Saturday 26 September, 2009

பதிவர் சந்திப்பில் திடீர் திருப்பம்

இயக்குநர் பேரரசுவுடன் பதிவர்களின் சந்திப்பின்போது நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது..அதைப் படிக்க இங்கு கிளிக்கவும். மறக்காம வலைச்சரத்தில் பின்னூட்டம் போட்டுடுங்கண்ணே..

Thursday 24 September, 2009

இயக்குநர் பேரரசுவுடன் பதிவர்கள் சந்திப்பு - 3

இயக்குநர் பேரரசுடன் பதிவர்கள் சந்திப்பு மூன்றாம் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும்..மறக்காம வலைச்சரத்தில் பின்னூட்டம் போட்டுங்கண்ணே.

இயக்குநர் பேரரசுவுடன் பதிவர்கள் சந்திப்பு – 2

இயக்குநர் பேரரசுடன் பதிவர்கள் சந்திப்பு இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக்கவும்..மறக்காம வலைச்சரத்தில் பின்னூட்டம் போட்டுங்கண்ணே..

Tuesday 22 September, 2009

இயக்குநர் பேரரசுடன் பதிவர்கள் சந்திப்பு

இந்த வாரம் முழுதும் வலைச்சரத்தில் ஆசிரியராக இருப்பதாக போன பதிவில் எழுதியிருந்தேன். என்னை பதிவுலகத்தில் ஊக்கப்படுத்திய அனைத்துப் பதிவர்களையும், அன்பர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். என் நன்றியுடன் அடையாளமாக பேரரசு இயக்குநருடன் சந்திக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறேன். அதைப் படிக்க இங்கு கிளிக்குங்கள். உங்களுக்கு பேரரசுவைப் பார்க்க விருப்பமானால் அங்கேயே பின்னூட்டம் செய்ய வேண்டுகிறேன்..)))


Monday 21 September, 2009

நானும் வாத்தியார் ஆகிட்டேன்னே

வலைச்சரம் என்ற வலைப்பூ கதம்பத்தில் என்னை இந்த வார ஆசிரியராக நியமித்துள்ளனர். அதனால் இந்த வாரம் என்னுடைய பதிவுகள் அனைத்தும் வலைச்சரத்திலேயே பதிவு செய்ய உள்ளேன்..ஏழு லட்சம் பேர் இல்லைன்னாலும் படிக்கிற ஏழு பேராவது அங்கு வந்து பார்த்து கமெண்ட் போடுங்கண்ணே..அப்புறம் முக்கியமான விசயம். எனக்கு பின்னூட்டம் போடுகிற அனைவரையும் இந்த வாரப்பதிவில் மாட்டி விடப்போகிறன். புரியலையாண்ணே..இங்க வந்து பாருங்கண்ணே..

Saturday 19 September, 2009

உன்னைப் போல் ஒருவன்

“ஏங்க…காலங்காத்தால அப்படி என்ன தூக்கம்..சீக்கிரம் எந்திரிங்க..10 மணிக்கு “உன்னைப் போல் ஒருவன்” போகனும்..”

“மணி என்ன..”

“7”

“10 மணிக்குதானே..நிம்மதியா மனுசனை தூங்க விடு..”

“அதுக்கில்லீங்க..1 மணி நேரமாவது வண்டி ஓட்டனும்..8 மணிக்காவது கிளம்பனும் இல்ல..”

“சரி கிளம்புவோம்..ஒரு அரை மணியாவது தூங்க விடு..”

07:30 மணிக்கு அதே பல்லவி..இதற்கு மேல் தூங்க பிடிக்காமல் எழுந்தேன்..

“சீக்கிரம் கிளம்புங்க..டைம் ஆகிடப் போகுது..”

“08:30 மணிக்கு கிளம்பினா போதும்..மனிசனை நிம்மதியா குளிக்க விடு..”

மணி பார்த்தால் 08:30..வந்து காரை ஸ்டார்ட் செய்து..சிறிது தூரம் செல்ல..

“என்னங்க..நிறுத்துங்க…நிறுத்துங்க..”

“என்ன ஆச்சு..”

“வீட்டுல ஸ்டவ்வை ஆப் பண்ணிட்டேனான்னு தெரியல..எதுக்கும் ஒரு தடவை போய் செக் பண்ணிக்கிருவோமா..”

“ஒரு மனுசனை, நிம்மதியாய்..” இதற்கு மேல் சொல்லவில்லை..மதியம் சோறு வேண்டுமே..

“சரி வா…”

ஒரு யூ டர்ன்..மணி 09:00..வீட்டிற்கு போய் போர்த்தால்..ஸ்டவ் ஆப் ஆகித்தான் இருந்தது..கொலை வெறியுடன் மனைவியைப் பார்க்க..

“ஏங்க..வந்ததும் நல்லதாப் போச்சு..அப்படியே தண்ணிப் பாட்டிலில் தண்ணி பிடிச்சுக்குருவோம்..”

“மணி என்ன தெரியுமா..09:15..”

“ஒரு 15 நிமிசம் கழிச்சுப் போனா கமல் ஒன்னும் கோவிச்சுக்க மாட்டரு..நான் தண்ணி பிடிச்சுக்குறேன்..”

கிளம்பும் போது மணி 09:30..இழுத்துப் பிடிச்சு ஓட்டி ஒரு அரை மணி நேரத்தில தியேட்டர் போயிடனும்..ஆக்சிலேட்டரை பலம் கொண்ட மட்டும் அழுத்தினேன்..

மணி 09: 45..

“என்னங்க..”

“என்னடி..எதுவும் குக்கரை ஆப் பண்ணாம வந்துட்டயா..”

“அய்யோ..அப்படி இல்லீங்க..நானும் வண்டி எடுத்ததுல இருந்து ஒன்னு கேக்கனுமின்னு இருந்தேன்..கோவிச்சுக்க மாட்டீங்களே..”

“என்னம்மா..எதுவும் கட்டுச்சோறு கட்ட மறந்துட்டயா..”

“நீங்க வண்டி எடுத்ததுல இருந்து, ரெட் கலர்ல ஸ்டியரிங்க பக்கம் ஒன்னு எறியுதே..அது என்னங்க..”

அதிர்ந்து போய் பார்த்தால் “பெட்ரோல் காலி அலர்ட்..”

“அடிப்பாவி..ஏன்..வண்டி ஆப் ஆனா பிறகு சொல்ல வேண்டியதுதானே..”

“இல்லீங்க..அப்ப சொன்னா நல்லா இருக்காது..”

எங்கதான் பேசக் கத்துக்குறாயிங்கன்னு தெரியலண்ணே..சரி பெட்ரோல் பங்கை தேடி அலைஞ்சா..ஒன்னும் கிடைக்கலை..

மணி 10:15..

“ஏங்க..படம் ஆரம்பிச்சுருக்குமாங்க..”

