Tuesday, 26 April, 2011

சாய்ந்து விட்ட சாய்பாபா

சென்னையில், வேலை தேடும்போது, திருவல்லிக்கேணி மேன்சன் தான் நமக்கெல்லாம் சொர்க்கம். கையில் ஒரு ரெஸ்யூம் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு சாப்ட்வர் கம்பெனியாக ஏறி இறங்கி, “சார்..ஐ.ஆம் கம்ப்யூட்டர் க்ராஜூவேட்..தி இஸ் மை ரெஸ்யூம்” என்று கம்பெனி செக்யூரிட்டிகளிடம் ஓட்டை ஆங்கிலத்தில் கெஞ்சி, சற்று இறங்கி வந்தால், பக்கத்து டீ கடையில் ஒரு காபியும், சிகரெட்டும் வாங்கி கொடுத்து “சார்..ஹெச். ஆர் வந்தா அப்படியே,, இந்த ரெஸ்யூமையும் தள்ளிவிடுங்க சார்” என்று கெஞ்சல் பார்வை பார்த்த காலங்கள் எல்லாம், இன்னும் என் கண்ணுக்குள் நிற்கிறது.

புதன் காலை “ஹிந்து” பேப்பர் “ஆப்பர்சூனிட்டிஸ்” பக்கத்தை பார்த்தவுடன் கண்கள் ஆட்டோமேட்டிக்காக தேடுவது “ப்ரசர்ஸ் வாண்டட்” வகையறாக்களைத்தான். சலிக்காமல், மே மாதத்தின் புழுக்கத்திலும் ஒரு டையையும், அயர்ன் பண்ணிய சட்டையையும் போட்டுக்கொண்டு, ஒரு 20 ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு, எம்.எல்.ஏ ஹாஸ்டல் விடுதியில் பஸ்நிறுத்தத்தில் நிற்கும்போது, அந்தப்பக்கம் செல்லும் சாப்ட்வேர் கம்பெனிகளின் சொகுசு பேருந்துகளில் சன்னலோரம் ஒய்யாராமாக தூங்கிக்கொண்டு செல்லும் பசங்களையும், பெண்களையும் பார்க்கும்போது, ஒரு வெறிவருமே, அந்த வெறியில் மதிய சாப்பாடே மறந்துவிடும். “எப்படியாவது இந்த பஸ்ஸில் ஒரு தடவையாவது ஏறிரணும்டா” என்ற தீர்க்கமான எண்ணத்துடன் என் கைகள் அந்த ரெஸ்யூமை இறுகப் பற்றிருக்கும்.

கையில் இருக்கும் 20ரூபாயில் சரவணபவனிலா சாப்பிடமுடியும். தேவி தியேட்டர் பின்பக்கம் “சாய் மெஸ் என்ற சிற்றுண்டி உணவகம் தான் நமக்கு சரவணபவன். நாங்கள் அடையாளத்துக்காக கூப்பிடுவது “பாபா” ஹோட்டல். 15 ரூபாய் கொடுத்தால், கொஞ்சம் புளியோதரை, கொஞ்சம் தயிர்சாதம் கிடைக்கும். காலையில் குடித்த உணவான தண்ணீரும், இரவு சாப்பிடப்போகும் உணவான பர்பியும், சொற்பநிமிடத்தில் மறந்து போகும். அவ்வளவு ருசி…வெளியில் உக்கார்ந்து, ஒரு தட்டில் வைத்துதான் சாப்பிடவேண்டும்.

அந்த சிற்றுண்டியின் ஓனர்தான் நாங்கள் செல்லமாக அழைக்கும் “சாய் மாமா”. எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் அவரை பார்த்தாலே, அன்றைய பொழுது நன்றாக போகும் என்ற நம்பிக்கை. மூச்சுக்கு மூன்று தடவை, அவர் “சாய்..சாய்” என்று கூப்பிடும்போது, அடக்கமாட்டாமல் சிரிப்புதான் வரும்..”வாங்க சாய்..எப்படி சாய் இருக்கீங்க சாய்..தோசை வேணுமா சாய்” என்பார்..

“அது ஏன் மாமா எப்ப பார்த்தாலும் சாய்..சாய்..”சாய்” ன்னா குடிக்கிற சாய் யா” என்று கிண்டல் செய்தாலும் அதற்கு கோபப்படமாட்டார்

“எங்க கடவுள் சாய்..அந்த சாய்பாபா தான் எங்களுக்கு எல்லாம்…” என்பார்..எப்போதெல்லாம் சென்னையில் சாய் பஜனை நடக்கிறதோ, அப்போதெல்லாம் அவருடைய கடை கண்டிப்பாக லீவு.. வருமானம் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை. சாய்பஜனையை ஒருமுறை கூட மிஸ் பண்ணியதில்லை. அதனை சொல்லும்போது, அவர் கண்களில் பெருமிதம் மிளிருவதை நான் கவனிக்க தவறுதில்லை.

