Thursday, 31 May, 2012

போயிட்டு வர்றேங்கபிளாக்கர், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள், சமூக பிரச்சனையை முன்நிறுத்துகிறதோ இல்லையோ, தனிமனிதனின், விருப்பு, வெறுப்புகளை, பதிவு செய்வதில், முண்ணனியில் இருக்கிறது..உதாராணமாக,ஒருவன் காலையில் எழுந்து ஒன்னுக்கு போவதை கூட , பேஸ்புக் ஸ்டேட்டஸில் "இன்று ஒன்னுக்கு போனேன்"
என்று எழுதமுடிகிறது..யாராவது கேள்விகேட்டால், "அடிங்க..என்னோட ஸ்டேட்டசுடா..நான் என்ன வேணுனாலும்
எழுதுவேன்.." என்று பதிலளிக்க சுதந்திரம் கிடைக்கிறது..


பிளாக்ஸ்பாட் இருந்தால், இன்னும் சவுகரிய்ம். ரொம்ப இன்னோவேட்டிவாக, "காலை கதிரவன் தன் செங்கதிர்களை வீசிக்கொண்டிருந்தவேளையில், கண்முழித்தேன்..மற்றும் ஒன்னுக்கு போனென்.." என்று எழுதினால்
"நல்ல பதிவு..", "தொடருங்கள்..", "கண்கலங்கவைத்துவிட்டிர்கள்" என்று கமெண்டு கிடைக்கும், இல்லையென்றால் நீங்களே கமெண்ட் போட்டு கொள்ளலாம். அதற்கு "நான் போன ஒன்னுக்கு" என்று கேட்சியாக தலைப்பு வைத்து விட்டால், கண்டிப்பாக ஒன்னுக்கு சூடாக இருக்கிறதோ இல்லையோ, உங்கள் பதிவு, சூடான பதிவுகளில்
இடம் பெற வாய்ப்பு உண்டு..


ஆனாலும், இதில் ஒரு சவுகர்யம் உண்டு.".ஊருக்கு வர்றேண்டி", என்று எழுதிய அதே வேளையில் "ஊருக்கு
போறேண்டி" என்று பதிவு எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது. சந்தோசம்..


இங்கு வந்து 3 வாரங்கள் ஆகிறது. ஒவ்வொரு வாரமும், வித்தியாசமான அனுபவங்கள். வந்த முதல் வாரத்தில் "ஓ..வாட் எ வெதர்..ஆல் பொல்யூசன்..கரெப்சன்..ட்ராஷ்.." என்று பந்தா காட்டினாலு, ஒருபயலும் கண்டுக்காததால், "சரி..சோத்தைப் போடுங்க..அப்படியே பொரியலை சைடுல வைச்சி, அப்பளத்தை, ஒரு அடி அடிக்கணும்" என்று நம்மூர் பாசத்தைக் காட்டும்போதுதான் "அட, பன்னாடை ராசா..இதுதான் நிரந்தரம்' என்று எண்ண வைக்கிறது. ஆனாலும், இந்த மூன்று வாரங்கள், என் வாழ்க்கையில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த எண்ணி தோற்று போயிருக்கிறது. நிறைய நண்பர்களை பார்க்க சந்தர்ப்பம்..பேச சந்தர்ப்பம்..பழக சந்தர்ப்பம்.,
என்று மூன்று வாரங்கள் போனதே தெரியவில்லை..ஏர்போட்டில் நான் வரும்போது, ஆரவாரமாக வரவேற்ற சொந்த பந்தங்கள்..இன்னும் அதே ஆராவரத்தோடு, ஆனால், உள்ளத்தில் சோகத்தோடு
வழியனுப்புகின்றன..சொந்த பந்தங்கள், பற்றி ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், ஏதாவது ஒன்றென்றால் துடிதுடித்து போய்விடுகிறார்கள்..எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்...


"4 பேனை போட்டால் கூட அடிச்சு தூள் கிளப்பும் வெயில்.."

"மோரை கொஞ்சம் டம்ளருல ஊத்தி அடிங்கப்பா" என்று பாசத்தோடு கூடிய வார்த்தைகள்

"பாரின் செண்டு வாங்கிட்டு வந்திருக்கீகளா" என்ற உரிமையுடன் கூறும் பக்கத்துவீட்டு நண்பன்

"ஆசையோடு என்னுடனே ஒட்டிக்கொண்ட பல்சர்..."

"இப்ப கிளம்பிருவோம் சார்" என்று 2 மணிநேரம் நின்ன இடத்திலேயே ஓட்டிய சென்னை-மதுரை ஆம்னி பஸ் டிரைவர்

"சார்..எந்த ஊரு" என்று ஆழம்பார்க்கும் கால்டாக்சி டிரைவர்

"பார்த்து போட்டுக்கொடு சாரே" என்று மீட்டருக்கு மேல் 50 ரூபாய் கேட்கும் ஆட்டோக்காரர்

"ஜஸ்ட் 80 ரூபிஸ் ஒன்லி" என்று சிரிக்காமல் வெஜ்பப்ஸூக்கு கேட்ட :சத்யம் சினிமாஸ் கேண்டின்காரர்

எப்போதும் கூலாகவே இருக்கும் மதுரை ஜிகர்தண்டா..