“கமல் இந்நேரம் குண்டு வைக்க ஆரம்பிச்சுருப்பாரு..”

அப்பாடா ஒரு வழியாய் பெட்ரோல் பங்கை அடைந்தாயிற்று… பர்ஸை எடுப்பதற்காக பேண்ட் பாக்கெட்டில் கையை விடுகிறேன்..பர்ஸைக் காணோம்..

“அய்யோ..அடியே..எங்க என் பர்ஸ்..நேத்து இந்த பேண்ட்தானே போட்டிருந்தேன்”

“நாந்தான் பத்திராம இருக்கட்டும்னு பீரோவுக்குள்ள வைச்சேங்க..”

“அடிப்பாவி..ஒரு டாலர் கூட இல்லியேடி..”

இருங்க..என் பர்ஸ்ல ஒரு 20 டாலர் வைச்சிருப்பேன்..பார்க்குறேன்..அப்பத்தான் எனக்கு மூச்சு வந்தது..

மணி 11:00

அவசரமாக பெட்ரோல் போட்ட பிறகு..வண்டியை அழுத்த..

“ஏங்க..கமல் ஏங்க குண்டு வைக்கிறாரு..”

“அவிங்க ராசா மாதிரி ஒரு பயலும் வாழ்க்கூடாதுன்னுதான்..கொஞ்சம் சும்ம வர்றீயா..படமே பார்க்கலைன்னாலும் பரவாயில்லை..உண்மைத்தமிழன் 10 பக்கத்துக்கு விமர்சனம் போடுவாரு..இரண்டரை மணீ நேரத்தில படிச்சுரலாம்..”

“ஈழத் தமிழன், மறத்தமிழன்..கேள்விப்பட்டிருக்கேன்..அது யாருங்க..உண்மைத்தமிழன்..”

“ஐயோ..கடவுளே..நானே..லேட் ஆகிடுச்சுன்னு கடுப்புல இருக்கேன்..பேசாம வா..”

மணி 11: 15..

“ஏங்க..இன்னொரு லைட் எறியுது..”

அதிர்ந்து போனேன்..அவசரம் அவசரமாக டிஸ்ப்ளே பார்க்க….

“இல்லீங்க…நம்ம கார்ல இல்ல..பின்னாடி போலிஸ் லைட் போட்டுக் காமிக்கிறாரு..”

அடக்கடவுளே..இங்க அமெரிக்காவுல போலிஸ் பின்னால் லைட் போட்டு காண்பித்தால் வண்டியை ஓரம் கட்டி நிற்க வேண்டும்..வண்டியை விட்டு வெளியே வரக்கூடாது..ஸ்டியரிங்க் மீது இரண்டு கைகளை வைத்திருக்க வேண்டும்..போலிஸ் வந்தார்..

“நான் எதற்கு உன்னைப் பிடித்திருக்கிறேன் தெரியுமா, சார்..”

“தெரியலை சார்..பெட்ரோல் எல்லாம் இருக்கு சார்..” உளறினேன்..

“நீ..100 மைல் வேகத்திற்கு வண்டியை ஓட்டிருக்கிறாய்..வண்டி டாக்குமெண்ட், இன்சூரன்ஸ்..லைசன்ஸ்., எடுங்க சார்.”

பர்ஸ் தான் வீட்டில் இருக்கிறதே..என் மனைவி நைசாக..

“ஏங்க..ஒரு டாலர் லஞ்சம் நீட்டினா வாங்கிக்கிருவாரா.,.,”

“அடிப்பாவி…இங்கெல்லாம் உசிரை எடுக்காம விட மாட்டயிங்க….”

“சார்..பர்ஸை மறந்து விட்டேன்..இது என் கம்பெனியின் ஐ.டி கார்டு..”

250 டாலர் அபதாரம்..கமல் ரொம்ப சோதிச்சுட்டருண்ணே..

வண்டியை 60 மைல் வேகத்திலே ஓட்டி தியேட்டரை அடைந்தால், மணி 12:30..தியேட்டர்ல ஈ காக்கா காணோம்..படம் முடிச்சுட்டாயிங்க போல..சரி, நாளைக்கும் படம் போடுறாயிங்க இல்ல..டிக்கெட்ட நாளைக்கு ஷோவுக்கு மாத்துறதுக்கு கேட்டுப் பார்ப்போம்..டிக்கெட் அலுவலகத்தை அடைந்தேன்..

“எக்ஸ்கியூஸ்மி..இன்னைக்கு படம் பார்க்க முடியல..இந்த டிக்கெட்டை நாளைக்கு மாற்ற முடியுமா..”

அலுவலகப் பெண்மணி எரிச்சலுடன் டிக்கெட்டை வாங்கிப் பார்த்து, கோவத்துடன் திருப்பித் தந்தாள்..

“மிஸ்டர்..நல்லா பாருங்க..இது நாளைக்கு ஷோவுக்குரிய டிக்கெட்தான்..”

பார்த்தால் 20 செப்டெம்பர்ன்னு இருக்குன்னே..நான் 20 செப்டம்பர் இன்னைக்கு நினைச்சு..60

மைல் வண்டி ஓட்டி, 250 டாலர் பைன் கட்டி..இப்ப என் மனைவி என்னை கொலை வெறியுடன் பார்க்க..

“சரிம்மா..விடு..இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில சகஜம்தானே..”

சல்ஜாப்பு சொல்லிட்டு வெளியே வர்றேன்..நம்ம ஊருக்காரர் ஒருத்தர் என்னைப் பார்த்து பாசமா கூப்பிட்டார்..

“சார்..ரெண்டு டிக்கெட் இருக்கு..வேண்டுமா..”

“அடப்பாவிங்களா..அமெரிக்காவுலயும், பிளாக்குல டிக்கெட்டா..இருங்க, உண்மைத் தமிழன் அண்ணாச்சிக்கிட்ட சொல்லிக் கொடுக்குறேன்..”

“சார்..அவசரப்படாதீங்க..இன்னைக்கு கிளம்பி வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு,….வர்ற வழியில கொஞ்சம் பிரச்சனை..வந்து பார்த்தா, என்னோட டிக்கெட் நாளைக்கு ஷோவுக்குதான்..நான் கவனிக்காம் வந்துட்டேன்..நாளைக்கு இதுக்காக 50 மைல் வர முடியாது..அதுக்குத்தான்..”

அட..உன்னைப் போல் ஒருவன்..

Tuesday 15 September, 2009

கல்லூரி

இங்கு வருவதற்கு ஒரு வாரம் முன்னதாக பழைய கல்லூரி நண்பர்கள் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். அதுவும் நான் படித்த கல்லூரியிலேயே..பயண வேலைகள் அதிகமாக இருந்தாலும் என்னால் இந்த சந்திப்புக்கு போகாமல் இருக்க முடியவில்லை..மனதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மதுரை நோக்கி பயணித்தேன்..

