Sunday, 26 June, 2011

பெண் பாவம்

“வக்கில் சார்..காப்பத்திருவீங்கள்ள…”

"டிரை பண்ணுறேன்..’

“என்னது.டிரை பண்ணுறீங்களா..சார்..என்னோட வாழ்க்கை பிரச்சனை சார்.வாழ்நாள் முழுவதும் ஜெயிலுல இருக்க என்னால முடியாது.உங்களை நம்பி வந்தா இப்படி சொல்லுறீங்க..”

குமுறினான் வினோத்..வக்கில் சண்முகம் அவனை ஏற இறங்கப் பார்த்தார்..

“தம்பி..ஏதோ தப்பு செய்யாதது மாதிரி பேசுறீங்க.பணம் வைச்சிருந்தா என்ன வேணாலும் செய்யலாமா., நெருங்கிய பிரண்டுன்னு சொல்லிப் பழகிட்டு, அந்த பொண்ணை ஏமாத்திக் கூட்டிட்டு போய் ஈ.சி.ஆர் பக்கத்துல ஆளில்லாத இடத்துல வைச்சு பலாத்காரத்துக்கு முயற்சி பண்ணியிருக்கீங்க..”

“சார்..அதெல்லாம் எங்கள மாதிரி பணக்கார வீட்டு பசங்ககிட்ட சகஜம் சார்..நீங்க முடியலைன்னா சொல்லுங்க வேற வக்கீல் பார்த்துக்குறோம்..”

கறார் குரலில் வினோத் சொன்னான். வக்கில் சண்முகம் யோசித்தார். சிறிது நேரம் யோசிக்கவே, அவருடைய எண்ணத்தை கலைத்தார் போல் செல்பேசி அழைக்க, “ஒரு நிமிஷம்..வீட்டுக்காரம்மா..” என்று சொல்லிவிட்டு நகன்றார்..

“சொல்லும்மா..நாந்தான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன். ஆபிஸ்ல க்ளையண்டோட பேசிக்கிட்டு இருக்குறப்ப கால் பண்ணாதேன்னு..”

“என்னங்க புரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க.இன்னும் 10 நாள்தாங்க இருக்கு..நம்ம பொண்ணை எஞ்சினியரிங்க் காலேஜ்ல சேர்க்க..டொனேஷனே 10 லட்சம் கேட்குறாங்க..மறந்துடாதீங்க..நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது..பணத்துக்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க..”

கடுப்போடு செல்பேசியை அணைத்தார்.

“கடைசியாக என்னதான் சார் சொல்லுறீங்க..என் நண்பனை காப்பத்த முடியுமா..முடியாதா”

“ஒன்னு சொல்லட்டா….தப்பு செய்றவங்களை விட அவர்களுக்கு சப்போர்ட் பண்றவங்க இன்னும் டேஞ்சர்.,சரி..பண்ணுறேன்…எனக்கு வீட்டுல ஆயிரம் பிரச்சனை..”

வேண்டா வெறுப்பால முன்பணம் வாங்கிகொண்டார்.ஆனால் சண்முகத்தின் மனதுக்குள் ஏதோ குறுகுறு.

மறுநாள் கோர்ட். அந்த பெண்ணை பார்க்கும்போதே சண்முகத்திற்கு பாவமாக இருந்தது. சாட்சி விசாரணை.. சண்முகம் எழுந்தார்..

“உன் பேரு என்னம்மா..”

“ஸ்வேதா.”

“இதோ நிற்கிராரே வினோத்..எவ்வளவு நாளா பழக்கம்.”

“2 வருடமா..”

“பழக்கம்னா எப்படி..”

“நாங்க நல்ல பிரண்ட்ஸ்சா இருந்தோம்.”

“நீ வினோத்தை எப்படி கூப்பிடுவ.”

“டே வினோத்.”

“அதாவது, வினோத்தை டே ன்னு கூப்பிடுற அளவுக்கு பழக்கம்..ரைட்.”

“ஆமா..”

“நீ என்ன மாதிரி டிரஸ் போடுவ.”

“ஜீன்ஸ்..டி.சர்ட்..”

“ஓ…ஏன்மா, உங்க வீட்டுல இப்படி டிசர்ட்டெல்லாம் போடக்கூடாதுன்னு சொல்லலியா..”

“ஏன் சார்.போடக்கூடாது..”

“இல்லை..உன்னைப் பார்க்கும்போது அல்ட்ரா மார்டனாக இருக்கே..அதான் கேட்டேன்..அப்புறம்..தண்ணி, தம் அடிப்பியா..”

அந்த பெண் தலை குனிந்தாள்..

“சரி.என் கட்சிக்காரர் உன்னை பலாத்காரத்து முயற்சி பண்ணினார்னு சொன்னியே..அதுக்கு முன்னாடி உன்கிட்ட அதுமாதிரி தப்பா எதுவும் நடந்துருக்காரா...”

“அது..அது..வந்து..நடந்ததில்லை..ஆனா அடிக்கடி ஒரு மாதிரி அசிங்கமா பேசுயிருக்கிறார்..”

“எப்ப பேசுனார்..”

“ஒரு ரெண்டு மூணு தடவை..”

“நீ என்ன சொன்ன..”

“இனிமேல் அதுமாதிரி பேசுனா, உங்க கூட பேசமாட்டேன்னு சொன்னேன்..”

“ஏம்மா..நீயெல்லாம நல்ல குடும்பத்துப் பொண்ணா…யாராவது உங்கிட்ட தப்பா பேசுனா, உடனே கட் பண்ணமாட்டியா..இப்படித்தான் உங்க வீட்டுல வளர்த்திருக்காங்களா..இல்லாட்டி..உங்க பரம்பரையே.”

ஸ்வேதா பயந்தே போனாள்..கண்கள் நிறைய தண்ணீர்

“சார்..அவனோட பிரண்ட்ஷிப் எனக்கு பிடிச்சிருந்தது.அதனால் தான் அவன் எங்கிட்ட அசிங்கமா பேசினப்ப கூட, அவனை டிஸ்கனெக்ட் பண்ண விரும்பல.. ஆனா அவன் தப்பா நடந்துக்கிற அளவுக்கு போவான்னு நினைக்கலை..”

“ஆ...இதோ பாருங்கள் யுவர் ஆனர்..நம் கலாச்சாரத்திற்கு கேடான இப்படி ஒரு பெண்தான் என் கட்சிக்காரர் மேல் குற்றம் சாட்டுவது…அடிப்படையே இங்கு சரியில்லையே…சரி சொல்லுங்கம்மா…என் கட்சிக்காரர் உங்களை பலாத்காரத்துகு முயற்சி பண்ணினார் என்று சொன்னீர்களா..அவர் உங்களை எங்கெங்கெல்லாம்..******”

ஸ்வேதாவுக்கு இதற்குமேல் அடக்கமுடியவில்லை.,,அனைவரும் அவளை வேடிக்கை பார்க்கவே கூனி குறுகிபோனாள்..கண்களில் இருந்து தாரை தாரையாக தண்ணீர்..

“சார்.நான் கேசை வாபஸ் வாங்கிக்கிறேன்..என்னை விட்டுருங்க சார்..” கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினாள்.

சண்முகம் வெற்றிச்சிரிப்பு சிரித்தார். நீதிபதி வழக்கை ரத்து செய்ய வினோத் துள்ளிக்குதித்தான்... கோர்ட் வாசலில் சண்முகத்திற்கு பெரிய மாலை ஒன்றை அணிவித்தான்..

“சார்..எப்படி..எப்படி சாதிச்சீங்க..”

“ப்ச்..ஒன்னும் இல்லை தம்பி..இந்த பொண்ணுங்க இருக்கே.ரொம்ப சென்சிட்டிவ்..யாராவது ஒரு பொண்ணு நம்ம தப்பா பேசறோம்னு கம்ப்ளெயின் பண்ணுனா., உடனே, அந்த பொண்ணைப் பத்தி தப்பா பேசணும்..அந்த பொண்ணு குடும்பத்தையும் இழுக்கணும்.வீக்னெஸ்சே அங்கதான் இருக்கு..அந்த பொண்ணு கேரக்டர்டரை அசாசினேட் பண்ணினாவே பாதி வெற்றிதான்..”

வினோத்தின் நண்பன் ஆமோதித்தான்..

“ஆமா சார்….வீட்டுல ஒழுங்கா புள்ளைய வளர்க்கத் தெரியலை..எங்க மேல கம்ப்ளெயின் குடுக்குதுங்க..”

சண்முகம் சிரித்தார்..

“தம்பி வினோத்..உன்னைய விட, நீ சொல்லுறதுக்கெல்லாம் ஜால்ரா போட்டு, “நண்பன் அப்படித்தான்”னு சொல்லுறவங்களைத்தான்யா இன்னும் டேஞ்சர்..”

“சரி..விடுங்க..இந்தாங்க உங்களுக்கு சேரவேண்டிய பணம்..நேரம் கிடைக்குறப்ப நம்ம ஈ.சி.ஆர் பங்களாவுக்கு வாங்க..”

“ம்..உங்களை மாதிரி பணக்கார பசங்கள்ளெல்லாம் ஈ.சி.ஆர் ரோடே கதின்னு கிடக்குதுக…ம்..காலம் கெட்டு போச்சுப்பா..

கையில் வாங்கி கொண்டார்..முதலில் இதைக்கொண்டுபோய் மனைவியிடம் கொடுக்கவெண்டும். மகள் ஆனந்தியை எஞ்சினியரிங்க் சேர்க்கவேண்டும்..அதை நினைப்போடு அவசரம், அவசரமாக வீடு சென்றார்…

“அடியே..அடியே..இங்க வா..இந்த பணத்தை உள்ள வை..”

