Monday, 18 June, 2012

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானால் நாட்டுக்கு நல்லது

ரோட்டுப் பக்கம் சென்று மனிதர்களையும், அவர்கள் செய்யும் வேலைகளையும் பார்க்கும்போது, “எவ்வளவு கஷ்டம்டாஎன்று எண்ணியதுண்டு. எந்த வேலையும், எளிதான வேலையில்லை. உடலுக்கும், மனதுக்கும் எவ்வளவு அயர்ச்சி. ஆனால், வேலையே இல்லாமல், சம்பளம். தங்குவதற்கு ஒரு மாளிகை. கை தட்டினால், ஓடி வர பணியாட்கள். மாதத்திற்கு ஒருமுறை நினைத்தால் உலக டூர். கண்கொத்தி பாம்பாய், பின்னாலே, பாதுகாப்புக்கு வரும் கருப்புப்படை பூனைகள்..கேட்கவே, ஆவலாய் இருக்கிறதல்லவா..ஆனால், கனவில் நினைத்தாலும், இந்த வேலைக்கு நாமெல்லாம் செலக்ட் ஆக மாட்டோம்..அப்படி என்ன வேலை என்று கேட்கிறீர்களா. நம்ம நாட்டின் ஜனாதிபதிதான்.

நான் கேள்விப்பட்டவரை நம்மநாட்டு ஜனாதிபதி, நாட்டுமக்களுக்கு உருப்படியாய் எதுவும் செய்ததாய் நினைவில்லை. முகத்தில் ரெடிமேட் சிரிப்போடு, அயல்நாட்டு பிரதமர்கள், அதிபர்கள் வந்தால் கைகுலுக்குவது, அல்லது, அவர்கள் நாட்டுக்குச் சென்று, குலுக்கிய கையை இன்னொரு முறை குலுக்குவது, தேசிய விருது கொடுத்துவிட்டு,போட்டோவுக்கு போஸ் கொடுப்பது. பதவியேற்பு கொடுப்பது, என்று. எந்த ஜனாதிபதியாவது, நாட்டில் பெட்ரோல் விலை ஏறினால் குரல் கொடுத்திருக்கிறார்களா..எந்த ஜனாதிபதியாவது, விலைவாசி ஏற்றத்தை கண்டித்து, பிரதமரிடம் ஒரு வார்த்தை பேசியிருக்கிறார்களா, எந்த ஜனாதிபதியாவது, தினமும் அல்லல்படும் ஏழைமக்களின் துயர்துடைக்க, ஒரு துளி நேரம் ஒதுக்கியிருப்பார்களா..

இப்படி ஒன்னுமே செய்யாத, அல்லது செய்ய இயலாத, இந்தப் பதவிக்கு, அப்துல் கலாம் வந்தால் என்ன, ஆம்ஸ்ட்ராங்க் வந்தால் என்னஏதாவது மாற்றம் நடக்கப்போகிறதா..வழக்கம்போல நடக்கும், விலையேற்றங்கள், விலைவாசி கொடுமைகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், பாலியல் கொடுமைகள். குண்டுவெடிப்புக்கள், பட்டினி சாவுகள், என, ஒருதுளி மாற்றம் ஏற்படுத்தாத, இந்தப் பதவிக்கு, ஏண்ணே இம்புட்டு போட்டி..

ஆனாலும், இந்தப் பதவிக்கு என்னுடைய சாய்ஸ் பிரணாப் முகர்ஜிதான். ஏன் தெரியுமா..மேலுள்ள படத்தை பாருங்கள்..என்ன ஒரு அருமையான தூக்கம்..இதற்குமேல் இந்தப் பதவிக்கு என்ன தகுதிவேண்டும். அதுவுமில்லால், பெட்ரோல் விலையேத்தி, அனைவரின் வயித்திலும், அமிலத்தை பரவச்செய்த பிரணாப் முகர்ஜியை, நிதியமைச்சர் பதவியிலிருந்து தூக்க, இதுதான் நல்ல சான்ஸ்.. அதற்குத்தான் சொல்லுகிறேன்,..அவரை ஜனாதிபதியாக்கினால் நாட்டுக்கு நல்லது..இல்லையன்றால், நிதியமைச்சராக இருந்து, இருக்குற விலையை முழுதும், ஏற்றி, இனிமேல் கட்டை வண்டியில்தான் ஆபிசுக்கு போக வேண்டிய நிலை ஏற்படும்..ஜாக்கிரதை

Sunday, 10 June, 2012

தடையறத் தாக்க – விமர்சனம்
கில்லி படத்துக்குப் பிறகு, படம் தொடக்கத்திலிருந்து, கிளைமாக்ஸ் வரை, விறுவிறுவென்ற ஒரு திரைக்கதையை இந்தப்படத்தில் பார்க்க நேர்ந்தது. இதற்கு முன்புநான் மகான் அல்லபடமும், இதே விறுவிறுவோடு அமைந்திருந்தாலும், படம் தொடக்கத்திலிருந்து, சற்று பதட்டத்தோடு அணுகவைத்தது, இயக்குநரின் வெற்றி என சொல்லலாம்.

