Sunday 30 August, 2009

வாத்துக் கூட்டம்

சன்னல் வழியே எட்டிப் பார்த்தேன்..பொதுவாக சன்னல் வழியே பார்ப்பது எனக்குப் பிடிக்கும்..வெளியில் சென்று அகலப் பார்ப்பதைவிட, சன்னலைத் திறந்து, கம்பிகளுக்கு இடையில் சிறிய இடைவெளியில் ஒரு முறை உலகத்தைப் பாருங்கள்..வித்தியாசமாக இருக்கும்..அது என்னவோ தெரியவில்லை..என் சன்னலில் மட்டும் எனக்கு வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கின்றன்..ஓருமுறை ஒரு பிச்சைக்காரரைப் பார்த்து, அவருடன் கிடைத்த அனுபவங்களை “பிச்சைக்காரப் பய” என்று எழுதியிருந்தேன்..காலை நேரம் எழுந்தவுடனே, நேராக பல் விளக்க கூட செல்ல மாட்டேன்..சன்னல் அருகில் சென்று மெதுவாக கதவைத் திறப்பேன்..அதுவரை என் படுக்கை அறையில் அடைந்து கிடைந்த என் எண்ணங்களுக்கு சிறகு முளைத்து வெளியே பறப்பது போல் இருக்கும்..வெளியில் இருந்து புதிய எண்ணம் ஒன்று தென்றல் காற்றுடன் வந்து அப்படியே மூளைக்குள் ஏறும் பாருங்கள்..அன்றே புதிதாய் பிறந்தது போல் தோன்றும்..நீங்களும் ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன்..நீங்கள் அடுக்குமாடி நிறைந்திருந்த சென்னையில் வசித்தாலும் சரி..காலையில் எழுந்து சன்னல் கதவைத் திறந்து வெளியே பாருங்கள்..சூரியன் கூட நமக்காகவே உதித்தது போல இருக்கும்..அந்த நாள் பொழுது நமக்காகவே புலர்ந்தது போல் இருக்கும்..

இன்றும் கூட அதுபோலத்தான் சன்னலைத் திறந்தேன்.. என்றும் என்னைப் பார்த்து காலை வணக்கம் சொல்லும் சூரியனுக்கு அப்படி என்ன வெட்கம் என்று தெரியவில்லை..மேகத்தினிடையே மறைந்து கிடந்தது………பக்கத்து வீட்டில் கட்டாயத்திற்காக போடப்பட்ட சுப்ரபாதம் என் காதுகளில் வழக்கம் போல்..புற்களும் அன்றைக்கு மழையை எதிர்பார்த்திருந்தனவோ என்னவோ, இரவு பெய்த மழையில் நனைந்து தலை துவட்ட மறந்திருந்தன..அவைகள் ஏதோ செருக்குடன் தண்ணீர் தொப்பி அணிந்திருந்தது போலவே இருந்தது..

அப்போதுதான் கவனித்தேன்..இராணுவ வீரர்கள் போக வரிசையாக வாத்துக் கூட்டம் சாலையைக் கடந்து கொண்டிருந்தது..என் வீட்டிற்கு அருகில் ஒரு குளத்தை நோக்கியே நடந்து கொண்டிருந்தது..ஒருவேளை காலைக்குளியலுக்காக செல்கிறதோ..எந்த அவசரமும் இல்லை அந்த வாத்துக்களுக்கு..யாருக்கும் பயமில்லை..எந்த பிராஜெக்டும் இல்லை..எந்த டெட்லைனும் இல்லை….ஒன்றாம் தேதி இல்லை சம்பளம் வாங்குவதற்கு..அளவுகோளை வைத்து கோடு கிழித்தது போல இருந்தது….எத்தனை முறை ஒழுங்கை மீறியிருக்கிறேன்….ரிசர்வசனுக்காக ரயில் நிலையத்தில் வரிசையில் நிற்கும்போது நான் ஒரு நாளாவது ஒழுங்கை கடைபிடித்ததில்லை..….நம்மைக் கட்டுப்படுத்துவதற்கு ஏன் குச்சியுடன் காவலர்..இந்த வாத்துக்களுக்கு இருக்கும் ஒழுங்குகூட எனக்கு இல்லையே..

எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை..சத்தம் கூட போடாமல் ஒரு கார் ரோட்டில் வந்து கொண்டிருந்தது..அந்த ஓட்டுநர் வாத்துக் கூட்டம் சாலை வழியே நடந்து கொண்டுருந்ததை கவனித்து காரை நிறுத்தி விட்டார்..அவர் முகத்தில் துளியளவும் எரிச்சல் இல்லை..கார் சத்தம் வாத்து கூட்டத்தை கலைத்து விடுமோ என்ற பயத்தில் கார் இஞ்சினைக்கூட நிறுத்தி விட்டார்..அவர்தான் எனக்கு அன்னைத் தெரசாவாகத் தெரிந்தார்..நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது இந்த மனிதாபிமானம்..மனிதாபிமானம் என்று ஏன் சொல்ல வேண்டும்..மனம் என்று சொல்வோம்..மனிதாபிமானம் இருந்தால்தானே மனது..அதற்கு ஏன் “மனிதாபிமானம்” என்று அலங்கார வார்த்தை..

துணியை வைத்து கண்ணைக் கட்டி ஒரு மனிதனை பின்தலையில் சுடும் ஒரு படத்தைப் பார்த்தபோது எங்கே இருக்கிறது இந்த மனிதாபிமானம் என்றே கேட்கத் தோன்றியது..நான் ஷாருக்கான் பற்றிய எழுதிய பதிவிற்கு “அவர்களுக்கு வேண்டும்..அவர்கள் இனத்தாரிடம் போய் அறிவுரை சொல்லச் சொல்..அதுவரை குஜராத் கலவரங்கள் தொடரும்” என்ற ஒரு கமெண்ட்டைப் படித்தபோது கேட்கத் தோன்றியது “எங்கே இருக்கிறது மனிதாபிமானம்..” தினசரி நடந்து செல்லும் இந்த வாத்துக்களிடம் காட்டாத மனிதாபிமானமா ஊனோடும் உயிரோடும் இருக்கும் மனிதனிடம் காட்டப் போகிறோம்..

வாத்துக்கள் அழகாக நடந்து சென்று குளக்கரையை அடைந்தன..அப்போதுதான் கவனித்தேன்..ஒரு வாத்தினால் சரியாக நடக்க முடியவில்லை…கொஞ்சம் வயதாகி இருந்தது..அதனால் அதற்கு மேலும் நடக்க முடியாமல் அப்படியே கீழே விழுந்தது..வாத்துக்களுக்கு ஏது முதியோர் இல்லம்..ஒரு வாத்து அவசரமாக குளத்தில் சென்று சிறிது தண்ணீரை அலகால் எடுத்து வந்து அந்த வயதான வாத்திற்கு ஊட்டியது…..துணியால் கட்டி ஒரு மனிதனை பின்னால் சுட்டவனிடம் இல்லாத மனதை இந்த வாத்திடம் கண்டேன்….அந்த நிகழ்ச்சியைக் கலைத்தாற் போல் போன் மணி ஒலித்தது..போய் சென்று எடுத்தேன்..

“அம்மா எப்படிம்மா இருக்கீங்க..”

“இருக்கேன்டா ராசா..நீ எப்படி இருக்கே..”

“நல்லா இருக்கேன்..ஏன் ஏதோ குரல் ஒரு மாதிரி இருக்கு..”

“ஒன்னும் இல்லப்பா..நேற்று திடிர்ன்னு எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு..அப்பாதான் என்னைக் கைத்தாங்கலா கூட்டிட்டு போனாரு..நானும் அப்பாவும் தனியாத்தான இருக்கோம்..அந்த ராத்திரியில ஒரு டாக்டரும் கதவைத் திறக்க மாட்டீங்கிறாயிங்கப்பா..எவ்வளவோ சத்தம் கொடுத்துப் பார்த்தோம்..கடைசியில கஷ்டப்பட்டு நடந்து வந்து மாத்திரையைப் போட்டு தூங்கிட்டேன்பா..தம்பி ராசா..எப்பப்பா உன் பிராஜெக்ட் முடியுது..எப்ப வீட்டுக்கு வருவ..”

Wednesday 26 August, 2009

இதற்காகத்தானே காத்திருந்தாய் ராசா...

கல்லூரி இறுதி நாள்..இன்றைக்காவது அவளிடம் கேட்டுவிட வேண்டும்..எத்தனை நாள்தான் மனசுக்குள் வைத்துக் கொண்டு சாவது..என்னால் எச்சில் கூட முழுங்க முடியவில்லை..இதில் என் நண்பன் வேறு உசுப்பிக் கொண்டிருந்தான்..

“ராசா.இன்னைக்குத்தான் காலேஜ் கடைசி..இதை விட்டா வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது..இன்னைக்கே கேட்டுறுடா..”

“மச்சான்..ஒரு மாதிரியா இருக்குடா..இவ்வளவு நாள் நட்பா பழகிட்டு..எதுவும் தப்பா நினைச்சுக்குவாளோ..”

