Wednesday 31 March, 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார பயம்

யப்பா..நான் கூட சாதாரணமாக நினைத்து விட்டேன் பதிவுலகம் பற்றி. சங்கம் அமைப்பது தொடர்பாக எவ்வளவு கருத்துகள், மோதல்கள்…ஆனால் ஒன்று கூட ஆரோக்கியமானதாக இல்லை. நான் பதிவர் சந்திப்பு பற்றி பல கனவுகளுடன் சென்றேன். பல பதிவர்களை சந்திக்கலாம்.. உரையாடலாம்..கருத்து பரிமாறலாம்...ம்..ஹூம்..ஒன்று கூட நடக்கவில்லை, சில நண்பர்களை சந்தித்தது தவிர…அடுத்த பதிவர் சந்திப்புலயாவது(நடக்குமா???) எல்லா பதிவர்களுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, ஒரு ஆரோக்யமான நட்பு சூழலை உருவாக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. எழுத்தை மட்டும் வைத்து ஒருவரை எடை போடக்கூடாது. அவரிடம் பழுகும்போது மட்டுமே அவரைப்பற்றி தெரிய வரும். எழுத்துக்கும் நடத்தைக்கும் எவ்வளவு வித்தியாசம்.. இதில் சங்கம் பற்றிய சில பதிவுகளை படிக்கும்போது, இந்த பிரச்சனையில் சாதி, மதம் கலந்து விட்டது என தெரிகிறது. சாதி, மதம் கலந்த எந்த ஒரு நிகழ்வும் உருப்படாதது என்பது என் கருத்து. மீ த எஸ்கேப்பு சொல்லும்முன்பு ஒரு ஆலோசனைண்ணே... எனக்கு மொத்தம் 180 பாலோயர் இருக்கீங்க..நம்ம எல்லோரும் சேர்ந்து ஒரு சங்கம் அமைப்போமாண்ணே..பெயர் கூட “அவிங்க ராசா கொலைவெறிப் படை”.(எங்க ஓடுறீங்க..சங்ககத்துல ஜாயின் பண்ணினா ஒரு ஷாம்பு பாட்டில் இலவசமா தர்றோம்ணே....)

இந்த வார படம்

அங்காடித்தெரு பற்றி விமர்சனம் எழுதலாம் என்று நினைத்தால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. ஏறக்குறைய நூறு விமர்சன பதிவாவது வந்திருக்கும்..நான் என்ன புதிதாக எழுதுவது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இது போன்ற படங்கள் போற்றப்படவேண்டும். இல்லையேல், அடுத்த வருடத்திற்குள் பேரரசு மாஸ் ஹீரோ ஆகி விடுவார்..அப்புறம் நம்மதான் கஷ்டப்படணும். பொதுவாக சரவணா ஸ்டோர்ஸில் சர்வீஸ் நன்றாக இருக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் இந்தப் படம் பார்த்து விட்டு சென்றால் அவர்களை வேறு கோணத்தில் பார்ப்பீர்கள்..அப்படி பார்த்தால் இந்தப்படம் உங்களை ஏதோ விதத்தில் பாதித்திருக்கிறது என்று அர்த்தம். தமிழக அரசு இந்தப்படத்திற்கு விருது கொடுப்பதற்கு பதிலாக, எல்லாக் கடைகளிலும் ஒரு ரெய்ட் நடத்தி, ஊழியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று நடவடிக்கை எடுக்கலாம்.அதைத்தான் வசந்தபாலனும் விரும்புவார்..

இந்தவார சந்தேகம்

விஜய் டீ.வி ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பலபேர் நன்றாக ஆடினாலும், எப்போதுமே திவ்யதர்சினி(டி.டி), ஜெயலட்சுமி இவர்களே செலக்ட் ஆவதாக நண்பன் சொல்லுகிறான். அதுபோல மானாட மயிலாட நிகழ்ச்சியில் கூட சில பேர்களே செலக்ட் மாறி, மாறி செலக்ட் செய்யப்படுவதாக கேள்வி. என் கேள்வி என்னவென்றால், அப்ப பார்க்குறவியிங்க எல்லாரும் இளிச்சாவாயங்களா(வரப்போகும் பின்னூட்டம்..”அப்ப ஏன் பார்க்குற..??) நான் அளிக்கப்போகும் பதில்(பின்ன, அஜால், குஜால் நிகழ்ச்சிகளை ஜோதி தியேட்டரிலயா பார்க்கமுடியும்..) திரும்பி வரப்போகும் கேள்வி(அஜால் குஜால் படத்துல கதை, திரைக்கதை, டைரக்சனெல்லாம் ஆஸ்கார் ரேஞ்சுக்கு எதிர் பார்த்துட்டுதான் போவியா..)..நான் அளிக்கும் பதில்…….(…..)

இதற்கு பேர்தான் கள்ள மௌனமோ..??

இந்த வார பாடல்

கொஞ்சம் பழைய பாடல்தான்..சத்யம் படத்தில் “என் அன்பே” என்ற பாடல்..முடிந்தால் யூடியூப்பில் கேட்டு பாருங்கள். படமாக்கியவிதம், மற்றும் பாடியவர் குரல்(சாதனா சர்கம்??) அனைத்தும் அருமை. மற்றும் நாணயம் படத்தில் “நான் போகிறேன் மேலே மேலே..” ஜேம்ஸ் வசந்தன் இசையில் எஸ்.பி.பி மற்றும் சித்ரா கலக்கியிருப்பார்கள்.

எப்போதும் என் ஆல்டைம் பேவரைட், துள்ளுவதோ இளமையில் வரும் “வயது வா வா என்கிறது..” இந்தப் பாடலை தூங்குவதற்கு முன்பு கேட்டால் டிக்கெட் இல்லாமல் சொர்க்கம் நிச்சயம்..

இந்த வார சாப்பாட்டுக்கடை

கே.கே நகர் சிவன் பார்க் அருகில் இருக்கும் “சுடலை மாடன்” குடிசை ஹோட்டல்…இரண்டு இட்லியை வைத்து போதும், போதும் என்று கேட்கிற அளவுக்கு சாம்பார் ஊற்றுவார்கள் பாருங்கள்..சாம்பாருக்கு தொட்டுக் கொள்ளதான் இங்கு இட்லி..அவ்வளவு சுவை…சாம்பார் சட்னியில் கொஞ்சம் கூட கஞ்சத்தனம் கிடையாது..போனவாரம் சரவணபவனில் சாப்பிடும்போது, எக்ஸ்டா அப்பளம் கேட்டதறு 7 ரூபாய் பில் போட்டதாக ஞாபகம்..சரவணபவனில் கேசரி ஒரு பிளேட் வாங்கி பாருங்கள்..சரியாக 100 கிராம் நிறுத்து, அதையும் நாலு தடவை கரண்டியை வைத்து தட்டியே தருவார்கள்..

இந்த வாரம் படித்த மொக்கை கவிதை

என் மாமியார் வாந்தி எடுத்தாள்…

என் பொண்டாட்டி சாந்தி கிடைத்தாள்…

Saturday 27 March, 2010

பதிவர் சந்திப்பு – சங்கத்து ஆளை அடிச்சவன் எவண்டா..ஹோய் தல…

என்றைக்குமில்லாமல் இன்று சற்று படபடப்பாக இருந்தது. முதல் தடவையாக பதிவர் சந்திப்புக்கு போகிறோம்..அதுவும் பதிவர் சங்கம் அமைப்பது பற்றி டிஸ்கசன் வேற..என்ன பேசலாம்..ஏதாவது ஹோம் வொர்க் பண்ணனுமே..நம்மளுக்கு என்னைக்குமே வில்லன் வீட்டுக்கு வெளியே இல்லைண்ணே..உள்ளேதான்..இந்தா கூப்பிடுறாங்க பாருங்க…

“என்னங்க..அந்த சாம்பாரு…”

“அடியே..திரும்ப திரும்ப என் லைனில கிராஸ் பண்ணுற..வேண்டாம்..”

“அப்படி என்னதான் பண்ணுறீங்க..”

“இன்னைக்கு பதிவர் சந்திப்புல..அதுதான் தயார் பண்ணுறேன்.நாங்க “சென்னை இணைய எழுத்தாளர் சங்கம்” ன்னு ஆரம்பிக்க..”

“வாவ்,.,,இனிமேல் நீங்க எழுத்தாளரா..சூப்பருங்க..எழுத்தாளரு மனைவின்னு பெருமையா சொல்லிக்கலாம்..”

“அடியே பொறு..நாம அந்த அளவுக்கு வொர்த் இல்லை..பதிவரா இல்லை எழுத்தாளரான்னு பெயர் வைக்கலாமான்னு சொல்லி டிஸ்கசன் போய்கிட்டு இருக்கு..”

“ஏங்க..எழுத்தாளருன்னே இருக்கட்டும்..கொஞ்சம் பெருமையா இருக்கும்..”

“ஆஹா..எதுக்கு அடிவாங்கவா..”

“”சரிங்க..சங்கம் ஆரம்பிக்கப் போறீங்கள்ள..உங்களுக்கு என்ன பதவி..பொருளாளர் பதவி கிடைச்சுடும்ல..”

