Thursday, 28 January, 2010

ஹிட்லர்

“பியூரர்..சோவியத் படைகள் பெர்லினை நெருங்கி விட்டன” படைத்தளபதி, ஹிட்லரை நோக்கி தயங்கி தயங்கி சொன்னார்..சொன்னபோது ஹிட்லரை உற்று நோக்கினார்..ஹிட்லரின் முகத்தில் தோல்விபயம் தெரிந்தது. அவருடைய உதடுகள் துடிதுடித்தன. தளபதியால் நம்ப முடியவில்லை. தோல்வியே கண்டிராத ஹிட்லரா இது. நடந்தால் சிங்கம் போல இருக்குமே. தன் பேச்சால் லட்சக்கணக்கான மக்களை கட்டிப்போட்ட ஹிட்லரா நடுங்குவது. பிரான்ஸை வென்று விட்டு, பாரிஸில் வெற்றி நடை போட்ட ஹிட்லரா நடுங்குவது..

ஹிட்லரால் இன்னும் தோல்வியை நம்ப முடியவில்லை..”ஜெர்மனியா தோற்கப் போவது. ஐரோப்பா முழுவதும் அகண்ட ஜெர்மனியாக்க நினைத்த நாடா தோற்கப் போவது..எங்கே தவறு நடந்தது..” இன்னும் ஹிட்லருக்கு நம்பிக்கை இருந்தது. கடைசியாக ஏதாவது ஒரு மேஜிக் நடந்து ஜெர்மனி ஜெயித்து விடும்..ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை. ஒருபுறம் சோவியத் படைகள் பெர்லினை முற்றுகையிட, இன்னொரு பக்கம் பிரிட்டன், அமெரிக்கப் படைகள் பெர்லினை நெருங்கியிருந்தன. ஹிட்லருக்கு தெரிந்து விட்டது…”தோற்கப் போகிறோம்..”

மெதுவாக நடந்து தன் அறை நோக்கி சென்றார்..தன் செல்ல நாய் கூட தன் கேவலமாய் பார்ப்பது போல் தோன்றியது..அதை தன் அருகில் அழைத்து அதனுடன் விளையாட முயற்சித்து தோற்றுப் போனார்..தன் நெருங்கிய தளபதியான கெப்பல்ஸை(கோயபல்ஸ் என்று தமிழில் கூப்பிடிகிறோம்..அவர் கோயபல்ஸ் அல்ல, கெப்பல்ஸ்) அழைத்தார்..

“கெப்பல்ஸ்..உடனே ஏற்பாடு செய்யுங்கள்..நான் ஈவா பிரவுனை மணக்க வேண்டும்..”

ஈவா பிரவுன்..ஹிட்லரின் காதலி..ஹிட்லர் தான் செய்யும் எல்லா வேலைகளிலும் வெற்றி எதிர்பார்ப்பவர். சாவதற்கு முன்னால் கூட தன் காதல் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார். கெப்பல்ஸ்க்கு ஆச்சர்யமாக இல்லை. ஒரு சிறிய அறையில் ஹிட்லர், ஈவா பிரவுன், கெப்பல்ஸ், ஒரு பாதிரியார்..திருமணம் நடந்தது..எப்படி நடந்து இருக்க வேண்டிய திருமணம்..உலகத்தையே ஆட்டிப் படைத்த ஒரு மனிதரின் திருமணமா இது. ஐரோப்பா முழுவதுமே கொண்டாட்டமாக இருந்து இருக்க வேண்டுமே..ஒரு சின்ன அறையில், ஒருத்தர் முகத்திலும் சந்தோசம் இல்லாமல்..கெப்பல்ஸால் இதை தாங்க முடியவில்லை..

ஹிட்லர் நடந்து தன் அறைக்கு சென்றார்.. தன் தளபதிகள் அனைவரையும் அழைத்தார்..”உடனே எல்லா ஆவணங்களையும் அழித்து விடுங்கள். எதிரிகளிடம் எதுவும் மிஞ்சக்கூடாது..” தளபதிகள் ஹிட்லரிடம் மன்றாடினர்..”பியூரர்..இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை..தப்பித்து சென்று விடுங்கள்..நீங்கள் ஜெர்மனிக்கு தேவை.இப்போது இல்லா விட்டாலும், எப்போதாவது வென்று விடலாம்..”. ஹிட்லர் மெலிவாக சிரித்தார்..”என்ன சொல்கிறீர்கள்..ஜெர்மனி என் தேசம்..இந்த தேசத்தை விட்டு நான் எங்கு செல்வேன். நான் போய்விட்டால், இந்த தேசத்துக்காக போராடும் என் வீரர்கள் என்ன நினைப்பார்கள்..” ஹிட்லர் உறுதியாக சொன்னாலும் குரலில் நடுக்கம் தெரிந்தது..சொல்லி விட்டு மெதுவாக எழுந்து தன் படுக்கை நோக்கி சென்றார்..

அப்படியே திரும்பி தன் மனைவியைப் பார்த்தார்.. மனைவி தூங்கிக் கொண்டிருந்தார்..இல்லை..இல்லை..செத்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே தன் மனைவிக்கு விஷம் கலந்து கொடுத்திருந்தார்..தன் மேசையில் உள்ள உலகப்படத்தை ஆசையுடன் தடவிப் பார்த்தார்..மெதுவாக தன் மேசையில் இருந்த டிராயரை இழுத்தார். ஹிட்லரை சாகடிக்கப் போகிறோம் என்ற பெருமையில் அந்த துப்பாக்கி தூங்கிக் கொண்டிருந்தது.. அதை மெதுவாக எடுத்து தன் தலையில் வைத்தார்..

“திருப்பி வைத்து விடலாமா..” சிறிது நேரம் யோசித்தார்..திடிரென்று அந்த நினைப்பை தூக்கிப்போட்டார்..


“நான் யார்..ஹிட்லர்..எனக்கு தோல்வியா..ஹா..”. தன் சுண்டுவிரல் ட்ரிக்கரை அழுத்த..

“ட்ரக்..”

அந்த மனிதரோடு சேர்ந்து ஒரு அகண்ட சாம்ராஜ்ய கனவும் மரித்துப் போனது..

Sunday, 24 January, 2010

செக்ஸ்

இந்த வாரம் ஒரு உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். உறவினர் வீட்டில் இல்லை. 12 ஆம் வகுப்பு படிக்கும் அவருடைய மகன் மட்டும் வீட்டில் இருந்தான். நான் வருவதைப் பார்ப்பதும் அவசரமாக கையில் இருந்ததை மறைத்தான். என் கண்ணில் தெரியாதவாறு மறைக்க நினைத்தவன், பக்கத்தில் உள்ள அலமாரியில் திணிக்க நினைத்து தோற்றுப் போனதால், அவன் கையில் உள்ள அந்தப் புத்தகம் தவறி கீழே விழுந்தது. பார்த்தால் பிளாட்பாரத்தில் விற்கும் ஒரு செக்ஸ் புத்தகம். அவன் முகம் பயத்தால் முழுவதுமாக மாறியிருந்தது. ஏதோ கொலைக் குற்றம் செய்தாற்போல் பதைபதைத்தான்..

“அங்கிள்..சாரி அங்கிள்..பிரண்ட் கொடுத்தான்..தெரியாம வாங்கிட்டேன்..அப்பாகிட்ட சொல்லிடாதீங்க அங்கிள்..” குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது..

“ஹே..ஒன்னும் சொல்ல மாட்டேன்..ஆமா..இதெல்லாம் ஏன் படிக்கிற..”

“பசங்கதான் சொன்னாங்க அங்கிள்..இதெல்லாம் படிச்சாதான் பெரிய பையன் ஆக முடியுமாம்..இல்லையின்னா, அவியிங்க கூட்டத்தில் சேர்த்துக்கமாட்டேன்னு சொல்லிட்டாயிங்க அங்கிள்..”

பதட்டமாக சொன்னான். குற்ற உணர்ச்சியில் இருந்த அவனுக்கு விளக்கி சொல்லி விட்டு, என் பைக்கை எடுத்துக் கொண்டு ஒரு பொருள் வாங்குவதற்கு பாண்டி பஜார் வந்தேன். பாண்டி பஜார் சென்றிருப்பிர்கள் என நினைக்கிறேன். வெளிநாட்டுப் பொருட்களின் கண்காட்சி போல இருக்கும். கொஞ்சம் உஷார் ஆக இல்லையென்றால் மாலை போட்டு ஒரு ரூபாயை நெத்தியில் ஒட்டிவிடுவார்கள்..பைக்கை நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பிக்கும்போது ஒரு ஆள் அருகில் வந்தார்..
“இன்னா சார்..ஏதாவது பொருள் வேண்டுமா..”
“இல்லைண்ணா..நான் பார்த்துக்குறேன்..”
கூடவே நடந்தார்..
“சார்..சி.டி, டிவிடி வேணுமா..”
“இல்லைண்ணே..”
“சார்..டிரிபிள் எக்ஸ் இருக்கு..பார்க்குறீங்களா..”
“…”
“சார்..சூப்பரா இருக்கும் சார்..தமிழ், இங்கிலிஸ் ரெண்டுமே இருக்கு..”

நான் எதுவும் பதில் சொல்லவில்லை..கொஞ்சதூரம் நடந்து வந்தேன்..ஒரு கடையில் டீ சாப்பிடுவதற்காக நின்றவன் அந்தப் பத்திரிக்கையை கவனித்தேன்..

“செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் கோர்ட் வருகை..மகளிர் போராட்டம்..” “திவாரி செக்ஸ் வீடியோ..ஆந்திர கொந்தளிப்பு..”