பொதுவாக, ஹீரோவுக்குத்தான் பிளாஷ்பேக் வைத்திருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் வில்லன்களுக்கு, பிளாஷ்பேக் கொடுத்ததன் மூலம், “ஏதோ இருக்குய்யாஎன்று படத்தைப் பார்க்கத் துவங்குகிறோம். படத்தின் இரண்டாவது காட்சியே, இந்த பிளாஷ்பேக் தான்.

ஆக்சன் படங்களுக்கு ஒரு விதி உள்ளது. ஹீரோவின், ஹீரோயிசம் எடுபடவேண்டுமென்றால், வில்லன்களை, ஒரு பங்கு ஹீரோவை விட தூக்கி காட்டியிருக்கவேண்டும். இல்லையென்றால், ஹீரோவாக நடிப்பது ரஜினியாக இருந்தாலும் எடுபடாது. சிவாஜியின் வெற்றிக்கும், பாபாவின் தோல்விக்கும் இதுவே காரணம். இந்தப் படத்தில், ஹீரோவைக் காட்டிலும், வில்லனுக்கு நிறைய காட்சிகள். வாய்ப்பு கிடைத்தால், அங்கிட்டு கிடைக்கிற கட்டையை எடுத்து, வில்லன் மண்டையில் ஒரு போடு, போடவேண்டுமென்ற வெறியை ஏத்தும் அளவுக்கு, வில்லன் கதாபாத்திரங்களையும், அதற்கேற்ப நடிகர்களையும் செலக்ட் செய்ததில், இயக்குநர் வெற்றி பெறுகிறார். இதனாலேயே அருண் விஜய்யின் ஹீரோயிசம் நன்றாக எடுபடுகிறது

ரொம்ப நாட்களாக, கார் பிரேக்கை மட்டுமே பிடித்துக்கொண்டிருந்த அருண்விஜய்க்கு, உண்மையிலேயே இந்தப் படம் பிரேக்தான். இதை வைத்துக்கொண்டு, அப்படியே, ஆக்சன் ஹீரோ, சூப்பர் ஹிட் ஹீரோ,, எம்.எல்.., எம்.பி, அமைச்சர்..என்று எதிர்காலம் பிரகாசமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அருண்விஜய் அண்ணா, ஒன்னு நல்லாத் தெரிஞ்சுக்குங்க.. “இதெல்லாம், இதுபோன்ற இயல்பான திரைக்கதையோடு, நல்ல ஆக்சன் படங்களில் நடித்தால் மட்டும் தான்.”, அடுத்த படத்தில்என்னை வாழவைத்த ரசிகர்களே” என்று ஒரு விரலை ஆட்டி,  ஹீரோ இண்டொரடக்சன் சாங்க் வைத்தீர்களென்றால், திரும்பவும் கார் பிரேக்தான்.

படத்துக்கென்று தனியாக காமெடி டிராக் வைக்காமல், நண்பர்களோடான, இயல்பான காமெடி படத்திற்கு பலம். அருண்விஜய்யோடு வரும் நண்பர்களின், இயல்பான காமெடி ரசிக்கவைக்கிறது. “15 நிமிசம் இருக்கு, என்னை என்ன வேணுனாலும் பண்ணிக்கடா” என்று அதகளம் பண்ணும் மம்தா, காதலிக்கு, பேண்டிஸ் வாங்கி கொடுக்கும் காதலன் என்று வித்தியாசமாக காதலை அணுகியிருந்தாலும், “கொஞ்சம் ஓவரோ” என்று சொல்லத்தோணும் வேளையில், பஸ்ஸடாப்பில் முத்தம் வரை வந்துவிட்ட சென்னைக்காதலை நினைத்து, கண்ணை..இது..சாரி..வாயை மூடிக்கொள்கிறேன்.

இரண்டு பாடல்களோடு நிறுத்திக்கொண்டு, இயக்குநருக்கு உதவியிருக்கிறார் இசையமைப்பாளர் தமன். நல்லவேளை, பிண்ணனி இசை, படத்தின் மூடைக் கெடுக்காமல் செல்வதால், தமன் தப்பித்தார். இல்லையென்றால் இயக்குநர், இசையமைப்பாளரைக் கொலைவெறியோடு தேடும் வாய்ப்பு உள்ளது. இயல்பான ஒளிப்பதிவோடு ஆரம்பித்த சுகுமாருக்கு, இது, இன்னொரு வெற்றி. ஆனாலும், இடைவேளைக்கு அப்புறம், படம் முழுவதும், இருட்டிலேயே எடுத்தது, கொஞ்சம் கடுப்படிக்கத்தான் செய்தது.

