Thursday, 28 July, 2011

ஆண்மை தவறேல் - திரைப்பட விமர்சனம்

அந்த காலத்தில் எல்லாம், பெண்கள் வேலைக்கு செல்லவே அனுமதிப்பதில்லை. பெண்ணடிமைத்தனத்தின் உச்சமாக இருந்த காலம் அது. பின்னர் சிறிது மாறி, பெண்களும் வேலைக்கு செல்லலாம் என்ற நிலை வந்தது. ஆனால் 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வரவில்லையென்றால், பெண்ணின் நடத்தைப் பற்றியெல்லாம் கேள்வி எழுந்தது. எழுப்பியவர்கள் எல்லாம் ஒழுக்கம்கெட்ட ஆண்கள். பின்னர் படிபடியா அது மாறி “பெண்கள், இரவு வேலைக்கு சென்றால் தான் என்ன” என்ற நிலைமை வந்தது. எல்லாம் இந்த சாப்ட்வேர் ஏற்படுத்திய மாற்றங்கள். பெண்கள் துணிந்து வேலைக்கு வந்தனர். கம்பெனிகளே, இரவு வாகன வசதி, பிக் அப், டிராப் போன்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவே, வீட்டிலும் கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனால், யார் வீட்டிலாவது, இந்த படத்தைப் பார்த்தால், பெண்களை இரவுவேலைக்கு அனுப்புவது சந்தேகம். அப்படி ஒரு அதிர்ச்சியை எனக்கு ஏற்படுத்தியது சமீபத்தில் நான் பார்த்த படமான “ஆண்மை தவறேல்..”

யுத்தம் செய் படத்தில் சொன்னதுபோல், எத்தனை பேர் பெண்களை வேலைக்கு அனுப்பிவிட்டு, நெருப்பில் வயிற்றைக் கட்டி உக்கார்ந்திருக்கிறார்கள். ஆனால், இரவுவேலை செய்யும் பெண்கள் பாதுக்காப்பாகத்தான் இருக்கிறார்களா.அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கிறதா, என்பதை பொட்டில் அறைந்தாற் போல் சொல்லியிருக்கிறது இந்த படம்.

படத்தின் கதை இதுதான். நாயகி ஒரு கால்செண்டரில் வேலை செய்பவள். இரவு 9 மணிக்கு கிளம்பி, காலை 6 மணிக்கு வீடு திரும்பும் வேலை. அப்பாவியான அம்மாவை ஏமாற்றிவிட்டு வழக்கம்போல சொங்கியான காதலனுடன் ஊர்சுற்றுகிறாள். அப்படி ஒருநாள் வேலைக்கு செல்லும்போது, கடத்தப்படுகிறாள். ஒரு சிவப்பு நிற வேனில் மூன்று ஆட்கள். இன்னும் சிலபெண்களை கடத்துகிறார்கள். வேன் கோவா நோக்கி செல்லுகிறது. போகும் வழியில், எதுக்கும் இருக்கட்டுமே என்று இரண்டு பெண்களை கடத்துகிறார்கள். மொத்தம் நாலு பெண்கள், மூன்று ரவுடிகள்.எப்படி இருக்கும். ஒவ்வொரு நிமிடமும் நரகமாகிறது அந்த பெண்களுக்கு, அவர்களை தேடி, தன்னந்தனியாக செல்லும் நாயகனோடு, இணைந்து கொள்கிறார், காவல்துறையை சேர்ந்த சம்பத்.