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நம்மை சுற்றி நடப்பது எல்லாமே செக்ஸ் மற்றும் செக்ஸ் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது..இங்கு செக்ஸ் என்பது, ஒரு குற்றம் அல்லது விவாதிக்க அஞ்சப்படும் ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறது..செக்ஸ் என்பது மறைத்து மறைத்து பார்க்கப்படும் மற்றும் பேசப்படும் அல்லது வெட்கப்படவைக்கும் உணர்வுகளின் தொகுப்பாக உள்ளது..ஒரு பலான படம் ஓடும் தியேட்டரில் டிக்கெட் வாங்க கியூவில் நிற்பவர்களின் முகத்தைப் பார்த்தால் அந்த வித்தியாசம் தெரியும். அனைவரின் முகத்திலும் ஒரு சங்கடம். அல்லது வெட்கத்துடன் கூடிய ஒரு பதபதைப்பு.

ஏன் இப்படி என்று யோசித்துப் பார்த்தால், நாம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கும் கலாசாரம் என்ற போர்வையே என்று சொல்லலாம்..நம்முடைய கலாசாரத்தில் செக்ஸ் என்பது நாலு சுவற்றுக்குள் மூடி வைக்கப்படவேண்டிய ஒரு விஷயம் என்ற கருத்து வலுக்கட்டாயமாக ஒவ்வொருவர் மனதிலும் ஆணித்தரமாக பதியப்பட்டுள்ளாது. ஆனால் செக்ஸ் என்பது ஒரு உணர்வு..பசி, தூக்கம், அழுகை, சிரிப்பு என்று எந்த உணர்வு வந்தாலும் அதை வெளிப்படுத்த நினைக்கும் இந்த சமூகம் அதற்கு சமமான செக்ஸ் என்ற உணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்த கூடாத அளவிற்கு விலங்கு போட்டுள்ளாது.

யோசித்துப் பாருங்கள்..பசி வந்தால் என்ன கிடைக்கிறதோ அவசரமாக சாப்பிட ஆரம்பிக்கிறோம். நகைச்சுவை காட்சிகளைப் பார்க்கும்போது விழுந்து விழுந்து சிரிக்கிறோம். துக்கம் வந்தால் வாய்விட்டு கதறி அழுகிறோம். தூக்கம் வந்தால் படுக்கையில் சென்று சாய்கிறோம். ஆனால் செக்ஸ் வந்தால்..எப்படி வெளிப்படுத்துகிறோம்..கண்டிப்பாக சொல்வேன்..கட்டுப்படுத்த நினைக்கிறோம்..ஆனால் உணர்வு என்பது ஒரு காட்டாற்று வெள்ளம் போல், கட்டுப்படுத்த நினைக்க, நினைக்க திமிறிக் கொண்டு வரும்..அதற்கு வடிகால் தேடுவதற்காக நாம் அடைவதுதான் மேலே சொன்ன செக்ஸ் புத்தகங்கள், டிவிடிக்கள்..

பிரச்சனை என்னவென்றால் குற்றங்கள் ஏற்படுவது அங்கேதான். பிளஸ்டூ படிக்கும் பையன் வடிகாலாக செக்ஸ் புத்தகங்களை தேர்ந்தெடுக்கிறான்.. கொஞ்சம் கையில் காசு உள்ளவர்கள், பலான படம் தியேட்டருக்கோ, அல்லது டிவிடியோ வாங்கி கொள்கிறார்கள். இன்னும் பணம் படைத்தவர்கள், இன்னும் ஒரு படி மேலே போய், பெண்களைத் தேடுகிறார்கள். ஆனால் சமூகத்தைப் பற்றி கவலைப்படாதவன் என்ன செய்கிறான். கற்பழிப்பு..நாம் தினமும் படிக்கும் கற்பழிப்பு செய்திகளுக்கு மூலமே இதுதான்.இன்னும் பயத்துடன் சொல்லப்போனால், ஒரு கட்டத்தில் மேல் யாருமே சந்தர்ப்பம் கிடைக்கும்போது இந்த தவறை செய்யக்கூடும்..

இதைக் கட்டுப்படுத்த முடியுமா என்று கேட்டால்..முடியாது என்றுதான் சொல்வேன். ஒரு உணர்வை எப்படி கட்டுப்படுத்த முடியும்.தும்மல் வந்தால் உங்களால் தும்மாமல் இருக்க முடியுமா…இந்த நிலைமையை வியாபரமாக்கி சம்பாதிப்பவைகள்தான், பலான புத்தகங்கள், மற்றும் பலான டிவிடிக்கள். இந்தப் புத்தகங்கள் செக்ஸ் உணர்வுக்கு வடிகாலாக மற்றும் இருப்பதில்லை…சந்தர்ப்பம் கிடைக்கும்போது நம்மை குற்றம் செய்ய தூண்டிவிடுகின்றன.ஒரு செக்ஸ் புத்தகம் படித்து விட்டோ, அல்லது செக்ஸ் படம் பார்த்து விட்டோ வருவபன், அனைத்து பெண்களையும் அந்த கோணத்திலேயே பார்க்க நினைக்கிறான். ஆனால் சமூக உறவுகளின் நிர்ப்பந்தத்தால் அந்த உணர்வை அவசரமாக மனத்தில் இருந்து அகற்றுகிறான். அப்படி அகற்ற மறுப்பதன் விளைவே நீங்கள் தினசரி செய்திகளில் படிக்கும் தந்தை-மகள், ஆசிரியர்-மாணவி கற்பழிப்புகள்..

ஆகவே இந்த உணர்வைக் கட்டுப்படுத்த நினைத்து தோல்வியடைவதை விட்டு விட்டு இதை வழிப்படுத்த நினைப்போம். பாலியல் கல்வியை கட்டாயமாக்குவோம். படிக்கும் மாணவர்கள் மற்றும் நம்முடைய குழந்தைகளுக்கு செக்ஸ் என்பது ஒரு வெட்கப்பட அல்லது ஒளிந்து பார்க்க நினைக்கும் உணர்வல்ல என்பதைப் போதிப்போம். அவர்களுக்கு உடம்பில் நடக்கும் மாற்றங்களை தெளிவாக புரிய வைப்போம். குற்றங்கள் இல்லாத சமுதாயத்தை கட்டி எழுப்ப ஒரு செங்கல்லையாவது கொடுத்திருக்கிறோம் என்ற திருப்தி வரும்..

இந்தப் பதிவின் மூலம் நான் ஒரு செங்கல்லை எடுத்து வைத்து விட்டதாக நினைக்கிறேன். அப்புறம் நீங்கள்…..??????

Thursday, 21 January, 2010

மிக்சர் ஜீஸ்

புத்தாண்டு சபதம்
இந்த புத்தாண்டில் ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். இனிமேல் ஹெல்மெட் அணிவதில்லை என்று. இரண்டு வாரங்களுக்கு முன்னால் திருநெல்வேலி மாவட்டத்தில் ஹெல்மெட் அணிந்ததால், ஆள் மாறி ஒரு சப் இன்ஸ்பெக்டர் வெட்டப்பட்டார். நானோ ஏற்கனவே பார்ப்பதற்கு ரவுடி மாதிரி இருக்கேனா..யாரையோ வெட்டப்போய் ஆளை மாற்றி என் கழுத்துக்கு கத்தி வந்துவிட்டால்..ஹெல்மெட் அணிந்து செல்லாததால், 100 ரூபாய்தான் அபதாரம். ஆனால் ஹெல்மெட் போட்டு சென்றால் உயிரே அபதாரம். 100 ரூபாயா, உயிரா என்று நினைக்கும்போது எனக்கு உயிரே பிரதானமாக இருக்கிறது. இதைக் கேட்பதற்கு முட்டாள் தனமாக இருந்தாலும், உங்கள் கழுத்திற்கு கத்தி வரும்போது, தெரிய வரும்..ஹி..ஹி..

இந்த மாத சாப்பாட்டுக்கடை
இந்த மெஸ் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. மேற்கு மாம்பலத்தில் பேச்சிலர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது காமேஸ்வரி மெஸ். ஒரு பிராமணர் இந்த மெஸ்ஸை நடத்துகிறார். காலையில் சென்று அங்கு ஒரு பூரி சாப்பிட்டுப் பாருங்கள். திவ்யமாக இருக்கும். அங்கு தரப்படும் காபியின் சுவை, இரவு வரை அடிநாக்கில் தித்திக்கும். மாலையில் வத்தக்குழம்பு சாதம் என்று சமைத்து தருவார்கள், பாருங்கள். ஒருதடவை சாப்பிட்டால் தினமும் அங்குதான் செல்வீர்கள். இரவு சப்பாத்தி சாப்பிடுவதற்கு அங்கு ஒரு க்யூவே நிற்கும். கண் எதிரிலியே சப்பாத்தி சுட்டு தருவர். சப்பாத்திக்கு தினமும் ஒரு சைட்ட்டிஸ்.அரிசி உப்புமா இன்னும் கலக்கல். அமர்ந்து சாப்பிட இடமில்லாததும், கஷ்டமர்களை சரிவர கவனிக்காததும் இந்தக் கடையின் மைனஸ். மேற்கு மாம்பலம் சென்றால் ஒருமுறை சென்று வாருங்களேன். மேற்கு மாம்பலம், ஜங்க்சன், மார்க்கெட் அருகில் உள்ளது.

இந்த மாத புத்தகம்
திரு,மருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர் தான் நான் தற்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம். வரலாறு பிடித்தவர்கள் அனைவரும் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம். இரண்டாம் உலகப்போர் எப்போது துவங்கியது, எப்படி முடிந்தது, ஹிட்லரின் அராஜகங்கள் என அனைத்தையும் தெளிவான தமிழில் இதற்கு மேல் யாரும் சொல்ல முடியாது. முதல் பக்கத்தைப் படிக்க ஆரம்பித்தவன், கடைசி பக்கம் முடியும் வரை 4 மணி நேரத்தில் முடித்து விட்டேன். நீங்களும் நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்களேன்.