கொடுக்கப்பட்ட அரைமணி நேரம் முன்பே என் கல்லூரியை அடைந்தேன்..பழைய நினைவுகளை திரும்பி பார்க்கும் சுகமே அலாதியானது..அப்படி திரும்பி பார்க்கும்போது வரும் சுகத்தில் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்து திரும்பவும் கல்லூரி காலத்திற்கே செல்லலாமா என்று தோன்றும்..கல்லூரி வாசலை தொடும்போதே ஒரு இனம் புரியாத உணர்வு….நான் படித்த காமராஜர் கல்லூரியா இது….கிராமத்துப் பெண்ணுக்கு பியூட்டி பார்லர் அலங்காரம் செய்தது போல் இருந்தது..கல்லூரி வாசலில் எங்களுக்காகவே உடைந்து சிம்மாசனம் போல் இருந்த குட்டிச் சுவரைக் காணவில்லை..வகுப்பறையின் முதல் கிளாசை நாங்கள் அட்டெண்ட் பண்ணியதாக வரலாறு இல்லை..பேராசிரியர் அட்டெண்டன்ஸ் எடுக்கிறார்களோ இல்லையோ நாங்கள் இந்த குட்டிச் சுவரில் உக்கார்ந்து அட்டெண்டன்ஸ் எடுப்போம், எல்லா பிகர்களும் வந்து இருக்கிறார்களா என்று..அதுவும் எங்கள் வகுப்பறை தேவதை “அர்ச்சனா” வைத் தேடிதான் கண்கள் பயணிக்கும், ஒவ்வொருவருக்கும்..அவள் தூரத்தில் வரும்போதே எல்லோரும் சீப்பை எடுத்து தலை வாரிக் கொள்வோம்..

“மச்சான்..இன்னைக்கு அவ யாரை பார்க்குறாளோ..அவன் டிரீட் கொடுக்கனும்..”

டிரீட்ன்னா தாஜ் ஹோட்டலில் பபே இல்லை..எதிர்த்த “டான்” டீ கடையில் ஒரு புரையும், டீயும்..அர்ச்சனா வரும்போதே தென்றல் காற்று வருவது போல இருக்கும்..அந்த பெர்பியூம் வாசம் அவள் வந்த பேருந்தைக் கூட பின்னால் அழைத்து வரும்..அவள் அணிந்த ஹைஹீல்ஸ் கூட அவள் மனம் போலவே செருக்குடன் வரும்..எப்போதும் கண்களில் ஒரு அலட்சிய பார்வை…..”ஆமாண்டா நான் அழகுதான்..அதுக்கென்ன இப்ப” என்று கேட்பது போலத் தோன்றும்..அவள் நடந்துவரும் அழகைக் கண்டு குட்டிச்சுவரில் உள்ள கற்கள் கூட நாணி கீழே விழும்..அவள் எதேச்சையாக ஒருவனைப் பார்த்தால் அவன் தான் அன்று ஒரு நாள் ராஜா..கொடுமை என்னவென்றால் எல்லாருக்கும் ஒரு நாள் ராஜா பதவி கிடைத்தது நான் உள்பட..

“சார் என்ன வேணும்..காலேஜ் இன்னைக்கு லீவு..”

கனவைக் கலைத்தது போல் வாட்ச்மேன் குரல்….

“இல்ல..பழைய கல்லூரி மாணவர்கள் ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருக்கோம்….நானும் பத்து வருசத்துக்கு முன்னாடி இங்கதான் படிச்சேன்..அதான் சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கேன்..”

சிறிய புன்னகையுடன் அங்கிருந்து சென்றார்..அவரும் பள்ளியில் படித்திருப்பாற்தானே..நடந்து சென்று நாங்கள் குதூகலிக்கும் இடமான “டான்” டீகடை சென்றேன்..பேர் மாறியிருந்தது “ஜாலி, சினாக்ஸ் பார்..” பழமை ஒன்று கூட இல்லை..ஓவன், பிரிஜ், கோக், பெப்ஸி என்று எல்லாம் மாறியிருந்தது, எங்கள் மனத்தைப் போல..நாங்கள் சில நேரம் வீட்டிற்கு கூட போகாமல் இருந்திருக்கிறோம்..இங்கு வராமல் இருந்ததில்லை..கையில் 10 ரூபா, வைத்துக் கொண்டு ஒன்பை டூ டீ வாங்கிட்டு “மச்சான்..நீ கொடேன்..நீ கொடேன்..” என்று கருணாஸ் போல சொன்ன காலங்களை நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பு வந்தது..இன்று அதே சட்டைப் பையில் 1000 ரூபாய், கிரெடிட்கார்ட் இருக்கிறது..…சுவை நிறைந்த டீ, மனசு நிறைந்த நண்பர்கள்தான் இல்லை….நேரே கடை நோக்கி சென்றேன்..

“அண்ணே..ஒரு டீ குடுங்க..”

“சாரி, சார்..கோக், பெப்ஸிதான் இருக்கு..கூலிங்க் வேணுமா, வித்தவுட் கூலிங்கா..”

ஹூம்..கால மாற்றத்தில் “அண்ணே” கூட “சார்” ஆகிவிட்டது மதுரையில்..

“இல்ல வேண்டாம்..” திரும்பி பார்க்காமல் என் கிளாஸ் ரூம் சென்றேன்..முழுவதும் மாறியிருந்தது..ஸ்டீல் இருக்கைகள் குஷன் இருக்கைகளாயிருந்தன..எப்போடா விழுவோம் என்று இருக்கும் மின்விசிறி கூட இப்போது பளபளப்பாய் இருந்தன்...

“மச்சான்..அர்ச்சனா எங்கடா..இன்னைக்கு ஆளைக் காணோம்..”

“டே..இன்னைக்கு நீதான்டா டிரீட்..”

“டே..நித்யா மிஸ் கலர்புல்லா வந்திருக்குடா..”

“டே மாப்பி..இந்த வாரம் எங்க டாப்பு..அரசரடியிலயா, கோரிப்பாளையத்திலையா..”

“மச்சான்..தீபா..ரூபால சூப்பர் சீன் படம் போட்டிருக்கான்டா..”

“மச்சான்….புத்தகம் ஜெராக்ஸ் எடுக்கணும்டா..காசு கலெக்ட் பண்ணணும்டா..இதுதான் நல்ல சமையம்..கவிதாகிட்ட லவ்வ சொல்லிடு..”

“மாம்ஸ்..குரூப் ஸ்டடி எங்கடா..”

“டே..வெண்ணை..அடிக்கடி என் லைனில குறுக்க வர்ற..புரிஞ்சுக்கடா..அவ என்னைத் தாண்டா லவ் பண்றா..”