கடத்தலின் பிண்ணனியை இயக்குநர் விலாவரிக்கும்போது, முதுகுத்தண்டு சில்லிடுகிறது. அதிர்ந்து போகிறோம். பெண்களை கடத்திக்கொண்டு கோவாவில், ஒரு வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். அவர்கள் அங்கு பெண்மை சோதிக்கப்படுகிறது. பெண்மை இழந்திருந்தால், அங்கேயே லோக்கல் ரவுடிகளிடம் விற்றுவிடுகின்றனர்.இல்லாவிட்டால் ஆரம்பிக்கிறது, இண்டெர்நெட்டில் ஏலம் என்னும் கொடுமை. ஆன்லைனில் பெண்களை இண்டெர்நேஷனல் வரை ஏலம்விடுகிறார்கள்..அப்படி நாயகி ஏலம்விடும்போது, வழக்கம்போல ஹீரோ வந்து காப்பாற்றுகிறார் என்பது வழக்கமான கிளைமாக்சாக இருந்தாலும், அதைக் கொண்டு சென்ற விதம், பரபர..

ஆரண்யகாண்டம் சம்பத்துக்கு கால்ஷீட் பிரச்சனை போல..பயங்கர பில்டப்பாக அறிமுகமாகும் இவர், 10 நிமிடத்தில் காணாப்போகிறார். திரும்பவும் கிளைமாக்சில் வந்து எட்டிப்பார்க்கும்போது, “என்னா விளையாடுறீங்களா” என்று கேட்கத்தோன்றுகிறது. ஆனால் கிடைத்த கொஞ்ச நேரத்தில் ஓரளவுக்கு நன்றாக நடித்திருப்பதால் மன்னித்துவிடலாம். சொத்தையான ஒரு ஹூரோ, எக்ஸ்பிரஷனே இல்லாமல் நடிக்கும்போது கடுப்பு வருகிறது, ஆனால் கிளைமாக்சில் பறந்து, பறந்து ஜேம்ஸ்பாண்ட் மாதிரி, சண்டை போடும்போது , “பாறேன்..இந்த பிள்ளைக்குள்ள ஏதோ இருந்திருக்கு பாரேன்” என்று கேட்கத் தோன்றுகிறது. கும்பலிடம் மாட்டிக்கொண்டு, ஒவ்வொரு நிமிடமும் நடுங்கும் ஹீரோயின் நன்றாக நடித்திருக்கிறார். வேனில் கடத்திவரும் கும்பலும் ஆர்ப்பாட்டமில்லாமல் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இயக்குநரின் ஹோம்வொர்க்குக்கு ஒரு சல்யூட். பெண்களை கடத்தும் கும்பலின் நெட்வொர்க்கை டீட்டெயிலாக சொல்லும்போது, திடுக்கிடவைக்கிறார். ஆனாலும் அழுத்தமான எந்த காட்சியும் இல்லாதது படத்தில் குறை(பின்ன குறை சொல்லலைன்னா, ஒருபய மதிக்க மாட்டுறாய்ங்களே). கேபிள் சங்கர் பாணியில் சொல்வதென்றால், இன்னும் மெனக்கெட்டிருந்தால், ஒரு அருமையான சஸ்பென்ஸ் படத்தை கொடுத்திருக்கலாம்.. இசை, கேமிரா(என்னது எங்க இருக்கா..??) பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. கடைசியாக வில்லனாக வரும் பஞ்சு அருணாசலம் அவர்களின் மகன்..”சாரி..சார்.உங்க முகத்துக்கு சுத்தமாக பொருந்தவில்லை..”

இதுபோன்ற படங்கள் கண்டிப்பாக அங்கிகரிக்கப்படவேண்டும். நாலு பாட்டு, நாலு பைட் என்று வழக்கமான மசாலா இல்லாமல், பெண்களின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு படம் இல்லை, பாடமே நடத்தியிருக்கிறார்கள். இந்த படம் ஓடுகிறதா, இல்லை, ஓடவில்லையா, எப்போது வந்தது என்றெல்லாம் தெரியாது..ஆனால் பெண்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய விழிப்புணர்வு படம். ஏனென்றால், இங்குதான் சதைக்கு அலையும் ஓநாய்கள் நிறைய இருக்கின்றன…