இந்த மாத அநியாயம்
இரண்டு வாரங்களுக்கு முன்னால் சன்.டிவியில் ராஜா ராணி நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அந்தக் காலத்தில் ஏதாவது அடல்ஸ் ஒன்லி நிகழ்ச்சி பார்ப்பதற்கு சனிக்கிழமை இரவு வரை இளைஞர்கள் காத்திருப்பர். ஆனால் இந்த நிகழ்ச்சி அதையும் மிஞ்சி விட்டது. இதில் பங்கேற்கும் ஒரு நடிகை உடுத்திய உடை ஆபாசத்தில் எல்லை. ஏறக்குறைய ஒரு கர்சீப் துணிதான் உடுத்தியிருந்தார். அதுவும் எப்படா விழும் என்று தொங்கிக் கொண்டு இருந்தது இன்னும் கொடுமை(இல்லையென்றால் சிறப்பு). சன்.டீ.விக்கு என்ன ஆனது. விஜய் டீ.விக்கு போட்டி கொடுக்க வேண்டியதுதான்..அதற்காக இப்படியா..இப்படி நிகழ்ச்சிகளால் சன் டீ.வி பார்க்கும் குடும்பங்களின் எண்ணிக்கை குறையவும், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு

இந்த வார வேண்டுகோள்


சென்னை வந்து 10 வருடங்கள் ஆகிறது.,இன்னும் ஒரு சினிமா சூட்டிங்க் கூட பார்த்ததில்லை. சினிமா அல்லது தொலைகாட்சி உலகத்தில் இருப்பவர் யாரேனும் இந்தப் பதிவை பார்க்க நேர்ந்தால் என்னை ஒரு சூட்டிங்க்கிற்கு கூட்டி செல்ல இயலுமா..ஒரு ஓரமாக நின்று பார்த்து விட்டு ஓடி வந்து விடுகிறேன். என் மேல இருக்கிற கடுப்புல் ஏதாவது பைட் சூட்டிங்கிற்கு கூட்டிட்டு போயிராதிங்கப்பூ…

Saturday, 16 January, 2010

ஊர்ப்பொங்கல்


உங்களுக்கு ஒரு புதிர். நீங்களும் நானும் ஜென்ம விரோதிகள். நானோ பரம ஏழை. குறைந்த செலவில் உங்களை தீர்த்துக்கட்ட வேண்டும். எவ்வளவு செலவாகும்…யோசியுங்கள்..யோசியுங்கள்..விடை என்ன தெரியுமா..2 ரூபாய்..எப்படியா?? விளக்கத்தை பதிவின் கடைசியில் தெரிந்து கொள்ளுங்கள்..

தமிழ்நாட்டு நியதிப்படி, இந்த பொங்கலை ஊருக்கு சென்று கொண்டாடுவது என தீர்மானித்திருந்தேன். புதன் கிழமை இரவு பஸ் பிடிப்பதற்கு கோயம்பேடு சென்றேன். சென்ற புதன் கிழமை கோயம்பேடு சென்றீர்களா..சென்றிருக்க மாட்டீர்கள். ஏனென்றால் சென்றிருந்தால் இதைப் படித்துக் கொண்டு இருக்க முடியாது. எங்கு பார்த்தாலும் டிராபிக்..சென்னையில் உள்ள 20% மக்கள் அனைவரும் கோயம்பேடு சென்றால் , டிராபிக் போலிஸ் என்னதான் செய்வார்கள். பாவம் முழி பிதுங்கி விட்டது…வடபழனியிலிருந்து கோயம்பேடு செல்வதற்குள் நடுவில் உள்ள தியேட்டரில் ஒரு முழு படம் பார்த்து விடலாம்..யப்பா..எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.இன்னும் 2012ல் உலகம் அழிகிறதோ இல்லையோ, சென்னை அழிந்து விடும். ஒரு நரகத்தை சாரி ஒரு நகரத்தை ஒரு கோடிபேர் அழுத்தினால் அது என்னதான் செய்யும்..

பஸ் போக்குவரத்து விதிப்படி, 10:30 மணிக்கு கிளம்ப வேண்டிய பஸ் 12:30க்குதான் கிளம்பியது. ஒரு டிராவல்ஸ் பஸ்தான். டிரைவர் “அடியே..நாங்களும் வால்வோ பஸ் ஓட்டுவோம்ல” என்றபோதே நான் சுதாரித்து இருக்கவேண்டும். நடுவழியில் அரசு பேருந்துக்கு இதழோடு இதழாக முத்தம் கொடுத்ததன் விளைவு, அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொருங்கியிருந்தது. அதுகூட எனக்கு கோபமில்லை. இவ்வளவு நடந்திருக்கிறது. என் பஸ்ஸில் இருக்கும் அனைவரும் குறட்டை விட்டு தூக்கம்..ஒரு பயபுள்ளையும் எழுந்து வரவில்லை. தூக்கம் கலைஞ்சிடுமாம்.இதில் என் பக்கத்தில் உள்ள ஒரு ஆள்
“ஏ.சி” யைப் போடுங்கப்பா, என்று சொல்லியபோது எனக்கு கடுப்பு உச்சத்தில் ஏறியது. ஒருவழியாக எல்லா பார்மாலிட்டிகளும் முடிந்து மதுரை வருவதற்கு 09:30 ஆகி இருந்தது. அங்கிருந்து என்னுடை ஊர் சோழவந்தான் அடைந்தேன்.

4 வருடம் கழித்து செல்கிறேன். நாகரித்தின் பூச்சு, சில இடங்களில் தெரிந்தாலும் இன்னும் மண் மணம் மாறாமல் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமை. காண கண் கோடி வேண்டும். பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் காற்று வந்து உங்களை தாக்கும் பாருங்கள்..புழுதி, பெட்ரோல் கலக்காத காற்று..ஆஹா..இதெல்லாம் கிராமத்தில் மட்டுமே கிடைக்கும். வருடத்திற்கு ஒருமுறையாவது கிராமத்திற்கு சென்று விடுங்கள்..நல்ல காற்றாவது கிடைக்கும்..

வீடு சென்று கதவைத்தட்டினேன். அம்மாதான் திறந்தார்கள்..அப்படியே வந்து கட்டிக் கொண்டார்கள்..மாசு கலக்காத அன்பு. அம்மாவிடம்தான் கிடைக்கும்..கண்களை கவனித்தேன்..கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது..

“ராசா..நல்லா இருக்கியாப்பா..பயணம் நல்லா இருந்ததா..”
“நல்லா இருந்ததும்மா..அப்பா எங்க..”
“உள்ள இருக்காங்கப்பா..இங்கேருங்க..இங்கேருங்க..பையன் வந்து இருக்கான் பாருங்க..”

அப்பா எழுந்து ஓடிவந்தார்..அவருடைய கண்களிலும் தண்ணீர்..

“ராசா..இப்பதான் வந்தியா..2 மாசமாயிடுச்சுடா உன்னைப் பார்த்து” கலங்கினார்கள்..

“அழுகாதிங்கப்பா..ஏற்கனவே அவியிங்க ராசா அடிக்கடி நெஞ்சை நக்குற மாதிரிதான் பதிவு போடுறாரு..போரடிக்குதுன்னு கமெண்ட் வருது..இதுக்குமேல போனா ஓவராயிடும்…”

“என்னப்பா ராசா..ஒன்னும் புரியலையே..”

“இல்ல..குளிக்கனும்..வெண்ணித்தண்ணி போடுறீங்களா..”

“ப்ரூ இருக்கேடா” என்பது மாதிரி “ஹீட்டர் இருக்கேடா” என்று சொன்னார்கள். பாத்ரூம் முழுவதும் கீசர் ஹீட்டர்தான் அடைத்து இருந்தது.. எனக்காக ஒரு ரூமில் ஏ.சி போட்டிருந்தார்கள். ஏதோ நான் ஏசியிலே பிறந்து தவழ்ந்த மாதிரி..கடைசி வரைக்கும் நான் ஏசி போடவேயில்லை. அதற்குள் என் நண்பர்கள் வந்துவிட்டார்கள்.

“வாடா..அமெரிக்கா பங்க்ஸ்(பங்காளியின் சுருக்கமாம்)..நீ வர்றதா அம்மா சொன்னாங்க..அதான் வந்தோம்..துண்டை எடுத்துட்டு வாடா..ஆத்துக்கு போவோம்..”
“டே..நான் இங்கிட்டே குளிச்சிக்குறேன்..”
“பாருடா..அமெரிக்காகாரனுக்கு வெக்கத்தை..நாலாப்பு படிக்குறப்ப துணியில்லாம ஆத்துல குளிச்ச பயதான நீயி..புதுசா எங்கிட்டு வெக்கம்.”

இதற்கு மேல் போனால் மானம், மரியாதை போய்விடும் என்பதால் துண்டை எடுத்துக் கொண்டு உடனே கிளம்பி சென்றேன். கிராமத்து நட்பு இருக்கிறதே, அது வித்தியாசமானது. கூப்பிடுவது கூட கெட்ட வார்த்தையில்தான் கூப்பிடுவார்கள்..ஆனால் ஏதாவது ஒன்னுன்னா உசிரையே கொடுப்பார்கள். எங்கள் ஊர் ஆறு இன்னும் சுருங்கியிருந்தது. ஆனால் ஆற்றை சுற்றிலும் உள்ள தென்னைமரங்கள்..வயல்வெளி..பச்சை பசலேன்று..அதுவும் காலைவேளையில்..கிராமத்தை விட்டு வரவே மாட்டீர்கள்…ஆற்றில் குளிக்க சில பழக்கங்கள் இருக்கின்றன.ஓடும் தண்ணீரில் கன்னாபின்னவென்று குளிக்க மாட்டோம். ஏனென்றால் கரையோரம் ஒதுங்குபவர்கள் எல்லாம் ஓடும் தண்ணிரீல்தான் கழுவிவிடுவார்கள். அதனால் அழகாக ஒரு ஊற்று தோண்டுவோம். அதுவும் ஆங்கில “டீ” வடிவத்தில். புதிய தண்ணீர் ஊற்று எடுத்து வரும். சுத்தமாக இருக்கும்..அதில்தான் குளியல்..4 சுவற்றில் நாம் குளிப்பதெல்லாம் என்ன குளியல்..பசுமை சூழ வெட்டவெளியில் ஊற்றுதண்ணியில் ஒரு முறை குளித்துப் பாருங்கள்..சொர்க்கமே கிடைக்கும்..

