Saturday 24 April, 2010

தேவடியா பசங்க……

இந்த கொளுத்தும் வெயிலில், எல்லோரும் ஏ.சி காரில் செல்லதான் ஆசைப்படுவார்கள், சந்தர்ப்பம் கிடைத்தால். எனக்கு என் பல்சர் பைக்தான் ஏ.சி கார். என்னுடைய உற்ற தோழன் என்று கூட சொல்லலாம். நான் நினைத்த மாத்திரத்துக்கு என்னை கொண்டு சேர்த்து விடும். அதுவும் பத்திரமாக..நான் என்ன சொன்னாலும் கேட்கும். என் பயணம் முழுவதும், என் மேல் ஒட்டிக்கொண்டு எப்போதும் நேசத்துடன்.

நம்மை மாதிரி நடுத்தர வர்க்கத்தின் செலவீனங்களைப் புரிந்து கொண்டு இதுவரை ஒருமுறை கூட எனக்கு செலவு வைத்ததில்லை. சைடு ஸ்டாண்ட் போட்டு அது நிற்கும் அழகைப் பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருக்கும். ஒரு மாதிரி கர்வத்துடன் நிற்பது போல் இருக்கும். காலை ஆறு மணி போல பைக்கை எடுத்துக் கொண்டு கொஞ்சம் ஆள் நடமாட்டமில்லா இடங்களில், தென்றலை அனுபவித்துக் கொண்டு ஓட்டிப்பாருங்கள். அனைத்தையும் மறந்து விடுவீர்கள்…காலை பேப்பர், பால் பாக்கெட், மாத சம்பளம், அப்ரைசல், ஹிட்ஸ், பின்னூட்டம் எல்லாம் தூசி போல இருக்கும்.

அப்படிப்பட்ட என் தோழனுக்கு நேற்று என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. மக்கர் செய்தான். ஆபிஸிலிருந்து கிளம்ப முடியவில்லை. நான் என்றும் அவனை உதைத்து ஸ்டார்ட் பண்ணியதில்லை, அவனுக்கு வலிக்கும் என்பதால். எப்போதும் பட்டன் ஸ்டார்ட்தான். முதல் முறையாக அவனை உதைத்தேன், மனதைக் கல்லாக்கிக் கொண்டு. அப்படியும் அமைதியாக இருந்தான்.

எனக்கு எப்போதும் பிடிக்காத சென்னையின் நெரிசல் நிறைந்த பஸ் பயணத்திற்கு ரெடியானேன். வேளச்சேரி வழியாக செல்லும் பஸ்ஸில் ஏறினேன். எனக்கு எப்போதும் நெரிசல் நிறைந்த பஸ் பயணம் பிடிப்பதில்லை. ஆண்களையே கற்பழித்து சக்கையாக தூக்கி எறிந்து விடும் நீங்கள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தத்தில். அதனால், ஒரு ஓரமாக நின்று கொண்டேன்.

அப்போதுதான் அவளைப் பார்த்தேன். ஒரு 22 வயது இருக்கும். மாநிறம். சென்னை வெயிலின் கொடுமை அவள் முகத்தில் தெரிந்தது. வியர்த்து வழிந்து கொண்டிருந்தாள். அவளுடைய அழுக்கேறிய உடை அவள் ஏழ்மை நிலைமையைக் காட்டியது. கலைந்த முடி அவள் வேலைக் கொடுமையைக் காட்டியது. தலை முழுக்க தூசி. கண்டிப்பாக ஏதோ தொழிற்சாலையில் வேலை பார்க்க வேண்டும். வேலை முடித்து வீடு செல்கிறாள் போலும்.