“அதுக்குதான் நிறைய போட்டி இருக்கும்..அநேகமா தேர்தல் நடக்கும் போல..”

“அய்யய்யோ..உங்களுக்கு நார்மலாகவே தமிழ்மணத்துலயோ, தமிழிஸ்லயோ 1 ஓட்டுதான் விழும்..”

“நம்மளுக்குன்னு ஒரு குரூப் இல்லாத்தது எவ்வளவு கஷ்டமா இருக்கு பாத்தியா..”

“ஏங்க..ஏதாவது காசு தள்ளி..”

“இல்ல..இது ஜனநாயக முறையில..”

“சரி..வெற்றியோட திரும்பி வாங்க..”

திலகமிட்டு அனுப்பினாள். 6.30 மணிக்கு பதிவர் சந்திப்புக்கு சென்றேன். அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. உண்மைத்தமிழன் அவர்கள் பேச ஆரம்பிக்கவே, கேபிள் சங்கர் அவர்கள் தொடர்ந்தார்..

அதுக்கப்பறம்தான் ஆரம்பித்ததுண்ணே..யாரு பேசுறத யாருமே கவனிக்கலை. குழு குழுவாக பேச ஆரம்பிச்சுட்டாங்க..பிரச்சனை என்னவென்றால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் ஆளுமை இல்லாததுதான். பதிவர் சந்திப்பை தமிழக காங்கிரஸோடு ஒப்பிடலாம்..எல்லோரும் தங்கள் கருத்தை சொன்னார்களே ஒழிய, முடிவு எடுக்காமலே சங்கத்தை கலைச்சுட்டாயிங்க..

இது போன்ற கூட்டத்திற்கு வரும்போது முடிவுகளோடு வரவேண்டுமென்று என் கருத்து. ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்டால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு “குழு ஆரம்பிக்கலாமா வேண்டாமா..” என்ற கருத்து விவாதம்தான் நடக்கும். குழுவிற்கு பெயர் இதுதான்(அல்லது 4 பெயர்களில் எது பெட்டர்), குழுவின் நோக்கம் இதுதான், ஏதாவது சேர்க்கணுமா..குழுத்தலைவரை எப்படி தேர்ந்தெடுக்கலாம்..என்று கட் அண்ட் ரைட்டாக கேட்டிருந்தால் இந்நேரம் ஒரு முடிவு கிடைத்திருக்கும். அதை விட்டு விட்டு குழு ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்று ஆலோசனை செய்தால் இன்னும் பத்து வருடம் வெயிட் பண்ணலாம்..

முதலில் குழு ஆரம்பிக்கலாம்..வருபவர்கள் வரட்டும். குழு அமைத்து இன்ன செய்தோம் என்று நிரூபிப்போம். அதைப் பார்த்து எல்லாரும் தானாகவே சேர்வார்கள். அப்படியே சேரவில்லையென்றாலும் உலகம் அழிந்து விடாது(அனானியா போட்டு கும்மிடாதிங்கப்பூ..)

பதிவர் சந்திப்போது நண்பர் இரட்டைவால், மற்றும் சுகுமாறன் அவர்களை சந்தித்தேன். பேச்சுக்களை சற்று சீரியசாக கவனித்ததால் சரியாக பேச முடியவில்லை. மன்னித்து விடுங்கள்..

உண்மையைச் சொல்லப்போனால் ஏண்டா போனோம் என்று இருந்தது. ஆனால் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட டீ.யை குடித்தபின்பு பிறவிப்பயன் அடைந்தேன். அப்படி ஒரு சுவை. நன்றி உண்மைத்தமிழன் அண்ணாச்சி. ஒன்று கண்டிப்பாக சொல்ல வேண்டும். கேபிள் சங்கர், உண்மைத்தமிழன், தண்டோரா அவர்களின் முயற்சி. சும்மா, கூட்டத்திற்கு வந்து நானும் இப்படி ஒரு பதிவு போடலாம். ஆனால் இதற்கான முயற்சியை எடுத்து, யார் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லி..ஹேட்ஸ் ஆப் சார்ஸ்..

அலுப்பாக வீடு வந்தேன். என் மனைவி இதற்காகவே காத்திருந்தாள் போலும்..

“என்னங்க..தமிழ் இணைய எழுத்தாளர்கள் சங்கமா..அல்லது தமிழ் இணைய பதிவர்கள் சங்கமா..”

“ம்…தமிழ் இணைய குழப்பவாதிகள் சங்கம்…”

யப்பா…..

என்னவென்று தெரியவில்லை. இந்த வாரம் எனக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இவ்வளவு நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இதுவரை நான் இருந்ததில்லை. இந்த வாரம் முழுவதும் எனக்கு வித்தியாசமான அனுபவங்களையும், கணங்களையும் கொடுத்திருக்கின்றன. நான் இவ்வளவு மகிழ்ச்சியாக ஒரு பதிவு இட்டதில்லை. காரணம் அப்பா, அம்மா..

இந்த வாரம் திங்களில், அம்மா, அப்பா சென்னைக்கு வந்திருந்தார்கள்..நான் இதுவரை பலமுறை அழைத்திருக்கிறேன். சென்னைக்கு வர என்றுமே அவர்கள் விரும்பியதில்லை. எப்போதும் இருமாப்பாக நிற்கும் அடுக்குமாடி குடியிருப்புகளும், ஏதோ சொத்தை திருட வந்தமாதிரி முறைத்து கதவை சாத்திக் கொள்ளும் அண்டை வீட்டுக்காரர்களும், எப்போதும் பரபரப்பாக காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல் திரியும் நகர மக்களும், எப்போதும் காது வழியே சென்று மூளை வரை கேட்கும் வாகன சத்தங்களும், “அய்யே..ஒத்திக்கப்பா..” என்று எந்த டிக்சனரியிலும் இடம்பெறாத சென்னை தமிழ் வார்த்தைகளும், அசின் கலரில் சென்றாலும், திரும்பும் போது என் கலருக்கும் மாற்றி விடும் வாகனப் புகையும், கேனில் அடைக்கப்பட்டு தவணைமுறையில் திறந்து விடப்படும் குடிதண்ணீரும், வேளச்சேரியிலிருந்து கிண்டிக்கு போக மனசாட்சியே இல்லாமல் ஆட்டோ டிரைவரால் கேட்கப்படும் நூறு ரூபாயும், “நாங்களும் பணம் வைச்சிருக்கோம்ல” என்று காண்பிப்பதற்காக வலுக்கட்டாயமாக சத்யம் தியேட்டரில் வாங்கப்படும் 40 ரூபாய் பப்ஸூம், “எக்ஸ்கீயூஸ்மீ ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ” என்று சோழவந்தான்காரனிடம் இளக்காரமாக கேட்கப்படும் ஆங்கிலமும் என் பெற்றோர்களுக்கு அன்னியமாகவே தெரிகின்றன. ஏதோ இன்னொரு கிரகத்தில் வாழ்வதாகவே உணர்கிறார்கள். இதற்காகவே எத்தனை முறை அழைத்தாலும் அவர்கள் சென்னைக்கு வருவதில்லை.

ஆனால் இந்த முறை தட்டிக் கழிக்க முடியவில்லை. காரணம் அப்பா. அப்பாவிற்கு கடந்த ஒரு வருடமாக காது கேட்பதில்லை. சிறிது சிறிதாக கேட்கும் திறன் மங்கிய காது, கடந்து ஒரு வருடமாக முழுவதும் செயல் இழந்தது. அப்பாவிற்கு புரியவைப்பதற்காகவே நாங்கள் சத்தமாக பேச பழகிக் கொண்டோம். சைகைகளையும் பயன்படுத்த ஆரம்பித்தோம். ஆனாலும் அவருக்கு இது ஒரு குறையாகவே பட்டது. இருவர் சாதரணமாகவே பேச ஆரம்பித்தாலே ஏதோ ரகசியம் பேசுவதாய் எண்ணிக் கவலைப்பட ஆரம்பித்தார்கள். சத்தமாய் பேசி, பேசி அலுத்துப் போனதாலோ என்னவோ, சில விஷயங்கள் அப்பாவிடம் சொல்லுவது தவிர்க்கப்பட்டது. பின்னால் தெரிய வரும்போது அப்பா மிகவும் கவலைப்பட்டார்கள்..”என்ன செவிடன்னு நினைச்சுக்கிட்டுதான இதெல்லாம் சொல்லலை” என்று வெளிப்படையாக கோபப்பட்டார்கள். ஒருமுறை நண்பர்களோடு வாக்கிங் செல்லும்போது பேசப்பட்ட விஷயத்தைப் பற்றி அப்பா விளக்கம்கேட்க “உனக்கு ஒன்னும் புரியாது..” என்று நண்பர்கள் கிண்டல் செய்ய, மிகவும் வருத்தப்பட்டு போனார்கள்.

