Friday, 31 December, 2010

2010 – பதிவுலக விருதுகளும் பதிவுலகத்தின் பராசாக்தியும்

பதிவுலகம்..விசித்திரம் நிறைந்த பல பதிவர்களை சந்தித்திருக்கிறது. மொக்கையான பல பதிவுகளை கண்டிருக்கிறது..ஆனால் நான் எழுதப்போகும் பதிவு ஒன்றும் விசித்திரமானது அல்ல..அல்லது இந்தப் பதிவை எழுதப்போகும் நானும் ஒன்றும் மொக்கைராசு அல்ல. பதிவுலகத்திலே சர்வசாதாரணமாக பிளேடு போடும் பதிவர்களிலே நானும் ஒருவன்.

நானே கேள்வி பதில் என்று பதிவு ஆரம்பித்து இன்னொரு ஐ.டி யில் இருந்து “காத்தால எத்தனை மணிக்கு பல்லுவிளக்குறீங்கோ..” என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகேட்டு மறந்தார்போல “அவிங்க ராசா” என்று போட்டுள்ளேன்.

“இன்னைக்கு உங்க பதிவு படிச்சு மெய்மறந்துவிட்டேன், உங்கள் பதிவால்தான் நான் மூச்சுவிடுறேன்.. உங்கள் பதிவை படித்தவுடன் தான் இன்னைக்கு காலையில் வெளிக்கி போகவே சென்றேன்” என்று நானே வாசகர்கடிதம் மாதிரி எழுதி அதை என் பதிவிலேயே வாசகர் கடிதம் என்ற பெயரில் போட்டேன்.

படத்தை பார்க்காமலேயே இந்த படம் தமிழ்சினிமாவின் ஒரு மயில்கல்லு, குருவிகல்லு என்று எழுதி “மீ த பர்ஸ்ட், ஊசிப்போன வடை எனக்குதான்” என்று நானே எனக்கு கமெண்ட் போட்டிருக்கிறேன்

குற்றம் சாட்டப்படிருக்கிறேன் இப்படியெல்லாம். ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் இதையெல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை, நிச்சயமாக இல்லை. கேள்வி பதில் என்று எனக்கு நானே பதிவு எழுதிக்கொண்டேன். ஏன், கேள்வி பதில் என்று பதிவு ஆரம்பித்தால் மரியாதைக்காகவது ஒரு பயலாவது கேள்வி கேட்கவேண்டும். ஆனால் வரும் ஒரே கேள்வி “எப்ப கரண்ட் பில்லு கட்டுவீங்க..” என்று.

வாசகர் கடிதம் என்று என்னை நானே பாராட்டி கடிதம் எழுதிக்கொண்டேன். வாசகர் கடிதமே யாரும் போடவில்லை என்பதற்காகவா, இல்லை. எழுதிய ஒரு வாசகரும் “எப்ப ராசா, எழுதுவதை நிறுத்துவீங்க..அன்னிக்குதான் எங்களுக்கு தீபாவளி” என்று எழுதியதற்காக.

படமே பார்க்காமல் விமர்சனம் எழுதினேன்..ஏன், தியேட்டரில் மூட்டைப்பூச்சி கடி என்பதற்காகவா..இல்லை, ஒரு பயலும் ஓசியில படத்துக்கு கூட்டிக்கிட்டு போகமாட்டுறாயிங்க என்பதற்காக..

உனக்கேன் இந்த அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்.. நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன். எனது சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருக்கிறது. என்னை குற்றவாளி என்கிறீர்களே. நான் குறுக்கால வந்த வழியைப் பார்த்தா ரொம்ப கலீஜாக இருக்கும்

கேளுங்கள் என் ஸ்டோரியை. ஓடுவதற்கு முன்பு என்கதையை கேட்டுவிட்டு ஓடுங்கள். பாசக்கார பயலுக வாழும் இடமான மதுரையில் பிறந்தவன் நான். கிழிஞ்சு போன டைரியில் எழுதிக்கொண்டிருந்த நான் ஓசியில் கிடைக்கிறது என்பதற்காக ஒரு ப்ளாக் ஆரம்பித்தேன். பதிவுலகம் என்னை “போடா மொக்கை” என்றது. என் பதிவுக்கு தமிழ்மணத்தில் ஓட்டுப்போட்ட ஒரே பயபுள்ளையும் “சாரி..நண்பா..கை தவறி ஓட்டுபட்டையில் பட்டுடுச்சு..” என்றான். மீனம்பாக்கத்துக்கு வந்தால் செருப்பால அடிப்போம் என்றார்கள். என் பெயரோ அவிங்க ராசா..செம லொட்டையான பெயர். நான் நினைத்திருந்தால் ஒரு குழு ஆரம்பித்து மாறி மாறி ஓட்டுபோட்டுக்கொண்டு சூடான இடுகைகளில் வந்திருக்கலாம். அல்லது சாரு வாழ்க என்று ஜால்ரா இடுகை எழுதி அவருடைய பதிவுகளில் என் பதிவை வரச்செய்து ஹிட்ஸ் தேத்தியிருக்கலாம். அல்லது ஹிட் கவுண்டரில் 99,99,999 என்று செட்செய்து, ஒரு ஹிட் வந்தவுடனே “ஒரு கோடி ஹிட்ஸ் கொடுத்த வாசகர்களுக்கு நன்றி..உங்களால்தான் இது முடிந்தது” என்று சொல்லி செண்டிமெண்ட் கண்ணீர் விட்டிருக்கலாம்.

ஆனால் அதைத்தான் விரும்புகிறதா இந்த பதிவுலகம். தலைவனைப் பற்றி எழுதியதற்காக “*****” போட்டு கெட்ட வார்த்தை கமெண்ட் போட்டார்கள். எழுதினேன். பதிவை போடுவதற்கு முன்பே மீ த பர்ஸ்ட் கமெண்ட் போட்டார்கள். எழுதினேன். மைனஸ் ஓட்டுக்களாக தபால்தலையின் மேல் குத்துவது போல் குத்தினார்கள். எழுதினேன், எழுதினேன். லேப்டாப் கீ தேயும் வரை எழுதினேன். “தயவு செய்து நிறுத்திருடா” என்று லேப்டாப் கதறும்வரை எழுதினேன்.

“காலையில உனக்கு சோறு இல்லடி” என்று மனைவி சொன்னதால் நிறுத்திவிட்டேன்.

இதற்கு மேல் எழுதினால் சாவடி அடிப்பீங்க என்று தெரியும்.போன வருடம் பதிவுலகத்தில் நான் என்று என்னையே திரும்பி பார்க்க ஆசை என்றாலும், திரும்பி பார்த்தால் சாக்கடை நாத்தம் நாறுது என்பதால் இப்போதைக்கு வுடு ஜூட்டு..

(ஆஸ்காருக்கு நிகரான அவிங்க ராசாவின் பதிவுலக விருதுகள் அடுத்த பதிவில்..எல்லோரும் வீட்டுல இருக்குற சாக்குப்பைய எடுத்து ரெடியா வைச்சுக்கங்கோ…)

Thursday, 30 December, 2010

2010 – திரையுலகம் மற்றும் பதிவுலக விருதுகள்

சில விருதுகளைப் பார்க்கும்போது கண்டிப்பாக கடுப்பேறும். எனக்கு ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் விருதுகளைப் பார்க்கும்போது இது நேர்வதுண்டு. யார்யாரெல்லாம், பாராட்டு விழாவில் நன்றாக ஜிங்க்ஜக் அடித்தார்களோ அவர்களுக்கெல்லாம் படமே எடுக்கவில்லையென்றால் கூட “சும்மா வைச்சுங்கப்பா..எதிர்காலத்தில படம் எடுப்பீங்கல்ல, அதுக்கு ஹெல்பாக இருக்கும்” என்று சொல்லுவது போன்றே ஒரு பிரமை. என்றைக்கு ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகர் என்று விருது கொடுத்தார்களோ, அன்றைக்கே தமிழக அரசு விருதுகளை படிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். சிலநேரம் வருகிற கடுப்பில் கலைஞர் டி.வியில் கலா அக்கா டர்ருன்னு கிழிக்கும் மானாட மயிலாடா பார்த்துவிட்டு தூங்கலாம் என்று நினைப்பு வந்தால் கூட அது தற்கொலைக்கு சமமானதால், அதெல்லாம் நான் பண்ணுவதில்லை. ஒன்லி விருதகிரி பார்ப்பதோடு சரி. ஏதோ பிளாக்கர் புண்ணியத்தில் நம்மளும் அவார்டு கொடுப்போமே என்று நினைத்ததன் விளைவே இந்த பதிவு.. இந்த விருதுகளைப் பார்த்துவிட்டு உங்களுக்கு கடுப்பேறினால் அதே மானாட மயிலாடவில் தங்கதாரகை மும்தாஜ் தமிழ்மொழியாம் செம்மொழியில் “என்ன டான்ஸ் பண்ணுது” என்று ரகளை பண்ணுகிறாராம். பார்த்து விட்டு குஜாலாக குவார்ட்டர் அடித்துவிட்டு குப்புற படுத்துக்கொள்ளவும்

இனி விருதுகள் - 2010(இப்போதைக்கு திரையுலகம். போதை தெளிஞ்சா பதிவுலகம்..)