கையில் சற்று கிழிந்து போன மலிவு விலை ஹேண்ட்பேக் வைத்திருந்தாள். கண்டக்டரிடம் டிக்கெட் வாங்க ஹேண்ட்பேக்கை திறந்தாள். ஹேண்ட்பேக் சற்று சரியவே , அதில் உள்ள அனைத்து சில்லறைகளும் சிதறின. கதறி விட்டாள்..”அய்யோ..என் காசு..” பாவம், அந்தக் காசை சம்பாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படிருப்பாள். வேலையில் எவ்வளவு அவமானங்களை தாங்கிக்கொண்டு…ஒரு கணம் பெண் என்பதை மறந்து, எல்லோரையும் கை வைத்து தள்ளினாள். குனிந்து எல்லாவற்றையும் பொறுக்க ஆரம்பித்தாள், ஆடை விலகுவதை கூட மறந்து. எல்லாக் கழுகு பார்வைகளும் அவள் மேலேயே இருந்தன சில பேர் உதவ முயற்சி செய்தார்கள். சில பேர்,மனசாட்சியை அடகு வைத்துக் கொண்டு, சாக்காக அவளை தொட முயற்சித்தார்கள். அவளுக்கு அதெல்லாம் பெரியதாக தெரியவில்லை. எப்படியாவது எல்லாக் காசுகளையும் எடுத்து விடவேண்டுமென்பதே அவள் நோக்கமாக இருந்தது. கண்டிப்பாக அந்தக் காசுதான் அவள் குடும்பத்திற்கு இரவு சாப்பாட்டுக்கு என்று தெரிந்தது.

ஒரு வழியாக எல்லாக் காசுகளையும் எடுத்த பின்புதான் நிம்மதியானாள். எதையோ சாதித்த திருப்தி தெரிந்தது. அவள் ஆடைகளை சரி செய்து கொண்டாள். “1 பாரிஸ் கார்னர்” என்று டிக்கெட் வாங்கும்போது அவள் குரலில் ஒரு உற்சாகம் தெரிந்தது. திடிரென்று அவள் முகம் ஒரு மாதிரியானது. சற்று நெளிந்தாள். முன்னே வர முயற்சித்தாள். ஆனால் கூட்டம் அவளை விடவில்லை. அப்போதுதான் கவனித்தேன். அவள் பின்னால் நின்று கொண்டு ஒரு மனித மிருகம் அவளை உரசிக் கொண்டு இருந்தது. அந்த மிருகத்திற்கு ஒரு 40 வ்யது இருக்கும். அவனுக்கு அவள் வயதில் கண்டிப்பாக ஒரு பெண் இருக்க வேண்டும். முகத்தில் கேவலமான ஒரு புன்னகை. அவளை உரசுவதன் மூலம் அப்படி என்ன சாதித்தானோ என்று தெரியவில்லை., அவன் அம்மாவிற்கும் தங்கச்சிக்கும் இருப்பதுதான் இவளுக்கும் இருக்கும் என்பதை மறந்து.

அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டாள். முடிந்த வரை தள்ளிப்போக முயற்சித்தாள். ஆனால் இருக்கும் கூட்டத்தில் முடியவில்லை. அவனும் இதையே சாக்காக எடுத்துக் கொண்டு மேலும் உரசினான். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போனாள். திரும்பி அவனை ஒரு முறை முறைத்தாள். அவன் தள்ளிப்போனான். ஆனால் திரும்பவும் அவளருகிலேயே வந்தான். எனக்கு அவனை அடிக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் நான் ஏதாவது சொன்னால் திரும்ப கிடைக்க போகும் பதில்,”அப்படி சொகுசா வரணும்னா ஏ.சி காரில் வரவேண்டியதுதான..பஸ்ஸுனா அப்படிதான்பா இருக்கும்..” அதற்குள் என் ஸ்டாப் வந்ததால் அவசரமாக இறங்கினேன், என் கையாலாகதனத்தை நொந்து கொண்டு..

இறங்கி திரும்பி பார்த்தால், அவளும் என் ஸ்டாப்பில் இறங்கியிருந்தாள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. “பாரிஸ் கார்னர்” என்றல்லவா டிக்கெட் எடுத்திருந்தாள். யோசனையுடன் நான் கிளம்ப எத்தனித்த போது அவள் என்னை நோக்கி வருவது தெரிந்தது….நான் நின்றேன்..

