Sunday, 28 June, 2009

பிரபல பதிவர்களின் ஸ்கூல் அனுபவங்கள்சமீபகாலமா பதிவுலகத்தைப் பார்த்தா ஒரே சண்டையா இருக்குண்ணே..இதெல்லாம் பார்க்குறப்ப எனக்கு ஸ்கூலுல போட்ட சண்டைதான் ஞாபகம் வருது..அப்படியே நம்ம பிரபல பதிவர்களையும் ஒரு ஸ்கூலுல ஒரு நாள் வச்சிருந்தா எப்படி இருக்கும்னு நினைச்ச கற்பனையே இந்த பதிவு..இது யாருடைய மனத்தையும் புண்படுத்தும் நோக்கமல்ல..எல்லோரும் வாய் விட்டு சிரிக்கவே இந்த பதிவு..இந்த பதிவில் உள்ள பெயர்கள் அந்த பாத்திரங்களின் குணாதிசியத்தை குறிப்பதல்ல..அது போல இங்கு உள்ள கதாபத்திரங்கள் ஸ்கூல் பையன்கள் போல சித்தரிக்கப்பட்டுள்ளதால் வாடா, போடா என்று பேசிக்கொள்வர்

(ஸ்கூல் மணி அடிக்க எல்லோரும் வகுப்பறைக்கு வருகின்றனர்..டீச்சர் வர லேட் ஆகிறது)

செந்தழல் ரவி : என்ன தல..கிளாஸ் ரொம்ப அமைதியா இருக்கு..கூடாதே..ஏதாவது இம்சையக் கொடுப்போமா..??

லக்கிலுக் : ஏ..யப்பா நீ சும்மா இருக்க மாட்டியா..டீச்சர் வரப் போறாங்க

(பின்னூட்ட குரல்கள்) மீ த பர்ஸ்டு..மீ த செகெண்டு..ரீப்பிட்டு..பின்னீட்ட தல..

லக்கிலுக் : ஆகா, ஆரம்பிச்சிட்டாயிங்கப்பா..இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படியெல்லாம் பின்னுறீங்க..அமைதி..நான் கூப்பிட்டா மட்டும் வந்தாப் போதும்

செந்தழல் ரவி : தல..யாரயாவது ஓட்டனுமே..இந்த சக்கரை சுரேஸ் பயல பாரு..ஒரு மாசமா அம்னீசியா வந்த மாதிரி இருக்கான்..ஏ சுரேஷ்..எங்கயா உங்க லட்சிய நாயகன் சரத்பாபு..ஹலோ எப்.எம்ல விளம்பரம் கொடுத்துட்டு, காசு கொடுக்காம ஓடிப் போயிட்டாராமே..நல்லா கூகிள் விளம்பரம் மட்டும் சைட்டுல குடுக்கத் தெரியுதுல்ல..

சக்கரை சுரேஸ்(பாவமான முகத்துடன்) : மச்சான்..ஏன்யா என்னைய ஓட்டுறீங்க…பதிவுலகம் ஒரு போதை மச்சான்..இனிமேல் மாசத்துக்கு ஒரு பதிவுதான் போடப் போறேன்..பதிவுலகப் பெருமக்களே..

லக்கிலுக் : ஆஹா..புஸ்ஸுன்னு போச்சே..சுரேசு, முதல்ல அதப் பண்ணு..தண்ணியனாவேன்..

செல்வேந்திரன் : என்னது தண்ணியடிப்பியா..போடுறேன்யா ஒரு கிசு கிசு..மக்களே பிரபல பதிவர் ஒருவருக்கு தண்ணியடிக்கும் பழக்கம் இருக்கிறதாம்..அவரைப் பற்றிய ஒரு க்ளூ..பெயரில் இரண்டு வார்த்தைகள்தான் இருக்கும்..ஒன்று லக், மற்றொன்று லுக்..இடையில் வேறு வார்த்தைகள் இருக்காது..

லக்கிலுக் : யே..தண்ணியனாவேன்னா வேறு அர்த்தம்யா..விட்டா நமக்கே கோல் போட்டுறாயிங்க போலிருக்குதே..

செந்தழல் ரவி : இரு தல..நான் பார்த்துக்கிறேன்..என்ன செல்வா..ஒன்னுக்கொன்னா பழகிட்டு என்ன இருந்தாலும் நம்ம ஜ்யோவ்ராம் சுந்தர் பத்தி இவ்வளவு மட்டமா எழுதி இருக்க கூடாது..சுந்தர் நீங்க என்ன பீல் பண்றீங்க..(தல, எப்படி..லக்கியைப் பார்த்து கண்ணடிக்கிறார்)

சுந்தர்(டெர்ராகி) : கும்மாங்குத்து..என்ன பார்த்து என்ன சொன்னாலும் தாங்கி இருப்பேன்யா..என்னப் பார்த்து தாத்தா ன்னு சொல்லிப்புட்டாயிங்கய்யா..என்னப் பார்த்தா தாத்தா மாதிரியா இருக்கு..யூத்துய்யா..

லக்கிலுக் : (மனசுக்குள்…ஆகா நினைப்புத்தான் பொழப்பைக் கெடுத்துச்சாம்) ஒருவேளை உங்க ஹேர் ஸ்டைலப் பார்த்து சொல்லி இருப்பாரோ..

செந்தழல் ரவி : பின்னிட்டீங்க போங்க..

செல்வேந்திரன் : ஐயோ ..உங்க கூட சண்டை போடுறதுக்கெல்லாம் நேரம் இல்ல..ஆயிரத்தெட்டு வேலை இருக்கு..நேத்துக் கூட பாருங்க..விஜய் டி.வில ஒரு பல்பு எரியலையாம்..என்னத்தான் கூப்பிடுறாயிங்க..

சுந்தர் : ஆமா..அமெரிக்காவுல சி.என்.என் கூப்பிட்டாயிங்க..யு.கேவுல பி.பி.சி கூப்பிட்டாயிங்க..என்னையா கலர் கலரா ரீல் விடுறீங்க..

கேபிள் சங்கர் : என்னது விஜய் டி.வியா..அத யாரும் பாக்காதிங்கப்பா..ஜெயா டி.வி பாருங்க..பிண்ணி எடுக்குறாயிங்க..

செந்தழல் ரவி : ஆமா……நீங்க நடிச்ச சீரியல் போடுறாயிங்கள்ள..அதுதான்..சீரியல்ல நடிங்க..வேணான்னு சொல்லல்ல..ஆனா, அதுல நடிச்ச போட்டோவை தயவு செஞ்சு பதிவுல போடாதீங்க..குழந்தைங்க பயப்படுதுல்ல…அங்க யாரு உக்கார்ந்து இருக்கிறது..உண்மைத் தமிழனா..என்ன 15 நாளா பதிவே போடல..

உண்மைத் தமிழன் : ஆமாப்பா..எங்க நேரம் கிடைக்குது..ஏதோ எம்பெருமான் முருகன் தயவுல ஓடுது..பதிவு எல்லாத்தையும் டைப் பண்ண ரெண்டு நாள் ஆகுதுப்பா..சின்னதா பதிவு போட்டாலும் ஏத்துக்க மாட்டுராயிங்க..நீயாவது ஏன் மேல அக்கரைப் பட்டு கேட்டியே..இப்பவே எழுத ஆரம்பிச்சுறேன்..

செந்தழல் ரவி : (மனதுக்குள்..ஆகா..15 நாள் இம்சை இல்லாம இருந்தோம்..இப்படியே கன்டினியூ பண்ணுங்கன்னு சொல்லுறதுக்குள்ள முந்திக்கிட்டாரே..) அங்க யாரு வர்றது..அவிங்க ராசவா..

அவிங்க ராசா : அண்ணே..வணக்கம்ணே….இப்படித்தான் இங்க அமெரிக்காவுல….

செந்தழல் ரவி : அடியே..இருக்குடி உனக்கு..பாவம் சின்னப் பையன்னு விட்டா, எங்களயே கட்டையக் குடுக்குறீயா….இனிமே பிரபலப் பதிவர்களுடன் படகுப் பயணம், ஸ்கூல் அனுபவம்ன்னு ஏதாவது எழுது..மகனே இருக்கு..

லக்கிலுக் : எதுக்கு ரவி டென்சனாகுற..ஏ ராசா, நீ சிறுகதைப் போட்டிக்கு உன்னோட சிறுகதை அனுப்பி இருக்கீல்ல..ரவி, விமர்சனம் பண்ணுயா..

அவிங்க ராசா : அண்ணே.வேணான்னே..இது தெரிஞ்சா அனுப்பியே இருக்க மாட்டேண்ணே..

ஜாக்கி சேகர் : லக்கி..அவனை ஏன்யா ஓட்டுறீங்க..என்னோட உடை களையும் முன் யோசிங்க பெண்களேன்னு ஒரு பதிவு எழுதி இருந்தேனே படிச்சீங்களா..எவ்வளவு எதிர்ப்பு தெரியுமா..ஒரு நல்ல விசயம் யாரும் சொல்ல விட மாட்டிங்குறாயிங்க..