Wednesday, 27 July, 2011

மைதானம் - திரைப்பட விமர்சனம்

பொதுவாக போரடிக்கும் நேரங்களில், எது கண்ணில் மாட்டுகிறதோ அதைப் பார்ப்பதுண்டு. சிலநேரம் அப்படி மாட்டிய திரைப்படங்கள், பலநேரம் கடுப்பேற்றி, கோவாலுவை அடிக்கும் அளவுக்கு வெறியேற்றுவதுண்டு..போனவாரம் அப்படி பார்த்த படம் “துரோகம் நடந்தது என்ன..” அதைப் பற்றி சொன்னால், படிக்கும் ஒன்று இரண்டு பெண்களும் வராமல் போக வாய்ப்பு இருப்பதால், விமர்சனம் எழுதவில்லை.

சில படங்களை “மொக்கை” படங்கள் என நினைத்து பார்க்கும்போது, நம்மையறியாமல் “அட” போடவைக்கும். அப்படி பார்த்த படம்தான் “மைதானம்”. மெதுவாக நாடகத்தன்மையோடு படம் ஆரம்பிக்கும்போது, எழுந்து டி.வியை ஆப் செய்ய நினைத்தேன். ஆனால் போக, போக….

படத்தின் கதை இதுதான். திருப்பூர் மாவட்டத்தில் நான்கு நண்பர்கள். வழக்கம்போல வெட்டியாக சுற்றாமல், ஆளுக்கு ஒரு வேலையாக, நேரம் கிடைக்கும்போது, இலக்கணம் மாறாமல் தம்மடிக்கிறார்கள், தண்ணியடிக்கிறார்கள்.முக்கியமாக, கடைக்கு, கடை டீ அடிக்கிறார்கள். அதில் ஒரு நண்பரின் தங்கைதான், நம் நாயகி..அவரை ஏதோ ஒரு மொக்கைப் படத்தில் பார்த்ததாக ஞாபகம். தங்கை, அண்ணனுடைய நண்பனை, லவ்வோ, லவ்வுகிறார். ஆனால் அந்த அட்டு நண்பரோ, தெலுங்குபட அப்பா வயசு ஹீரோக்கள், அசின், சார்மி மாதிரியான சூப்பர்பிகர்கள் மேலே, மேலே விழுந்து லவ்பண்ணும்போது, ஒரு டயலாக் சொல்லுவார்களே, “சாரிம்மா..உன்னை நான் அப்படி நினைக்கவே இல்லை..” என்று சொல்லுகிறார். அந்த வார்த்தையை சொல்லும்போது நமக்கே கவுண்டமனி ஸ்டைலில் “அடேய்” என்று கத்திக்கொண்டு கொலை செய்யலாம்போல இருந்ததென்றால், லட்சம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளருக்கு எப்படி இருக்கும். ஆனாலும் வேறு வழியில்லாமல் தாங்கிகொள்கிறார்.

இப்படி போகும் சமயத்தில், தங்கைக்கு பெண்..ச்சீ.மாப்பிள்ளை பார்க்கிறார்கள். மாப்பிள்ளை பயபுள்ளைக்கு சோத்தை நாலு நாளைக்கு காட்டாதது போல பாவமாக வருகிறார். வேறுவழியில்லாமல் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. திருமண வேலைகள் நடக்கும்போது, நம் நாயகி காணாமல் போகிறார். நண்பர்கள் தேடுகிறார்கள், தேடுகிறார்கள். 2 ரீல் முழுக்க தேடுகிறார்கள். தியேட்டரில் கடலைமுட்டாய் விற்கும் பயனும் கூட தேடும்நிலைக்கு வந்தவுடன் ஒரு கட்டத்தில் டயர்டாகிறார்கள். அப்பதான் டைரக்டர் வாங்கின காசுக்கு வைக்கிறார் பாருங்க டிவிட்டர்…இது டிவிஸ்டு..அந்த டிவிஸ்டு கடைசி வரைக்கும் தொடர, நிமிர்ந்து உக்கார்கிறோம்(ஸ்பைனல் ப்ராப்ளம் இல்லிங்க)