“அண்ணா..ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..”

அப்போதுதான் அவள் கண்களைக் கவனித்தேன். கண்கள் கலங்கியிருந்தன. முகம் பஸ்ஸில் நடந்த அவமானத்தை காட்டியது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கூனி குறுகி போயிருந்தாள்..எனக்கு ஒரு தங்கை இல்லை. ஆனால் அவளை பார்க்கும்போது என் தங்கையாக நினைக்க தோன்றியது..

“சொல்லுமா…”

“நான் பாரிஸ் கார்னர் போகணும்..இந்த ஸ்டாப்புல பாரிஸ் கார்னர் பஸ் நிக்குமான்னு தெரியுமா..”

“நம்ம வந்த பஸ்ஸே பாரிஸ் கார்னர் போகுமே..தெரியாம இறங்கிட்டியா..”

“இல்லைண்ணே..பஸ்ஸில கூட்டம் அதிகம்...ரொம்ப இடிக்கிறாயிங்க..இடுப்பில கை…”

அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. அதுவரை அவள் கண்ணில் அடங்கியிருந்த கண்ணிர் அவளை அறியாமல் வெளியே வந்தது..அவசரமாக துடைத்துக் கொண்டு அந்த வார்த்தையை சொன்னாள்…

“தேவடியா பசங்க…”

Wednesday 21 April, 2010

ஏன்..ஏன்…ஏன்…ஏன்…????

(முதலில் மனிதாபிமானமே இல்லாமல் 80 வ்யதான அம்மையாரை சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியதற்கு என் கண்டங்களை பதிவு செய்கிறேன். அதைப்பற்றி தனி பதிவு போடுகிறேன். நான் இதுவரை எந்தப்பதிவருக்கும் அல்லது எந்தப்பதிவுக்கும் கண்டனம் தெரிவிப்பதில்லை. ஆனால் 80 வயது அம்மையாரை அனுமதிக்காதது சரிதான் என்று 70 வயது பதிவர் டோண்டு அவர்களின் பதிவைப் படித்தபோது வந்த கோபத்தை அடக்கமுடியாததால் அவருக்கு என் கண்டனத்தையும் பதிவு செய்கிறேன். ஆனாலும் அவருடைய பின்னூட்டத்தைப் படித்தபோது மனிதர் திருந்துவதற்கு அறிகுறி இருப்பதாக தெரியவில்லை., இனிமேலும் திருந்தமாட்டார், அவர் ஒரு மருத்துவமனைக்கு சென்று அவரை திருப்பி அனுப்பாதவரை..99.99% பேர் அவர் எழுதியது தவறு என்று உணர்த்தியபோதும், தான் பிடித்த முயலுக்கு காலே இல்லை என்று வாதிடுவது என்ன புத்திசாலித்தனம் என்று தெரியவில்லை..)

சில கேள்விகள் எப்போதும் மனதை அரித்துக் கொண்டே இருக்கும். சில நேரம் விடை தெரிந்தாலும் கூட. அதுவும் நம்மைப்போல மிடில்கிளாஸ் மனசாட்சிகளுக்கு. அந்த ஏன் களுக்கு விடை தெரிந்தாலும், வீட்டு வேலைகள் அதிகம் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது. மற்றும் ஆட்டோக்கள் அடிக்கடி வீட்டிற்கு வருவதையும் யாரும் விரும்புவதில்லை.

நீங்கள் இந்த ஏன் களை கேட்டிருக்கிறீர்களா??