கேபிள் சங்கர் : எது….நடிகை அனுஷ்கா கவர்ச்சியா போஸ் கொடுத்த மாதிரி, சும்மா குளுகுளுன்னு ஒரு பதிவு போட்டிருந்தீங்களே..அதுவா..சூப்பருண்ணா..நீங்க கொடுத்த எச்சரிக்கையில உள்ள புளூபிலிம்மை விட சும்ம டகால்டியா இருந்துச்சு..

செந்தழல் ரவி : சங்கரு..ஜாக்கிதான் பிட் படம் பார்ப்பேன்னு ஒத்துக்கிட்டாரே..ஜாக்கி சேகர்..நீங்க தைரியமா எழுதுங்க..

லக்கிலுக் : ஆமா..உங்க கருத்து உங்களது..என் கருத்து என்னோடது..உங்க கருத்தை நிலைநிறுத்த போராடினால் நானும் என் கருத்தை….

சுந்தர் : ஆஹா….ஆரம்பிச்சுட்டாருய்யா..இனி யாருக்கும் புரியாது..

(டீச்சர் வகுப்புக்குள் என்டர் ஆக எல்லாரும் எழுந்து கோரஸாக)

டீச்சர்..பக்கத்துல உள்ள பதிவர் என்னைக் கிள்ளி வைச்சிட்டான் டீச்சர்…


Thursday, 25 June, 2009

தொட்டு விடும் தூரம்தான் சொர்க்கம்

(வீட்டிலுருந்து அம்மா போன் பண்ணியிருந்தார்கள்..என் 75 வயது மாமா சீரியஸாகி டாக்டர் கைவிரித்துவிட்டாராம். ஒரு வாரம் டைம் கொடுத்திருக்காரம்..வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார்கள்..அவருடைய மனநிலையில் நின்று யோசித்த போது கிடைத்தவை)

என்ன ஆயிற்று என் கால்களுக்கு..அசைக்கக் கூட முடியவில்லையே..டாக்டர் ஒரு வாரம்தானே கெடு கொடுத்திருந்தார்..இரண்டு நாள்கள்தானே ஆயிற்று..இந்த கண் வேறு சரியா தெரியவில்லை..இதுவரைக் கோடுகளாய் தெரிந்த பிம்பங்கள் புள்ளிகளாய் தெரிகிறதே..அப்போ நான் செத்து போகப் போகிறனா??? என்னை சுற்றி ஒரு 10 புள்ளிகள் நிற்கும் போல இருக்கிறதே..இவர்களுக்கு என்ன வேண்டும்..ம்…ஒரு புள்ளி பக்கத்தில் வருகிறது..ஓ..மூத்தவனா..அருகில் இருப்பது யார்..மூத்த மருமகளா..

“அப்பா…ஆபிஸ்ல லீவு கொடுக்க மாட்டேங்குறாங்க..ஏற்கனவே உங்களை ஹாஸ்பிடல்ல பார்க்குறதுக்காக ஒரு வாரம் லீவு போட்டிருந்தேன்..லாஸ் ஆப் பே..நான் கிளம்புரேன்பா..எல்லாம் முடிஞ்சப் பிறகு வரேன்..”

ம்…எனக்கு சிரிப்புத்தான் வருது..எல்லாம் முடிஞ்சப் பிறகுன்னா, நான் செத்தப்பிறகா..அப்புறம் நீ வந்தால் என்னா, வராவிட்டால் என்ன..மனசை யாரோ இறுக்கி பிசைவது போல இருந்தது..சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான் போல. அவனுடைய கால்களை மட்டும்தான் பார்க்க முடிந்தது..எத்தனை தடவை அந்த பிஞ்சுக் கால்கள் நெஞ்சில் உதைத்திருக்கும்…அவன் சின்னப்பிள்ளையா இருக்கும்போது மஞ்சக்காமாலை வந்த போது நான் டாக்டர் காலை பிடித்து கெஞ்சியது நினைவுக்கு வந்து தொலைத்தது..ஒரு மாசம் மூத்தவனுக்காக ஹாஸ்பிடலில் இருந்து பகலில் தூங்கி, ராத்திரியில் மருந்து கொடுத்து “லாஸ் ஆப் லைவ்” வுக்கு கிடைத்த நன்றி “லாஸ் ஆப் பே..”

“அப்பா..நாந்தாப்பா..கேக்குதாப்பா”…இது யாரு, சன்னமாய் ஒரு குரல் கேட்கிறதே..மூத்த பொண்ணு…அம்மாடி, வாயை திறந்து உன்னை வான்னு சொல்லக்கூட முடியலயே..கூட யாரு..அருமைப் பேத்தியல்லவா..வாடி செல்லம்..நான் படுத்திருக்கும்போது என் நெஞ்சில உக்கார்ந்துக்கிட்டு ரைம்ஸ் சொல்லுவியே..இப்பச் சொல்லுடா..

“ஏண்டி..அந்த உயிலைப் பத்திக் கேளுடி..” யார் முணுமுணுக்கிறது..மருமகனா….பொண்ணைக் கல்யாணம் பண்ணும்போது “மாமா..உங்க சொத்து எதுவும் வேணாம்..உங்க மகளும், நீங்களும்தான் எனக்கு பெரிய சொத்து..” நீங்க தானே

“சும்மா இருங்க..அப்பாவால கண்ணைத் தொறக்க முடியல..வாய் கூடத் தொறக்க முடியல..எப்படிங்க சொல்லுவாரு.நான் அண்ணங்கிட்ட பேசிக்கிறேன்..என் பங்கை எப்படிங்க விடுவேன்..”

எங்கே என் கடைக்குட்டிப் பையன்..ஆசைஆசையா படிக்க வச்சு அமெரிக்காவுக்கு அனுப்புறப்ப நானும் உங்க அம்மாவும் கண் முழுக்க தண்ணிய வச்சுக்கிட்டு பிளைட்ட பார்த்து அழுதோமே..எங்க என் செல்வம்…அதோ..என்னை நோக்கி வர்றான்..என்னால வாயைத் திறக்க முடியலேயே..என் ராசா, பார்த்து இரண்டு வருசம் ஆச்சேப்பா..இப்படி இளைச்சுப் போயிட்டேயேப்பா..

“அக்கா, அமெரிக்காவுல இருந்து வந்து 2 வாரம் ஆச்சு..நான் போகனும்..உனக்குத்தான் இப்ப அமெரிக்காவுல இருக்கிற நிலவரம் தெரியுமே..நான் கண்டிப்பா இருக்கணுமா??..நீங்களே எல்லாக் காரியத்தையும் பண்ணலாமே..நான் வேணா 10,000 குடுத்துட்டு போறேன்..”

ம்ம்…..பம்பரம் வாங்குறதுக்காக உன் உள்ளங்கையில ஒரு ரூபாய வைக்கிறப்ப, உன் முகத்துல தெரிஞ்ச சந்தோசத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம்னு உங்கம்மாக்கிட்ட சொன்னேன்

அய்யோ உங்கம்மாவை மறந்துட்டேனே..எவ்வளவுதான் அவமானப்பட்டாலும் சிரிச்சிக்கிட்டே முந்தானையால என் கண்ணீரத் தொடச்சு விட்டாளே..கண்டிப்பா நீ சொர்க்கத்துலதாண்டி இருப்ப..எனக்கு தெரியும்..சாகுறப்ப உன் கையப் புடிச்சிக்கிட்டு அழுதேனே..அப்பக்கூட சின்னப்புள்ள மாதிரு உன் முந்தானயால கண்ணீரைத் தொடச்சி விட்டீயே..என் உயிரே..கொஞ்ச நேரம் பொறு..இதோ, வந்து விடுகிறேன்..அங்கு யாரும் நமக்கு இல்லை..சந்தோசமா இருப்போம்..உயில் இல்ல, காசு இல்ல, மருமகள், மகன் , சொந்தக்காரன் இல்ல, கண்ணீர் இல்ல, அவமானம் இல்ல..இங்க நாம் தவறிய வாழ்க்கைய அங்கு வாழ்வோம்..

“ஏம்பா, பெரியவர் கண்ணு சொருகுற மாதிரி தெரியுது..சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்புங்கப்பா..”

“ஏதோ, வாயில பால் ஊத்தனும்னு சொல்லுவாங்களேப்பா, யாராவது பால் கொண்டுவாங்குப்பா..”

“ஏன்யா..யாராவது மேளத்துக்கு சொன்னீங்களாய்யா..”

“அவிங்க அப்பவே வந்துக்கிட்டாயிங்கப்பா..”

இதோ வந்துவிட்டேண்டி என் மனையாளே, உன் முகமா அது..சிரிக்காதடி..எனக்கு பிடித்த அடைத் தோசைப் பண்ணிக் கொடுப்பாயா..பசிக்குதுடி..இந்த சிரிப்புதானடி 50 வருடமாக என்னைக் கட்டிப் போட்டது..

“அப்பா..நாங்க பேசுறது கேக்குதா..”

“அப்பா, அப்பா..”

“அய்யா..நாங்க பேசுறது கேக்குதா..முடிஞ்சுடுச்சுன்னு நினைக்கிறேன் தம்பி..மேளத்தை அடிக்கச் சொல்லுங்க..”