இயக்குநர் அகத்தியன் நாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார். மகளோடு பாசம் காட்டுவதாகட்டும், மகள் காணாமல் போனவுடன் பதறுவதாகட்டும், போலிஸ் ஸ்டேசனில் கூனி குறுகி போவதகட்டும், மனிதர் கிராமத்து அப்பாவை அப்படியே கண்முன் நிறுத்திகிறார். தமிழ்சினிமாவில், ஏன் இன்னும் இவரை உபயோகிக்கவில்லை என்று தெரியவில்லை. நண்பனாக நடித்த நான்கு பேர்களும் அடக்கி வாசித்திருக்கிறார்கள். நண்பனின் தங்கையை தேடும்போது, நட்பை வெளிப்படுத்துகிறார்கள். அதில் நாயகியின் அண்ணனாக நடித்தவர், வெளிச்சத்துக்கு வருவார் என நம்பலாம்.

அதிசயமாக படத்தில் உள்ள பாடல்கள் நன்றாக இருக்கின்றன. இசை சபேஷ்முரளியாம். பிண்ணனி இசை பெரிய லெட்டவுண்(நன்றி கேபிள்). சிலநேரங்களில் எங்கள் ஊர் சர்ச்சில் ஆர்மோனியம் போடுவது போல் இருக்கிறது. இடைவேளைக்கு பின்பு, திரைக்கதையில் விறுவிறுப்பு காட்டிய இயக்குநர், இடைவேளைக்கு முன்பும் காட்டியிருக்கலாம். டீட்டெயிலாக காட்டுகிறேன் என்ற பெயரில் போரடிக்கவைக்கிறார். ஆனாலும் அந்த கிளைமாக்ஸ், இன்ப அதிர்ச்சி..படத்தில் ஒரு கிழவி, படம் முழுவதும் பேசாமல் இருக்கிறார். அவர் பேசும்போது கிளைமாக்ஸ். அவர் மெதுவாக நடந்து செல்லும்போது, வணக்கம் போடுகிறார்கள். டைரக்டர் டச்..??

இதுபோன்ற படங்களுக்கு நல்ல விளம்பரம் செய்தாலே, படம் ஆவரேஜ் ஹிட்டாவது ஆயிருக்கும். தயாரிப்பாளருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால், ஆபாசகுப்பைகளுக்கும், வன்முறைகளுக்கு நடுவில் காணாமல் போன இந்தப்பூ, நல்ல விளம்பரம் கொடுத்திருந்தால், மணந்திருக்கும். என்ன பண்ண, இதுதான் தமிழ்சினிமாவின் தலைவிதி போல…

Sunday, 24 July, 2011

அவிய்ங்க ராசாவின் பார்வை

யப்பே…ஒருமாசம்தான் எழுதலை..எம்புட்டு நடந்திருக்கு அதுக்குள்ள..சரி, அதையெல்லாம், கலவையாய் “மிக்சர் ஜூஸ்” மாதிரி ஒன்னு எழுதாலமுன்னு பார்த்தா, தலைப்பை பார்த்து “மிக்சர் ஜூஸ் செய்வது எப்படின்னு எழுதியிருப்பான் போலன்னு, ஒரு பய தலை காட்ட மாட்டிங்குறாய்ங்க. சரி, ஏதாவது கேட்சியா ஒரு தலைப்பு வைக்கலாமுன்னு பார்த்தா, ஏற்கனவே “புரோட்டா, சாண்ட்விச்சு, இட்லி வடை, அவியல், பொரியல், கூட்டு, குழம்பு, சட்னி..” ன்னு எக்கச்சக்கமா வயித்துக்குள்ள போற சமாச்சாரத்தை வைச்சு எழுதிக்கிட்டு இருக்காய்ங்க..இதுல கோவாலு வேற சும்மா இருக்காம “ராசா..சாக்கடைன்னு பேர் வைடா” ங்கிறான். அது என்னடா சாக்கடைன்னு பேர்ன்னு கேட்டா, சாக்கடைதான் எல்லாத்தையும் அரிச்சுக்கிட்டு வருமாம். சரி, கொஞ்சம் டீசண்டா எண்ணங்கள், சிந்தனைகள், உக்கார்ந்து யோசிச்சதுன்னு எழுதாலமுன்னு, பார்த்தா ஏற்கனவே அந்த மாதிரி எழுதுறாய்ங்களாம். அடபோங்கையா, இதுக்கு என்ன வேணுமுன்னாலும் பேர் வைச்சுக்குங்க…படிச்சா போதும்…என்னது ஓட்டா…அதெல்லாம் கவர்ச்சி படம், கெட்டவார்த்தைன்னு எழுதனுமாமே..நம்மளுக்கு அதெல்லாம் எழுதவராது…

