Thursday, 19 May, 2011

தமிழ் திரையுலகம் மொத்தமாக அள்ளிய தேசிய விருதுகள்

முதல்லயே சொல்லிடுறேன்..ஆஹா, அம்மா ஆட்சிக்கு வந்தவுடனேயே பாரு யோகத்தை..மொத்தமாக அள்ளிட்டோம்னு சொல்றவியிங்க, இப்பயே எஸ்கேப் ஆகிடுங்க..ஆஹா..அய்யா, ஆட்சியில இருந்தா, இன்னும் அள்ளியிருப்பாயிங்கன்னு சொல்லுறங்களும், இப்பவே எஸ்கேப் ஆயிருங்க. ஏன்னா, பாழாப்போன அரசியல கலக்காம, திறமையினால் மட்டுமே வாங்கிய தேசியவிருதுகள் இவை.

தொடர்ச்சியான துன்பத்திற்கு அடுத்து, தமிழ்திரையுலகிற்கு கிடைத்த இனிய அதிர்ச்சி இது. இந்திய திரையுலகம் என்பது, இந்தி படங்கள் மட்டுமே என்ற பொய்த்தோற்றத்தை, இது மொத்தமாக துடைத்துப்போட்டிருக்கிறது. திறமையான நடிகர்கள், டெக்னீசியர் எனும்போது, தழிழ்திரையுலகத்தை புறக்கணிக்க முடியாது என்பதையும் இது நிரூபித்திருக்கிறது.

துள்ளுவதோ இளமையில், ஒடிசலான தேகத்தோடு அறிமுகமானபோது, “இவனெல்லாம் ஹீரோவா..கொடுமையா” என்று நினைத்தவர்கள் எல்லாம், இப்போது வாயடைத்துப்போயிருப்பர். “காதல் கொண்டேன்” படம்தான், இந்த ஒடிசலான உருவத்திலும் இவ்வளவு திறமை உண்டு என்று நிரூபித்தது. ஆனால், நான் முழுவதுமாக வியந்தது “புதுப்பேட்டை” படத்தில்தான். தாதா போன்ற உருவம் இல்லாமல் இருந்தாலும், அந்த கதாபாத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் முடிந்தவரை சிறப்பாகவே செய்திருப்பார். மாப்பிள்ளை, படிக்காதவன், சுள்ளான் போன்ற சொத்தை படங்களில் நடித்தாலும், ஆடுகளத்தில் சிறப்பாக நடித்து, தேசியவிருது வாங்கியிருக்கிறார்..வாழ்த்துக்கள். கொடுமை என்னவென்றால், அவரால் இந்த சந்தோசத்தை கொண்டாடமுடியாத சூழ்நிலைதான்.

சரண்யா..தமிழ்படங்களில், அம்மாவை எவ்வளவு கொடுமைபடுத்தமுடியுமோ, அவ்வளவு கொடுமைப்படுத்துவார்கள். அந்த கொடுமைகளில் எல்லாம் தப்பித்து ஒருவர் தேசிய விருது வாங்கியிருப்பது சாதாரண விஷயம் இல்லை. நடிக்கும் எல்லா படங்களிலும், இயல்பான நடிப்பை வழங்கியிருப்பதாலே, இந்த விருதுக்கு முழு தகுதிஉடையவராகிறார். வாழ்த்துக்கள்..

அடுத்து, ஆடுகளம் படத்திற்கு கிடைத்த விருதுகள். மூன்று கதாபாத்திரங்களின் மனப்போராட்டத்தை, இவ்வளவு அழகாக யார் சொல்லமுடியும், அதுவும், தமிழ்சினிமா, இதுவரை கண்டிராத சேவல் சண்டை களத்துடன். சும்மாவா, பாலுமகேந்திரா சிஷ்யர் அல்லவா..அது என்னவோ தெரியவில்லை..பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வருபவர்கள் விருதுகளை வாங்கி குவிக்கும் மாயம்.

சிறந்த நடன இயக்குநர் தினேஷ்.. நளினமான நடன அமைப்பிற்கு சொந்தக்காரர். திறமையுள்ளவர் எவ்வளவு நாளானாலும் கண்டிப்பாக அங்கிகரிக்கப்படுவர் என்பதற்கு இவர் உதாராணம். ராம் படத்தில் வரும் “பூம், பூம்” பாடலும், ஈசன் படத்தில் வரும் அந்த துள்ளலிசை பாடலும், இவருடைய திறமைக்கு சான்றுகள். வாழ்த்துக்கள்..

சிறந்த ஸ்பெஷல் எபக்டு, கலை-தயாரிப்பு விருதுகள் எந்திரனுக்கு. இந்த விருதுகள், இப்படத்திற்கு கிடைக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம். ஒவ்வொரு நிமிடமும் கொட்டி உழைத்த உழைப்பு, படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்ததே.

ஆடுகளத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஈழ்க்கவிஞர் ஜெயபாலனுக்கு கிடைத்த விருது, அவருக்கு கிடைத்த சிவப்பு கம்பளம். இந்த மனிதர் மேலும் விருதுகள் வாங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது

மொத்தத்தில், தமிழ்திரையுலகத்திற்கு இது சிறப்பான வருடம்.. திரும்பவும் “தங்கதாரகையே” , “பாசத்தலைவனே” என்று ஆரம்பிக்காமல், அந்த நேரத்தை, இதுபோன்ற நல்ல படைப்புகளுக்கு செலவிட்டால், தேசியவிருது என்ன. ஆஸ்கார் விருதுகள் வந்து வாசற்கதவை தட்டும்.

Tuesday, 17 May, 2011

வடிவேலு எப்ப அடிவாங்குவார்

இப்போதைக்கு தமிழ்நாட்டு மக்களின் ஹாட்கேக் என்ன தெரியுமா..அம்மா வெற்றி பெற்றதல்ல, வடிவேலு எப்ப அடிவாங்குவார் என்பதுதான். தேமுதிகவினரால், ஏற்கனவே அவருடைய அலுவலகம் சூறையாடப்பட்ட நிலையில், அவருடைய பண்ணைவீடும் இன்று சூறையாடப்பட்டதாக செய்திகள் வருகின்றன. அவர் உயிருக்கு பயந்து, மதுரையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதில் எனக்கு ஆச்சர்யம் தருவது என்னவென்றால், மக்களின் மனநிலை. வடிவேலு, அடிவாங்குவதை கண்முழுக்க பார்க்கவேண்டும் என்பதை, ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறான். “எவ்வளவு நாளு, வீட்டுக்குள்ள பதுங்கியிருப்பான்..ஒருநாளைக்கு வெளியே வரணுமில்ல..அப்ப அடிப்பாயிங்க பாரு” என்பதுதான் இப்போதைய டாக். அதன் விளைவே, இணையத்திலும், பேஸ்புக்கிலும் வரும் கேலிச்சித்தரங்களும், வீடியோக்களும். அதை பார்க்கும்போது, நகைச்சுவையாக இருந்தாலும், ஒருநிமிடம் வடிவேலு மனதிலிருந்தும். அவர் குடும்பத்தினர் மனநிலையிலிருந்தும் பார்க்கும்போது நடுங்கி போகவைக்கிறது.

பொதுவாக மனித மனத்துக்குள், ஒரு குரூர மனப்பான்மை உண்டு என்று மனவியல் நிபுணர்கள் சொல்லுவர். அது சமயம் பார்த்து, எட்டிப் பார்க்குமாம். கிராமத்துப் பக்கம் சென்று பார்த்தால், சிறுவயது பயல்கள், தென்னை ஓலையில் செய்த ஒரு சுருக்கை எடுத்துக்கொண்டு, மரம் மரமாக அலைவார்கள், கரட்டாவண்டி எனும் ஓணானைப் பிடிப்பதற்கு. அணிலை யாரும் துன்புறுத்த மாட்டார்கள். கேட்டால், அதற்கு ஒரு கதை வேறு. ராமர் பாலம் கட்டும்போது, அணில் உதவியதாம், ஓணான் உதவவில்லையாம். பாவம், அந்த ஓணான் பிடிபட்ட பிறகு, அதன் கழுத்தில், சுருக்கை கட்டி, அதன் மேல் மூக்குபொடியை போட்டு, அதனை அணுஅணுவாக தடுமாற வைத்து, ரசிக்க ரசிக்க, கடைசியில் அதன்மேல் ஒரு கல்லைப் போட்டு கொல்லுவார்கள். அங்கேயே ஆரம்பித்துவிடுகிறது, நமக்கு குரூர மனப்பான்மை.