வந்து விட்டேண்டி என் செல்லம்..நீ இருக்கிற இடத்துக்கு…

(மேளம்)

டர்டக்க, டர்டக்க, டர்டக்க, டர்டக்க, டர்டக்க………

டர்டக்க, டர்டக்க, டர்டக்க, டர்டக்க………..

டர்டக்க, டர்டக்க, டர்டக்க………

டர்டக்க, டர்டக்க………..

டர்டக்க……

டர்டக்……..

டர்ட……

டர்…….

ட………

……….

(பாதி பதிவு எழுதிக் கொண்டிருக்கும்போது அம்மாவிடம் இருந்து போன் வந்தது..மாமா தவறி விட்டார்..)

இது 'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0626-short-story-competition.html


Saturday, 20 June, 2009

விஜய்(கமல் ஜால்ரா) டி.வி அவார்ட்ஸ்


நேத்தைக்கு கோவாலு நம்ம வீட்டுக்கு சாப்பிட வந்திருந்தான்..சரி, சாப்பிடறப்ப ஏதாவது நிகழ்ச்சி போடலாம்னு டி.விய போட்டா விஜய் டி.வி. அவார்டஸ் ஒன்னு போட்டாயிங்கண்ணே..நம்ம கோவாலுக்கு சந்தோசம் தாங்க முடியல….”டே..ராசா..சூப்பர்டா..இன்னைக்கு புல்லா பார்த்துட்டுத்தான் போவேண்டா..”ன்னு சொன்னான்..எனக்கு கண் கலங்கிருச்சுண்ணே..”டே கோவாலு..பரவாயில்லைடா..கலைஞர்கள் அவார்டு வாங்குறத பார்த்து சந்தோசப்படுறயேடா..” அதுக்கு கோவாலு..”போடாங்க..அவார்டு யாருக்குடா வேணும்..இங்கதாண்டா ஜிகிடிங்க அரைகுறையா டிரெஸ் போட்டு சும்மா குமால்டியா வருவாயிங்க..வீட்டுல இதெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் பார்க்க முடியலடா..பொண்டாட்டி உதைக்கிறா…”ன்றான்..அடப்பாவி ஒரு நிமிசத்துல உன்னை நல்லவனுன்னு நினைச்சிட்டனடா..

என்னையே நொந்துகிட்டு நிகழ்ச்சிய போட்டேண்ணே..கோவாலு அலறிட்டான்..”டே..ராசா..விஜய் டி.வி போடச் சொன்னா டிஸ்கவரி சானல் போடுறயா..இங்க பாரு ஒரு காட்டுப் பல்லி வந்து கீச், கீச் ன்னு கத்துது..” நல்லா உத்து பார்த்தா நம்ம திவ்யதர்சினி(D.T). கோவலு மிரண்டுட்டான்..”டே வேணான்டா ராசா..ஆப் பண்ணிடுடா..இத பேச ஆரம்பிச்சுட்டா நிப்பாட்டவே நிப்பாட்டாது..தான் உசிரு போக கத்துறது மட்டுமில்லாம அடுத்தவய்ங்க உசிரு போக கத்தும்..” நாந்தான் அவனை சமாதானப்படுத்தி பார்க்க வைச்சேன்..

பார்த்தா நம்ம “நீயா நானா கோபிநாத்”..நான் விசிலடிக்க ஆரம்பிச்சுட்டேன்..நம்மளுக்கு பிடிச்ச ஆளு..கொஞ்சம் காது கொடுத்து கேக்க ஆரம்பிச்சா, அறுவை தாங்க முடியலை..சார் என்ன இது..உங்க மேல இருந்த மதிப்பு மரியாதை எல்லாம் போயிடுச்சு..நீங்களும் ரபி பெர்னாட் மாதிரி இப்படி ஜால்ரா தட்ட ஆரம்பிச்சிட்டிங்களே..உங்களுக்கே கூசாதா..ஏன் சார் ஒரு சபை நாகரிகம் இல்லை..ஹாரிஸ் ஜெயராஜ், கவுதம் மேனன் டீசண்டா பேசுறாங்களே..உங்களுக்கு ஏன் இந்த சின்னப்புள்ளத்தனம்..ஏதோ அவிங்க ஸ்கூலுல டூ விட்டுக்கிட்ட மாதிரி மேடையில வச்சுக்கிட்டு “பிரிந்து போன ஆடுகள் சேர்ந்த போது..” ன்னு பேசிக்கிட்டு..உங்களை கொஞ்சம் அறிவு ஜீவின்னு நினைச்சது எங்க தப்புத்தான் சார்..அதை விடுங்க..கமல் என்ன கடவுளா..இப்படி ஜால்ரா தட்டிறீங்க..”உலக நாயகன்..” “படைத்தளபதி..”,”சொறித்தளபதி….” நீயா நானால நீங்க பேசுறதக் கேட்டுட்டு ரொம்ப ஏமாந்துட்டோம் சார்

அவார்டு வாங்க வர்றவய்ங்க எல்லாம் “கமல் சார் வாங்குற இந்த அவார்ட்ஸ்..”, “கமல் சார் எவ்வளவு பெரிய ஜீனியஸ்”, “கமல் சார்ன்னா எனக்கு உசிரு..””கமல், கமல்..” என்னதான்யா நடக்குது..கமல் அவார்ட்ஸா, விஜய் அவார்ட்ஸா….இப்பத் தெரியுது ரஜினி ஏன் பங்க்சனுக்கு வரலைன்னு..ஏன்னா அவரு இதை விட எதிர்பார்ப்பாரு..அப்புறம் வர்றவயிங்க எல்லாம் “ரஜினி சார், கமல் சார்” சொல்லியே மூச்சை விட்டுறுவாயிங்க..அட ராசாக்களா, கமல், ரஜினி எல்லாம் லெஜண்ட்ஸ்தான் ஒத்துக்குறோம்..அதை ஏன்யா இந்த மேடையில ஜால்ரா தட்டுறீங்க..வேணுன்னா ஒன்னு பண்ணுங்க..”கமல், ரஜினிக்கு ஜால்ரா தட்டும் நிகழ்ச்சி” ன்னு வச்சிக்கிட்டு நல்லா ஜால்ரா தட்டுங்க..விஜய், சன் டி.வி நேரடி ஒளிபரப்பு பண்ணுவாயிங்க….

அடுத்து கௌதமிக்கு “சிறந்த டிசைனர்” ன்னு அவார்ட்ஸ் கொடுத்தவுடனே நம்ம கோவாலு டென்சன் ஆயிட்டான்..”ராசா..இதை தட்டிக் கேக்கணும்டா”..விடுடா அவிங்க அவார்டு, யாருக்கு வேணும்னாலும் கொடுத்துட்டு போறாயிங்க..

நம்ம லஷ்மிராய் வந்து டான்ஸ் ஆடினப்புறம்தான் நம்ம கோவாலு கோவம் குறைஞ்சுச்சு….கொஞ்ச நேரத்துல நம்ம கோவாலு அழுக ஆரம்பிச்சுட்டான்….படத்துல கூட சிவக்குமார் இப்படி ஆக்ட் கொடுக்க மாட்டாரு..நவரசத்தை பிழிஞ்சி எடுத்துட்டாரு….”மாயாண்டி குடும்பத்தார்” மாதிரு “சிவக்குமார் குடும்பத்தார்” ன்னு வச்சிருக்கலாம்..முடியலடா சாமி….எனக்கு லைட்டா கண்ணக் கட்ட நம்ம கோவாலு கேவி கேவி அழுதுக்கிட்டு இருக்கான்..”கோவாலு..உனக்கு அழுகனும்னு ஆசையா இருந்து இதப்பார்த்து அழுகாதே..இத விட நல்ல சீரியல் போடுவாய்ங்க.. அதப்பார்த்து அழு.” விஜய் டி.விக்கு நல்லா கொண்டாட்டமா இருந்திருக்கும்..அழுக அழுக டி.ஆர்.பி ரேட்டிங் கூடுமில்ல..இதுல நம்ம கோபிநாத் வேற..”என்ன ஒரு உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சி..நல்லா அழுவுங்க சார்..இன்னும் நல்லா அழுவுங்க சார்.. எல்லாரும் எந்திருச்சு நின்னு ஒரு ஸ்டாண்டிங் அழுவேசன் கொடுங்க” ஸ்..அப்பா..முடியல கோபி சார்..

எனக்கு தெரிஞ்சு மேடையில பேசத்தெரியாவதங்க ரெண்டு பேர்..ஒன்னு ரஜினி, அடுத்தது, மனோரமா ஆச்சி….வழக்கம் போல சுத்தமா பேசத்தெரியாம ஏதோ பேசிக்கிட்டே இருந்தாங்க..போதும் ஆச்சியம்மா..இதோட முடிச்சுக்கிருவோம்.. கொஞ்சம் மனசைக் நெகிழ வச்சது எதுன்னா, அஞ்சாதே ரமேஷ் அவர்களின் பேச்சுதான்..மத்தவர்கள் மாதிரி மனசுல ஒன்னு வச்சிக்கிடு வாயில ஒன்னு பேசாம மனசில் இருக்குறத அப்பிடியே பேசினார்..ஆனா அவரும் “நான் டம்மி குருவி..நிஜக் குருவி நம்ம இளையத் தளபதிதான்” ன்னு சொல்லுறப்ப மனசு கஷ்டமாப் பேச்சு…….ஒரு பெரியார் என்ன ஆயிரம் பெரியார் வந்தாக் கூட இவிங்களைத் திருத்த முடியாதுண்ணே..