“டே..அதெல்லாம் நினைக்க மாட்டா..அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லைடா..மவனே இன்னைக்கு கேட்காம அப்புறம் எங்கிட்ட ஏதாவது பொலம்பின..அடிதான்..”

"சரிடா…தைரியமா கேக்கலாம்..ஆனா இவ்வளவு நாள் இதுக்குத்தான் பழகினேன்னு கேட்டுட்டா..”

“போடாங்க..நான் சொல்லுறேன்..கேளு..”

அவள் எங்களருகில் வந்தாள்…2 வருட கல்லூரி நட்பு..நான் எந்த பெண்ணிடம் முகம் கொடுத்து பேசியதில்லை..ஆனால் அவள் நட்பு கிடைத்த போது நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை..

“என்ன ராஜா..இங்க உக்கார்ந்து இருக்கீங்க..பேர்வெல் பார்ட்டிக்கு போகலையா..”

குறிப்பறிந்து என் நண்பன் என்னை விட்டு அகன்றான்..

“அது வந்து..உங்க கிட்ட ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்கள்ள..”

அவள் கொஞ்சம் வெட்கப்படுவது அவள் கண்களில் தெரிந்தது..ஒருவேளை அவளும் நான் கேட்பேன் என்று எதிர்பார்க்கிறோளோ..என் மனம் கோலம் போட ஆரம்பித்தது..

“பரவாயில்லை..கேளுங்க..நான் தப்பா நினைக்க மாட்டேன்..”

ஏதோ ஒன்று “வேணான்டா ராசா” என்று எச்சரிக்கவே..மனசு டபுள் கேம் ஆடியது..கேளு, வேண்டா, கேளு, வேண்டாம், கேளு, வேண்டாம், கேளு, வேண்டாம், கேளு, வேண்டாம்…

கடைசியல் “வேண்டாம்” என்பதே ஜெயித்தது..

“ஒன்னுமில்லப்பா..ஏதாவது வேலைக்கு போகப் போறீங்களா..இல்ல கல்யாணமா..”

அவள் முகத்தில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது..ஆஹா..மிஸ் பண்ணிட்டமோ..

“தெரியலீங்க..அப்பாதான் முடிவு பண்ணனும்..நான் கிளம்புறேன்..”

சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் கிளம்பிச் சென்றாள்..என் நண்பன் வந்தான் ஆவலாகக் கேட்டான்..

“என்னடா ராசா..சொல்லிட்டீயா..”

“இல்லடா..”

“போங்கடா..நீங்களும்..உங்கப் பொழைப்பும்..இந்த தைரியம் இல்லாம நீங்களெல்லாம் ஏண்டா காலேஜ்க்கு வர்றீங்க..நீங்களெல்லாம் நெஞ்சு வெடிச்சே சாகப் போறீங்கடா..”

அதற்கப்பறம் 5, 6 வருடங்கள் கடந்தாலும் அவ்வப்போது என் நினைவுக்கு வரும்..நான் அதை மறந்து விடுவேன்..அன்றைக்குத்தான் எதிர்பார்க்காதது நடந்தது.,.நானும் என் மனைவியும் சென்னையில் ஒரு ஹோட்டலில் அமர்ந்து சாப்ப்பிட்டுக் கொண்டிருந்தோம்..யாரோ “ஹாய் ராசா” என்று கூப்பிடும் சத்தம் கேட்டது..கேட்ட குரலாக இருக்கிறதே என்று திரும்பி பார்த்தால் இன்ப அதிர்ச்சி..அவள்தான்..பக்கத்தில் அவளுடைய சிட்பெண்ட்..சாரி ஹஸ்பெண்ட்..நல்லாத்தான் இருந்தார்.,.கையில் 2 வயது குழந்தை..

“எப்படி இருக்க ராசா..5 வருசத்துக்கு முன்னாடிப் பார்த்தது..”

“நல்லா இருக்கேன்பா..இது என்னுடைய மனைவி..”

“ஹிம்..என்னைத்தான் கல்யாணத்துக்கு கூப்புடலை..இது என் கணவர்..”

“குழந்தை அழகா இருக்கு..என்ன பெயர்..”

“வந்தனா..உனக்குத் தெரியும்..நல்லா ரைம்ஸ் எல்லாம் சொல்லுவா..இங்கப்பாரு குட்டி..அங்கிளுக்கு ரைம்ஸ் சொல்லு..”

அடங்கொய்யாலே..அங்கிளா..அருவாளை இப்படித்தான் போடுவாயிங்களோ..

குட்டிப் பொண்ணு கீ கொடுத்த பொம்மை போல் ரைம்ஸ் சொன்னது..சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்..ஒவ்வொருவராக கை கழுவச் செல்ல..கடைசியில் நானும் அவளும் மட்டும்தான் டேபிளில்..