சிறந்த திரைப்படம் : எந்திரன்

சிறந்த நடிகர் : மிஷ்கின்(நந்தலாலா)

சிறந்த புதுமுக நடிகர் – மகேஷ்(அங்காடி தெரு)

சிறந்த நடிகை – அஞ்சலி(அங்காடித் தெரு)

சிறந்த புதுமுக நடிகை – அமலா பால்(மைனா, சிந்து சமவெளி)

சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம்(பாஸ் என்ற பாஸ்கரன்)

சிறந்த கேமிராமேன் – மனோஜ் பரமஹம்சா(விண்ணைத்தாண்டி வருவாயா)

சிறந்த இசை – யுவன்சங்கர் ராஜா – பையா

சிறந்த பிண்ணனி இசை – இளையராஜா – நந்தலாலா

சிறந்த ஆர்ட்டைரக்டர் – செல்வகுமார் – மதராசபட்டிணம்

சிறந்த பாடகர் – கார்த்திக்(உசிரே போகுதே – ராவணன்)

சிறந்த பாடகி – ஆண்ட்ரியா(மாலை நேரம் – ஆயிரத்தில் ஒருவன்)

சிறந்த திரைக்கதையாசிரியர் – சாலமன் – மைனா

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – களவானி

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் – பீட்டர் ஹெயின் - எந்திரன்

சிறந்த இயக்குநர் – மிஷ்கின் – நந்தலாலா

சிறந்த பாடலாசிரியர் - நா.முத்துக்குமார்(பல படங்கள்)

சிறந்த பிளாப் – சுறா, அசல்

சிறந்த கிராபிக்ஸ் – எந்திரன்

சிறந்த மெலோடி – உன்பேரை சொல்லும்போதே – அங்காடித் தெரு

சிறந்த வில்லன் – வெங்கடேஷ் – அங்காடித்தெரு

சிறந்த எடிட்டிங்க் – ஆண்டனி – பையா, எந்திரன்

சிறந்த பாடல் – என் காதல் சொல்ல நேரமில்லை - பையா

சிறந்த கதை – வசந்த பாலன் - அங்காடி தெரு

சிறந்த குழந்தை நட்சத்திரம் – அஸ்வத்(நந்தலாலா)

சிறந்த நடன இயக்குநர் – ஷோபி

சிறந்த நகைச்சுவை - குறள் டி.வியில் டி.ஆர் பேட்டி..

அடுத்த பதிவில் 2010 – பதிவுலகம் அவார்டு…

Sunday, 26 December, 2010

ஒரு மிரட்டல் மற்றும் மொக்கை டிரெய்லர்

சில டிரெய்லர்களைப் பார்த்தாலே புரிந்துவிடும், இது வழக்கமான படமல்ல என்று. நீங்கள் தமிழ்சினிமாவை கூர்ந்து கவனிப்பவர் என்றால், ஒரு படத்தின் டிரெய்லர் பார்க்கும்போதே அந்த படத்தின் வெற்றியை கணித்துவிடுவீர்கள். சமீபத்தில் அப்படி ஒரு படத்தின் டிரெயிலரை பார்க்கநேர்ந்தது. படம் ஆரண்ய காண்டம். எஸ்.பி.பி சரண் தயாரிப்பில் ஜாக்கிஷெரீப், ரவிகிருஷ்ணா(???) நடித்த இந்த படத்தின் டிரெய்லர் மிரட்டல். மேக்கிங்க் பிரமாதம். படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

உங்களுக்காக வீடியோஅப்படியே ஒரு மொக்கை டிரெய்லரையும் பார்த்துவிடுங்கள். நடிகர் கார்த்தி க்கு இந்த படத்திலிருந்துதான் ஆப்பு ஆரம்பிக்குது என்று நினைக்கிறேன்


Saturday, 25 December, 2010

ஏ எப்பே ஹேப்பி கிறிஸ்மஸ்லே...

“ஹேப்பி கிறிமஸ் ராசா”..இன்று தொலைபேசி வழியாக என் அம்மா குரலைக் கேட்டவுடன் ஒரு மாதிரியாக இருந்தது. எப்போதும் கணீர் என்று கேட்கும் அம்மாவின் குரலில் ஒரு நடுக்கம்.

“என்னாச்சும்மா..உடம்பு சரியில்லையா..”

“ஐயோ..இல்லப்பா..குளிருதுல்ல.. அதான்…”

என்னதான் சமாதானம் சொல்லினாலும், அம்மாவின் குரலில் உள்ள ஏக்கத்தை உணரமுடிந்தது. இன்னும் அந்தக்கால கிறிஸ்மஸ் ஞாபகங்கள் என் நெஞ்சில் ஓடியது. கிறிஸ்துமஸ் என்றாலே, ஒரு மாதத்திற்கு முன்பு எங்கள் வீடு களைகட்டிவிடும். ரஜினி படம் ரீலீஸை எதிர்பார்த்திற்கும் ரசிகன் போல, அரையாண்டு லீவை எதிர்பார்த்திருக்கும் எனக்கு, கிறிஸ்துமஸ் என்று கேட்டவுடன் உடம்பே சிலிர்க்கும். அப்பதானே நிறைய ஸ்வீட் சாப்பிடமுடியும்.

ஒரு வாரத்திற்கு முன்பே கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிடுவோம். “எனக்கு ரெண்டு டிரஸ் எடுத்திருக்கோம்டி..” என்று நண்பர்களிடம் சொல்லும்போதே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். புதுடிரஸ் எடுக்கப்போகும் நிகழ்வையே தனிப்புத்தகமாக போடலாம். ஏதோ வெளிநாடு போகப்போகும் பயணி போல முந்தாநாளே நண்பர்களிடம் சொல்லிவிடுவேன் “நாங்க மருதைக்கு பஸ்ல்ல போறோமே…”

காலையில் எழுந்து அம்மா வலுக்கட்டாயமாக என்னை செய்ய சொல்லும் பல்விளக்கலை தொடர்ந்து முக்கு கடையில் பணியாரத்தை உள்ளே தள்ளினால்தான், எனக்கு சரவணபவன் சாப்பாடுபோல் இருக்கும். எனக்கு பிடிக்காத மூன்றாம் வகுப்பு புத்தகங்களுக்கும் அன்றுதான் லீவு. அந்த பரபரப்பிலும் வெற்றிவியர்வை நிலத்தில் சிந்த உழைத்த ரூபாய்தாள்களை பீரோவில் இருந்து அப்பா எடுத்து கவலையுடன் எண்ணும்போது அவர் கண்களில் உள்ள பயத்தை, இன்றுதான் மனைவியோடு நகைக்கடைக்கு செல்லும்போது உணரமுடிகிறது. என் வீட்டில் நாலுபேர், வீட்டிலோ மாதச்சம்பளம். அனைவருக்கும் புதுடிரஸ் எடுத்து திருப்திப்படுத்தவேண்டும், பைனான்ஸ் மினிஸ்டர் என்ன சார் பைனான்ஸ் மினிஸ்டர்…எங்கம்மா போடுவாங்க பாருங்க ஒரு புத்தாண்டு திட்டம். அப்படி ஒரு நேர்த்தியான திட்டம். இருக்கிற பணத்தில் மூத்தவனுக்கு ஒரு பேண்ட், நடுவுளவனுக்கு ஒரு சட்டை, கடைக்குட்டிக்கு(வேறு யாரு நாமதான்..) ஒரு டவுசர், சட்டை..கொண்டுபோன பணம் கரெக்டாக இருக்கும். மீதி உள்ள பணத்தில் கோனார் கடையில் செட்தோசை. அனைவர் முகத்திலும் அவ்வளவு சந்தோசம். அவ்வளவு சந்தோசத்திலும், எங்கப்பா கட்டப்போகும் அந்த பழைய வேட்டியையும், அம்மா கட்டப்போகும் போன கிறிஸ்மஸுக்கு எடுத்த பழைய சேலையும் பற்றி மறந்துவிடுவோம்.

கிறிஸ்மஸுக்கு பொதுவாக கிராமங்களில் கத்தோலிக்க ஆலயங்களில் இரவு 12 மணிக்குதான் ஆராதனை இருக்கும். அதனால் இரவு 8 மணிக்கெல்லாம் தூங்க சொல்லிவிடுவார்கள். அப்போதுதான் 11 மணிக்கு எழமுடியும் என்பதால். சரியாக 11 மணிக்கு அம்மா குரல் தூக்கத்திலும் கணீரென்று கேட்கும்.

“தம்பி ராசா..டையமாயிருச்சு..எழுந்திருப்பா..”

கடுப்பாக இருக்கும். கிறிஸ்மஸை ஒருநாள் தள்ளிவைத்தால் என்ன என்று இருக்கும். வேண்டா வெறுப்பாக எழுந்தாலும், புதுடிரஸை பார்த்தவுடன் மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொள்ள சத்தமாக சொல்லுவேன்..

“ஐய்..புதுடிரஸ்..”

அடிக்கடி புதுடிரஸை தொட்டுப்பார்த்துக்கொள்வேன். காலரில் குத்தியிருக்கும் குண்டூசியை கழட்டகூட மனம் வராது. அதைப்போட்டுக் கொண்டு ஆலயம் நோக்கி நடக்கும்போது ஏதோ நகரவீதிகளில் மன்னர் நடப்பது போல இருக்கும். மூன்றாம் வீட்டில் உள்ள பிரண்டு மூர்த்தி பார்க்கிறானா என்று மனம் அலைபாயும். நாங்களும் புதுடிரஸ் எடுத்திருக்கோம்ல.

பொதுவாக கிறிஸ்மஸ் திருப்பலி 1.5 மணிநேரம் இருக்கும்.ஏ.சி அம்பாசிடர் காரில் வந்த பாதிரியார் “ஏசு கிறிஸ்து போல எளிமையாக இருக்கவேண்டும்” என்று சொல்லும்போதே பாதிதூக்கம் வந்துவிடும். மீதிதூக்கம் அவர் பாடும்போது வந்துவிடும். அப்படியே அம்மா மடியில் படுத்து தூங்கிவிடுவேன். சொர்க்கம் அது. எந்த கவலையும் இல்லாத தூக்கம். அம்மா இருக்கிறார்கள், பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையினால் வரும் தூக்கம். அப்படியே தூங்கிவிடுவேன்..என்ன நடந்தது என்று தெரியாது, காலையில் எழுந்து கண்விழித்து பார்த்தால் என் வீட்டில், படுக்கையில்.