“வந்துட்டீங்களா..இன்னும் 10 நாள்தான் இருக்கு நம்ம மக ஆனந்தி இஞ்சினியரிங்க் ஸ்கூல் அட்மிசனுக்கு.”

“ம்..அதுக்குதானே பணம் சேர்க்குறேன்…ஆமா ஆனந்தி எங்க..” அவள் அறை சென்று தேடினார்..

“அவள் இல்லிங்க..”

“எங்க போயிருக்கா..”

“ஏதோ பிரண்டுகிட்ட இருந்து கால் வந்தது..ஈ.சி.ஆர் ரோடு வரைக்கும் போயிட்டு வர்றேன்னு போனா..இன்னும் ஆளைக்காணலை.”

தொலைக்காட்சியில் எஸ்.ஜே சூர்யா நடித்த “நீயூட்டனின் மூன்றாம் விதி” படம் ஓடிக்கொண்டிருந்தது

Thursday, 23 June, 2011

தி பர்ஸ்யூட் ஆப் ஹேப்பினஸ் - ஆங்கில திரைப்பட விமர்சனம்


வில் ஸ்மித் என்ற நடிகனை எம்.ஐ.பி என்ற படத்தில் பார்த்தது. அப்படி ஒன்றும் கவரவில்லை. ஏதோ பத்தோடு, பதினொன்றாகத்தான் எனக்கு பட்டது. போன வாரம், யதேசசையாக இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. பார்த்துவிட்டு என்னால் இரண்டு நாட்கள் நார்மலாக இருக்க முடியவில்லை.

அப்படியே வாழ்க்கையின் யதார்த்தம். நம்மில் பலர், அமெரிக்கா முழுவதும் பணக்காரர்கள் நிரம்பிய நாடு என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம். இங்கும் ஒருவேளை உணவு கிடைக்காமல் எவ்வளவோ பேர் பசியால் இறக்கிறார்கள். தங்குவதற்கு இடம் கிடைக்காமல், தெருத்தெருவாக அலைகிறார்கள். அப்படி ஒருவன் பற்றிய உண்மைக்கதைதான் இந்தப்படம்.


கிறிஸ் கார்டனர்..இதுதான் வில்ஸ்மித் பாத்திரம். நியூயார்க நகரில் வாழும் சாதாரண மனிதன்..ஸ்கேன் பண்ணும் மருத்துவ உபகரணத்தை வாங்கி, தெருதெருவாக விற்கும் ஒரு சாதாரணன். மாதத்திற்கு இரண்டு மிஷின் விற்றாலே பெரிய விஷயம். மிசின் விற்றால் மட்டுமே அவனுக்கு அன்றைக்கு பிழைப்பு. வேண்டாவெறுப்பாக அவனோடு இருக்கும் மனைவி, எப்போதும் பாசத்தோடு இருக்கும் சிறுவயது மகன். எங்கு பார்த்தாலும் கடன். ஒருகட்டத்தில் கடன்காரர்கள் கழுத்தை நெறிக்க, மனைவி அவனிடமிருந்து எஸ்கேப் ஆகிறார்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஒரு பால்யகால சிநேகிதனைப் பார்க்கிறான். அவ்னோடு படித்தவன் தான். ஆனால் பெராரி கார், புதுமாடல் செல்போன் என்ற பந்தாவோடு..இவனுக்கு ஆச்சர்யம். விவரவம் கேட்க, தான் ஷேர்மார்க்கெட் புரோக்கர் என்றும், அதில்தான் இவ்வளவு வருமானம் வருகிறது என்று சொல்ல, கிறிஸ்ஸுக்கும் அதன்மேல் ஒரு பிடிப்பு வருகிறது.

அப்படி, இப்படி என்று அலைந்து 6 மாதம் பயிற்சி காலத்தில் வேலைக்கு சேர்கிறார். சம்பளம் இல்லை. 6 மாதம் உழைக்கவேண்டும் கடைசியாக ஒரு தேர்வு, மற்றும் பயிற்சி காலத்தில் எவ்வளவு கஷ்டமர்களை கொண்டு சேர்க்கிறீர்களோ, அதைப்பொறுத்துதான் வேலை நியமனம். வேறு வழியில்லாமல் வேலைக்கு சேர்கிறான்.


இந்த நேரத்தில் கிறிஸ்ஸுக்கு சோதனைமேல்சோதனை. வாடகை கட்டாமல் வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார்கள். மகனோடு ஹோட்டலில் தங்குகிறான். டாக்ஸ் கட்டாத்தால், பேங்கில் உள்ள எல்லா சேமிப்பு பணத்தையும் அரசு எடுத்துக்கொள்ள, ஹோட்டலில் இருந்தும் வெளியே துரத்துகிறார்கள். இப்போது, தன் சிறுவயது மகனோடு நடுத்தெருவில். நம்மில் பலர் கண்டிப்பாக தற்கொலை செய்து கொள்வோம். ஆனால், க்றிஸ்..போராடுகிறான். சத்திரம் போய் தங்குகிறான். அதற்கும் இடம் கிடைக்காமல் போக, பஸ்ஸடாண்டில் உள்ள பொதுக்கழிப்பறையில், தன் மகனோடு தூங்குகிறான். வாழ்க்கையில் போராடுகிறான். கடுமையாக உழைக்கிறான். கஷ்டப்படி கஷ்டமர்களை கொண்டு வருகிறான். இரவு பகல் பாராமல் தேர்வுக்கு படிக்கிறான்.

முடிவாக அவன் கேட்க நினைத்த வார்த்தை கேட்கிறது….நீ செலக்ட் ஆகிவிட்டாய்..எப்படி இருக்கும்….அப்படியே தெருவில் ஓடுகிறான். பள்ளி சென்று மகனை கட்டிக்கொண்டு அழுகிறான். அப்படியே, யதார்த்தமாக படம் முடிகிறது.

ஒரு ஹீரோயிசம் இல்லை. துப்பாக்கி இல்லை, ஆக்சன் இல்லை. படம் முழுவதும் யதார்த்தம்…ஒரு மனிதனுக்கு வறுமை எவ்வளவு கொடியது என்று இந்த படம் பார்த்து அறிந்து கொள்ளலாம். வில்ஸ்மித் மற்றும் அவருடைய உண்மையான மகன்..யப்பா.என்ன ஒரு நடிப்பு..தன் மகனோடு, கழிப்பறையில் தூங்கும்போது அழும் காட்சியிலும், கடைசியாக வேலை கிடைத்துவிட்டு என்று தெரிந்து சந்தோசத்தை வெளிப்படுத்த முடியாமலும் அழுகையைக் கட்டுப்படுத்த, முடியாமல், நெகிழும் காட்சியுலும்..கிளாஸ்..

இந்த படம் பார்த்தவுடன், கண்டிப்பாக ஒரு தன்னம்பிக்கை பிறக்கும்…வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்..

எளுத்தாளனுக்கு ஒரு அல்லக்கையின் கடிதம்

எளுத்தாளரே..என்ன தலைவா, எழுத்தாளரேன்னு சொல்லாம எளுத்தாளரேன்னு சொல்லுறன்னு பார்க்குறியா..நீ சொல்லிக்கொடுத்ததுதான் தல..பின்நவீனத்துவம்.வீட்டுல கூட கேட்டாய்ங்க.பின்னாடி என்னடா நவீனம் வேண்டிகிடக்குன்னு..விடலையே..தெளிவா சொல்லிப்புட்டேன். எளுத்தாளருதான் என் கடவுள். அவர் எது செஞ்சாலும் ரைட்டாத்தான் இருக்கும்னு.

கொஞ்ச நஞ்ச இலக்கியமா எழுதியிருக்க தல. நீ எழுதுன புத்தகம்தானே எனக்கு தலையணை. டெய்லி இரண்டு வரி படிக்கலைன்னா எனக்கு தூக்கமே வராது, தெரியுமா..அதுவும் உன்னோட “பப்பரப்பா..” புத்தகத்துல ஒரு வரி எழுதியிருப்ப பாரு…” 4 மணிக்கு கதவை சாத்தி பாப்பா போட்டாள் தாழ்ப்பா..”வாவ்..வாவ்..வரே.வரே.வாவ்.என்ன ஒரு வரிகள்…சீன எழுத்தாளர் “கிம் கு டுக்” அப்புறம், “அகிரோ குரொசாவா” எழுதுன மாதிரியே இருந்துச்சு..பின்னி எடுத்துட்ட தல..உலக இலக்கியம் படைக்கவேண்டிய ஆளு நீ..இந்த உள்ளூருல வந்து மாட்டிக்கிட்ட..

அப்புறம், தல..நீ தண்ணி அடிக்கிறதுக்கு, பணம் வேணுமுன்னு அக்கவுண்ட் நம்பர் போட்டிருந்தியே..என்ன கொடுமையான உலகம் இது தல..ஒரு எழுத்தாளனுக்கு தண்ணியடிக்க பணம் இல்லைன்னா ஜெகத்தினை அழித்திடுவோம்..ஒரு மாசமா நான் சேர்த்து வைச்சிருந்த அம்புட்டு காசையும் அனுப்புட்டேன் தல..நீ நல்லா தண்ணி அடி தல..அப்பத்தான், உலக இலக்கியம் நல்லா பீறிட்டு வரும்.. அதுவும் பாவம் நீயே, காசு பத்தாமத்தான், உன் தகுதிக்கு ஒத்தே வராத பைவ் ஸ்டார் ஹோட்டலுல போய் தண்ணி அடிக்கிற..எளுத்தாளன் நிலை பாத்தியா தல..இது பொறுக்கல இவிங்களுக்கு…

அய்யோ..பேச்சுவாக்குல கேட்க மறந்துட்டேனே தல..உங்களைப் பத்தி இல்லாததும், பொல்லாததுமா சொல்லுறாயிங்க தல..ஏதோ, லேடிஸ் பத்தி..தல..நீ கவலையே படாத தல..அத போய் நம்புவோமோ..அப்படி நீ பேசியிருந்தாலும், அது காதல் வரிகள் தல.பின்நவீனத்துவ வெளிப்பாடு..நீ கூட உன்னோட புத்தகத்துல கூடஒரு இடத்துலயே சொல்லியிருப்பியே..”மனசு ஒரு தோசை மாதிரி..திருப்பி போடலைன்னா கருகிடும்..” அது மாதிரி தல உன் மனசு..நீ ஒரு அப்பாவி..