இதற்கு மேல் கஷ்டப்படக்கூடாது என்று அப்பாவை உடனே கிளம்பி வரச்சொன்னேன். முன்னதாக மந்தவெளியில் உள்ள பிரபல இ.என்.டி மருத்துவரிடம் ஒரு மாதத்திற்கு முன்னரே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி விட்டேன்.. திட்டமிட்டபடி செவ்வாய்கிழமை மருத்துவரிடம் அப்பாவை அழைத்து சென்றேன். காதுகளைப் பரிசோதித்த மருத்துவர் சில டெஸ்ட்களை பரிந்துரை செய்தார். புதன் கிழமை டெஸ்ட் எடுக்கப்பட்டது..”வயதாகிவிட்டதால் இனி சர்ஜரி செய்ய வேண்டாம்” என்று காதுகேட்கும் மிஷின் வாங்க அறிவுரை செய்தார்கள். காது கேட்கும் மிஷின் வாங்க அடையாரில் உள்ள ஒரு இடத்திற்கு சென்றேன். அங்கு உள்ளவர், மருத்துவர் பரிந்துரைகளை சரிபார்த்துவிட்டு இரண்டு மிஷின்களை எடுத்து ஒலி அளவை சரி செய்தார். முடித்தபின்பு அப்பா காதில் மெதுவாக பொருத்தினார்.

அப்போது அப்பா முகத்தை கவனித்தேன். இதுவரை அப்பாவை அவ்வளவு சந்தோசமாக பார்த்ததில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பா என்னிடமும் முதலில் பேசிய வார்த்தை..”மண்ணாங்கட்டி..இது உருப்படுமா… பக்கத்து வீட்டுக்காரனைப் பாருடா..அவன் ******* வாங்கி குடி..” நான் படிக்க மறுத்து கிரிக்கெட் விளையாட செல்லும்போது கோபத்தில் கூறிய வார்த்தைகள். அன்றிலிருந்து அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லராக தெரிந்தார். அதுவும் கிரிக்கெட் ஒளிபரப்பாகும் சமயங்களில் டீ.வியைப் பூட்டி வைக்கும்போது அப்படியே எழுந்து அடிக்கலாமா என்று தோணியது. சிறுபிள்ளைத்தனமாக அதையும் முயற்சி செய்தேன். நண்பனோடு சேர்ந்து தெருமுனையில் ஒளிந்து கொண்டு அப்பாவை கல்லால் அடிப்பதாய் திட்டம். ஆனால் “வாத்தியார் அடிப்பாருடா” என்று கடைசி நிமிடத்தில் நண்பன் பின்வாங்க, திட்டம் முடியாமல் போனது. அம்மா, தியாகத்தின், அன்பின் அடையாளமாக இருந்திருக்கிறார்கள் என்றால் அப்பா எனக்கு எப்போதும் கண்டிப்பின் சின்னமாக இருந்திருக்கிறார்கள். ஏதாவது ஒரு சினிமாவிற்கு செல்லும்போது கூட ஒரு மாதத்திற்கு முன்னமே அனுமதி வாங்க வேண்டும். ஆனால் இவற்றுக்கெல்லாம் பலன் நான் பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தபோது தெரிந்தது. என்னை திண்டுக்கல்லில் ஒரு ஹாஸ்டலில் சேர்த்து வீட்டு அந்த பழைய தகர பெட்டியை தலையில் வைத்து ரோட்டில் நடக்கும்போதுதான் அப்பாவின் அன்பு தெரிந்தது. அம்மாவினுடைய அன்பு வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் அப்பாக்கள் செய்யும் தியாகங்கள் வெளியில் தெரிவதில்லை. அதெல்லாம் உணரத்தான் முடியும். அன்றுதான் நானும் உணர்ந்தேன். என்னதான் திட்டினாலும் அனைத்தும் என் நன்மைக்கே. என் முன்னேற்றத்துக்கே.நான் படிபடியாக வளர்வதைப் பார்த்து மறைவாக நின்று சந்தோசப்பட்ட ஜீவன். அதெற்கெல்லாம் மூலகாரணமாக இருந்து தன் உழைப்பை அர்ப்பணித்த ஜீவன். அப்பாவின் தியாகமெல்லாம் வெளியில் தெரிவதில்லை..

அப்பேர்பட்ட அப்பாவின் முகத்தில் அன்றுதான் நான் அவ்வளவு சந்தோசத்தைப் பார்க்கிறேன்.

“எனக்கு நல்லா கேட்குதுப்பா..”

“அப்பா..நான் பேசுறது.,.கடைக்காரர் பேசுறது..”

“எல்லாம் கேட்குதுப்பா..”

கடைக்காரர் முயற்சித்தார்..

“அய்யா..நான் தூரமா தள்ளி நின்னு கேள்வி கேக்குறேன். கேக்குதான்னு சொல்லணும்..அதுக்கேத்த மாதிரிதான் நான் மிஷின் ஒலி அளவை செட் பண்ண முடியும்..புரியிதா..”

அப்பா தலை ஆட்டினார்கள்..அவர் கேள்வி கேட்க ஆரம்பித்தார்..

“அய்யா..எந்த ஊரு..”

“சோழவந்தான்..”

“என்ன வேலை பார்க்குறீங்க..”

“ரிட்டையர்ட் வாத்தியார்..”

“இப்ப எங்க வந்திரிக்கீங்க..”

“சின்ன மகன் வீட்டுக்கு..”

“எப்படி கவனிச்சுக்கிறாங்க..”

“உசிரையே விடுறாங்க..”

“சந்தோசமாக இருக்கீங்களா..”

“இதுக்குமேல் எனக்கு என்ன வேணும்..”

கடைக்காரர் என்னைக் கூப்பிட்டு அப்பாவை ரோட்டோரம் அழைத்து சென்று ஒலி அளவுகளை சரிபார்க்க சொன்னார்கள். நானும் அழைத்து சென்றேன்..

“அப்பா..வெளியில சத்தம் எல்லாம் கேக்குதா..”

அப்பா குழந்தையாகிப்போனார்கள்..

“ஹை..ஆட்டோ சத்தம்..ஏதோ குழந்தை அழுகுதுப்பா..அப்புறம் ரேடியோவில ஏதோ பாட்டு போடுறாயிங்க….பஸ் ஹாரன்….யாரோ யாரையோ திட்டுறாயிங்க..”

ஐந்து நிமிடத்திற்கு குழந்தையாகிப்போனார்கள். அவர்களை அப்படியே விட்டு விட்டேன். அவர்களால் ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை. ஒரு வருடமாக உங்களை இருட்டறையில் விட்டு விட்டு வெளியே கொண்டு வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். நான்கு நாட்கள் பட்டினி போட்டு விட்டு, சாப்பாட்டை காட்டினால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது அப்பாவினுடைய சந்தோசம். ஐந்து நிமிடம் கழித்து கடைக்குள் சென்றோம்..கடைக்காரரிடம் விலையைக் கேட்டேன்..

“எவ்வளவுங்க..”

“ஓரு மிஷின் 30,000 ரூபாய்..இரண்டு மிஷின் சேர்த்து 60,000 ரூபாய்..”

அவ்வளவுதான் அப்பா முகம் இருண்டு போனது. இதுவரை இருந்த சந்தொசமெல்லாம் சுத்தமாக வடிந்து போனது. வெளிச்சத்திலிருந்து திரும்பவும் இருட்டிற்கு கொண்டு போனது போல் உணர்ந்தார்கள். என்னை தனியே அழைத்தார்கள்..

“ராசா..எனக்கு இந்த மிஷின் வேணான்டா..”

“ஏம்பா..”

“அறுவதாயிரம் சொல்லுறாயிங்க..அம்புட்டு காசா..நான் இருக்குறது எவ்வளவு நாளோ..இப்படியே கழிச்சிட்டு போறேண்டா..இம்புட்டு காசு வேணான்டா..”

நான் யோசிக்கவேயில்லை. அப்பா முகத்தில் நான் பார்த்த அந்த பத்து நிமிட சந்தோசத்திற்கு அறுபதாயிரம் என்ன கோடி ரூபாய் கொடுக்கலாம். ஒரு மாதத்தில் சம்பாதித்துவிடுவேன் இந்த காசை..ஆனால் அப்பா முகத்தில் சந்தோசத்தை…ஒன்றுமே பேசமால் உள்ளே சென்று என்னுடைய கிரடிட்கார்டை கொடுத்தேன் என் அப்பா எவ்வளவு சொல்லியும் கேட்காமல்.

வீடுவரைக்கும் சிறிது வருத்தத்தோடுதான் வந்தார்கள். வீடு வந்தவுடன் சகஜ நிலைக்கு வந்தார்கள். அம்மாவிடம் காது கேட்பதை பெருமையாக சொன்னார்கள்..”இனிமேல் எனக்கு தெரியாமல் நீ எதுவும் ரகசியம் பேச முடியாதே..” என்று குதுகலித்தார்கள். இரண்டு நாட்களாக அதிகம் சத்தம் கொடுக்கும் பொருட்களுக்கு அருகில் நின்றார்கள். இரண்டு நாட்களும் சொர்க்கத்தை உணர்ந்தார்கள்.

எல்லாம் முடித்துவிட்டு நேற்றுதான் முத்துநகர் எக்ஸ்பிரஸ் செல்லும் ரயிலில் ஏற்றுவதற்கு சென்றேன். அம்மா, அப்பாவை அமரச் சொல்லிவிட்டு உணவு, தண்ணீர் வாங்கி கொடுத்தேன்.