அதே குரூரமனப்பான்மையின் வெளிப்பாடுதான் “வடிவேலு எப்பதான் அடிவாங்குவான்” என்று காத்திருப்பதும், “மாமு..வடிவேலு வெளியே வந்தா அடிதாண்டா” என்று பூரித்து போவதும். இது எல்லாம் மனித அடிமனத்தில் உள்ள ஆசைகள் என்று சொல்லுவேன். வடிவேலு மட்டுமல்ல, யார் அடிவாங்கினாலும், அதை வேடிக்கை பார்ப்பதற்கு அப்படி ஒரு ஆசை. இதனாலேயே, பாம்பு, கீரி சண்டை போட்டு சாவதைப் பார்க்க அப்படி ஒரு கூட்டம். வேடிக்கை பார்ப்பவர்களை ஒருநிமிடம் கவனியுங்கள். எப்படா, கீரி அல்லது பாம்பு சாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். இது திரைப்படங்களிலும் எதிரொலிப்பதை காணலாம். தவறு செய்த வில்லனை, துடிக்க, துடிக்க ஹீரோ கொன்றால்தான், காசு கொடுத்ததற்கு நிம்மதி. இல்லையென்றால் “என்னயா படம் எடுத்திருக்கான்” என்று புறக்கணித்துவிடுவோம்.

இதைவிட கொடுமை என்னவென்றால், யாருக்காவது காய்ச்சல், அல்லது உடம்பு முடியவில்லையென்றால் அவ்வளவுதான்..”அவனுக்கு வேணும்டா..எப்படியெல்லாம் ஆட்டம் போட்டான்..பலபேர் சாபம்தான், இப்படி வந்திருக்கு” என்று மகிழும் மனநிலை. இவையெல்லாம் மனிதனின் அடிமனத்தின் உள்ள குரூரமனப்பான்மையின் வெளிப்பாடே. இந்த மனப்பான்மை தனக்குள்ளே அடங்கிவிட்டால் பிரச்சனை இல்லை. அதீதமாக வெளிப்படும்போதே சமூகம் பாதிக்கப்படுகிறது. அதுவும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு, வெளிப்பட்டால் எப்படி இருக்கும் என்பதன் விளைவே, குஜராத் கலவரங்கள். “எப்படி அடக்குனாரு பார்த்தியா..இனிமேல் ஆடமாட்டாயிங்கள்ள” என்று மோடிக்கு சப்போர்ட் பண்ணுபவர்களுக்கும், இதை மனநிலைதான்.

சரி, இதனை எப்படி சரிசெய்வது என்றால், அது ஒவ்வொருவருவரின் மனதில்தான் இருக்கிறது. மனிதனை, மனிதனாய் பார்த்தாலே பாதி பிரச்சனை அடங்கிவிடும். அடுத்தவர் துன்பப்படும்போது, நாம் துன்பப்படவேண்டாம், அட்லீஸ்ட் சந்தோசப்படாமலாவது இருப்போம் என்று நினைத்துக்கொண்டாலே, இதை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.

வடிவேலுவின் காமெடியை ரசிக்காதவர் யாருமே இல்லை. சின்ன குழந்தைக்கும் பிடிக்கும் அவர் காமெடி. அவருடைய பஞ்ச் டயலாக்குகள் இன்னும் பிரபலம். அப்படி நம்மையெல்லாம் சிரிக்க வைத்தவர் அடிவாங்குவதில் அப்படி என்ன ஒரு ஆனந்தம் இருக்கப்போகிறது. அவர் தவறு செய்திருந்தால், தண்டனை கிடைக்கட்டும், ஆனால் “எப்படா அடிவாங்குவார்” என்று காத்திருப்பது, நாம் அவருக்கு தரும் தண்டனை அல்ல. நமக்குள் இருக்கும் கொஞ்சநஞ்ச மனிதாபிமானத்திற்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனை. முடிந்தவரை அதை செய்யாமல் இருப்போமே..

கடைசியாக, முடிந்த வரை, மனிதம் வளர்ப்போம், மனிதனாய் இருப்போம்..


Sunday, 15 May, 2011

திமுகவுக்கு வைச்சோமா ஆப்பு..

“திமுகவுக்கு வைச்சோமா ஆப்பு..”

“சாவுங்கடா..இனிமேல் 5 வருடத்திற்கு எந்திரிக்கவே முடியாது..”

“திமுக கட்சியே இனிமேல் இருக்காது..”

இது எல்லாம், ஜெயித்தவர்கள், தோற்றவர்களைப் பார்த்து குஷியில் சொல்லிய வார்த்தைகள். ஆனால் கொடுமை என்ன தெரியுமா..கெட்ட, கெட்ட வார்த்தையில் எனக்கும் ஒரு இமெயில்..அடக்கொடுமையே..ஏதோ, நான் கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் பக்கத்தில் இருந்து தண்ணியை எடுத்து கொடுத்த மாதிரியும், திமுக வெற்றிக்கு கடுமையாக உழைத்த மாதிரியும் அப்படி ஒரு மெயில்.

நான் ஒன்றைப் பார்த்திருக்கிறேன். தேர்தல் மட்டுமல்ல,விளையாட்டில் ஜெயித்தவர்கள், தோற்றவர்களை பார்த்து ஏளனம் செய்வது, பழிப்பு காட்டுவது, வாழ்க்கையில் ஜெயித்தவர்கள், தோற்றவர்களை கிண்டல் செய்வது என்று தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உண்மை என்ன தெரியுமா..வாழ்க்கையில் ஒருவர் எப்போதும் ஜெயித்துக்கொண்டே இருக்க முடியாது. என்றாவது ஒருநாள், அதே அடி, தமக்கும் விழும். அப்போது சுருண்டு விழும்போது கிடைக்கும் வலியில் தான், தோற்றவர் கிடைக்கும் வேதனை தெரியும். ஆனால், அதை புரிந்து கொள்வதற்குள், மண்ணோடு மண்ணாக போயிருப்போம்.

சரி..இந்த தேர்தலை எடுத்துக் கொள்வோம்..பல ஊடகங்களின் தேர்தல் கணிப்புகளை மீறி, அம்மா அமோகமாக ஜெயித்திருக்கிறார். இவ்வளவு சீட்டு கிடைக்கும் என்று நாம் மட்டுமல்ல, அம்மாவே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்..ஆனால், இந்த வெற்றி, அம்மா போன முறை தோற்றபோது கம்ப்ளெயின் செய்த, எலெக்ட்ரானிக் ஓட்டுமுறையில் தான் கிடைத்திருக்கிறது என்பதுதான் ஜெயித்தவரகள் மறக்கநினைக்கும் உண்மை. இந்தமுறை இரட்டை இலையில் போட்ட ஓட்டு, இரட்டை இலைக்கே விழுந்திருக்கிறது என்பது இன்னும் ஆச்சர்யம்

சரி, இனிமேல் அதிமுக எப்படி இருக்கும்

அழகிரி போய் சசிகலா வருவார். இதுவரை பணம் சம்பாதிக்க முடியாமல் சுருண்டு போய் இருந்த கவுன்சிலர்கள், வட்ட மற்றும் சதுர செயலாளர்கள், இனி புத்துணர்ச்சி பெற்று, கழுத்தில் உள்ள செயினை எடுத்து வெளியே போட்டுக் கொள்வார்கள். நாளைக்கு பதவி இருக்குமோ என்ற பயத்திலேயே, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் காலம் தள்ள வேண்டியிருக்கும். “ஏம்பா சரியா காலுல விழுந்தேனா” என்று அம்மா வரும்போது உதவியாளர்களிடம் சரிபார்த்துக் கொள்வார். எங்கு பார்த்தாலும் அம்மாவுக்கு பிடித்த பச்சைக் கலர்தான். “தங்க தாரகையே..” என்ற போரடிக்கும் வார்த்தைகள் மீறி அம்மாவை பாராட்டுவதற்கு ஏதாவது புதிய வார்த்தைகளை டிக்சனரியில் தேடிகொண்டிருப்பர். ஆகமொத்தம் ஐந்து வருடங்களுக்கு கையிலேயே பிடிக்க முடியாது