முதலில் சமச்சீர் கல்வி. அம்மாவின் பொற்கால ஆட்சி ஆரம்பமாகிவிட்டதாகவே கருதுகிறேன். அதன் முதல் படியே சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு. இனிமேல் தமிழ்நாடு எப்படி இருக்கப்போகுது பாருங்கண்ணே. ஹிலாரி கிளிண்டனே வந்து அம்மாவை வந்து பார்த்துட்டுபோனதில் இருந்தே தெரியவருகிறது, இனிமேல் ஈழத்தமிழர்களுக்கு எந்த பிரச்சனையும் வரப்போவதில்லையென்று. அம்மா பவர் அமெரிக்கா வரை பாய்ந்ததில் மிக்க மகிழ்ச்சி..

கோயம்பத்தூரில் நடுரோட்டில் துள்ளதுடிக்க கண்முன்னே கல்லைத் தூக்கிப்போட்டு துடிக்கதுடிக்க ஒரு கொலை. அதை பார்த்துக்கொண்டிருந்த மக்களை சொல்லி ஒரு குற்றமும் இல்லை. ஏதோ சினிமா சூட்டிங்க் போல என்று நினைத்திருப்பார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு நடக்காத வரை..ஆனால், இது ஆரம்பம்தான்…இன்னும் பலகொடுமைகள், நம் கண்முன்னே நடக்கலாம்..அதையெல்லாம் கைகட்டி வேடிக்கைதான் பார்க்கப்போகிறோம்..ஏனென்றால் அப்படியே வளர்ந்துவிட்டோம் பாருங்கள்.

அடுத்த நிகழ்வு நம்ம “கதவை திறங்கள், காற்று வரட்டும்” புகழ், நித்தியானந்தர்தான். இதுவரை பதுங்கியிருந்த எலி, ஆட்சி மாறியவுடன், வலையை விட்டு வெளியே வந்தது. எனக்கு அவர்மேல் உள்ள கடுப்பைவிட, இன்னமும் அவர் நடத்திய “குண்டலினி” யாகத்தில் உக்கார்ந்து, ப்ளைட் டிக்கெட் வாங்காமல் இன்னமும் பறப்போம் என்ற நம்பிக்கையில் உக்கார்ந்து டான்ஸ் ஆடியவர்கள் மேல்தான். அதிலும் ஒரு பெண், சும்மா விழுந்து, விழுந்து டான்ஸ்(உடான்ஸ்??) ஆடினார். அதுவும் மேடையில் தொப்பியைப் போட்டுக்கொண்டு, ஒரு பெண் ஆடி, ஆடி, அப்படியே ஆண்கள் இருக்கும் பகுதிக்கு ஊர்ந்து, ஊர்ந்து செல்ல, அங்கு இருக்கும் ஆண்களும் ஊர்ந்து, ஊர்ந்து, முன்வர “ஆஹா..கேமிரா வைச்சிருக்காய்ங்களா..” என்று நித்தியானந்தா தேடியது போல் இருந்தது..இந்த கூத்தைப் பார்ப்பதற்கே செமகாமெடியாகவும், அதே நேரத்தில், அந்த மக்களை பார்ப்பதற்கு கோபமாகவும் இருந்தது. விவேக் பாணியில் சொல்வதனால் “ஆயிரம் பெரியார் வந்தாலும், உங்களை திருத்தவே முடியாதுய்யா..”