அப்புறம் தல..உன்னை அவதூறு பண்ணுனவயிங்கள பத்தி விசாரிச்சோம்..திடிக்கிடும் தகவல்கள் தல..உன்னை குத்தம் சொல்லுறதுக்கு ஒரு தகுதியும் இல்லை..அவிங்க, சின்ன வயசுல பக்கத்துல உக்கார்ந்து இருக்குற பையன கிள்ளி வைச்சுருக்காய்ங்க தல..அப்புறம் அவன் திங்குற முட்டாயை திருடி தின்னுருக்காயிங்க தலை..இப்படிப்பட்ட ஆளுங்க உன்னைப் பத்தி தப்பா பேசுறதுக்கு என்ன தகுதி இருக்குங்குறேன்.

தல..நீ கவலைப்படாமே இரு..நாங்க இருக்கோம்.. நீ கொலையே பண்ணுனாலும், நாங்க ஒத்துக்க மாட்டோம்..அது கொலை அல்ல “வதை” ன்னு எங்களுக்கு தெரியாதா என்ன.. நீ இன்னைக்கு யாரைப் பத்தி நல்லா பேசிட்டு, நாளைக்கு திட்டுனா கூட நாங்க, கவலைப்பட்மாட்டோம்..ஏன்னா உன்னோட புத்தகத்துல கூட அதைப்பத்தி சொல்லிருக்கியே..” யக்கா, மக்கா சொக்கா..சோத்துக்கு பன்னீர் டிக்கா..” ..யப்பா..நீ எங்கயோ இருக்க வேண்டிய ஆளு தல..

தல.உங்க கூடயே நாங்க இருப்போம்..அதனாலே..நீ யாரைப்பத்தியும் கவலைப்படாமே, உன்னோட பாதையில் நீ பாட்டுக்கு போய்கிட்டே இரு தல…ஆங்க்..மறக்காம, போறப்ப, நீ எப்போதும் போடுற ஜாக்கி ஜட்டிய எடுத்துட்டு போயிடு…

இப்படிக்கு,

பின்நவீனத்துவ அல்லக்கை..

420, ஆல் அல்லைக்கைஸ் க்ரூப் தெரு,

ரெமி மார்ட்டின் வட்டம்,

ஜாக்கி ஜட்டி தெரு.,

நித்தியானந்தம் மாவட்டம்.. .

Wednesday, 22 June, 2011

சிவப்பு சிக்னல்

நேற்று ஒரு வேலை விஷயமாக அவசரம், அவசரமாக கிளம்பி சென்றேன். கூடவே என் மனைவியும். போகும் வழியில் நிறைய சிக்னல்கள். சொல்லிவைத்தாற் போல் அனைத்தும் சிவப்பையே காட்டின. எனக்கு எரிச்சல் வருவதற்கு பதில் மிகவும் ஆனந்தம்.

“பாரேன்..போற வேலை நல்லபடியா முடியும் பாரேன்..” என்றேன். மனைவி வியந்தாள்.

“ஏங்க..போற வழியெல்லாம் தடங்கல் மாதிரி சிவப்பு சிக்னல் விழுது..இப்படி சொல்லுறீங்க..” சிரித்தாள்..

“ப்ச்..சொல்லுறேன் பாரு..போற வேலை நல்லபடியா முடியும்..”

மீண்டும் மீண்டும் சிவப்பு சிக்னலை பார்க்கும்போது எனக்கு சென்னையில் வேலைதேடிய ஞாபகங்கள் நினைவுக்கு வந்தது. 10 வருடத்திற்கு முன்பு சென்னையில் வேலை தேடி வந்தபோது ஏதோ காகத்திடம் மாட்டிக்கொண்ட கோழிக்குஞ்சு போல இருந்தேன். எழுந்து நிற்கும் ஐ.டி கட்டிடங்கள் என்னை ஒருபுறம் பயமுறுத்தினாலும், நுனிநாக்கில் புரளும் ஆங்கிலம் இன்னும் நிலைகுலையவைத்தது. தமிழையே தட்டுதடுமாறி பேசும் எனக்கு ஆங்கிலம் “ஹல்லோ..ஹவ் ஆர்..யூ” என்ற அளவிலேயே இருந்தது.

தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ஐ.டி அலுவலம் என்று நினைக்கிறேன். முதலில் நான் இண்டர்வியூ சென்ற இடம். காலையில் எழுந்து நல்ல பிள்ளையாய் “C” “C++” புத்தகங்களை இரண்டு புரட்டி புரட்டிவிட்டு என்னை நானே தைரியபடுத்திக்கொண்டே சென்றேன். அலுவலகத்தில் சென்றவுடன் முதலில் என்னை கலவரப்படுத்தியது, மேலைநாட்டு ஸ்டைலில் அமைந்த ரிஷப்சன். அயல்தேசத்தில் வந்தது போல , ஹைஹீல்சும், லிப்ஸ்டிக்கும் அணிந்த ரிசப்சனிஸ்ட் என்ன வேண்டும் என்பதுபோல பார்த்தாள். அவள் பார்வையில் இருந்த அலட்சியம் என்னை சங்கடப்படுத்தவே, “ஐ வாண்ட் டூ மீட் ஹெச் ஆர்” என்று நான் மனப்பாடம் செய்திருந்தது கூட வருவதற்கு அடம்பிடித்தது..வேறு வழியில்லாமல்

“ஹெச். ஆர் பார்க்கலாங்களா..” என்றேன்..சிரித்தே விட்டாள்.இன்னும் மஞ்சப்பை எடுத்து வராததுதான் பாக்கி..

“go..and take your seat..” என்றாள். வெட்கத்துடன் சென்று அமர்ந்தேன். நான் அழைக்கப்படவே, மெல்ல, மெல்ல அடியெடுத்து சேர் நுனியில் அமர்ந்தேன். என்னைப் பார்த்ததுமே கண்டுபிடித்துவிட்டார்..

“ok..can you explain about yourself” என்றார். எனக்கு கைகள் நடுங்கியது. மனப்பாடம் செய்த அனைத்தும் மறந்து போனது.. முதுகுபக்கம் வியர்க்க ஆரம்பித்தது பயத்தால்..

“சார்..தமிழிலே சொல்லவா சார்..” என்றேன்..திடுக்கிட்டு பார்த்தவர்..ஒருநிமிடம் சிரித்தே விட்டார்..அசிங்கமாக போய்விட எழுந்து போய்விடலாமா என்று நினைத்தவேளையில்

“என்ன ஊர்ப்பக்கமா” என்றார்.

“ஆமா சார்..நல்லா படிச்சிருந்தேன்..முதல் இன்ட்ர்வியூ..மறந்துடுச்சு..”

“ஹா..ஹா..டீ சாப்பிடுவீங்களா..” என்றார்..எனக்கு ஆச்சர்யம்..

“ஐயோ..இல்ல சார்..பரவாயில்லை..”

“அட வாங்க..வெளியே, ஒரு டீ கடை இருக்கு.. ஒரு டீ அடிச்சுட்டு வருவோம்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து வெளியே என்னை அழைத்து சென்றார்..

ஒரு மரத்தடியில் உள்ள ஒரு டீக்கடையில், இரண்டு டீயும் வடையும்..அதுதான் என்னை, என் வாழ்க்கையை, மொத்தமாக திருப்பி போட்டது. அவர் என்னை, ஒரு நொடிகூட அவமதிக்கவில்லை. மாறாக, ஆங்கிலம் என்பது, ஒரு மாயை இல்லை. தைரியம் இருந்தால் போதும், தெளிவாக ஆங்கிலம் பேசலாம் என்ற உண்மையை உணரவைத்தார். நிறைய ஆங்கில பத்திரிக்கைகளையும், திரைப்படங்களையும் அறிமுகம் செய்தார். அவரிடம் பேசி வெளியே வரும்போது, புதியமனிதனாக வெளியே வந்தேன்..வாழ்க்கையை பற்றிய பயம் போய் நம்பிக்கை வந்தது.

அதிலிருந்து முடிந்த வரை ஆங்கில பத்திரிக்கைகள் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கில திரைப்படங்களை உற்று நோக்கினேன்.தட்டுதடுமாறி நண்பர்களிடம் ஆங்கிலம் பேசினேன். அவமானப்பட்டாலும் பராவாயில்லை..எல்லா இண்ட்ர்வியூக்களும் சென்றேன், ஆங்கிலத்தில் பேசுவதற்காவது. அநேகமாக சென்னையில் உள்ள எல்லா கம்பெனிகளிலும் என் பாதம் பதிந்திருக்கும்..மெல்ல, மெல்ல எனக்கே ஒரு நம்பிக்கை வந்தது..