"பாருங்க மாமா..இவன் கிள்ளி கிள்ளி வைக்கிறான்.." போலிக்கோபம் காட்டும் சிறுமியான அக்கா மகள்..

முதன்முறையாக வயித்தை கலக்கிய "போவண்டோ" குளிர்பானம்..

பகுமானத்துக்கு கடித்த சென்னை கே.எப்.சி சிக்கன் பர்கர்..

"சாவுங்கடா" என்று சிம்பாளிக்காக சொல்லும், 10 மணிநேர பவர்கட்..

"பக்கத்துகடை அல்வா போலியானது..ஏமாந்துவிடாதிர்கள்..ஒரிஜினல் லாலா கடை அல்வா" என்று எழுதப்பட்ட திருநெல்வேலி பஸ்ஸடாண்ட் கடைப்பலகை..

"காலை 6 மணிக்கு கூட கிடைக்கும் சோழவந்தான் முக்குகடை டீ..வடை.."

"சில்லரைய குடுங்க சார்..." சில்லரையைப் பையைக் குலுக்கிகொண்டே சலித்துகொள்ளும் நடத்துனர்.
.
"அந்தக்காலத்துல நேதாஜி ராணுவத்துல" என்று ஆரம்பிக்கும் பக்கத்து வீட்டுப் பெரியவர்


கடைசியாக

"இன்னும் ஒரு நாள்தானப்பா" என்று கண்ணீரை காட்டமால் மனதுக்குள் அழும் அம்மா..

என்று எல்லாவற்றையும் மிஸ் பண்ணிவிட்டு கிளம்பும்போது, ஏதோ, இதயத்தில் இருந்து, எதையோ உருவிக்கொண்டு போவது போல் இருக்கிறது. குறிப்பாக சில நண்பர்களுக்கு நான் கொடுத்த, சங்கடங்கள், குழப்பங்கள் எல்லாவற்றுக்கு "சாரி" என்ற ஒருவாரத்தை போதாது..ஏனென்றால் சிலவார்த்தைகளை நிமிடத்தில் சொல்லிவிடலாம்..
"சாரி..தேங்க்யூ" போன்றது போல..ஆனால், அவற்றுக்கு காரணமான காரியங்கள் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு, ஆயிரம்முறை "சாரி" க்கள் சொன்னாலும் போதாது.. ஆனால் என்னால் முடிந்தது, இந்த "சாரி" மட்டும்தான்...
நண்பர்களை திரும்பவும் என்னால் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை.. ஆனால் உங்களோடு இருந்த
இந்த மூன்றுவாரங்களும், வாழ்நாளில், இன்னமும் என் மனதுக்குள்ளே பசுமையாய்...


"போயிட்டு வர்றேங்க..."

Wednesday, 30 May, 2012

காதலில் சொதப்புவது எப்படி.."மதுமிதா..." இந்தப் பெயரை சொல்லும்போதே அவனுக்கு ஜிலீரென்றிருந்தது. மீண்டும் ஒருமுறை அந்தப்பெயரைச் சொல்லிப் பார்த்தான்.
இதோடு, 48 முறை சொல்லியிருக்கிறான் இந்தப்பெயரை, இன்று மட்டும். இன்னும் சொல்லுவான்...100 தடவை சொன்னாலும் அலுக்கவில்லை.
தன்னுடய பெயர் "ரமேஷை" கூட அவன் இவ்வளவு முறை சொல்லியதில்லை..


ஒரு மாதத்திற்கு முன்புவரை, எந்தப் பெண்ணோ, அல்லது பெயரோ, அவனை ஈர்த்ததில்லை. ஆனால், எல்லாம் அவளை பார்க்கும்வரைதான்.
அவளை, ரயில்வே ஸ்டேஷனில்தானின் முதலில் பார்த்தான்...இல்லை விழுங்கினான்...அவள் அந்த பக்கம் வரும்போது, மனது
படபடத்தது.."கடவுளே..இவள் என் கம்பார்ட்மெண்டுக்கு மட்டும் வந்துவிட்டால்..ஊருக்கு வந்து நேர்த்தி செலுத்துகிறேன்.."


ஆனால், பழம் நழுவி, பீரில் விழுந்தார் போல் அவனை நோக்கியே வந்தாள்...

"எக்.ஸ்.க்யூஸ்..மீ"

அவனுக்கு நா ஓட்டிக்கொண்டது..என்ன பேசுவதென்று தெரியவில்லை...சொல்லப்போகும் இரண்டு எழுத்துக்களையே முழுங்கினான்..

"எ...ஸ்..."

"இதுதானே எஸ் 6 கம்பார்ட்மெண்ட்"

இல்லையென்றாலும், அவன் ஆமாம்தான் சொல்லியிருந்தான்..

"யா..யா..."

"தேங்க்ஸ்..." சிரித்தாள்..ஆஹா..இன்று தேவதை என் அருகிலா..அதுவும், இவ்வளவு அருகிலா..இன்று கண்டிப்பாக தூங்கக்கூடாது..
என்று முடிவெடுத்தான்...எப்படி ஆரம்பிக்கலாம்..