“நீ கிளம்புப்பா..டிரெயின் கிளம்பப்போகுது..”

“சரிங்கப்பா..பத்திரமா போயிட்டு வாங்கப்பா..”

கிளம்பினேன். டிரெயின் மெதுவாக நகர ஆரம்பித்தது. திடிரென்று “ராசா” என்று அப்பா கூப்பிடும் சத்தம். ரயிலிலிருந்து அவசரமாக இறங்கி என்னை நோக்கி வந்தார்கள்..வந்தவுடனே என் கையை இறுகப் பற்றினார்கள். எத்தனை முறை என்னை அடித்த கை இன்று அன்பாக…இவ்வளவு இறுக்கமாக என் அப்பா இதுவரை என்னைப் பிடித்ததில்லை..

“நன்றிப்பா..”

எதற்குமே கலங்காத அப்பா முகத்தில் இன்றுதான் முதல்முறையாக கண்ணீரைப் பார்க்கிறேன்..நான் ஒன்றும் பேசவில்லை..

அவசரம் அவசரமாக ரயிலில் ஏறினார்கள்.. ரயில் என்னை விட்டு அகல, ஒரு வாரமாக எனக்கு கிடைத்த அன்பும் என்னை விட்டு அகலுவதாக உணர்ந்தேன். சிறிது, சிறிதாக என்னை விட்டு அகன்ற அந்த ரயில் தூரத்தில் ஒரு புள்ளியாகிப்போனது. முழுவதும் அகலும்முன்பு ரயிலின் சைரன் சத்தம் மட்டும் பெரியதாக ஒருமுறை கேட்டது..

என் அப்பாவிற்கும் அந்த சத்தம் கேட்டிருக்கும்தானே…

Sunday 21 March, 2010

மிக்சர் ஜீஸ்

இந்த வாரப் பாடல்கள்

சில பாடல்களைக் கேட்கும்போது, உயிரையே உருக்கி விடும். பழைய இளையராஜா மற்றும் ஏ.ஆர் ரகுமானின் அனைத்து மெலடிகளும் இந்த ரகத்தை சேர்ந்தவையே. சமீபமாக திரைக்கு வரவிருக்கிற “அங்காடித் தெரு” படத்தில் வருகின்ற “உன் பேரை சொல்லும்போதே” மற்றும் “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” இந்த இரண்டு பாடல்களை ஏதும் தொல்லை இல்லாத நேரங்களில்(சுருக்கமாக சொன்னால் மனைவி ஊருக்கு போனபின்பு..ஹி..ஹி..) கண்களை மூடி கேட்டுப் பாருங்கள். ஏதோ இன்னொரு உலகத்திற்கு டிக்கெட் இல்லாமல் எடுத்து சென்று திரும்ப இந்த உலகத்திற்கே எடுத்து வரும். வசந்தபாலனின் இயல்பான “வெயில்” படத்திற்கு அடுத்து வரும் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறது. டிரெய்லரில் அடிக்கடி சிரிக்கும் “அஞ்சலி” கூட மனத்தை ஏதோ செய்கிறது(ஒரு நிமிசம்..மனைவி வர்றது மாதிரி இருக்கு..செக் பண்ணிக்கிறேன்..)

இந்த வார நன்றிகள்

நூறாவது பதிவு பற்றி நானே என்னை நக்கல் பண்ணினாலும் ஒரு விஷயத்தை மறக்க விரும்பவில்லை. உங்களின் வெளிப்படையான பின்னூட்டங்களும், தொடரும் ஆதரவு வருகைகளும். சில நண்பர்களின் பாராட்டு இமெயில்களை படிக்கும் போது கண்ணுல இருந்து தண்ணியா….(ஹலோ..ஹலோ..யார் அங்க ஓடுறது..நில்லுங்கப்பா..அக்கவுண்ட் நம்பர் எல்லாம் கொடுத்து ஹெல்ப் கேக்க மாட்டேன்..இருக்குற ஒரு லட்சத்தையும் எல்.சி.டி புகழ் ஸ்ரீஸ்ரீ பத்தியானந்த சுவாமிகளுக்கு கன்சல்ட்டிங்க் பீஸ் கொடுத்திட்டேன்..அம்மா..தாயே..தர்மம்..அய்யோ..சாரி..…)

இந்த வார நடிகர்

நடிகர் ஜீவா..தற்செயலாக கற்றது தமிழ் பார்க்க நேர்ந்தது..என்ன ஒரு நடிப்பு. தித்திக்குதே படத்தில் சின்னப்பையனாக அறிமுகமான இந்த நடிகனுக்குள் இப்படி ஒரு நடிப்பா.. எங்கே ஒளிந்து கிடந்தது. பின்னி எடுத்து விட்டார்..ஒவ்வொரு அசைவும் நடிப்பு. அதுவும் தன் காதலியை விபச்சார விடுதியில் பார்க்கும்போது நடிக்கும் நடிப்பு இருக்கிறதே..ப்ச்..படம் மனதை என்னமோ செய்தது. “நிஜமாத்தான் சொல்லுறியா” என்று பல இடங்களில் கதாநாயகி கேட்கும் இடங்கள்..ஜீவாவை “கச்சேரி” படத்தில் இன்று பார்க்கும்போது அவர்மேல் தப்பு இல்லை என்று தோணியது. கற்றது தமிழ் போன்ற படங்கள் எல்லாம் ஓடவில்லை என்றால் இப்படிதான் ஆகும்…

இந்த வார கொடுமை

காசு..காசு..,.காசு..சென்னை முழுவதும் காசு..காசு..காசு..இது இல்லையென்றால் நாய் கூட மதிக்கவில்லை. இந்த சென்னையில்..குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட அடமானம் வைக்கப்படும் சூழ்நிலை கூடிய சீக்கிரம் வரும். அப்போது எல்லோரும் கையில் 100, 500 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்துக் கொண்டு தெருக்களில் பைத்தியமாய் அலையப் போகிறோம், நான் உள்பட…எங்கு திரும்பினாலும் குறைந்த பட்ச நியாயம் கூட கிடைக்கவில்லை. தெருமுனையில் ஏறும் ஆட்டோவிலிருந்து, மல்டிபிளெக்ஸ் அபார்ட்மெண்ட் வரை…டூவீலரில் அடிபட்டு உயிர்க்கு போராடிக் கொண்டிருக்கும் நாய் மேல் சிறிதும் யோசிக்காமல் ஆட்டோ விட்டு ஏற்றிய ஆட்டோக்காரரிடம் கேட்டபோது “சவாரி வெயிட்டிங்பா..” என்று வந்த பதிலால் சிந்தித்தது

இந்த வார போனஸ் கொடுமை

வாயிள்ளா ஜீவன்களுகு கூட “ப்ளூ கிராஸ்” என்ற அமைப்பு உள்ளது. ஆனால் “அணு அளவும் பயமில்லை” யில் கலந்து கொள்ளும் வாய் உள்ள ஜீவன்களை பாதுகாக்க ஒரு அமைப்பு இல்லை என நினைக்கும்போது கஷ்டமாக உள்ளது. அவிங்களை எவ்வளவு கொடுமைப்படுத்த முடியுமோ, அவ்வளவு கொடுமைப்படுத்துகிறார்கள். பாவம் அந்த ஜீவன்களும் பாப்புலாரிட்டிக்காக “ப்ச்..ஆக்சுவலி திஸ் இஸ் வெரி டப் டாஸ்க்” என்ற போது வெறி ஏறியது. விஜய் டீ.விக்கு ஒரு வேண்டுகோள்..இன்னும் அவிங்ககிட்ட உசிரு மட்டும்தான் இருக்கிறது. அதையும் எடுத்துட்டீங்கன்னா டீ.ஆர்.பி ரேட்டிங்க் எங்கேயோ போயிடும்..

இந்த வார சாப்பாட்டுக்கடை

வேளச்சேரியில் காந்தி சாலை நடுவில் பேச்சிலர்களுக்காக உள்ள கையேந்திபவன் சொர்க்கம் “உதயம் டிபன் சென்டர்”. சென்னையில் இவ்வளவு தரமாகவும், விலை குறைவாகவும் சாப்பிட்டதில்லை. அதுவும் முட்டை உடையாமல் போட்டுத் தரப்படும் அந்த முட்டை தோசைக்கு தெரிவில் ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.

இந்த வார வேண்டுகோள்

எவ்வளவு அழகாக எழுதுகிறார்கள் நம் பதிவர்கள். சோகம், நகைச்சுவை, சந்தோசம், காதல், கவிதை, கதை, சினிமா என்று கலக்கும் பதிவர்கள் அனைவரும் சேர்ந்து ஏன் ஒரு வார இதழ் ஆரம்பிக்ககூடாது..