  1. காலை 8 மணிக்கு மேல் எந்த கடையிலும் ஆவின் பால் கிடைப்பதில்லை. ஆனால் சற்று எட்டிப்பார்த்தால் கடைக்காரார் பிரிட்ஜில் வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்கிறார். விரும்பாவிட்டாலும் டோட்லா பாலைத்தான் வாங்க வேண்டியிருக்கிறது. பொய் சொல்ல வேண்டியம் அவசியம் ஏன்???
  2. காலை 9 மணிக்கு மேல் தினத்தந்தி கிடைப்பதில்லை. விரும்பாவிட்டாலும் தினகரனே வாங்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு சீக்கிரம் தினத்தந்தி காலியாகி விடுகிறதா?? ஏன்??
  3. சென்னையில் ஒரு நியாயமான ஆட்டோக்காரரை கூடப்பார்க்கமுடிவதில்லை. அதுவும் எக்மோர், மாம்பலம் ரயிலே ஸ்டேசன்களில் உள்ள ஆட்டோக்காரர்கள் முகமூடி இல்லாத கொள்ளைக்காரர்களாக இருக்கிறார்கள். சரி கால் டாக்சியில் போகலாம் என்று பார்த்தால் அதிலும் கொள்ளை..நியாயமான ஒரு ஆட்டோக்காரரை கூட பார்க்கமுடியவில்லையே..ஏன்??
  4. சென்னை சிட்டிக்குள் 10,000 ரூபாய்க்கு கம்மியாக ஒரு வீடு கூட வாடகைக்கு கிடைப்பதில்லை. கூச்சமே இல்லாமல் 10 மாதம் அட்வான்ஸ், 10,000 வாடகை கேட்கிறார்கள். சாப்ட்வேரில் வேலை பார்க்கவிட்டால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டுமோ???ஏன்???
  5. சரி, ஒரு சொந்த வீடு வாங்கலாம் என்று பார்த்தால் நம்ம பட்ஜெட்டுக்கு வண்டலூரில் புலிக்கூண்டுக்கு பக்கத்தில்தான் இடம் கிடைக்கிறது. வேளச்சேரியில் வீடு பார்க்கலாம் என்றால், வாங்குவதற்கு நான் இரண்டு ஜென்மம் சம்பாதிக்க வேண்டும்போல..ஒரு வீடு வாங்கணும் என்று ஆசைப்பட முடியவில்லையே..ஏன்???
  6. தமிழ்ப்படம் போன்று பலபடங்கள் வந்தாலும், தம்பிக்கு எந்த ஊரு, சுறா போன்ற படங்கள் வருவதை தடுக்கமுடிவதைல்லையே..விஜய் யோசித்து பார்க்கவே மாட்டாரா?? ஏன்??
  7. எப்போதும் 40கி,மீ வேகத்தில் செல்லும் டூவீலர், ஸ்கூட்டி ஓட்டும் பிகரை பார்த்ததுமே தன்னிச்சையாக 70கி.மீக்கு மாறுவது ஏன்??
  8. திருவிழா நேரங்களில் ரயில்வே புக்கிங் வெப்சைட் சொல்லி வைத்த மாதிரி, 08:00 மணிக்கு சர்வர் பிரச்சனை ஆகி, 08:30 க்கு நுழையும்போது வெயிட்டிங்க் லிஸ்ட் 115 காண்பிப்பது ஏன்??
  9. புதிய படங்களுக்கு அட்வான்ஸ் புக்கிங்க் ஓபன் ஆகும்போது சத்யம், ஐநாக்ஸ் இணையத்தளங்கள் அரை மணிநேரம் பிரச்சனையாகி, பின்னர் ஹவுஸ்புல் காண்பிப்பது ஏன்?
  10. லஞ்சம் வாங்காத ஒரு டிராபிக் கான்ஸ்டபிளை பார்க்க முடியவில்லையே ஏன்??
  11. செல்போனில் பேசிக்கொல்லாத மன்னிக்கவும் பேசிக்கொள்ளாத ஒரு பெண்ணைக்கூட பார்க்க முடியவில்லையே ஏன்??
  12. தினமும் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமல் இருந்தும் சென்னையில் ஒருமணிநேரம் கூட மின்வெட்டு வருவதில்லையே..ஏன்???(பத்தவைச்சிட்டியே பரட்டை..)
  13. சில பெண்கள் ஆபிஸுக்கு கொண்டுவரும் டிபன் பாக்ஸ்களில் ஒரு இட்லி, மற்றும் தொட்டுக்கொள்ள பொடி இவற்றை தவிர எதுவும் பார்க்கமுடிவதில்லையே ஏன்???
  14. “இட்ஸ் டூ ஹாட்யா.. என்பதில் “இட்ஸ் டூ ஹாட்” என்பதன் அர்த்தம் புரிகிறது.. ஆனால் “யா” என்பதன் அர்த்தம் எந்த டிக்சனரியிலும் காண முடிவதில்லையே..ஏன்??
  15. திருவிழா அன்று வெளியூர் செல்லும் பேருந்து கட்டணமாக சொத்தைக் கேட்பது ஏன்??
  16. இவையெல்லாம் நாம் நாட்டின் கலாச்சாரம் என்று தெரிந்தும் அவிங்க ராசா போன்ற ஆட்கள் ஏன் ஏன் என்று கேட்பது ஏன்???