அப்போதுதான், ஒரு பெரிய கம்பெனியில் எனக்கு ஒரு இண்டர்வியூ வந்தது. கஷ்டப்பட்டு ப்ரிப்பேர் செய்து, வெளியே வந்து பார்க்கிறேன்..அப்படி ஒரு மழை. என்னுடைய டி.வி.எஸ் 50 க்கு மழை வந்தால் ஜன்னி பிடித்துவிடும். பாதி வழியில் படுத்துவிடும். பயத்துடன் வண்டியை ஸ்டார்ட் செய்தேன்..முன்னால் சென்ற வாகனங்கள் எல்லாம், அன்போடு என்மேல் வாரிய சகதி, புள்ளி, புள்ளியாக என் சட்டைமேல். நான் ஜாலியாக மழையும் மழை எனக்கு எதிரியாக தோன்றியது. முதல்முதலாக “ஏண்டா..இந்த மழை” என்று தோன்றியது..முதல்முறையாக போகும் வழி எங்கும் சிகப்பு சிக்னல். பாழய்ப்போன மனது, சகுனம் பார்க்க ஆரம்பித்தது, மூடநம்பிக்கை என்று மூளை சொன்னாலும்.

அரைமணிநேரம் லேட்டாக சென்றேன்..அதுவும் சட்டை முழுவதும் சகதியோடு.பயத்துடன், இண்ட்ர்வியூ அறைக்குள் செல்ல, மேனேஜர் என்னைப் பார்த்து சிரித்தார்.அதே சிரிப்பு..ஆனால் எனக்கு இந்தமுறை பயம் வரவில்லை.எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை..அப்படி ஒரு வெறி..தவறாக இருந்தாலும் சரி..முழுவதும் ஆங்கிலம்தான்.கடைசியாக அந்த வார்த்தை அவரிடமிருந்து வந்தது,.,

“you are selected. Come and get the offer”

ஏதோ சொர்க்கத்தில் பறப்பது போல இருந்தது. எத்தனை நாட்கள் தவம்..நாக்கு அப்படியே ஒட்டிக்கொண்டது..

“pardon sir” என்றேன்.அவர் சொன்னது காதில் விழுந்திருந்தாலும், இன்னொருமுறை கேட்க ஆசை..

“man..you are selected. Can’t you believe” என்றார்..வெளியே வந்தேன்..டி.வி.எஸ் 50 யை சந்தோசமாக மிதித்தேன். இந்த முறை அனைத்து சிக்னல்களிலும் சிவப்பு...

“என்னங்க..என்ன யோசிக்கிறீங்க” என்றாள் மனைவி..

“இல்ல சென்னையில் வேலை தேடுறப்ப…ப்ச்..ரொம்ப நாளாகிடுச்சுல்ல..வேலை கிடைச்சு, கல்யாணம் ஆகி, அமெரிக்கா வந்து..குழந்தை பிறந்து..இந்த சிவப்பு சிக்னல் பழைய ஞாபகத்தையெல்லாம் கிளறிடுச்சு” என்றேன்..

“ம்..சீக்கிரம் காரை ஓட்டுங்க..இன்னைக்கு வேலை முடியாது போல.” என்றாள்.

“இல்ல முடியும் பாரேன்.போற வழியெல்லாம் சிவப்பு சிக்னல்” என்றேன்..

முதல்முறையாக என் மனைவி, என்னை கேலியாக பார்த்தாள்..

Monday, 20 June, 2011

விஷாலின் அவன் இவன் – திரைவிமர்சனம்

விஷால் நடித்த அவன் இவன் படத்தை பார்க்கநேர்ந்தது. கைகொடுங்கள் விஷால்..என்ன ஒரு உடல்மொழி(என்னண்ணே..இப்ப ஒருமாதிரியா இலக்கியமா எழுத வருதுல்ல). பெண்மை கலந்த நளினத்தோடு, கண்களை, சுருக்கிக்கொண்டு, யப்பா, என்ன ஒரு ஆளுமை(கண்டிப்பா, இலக்கியமேதான்..அவிங்கராசா..பின்னிட்டடா). படம் ஆரம்பிக்கும்போது, ஒரு குத்தாட்டம்(துள்ளலிசை என்று இலக்கியத்தில் சொல்லுவார்கள்..) போடுவார் பாருங்கள்..தக்காளி(இது கூட இலக்கியம்..சென்னை இலக்கியம்)..இதுதான் உண்மையான குத்தாட்டம்.. இதற்குமேல் ஒரு குத்தாட்டம் எந்த படத்திலும் போடவே முடியாது. உசிரை கொடுத்து நடிக்கிறான்யா என்று சொல்லுவார்களே..அது, இந்த படத்தில் விஷால் நடிப்பை சொல்லலாம். சரசரவென்று மரம்மேல் ஏறுவதாகட்டும், சட்டென்று வெளிப்படும் அந்த பெண்மைத்தனமாகட்டும், கிளைமாக்சில் காட்டும் அந்த ஆக்ரோஷமாகட்டும்..விஷாலுக்கு இந்தமுறை அவார்டு கொடுக்காவிட்டால், இந்த படத்தை விஷால் இல்லாமல் ஒருமுறை பார்க்ககடவது என்று சாபம் கொடுப்பேன்.

ஆனால், பரபரப்போடு குத்தாட்டம் போட்டு தொடங்கும் திரைக்கதை, சாட்டில் மாட்டிக்கொண்ட பாரு போல தள்ளாடுகிறது. காரச்சட்னியை தலையில் ஊற்றிய பிதாமகன் போல வரும் ஆர்யாவும், முடிந்தவரை சிரிக்கவைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் கழுத, நமக்கு சிரிப்புத்தேன் வருவனான்னு அடம்பிடிக்குது. ஆனாலும், சிலநேரம், அவரும் அவர் குடும்பத்தார் பண்ணும் அலும்புகளும், “ரொம்ப ஓவராத்தான் போறாய்ங்களோ” என்று எண்ணவைக்கிறது. இந்த படத்துக்கு எதற்கு இரண்டு கதாநாயகிகள் என்றே தெரியவில்லை.

அதுவும், அது எப்படிதான் என்று தெரியவில்லை. நம்ம ஊரு நாயகிகளுக்கு கரெக்டா, திருடனைப் பார்த்தா மட்டும் காதல் உடனே வந்துவிடுகிறது. இதற்காகவே, நம்ம கோவாலு, சாப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு, திருடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல்.

இசை, யுவன்சங்கர் ராஜாவாம். “டியா..டியா டோலு..” “ராசாத்தி” தவிர மற்ற பாடல்கள்..ம்..ஹீம்..என்ன ஆச்சு யுவன்..பேமண்ட் வரவில்லையா..காவல்துறையை இதற்கு மேல் எந்த படத்திலும் கேவலப்படுத்தமுடியாது. சின்ன பையன் கூட கேவலமா பேசுகிறான். எந்த ஊரில் என்று தெரியவில்லை. அது போல ஜமீன் கதாபத்திரம் எந்த ஊரில் இப்படி ஜோக்கராக இருப்பார் என்று தெரியவில்லை. ஆனாலும், ஊருக்குள் அவருக்கு அப்படி ஒரு மதிப்பாம். கஷ்டப்பட்டு நடித்த ஜி.எம் குமாரின் உழைப்பும், விழலுக்கு இறைத்த நீராய் வீணாய்போகிறது. அவர் கதாபாத்திரத்தின் மேல் உள்ள விளையாட்டுத்தனத்தாலேயே, அவர் இறக்கும்போது, ஒரு பரிதாபமும் வரவில்லை.

வசனம் எஸ்.ராமகிருஷ்ணன்..”அம்மா மாவு மாதிரி போகுதும்மா..லேடிஸ் பேண்டுக்கு எதுக்கு ஜிப்பு”, இது போன்ற வசனங்கள், இலக்கியத்தை பறைசாற்றுகின்றன்..இதுதான் இலக்கியம் என்றால் ஐ ஆம் ஆல்ரெடி இலக்கிவியாதி..ச்சீ..இலக்கியவாதி.. மற்றப்படி பீடி வலித்துக்கொண்டு வரும் அம்பிகா..ஏர்டெல்சிங்கர் புகழ் வாய்ஸ் எக்ஸ்பெர்ட் வைத்தியநாதன்(ஏன் சார்..இப்படி), இவர்களெல்லாம் கதாபத்திரங்களுக்கு எப்படி பொருந்துகிறார்கள் என்றே தெரியவில்லை.

இயக்கம் பாலா..புது இயக்குநராக இருக்கவேண்டுமென நினைக்கிறேன். இயக்குநருக்கு ஒரு வேண்டுகோள். ஏற்கனவே திரையுலகில், சேது, பிதாமகன் நான் கடவுள் போன்ற இயல்பு மாறாத காவியங்களை எடுத்த இயக்குநர் “பாலா” என்று ஒருவர் இருக்கிறார். நீங்கள், தயவுசெய்து பேரை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லையென்றால், இது “பாலா” படம் என்று நினைத்து, நிறைய பேர் ஏமாறுவதற்கு வாய்ப்பு உண்டு..எங்கள் பாலா, இப்படி கதையே இல்லாமல் படம் எடுக்கமாட்டார். முடிந்தால் சேது, பிதாமகன் படங்களை பாருங்கள். இயல்பு, யதார்த்தம், கிராமத்து மனிதர்கள் என்றால் என்னவென்று தெரியும். உயிரை அறுத்துக்கொண்டு போகும் காதல், நட்பு என்னவென்று தெரியும்.ஆனாலும், சிலகாட்சிகளில் உங்களிடம் பாலா டச் தெரிகிறது. குறிப்பாக, ராஜபக்சே பற்றி வரும் காட்சிகளிலும், அந்த கிளைமாக்ஸ் கடைசி 15 நிமிடங்களிலும்.

முடிவாக அவன் இவன் – அவன் மட்டுமே..அது, விஷால்..