"எக்.ஸ்.கியூஸ்..மி..ஐ. ஆம் ரமேஷ்...மே ஐ நோ யுவர் குட் நேம் ப்ளீஸ்.."
ம்..ஹீம்..

"ஹே..ஹவ் ஆர்..யூ....."

ம்..இன்னும் இன்னோவேட்டிவாக இருக்கவேண்டுமே...

"ப்ச்..எப்படிங்க..இவ்வளவு அழகா இருக்கீங்க..."

வாவ்..இதையே சொல்லிவிட்லாம்..தீர்மானத்துடன் அவளை நோக்கினான்..இதயம் பட்டென்று வெடித்தது..அவளை காணவில்லை..
ஓ..மை..காட்..எங்கே அவள்..மெல்லியதாக குரட்டைச் சத்தம் கேட்கவே, குழப்பத்துடன் மேல் பெர்த்தைப் பார்க்க...அவள் தான்
இழுத்திப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டு இருக்கிறாள்..வெறுத்துப் போய்விட்டது..சரவணபவணில், அம்மாவாசை
இலை சாப்பாடு போட்டு, படாரென்று "சாரி..சார்..நோ..மீல்ஸ்..ஒன்லி பிட்சா" என்று சொன்னால் எப்படி இருக்கும்.

அனைத்து கனவுகளும் ஒரு நிமிஷத்தில் நொறுங்கிப் போயின.. அவள் தூங்குவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்..ஏதாவது
கொசு கடித்தாலாவது, அவள் முழிப்பாளா என்று ஏங்கினான்..அன்று பார்த்து பாழாய்ப்போன ஒரு கொசு கூட காணவில்லை..
ஏதாவது மேட் வாங்கி வைக்காலாமோ என்று யோசித்தான்..இப்போதெல்லாம், மேட்டுகளை தேடித்தானே கொசுக்கள் வருகின்றன..


வெறுத்துப்போய் தூங்கியவன், காலையில் விழித்துப் பார்த்தபோது, அவளை காணவில்லை..நடுவிலேயே எங்கயோ இறங்கியிருந்தாள்..
முதன்முதலாக, அவன் மேலே அவனுக்கே வெறுப்பு வந்தது.."சே..மிஸ் பண்ணிட்டயேடா..."


இரண்டு நாட்களாக, அவள் நினைவாக இருக்க..மூன்று நாட்களில், வேலைப் பளு காரணமாக மறந்து போனான்..ஆனால் "வாழ்க்கை
ஒரு வட்டம்டா.." என்று இளைய தலைவலி சொன்னது போல, அவனுக்கு அவள் காட்சி கொடுத்தாள்., அன்று..அதுவும், தினமும்
அவன் ஏறும் பஸ்ஸ்டாப்பில்.."வாட்..இவள் நம்ம ஏரியாவா..இதுநாள் வரை எப்படி பார்க்கவில்லை..."


ஆனால், இந்தமுறை அவளை மிஸ் பண்ண அவன் விரும்பவில்லை..சிறிது சிறிதாக அவளருகில் சென்றவன்..

"எக்..ஸ்..கியூஸ்,,மி.."

சட்டென்று காதில் உள்ள ஓயர் போனை துண்டித்தாள்..தேவதைக்கும் கூட பாட்டு பிடிக்கும்போல..

"எஸ்.."

"ஏங்க...என்னை ஞாபகம் இருக்கா..அன்னைக்கு டிரெயினுல பார்த்தோமே..நீங்க கூட.."

அவள் சற்று குழப்பமானாள்..

ஐயய்யோ..தெரியாது என்று சொல்லிவிடுவாளோ..

"ஓ..எஸ்..நௌ ஐ ரிமெம்பர் யூ..ஹவ் ர் யூ.." என்று கையை நீட்டினாள்..
வாவ்,,அதுக்குள் கையா..கையை கர்ச்சிப் வைத்து துடைத்துக்கொண்டான்..
கையை நீட்ட, முதன் முதலாக ஒரு பெண்ணின் கை..முதல் ஸ்பரிசம்..ஆயிரம் முதன் மழை அவனை நனைத்ததுபோல்
இருந்தது..அன்று அவன் கையை கழுவவேயில்லை..சாப்பிடும் போது கூட ஸ்பூன்தான்..கையை அடிக்கடி மோந்து பார்த்துக்
கொண்டான்


அன்றிலிருந்து..அவனுக்கு அப்ரைசலே, அவளிடம், பேசுவதுதான்..மெதுமெதுவாக அவளிடம் பேச ஆரம்பிக்க..அவளும், அவனிடம் சகஜமாக நெருங்கினாள்..அதுவும் ஒரு வாரத்துக்குள்..வாவ்..
ஒரு வாரத்தில் ஒரு பெண்ணை ஈர்த்துவிட்டேனா..அதுவும்..தேவதையை..நம்பாமல் இருக்கமுடியவில்லை..வானமும் வசப்படுமோ..
அவளும் என்னை விரும்புகிறாளோ..காதல் முரளி மாதிரி இருக்க விரும்பவில்லை..கண்டிப்பாக சொலலியே ஆக வேண்டும்..