“எழுந்து இட்லி சாப்பிடு கண்ணா..முதல்ல அப்பாகிட்ட சிலுவை வாங்கு..”

துக்கத்தோடு எழுந்து அப்பாவிடம் செல்வேன். அப்படியே கட்டிக்கொள்வார். “ஹேப்பி கிறிஸ்மஸ்டா செல்லம்” என்று அப்பா கொடுக்கும் அந்த முத்தத்திற்கு என்ன வேண்டுமாலும் கொடுக்கலாம். பரிசாக அவர் கொடுக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை கவனமாக பாக்கெட்டிற்குள் போட்டுக்கொள்வேன். நாளைக்கி சவ்வுமிட்டாய் வாங்கவேண்டுமே..அப்படியே நடந்து சென்று அன்றைக்கு தயாராகும் கேசரியையும், இட்லியையும் பார்க்கும்போது, தினமும் கிறிஸ்மஸ் வராதா என்ற ஏக்கம் வரும்.

இன்னமும் அந்தகால கிறிஸ்மஸ் ஞாபகங்கள் அப்படியே என் நெஞ்சில். ஒரு பேக்வேர்ட் பட்டன் இருந்தால் எப்படி இருக்கும்..அப்படியே அம்மா மடியில்..அந்த தூக்கத்துடன்..அதே கிறிஸ்மஸ் நினைவுகளோடு..அப்படியே தூங்கிப்போனேன்..

காலையில் எழுந்துபார்த்தபோது நான்கு சுவர்தான் தெரிந்தது. மனைவி தூங்கி கொண்டிருந்தாள்.கிறிஸ்மஸ் பலகாரம் செய்த களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது. குளித்துவிட்டு வாழ்த்துக்கள் சொல்லலாம் என்று அவளை எழுப்பினேன்..அயர்ச்சியில் கண்திறந்து பார்த்தவள் சொன்னாள்..

“ஏ எப்பே ஹேப்பி கிறிஸ்மஸ்லே..”

ஏதோ எங்கம்மா சொல்லுவதுபோல் இருந்தது..

Thursday, 16 December, 2010

பிரபல பதிவர்கள் கலந்து கொண்ட சாருவின் நூல் வெளியீட்டு விழா

(ஜோடி நம்பர் ஒன் சிம்பு ஸ்டைலில் படிக்கவும்)

எனக்கு என்ன பிரச்சனைன்னா, எனக்கு எழுத தெரியாதுங்க..சின்னபிள்ளையிலேருந்தே எங்கப்பா, எனக்கு அதெல்லாம் சொல்லி தரலை. எனக்கு எழுதத் தெரியாதுய்யா..(இங்கு ஒரு அழுகையைப் போட்டுக்கொள்ளவும்)

எதற்கு இந்த பில்டப் என்றால் எழுதப்போகும் மேட்டர் அப்படி. சமீபத்தில் நடந்த நூல்வெளியீட்டு விழாவில் மிஸ்கின் பேசிய சம்பந்தம் இல்லாத பேச்சுதான் இப்போது பதிவுலகத்தில் ஹாட் டாபிக். சாருவுடைய சீடர்கள், இதற்கு எப்படி எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று ரூம் போட்டு, சரக்கடித்துவிட்டு யோசித்துக்கொண்டு இருப்பதாக கேள்வி. மிஸ்கின் நிலைமையில் நம் பிரபலபதிவர்கள் மேடையில் பேசியிருந்தால் என்ற கற்பனையே இந்த பதிவு. இப்படி கோளாறாச் சிந்திச்சே, நானே எனக்கு சூன்யம் வைத்து மீனம்பாக்கம் வரமுடியாமல் செய்துவிடுவேனோ என்ற பயம் ஒருபக்கம் இருந்தாலும், வடிவேலு பாணியில் “போவோம்..போய்த்தான் பார்ப்போம்” என்று உள்மனது சொன்னதால் இந்த பதிவு. வழக்கம்போல், இந்த பதிவு முழுக்க கற்பனையே. யாரையும் புண்படுத்த அல்ல.

சாரு, புத்தக வெளியீட்டு விழாவுக்கு பிரபல பதிவர்களை அழைக்கிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் : இப்போது சாருவின் புத்தகங்களைப் பற்றி பேச பதிவுலக சூப்பர்ஸ்டார் “ஜாக்கி சேகரை அழைக்கிறேன்..

கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து பயங்கரமாக கூவுகிறார்..மன்னிக்கவும்..கத்துகிறார்..

“பதிவுலக சூப்பர்ஸ்டார் ஜாக்கி வாழ்க..வாழ்க..ஜாக்கி..ஏன் இன்னைக்கு பதிவு போடலை. உங்க பதிவு படிக்காம நான் இன்னைக்கு சோறு கூட சாப்பிடலை..பாருங்க கையெல்லாம் நடுங்குது..என் கீபொர்டுல F5 பட்டன் அழிஞ்சு போச்சு..ப்ளீஸ் ஜாக்கி..”

ஜாக்கிசேகர் ரொம்ப வெட்கப்படுகிறார்..

ஜாக்கிசேகர் : பயபுள்ளைக எம்மேல எம்புட்டு பாசமா இருக்காய்ங்க..இதற்கு நான் என்ன தவம் செய்தேன்..(பீல் பண்ணி மைக் பிடிக்கிறார்)

ஜாக்கிசேகர் : அனைவருக்கும் வணக்கம். என்னை தொடர்ந்து படித்துவரும் சாருவுக்கு முதல் வணக்கம்..

(சாரு டென்சனாகிறார்)

சாரு : அய்யய்யோ..இது எப்ப நடந்துச்சு..

ஜாக்கிசேகர் : இல்லை சாரு..நீங்கள் என்னை தொடர்ந்து படித்து வருவதை உங்கள் பதிவு ஒன்று படிக்கும்போது உணர்ந்தேன். ஒரு இடத்தில் “பதிவுலகத்தில் வாக்கிங்க்” என்று எழுதியிருந்தீர்கள். “பதிவுலகத்தில் ஜாக்கி” என்று சொல்ல நினைத்தீர்கள் என்று புரிந்து கொண்டேன்..தொடர்ந்து என்னை படித்துவருவதற்கு நன்றி

(சாரு திகிலாகிறார்..ஆஹா..நாளைக்கே இத பதிவா போட்ருவார் போல இருக்கே என்ற பயம் அவரை ஆட்கொள்ள “சரி..நான் எழுதுன புத்தகத்தைப் பத்தி ரெண்டு வார்த்தை” என்று கேட்டுகொள்கிறார்)

ஜாக்கிசேகர் : (ஆடியன்சைப் பார்த்து) இது எல்லாம் உங்களால்தான் நடந்தது..நீங்கள் இல்லாமல் நான் அலெக்சா ரேட்டிங்கில் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. உங்களுக்கு திரும்பவும் நன்றிகள். நான் சென்னை வரும்போது கையில்…

(சாரு டெர்ராகிறார்)

சாரு : ஏங்க..புத்தகத்தைப் பத்தி ரெண்டு வார்த்தை

ஜாக்கிசேகர் : ஓ..மறந்துட்டேன். என்னைத் தொடர்ந்து படித்து வரும் ஜெயமோகனைப் பார்த்து ஒன்று கேட்கிறேன்..

(சாரு முகம் மலர்கிறது)

ஜாக்கிசேகர்(மைக்கை மறைத்துக்கொண்டு பக்கத்தில் இருப்பவரிடம்) : ஏம்பா, ஜெயமோகனுன்னா,முகத்தை மறைச்சுக்கிட்டு தாடிவைச்சிக்கிட்டு இருப்பாரே..அவருதான..”

பக்கத்தில் இருப்பவர் : அவர் பாலகுமாரனுங்க..

ஜாக்கிசேகர் : ஓ..மாத்திட்டாய்ங்களா..அது..அவரைப் பார்த்து ஒன்று கேட்கிறேன்..நீங்கள் என்னுடைய சாண்ட்விச் நான்வெஜ் படித்திருக்கிறீர்களா..

(சாரு தலையில் கைவைத்து உக்கார்ந்துவிடுகிறார்)

ஜாக்கிசேகர்: அடுத்து உண்மைத்தமிழன் சுருக்கமாக 3 மணிநேரம் பேச இருப்பதால், இத்தோடு உரையை முடித்துக்கொள்கிறேன். போவதற்கு முன்பு என் வாசகர்களிடம் ஒருவேண்டுகோள். என்பதிவைப் பாராட்டு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் வருவதால், தயவுசெய்து ஒருநாளைக்கு ஒரு கடிதமாக குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்).

உண்மைத்தமிழன் பேசுவதற்கு வருவதைப் பார்த்து சாரு அவசரம், அவசரமாக மைக் நோக்கி செல்கிறார்)

சாரு: இத்தோடு இந்த நிகச்சி வாசகர்களின் நலன் கருதி முடிக்கப்படுகிறது..எல்லாரும் ஓடலாம்..சாரி..கொளம்பலாம்..அய்யோ..கிளம்பலாம்..

உண்மைத்தமிழன் : இருங்க..என்ன அவசரம்..எம்புட்டு பிரிப்பேர் பண்ணியிருக்கேன். உள்ளிருந்து நாலு அரைகுயர் நோட்டுகளை எடுக்கிறார்..சாரு டென்சனாக

சாரு : நீங்களாவது புத்தகத்தைப் பத்தி ரெண்டு வார்த்தை..