பொங்கல்தான் கிராமங்களுக்கு தீபாவளி பண்டிகை. தெருவெங்கும் கோலாகலம்..தெருவுக்கு தெரு மைக் செட் போட்டு கலக்குவார்கள்..முதலில் “விநாயகனே..வினை தீர்ப்பவனே..” என்றுதான் ஆரம்பிக்கும்..அடுத்த பாட்டே “நான் அடிச்ச தாங்க மாட்ட..” என்று களைகட்ட ஆரம்பிக்கும்.அனைவர் முகத்திலும் உற்சாகம்..தெருவில் நடந்தால் பார்ப்பவர் அனைவரும் மாமன் மச்சான் தான்..ஒவ்வொரு வீதியிலும் ஒரு இளைஞர் நற்பணி மன்றம் இருக்கும்..ஒலிம்பிக் ரேஞ்சுக்கு விளையாட்டுப் போட்டிகள் தூள் பரக்கும்..தெருவில் இறங்கி நடந்தால் தெரு முழுவதும் வண்ணக்கோலம் தான். சிறந்த கோலத்திற்கு பரிசு வேறு.. “இந்த விழாவை சிறப்பிக்க வந்திருக்கும் நம்ம மாமா ஒச்சுப்புலி அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்” என்று குரல் மைக் செட்டில் கேட்கும்..ஒச்சுப்பிலி மாமா போன வாரம்தான் ஜெயிலில் இருந்து வந்திருப்பார்..புல் மப்பில் வேறு இருப்பார்..”இங்கு குழுமியிருக்கும் கோடான கோடி பெருமக்களே” என்றுதான் ஆரம்பிப்பார்..அவரைத் தள்ளிக் கொண்டு போவதற்குள் படாதபாடு ஆகிவிடும்..

சாயங்காலம் ஆனால் கபடிப்போட்டி, சைக்கிள் போட்டி, இன்னிசை நிகழ்ச்சி..ஆடல் பாடல்..இன்னிசை நிகழ்ச்சியில் ஏழு கட்டையில் பாடகர் பாடினாலும்..”ங்கொய்யாலே..என்னாமா பாடுறான்யா..” என்று மார்கழி பஜனை மாதிரி தொடையைத் தட்டிக்கொண்டு ரசிப்போம்..ஆடல் பாடல் நிகழ்ச்சி ஆரம்பித்தால் போதும், முன்வரிசையில் அமர்ந்திருக்கும் சின்னஞ்சிறுசுகளை துரத்தி விடுவோம்..வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் பெண்கள் “களவாணிப் பசங்க” என்று சாபம் கொடுத்தபடியே உள்ளே செல்வர்..அவ்வளவுதான் குத்தாட்டம் ஆரம்பிக்கும்..யாராவது ஒரு பெண் ஆடினால் போதும்..அதகளாமாகி விடும்..நம்ம ஒச்சுமாமா புல் மப்பில் 100 ரூபாய் நோட்டை எடுத்து கொண்டு புயலாக கிளம்பி விடுவார்..அவரை தடுத்தி நிறுத்துவதற்கு ஒரு பாதுகாப்பு படையே தேவைப்படும்..ஊரே குத்தாட்டம் போட்டு ஆடி ஒரே அலப்பறைதான்….பாதிபேர், புல் மப்பில் தெருவிலே சாக்கடை பக்கதிலேயே தூங்கி விடுவாயிங்க..

அடுத்த நாளில் பார்த்தால் இதற்கெல்லாம் நேர் எதிர்..எல்லாரும் நல்ல பிள்ளை மாதிரி, கோயிலை நோக்கி படையெடுப்பாயிங்க..திருநீரை முகம் முழுவதும் அப்பிக் கொண்டு “துண்ணூரை வைச்சிக்க பங்ஸ்” என்ற பயபக்தியுடன் நீட்டும்போது அடப்பாவிகளா..நேத்து தண்ணியப் போட்டு இவ்வளவு அலப்பறை பண்ணுனவனாடா நீ என்று கேட்க தோன்றும்..ஹீம்..இதெல்லாம்..சுகமான அனுபவம்..கிராமத்தில் மட்டும்தான் கிடைக்கும்..

பொங்கல் விடுமுறை அனுபவித்து விட்டு நேற்று இரவு சென்னை நோக்கி கிளம்பினேன்..இன்று காலை கிண்டியில் இறக்கி விட்டார்கள்..ஊரே இழவு வீடு மாதிரி இருந்தது..ஒருவேளை பொங்கல் எல்லாம் இங்கிட்டு கொண்டாட மாட்டயிங்களோ..வேளச்சேரிக்கு ஆட்டோ புடித்தேன்..வழக்கம் போல் முகமூடி மாட்டாமல் கொள்ளைக் காசு கேட்டார்கள்..ஆட்டோவில் வரும்போது ஆட்டோக்காரர் பேச்சு கொடுத்தார்..
”என்னப்பா..இன்னா ஊரு”
“மருத அண்ணே..”
“ஆளப்பார்த்தாலே தெரியுது..” (எப்படித்தான் கண்டுபிடிப்பாயிங்களோ)
“ஏண்ணே..பொங்கல் இங்க கொண்டாட மாட்டாயிங்களா,.,.தெருவில ஒன்னையும் காணோமே..”
“தெருவில என்ன பண்ணனும்..அதுதான் வீட்டுல பொங்கல் வைக்கிறோம்ல”

எனக்கு கோபமாக வந்தது..

“ஏண்ணே..ஊராண்ணே..இது..பொங்கல் திருவிழா மாதிரியா இருக்கே,.”

அவ்வளவுதான் ஆட்டோ டிரைவர் காண்டாகிவிட்டார்..

“அடியே..ஊர்க்காரயிங்களுக்கெல்லாம் கொழுப்பு ஜாஸ்தியாகிடுருச்சுடி..ஊரில இருந்து வர்றப்ப ஒரு மஞ்சப்பையே தூக்கிக்கிட்டு வர்றது..நல்லா முன்னேறுன பிறகு சென்னையை திட்டுறது..அடீங்க..”

இதற்கு மேல் பேசினால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாததால் அமைதியாகி விட்டேன்..வீடு செல்லும்முன் பக்கத்து வீட்டுக்காரருக்கு பொங்கல் வாழ்த்து சொல்லிவிடலாம் என்று கதவை தட்டினேன்..ரொம்ப நேரம் கழித்து பக்கத்து வீட்டுக்காரர் கதவைத் திறந்தார்..அதுவும் கால் கதவுதான்..கதவின் இண்டு வழியாக எட்டிப் பார்த்தார்..

“இன்னா..இன்னா வேணும்..”
“நான் பக்கத்து வீட்டுலதான் இருக்கேன்..”
“இருந்துக்கோ..அதுக்கு என்ன இப்ப..”
“பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லலாம்னு.,,.”
“ஓ..ஹேப்பி பொங்கல்..”

சொல்லி விட்டு கதவை சாத்திக் கொண்டார்..டி.வி ஓடும் சத்தம் மட்டுமே காதில் கேட்டது..

“இந்தப் பொங்கலை வேட்டைக்காரனோடு கொண்டாடுங்கள் உங்கள் சன் டீ.வியில்..டீலா..நோ டீலா.,.”

(பதிவின் தொடக்கத்தில் கேட்கப்பட்ட புதிருக்கான விளக்கம்..2 ரூபாயில் உங்களை தீர்த்துக்கட்டுவது எப்படி..தமிழ்நாட்டில் உள்ள 2 ரூபாய் கொடுத்து போகும் எந்த நவீன பொதுக் கழிப்பறையில் உங்களைத் தள்ளி கதவை சாத்திவிடுவேன்..நாற்றம் தாங்க முடியாமல் நீங்களே தற்கொலை பண்ணிக் கொள்வீர்கள்..யப்பா என்னா கப்பு…)

கழிப்பறை ஓனர்களுக்கு ஒரு வேண்டுகோள்..தயவு செய்து “கழிப்பறை” என்று மட்டும் எழுதுங்கள்..”நவீன கழிப்பறை” என்று எழுத வேண்டாம்..எழுதியே தீருவேன் என்று அடம்பிடித்தால்
“பின்நவீனத்துவ” கழிப்பறை என்று வேண்டுமானால் எழுதிக் கொள்ளுங்கள்..

Friday, 15 January, 2010

ஆயிரத்தில் ஒருவன் – விமர்சனம்

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் எழுதாவிட்டால், ஆயிரத்தில் ஒருவனாகிவிடுவேன் என்ற பயத்தாலே விமர்சனத்தை எழுதவேண்டியது அவசியமாகிறது. விமர்சனத்தை ஆரம்பிக்கும்முன், கை கொடுங்கள் செல்வராகவன். தமிழில் இது போன்ற படம் இதுவரை வந்ததில்லை, இனிமேல் வரப் போவதில்லை. இந்த படம் மூலம், நீங்கள் தைரியமாக சொல்லலாம் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் டைரக்டர் என்று. அடுத்த கைகொடுத்தல் தயாரிப்பாளருக்கு..இவ்வளவு செலவு பண்ண கண்டிப்பாக தைரியம் வேண்டும். வேறு ஏதாவது பிசினஸ் வைத்திருக்கிறீர்களா..?? இந்தக் கடனை அடைப்பதற்கு..கண்டிப்பாக உங்கள் அடுத்த தலைமுறை வரைக்கும் கஷ்டப்பட வேண்டி இருக்கும்..