ஆனால் எனக்கென்னமோ சாய்பாபாவை பிடிப்பதில்லை, சாய்பாபா மட்டுமல்ல எனக்கு எந்த சாமியாரையும் பிடிக்காமல் இருந்தது. அதென்ன கடவுளுக்கும் நமக்கும் நடுவில்..அதுவும் குறிப்பாக அவர் செய்யும் மாயாஜாலங்கள், கையிலிருந்து அவர் எடுக்கும் விபூதி,தங்க செயின், லிங்கம் என்று அவர் செய்யும் மாயாஜாலங்களைப் பார்த்தபோது, கடுப்பாக இருந்தது. அதை உண்மை என்று நம்பி, அவர் காலில் விழுந்த ஜனங்களைப் பார்த்தபோது, பற்றிக்கொண்டு வந்தது…ஏன் இப்படி என்று கேள்வியும், அப்போது இருந்த பசியில் அடங்கிப்போனது. அவர் சாய்பாபாவின் மகிமைகளை பற்றிப் பேசும்போது, “நிறுத்துங்க மாமா” என்று ஓபனாக சொல்லிவிடுவேன்..

அப்படி ஒருநாளில், போன இண்டர்வியூக்கள் எல்லாம் பல்பு வாங்கியிருந்தேன். மிகவும் எரிச்சாலானேன்..யாரைப் பார்த்தாலும் கோபம் வந்தது. அதே எரிச்சலுடன் “சாய் மெஸ்” வந்தேன். பட்டினி வேறு, ஒருபக்கம் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றியது..

“மாமா..புளிச்சாதம் கொடுங்க”

“இல்ல சாய்..தீர்ந்து போச்சு,,”

“சரி..தயிர்சாதம்..”

“இப்ப சாய்..இப்பதான் ஆச்சு..”

எனக்கு கோபம் இரட்டிப்பானது..

“சரி..என்னதான் இருக்கு..”

“காலையில் வைச்ச கிச்சடி தான் இருக்கு..”

“கொடுங்க” என்று வாங்கினேன் அதே எரிச்சலுடன்..

ஒரு வாய்தான் வைத்திருப்பேன்..ஆரம்பித்தார்..

“சாய்.நேத்து சாய் பஜனை போயிருந்தேன்..எப்படி இருந்தது தெரியுமா சாய்..அப்படியே அந்த பகவானே நேரில் வந்த மாதிரி..”

“மாமா…கொஞ்சம் நிறுத்திருங்களா..எனக்கு அவரை பிடிக்காது..”

“சாய்..அவரை ஒரு நிமிசம் நேருல பார்த்தீங்கன்னா அப்படி சொல்லமாட்டீங்க..அவர் கடவுளோட அவதாரம்..அவருக்கு இறப்பே இல்லை..”

“மாமா..ரொம்ப ஓவரா பேசாதீங்க..அவரும் நம்மளை மாதிரியே ஒரு ஆளுதான்..என்ன கொஞ்சம் மேஜிக் தெரிஞ்சிருக்கு..அதை வைச்சு, உங்களை மாதிரி ஆளுங்களையெல்லாம் ஏமாத்துறாரு..நீங்களும் நம்புரீங்க..மாறுங்க மாமா.. ”

“இல்ல சாய்..உங்களுக்கெல்லாம் அது புரியாது..அதுக்கெல்லாம் ஒரு தீட்சை வேண்டும்….அவரோட கடைக்கண் பார்வைக்காக எவ்வளவு பேர் காத்திருக்காங்க தெரியுமா..”

“மாமா.அவரோட கடைக்கண் பார்வைக்காக காத்து நிற்கிற நேரத்துல , ரேஷன் கடையில நின்னீங்கன்னா, அரிசி, மண்ணெண்ணய்யாவது கிடைக்கும்” என்று குத்தினேன்..

அவ்வளவுதான்..அவருடைய முகம் மாறிவிட்டது..முதல் முதலாக அவருடைய முகத்தில் அவ்வளவு கோபத்தை அப்போதுதான் பார்க்கிறேன்..

“நீங்க கிளம்புங்க சாய்..இனிமேல் என் கடையில் சாப்பிட வராதீங்க சாய்..”

“மாமா…இதுக்கெல்லாம் போய் கோவிச்சுக்கிட்டீங்க..நீங்களும் பேசுனீங்க..நானும் பேசுனேன்..முடிஞ்சிருச்சு..இதுக்குப்போயி..”