சரி, இனிமேல் திமுக எப்படி இருக்கும்

ஒரு மாதத்திற்கு எந்த சவுண்டும் இருக்காது. வழியில் எங்கயாவது பார்த்துக்கொண்டால் கூட தலையில் உள்ள துண்டை எடுத்து வாயைப் பொத்திக்கொண்டு “என்னண்ணே..நம்ம தொகுதியில இப்படி ஆயிப்போச்சே” என்று சோகமாக துக்கம் விசாரித்துக் கொள்வார்கள். வழக்கம்போல “உடன்பிறப்பே, கலங்காதே” என்று கலைஞர் கடிதம், கலைஞர் டி.வியில்(இருந்தால்) வரும். இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து, “இந்த ஆட்சியின் அராஜகங்கள் பாரீர்” என்று ஆரம்பித்து, போராட்டங்கள், பிரியாணியோடு களைகட்ட ஆரம்பிக்கும். காங்கிரஸ் அடுத்த மாதத்தில் அதிமுகவோடு வைக்கப்போகும் கூட்டணியைக் கண்டு கலங்கிப்போய் உக்காருவதறகுள், கட்சியின் முக்கிய கட்டத் தலைவர்கள், அம்மாவின் அக்னி பார்வையின் விளைவாக ஜெயிலுக்குள் இருப்பர்

இனி விஜய்காந்த்

சட்டசபையில் முடிந்த வரை குரல் கொடுத்து பார்த்துவிட்டு குண்டுகட்டாக(யப்பே, எம்புட்டு கஷ்டம்) தூக்கி வெளியே எறியப்படுவர். விழுந்த வலியில் “இந்த ஆட்சியின் அராஜகம் பாரீர்” என்று கத்த நினைத்து, வீட்டுக்கு வரப்போகும் ஆட்டோக்களை எண்ணி அமைதி காப்பர். “இந்த அராஜக ஆட்சியின் அராஜங்களை தோற்கடிக்கவேண்டும்” என்று டயலாக் பேசிக்கொண்ட அதே நாக்குகள் “தன்மானத்தலைவர் கலைஞர்” என்று பேச ஆரம்பிக்கும். அடித்த அடி தாங்க முடியாமல், திமுக, தேமுதிக மற்றும் மதிமுக எல்லாம் ஓரணியில் சேரும்.

இனி மக்கள்

இனிமேல் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என்ற கனவில் இருக்கும் மக்களுக்கு முதலில் கிடைக்கப்போகும் அடி, ட்ராபிக் ஜாம். அம்மா, ஏதாவது சிலைக்கு மாலை போட நினைத்தாலே, அந்த பக்கம் டிராபிக் நிறுத்தப்படும். கொளுத்தும் வெயிலில், காய்ஞ்ச கருவாடு போல இருக்கும், தமிழன் ஓட்டுப்போட்ட விரலை ஒருமுறை பார்த்துக்கொள்வான். பச்சை, தமிழகத்தின் அதிகாரப்பூர்வமான கலராக மாறிவிடும். டிராபிக் ஜாம் கோபத்தில் கொலைவெறியில் வீட்டுக்கு வரும் தமிழ்னுக்கு, “மானாட, மயிலாட” மற்றும் சீரியல் பார்ப்பதற்கு கரண்ட் இருக்காது. எதிர்த்து கேட்டால், “பொடா, தடா, சடா, கடா” சட்டங்கள் கடுமையாக பாயும் என்பதால், “தென்ன மர ஓலையில் செஞ்ச விசிறி உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா” என்று பேசப்பழகிக் கொள்வான். அப்படியே கோபத்தை அடக்கிக்கொண்டு, அந்த கொலைவெறியில் அடுத்த தேர்தலில் “உதயசூரியன்” மற்றும் “முரசு” சின்னம் மேல் கன்னாபின்னாவென்று குத்துவான். மேலே உள்ளதை திரும்பவும் காபி, பேஸ்ட் செய்து கொள்ளவும்.

இனி இணையம் எப்படி இருக்கும்

“ஆப்பு வைச்சிட்டோமுல்ல, அடக்கிட்டோமுல்ல” என்று ஒருமாதம் முழுக்க பஞ்சு டயலாக்கா பறக்கும், அப்புறம் வழக்கம்போல் “இன்னும் மாறாத ஜெ” என்று எழுதிவிட்டு, “அய்ய்யயோ..அவசரப்பட்டுட்டமோ” என்று எச்சியைத் தொட்டு அழிக்க நினைப்பதற்குள், “எக்ஸ்க்யூஸ்மி,..நாங்க சைபர் க்ரைமிலிருந்து வந்திருக்கிறோம்” என்று சபாரி போட்ட ஆட்கள் வீட்டுக்கு வருவதானால், “அய்யயோ சார்..ஏதோ, நாங்க பொழுது போகாம எழுதுறோம் சார்..இதோ, இப்பயே அழிச்சிடுறோம் சார்” என்று அடுத்த நிமிடம் காணாமல் போகும். வழக்கம்போல “வடை எனக்கு, போண்டா உனக்கு, தயிர்வடை தம்பிக்கு” என்று கமெண்டுகள் எண்ணிக்கை அதிகரித்து “திரிஷா நாய்குட்டி பெயர் “ஜிம்மி தெரியுமா” என்ற பதிவுகள் தமிழ்மணத்தின் சூடான இடுகையின் முதலிடத்தைப் பிடிக்கும்

கடைசியாக, இதை எல்லாவற்றையும் படித்துவிட்டு, “இல்லை கெட்ட வார்த்தை கமெண்டுதான் எழுதுவேன்” என்று அடம்பிடிப்பவர்களுக்கு என்னுடைய ஒரே பதில் “அய்யா ஆண்டாலும், அம்மா ஆண்டாலும், இன்னைக்கு உழைச்சாத்தான், நாளைக்கு சோறு..”

Thursday, 12 May, 2011

நட்பின் வலி

“நீ தாண்டா எல்லாத்துக்கும் காரணம்…”

புதிது புதிதாய் காரணம் தேடினார்கள்

“நீ ரொம்ப ஒழுங்கோ..”

ஒழுங்குக்கு புதிய விளக்கம் தந்தார்கள்.

“நீ அப்ப இருந்தே இப்படித்தானாமே..கேள்விப்பட்டேன்..”

மறந்து இருந்த பழைய நினைவுகள் தவறாக்கப்பட்டன..”

“உன்னை பிரண்டுன்னு சொல்லுறதுக்கே கேவலமா இருக்கு..”

தோளில் கைபோட்ட கைகள், அடிக்க வந்தன..

“நீ அன்னைக்கு எப்படி இருந்தேன்னு பார்த்தோமே..”

நம்பிக்கைகள் சுலபத்தில் தகர்க்கப்பட்டன..

“எல்லாரும் உன்னை கேவலமா பார்க்குறாயிங்க..”

யாரென்றே தெரியாத எல்லோரும் முக்கியமாக்கப்பட்டனர்.

“என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்பு..”

மூன்று விரல்கள் தன்னை நோக்கி காட்டுவதை மறந்தார்கள்.

“என் முகத்துல இனிமேல் முழிக்காதேடா”

அடிக்கடி வீட்டுக்கு வாடா என்ற வாய்கள் பழிப்பு பேசின.

“நண்பா” என்று சொன்னவர்கள் “துரோகி” என்றார்கள்..

நொந்து போய் வீடு வந்தேன்

“என்னங்க எதுவும் உடம்பு வலியா” கவலையுடன் மனைவி

“இல்லை..மனசு வலிக்குது”..

“நம்ம குழந்தையைப் பாருங்க..சரியாயிரும்”.

மெல்லச் சென்று குழந்தையைத் தூக்கினேன்..

கள்ளம் கபடமில்லாமல் சிரித்தான்..

அந்த சிரிப்பில் பொறாமை இல்லை..

அந்த சிரிப்பில் குற்றச்சாட்டு இல்லை..

அந்த சிரிப்பில் துரோகம் இல்லை..

அந்த சிரிப்பில் பழிப்பு இல்லை..

அந்த சிரிப்பில் வன்மம் இல்லை..

கைகளை நீட்டி விளையாட அழைத்தான்..

களிப்பு தீர விளையாடினேன்..

என்னையே இரண்டு மணிநேரம் மறந்தேன்..

நானும் குழந்தையானேன்..

மெதுவாக அவன் தலையைக் கோதினேன்..

அப்படியே தூங்கிப்போனான்..