அப்பப்பா..எத்தனை எத்தனை நினைவுகள்..அனைத்தும் கல்லூரியில் மட்டும்தான் கிடைக்கும்..நீங்கள் கோடி ரூபாய் கூட சம்பாதியுங்கள்..ஆனால் வாழ்க்கையில் இந்த காலங்களை என்ன சம்பாதித்தாலும் திரும்ப வாங்க முடியாது..எதிர்காலத்தைப் பற்றி ஒரு பயமும் இல்லை..ஒரு பிராஜெக்டும் இல்லை..டெட்லைனும் இல்லை..கையில் ஒரு பைசா கூட இருக்காது..ஆனால் மனசு நிறைந்து இருக்கும்..நண்பர்கள் இருப்பார்கள்..பார்க்கும் அனைவரும் தேவதைகளாக தெரிவார்கள்..”மச்சான்..அவங்கிட்ட இருப்பது பிரண்ஷிப்தான்டா..லவ் இல்லை..” தெரிந்தே பொய் சொல்லுவார்கள்..பிரண்ட்ஷிப்க்கும் லவ்வுக்கும் உள்ள இடைவெளி குறித்து பெரிய லெக்சரே எடுப்பார்கள்..சொன்னவனே லவ்வில் விழுந்து, தாடி வைத்து, தண்ணி அடித்து, ஒரு மாதம் தேவதாசாகி, அடுத்த மாசம் அடுத்த பிகரைப் பார்க்க போய் விடுவான்..பிரெண்டுக்கு ஒரு பிரச்சனை என்றால் உருட்டுக்கட்டை எடுத்து போலீஸ் வரைக்கும் போவார்கள்..அதே பையனே, பொண்ணைப் பார்க்கும் போது, “காதல்தேசம்” வினீத் போல் அப்பாவியாய் நோட்புக்கை தூக்கிக்கிட்டு “எக்ஸ்கியூஸ் மீ..கேன் ஐ ஹேவ் யுவர் பென் பிளீஸ்” என்று ஓட்டை இங்கிலிஸ் பேசுவார்கள்..அனைத்தும் கல்லூரியில்தான்..அது ஒரு தனி உலகம்..சுகமான அனுபவங்கள் நிறைந்த உலகம்..

நண்பர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள்…”மச்சான் எப்படி இருக்கடா..பார்த்து எவ்வளவு நாளாச்சுடா..எத்தனை குழந்தைகள் டா..எவ்வளவு சாலரி..டேக் ஹோம் எவ்வளவு..எப்படா யூ.எஸ் போற….”

பல கேள்விகள்…..பழைய நண்பர்களை பார்ப்பதே ஒரு வரம்..ஏதோ மீண்டும் பிறந்தாற் போல இருக்கும்..எல்லார் கையிலும் ஒரு ரீவைண்ட் பட்டன் இருப்பதாகத் தோன்றும்..எல்லோரும் மறக்காமல் கேட்ட ஒரே கேள்வி..

“மச்சான்..அர்ச்சனா எங்கடா..வந்திருக்காளா..”

முதலில் ரசித்த தேவதை அல்லவா….எல்லார் மனசிலும் அவளை எப்படியாவது பார்த்து விட வேண்டுமென்று ஆசை பபிள்கம் போல ஒட்டிக் கொண்டது….ஒரு நிமிடம், மனைவி, குழந்தைகள் எல்லாமே மறந்து போனது..

“வருவாடா..நான் போன் பண்ணி கூப்பிட்டேன்டா..பர்ஸ்ட் ரொம்ப பிகு பண்ணினா..என் புருசன் விடமாட்டாரு..குழந்தைகளைப் பார்த்துக்கனும்னு..நான் கண்டிப்பா வரனும்னு சொல்லிட்டேன்டா..இன்னும் அவளுக்கு தான் அழகுன்னு திமிருடா..அதுதான் இப்படி பிகு பண்றா..அவிங்க வீட்டுல கருப்புக் கலர் சுமோ இருக்காம்டா..அதுல வர்றாளாம்..”

ஆர்கனைசர் சொன்னான்..எல்லாருடைய கண்களும் கருப்புக்கலர் சுமோவைத் தேடியது..மனம் அலைபாய்ந்தது..

கருப்புக்கலர் சுமோ வரவே, மனம் குதூகலித்தது.. எல்லாரும் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சீப்பை எடுத்தோம்…

சுமோ கதவு திறக்கப்பட மனமும் சுமோ போலவே பறந்தது..எல்லோரும் அதிர்ந்தே போனோம்.. எலும்புக்கூடாய் அர்ச்சனா…நாங்கள் ஆப்பிள் என்று வர்ணிக்கும் கன்னங்கள் சூம்பி போயிருந்தன..ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தது போல் இருந்தாள்..கர்வமான அவள் பார்வை கொஞ்சம் கூட அவளிடத்தில் இல்லை..பார்வையிலே திமிரை சொல்லும் அவள் கண்கள் மண்ணைப் பார்த்தே நடந்தது…கூடவே கரை வேட்டி கட்டிய ஒரு ஆள், முறுக்கு மீசையுடன்..

“அடியே..நான் கட்சி அலுவலகம் வரைக்கும் போயிட்டு வர்றேன்..

சீக்கிரம் வந்துரனும்..புரியுதா..

குரலிலே ஒரு மிரட்டல் தெரிந்தது..கீ கொடுத்த பொம்மை போல் தலையசைத்தாள்..யாருக்கும் எளிதில் சரி என்று சொல்லாதா அர்ச்சனாவா இப்படி..எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது..அர்ச்சனா எல்லாரையும் நோக்கி வரவே, அனைவரும் நொறுங்கிப் போனார்கள்..சம்பிரதாய பேச்சுக்கள் முடிந்தது..சாப்பாடு முடித்து கைகழுவும் போது என்னிடத்தி வந்தாள்..

“ராசா..எப்படி இருக்க..ஆளே மாறிட்ட..”

“நல்லா இருக்கேன் அர்ச்சனா..”

என்னால் இதற்கு மேல் கேட்காமல் இருக்க முடியவில்லை..

“என்ன ஆச்சு அர்ச்சனா உனக்கு..தேவதை மாதிரி இருப்பயே..இப்படி இருக்க..ஏதாவது பிரச்சனையா….”

இந்த கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை போலும்..அவள் கண்கள் கண்ணீரை நோக்கிச் செல்வது தெரிந்தது..

“விடு ராசா..எல்லாம் என் தலைவிதி….பணக்காரங்கிறதுனால என்னோட விருப்பமில்லாம ஒரு அரசியல்வாதிக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க….என்ன வாழ்க்கை இது..தினமும் நரகம்தான்..அடி, உதை, சந்தேகம்..சிகரெட் சூடு..எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிடுச்சு..ஏன் ராசா..நான் இங்கயே தற்கொலை பண்ணிக்கவா..எங்க வீட்டுல கூட சொல்லாம என்னை இந்த கல்லூரியிலேயே புதைச்சுடுறீங்களா…”

என்னால் ஒன்றும் பேச முடியவில்லை..