சென்னையிலேயே மிகவும் காஸ்ட்லியான காபி ஷாப்பிற்கு கூட்டி செல்லவேண்டும்..அங்கே வைத்து நேரம் பார்த்து சொல்லவேண்டும்..
"ஐ.லவ்.யூ.."..சே..எடுத்தவுடனே சொல்லக்கூடாது..ஏதாவது கதை பேசிக்கொண்டே..பட்டென்று சொல்லிவிடவேண்டும்..நிறைய முறை ப்ராக்டிஸ் செய்து,ஒரு முறையை தேர்ந்தெடுத்தான்..அவளிடம் அரை மணிநேரம் கேட்டு இருந்தான், இதோ, தேவதை, அவனருகில், காபி கோப்பையுடன்..


"ஹே..மதுமிதா.."

"சொல்லுப்பா.."

"ஒன்னு சொல்லணும்னு நினைச்சேன்..சொல்லலாமா..."
பீப்..பீப்..அவள் செல்போன், மெசெஜ் ரிங்க்டோன் கேட்கவே..

"ஒன்மினிட்யா.." என்று, மெசெஜ் பண்ணியவள்..நிமிர 5 நிமிடங்கள் ஆனது..

"ம்..சாரிப்பா..ஒன் ஆவ் மை பிரண்ட்.நேம் இஸ் தினேஷ்...அவனுக்கு வேற வேலையே இல்லை..நிமிஷத்துக்கு ஒரு மெசெஜ் பண்ணுவான்...ரிப்ளை பண்ணலைனா கத்துவான்.....ப்ச்..சரி..நீ சொல்லுப்பா..."

"அது..வந்து..என்னைப் பத்தி என்னை நினைக்குற.."

"ஹே..என்ன இது புது கேள்வி..யூ..ர்..மை..டியர்..."

இப்போது, ரிங்க்டோன்...திரும்பவும் அவள் போனில் இருந்துதான்..

"கம்..ஆன்....ஒன் மினிட்யா"...போனை எடுத்தவள் முகம் மாறியது..

"ஹே..ராகுல்..வாட் இஸ்..திஸ்..கம் ஆன் யா..ஐ காண்ட் கம் நௌ..ஐ..வில் மீட் யூ டுமாரோ..பீளிஸ்...அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கையா..ஆபிசுல
எவ்வளவு வேலை தெரியுமா..ஹே..ஷல் வீ மீட் இன் வீக் எண்ட்..வாட்..கம்..ஆன்..டோண்ட் ஸ்கோல்ட் மீ..ஓகே..டியர்..சீ..யூ.."

போனை மடக்கியவள் நிமிர்ந்து பார்த்தாள்..

"சாரியா..எகெய்ன் அனதர் கால்..இவனுக்கும் வேற வேலையே இல்லை...பத்து நிமிசத்துக்கு ஒரு கால் பண்ணிருவான்..பட் ஓகெ....நீ ஏதோ
சொல்ல வந்தியே..வாட் இஸ் தேட்.."


இப்போது, அவனுக்கு சொல்லவந்தது மறந்தே விட்டது..நான் என்ன சொல்ல வந்தேன்..அவளிடமே கேட்டான்..

"நான் கடைசியா என்ன சொன்னேன்.."

"ஓ..ஐ..பர்காட்..என்ன சொல்ல வந்து.."

"அது வந்து..ஐ...ஐ...."

எச்சில் முழுங்கினான்..

திரும்பவும், அவளுக்கு ரிங்க்டோன்..

"ஹே...ரியலி சாரியா..திஸ் ஸ் மை க்ரேட் பிரண்ட்..ஹெர் நேம் இஸ் திவ்யா..ஐ..நீட் டூ அட்டெண்ட்.."

"ஹல்ல்லோ திவ்யா..எங்கடி இருக்க..நான் தான் சொன்னேன்ல..ஐ..ஆம் இன் மீட்டிங்க் வித் ஒன் ஆப் மை ப்ரண்ட்..."

இதற்கு மேல் அவனால் பொறுக்கமுடியவில்லை...அப்படியே எழுந்து நின்றவன்..

"மதுமிதா.."

போன் பேசிக்கொண்டே நிமிர்ந்தவள்,

"ஒன் மினிட்யா.." என்றாள்....

"நோ மதுமிதா.யூ டேக் யுவர் ஓன் டைம்..பட்..நான் சொல்ல வந்ததை சொல்லிர்றேன்..ஐ தாட், ஐ லவ் யூ..பட் நாட் நௌ..
உன்னை என்ன மாதிரி லவ் பண்ணினேன் தெரியுமா..உன்மேல பைத்தியாமா இருந்தேன்..ப்ச்..டெய்லி, உன் முகத்தைப்
பார்க்கலைனா, என்னால தூக்கம் வராது..ஆனால்....உங்கிட்ட அரை மணிநேரம் தானே கேட்டேன்..எனக்காக ஒரு
அரை மணி உன்னால ஒதுக்க முடியல..அதுக்குள்ள..4 மெசேஜ்ஜூ..நாப்பத்தெட்டு காலு..உன்னோட வாழ்க்கை முழுவதுமா
இருக்குணும்னு ஆசைப்பட்டேன்..ஆனால், உன்னால ஒரு அரை மணிநேரம் கூட எனக்காக ஒதுக்க முடியலைலே...
லவ்வரா கூட வேணாம்..அட்லீஸ்ட் பிரண்டா கூடவாவது, ஒரு அரை மணிநேரம்...அப்புறம் எப்படி நம்ம வாழ்நாள் பூரா..
சாரி..மதுமிதா..ஐ.ஹேட்..யூ.."