இவிங்களை மாதிரியே நானும் அவார்டு கொடுப்பேண்ணே..கீழ பாருங்க

சிறந்த கொலைவெறியைக் கிளப்புதல் அவார்டு

திவ்யதர்சினி(D.T) – காட்டுக் கத்தல் கத்துனதுக்கு

சிறந்த ஜால்ரா மற்றும் அறுவையாளர் அவார்டு
எல்லாத்துக்கும் ஜால்ரா தட்டி வளவளன்னு பேசி அறுத்ததுக்கு

சிறந்த செண்டிமெண்ட் திலகம்

சிவக்குமார்..நல்லா இருக்கீங்களான்னு கேட்டாக்கூட அழுததற்கு

சிறந்த பேசத்தெரியாதவர் அவார்டு

மனோரமா ஆச்சி..செண்டிமென்டா பேசுறேன்னு ஏதெதோ பேசுனதுக்கு

சிறந்த அப்பாவி அவார்டு

அஞ்சாதே ரமேஷ்..அப்பாவியா மனசுல உள்ளதை பேசுனதுக்கு

சிறந்த மோசமான அவார்டு

கௌதமிக்கு கொடுத்த அவார்டு…

சிறந்த மோசமான பேச்சு அவார்டு

பார்த்திபன்..ஜோக்கா பேசுறேன்னு சினேகாவை பத்தி அடிச்ச கமெண்ட்

சிறந்த ஏமாத்துறவயிங்க அவார்டு

நல்லா செண்டிமெண்ட் காட்டி காசு பார்த்ததுக்கு

சிறந்த காண்டு ஆனவியிங்க அவார்டு

சன்.டிவி..

சிறந்த மாட்டிக்கிட்டவயிங்க அவார்டு

வேற யாரு..நம்மளுக்குதான்..


Tuesday, 16 June, 2009

போங்கய்யா நீங்களும் உங்க கிரிக்கெட்டும்நம்ம ஊரு பசங்க வாழ்க்கையில படிப்பு ஒரு அங்கமா இருக்கோ இல்லையோ, கிரிக்கெட் ஒரு அங்கமா இருந்திருக்கும்னே..நான் அஞ்சாப்பு படிக்கிறப்பல்லாம் அவனவன் கிரிக்கெட் வெறி புடிச்சு அலைய்ஞ்சாயிங்கண்ணே..நானும் அப்படித்தேன் திரிஞ்சேன்னே..உனக்கு பிடிச்ச ஆள் யாருன்னு வாத்தியார் கேட்டா, தெருக்கோடியில நிக்கிற ஆத்தா அப்பன் பெயர சொல்லாம “கவாஸ்கர், கபில்தேவ்னு” கோடியில சம்பாதிக்கிற ஆளுங்களை சொல்லுவோம்னே..சனி, ஞாயிறு வந்தா எங்களுக்கு கிரிக்கெட் சாமி பிடிச்சிடும்..ரெண்டு நாள் மலையேறவே மாட்டோம்..கையில தென்னை மட்டையில செஞ்ச பேட்டு, ஒரு பிளாஸ்டிக் பந்து கையில வச்சிக்கிட்டு சோழவந்தான்ல நாங்க விளையாடாத லார்ட்ஸ் மைதானமே இல்ல..பிச்சி உதறுவோம்..

கிரிக்கெட் டி.வில போட்டா அன்னைக்குத்தான் எங்களுக்கு ஊர்த்திருவிழா..வீட்டுல வேற டி.வி இருக்காதா..ரெண்டு மூனு மாடி வீட்டுலதான் டி.வி..இருக்கும்..அவிங்களும் ரொம்ப பகுமானம் பண்ணுவாயிங்க..சன்னல் கதவை முக்காவாசி சாத்திருவாயிங்க..அந்த சன்னல் உள்ள சின்ன ஓட்டையில கண்ணை வச்சித்தான் பார்ப்போம்..யாரவது சிக்ஸ், போர் அடிச்சா போதும், தொம்சம் பண்ணிடுவோம்..

எனக்கு ஒரு கிரிக்கெட் நண்பன் இருந்தான்..எங்கூட சேர்ந்து அஞ்சாப்பு படிச்சவன்..பெயர் “குட்டி”..அவனோடதான் கிரிக்கெட் பத்தி என்னோட கமெண்டரி இருக்கும்…..எங்க ஊருல ரெண்டு, மூணு பணக்கார பசங்க வீடு இருக்கும்..அவிங்க தேங்காய் கிட்டங்கிலதான் விளையாடுவாயிங்க..அதுவும் எப்படி, ஒரு கிளவுஸ், தொப்பி, சூப்பர் பேட்டு, அடிடாஸ் ஷூ..எங்களுக்கு மிட்டாய்கடைய பார்த்த மாதிரி ஆசையா இருக்கும்னே..நானும் குட்டியும் அந்த கிட்டங்கி மதில் சுவருல உக்காந்து ஆசையா பார்ப்போம்..விளையாண்டுக்கிட்டுருந்த பசங்க ஒரு நாள் எங்களை கூப்பிட்டாயிங்க..ஆசையா ஆசையா ஓடுனோம்னே..பார்த்தா, நாய் மாதிரு அவிங்க அடிக்கிற பந்தை பொறுக்கி போடனுமாம்..பணக்காரத் திமிருண்ணே..ஆனாலும் நாங்க விடலண்ணே..எனக்கும் குட்டிக்கும் போட்டி யாரு பந்தை எடுத்து போடுறதுண்ணு..அப்பத்தானே முதல் முறையா ரப்பர் பந்தை கையில தொட்டேன்..அந்த குட்டி பந்து கையில இருக்கிறப்ப அந்த் உலகப் பந்தே என் கையில இருக்குற மாதிரி ஒரு நினைப்புன்னே..அதை அப்படியே உள்ளங்கையில வச்சு அழுத்தினேன்..அந்த ஒரு நிமிசத்துல..”சோறு, தண்ணி, அம்மா, அப்பா, கணக்கு வாத்தியார், சூப்பர்ஸ்டார், மாரிமுத்துக் கடை தேங்கா முட்டாய், டி.வி, படிப்பு, ஒலியும் ஒளியும்” எல்லாம் மறந்திருச்சுண்ணே..உலகமே என் கையில இருக்குற மாதிரி அப்படியே மிதர்ந்தேன்னே..ஒரு நிமிசம்தான்..குட்டி அதுக்குள்ள என் கையில இருக்குற பந்தை பிடிங்கிட்டான்..

அன்னைக்கு அவிங்க டீமுல ஒரு ஆளு குறையவே, எங்கள்ல ஒரு ஆளை டீமுல சேர்க்க முடிவு பண்ணினாயிங்கண்ணே..அப்பவே நம்மளைப் பார்த்தா என்ன தோணும்னு தெரியல, குட்டிய செலக்ட் பண்ணிட்டாயிங்க..குட்டி குதிச்சுட்டான்..எனக்கு அழுகை, அழுகையா வந்ததுண்ணே..நம்ம இதுக்கு கூட லாயக்கு இல்லயா..எம்மேல எனக்கு முத தடவையா கோவம் வந்திச்சு..குட்டிக்கிட்ட போய்..”டே..குட்டி..என்னையும் டீமுல சேர்த்துக்க சொல்லுடா..”. குட்டி என்னை பரிதாபமா பார்க்க, என்னால அங்க இருக்க முடியாம ஓடி வந்துட்டேன்னே..

குட்டி நல்ல பௌலிங் போட்டு அந்த டீமுல பேமஸ் ஆகிட்டான்..ஏதோ இஞ்சினியரிங்க காலேஜ்ல சேக்குறதுக்கு ரெகமண்டேசன் பண்றது மாதிரி எனக்கு ரெகமண்ட் பண்ண என்னைய டீமுல டபுள் சைட் பேட்டிங் சேர்த்துக்கிட்டாயுங்க..ஓவர் எல்லாம் தர மாட்டாயிங்க..பிரேக் டைமுல காசு குடுத்து அவிங்களுக்கு டீ.காபி வாங்கி வரச் சொல்லுவாயிங்க..வேலைக்காரன் மாதிரி எல்லாத்தையும் செய்வேன்..அன்னைக்குப் பார்த்து எல்லாரும் அவுட் ஆகவே என்னை பேட்டிங்க பண்ண கூப்பிட்டாயிங்கண்ணே..பேட்டை வாங்குனேன்..தென்னை மட்டையில விளையாண்டுக்கிருந்த எனக்கு அடிடாஸ் பேட் குடுத்தா எப்படி இருக்கும்….மனசு நிறைய பெருமை..விளையாடுறத நிப்பாட்டிட்டு அம்மாகிட்டயும், பிரண்ட்ஸ்கிட்டயும் போய் சொல்லணும் போல இருந்துச்சு..