Sunday, 19 June, 2011

ஆரண்ய நிரோத்(காண்டம்) – பட விமர்சனம்

யாருண்ணே தெரியலண்ணே..யாரோ ஒரு பயபுள்ள வாரத்துக்கு ஒரு மெயில் அனுப்புறாப்புல்ல..”ராசா..ஏதாவது, இலக்கியதரமா எழுது..ராசா..ஏதாவது இலக்கியத்தரமா எழுது..” ன்னு..அட பாசக்கார பயபுள்ளையே..நான் என்ன வைச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணுறேன். இலக்கியத்துக்கும் எனக்கு என்னையா சம்பந்தம்..ஜட்டியில..சாரி..இது..சட்டியில இருந்தாதானே அகப்பைக்கு வரும்..சரி பயபுள்ளை ஆசைப்படுது, டிரை பண்ணித்தான் பார்ப்போமேன்னு “இந்த படம் பின்நவீனத்துவ குறியீடுகளால்..” ன்னு எழுத ஆரம்பிச்சா, எனக்கே சிரிப்பா வருது..அதுக்கு மேல எழுதமுடியாம, கை வேற கோணிக்குது. அதனால் என்னைப்படிக்கும் ஒன்னு ரெண்டு நண்பர்களுக்கு என்னுடைய ஒரே வேண்டுகோள்..”வேணாம்யா..இதோட நிறுத்திக்குவோம்..அழுதுருவேன்.”

சரி, தலைப்பாவது வித்தியாசமா வைப்போம்னு, நினைச்சதுல எழுதுனதுதான் “ஆரண்ய நிரோத்..” ஆமாண்ணே..நம்ம ஊருல காண்டம்னாவே, நிரோத்துன்னு தான சொல்லுறாயிங்க..என்னது கேவலமா இருக்கா..சரி..அதை விடுங்க..நம்ம விமர்சனத்துக்கு வருவோம்..

நான் தமிழில் பார்த்த கேங்க்ஸ்டர் படங்கள், இரண்டே இரண்டு. ஒன்று எப்போதும் கூலிங்கிளாசோடு இருக்கும் செல்வராகவன், இயக்கிய புதுப்பேட்டை. இரண்டாவது, இந்த படம்..ஜாக்கிஷெராப் பலாத்காரத்துக்கு முயன்று தோற்று அவளை அடிக்கும்போது..”உங்களுக்கு முடியலைன்னா, என்னை ஏன் அடிக்கிறீங்க..” என்ற டயலாக்கோடு படம் தொடங்கும்போதே, தெரிந்துவிடுகிறது, இந்த படம், பத்தோடு, பதினொன்று இல்லை என்று. கதை என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லை..ஆனால், இரண்டு கேங்க்ஸ்டர் குழுவுக்கு இடையில் நடக்கும், அனுபவங்கள், நடுவில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் கேரக்டர்கள், துரோகங்கள், வன்மங்கள் என்று திரைக்கதை மெல்ல, மெல்ல நம்மை இழுத்துச் செல்கிறது(எங்கேன்னு சப்பை மாதிரி கேக்ககூடாது).

இந்த படத்தை தூக்கி நிறுத்துவது, கேரக்டர்களும், அதில் பங்களித்தவர்களும்..ஒருவரும் சோடை போகவில்லை..”ஏமாத்திப்புட்டாயிங்கப்பா..” என்று முகத்தில் ஏமாளித்தனத்தையை அப்படியே வைத்திருக்கும், அந்த கிராமத்துப் பெரியவரும்..”யோவ்..நீ உண்மையிலேயே லூசா, இல்லாட்டி லூசு மாதிரி நடிக்கிறியா..” என்று பெரியமனுசத்தனம் காட்டும் அந்த சின்னப்பையனும், எப்போதும் “ஈ” என்று காட்டிக்கொண்டு, வில்லத்தனம் செய்யும் ஜாக்கிஷெராப்பும், “அமைதியா இருக்குறவன நம்பக்கூடாது” என்ற சொல்லுக்கு இலக்கணமாக இருக்கும் சப்பை, ரவிகிருஷ்ணாவும், குறைந்தபட்ச நேர்மையோடு இருக்கும் ரவுடியான சம்பத்தும், ஆண்டிகளை கரெக்டு பண்ணுவதாக பெருமை பேத்தும், ஒரு ரவுடியும், ஊமையாக இருந்துகொண்டே காரியம் சாதிக்கும் நாயகியும், பார்த்தாலே, பயப்பட வைக்கும் அளவுக்கு தோற்றமளிக்கும், அந்த கஜேந்திரன் க்ரூப் என் பட்டையைக் கிளப்புகிறார்கள்.

இயக்குநர் “தியாகராஜன் குமாரராஜா..” தமிழ்சினிமாவுக்கு புதிய நம்பிக்கையை விதைக்கிறார். ஒவ்வொரு காட்சிகளையும் அழகாக கோர்த்து, விவரித்து, கடைசியில் அனைத்துக்கும் கிளைமாக்ஸ் மூலமாக விடையளிக்கிறார். படத்தில் யாருமே நடித்ததாக தெரியவில்லை. முடிந்தவரை வாழ்ந்தே இருக்கிறார்கள். அங்கெங்கு தெளிக்கப்படும் கெட்டவார்த்தைகளை மன்னித்துவிடலாம். அவை ஒன்றும் பாதிப்பு ஏற்படுத்தப்போவதில்லை, எஸ்.ஏ சந்திரசேகர் படத்தில் வலிந்து அமைக்கப்படும் கற்பழிப்புக் காட்சிகள் போல. அடுத்து தயாரிப்பாளர் சரண், இந்த படத்திற்காக, நிறைய சிரமப்பட்டதாக கேள்விப்பட்டேன்..அவர் தலைநிமிர்ந்து சொல்லலாம், “தமிழில் இப்படி ஒரு படத்தை காண்பிங்கடா” என்று.

மற்றப்படி, யுவன் பிண்ணனி இசையை சொல்லாமல் விட்டால், பாவம் என்னை ஸ்லோமோசனில் துரத்தும் என்பதால்..இதோ உலகத்தரமான இசை..தேவையான இடங்களில் பார்த்து, பார்த்து, நுட்பமாக இசையமைத்திருக்கிறார், குறிப்பாக, அந்த சிறுவனும், பெரியவரும் வரும் காட்சிகளில், இசை பேசுகிறது..

அந்த சண்டை அமைப்புகள், கொஞ்சம் ஓவராக இருந்தாலும் பார்க்க பார்க்க அழகாக இருக்கிறது..கடைசியாக, “300” படத்தில் இது போல சண்டைக்காட்சிகளைப் பார்த்தது..அடிக்கடி இருட்டு காண்பிக்கும் கேமிராமேன்(கடைசி வரைக்கும் படம்பார்த்தேன், அந்த கேமிரா தெரியலைப்பான்னு கேக்க கூடாது) சிலநேரம் எரிச்சல் கிளப்பினாலும், பலநேரம், காட்சியமைப்புகளில் வித்தியாசம் கொடுக்கிறார், குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் காட்சிகளில்..

முடிவாக, ஆரண்யகாண்டம் – ஒரேவரியில்..”செம…”

Wednesday, 15 June, 2011

சமச்சீர் கல்வியாமுல்ல…

ஏண்ணே..இது ரொம்ப அநியாயமல்ல இருக்கு..பள்ளிக்கூட பசங்க, அவிங்க பாட்டுக்கு நினைச்சவுடனே எந்த பாடப்புத்தகத்தையும் படிச்சுறதா என்ன..அப்புறம் என்னத்துக்கு ஓட்டு போட்டிருக்கோம்.. எந்த ஊரு நியாயம் இது..கவர்மெண்டு என்னைக்கு சொல்லுதோ, அன்னைக்கு படிச்சாப்போதும். இவிங்களா போவாய்ங்களாம். புஸ்தகம் வாங்குவாயிங்களாம்..படிப்பாய்ங்களாம்..எல்லாம் எதிர்க்கட்சி சதிண்ணே..அவிங்க எழுதுன கவிதை, கதை எல்லாத்தையும் மாணவர்களைப் படிக்கவைச்சு அவிங்க தொண்டர்களா ஆக்கணும்னு சதின்னே..அதுதான் உச்சநீதிமன்றம் தெளிவா வைச்சிருச்சு ஆப்பு..குழந்தைகளா..கவர்மெண்டு சொன்னா கேட்டுக்கணும்..அதுக்குத்தான், உங்க வீட்டுல ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துக்குறாயிங்க..

ஒன்னுல இருந்து ஆறாப்பு படிக்கிற புள்ளைங்க எல்லாம், நல்ல பிள்ளையா, போனவாட்டி என்ன படிச்சீங்களோ, அதுவே படிங்க..அதுல எதையாவது..”கருணா..”, “கலைஞ”, இல்லாட்டி “கனிமொ..” அப்படின்னு தெரிஞ்சா, உடனே இன்பார்ம் பண்ணிடுங்க..”க” அப்படிங்குற வார்த்தைக்கு பதிலா இப்பதைக்கு “அம்..” என்று சேர்த்துட்டு படிங்க..ஒரு பிரச்சனையெல்லாம் வராது..அப்படியே வந்தாலும் நிபுணர்குழு பார்த்துக்குரும்..

அடுத்து 6ம் வகுப்புக்கு மேல படிக்கிற கண்ணுங்க ராசா..வீட்டுல உக்கார்ந்து சமத்தா, ஒரு 3 வாரத்துக்கு நம்ம ஜெயா டீவி பாருங்கயா..இதோ..மூணு வாரத்துக்குதான்..அப்புறம் நம்ம நிபுணர்குழு எல்லாத்தையும் படிச்சுட்டு, எதுவாச்சும் எதிர்கட்சி ஆளுங்க ஏதாவது எழுதியிருந்தா, எல்லாத்தையும் நீக்கிட்டு, பிரஸ்ஸா, ஒரு பாடத்திட்டம்…அது போனவாட்டி படிச்சதா..இல்லாட்டி, புதுசா, அப்படிங்குறதெல்லாம், அப்புறம் பார்த்துக்கலாம்.. உங்களுக்கு பிடிச்ச தேங்காய் சட்னியை, இலவச மிக்சில அரைச்சு, அந்த இலவச மின்விசிறியைப் போட்டுவிட்டு, இலவச லேப்டாப்புல, “நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளேன்னு”, புரட்சித்தலைவர் பாட்டு கேட்டுட்டு, ஜெயா டிவி நிகழ்ச்சி பார்த்துட்டு தூங்குங்க ராசாக்களா..கண்ணுங்கள்ள…ஒருபயமும் வேணாம்..எப்போதும் போல நீங்க சிரிச்சிக்கிட்டே இருக்கணும்….ஓகேயா..