சொல்லிக்கொண்டே அவள் முகத்தைகூட பார்க்காமல் நடந்து சென்றான்...தூரமாய் சென்றவள், அவள் பார்வையில்
புள்ளியாய் மறைந்தான்..


மூன்று மெசெஜ் பீப்கள் அவள் மொபைல் போனுக்கு வர ஓபன் பண்ணி பார்த்தாள்..மெசெஜ்கள், ராகுல், தினேஷ்..திவ்யா" விடமிருந்து..
அனைத்தும் ஒரே செய்தியையே சொல்லின..


"ஹே..என்னய்யா..உன் ஆளு ரமேஷ் ஒரு வழியா ப்ரபோஸ் பண்ணிட்டானா...இல்லாட்டி , தயங்காம நீயே ப்ரபோஸ் பண்ணிடு.."

Monday, 28 May, 2012

என் ஓட்டு இன்வெர்டருக்கே...நண்பர் ஒருவரை நீண்டகாலம் கழித்து, நேற்று சந்தித்தேன். நிறைய பேசிவிட்டு அரசியல் பக்கம் வந்தபோது, என்னிடம் கேட்டார்.
.
"என்ன..போன தேர்தலுல, திமுகவுக்கு ஓட்டு போட்டிங்களா..அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டீங்களா.."


நான் சொன்னேன்..
"இதுவரைக்கு யாருக்கு வேணுனாலும் ஓட்டுப்போட்டேன். இனிமேல் என்னுடைய ஓட்டு இன்வெர்டருக்கே.."

ஆமாம். உண்மையாகத்தான். ஒரு பேப்பரில் "இன்வெர்ட்டர்" என்று எழுதிவைத்து, ஓட்டுச்சாவடியில் வைத்துவிட்டு வந்துவிடப்
போகிறேன். மதியான நேரத்துல வெயிலுல அலைஞ்சுட்டு, வெறுத்துப்போய், வீட்டுக்குள்ள வந்து பேன் சுவிட்சைப் போடுறப்ப,
"சாரிப்பா..கரண்டு இல்லை" அப்படின்னு யாராவது சொன்னா, ஒரு கொலைவெறி வருமே..அந்தக் கொலைவெறி உங்களுக்கு
வரவில்லையென்றால், நீங்கள் தமிழ்நாட்டில் இல்லையென்று அர்த்தம்.


ஆனால் வந்தது பாருங்கண்ணே, தெய்வம் மாதிரி, இன்வெர்ட்டர்..கை எடுத்து கும்புடணும்னே...3 மின்விசிறிய ஓட்டி,
என் நெஞ்சில வியர்வை..சாரி..இது..பாலை வார்க்குதுண்ணே..ஆனா, அதுக்கும் வைச்சாய்ங்க பாருங்க ஆப்பு...
2 மணி நேரம் கழிச்சு "பீப்..பீப்.."ன்னு ஒரு சவுண்டு..கேட்டா, ஆப் ஆக போகுதாம்..


உசிரே போச்சுண்ணே...ஆஹா..இன்னும் 2 மணிநேரம் இருக்கே(4 மணி நேரம் மதுரையில தொடர்ச்சியா கரண்டு கட்டு)
அப்புறம் நைட்டு ஒருவாட்டி, காலையில ஒருவாட்டி(மாத்திரை சாப்பிடுற பீலிங்க் வருதுல்ல). அந்த நாலு மணிநேரத்துல
2 மணி நேரம் இன்வெர்ட்டரு..அப்புறம் "பீப்..ப்ப்பீப்" ஒரு சத்தம்.. எங்கம்மா..பதறிப் போய் ஓடிவந்து


"அடே..ஒரு பேனை ஆப் பண்ணுடா" ங்கறாங்க..சரி..ஒரு பேனுதானேன்னு ஆப் பண்ணிட்டேன்...இரண்டு பேனை வைச்சிக்கிட்டு
காலை நீட்டி, விட்டத்தைப் பார்த்து தூங்குனா, என்னா சுகம்..என்னா காத்தோட்டம்..பத்து நிமிசத்துல காதுக்குள்ள திரும்பவும்
"பீப்..பீப்" ன்னு சத்தம்..திரும்பவும் அம்மா ஓடி வந்து "அடே..இன்னொரு பேனை ஆப் பண்ணுடாங்குறாங்க.."


சரி..ஒரு பேனுதான் இருக்கேன்னு அதையும் ஆப் பண்ணிட்டு, ஒரு பேனுல விட்டத்தைப் பார்த்தா, 15 நிமிசத்துல வருதுன்னே
இன்னொரு பீப்பு..ஹன்சிகா, மோட்வானி அப்பதான் என் கனவுல வந்தாய்ங்க..சரி.பயபுள்ளைக கூட ரெண்டு வார்த்தை
பேசலாம்னு நினைக்கிறப்ப, என்னா டிஸ்டர்ப்பு..