Saturday 12 September, 2009

நாறிப்போன பதிவுலகம்

“என்னங்க..உங்க பதிவுக்கு கிடைக்கிற வரவேற்பப் பார்த்தா, நானும் பதிவு எழுதலாம்னு ஆசையா இருக்குங்க..நானும் எழுதட்டா..”

என் மனைவி ஆசையா கேட்டபோது எனக்கு திக்கென்றிருந்தது..ஆஹா, இது ரத்த பூமியாச்சே..செத்தா பால் கூட ஊத்தமாட்டாயிங்களே..பதறிப் போயிட்டேண்ணே..

“வேணான்டி..சொன்னா கேளு..போலிஸ் கேசாயிடும்..”

“என்னங்க..என்ன பேசுறீங்க..போலிஸ் கேசுக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம்..”

இந்த வார சண்டை ஸ்பெசல் இரண்டு மூன்று பதிவுகளை எடுத்துக் காட்டுனேன் பாருங்க..அலறிட்டாண்ணே….

“ஐய்யோ..என்னங்க நடக்குது இங்க..நான் ஏதோ எல்லாரும் பொழுதுபோகாம எழுத வர்ராயிங்க நினைச்சேன்..பொழைப்பயே கெடுத்துரும்போல..ஆனாலும் அவர் பாவம்க..ரொம்பதாங்க கஷ்டப்பட்டுறாருக்காரு..”

“அடியே..பொறுடி..அவரும் லேசுப்பட்டவரா..அந்த பதிவுக்கு வந்த கமெண்ட்ஸ்ஸ படிச்சுப் பாரு,,”

படிச்சுப்பார்த்துக்கிட்டு கொஞ்சம் குழம்பித்தான் போனாள்..

“என்னங்க..இப்பத்தான் இவரை நல்லவர்ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்..அவரும் அப்படித்தான் இருந்துருக்காரு.. அதான் அக்குவேறா ஆணிவேறா ஒருத்தர் நிரூபிச்சிருக்காரே..”

“இறுடி..அக்குவேறா, ஆணிவேறா நிரூபுச்சிருக்காருல்ல..அவரைப் பத்தி இங்க ஒரு ஸ்க்ரீன்ஷாட் போட்டுருக்காயிங்க பாரு..”

படிக்க படிக்க கை நடுங்கிருச்சுண்ணே..

“ஐயோ..இவரும் இப்படியா….படத்துல பார்க்க ரொம்ப அப்பாவியா போஸ் கொடுக்காருரே..அவரா இப்படி இருந்துருக்காரு..”

ஆ..இந்த ஆடியோ பைலைக்கேளு..இந்த பதிவைப் படி..இந்த ஸ்கிரீன்ஷாட் பாரு..ஆ..இந்த கமெண்ட்ஸ்ஸைப் படி..இந்த போட்டாவைப் பாரு..இவரைப் பத்தி அவர் எழுதியிருக்காரு பாரு..

“டே..நீதான்டா பொறம்போக்கு..உன்னைப் பத்தி தெரியாதா..”

“வாய மூடுடா..வெண்ணை..நீ அவனோட கைக்கூலிதானே..”

“டே..இப்படி துரோகம் பண்ணிட்டேயேடா..”

“உன்னைத்தான் பார்த்தோமேடா…எவ்வளவு ஆபாசமா எழுதியிருக்க..”

“நீதான்யா போலி..”

“உனக்கு இருக்குடி மவனே..”

“ஐ..ஜாலி..ஜாலி…”

“போடா, அல்லக்கை..”

“நீதாண்டா அல்லக்கை..”

என் மனைவி தலையைப் பிடித்து உக்கார்ந்து விட்டாள்..பாவம் புதுசுதாண்ணே..

“என்னங்க..தலை ஒருமாதிரியா கிறு கிறுன்னு வருது..கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிடைக்குமா..”

“ரத்த பூமியில வந்துட்டு தண்ணியாவது, மண்ணாவது..ஒரு டம்ளர் ரத்தம் கிடைக்கும்..குடிக்கிறீயா…”

மேலே உள்ளதைப் படிக்கும்போது நகைச்சுவையாக இருந்தாலும் போன வாரப் பதிவுகளைப் படிக்கிறபோது மனசு வலித்ததுண்ணே..நாங்களெல்லாம், பொழைப்புக்கு நடுவுல ஏதோ ரெண்டு எழுத வந்தால்,ஐயோ பொழைப்பே போயிடும் போலே..இரண்டு மூன்று பதிவுகளைப் படித்துப் பார்த்ததில் கீழே உள்ளது மட்டும் புரிந்தது….

1) பலபேருக்கு வாழ்க்கை போயிருக்கிறது..பலபேருக்கு நிம்மதி போயிருக்கிறது..பலபேருக்கு பணம் போயிருக்கிறது..அதற்கு அவர்களே காரணம்..

2) பதிவுகள் பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ளப்படவில்லை…மானப்பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப்பட்டது..

3) யாரும் உத்தமரில்லை..பலபேருடைய முகமூடி கிழிந்திருக்கிறது..பல பேருடைய துரோகம் வெளிப்பட்டிருக்கிறது..

4) ஈகோ பிரச்சனை டப்பாங்குத்து டான்ஸ் ஆடியிருக்கிறது..பாதிப் பிரச்சனை “விட்டேனா பார்” என்ற மனப்பான்மையால் வந்தது

5) யாராவது யாருக்காவது நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள், நான் நல்லவெனென்று..ஏன் என்றுதான் தெரியவில்லை..

6) ஒருத்தர் எழுத்தைப் பார்த்து நம்பக்கூடாது என்ற நல்ல மனப்பான்மை வந்திருக்கிறது..”இவரா இப்படி” என்று முதலில் அதிர்ந்தாலும், சே..எல்லாம் ஒரே குட்டைதான் என்ற நினைப்பும் வருகிறது

7) இனி யாராவது “சமூக ஒழுங்கு..தனிமனித ஒழுக்கம்..மனிதாபிமானம்..நட்பு..பின்நவீனத்துவம், சைடு நவீனத்துவம், குறுக்கால , மறுக்கால நவீனத்துவம்னு எழுதட்டும்..” என்கிற கோவம் வருகிறது

8) புதிய பதிவர்களிடம் பீதி உணர்வு காணப்படுகிறது..யாருக்கும் போலிஸ் கேசு என்று அலைவதற்கு விருப்பம் இல்லை..பேசாம எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சுடலாம என்ற எண்ணம் ஏற்படுகிறது, நான் உள்பட

இருங்கண்ணே..என் மனைவி அதிர்ச்சியிலிருந்து எந்திருச்சிட்டா..கொஞ்சம் தண்ணி எடுத்து முகத்துல அடிச்சிட்டு வர்றேன்..