உண்மைத்தமிழன் : எம்பெருமான் முருகனுக்கு முதல்வணக்கம். சாரு எனக்கு நல்ல பழக்கம். நான் எடுத்த் குறும்படத்தை முதலில் பாராட்டியவரும் அவரே..

சாரு(மனதுக்குள்) : ரெண்டு நாள் மூச்சு பேச்சு இல்லாம கோமா ஸ்டேஜ்ஜுல இருந்தது எனக்குல தெரியும்..(மறைத்துக்கொண்டு சிரிக்க முயற்சிக்கிறார்..)

உண்மைத்தமிழன் : நன்றி..என்று பேச ஆரம்பிக்கிறார்..ஆரம்பிக்கிறார்..ஆ ரம்பித்துக்கொண்டே இருக்க கூட்டம் முழுவதும் குழுவாக தம்மடிக்க கிளம்புவதைப் பார்த்த சாரு தவழ்ந்து, தவழ்ந்து மைக்செட்காரரிடம் சென்று..

சாரு: தம்பி..நீ ஒரு உதவி பண்ணு..நைசா..கையவிட்டு மைக் வயரை புடுங்கி விட்டுடு..மைக் ஒர்க் ஆகலைன்னு சொல்லி கூட்டத்தை கேன்சல் பண்ணிடுவோம்.கொலையா கொல்லுறாயிங்க..

பேசிக்கொண்டே, வெளியில் பார்க்க முதல் ஆளாக லக்கி தம்மடித்துக்கொண்டு இருப்பதை பார்த்து டென்சனாகி லக்கியிடம் சென்று

சாரு : என்ன தம்பி..நீங்களே இப்படி செய்யலாமா..உத்தம எழுத்தாளர் ஆளுங்க பார்த்தா என்ன நினைக்கமாட்டாங்க..எப்ப இருந்து இங்க நிக்குறீங்க..

டீக்கடைகாரர் : அவரு இன்னமும் உள்ளயே போகலீங்க..இங்கதான் நிக்குறார் ஒருமணிநேரமா..

சாரு கோபத்துடன் பார்க்க

லக்கி: அய்யோ..உங்களை மேடையில் பார்க்க எனக்கு அழுகையா வருதுங்க..நீங்கதாங்க சூப்பர்ஸ்டார்..எனக்கு ஆனந்த கண்ணீரா வருவதால் அடக்கமுடியாமல் இங்கேயே நின்னுட்டேங்க..

சாரு பாசமாகி கண்ணீர்விட, உள்ளே பயங்கரவிசில் சத்தம்

நிகழ்ச்சி தொகுப்பாளர்: இப்போது உங்களுக்காக, பலத்த கரகோசத்துடன் இதோ பதிவுலக யூத்து கேபிள் சங்கர்

கேபிள் சங்கர் : தேங்க்யூ..தேங்க்யூ..எனக்கு இந்த கொண்டாட்டத்தைப் பார்க்கும்போது, நான் போன வருடம் கொண்டாடிய 28வயது பிறந்தநாள் கொண்டாட்டம் ஞாபகத்திற்கு வருகிறது….

சாரு(கடுப்பாக) : ஏங்க..இந்த அலெக்சா ரேட்டிங்க மறந்துட்டீங்க

கேபிள் சங்கர் : ஆ..சாரி..எனக்கு அலெக்சா ரேட்டிங்கில் ஒருலட்சம் கொடுத்த..

சாரு : ஒருபயபுள்ளையாவது புத்தகத்தைப் பத்தி பேசுறாயிங்களா பாரு..(பக்கத்தில் அமர்ந்திருக்கும் நர்சிமைப் பார்த்து)

சாரு : ஏங்க..நீங்களாவது புத்தகத்தைப் பத்தி ஏதாவது பேசுவீங்களா..

நர்சிம் : நாமார்க்கும் குடி அல்லோம்

சாரு : கிழிஞ்சது போ..எம்புத்தகத்தைப் பத்தி நாந்தான் பேசணும்போலயே..ஓணானை கூப்பிட்டு வேட்டிக்குள்ள விட்டமாதிரி பதிவர்களை கூப்பிட்டு நானே கெடுத்துக்கிட்டேன்..ம்..என்ன பேசலாம்..ஸ்பானிஸ் எழுத்தாளர்..பிரெஞ்சு இலக்கிய கவிஞர்..ம்ம்..கேரளாவுல இலக்கியம்..சூபி இலக்கியங்கள்..ம்..(ஆழமாக யோசித்து ஐந்து நிமிடம் கண்ணை மூடித்திறக்க, எதிரில் ஒருபயபுள்ளையும் காணோம். அனைத்து பேரும் அட் எ டையத்தில் எஸ்கேப் ஆக சாரு திகைத்துப்போகிறார். கூட்டத்தில் ஒரு பெரியவர் மட்டும் உக்கர்ந்து இருப்பதைப் பார்த்து பாசத்தோடு அவர் அருகில் சென்று..

சாரு : ஐயா..ஐயா..எம்மேலதான் உங்களுக்கு எம்புட்டு பாசம்யா..இவ்வளவுபேரு ஓடியும்..நீங்க மட்டும்..(தழுதழுக்க)

பெரியவர் : டிராபிக் மற்றும் பெட்ரோல் பிரச்சனை காரணமாக லேட்டாக கிளம்பிய டோண்டுராகவன் கார் 05:18 மணிக்கு அரங்கத்திற்குள் எண்டர் ஆனது

சாரு: (அலர்ட்டாகி) : ஆஹா..அது நீங்கதானா..அதுதான் எல்லாரும் தலைதெறிக்க ஓடுறாயிங்களா..ஆள விடுங்கய்யா சாமி.. என்று அலறியடித்து ஓட அவரைப் பிடித்து டோண்டு ராகவன் கேட்கிறார்

டோண்டு ராகவன் : மண்டபத்துக்கு எவ்வளவுங்க வாடகை…அங்கிட்டு ஏன் சாமி படம் தொங்குது..

Wednesday, 15 December, 2010

விஜய டி.ராஜேந்தருக்கு ஆஸ்கார் அவார்டா????

பொதுவாக நான் நகைச்சுவை கேட்கும் அல்லது பார்க்கும் நேரத்தை தவிர அதிகம் சிரிப்பதில்லை. ஆனால் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறேன் டி.ஆரின் இந்த வீடியோவை பார்த்தபிறகு. உங்களுக்காக அந்த வீடியோவை இணைத்துள்ளேன். அவர் பேசியது இருக்கட்டும், அவருக்கு ஜால்ரா போட்ட கேள்வி ஒன்று இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது

“யார் யாருக்கோ ஆஸ்கார் தராங்க..உங்களுக்கு ஏன் சார் கொடுக்கலை..”

அதற்கு ஆப்பிரிக்க காட்டில் என்னை விட்டால் கூட நான் தாளம் போடுவேன் என்று சொல்லி ஒரு பீட்டு போடுவார் பாருங்கள்..சான்சே இல்லை. பக்கத்து வீட்டில் வசிக்கும் அமெரிக்க தம்பதி என் வீட்டுக் கதவை தட்டி “என்னப்பா..இவ்வளகு சத்தமாவா கார்ட்டூன் சானல் வைச்சு கேப்பாங்க..சவுண்ட குறைங்கப்பா..: என்று கேட்கும் நிலை வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

வாசிப்பவர்களுக்கு ஒரு கேள்வி. ஏண்ணே..நம்ம டி.ஆரு மூச்சுக்கு மூணு தடவை..நான் தமிழன் என்னை எல்லாரும் அடக்குறாயிங்க என்று சொல்லுறாரே..கேரள, கர்நாடகா, ஆந்திரா என்று யாராவது தலைவரு முன்னேறுருதைப் பார்த்து ஏதும் உள்நாட்டு சதி பண்ணுறாயிங்களா என்ன??

நிகழ்ச்சியில் அந்த கேள்வி கேட்டவரைப் பார்த்து ஒன்று கேட்க ஆசை…

“மனசாட்சி இல்லை????..”

Saturday, 11 December, 2010

டாக்குடரு இலை(ளை)ய தளபதி விசய் வாளுக..வாளுக..

நம்ம கோவாலு என்னிக்கும் இல்லாம அன்னிக்கு ரொம்ப ‘குஷி’ யா(இப்படி சொன்னாத்தேன் பயபுள்ளயும் சந்தோசப்படுறான்..) வந்தாண்ணே.. என்னது கோவாலைத் தெரியாதா..என்னண்ணே இப்படி சொல்லிப்புட்டீங்க..தமிழக அரசியலையும், சினிமாவையும் உன்னிப்பா கவனிச்சுட்டு வர்றதுல்ல நம்ம நாட்டுலயே இரண்டாவது ஆளு நம்ம கோவாலுதேன்..முதல் ஆளு யாரா??கண்டுபிடிங்க பார்ப்போம்..வேணுமின்னா க்ளூ ஒன்னு தர்றேன். அவரு மதுரைக்காரருண்ணே..முதல் எழுத்து “ரா” ல ஆரம்பிச்சு “சா” ல முடியும். இன்னமும் முடியலயா..இன்னொரு க்ளூ தர்றேன்..மொத்தமே இரண்டு எழுத்துதான்..என்னது கஷ்டமா இருக்கா..ரெண்டு எழுத்துக்கு நடுவுல வேற எழுத்தே இல்லேங்குறேன். புரியலையா..அவரை பிரபல பதிவர், அறிவுஜீவின்னு வேற சொல்லிக்கிறாயிங்க..யாருப்பே அது, பேசிக்கிட்டு இருக்குறப்ப செருப்பை கழட்டுறது..சரி விடுங்க..மேட்டருக்கு வருவோம்..பயபுள்ள கோவாலு முகத்துல அப்படி ஒரு சந்தோசம்.