திரும்பவும் அம்மா ஓடிவர "யம்மா..இருக்குறது ஒரே பேனு..அதையும் ஆப் பண்ணுறதுக்கும், கரண்டு போறதுக்கும்,
ஒரு வித்தியாசம் இல்லைங்கம்மா..." எங்கம்மா சும்மா இருக்காம, "அப்ப, இன்வெர்ர்டர ஆப் பண்ணிடவா" ங்குறாங்க....
"யம்மா...அதுக்கு என்னைய அப்படியே கட்டிலோடு தூக்கிட்டு போய் புதைச்சிருங்கம்மா" ன்னு கதறுரேன்...


என்னா இருந்தாலும், ஒரு 3 மணிநேரத்துக்கு கண்முன்னாடி கடவுளா தெரிஞ்சாண்ணே, இந்த "இன்வெர்ர்ட்டர்"...காத்து
குடுத்த தெய்வம்ணே..மின்சார வாரியத்துக்கு என்னோட வேண்டுகோள் என்னன்னா


"அண்ணே..மக்கள் கஷ்டப்படும்ணுதானே, இந்த கரண்ட ஆப் பண்ணுறீங்க..பாருங்கண்ணே..இந்த பயபுள்ளைங்க. இன்வெர்ர்டர
வைச்சு தப்பிக்க பார்க்குறாய்ங்க....கரண்டு கட்டு ஆன 10 மணிநேரம் போக, மீதி 14 மணிநேரம் கரண்டு இருக்குறதுனால
தான, இந்த பயபுள்ளைங்க, இன்வெர்ர்ட்டரை சார்ஜ் ஏத்துறாய்ங்க..அந்த 14 மணிநேரமும் கரண்டை புடுங்கி விட்டுறுங்கண்ணே..
பயபுள்ளைங்க, புழுக்கத்துலயே சாவட்டும்..."

Sunday, 27 May, 2012

சென்னை என்னை போடா வெண்ணை என்றது..


"இந்த என்.ஆர்.ய்ங்க கொசுத்தொல்லை தாங்கமுடியலைப்பா என்று அலுத்துக்கொண்டாலும் சரி, இல்லைன்னா, கொலைவெறியோடு என்னைத் தாக்க வந்தாலும் சரி..இதை நான் சொல்லியே ஆகணும். சென்னை மண்ணில் கால் வைத்ததும், நம் மண்ணின் மனத்தை
நுகரவேண்டும் என்று மூக்கம்புட்டு ஆசையோடு, விமானத்தில் இறங்கியவுடன், அன்னைத் தெரசா மாதிரி, இந்த மண்ணை குனிந்து ஆசையோடு முத்தமிட எண்ணினேன்.


அப்படி குனிந்து முத்தமிட முயன்றபோது, மண்ணோடு, லைட்டா சாக்கடை மணமும் சேர்ந்து வந்தது.."ஆஹா..பெத்த பேர்டு கப்பா இருக்கே, என்று நினைத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தால், பேர்டு கப்பு, மண்ணில் இல்லை..பக்கத்தில் நின்று கொண்டிருந்த
நம்ம ஊரு ஒரு ரூல்ஸ் ராமானுஜத்திடமிருந்து.."ஏர்லைன்ஸுல, பணம் கொள்ளையா வாங்குறா..ஆனா, டாய்லெட்டுல சுத்தம் இல்லையே என்ன ஏர்லைன்ஸ்..கேஸ் போட்டாத்தான் இவாளெல்லாம் சரியாவா.." என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்தார்..ஆஹா..கோர்ட்டுல கேஸ் போடுறேளோ இல்லையா..இங்க நல்லா போட்டீங்க வோய்..." என்று வாய்விட்டு கதறமுடியாமல் துடித்துக்கொண்டிருந்தேன்...


வாழ்க்கையில் இவ்வளவுநாள் சாப்பிடாமல் இருந்ததில்லை...2 நாள் விமானத்தில் கொடுத்த "வறுத்த சோறு" மற்றும் "பிரியாணி"யைச் சாப்பிட பயந்து, சென்னை ஏர்போர்ட்டில் இறங்கி செக்யூரிட்டி செக் முடிந்து, ஏர்லைன்ஸ் டிக்கெட் வாங்கிவிட்டு, சரி, டீ, காபி
ஏதாவது வாங்கலாம் என்று, ஏர்போட்டில் உள்ள கடைக்கு சென்றால், முகமுடி போடாமல் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.


"அண்ணே..டீ ஒன்னு , அப்படியே ஒரு பப்ஸ் ஒன்னு கொடுங்க..."

"இந்தாங்க.."

"எவ்வளவு..."

"140"

எனக்கு லைட்டா டவுட்டு வந்தது..

"இல்ல..ஒரு டி,, ஒரு பப்ஸ்.."

என்னை ஒரு புழு மாதிரி பார்த்தார் கடைக்காரர்..

"அதுதாங்க 140"

"எப்படிங்க.."

"காபி 60 ரூ, பப்ஸ் 80.."

5 ரூபாய்க்கு முக்குக்க்டை டீ சாப்பிடும் எனக்கு சற்று பயமாக இருந்தது...