சிறுமுத்தம் கொடுத்து காதருகில் சென்று கேட்டேன்..

“நீயும் என்னை “துரோகி” என்பாயா,,”

தூக்கத்திலும் சிரித்தான்..

“போடா பைத்தியக்காரா”

வீட்டுக்குள்ளேயே இருந்த நட்பை விட்டுவிட்டு

வெளியே எதைத் தேடினாய்..

அந்த சிரிப்பு பல அர்த்தங்கள் சொன்னது..

சுவற்றில் தொங்கிய வாசகம் காற்றில் ஆடியது

“நான் உன்னை விட்டு விலகுவதில்லை”

“நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை..”

கடவுளிடம் வேண்டிகொண்டேன்

“அடுத்த பிறவியிலாவது நண்பர்களைக் கொடு..”

Sunday, 8 May, 2011

அன்னையர்தினம் – ஏண்ணே கோவாலை அங்கிட்டு பார்த்தீங்க???

இந்த பயபுள்ள கோவாலு இருக்கானே. ஒருநாளைக்கு, ஒருவாட்டியாவது நம்ம கண்ணுல பட்டுருவான். இன்னைக்கு பயலை தேடிப்பார்க்குறேன்..கண்ணுல மாட்டமாட்டுங்குறான்.. கோவாலு பச்சமண்ணு ஆச்சே..எதுவும் முட்டாயை கொடுத்து யாரும் கடத்தி, கிடத்தி கொண்டு போயிட்டாயிங்களான்னு பயம் வேற..எல்லா இடத்துலயும் தேடிப் பார்த்து அசந்து போயிட்டேண்ணே..

டயர்டாகி, சரி பயபுள்ள பூங்கா பக்கம் தேடி பார்ப்போமுன்னு போனா, ஒரு மரத்து பின்னாடி ஒளிஞ்சு கிடக்காண்ணே..என்னை பார்த்தவுடனே, எடுத்தாம் பாருங்க ஓட்டம்..அப்படி ஒரு ஓட்டம். பயபுள்ளயை கஷ்டப்பட்டு விரட்டு புடிச்சேன்..

“கோவாலு..நானும், நீயும் அப்படியாடா பழகியிருக்கோம்..என்னை பார்த்து ஏண்டா தலைதெறிக்க ஓடுற..அப்படி என்னதாண்டா நான் பண்ணுவேன்..”

“ராசா..இன்னைக்கு ஒருநாளு மட்டும் விட்டுறா..நாளையிலிருந்து நான் எங்கிட்டும் போகமாட்டேன்..”

“ஏண்டா..இன்னைக்கு என்னடா வந்துச்சு..”

“இன்னைக்கு என்ன நாளு..”

“ம்ம்..ஞாயித்துக்கிழமை..ஏன்..”

“ராசா..இன்னைக்கு அன்னையர்தினம்டா..நீ ஏற்கனவே செண்டிமெண்டு திலகம்..அம்மா செண்டிமெண்டு எழுதியே மரண மொக்கை போட்டுருக்க..இன்னைக்கு அன்னையர்தினம் வேற..தாங்கமுடியாதுடா..”அம்மான்னா யாரு தெரியுமா..” ன்னு போடுவியே மரண மொக்கை..என்னால தற்கொலையும் பண்ணிக்க முடியல..அதுதான் உசிர காப்பாத்திக்க இப்படி தலைமறைவா சுத்திக்கிட்டு இருக்கேன்..என்னை விட்டுருடா..”

“அட கோவாலு..இன்னைக்கு அன்னையர்தினமா..சே..தெரிஞ்சிருந்தா, இன்னைக்கே காலையிலேயே ஒரு செண்டிமெண்டு பதிவு போட்டுருப்பேனே..மிஸ் ஆயிடுச்சே..”

“ராசா..இப்ப தெரியுதா..நான் எதுக்கு தலைமறைவு வாழ்க்கை நடத்துறேன்னு..”

“ஏண்டா, அன்னையர்தினத்திற்கு ஒரு செண்டிமெண்டு பதிவு எழுதக்கூடாது..தப்பாடா..”

“ராசா..எங்க பார்த்தாலும் செண்டிமெண்டு..பக்கத்து வீட்டு பப்பி நாய் குட்டி போட்டா, அம்மான்னு செண்டிமெண்டு பதிவு போடுற..எதிர்த்த வீட்டு குழந்தை “வீல்” ன்னு கத்தினா, “ஏ..குழந்தையே” ஒரு மொக்கை கவிதை எழுதுற..ரோட்டுல போற எவனாவது “அண்ணே” ன்னு கூப்பிட்டா போதும் “ஒரு தங்கை” ன்னு செண்டிமெண்டு பதிவு..தாங்கலைடா ராசா..போதும்டா செண்டிமெண்டு..நீ எழுதுற பதிவை படிச்சுட்டு, அவனவன் வீட்டுக்குள்ள குமுறி, குமுறி அழுது தீர்த்துக்கிட்டு இருக்காய்ங்கடா..ஆ..ஊண்ண..ஒரு மொக்கை செண்டிமெண்டு பதிவு போடுறத நிறுத்துடா..பதிவுலகம் உன்னை கையெடுத்து கும்பிடும்..”

“போடா வெண்ணை..அன்னையர் தினத்துக்கு பதிவு போடாம எப்படிடா..”

“ராசா..அம்மா மேல நீ நிறைய பாசம் வைச்சிருக்க தெரியுது..அப்படிதான் எல்லாரும் அம்மா மேல பாசம் வைச்சிருக்காயிங்க..ஆனா, அதுக்காக, “அம்மா என்பவள்” ன்னு ஆரம்பிச்சு போடுறேயேடா, ஒரு மரண மொக்கை..உங்க அம்மா கூட அந்தபதிவை படிச்சாங்கன்னா..”ஓ மை சன்..தி இஸ் டூ மச்” சுன்னு சொல்லி உன்னை கோபிப்பாங்கடா..இப்படி, அன்னையர் தினத்துக்கு ஒரு செண்டிமெண்டு பதிவு, தந்தையர் தினத்துக்கு ஒரு செண்டிமெண்டு பதிவு..காதலர் தினத்துக்கு, “நீ ஒன்னாப்பு படிக்கிறப்ப லவ் பண்ணுனது” ன்னு எழுதுற அராஜக மொக்கையெல்லாம் போதும்டா..ஏற்கனவே ஊருக்குள்ள இருக்குற செண்டிமெண்டு போதும்டா..தயவுசெய்து, இந்த உலகத்தை காப்பாத்துடா..”

“டே..கோவாலு..நீ என்னதான் சொன்னாலும் நான் செண்டிமெண்டு பதிவு போடுறத உன்னால நிறுத்த முடியாதுடா..இப்ப கேட்டுக்க..

“அம்மா..நான் நாலாப்பு படிக்கிறப்ப…”

திரும்பி பார்க்குறேன்..பயபுள்ள தலைதெறிக்க ஓடிக்கிட்டு இருக்கான்..ஏண்ணே..அங்கிட்டு பார்த்தீங்க..

சரி..அவனை விடுங்க..”இப்படித்தான் நான் நாலாப்பு படிக்கிறப்ப எங்கம்மா..”

ஹல்லோ..நீங்க எங்க ஓடுறீங்க..ஹல்லோ..ஹல்லோ..ஓடாதீங்க..

என்ன வாழ்க்கைடா இது

“நீங்க ஏங்க அந்த இடத்துக்கு போனீங்க..”

“ப்ச்..சரி..விடு..தெரியாம பேசிட்டான்..”

“தெரியாம பேசுனா, என்ன வேணுன்னாலும் பேசிறதா..ஒரு முறை வேணாம்..”

“உங்கிட்ட சொன்னது தப்பா போச்சு..இதுதான் எதையும் உங்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லுறது..”

“என்ன இருந்தாலும்..”

“விடுன்னா, விட்டுடணும்..” முதன்முதலாக மனைவியிடம் கத்தினேன்..அடங்க மாட்டாமல் சமையலறை சென்றாள். இன்னும் அவள் கோபம் தணியவில்லை..அவள் கோபத்தின் பிரதிபலிப்பு சமையல் பாத்திரங்களின் சத்ததில் தெரிந்தது..அமைதியாக அறைக்கு சென்றேன்..என் அறை என்றும் நிசப்தமாக இருக்கும். அவ்வப்போது ஒலிக்கும் கடிகார ஓசையைத் தவிர. அந்த அமைதியான சூழ்நிலையிலும் அமைதி இல்லாமல் தவித்தது என் மனம்…

“ராகவ்..”