Sunday 11 April, 2010

பதிவர் சந்திப்பு அனுபவங்கள்

லக்கிலுக் பதிவர் சந்திப்புக்கு இன்று அழைத்திருந்தார். போன தடவை பதிவர் சந்திப்பு கொடுத்த ஏமாற்றங்களால் இந்த முறை போகலாமா வேண்டாமா என்ற தயக்கம் நிறைய இருந்தது. 5 மணிக்கு என்றதால் 4 மணிக்கு மனைவியை எழுப்ப சொல்லி குட்டி தூக்கம் போட்டேன்.

ஆளைக் கொல்லும் வெயில், மெரினா பீச் டிராபிக் இவற்றையெல்லாம் தாண்டி காந்தி சிலையை அடைவது, ஏதோ சிந்துபாத் பயணம் போல் இருந்தது. அங்கு சென்று பார்த்தால் யாரையும் காணவில்லை. இடம் மாறி வந்துவிட்டோமா, அல்லது 11 ஆம் தேதியோ என்ற சந்தேகம் தோன்றியது. சரி யாரிடமாவது கேட்போமா என்று பார்த்தால் எல்லாரும் கொலைவெறியோடுதான் திரியிறாயிங்க. தள்ளுவண்டியில் சுண்டல் விற்கும் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.

“இன்னாப்பா..இன்னா வேணும்..சுண்டலா…”

“இல்லைண்ணே..இங்க பதிவர் சந்திப்பு..”

“அய்யே..பதிவரா..அப்படிண்ணா…”

“இல்லைண்ணே..இண்டெர்நெட்டுல எழுதுவாயிங்களே..அவிங்க..”

“இன்டெர்நெட்டா..எனக்கு குத்துவெட்டுதான் தெரியும்(ஆத்தாடி..)..போவியா..நானே காலையிலிருந்து ஒன்னும் விக்கலைன்னு கொலைவெறியா இருக்கேன்..”

இதுக்குமேல கேட்டா, காலையில நம்ம போட்டோ தினத்தந்தில வந்திரும்குறதால அங்கிருந்து எஸ்கேப் ஆகி, ஒரு கடையில் டீ குடிக்க கிளம்பினேன். டீ குடித்து விட்டு காந்தி சிலைக்கு வந்தால் என்ன ஒரு ஆச்சர்யம்..அனைத்து பதிவர்களும் வந்திருந்தார்கள்.

அதைவிட ஆச்சர்யம் எல்லோரும் சினேகமாக சிரித்தார்கள். சந்தோசமா இருந்தது. இந்த முறை பதிவர் சந்திப்பு முறையான கோ-ஆர்டினேசனோடு நடந்தது உண்மையிலேயே உலக அதிசயமாக இருந்தது. சண்டை துளியளவும் இல்லை. முக்கியமாக குரூப்பாக சென்று யாரும் பேசவில்லை.

அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. என்னால் நம்பவே முடியவில்லை. எவ்வளவு சந்தோசமாக, இருக்கிறார்கள் பதிவர்கள். பின்பு ஏன் தேவையில்லாத சண்டை. “கடவுளே..பதிவுலகம் இப்படியே இருந்துவிடக்கூடாதா..” என்று வேண்டிக்கொண்டேன்.

லக்கிலுக்தான் கோஆர்டினேட் பண்ணினார்..மிகவும் நகைச்சுவையாக ஆரம்பித்தார்..

"அழைப்பை ஏற்று அனைவரும் வந்ததற்கு நன்றி. நாம் எல்லோரும் இன்னும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதற்கு இதுவே சான்று..”

‘ஏ…எப்போதும் ஒற்றுமையாத்தான்பா இருக்கோம்..சும்மா எப்பயாவது சண்டை போடுறது பொழுது போகுறதுக்குத்தான்..”

என்று உண்மைத்தமிழன் காதுகுளிர சொல்லி, லக்கிலுக்கின் தோளின் மேல் நட்பாக கை போட்டார்..கூடவே அதிஷாவும் சேர்ந்து கொள்ள, ஒரு “தளபதி” படம் பார்ப்பது போல் இருந்தது..

இந்த நேரத்தில் உண்மைத்தமிழன் அண்ணாச்சி ஒரு சந்தோசமான தகவலை சொன்னார்..இனிமேல் பத்து பக்கம் மேல் எழுதமாட்டாராம்..எல்லார் வயிற்றிலும் பீர் வார்த்த மாதிரி இருந்தது.

கேபிள் சங்கர் இன்னும் இளமையாக வந்திருந்தார்..உண்மத்தமிழன் சபதத்தைப் பார்த்து “நானும் இனிமேல் கொத்து புரோட்டாவில், ஏஜோக் எழுத மாட்டேன்..” என எனக்கு அழுகையே வந்து விட்டது. ஜாக்கிசேகர் இந்தமுறை கேமிரா இல்லாமல் வந்திருந்தார்..கூலிங்கிளாஸ் கூட இல்லாமல் வந்திருந்துதான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அன்றைக்கு நிகழ்ச்சியின் ஹைலைட்டே பெரியவர் டோண்டு அவர்கள் நோட்புக் இல்லாமல் வந்திருந்து அனைத்து பதிவர்களின் பேச்சுக்களையும் பொறுமையாக கவனித்தார்…

யப்பா..என்னையே நான் கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். புதிய பதிவர்கள் அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. முக்கியமாக பிரபல பதிவர்கள், புதிய பதிவர்களிடம் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது..

நான் இன்னும் வியந்தது, கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு பதிவர் கூட டீ குடிக்க போகவில்லை. முக்கியமாக பதிவர் கார்க்கி ஒரு இடத்தில் மட்டுமே அமர்ந்திருந்தார்..இங்கும், அங்குமாக அவர் நடக்காதது மற்றுமொரு இன்ப அதிர்ச்சி. இன்னொரு அதிர்ச்சி நண்பர் நர்சிம்..”வாட் இஸ் திஸ்..எல்லாரும் கவனிங்க..கீப் கொயட்..” என்று ஆங்கிலத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவார் என்று பார்த்தால் மனிதர் முழுவதும் தமிழில்தான் பேசினார்..

ஆனால் இந்தமுறை முன்வரிசையில் உட்கார எல்லா பதிவர்களும் பயந்ததுதான் ஒரு மாதிரியாக இருந்தது..

யாருண்ணே..பேசிக்கிட்டு இருக்குறப்ப மூஞ்சியில தண்ணி ஊத்துறது. அதுவும் சுடுதண்ணியை..ஆஹா..எல்லாம் கனவா…

“ஏங்க..எந்திரிங்க..அது என்ன தூக்கத்தில அப்படி ஒரு சிரிப்பு..சந்தோசம்..ஏதாவது நல்ல கனவு கண்டீங்களா..”