“அடியே..எந்திருடி..நீ ஏண்டி மயக்கம் போட்டு விழுற..யார் அடிச்சுக்கிட்டா நமக்கென்ன..”

“இல்லீங்க..படிக்க, படிக்க, தலை சுத்திருச்சுங்க..ஏங்க நீங்க யாரு பக்கம்..”

“கொஞ்சம் பொறுடி..இந்த டயலாக்கை கேமிரா பார்த்துதான் சொல்லணும்..யாருப்பா அங்க, கேமிராவை கொண்டு வாங்கப்பா..”

(கேமிராவைப் பார்த்தபடி) நான் இவுங்க(மக்கள்)பக்கம்(உபயம்: வேட்டைக்காரன்)

(மனைவி காண்டு ஆகி) போயா அல்லக்கை..

“அடிப்பாவி..மொத்தம் 2 பதிவுதான் படிச்சிருக்க..அதுக்குள்ள அவிங்க மாதிரியே பேசிறேயேடி..அடியே..படிச்சா அப்படியே மனசுக்குள்ளாரயே வைச்சிக்கனும்..எஸ்டாபிளிஷ் பண்ணக் கூடாது..”

சாரிங்க..ஏதோ படிச்ச புளோவுல வந்துரிச்சு…ஏங்க ஒரு கேள்வி கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே”

“கேளு.”

“பதிவுலகம் எப்பங்க அடுத்த கட்டத்துக்கு போகும்..”

“பக்கத்தில ஒரு கட்டம் போட்டு கைய வைச்சி தள்ளிவிடு போயிடும்..”

“விளையாடாதீங்க..கொஞ்சம் சீரியஸா பதில் சொல்லுங்க..”

“ம்ம்ம்..இவிங்க எல்லாம் கொஞ்சம் தள்ளி உக்கார்ந்துகிட்டா தானா போயிடும்....”

Thursday 10 September, 2009

லாஸ்வேகாஸ் எனும் கேளிக்கை உலகம்

ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, பிறந்த நாள் தெரிவித்த எல்லாருக்கும் நன்றிங்கண்ணே..நிறைய பேர் இமெயிலிலும் வாழ்த்து சொல்லியிருந்தாயிங்க..கண்ணுல தண்ணி வந்திருச்சுண்ணே..எம்மேல இம்புட்டு பாசமாண்ணே..இதுக்கு பதிலா நான் என்ன பண்ண போறேன்னு தெரியலைண்ணே(வரப் போகும் பின்னூட்டங்கள் – (ரொம்ப நெஞ்ச நக்காதீங்க ராசா)..(ஒன்னும் பண்ண வேண்டாம்…வர்ரப்ப ரெண்டு ஐபாட் மட்டும் வாங்கிட்டு வந்துருங்க)..எதுனாலும் பேச்சு பேச்சா இருக்கனும்னே..

இங்கு தொழிலாளர் தினம் என்பதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது..எங்கயாவது போகலாம்னு முடிவெடுத்தப்ப லாஸ்வேகாஸுக்கு குறைந்த விலையில் டிக்கெட் கிடைத்தது..நான், என்னோட வீட்டுக்காரம்மா, கோவாலு, கணேசு, மற்றும் இன்னொரு குடும்பம்..ஜோரா தயாரானோம்..லாஸ்வேகாஸ் கேள்விப்படதாவர்களுக்கு சிறு குறிப்பு..அமெரிக்காவில் நிவேதா மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரம்..இதை சூதாட்ட உலகம் என்றே சொல்லலாம்..நகரம் முழுக்க, சூதாட்டம் விளையாடுவதற்கு என்றே ஏகப்பட்ட கேசினோக்கள் இருக்குண்ணே..இதை தூங்கா நகரம்ன்னு சொல்லுவாய்ங்க..சின்(குற்றம்) சிட்டி என்றும் இதை அழைப்பர்..இரவு முழுவதும் கேளிக்கைகள்தான் இந்த நகரில்..பார்ட்டி, சூதாட்டம், கேளிக்கைள் இவைதான் அங்கு வியாபாரம்..

கோவாலு லாஸ்வேகாஸ் என்றதுமே 2 நாளைக்கு முன்னமே ரெடியாகி விட்டான்..பேச்சிலர்களுக்கான நகரமாச்சே..”ராசா..இந்த தடவை எப்படியாவது இரண்டு பிகர்களுடவாவது பழகி போன் நம்பர் வாங்கிரனும்டா..” ன்னு சொல்லிக்கிட்டே இருந்தான்..ராசா பிளைட்டுல இருந்தே ஆரம்பிச்சரனும்டான்னு சொன்னான்..அப்பவே அவன் அடிவாங்காம வரமாட்டான்னு தோனிச்சுன்னே..

எல்லாத்தையும் கரெக்டா பிளான் பண்ணிட்டு பிளைட் எத்தனை மணிக்கு என்பதை மட்டும் கரெக்டா மறந்துட்டோம்னே..எல்லாரும் 10:30 மணிக்கு நினைச்சுக்கிட்டே சர்வசாதரணமா போறோம்..10:00 மணிக்கு பிளைட்டாம்..விமான பணியாளர்கள் கொலைவெறியோட பார்க்குறாயிங்கண்ணே..பிரதமர் மாதிரி எங்களுக்காக விமானமே வெயிட்டிங்க்..கோவாலு பெருமையா காலர தூக்கி விட்டுக்கிட்டான்..எல்லாரும் அவசரம் அவசரமா விமானத்துக்குள்ள போறோம்..எல்லாம் கொலைவெறியோட பார்க்குறாயிங்க..பாவம், காலையில சாப்பிடல போலிருக்கு..திரும்பி கோவால பார்க்குறேன்…முகம் இருண்டு போயிருந்தது..எனக்கு புரியவேயில்லை..அவனுக்கு பின்னாடி கொஞ்சம் எட்டிப் பார்த்தா, சுமார் 60 வயசுல விமான பணிப்பெண்..நம்ம ஆளு முதல் பாலிலே டக் அவுட் ஆன மாதிரி ரியாக்சன் கொடுத்தான்..

“ராசா, 12பி ல ஏறினா கூட ரெண்டு மூணு பிகர் பார்க்கலாம்டா..ஏண்டா எனக்கு மட்டும் இப்படி நடக்குது..”

ரொம்ப சலிச்சுக்கிட்டாண்ணே..இது லோக்கல் விமானமாதலால் சீட் நம்பர் கொடுக்கப்படவில்லை..தேடிப் பிடிச்சு ஒரு சீட் பிடிச்சு உக்கார்ந்துட்டு கோவாலை பார்த்தேன்…அவனுக்கு சீட் இல்லை..

“ராசா..பிளைட்ல புட்போர்டு அடிக்க வைச்சிருவாயிங்க போலிருக்குடா..”