எப்படித்தான் என் மனசுக்குள் சைத்தான் புகுந்தது என்று தெரியவில்லை..திடீரென்று ஒரு எண்ணம்..காலேஜ்ஜில்தான் கேட்கவில்லை..அவள் தெரிந்து கொள்ளட்டுமே..இப்பாவாவது கேப்பாமா..சே..சே..கல்யாணம் வேறு ஆகி விட்டது..இது முறையில்லை..கண்டிப்பாக எழுந்து அறைந்தாலும் அறைவாள்..

என் மனது திரும்பவும் கேம் ஆடவே..இந்த தடவை என்னால் முடியவில்லை..மனதில் அடக்கி கொண்டிருந்து வாய்வரை வரவே கேட்டே விட்டேன்..

“தப்பா எடுத்துக்காதே..காலேஜ் படிக்கிறப்பயே கேட்கலாம் என்று இருந்தேன்..”

அதிர்ந்தே போனாள்..

“என்ன விசயம் ராசா..கேளு..” முகத்தில் பதற்றம் தெரிந்தது..

“காலேஜ் முதல் வருசம் படிக்கிறப்ப எங்கிட்ட ஒரு 200 ரூபா கடன் வாங்கின..அதுக்கப்பறம் நீ அதை மறந்துட்டே.,நானும் எவ்வளவோ தடவை கேட்கலாம்ன்னு இருந்தேன்..நீ எப்படி எடுத்துக்குவேன்னு தெரியலை..நான் பண விசயத்துல கொஞ்சம் கரெக்டா இருப்பேன்..அதான்..இப்பக் கேட்டேன்..”

பின்ன என்னண்ணே..200 ரூபா வாங்கிட்டு 5 வருசமா கொடுக்கலைன்னா என்ன நியாயம்..பணம் என்ன மரத்துலயா காய்க்குது….

Monday 24 August, 2009

நமீதா என்னிடம் செய்த குறும்பு



இந்த உலகத்துல முதல்ல பிறந்தது குரங்குகள்னு சொல்லுவாங்க..இல்லைண்ணே..முதல்ல பிறந்தது எங்க அபார்ட்மெண்டில் வாழும் வானரக் கூட்டம் அண்ணே.. என்ன புரியலையா..எங்க அபார்ட்மெண்டில் 5 வயசுக்கு மேலே 12 வயசுக்குள்ளாற 10 பசங்க இருக்காயிங்கண்ணே..எல்லாம் வாலுங்க..உசிரோட கொளுத்திருவாயிங்கண்ணே..இவிங்க பொறந்தவுடனே பார்த்த முதல் படம் அஞ்சலின்னு நினைக்கிறேன்..சேட்டையின் மொத்த உருவமே இவிங்கதான்..அபார்ட்மெண்ட்ல ஒரு பயலையும் விட மாட்டாயிங்க..பாசமா “அங்கிள்” ன்னு பக்கத்துல வருவாயிங்க..தூக்கி வைச்சு கொஞ்சுனா, கன்னத்துல நல்லா இருக்குற 4 பல்லும் பதியிற மாதிரி ஒரு கடி கடிப்பாயிங்க பாருங்க..மறுநாள் ஆஸ்பத்திரியில போய் கட்டுதான் போடணும்..

ஒருநாள் மதியம் நல்லா தூங்கிக்கிட்டு இருந்தேன்..யாரோ காலை சுரண்டற மாதிரி இருந்துச்சுண்ணே..பயந்துகிட்டு யாருன்னு பார்த்தா, பக்கத்து வீட்டு பொடுசு..

“என்ன அங்கிள் பயந்துட்டீங்களா..சும்மாதான் எழுப்புனேன்..தூங்கிட்டீங்களா..எனக்கு ஒரு டவுட் அங்கிள்..”

ஐயோ புள்ளை அக்கறையா கேக்குதுன்னு ஆசைப்பட்டு கேளுப்பான்னு சொன்னா, கேக்குறான் பாருங்க..

“அங்கிள் நீங்க வெறும் ராசாவா..இல்ல மன்மதராசாவா..”

எனக்கு தூக்கமே போச்சுண்ணே….ஒரு வாண்டு எங்கிட்ட வந்து கேக்குறான்..

“அங்கிள்..இந்த புளூ பிலிம்னு சொல்றாயிங்களே..அந்த பிலிம் எந்த கலர்ல இருக்கும்..புளூ கலர்லயா..”