இந்தியப்பொருளாதாரம், இந்தியாவில் தலை நிமிர்ந்திருக்கிறதோ இல்லையோ, ஏர்போட்டுகளில், தலைநிமிர்ந்து குதியாட்டம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. "சென்னை ஏர்போட்டை உலகத்தரம் உயர்த்திருக்காய்ங்க" என்று பக்கத்து சீட்டு ஆசாமி சொன்னதை நினைவுகூர்ந்தேன். அதே உலகத்தரம் எப்படி இருக்கிறது என்று சற்று ஏர்போட்டுகளில் உள்ள டாய்லெட்டிக்கு சென்று பார்த்தால்,
தெரியும்..உலகத்தரம், பல்லு விளக்கி, பூக்சூட்டி கொண்டிருக்கும் இடம் சென்னை ஏர்போட்டில் உள்ள டாய்லெட்டுதான்.


அட..அட..அட..அக்மார்க் உலகத்தரம்டோய்..ஏர்ப்போட்டில் உள்ள டாய்லெட்டோடு ஒப்பிட்டால், மதுரைப்பக்கம் உள்ள மூத்திரச்சந்து, உலகத்த்ரம்ணே..அதுலயும், நம்ம ஊருக்காரய்ங்களுக்கு, ஒன்னுக்கடிக்கறப்ப, "எச்சி" துப்புறதுல அம்புட்டு சுகம்..தப்பித்தவறி,
டூ பாத்ரூம் போகும் இடத்துக்கு நுழைந்து விட்டு, உசிரோடு நீங்கள் திரும்பி விட்டால், இன்னும் நீங்கள் 100 வயது உயிரோடு வாழப்போகிறீர்கள்
என்று அர்த்தம்..டாய்லெட் சிங்க் முழுவதும்...ஆய்...


பக்கத்தில் "டெய்லி செக் அப் " என்று ஒரு சார்ட் வைத்து, இன்றைய நாளுக்கு "செக்" என்று ஒரு டிக் மார்க் போடப்பட்டிருந்தது.

இங்கு எச்சில் துப்பாதிர்கள் என்று எழுதிவைத்திருந்த எழுத்தின் மேலே, ஒரு கனவான், பான்பராக்கை போட்டு, புழிச்சுன்னு எச்சித்துப்பி வைத்து உலகத்தரத்தை இன்னும் ஸ்டாராங்க் ஆக்கியிருந்தார். பாவம் பயபுள்ளைக்கு தமிழ் தெரியாது போல, ஆல் லாங்குவேஜ்ஜுலயும் எழுதியிருக்கலாம் அந்தப்பக்கம் சென்றால், ஒரு பின்நவீனத்துவ இளைஞர், பெண்ணின் படம் வரைந்து பாகம் குறித்து கிறிக்கி இருந்திருந்தார். அவர் உயிரியல்
பாடத்தில் கண்டிப்பாக 100 மார்க் வாங்கியிருக்க கூடும். ஆனாலும் அவர், சில பாகங்களை, சென்னை பாஷையில்" அம்புக்குறியிட்டு விளக்கியபோது, அவருடைய இலக்கியத்த்ரத்தை வியந்தேன்..இதுபோன்ற இளைஞர்கள்தான், நித்தியானந்தாவுக்கு..அய்யோ..சாரி..இது
விவேகானந்தாவுக்கு தேவை...


(இன்னும் இருக்குடி டார்ச்சர்)

(என்னடா, இது, ஏதோ வேறு கிரகத்தில் இருந்து வந்தார் போல், பெரிய பருப்பு மாதிரி எழுதியிருக்கானே என்று நினைத்தால் "சாரி பிரதர்.." நான் இன்னும் மதுரைக்காரன்தான்..வெளிநாடு செல்லாவிட்டாலும், இதுபோன்ற அக்கிரமங்களை தாண்டி வந்த போது,கண்டிப்பாக பதிவு செய்திருக்கிறேன் என்பது என்னுடைய பழைய பதிவுகளை பார்த்தால் தெரியும். இனிமேல் இங்குதான் இருக்கப்போகிறேன்..இன்னும் ஒரு வருடம் கழித்து கோடம்பாக்கம் பஸ்ஸடாண்ட் சென்றாலும், இதுபோன்று பார்த்தால் கண்டிப்பாக
எழுதுவேன். ஏர்போர்ட் அதிகாரி யாராவது இந்தப் பதிவை படித்து, ஏதாவது நடக்குமா என்ற சின்ன நப்பாசைதான், இந்தப் பதிவுக்கு காரணம்..கேபிள் சங்கர் பாணியில் "கேட்டால் கிடைக்கும்" என்று இதையெல்லாம், தட்டிக்கேட்க ஆசைதான்..ஆனா வாயைச் சேத்து
அடிச்சுப்புட்டாய்ங்கன்னா, அப்புறம் "கே...ட்...டால்ல்...கி..டை...க்..கும்ம்.... என்று கோணல் மானாலக சொல்ல ஆசையில்லே..அதனால் இதோ, எழுதினால் கிடைக்கும்...(யாராவது கையை ஒடைச்சிப்புட்டுராதிங்கப்பா....)

