Wednesday 28 October, 2009

நன்றியோடு விடைபெறுகிறேன்

தலைப்பைப் பார்த்ததுமே “சரியான முடிவு எடுத்தீங்க..”, “வயித்துல பாலை வார்த்தீங்க” ன்னு சந்தோசப்பட்டு பின்னூட்டம் போட்டுடாதீங்கண்ணே..எல்லார்ட்டயும் மிஞ்சி இருக்குற உயிரை எடுத்துட்டுதான் பதிவுலகத்தை விட்டுப் போவேன்..விஷயம் என்னவென்றால், நான் அமெரிக்கா வந்த கடமை இனிதே முடிந்தது(கொஞ்சம் தெளிவா சொன்னா, “துரத்தி விடுறாயிங்க..) அதனால நவம்பர் கடைசி நம்ம ஊருக்கு கிளம்புறேன். அதே கம்பெனியில, அதே பிராஜெக்ட்ல, இங்க வேலை பார்க்குறவயிங்க உசிரை எடுக்கப் போறேன்..

வீட்டுல இருக்குறவங்க எல்லாரையும் பார்க்கப்போறோம்னு சந்தோசமா இருந்தாலும், மனசோட மூளையில “அடடா..சொந்த வீடு மாதிரி 2 வருசம் இருந்துட்டு போறோமே” என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது..

எப்போதும் சினேகமாக சிரிக்கும் பக்கத்து வீட்டு அமெரிக்க குழந்தை, வெளியில் வந்தால் ஏதோ அதனுடைய உணவை அபகரிக்கப்போவதாய் நினைத்து உர்ரென்று பார்க்கும் டேஞ்சர் நாய், ரோட்டில் நின்று கண்ணை அகலத்திறந்து பார்த்தால் எந்திர ரோபோக்கள் போல் திரியும் கார்கள், யாரென்று தெரியாவிட்டாலும் நேருக்கு நேர் பார்க்கும்போது புன்னகை சிந்தும் மனிதர்கள், சூரியனோடு எப்போதும் மல்லுக்கு நிற்கும் மெல்லிய குளிர், “நாங்க எல்லாம் அழகுதாண்டா..” என்று இருமாப்போடு நிற்கும் பசுமை நிறைந்த மரங்கள், அரைகுறையாய் ஆடை அணிந்து இளைஞர்களின் மனதில் தினமும் புட்பால் விளையாடும் அபார்ட்மெண்ட் ரிஷப்சனிஸ்ட், இரவில் நிலா வெளிச்சத்தோடு சண்டை போடும் மின்விளக்குகள், “இவிங்களுக்கெல்லாம் குளிர் அடிக்காதா” என்று பார்த்தவுடன் கேட்கத்தோன்றும் யுவதிகள், எப்போதும் “பேஸ்பால்” கமெண்டரி ஓடிக் கொண்டிருக்கும் கேண்டின் தொலைக்காட்சி, இப்படி ஒரு கடையில வாங்குவதற்கு கொடுத்து வைத்திருக்கனும் என்று ஏங்க வைக்கும் “வால்மார்ட்”, பர்கர் சாப்பிடுவதை தினப்பழக்கமாக்கும் வீதிதோறும் “மெக்டொனால்ஸ்”, எப்போதும் மர்மமான புன்னைகயுடன் தீபம் ஏந்தி நிற்கும் சுதந்திர தேவி சிலை,…60 வயது தாத்தா கார் ஓட்டினாலும் கிளிப்பிள்ளைக்கு சொல்லுவது போல் விளக்கும் போக்குவரத்து விதிகளின் போர்டுகள், திரைப்படங்களில் கனவு காட்சிகளில் மட்டுமே பார்க்க முடிந்த பனி மழை, கொஞ்சம் ஏமாந்தாலும் சேர்த்து வைத்த சொத்து எல்லாவற்றையும் பறித்துக் கொள்ளும் கேசினோக்கள், திருட்டுத்தனமாக போக நினைக்கும் நைட் கிளப்புகள், “ஹேய் டியூட்..ஹவ் ஆர் யூ” என்று தெனாவட்டாக கேட்கும் 4 வயது குட்டிப் பிசாசுகள்…”சீ..ரொம்ப மோசம்” என்று கண்ணை மூடிக்கொள்ள முயன்றாலும், விரல் இடுக்கில் கண்ணைத் திறந்து ஆவலாய் பார்க்கத் தோன்றும் நீச்சல் குளங்கள், சரவண பவன் மீல்ஸை கீழே கொட்டி சாம்பாரோடு சாப்பிடத் தோன்றும் சாலைகள், “என் புருசன் சாகக்கிடக்குறாரு..வந்து காப்பாத்துங்க” என்று கேட்டால் “சாரி…அப்பாயிண்ட்மென்ட் இருக்கா” என்று கேட்கும் மருத்துவமனைகள், எப்படா மாட்டுவாயிங்க என்று சாலை ஓரம் பதுங்கி நின்று கொடுத்த காசுக்கு மேல் வேலை பார்க்கும் 911 காவலர்கள், லஞ்சம் என்ற வார்த்தையையே அகராதியில் பார்த்திராத அரசு அலுவலகங்கள்…இன்னும் எவ்வளவோ…

நம்ம ஊருக்கு வந்து ஒரு நாளைக்கு மட்டும் எதையோ பிரிந்து வந்தார்போல் இருக்கும் என நினைக்கிறேன்..அடுத்த நாள், முனியாண்டி விலாஸில் 4 புரோட்டாவை சால்னாவில் ஊற வைத்து, பக்கத்தில் ஒரு ஆப்பாயில் வைத்து ஒரு சாத்து சாத்துனா..”போங்கையா, நீங்களும் உங்க அமெரிக்காவும்” என்று தோணும்…

Saturday 24 October, 2009

திரை நட்சத்திரங்களின் தீபாவளி

என்னான்னு தெரியலண்ணே..எனக்கு மட்டும் வில்லங்கமான கனவா வருது….ஒருவேளை சாப்பிடுற சாப்பாடு சரியில்லையோ, இல்லாட்டி, கிழக்கு பக்கம் தலைவைச்சு படுக்க கூடாதோ..தீபாவளிக்கு நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டு தூங்கினா வர்ற கனவை பாருங்கண்ணே..

நண்பன் கோவாலு நிருபராகி, எல்லா திரை நட்சத்திரங்களிடம் தீபாவளிக்காக பேட்டி எடுக்க செல்லுகிறான்..முதலில் அவன் செல்லும் இடம், ராகவேந்திரா மண்டபத்திற்கு

கோவாலு : வணக்கம் சூப்பர்ஸ்டார்

ரஜினிகாந்த் : ஆ..வணக்கம், வணக்கம்..என்னம்மா கண்ணு..உனக்கு என்ன வேணும்

கோவாலு : சார்..ஒன்னுமில்லை..மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லனும்

ரஜினிகாந்த் : கண்ணு, நான் சந்தோசமா இருந்தா நிறைய பேசுவேன்..இப்ப கோவமா இருக்கேன்..