இயக்குநர் மகிழ்திருமேனிக்கு இரண்டாவது படமாம். நம்ப முடியவில்லை. அடுத்து என்ன நடக்கும், என்ற பரபரப்பை, படம் முழுவதும் மெயிண்டெயின் பண்ணியிருப்பதற்கு பாராட்டுக்கள். சில இடங்களில் ஓவர் வன்முறையை காட்டியிருந்தாலும், நான் முன்பே சொல்லியிருந்தது போல, இதுபோன்ற காட்சிகள், ஹீரோயிசத்திற்கு, மிகவும் உதவியிருக்கும் வகையில், தப்பித்தார். இயக்குநருக்கு, இந்தப் படம் ஒரு நல்ல விசிட்டிங்க் கார்டு. இதைவைத்து, அவர், இன்னும் நல்ல படங்களை எடுத்து, தமிழ்திரையுலகையும், பதிவுலகத்தையும்(பின்ன, சினிமான்னு ஒன்னு இல்லைன்னா, பதிவுலகத்தை, எப்பவோ கதவை சாத்தி மூடியிருப்பாங்கள்ள) காப்பாற்ற வேண்டுமாய், “பவர்ஸடார் 19 வது வட்ட” சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

கடைசியாக, தடையறத்தாக்க – தாராளமாக பார்க்கலாம்..


Saturday, 9 June, 2012

புதுப்பேட்டை எனும் உலகத்திரைப்படம்
பொழுது போகாதபோது, நேரத்தை தின்பதற்கு ஏதாவது படங்கள் பார்ப்பதுண்டு. இன்று அப்படி ஒருபொழுதில், “புதுப்பேட்டைபடத்தை திரும்பவும் பார்க்க நேர்ந்தது. இந்த படம் முதல் படம், முதல் ஷோ, பார்த்துவிட்டு..”சே..என்ன படம்டா..உலகமே கொண்டாடப்போகுது பாருஎன்று மனதில் எண்ணிக்கொண்டு வெளியே வந்தால், வந்த முதல் கமெண்டே, அந்த ஆவலுக்கு ஆப்பு அடித்தது..”ஐய்யோ..கலீஸு படம்டா..”. மிகையான வன்முறை மட்டுமே, இந்தப்படத்தில் நான் பார்த்த மைனஸ்.ஆனால், இந்த மாதிரியான கதைகளை வன்முறையில்லாமல் எப்படி எடுப்பது என்றும் தெரியவில்லை. கத்தியை எடுத்து, கழுத்தை தழுவிக்கொடுப்பது போல் எடுத்திருந்தால், ஒருவேளைஉலகப்படமாகஆயிருக்குமோ என்ற எண்ணம் வருகிறது.

என்னைப் பொறுத்தவரை, புதுப்பேட்டை, ஒருவகையில் ஆங்கிலப்படத்துக்கு நிகரான படமே. செல்வராகவனுக்கு வாய்ப்புகிடைத்தால், இதுபோன்ற பல தரமான படங்களை எடுக்கமுடியும். ஆனால்..எங்கே..இதுபோன்ற படங்களை ஓடவைக்காவிட்டால், அவரும், நாலு குத்துப்பாட்டு, மசாலா என்று செல்லவேண்டியதுதான். தரமான படங்களை எடுக்கும் பொறுப்பு, எவ்வளவு டைரக்டர்களுக்கு இருக்கிறதோ, அதே பொறுப்பு, பார்க்கும் நமக்கும் இருக்கவேண்டும். இல்லையென்றாம், தமிழ்திரையுலகமும், கூடிய சீக்கிரம், தெலுங்கு திரையுலகம் மாதிரி, தொடையைத் தட்டிக்கொண்டுஅர்ரேரே…” என்று மீசையை முறுக்கித் திரியும் மசாலா வாசத்துக்குள் மாட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