Friday 19 March, 2010

போடா கிறுக்குப் பயலே

எனக்கு அடிக்கடி தலைவலி வந்ததில்லை. கடைசியாக வேட்டைக்காரன் படம் பார்க்கும்போது வந்ததாக ஞாபகம். அதற்கு பிறகு நேற்றுதான் வந்தது. அதுவும் அலுவலகத்தில் அதிகம் வேலை இருக்கும்போது வந்ததால் நிரம்ப சிரமப்பட்டேன்..அதிகம் கோபப்பட்டேன். இயல்பாக நான் அதிகம் கோபப்படுவதில்லை. ஆனால் நேற்று இயல்பை மீறி கோபம் வந்தது..

நான் தினமும் அம்மாவிடம் பேசிவிடுவேன். அட்லீஸ்ட் “நல்லா இருக்கீங்களா” என்றாவது..நான் அவர்களுக்கு கொடுக்க முடிந்த சந்தோசம் இது ஒன்று மட்டும்தான். ஒன்றைக் கவனித்திருக்கிறேன். என்னோடு பேசும்போது மட்டும் அம்மா மிகவும் சந்தோசமாய் இருக்கிறார்கள். சந்தோசத்தின் வெளிப்பாடு அந்த குரலிலேயே தெரியும்..”நல்லா இருக்கியாப்பா” என்ற குரலில் உள்ள உற்சாகம் “சரி..வைச்சிடுறேன்பா” என்னும்போது சுத்தமாக வடிந்து விடும். தாய்ப்பாசம்..

யோசித்துப் பார்த்தால், நமக்கு பல வழிகள் உண்டு நம்மை சந்தோசப்படுத்துவதற்கு. சினிமாவிற்கு செல்லலாம், நண்பர்களோடு அரட்டை அடிக்கலாம், பதிவு எழுதலாம்..ஆனால் என் அம்மாவிற்கு உள்ள ஒரே சந்தோசம் என்னோடு பேசுவது மட்டும்தான். யோசித்துப் பாருங்கள்..வாழ்க்கையின் விளிம்பில் இருப்பவர்களுக்கு எது சந்தோசமாக இருக்கும்..பணம், கார், பங்களா..காஸ்ட்லியான உடை, வெரைட்டியான உணவு….ம்..ஹூம்..அன்பு, பாசம்..என் மகன் உள்ளான்…சந்தோசமாக உள்ளான்..என்னை மாதம் ஒருமுறை பார்க்க வருவான்..இந்த நினைவுகளோடு மட்டுமே என் அம்மா வாழ்கிறார்கள்..

மாதம் ஒருமுறை என் அம்மாவைப் பார்க்க போகும் போது அவர்கள் முகத்தில் சந்தோசத்தைப் பார்க்க வேண்டுமே..கோடி கொடுத்தாலும் அதை எங்கும் வாங்க முடியாது..என்னைப் பெருமையாக பக்கத்து வீட்டிற்கு கூட்டி செல்வார்கள்..”என் பையன் சென்னையிலிருந்து வந்திருக்கான்..” என்று சொல்லும்போது அவர்கள் முகத்தில் பெருமிதத்தை பார்க்க வேண்டுமே..உண்மையாக சொல்லுகிறேன்..நீங்கள் அம்மாவிற்கு கோடி, கோடியாக கொட்டி கொடுத்தாலும் பிடிக்காது..இந்த மாதிரி சிறு, சிறு பெருமிதங்களே அவர்களுக்கு கோடிகள்..

இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது, எனக்கு வந்த மஞ்சள் காமாலை..ஆளை அடித்துப் போட்டுவிட்டது..என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. ஏறக்குறைய விளிம்பில் நிற்கிறேன்..என் அம்மா மிகவும் எடை குறைவுதான்..ஆனாலும் என்னை தூக்கி கொண்டு ஓடினார்கள் பெரியாஸ்பத்திரிக்கு…அப்போதெல்லாம் எங்கே எமர்ஜென்சி கவனிப்புகள்..என்னை ஒரு ஓரமாக மருத்துவமனையில் போட்டுவிட்டு “டாக்டர் வந்து பார்ப்பார்..” என்ற போது என் அம்மா அழுத அழுகை இன்னும் நினைவுக்கு வருகிறது..35 வயதே ஆன டாகடரின் கால்களை, 50 வயதான அம்மா பிடித்து அழுகும்போது உங்களுக்கு எப்படி இருக்கும். என்னால் அதெல்லாம் மௌன சாட்சியாக பார்க்க மட்டும்தான் முடிந்தது,.

ஒரு வாரமாக அம்மாவிற்கு சொட்டு தூக்கமில்லை. அடிக்கடி கவலையுடன் குளுக்கோஸ் பாட்டிலைப் பார்ப்பார்கள்..சிலநேரம் அவசரம், அவசரமாக ஓடிப்போய் நர்ஸை கூட்டி வருவார்கள் பல திட்டுகளை வாங்கிக் கொண்டும்..அத்தனையும் தாய்ப்பாசம்..மாசு கலக்காத பாசம்.. என்னால் எழக்கூட முடியவில்லை..உண்மையைச் சொல்லப்போனால் ஏறக்குறைய அசைவற்றுதான் கிடந்தேன்.. என் அசைவாய் அம்மாதான் இருந்தார்கள், எனக்கு ஊட்டி விடுவது முதற்கொண்டு, கால் கழுவுவது வரை…யார் செய்வார்..நண்பர்கள்..ம்..ஹூம்..சொந்தக்காரர்கள்..ம்..ஹீம்..அம்மா..அம்மா மட்டுமே..நான் எப்போதும் அம்மாவை பார்க்கும்போதெல்லாம் அணைத்துக் கொள்வேன்…அப்படி அணைக்கும்போதெல்லாம் நான் உணர்வது சூடு..அம்மாவின் கருவறையிலிருக்கும்போது நான் உணர்ந்த சூடு..என் நெஞ்சுக் கூட்டில் கடைசி வரையில் இருக்கும்..

இப்படிப்பட்ட அம்மாதான் நேற்று எனக்கு வழக்கம்போல் கால் செய்தார்கள்..மிகவும் பரபரப்பாக மீட்டிங்கில் இருந்தேன்.சற்று தலைவலி வேறு..அம்மா பெயரைப் பார்த்தவுடன் சூழ்நிலை காரணமாக கட் செய்தேன்.. மீட்டிங்கில் பேச ஆரம்பித்தவுடன் திரும்பவும் கால்..அம்மா..எல்லாரும் ஒரு மாதிரியாய் பார்க்கவே திரும்பவும் கட் பண்ண வேண்டிய சூழ்நிலை. திரும்பவும் கால்.இந்த முறை கோபம் வந்தது..

“அம்மா..மீட்டிங்ல..”
“தம்பி ராசா..”
“அப்புறம் கூப்பிடுறேன்..”
“இல்லடா..”
“யம்மா..ஒரு தடவை சொன்னா புரியாது..இப்ப வைக்கிறீங்களா..இல்லையா..”

எதிர்முனையில் ஒரு சத்தம் இல்லை..கட் செய்தார்கள்..
நான் இவ்வளவு கோபமாக பேசியதில்லை..மீட்டிங்க் அவசரம், தலைவலி..எல்லாம் சேர்த்து வார்த்தைகளாக வெடித்தன..மீட்டிங்க் முடிந்தது..வேலை காரணமாக எல்லாவற்றையும் மறந்து போனேன்….தலைவலியுடன் வீடு சென்றவன் தூங்கிப் போனேன்..

மறுமுறை எழுந்து பிரஷ் செய்யலாம் என்று கிளம்பிய போதுதான் அம்மா புகைப்படத்தைப் பார்த்தேன்..கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்து கொண்டிருந்தார்கள்..கண்கள் என்னையே பார்ப்பது போல் இருந்தது..முகம் “நல்லா இருக்கியாப்பா” என்று கேட்பது போல் இருந்தது..என்ன காரியம் செய்தேன் நேற்று..இப்போதுதான் நினைவிற்கு வந்தது..அவசரம் அவசர்மாக கால் செய்தேன்..முதல் அழைப்பிலேயே எடுத்து விட்டார்கள்..காத்திரிந்திருப்பார்கள் போல..

“அம்மா..”
“தம்பிபா..எப்படி இருக்கப்பா..”
“நல்லா இருக்கேன்மா..”

என்னால் பேசமுடியவில்லை..

“சாரிம்மா..நேத்து ஒரு அவசர மீட்டிங்க..ஆமா..எதுக்கு கால் செஞ்சீங்க..”

“நேத்து உனக்கு தலைவலியாலம்பா..மருமக சொன்னா..அதை விசாரிக்கத்தான் பண்ணினே..இப்ப எப்படி இருக்கு..மாத்திரை போட்டியா..டாக்டரைப் போய்….”

இதற்கு மேல் என்னால் கவனிக்க முடியவில்லை..என்னை யாரோ காரி உமிழ்வது போல இருந்தது..எனக்கு எப்போதுமே பிடிக்காத கண்ணீர் என்னை அறியாமல் என் கண்களில்..

“அம்மா…”

“என்னப்பா..”

“சாரிம்மா..நேத்து ஒரு மாதிரி அவசரத்துல உங்களை கோவமா..”

“ஏ..இதுக்கென்னப்பா..நீ மீட்டிங்குல இருக்குறப்ப நான் பேசியிருக்க கூடாது..தம்பி..இதனால உனக்கு எதுவும் கெட்ட பே வரலையில்ல..”