“இல்ல சாய்..பாபா மகிமைய இப்ப உங்களுக்கு தெரியாது….அவருக்கு இறப்பே கிடையாது..அப்படியே இருந்தாலும், இன்னொரு அவதாரம் எடுப்பார்..இதெல்லாம் உங்க அறிவுக்கு எட்டாது..இனிமேல் என் கடைக்கு வராதீங்க” என்று திரும்பி கொண்டார்..

எனக்கு மனம் கஷ்டமாக போய்விட்டது. எரிச்சலில் அவருடைய மனதை சங்கடப்படுத்திவிட்டோமே என்று, எண்ணிக்கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றேன்..அதற்கப்புறம் அவருடைய கடைக்கு செல்வதில்லை. தெருவில் நடக்கும்போது பார்த்தாலும், பார்க்காத மாதிரி முகத்தை திருப்பிக் கொள்வார்…

இதோ, திருவல்லிக்கேணியை விட்டு விட்டு வந்து 10 வருடங்களாகின்றன். அடுத்தமுறை சென்னை வரும்போது, கண்டிப்பாக திருவல்லிக்கேணி செல்லலாம் என்றிருக்கிறேன். குறிப்பாக “சாய் மாமாவை” பார்த்து ஒரு கேள்வி கேக்கலாம் என்று..

“சொல்லுங்க மாமா..1.5 லட்சம் கோடி சொத்து சொந்தக்காரரான, சாய்பாபாவின் அடுத்த அவதாராமாக யாரை வணங்க ரெடியாக இருக்கிறீர்கள்..”

Tuesday, 19 April, 2011

பொன்னர் சங்கர் – திருத்தப்பட்ட விமர்சனம்

சிலநேரங்களில், நாம் எழுதியவற்றை நாமே திரும்பி பார்க்கும் சந்தர்ப்பம் வரும். அப்படி எழுதிய சில பதிவுகளைப் படிக்கும்போது, நாமே நம்மைப் பற்றிய சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுவோம். அப்படி நான் எழுதிய கடந்த பதிவு “பொன்னர் சங்கர் – சரித்திர நகைச்சுவை”. இதை படித்து சுயவிமர்சனம் செய்தபோது என்னை நானே காரி முகத்தில் உமிழ்ந்து கொண்டது மாதிரி இருந்தது.

ஒரு விமர்சனம் பொதுவாக , இரண்டு பக்கங்களையும் நியாயமாக அலசவேண்டும். தவறுகளை, எந்த எல்லைக்கும் சென்று கிண்டல் செய்யும் அதே நேரத்தில், அந்த படத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் சுட்டி காட்டுவதே, ஒரு நியாயமான விமர்சனத்திற்கு அழகு. ஆனால் என்னுடைய விமர்சனம், அந்த படத்தைப் பற்றிய கிண்டல் செய்த வேளையில், அந்த படத்தில் தென்பட்ட நல்ல விஷயங்களை சுட்டிகாட்ட தவறிவிட்டதாகவே நினைக்கிறேன்.

அந்த படத்தில் எனக்கு தென்பட்ட நல்ல விஷயங்கள்..

1) துணை நடிகர்களின் உழைப்பு : ஆயிரக்கணக்கான, துணை நடிகர்களின் உழைப்பு கண்முன்பு தெரிகிறது. போர்க்காட்சி, மற்றும் நடனங்களில் இவ்வளவு பேரை வைத்து வேலை வாங்குவது சுலபமான காரியம் இல்லை. அதை டைரக்டர் இந்த படத்தில் சரியாக செய்துள்ளார் என்பது கருத்து

2) ஆர்ட் டைரக்சன் மற்றும் கேமிரா கோணங்கள் : சரித்திர படத்தில் ஆர்ட் டைரக்சன் சரியில்லை என்றால், படம் கேலிக்கூத்தாக மாறிவிடும். இந்த படத்தில் பல கோடி ரூபாயில் போடப்பட்டுள்ள, செட்கள், படத்தின் பிரமாண்டத்திற்கு உதவுதோடு, ஆர்ட் டைரக்டரின் உழைப்பைக் காட்டுகிறது. அவருக்கு ஒரு ராயல் சல்யூட்

மற்றபடி நான் பிந்தைய விமர்சனத்தில் சொல்லிய கருத்துக்களில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை(மேலே உள்ள விஷயங்களை சொல்லத் தவறியது தவிர). தெளிவில்லாத திரைக்கதை, கதாபாத்திரங்களின் தவறான தெரிவு(முக்கியமாக ராஜ்கிரண், மீசையைத் தடவியபடி “ஷங்கர்” என்று சொல்லுவது – நன்றி கேபிள் அண்ணா..),, பிரசாந்தை, கதாபாத்திரத்தோடு, ஒன்ற விடாமல், ஹீரோயிசம் காட்டவைத்தது, என டைரக்டர் சறுக்கியது அப்பட்டமாக தெரிகிறது.