கடைசியில் ஒரே ஒரு சீட்தான் இருந்தது..கோவாலு ஆசை, ஆசையாக போய் பார்த்தால், பக்கத்தில் திரும்பவும் 60 வயதுமிக்க ஒரு குண்டான பாட்டி..ஒன்றரை சீட்டில் உக்கார்ந்து இருந்தது..கோவாலு அலறிட்டான்..இதுல அந்தப் பாட்டி வேற “பேராண்டி….நல்லா கம்பர்டிபிளா உக்காருப்பா..” ன்னு அரைசீட்டைக் காட்டா..கோவாலு முகம் இருண்டே போச்சுண்ணே..

“ராசா..தயவு செய்து சீட்டை மாத்திக்கலாம்டா..இங்க வந்துருடா..” கெஞ்சுறான்…விமான பணிப்பெண் வேறு விமானம் கிளம்புவதாக சொல்லி உக்கார சொல்லி விட்டதால் என்னால் ஒன்றும் முடியவில்லை..நம்ம ஊரு ஏர்டெக்கானை விட மோசமாக இருந்தது விமானம்..ஆட்டோ மாதிரி குலுங்கி குலுங்கி சென்றதில் எனக்கு பெருங்குடலு டான்ஸ் ஆடுறமாதிரி இருந்துச்சுண்ணே..

அப்படி, இப்படின்னு லாஸ்வேகாசை அடைந்தோம்..எங்கு பார்த்தாலும் கேசினோ, இளம்பெண்கள்..விமான நிலையத்தில் கூட கேசினோ இருக்குன்னே..விமானத்தில் ஏறுரதுக்கு முன்னாடி ஒரு ரவுண்ட் விளையாடலாம்..பயணக் களைப்பில் ஹோட்டலில் சென்று தூங்கி விட்டு இரவு கதவைத் திறந்து பார்க்கிறேன்..அம்மாடியோவ்..எல்லாம் விளக்குகள்..ஜெகஜோதியாய் காட்சி அளிக்கிறது...எங்கு பார்த்தாலும் வானுயர்ந்த கேசினோக்கள்..கிளப்புகள், பார்ட்டி..பப்புகள்..சொர்க்க பூமியாக இருக்கிறது உங்கள் கையில் டாலர் இருந்தால் மட்டும்..இரவானால்தான் அங்கு வேலையே ஆரம்பிக்கிறது..வீதிகளில் நடந்து சென்று அந்த அலங்காரங்களைப் பார்ப்பது சுகமான அனுபவம்..ஆனால் வீதிகளில் எங்கு பார்த்தாலும் கையில் மதுவுடன் பெண்கள், ஆண்கள்..நாளை வாழ்க்கையை மறந்து திரிகிறார்கள்..பாலியல் தொழில் அங்கு சட்டப்பூர்வமாக உள்ளது..வீதிகளில் நடந்து சென்றால், விசிட்டிங் கார்டுகளை கையில் வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள்..நீங்கள் மனைவியோடு நடந்து சென்றாலும் கவலைப்படுவதில்லை..

வீதிக்கு வீதி நிர்வாணக் கிளப்புகள்..பெண்களை காட்சிப் பொருளாக்குகிறார்கள்..நம்ம ஊரில் கொட்டகை தியேட்டரில் போடப்படும் படத்திற்கு வண்டியில் விளம்பரம் செய்வார்களே..அது போல ஊரெங்கும் வண்டிகள்..நிர்வாண கிளப்புகளுக்கு அழைப்பதற்கு..இதெல்லாம் தாண்டி வந்தால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும்..இல்லையெனில் மனமும், உடம்பும்தான் கெட்டுப் போகும் சில டாலர்களில்..

அடுத்து லாஸ்ஏஞ்சல்ஸ் சென்றோம்..லாஸ்வேகாஸின் குழந்தை போல இருக்கிறது..டிஸ்னி லேண்ட் தீம்பார்க் சென்று நேரத்தைக் கழித்தோம்..அடுத்து, நான் மிகவும் எதிர்பார்த்து கார்த்திருந்த “ஹாலிவுட்” சென்றோம்..படத்தில் பார்த்திருப்பீர்கள்...மலையில் ஹாலிவுட் என்று எழுதியிருக்குமே..அங்கு எல்லாம் செல்ல முடியாது..அது ஒரு அடையாளத்துக்காக..ஹாலிவுட் என்பது ஒரு பெரிய வீதி..அதில் நிறைய ஸ்டூடியோக்கள் இருக்குதுண்ணே..வீதி முழுக்க ஹாலிவுட் நடிகர் வேஷத்தில் நிறைய நாடக நடிகர்கள்..மடோனா, டாம் க்ரூஸ்..இப்படி பல..அவர்களுடன் நின்று படம் எடுத்துக் கொள்ளலாம்..நான் “300” படத்தில் நடித்த வீரர்கள் போன்று உடையணிந்தவர்களுடன் படம் எடுத்துக் கொண்டேன்..ஹாலிவுட் வீதியில் தரை முழுக்க ஹாலிவுட் பிரபலங்களின் பெயர்களை பொறித்து வைத்திருக்கிறார்கள்..அதற்கு பெயர் “ஹால் ஆப் பேமஸ்”..ஒவ்வொருவரும் அவருக்கு பிடித்த நடிகர்கள் பெயருக்கு முன்னால் படம் எடுத்துக் கொள்கிறார்கள்..நான் “புரூஸ்லி, சாமுவேல் ஜாக்சன், புரூஸ் வில்லிஸ், டீசல் வாஷிங்க்டன்” பெயருக்கு முன்னால் படம் எடுத்துக் கொண்டேன்….அடுத்து புகழ்பெற்ற வெனிஸ் பீச் சென்றோம்..

எல்லாம் பார்த்து முடித்த பிரிய மனமில்லாமல் விமான நிலையம் அடைந்தோம்..என்ன.. கோவாலுக்கு என்ன ஆச்சுண்ணா கேக்குறீங்க..பக்கத்து சீட் பாட்டி கொடுத்த அதிர்ச்சியில மூணு நாளைக்கு மந்திரிச்சு விட்ட மாதிரியே அலைஞ்சான்..வீடு வந்து சேர்ந்தபின்பு ஏதோ, ஒரு உலகத்தில் இருந்து மற்றொரு உலகத்திற்கு வந்தது போல் இருந்துச்சுண்ணே..கட்டிலில் வந்து சாய்ந்த போது கண்களிலிருந்து இன்னும் மின் விளக்குகள் அணையவில்லை….செல்பேசி அழைத்தது..அண்ணன் ஊரிலிருந்து..

“எப்படியிருக்கீங்க அண்ணே..”

“நல்லா இருக்கேன்டா….லாஸ்வேகாஸ் பயணம் எப்படி இருந்துச்சு..”

“ம்..நல்லா இருந்துச்சு….என்ன பின்னாடி ஏதோ திருவிழா சத்தம் போல கேக்குது..”