இந்தப் படத்தைப் பார்த்தபின்பு, செல்வராகவனுக்கு, “யுவன் சங்கர் ராஜாஎவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது..பிண்ணனி இசையில் அப்பாவை மிஞ்சியிருப்பார், இந்தப்படத்தில். குறிப்பாகநெருப்பு வானில்என்ற பாடலின் மேக்கிங்கும், படத்தொகுப்பும், மற்ற படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி கொடுத்திருக்கும். இந்தப் படத்தை செல்வராகவன் காட்டிய குறியீடுகள், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு சரியான பாடமாக இருக்கும். உதாரணமாக, எதிர்கூட்ட்த்தில் மாட்டிக்கொண்டு, கிழிபட்டு, ஒரு கணத்தில் வெறியாகி, எதிரியின் தம்பியை ஒரே குத்தில் போட்டுத்தள்ளி, திமிரும் தனுஷை, ஒரு மீன்பாடி வண்டியில் ஏற்றிக் கொண்டு போகும்போது, பின்னால் உதிக்கும் சூரியன், என்ற குறியீட்டை என்னாலே விளங்கிகொள்ள முடிகிறது என்றால், திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு வேறு என்ன வேண்டும்.
தன் கட்சிக்காரனை சென்னைப்பாஷையில் பயங்கரமாக திட்டிவிட்டு திரை விலகியவுடன்செந்தமிழ் பேசும் கவிஞன் நான்என்று சொல்லும் அரசியல்வாதி சிரிக்கவைத்தாலும், பல எண்ணங்களை விதைக்கிறது.

தமிழில் எனக்கு பிடித்த நடிகர் என்று கேட்டால் தயங்காமல்தனுஷ்என்று சொல்லுவேன். “கொக்கிகுமார் என்ற கேரக்டருக்கு இவரா என்று ஐயம் இருந்தாலும், தன்னுடைய உடல் மொழியாலும், அநாசயமான நடிப்பாலும் பல எல்லைகளைத் தொட்டிருப்பார். குறிப்பாகதொண்டையில் ஆபிரேசன், காசு கொடுஎன்று பிச்சை எடுப்பதாகட்டும், ஆக்சன் காட்சிகளில் காட்டும் ஆவேசமாகட்டும், குள்ளநரித்தனமாக, சோனியா அகர்வாலை மணப்பதாகட்டும், கடைசியில் பக்கா அரசியல்வாதியாக மாறுவதாகட்டும், கிடைத்த பாலில் எல்லாம், நடிப்பு சிக்சர் அடித்திருப்பார். இந்தப் படத்திற்கே, அவருக்கு தேசிய விருது கொடுத்திருக்கவேண்டும், பிண்ணனி இசை, இயக்கும், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்று அனைத்தும் அருமையாக அமைந்திருது,, இந்தப் படத்திற்கு, ஒரு தேசிய விருது கொடுக்காதது, என்னைப் பொறுத்தவரைக்கும், “துரோகம்அல்லது, “ஏமாற்றம்

இரண்டரை மணிநேரம் வடசென்னையில், ஒரு ரவுடிகும்பலில் வாழ்ந்த, அனுபவத்தை இந்தப்படம் தருகிறது. ரவுடியிசம், கோஷ்டிமோதல், அரசியல் பிண்ணனி என்று ரவுடியசத்தை, இதுவரைக்கும் இவ்வளவு அருகாமையில் சென்று யாரும் படம்பிடித்ததாய் எனக்கு நினைவில்லை.

செல்வராகவன் என்ற இயக்குநர் மேல்சைக்கோத்தனாமாகஎடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுமேல் எனக்கு உடன்பாடு இல்லை. யாரிடத்தில் தான் சைக்கோத்தனம் இல்லை. தன்னைக் கடிக்கும், எறும்பை, விதவிதமாக சித்ரவதை செய்து கொல்லும், வதைக்கு என்ன பெயர். நண்பனோ, தெரிந்தவர்களோ, கஷ்டப்படும்போது, “சாவட்டும்டாஎன்று உள்ளூர மகிழும் குரூரத்திற்கு என்ன பெயர். அதைத்தான், செல்வராகவன் காண்பிக்கிறார். ஆனாலும், செல்வராகவன் கிளைமாக்ஸில் சுபமாக காட்டியே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தால், கொக்கிகுமாரை, இரண்டுமுறை அமைச்சர் என்று ஸ்லைடு போட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும், “கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான்என்ற மரபை எங்கள் டைரக்டர் உடைத்துவிட்டார் என்று வேணுமென்றால், செல்வராகவன் ரசிகர்கள் சந்தோசப்பட்டு கொள்ளலாம். ஆனால், அதே வேளையில், ரவுடியானால், அடுத்து அமைச்சராகலாம்என்று தவறான சிந்தனையை விதைத்தற்கு, செல்வாவுக்கு, ஒரு குட்டு

மற்றபடி, தமிழ்படத்திற்குரிய பல மரபுகளை, உடைத்த வகையில், என்னைப் பொறுத்தவரைக்கும், “புதுப்பேட்டைஉலகப்படமே.