பலபேரின் உழைப்பை, ஒரு நிமிடத்தில் விமர்சனம் செய்து கிண்டல் பண்ணுவது மிகவும் சுலபமான காரியம், நான் முந்தைய பதிவில் செய்தது போல. ஆனால், அந்த கிண்டலுக்கும் மதிப்பு, அந்த படத்தில் உள்ள நல்லவிஷயங்களையும் சொல்லும்போது தான். அதுதான் குறைந்தபட்ச நேர்மையும், மனிதத்தன்மையும் கூட. கடந்த பதிவில் நான் இழந்த குறைந்த பட்ச நேர்மையை புதுப்பிப்பதின் முயற்சியே, இந்தப் பதிவின் நோக்கம் என்று சொல்லுவதில் எனக்கு வெட்கம் ஒன்றும் இல்லை.

Sunday, 17 April, 2011

பொன்னர் சங்கர் – சரித்திர நகைச்சுவை

சும்மாதானே இருக்கோம்னு கொள்ளிக்கட்டையை எடுத்து சொரிஞ்சுக்கிட்டானாம் ஒருத்தன் கிறமாதிரி, பொழுதுபோகலைன்னா, குறள் டி.வி பார்க்குறத விட்டுட்டு, என் கிரகம்(சனியன், 7ஆம் இடத்துல இருக்கு போல), பொன்னர் சங்கர் ன்னு ஒருபடம் பார்த்தேண்ணே..

பிரசாந்த தளபதி கெட்டப்புல பார்த்தவுடனே, பயபுள்ளக்கு சிரிப்பு தாங்கலை. சிரிப்பை அடக்காமாட்டாம மேற்கொண்டு பார்க்க ஆரம்பிக்க, வேட்டிக்குமேலே டவுசர் போடுவாரே..யாருண்ணே அவரு..ம்..ராஜ்கிரண்..தக்காளி..செந்தமிழ்ல பேசுறப்ப, தக்காளி, சிரிப்பு பொத்துக்கிட்டு வந்துருச்சுண்ணே..கெக்கபிக்கே, கெக்கபிக்கேன்னு ஒரே சிரிப்பு, சிரிப்பு.. இதுல அவரு மீசைய தடவிக்கிட்டு “பொன்னர்…சங்கர்” ன்னு சொல்லுறப்ப..ஐயோ..இருங்கண்ணே..சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது..ஸ்..அப்பா….சிப்பு சிப்பா வந்து, கண்ணுல தண்ணியா வந்து..கடைசியில தாங்கமுடியாம, இந்த பதிவை போடுறேண்ணே..

கதையின்னு கேட்டீங்கன்னா, ஜெயா டிவில ஜாக்பாட் ப்ரோகிராம் நடிச்சுட்டு திமுகவுக்கு பிரச்சாரம் பண்ணின குஷ்புவும், “தடித்த கறுத்த தமிழச்சி” ன்னு சொல்லி இன்னும் தமிழ்படத்துல நடிச்சுக்கிட்டு இருக்குற ஜெயராமும், என்னதான் நடிச்சாலும், முன்னுக்கு வராத, நடிகர் அருண்குமாரின் அப்பாவும், நாட்டாமை படத்துல நசுங்கி போன சொம்புல பொலிச்சு, பொலிச்சுன்னு எச்சியத் துப்புற நடிகர் விஜய்குமாரின் எதிர்ப்பை மீறி கல்யாணம் பண்ணிக்கிறாங்க..

குஷ்புக்கு நிச்சயம் பண்ணி, ஜஸ்ட் எஸ்கேப் ஆன, செல்லம் பிரகாஷ்ராஜ், “அப்பாடா, தப்பிச்சோம்னு” ஓடுறத விட்டுட்டு, பயங்கரமா சதித்திட்டம் தீட்டுறாரு.. குஷ்புக்கு “பொன்னர்” “சங்கர்” ன்னு படம் பார்க்குறவியிங்க உசுரை எடுக்குறதுக்குன்னே பொறந்த டபுள் ஆக்ட் பிரசாந்த்..பைட் சீனுல கூட அர்ஜெண்டா வெளிக்கி வர்ற மாதிரியே எக்ஸ்பிரசன் குடுக்குறப்ப, நம்மளுக்கும் அர்ஜெண்டாகி, பாத்ரூம் பக்கம் ஓடுறோம். “எவனும் வெளியே போயிரக்கூடாது” ன்னு திமுகவுல இருந்து ஏற்பாடு பண்ணுன ரெண்டு பேர் அருவாளும் கையுமா, கதவுபக்கம் நிக்குறதால, பயந்துகிட்டு திரும்பவேண்டியிருக்கு.