இன்னும் கொஞ்சநாளுல பச்சைக் கலர் அட்டை போட்டு புஸ்தகமெல்லாம் கிடைக்கும்பா..நல்லா படிக்கணும் கண்ணுங்களா..அடுத்த 6 மாசத்துக்கு சனிக்கிழமை, ஞாயித்துக்கிழமை எல்லாம் மறந்துரணும் ராசாக்களா..எல்லாம் ஒழுங்கா, பள்ளிக்கூடத்துக்கு வந்தரணும்..உங்க வீட்டுல யாரும் கேள்விகேட்க மாட்டாய்ங்க..ஒன்னும் கவலையேபடாதீங்க….ஏன்னா, அவிங்கதான ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்துருக்காய்ங்க..

அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் நாமம் வாழ்க…

Saturday, 11 June, 2011

சூப்பர் – 8 ஒலகத்திரைப்பட விமர்சனம்

தக்காளி..பதிவரா இருந்துட்டு ஒரு ஒலகப்படத்தைப் பத்தி விமர்சனம் எழுதலைன்னா ஊருக்குள்ள ஒருபய மதிக்க மாட்டிங்குறான்னு பயத்துலேயே, ஒன்னும் புரியலைன்னா கூட, இங்கிலீசு படத்துக்கு போகவேண்டிருக்கு. இந்த மாசம் ஒரு ஒலகப்படத்துக்காவது விமர்சனம் எழுதணும்னு, ஸ்பீல்பெர்க் மேல சத்தியம் பண்ணுனதாலயே , தியேட்டருக்கு போய் சூப்பர்-8 ன்னு ஒரு படம்பார்த்தேண்ணே..இன்னைக்குதான் படம் ரிலீசு போல..

தியேட்டருல பார்க்குறதுல, ஒரு பெரிய பிரச்சனைன்னா, சப்டைட்டில் போடமாட்டாய்ங்க..பக்கத்து சீட்டுக்காரன் சிரிக்குறப்ப, நம்மளும் சிரிக்கவேண்டிருக்கும்.இல்லாட்டி ஒரு மாதிரியா பார்ப்பாய்ங்க.. இங்க நம்மஊரு மாதிரி இடைவேளைல்லாம் போடமாட்டாயிங்க..2 மணிநேரம், ஒன்னுக்கு போகாம பார்த்துதான் ஆகணும்..

ஸ்பீல்பெர்க் தயாரிப்பு, ஏலியன் படம்., கிராபிக்ஸ் கலக்கல், நல்ல ரேட்டிங்க், ப்ரிவியூலய போட்ட காசை எடுத்துட்டாய்ங்கன்னு செம பில்டப்பு வேற. தக்காளி, அதுக்காகவே, இந்த படத்தைப் பார்க்கணும்னு முடிவு கட்டுணேன்னு, சொந்தக்காசுல சூனியம் வைக்கிறது தெரியாம..

படத்தோட கதை இதுதாண்ணே..படத்தோட ஹீரோ ஒரு பொடிப்பையன்..நம்ம ஊருல ஒரு பத்தாப்பு படிப்பாய்ன்னு வைச்சுக்குங்களேன். அவுங்க ஊருல இருக்குற, ஒன்னுமே தெரியாத ஒரு பொம்பளைப் புள்ளைய லவ் பண்ணுறாப்புல..ரெண்டு வீட்டுல கடும் எதிர்ப்பு(ஆஹா..உடனே, லா..லான்னு பேக்ரவுண்டு ம்யூசிக் போட்டுறாதிங்க..) யோவ் இதுல எங்கயா ஏலியன் வந்துச்சுன்னு கேக்குறீங்களா..இருங்க சொல்லுறேன்..ஹூரோவோட ஒரு நாலைஞ்சு குட்டிபிசாசுங்கல்லாம் சேர்ந்து ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுக்குறாய்ங்க..நம்ம ஹீரோதான் மேக்கப்மேன்னு..ஹீரோயினுக்கு மேக்கப் டச்சப் பண்ணுறப்ப லவ் வந்துடுது..யோவ், இதுல எங்கயா ஏலியன் வருதுன்னு கேக்குறீங்களா..இருங்க சொல்லுறேன்..

அப்படி ஒருநாள் நைட்டு ரயில்வே ஸ்டேசன்ல படம் எடுக்குறப்ப, ஒரு பெரிய ரயில்விபத்து..யோவ் இதுல எங்கயா..அங்கதாண்ணே..ஏலியனை அடைச்சுவைச்சுருக்காய்ங்க. அதனோட வாகனத்தையும், சின்ன சின்ன க்யூப்பா உடைச்சு அதுக்குள்ளயே வைச்சிருக்காயிங்க..அப்ப நம்ம ஏலியன்,ரயிலை உடைச்சு, தொலைஞ்சு போன ஒரு க்யூபை தேடுது..அதை கண்டுபிடிக்குறதுக்குள்ள , ஊருக்குள்ள ஒரு பெரிய கலாட்டேவே பண்ணுது..கடைசில அது கண்டுபிடுச்சுச்சா, பஸ்ஸேறி ஊரு போய் சேர்ந்துச்சாங்குறது, பக்கத்துல உக்கார்ந்துக்கிட்டு இருந்த அமெரிக்ககாரங்கிட்ட சுரண்டி, சுரண்டி தெரிஞ்சுக்கிட்ட கதை. அவன் வெளியே வந்து ஒருமுறை முறைச்சான் பாருங்க..யாத்தே…

2 மணிநேர படத்துல, ஒண்ண்ரை மணிநேரத்துக்கு ஒரே பில்டப்புதாண்ணே..நானும், இப்பவரும், அப்பவரும்னு ஒன்னுக்கை கூட அடக்கிகிட்டு காத்திட்டு இருக்கேன்..படுபாவிங்க, கொடுத்த காசுக்கு, பாசக்கார ஏலியன் பயபுள்ளைய முழுசாகூட காட்டலைண்ணே..அதுக்கு ஒன்றரை மணிநேரம் பில்டப்பு..படத்துல ரசிக்கக்கூடிய விசயம்னா அந்த சின்ன பசங்க பண்ணுற கலாட்டா, ஹீரோ, ஹீரோயினுக்குள்ள நடக்குற காதல், அந்த டாலர் செண்டிமெண்டு, அப்புறம் “தி எண்ட்” கார்டுல போடுற, சின்னபசங்க எடுத்த அந்த அமெச்சூர் சினிமா..மத்தபடி, படத்துல, ஏலியனை எதிர்பார்த்து போனிங்கன்னா, பேரரசு படத்துல, யதார்த்தை எதிர்பார்த்து போற மாதிரி ஆயிரும்..

வடிவேலு பாணியில சொன்னா..அண்ணே..இவிங்க நம்ம ஊருக்கும் வருவாயிங்க..நல்ல படம்னு சொல்லுவாய்ங்க..ஏலியன்னு சொல்லுவாய்ங்க..ஸ்பீல்பெர்க்குன்னு சொல்லுவாயிங்க..செமவசூல்னு சொல்லுவாயிங்க..போயிராதிங்கண்ணே..

கடைசியா..யோவ் ஸ்பீல்பெர்க்கு..என் கையில மட்டும் மாட்டுன..தக்காளி தாண்டி..

என்னது..இதை இந்த படத்தை ஏதாவது பிரிவுல சேர்க்கலைன்னா, ஒலகப்பட விமர்சகர்ன்னு ஒத்துக்கமாட்டாயிங்களா..சரி..எழுதிக்குங்க..இந்த படம் கண்டிப்பா....

“விளங்காத படம்..”

Wednesday, 8 June, 2011

இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்

பொதுவாக காலையில் எழுந்தவுடன் தினமும் “தட்ஸ்தமிழ்” செய்திகள் படிப்பது வழக்கம். அலுவலகம் சென்றவுடன் படித்த செய்திகள் கணநேரத்தில் மறந்துவிடும். ஆனால், இன்று படித்த ஒரு செய்தி, இன்னும் என் நெஞ்சைப் பிடித்து உலுக்குகிறது. மனதை ஏதோ செய்கிறது. எதிலும் லயிக்கமுடியாமல் இழுத்துப்பிடிக்கிறது. அந்த செய்தி

“சென்னையிலிருந்து திருப்பூர் சென்ற ஆம்னி பஸ் விபத்துக்குள்ளாகி 23 பேர் மரணம்”

ஒருநிமிடம் இதை படித்துவிட்டு உச்சுக்கொட்டிவிட்டு அடுத்தநிமிடம் வேலையைப் பார்க்கப்போய் விடுகிறோம். எத்தனை கனவுகள், எத்தனை நினைவுகள், எத்தனை லட்சியங்கள், எத்தனை அனுபவங்கள்..அனைத்தும் ஒரு நொடியில், ஒரே நொடியில் பொசுங்கிப் போய்விட்டதே, அழுகைக்கூட அவகாசம் தராமல். அந்த பேருந்தின் எத்தனை இதயங்கள் காலை வீடு சென்று தன் குழந்தையை கொஞ்ச நினைத்திருக்கும், எத்தனை இதயங்கள், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் கண்டிருக்கும். எத்தனை இதயங்கள், வீட்டில் காத்திருக்கும் தாயைப் பார்க்க சென்றிருக்கும். அத்தனையும் ஒரு நொடியில்…

எல்லாவற்றிற்கும் ஒரே காரணம், ஒழுங்கின்மை. ஆம்னி பஸ்கள் அடிக்கும் கொள்ளை பற்றி எழுதினால் ஒரு புத்தகமே போடலாம்.. கொள்ளை அடித்தால் கூட, அட பணம் போய்விட்டது என்று அலட்சியப்படுத்தலாம், ஆனால், விலைமதிக்கமுடியாத உயிர்கள் போனால். அப்படி என்ன ஒரு வேகம் வேண்டி கிடக்கிறது. அந்த சாலையில் போகவேண்டிய வேகத்தில் போயிருந்தால், இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்பே இல்லை. சாதாரண பஸ் பயணம் 8 மணிநேரம் என்றால், நாங்கள் ஆம்னி பஸ் 5 மணிநேரத்தில் சென்றுவிடுவோம் என்ற ஒழுங்கின்மையே இத்தனைக்கும் காரணம். எந்த போக்குவரத்து காவலராவது வழிமறைத்தால், இருக்கவே இருக்கு 50 ருபாய் லஞ்சம்..போய்கிட்டே இருப்போம்..சே..என்ன கொடுமை இது..