“ராசா..ராசா..இந்தாடா..சுவீட்டு எடுத்துக்க..எனக்கு காலும் ஓடலை..கையும் ஓடலை..”

“வேணுமின்னா எந்திரன் கிளைமாக்ஸ் மாதிரி கையையும் காலையும் கழட்டி கொடுத்திடேன்..”

“கெட்ட வார்த்தை கமெண்டு போட்டாலும், நீ திருந்தவே மாட்டியாடா ராசா..இதுவேற..எங்க கண்டுபிடி பார்ப்போம்..”

“ம்..நீ இன்னைக்குதான் பொறந்து தொலைச்சியா..”

“இல்லியே..”

“ஏதாவது பொண்ணு உன்னை கல்யாணம் பண்ணி வாழ்க்கைய தியாகம் பண்ணுறதா முடிவாயிருக்கா..”

“உன் வீட்டுக்காரம்மா பண்ணுன தியாகத்தை விடவா..அதவிடு..கரெக்டா சொல்லு..”

“ப்ச்..சொல்லித் தொலைடா..இதுவே மூணுபக்கத்துக்கு இழுக்கும் போல..”

அடித்தொண்டையில் கத்தினான்..

“டாக்குடரு..இலைய தளபதி விசய் கட்சி ஆரம்பிக்கப் போறாருடோய்..அம்மாவோட கூட்டணி..2011 ல வேட்டை 2016 ல கோட்டை..”

“அடங்கலியா உன்னோட சேட்டை..ஏண்டா..நீ வேற நடிகரோட தொண்டனுல்ல..இப்ப எப்படி மாறிட்ட..”

“ப்ச்..அவருதான் ஒரு முடிவு சொல்ல மாட்டுறாரே..”

“ஒருவேளை அடுத்த படம் ரீலீஸ் ஆகுறப்ப சொல்லுவாரா இருக்கும்..”

“அதுக்கும் நான் பிளான் வைச்சிருக்கேன்..இப்பவே என்னோட பையன தலைவரோட ரசிகனா மாத்தி வைச்சிட்டேன். தலைவரோட பேரன் எப்படியும் அரசியலுக்கு வந்துதான் ஆகணும்..அப்ப நம்ம பையன் மாவட்ட செயலாளராயிருவானில்ல..”

“ஆஹா..இத படிக்கிறதுல்ல காட்டியிருந்தா, இன்னைக்கு அம்பானியாயிருப்பேயேடா..”

“விடுடா ராசா..எங்க தளபதி விசய் அரசியலுக்கு வந்துட்டாருல்ல..இப்ப அஜீத்து ரசிகர்களுக்கெல்லாம் வைச்சோமா ஆப்பு..”

“ஐய்..அவரும் அரசியலுக்கு வந்துட்டா என்ன பண்ணுவ..”

“அவரு “ஐ..யா..மி..ர..ட்டு..ராங்க..யா….அ..து..” அப்படின்னு சொல்லுறதுக்குள்ள எலெக்சனே முடிஞ்சுரும்..அதுக்குள்ள நாங்க ஜெயிச்சுருவொமே..”

“படா கில்லாடிடா..”

“நாங்க, கடலுல சுறா..சாப்பிடுறதுக்கு இறா..அமைதில புறா..”

“பார்றா…”

“ராசா..இப்பவே சொல்லிப்புட்டேன்..விசய்க்கு தான் நீ ஓட்டுப்போடணும்..”

“சரி..சொல்லு..அவருக்கு நான் ஏன் ஓட்டுப்போடணும்..என்ன பண்ணியிருக்காரு..”

“என்னடா, இப்படி சொல்லிப்புட்ட..இளைஞர்களின் விடிவெள்ளி..எவ்வளவு புரட்சி பண்ணியிருக்காரு..”

“எது..சுறா படத்துல தமன்னா போட்டுருக்குற பேண்ட்டை தூக்கி தூக்கி விடுவாரே..அத சொல்லிறியா..”

“சும்மா இருடா..எவ்வளவு நல்ல கருத்து சொல்லி இருக்காரு..”வாழ்க்கை ஒரு வட்டம்டா..அதுல ஜெயிக்கிறவன் தோப்பான்..தோக்கிறவன் ஜெயிப்பான்..”

“அப்படின்னா..படத்தோட டைரக்டர்தான் அரசியலுக்கு வரணும்..”

“போடாங்க..எவ்வளவு சேவை பண்ணிருக்காரு தெரியுமா..”

“எது..ரசிகன் படத்துல மாமியார் முதுகுல சோப்பு போட்டு ஒரு சேவை பண்ணிருப்பாரே..அத சொல்லுறியா..”

“டே..வெண்ணை..கொன்னுபுடுவேன்..எம்புட்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருக்காரு..”

“அது வடபழனி கோயிக்குப் போனா யாரு வேணுன்னாலும் பண்ணிக்கலாம்..”

“எவ்வளவு இரத்ததான முகாம் தொறந்து வைச்சுருக்காரு..”

“அது நேத்து வந்த காதல் பரத் கூட பண்ணுறாரு..வேற என்ன பண்ணியிருக்காரு சொல்லு..”

“இளைஞர்களுக்கு விழிப்புணர்ச்சி தர்ற மாதிரி எவ்வளவு கருத்து சொல்லியிருக்காரு தெரியுமா..”

“எது..”தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டபுரோட்டா..பம்பாய் குட்டி..சுக்கா ரொட்டி” ன்னா..ஆமா..எவ்வளவு ஆழமான கருத்துக்கள்..

“உனக்கு பொறாமைடா..எவ்வளவு அழகா பேசுவாரு தெரியுமா..”

“முதல்ல அவர வாயத் தொறந்து பேசச் சொல்லு.. அவரு அரசியலுக்கு வந்தா முதல்ல வேலைய விட்டுபோறவன் மைக் செட்டுகாரனாத்தான் இருக்கும்..பின்ன எம்புட்டு வால்யூம் வைச்சாலும் ஒன்னும் கேக்காதே..”

“ராசா..ரொம்ப ஓவராப் பேசுற..முதல்ல எங்க தலைவனைப் பத்திப் பேசுன..இப்ப டாக்குடரு விசய் பத்தி பேசுற..மீனம்பாக்கம் வந்தா அருவாதான் பேசும்..பார்த்துக்க..”

ஆஹா..என்னதான் நம்ம விறைப்பா பேசுனாலும் உசுருன்னு வந்துட்டா, மட்டையா மடங்கி போயிருவோமுண்ணே..

“ஆஹா..கோவாலு..உண்ர்ச்சி வசப்பட்டு எதுவும் முடிவெடுத்துறாதீங்கடா..இப்ப பாரு..”இளைஞர்களின் விடிவெள்ளி..நாளைய முதலமைச்சர்..குடும்ப குத்துவிளக்கு(பயத்துல என்னலாம் வருது பாருங்க..), தமிழ்நாட்டின் ஒபாமா..சரித்திர நாயகன்..டாக்குடரு விசய் வாளுக..வாளுக…”

கழுத..ஜனநாயகம் விளங்கும்றீங்க....??????

Sunday, 5 December, 2010

எந்திரன் vs நந்தலாலா – ஒரு அறிவிஜீவியின் ஒப்பீடு

சமிபத்தில் ஒரு பதிவு படித்தேன். எந்திரனையும் நந்தலாலவையும் ஒப்பீடு செய்யும் அறிவுஜீவிகள் என்று. உங்களுக்குதான் தெரியுமே, நானும் ஒரு அறிவுஜீவியென்று(ப்ச்..நம்புங்கப்பா..ஓ..மை காட்..சத்தியமா நான் அறிவுஜீவிதாம்பா..ஹலோ..நம்புங்க..). அந்தப் பதிவைப் பார்த்ததுமே பொங்கி எழுந்துவிட்டேன். ஒரு அறிவிஜீவியாக இருந்துகொண்டு எந்திரனையும் நந்தலாலவையும் ஒப்பீடு செய்யாவிட்டால் எப்படி..இதோ உங்கள் பார்வைக்கு. முன்பே சொல்லிவிடுகிறேன். இந்த ஒப்பீட்டில் வரும் அனைத்தும் இந்த அறிவிஜீவியின் சீரியஸ் எண்ணங்கள். காமெடிபீசுன்னு நினைச்சுக்கிட்டு, சிரிச்சீங்க..அம்புட்டுத்தேன்…

நந்தலாலா

எந்திரன்

தாயைத்தேடி ஒரு பயணம்

ரங்கூஸ்கி கொசுவைத் தேடி ஒரு பயணம்

“டாடி”களை நம்பி எடுக்கப்பட்ட சினிமா

“கோடி”களை நம்பி எடுக்கப்பட்ட சினிமா

உலகதரத்தில் உள்ளூர் திரைப்படம்

உள்ளூர் தரத்தில் உலகத்திரைப்படம்

6 வயது நாயகரை நம்பி எடுக்கப்பட்ட படம்

64 வயது நாயகரை நம்பி எடுக்கப்பட்ட படம்

இசைஞானியின் இசைத்தாலாட்டு

இசைப்புயலின் செமபீட்டு

தாயின் புறக்கணிப்பின் வலி

ஐஸ்வர்யா ராயின் புறக்கணிப்பின் வலி

மெதுவாக செல்லும் திரைக்கதை

எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும் திரைக்கதை

6 வயது சிறுவனுக்கும், 30 வயது இளைஞனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு

64 வயது இளைஞருக்கும், 30 வயது இளைஞிக்கும் உள்ள காதல்பிணைப்பு

மனதை தொட்டு செல்லும் லாங்க்ஷாட் காட்சிகள்

நிமிடத்திற்கு நிமிடம் மாறும் பரபர காட்சிகள்

ஆஹா..இதை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..கிகிஜிரோ இயக்குநர் கதறல்

அனைத்து ஹாலிவுட் இயக்குநர்களும் கதறல்

படத்தின் மொத்த செலவு 2 கோடி

படத்தின் கேசட் வெளியீட்டு விழா செலவு 2 கோடி

கதையோடு இணைந்து செல்லும் நகைச்சுவை

கதைக்கு தேவையே இல்லாத சந்தானத்தின் நகைச்சுவை

அம்மா……..