இந்த பக்கம் நித்தி என்றால், அந்த பக்கம் சாட் புகழ் “சாரு”. முதலில் “நான் சாட் பக்கம் போவதே இல்லை என்றார்..” அடுத்தது “இல்லை, இல்லை..யாரோ என் பெயரைக் கெடுக்கிறார்கள்” என்றார்..அப்புறம், “என்னுடைய பாஸ்வேர்டை திருடிவிட்டனர் என்றார்..எல்லாவற்றிற்கும் அவருடைய பக்தர்கள் ஒன்றும் பதில் சொல்லமுடியவில்லை. அவர்களுக்கும் நடந்தது என்னவென்று தெரியும்..மனசாட்சி என்றும் ஒன்றும் இருக்கும். ஆனால் அவரே “நான் தவறு செய்தேன்” என்று ஒத்துக்கொண்டாலும், அவருடைய பக்தர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சாரு, எழுத்தாளர் இல்லை. ஒரு பிம்பம். அந்த பிம்பத்தை நம்பி, பல பாராட்டுரைகளை சொல்லிவிட்டார்கள். இப்போது “தவறு” என்று ஒத்துக்கொள்ளவும், தோற்று போகவும் விரும்பமாட்டார்கள். ஆனால் இதெல்லாம் சாரு மீது இல்லாத மரியாதை இல்லை. “அதெப்படி ஒத்துக்கொள்ளமுடியும்..அதெல்லாம் முடியாது” என்ற பிடிவாதமே காரணம்..தூங்குபவர்களை எழுப்பி விடலாம், ஆனால் தூங்குவது மாதிரி நடிப்பவர்களை….எனக்கென்னமோ, சாரு பக்தர்களுக்கும், நித்தி பக்தர்களுக்கும் ஏதும் வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை..

அடுத்து, நம்ம சூப்பர்ஸ்டார் நல்லபடியாக சிகிச்சை முடித்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தது. எதிர்பார்த்தது போல, ஏர்போர்ட் முழுக்க ரசிகர்கள் குவிந்து வந்து, தலைவனை தரிசிக்க வந்து இருந்ததை பார்த்து புல்லரித்தது. அதிலும் உண்ர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள், “அடுத்த பாராளுமன்ற தேர்தலில்” 40 இடங்களும் நமக்குதான் என்று சொல்லிவேறு பயமுறுத்தினார்..இன்னொருவர் “எனக்கு குடும்பம் வேணாம்யா..சொத்து வேணாம்யா..சொகம் வேணாம்யா, தலைவன் போதும்யா..” என்று சொன்னபோது, தமிழகம்(கவனிக்கவும், இந்தியா இல்லை) சீக்கிரம் வல்லராசாகிவிடும்போல தோன்றியது. அடுத்து ரசிகர்களை குஷிப்படுத்த “ராணா” வருகிறான். இப்பவே காசு சேர்க்கவேண்டும். அப்போதுதான் முதல் காட்சி, முதல் ஷோ பார்க்கமுடியும்..அப்படியே காசு இல்லாவிட்டால் என்ன, இருக்கவே இருக்கிறது, மனைவி காது, கைகளில் உள்ள நகைகள்..நல்லா இருங்கய்யா…

Sunday, 17 July, 2011

தெய்வத்திருமகள் – பாசப்போராட்டம்

இனிமேல் எழுதவே வேண்டாம், பேஸ்புத்தகமே போதும் என்று இருந்த என் நினைப்பில் வண்டிவண்டியாக மண்ணையும், ஆஹா..தொல்லை ஒழிஞ்சுச்சுடா சாமி என்று நினைத்து நிம்மதியாக இருந்த, மழைக்காக என் ப்ளாக் பக்கம் ஒதுங்கும் நண்பர்களையும், ஒரேயடியாக தள்ளிவிட்டிருக்கிறது, இந்த படம்.