என் மனத்திற்கு மிகவும் பிடித்த பெயர்..ஐந்து வருடத்திற்கு முன்பாக சந்தித்திருப்பேன்…பழகிய சிலநிமிடங்களில் ஒட்டிக்கொண்டான், ஏதோ பலவருடங்கள் பழகிய மாதிரி..

“டே..குருவி வீட்டு முன்னாடி கூடு கட்டிருக்குடா..” என்று உலக அதிசயமாக சொல்லுவான்..பேசுவதற்கு எதுவும் காரணம் வேண்டுமே..அதையும் ரசிப்பேன். எங்கள் வீட்டில் நடக்கும் எந்த ஒரு விஷேசத்திற்கும், முன்னிருந்து வேலை செய்வான். அம்மா, அப்பாவும் என்னைப் பற்றி எதுவும் கேட்பதனால், முதலில் ராகவிடம் தான் கேட்பார்கள்..”அம்மா..நான் பார்த்துக்குறேன் அவனை..நீங்க கவலைப்படாம இருங்க” என்று அவன் அளிக்கும் உறுதி, அம்மாவுக்கு நிம்மதியை தந்தது. என்னை சிறுபிள்ளையாக்கிய வாக்கியமாக இருந்தாலும், நட்பிற்காக அதனை ரசித்தேன்..

ஒரு கட்டத்தில், என் குடும்பத்தில் ஒருவனாகிப் போனான், ரேஷன் கார்டில் பேர் போடலாமா என்று கூட யோசித்தது உண்டு. என் திருமணத்திற்கு வந்தவர்கள் கேட்ட முதல் கேள்வி..”என்னப்பா உனக்கு தம்பி ஒருத்தன் இருக்கானா..சொல்லவே இல்லையே..”. அவர்களிடம் பெருமையாக சொன்னேன்..”என் நண்பன்..”

அந்தப் பெருமையெல்லாம், நேற்று வரைதான். எல்லாம் சுக்குநூறாகிப்போனது என் மனம் போலவே..

”தண்ணியடிக்கலாமாடா”.

நேற்று அவன் கேட்ட இந்த வார்த்தை புதிதாய் இருந்தது. தண்ணி அடிப்பான் என்ற விஷயமே எனக்கு நேற்றுதான் தெரிந்தது..

“டே ராகவ்..தண்ணியடிப்பியா..சொல்லவே இல்லை..”

“இல்லைடா..அப்பப்ப..நான் என்ன மொடாகுடிகாரனா..என்னைக்காவது ஒருநாள் குடிச்சா தப்பில்லைடா..”

“ம்..சரி..வேறு ஏதாவது பண்ணலாம்..மூவி..கிரிக்கெட்..”

“ப்ச்..வேணாண்டா..ஏதோ மனசுக்கு சந்தோசமா இருக்குடா..தண்ணியடிச்சா நல்லா இருக்கும்போல தோணுது..”

ஒத்துக்கொண்டேன்..நான் தண்ணியடிக்காவிடிலும், அவன் கூட இருந்தால், சந்தோசப்படுவான் என்ற ஒரே காரணத்திற்காக..

இருவரும் பார் சென்றோம்..

“நீ அடிப்பியா..”

“இல்லைடா ராக்வ்..நீ அடி..நான் பெப்சி எடுத்துக்குறேன்..”

மெது, மெதுவாக ஆரம்பித்தோம்..அவன் ஸ்டைலாக கோப்பையை சிப் செய்தபோது, எனக்கு வியப்பாக இருந்தது.

“இவ்வளவு நாளு, நீ குடிப்பேன்னு எனக்கு தெரியாதுடா ராகவ்..”

“ஹா..ஹா..இத மைக் போட்டு சொல்லிக்கிட்டா இருப்பாங்க..அப்பப அடிக்குறதுதான்..ஒன்னு தெரியுமா..டெய்லி குடிச்சாத்தான் தப்பு..இதுமாதிரி, அக்கேசனலா குடிச்சா ஒன்னும் ஆகாது….”

இரண்டாவது ரவுண்டு உள்ளே போனபோது அவனுக்கு கண்கள் கொஞ்சம் சிவப்பாக மாறியது..மெல்லியதாக உளற ஆரம்பித்தான்..

“நண்பா..டே..இப்ப…எதுக்கு குடிக்குறோம்..மனசுல உள்ள எல்லாத்தையும் மறக்குறது..”

“இப்ப என்ன நடந்துச்சுன்னு மறைக்குறதுக்கு குடிக்கிற..”

“ப்ச்..எவ்வளவோ இருக்கு..நான் காதலிச்சேன் தெரியுமா..அது உனக்கு தெரியுமா..”

எனக்கு ஆச்சரியம்..குடிபோதையில் ஏதோ பேசுகிறான் என்று டாபிக் மாற்றினேன்..இன்னொரு ரவுண்ட் சென்றான்..

“சரி..விடு..நேற்று, ஷாப்பிங்க் போறப்ப..”

“டே..இரு..பேச்ச மாத்தாத..நான் சொல்லுறத கேக்காத நீ என்னடா புடுங்கி நண்பன்..”

முதன்முதலாக அந்த வார்த்தையை அவன் வாயிலிருந்து கேட்கிறேன். சரி..அவன் அவனாக இல்லை என்று தெரிந்தது. பேசியது அவன் இல்லை..போதை..சரி கிளம்புவது நல்லது என்று அவனை கிளப்ப முயற்சித்தேன்..

“சரி..ராகவ்..போகலாம்..”

“டே..வெண்ணை..பேசுறோம்ல..அது என்ன மருவாதை இல்லாம உக்காருடா..”

அதட்டினான்..நிதானத்தின் எல்லை கடந்ததாக எனக்கு தோன்றியது. அவன் போக்கிலே செல்லலாம் என்று நினைத்தேன்..

“சரி..ராகவ்..உனக்கு என்ன பிரச்சனை..”

“அவ…..யாருடா..அவ..என் காதல்டா..அவ..கி…ட்ட..இன்னும் என் காதலை…சொ…ல்..ல..ல..டா..…” குழறினான்.

“டே..ராகவ்..விடு..யாரை அப்படி நீ லவ் பண்ணுன…”

“ப்ச்..சொன்னா நீ மனசு சங்கடப்படுவ…”

“மாட்டேன்..சொல்லு…”

“வே…ணா….ண்…டா..”

“சொல்லுடா..”

தலையை முற்றிலுமாக கவிழ்த்துக்கொண்டான்..மெதுவாக அந்த வார்த்தையை முழுங்கி சொன்னான்…

“உன் தங்கச்சி தாண்டா..”

சம்மட்டியால் அப்படியே தலையில் போட்டமாதிரி இருந்தது. அவனை அண்ணன், அண்ணன் என்றுதான் கூப்பிடுவாள்..அவன் வீட்டுக்கு வந்தாள் கூட “எங்கண்ணன், வந்துட்டான்..” என்று கத்திக்கொண்டு வாசல் செல்வாள்.. ஏதாவது சண்டை வந்தல் கூட, “நீ போ..ராகவ்தான் என் அண்ணே..நீ வேற யாரோ..” என்று அவன் கரம்பற்றி கொள்வாள்..அவளைப்போய்…

“டே..ராகவ்..அவ உனக்கு தங்கச்சிடா..அவளைப்போய்….இன்னமும் உன்னை அண்ணனாத் தாண்டா நினைச்சுக்கிட்டு இருக்கா..எப்படிடா உனக்கு இப்படி நினைக்கத் தோணுச்சு..”

“டே.வெண்ணை..ஊருல உள்ள எல்லா பிகரும் எனக்கு தங்கச்சின்னா நான் எங்க போறது..நான் அவளை லவ் பண்ணுறேன்..அவகிட்ட சொல்லுவேன் என் காதலை..நீ என்ன புடுங்க முடியும்..”

“டே..நீ நிதானத்துல இல்லை..வார்த்தை மீறுது.” .எச்சரித்தேன்..

அவன் கண்கள் கோபத்தால் மேலும் சிவந்தது.. என்னை நிமிர்ந்து பார்த்து, அப்போதுதான் அந்த வார்த்தையை சொன்னான்..