ரோபோ….மே….

மிஸ்கினின் யதார்த்த சினிமா

சங்கரின் பதார்த்த சினிமா

ஜில்லென்ற மோர்…

கும்மென்ற பாரின் பீர்

திரையரங்கம் முழுவதும் நிசப்தம்

வருங்கால முதல்வர் வாழ்க..உடல் மண்ணுக்கு..உயிர் ரஜினிக்கு..

படம் முடிந்ததும் மனதுக்குள் இடிச்சத்தம்

படம் முடிந்ததும் தியேட்டருக்கு வெளியே வெடிச்சத்தம்

Thursday, 2 December, 2010

மைனா - விமர்சனம்

என்ன ஆச்சு தமிழ் சினிமாவுக்கு, இப்படி தொடர்ச்சியாக நல்ல படங்கள் வந்தால் மங்காத்தா,காவல்காரன் படங்களை யார்தான் பார்ப்பது. சற்று தாமதாகத்தான் மைனா பார்க்க நேர்ந்தது. இந்த படத்திற்கு நிறைய பேர் விமர்சனம் எழுதி, துவைத்து காய்ப்போட்டுவிட்டதால் நானும் விமர்சனம் எழுதி உங்களை போரடிக்க விரும்பவில்லை. அதனால் படத்தைப் பற்றிய என்னுடைய துணுக்குகள்

 1. மைனா என்ற பெயரே படத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆவல் ஏற்படுத்துகிறது. அதன்படி செல்லும் ரசிகர்களை இயக்குநர் ஏமாற்றவில்லை.
 2. எந்த ஒரு காட்சியும் வீணாக வரவில்லை. ஒவ்வொரு காட்சியும் கதையோடு பொருந்தி ரசிக்கும்படி இருப்பது சிறப்பு.
 3. அழகான ஒரு காதல் பயணத்தை, கதாபாத்திரங்களோடு நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்
 4. படத்திற்காக நடிக்க..மன்னிக்க வாழ வைக்கப்பட்ட அனைவருக்கும் சல்யூட். மனநிறைவாக செய்திருக்கிறார்கள்.
 5. கதாநாயகனாக நடித்தவர் தொடங்கும்போது எரிச்சல் தந்தாலும், போக போக மனதிற்குள் ஒட்டிக்கொள்கிறார். ஆனாலும் மதுரை பாஷை பேசியே எத்தனை படங்கள்தான் வரப்போகிறதோ என்று எண்ணும்போது பயமாகவும் இருக்கிறது
 6. அநியாயமாக இறந்து போவதற்கென்றே கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நாயகி அமலா நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய கன்னத்தில் இருக்கும் சிறு பரு கூட அழகு என்று எழுதலாம் என்று நினைக்கும்வேளையில், மனைவி பூரிக்கட்டையை உயர்த்தியதால், இந்த பேச்சு, இத்தோடு மனமில்லாமல் துண்டிக்கப்படுகிறது
 7. ஒரு செண்டிமெண்டான காட்சியை ரசிக்கும்போது, உடனே ஒரு ஜாலியான காட்சி வந்துவிடுகிறது. அதனால், படம் முழுவதும் ஒரேயடியாக சோகத்தில் ஆழ்த்தாமல் செல்கிறது
 8. இன்னொரு ஆச்சர்யம், காவல்துறை அதிகாரியாக நடித்த தம்பி இராமையா. கதாநாயகனோடு மாட்டிக்கொண்டு அல்லாடும் காட்சிகளில் சிரிக்கவைக்கிறார். இன்னோரு அதிகாரியாக நடித்த சேது, தன் இயல்பான நடிப்பால் கவர்கிறார்..எங்கயா இருந்தீங்க இவ்வளவு நாளா??
 9. இசையமப்பாளர் இமான் இன்னொரு ஆச்சர்யம். பாடல்கள் ஒவ்வொன்றும் படம் முடிந்தபின்பும் முணுமுணுக்க வைக்கின்றன. குறிப்பாக “ஜிங்கு, ஜிங்கு..”, “மைனா..மைனா..” போன்ற பாடல்கள் ஒன்ஸ்மோர்..கைகொடுங்கள் இமான் சார்..தயவு செய்து அர்ஜூன் படம் பக்கம் மட்டும் போயிராதீங்க..
 10. கேமிராமேனுக்கு பெண்டு கழண்டிருக்கும். யாரும் எட்டிப்பார்க்காத இடங்களுக்கு கூட கேமிராவை எடுத்துக்கொண்டு போய் நிரம்ப உழைத்திருக்கிறார்கள். உழைப்பு வீணாகவில்லை. மலை சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஒவ்வோரு பிரேமிலும் குழுவினரின் கடின உழைப்பு தெரிகிறது. வெல்டன்.
 11. இதுவரை அதிகம் கவனிக்கப்படாத இயக்குநர் பிரபு சாலமன். இந்த படத்தின் மூலம் கவனிக்கப்படுகிறார். ஒரு படி உயர்ந்திருக்கிறார் என்று சொல்லவேண்டும். இவருக்கு எப்படி வேலை வாங்கவேண்டும் என்று தெரிந்திருக்கிறது. பிரபு சாலமன், பாலா, மிஷ்கின், சேரன், சசி, சமுத்திரக்கனி, சசிக்குமார் என்று ஒரு கூட்டமே நம்பிக்கை தருகிறது. இவர்கள் இருக்கும் வரை தமிழ்சினிமாவின் தரம் இன்னும் உயரும் என்று நம்பிக்கை உள்ளது. அடுத்த படத்திற்கும் தீயா வேலை செய்யணும் மிஸ்டர் சாலமன்…
 12. கிளைமாக்ஸ் சற்று உலுக்கிதான் போடுகிறது. காலையில் மனைவி எழுந்து காலைவணக்கம் கூட சொல்லாமல் “ஏங்க..கிளைமாக்ஸ்ல இப்படி ஆகிப்போச்சு” என்று சொல்லியபோது இதை உணர்ந்தேன்.
 13. ஆனா, இந்த படத்தோட மதுரைப்பாஷை பேசி நடிக்கிறத முடிச்சுக்கங்கப்பூ..இனி யாராவது “அடியே..” என்று இழுத்து நடிச்சீங்க..இருக்குடியே....அடியே..(ஆஹா..தொத்துவியாதியா இருக்கும்போலிருக்கே..)

முடிவாக..மைனா – அழகான காதல் பயணம்.

Tuesday, 30 November, 2010

நந்தலாலா – இது படம்யா……

பொதுவாக எனக்கு அறிவுசெருக்கு உள்ளவர்களை பிடிப்பதில்லை. நீங்கள் திட்டினாலும் பரவாயில்லை, இந்த காரணத்திற்காகவே எழுத்தாளர் சுஜாதா, பாலகுமாரன், இளையராஜா போன்றவர்களை பிடிப்பதில்லை. ஆனால் அவருடைய படைப்புகளை அல்ல. “தயவு செய்து இனிமேல் புத்தகங்களை பரிசாக அனுப்பாதீர்கள் ” என்று சுஜாதா சொல்லியபோது, அவரை பார்க்கவேண்டுமென்று எனக்கிருந்த ஆர்வம் சடுதியில் மறைந்து போனது. ஆனால் கடைசியில் அவர் இறந்த பின்பு புகைப்படத்தைதான் பார்க்க முடிந்தது. அதுபோல்தான் இளையராஜா. நான் பண்ணுவதுதான் இசை என்று சொல்லியபோது, கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஆனால், அதற்காக இரவு வேளைகளில் அவருடைய பழைய பாடல்களைக் கேட்பதை நிறுத்தவில்லை. இன்னமும் அவருடைய இசைதான் எனக்கு தாலாட்டு. அதுபோல்தான் மிஷ்கின். அஞ்சாதே படத்தைப் பார்த்தபோது, அவர் மீதிருந்த ஆர்வம், அவருடைய சில பேச்சுகளை படிக்கும்போது சுத்தமாக போயிருந்தது. அதனால், “அப்படி என்னதான்யா எடுத்திருக்கான்” என்று ஒரு கோபத்துடன்தான் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.

பல விமர்சனங்களை எல்லோரும் படித்திருப்பதால், திரும்பவும் கதையை சொல்லி போரடிக்க விரும்பவில்லை. டைட்டில் கார்டிலிருந்து இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் ஆரம்பித்து விடுகிறது. அந்த இசை மெல்ல மெல்ல உங்கள் மனதை ஆக்ரமித்து காட்சிகளாக விரியும்போது மிஸ்கினின் ஆளுமை தொடங்குகிறது. ரேடியோ பெட்டியை உடைக்கும்போது சட்டென்று தொடங்கிய ஆச்சர்யம், கிளைமாக்ஸ் வரை தொடர்ந்து, முடிக்கும்போது கண்ணீர் துளியாக வருகிறது.