“இல்லைம்மா..சாரிம்மா..மன்னிச்சிடுங்க..”

“போடா கிறுக்குப் பயலே..”

Thursday 18 March, 2010

வாழத்தான் பிடிக்கிறது


இப்பொழுதெல்லாம் எழுதப் பிடிப்பதில்லை…

வாழத்தான் பிடிக்கிறது…..

Tuesday 16 March, 2010

டீக்கடை பெஞ்சு

உலகத்தோட அறிவு களஞ்சியம் ஒவ்வொரு தெருவில் இருக்கும் டீக்கடை பெஞ்சுன்னு சொல்லலாம்ணே..அவ்வளவு அறிவு கொட்டிக் கிடக்கும். நீங்க ஐ.ஏ.எஸ் எழுதப் போறீங்களா..டிரெயினிங்க் சென்டர் எல்லாம் போக வேண்டியதில்லை. பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு போய் 1 மாசம் உக்காருங்க..சுத்தமாயிடுவீங்க..அதாவது அவ்வளவு ஞானம் கிடைக்கும்னு சொல்ல வந்தேன். ஒபாமாவிலிருந்து பக்கத்து தெருவில் ஓடிப்போன பாமா வரைக்கும் தெள்ள தெளிவா அலசுவாயிங்க, என்.டி.டிவி செய்திகள் மாதிரி. நீங்க போய் பக்கத்தில் போய் உக்கார்ந்து சுவாராசியமா கவனிச்சாலும் சூதானமா இருக்கணும். இல்லைன்னா ஒரு மாச பில் பாக்கி 92 ரூபாயை உங்க தலையில் கட்டிருவாயிங்க..சிலநேரம் பதிவுலகம் பத்தியெல்லாம் பேசுறாயிங்கன்னா பாத்துக்கங்களேன்..

இப்படித்தான் போன நேத்து வீட்டுல கேஸ் தீர்ந்து போச்சு. சரி பக்கத்து டீக்கடைக்கு போய் ஒரு டீ சாப்பிடுவோமேன்னு உக்கார்ந்தேன்..என்னமா அலும்ப கொடுக்குறாயிங்க..ஒரு பேப்பர் படிக்க விடமாட்டிறாயிங்கண்ணே..பக்கத்தில இருக்குறவன் அப்பதான் ஜூ.வி வாங்கி படிச்சுக்கிட்டிருந்தான்..அதுல பிரபல(!!!???) பெரியாரிஸ்ட் சாருவின் பேட்டி என்று இருந்தது..ரெண்டு பேரு பேசுறாயிங்க….

“மச்சான்..பெரியாரிஸ்டுன்னா இன்னாடா..”

“தெரியலையேடா…”

“அது யாருடா சாரு நிவேதா..”

எனக்கு வந்த கோவத்துக்கு அளவே இல்லைண்ணே..தினமும் ஒரு லட்சம் வாசகர்கள் படிக்கும் உளக..சரி..உலக எழுத்தாளரைப் பத்தி இப்படி சொன்னா கோவம் வராதாண்ணே..பொங்கி எழுந்திட்டேண்ணே..

“சார்..சாரு நிவேதான்னா பிரபல எழுத்தாளருங்க..ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ஹிட்ஸ்..”

“எது..கொசுவுக்கு அடிப்பாயிங்களே..அந்த ஹிட்ஸா..”

“அய்யோ..இல்லைங்க..அது வந்து இன்டெர்நெட் ஹிட்ஸ்ங்க..”

“இன்டெர்நெட்ல எதுக்குங்க ஹிட்ஸ் அடிகிறாயிங்க..”

அப்பவே தெரிஞ்சு போச்சுண்ணே..சட்டுபுட்டுன்னு காபியை குடிச்சுட்டு இடத்தை காலி பண்றதுதான் நல்லதுன்னு. இந்த காபி தண்ணியை வேற சீக்கிரம் கொடுக்க மாட்டிங்குறாயிங்க..ஒருத்தன் திரும்பவும் என் வாயை கிண்டினான்..

“எதுக்குங்க..அவரைப் போயி பெரியாரிஸ்ட்ன்னு சொல்லுறாயிங்க..”

“தெரியலைண்ணே..அவருதான் சாமியார் பத்தி பக்கம் பக்கமா விளம்பரம் பண்ணினாரு..ஒருவேளை அதுக்கா இருக்குமோ..”

“சாமியார் பத்தி விளம்பரம்னா..அப்புறம் எப்படி பெரியாரிஸ்ட்..”

“யோவ்..ஆள விடுங்கயா..வேணும்னா நீயும் ஏதாவது சாமியார் மடத்துல போய் சிங்கி அடி..உனக்கும் பெரியாஸ்ட் கொடுப்பாயிங்க...டீக்கடை அண்ணே..எனக்கு எப்ப டீ வரும்..”

எரிச்சலோடு கேட்டேன்..அடுத்த நியூஸுக்கு தாவிட்டாயிங்கண்ணே..

“ஆறு மணிக்கு மேல் நடப்பதையெல்லாம் நடிகர் சங்கம் கண்காணிக்க முடியாது..” சரத்குமார் அறிவிப்பு..

“குமாரு..ஏண்டா புவனேஸ்வரி மேட்டருல மட்டும் பாய்ஞ்சு வந்து கண்டனம் சொன்னாயிங்க..அது மட்டும் எப்படிடா..”

“ஒருவேளை அது ஆறு மணிக்கு உள்ள நடந்துருக்கும்போலயே..ஹி..ஹி..”

ஆஹா..உசிருக்கு உலை வச்சிருவாயிங்க போலிருக்கேன்னு நைசா இடத்தை காலி பண்ண ஆரம்பிச்சேன்..

“ராசா..ராசா..நில்லுங்க..டீயை சாப்பிட்டு போங்க..”

“இல்லை..வீட்டுல கொஞ்சம் வேலையிருக்கு..”

“பரவாயில்லை உக்காருங்க..எப்பவாவதுதான் இங்க வர்றீங்க.”

எனக்கு ஏழரை நாட்டு சனி அன்னைக்கு ஏழுமணிக்கெல்லாம் ஸ்டார்ட் ஆயிடுச்சுண்ணே..

“நான் ஒரு சமுகசேவகன்..ரஞ்சிதாவுடன் இருந்த நிமிடங்களில் பிரக்ஞையன்றி இருந்தேன்..” சுவாமி நித்தியானந்தா..

"ஏண்ணே..குமாரு...அது என்னண்ணே பிரக்ஞையன்றி..அப்படின்னா..”

“ஹி..ஹி..சொல்ல கூச்சமா இருக்குடா..”

அடப்பாவிங்களா..காலங்காத்தாலயே செக்ஸ் சி.டி பத்தி பேசுறாயிங்களேன்னு “நீங்களெல்லாம் யோக்கியமானவர்களான்னு” உண்மைத்தமிழன் மாதிரி கேக்கலாமுன்னுதான் பார்த்தேன்..ஆனால் அடுத்த பக்கத்தில் போட்டிருந்த ராஜலீலை விளம்பரம் என்னை நிலைதடுமாறவைத்தது..

கடைசியா நான் கேட்ட டீ வந்தது. அத டீன்னு சொன்னா டீயைக் கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறதால டிக்காசன் தண்ணி என்று சொல்லலாம்..வாயில் வைத்து ஒரு மடக்கு கூட குடிக்கல..அதுக்குள்ளாற ஒருத்தன் ஆரம்பிச்சான்..

“ராசா அண்ணே..நீங்க பதிவுலகத்திலதான்னே இருக்கீங்க….”

“ஆமா..”

“நீங்க..எந்த குரூப்பு..**** குரூப்பா இல்லாட்டி ****** குரூப்பா..”

“நான் ஓ பாஸிட்டிவ் குரூப்பு..”

“இல்லைண்ணே..யாருக்கு சப்போர்ட்டு..”

“யோவ்..நாங்க என்னா கட்சியா நடத்துறோம்..குரூப்பா இருக்குறதுக்கு.நாங்க எவ்வளவு ஒற்றுமையா இருக்கோம் தெரியுமா...”

“இல்லைண்ணே..சும்மா தெரிஞ்சுக்குறதுக்குதான்…ஆமா..உங்களையாண்ணே மூக்குல குத்துனாயிங்க..”

அடப்பாவிகளா..ஒரு டீ குடிக்க வந்தது தப்புங்களாயா…

Sunday 7 March, 2010

ஆத்தா..நான் பிரபல பதிவர் ஆயிட்டேன்….