“மவனே..அவளை தூக்குறேன்..தூக்கிட்டு வந்து…..*******”

எந்த அண்ணனும் தன் தங்கச்சியைப் பற்றி கேட்கக்கூடாத வார்த்தை..அப்படியே அவன் கழுத்தைப் பிடித்தேன்..அங்கேயே அவனை கொன்றுவிடலாம என்று தோண்றியது..இதுவரை பாசமாக அவன் கழுத்தைப் பிடித்த என் கைகள், இதோ, இன்று வெறியாய்…இருக்கிற கோபத்தில், அவன் முகத்தில் தூ என்று உமிழ்ந்து அவசரமாக கிளம்பி, விடு சென்று..இதோ, என் தனியறையில்..

போதைதான், ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது. இதுவரை காட்டிய அன்பு, நம்பிக்கை, பாசம், நட்பு எல்லாம். ஒரே நிமிடத்தில் தூளாகிப் போனதேன்..

“ராகவ்தான் எங்களுக்கு ரெண்டாவது பையன்” என்ற அம்மாவின் அன்பு,

“ராகவ் அண்ணா..வர்றப்ப எனக்கு சாக்லேட்..ஓகேயா” என்ற தங்கச்சியின் பாசம்..

“இவருகிட்ட கொஞ்சம் புத்தி சொல்லுங்க ராகவ்” என்ற மனைவியின் நம்பிக்கையும்..

“என்னடா ராகவ்..நீ என் நண்பண்டா..” என்ற நட்பும்..ஒரு நிமிடத்தில் தூளாகிப்போனது..செல்பேசி அழைக்கவே, எடுத்தேன்..ராகவ் தான்..

“டே..சாரிடா..டே..மாப்பிள்ளை..மன்னிச்சுருடா..நேத்து நான் நிதானத்தில் இல்லை…சாரிடா..என்ன பேசுனேன்னு தெரியலை..போதை ஏறிருச்சுடா..அந்த பாழாப்போன சரக்கு..மண்டையில ஏறி..டே….டே..இருக்கியா..டே..இருக்கியா…”

முதன்முறையாக அவன் குரலைக் கேட்க எனக்கு பிடிக்கவில்லை…செல்பேசியை துண்டித்தேன்..அப்படியே நட்பையும்…

வானம் - திரை விமர்சனம்

பொதுவாக நான் சிம்பு படங்களை விரும்பி பார்ப்பதில்லை. சிறுவயதில் தலையை கோதிவிட்டு “ஐ, ஆம் எ சூப்பர்ஸடார்” என்ற போது ஏதோ குழந்தை நடிக்கிறது என்ற மனப்பான்மையில் ரசிக்கமுடிந்தது. ஆனால் அவரே, ஒரு கட்டத்தில் விரலில் வித்தை காட்டி பஞ்ச் டயலாக் பேசியபோது, அய்யோ, அம்மா விட்டா போதும்டா சாமி என்று தலைதெறிக்க ஓடிய தமிழர்களில் நானும் ஒருவன். அதிலிருந்து சிம்பு படங்களை ப்ரீயாக அழைத்தாலும் பார்க்க கூடாது என்ற ஒரு வைராக்கியம்

கௌதம்மேனம், ஏ.ஆர் ரகுமான் என்ற ஒரே காரணத்திற்காக “வி.தாண்டி வருவாயா” பார்த்தபோது “அட..இந்த புள்ள திருந்திருச்சு போல” என்று நினைத்தேன். ஆனால், இன்று வானம் படம் பார்த்தபோது, “திருந்தியது மட்டுமில்லை. பயபுள்ளைக்கு கண்டிப்பா டேலண்ட் இருக்கு..இப்படியே அடக்கி வாசிச்சா, கண்டிப்பா பெரிய ஆளா வருவார்” என்றே தோன்றியது. அதற்கு அவர் ஒன்றே ஒன்றை மட்டும் பண்ணினால் போதும்..நன்றாக தாம்பு கயிறு ஒன்றை எடுத்து, கையில் இறுக்க கட்டிக் கொண்டால் போதும். அடுத்து, இது போன்ற படங்களில் நடித்தால், அவர் அப்பா பேச்சையும் மீறி நன்றாக வருவார்.

வானம்..எதற்கு இந்த பேர் வைத்தார்கள் என்ற சந்தேகம், படத்தின் கிளைமாக்ஸ்சின் போது உணர முடிந்தது. ஐந்து கதாபத்திரங்கள், வெவ்வேறு சூழ்நிலைகளில் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வருகிறது. முதலில் சிம்பு, நான் ஏற்கனவே சொல்லியபடி, அவரும் சந்தானமும் அடிக்கும் கூத்து செம. கூட, நம்ம கேமிராமேன் கணேஷீம். அவர்கள் அடிக்கும் கூத்துகள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. சிம்பு, சந்தானத்தோடு அடிக்கும் ரகளையாகட்டும், “என்ன வாழ்க்கைடா இது” என்று புலம்புவதாகட்டும், காதலியை ஏமாற்றுவதாகட்டும், பணத்தை திருடிவிட்டு, குற்ற உணர்ச்சியில் புழுங்கவதாகட்டும், அனைத்தையும் ரசித்து செய்திருக்கிறார். பயபுள்ள கண்டிப்பாக திருந்திட்டாருண்ணே..தைரியமா நம்பலாம். அப்படியே இந்த டாக்குடரு விசய் பயபுள்ளையும் திருந்திட்டா எம்புட்டு நல்லா இருக்கும்..


அடுத்து, பிரகாஷ்ராஜ். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், தன் மனைவி கர்ப்பம் கலையும்போது கதறும் கதறல் நெஞ்சை அடைக்கிறது. ஓவர் ஆக்டிங்க் என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி. தான் பார்த்து பார்த்து வளர்த்த கரு , தன் கண் முன்னால் ஒருநிமிடத்தில் கலையும்போது, ஒருவருக்கு அப்படித்தான் இருக்கும். அந்த நேரத்தில், கையை எடுத்து வாயை அடைத்துக்கொண்டு டீசண்டாகவா அழுவார். பிரகாஷ்ராஜின் அந்த நடிப்பு என்னை கவர்ந்தது. இயக்குநர் இரண்டு பக்க நியாயங்களையும் சரியாகவே சொல்லியிருக்கிறார். இஸ்லாமியனாக பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக, எல்லோரையும் தீவிரவாதியாக பார்க்கும் எண்ணத்தை செவிட்டில் அறைந்தாற்போல சொல்லியிருக்கிறார். ஒரு வாதத்திற்காக, “இஸ்மாயில்” என்ற பெயருடன் சென்னையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்துவிடுங்கள் பார்ப்போம்..யப்பா..நம் நாட்டில் மட்டும்தான், இஸ்லாமியனாக பிறந்தால் “நான் தீவிரவாதி இல்லை” என்று நெற்றியில் ஒட்டி அலைய வேண்டியிருக்கிறது..

சரண்யா, மற்றும் அந்த பெரியவர் கதாபத்திரம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. பணத்தை பறிகொடுத்து விட்டு அந்த பெரியவர் கதறும் கதறல், “எங்கயா..இவ்வளவு நாளும் இருந்தீங்க” என்று கேட்கத் தோணுகிறது. அவர்களை சென்னையில் ஏமாற்றும் மனுசர்க்ளை பார்க்கும்போது, “அடப்பாவிகளா..பணத்திற்காகத்தானடா எல்லாமே..போகும்போது அப்படி என்னத்தைதான் கொண்டு போகப்போறீங்க” என்று சட்டையைப் பிடித்து உலுக்கத்தோன்றுகிறது.

அனுஷ்கா..சும்மா ஊறுகாய் போல அல்லாமல், படத்திற்கு இன்னொரு பலம். பலர் நடிக்க தயங்கும் கதாபத்திரம். எப்போதும் கண்களில் ஒரு போதை, சரிந்து கொண்டே இருக்கும் சேலை, அலட்சியமான ஒரு பார்வை என்று, பின்னி எடுக்கிறார். “நான் வேணுமின்னா, படுக்கிறேன் சார்..என் பிரண்டை காப்பாத்துங்க சார்” என்று கெஞ்சும்போது,கண்முன் நிற்கிறார். அம்மணி, இதுமாதிரி படத்தை தேர்ந்தெடுத்து நடிங்க…

சற்று வீக்கான கதாபாத்திரமாக இருந்தாலும், கடைசி நிமிடங்களில் ஸ்கோர் அடிக்கிறார் ப்ரத். தயவு செய்து அந்த சின்ன தளபதி பட்டத்தை துறந்து, இது போல உருப்படியாக நடித்தால் போதும்..திரைஉலகில் நிலைக்கலாம். பஞ்ச் டயலாக் பேச நிறைய ஆளு இருக்காங்கப்பூ..