இந்த படத்தில் மிஸ்கின்ன் உடைத்த தமிழ்சினிமாவின் கிளிஷேக்களை சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிபட்ட கேமிரா கோணங்கள் இந்திய திரையுலகத்திற்கே புதுசு எனலாம். அடிக்கடி கால்கள் நடப்பதை கொண்டே காட்சிகளை விவரிக்கும் ஸ்டைலாகட்டும், கேமிராவை ஒரு இடத்தில் வைத்துவிட்டு பிம்பங்களை நடமாடவிடும் ஸ்டைலாகட்டும், கதாபாத்திரங்களோடு கூடவே ஓடும் கேமிரா கோணங்களாகட்டும், மகேஷ் முத்துசாமி என்பவர் தமிழ்திரை உலகின் தவிர்க்கமுடியாத ஒளிப்பதிவாளராக போகிறார் என்பதற்கு சான்று

இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதை ஏதோ செய்வார்கள். பைக்கில் வரும் அந்த ஜப்பானிய குண்டர்கள். இளநீர் விற்கும் அந்த தாத்தா, வழிகாட்டும் ஊனமுற்றவர், ஹனிமூன் ஜோடிகள், ரோமியோக்கள், ஆங்கிலத்தில் பேசினால் அமைதியாகும் போலிஸ்காரர்கள், பாலியல் தொழில் பேசும் ஸ்னிக்தா, 12 நொடிகள் வரும் நாசர், 1 நிமிடம் வரும் ரோகிணி..இப்படி பல..அனைத்தும் படம் முடிந்தபின்பும் அப்படியே கண்ணுக்குள் நிற்கின்றன. இன்னும் பலவருடங்களுக்கு, இந்த படம் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு பாடமாக இருக்கும்.

சிறுவனாக நடித்த அந்த சிறுவன் அஸ்வத், மனதை கவர்கிறான். வயதுக்கு மீறி இல்லாமல், சராசரி சிறுவனாகவே காட்டியிருப்பது சிறப்பு. மிஸ்கின் இந்த படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகர் விருது வாங்காவிட்டால்தான் ஆச்சர்யம். மனிதர் அனாசயமாக நடித்து தள்ளிவிட்டார். நிமிடத்தில் வரும் அழுகை, கோபம், சிரிப்பு, கண்ணீர்..அப்பப்பா..அதுவும் அம்மாவை பார்த்தவுடன், அவருடைய நடிப்பை பார்த்து வியந்து போனேன். சிறுவன் கோபத்தில் “மெண்டல்” என்று சொன்னவுடன், ஆற்றாமையால் அழும் அந்த நடிப்பு, உண்மையிலேயே அனைவரையும் அழவைக்கும்.

படத்தின் உயிர்நாடியே இளையராஜாதான். பல விமர்சனங்களில் சொல்லியது போல், தியேட்டருக்கு சென்று கண்ணை மூடி உக்கார்ந்து கொள்ளலாம். பிண்ணனி இசையே பல சேதிகள் சொல்லும். எங்கு எங்கு மௌனம், எங்கு எங்கு துள்ளலிசை, எங்கு எங்கு மெலடி என ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். சும்மாவா சொல்கிறார்கள் இசைஞானியென்று..

ஒரு படம் இவ்வளவு அதிர்வுகளை ஏற்படுத்தமுடியுமா என்று கேட்டால், இந்த படம் ஏற்படுத்தும். இந்த படத்திற்கு தேசிய விருது கொடுக்காவிடில், அப்படிபட்ட தேசியவிருது, நமக்கு தேவையில்லை. இந்த படம் காபி என்று சொன்னால், “இருந்து விட்டு போகட்டுமே” என்றுதான் சொல்லுவேன். எனக்கு இதுதான் உலகசினிமா..என் பகுதி வாழ்வியலை சொன்ன சினிமா. நாம் அன்றாடம் உபயோகிக்கும் அனைத்தும் ஏதோ ஒன்றின் நகல்தானே. அதற்காக நாம் அதை உபயோகிக்காமலா இருக்கிறோம். மிஷ்கின் அந்த படத்தை டப்பிங்க் செய்து “பாருங்கடா என் படத்தை” என்று சொல்லியிருந்தால் கோபப்படலாம். ஆனால் கதாபத்திரங்களை நம்மோடு பயணிக்கவிட்டிருக்கிறாரே..இரண்டரை மணிநேரம் அவர்களோடு ஒன்றிப்போகிறோமே..இதற்கு மேல் என்ன வேண்டும்..காபியாவது…புடலங்காயாவது…

முடிவாக சொன்னால், நந்தலாலா – இதுபோன்று இனிமேல் இந்தியாவில் படம் எடுக்கமுடியாது..

Sunday, 28 November, 2010

“தக்காளி…!*&!&$##$$*#@%...” என் கையில மாட்டுனான்…”

மதுரை என்றாலே எனக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. புழுதியிலும், வெயிலிலும் அலைந்து கிடந்த மண்ணல்லவா. இப்போதும், என் உடம்பில் அந்த வாசம் ஒட்டிக்கொண்டே இருக்கும். என்னதான் பகுமானத்துக்கு அமெரிக்காவில் பர்கரை கடித்தாலும். இன்னமும் முக்குகடை பணியாரத்திற்கு நான் அடிமை. சென்னையில் எந்த தெருவிலாவது பணியாரம் சுடும் ஆயாவைப் பார்த்ததுண்டா. இன்று சென்றாலும் சோழவந்தான் வீதிகளில் பார்க்கலாம். அந்த ஆயா பணியாரம் சுடும் அழகை அருகில் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருப்போம். அதிகபட்சம் ஒரு பணியாரம் 25 பைசா விலையேறி இருக்கும். 4 ரூபாய்க்கு, காலை உணவையே முடித்துவிடுவோம்.

மதுரையை அவ்வளவு சீக்கிரம் மறக்கவும் முடியாது. எங்காவது “வந்துட்டாயிங்க..போயிட்டாங்க” என்ற வார்த்தையைக் கேட்டால், என்னை அறியாமல் நான் திரும்பி பார்ப்பேன். உடனே அவர்களிடம் சென்று நான் கேட்கும் முதல்கேள்வி “என்னண்ணே..மதுரையா..”. அப்படித்தான் அவன் எனக்கு அறிமுகமானான். பெயர் வினோத். மதுரைக்காரன். இங்கு போன மாதம்தான் வந்திருந்தான். யாரைப் பார்த்தாலும் திருதிருவென்று முழித்தான். என்னை விட 5 வயது கம்மி. சின்னப்பையன் போல் இருந்தான்.

“என்ணண்ணே..இங்கிட்டு ஒரு எழவும் புரிய மாட்டிங்குது. இவிங்க இப்படித்தான் இருப்பாயிங்களா..” என்றான். சிரித்துக் கொண்டன். அந்த தமிழை கேட்க ஆசையாய் இருந்தது. வாய் நிறைய “அண்ணே..அண்ணே..” என்றுதான் கூப்பிடுவான்..

“அண்ணே..எப்படிண்ணே இருக்கீங்க..”

“அண்ணே..டைம் என்னண்ணே..”

“அண்ணே..கிளம்பலாமாண்ணே..”

“அண்ணே..ரொம்ப நன்றிண்ணே..”

இப்படி வாய் முழுக்க அண்ணன்கள். ரொம்பவும் மரியாதை கொடுத்தான்..

“டேய் வினோத்து. என்னை பெயரை சொல்லியே கூப்புடுடா..”

“போங்கண்ணே..உங்களைப் போயி..”

ரொம்ப ரொம்ப நெஞ்சை நக்கினான். நானும் அவனை விட 5 வயது மூத்தவன் என்பதையே மறந்துவிட்டேன். என் நண்பனாகவே பழக ஆரம்பித்தேன். முடிந்தவரை அவனுக்கு உதவி செய்தேன். நம்ம ஊர்க்காரனாச்சே என்ற பாசம்தான் அதிகம் இருந்தது. இப்படி போய் கொண்டிருந்த போதுதான் ஒருநாள் என்னிடம் கேட்டான்..

“அண்ணே..தண்ணியடிப்போமா..”

என்னிடம் உள்ள ஒரே கெட்டபழக்கம் தண்ணியடிக்க பழகாததுதான். அடிபம்பில் கூட இரண்டு வாளி தண்ணியடிப்பேன், ஆனால் மருந்துக்குகூட மது(தியேட்டர் இல்லைண்ணே) பக்கம் செல்ல மாட்டேன். ஒரு புடலங்காய் சத்தியமும் இல்லை. நான் அந்த பக்கம் செல்ல நினைத்தாலே, அய்யனார் வேஷம் போட்ட வினுசக்கரவர்த்தி மாதிரி எங்கப்பா கையில் அருவாளோடு நாக்கை துருத்திக் கொண்டு ஓடிவரும் காட்சி என்முன் தோன்றுவதால். ஆனால் எனக்கு புடித்தது தண்ணியடிப்பவர்களுக்கு கம்பெனி கொடுப்பது. ஏனென்றால் தண்ணியடிக்கும் இடங்களில்தான் சைடுடிஷ் காரம்சாரமாக கிடைக்கும். கேட்க, கேட்க கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். மற்றும் தண்ணியடித்தவர்களின் உளறலை கேட்க சிரிப்பாக இருக்கும். அதனால் உடனே ஒத்துக்கொண்டேன். வினோத்து வீட்டில் பாட்டில் ஓபன் பண்ணுவது என்று முடிவானது.

கரெக்டாக 9 மணிக்கு சாமியைக் கும்பிட்டு பாட்டிலை ஓபன் பண்ணினான்..

“சாமி..நல்லா போதை ஏறணும்..”

ஓபன் பண்ணுவதற்கு முன்னால், மரியாதை தெரிஞ்ச பய, பவ்யமாக என்னிடம் கேட்டான்..

“அண்ணே..உங்க முன்னாடி சரக்கு அடிக்கபோறேன் தப்பா எடுத்துக்க மாட்டிங்கள்ள..”