எனக்கே தெரியலைண்ணே..நான் எழுதிய போன பதிவு 100 வது பதிவு போல...நான் இதையெல்லாம் எண்ணுறதில்லை. நண்பன் தான் சொன்னான். அவன் சொன்னவுடனே என் மனம் இறக்கை கட்டியது போல் மகிழ்ச்சியால் துள்ளியது..”ஆஹா..நம்மளும் பிரபல பதிவர் ஆகிட்டோம்..” வீட்டு மொட்டை மாடியில் ஏறி நின்று “நான் பிரபல பதிவர் ஆகிட்டேன்” என்று வானத்திற்கே கேட்கும்படி சொல்ல வேண்டும் போல் இருந்தது..ஆனால் தெருவில் போகும் ஜிம்மி, டாமி போன்ற நாய்கள் என்னைப் பார்த்து முறைக்கும் என்பதால் ஆசையை அடக்கிக் கொண்டேன். சரி பிரபல பதிவர் ஆனதின் முதல் அடையாளமாக “இது 101 வது பதிவு” என்று பதிவு எழுதாவிட்டால் பிரபல பதிவர் வரிசையில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அவசரம் அவசரமாக பதிவு எழுத ஆரம்பித்தேன்..பலவித சிந்தனைகள் ஓட ஆரம்பித்தன..ம்..எப்படி எழுதலாம்..”என்னையும் மனிதனாய் நினைத்து 100 பதிவுகளைப் படித்து..”..சரி இல்லையே..”இது என்னுடைய 101 வது பதிவு..உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்றே..” ன்னு கொஞ்சம் பீலிங்க்ஸா எழுதானாமுன்னு நினைத்தால் கிடைக்கிற நாலு ஓட்டும் போயிடுமோன்னு பயம் வேற..இப்படி பல எண்ண ஓட்டங்களுடன் எழுத ஆரம்பித்த போதுதான் அதை கலைக்கும் நோக்கத்துடன் ஒரு குரல் கேட்டது..

“என்ன பண்ணுறீங்க..அடுப்புல சுடுதண்ணீ வைச்சிருக்கேன்..கொஞ்சம் ஸ்டவ்வை ஆப் பண்ணிறீங்களா..”

எனக்கு பயங்கர கடுப்புண்ணே..ஒரு பிரபல பதிவருன்னு மரியாதை வேண்டாம்..கோபம் வந்தது பாருங்க..அப்படியே எந்திரிச்சு போய் ஸ்டவ்வை ஆப் பண்ணிட்டேன்..

“ஏண்டி..நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்..இப்படி டிஸ்டர்ப் பண்ணுறீயே..”

“ஏன்..ஒபாமாவோட ஏதும் யாஹூ சாட் பண்ணுறீங்களா..”

உலகத்துலயே கோவாலுக்கு அடுத்து நக்கல் புடிச்சவ என் வீட்டுக்காரிதாண்ணே..கேர்புல்லா கேண்டில் பண்ணனும்..

“என்ன நக்கலா..நான் நேத்துதான் பிரபல பதிவர் ஆனேன்..100 பதிவு எழுதியாச்சு..சரி படிக்கிறவியிங்களுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு போலாமேன்னு ஒரு பதிவு எழுத ஆரம்பிச்சா..”

“ஆஹா..ஆரம்பிச்சிட்டீங்களா உங்க அலும்ப….இது என்னுடைய 100 வது பதிவு..”100 பதிவையும் படிச்ச அனைவருக்கும்” ன்னு சொல்லி ஆரம்பிச்சிருப்பீங்களே..”

“ஆமாண்டி..அதுதானே குல வழக்கம்..”

“முதல்ல உங்களை யாரு பிரபல பதிவருன்னு சொன்னா..:”

எனக்கு பயமாப் போச்சுண்ணே..ஆஹா..நான்தான் தப்பா நினைச்சுட்டனோ..

“என்னடி இப்படி சொல்லிப்புட்டே..100 பதிவு எழுதிப்புட்டேன்..”

“அதனால..பக்கத்து வீட்டு பாட்டி கூட நூறு தடவ ஸ்ரீராமஜெயம் எழுதுது..அது பிரபல பதிவரா..”

எனக்கு கடுப்பா வந்திருச்சுண்ணே..

“அடியே..என்னையே கலாயிக்கிறயா..”

“முதல்ல நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க..நீங்க பிரபல பதிவருன்னு ஒத்துக்கிறேன்..”

“கேளு..”

“எவ்வளவு ஹிட்ஸ் வாங்கிருக்கீங்க..”

“ஒரு 82,000”

“இதெல்லாம் ஒரு ஹிட்ஸா..ஒரு பத்துலட்சம் ஹிட்ஸாவது..”

“அதுதாண்டி தேடிக்கிட்டு இருக்கேன்..ஏண்டி ஹிட்கவுண்டருல எப்படி 10 லட்சம் செட் பண்ணுறதுன்னு உனக்கு தெரியுமா..”

“எனக்கு அலாரம்தான் செட் பண்ண தெரியும்”

..ஆஹாங்க்..நான் அலெக்ஸா ரேட்டிங்கல..”

“யாருங்க அந்த அலெக்ஸா..எனக்கு தெரியாம..”

“போடிங்க..உன் ஜென்ரல் நாலேஜ்ல தீயைப் பொருத்தி வைக்க..அடுத்த கேள்வி கேளு..”

“ஒரு நாளைக்கு உங்கப் பதிவைப் பாராட்டி எத்தனை இமெயில் வருது..”

“எங்கிட்டு..எனக்கு வந்த ஒரே இமெயில் ”வெல்கம் டூ ஜீமெயில்” தான்…..”

“சரி..அட்லீஸ்ட் நீங்களாவது “எனக்கு வரும் வாசகர் கடிதம்” ன்னு ஒரு பதிவு போட்டிருக்கீங்களா..”

“இல்லையே..”

“சரி..யாரையாவது கன்னாபின்னான்னு திட்டி பதிவு போட்டிருக்கீங்களா..அவிங்களாவது உங்களை திட்டிருக்காயிங்களா..”

“இல்லையே..அதுக்குதான் கோவாலை பதிவுலகத்துல ஜாயின் பண்ண சொல்லியிருக்கேன்..இந்த வாரம் அவன் என்னை திட்டுவான்..அடுத்த வாரம் நான் அவனைத் திட்டுவேன்..”

“செல்லாது..செல்லாது..சரி ஏதாவது கேள்வி பதில் பகுதி ஆரம்பிச்சிருக்கீங்களா..”

“ஒரு தடவை ஆரம்பிச்சேன்..ஒரு பயபுள்ள கேள்வி எழுதல..அப்புறம் நானே ஒரு பத்து கேள்வி கேட்டு பின்னுட்டம் அனுப்பினேன்..அதிலயும் சின்ன பிரச்சனை..பழக்க தோசத்துல கேள்வியை கேட்டுபுட்டு “இப்படிக்கு அவிங்க ராசா” ன்னு எழுதிப்புட்டேன்..”

“நீங்கதான் கடலைப் பருப்பு வாங்கியாரச் சொன்னா துவரம் பருப்பு வாங்குற ஆளாச்சே…சரி அட்லீஸ்ட் கவிதைகள், கதைகள்..”

“எழுத வராதே..அப்படியும் டிரை பண்ணினேன்.. இந்த கவிதையை கேட்டு நீயே சொல்லு…

“அடியே ரோஸூ,

நீதாண்டி என் ஜூஸூ..

உங்கப்பன் மொட்டை பாஸூ..

உன்னை காதலிச்சா போடுவாண்டி கேஸூ..

ஆந்திரா மெஸ்ஸுல போடுவாயிங்க முட்டை பொடிமாஸூ..”

நீ இல்லாம என் வாழ்க்கை லாஸூ..

பக்கத்து வீட்டுக்காரன் பேரு தாஸூ..

அடியே ரோஸூ,

நீதாண்டி என் ஜூஸூ..”

“எப்படி..என் கவிதை..”

“போயா லூஸூ..”

“அடியே..”

“அய்யோ சாரிங்க.ஒரு புளோவுல வந்திருச்சு..சரி..அதை விடுங்க..ஒருநாளைக்கு உங்க பதிவை பாராட்டி எத்தனை போன் கால் வருது....”

“ஒரே ஒரு கால் தான்..அதுவும் வோடபோன்ல இருந்து சீக்கிரம் டியூவைக் கட்டுங்கன்னு சொல்லி..

“இப்படி ஒரு தகுதியும் இல்லாத நீங்க எப்படிங்க பிரபல பதிவர்ன்னு சொல்லிக்கிறீங்க.”

எனக்கு அழுகை, அழுகையா வந்திரிச்சுண்ணே..

“அடியே..நீ என்ன சொன்னாலும் நான் பிரபல பதிவர்தாண்டி”

“எப்படி சொல்லுறீங்க..”

“இப்படி பிரபல பதிவர் பற்றி கிண்டல் பண்ணி ஒரு பதிவு எழுதிட்டோம்ல..”

“போயாங்க..சரி..ஒன்னே ஒன்னு செய்யுங்க..நீங்க பிரபல பதிவர்ன்னு ஒத்துக்குறேன்..பக்கத்து கடைல போயி “நான் பிரபல பதிவர்ன்னு” சொல்லி ஒரு டீ கடனா குடிச்சுட்டு வாங்க பார்ப்போம்..”

சரி, டிரை பண்ணிதான் பார்ப்போமேன்னு போனா..உங்க வீட்டு , எங்க வீட்டு கெட்ட வார்த்தை இல்லைண்ணே..அவ்வளவு கெட்ட வார்த்தை..அதுவும் பத்தாம சுடுதண்ணியை வேற மேல ஊத்தி விட்டுட்டாருண்ணே..