ஐந்து கதாபத்திரங்களுக்கு சரிசமமாக சந்தர்ப்பம் கொடுத்து நடிக்கவைத்ததில் இயக்குநரின் திறமை தெரிகிறது. குறிப்பாக, ஒரு கட்டத்தில், அனைத்து கதாபத்திரங்களும், ஒரே மாதிரி துன்பத்திற்குள்ளாவதை அழகாக கோர்த்து காண்பிக்கும்போது பிரமிக்கவைக்கிறார். இந்த மாதிரி திரைக்கதை அமைக்கும்போது, அதை பேலன்ஸ் செய்ய திறமை வேண்டும். அதை ஸ்டைலிசான மேக்கிங்கோடு திறம்பட செய்திருக்கிறார்.

அடுத்த பலம் யுவன்..”வானம்” என்று மெஸ்மரைஸ் செய்யும் ஒரு பாடலோடு ராஜாங்கத்தை ஆரம்பிக்கிறார். பல இடங்களில் பிண்ணனி இசையை அடக்கிவாசித்ததோடு, “எவண்டி உன்னைப் பெத்தான்” என்று துள்ளலிசையும் கொடுத்து கவர்கிறார்.

ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி படம் முடியும்போது தெரிகிறது.,அங்கெங்கு தெரியும் லாஜிக் மீறல்களையும் மறந்து..

Saturday, 7 May, 2011

தண்ணியடிக்காத பிரண்ட்ஷிப்

இந்த உலகத்துலயே கொடுமையான சமாச்சாரம் எது தெரியுமாண்ணே.. வேலை இல்லாம இருக்குறதா..இல்லைண்ணே..வறுமையா..இல்லைண்ணே..கொடுமையான சமாச்சாரம் எது தெரியுமா..டாஸ்மார்க்ல போய் தண்ணி அடிக்காம இருக்குறது தான்.

நண்பன் ஒருத்தன் பாசக்கார பயபுள்ளைண்ணே..ஆளைக்கண்டா உசுர விட்டுடுவான்..”வாடா ராசா..சாப்பிடு ராசா..” ன்னு எம்புட்டு பாசம்ணே..ரொம்ப பாசக்கார பயபுள்ளைண்ணே..எனக்கு கூட சிலநேரம் புல்லரிச்சு போகும்ணே..ஒரு மனுசன் மேலே இப்படியா பாசத்தைக் கொட்டுறது..ஒருதடவே கேட்டேபுட்டேன்..

“டே..குமாரு..ஏண்டா..இப்படி பாசத்த பொழியுற..என்மேல அம்புட்டு நட்பாடா..”

“ராசா..என்னடா, இப்படி சொல்லிப்புட்ட..நட்புன்னா எனக்கு கற்பு மாதிரிடா(படம் பார்த்து கெட்டுபோயிட்டாய்ங்க..வேற ஒன்னுமில்ல..)..உன்மேல எவ்வளவு நட்பு வைச்சிருக்கேன் தெரியுமா” ங்குறான்.. எனக்கு ஒரு மாதிரியா ஆயிடுச்சுண்ணே..

“டே..குமாரு..இதுக்கு நான் எப்படி கைமாறு செய்யப்போறன்னு தெரியலே…” அப்படியே ஒரு செண்டிமென்டு படம் பார்த்த மாதிரி ஆயிடுச்சுண்ணே..

ஆனா, நம்மதான் வினைய தூக்கி கக்கத்துல வைச்சுக்கிட்டு சுத்துவோமே..அப்படிதான் அன்னைக்கு ஆயிப்போச்சு.. நம்மாளுங்க பக்கத்து வீட்டு குழந்தை ஆய் போனாவே டிரீட் கேட்போமே..அதுமாதிரி தெரியாம, ஒருவார்த்தை கேட்டதுதான், “பொன்னர் சங்கர்” படம் பார்த்ததுக்கு அடுத்த மாதிரி, நான் என் வாழ்க்கையில பண்ணுன பெரிய தப்பு..

“குமாரு..நம்ம ப்ரெண்ட்சிப்பு வைச்சிக்கிட்டு 1 வருசம் ஆயிடுச்சுல்ல..எங்கடா டிரீட்டு..”

அவ்வளவுதான் பயபுள்ளை துள்ளி குதிச்சிட்டான்..

“ராசா..உனக்கில்லாமயா..கண்டிப்பாடா..பெரிய தண்ணி பார்ட்டி வைச்சிருவோம்..” ங்கிறான்..

எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு..நம்மகிட்ட இல்லாத ஒரே கெட்டபழக்கம் தண்ணி அடிக்க இன்னும் பழகாததுதான்(யாருண்ணே அங்க மத்த கெட்ட பழக்கமல்லாம் இருக்கான்னு கேக்குறது…) ..

“இல்லடா குமாரு..நான் தண்ணி அடிக்கமாட்டேன்..”

“உன்னை யாருடா அடிக்கச் சொன்னது..நாங்கல்லாம் அடிக்குறோம்..நீ சைடு டிஷ்ஷ காலி பண்ணு..”

சைடு டிஷ்ன்னு சொன்னவுடனே. நம்மளுக்கு மண்டைக்குள்ள பல்பு விட்டமாதிரி ஒரு பிரகாசம்..நம்ம பயபுள்ள வேற காரம்சாரமா சமைப்பானா..நாக்கு ஊறுச்சுண்ணே..கண்டிப்பா வர்றேன்னு சொல்லிட்ட கிளம்பிட்டேன்..

அடுத்த நாளு சரியா நைட்டு 10 மணிக்கு போய் அவன் கதவை தட்டுறேன்..பயபுள்ள டயர்டா கதவை தொறந்தான்.. ரூம் முழுக்க அவ்வளவு மனம்ணே..சிக்கன் வறுவல்..பிரியாணி..முட்டை, சிப்ஸ், கடலை ன்னு பயபுள்ள விழுந்து, விழுந்து சமைச்சு வைச்சிருக்காண்ணே..எனக்கு கண்ணுல தண்ணியே வந்துருச்சு..

“குமாரு..எனக்காகவாடா..”

“ஆமாண்டா..நண்பா..எதுனாலும் கிராண்டா கொண்டாடினும்..அப்படியே என் பிரண்ட்ஸ் ஆறு பேரு வர்றாயிங்க..”

“சந்தோசம்டா..”

ஆறுபேரும் வந்தாயிங்க..பயபுள்ளைங்க..ரொம்ப டீசண்டுண்ணே..பேசுறப்ப கூட, சத்தம் வெளியே வரலைன்னா பார்த்துங்க்கங்களேன்..மரியாதை தெரிஞ்ச பயபுள்ளைங்க..

“வாங்க பாஸ்” ன்னு அப்படின்னு அவிங்களே இன்ட்டிரிடியூஸ் பண்ணிக்கிட்டாய்ங்க..முத ரவுண்ட ஆரம்பிச்சாய்ங்க..நம்மளுக்கு வழக்கம் போல கோகோ கோலாவும் சைட்டிஷ்ஷூம்..முதல் ரவுண்ட் ஆரம்பிச்சவுடனே ஒருத்தன் ரொம்ப பதவிசா கேட்டாண்ணே..

“ராசா….பாஸ்..பிரிட்ஜ தொறந்து அந்த ஐஸ்ஸ கொஞ்சம் எடுத்து தர்றீங்களா..”

சரி நம்ம பயபுள்ளைங்கள்ளதானேன்னு எடுத்து கொடுத்தேன்..அதுக்குள்ள ரெண்டாவது ரவுண்டு போயிடுச்சு..

“டே..ராசா..வெளக்கெண்ணே..அந்த ஐஸ்ஸ எடுடா டுபுக்கு..”

நமக்கு திக்குன்னு ஆயிடுச்சு..பழகி ரெண்டு நிமிசம் கூட ஆகலையே..ஒருவேளை வேற யாரையோ கூப்பிடுறாயிங்களோன்னு திரும்பி பார்க்குறேன்..அவன் சொல்லுறான்..