கிட்டங்கி ஓனர் பையந்தான் பௌலிங்க் போடுறான்..எனக்கு எங்கிட்டு இருந்து அந்த பவர் வந்துச்சுன்னு தெரியல..பேட்டை எடுத்து அடிச்சேன் அடி பாருங்கண்ணே..பந்து அப்பிடியே என் மனசு மாதிரியே ஆகாயத்துல பறந்து சிக்ஸர்..அந்த பேட்டை அப்படியே என் தோளில பீமன் கதாயுதத்த வச்சுக்கிற மாதிரி வச்சுக்கிட்டு பெருமையா ஹூரோ மாதிரி ஒரு பார்வை பார்த்தேன்..அந்த ஓனர் பையனுக்கு ரொம்ப கோவம் வந்திருச்சுண்ணே..யாரும் அவன் பௌலிங்க அடிச்சதில்லை போல..ஓடி வந்து, ஒரே எத்து விட்டான்..அப்பிடியே தரையில போய் விழுந்தேன்..நான் ஆசை, ஆசையா ஓடி விளையாண்ட எங்க ஊரு மண்ணெல்லாம் என் கண்ணுல காதுல மூக்குல..

“ஏண்டா நாயே..என் பந்துலயா சிக்சர் அடிக்கிற”..என்னதான் அப்ப நான் சின்ன பையனா இருந்தாலும் தன்மானம்னு ஒன்னு இருக்கும்லனே..கூனிக்குறுகி போய்ட்டேண்ணே..கண்ணுல மண்ணு அளவுக்கு தண்ணி..துடைச்சுக்கிட்டு வீட்டுக்கு ஓடிப்போயி அம்மாவைக் கட்டிப்பிடிச்சு அழுதேன்னே..

“அம்மா..ஏம்மா..எனக்கும் அவிங்களை மாதிரியே ஒரு பேட், பந்து, ஷூ எல்லாம் வாங்கி தர மாட்டிங்கிறீங்க..”

“இல்லடா ராசா..அப்பா பாரு..நமக்காகத்தானே கஷ்டப்பட்டு உழைக்கிறாரு..நீ, நல்லா படிச்சு பெரிய ஆளா வருவியாம்..உனக்கு அப்பா எல்லாம் வாங்கி தருவாராம்..என்ன..”

அப்படியே என் கண்ணிரை துடைச்சு விட்டு அணைச்சுக்கிட்டாங்க..கிரிக்கெட்டால் பட்ட அவமானம் போய் எங்க அம்மா அணைப்பே சொர்க்கமா தெரிஞ்சுச்சுண்ணே..

(நீண்ட பதிவாய் இருப்பதால் அடுத்த பதிவில் தொடர்கிறேண்ணே….இந்த பதிவு உங்க பள்ளிக்கூடத்து கிரிக்கெட் நினைவுகளை தூண்டிச்சுன்னா கீழ உள்ள ஓட்டைப் போட்டு பின்னூட்டம் போடுங்கண்ணே.எங்களை மாதிரி பதிவர்களுக்கெல்லாம் அதுதானன்னே டானிக்..)

Saturday, 13 June, 2009

ஆஸ்திரேலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க???


இங்க அமெரிக்காவுல….என்னடா திரும்ப அமெரிக்கா புராணத்தை ஆரம்பிச்சுட்டான்னு நினைக்காதிங்கண்ணே..வாழ்க்கையில ஒரு தடவையாவது இங்க வந்து பாருங்கண்ணே..சிலவற்றைத் தவிர்த்து பார்த்தா சொர்க்கம்னே..மனுசனை மனுசனா மதிக்கிறாயிங்கண்ணே..யாரும் யார எதிர்பார்த்து இருக்க மாட்டாயிங்கண்ணே..சொந்த காலுல நிக்கிறாயிங்கண்ணே..வயசானவங்களுக்கு என்னமா மரியாதை தராங்கண்ணே..எங்க போனாலும் ஊனமுற்றவர்களுக்குதான்னே முன்னுரிமை..எல்லா இடத்துலயும் ஊனமுற்றவங்களுக்கு தனி வசதி செஞ்சு இருப்பாயிங்கண்ணே..பார்க்கிங் கூட தனி வசதிண்ணே..அது மாதிரி யாரும் எந்த வேலையையும் கேவலமா நினைக்க மாட்டாயிங்கண்ணே……நம்ம ஊருல எங்கேயாவது கூலித்தொழிலாளிகளை மதிச்சுருக்கிராயிங்களண்ணே..இங்க மரியாதையா பார்ப்பாயிங்கண்ணே..தொழிலை வச்சு ஒரு ஏற்ற தாழ்வு இருக்காதுண்ணே..

எங்க ஆபிஸ்ல ஒரு வெள்ளைக்காரர் ஒருத்தர் கிளீனிங் வேலை பார்ப்பாருண்ணே..பேரு “ஜோ”..நல்ல தன்மையான மனுசண்ணே..எப்ப பார்த்தாலும் சிரிச்ச முகமா இருப்பாரு..ஒவ்வொரு நாளும் நம்ம கேபினுக்கு வந்து குப்பைய எடுத்துட்டு போவாரு..எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்..அவரோட டெய்லி கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருப்பேன்..தன்னோட வேலைய ரொம்ப உயர்வா நினைப்பாரு..ரொம்ப சுயமரியாதைக்காரர்ணே..என்னோட பொறந்த நாளுக்கு கூட நம்ம பசங்க டிரீட் வாங்கிட்டு ஓடிப்போயிட்டாயிங்க..ஆனா அவரு தன் பொண்ணு கையால செஞ்ச ஒரு சின்ன பொம்மையக் குடுத்து “நீங்க பொறந்ததுக்காக நான் பெருமைப்படுறேன்..எனக்கு ஒரு நண்பன் கிடைச்சுருக்கான்ல” என்றார்..எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சுண்ணே..

இப்படி போயிட்டுருக்கப்ப, நம்ம ஊருக்கார பயபுள்ள இங்க மேனேஜரா வந்தாண்ணே..பேரு “சேஷ கோபால்”..ரொம்ப முசுடுக்காரண்ணே..பேசாம அவனுக்கு “கேஸ் கோபாலு”ன்னு வச்சிருக்கலாம்….எப்ப பார்த்தாலும் “கேஸ்” டரிபுள் வந்ததுமாதிரியே திரிவான்..ஒரு நாள் நானும் ஜோவும் பேசிக்கிட்டு இருக்கறதப் பார்த்து என்னைத் தனியா கூப்பிட்டாரு….”ராசா..ஏம்பா இவிங்க கூட எல்லாம் பேசிக்கிட்டு இருக்க..தரையக் கூட்டுற ஆளுயா அவன்..அவிங்க கூட எல்லாம் ஒரு டிஸ்டன்ஸ் வச்சிக்கனும்பா..” அட்வைஸ் பண்றாராம்..அப்பயே நான் முடிவு பண்ணிட்டேன், சேஷக்கோபாலுக்கிட்ட நிக்கிறப்பே கொஞ்சம் தள்ளியே நிக்கணும்னு..தொத்து வியாதி பாருங்க..

ஜோ, ஒருநாள் நம்ம சேஷகோபாலு கேபினுக்கு போய் குப்பைய எடுக்க போயிருக்காரு….நம்ம சேஷு நம்ம ஊரு நினைப்புல அவர் சாப்பிட்ட டேபிளைக் கிளீன் பண்ண சொல்லியிருக்காரு..ஜோ அதுக்கு மறுக்கவே..நம்ம ஆளுக்கு கோவம் பாருங்க..”டே நாயே..உனக்கு என்ன பெரிய மேனேஜர்ன்னு நினைப்பா..தரையக் கூட்டுற உனக்கு கொழுப்பா..உங்களுக்கு எல்லாம் அறிவு பத்தலைன்னு சொல்லித்தாண்டா நாங்க இங்க வந்து இருக்கோம்”..வார்த்தையக் கொட்டிட்டாருண்ணே…நம்ம ஜோ,ஆளு தான் பாந்தமா இருப்பாரு..ஆனா அர்னால்ட் பாடி..நல்லா கைய மடக்கி மூஞ்சில ஒரு குத்து விட்டாரு பாருங்க..நம்ம சேஷு அப்படியே உக்கார்ந்துட்டாருன்னே..காதுல “கொயிங்க்” ன்னு ஒரு சத்தம்..மூக்கு சிவந்து போச்சுண்ணே..அவ்வளவுதான்..வானத்துக்கும் பூமிக்கும் எகிறிக் குதிக்க ஆரம்பிச்சுட்டாரு..மேலிடத்துல கம்பிளையின் பண்ண ஜோ வுக்கு வேலைய தூக்கிட்டாயிங்க..எனக்கு மனசு கஷ்டமா போச்சுண்ணே….

அதுக்கப்புறம் “ஜோ” கிட்ட இருந்து ஒரு தகவலையும் காணோம்..போன வாரத்துல ஒரு பிளாசா போயிருந்தேன்..நம்ம ஜோ அவுங்க குடும்பத்தோட வந்திருந்தார்..வேலை போன கஷ்டத்தை முகத்துல காட்டலைன்னாலும் அவரோட மனசுல தெரிஞ்சதுண்ணே..