ஏண்ணே..நான் பிரபல பதிவர் ஆக முடியாதாண்ணே…

Thursday 4 March, 2010

நித்தியானந்த சுவாமிகளுடன் பதிவர்கள் சந்திப்பு

(சிரிக்க மட்டும்தான்..மனசுல வைச்சிக்கிட்டு அடுத்த பதிவர் சந்திப்புக்கு வர்றப்ப வன்முறையை கையில் எடுக்க கூடாது…சொல்லிப்புட்டேன்..)

ஊடகங்களில் நித்தியானந்த சுவாமிகள் கிழிபடுவதால், தன் நிலையை விளக்க பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கிறார். பதிவர்கள் அனைவரும் ஆஜராக நித்தியானந்த சுவாமிக்கு மிக்க சந்தோசம்..

நித்தி : பெரியோர்களே..உங்களை நான் ஏன் அழைத்தேன் என்றால்..

கேபிள் சங்கர் : யோவ்..யாருய்யா பெரியோர்கள்..நாங்க எல்லாம் யூத்து தெரிஞ்சுக்கோ..

நித்தி : ஓ..கேபிள் சங்கரா..வீட்டில் பேரன் பேத்திகள் நலமாக உள்ளனரா..

(கேபிள் சங்கர் கடுப்பாக எல்லோரும் கூல்டவுன் செய்கிறார்கள்)

கேபிள் சங்கர் : அவரைக் கண்டியுங்கப்பா..இப்பதான் 27 வயது பிறந்த நாள் கொண்டாடி இருக்கேன்..என்னைப் போய் இப்படி சொல்லுறாரு...நீங்க லெமன் ட்ரீ, டக்கிலா புக் படிச்சீங்களா..

நித்தியானந்த சுவாமிகள் காதில் சக்கீலா என்று விழ முகம் மலருகிறது

நித்தி : சக்கிலாவா..எங்க..கதவைத் திற....

ஜாக்கி சேகர் : ஆமா..கதவைத்திற..சக்கீலா வரட்டும்..இப்ப்படித்தான் கதவை ரொம்ப ஓவரா தொறந்து வைச்சிட்டீங்களோ..கேமிரா வந்திருச்சு..

நித்தி : இல்லை மானிடா..தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது..மங்களம் உண்டாகட்டும்..

வெளியூர்க்காரன் : அது யாருங்க மங்களம்….அந்த சி.டியாவது முழுசா எடுத்திருக்காயிங்களா..

நித்தி : அடப்பாவிகளா..நான் என்ன ஆபாசப் படம் எடுப்பவனா..

நர்சிம் : பின்ன….கம்பராமாயணம் எழுதறவரா..இப்படிதான் திருவள்ளுவர் திருவாசகத்துல..

நித்தி : என்ன..

நர்சிம் : அது வந்து..திருமூலர் திருக்குறள்ல..அய்யோ வாய் குழறுதே..

அதிஷா : இதுக்குத்தான் நைட் முழுதும் தூங்காம நித்தியானந்த சி.டி பார்க்க கூடாதுங்குறது..(நித்தியைப் பார்த்து)…ஏன் சார்..ரஞ்சிதா வரலை..

நித்தியானந்தம்(கண்ணை மூடியபடி)..ரஞ்சிதாயே நமஹ….குழந்தாய்..அதில் இருப்பது நானல்ல..கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது..

“அந்த டவுட்டு எனக்கும் இருந்துச்சுங்க..” குரல் கேட்டு திரும்பிப் பார்த்தால் துண்டால் முகத்தை மறைத்த படி பாரு வருகிறார்..

வானம்பாடிகள் : ஏண்ணே..அவ்வளவு துல்லியமாவா கிராபிக்ஸ் பண்ணிருக்காயிங்க..ஒருவேளை அவதார் படத்துல ஒர்க் பண்ணின கிராபிக்ஸ் டீமா இருக்குமோ..

ஜாக்கிசேகர் : ஆனாலும் லைட்டிங்க் சரி இல்லைப்பா..கேமிராவை அந்தப் பக்கம் வைச்சு எடுத்துருக்கணும்,.,மறைக்குதுல்ல..ஹி..ஹி..

பாரு : யோவ்..எதயாவது எடுக்கட்டும்யா..என்னை ஏன்யா கொல்லுறீங்க..ஒரு ஆளை நம்புனது தப்பாயா..அவரும் நானும் ஒன்னாயா..ஆனாலும் அவர் மகான்யா..எவ்வளவு நோயெல்லாம் குணமாக்கிருக்கார் தெரியுமா..

லக்கிலுக் : ஆமாம்..பாரு அப்பாவிப்பா..ரஞ்சிதா ஏதாவது நோயின்னு வந்து இருப்பாங்க..பாருவை நம்புங்கப்பா..(பாருவைப் பார்த்து) நீங்க சாமியார் பத்தி சொன்ன கருத்துகள் எதுலயும் எனக்கு உடன்பாடில்லை..ஆனாலும் உங்களை புடிக்குது..

வால்பையன் : பாரு டவுசர் கிழிஞ்சு போச்சு..டும்..டும்..டும்..

பாரு : மிஸ்டர்..நான் டவுசர் போடுறேன்னு யாரு சொன்னா..ஒன்லி ஆலன் ஜோலிதான்..அதுவும் போன வாரத்துல அதை வாங்குறதுக்கு சிட்டி சென்டர் வரைக்கும் போனேன்..திரும்பி வர கையில் காசில்லை..சோழா ஹோட்டலுக்கு பாருக்கு கூட போக முடியலை..எழுத்தாளனுக்கு இங்க அவ்வளவுதான் மரியாதை..இதே கேரளாவா இருந்தா..

நித்தி டென்சன் ஆகிறார்..

நித்தி : உங்க கதையெல்லாம் இருக்கட்டும்..நான் என்ன சொல்ல வர்றேன்னா..

பரிசல்காரன் : சுவாமி..சின்ன டவுட்..சன் டீ.வியில லைட் ஆப் ஆகிற வரைக்கும்தான் ஒளிபரப்புறாயிங்க….மீதி சி.டி உங்ககிட்ட இருக்கா..

உண்மைத்தமிழன் : ஹே..நித்தியானந்தம் தவிர நாமெல்லாம் யோக்கியமானவர்கள்தானா..காமம் என்பது மனிதர்களை கொல்லதான்..(என்று ஆரம்பிக்க..நித்தியானந்தம் அலறுகிறார்)

நித்தி : ஆஹா..இவர் பத்து பக்கம் எழுதுறவராச்சே..என்னை உசிரோட கொல்லுறாயிங்கப்பா..நான் ஜெயிலுக்கே போறம்பா..

(சொல்லியபடியே ஓட எத்தனிக்கிறார்)

கதவு பின்னால் இருந்தபடியே சன்.டிவி கேமிரா குரூப் வருகிறது..

சன் டீ.வி குரூப் : சாமி..அப்படியே கதவு பின்னாடி இருந்து கேமிராவுல எடுத்துக்கிட்டு இருந்தோம்..அப்படியே கடைசியா ஒரு சிரிப்பு சிரிச்சீங்கன்னா 08:30 மணி செய்தியில போட்டுருவோம்..

மீண்டும் கேமிராவா..என்று நித்தி அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்..

Tuesday 2 March, 2010

நித்தியானந்த சுவாமிகள் – சன்டிவியின் அராஜகம்

நான் இதுவரை இவ்வளவு அவசரமாகவும், கோவமாகவும், சிறியதாகவும் பதிவு எழுதியதில்லை. கோவாலு நேற்று இரவு கால் செய்து சன் டீ.வியில் ஒரு சீன் படம் போடுவதாக சொல்லியதால் அவசரமாக பார்க்க நேர்ந்தது. என்னுடைய கோபம் உச்சத்திற்கு சென்றது. எவ்வளவு அராஜகம்..சன்டிவிக்கு என்னுடைய கண்டனங்களை இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன். சுவாமிகள் நடிகையுடன் இருக்கும் காட்சிகள் லைட் ஆப் ஆகும் முன்னர்வரைதான் ஒளிபரப்பட்டது. அதற்கு பின்பு வரும் காட்சிகள் எங்கப்பா?? நாங்கள் நேரில் பார்த்தால்தான் நம்புவோம். சன் டி.வி உடனே லைட் ஆப் ஆன பின்பு வரும் காட்சிகளை உடனே 12 மணிக்கு அப்பால் ஒளிபரப்பு செய்யுமாறு என்னுடைய கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன். இந்த பதிவுக்கு ஓட்டுப் போடுவர்களுக்கும், என்னுடைய பதிவில் கண்டனங்களைப் பதிவு செய்பவர்களுக்கும், அவர்களுடைய நேர்மையைப் பாராட்டி உடனே தேவநாதன் சி.டி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு

சத்தியானந்த சுவாமிகள் அலைஸ் அவியிங்க ராசா

தேவநாதன் தற்கொலைப்படை பிரிவு – 1

பிரேமானந்தா நகர்

சென்னை