கோவாலு : அய்யோ சார்..பயமா இருக்கு..நீங்க கோபப்படுறுதலால சென்னையில எதுவும் சுனாமி வந்துருமா சார்..

ரஜினிகாந்த் : என்ன கிண்டலா…இதப்பார்..உன் வழியில நான் வரல அதுபோல என் வழியில..ஹா..ஹா..ஹா..

கோவாலு : சரிங்க சார்..நான் தள்ளியே நின்னுக்கிறேன்..

ரஜினிகாந்த் : ஏம்பா..அவுங்க எல்லாம் சுகத்துக்காகவா தப்பு பண்றாங்க..எல்லாம் 2 வேளை சோத்துக்காகதாம்பா..

கோவாலு : ஆமா சார்..கரெக்டுதான்..அப்படியே கொள்ளை அடிக்கிறவங்க..கூலிக்கு கொலை பண்றவங்களும், 2 வேளை சோத்துக்காகதான சார் பண்றாங்க….அவுங்களையும் விடுதலை பண்ணிரலாமா சார்..அது தவிர இந்த டயலாக்கை ஏற்கனவே கண்டன கூட்டத்துல பேசிட்டீங்க சார்..

ரஜினிகாந்த் : ஓ..ஏற்கனவே பேசியாச்சா..இப்ப பாருங்க..கலைஞர் தென்னகத்தின் முக்கியத்தலைவர்..அவர் ஒரு இலக்கியவாதி..

கோவாலு : சார்..இதுவும் ஏற்கனவே கலைஞருக்கான பாராட்டு விழாவில் பேசிட்டீங்க..

ரஜினிகாந்த் : ஓ..மை காட்..இதக் கேளுங்க …”ஜெயலலிதா, ஒரு தைரியலட்சுமி..அவர்கள் ஆட்சியில் தமிழ்நாடு செழிப்பாக இருக்கும்..”

கோவாலு: என்ன சார்..இதுவும் ஏற்கனவே பேசியாச்சு,..அடுத்த தடவை அம்மா முதலமைச்சர் வர்றப்ப பேசிக்கலாம்..

ரஜினிகாந்த் : யோவ்..என்ன விளையாடுறீங்களா..ம்ம்ம்ம்ம்…(மிகவும் யோசித்து) நான் அரசியலுக்கு வருவனான்னு தெரியாது..கடவுள்தான் முடிவு எடுக்கணும்..அப்புறம், இதுதான் என்னுடைய கடைசிப் படம்..

கோவாலு : சார்..டைமிங்க் மிஸ் ஆயிடுச்சே..இது அடுத்த படம் ரிலிஸ் ஆகுறதுக்கு முன்னாடி பேச வேண்டிய டயலாக் ஆச்சே..

ரஜினிகாந்த் : போங்கயா..நீங்களும் உங்க பேட்டியும்..எச்சச்ச கச்சச்ச..எச்சச்ச கச்சச்ச….இது எப்படி இருக்கு..

கோவலு : சூப்பர் ஸ்டார்..என்ன ஸ்டைல்..என்ன தெளிவான பேச்சு..என்ன ஒரு இலக்கியம்..என்ன ஒரு விளக்கம்..இந்த வார்த்தைகளில எவ்வளவோ அர்த்தம் அடங்கி கிடக்கு….தலைவர் அரசியலுக்கு வர்றது முடிவு ஆகிடுச்சு..நான் இப்பவே என் பொண்டாட்டி, அம்மா கால் கையில இருக்குற நகையெல்லாம் வித்து கும்பாபிஷேகத்துக்கும், கட் அவுட் பால் ஊத்துறதுக்கும் ரெடி பண்றேன்..

“நாசமா போங்கயா..இதனாலதான் தமிழன் எங்க போனாலும் அடிவாங்குறான்….” கணீர் குரல் கேட்டு திரும்பி பார்த்தால் உலகநாயகன் கமல்..

ரஜினிகாந்த் : வாவ்..வாங்க நண்பரே..என் நண்பன்யா..என் நண்பன்..

கமலஹாசன் : அதெல்லாம் இருக்கட்டும்…நீங்க ஏன் கமல்-50 நிகழ்ச்சிக்கு வர்றலே..

ரஜினிகாந்த் : அய்யோ..என்னப்பா..அதுக்குள்ள மறந்துட்டயா..மேடையில நம்ம ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு கண்ணீர் விட்டோமே..

கமலஹாசன் : ஆங்..நேத்து சகிரா..சீ..அகிரா படம் பார்த்ததில கொஞ்சம் கன்பியூஸ் ஆகி மறதி ஆகிடுச்சு..,என்ன படம்யா அது..உலகத்தரம் படம்..படம்னா அதுமாதிரி எடுக்கனும்..

கோவாலு : சார்..என்னசார்..உலகத்தரம்னு ஒன்னுமேயில்லைன்னு நீங்க தானே போன பேட்டியில சொன்னீங்க..

கமலஹாசான் : யோவ்..ஏதோ பேட்டி பார்த்தோமா..கைதட்டுனுமோன்னு போயிடனும்..ஆராய்ச்சியெல்லாம் பண்ணக்கூடாது….ஆமா..நீ யாரு..கமல்-50 க்கு வந்தியா..?? உன்னை மாதிரி ரசிகனுக்காகதானே நிகழ்ச்சி வைச்சிருந்தோம்..

கோவாலு : அய்யோ ஆமா சார்..கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வைச்சதெல்லாம் செலவழிச்சு மெட்ராஸ் நிகழ்ச்சி பார்க்க வந்தேன் சார்..உள்ளார விட மாட்டிங்குறாயிங்க..வி.வி.ஐ.பிங்களுக்குதான் அனுமதின்னு சொல்லிட்டாயிங்க…அப்புறம் என்ன பண்றது..பக்கத்துல

“ஷாம் – 8 ½” ன்னு ஒரு நிகழ்ச்சி வைச்சுருந்தாய்ங்க..அதுக்கு போயிட்டேன்..

“ஷாம் – 8 ½”..யா..எங்கயா நடக்குது..எப்படி கவர் பண்ணாம போயிட்டோம்..” குரல் கேட்டு திரும்பி பார்த்தால் விஜய் டீ.வி கோபிநாத்..

கோபிநாத் : ஷாம்..இந்திய வரலாற்றையே திருப்பிப் போட்டவர்..உலகச்சினிமாவை நோக்கி தமிழனை திருப்பியவர்….தொலைநோக்கு பார்வை உடையவர்..ஷாமும் தமிழும்..ஷாமும் இலக்கியமும்..இப்பேர்பட்ட மனிதருக்கு விழா எடுப்பதில் விஜய் டீ.வி உவகை கொள்கிறது..(கேமிராமேனைப் பார்த்து)..உஷாரா இருக்கனும்..யாராவது அழுக ஆரம்பிச்சா விடக்கூடாது..குளோசப் ஆக்கிடனும்..

கமலஹாசன் : அடப்பாவிங்களா..எனக்கு சொன்னா வார்த்தைகளையே அப்படியே ஷாமுக்கு போடுறீங்களேயா..அது என்னயா “ஷாம் – 8 ½”??