“ராசா, எப்படி இருக்கீங்க..”

“நல்லா இருக்கேன் ஜோ..என்ன ஜோ, இப்படி மெலிஞ்சுட்டீங்க..வேற வேலைக் கிடைச்சுடுச்சா..”

“இல்ல ராசா..தேடிக்கிட்டு இருக்கேன்..எங்க போனாலும் வேலைக்கு பெரிய கியூ..எல்லாத்துக்கும் போட்டி வந்துடுச்சு..எல்லாத்தையும் ஆப்சோர் பண்ணிட்டதுன்னால கம்யூட்டர் படிச்சவன் கூட எங்க வேலைக்கு கீயூல நிக்கிறான்..இதுல இந்த ரெண்டு பொண்ணுங்க வேற படிக்க வைக்கணும்..ஆனாலும் எனக்கு உழைப்பு இருக்கு ராசா..கண்டிப்பா நான் முன்னேறிருவேன்..”

எனக்கு யாரோ செருப்பைக் கழட்டி அடிச்ச மாதிரி இருந்ததுண்ணே….அவரோட சின்ன குழந்தை எங்கிட்ட வந்து..

“அங்கிள்..நீங்கதான் ராசாவா..அப்பா நிறையவாட்டி சொல்லி இருக்காரு..உங்க பொறந்த நாளைக்கு நான்தான் பொம்மை என் கையால செஞ்சேன்….அடுத்த பொறந்த நாளைக்கு பாருங்க..உங்களுக்காக ஒரு டெடி பியர் பொம்மை செஞ்சு தரேன்..”

அந்த பிஞ்சு கைய எடுத்து அப்படியே ஒரு முத்தம் குடுத்து என் கண்ணுல வைச்சுக்கிட்டேண்ணே..என்னால அங்க நிக்க முடியல..கிளம்பி வந்துட்டேன்..

மறுநாள் ஆபிஸுக்கு போனப்ப..நம்ம சேஷு வந்திருந்தார்..ஜோவைப் பார்த்த விசயத்தை சொன்னேன்..

சேஷு சொல்றார்..

“அவன் இன்னும் உசிரோட இருக்கானா..வேலைக்கார நாயி.என்ன கொழுப்பு..அவனுக்கு எங்க போனாலும் வேலை கிடைக்காது பாருங்க ராசா..ஒரு வேலைக்காரனுக்கு இவ்வளவு திமிரு ஆகாது..”

ஆஸ்திரிலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க…

Tuesday, 9 June, 2009

உயிர் பயமும் சூப்பர் பிகர்களும்

அமெரிக்காவுல நம்ம மாதிரி அடிமைகளுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு திங்கள்கிழமை விடுமுறை விட்டுறாயிந்தாயிங்க..நம்ம ஆளுங்களுக்கெல்லாம் ஒரே குஷிதான். அவனவன் ஒரு மேப் எடுத்து வச்சிக்கிட்டு கொலம்பஸ் மாதிரு பிளான் போடுறாயிங்க..சந்திர மண்டலம் ஒன்னுதான் பாக்கி..விட்டா அதுக்கும் கார் எடுத்துட்டு போயிடுவாயிங்க போல..

நாங்களும் ஒரு பிளான் போட்டோம்..நாங்க, ரெண்டு குடும்பம்,அப்புறம் நம்ம ஊருக்காரயிங்க ரெண்டு பேர், அப்புறம் நம்ம ஊருக்கார பையன் கோவாலு..இங்க “வெஸ்ட் விர்ஜினியா” ன்னு ஒரு மாகாணம் இருக்கு..அங்க ஒரு திரில்லிங் படகு சவாரி..அதுக்கு பேர் “ராப்டிங்(Raafting)”..படகு சவாரின்னா நம்ம ஊரு “ஏலேலா ஐலசா” மாதிரி இல்ல..ரெண்டு மலைக்கிடையில் ஒரு பெரிய ஆறு ஓடுது..நாலு ஆளு மட்டம் தண்ணி..காத்து நிரம்பிய ஒரு பலூன் மாதிரி ஒரு படகு குடுத்துருவாயிங்க..கோஆர்டினேட் பண்ண ரெண்டு பேர் கூட வருவாயிங்க..மத்தபடி நம்ம துடுப்பு போட்டதான் படகு போகும்..10 மைல் ஓட்டனும்..இடையில 10 இடத்துல பெரிய அலைமாதிரி அடிக்கடி எழும்பும்..அதுல துடுப்பு போடுறதுதான் பெரிய விசயம்..லைப் ஜாக்கெட் குடுத்துருவாயிங்க..

எல்லாரும் அந்த ஆபிஸ்க்கு போய் பணத்தைக் கட்டிட்டோம்..ஒரு பார்ம்(form) கொடுத்தாயிங்க..நம்மதான் எந்த பார்மை படிச்சிருக்கோம்..சொத்தை எழுதிக் குடுக்குற மாதிரி நீட்டுற இடத்துல கையழுத்து போட்டோம்..லைப் ஜாக்கெட் மாட்டி விட்டப்புறம் நம்ம ஆளு கோவாலுக்கு சின்ன டவுட்..

“ஏன் மேடம், எல்லாத்துக்கிட்டயும் கையெழுத்து வாங்கிறீங்களே..என்ன விசயம்..”

“அதுவா..துடுப்பு போடுறப்ப என்ன வேணுனாலும் நடக்கலாம்..உங்க உசிருக்கு நாங்க உத்திரவாதம் இல்லைங்கிறதுதான்..”

கோவாலு அலறிட்டான்..”அய்யோ அம்மா..உயிருக்கு ஏதாவது ஆபத்து இருக்குங்களா..நான் வீட்டுக்கு ஒரே பையங்க..”

“சீ..சீ..கவலைப்படாதிங்க..நாங்க இருக்கோம்ல..”

“எதுக்கு எத்தனைப் பேரு சாகுறோம்னு எண்ணுறதுக்கா..ஆளை விடுங்கடா சாமி..”

கோவலு லைப் ஜாக்கெட்டை கழட்ட நினைக்கும்போதுதான் அது நடந்தது..எங்களோட இன்னொரு படகும் வரும்போல..அதுக்கு வந்தவங்க நம்ம கோவலு மனமாற்றத்துக்கு காரணம்..செப்பு சிலைய செஞ்சு வச்ச மாதிரு 8 மும்பைக்கார பொண்ணுங்க வந்தாங்க..இங்க அமெரிக்காவுல ஏதொ ஒரு யுனிவர்சிட்டில படிக்கிறாயிங்களாம்..கோவாலு அலறிட்டான்..

“மச்சான்..நானும் வர்றேன்டா..”

“டே..கோவாலு..இப்பதான் வீட்டுக்கு ஒரு பையன் சொன்ன”

“போடாங்க..செத்தா இப்படி சாகணும்டா….டே..அவுங்க படகுல ஒரு இடம் இருக்கான்னு கேட்டு வர்றீயா….”

“அடப்பாவி..அப்பிடியே அவுங்க மனசுல ஒரு இடம் இருக்கான்னு கேப்ப போல..முதல்ல வாயில இருந்து வர்ற வாட்டர்பால்ஸை குளோஸ் பண்ணு..”

நம்ம கோவாலுக்கு கெட்ட நெரம்..படகுல ஆள் பத்தலைன்னு ஒரு ஒரு 60 வயசு பாட்டி, அவுங்க பேரன் ரெண்டு பேரையும் ஏத்திக்கிட்டாயிங்க..நமீதாவை எதிர்பார்த்து இருந்த நம்ம கோவாலுக்கு கே.பி.சுந்தராம்பாள் வந்தது மாதிரி ஆகிப்போச்சு..

புலம்பி தள்ளுறாயிங்கண்ணே..”ஐய்யோ..ஐய்யோ..கொஞ்சம் லேட்டா வந்துருந்தா, அந்த படகுல போயிருக்கலாமே..” கதறுரான்..இதுல கோஆர்டினேட்டர், இங்க யாருக்கு நீச்சல் தெரியும்னு கேக்க., கோவாலுக்கு பிரஸ்டிஜ் குக்கர் பிராபளம் ஆக..”எனக்கு தெரியும்..நான் எல்லாத்தையும் காப்பாத்துறேன்..” பெருமையா சொல்லிக்கிட்டு பக்கத்து படகை பெருமையா பார்த்தான்..அதுக எதுவும் நம்ம கோவல கண்டுக்கலை..பிஸ்ஸா சாப்பிடுற இடத்துல கடலை முட்டாய பார்த்தா எப்படி இருக்கும், அதுமாதிரி கோவல பார்க்க மனசு ஒடிஞ்சு போயிட்டான்..அதுல அந்த பாட்டி வேற..”தம்பி நீங்க பாக்குறதுக்கு என் பேரான்டி மாதிரி இருக்கீங்க” ன்னு சொல்லிருச்சா, ஒரு மாதிரி ஆயிட்டான்....அவன் கண்ணு, மனசு எல்லாம் அந்த பொண்ணுங்க வர்ற படகு மேலதான்..துடுப்பு போடுறான்னு சொன்னா, கையில துடுப்பு போடுறான்..