“டே..**** மவனே..கண்ணை என்ன பொடனிலியா வைச்சுருக்கிற..ஐஸ்ஸ எடுறா ******”

அப்பவே எழுந்து போகலாம்னு நினைச்சேன்..ஒருத்தன் அவசரம், அவசரமா ஓடிப்போய் கதவை பூட்டிக்கிட்டான்..கதவை பூட்டுனவனை நமக்கு கொஞ்சம் பழக்கம்..வந்த புதுசுல “அண்ணே..அண்ணே” ன்னு தான் கூப்பிடுவான்..

“டே..நான் வீட்டுக்கு போகணும் தம்பி..அண்ணன் சொல்லுறேன்..கதவை தொற..”

அதுக்கு அவன் கேக்குறான்..

“தண்ணி அடிக்காத மயிராண்டி..உனக்கு என்னடா மரியாதை..போயி உக்காருடா..*****..இல்லை இந்த பாட்டிலை மண்டையில் வுட்டு ஆட்டிடுவேன்”

எனக்கு பயமா போச்சுண்ணே..அவசரமாக குமாரைக் கூப்பிடுறேன்..

“”குமாரு..குமாரு..வந்து இவங்கிட்ட சொல்லுடா..நான் போகணும்..”

குமாரு அவசரமா வந்தான்..இவன் பரவாயில்லைண்ணே..குமாரு..அப்படி ஒரு கெட்ட வார்த்தைண்ணே..தமிழில திட்டியிருந்தா கூட மனசு ஆறிரும்ணே..பயபுள்ளைக்கு “எச்சூஸ்மி” தவிர எதுவும் தெரியாது..என்னை திட்டுறதுக்காகவே டிக்சனரி படிச்சுட்டு வந்துருப்பான் போல..அம்புட்டும் கெட்ட, கெட்ட வார்த்தை…காதை பொத்திக்கிட்டேன்..கடைசி வார்த்தை “மொன்னை நாயி”ன்னு அப்படின்னு தமிழ்ழ முடிச்சுக்கிட்டான்..

அதோட நிறுத்தியிருந்தா பரவாயில்லை..அந்த பயபுள்ள , ஸ்கூலுல எஸ்ஸே எழுதுற மாதிரி எல்லாருகிட்டயும் சொல்லுறான்

“டே பசங்களா..ராசாவை எல்லாரும் கெட்டவார்த்தை திட்டணும்..யாரு நல்லா பவரா திட்டுறாயிங்களோ, அவிங்களுக்கு இன்னொரு டிரீட்டு” பயபுள்ள நாரதருக்கு கிளாஸ் எடுத்துருப்பான் போல..

அவ்வளவுதான்…தமிழுல இவ்வளவு கெட்டவார்த்தை இருக்கான்னு அப்பதான் தெரியும்..அவ்வளவும் பேர்ட் வேர்ட்ஸ் தான்....கலைஞருக்கு தெரிஞ்சிருந்தா, உலகத்தமிழ் மாநாடே போட்டிருக்க மாட்டாரு.. என்னையே நொந்துகிட்டு வீட்டுக்கு போய் தூங்கிட்டேன்..

காலையில எழுந்து காதுல ரத்தம் வருதான்னு பார்த்தேன்..வரலை..செல்போனுல ரிங்கு வரவே , யாருண்ணு பார்த்தா..நம்ம குமாரு..எடுக்கவே பிடிக்கலை..ரெண்டாவது தடவையா ரிங்கு அடிக்க எடுத்தேன்..

“ம்..சொல்லு..”

“என்ன ராசா..உனக்கு மரியாதையே தெரியாதா..எதுக்கு பார்ட்டியில நடுவுல எழுந்து வந்த..”

“ஏண்டா..உங்களுக்கு ஊறுகாய் பத்தலையா..”

“நாங்க தன்மையாத்தாண்டா பேசுனோம்..ஏண்டா..எதுவும் கெட்ட வார்த்தை எதுவும் பேசுனுமோ..எதுவும் ஞாபகம் இல்லையே..”

“……”

“சரி..விடு ராசா…வர்ற வாரம் நம்ம பிரண்டு இன்னொரு தண்ணி பார்ட்டி வைக்கிறான்..நீ கண்டிப்பா வரணும்…”

“@#$%&^*” (இருக்குற கெட்ட வார்த்தை எல்லாத்தையும் போட்டு புல்லப் பண்ணிக்குங்க..)

Wednesday, 4 May, 2011

ஒசாமா – ஒரு அமெரிக்கனின் மனநிலை..

ஒசாமா..இந்த பெயரை ஒரு அமெரிக்க ராணுவ வீரனிடம் சொல்லிப் பாருங்கள். எந்த சூழ்நிலையில் அவன் இருந்தாலும், முகம் மாறிவிடும், அமெரிக்கர்களுக்கு பிடிக்காத செப்டம்பர் 11 நினைவுக்கு வருவதை எந்த அமெரிக்கரானாலும் தவிர்க்கமுடியாது. ஆனால் அதெல்லாம், கடந்த மே 2 ந்தேதி வரைதான்.

ஒசாமாவை கொல்ல ஏறத்தாழ பத்து வருடங்கள் ஒரு வல்லரசுக்கு தேவைப்பட்டிருக்கிறது என்ற உண்மையை ஒருநிமிடம் மறந்து, கொண்டாட்டத்தில் ஈடுபடமுடிகிறது என்றால், ஒசாமா என்ற அந்த மனிதன் மீது எவ்வளவு கோபம் இருந்திருக்க வேண்டும்.

ஒரு மனிதன் இறப்பில் அப்படி என்ன கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது என்று கேட்க நமக்கு தகுதியில்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது, வருடா, வருடம் நாம் தீபாவளி கொண்டாடும் வரை..

எல்லா நாளும் போலத்தான் அந்தநாளும் விடிந்தது. செப்டம்பர் 11. அதுவும் நியூயார்க்..சொல்லவா வேண்டும். உலக வர்த்தகத்தையே ஆட்டிப்படைக்கும் நகரமல்லவா..அதற்குள்ளே விரலை விட்டு ஆட்டியவன்(ர்) ஒசாமா..இதுவரை பெருமிதமாக பார்த்த, தங்கள் நாட்டு, இரட்டைக் கோபுரங்கள், மண்ணோடு மண்ணாக , ஒரு நிமிடத்தில் சீட்டுக்கட்டு போல உதிர்ந்ததை, அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தப்பிக்க முடியாமல், மாடியிலிருந்து கீழே விழுந்து இறக்கும் காட்சியைப் பார்த்து ஆடிப்போய்விட்டான். நடந்தது அமெரிக்காவிலா..நம் நாட்டிலா..உலகிலேயே நாம்தான் பாதுகாப்பான நாடு என்று நினைத்தோமே..என்ற நினைப்பில், இரட்டைக் கோபுரத்தின் மண் வந்து விழுந்தது. பதறிப் போய்விட்டான். தங்களையே ஒருவன் அடிப்பதற்கு இருக்கிறான் என்ற கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் “ச்சே..நாம் என்ன பாவம் செய்தோம்., காலையில் அலுவலத்திற்கு போவதைத் தவிர..” என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது..

அப்போது எழுந்த கோபம், ஒசாமா என்ற மனிதன் மேல். 10 வருடம் கழித்து அவனை சுட்டபோதுதான் தணிந்திருக்கிறது. அவ்வளவுதான், தீவிரவாதம் ஒழிந்துவிட்டது என்று சமாதானமும் அடையமுடியாது. ஏனெனில் தீவிரவாதம் என்பது, முளையிலே கிள்ளி எறிய, ரோஜாச் செடி அல்ல, வெட்ட வெட்ட முளைக்கும் ஆலமரம். இந்நேரம் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் எடுக்கப்பட்டுள்ள புதிய சபதங்கள், எந்நேரமும் விழிப்பாக இருக்கவேண்டும் என்ற செய்தியை கூறுகின்றன. அதை ஒவ்வொரு அமெரிக்கனும் உணர்ந்துதான் இருக்கிறான், நாளைய பொழுது எப்போதும் விடிவது போல்…

ஆனால், இப்போது ஒவ்வொரு அமெரிக்கனின் பயமும் தீவிரவாதம் அல்ல. அதைவிட ஆளை, மெல்ல, மெல்ல கொல்லும் , “நாளைக்கு வேலை தேடவேண்டுமே” என்ற நினைப்பே..