“ஆமாண்டி..பதிவர் சந்திப்பு அமைதியா நடந்தது மாதிரி கனவு தெரியுமா…ஒரு சண்டை கூட இல்லைடி..எல்லாருக்கும் பேசவாய்ப்பு..புதிய பதிவர்களை உற்சாகப்படுத்துதல்ன்னு…சூப்பர் கனவுடி…””

“சரி..4 மணியாகிடிச்சு..பதிவர் சந்திப்புக்கு போகலையா…”

“அய்யோ வேணாண்டி..இதெல்லாம் கனவாகவே இருக்குட்டும் நேருல போய் இந்த அருமையான கனவை கெடுத்துக்க விரும்பலை..அப்படியே போனாலும் நான் போயி ஒரு ஓரமா உக்கார்ந்து இருப்பேன்..மைக் கிடைக்கிறவியிங்க எல்லாம் பேசிட்டு சண்டை போட்டுட்டு ஆளுக்காளு திட்டி கடைசியாக ஒரு பதிவைப் போடுவாயிங்க….நான் டைரக்டா பதிவையே படிச்சிக்கிறேன்..”

“என்னமோ பண்ணி தொலைங்க….சரி..சும்மாதானே உக்கார்ந்து இருக்கீங்க..அந்த அடுப்புல சாம்பார் கொதிக்குது பாருங்க..கிண்டி விடுறீங்களா..”

பேசாம பதிவர் சந்திப்புக்கு போயிருக்கலாமோ….

Wednesday 7 April, 2010

கழிப்பறை

நீங்கள் தற்கொலை செய்யும் எண்ணம் உள்ளவரா..வலி இல்லாமல் உயிர் போக வேண்டுமா..ஒன்றும் கஷ்டப்படவேண்டுடாம்..தெருமுனையில் உள்ள பொது நவீன கழிப்பறைக்கு சென்று ஒரு நிமிடம் நின்று பாருங்கள். நாற்றம் தாங்க முடியாமல் உயிர் தானாகவே போய்விடும்.

மேலே உள்ள வார்த்தைகள் நகைச்சுவைக்காக இருந்தாலும், உண்மையான நிலைமை அப்படித்தான் உள்ளது. வாழ்க்கையின் எல்லா செயல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாம் இதற்கு மட்டும் மூக்கைப் பொத்திக்கொண்டு சகித்துக் கொண்டு விடுகிறோம். இந்த உலகத்தில் சாவே இல்லாத ஒரு வீடைக் காட்டு என்று சவால் விட்ட புத்தர் இன்று இருந்தால் இந்தியாவில் உள்ள ஒரு சுத்தமான கழிப்பறையைக் காட்டு என்று சவால் விட்டிருப்பார்..

தெரு கழிப்பறைகள் இப்படி என்றால், நாம் ஸ்டைலாக செல்லும் எல்லா கமர்சியல் காம்ப்ளெக்ஸ் கழிவறைகளும் இந்த நிலையில்தான் உள்ளன. எடுத்துக்காட்டாக தி.நகரில் உள்ள க்ளோபஸ் காம்ப்ளெக்ஸ் கழிப்பறைக்கு(அங்க யாருய்யா போகச் சொன்னா என்று கேட்காதிர்கள்..வந்தா போய்த்தானே ஆகணும்) இயற்கை உந்துதல் காரணமாக செல்ல நேர்ந்தது. யப்பா..பொதுக்கழிப்பறை பரவாயில்லை..துணிகளை ஷோவாக அடுக்குவதில் உள்ள அக்கறை ஏன் இவர்களுக்கு இல்லை என்பது தெரியவில்லை.

ஆண்களுக்கு கூட இதில் அதிகம் பிரச்சனை இல்லை. ஏதாவது ஒதுக்குபுறமாக ஒதுங்கி விடுகிறார்கள். பெண்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். கொடுமை. வெளியில் கூட சொல்ல முடியாத அளவிற்கு சமூக கட்டுப்பாடுகள். அவசரம், அவசரமாக ஏதாவது கழிப்பறை உள்ள உணவகத்திற்கு கூட்டி சென்றால் கூட, கழிப்பறையின் சுத்தத்திலே வெறுத்துப் போய் விடுவர்.