“ஆமாடா..நம்ம ஊருல திருவிழால….ஊரே ஜெகஜோதியா இருக்குடா..எங்க பார்த்தாலும் சொந்த பந்தங்களோட கொண்டாட்டம்தான்..நம்ம வீட்டுல எல்லாரும் கட்டுச்சோறு கட்டிக்கிட்டு திருவிழாவுக்கு போயிருந்தோம்..ஆத்துல நிலா வெளிச்சதுல எல்லோரும் உக்கார்ந்து பகிர்ந்து சாப்பிட்டது எவ்வளவு சந்தோசமா இருந்துச்சு தெரியுமா..இந்த சமயத்துல நீ இங்க இல்லாத ஒரு குறைதாண்டா..அம்மா கூட அத நினைச்சு கண் கலங்கிட்டாங்கடா..”

நம்ம ஊரு, நம்ம ஊருதாண்ணே…

Wednesday 2 September, 2009

கனவில் வந்த தேவதை

நான் ஏற்கனவே சொல்லியது போல் தூக்கத்திற்கு என் சொத்தை எழுதி வைத்திருக்கிறேன்..அதுவும் கால் வரை போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு அதிகாலை வேளையில் வரும் தூக்கமே அலாதி சுகம்தான்..என்ன., அடிக்கடி வரும் குறட்டைச் சத்ததினால் பக்கத்தில் உள்ளவர்கள் காண்டாகி பஞ்சை காதில் வைத்து முயற்சித்து தோற்று, கத்தியைத் தேடுவார்கள் என்னைக் குத்துவதற்கு..அதற்கு எல்லாம் சலித்த ஆளா நாம்..கொசு கடிக்குதுன்னு தட்டி விட்டு கண்டினியூ பண்ணுவோம்ல..

சரியாக ஞாபகமில்லை..கல்லூரி காலம் என்று நினைக்கிறேன்., தூங்கும்போது அடிக்கடி ஒரு கனவு வரும்..விஜய் படத்தில் வரும் ரம்பா போல்(இது கொஞ்சம் ஓவருன்னு சொல்லுறது கேக்குது.. ஆனா என்ன பண்ண..வருதே..) ஒரு சிவப்பு உடை அணிந்த தேவதை அப்படியே ஒரு அலை கணக்கா தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கும்..முகத்தைப் பார்க்க எவ்வளவோ முயற்சி பண்ணித் தோற்றுக் கொண்டிருந்தேன்..ஆனால் சொல்லி வைத்தாற் போல் ஆ மின்னல் மாதிரி சருக்னு வரும், சருக்குன்னு போகும்..ஒரு காபி, கீபியை கையில கொடுத்து கொஞ்சம் மெதுவா வந்தாதானே, சுமூகமா ஒரு முடிவுக்கு வர முடியும்..ஆனால் ஒவ்வொரு தடவையும், அது(அதா..அடங்கொய்யாலே..) அவுட்ஆப் போகஸ்ஸிலே வருவதால் சில நேரம் கேமிரா வைத்துக் கொண்டு தூங்கலாமோ என்று நினைத்ததுண்டு..

ஆனா ராஜேஷ்குமார் கதையில் வரும் திடுக்கிடும் திருப்பம் போல் கரெக்டா என்னுடைய பிறந்தநாள் அன்னைக்கு மட்டும் கொஞ்சம் பக்கத்தில் வரும்..எப்படியாவது முகத்தைப் பார்த்து விடலாம் என்று நினைக்கும்போது முகம் முழுவதும் ஒளி அடித்தார்போல் பிரகாசமா இருக்கும்..சரி டியூப் லைட்தான் எதுவும் ஆப் பண்ணாம தூங்கிட்டமோ என்று நினைச்சா, அதுவும் ஆப் ஆகித்தான் இருந்துச்சு..அப்படியே பக்கத்தில் வரும்..

என் அருகில் நெருக்கமா வர எனக்கு வேர்த்து கொட்டியது..நாக்கு வேற உலர்ந்து போகும்(யாரும் தப்பா பின்னூட்டம் போட்டுடாதீங்கண்ணே..) அப்படியே ஆசையா வந்து பின்னால் இருந்து ஒரு கத்தியை வைத்து என் வயிற்றில் ஒரே குத்து…சதக்…

“அய்யோ..அம்மா..”

“என்னப்பா எதுவும் கெட்ட கனவு கண்டியா..”

“ஆமாம்மா..வந்து ஒரு சிவப்பு டிரெஸ் போட்டுக்கிட்டு…”

“அது உங்க பாட்டியா இருக்கும்..இந்தா தாத்தா போட்டாவை பக்கத்தில் வைச்சிக்கிட்டு தூங்கு..”

“ஆஹா..வேணாம்மா வேற மாதிரி ஆகிடும்….ஏம்மா, பாட்டி 25 வயசுலயே செத்துப் போயிடுச்சா..”

எங்கம்மா என்னை அதிர்ச்சியா பார்த்தாங்க..அதன் தாக்கம் காலையில் அப்பாவுடன் என் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருந்தபோதுதான் விளங்கியது..

இந்த கனவே எனக்கு தொடர் கனவாகிப் போனது..சிவப்பு உடை தேவதை, அவுட் ஆப் போகஸில் ஓடிக் கொண்டே இருப்பதும், கரெக்டா பிறந்த நாள் வரும்போது நேர்ந்துவிட்ட மாதிரி பக்கத்தில் வந்து குறி வைச்சு கத்தியால் குத்துவதும் எனக்கு பழகிப் போனது..

போன வாரத்தில் தேவதையின் தூரம் குறைவாகி கொண்டே இருந்தது..இந்த தடவை கேட்டே விடுவது என்றே முடிவு பண்ணிட்டேன்..இல்லை அட்லீஸ்ட் முகத்தையாவது பார்த்து விடணும்..பக்கத்தில் வந்தது தேவதை..கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தேன்..ஒன்றும் தெரியவில்லை..சடக்கென்று மறைந்து போனது….

சடக்கென்று எழுந்து விட்டேன்..சத்தம் கேட்டு என் மனைவி சமையலறையில் இருந்து ஓடி வந்தாள்..

“என்னங்க..என்ன ஆச்சு..”

“ஒன்னுமில்லை..ஒரு கெட்டக் கனவு..”

அரைத் தூக்கத்தில் இருந்ததால் சரியாக பார்க்க முடியவில்லை..கொஞ்சம் கண் முழித்துப் பார்த்தால் என் மனைவி கையில் கத்தி. சமையலறையில் இருந்து வந்திருந்தாள் போல...இன்னும் கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறேன், அவள் அணிந்திருந்தது சிவப்பு நிற உடை…எனக்கு தூக்கி வாரிப் போட்டது…திடுக்கிட்டு காலண்டரைப் பார்க்கிறேன்..செப்டம்பர் 3. நாளை செப்டம்பர் 4, என் பிறந்த நாள்….