..மூட்டை தூக்குறதுல..இந்த முதுகுதான்..ப்ச்..பரவாயில்லை தலைவா..உன்னை பார்க்க சென்னை வந்தா மண்டபத்துக்குள்ளாற விட மாட்டுறாயிங்க..இந்த லெட்டர் பார்த்தவுடனே..உன்னோட போட்டா அனுப்பு..சாமி படத்த தூக்கிட்டு அந்த படத்தைதான் வைச்சிக்குவேன்..

அய்யயோ..பேச்சுவாக்குல ஒன்னை கேக்க மறந்துட்டேன்..

“அடுத்த படம் எப்ப தலைவா..”