கேக்குற கேள்வியைப் பாருங்கண்ணே..இதுக எல்லாம் பிஞ்சுல பழுத்து வெம்பி போயிருச்சுண்ணே..கல்யாணம் பண்ணி முதல் தடவையா என் பொண்டாட்டிய அபார்ட்மெண்டுக்கு கூட்டிட்டு வர்றேன், படியில் நம்ம வானரங்க..10 பேர் அஞ்சாதே ஹீரோ மாதிரி உக்கார்ந்து இருக்காயிங்க..என் பொண்டாட்டிக் கிட்ட முதல்லே சொல்லிட்டேன்..இங்க ஒரு கூட்டம் இருக்கு..அவிங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருண்ணு..

“அங்கிள்..அங்கிள்..”

“ஏங்க..சின்னப் பசங்க எவ்வளவு ஆசையா கூப்பிடுறாயிங்க பாருங்க..போலாங்க..”

“அடியே..வேணான்டி..இப்படித்தான் ஆசையா கூப்பிட்டு அடியில நெருப்பு வைச்சுருவாயிங்க..அப்படியே பார்க்காத மாதிரி வந்துடு..”

அப்படியே கண்டுக்காத மாதிரியே நடந்து வந்துக்கிட்டு இருக்கோம்..ஓடியே எங்க முன்னாடி வந்துட்டாயிங்க..

“என்ன அங்கிள்..ஆண்டிக்கிட்ட எங்களை இன்டிரிடியூஸ் பண்ண மாட்டீங்களா..”

இன்னைக்கு கிரகம் சரியில்லைன்னு நினைக்குறேன்..

“ஐயோ..அப்பிடி இல்லைப்பா..மீட் மிஸ்டர் வாலுப்பசங்க..இது என் மனைவி..”

என் மனைவியும் சூது தெரியாம வணக்கம் சொன்னாள்..ஒரு பையன் சொல்லுறான்..

“என்ன அங்கிள் பக்கத்து வீட்டு கவிதாவ கரெக்ட் பண்ணிக்கிட்டு இருந்தீங்க..செட் ஆகலையா..”

சூடம் அணைச்சு சத்தியம் செய்றேண்ணே..எனக்கு கவிதான்னு யாருமே தெரியாது..பக்கத்து வீட்டு பொண்ணு பேறு கூட கவுசல்யான்னே..

“டே..யாருடா கவிதா..சும்மா பொய் சொல்லாதீங்கடா..”

என் பொண்டாட்டி ஒரு உஷ்ணப் பார்வை பார்த்தா பாருங்க..இன்னொரு பையன் சளைக்காம சொல்றான்..

“ஆண்ட்டி..நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க..எங்க அங்கிளுக்கு தண்ணியடிக்குற பழக்கத்த தவிர ஒரு பழக்கம் இல்லை..சிகரெட் புடுச்சுட்டு இருந்ததைக்கூட நிப்பாட்டிறாரு..”

எப்படியெல்லாம் குருவிக்கூட்டை கலைக்குராயிங்க பாருங்கண்ணே..என் பொண்டாட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் கிளம்பி போயிட்டா..வீட்டுக்குள்ள போறேன்..ஒரே அழுகாச்சிண்ணே..

“அடியே..அவிங்க சொல்றத நம்பாதடி..”

“அது எப்படிங்க..சின்ன குழந்தைங்க பொய்யா சொல்லும்..”

“அடப்பாவி..இதுக குழந்தைகள் இல்லடி..வாலுக் கூட்டங்க..”

ரெண்டு நாளா பேச்சுவார்த்தையே இல்லண்ணே..இதுல அந்தக் கூட்டத்துல “நமீதா” ன்னு ஒரு நாய்க்குட்டி வளர்க்குறாயிங்கண்ணே..அடுத்த நாள் வெளியே வர்றேன்..எப்போதும் என்னைப் பார்த்து குலைக்கும்(சொல்லிக் குடுத்துருப்பாயிங்க போல)..அன்னைக்கு என்னையப் பார்த்து “உன்னையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு..உன்னையப் பார்த்து குலைக்கனுமா என்ன” ன்னு ஒரு ஏளனப்பார்வைப் பார்த்து புறவாலைக் காட்டிட்டு ஓடுதுண்ணே..நமீதா குறும்பைப் பாருங்கண்ணே..எனக்கு அழுகையா வந்துருச்சுண்ணே.. ஐயோ, பேசுக்கிட்டு இருக்கும் போது ஏன்னே அடிக்குறீங்க..அண்ணே..அடிக்காதீங்கண்ணே..பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்….அது சரிண்ணே..ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..அது என்னன்னே நமீதா பயபுள்ள மேல அம்புட்டு பாசம்..

Sunday 23 August, 2009

ஷாருக்கான் – தேசத்தின் அவமானமா??