குஷ்புவுக்கு பொறந்த ரெண்டு குழந்தைகளை காப்பாத்துறத தன் கடமையா நினைச்சுக்கிட்டுற இருக்கிற சோலையம்மா புருஷன் “ராஜ்கிரண்” தக்காளி வேட்டிய தூக்கி கட்டிக்கிட்டு ரெண்டு பேரையும் காப்பாத்தி வளர்க்குறாரு. நம்ம செல்லம் பிரகாஷ்ராஜ், பனைமர உயரத்துக்கு வளர்ந்திருக்குறவரும், ஜீவன் சாப்ட்வேர் கம்பெனி வைச்சிருக்குறவருமான, குவார்ட்டர்..சாரி..நெப்போலியனோட கூட்டு சேர்ந்துகிட்டு, நம்ம உசிரை எடுக்கிறாயிங்க..

இதுக்கு நடுவுல, “இதுதான் கடைசி படமோ” ன்னு நினைக்கிற அளவுக்கு, படத்துக்கு ம்யூசிக் போட்ட, இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் வந்து, இருக்குற கொஞ்சம் நஞ்ச உசிரையும் எடுக்க நடைபிணமா போற நமக்கு, நல்லா இளநீரில பீரு ஊத்துனமாதிரி வர்ற ரெண்டு ஹீரோயினை பார்த்தவுடனேதான் ஆக்சிஜன் கிடைக்குது.. கிடைச்ச கொஞ்சநஞ்ச ஆக்சிஜனுல எழுந்து உக்கார,நேரம் பார்த்து, கலைஞரின் வசனங்கள் கடுமையாக தாக்க, தக்காளி, உசிரு போனாலும் பரவாயில்லைன்னு தலைதெறிக்க ஓடுற அப்பாவி பயபுள்ளைங்க கண்டிப்பாக ரெட்டை இலைக்குதான் ஓட்டுப் போடுவான்..

பொன்னர் சங்கர் – தியேட்டர் பக்கம் போனா, உசிருக்கு உத்திரவாதம் இல்லை..அதிமுக அதிகவாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சா, இந்த படம்தான் முக்கியகாரணம்..

Friday, 15 April, 2011

உதயசூரியனா – இரட்டை இலையா – ஜெயிக்கப் போவது யாரு??

“யம்மா..நல்லா இருக்கீங்களா..”

“இருக்கேன்பா ராசா..”

“வோட்டெல்லாம் போட்டுட்டீங்கள்ள..நம்ம ஊருல யாரு வருவா,,”

“ஏதோ மாம்பழமும், ரெட்டை இலையும் நிக்குதாம்..”

“நம்ம ஊருல யாருமா ஜெயிப்பாய்ங்க..”

“நம்ம ஊருல மாம்பழம் சின்னம் யாருக்குமே தெரியாது. உதயசூரியன் நின்னா ஜெயிச்சிருக்கும். ரெட்டை இலைதான் வரும்..”

“நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க..”

“நம்ம என்னைக்கும் கலைஞருக்குதான்..”

“நம்ம வூட்டுல இருக்குற எல்லாருமா..”

“ஆமா..அண்ணன், அண்ணி எல்லாம் சேர்த்து 8 ஓட்டு கலைஞருக்குதான்..”

(DMK = 8, ADMK = 0)

==================================================================

“என்னடா மாமூ..எப்படிடா இருக்க..”

“நம்மளுக்கு என்னடா இருக்கேன்..”

“என்னடா..தேர்தல் கலக்குது போல..”

“முன்ன மாதிரி இல்லடா..தேர்தல் கமிஷன் ரொம்ப ஸ்ட்ரிக்டு..ஒரு ப்ளெக்ஸ் பேனர், தோரணம்..ம்..ஹூம்..எதுவுமே இல்லை..வெறிச்சோடி கிடக்குது..”

“உங்க வீட்டுல யாருக்கு ஓட்டு..”

“இரட்டை இலைதான்a..”

(DMK = 8, ADMK = 2)

================================================================

“வணக்கம் தம்பி..அப்பா உங்ககிட்ட பேச சொன்னாங்க..”

“வணக்கம் சார்..அப்பா சொன்னாங்க..கண்டிப்பா முயற்சி பண்ணுறேன் சார்..அப்புறம் வூரு பக்கம் எலெக்சன் எப்படி போகுது..”

“அது கிடக்கு தம்பி..யாரு ஜெயிச்சாலும் கொள்ளைதான் அடிக்க போறாய்ங்க..அதனாலயே நம்ம அதை கண்டுக்குறது இல்ல”

“யாருதான் ஜெயிப்பாய்ங்க..”

“தெரியல தம்பி..ரெண்டு பேருக்கும் சமமா வரும்னு சொல்ல்க்கிறாயிங்க..யாரு வந்தாலும் நம்ம பொழைப்பு மாறவா போகுது..”

“நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க,,”

“நானும் என் சம்சாரமும் காலங்காலம் காங்கிரசுதாம்பா..”கை” க்குதான் ஓட்டு

(DMK = 10, ADMK = 2)

==============================================================

“என்னடா..உங்க ஊருல எலக்சன் எப்படி..”

“செம காசாம்டா..அள்ளி அள்ளி கொடுத்துருக்காயிங்களாம்..”

“உங்க ஏரியா நிலவரம் எப்படி..”

“நம்ம ஊருப்பக்கம் எப்போதுமே ரெட்டை இலைக்கும் காங்கிரசுக்கும்தான் போட்டி..எங்க வீட்டுல உள்ள 4 ஓட்டுமே ரெட்டை இலைக்குதான்..அவிங்களும் கொஞ்சநாளைக்கு சம்பாதிக்கட்டுமே..”

(DMK = 10, ADMK = 6)

========================================================================

திமுக கூட்டணி = 10 அதிமுக கூட்டணி = 6

Tuesday, 12 April, 2011

உனைப் பார்த்த நாள் முதல்.....

நீ அழும்போது நான் பதறுகிறேன்...

நீ சிரிக்கும்போது நான் குதுகலிக்கிறேன்...

நீ முறுவலிக்கும்போது நான் பெருமைப்படுகிறேன்..

நீ தூங்கும்போது நான் ரசிக்கிறேன்..

நீ சிணுங்கும்போது நான் பரபரக்கிறேன்..

நீ துன்புறும்போது நான் கண்ணீர் வடிக்கிறேன்...

நீ சாப்பிடும்போது நான் பசியை மறக்கிறேன்..

நீ அசையும்போது நானும் அசைகிறேன்..

நீ கண்திறக்கும்போது என்னையே பார்க்கிறேன்..

நீ பெருமூச்சு விடும்போது, நான் நெருப்பாகிறேன்..

என்னையே நான் இழந்து மூன்று மாதங்களாகின்றன...

நீ சொல்லப்போகும் "அப்பா" என்ற வார்த்தையே கேட்பதற்கு(என் மகன் பெனிட்டோவுக்கு ஏதோ இந்த அப்பாவால் முடிந்த ஒரு கவிதை..இல்ல கடிதாசி..இல்ல கடிதம்னு..))))

Monday, 11 April, 2011

ஓட்டுப்போடப் போவதற்கு முன்பு ஒரு நிமிடம்…

இந்த கோவாலுக்கு, அப்படியே ஜெராக்ஸ் எடுத்துவிட்டமாதிரி இருக்காண்ணே பயபுள்ள கிறுக்கு சுப்பையா..கோவாலு பேசியே கொல்லுவான், இந்த பயபுள்ள கிறுக்குத்தனமா கேள்வி கேட்டே கொல்லுவாண்ணே.. எந்த பேயாவது காலங்காத்தால 4 மணிக்கு வந்து கேள்வி கேட்பானா..இவன் கேக்குறான்..நம்மளே, கலைஞர் வருவாரா, ஜெயாம்மா வருவாரான்னு பயத்துல, எப்போதும் வர்ற நயன்தாரா கனவே வராம, கொல்லங்குடி கருப்பாயி வந்து ஸ்மைல் பண்ணுறப்பய லைட்டா டவுட் ஆனேன்.ஆஹா..இன்னிக்கு ஏதோ நடக்கப்போகுதுன்னு..பய, காலங்காத்தால 4 மணிக்கு வந்து கதவை தட்டுறான்..

“ராசா சார்..ராசா சார்..எந்திருங்க சார்..4 மணிக்கு என்ன தூக்கம்..”

“அடப்பாவி கிறுக்கு சுப்பையா..4 மணிக்கு ஏண்டா வந்து உசிர வாங்குற..”

“சார்….ஒரு ஹெல்ப்..ஓட்டு போடப் போறப்ப, என்னையும் கூட்டிட்டு போங்க சார்..”

“சுப்பையா..கிறுக்குத்தனமா கேக்காத..நம்ம எப்படிடா ஓட்டு போடமுடியும்..இங்கல்ல இருக்கோம்…”

“ஓ..அப்படில்ல..மறந்துருச்சு..சார்..எங்க ஓட்டு போடப்போறீங்க..”

“டே..கால்ங்காத்தால கொலைவெறிய கிளப்பாத..ஓடிப் போயிடு..”

“சார்..இன்னிக்கு சூடா இருக்கார்போல தெரியுது..தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ..”

“ஆஹா..சுப்பையா..இப்பவாது தெரிஞ்சுதே..ஆமா..உனக்கு ஒரு நட்புபேய் இருக்குமே..கோவாலு..எங்க அவன்..”

“அவன் கிடக்குறான் சார்..கிறுக்குப்பய..நீங்க சொல்லுங்க சார்..ஓட்டுபோடுற மாதிரி, ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுச்சுனா, எங்க ஓட்டு போடுவீங்க..”