பொதுவாக, நான் ரொம்ப செண்டியான ஆள். ஆள் பார்க்க கொஞ்சம் கரடுமுரடாக இருந்தாலும், ஜூராசிக் பார்க் படத்தில் உள்ள டைனோசரை யாராவது அடித்தால் கூட தாங்க முடியாமல் அழுதுவிடுவேன். மீனாவை தூக்கிக் கொண்டு, “சோலை பசுங்கிளியே” என்று ராஜ்கிரண் ரம்பா மாதிரி தொடை தெரிய வேட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தபோது, இரண்டு நாட்கள் சரியாக சாப்பிடவில்லை. ஒரே அழுகாச்சி..ராஜ்கிரணுக்கெல்லாம் மீனா மாதிரி ஒரு சூப்பர் பிகர் கிடைக்குது, நமக்கெல்லாம்….என்று துண்டை வாயில் பொத்திக்கொண்டு அழுதகாலங்கள் பல.

அப்புறம் கொஞ்சம் மெச்சூரிட்டு வந்தபிறகு, ங்கொய்யால, இனிமேல் எந்த படத்துக்கும் அழுகவே கூடாதுடா என்ற பிடிவாதத்தினாலேயே, எந்த செண்டிமெண்ட் படத்துக்கும் போவதில்லை. அப்படியே இருந்த பிடிவாதத்தை உடைத்துப் போட்ட படம் “7ஜீ ரெயின்போ காலனி.”. தக்காளி, பாவம் ஒன்னுமே தெரியாத ரவிகிருஷ்ணாவை, ஊட்டி பக்கம் கூட்டிட்டு போய் கற்பழிச்சுட்டு, அடுத்த சீனில் சடக்கென்று, செத்துப்போகும் சோனியா அகர்வாலை பார்க்கும்போது கண்டிப்பாக கோபம்தான் வரவேண்டும்..ஒரே அழுகாச்சி..தாங்கமுடியாம வாய்விட்டு அழுதுட்டு, பக்கத்து சீட்டு ஆளைப் பார்க்குறேன்.தக்காளி, என்ன சொல்லுறான் தெரியுமா..”என்ன சார்..ஊட்டியில ரெண்டு சீனு வரும்னு பார்த்தா, இப்படி பாட்டை போட்டு ஏமாத்திட்டாயிங்க சார்.”

என்னடா, தெய்வதிருமகள் படத்தைப் பற்றி எழுதாமல், இப்படி மொக்கை போடுறானே என்று ஓடுவதற்குள், இதோ, உங்களுக்காக விமர்சனம். சற்று மனநலம் சரியில்லாத விகரமுக்கு “நிலா” என்ற குழந்தை பிறக்கும்போது, அம்மா இறந்துவிடுகிறார்கள். கஷ்டப்பட்டு வளர்க்கும், அந்த குழந்தையை, அம்மாவீட்டிலிருந்து வந்து பிரித்துச்சென்று விட, அதற்கு பின் நடக்கும் பாசப்போரட்டமே, கதை. விக்ரமிற்கு, இதுபோன்ற கதாபத்திரங்கள், அல்வா சாப்பிடுவது மாதிரி, மனிதன் நடிக்கவில்லையென்றால்தான் ஆச்சர்யபடவேண்டும்.” நிலா, என்னோட நிலா” என்று எல்லோரிடம் வெகுளித்தனமாக கெஞ்சுவதாகட்டும், மகளோடு பேசுவதாய் நினைத்து நிலாவிடம் பேசுவதாகட்டும், கோர்ட்டில் மகளை பார்க்கவந்து தரையில் விழுந்து கிடப்பதாகட்டும், கோர்ட்டில், மகளோடு சைகை பாஷை பேசுவதாகட்டும், மனிதன் கிடைத்த பாலில் எல்லாம் சிக்சராக வெளுத்துக்கட்டுகிறார். இதோ, இன்னொரு தேசிய விருதும் ரெடி.