கோவாலுவை அவ்வளவு கோவமா பார்த்ததேயில்லைண்ணே..முகம் முழுக்க கோவத்துடன் எங்கிட்ட வந்தான்….

“ராசா..ரொம்ப அவமானம்டா..சே..மானமே போச்சுடா..”

“ஐயோ..கோவாலு..என்னடா ஆச்சி….வீட்டில இருக்குறவயிங்களப் பத்தி யாராவது தப்பா பேசுனாங்களா..சொல்லுடா, அடியப் போட்டுருவோம்..”

“இல்லடா ராசா..அமெரிக்க ஏர்போர்ட்ல ஷாருக்கானை அவமானப்படுத்தியிருக்காயிங்கடா..எப்படிடா அவிங்க பண்ணலாம்..”

“ஆமாடா கோவாலு..என்ன தேசம்டா இது..இதை சும்மா விடக்கூடாதுடா..இப்படிப்பட்ட நாட்டுல நீ இருக்கவே கூடாதுடா..இப்படிப்பட்ட நாடு தர்ற சம்பளம் உனக்கு தேவையாடா..உடனே டிக்கெட் வாங்கிட்டு இப்பவே ஊருக்கு கிளம்புடா..”

“டே ராசா..இதுக்கெல்லாம் போயி……..வீட்டுல மதியான சாப்பட்டுக்கு சோறு ரெடியாகி இருக்கும்….நான் கிளம்புறேன்..”

திரும்பிப் பார்க்காம ஓடியே போய்விட்டான்..இதுபோலத்தான் நம்மில் பலர் இருக்கிறோம்..உண்மையில் ஷாருக்கானை அவமானப்படுத்தியது தேசத்தை அவமானப்படுத்தியது போலவா??கேள்வியை ஒருமுறை நமக்குள்ளே கேட்டுப் பார்ப்போம்..கேட்டு விட்டோமா...கீழே மூன்றுகேள்விகள் இருக்கின்றன..திறந்த மனதுடன் இதற்கு பதில் சொல்லுவோம்..

  1. சென்னையில் நமக்கு சொந்தவீடு ஒன்று இருக்கிறது..வாடகைக்கு விட முடிவு பண்ணியிருக்கிறோம்..இஸ்லாமியர் ஒருவர் வந்து வாடகைக்கு கேட்கிறார்..நல்ல குணமாக இருக்கிறார்..ஆனால் அவர் இஸ்லாமியர் என்பதாலேயே வாடகைக்கு விடுவோமா..மாட்டோமா..?
  2. நாம் காதல் திருமணத்தை ஆதரிப்பவர்..நமக்கு கல்யாணம் ஆகி திருமண வயதில் மகள் இருக்கிறாள்..ஒரு இஸ்லாமிய இளைஞனை காதலிக்கிறாள்..அவன் ஒரு முஸ்லீம் என்பதாலே திருமணத்திற்கு ஒத்துக் கொள்வோமா மாட்டோமா..?
  3. குஜராத் கலவரம் நடந்தபோது..”அவிங்களுக்கெல்லாம் இதெல்லாம் வேண்டும்டா..” என்று சொல்லியிருக்கிறோமா..?

மேலே உள்ள மூன்று கேள்விகளுக்கு நாம் “மாட்டேன்” “சொல்லி இருக்கிறேன்” என்று பதில் சொன்னால், பிரச்சனை அமெரிக்காவில் இல்லை..நம்மிடத்தில் உள்ளது..தேசத்தை அவமானப்படுத்துவது அமெரிக்கா இல்லை..நாம்தான்….

இப்படி சொல்வதால் அமெரிக்கா செய்தது சரியென ஆகிவிடாது..இனம், மொழி, நிறப் பாகுபாடு கொடுமைகள் அமெரிக்காவில் என்ன அண்டார்டிகாவில் நடந்தாலும் தவறுதான்..

எனக்கு ஒரு முஸ்லீம் நண்பன் உண்டு..எனக்கு மிகவும் பிடித்தவன்…நல்ல கடவுள் பக்தி உள்ளவன்..அவனுக்கு மேற்கு மாம்பலத்தில் ஒரு கம்பெனியில் வேலைக் கிடைத்திருந்தது..அதனால் மேற்கு மாம்பலத்திலேயே வாடகைக்கு ஒரு வீடி தேடினான்..நானும் அவனும் வீடு வீடாக சென்று தேடினோம்..சொல்லவே கஷடமாக உள்ளதுன்னே..அவன் ஒரு முஸ்லீம் என்பதாலேயே அவனுக்கு ஒருத்தரும் வீடு கொடுக்கவேயில்லை….இதில் ஒரு வீட்டு ஓனர் என்னைத் தனியே கூப்பிட்டு சொல்கிறார்..