கோவாலு : அது ஒன்னுமில்ல சார்.ஷாம் வீட்டு டிரைவர் வேலைக்கு சேர்ந்து எட்டரை வருசம் ஆச்சாம்..அதுதான்..

“அடப்பாவிகளா..அடப்பாவிகளா..” குரல் கேட்டு திரும்பிபார்த்தால் விவேக்

ரஜினிகாந்த் : என்ன விவேக் டென்சன்..

விவேக் : பின்ன என்ன சார்..ஏதோ ஒரு நடிகை பிகினி போட்டு தீபாவளி வெடிவெடிச்சுச்சாம்..அத போட்டாவோடு போட்டுட்டாயிங்க சார்..இவிங்கட்டெல்லாம் ஒன்னு கேக்குறேன்..உங்க ஆயாவெல்லாம் ரெயின் கோட்டு போட்டுட்டா, வெடி வெடிக்கும்..ஒன்னு பண்றீயா..உங்க ஆயா போட்டாவை எனக்கு கொடு..நான் அதை மார்பிங்க் பன்ணி..

(எல்லாரும் காதைப் பொத்திக் கொள்கின்றனர்..)

“விடாதீங்க சார்..இவனுங்க எல்லாத்தையும் நசுக்கனும் சார்..ஆதவன் பிளாப்புன்னு சொல்றாயிங்க சார்..” கோபக்குரல் கேட்டு திரும்பிபார்த்தால் சூர்யா..கோபாலைப் பார்த்தவுடனே நிருபர் என்று உணர்ந்து ஜகா வாங்குகிறார்..

சூர்யா : அய்யோ..நான் சொன்னதை எல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க..நான் ஏதோ ஒரு நிருபரைத்தான் சொன்னேன்..பத்திரிக்கை சினிமாவுக்கு ரொம்ப அவசியம்…”

“அங்க ஏதோ சத்தம் கேக்குதே….அது யாரு மூணு பேரு..”

“அப்பாஆஆஆஆஆஆஆஅ..இந்த குறுந்தொகையில…” சிவக்குமார் டயலாக் பேசிக்கொண்டே வர எல்லாரும் டெர்ராகிறார்கள்..

“ஆதவன் பிளாப் தான்.. இதுக்கு ஒத்துக்குறவங்க எல்லாம் கையத் தூக்குங்க….” சத்யராஜ் பந்தாவா என்டர் ஆக..சூர்யாவும் மறந்து போய் கையை தூக்குகிறார்...

“ஏ..டண்டனக்கா..ஏ..டனக்குனக்கா..சிம்பு வந்து 25 வருசம் ஆகுதுடா..ஏண்டா..யாரும் சிம்பு-25 நடத்தல..ஈழத்தமிழன் சந்தோசமா இருக்க சிம்பு – 25 நடத்த வேண்டியதுதானடா..தமிழனெல்லாம் ஏமாளியாடா…ஏ..டண்டனக்கா..ஏ..டனக்குனக்கா..”

டீ.ஆர்..டெர்ராக என்டர் ஆக..எல்லாரும் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடுகிறார்கள்..

(நீங்க..எங்க ஓடுறீங்க..கிழே உள்ள ஓட்டை போட்டுருங்கப்பூ…)

Saturday 17 October, 2009

தீபாவலி(ளி)

தீபாவளி..என்னால் சீக்கிரம் மறக்க முடியாத நாள்..அம்மாவிடம் முதலில் அடிவாங்கிய நாள்..என் அம்மா அதுவரைக்கும் என்னை அடித்ததே இல்லை..என்ன குறும்பு செய்தாலும் ஒரு அதட்டலுடன் முடித்துக் கொள்வார்கள்…

என் பக்கத்து வீட்டில் அப்போதுதான் ஒரு பணக்காரர் குடிவந்திருந்தார்..அப்போதைய காலங்களில் எங்கள் குடும்பம் நடுத்தர வர்க்கத்துக்கு சற்று கீழ்தான் இருந்தது..மாச சம்பளத்தை எதிர்பார்த்துதான் பிழைப்பு ஓடியது..நான் 4வது வகுப்பில் படித்து கொண்டிருந்தேன்..சற்றும் பக்குவம் இல்லாத மனது. கண்ணால் காண்பதையெல்லாம் ஆசைப்படும் வயது..வீட்டில் நிலையைப் பற்றியெல்லாம் யோசிக்கும் பக்குவமில்லை எனக்கு..

அன்றைக்கு தீபாவளி ஆதலால், எங்கள் வீட்டில் தகுதிக்கு ஏற்றார் போல் எனக்கு வெடி வாங்கி குடுத்திருந்தனர்..நானும் சீனி வெடி, லஷ்மி வெடி என்று வெளியில் சென்று வெடித்துக் கொண்டிருந்தேன்..வெடித்து முடித்து விட்டு திண்ணையில் சென்று உக்கார்ந்து வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தேன்..சரமாரியாக வெடி வெடிக்கவே ஆவலாய் பார்த்தால் , எதிர்த்த வீட்டு பணக்கார வீட்டுப் பையன்..விதவிதமான வெடிகள்..ஆயிரக்கணக்கில் வாங்கியிருப்பார்கள் போலும்..புத்தாடை அணிந்து கொண்டு கை நிறைய வெடிகள்..முகம் நிறைய புன்னகை..நிமிடத்திற்கு ஒரு வெடி..அனைத்தும் காஸ்ட்லி..என் மனம் ஏங்கிப் போனது.

என் மனத்தைப் புரிந்து கொண்டோ என்னமோ என்னை அழைத்தான். மனம் நிறைய சந்தோசத்தோடு சென்றேன்..

“ராசா..எங்க வீட்டில எவ்வளவு பொம்மை கார் இருக்கு தெரியுமா.. வந்து பாரேன்..”

அந்த பொம்மைகளைப் பார்க்கும்போது ஆசையாக இருந்தது..நினைத்தாலும் அந்த உயர்ரக பொம்மை கார்களை வாங்க முடியாது..அனைத்து ஆட்டோமடிக் கார்கள்..எனக்கு பற்றிக் கொண்டு வந்தது..நேராக அம்மாவிடம் ஓடினேன்..

“அம்மா..எனக்கும் எதிர்த்த வீட்டுப் பையன் வைச்சிருக்குற மாதிரி கார் வேணும்..” அடம்பிடிக்க ஆரம்பித்தேன்..அம்மாவுக்கு புதிதாய் இருந்தது..நான் இதுபோல எப்போதும் அடம் பிடிப்பவனல்ல..

“ராசா..அதெல்லாம் விலை ரொம்ப ஜாஸ்திப்பா..அப்பா வந்தவுடனே உனக்கு ஒரு நல்ல பொம்மைக்கார் வாங்கித்தர சொல்லுறேன்..”

“அதெல்லாம் எனக்கு வேண்டாம்..எனக்கு இப்பயே அந்த மாதிரி கார் வேணும்..” தரையில் புரண்டு அழுகிறேன்..அப்போது கூட அம்மாவுக்கு கோவம் வரவில்லை..