கதை இதுதான்..சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நடைபெற்ற போரில், பாண்டியர்கள் வசம் உள்ள ஒரு சிலையை, சோழர்கள் கைப்பற்றுகிறார்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில், சோழர் அரசர், தன்னுடைய மகனை அந்த சிலையுடன் கண்தெரியாத தீவுக்கு அனுப்பிவிடுகிறார்..அதுவும் எப்படி, ஏழு கடுமையான பாதுகாப்புகளோடு(ஜீபூம்பா படம் மாதிரி..) கதை இப்போது, இந்த நூற்றாண்டுக்கு வருகிறது..தொலைந்து போன தன் அப்பாவை தேடுவதற்காக, ஆண்ட்ரியா, ரீமா சென், மற்றும் கார்த்தி & கோ வியட்நாம் தீவை நோக்கி போகிறது. அவர்கள் ஒவ்வொரு தடையாக தாண்டி, கடைசியாக சிலை இருக்கும் இடத்துக்கு செல்கிறார்கள். அங்கு இன்னும் உயிரோடு வாழும் சோழர்களின் கூட்டத் தலைவன் பார்த்திபனால் சிறை பிடிக்கப்படுகிறார்கள். திடிர் திருப்பமாக, ரீமா சென், பாண்டிய மன்னர் தலைமுறையில் இருந்து வருபவர் என்றும், சோழர்களை பழி வாங்கி அந்த சிலையை கவர்ந்து செல்பவர் என்றும் தெரிகிறது..இதற்கு மேல் கதையை சொன்னால் , நீங்கள் படம் பார்க்க மாட்டீர்கள் என்பதால், இதோடு நிறுத்திக் கொள்ளலாம்..

ரீமா சென்னை பாராட்டுவதற்கு முன்னால் இதில் நடித்த துணை நடிகர்களை பாராட்ட வேண்டும். உடல் முழுவதும் கருப்பு பெயிண்ட் அடித்து, காட்டுவாசிகளாக கலக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கும் சம்பளம் தரப்படவில்லை என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. குடுத்திருங்கப்பு..அடுத்து கார்த்தி..இந்த படத்தை அவர் வாழ்நாளில் மறக்க முடியாது..அவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்..ஆனால் சில காட்சிகளில் பருத்திவீரன் பாதிப்பு தெரிகிறது..ரீமாசென்..கண்டிப்பாக விருது கொடுக்கலாம்.இந்த ஒரு படம் போதும், இனிமேல் சினிமாவிலிருந்து விலகி கொள்ளலாம்..படம் முழுதும் அவர் ஆளுமைதான். அணிந்திருக்கும் ஆடை பற்றி கூட கவலைப்படாமல் அப்படி ஒரு வெறியுடன் கூடிய நடிப்பு..முன் வரிசை கூட்டம் விசிலடித்தே மாய்ந்து போகிறது..

அடுத்து பார்த்திபன்..சில காட்சிகளில் ஓவர் ஆக்டிங்க்..ஆனால் அந்த ராஜா வேஷத்திற்கு கனகச்சிதம். அவர் கொடுக்கும் அசைவுகள், தமிழ் சினிமாவிற்கு புதிது..ஆண்ட்ரியாவும் கஷ்டப்பட்டிருக்கிறார். ஆனால் இடைவேளைக்கு அடுத்து படத்தில் இருப்பதே தெரியவில்லை.. செல்வராகவன், இந்தப் படம் அவரை எங்கோ கொண்டு போய் விட்டுவிடும்..அடுத்து எந்தப் படம் எடுத்தாலும், இந்தப் படத்துடன் ஒப்புமை செய்யப்படும் வாய்ப்பு உண்டு..சில காட்சிகள் ஹாலிவுட்டிற்கு சவால். சில காட்சிகள் ராமநாராயணுக்கு சவால்..இடைவேளைக்கு அடுத்து வரும் காட்சிகள் கொஞ்சம் பாமரனுக்கும் புரியும் படி எடுத்திருக்கலாம். தியேட்டரில் நெளிகிறார்கள். அவர்கள் பேசும் தமிழைப் புரிவதற்கு டிக்சனரி எடுத்து செல்வது நல்லது. சில காட்சிகளில் டைரக்டர் கோட்டை விட்டுள்ளது தெரிகிறது..ஹெலிகாப்டரில் போக முடிந்த இடத்திற்கு, ஏழு பாதுகாப்பு தாண்டி ஏன் பயணம்.. அடிக்கடி வரும் மாயாஜாலக் காட்சிகள் ஏன்..இயல்பாக சொல்லி இருக்கலாமே..

ஒளிப்பதிவாளர்,இசையமப்பாளர் நிறைய ஹோம்வொர்க் செய்துள்ளனர். கேமிராவும், இசையும் நம்மோடே பயணிப்பது, அவர்களின் வெற்றி..இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் விருதுக்கு தகுதியுள்ளவர்கள். இதுபோன்ற படங்கள் கண்டிப்பாக வரவேற்கப்படவேண்டும்..ஆனால், மசாலா படங்களுக்கு விசில் அடித்தே பழகிப்போன நமக்கு இந்தப்படம் கண்டிப்பாக கடுப்பைத் தரும் என்பதில் ஐய்யமில்லை. கடையில் நடைபெறும் போர்க்காட்சி(300 படத்தின் காப்பி) படத்திற்கு புதிது. வெறியுடன் தாக்கும் காட்டுவாசிகளின் ஒவ்வொரு அசைவும் நடிப்பு.. தோற்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் கத்தியை வைத்து தற்கொலை செய்யும் அந்த பத்து பேர், அதிர்ச்சி..

மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் – உலகத்தரத்தில் ஒரு தமிழ்படம்(கமல் சார் கோவிச்சக்கூடாது..)


Sunday, 10 January, 2010

லொள்ள்ள்ள்ள்ள்ள்ள்…….

எங்க ஏரியாவில் தெருநாய் கொஞ்சம் ஜாஸ்திண்ணே..எப்ப பார்த்தாலும் ஒரு வெறியோடே திரியுங்க….அதுவும், தெருவுல பிகர் போறப்ப அதுக பண்ற அலப்பறை இருக்கே..ஆத்தாடி… இளவட்ட பசங்க பண்ற மாதிரியே ஒரே அலும்பு..பொண்ணுங்க பக்கத்துல கடிக்கிற மாதிரியே போய் “உர்ருன்னு” ஒரு சத்தம் கொடுக்குங்க..பயத்துல பொண்ணுங்க “ஓ மை காட்” அப்படின்னு அலறி அடிச்சுட்டு ஓடுறதுல அதுகளுக்கெல்லாம் அப்படி ஒரு சந்தோசம்..

யாராவது ரோட்டோரமா ஒரு பிகர் கூட கடலை போட்டிக்கிருந்தா அதுக பார்க்குற நக்கல் பார்வை இருக்கே..சீ..சீ..உடம்பே கூசிடுமுண்ணே(அப்படின்னு நண்பன் சொன்னான்னே..ஏதாவது கமெண்ட் எழுதி, குடும்பத்தை நாசம் பண்ணி விட்டுறாதிங்கண்ணே,.,.), என்னமோ அதுக எல்லாம்,
“காபிடே” யில காப்பி குடிச்சுக்கிட்டு லவ் பண்ற மாதிரி..ஏரியாவுக்குள்ள ஒரு பெண்நாய் வந்துற கூடாதுண்ணே..இதுக பண்ற அட்டூழியம் தாங்க முடியாது..அப்படியே ஸ்டைலா யூ.டர்ன் போட்டு திரும்பி, வாலை அப்படியே டான்ஸ் மாஸ்டர் மாதிரி ஆட்டிக்கிட்டு “எங்க ஆளு டோய்..” ன்னு பந்தாவா போறப்ப அப்படியே பத்திக்கிட்டு வருமுண்ணே..அன்னைக்கு எல்லாம் காலரை சாரி, வாலை பெருமையா ஏத்தி விட்டுக்கிட்டே அலையுங்கண்ணே..

இதெல்லாம் எனக்கு கடுப்பு இல்லைண்ணே..ஆபிஸ்ல வேலை பார்த்துட்டு நைட் 1 மணிக்கு வர்றது குத்தாமாண்ணே..பஸ்ஸ்டாண்ட் வாசலில இருந்து, வீடு வரைக்குமுண்ணே..சும்மா, வெறி புடிச்ச மாதிரி துரத்தும் பாருங்கண்ணே..உசிரே போயிடுமுண்ணே..அதுகளுக்கு அப்படி ஒரு ஆனந்தம்ணே..சரி, ஹெல்மெட் போட்டதனால்தான் துரத்துதுன்னு, ஹெல்மெட்டை கழட்டினா, ஏதோ, பேயைப் பார்த்தமாதிரி, அதுக எல்லாம் அலறி அடிச்சுட்டு ஓடுறத பார்க்குறப்ப எப்படி இருக்குமுண்ணே..சரியான நக்கல் புடிச்சதுங்கண்ணே..

இதுகள எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்குறப்ப, நண்பன் ஒரு ஐடியா சொன்னான்..நாய் துரத்துறப்ப 2 பாக்கெட்டு நாய் பிஸ்கட் மறறும் புரை எடுத்து வீசினோமுன்னா, அதுக பிஸியா இருக்குற சமயம் பார்த்து நம்ம எஸ்கேப் ஆயிடலாமுல்ல,,காலையில ஆபிஸ் கிளம்புறப்பயே, தயாரா 2 பிஸ்கெட் பாக்கெட், புரை வாங்கி வைச்சுக்கிட்டேண்ணே..நைட் வழக்கம்போல துரத்த ஆரம்பிச்சவுடனே, ஒரு இடமா பார்த்து வண்டியை நிறுத்துக்கிட்டேன்..ஒவ்வொரு பிஸ்கெட்டா தூக்கி போட்டேன் பாருங்க..வொர்க் அவுட் ஆகிடிச்சுண்ணே.அப்படியே தூரம் தூரமா பிஸ்கெட்டை எறிய, அதுக எல்லாம் பிஸ்கெட் தேடுறதுல மும்மரமாக, நான் அப்படியே பைக்கை ஸ்டார் பண்ணி கிளம்பு வந்துட்டேண்ணே..என் நேரம் பாருங்கண்ணே..எல்லா நாய்களும் டின்னர்ல பிசியா இருக்குறப்ப, ஒரு நாய் மட்டும் வெறி புடிச்ச மாதிரி துரத்துதுண்ணே..ஒருவேளை நான் வெஜ் எதிர்பார்க்குதோ..ஆத்தாடி, இந்த ராத்திரி வேளையில நான் வெஜ்ஜுக்கு எங்கே போவேன்..இப்ப கறி குடுக்கலைன்னா, அதுவே உடம்புல இருந்து எடுத்துக்கும் போலேயே..