“தம்பி..ஏன்பா இவிங்களை எல்லாம் வீடு பார்க்க கூப்பிட்டு வர்ற..தீவிரவாதியா கூட இருக்கலாம்பா..நம்ப முடியாது..”

எனக்கு செருப்பால் அறைந்தது போல் இருந்தது..இத்தனைக்கும் அவர் படித்த மத்திய அரசு அலுவலர்..ஏன் இந்த பாகுபாடு..யாரோ சிலர் அந்த இனத்தில் தீவிரவாதம் செய்வதால் அனைவரும் தீவிரவாதியா?? ஒரு விமானம் தரையில் விழுந்துவிட்டால் விமானப் பயணத்தையே தவிர்க்கிறோமா..என்ன மனிதர்கள் நாம்..

ஒரு கட்டத்தில் என் நண்பனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது..

“ராசா..இனிமேலும் எனக்கு வீடு கிடைக்கும்னு நம்பிக்கை இல்லைடா..ஏண்டா நானென்ன அந்நிய நாட்டுக்காரனா..நானும் இந்தியந்தானடா..ஏண்டா என்னை ஒரு தீவிரவாதி மாதிரியே பாக்குறாங்க..”

என்னால் எதுவும் பதில் சொல்ல இயலவில்லை..”சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஆசைப்படுகிறாயா..முதலில் உன்னிடம் இருந்து ஆரம்பி” என்று ஒரு அறிஞர் சொன்னார்

சமூக மாற்றத்தை விரும்பும் இளைஞர்களாய் நாம் இருக்கிறோம்..ஷாருக்கான் பற்றிக் கவலைப்படும் முன்பு நம் பக்கத்து வீட்டில் உள்ள “காதர் மொய்தீன்”,”ஷேக் முகம்மது” போன்றோரை மொழி, இனம், நிறம் தாண்டி நேசிப்போம். பின்பு அமெரிக்காவிடம் நெஞ்சை நிமிர்த்தி கேட்போம் “ஏன் ஒரு இந்தியனை, இஸ்லாமியனை அவமானப்படுத்தினாய்” என்று..

பின்பு நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம், “குடியரசுத் தலைவராய் ஒரு இஸ்லாமியரைத் தந்த நாடு, என் நாடு” என்று..

Thursday 20 August, 2009

மிக்சர் ஜூஸ்

நிறைய பேர் “அவியல், குவியல், கொத்துப் புரோட்டா..” ன்னு நிறைய எழுதிட்டதால, நம்ம என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்..கடைசில நம்ம மதுரையுல பேமஸ் “மிக்சர் ஜூஸ்”. அதுவே வைச்சிட்டேன்..வேற ஏதாவது பெயர் உங்களுக்கு தோணிச்சுன்னா சொல்லுங்கண்ணே..நல்ல தலைப்புக்கு ஏதாவது பரிசு கொடுத்துருவோம்..ஹீ..ஹீ..

அழகர்மலைப் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு பாட்டு..”உலகம் இப்போது எங்கே போகுது..” இளையராஜா ஒரு ஆல்பம் மாதிரி பண்ணியிருந்தார்..எனக்குத் தெரிந்து இளையராஜாவைத் தவிர யாரும் தன்னைப் பற்றியே புகழ்ந்து எழுதிக் கொண்டு இசையமைத்து நடித்ததாக ஞாபகம் இல்லை..அதில் குறிப்பிட்டுள்ள சில வரிகளைப் பார்க்கும் போது, இளையராஜாவுக்கு என்ன ஆயிற்று எனக் கேட்கத் தோணிகிறது. அப்பட்டமா ஏ.ஆர் ரகுமானைப் பற்றியே பாடியதாக தோணுகிறது. ஏ.ஆர் ரகுமான் கடல் கடந்து போய் ஆஸ்கார் வாங்கியது இளையராஜாவுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை..அப்போ, ஏ.ஆர் ரகுமானை பாராட்டு விழாவில் புகழ்ந்து பேசியது வெறும் வார்த்தைகள்தானா?? மற்றொரு விழாவில் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்ற வார்த்தைகளை தாக்கிப் பேசும் போது நோக்கம் என்ன என்று தெரிந்தது..இசையில் இசைஞானியாக இருந்தாலும் அவரைப் பற்றிய பிம்பம் படிப்படியாக நொறுங்கிப் போனது..