“வேணான்டா கண்ணு..அந்த கார் 2000 ரூவாடா..நம்ம ஒரு மாசம் சம்பாதிக்கிறதே அவ்வளவுதான்டா..”

எந்த சமாதானமும் என் தலையில் ஏறவில்லை..அம்மாவாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை..என் மனம் முழுதும் இயலாமை ஆக்ரமிக்க., கோபத்தோடு கொல்லைப்புறம் ஓடினேன்..அங்கு ஒரு சிறிய கிணறு ஒன்று இருக்கும், ஆளை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணிரோடு….பொம்மை கார் ஒன்று வாங்கித்தர முடியாத குடும்பத்தில் நான் ஏன் இருக்க வேண்டும்..இந்த கேள்வியே மனம் முழுவதும் ஆக்ரமித்திருந்தது..அப்படியே கிணற்றில் விழுந்தேன்..

“அய்யோ..எம்பிள்ளை கிணத்துக்குள்ள விழுந்துட்டானே..யாராவது வந்து காப்பத்துங்களேன்..”

என் அம்மா குரல் மட்டும் சன்னமாக கேட்டது..யார் யாரோ வந்தார்கள்..ஒன்றும் என் காதில் விழவில்லை..கண் முழித்துப் பார்த்தால் வீட்டில் நடு அறையில் இருந்தேன்..என்னை சுற்றி பக்கத்து வீட்டுக்காரர்கள்..

“ராசா..கண் முழிச்சிட்டியேடா..ஒரு நிமிசத்துல என் உசிரை போயிடுச்சுடா…”

அம்மா கதறிக் கொண்டே என்னைக் கட்டிக் கொண்டார்கள்..என் உடம்பில் இருந்த தண்ணீரை விட அம்மா கண்களில் அதிகம் இருந்தது..

“என்னை விடுங்க..எனக்கு அந்த காரு வேணும்…நான் திரும்பவும் கிணத்துல விழப்போறேன்..” ஒட முயற்சி பண்ணினேன்..அம்மாவால் இதற்கு மேல் முடியவில்லை..என் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார்கள்..இதுவரை என் அம்மா என்னை அப்படி அறைந்ததில்லை..ஆனால் ஒன்று கவனித்தேன்..அந்த அறையில் சுத்தமாக கோபமில்லை..அய்யோ..கிணற்றில் விழுந்துவிடுவானோ என்ற பயமே இருந்தது..அறையும்போது கூட எனக்கு வலிக்க கூடாது என்றே அறைந்த மாதிரி இருந்தது…..

பக்கத்து வீட்டுக்காரர்கள் அம்மாவை சமாதானம் செய்தார்கள்..கிணற்றில் விழுந்த வலியிலும், பொம்மைக் கார் கிடைக்காத ஆற்றாமையிலும் தூங்கிப் போனேன்..உடம்பு முழுவதும் வலியில் அப்படி ஒரு தூக்கம்..காலையில் கண் முழித்துப் பார்த்தால்..பக்கத்து வீட்டுப் பையன் வைத்திருந்தார் போலவே ஒரு பொம்மை கார்..அப்படியே அதை எடுத்து நெஞ்சில் அணைத்துக் கொண்டேன்..அதை எடுத்து கீழே வைத்து அழுத்தி தள்ளி விட்டேன்..என் மனம் போலவே அதுவும் சந்தோசத்தில் சென்று சுவற்றில் முட்டியது..

“அம்மா..அம்மா..எப்பம்மா கார் வாங்கின..சூப்பர்மா..எப்படிப் போகுது தெரியுமா…நான் இப்பயே பக்கத்து வீட்டுக்காரங்கிட்ட காட்டிட்டு வர்றேன்..”

சொல்லி பதிலுக்கு காத்திராமல் ஓடினேன்.”நானும் கார் வைத்திருக்கிறேன் தெரியுமா..எங்க அம்மா வாங்கிக் குடுத்தது” வாய் வலிக்க கத்தினேன்..உண்மையான ஒரு காரே என் கையில் கிடைத்தது மாதிரி இருந்தது… முடிந்த அளவுக்கும் காரை ஓட்டி விளையாண்டு கழித்தேன்..தூசி கூட ஒட்டக் கூடாது என்று அடிக்கடி சட்டை நுனியால் துடைத்தேன்..

“ராசா..வா..வந்து சாப்பிட்டு விளையாடலாம்..”

அம்மா அழைத்தார்கள்..அப்போது கூட கார் கிளம்பி போவது போலவே, பொம்மைக் காரை தரையில் தேய்த்துக் கொண்டே வீடு நோக்கி ஓடினேன்..

தட்டை முன் வைத்து விட்டு அம்மா சமயலறைக்கு உணவு எடுக்க சென்றார்கள்..எனக்கு சாப்பாடு எல்லாம் முக்கியமாக தோணவில்லை..என் கண் முழுவதும் காரின் மேலேயே இருந்தது..அம்மா அதைக் கவனித்திருக்க வேண்டும் போல..

”ராசா..சாப்பாடை சாப்பிட்டு அப்புறம் விளையாடலாம்..முதல்ல சாப்பிடு..நல்ல பிள்ளைல்ல..”

சொல்லிவிட்டு குனிந்து பரிமாற ஆரம்பித்தார்கள்..அப்போதுதான் கவனித்தேன் அம்மாவை…நேற்று அணிந்திருந்த தங்கத்தால் ஆன தாலி சங்கிலி காணாமல் போய் தாலிக்கயிறு தொங்கி கொண்டிருந்தது,,..பரிமாறும்போது எப்போதும் சிணுங்கி கொண்டே இருக்கும் இரண்டு தங்க வளையலுக்குப் பதில் பிளாஸ்டிக் வளையல்கள் மாறி இருந்தது…

Saturday 10 October, 2009

ஆறிப்போன இட்லி,காய்ஞ்சுபோன தோசை,ஊசிப்போன பொங்கல்,நமத்துப்போன வடை,கெட்டுப்போன சட்னி,சாம்பார்

ஊசிப்போன பொங்கல்

அண்ணே..பதிவுலகத்தில தெரியாம நுழைஞ்சுட்டுனேன்னு பயமா இருக்குண்ணே..நேத்து ஒரு பதிவு படிச்சப்பிறகுதான் இந்த நினைப்பு வந்துச்சு..ஒரு பதிவர், இன்னொரு பதிவரை வரவழைத்து மூக்குல ஒரு குத்து குத்துனதுல ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு போய் காப்பாத்தியிருக்கிறாயிங்க..அண்ணே..உங்களில் யாரையாவது பத்தி தெரியாம எந்த பதிவுலயாவது கிண்டல் பண்ணியிருந்தா, மனசுக்குள்ள வைச்சுக்காம மன்னிச்சிருக்கண்ணே..அதை நினைப்புல வைச்சுக்கிட்டு சென்னையில ஏதாவது பதிவர் சந்திப்புக்கு வர்ரப்ப மூக்கைப் பார்த்து குத்திப்புடாதீங்கண்ணே..மனிசனுக்கு வாக்கு முக்கியமோ இல்லையோ, மூக்கு முக்கியம்னே..(யாருண்ணே..அது..மூக்குல குத்து வாங்குறதுக்கும் ஒரு முஞ்சி வேணும்னு பின்னூட்டம் போடுறது)