நானும் பல வீடுகளுக்கு சென்று இருக்கிறேன். வீட்டின் இன்டீரியர் டெக்கரேஷனுக்கு காட்டும் அக்கறை கூட இதில் காட்டப்படுவதில்லை. சுத்தமில்லாமல் ஏதோ, ஏனோ தானென்று..சில மல்ட்பிளெக்ஸ் தியேட்டர்களை தவிர மற்ற தியேட்டர்களில் கழிப்பறை அதோ கதி. நாம் செலுத்தும் கேளிக்கை வரி கழிப்பறைக்கும் சேர்த்து என்பது பல பேருக்கு தெரியவில்லை. அப்படியே அசுத்தமாக இருந்தாலும், வேறு வழி.. ஒரு ஓரமாக நின்று நம் கடமையை ஆற்ற வேண்டியதுதான்.

ரோடுகளின் நிலைமையைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் சில பத்திரிக்கைகள் கூட பொதுக்கழிப்பறைகளின் நிலைமையைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. வெளிநாடுகளில், ஒவ்வொரு கடையிலும், பொதுக்கழிப்பறை இருக்கவேண்டும் என்று சட்டம் உள்ளது. அப்படி இல்லையென்றால் அந்த கடைக்கு அனுமதி கிடைக்காது. தெருவிற்கு தெரு மொபைல் பொதுக்கழிப்பறைகள், அனைத்தும் சுத்தமாக,.அவர்கள் இதில் கண்டிப்பாக உள்ளனர்.

இங்கு அதைப்பற்றி பேசவே கூச்சப்படுகிறோம். ஒரு பெண் எங்கவாது ஒரு ஆணிடம் சென்று இங்கு கழிப்பறை எங்கு இருக்கிறது என்று கேட்க முடிகிறதா..அவ்வளவிற்கு சமூக கட்டுப்பாடுகள்.அனைத்தையும் தகர்த்தெறியவேண்டும்..

என்னுடைய அப்பா இங்கு வந்திருந்தபோது சென்னையை சுற்றி காண்பிப்பதற்காக கூட்டிச் சென்றேன். எம்.ஜி.ஆர் சமாதி அருகே ஒரு பொதுக்கழிப்பறை உள்ளது. அப்பா இயற்கை உந்துதல் காரணமாக செல்லவே, நான் வெளியில் நின்று காத்திருந்தேன். அங்கே நான் கண்ட காட்சிகள், சென்னையில் பொதுக்கழிப்பறை செல்வது தவறு என்று எனக்கு உணர்த்தியது. அங்கு உள்ள இரண்டு பேர் செய்கை எனக்கு ஏதோ தவறு நடக்க போகிறது என்று எனக்கு உணர்த்தவே அவசரமாக கழிப்பறையை நோக்கி நடந்தேன். நான் வருவதைப் பார்த்த அந்த இரண்டு பேரில் ஒருவர்..”டே..யாரோ வர்றாயிங்கடா.. என்று கத்தவே, அவசரமாக உள்ளிருந்து இரண்டு பேர் வந்தனர். அவர்கள் கையில் பெரிய கத்தி, மற்றும் இன்னொரு ஆயுதம். அப்போதுதான் எனக்கு புரிந்தது. நான் செல்லவில்லையென்றால் இந்நேரம் என் அப்பாவை மிரட்டி அனைத்தும் பிடுங்கியிருப்பார்கள். எனக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது. என்ன நடக்கிறது, நம் பொதுக்கழிப்பறைகளில்

இப்போது ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுக்கழிப்பறைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அதற்கென்று தனி ஆட்களை போட்டு சுத்தம் செய்து பரமாரிக்க வேண்டும்.கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக மாறுகிறதோ இல்லையோ கழிப்பறகள் கொள்ளையர்களின் கூடாரமாக மாறுவதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் சிங்கார சென்னை என்பது பெயரளவிலே தான் இருக்கும்.