Saturday, 12 May, 2012

“ஊருக்கு வர்றோம்டி…”
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது, இரவு(அல்லது அதிகாலை??) 12:30 மணி..உலகத்தில் தூக்கம் வரக்கூடாது கடவுளே, என்று வேண்டும் ஒரு மனிதனை நீங்கள் பார்த்ததுண்டா..இதோ நான்தான்ஆனால், ஒரு சின்ன திருத்தம். இன்று இரவு மட்டும். நான் காலை 3 மணிவரை முழித்திருக்க வேண்டும். ஏனென்றால், என் கனவுகளுக்கு, அந்த நேரத்தில்தான் இறக்கை முளைக்கப் போகிறது..

நகைப்பதற்கில்லை. உண்மையிலே தான். காலை 3 மணிக்கு கிளம்பினால் தான், ஊருக்கு வரும் பிளைட்டை பிடிக்க முடியும்..
என்னது, எந்த பிளைட்டா..அட..விஷயமே தெரியாதா..ஊருக்கு வர்றோமுல்ல..நாளைக்கு 7 மணிக்கு கிளம்பும் பிளைட், சில பல ஊர்களில் நின்றுவிட்டு. கடைசியாக மதுரை மண்ணை முத்தமிடும்போது, வருமே ஒரு வாசம்..அந்த வாசத்தை நுகர்வதற்கு, இன்னும் 40 மணிநேரம் காத்திருக்கவேண்டும்

ராசா..எல்லாத்தையும் எடுத்து வைச்சிட்டியா..”
மச்சி..ஊருக்கா..”
பையனுக்கு மருந்து மாத்திரை எல்லாம் எடுத்து வைச்சியா..”
பேக்கிங்க் எல்லாம் முடிஞ்சிருச்சா..”
பர்சேசிங்க் எல்லாம் ஓவரா..”
டே..மறக்காம அந்த சாக்லேட்டை எடுத்துக்க..”
மறக்காம கால் பண்ணிருங்க..”
இதை அப்படியே எங்க வீட்டுல கொடுத்துற முடியுமா..”
அப்படியே நான் சொல்லுற சாமானெல்லாம் வாங்கியாந்துருங்க..”
லாக் எல்லாம் கரெக்டா வாங்கிருங்க…”
பிளைட் கிளம்பும்போது காது வலிக்கும்..காட்டன் எடுத்துக்குங்க..”

யப்பா..எத்தனை, எத்தனை ஆலோசனைகள்..அக்கறைகள்..இவையெல்லாம், அரை மணிக்கொருதரம் கேட்கும்போது, எனக்கு அலுக்கவில்லை. இன்னும் கேட்க வேண்டும்போல அவ்வளவு ஆர்வம். எல்லாம், என் மண்ணைப் பார்ப்பதற்கு..எவ்வளவு எண்ண ஓட்டங்கள்

அம்மா, அப்பா, இப்பதான் பையனைப் பார்க்கப்போறாங்க..எப்படி இருக்கும்..”
பையனுக்கு நம்ம ஊரு புதுசே..எப்படி இருப்பான்..”
பஸ்சுல போகணுமா..டிரெயினுல போகணுமா..”
ஏர்போட்டுக்கு எத்தனை பேரு வருவாய்ங்க..”
“அய்யய்யோ கரெண்டு ரொம்ப கட்டாகுதாமே..பேன் ஓடுமா..”
“பைக்குல போவோமா..டாக்சியா..”
“துபாயில சரவணபவன் சாப்பாடு கிடைக்குமா..”
“துபாய் சுத்திப்பார்க்கலாமா வேண்டாமா..”
“அப்பா..அம்மா..எப்படி ரியாக்ட் செய்வாங்க..அழுவாங்களா..என்னால தாங்க முடியாதே…

அத்தனையும், இன்னும் என் மனக்கண் முன்னாலே வந்து செல்லுகின்றன..எல்லாவற்றிற்கும், ஒரே காரணம்..என் மண்வாசம்..இதோ, இன்னும் 40 மணிநேரம்..வெயிலும், புழுதியும் அடித்தாலும், என் மண், என்னுடைய மண்தான்..என்னதான், பிட்சா, பர்கர் சாப்பிட்டாலும், அம்மா பிசைஞ்சு கொடுத்த, ரசம்சோறுக்கு வருமா..என்னதான், காரிலேயே, இங்கு சுத்தினாலும்,, வியர்வை வழிய டவுன் பஸ்ஸுல தொங்கிக்கொண்டு செல்லும் சுகம் கிடைக்குமா..என்னதான். டாலர் வாங்கினாலும், அம்மா சுருக்குப்பையில் இருந்து எடுத்து தந்த , அழுக்கான 5 ரூபாய்க்கு வருமா…என்னதான் சத்தம் வருமோ என்று பயந்துகொண்டு ஏ.சி தியேட்டரில் உக்கார்ந்தாலும், கீத்துக்கொட்டாயில், மண்ணைக்குவித்து, உக்கார்ந்து பார்க்கும் சுகம் வருமா.. என்னதான் புரோஷன் சப்பாத்தி சாப்பிட்டாலும், முனியாண்டி விலாஸ் கோழிக்குழம்பு வருமா…

ஆங்க்..மறந்துட்டேன்…ஊருக்குள்ள இருக்குற பெரிய, பெரிய ரவுடிகளுக்கெல்லாம் ஒன்னு சொல்லுறேன்..கேட்டுக்கங்க…

“ஊருக்கு வர்றோம்டி…”