கெட்டுப்போன சட்னி, சாம்பார்

விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்று தினமலர் படத்துடன் செய்தி போட்டது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு கண்டனக் கூட்டத்தில் நடிகர்கள் பேசியது என்பது என் கருத்து..அதுவும் நடிகர் விவேக் பேசியது ரொம்ப ஓவர்..உணர்ச்சிகளுக்கு அடிமையானவன் தான் மனிதன்..அதை யார் அடக்கி ஆள்கிறானோ, அவன் தான் சிறந்தவனாகிறான். ஆனால் பேசிய சில நடிகர்களைத் தவிர அனைவரும் கோப உணர்ச்சிக்கு அடிமையாகிப் போனார்கள்.

அதுவும் சின்னக் கலைவாணர், பத்மஸ்ரீ பட்டம் வாங்கிய விவேக் “உங்க ஆயாவெல்லாம் ரெயின் கோட்டு போட்டா குளிக்கிறாங்க” என்றபோது நமக்கே கோபம் வந்தது. மிகவும் ஆச்சர்யமானது நடிகர் சூர்யா பேசியது..மனிதர் படத்தில் நடிக்கிற நடிப்பைப் பார்த்து “மெச்சூரிட்டியாகி” விட்டார் என நினைத்தால்..ம்..ஹூம்..இரண்டு படி கீழிறிங்கி விட்டார்..சூர்யா, கமலிடம் நடிப்பைத் தவிர கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..

இதுல விஜயகுமார் அண்ணணும், அருண்விஜய் அண்ணணும் பேசியதுதான் சரியான காமெடி..பத்திரிக்கை அலுவலகத்தில் போய் நாலு பேரை வெட்டி போட்டு வந்திருப்பார்களாம்..அண்ணே..இது என்ன சினிமாவா..ஹீரோ மாதிரி தூக்கிப் போட்டு பந்தாடுறதுக்கு..நீங்க வந்து வெட்டுற வரைக்கும் எல்லாரும் தலைக்கு எண்ணை தடவிட்டு கழுத்தை காட்டிக்கிட்டு இருப்பாயிங்களா….சினிமாவுக்கு வந்துட்டா நாலு பேரு கவனிச்சிக்கிட்டே இருப்பாயிங்கண்ணே..பார்த்துக்குங்க..சேரன் பேசியது எந்த வீடியோவிலயும் காணவில்லை..யாராவது வைச்சிருந்தா கொஞ்சம் கொடுங்கண்ணே..ஆட்டோகிராப் என்ற உணர்ச்சிமிக்க படைப்பைத் தந்த அவரு எப்படி உணர்ச்சிவசப்பட்டுருக்காருன்னு பார்ப்போம்.

ஆறிப்போன இட்லி

நடிகர்கள் சரத்குமார், ராதிகா, ஷகீலா, மும்தாஜ், முதல்வருடன் சந்திப்பு..ஏன்ணே..நான் சென்னை வந்தா எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா..இல்லாட்டி நானும் நடிகர் சங்கத்தில உறுப்பினர் ஆகணுமா..என்ன ஆச்சு, எவ்வளவோ ஏழை மற்றும் நடுத்தர மக்கள் முதல்வரை சந்தித்து தங்கள் கஷ்டத்தை சொல்ல வருடக்கணக்காய் காத்திருக்கும்போது இவர்களுக்கு மட்டும் எப்படி உடனே அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கிறது….பல ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யும் நம் முதலமைச்சர், இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க வேண்டாமென்பது என் கருத்து..இதைச் சொல்ல உனக்கு என்ன உரிமையிருக்கிறது என்று கேட்டால், நானும், என் வீட்டிலுள்ள 8 பேரும் தி.மு.க வுக்குதான் இதுவரை ஓட்டுப் போட்டுள்ளோம் என்று நெஞ்சை நிமிர்த்தி கூக்குரலிட்டு சொல்லுவேன்(என்னண்ணே..கமல் பேசுற மாதிரி, ஒரு புளோவா வருதா..அது சரி..கூடிய சீக்கிரம் வீட்டுக்கு ஆட்டோ வர்றதை யாரு தடுக்க முடியும்)

காய்ஞ்சுபோன தோசை

ஒபாமாவுக்கு நோபல் பரிசு சர்ச்சையைக் கிளப்பியிருந்தாலும், தமிழர்க்கு நோபல் பரிசு கிடைத்ததை நினைத்து ரொம்ப பெருமையா இருக்குண்ணே..முதலில் ஏ.ஆர் ரகுமான், பின்பு வெங்கி என்று தமிழன் உலக அளவில் முன்னேறுவதை பார்த்து “நான் தமிழன்” என்று தெருமுனையில் நின்று சத்தம் போடனும்னு ஆசையா இருக்குண்ணே..ஆனா “நியூசன்ஸ்” கேஸ்ல உள்ள போட்டுருவாயிங்களான்னு பயமா இருக்குண்ணே..

நமத்துப்போன வடை

எங்க ஊரு சோழவந்தானுல குண்டு வெடிச்சுருச்சுன்னு கேள்விப் பட்டதில இருந்து கையும் ஓடலை, காலும் ஓடலைண்ணே..அன்னைக்கு எங்க அம்மா அழுதது இன்னும் மனசுக்குள்ள இருக்குண்ணே..தினமும் என் அப்பா மாலை 6 மணிக்கு ரெயில் நிலையத்தில் வாக்கிக் செல்வது வழக்கம். அன்னைக்கு பார்த்து அப்பா மதுரை செல்வதாக சொல்ல, அம்மா வாக்கிங் செல்லுமாறு சொல்லியிருக்கிறார்கள்.பிடிவாதமாக அப்பா மதுரைக்கு செல்ல, தெய்வாதீனமாக தப்பித்து இருக்கிறார்கள். இறந்ததில் ஒருத்தர் எங்கள் பக்கத்து தெருக்காரர்..பக்கத்து தெருவில் டீக்குடிக்க செல்லும்போது, அவர் நேசமாக சிரித்தது இன்னும் மனசுல இருக்குண்ணே..அநியாமாக இரண்டு உயிருண்ணே..அதுவுமில்லாம் போன வாரம் தேக்கடியில் நடந்த படகு விபத்தைக் கேள்விப்பட்ட போது சாப்பிடக்கூட மனசு வரலைண்ணே..இரண்டு விபத்துக்களுமே, பயண விதிகளை மதிக்காத அலட்சியத்தால் வந்தது..எப்பண்ணே இதெல்லாம் மாறும்??..(((

Tuesday 6 October, 2009

விபசாரம் செய்தது யார் யார்???