ஒருமுறை டிரைவர் பக்கத்தில் சென்று அமர்ந்து பாருங்கள், நான் சொல்லும் வார்த்தைகளின் விபரீதம் புரியும். சத்தியமாக சொல்லுகிறேன்..அடுத்தமுறை அருகில் அமரவே மாட்டீர்கள். அவ்வளவு வேகம்..ஒழுங்கின்மை..அப்படி 2 மணிநேரம் முன்பாக போய் அப்படி என்னதான்…..சத்தியமாக..கோபத்தில் கெட்டவார்த்தை வருகிறது..

ஒவ்வொரு சாலையிலும், இவ்வளவு வேகம்தான் செல்லவேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. இதை கண்காணிப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையும் உண்டு. ஆனால் ஒருமுறையாவது, எந்த பேருந்தையாவது நிறுத்தி, அபராதம் வாங்கியதாக வரலாற்றில் கேள்விப்பட்டதில்லை. அப்படியே நிறுத்தினாலும் இருக்கவே இருக்கிறது, சைடில் 50 ரூபாய்..அப்படியே பழகிவிட்டோம்..வாங்கியும் கொடுத்தும்..இதுபோன்று மொத்தமாக பறிகொடுக்கும்போதும், அந்த வலி தெரியும்.

வழக்கம்போல தமிழக அரசு இறந்தவர்களுக்கு ஒரு லட்சம் என்று அறிவித்திருக்கிறது. உயிரின் மதிப்பும் அவ்வளவுதான் போலிருக்கிறது. இந்த ஒரு வாரத்திற்கு பாருங்கள் எங்கு பார்த்தாலும் செக்கிங்காக இருக்கும். எல்லா டிரைவர்களும் ஒழுங்காக செல்லுவார்கள். எல்லாம் ஒரு வாரம்தான். அடுத்த வாரமே, திரும்பவும் ஆரம்பித்துவிடும்..அதே வேகம்..அதே ஒழுங்கின்மை..அதே கையூட்டு…அப்புறம் மொத்தமாக இப்படி வாரிக்கொடுத்தல்..

இவர்களைப் பார்க்கும்போது, சட்டையைப் பிடித்து ஒரு கேள்வி கேட்க ஆசை..”இன்னும் எத்தனை உயிர் பலிகொடுக்கவேண்டும், இவையெல்லாம் நடக்காமல் இருக்க…”

Sunday, 5 June, 2011

அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???

ஏறக்குறைய மூன்று வாரங்களாகிவிட்டது தமிழகத்தில் புரச்சி ஏற்பட்டு. தமிழகம் தலைகீழாக மாறிவிட்டதா..தமிழகத்தில் குடும்ப ஆட்சி ஒழிந்துவிட்டதா..தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறிவிட்டதா, என்ற கேள்விகள் அவசரக்குடுக்கைத்தனமாக இருந்தாலும், அதற்கு ஏதாவது அறிகுறிகள் தென்படுகிறதா என்பது தவிர்க்கமுடியாத மற்றும் நியாயமான கேள்வி. உண்மையிலேயே ஏதாவது அறிகுறி தென்படுகிறதா என்று கேட்டால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தென்படவில்லை.

சமச்சீர் கல்வி பற்றி பரிசீலிப்போம் என்று கல்விஅமைச்சர் பதவியேற்ற முதல்வாரத்தில் சொல்லியபோது, “ஆஹா..திருந்திட்டாயிங்க போலிருக்கு” என்று சொல்லியவர்கள் வாயில் வண்டி, வண்டியாக மண் அள்ளி போட்டிருக்கிறது தமிழக அரசு. “அதெப்படி..இது கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த திட்டமாச்சே, அதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்ற மனப்பான்மையே இதற்கு காரணம். கலைஞர் ஆட்சியில் கொடுத்ததாக சொல்லப்பட்ட புளுத்த அரிசி, அம்மா ஆட்சியில் தங்கமாக ஜொலிப்பதன் காரணம் மட்டும் இன்னும் புரியவில்லை..நடப்பது அம்மா ஆட்சியல்லவா. தொட்டதெல்லாம் தங்கமாகும்.

“நான் ஆட்சியமைத்த அடுத்தநாளே, செயின் திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டதாக கேள்விப்படிகிறேன்” என்று முதல்வர் பெருமிதபுன்னகையோடு சொல்லி வாய்மூடுவதற்குள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பழகருப்பையா மனைவியின் கழுத்தில் உள்ள செயினை யாரோ அறுத்துவிட்டதாக செய்திகள் வந்தன. ஆந்திராவுக்கு ஓடுறதுதான் ஓடுறோம், கடைசி, கடைசின்னு ஒரு செயினை அறுத்துட்டு ஓடுவோமே என்று திருடன் இதை செய்திருக்கிறான், என்ற புரிந்துணர்வு உங்களுக்கு வந்துவிட்டாலே போதும், நீங்கள் தமிழன் என்ற அடையாளத்தை இன்னும் இழக்காமல் இருக்கிறீர்கள் என்னும் பெருமிதம் அடையலாம்..

“பார்த்தியா..அம்மாதான் வருவாருன்னு கரெக்டா கணிச்சேன் பார்த்தியா” என்று பல ஜோசியர்கள் அம்மாவின் அப்பாயிண்ட்மெண்டுக்காக காத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.. திங்கள் கிழமைக்கு அடுத்து செவ்வாய்கிழமை என்று கரெக்டாக கணித்து சொல்லி, நீங்களும் ஜோசியர் ஆகலாம் என்பதால், இந்த குற்றச்சாட்டை எளிதாக புறம்தள்ளிவிடமுடியும்.

ஆனாலும் அம்மா ஆட்சியில் சில ஆறுதல்கள் உண்டு. செல்லும் வழியெங்கும் ட்ராபிக் நிறுத்தியதாக கேள்விப்படவில்லை. இதுவே சென்னைவாசிகளுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம். அடுத்து “தங்கதாரகையே..தைரியலட்சுமியே, பாசத்தலைவனே” என்று யார் பதவிக்கு வந்தாலும் பேசும் நாக்குகளுக்கும், ஒரு தடா..முதல்வர் எந்த பாராட்டுவிழாவிலும் கலந்துகொள்ளபோவதில்லையாம்..முதல்வர் ஆரம்பித்த இலவச அரிசி வழங்கும் திட்டம் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டதும் இன்னொரு அதிர்ச்சி..

“தமிழக அரசு சரியான நேர்கோட்டில் செல்கிறது” என்று விஜய்காந்த் கூறியதில் ஆச்சர்யபட ஒன்றும் இல்லை. அப்படித்தானே பேசவேண்டும், அடுத்த மூன்று வருடங்களுக்கு. வழக்கம்போல கலைஞரும் “உடன்பிறப்பே” என்று கடிதம் எழுதுவிட்டு கனிமொழிக்காக தில்லி சென்றிருக்கிறார். இனிமேலும் எதற்கு மத்திய அரசில் பங்கு வகிக்கவேண்டும் என்று நியாயமான கேள்வி எழுப்பினால் உங்களைப்போல முட்டாள் யாருமே இல்லை. மீதி இருக்கும் அமைச்சர்களை எப்படி காப்பாற்றுவது. ஆனாலும் கலைஞர் ஒன்றும் செய்யவேண்டியதில்லை என்றே சொல்லுவேன். நாலு வருடம் அறிவாலயத்தில் ஓய்வு எடுத்துவிட்டு, கடைசிவருடம், “தமிழக அரசின் அராஜகங்கள் பாரீர்” என்று அவ்வப்போது குரல்கொடுத்தால் போதும், அடுத்த ஆட்சி கலைஞர் கையில். அட,குரல்கூட கொடுக்கவேண்டாம், அமைதியாக இருந்தாலே போதும், கண்டிப்பாக அடுத்து திமுக ஆட்சிதான். ஏனென்றால், 5 வருட காண்டிராக்ட் முடிந்து தமிழக மக்கள் நியதிப்படி, அடுத்த காண்டிராக்ட் அவர்தானே எடுக்கவேண்டும்

எண்ணைய்சட்டி போல் இருக்கிறது, தண்ணி டாங்கு போல இருக்கிறது என்று காரணம் காட்டி, பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய தலைமைச்செயலகத்திற்கு என்ன கதி என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழகஅரசின் கொள்கைவிளக்க துறை என்று ஆரம்பித்து, அனைத்து அலுவலர்களும் பச்சை நிற உடை அணிந்து, அந்த அலுவலகத்தில் வேலைபார்க்கும் நிலை வந்தாலும் ஆச்சர்யபடுவதில்லை. கடற்கரையோரம் சிலம்பை நீட்டிக்கொண்டு நிற்கும் கண்ணகிக்கும் இப்பவே லைட்டா காய்ச்சல் அடிப்பதாக காற்றுவாக்கில் செய்திகள் வருகின்றன.