சில குழந்தைகளை பார்த்தவுடனே தூக்கி கொஞ்சலாம் போல் இருக்கும், அப்படி க்யூட்டான அந்த குழந்தையை பாரட்டிக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. “நீயெல்லாம் அப்பாவோடத்தானே இருக்க” என்று அமலாவிடம் கேட்கும்போது, க்ளாஸ். கிளைமாக்ஸ் காட்சியில் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் விக்ரமோடு, சைகை பாஷை பேசும் அந்த காட்சி, கண்ணீரை வரவழைத்தது. அதில் குழந்தையின் நடிப்பையும், விக்ரமின் நடிப்பையும், ஜீ.வி பிரகாஷின் இசையையும் சேர்த்து பார்க்கும்போது, கல்நெஞ்சக்காரனையும் கண்ணீர்விடவைக்கும். நெடுநாளுக்கு அப்புறம், மனதுவலிக்கும் க்ளைமாக்ஸ்.

முதலில் துடுக்குத்தனமாக வந்தாலும், பின்னர் கோர்ட்டில் ஆர்க்யூமெண்ட் செய்யும் அனுஷ்காவை பார்க்கும்போது, தயவுசெய்து “வேட்டைக்காரன்” பக்கம் போயிராதீங்க என்று கெஞ்ச தோன்றுகிறது. அவரோட் சேர்ந்து சந்தானம் செய்யும் லூட்டிகள் அதிரவைக்கிறது. “கோர்ட்டுக்கு கேசுதான் வரும், இந்த மாதிரி லூசெல்லாம வரும்” என்ற அக்மார்க் சந்தானம் டயலாக், எல்லோரையும் சிரிக்கவைக்கும். வழக்கம்போல நாசர் அமர்க்களப்படுத்துகிறார்.

இயக்குநர் விஜய், மதராசப்பட்டினத்திற்கு அப்புறம், குடும்பத்தோடு எல்லோரும் சென்று பார்த்துவிட்டு கண்கலங்குமாறு திரைக்கதை அமைத்து ஜெயித்திருக்கிறார். வாழ்த்துக்கள் இயக்குநருக்கு.. இதுபோன்ற பல டைரக்டர்கள் இருக்கும்போது, தமிழ்திரையுலகத்தை தேடி, வடநாடு என்ன, ஹாலிவுட்டே வரும்.

அருமையான பாடல்கள், பிண்ணனி இசை, ஜீ.வி பிரகாஷ். “ஆரோ, ஆரிராரோ” என்ற மெலடியும், கிளைமாக்ஸ் காட்சியின் பிண்ணனி இசையும், அற்புதம் 21 வயதுதான் இருக்கும்..நானெல்லாம் 21 வயதில்…சரி..விடுங்க..இவ்வளவு ப்ளஸ்களை கொட்டிச் சொன்னாலும், சில மைனஸ்களை சொல்லாவிட்டால், ஊருக்குள்ள மதிக்கமாட்டாய்ங்க என்று நினைத்தாலும், மனம்வரவில்லை ஆனாலும், விக்ரம் கட்டிப்பிடிக்கும்போது, அனுஷ்காவோடு அந்த ட்ரீம் சாங்க், மேக்கிங்க் நன்றாக இருந்தாலும், படத்திற்கு, திருஷ்டிப்பொட்டு.

கடைசியாக, தெய்வதிருமகள் – தமிழ்சினிமாவின் இன்னொரு அற்புதம்..