என்றைக்கும் இல்லாமல் கோவலு இன்னைக்கு ரொம்ப சந்தோசத்தில் இருந்தான்..முகமெல்லாம் ஒரே பூரிப்பு..

“என்னடா கோவாலு..லாட்டரி எதுவும் விழுந்துருச்சா..முகமெல்லாம் 100 வாட்ஸ் பல்பு போட்ட மாதிரி இருக்கு..”

“அதெல்லாம் ஒன்னுமில்லடா ராசா..இன்னைக்கு நியூஸ் படிச்சியா..விபசார வழக்கில நடிகையை கைது பண்ணிட்டாங்கடா..”

“சரி..அதுல சந்தோசப்படுறதுக்கு இருக்கு..”

“என்னடா இப்படி சொல்லிட்ட..உள்ள போனவங்க சும்மா இருப்பாங்களா….”இவுங்களையும் புடிங்கன்னு” ஒரு லிஸ்ட் கொடுத்திருக்காங்க..லிஸ்ட் பார்த்தா, சூப்பர்டா மச்சி..நிறைய பேரு மாட்டிருக்காயிங்கடா..”

“ஓ..அப்படியாடா கோவாலு..அய்யோ..இதுனால இந்திய பண்பாடு, கலாசாரத்திற்கு எதுவும் பங்கம் வந்துருச்சாடா..”

“டே ராசா..கிண்டல் பண்றியா..இவுங்களுக்கெல்லாம் வேணுன்டா..எப்படில்லாம் இருக்காயிங்க பாருடா..படத்துல ரொம்ப நல்லவங்க மாதிரி வர்றாங்கடா..”

“அய்யய்யோ….இனிமேல் அவுங்களை எல்லா படத்திலுயேயும் கெட்டவங்களா வர சொல்லிருவோமாடா..”

“டே..நீ என்ன அவுங்களுக்கு சப்போர்ட்டா..ஒரு மணி நேரத்துக்கு 2 லட்சம் வாங்கிருக்கதா சொல்றாங்கடா..”

“ஹும்….ஒரே ஒரு கேள்வி..இதனால பாமர மனிசனுக்கு ஏதாவது பாதிப்பு வந்திருக்கா..நாட்டோட மானம் ஏதாவது பாதிப்பு ஆயிருக்கா..யாருடா ஒருநாளைக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கிறா..பாமரனா..கோடிஸ்வரனா..நம்மளெல்லாம் ஒரு லட்சம் சம்பாதிக்குறதுக்கு 6 மாசம் ஆகுதேடா…”

“போடா..உங்கிட்ட சொன்னேன் பாரு..அதவிடு..அந்த லிஸ்ட்ல இருக்குற நடிகைகளோட படம் போட்டிருந்தாயிங்க பாரு..வயசானலும் செமயா..****** “

“சரி கோவாலு..இப்ப சொல்லு..அவுங்க உடம்புல இருக்குறது அசிங்கமா..இல்ல உன் மனசில இருக்குறது அசிங்கமா..”

“போடாங்க…”

கடுப்பாகி ஓடியே போயிட்டான்..எனக்கு ஒன்றும் புரியவில்லை..கைது செய்யப்பட்ட நடிகை மேல் சுமத்தப்பட்ட குற்றம் “விபசாரம்”. அது கண்டிப்பாக ஒரு பெண்ணால் மட்டும் செய்ய முடியாது..அப்படியானால் அவருடன் அந்த குற்றத்தை செய்த ஆண்களுக்கு என்ன தண்டனை..

மனசு நிறைய கேள்விகளுடன் வீட்டிற்கு சென்றேன்..நண்பன் தொலைபேசியில் அழைத்தான்..

“என்னடா ராசா..எப்படி இருக்க..”

“நல்லா இருக்கேன்டா..”

“ராசா..சந்தோசமான விசயம்டா..எனக்கு ஒரு பெரிய கம்பெனியல வேலை கிடைச்சிருக்கு..”

“வாவ்..சூப்பர்டா..எப்படா டிரீட்..”

“கண்டிப்பா..ஆனா ஒரே ஒரு சிரமம்டா..நிறைய டாக்ஸ் பிடிக்கிறாயிங்க..மாசம் சுளையா 10,000 போயிடுது..”

“அடப்பாவமே..ஏதாவது பார்மஸியில போய் நிறைய பில் வாங்கி “மெடிக்கல் எக்ஸ்பென்ஸ்” கிளைம் ப்ண்ணு..அப்புறம்..வீட்டு வாடகையை ஏத்திக் காமி..”

“ஆஹா..இப்படியெல்லாம் இருக்காடா..தெரியவே இல்லையே..சூப்பர்டா..உங்கிட்ட நிறைய கேக்கனும்..அப்புறம் கால் பண்றேன்..”

வைத்துவிட்டான்..என் மனைவி, நாங்கள் பேசியதை கவனித்திருப்பாள் போலும்..

“ஏங்க..இது தப்பில்லையா..”

“எது??”

“இப்படி டாக்ஸ் மாத்தி காமிக்கிறது..கவர்மென்ட்டுக்கு இதுனால லாஸ் இல்லையா..”

“அடிப் போடி..டாக்ஸ் கட்டினாலும் என்ன நடக்கப் போகுது..நம்ம காசை வைச்சு அரசாங்கம் எதுவும் கோயில் கட்டப் போறதில்லை..”

என்ன இருந்தாலும் ஒவ்வொருத்தனுக்கும் மனசாட்சி இருக்குமில்லையா..அது நேரம் பார்த்து கேள்வி கேட்டது..”ஏமாற்ற நினைக்கும் நீ ம்னிதனா..”. நாம் பதில் சொல்ல விரும்பாத ஒரே நபர் “மனசாட்சி” தான்..என்னால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை..

மனசுக்கும் மூளைக்கும் போராட்டம் நடக்கும் நேரத்தில் மனைவி அதை கலைத்தாள்..

“என்னங்க..இன்னைக்கு பேப்பர் பார்த்தீங்களா..நடிகையை விபசாரம் பண்ணினதுக்கு கைது பண்ணிட்டாங்களாம்,..”

“ம்..” என்னால் எதுவும் பேச முடியவில்லை..

“சே..படத்துல எல்லாம் எப்படி நல்லவங்களா நடிக்கிறாங்க..எல்லாம் ஏமாத்து வேலைங்க..இப்படி ஏமாத்துறாங்களே..அவுங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்காங்க”

என்னை யாரோ செருப்பைக் கழட்டி அடித்தமாதிரி இருந்தது..பதில் பேச முடியாமல் நகர்ந்து பக்கத்து அறைக்கு சென்றேன்..என் மனம் இதுபோல தவிக்கும் நேரத்தில் நான் செய்வது ஒன்றே ஒன்றுதான்..அலமாரியில் உள்ள பைபிளை எடுத்து கண்களில் படுகின்ற இரண்டு வசனங்களைப் படிப்பது..என்னுடைய கேள்விகளுக்கெல்லாம் அங்கேதான் விடை கிடைக்கும்..மனம் அப்படியே லேசாகி விடும்..அலமாரியில் இருந்து பைபிளை எடுத்து திறந்து படிக்க ஆரம்பித்தேன்..