அப்பதான் அது நடந்துச்சு..ஒரு பெரிய பாறைக்கிடையில தண்ணி நீர்வீழ்ச்சி மாதிரி போக கொஞ்சம் வேகமா துடுப்பு போடணும்..நம்ம ஆளுதான் கையில துடுப்பு போடுறானே..சரியா அந்த் பாறையில முட்டி அப்படியே படகு டைட்டானிக் படகு மாதிரி கவுந்துச்சு பாருங்கண்ணே.,அப்படியே எல்லாரும் தண்ணிக்குள்ள போயிட்டோம்..சொன்னா நம்ப மாட்டிங்க..உயிர் பயத்தை அன்னிக்குத்தான் பார்த்தேன்..அப்பிடியே உள்ள போயிட்டேன்..சபரிமலை பயணம் மாதிரி அப்பிடியே தண்ணிக்குள்ளே போயிட்டு இருக்கேன்..அப்படியே எனக்கு இந்த உலகமே ஒரு வெறுமையா தெரிஞ்சுச்சு..கடவுளுக்கும் எனக்கும் தூரம் இல்லன்னு மனசு சொல்ல, கொஞ்சம் கஷ்டமாவும் இருந்துச்சு..”ஐயோ..நம்மளை நம்பி ஒரு பொண்ணு இருக்கே..அது என்ன பண்ணும்….கடவுளே..இன்னொரு நாள் வர்றேன்..இப்ப வேண்டாம்..” தண்ணி வாய்க்குள்ள போக மூச்சு முட்டுது..யாரவது காப்பத்த மாட்டாங்களான்னு மனசு சொன்னாலும் அவ்வளவுதான் இந்த வாழ்க்கை ஆறாம் அறிவு சொல்லுச்சு..அப்பிடியே செத்து போன எங்க தாத்தாவ நேருல பார்க்குற மாதிரு இருந்துச்சு..

“தாத்தா..நீங்களா..எனக்கு ஒரு இடம் போடுங்க தாத்தா..இதோ வந்துடுறேன்..”

“வாடா பேராண்டி..,பார்த்து ரொம்ப நாளாச்சுடா..வீட்டில நல்லா இருக்காங்களடா..வர்றப்ப ஒரு பாக்கெட் செண்ட் பாட்டில் எடுத்துட்டு வாடா..இங்க ஓரே கப்பு அடிக்குது.. அப்பிடியே பத்மினி ஒரு இந்தி படத்துல கவர்ச்சியா நடிச்சு இருக்காம்ளடா..ரெண்டு படத்தை எடுத்து வந்துருடா..”

“ஐயோ தாத்தா..நீ அடங்கவே மாட்டியா..இரு கடவுள்கிட்ட கம்பிளையின் பண்றேன்..அய்யோ..வீட்டுல கேஸ் ஸ்டவ்வ ஆப் பண்ணிணேணா…நான் வீடு வரைக்கும் போயிட்டு…”

அப்பிடியே நான் போட்டுருந்த லைப் ஜாக்கெட் என்னை மேல தூக்கிச்சு..தலை மட்டும் நீருக்கு மேல வந்தது..தப்பிச்சுட்டோமா???

நம்ம கோவாலுக்குதான் நீச்சல் தெரியுமே..அதோ கோவலு தலை தண்ணிக்குள்ள தெரியுது..

“கோவாலு..காப்பத்….”

“ராசா..காப்பத்துடா..எனக்கு நீச்சல் தெரியாதுடா..”

அடங்கொய்யாலே..உன் வாயில எதையாவது கரைச்சு ஊத்த..ஐயோ யாராவது காப்பத்துங்களேன் நான் போய் ஒரு பதிவு போடணும்..பொதுவா இந்த மாதிரி சவாரில கம்பெனில இருந்து ரெண்டு பேர் காப்பத்த வருவாயிங்க..அவீங்களை வேற பார்க்க முடியல..

அப்பத்தாண்ணே அது நடந்துச்சு..அடுத்த படகுல வந்த சூப்பர் பிகருங்கன்னு நாங்க சொன்ன மூணு பொண்னுங்க அப்பிடியே தண்ணிக்குள்ளே குதிச்சுச்சு..என்னையும் கோவாலுவையும் தலை முடியப் புடிச்சுக்கிட்டு அப்படியே தரதரன்னு தண்ணிக்குள்ள இழுத்துக்கிட்டு போனாங்க..அப்பிடியே திமிங்கலத்தை தூக்கி போடுற மாதிரி..”நீயெல்லாம் ஒரு ஆம்பிளையாடா” ன்னு தூக்கி அவீங்க படகுக்குள்ள போட்டாயிங்க பாருங்க..அப்படியே நம்ம மனசுக்குள்ள இருக்குள்ள திமிரு, கெட்ட புத்தி, ஆணவத்தை எல்லாத்தையும் தூக்கி படகுல போட்ட மாதிரி இருந்துச்சு..ஒரு நிமிசம் உயிரு நம்மக்கிட்ட இல்லாம, ஒரு உடம்பை மட்டும் தூக்கி போடுற மாதிரி இருந்துச்சு..

கோவாலு அப்படியே அந்த பொண்ணுங்களை கையெடுத்து கும்பிடிறான்..எனக்கு ஒன்னுமே பேசத்தோணலை..

“கோவாலு..தப்பிச்சுட்டோம்டா..நினைச்சு கூடப் பார்க்கலைடா”

கோவாலு கும்பிடுற கைய இறக்கவேயில்லை...

“ராசா, இவுங்க பொண்ணுங்க இல்லடா, என் ஆத்தாடா..என் உயிரைக் காப்பாத்துன எங்க ஊரு மாரியாத்தாடா..”

எனக்கு கண்ணுல தண்ணி கோர்த்துக்கிச்சுண்ணே..

(மேல உள்ள படத்துல உயிருக்கு பயந்துக்கிட்டு ரெண்டாவது துடிப்பு போடுறது நான்தானுங்கண்ணே..உயிர் பயம் கண்ணுல தெரியுதா..)


Sunday, 7 June, 2009

பாசக்கார அனானிங்க

அனானிங்க(அனானிமஸ் என்ற பெயரில் திட்டுபவர்கள்) எனக்கு ரொம்ப பிடிக்கும்ணே..ரொம்ப பாசக்கார பயலுக..உங்களுக்கு தெரியுமா, ரொம்ப கூச்சக்கார பயலுக அண்ணே..தன் பெயரை போட்டு எழுதினா நம்ம மனசு கஷ்டப்படும்னு அனானிங்கற பேரில் எழுதுறாயிங்கண்ணே..இதைப் புரிஞ்சுக்காம யாராவது அவிங்களை திட்டுனா எனக்கு கோவம் வரும் பார்த்துங்க..

நான் பிளாக் எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பிளாக்ல ஏற்கனவே எழுதுற நம்ம சேக்காளிங்க எச்சரிச்சாயிங்கண்ணா..”டே ராசா, பார்த்து எழுதுடா…யாரையும் திட்டி எழுதாத..அவிங்க மோசமாவானவயிங்க..” நம்பியார் மாதிரி கையத் தேயிக்காத குறைதாண்ணே..அடப்பாவி ஏதோ பழைய படத்துல வர்ற பண்ணையார் கேரக்டர் மாதிரி சொல்லுறேயேடா..

நான் ஒருத்தரை கிண்டல் பண்ணி முதல் பதிவு எழுதியிருந்த நேரம்ணே..ஒரு அனானி நண்பர் “குமார்” ங்கிற பேரில் சாட்டில் வந்திருந்தார்..எடுத்தவுடனே இப்படித்தான் ஆரம்பித்தார்..

“டே..பொறம்போக்கு..”

“யு மீன் வேஸ்ட் லாண்ட்..”

“டே..உனக்கு பெரிய இவன்னு நினைப்பாடா..”

“நீங்க..சாதா குமாரா, கொக்கி குமாரா…”

அவ்வளவுதான்..கெட்ட வார்த்தை சரமாரியா வருதுண்ணே..எனக்கு சாரு வெப்சைட் படிக்கிறதுனாலே, கெட்ட வார்த்தை கேக்கிறது ரொம்ப பிடிக்கும்னே..2 வருசமா, அமெரிக்காவுல கெட்ட வார்த்தை கேக்காம ரொம்ப போரடிச்சுருச்சுண்ணே..அப்பிடியே காதுல இன்பத்தேன் வந்து பாயுதுங்கண்ணே..

“அனானி அண்ணே..இன்னும் நல்லா பேசுங்கண்ணே..எனக்கு கெட்ட வார்த்தை ரொம்ப பிடிக்கும்னே..”

குமாரு ஒரு மாதிரி டயர்ட் ஆகிட்டாங்கண்ணே..அனானிங்களை யாரும் திட்டாதிங்கண்ணே..அடுத்தவங்களை என்டர்டெயின் பண்றதுக்கு எவ்வளவு கஷ்டப்படுராயிங்க தெரியுமா..

அடுத்த அனானி, சூப்பர்ங்கண்ணா..எப்படித்தான் போன் நம்பர் கண்டுபிடிச்சாயிங்கன்னு தெரியல..போன் எடுத்தா..