“வேற யாரு கலைஞருக்குதான்…”

அதுவரைக்கும் அமைதியா இருந்தவன் டென்சனாயிட்டான்..

“போடா ராசா..தமிழின துரோகி..தமிழ்நாட்டை அழிக்குறதுல அப்படி என்னடா ஒரு சந்தோசம்..”

அப்படியே அதிர்ச்சியாகிட்டேண்ணே..அவனையே பார்க்குறேன்..பயபுள்ள அமைதியாகி, அவனே பேசுறான்..

“சாரி..ராசா சார்..கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்..என்ன சார், திமுகவுக்கா உங்கள் ஓட்டு..குடும்ப அரசியல் பண்ணுறாங்க..2ஜீ ஸ்பெக்ட்ரம் ஊழல், சட்ட ஒழுங்கு கெட்டுப்போச்சு..ஈழ்த்தமிழர் பிரச்சனையில் எதுவுமே பண்ணல.. இந்த முறை திமுகவுக்கு ஓட்டு போட்டீங்கன்னா மவனே கையில இருக்குற கத்திய வைச்சு எதையாவது சம்பவம் பண்ணிடுவேன்..”

ஆத்தி ஆடிப்போயிட்டேண்ணே..ஆஹா..கிறுக்கு பயபுள்ள, விளையாட்டுத்தனமா ஏதாவது பண்ணுனாலும் பண்ணுவாங்கிற பயத்துல எனக்கு குலையே நடுங்கிருச்சு..

“ஆஹா..சுப்பையா..அப்படி எதுவும் பண்ணிராதடா..நான் ஓட்டை அம்மாவுக்கே போட்டுறேன்..”

“சார்..என்னைய விட கிறுக்குப்பயலா இருப்பீங்க போல..அம்மாவுக்கு ஓட்டுப்போடுறதும், குடும்பத்தோடு தற்கொலை பண்ணிக்குறதும் ஒன்னு சார்..”

“எப்படி சொல்லுற..”

“சார்..அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டா, அவ்வளவுதான், தமிழகத்தை கேக்கு வெட்டுற மாதிரி..கூறுபோட்டு வித்துருவாயிங்க..2ஜீ என்ன, 4ஜீ, 5ஜீக்கு மேல போகும்..இதுக்கு முன்னாடி நடந்ததை எல்லாம் மறந்துட்டீங்களா..”

"ஐயோ..ஆமாண்டா..நான் வேணா, பாஜ வுக்கு போடட்டா..”

“பாஜ வா..அப்படின்னா..”

“கிழிஞ்சது போ..ம்..இப்ப பாரு..எங்க ஊருல இருக்குற ஒரு சுயேச்சைக்கு ஓட்டுப்போடப்போறேன்,,”

“சார்..ஓட்டை ஏன் சார் இப்படி வேஸ்ட் பண்ணுறீங்க..இப்படி யாருக்காவது ஓட்டு போட்ட ஓட்டு பிரிஞ்சுரும் சார்..”

“ஓ..அப்படி ஒன்னு இருக்குல்ல..ம்..ஆஹா..இருக்கவே இருக்கு

49ஓ..அதுல போட்டுருவோம்..”

“சார்..49ஓ வுக்கு நீங்க பார்ம் எல்லாம் பில்லப் பண்ணி..ரொம்ப டைம் வேஸ்ட் சார்..அதுவும் யாருக்காவது ஓட்டுப்போட்டோம்னு ஒரு மனநிம்மதி இருக்காது பாருங்க..”

“டே..கிறுக்கு சுப்பையா..குழப்பாதே..இப்ப எங்கதான் ஓட்டுப் போடணும்..”

“யோசிங்க சார்..இது நாட்டோட எதிர்காலம்..நம்ம இளைய தலைமுறையினருக்கு நாம் கொடுக்கப்போகும் சந்தர்ப்பம்..தமிழக அரசியலையே மாற்றி அமைக்கப் போகும் ஒரு அனுபவம்..எடுத்தோம் கவிழ்த்தோம்னு தீர்மானிக்க முடியாது..யோசிங்க..உங்களுக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் தர்றேன்..”

“அட சுப்பையா..என்னடா கேம்ஷோவில சொல்லுற மாதிரி சொல்லுற..வெயிட் பண்ணுடா..யோசிக்குறேன்..”

நானும் பத்து நிமிஷம் யோசிக்கிறேன்…ஒன்னும் என் அறிவுக்கு எட்டலை..இலையதலைவலி சாரி..இளையதளபதி டாக்குடரு விசய் வேற நிக்கலையா..எனக்கு குழப்பம் இன்னும் ஜாஸ்தி ஆகிடுச்சு..ம்..எங்க ஓட்டு போடலாம்…ம்..ஹீம்..டென்சனாகி கிறுக்கு சுப்பையாகிட்டேயே கேட்டேன்..