“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”

Sunday 4 October, 2009

அணு அளவும் நாசமா போங்கடே

போன வாரம் நண்பரின் மகளுக்கு பிறந்தநாள். அப்போது செல்ல முடியாததால், நேற்று அவர் வீட்டிற்கு கிப்ட் எடுத்துக் கொண்டு சென்றேன்..நண்பரின் மகள் பெயர் “ரேணு”. 8ஆம் வகுப்பு படிக்கும் வயதில் உள்ளவர்..அன்போடு வரவேற்கப்பட்டு இருக்கையில் அமர்ந்தேன்..

“ரேணு எங்க..கிப்ட் கொடுக்கனுமே..”

“அவ..கொல்லைப்புறத்துல இருக்கா..”

“கொஞ்சம் கூப்பிடுங்களேன்..அவ கையிலே கிப்ட் கொடுத்துருவோம்..”

“அய்யோ..இப்ப கூப்பிட்டா அவ வரமாட்டாளே…நாமளே போயிருவோம்..”

எனக்கு வியப்பாக இருந்தது..சரி, புள்ள பரிட்சைக்கு படிக்குது..டிஸ்டர்ப் பண்ணாம போயி கொடுத்துருலாம்னு போனா, ஆத்தாடி..தூக்கி வாரிப் போட்டுருச்சுண்ணே..ஒரு பெரிய சுவர் மேல ஏறி நின்னுக்கிட்டு பேலன்ஸ் பண்ணி நடந்துக்கிட்டு இருக்குண்ணே..எனக்கு குலையே நடுங்கிப் போயிருச்சு..

“என்னண்ணே..புள்ளைய சர்க்கஸ்ல எதுவும் சேர்த்து விடப் போறீங்களா..”

“அத ஏம்பா கேக்குற..விஜய் டீ.வியில “அணு அளவும் பயமில்லை” ன்னு ஒரு ரியாலிட்டி ஷோ போடுறாயிங்கள்ள..அதைப் பார்த்த்தில இருந்தே இப்படித்தான்..ஏதாவது சுவர் இருந்தா ஏறி குதிக்கிறா..பல்லி, எலி, கரப்பான் பூச்சி இருந்தா, விரட்டி விரட்டி ஓடுறா..இவ இருக்குற பயத்துலயே ஒரு புழு பூச்சியும் வர மாட்டிங்குது..இப்ப பிஸ்கட் வாங்கித்தர சொல்ற மாதிரி பாம்பு வாங்கித்தரனும்னு அடம்புடிக்கிறா..ஏம்பா, உங்க வீட்டுல ஏதாவது பாம்பு இருந்தா சொல்லுப்பா..தண்ணிப்பாம்பா இருந்தாலும் அட்ஜட் பண்ணிக்கலாம்..ஏதாவது கேட்டா “அணு அளவும் பயமில்லைன்னு கட்டை விரலை உயர்த்திக் காட்டுறா..ஏம்பா, ஏதாவது டாக்டர்கிட்ட காட்டலாம்”

“அடப்பாவி..இந்த வியாதிக்கு பேரு “ரியாலிட்டி ஷோ”போபியா…இது டாக்டர்கிட்ட காட்டினா சுகமாகாது..வீட்டுல டீ.வியா..லேப்டாப்பா??..”

“டி.வி இருக்கு..”

“ரெண்டு மாசத்துக்கு ஆன் பண்ணாதே..முக்கியமா விஜய் டீ.வியை கட் பண்ணு..பாதி சுகமாகிடுவா..”

“ஹூம்..என்ன பண்றது..நல்லா படிக்கிற பொண்ணு..எல்லா நாலேஜ்ஜூம் இருக்கு..தினமும் எல்லா இ-பேப்பரும் படிக்கிறா..எல்லா அரசியல் நிகழ்ச்சிகளும் இவளுக்கு அத்துப்படி….ஐ.ஏ.எஸ் படிக்கனும்னு மூச்சுக்கு மூனு தடவை சொல்லுறா…ஆனால் இந்த விஜய் டீ.வி பார்த்துதான் கொஞ்ச நாளா இப்படி..நீ வேனுன்னா கொஞ்சம் கூப்பிட்டு அறிவுரை சொல்லேன்..”

“அறிவுரைதானே..கண்டிப்பா..எத்தனை பேருக்கு சொல்லி இருக்கோம்….காசே கொடுக்காம கொடுக்குறது இது ஒன்னுதானய்யா..கூப்பிடு..”

“ரேணு..இங்க வா..இங்க வந்து யாரு வந்துருக்கான்னு பாரு..பக்கத்து வீட்டு அங்கிள் வந்து இருக்காரு..”

“பக்கத்து வீட்டு அங்கிளா..யாரு டாடி..அண்டங்காக்காவுக்கு கருப்பு பெயிண்ட் அடிச்ச மாதிரி ஒருத்தர் இருப்பாரே..அவரா…”

கிரகம் புடிச்சதுங்க..சின்னக் குழந்தைக்கு எப்படில்லாம் சொல்லிக் கொடுத்துருக்காயிங்க பாருங்கண்ணே..

“அங்கிள அப்படி எல்லாம் சொல்லக்கூடாதும்மா..ஓடியா..”

ரேணு துள்ளிக் குதித்து ஓடி வந்தாள்..என்னைப் பார்த்துமே..

“அங்கிள் அணு அளவும் பயமில்லை..”

“வாம்மா..ரேணு..பிலேட்டட் ஹேப்பி பர்த்டே..இந்தா கிப்ட்..அதென்ன அனு அளவும் பயமில்லை..”

“அது அங்கிள்..இந்த ஆம்பிளைங்க எல்லாம் எங்களை கொடுமைப்படுத்துறாயிங்களா..அவிங்களை எல்லாம் எப்படி சமாளிக்கனும்னு எங்க அனு ஆண்டி சொல்லிக் கொடுத்து இருக்காங்க..”

“ரேணும்மா..அப்படி எல்லாம் தப்பா சொல்லக் கூடாதும்மா….அனு ஆண்டி எல்லாத்தையும் ஏத்தி விடுறாங்களே..ஒரு நாளாவது அந்தம்மா எதுலயாவது கலந்துகிட்டாங்களா..அதெல்லாம் ரியாலிட்டி ஷோ வுக்குதாதாம்மா..நல்லா பார்த்தேன்னா..அதுல கலந்துக்கிட்டவுங்க யாராவது அழுதா, நல்லா கேமிராவை பக்கத்துல கொண்டு வந்து “நல்லா அழுவுங்க..இன்னும் நல்லா பீல் பண்ணி அழுவுங்க..” ன்னுதான் சொல்லுவாங்க..நல்லா அழுவ அழுவதான் டீ.ஆர்.பி ரேட்டிங்க் கூடும்..”

“நீங்க..சும்மா சொல்லுறீங்க அங்கிள்..எல்லாம் எங்க நல்லதுக்குதான்..அதில்லாம உங்களுக்கும் உபயோகமா இருக்கும்..”