எனக்கு குலையே நடுங்கிருச்சுண்ணே..சரி ஆனது ஆகட்டுமுன்னு, பைக்கை விரட்டுனா, என்னா துரத்தல்..நான் என் பைக்குல 80க்கு மேல போனதில்லைண்ணே..அன்னைக்கு 90 கி,மீ வேகம்ணே..வீட்டுக்கு போய் தண்ணி குடிச்சப்பறம்தான் உசிரே வந்தது..அப்புறம் அதே நாய்..தினமும் துரத்தல்..அது என்னன்னு தெரியலைண்ணே..ஒரு நாய் மட்டும்தான் எதுக்கும் மசிய மாட்டிங்குது..நல்லா பழுப்பு கலருல இருக்குமுன்னு அந்த நாய்…அது கொட்டாவி விடுறப்ப, பல்லைப் பார்த்தோமுன்னா, ரெண்டு நாளைக்கு தூங்க மாட்டோமுண்ணே..சரி, ஒரே வழியா வந்தால்தான் துரத்துதுன்னு, வேற வழியா வந்தா, கரெக்டா கடன் குடுத்த மாதிரி, வீட்டு வாசலுல நிக்குது..இதுல கேலியா ஒரு பார்வை வேற..எப்படித்தான் கண்டுபிடிக்குதோ..ஒருவேளை கூகில் செர்ச் போட்டிருக்குமோ..எனக்கு கடுப்பா இருந்ததுண்ணே..ஒரு நாளைக்காவது அது கூட ஒரு மீட்டிங் போட்டு, பேசி தீர்த்துக்குலாமுன்னு நினைச்சேண்ணே..

அந்த நேரத்துலதான் எங்க அபார்ட்மெண்ட்ல ஒவ்வொரு மாதமும் நடக்கும் மீட்டிங் நடந்தது..நான் இந்த மீட்டிங்குல எல்லாம் கலந்துக்குறது இல்லைண்ணே….பப்ஸ், சமோசா சாப்பிடமுன்னா பேக்கரிலயே சாப்பிட்டிக்கிறது..இன்னைக்கு பார்த்து அபார்ட்மெண்ட் செகரட்டரி, ஒரே அடம்..வேற வழியில்லாம போய் உக்கார்ந்தேன்..வழக்கம்போல் இந்தியா-ரஷ்யா ஒப்பந்தம் தவிர எல்லாத்தையும் பேச ஆரம்பிச்சாயிங்க..மெல்ல, மெல்ல பேச்சு சூடு பிடிக்க ஆரம்பித்தது..

“சார்..இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டணும்..”
“என்ன பிரச்சனை..”
“என் பொண்ணு அபார்மெண்ட்ல நடக்கவே முடியலைங்க..கீழ் வீட்டுல உள்ள இருக்குற பையன் போற வர்றப்ப எல்லாம்,ஒரே கிண்டலுங்க..”
கீழ் வீட்டுக்காரர் கொதித்தார்..
“ஆமா..உங்க பொண்ணு பெரிய ஐஸ்வர்யாராய் பாரு….போயா..”
“யோவ்..நாக்கை அடக்கி பேசு..மரியாதை கெட்டு போயிடும்..”
“யோவ்..உனக்கென்ன மரியாதை..நீயெல்லாம் பெரிய மனுசன் மாதிரியா இருக்க,,”
“டே.,,கையை நீட்டக்கூடாதுன்னு பார்க்குறேன்..”
“அடிச்சுடுவியா..நீ மட்டும் அடிடா பார்ப்போம்..அடிச்சுட்டு உசிரோட இருக்க முடியாதுடி..நான் எல்லாம் ரவுடியா இருந்துட்டுதான்டா இங்க வந்துருக்கேன்..”
“த்..தூ..உன்னை பத்தி எனக்கு தெரியாதாடா..தெருவுக்கு ஒரு பொம்பளை வைச்சிருக்கேயேடா..சொன்னா நாறிப் போகும்..”

அவ்வளவுதான்னே..ஒரே கெட்ட வார்த்தை..தமிழுல இவ்வளவு வார்த்தை இருக்குறதே எனக்கு அப்பதாண்ணே தெரியும்..

“போடா..நீதாண்டா மாமா வேலை பார்க்குற..”
“டே..மொள்ளமாறி….நீதாண்டா முடிச்சவிக்கி…பக்கத்து தெருல பிச்சைக்காரன்ட புடிங்கி தின்னவந்தான நீ..”
“போடா..நாயி…”
“நீதாண்டா சொறி நாய்..
“நீதாண்டா வெறி நாய்..”

காது மட்டுமல்ல, கண்ணையும் மூடிக்கொண்டேன்..சத்தம் அதிகம் ஆகி, “லொள்..லொள்” ன்னு சத்தம் மட்டும் கேட்டது..அது வெளியிலிருந்து வந்ததா..உள்ளிருந்து வந்ததா என்று எனக்கு ஒரு சந்தேகம்..சன்னல் வழியா எட்டிப் பார்த்தேன்..என்னை எப்பவும் துரத்தும் நாய் சன்னல் அருகில் நின்று கொண்டிருந்தது..ஒருவேளை அதையும் மீட்டிங்க்கு கூப்பிட்டுருப்பாயிங்க போல..ஆனால், என்னைப் பார்த்து ஏளனமா ஒரு சிரிப்பு..”நீங்க எல்லாம் மனுசங்களாடா..இதுக்கு நாங்க எவ்வளவோ பரவாயில்லைடா..” என்று கேட்பது போல இருந்தது..தலையை குனிந்து கொண்டேன்..

அடுத்த நாள், பக்கத்து ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருந்தேன்..அங்கே ஒரே, பரபரப்பு..எல்லா நாய்களும் தெருவில் தறி கெட்டு ஓடுக்கொண்டுருந்தன..சாப்பாட்டை அப்படியே விட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தேன்..அங்கு ஒரு நாய் பிடிக்கும் வண்டி நின்று கொண்டிருந்தது..அங்கிருந்து 3 தடியான ஆட்கள், நாய்களை விரட்டி, விரட்டி பிடித்து கொண்டிருந்தனர்..

தூரத்தில் எங்கயோ எனக்கு பழக்கப்பட்ட குரல் போல கேட்டது..அவசரமாக பார்த்தால்..எனக்கு தூக்கி வாரி போட்டிருச்சுண்ணே..என்னை தினமும் விரட்டும் அதே நாய்..
நாய் பிடிப்பவர் அதன் கழுத்தில் ஒரு பெரிய வளையத்தை போட்டு இறுக்கியிருந்தார்….அப்படியே அதை தெருவில் அதை தரதரவென்று கல், மண் பார்க்காமல் இழுத்துக் கொண்டு போனார்..அந்த நாய் முடிந்த வரைக்கும் போராடியது..வெறி கொண்ட போராட்டம்..உயிருக்கான போராட்டம் அது..ஆனால் முடியவில்லை..அந்த ஆள் லாவகமாக அதை இழுத்துக் கொண்டு போனார்..தன் காலை எடுத்து தலையில் மாட்டிய கம்பியை எடுத்து விட முயற்சித்தது..முடியவில்லை..

அப்போதுதான் அதை கவனித்தேன்..கல், மண் பார்க்காமல் இழுத்துக் கொண்டு போனதில், நாய் உடம்பு முழுவதும் காயம்..அதிலிருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது..உயிருக்கான போராட்டத்தில் களைப்புற்று அதன் நாக்கு வெளியே தள்ளிக் கொண்டிருந்தது..சன்னமாக அதனுடை மூச்சு காற்று மட்டும் வெளியே கேட்டது..கொஞ்ச நேரத்தில் அடங்கிப் போனது..அமைதியாகி அப்படியே நின்றது..நாய் பிடிப்பவர், அதை அப்படியே இழுத்துக் கொண்டு போய் வேனுக்குள் தள்ளினார்..அதன் சன்னல் வழியே எட்டிப் பார்த்தது..என்னைப் பார்த்ததுமே, குரைத்தது,,”என்னைக் காப்பத்துடா..” என்று கெஞ்சுவது போல் இருந்தது..நான் அப்படியே தலையை குனிந்து கொண்டேன்..நாய் வண்டி மெதுவாக நகர, நகர என்னை விட்டு ஏதோ ஒன்று போனது போல இருந்தது..தலையை தூக்கி வண்டியின் சன்னலைப் பார்த்தேன்..அந்த நாய் இன்னும் என்னை வெறித்துக் கொண்டே இருந்தது..அதன் கண்களை என்னால் தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லை..நாய் வண்டி தூரமாக செல்ல செல்ல, ஒரு புள்ளியாக தெரிந்தது..கடைசியாக பார்வையிலிருந்து அகலும் முன் அந்த நாயின் குரல் மட்டும் சன்னமாக கேட்டது…


“லொள்ள்ள்ள்ள்ள்ள்ள்…….”