“சுப்பையா..ஒன்னும் புரியலைடா..நீயே சொல்லு..”

“சார்..நல்லா யோசிங்க சார்..இன்னும் வேணா டைம் எடுத்துக்குங்க..”

“இல்ல சுப்பையா..இதுக்கு மேல யோசிச்சா, டாப்பு கழண்டுரும்..நியே சொல்லு..எங்க ஓட்டுப்போடுறது..”

“இன்னொருவாட்டி கேளுங்க..”

“அடேய்..எங்க ஓட்டுபோடுறது..எங்க ஓட்டுபோடுறது..”

பயபுள்ள கூலா சொல்லுறான்..

“என்ன சார்..ஆளு இம்புட்டு வளர்ந்துருக்கீங்க..இது கூடவா தெரியாது..ஓட்டு எங்க போடணும்..ஓட்டுப்பெட்டிலதான்….”

காலங்காத்தால 4 மணிக்கு ஒரு கொலை விழுந்து பார்த்துருக்கீங்க…????

Saturday, 2 April, 2011

இந்தியா ஜெயித்த போது கொலைவெறியில் எழுதியது

அடங்கொய்யாலே மாப்பு..

வைச்சோமா இலங்கைக்கு ஆப்பு..

தூக்குனோம்ல வேர்ல்டு கப்பு..

எடுடா அந்த வேர்ல்டு மேப்பு..

இந்தியாதாண்டா எப்போதுமே டாப்பு

டோணி அடிச்ச சிக்சர்தாண்டா தீர்ப்பு…

தல சச்சின் மேல எங்களுக்கு ஒரு ஈர்ப்பு..

அடிச்சான்ல கம்பீர் டைம் பார்த்து ஒரு கேப்பு..

இனி வேர்ல்ட் கப்பு எல்லாம் எங்களுக்கு ஒரு சோப்பு..

அடங்ககொய்யால மாப்பு

வைச்சோமா இலங்கைக்கு ஆப்பு

ங்கொய்யால..வேர்ல்ட் கப்பு ஜெயிச்ச அஞ்சு நிமிசத்துல எழுதுறேன். இனிமேல் என்னய்யா இலக்கியத்தரம்..யப்பா..என்னா ஒரு மேட்ச்சு..நானும், ஒரு 10 பங்காளிகளும் ஒரு நண்பனின் வீட்டில் உக்கார்ந்து ஒரு பால் விடாம பார்த்தோம்..விரலை கடிச்சு துப்பாத குறைதான்…எவ்வளவு டென்சன். அவிங்களை 275 அடிக்கவிட்டப்ப எல்லாரும் நொந்து போனோம். அய்யய்யோ, எல்லாரும் கிளம்பிரலாம்னு கிளம்பும்போதுதான், சரி எதுக்கும் பார்த்துட்டு போகலாம்னு ஒருத்தன் சொன்னான். சரின்னு பார்க்க ஆரம்பிச்ச முதல் ஓவருலயே சேவாக் அவுட்..அடிவயித்துல பக்குன்னு இருந்துச்சு.. அடுத்து நம்ம தல தெண்டுல்கர் அவுட்டானவுடனே நிறைய பேரு கிளம்ப பார்த்தாய்ங்க..அவிங்களை புடிச்சு உக்காரவைச்சு ஒவ்வொரு பாலும் பார்க்க ஆரம்பிச்ச ஒவ்வொரு நொடியும் எங்களில் யாரும் இதுவரை அனுபவித்ததில்லை. ய்ப்பே..ஒவ்வொரு 4 அடிக்கும்போது நாங்க போட்ட கூச்சல் இருக்கே..பக்கத்து வீட்டுக்காரயிங்க வராத குறைதான்.

விராத் கோலியும், கம்பீரும் அவுட்டானவுடனே டென்சன் அதிகமாக, எல்லாரும் பயந்துட்டாயிங்க..ஆனா, ரொம்ப நாளா பார்மே இல்லாம இருந்த டோனி, ஆடியவிதம் இருக்குதே..யோவ் டோனி, இனிமேல் நீ விளையாடவே வேணாம்யா..இது போதும்யா..நாங்க வாழ்ந்த காலத்துல, ஒருதடவையாவது உலகக்கோப்பைய வாங்கிருவோம்னு கனவ கண்டதை பலிக்க வைச்சுட்டயா..ங்கொய்யால அதுவும் கடைசிய நீ சிக்சர் அடிச்சப்பா நாங்க போட்ட ஆட்டம் இருக்கே..ஜென்மத்துக்கும் மறக்க மாட்டோம்யா..கண்ணீரோட சொல்றோம்யா…நீ சிங்கம்யா…எங்க இருந்தாலும் நல்லா இருய்யா…