“என்னது..எனக்கு என்ன உபயோகம்..”

“ஆமா..வீட்டுல ஆண்ட்டி அடிக்கிறப்ப..அப்படியே சுவர் ஏறி குதிச்சு ஓடிப் போயிடலாம்ல..”

எனக்கு தூக்கி வாரி போட்டதுண்ணே..எங்க வீட்டுல நடக்குறதெல்லாம் எப்படி லீக் ஆகுதுன்னு தெரியலண்ணே..ஆஹா..இப்படியே விட்டா நம்ம பொழைப்பே நாறிப் போயிருமுன்னு டாபிக்கை மாத்தினேன்..

“ஆமா..நீ டெய்லி நியூஸ் பேப்பர் படிப்பேன்னு அப்பா சொன்னாங்க..வெரிகுட்..எங்க சொல்லு பார்ப்போம்..ஈழத்துல என்ன நடக்குது…”

“அத விடுங்க அங்கிள்..எனக்கு தமிழக அரசுமேல கோவம்..”

எனக்கு பயமா போச்சுண்ணே..

“என்னமா சொல்லுற..”

“பின்ன என்ன அங்கிள்..சினிமாவுல இருக்குர எல்லாத்துக்கும் ஒவ்வொரு அவார்ட் கொடுத்து இருக்காங்க..எனக்கு பிடிச்ச நடிகர் “போண்டா மணி..” வடிவேல்கிட்ட எப்படி அடிவாங்கிறாரு தெரியுமா..அவருக்கு இந்த வருசத்துக்கு சிறந்த நடிகர் கொடுக்கலாமில்ல..ஏன் அங்கிள் கொடுக்கல..அட்லீஸ்ட் ஒரு கலைமாமணி…”

“எனக்கு தெரியலையேம்மா.. ஒருவேளை அடுத்த வருசம் நடிகை புவனேஸ்வரிக்கு கலைமாமணி கொடுக்கறப்ப அவருக்கும் கிடைக்கலாம்..”

“நம்ம வேணா, போண்டா மணி சாருக்கு போன் பண்ணி, கலைஞர் தாத்தாவை புகழ்ந்து ஒரு கவிதை எழுத சொல்லாமா அங்கிள்..”

அடக்கொடுமையே..இது குழந்தை இல்லண்ணே..வீட்டுக்கு ஆட்டோ அனுப்புறதுக்கு இதுவே மீட்டர் மேல காசு கொடுக்கும் போலயே..இடத்தக் காலி பண்றதுதான் பெட்டர்ன்னு நினைச்சு எழும்ப முயற்சி பண்ணினேன்..அடுத்த குண்டைப் போட்டுச்சுண்ணே..

“அங்கிள்..கமல் ஒரு கடவுளா..”

“ஆத்தாடி..அப்படியெல்லாம் இல்லையேம்மா..”

“பின்ன ஏன் அங்கிள்..விஜய் டீ.வியில கோபி அங்கிள் கமல் ஒரு சரித்திரம்..வரலாறு, புவியியல், பூகோளம்..புத்தகம்..கடவுள்..உதாரண புருசன்” னு சொல்லுறாரு..அதுவும் கமல் அங்கிளுக்கு முன்னாடியே..கமல் அங்கிளுக்கு கூச்சமா இருக்காதா..”

“தெரியலையேம்மா..வீட்டுல ஏதோ குக்கர் சத்தம் கேட்குது..நான் வேணா அப்புறம் வரட்டா..”

“இருங்க அங்கிள்..என் கேள்விக்கு பதில் சொல்லுங்க..அப்புறம்..கமல் அங்கிளோட பேட்டி காணுறப்ப..ஒரு பொண்ணு..”கமலைப் பார்த்தது நான் செய்த பாக்கியம்” ன்னு கட்டிப்பிடிச்சு அழுகுது..அவரும் நல்லா அழுவுறாரு..இதுல கோபி அங்கிள் வேற..நல்லா அழுவுங்க..கேமிராமேன்..நல்லா போகஸ் பண்ணுங்க சொல்லாத குறைதான்..ஏன் அங்கிள் மூச்சுக்கு மூணு தடவை, கமல் அங்கிள்., “என் ரசிகர்கள் வித்தியாசமானவங்க” ன்னு சொல்லுறாரு..இதுதான் வித்தியாசமா..தனிமனித ஆராதனை இல்லையா..கமல் அங்கயே அந்தப் பொண்ண கண்டிச்சுருக்க வேணாம்மா..போங்க அங்கிள் என்ன பகுத்தறிவு..”

“தாயே..பகுத்தறிவு குழந்தையே….தெரியாம உங்கிட்ட வாயைக் கொடுத்துட்டேன் சாமி..நான் கிளம்புறேன்..”

“இருங்க அங்கிள்..நானும் பிளாக் எழுதப்போறேன்..என்ன பெயர் வைக்கலாம்..”

“ரேணும்மா..வேணாம்மா..அது ரத்த பூமி..காலை வைச்சுடாதேம்மா..உனக்கு பதிவுலகம் பத்தி என்ன தெரியும்..”

“போலி..”

“அட..உனக்கு அவ்வளவு தெரியுமா..”

“இல்ல அங்கிள்..அம்மா “போலி” செஞ்சு வைச்சிருக்காங்க..சாப்பிட்டுதான் போகனும்னு சொல்ல வந்தேன்..”

“தாயே..நீ சாப்பிடுற போளியை சொன்னயா..நான் கூட வேறு ஏதோன்னு நினைச்சுட்டேன்..நல்லா நாக்கை மடக்கி “போளி” ன்னு சொல்லனும்மா..நுனி நாக்கில “போலி” ன்னு சொல்லி டெர்ரராக்க கூடாது..”

“ஏன்..அங்கிள்..எதுவும் பிரச்சனையா..”

ஆஹா..இது வீட்டிக்கு ஆட்டோ இல்லை..ஹெலிகாப்டர் அனுப்புற மேட்டராச்சே..இதுக்கு மேல முடியாதுடா சாமின்னு வாசல் படியை நோக்கி ஓடுனேன்னே..

“அங்கிள் ..பொறுங்க..இதை வாங்கிட்டுப் போங்க..”

சரி..குழந்தை ஏதோ ஆசையா கூப்பிடிதுன்னு பக்கத்துல போனேன்னே.,..

“அணு அளவும் பயமில்லை” ன்னு சொல்லிக்கிட்டே..கைய நல்லா மடக்கி வயித்துல ஒரு குத்து குத்துச்சு பாருங்கண்ணே..காலையில சாப்பிட்ட புரோட்டா தொண்டை வரைக்கும் வந்திருச்சுண்ணே..அப்படியே கதவைப் புடிச்சுக்கிட்டு தாவி தாவி வீடு வரைக்கும் வந்து வீட்டு வாசலுக்கு வர்றேன்..டீ.வில ஒடுது..”

“டாடா..டோ.கோ,மோ..அணு அளவும் பயமில்லை..”

"ங்கொக்காமக்கா..அணு அளவும் நாசாம போங்கடே..