புத்தக கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்நேற்று புத்தக கண்காட்சிக்குப் போவது என்று முடிவெடுத்து, கிளம்பியபோது சுவற்றில் இருந்த பல்லி கத்தியது. போக வேண்டாம் என்று சொல்லியதா, சீக்கிரம் இடத்தை காலி பண்ணுடா என்று சொல்லியதா என்று தெரியவில்லை..என்னுடைய பல்சரை எடுத்துக் கொண்டு கிளம்பி போய் முதலில் கோயம்பேடு சென்றேன். கோயம்பேடு இன்னும் கேவலமாக மாறி விட்டது..பொங்கலுக்கு மதுரை செல்வதற்கு ஒரு டிராவல்ஸில் கூட டிக்கெட் கிடைக்கவில்லை..பொங்கல் விடுமுறையாதலால், ஒரு இடத்தில் கூட காது கொடுத்து கேட்பதில்லை.உதாரணமாக டிராவல்ஸ் அலுவகத்தில் டிக்கெட் கேட்டபோது நடந்தது..

“அண்ணே..மதுரைக்கு போறதுக்கு..”
“டிக்கெட் காலியாயிடுச்சு சார்..”
“13 ஆம் தேதி..”
“டிக்கெட் இல்லை சார்…”
“14 ஆம் தேதி..”
“இல்லை சார்..”
“சரிண்ணே..அடுத்த நாளில..”
“டிக்கெட்டெல்லாம் இல்லை சார்..”

இடையில் அவர் கேர்ள் பிரண்டிடமிருந்து போன் வந்து இருக்க வேண்டும் போல..

“ஹாய் டா..கண்ணம்மா..எப்படி இருக்க..”
“சார்..பொங்கலுக்கு முன்னாடி டிக்கெட்..”
“இல்லைன்னு சொன்னா கேளுங்க சார்..”

இடத்தை காலி பண்ணி தொலையேண்டா என்று சொல்லாதுதான் பாக்கி..
“ஏ..கண்ணம்மா..நீ கேளுடா..கடைசி டைம் நம்ம மீட் பண்ணனுப்ப..”
“சார்..மதுரையில இருந்து சென்னை வர்றதுக்காவது..”
“இல்ல சார்..”

இதற்கு மேல் நின்றால் இரண்டு கெட்டவார்த்தை சராமரியாக விழும் என்று தெரிந்தாலும், என்ன பண்ணுவது..நமக்கு டிக்கெட் வேண்டுமே..

“சார்..பரவாயில்லை..எந்த தேதி டிக்கெட் கிடைத்தாலும் பரவாயில்லை..கொடுங்க சார்..”

“இரு கண்ணம்மா..இங்க ஒருத்தன் சாவடிக்கிறான்..ஏய்..உனக்கு இன்னா வேணும்..

அப்படியே அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகினேன்..நல்ல கஸ்டமர் சர்விஸூங்கயா..நல்லா இருங்க..

அங்கிருந்து கிளம்பி புத்தக கண்காட்சி வந்தேன்..நல்லா விசாலமான இடத்தில் பார்க்கிங்க்..ஆனால் பார்க்கிங்க்தான் கிடைக்கவில்லை..உள்ளே விட அனுமதிக்கவில்லை..வண்டியை எடுத்துக் கொண்டு பக்கத்தில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தான் இடம் கிடைத்தது..அதுவும் கக்கூஸிலில்..இதில் எப்படி வண்டியை நிறுத்துவது என்று யோசித்தபோது பின்னால் 10 பேர் லைனில் நின்றுருந்தார்கள்..

“சார்..நீங்க போறீங்களா..போகலைன்னா வழியை விட்டு நில்லுங்க..”

அடப்பாவிங்களா..அம்மன் கோவிலுல கூழ் ஊத்துற மாதிரியே நிக்கிறாயிங்க..கஷ்டப்பட்டு பார்க்கிங்க் செய்து விட்டு வந்தால்
உள்ளே செல்வதற்கு டிக்கெட் வாங்க திரும்பவும் ஒரு க்யூ…டிக்கெட் வாங்கிவிட்டு உள்ளே செல்ல எத்தனித்தபோது சைடில் இன்னொரு க்யூ நின்றிருந்தது..ஆஹா..ஏதோ..பிரபலமான புத்தகம் விக்கிறாயிங்க போல என்று முதலில் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தேன்….சரி..நாமும் ஒரு புத்தகம் வாங்கலாம் என்று க்யூவில் நிற்க ஆரம்பித்தேன்..

ஒவ்வொருத்தர் கண்ணிலும் அப்படி ஒரு வெறி..இன்று அதை வாங்கியே தீருவது என்று..ஆஹா..நான் இதை மிஸ் பண்ணவே கூடாது என்று சபதம் செய்து கொண்டேன்..ஒருவேளை எஸ். ராமகிருஷ்ணன் புத்தகமாக இருக்குமோ..இல்லெயென்றால் ஜெய மோகன்...ம்ம்ம்…யாராக இருக்கும்..யாராக இருந்தால் என்ன..இவ்வளவு பேர் வியர்த்துக் கொண்டு கண்ணில் வெறியோடு நிற்கிறார்கள்..கண்டிப்பாக வாங்கிவிட வேண்டும்..

கடைசியாக என் முறை வந்தது..என்னவென்று ஆசையாக தேடினேன்..

“சார்..என்ன..வெங்காய பஜ்ஜியா..போண்டாவா..”
“அது வந்து..என்ன இருக்கு..”

மேலும் கீழும் பார்த்தார்..

“அங்க போர்டு இருக்கு பார்க்கலையா..ஸ்ரீகிருஷ்ணா கேண்டின் சார்..”

சரி ஒரு காபி தண்ணியை வாங்கிதான் பார்ப்போமே என்றால் 10 ரூபா என்றார்கள்..குடித்து விட்டு(காபிதாண்ணே..) உள்ளே வந்தபோது..யப்பா..என்னா கூட்டம்..அண்ணே..பரவாயில்லைண்ணே..பீச்சுக்கு போற கூட்டமெல்லாம் இங்கதாண்ணே இருக்கு..

முதலில் கிழக்குப் பதிப்பகம் சென்றேன்..உண்மையை சொல்லப்போனால் எனக்கு இலக்கியம் பிடிப்பதில்லை..ஏனென்றால் எனக்கு ஆணவம் பிடிப்பதில்லை..எவ்வளவுதான் பெரிய பிஸ்தாக இருந்தாலும் எல்லாரும் சரிவது ஆணவத்தில்தான்….இதனாலயேதான் எனக்கு ஜெயகாந்தன், சுஜாதா, வைரமுத்து, இளையராஜா இவர்களை பிடிப்பதில்லை….படைப்பாளிகளுக்கு கர்வம் இருக்கத்தான் செய்யும் என்று சொன்னாலும் அந்த கர்வம்தான் எனக்கு பிடிப்பதில்லை…

கிழக்கு பதிப்பகத்தில், எனக்குப் பிடித்த அரசியல் வரலாறு புத்தகங்களை வாங்கினேன்..வாங்கி கொண்டு அந்தப் பக்கம் நடந்து வந்தால்..அட..லக்கிலுக், அதிஷா..மற்றும் ஒரு பெரியவர் அமர்ந்து பேசி கொண்டு இருந்தார்கள்..லக்கியைப் பார்த்து பேசலாம் என்றால் தயக்கமாக இருந்தது..அதுவும் ஏதோ ஒரு நல்ல விவாதத்தில் இருந்தது போல இருந்தது..அவர்களை கலைக்க விரும்பவில்லை..கிழக்குப் பதிப்பகத்தில் இயக்குநர் சரண், வசந்த், ராம் அவர்களைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது..பேசத்தான் கொஞ்சம் தயக்கமாக இருந்தது..

லக்கிலுக் மார்க்கெட்டிங் செய்த..சாரி..சொல்லிய லிச்சி ஜீஸ் அருந்தினேன்..சும்மா சொல்லக்கூடாது..அவருடைய பதிவு மாதிரியே அதுவும் கிக்காக இருந்தது..திரும்பவும், கிழக்கு பதிப்பகம் வந்தபோது..நிறைய பதிவர் கூட்டம்..பார்க்க சந்தோசமாக இருந்தது..கேபிள் சங்கர் அண்ணனைப் பார்த்து அறிமுகம் செய்து கொண்டேன்..சும்மா சொல்லக்கூடாது..அண்ணன் நிஜமாகவே யூத்துதான், மனதளவில்..அவர் இருந்த இடமே முழுவதும் கலகல..சென்டர் ஆப் அட்ராக்ஷன்..கேபிள் சில நண்பர்களிடம் அறிமுகம் செய்தார்..

எல்லாப் பதிவர்கள் முகத்திலும் மகிழ்ச்சி..ஒரே கேலி, கொண்டாட்டம் என்று அந்த இடத்தைப் பார்க்கவே சந்தோசமாக இருந்தது..

இனிய அதிர்ச்சி..ஜாக்கி சேகர் சந்திப்பு..பார்த்தவுடனே கண்டு பிடித்துவிட்டேன்..பழகுவதற்கு நல்ல எளிமையாக இருந்தார்..”பேச கொஞ்சம் தயக்கமாக இருந்தது..” என்று சொன்னவுடன்..”அட..என்ன சார்..தயக்கம்..” என்று கைகளை குலுக்கியபோது நேசம் தெரிந்தது..மற்ற பதிவர்கள் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லாததால் முழுவதும் பேச முடியவில்லை..பக்கத்தில் கார்க்கி நின்றிருந்தார்..பேசத்தான் முடியவில்லை..

இன்னொரு இனிய ஆச்சர்யம்..நர்சிம்..படு ஸ்டைலாக இருந்தார்….தயங்கி சென்று அறிமுகப்படுத்தியபோது..”அட..வாங்க..வாங்க..” என்று என்னை கட்டிப்பிடித்தபோது அவருடைய அன்பு சிலிர்க்க வைத்தது..என்ன இருந்தாலும் மதுரைக்காரயிங்கள்ள....என்னை அறியாமல் எனக்கு என் அண்ணன் ஞாபகம் வந்தது….என் அண்ணனும் இப்படித்தான்..நான் ஊருக்கு செல்லும்போதெல்லாம் என்னை கட்டிப்பிடித்துதான் வெளிப்படுத்துவார்..