“ஹலோ..யார் பேசுறது..”

“நான் அனானி பேசுறேன்..”(அனானிங்க எல்லாம் எவ்வளவு அப்பாவிங்க இருக்காயிங்க பாருங்கண்ணே..இனிமே திட்டாதிங்கண்ணே..)

“சொல்லுங்க”

“உனக்கு என்ன தைரியம்..எப்படியா நீ எழுதலாம்..”

ஆகா..சிக்கிட்டான்யா..சிக்கிட்டான்யா..எனக்கு ரொம்ப சந்தோசம்னே..அவர் பேச பேச சூப்பரா இருக்குதுண்ணே..கூச்சத்தை விட்டே கேட்டுப்புட்டேன்..

“அனானி அண்ணே..அனானி அண்ணே..இதுவரை பேசுன அனானில நீங்கதான் ரொம்ப அப்பாவியா இருக்கீங்க..ஏதாவது கெட்ட வார்த்தை தெரியுமா..தெரிஞ்சா ரெண்டு வார்த்தை பேசுங்களேன்..”

அவரு ஒரு மாதிரி ஆகிட்டாரு போல..உடனே கட் பண்ணிட்டாரு..இதுல என் பொண்டாட்டி குசும்பு பாருங்கண்ணே..

“ஏங்க..உங்களுக்கு தான் அனானிங்க நிறைய தெரியும்ல..ஒரு 10,000 ரூபா கைமாத்தா கேளுங்களேன்..”

அடிப்பாவி, ஏதோ ஈட்டிக்காரயிங்க ரேஞ்சுக்கு பேசுரேயேடி..

சில அனானிங்க இன்னும் அப்பாவியா இருப்பாங்கண்ணே..நான் ஒரு தடவை லக்கிலுக் அண்ணணை பத்தி பதிவு போட்டுட்டேண்னு, அவர் பெயரிலே கமெண்ட் எழுதுறாங்களாம்..

இதுதான்னே கமெண்ட்

LuckyLook said...

Dey naadhari, neeyum sureshyum enna appidi? avan blogla un photo podra alavukku avlo naerukkamada? Enimae neeyo illa avano enna pathi yaeluthininga avlo thaan.. kaanamo pooduvinga... Lucky lookah ungala paakuradhum rowday lookah paakuradhum unga kaiyulae thaan da irukku.. Vartaah!!!!!!

எவ்வளவு அப்பாவியா இருக்காயிங்க பாருங்கண்ணே….முதல்ல லக்கிலுக் இப்பிடி ஆங்கிலத்துல எழுத மாட்டாருண்ணே..அப்புறம் லிங்க கிளிக் பண்ணினா ஏதோ ஒரு சைட்டுக்கு எடுத்துட்டு போவுது…..அப்புறம் அவருக்கு கோவம் வந்தா இப்படி அனானி பேருல திட்ட மாட்டாருண்ணே..இதுகூட தெரியாம எப்படி அப்பாவியா இருக்காங்க பாருங்கண்ணே..

இது மாதிரி, அனானி ஒருத்தர் லைனுக்கு வர,

“அனானி சார், அனானி சார்..எல்லாரும் நல்லா பேசுறீங்க..எழுதுறீங்க..ஏன் சார் நம்ம எல்லாம் சேர்ந்து “பாரு ஆன்லைன்.காம்” ன்ற ஒரு சைட் ஆரம்பிக்க கூடாது…

பின்னங்கால் பிடறியில அடிக்க ஓடுறாருண்ணே..யாரும் அனானிய திட்டாதிங்கண்ணே..அவுங்க ரொம்ப அப்பாவிங்கண்ணே..

ஆணவம்=திமிரு=கர்வம்

எழுத வந்து 70 நாட்கள் ஆகியிருக்கும்ணே..நேற்றோடு 50 பாலோயோர் இணைந்துள்ளனர்..சந்தோசமா இருக்கிற வேளையில கொஞ்சம் பயமாகவும் இருக்குண்ணே……என்னால தினமும் ஒவ்வொரு பதிவு போட முடியலண்ணே..உண்மை என்னன்னா, யாரும் அதை எதிர்பார்த்தும் இல்ல..எல்லாரும் உண்மையிலே ஏதோ ஒரு விதத்துல சிறப்பா எழுதுறாங்கண்ணே..என்னைப் பொறுத்த வரை எல்லாரும் சிறந்த பதிவர்கள்தான்…

எனக்கு வர்ற கமெண்ட்ஸ் பார்க்குறப்ப, பிச்சை எடுக்குறவனுக்கு சரவண பவன்ஸ் மீல்ஸ் போட்டா எப்படி இருக்கும்..அப்பிடி இருக்கும்ணே….சில நேரம், என்னால அவுங்களுக்கு பதில் எழுத முடியலயேன்னு கொஞ்சம் வருத்தமாதான் இருக்கும்னே..பதிவு எழுதற தவிர்த்து பார்த்தா, சில பதிவுகளைப் படிப்பேன்..அப்படி படிக்கும்போது சிலரோட எழுத்துக்களில் உள்ள ஒரு ஆணவம் எனக்கு பிடிக்கிறதில்லைண்ணே..ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, எனக்கோ அவுங்களுக்கோ கொடுக்கல் வாங்கல் தகராறு ஒன்னும் இல்லண்ணே..அவுங்களை பத்தி எழுதுண்ணாம, நிறைய ஹிட்ஸ் கிடைக்கும்ன்ற அவசியமும் இல்லண்ணே..ஏன்னா பத்து லட்சம் ஹிட்ஸ் வாங்குவது எப்படின்னு ஹிட்ஸ் பத்தி கலாய்ச்சிருக்கேன்….

என்னைப் பொறுத்த வரை ஆணவம்,கர்வம்,திமிரு எல்லாமே ஒன்னுதான்னே..எழுத்துதான் வேற வேற..நல்ல படைப்பாளிகளுக்கு ஒரு கர்வம் இருக்கணும்னு சொல்லுறீங்களா..இல்லண்ணே..கர்வம் இருந்தா, அவன் நல்ல படைப்பாளியே இல்லண்ணே..யாரோட கர்வமும் எனக்கு பிடிக்கிறது இல்லண்ணே..அவன் உலகத்துலேயே பெரிய படைப்பாளியா இருக்கட்டும், ஒரு நிமிசத்துல அவனுக்கும் மேல ஒருத்தன் வருவாண்ணே..எவனும் சொல்லிக்க முடியாது..’டே..நாந்தாண்டா..எனக்கு மேல ஒருத்தன் வரமுடியாதுடா” ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள ஒருத்தன் அவன் மேல ஏறி நிப்பான்….இளையராஜா பாடல்களை வேணுன்னா சொல்லலாம்…சூப்பர்னு..ஆனா அவரோட ஆணவத்தை..கர்வத்தை…ம்..ஹிம்..இதனாலேயே அவரோட பாடல்கள் என்னை கவர்ந்த அளவுக்கு அவர் என்னைக் கவரவில்லை..

சாரு எழுத்துக்களை படிக்கும்போது அது அப்பட்டமாக தெரியும்…”சார் எப்படி இருக்கீங்க..”ன்னு ஒரு கேள்வி கேட்டு பாருங்க..உலக இலக்கியத்துல இருந்து ஆரம்பிப்பாரு..ஏன் இப்பிடி..இப்படியெல்லாம் எழுதுனாத்தான், உலக இலக்கியம் தெரியும்னு நினைக்கனுமா என்ன..

இப்பிடித்தான் ஒரு பதிவர் அவரை பதிவர் கூட்டத்துக்கு கூப்பிட்டுருக்கார்..அதுக்கு விட்ட சரியா டோஸ், இன்னும் கூட எங்களுக்கு ஞாபகம் இருக்குண்ணே..

இதுக்கு பின்னால் ஒளிந்து கிடப்பது “கர்வம்” என்று நீங்கள் சொன்னா, நான் ஆணவம் என்று சொல்லுவேன்..எப்பிடித்தான்யா, பதிவர் சந்திப்புக்கு கூப்பிறது..கொஞ்சம் வெத்தலை பாக்கு எடுத்துக்கிட்டு, மஞ்சப்பையில கொஞ்சம் ஆப்பிளைக் குடுத்துக்கிட்டு..”ஆமாங்க மேனேஜர்..சரிங்க மேனேஜர்..பதிவர் சந்திப்புக்கு வாங்க மேனேஜர்..” இப்படின்னா..சரி..கூப்பிட்டுருக்காரு, நாசூக்காக மறுத்து விட்டிருக்கலாம்..இப்படியா பதிவில் போட்டு தாக்குறது..இந்த அவமானத்தை அழைத்தவர் வேண்டுமானால் வசதியா மறந்து இருக்கலாம்..எங்களால தொடச்சிட்டு போக முடியல..

என்னடா, எப்ப பார்த்தாலும் சாருவை தாக்கி எழுதுறான்னு நினைக்காதிங்கண்ணே...நான் எந்த சைட் படிக்கும்போது அது தோணிச்சுன்னா, அதையும் எழுதுவேன்..