அரசுவேலை பார்ப்பதற்கு, கல்லூரி படிப்பெல்லாம் படிக்கவேண்டும் என்ற தகுதி போய், நாக்கை வெட்டலாமா, விரலை வெட்டலாமா என்று பலபேர் யோசித்துக்கொண்டிருப்பதாகவும் கேள்விப்படுகிறேன்..”நம்ம நாக்கைதான் வெட்டணுமா..புருசன் நாக்கை வெட்டுனா, எங்களுக்கு வேலை தருவாய்ங்களா பாஸ்” என்று மனைவிமார்கள் வாய்ப்பு தேடிகொண்டு இருப்பதும் காற்றுவாக்கில் வந்து கிலியேற்படுத்துகின்றன. மனைவி காய்கறி வெட்டும்போது, கண்டிப்பாக வாய்மூடி இருக்கவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.

மொத்தத்தில் மூன்று வார தமிழக ஆட்சி ஓகே என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. ஆனால் “அது வேற வாயி..இது நாற வாயி” என்பது போல், இன்னும் சசிகலா என்னும் பேட்ஸ்மேன் களத்திலேயே இறங்காததால் எதையும் உறுதியாக சொல்லமுடியவில்லை..

Saturday, 4 June, 2011

பாபா ராம்தேவ் - ஒருநாளில் பிரபலம் ஆகவேண்டுமா..??

தேசம் உங்களை கவனிக்கவில்லையே என்று வருந்துகிறீர்களா..தேசம் உங்களைப் பற்றி ஒருநாளாவது பேசவேண்டும் என்று விரும்புகிறீர்களா…நீங்கள் சார்ந்த துறைகளில் கடுமையாக உழையுங்கள்..படிபடியாக முன்னேறுங்கள்..தோராயாமாக எவ்வளவு நாளாகும். ஒரு 20 வருடங்கள்..அல்லது 30 வருடங்கள்..அடப்போங்க சார்..அதுவரைக்கும் காத்திருக்கமுடியாது..நாளைக்கே தேசம் என்னைப்பற்றி பேசவேண்டும். எந்த சானலை திருப்பினாலும் என் முகம்தான் தெரியவேண்டும்..என்ன முடியுமா..

முடியும்..எப்படி..முக்கு கடையில் 50 ரூபாய்க்கு ஒரு சமுக்காளத்தை வாங்கிக் கொள்ளுங்கள். கடைக்காரன் 80 ரூபாய் சொல்லுவான்…விடாதீர்கள்..50 ரூபாய்க்கு பேரம் பேசுங்கள்..இறங்கி வருவான். நேராக மெரினா பீச் செல்லுங்கள். நட்ட நடு இடத்தைப் பார்த்து உக்கார்ந்து கொள்ளுங்கள்..எல்லாருக்கும் கேட்கும்படி சத்தமாக “ஊழலை ஒழிப்போம்..மத்திய அரசே நடவடிக்கை எடு..ஊழல் ஒழியும் வரை சாகும் வரை உண்ணாவிரதம்” என்று அடித்தொண்டையில் இருந்து கத்துங்கள்..நன்றாக கவனியுங்கள்..”மத்திய அரசே நடவடிக்கை எடு” என்று கவனமாக சொல்லவேண்டும்..அப்போதுதான் வடஇந்திய சானல்கள் அலறியடித்துக் கொண்டுவரும். உணர்ச்சிவசப்பட்டாவது “மத்திய” அரசிற்கு பதில் “தமிழக” அரசே என்று சொல்லிவிடக்கூடாது..அப்படி உளறிவிட்டால் போச்சு..பொடா, தடா, கடா சட்டங்கள், கடுமையாக உங்கள் மேல் பாய்ந்து 2 வருடங்கள் உள்ளிருக்க நேரிடும். அதனால் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

இப்படித்தான் இருக்கிறது தேசத்தின் நிலை. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோதுதான், நம் இளைஞர்களுக்கு தேசபக்தி பீறிட்டுக்கொண்டு வந்தது. “ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேவுடன் கரம் கோர்ப்போம்” என்ற முழக்கம், பேஸ்புக் மற்றும் இணையதளங்களில் நொடிக்கொரு முறை ஒளிபரப்பப்பட்டது. அதென்னமோ தெரியவில்லை, நம் இளைஞர்களுக்கு, சுதந்திர தினத்தின் போது முட்டாய் கொடுக்கும்போதோ, தியேட்டர்களில் தேசியகீதம் ஒளிபரப்பபடும்போதோ, ரோஜா படத்தில் “தமிழா, தமிழா..” என்று கொடியை எரிக்கும்போது மட்டும்தான் தேசபக்தி பொத்துக்கொண்டு வருகிறது..

இதன்விளைவுதான், அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தின் போது புல்லரித்துப்போய் “ஊழலை ஒழிப்போம்” போன்ற வெற்று கோஷங்கள்..அடக்கொடுமையே..கோஷம்போட்டு ஊழலை ஒழிக்கமுடியுமா என்ன..அப்படி புல்லரித்து கோஷம்போட்டு, உண்ணாவிரதத்தின் முதல்வரிசையில் உக்கார்ந்து இருக்கும் இளைஞர்களிடம் கேட்டு பாருங்கள்..”எத்தனை பேர் கடந்த தேர்தலில் ஓட்டுபோட்டீர்கள்..” தொண்ணூறு சதவீதம்பேரிடமிருந்து “இல்லை” என்றுதான் பதில் வரும். அப்புறம் எப்படி வெங்காயம் ஊழலை ஒழிப்பது.

நல்லவர்களை தேர்ந்தெடுத்தாலே போதுமே, பாதி ஊழலை ஒழித்து விடலாமே..நாம் ஓட்டு போடாததால் தானே, ஊழல் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருகிறார்கள்..நாம் ஓட்டு போடாததால் தானே, கிரிமினல்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். ஊழலின் வேரை நன்றாக தழைக்கவிட்டு, “கிளை”யை வெட்டுவோம் என்று கூச்சல் போடுவதால் என்ன பயன், இவன் இல்லை என்றால் அடுத்தவன் வருவான். அதே ஊழலை, இன்னும் வித்தியாசமாக செய்வான். அதை ஒழிப்பதாக கோஷம் போட்டுக்கொண்டே, அன்னா ஹசாரேக்களும், பாபாக்களும். இவர்களும் ஏதோ ஊழலை நாளைக்கு ஒழித்து, சுத்தமான தேசத்தை கொண்டு வந்துவிடுவார்கள் என்று நம்பிக்கொண்டு, இன்னும் ஓட்டுபோடாத இளரத்தங்களும் முதல்வரிசையில்..

சரி..ஊழலை ஒழிக்கமுடியுமா என்று கேட்டால், முடியும் என்றே சொல்லுவேன். அது அன்னா ஹசாரே, பாபாராம்தேவ் கைகளில் இல்லை..நம் கைகளில்தான் உள்ளது. செய்த தவறை மறைக்க போக்குவரத்து காவலர்களின் கையில் நைசாக 10 ரூபாய் திணிக்கும்போதே ஊழல் ஆரம்பித்துவிடுகிறது. எங்கே கொடுக்கமாட்டோம் என்று அடம்பிடித்து அவரை ஒழுங்காக ரசீது கொடுக்க சொல்லுங்களேன். அங்கேயே, ஊழலுக்கு முதல் அடி..இப்படி ஒவ்வொருவரும் ரசீது கேட்க ஆரம்பித்தால் போதும், எந்த போக்குவரத்து போலீஸ் சைடில் காசு கேட்பார். அய்யோ 200 ரூபாய் ஆகுமே என்றால், கட்டித்தான் ஆகவேண்டும்..நாம் ஒழுங்காக போக்குவரத்து விதிகளை மீறினதற்கு தண்டனையாக இதை எடுத்துக்கொள்ளலாமே.

மேலே நான் சொல்லியது ஒரு எடுத்துக்காட்டுதான். இப்படி பல சம்பவங்கள், நம் வாழ்க்கையோடு ஒரு அங்கமாக இருக்கிறது. எல்லா ஊழல்களுக்கும் நாமே காரணமாக இருந்து விட்டு “அய்யோ 100 கோடி அடிக்கிறான். 1000 கோடி அடிக்கிறான்..” என்று கத்தி என்ன பயன். நாம்தானே அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்..நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்று அடம்பிடித்துதான் பாருங்களேன்..கொஞ்சம் செலவுதான் ஆகும்..ஆகிவிட்டுதான் போகட்டுமே..ஒரு தேசமே நன்றாக இருக்குமே. ஒவ்வொரு இந்தியனும், ஊழல் செய்ய பணம் கொடுக்கமாட்டேன் என்று அடம்பிடித்தாலே, நாட்டில் ஊழல் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

அப்படி இல்லையென்றால், ஒரு நாள் கூத்துக்காக, அன்னா ஹசாரேக்களும், ராம்தேவ் பாபாக்களும், செய்யும் உண்ணாவிரதத்துக்கு, புல்லரித்துக்கொண்டு போகும் இளைஞர் பட்டாளத்தை காண்பிக்கும் நியூஸ் சானல்களை, வீட்டில் பஜ்ஜி தின்றுகொண்டே பார்க்கவேண்டியதுதான்.ஊழலின் ஒரு மசுரையும் புடுங்கமுடியாது..