எனக்கு புல்லரித்துப்போனது. என்ன ஒரு பாசம்..என்ன ஒரு பாசம்..

“தம்பி..நீ எனக்கு தம்பி இல்லைடா..நண்பேண்டா..ஒரு வார்த்தை கேட்ட பார்த்தியா…அதுவே எனக்கு போதும்டா..தைரியமா அடி..”

கண்ணை மூடிக்கொண்டு முதல் ரவுண்டு உள்ளே விட்டான்..நானும் இருக்கிற சைடுடிஷ்களை காலி பண்ண ஆரம்பித்தேன்.

“அண்ணே..எனக்கு நீங்கதாண்ணே உண்மையிலேயே அண்ணே..நீங்க இல்லாம எனக்கு யாருமே இல்லேண்ணே..நீங்க ஹெல்ப் பண்ணலைண்ணா..ப்ச்..”

ரொம்ப பீல் பண்ணினான்..

“விடுடா தம்பி..நம்ம ஊர்க்காரனாயிட்ட..”

இப்போது ரெண்டாவது ரவுண்டு உள்ளே விட்டான்..

“அண்ணே..நீங்க அண்ணே..நானு தம்பி..”

“ஆமாண்டா தம்பி..”

“இல்லை..நீங்க ஒத்துக்க மாட்டீங்குறீங்க..நீங்க தம்பி..நான் அண்ணே..சாரி..சாரி..நீங்க அண்ணே..நான் தம்பி..”

“ஓகே தம்பி..நான் வரட்டா..”

என்ன நினைத்தானென்று தெரியவில்லை..மூன்றாவது ரவுண்டையும் உள்ளே விட்டான்..

“டே..அண்ணே..உக்காரு..”

சரி பயபுள்ள வேற யாரையாவது சொல்லுறான்னு அங்கிட்டு பார்த்தா ஒருத்தனையும் காணோம். ஆஹா..அப்ப என்னையத்தான் சொல்லுறானா..

“டே..தம்பி..என்ன இது..”

“டே..வெளக்கெண்ண..உக்காருடா..ஒரு தடவை சொன்னா கேட்காது..புடிங்கி” ங்கிறான்..எனக்கு ஆடிப்போயிருச்சுண்ணே..

“டே..தம்பி..உனக்கு தலைக்கு போதை ஏறிருச்சு..ஒழுங்கா தூங்கு..”

“போடா..சொம்பு..ஒருதடவை சொன்னா தெரியாது..வூட்டுல போயி என்னத்த புடுங்க போற..உக்காரு ஒழுங்கா..இல்லைண்ண்ணா…இந்த பாட்டில வுட்டு மண்டையில ஆட்டிப்புடுவேன்”

ஆத்தாடி..எனக்கு கொலைநடுங்கிப்போச்சுண்ணே..உசிருக்கு பயந்து அப்படியே உக்கார்ந்துட்டேன்.. இன்னொரு ரவுண்டு உள்ளே விட்டான்..

“என்ணண்ணே..தப்பா எடுத்துக்காதண்ணே..நீ அண்ணே..நான் தம்பி.. சொல்லு..நீ யாரு..”

உசிரு பயத்துல தானா வார்த்தை வந்தது..

“அ…ண்…ணே..”

“நானு..”

“த..ம்…பி..”

உடனே ஆரம்பித்தான்..

“அண்ணே..உங்களுக்கு எவ்வளவு கொடுமை செய்திருக்கேன்..நாம சின்னபுள்ளையில எம்புட்டு பாசமா இருந்துருப்போம்..”

“டே..வினோத்து..ஒரு மாசமா தாண்டா உன்னோட பழக்கம்..சும்மா குடிச்சுப்புட்டு உளறாதே..”

“என்னது..நான் குடிகாரனா..நான் உளறுனா..டே…ய்….”

அவ்வளவுதாண்ணே..அவ்வளவு கெட்ட வார்த்தையை ஒரே வாயிலிருந்து அப்பதான் முததடவையா கேக்குறேன். சிலவார்த்தையெல்லாம் சின்னபுள்ளையில கேட்டது..காதை பொத்திக்கொண்டேன்..திடிரென்று பயபுள்ள இறங்கிட்டான்..

“அண்ணே..சாரிண்ணே..நல்லா..ஏறிரு..ச்..சிண்ணே..நீங்க கூட ரெண்டு..ரெண்டா..தெரியிறீங்க..ண்ணே..”

சொல்லிக்கொண்டே..பொத்தென்று கீழே விழுந்தான்..ஆஹா..பயபுள்ளைக்கு அடிபட்டுட போகுதுன்னு அவனை அப்படியே தூக்கினேன். அந்த நேரம் பார்த்து எடுத்தான் பாருங்க..ஒரு வாந்தி..அவ்வளவுதான்..அவ்வளவு சாக்கடையும் என்மேல்தான்..ஏறக்குறைய குளித்தேவிட்டேன்…அந்த நாத்தம் தாங்கமாட்டாமல் நானும் எடுத்தேன் வாந்தி..

பின்பு என்ன..அவனை எழுப்பி குளிக்கவைத்து..படுக்கையில் போட்டு விட்டு..நானும் குளித்து திரும்ப வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது..வாழ்க்கையே வெறுத்துப்போனேன்..திரும்ப வந்து பார்த்தால் ஆளைக்காணோம்..கட்டிலுக்கு கீழே மல்லாக்க விழுந்து கிடந்தான்..திரும்பவும் உளறினான்..

“ஆ….ஏய்..யா..ரு..யா..அங்க..நிக்க்கு..ற..து..ஐ…லவ்..யூ…என் ..வா..ழ்க்க்..கை..யில்..நடந்த…சம்ப்ப..வங்க..ள்..

திரும்பவும் அவனை படுக்கபோட்டுவிட்டு அவனருகில் ஒரு சேர் போட்டு உக்கார்ந்து கொண்டேன்..பய போதையில் எங்கயாவது போய் விட்டால் பிரச்சனையாகிவிடுமோ என்ற பயம்தான்..காலை 5 மணிவரைக்கும் முழித்தே இருந்தேன்..அசதியில் அப்படியே தூங்கிப்போனேன்..துக்கத்தில் யாரோ காதுக்குள் மணியடிக்கும் சத்தம் கேட்டு மெதுவாக கண்ணைத்திறந்து பார்க்கிறேன்..எதிரே நம்ம வினோத்து நெற்றி நிறைய திருநீரோடு, இடுப்பில் வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு, தெய்வ கடாஷமா..பயபக்தியோடு..பூஜை மணியை ஒரு கையில் ஆட்டிக்கொண்டு..,இன்னொரு கையில் திருநீரை நீட்டுறான்..

“அண்ணே..துண்ணூரை எடுத்துக்கங்கண்ணே..”

எனக்கு இருந்த கொலைவெறியில் ஒன்றும் பேசவில்லை..அவனே பேசினான்..

“என்னண்ணே..இம்புட்டு நேரமா தூங்குறது..உடம்புக்கு ஏதும் பிரச்சனையாண்ணே..ஏதோ வாந்தி எடுத்த மாதிரி தெரியுது..

எனக்கு வந்த ஆத்திரத்துக்கு. கையில் எதுவும் கிடைக்கலை..அங்கிட்டு கிடந்த பாட்டிலை எடுத்து அவனைநோக்கி ஓடினேன்..அன்னிக்கு ஓடி ஒளிஞ்ச பையன்..இன்னும் என் கையில சிக்கலை..

“தக்காளி…!*&!&$##$$*#@%...” என் கையில மாட்டுனான்…”

Sunday, 14 November, 2010

நீயெல்லாம் எதுக்குடா கல்யாணம் பண்ற…

(மனைவியின் பார்வையில்)

காலையில் சுடசுட பெட் காபி..

வேண்டுமானால் முதுகுக்கு சோப்பு…

ஆவிபறக்க இட்லியும் சட்னியும் ரெடியாக..

அயர்ன் பண்ணி தயாராக சட்டை பேண்ட்…

நீ டீசண்டாக காட்சியளிப்பதற்கு ஷூ பாலிஸ்..

ஒருவாயில் இட்லியோடு நீ படிக்கும் தட்ஸ்தமிழ்..

“அய்யோ..இண்டியன் எகனாமி கோயிங்க் டவுண்” என்று கத்தல்..

இரவு எழுதிய பதிவுக்கு எத்தனை ஓட்டு என்று பார்வை..

சாப்பிடும்போது நண்பனின் பதிவு பற்றி போன் பேச்சு..

நீ கொட்டிக்கொள்ள ரெடியாக இருக்கும் லஞ்ச் டிபன்பாக்ஸ்.,.

புறப்படும்போது எந்திரத்தனதனமான ஒரு டாட்டா..

சாயங்காலம் திரும்பி வரும்போது கடனுக்கு ஒரு புன்னகை…

லேப்டாப்பை திறந்து “ஏ..மனிதா..” என்று ஒரு பதிவு..

துரை டயர்டாயிட்டாரு என்பதற்காக ப்ரூ காபி..

“ஓ.மை..காட்..மொத்தம் நாலு ஓட்டுதானா..” என்று புலம்பல்..

“பதிவுலகம் ஏண்டா இப்படி” நாராசமான போனில் உரையாடல்..

“சாம்பருல கொஞ்சம் உப்பு கம்மி..” கோபமான குரலில் திட்டு..

எத்தனை ஓட்டு,கமெண்ட் என நிமிடத்திற்கு நிமிடம் பார்வை..

“சூப்பர்,கலக்கல்.” பொய்யாக நண்பனின் பதிவுக்கு கமெண்ட்…

நல்லா போர்வை போத்தி குறட்டை விட்டு கேவலமான தூக்கம்..

நீயெல்லாம் எதுக்குடா கல்யாணம் பண்ற…