“அது என்ணண்ணே..கட்டிபிடி வைத்தியமா..”
“ஹா..ஹா..நான் கட்டிபிடிக்கும்போது உன் நெஞ்சில் அன்பை உணர்ந்தாயா..”
“ஆமாண்ணே..ஏதோ ஒரு அதிர்வு இருக்கதான் செய்கிறது..”
“அதுதான் அன்பு..”

எல்லாரும் கலகலப்பாக இருந்தார்கள்..சந்தோசமாக இருந்தார்கள்..எவ்வளவுதான் வேறுபாடுகள் இருந்தாலும், இப்படி எல்லாரோயையும் ஒரு இடத்தில் பார்க்கும் அனுபவமே தனிதான்..என்னது..எப்படியா..ஒருமுறை வந்து பாருங்களேன்..புத்தக கண்காட்சிக்கு..இன்று கடைசி நாள்..நானும் வருகிறேன்., சாயங்காலம் 4-7 மணிக்குள்..

அங்கிட்டு வந்துருங்கண்ணே..நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்…

Monday, 4 January, 2010

ஹேப்பி நீயூ இயர்

இந்த புத்தாண்டை நீங்கள் எங்கு கொண்டாடி இருப்பிர்கள்..?? மெரினா ரோட்டில்?? ஆலயத்தில்??? நட்சத்திர ஹோட்டல்களில்??? நண்பர்களுடைய வீட்டில்??? நான் எங்கு கொண்டாடினேன் தெரியுமா? மருத்துவமனையில். உறவினர் நண்பர் ஒருவருக்கு 31 ஆம் தேதி, அவசர அறுவைச் சிகிச்சை நடந்தது. புத்தாண்டு பற்றிய கனவுகளுடன் இருந்த எனக்கு இடியாய் இறங்கியது அந்த செய்தி. உறவினர்க்கு என்னை தவிர யாருமே இல்லை.

அவசரம், அவசரமாக மருத்துவமனை சென்றேன். எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தரும் அவர், முகம் வாடிப்போய் படுத்த படுக்கையாய்..என்னைப் பார்த்தவுடன் சோகத்தை மறைக்க முயன்று சிரிக்க முயற்சித்து தோற்றுப் போனார்..

“வாடா ராசா..”
“என்னடா ஆச்சு..”
“ம்..உனக்குதான் என் உடம்பு பத்தி தெரியுமில்ல..அவ்வளவுதான்னு நினைக்கிறேன்..இதுதான் எனக்கு கடைசி புத்தாண்டோ??”
“போடா..வெளக்கெண்ணை..என்ன விட ரொம்ப நாளைக்கு இருப்படா..”

உலகத்திலேயே மிகவும் கொடுமை என்ன தெரியுமா..மருத்துவமனையில் இருப்பதுதான்.. ஜெயிலில் இருப்பதைவிட கொடுமை அது..எங்கு பார்த்தாலும் கவலை தோய்ந்த முகங்கள். அங்கெங்கு கேட்கும் விசும்பல் சத்தம், நாசியைத் துளைத்து மூளை வரை செல்லும் மருந்து நாற்றம், எந்த கேள்வி கேட்டாலும் “டாக்டரைக் கேளுங்க” என்று சொல்லும் நர்ஸ்கள். “டிஸ்ஜார்ஜ் ஆகிப் போறப்ப கவனிங்க சார்..” என்று அட்வான்ஸ் புக்கிங் பண்ணும் சுத்தம் செய்யும் தொழிலாளி, மருத்துவமனைக்கு சீக்கிரம் அனுப்புவதற்கே உணவு தயார் பண்ணும் அருகிலிருக்கும் ஹோட்டல்கள், பொழுதுபோக்க வேறு வழியே இல்லாமல் ஒவ்வொரு வரியும் படிக்கப்பட்டு தரை முழுவதும் இரைந்து கிடைக்கும் தினத்தந்திகள்….இப்படி பல..

மருத்துவமனையிலேயே மூன்று நாட்கள் தங்கவேண்டிய நிலை..எவ்வளவு நேரம்தான் நண்பன் அருகிலேயே உக்கார்ந்து இருப்பது..தினத்தந்தியை எடுத்துக் கொண்டு ரூமை விட்டு வெளியே வந்து அமர்ந்தேன்..சிறிது நேரம் கழித்துதான் கவனித்தேன்..என்னை யாரோ கூர்ந்து கவனிப்பது போல் ஒரு எண்ணம்....நிமிர்ந்து பார்த்தால், 75 வயது இருக்கும் ஒரு பெரியவர்..

“தம்பி..பேப்பர் கிடைக்குமா..”
“எடுத்துக்குங்க அய்யா..,”
“நன்றிப்பா..நேத்துதான் வந்தீங்களோ..”
“ஆமாங்க..நீங்க..”
“நான் வந்து மூணு மாசமாச்சு தம்பி..என்னோட மனைவிதான்..வயசாயிடுச்சுல்ல தம்பி….நிறைய பிரச்சனை..நாளைக்குதான் ஆபிரேசன் சொல்லி இருக்காங்க..அவ எப்பவும் அழுதுக்கிட்டே இருக்கா தம்பி..கடவுள் எங்க ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல எடுத்துக்கிட்டா நல்லா இருக்கும் தம்பி..”

சொல்லும்போதே அவர் கண்களில் தண்ணீர் நிறைந்து இருந்தது..பேசும்போது நா..தழுதழுத்தது..எனக்கு அவருக்கு ஆறுதல் சொல்லுவதைதவிர அப்படியே விட்டு விடலாம் என்றே தோணியது..சிலநேரம், ஆறுதல்தான் அதிக துன்பம் தரும்….என் நண்பனின் ஆபரேசனுக்கு லேட் ஆனதால் அவசரமாக உள்ளே சென்றேன்..இரண்டு பேர் ஒரு ஸ்ட்ரெச்சர் எடுத்து வந்தார்கள்..கண்களில் அவ்வளவு அலட்சியம்..அப்படியே நண்பனை புழுவைத் தூக்கிப் போடுவது போல் தூக்கி ஸ்ட்ரெச்சரில் எறிந்தார்கள்..என் நண்பன் வலியால் “அப்பா” என்று கத்தும்போது எனக்கு வலித்தது..ஸ்ட்ரெச்சரை அப்படியே தள்ளிக் கொண்டு போனார்கள்..என் நண்பன் என்னை விட்டு அகன்று போய் கொண்டு இருப்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது..

நானும் ஸ்ட்ரெச்சர் பின்னாடியே ஓடினேன்..அப்படி ஓடும்போது கூட என் நண்பன் என் கைகளை இறுக்க பற்றி கொண்டான்..”என்னைக் காப்பாத்துடா..” என்று கெஞ்சுவது போல் இருந்தது..ஒரு நிமிடம்தான் இருக்கும்..அவனை ஆபிரேசன் தியேட்டருக்கு கொண்டு சென்றார்கள்..அந்த நிமிடங்கள் யாருக்கும் வரக்கூடாது..ஒரு பாஸ்ட் பார்வேட் பட்டன் இருந்தால் அதை உபயோகித்து ஒரு மணி நேரம் முன்னால் சென்று விடலாம் போல் இருந்தது….

ஒரு வழியாக ஆபிரேசன் நல்லபடியாக முடிந்தது,.,.நண்பனை அதே ஸ்ட்ரெச்சரில் வைத்து வெளியே தள்ளி கொண்டு வந்தார்கள்..அனிஸ்தீசியா கொடுத்திருந்ததால் அவனுடைய கண்கள் மேல் நோக்கி இருந்தது..என்னால் அவனை அந்த நிலையில் பார்க்க முடியவில்லை..அப்படியே முகத்தை திருப்பிக் கொண்டேன்….ஆபிரேசன் முடிந்தால் உடனே ரூமுக்கு அனுப்பி விட மாட்டார்கள்..”போஸ்ட் ஆபிரேசன் ரூம்” என்று ஒரு அறை உள்ளது..அதில் நமக்கு அனுமதி இல்லை..மெதுவாக நடந்து ரூமுக்கு வந்தேன்..

கண்ணயர்ந்து தூங்கினேன்..புத்தாண்டு பிறந்து, விடிந்திருந்தது..அய்யோ நண்பனை சென்று பார்க்க வேண்டுமே..அவசரம் அவசரமாக ரூமை விட்டு வெளியே வந்தேன்..என்றும் வெளியே அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் பெரியவரைக் காணவில்லை..ரூம் பூட்டியிருந்தது….அருகில் நடந்து கொண்டிருந்த நர்ஸைக் கேட்டேன்..

“மேடம்..பெரியவர் எங்க ஆளைக் காணோம்..”

“நைட்டு, பாட்டிக்கு திடீர்ன்னு உடம்பு தூக்கி போட்ருச்சுங்க..அவசரமா, ஐ.சி.யூ வுக்கு போற வழியிலேயே இறந்துட்டாங்க…பெரியவர் எல்லா பார்மாலிட்டியும் முடிக்கறதுக்காக, கீழே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கார்,.

என்னால் முடியவில்லை….உலகத்திலேயே கொடுமையான விசயம் இறப்புதான்..அடுத்த நாள் நாம் இறந்து விடுவோம் என்று தெரிந்து ஒருநாள் வாழ்ந்து பாருங்கள்..நீங்களே தற்கொலை செய்து விடுவீர்கள்..

துக்கத்தை மனதில் அடக்கிக் கொண்டு நடந்து சென்றேன்..அதே நர்ஸ் திரும்பவும் கூப்பிடுவது போல் இருந்தது..

“சார்..”
“என்ன..??”
“விஸ் யூ ஹேப்பி நியீ இயர்..”

மருத்துவமனை..உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட தனிஉலகம்..