உரையாடல் போட்டி முடிவுகளைப் பார்த்த போது ஒன்றும் அதிர்ச்சியாக இல்லை..ஆனால் என்னுடைய சிறுகதையைப் திரும்ப ஒருமுறை படித்த போது ஏண்டா போட்டிக்கு அனுப்பினோம் என்று நொந்து போனேன்..ஒவ்வொருவர் சிறுகதையிலும் சற்று இலக்கணம் இருந்தது..அதில் ஒன்று கூட பொருந்தாமல் என் கதை இருந்தது..தெரியாத ஏரியாவில் மூக்கை நுழைக்க கூடாது என்று கற்று கொண்டேன்..கவிதை ஏரியாவும் எனக்கு பிடிபடாத ஒன்று..

போன வாரம் இன்டெர்நெட்டில் “வால்மீகி” படம் பார்த்தேன்..அவ்வளவு ஒன்றும் அறுவையாக இல்லை..ஆனால் ஏன் அந்தப் படத்தைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் ஏன் என்று தெரியவில்லை..அகில் இயல்பாக நடித்திருந்தார்..இப்படியே கதைக்கேற்ற பாத்திரத்தில் நடித்தால் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கலாம்

சமீபத்தில் “அங்காடித்தெரு” பாடல்கள் கேட்டேன்.இசையமைப்பாள்ர் ஜீ.வி பிரகாஷுக்கு 22 வயதாம்..ஒவ்வொரு பாடல்களும் பின்னியெடுத்துருக்கிறார்..”அவள் அப்படி ஒன்று அழகில்லை” மற்றும் “உன் பேரை சொல்லும் போது” இரண்டு பாடல்களைக் கேட்டுப் பாருங்கள்..வேறு உலகத்திற்கு எடுத்து செல்வார்..மறக்காமல் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் ஆண்ட்ரியா பாடிய “மாலை நேரம்” பாட்டை இன்னும் கேட்கவில்லையா..போங்கண்ணே..

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இங்கு நடக்கிறது..நம்ம ஆளு பூபதி வந்திருப்பதாக சொன்னார்கள். போன வாரம் சென்றிருந்தேன்..டிக்கெட் “42 டாலர்” என்றதுமே என் மனைவி முறைக்க ஒரு கோன் ஐஸ் வாங்கி சாப்பிட்டு ஓடி வந்துவிட்டேன்

மனைவி வீட்டில் இல்லாதபோது “காதல் கதை” படம் பார்த்தேன்..ரொம்ப நாளாயிற்று “ஜோதி” தியேட்டரில் படம் பார்த்து..

தகவல் தொழில் நுட்பம் திரும்பவும் பழைய நிலைக்கு வருவதற்கான அறிகுறிகள் தெரிவதாக சொல்கிறார்கள்..அமெரிக்க கனவு அவுட் ஆப் போகஸாகி திரும்பவும் போகஸ் ஆகும்போலே..

பன்னிக்காய்ச்சல் இந்தியாவில் தூள் கிளப்புதாமே..தெருவில் நடந்தா ஏதோ லேப்புக்குள்ள இருக்குற மாதிரி இருக்கிறது என்று நண்பன் சொன்னான்….யாராவது மாஸ்க் வைச்சிருந்தா கொஞ்சம் ஸ்டாக் வைச்சிருங்கப்பா வந்து வாங்கிக்குறேன்..கூடிய சீக்கிரம் ஊருக்கு வர்ரோமில்ல..

என்ன ஆச்சு வலையுலகத்திற்கு..கடந்த ஒரு மாசமா ஒரு சண்டையும் காணோம்….சண்டையப் போடுங்கப்பா..போரடிக்குதுல்ல..

Sunday 16 August, 2009

ஏழையா பிறந்தது குத்தாமாயா??

வீட்டுல இருந்து கால் பண்ணியிருந்தாயிங்க..பக்கத்து வீட்டு வாட்ச்மேன் தாத்தாவை போலிஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போயிருந்தாங்களாம். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது…ரொம்ப அப்பிராணியான மனுசன்னே..நான் எப்ப ஊருக்கு போயிருந்தாலும் கண்டிப்பா வீட்டிற்கு பார்க்க வருவார்..என்னைப் பார்த்து ரொம்ப சந்தோசப்படுவார்..ஏதாவது முறுக்கு, சீடைன்னு வீட்டுல செய்து எனக்காக எடுத்து வருவார்..நான் சின்னப் பிள்ளையா இருந்த போது என்னை சில நேரம் தூக்கி வளர்த்திருக்கிறார்..அம்மா சொல்லியிருந்தாங்க..சுதந்திரம் வாங்குவதற்கு முன்னாடியே பிறந்தவர்..சில நேரம் என்னை மடியில் வைத்துக் கொண்டு பல சுதந்திரப் போராட்டக் கதைகளை சொல்லியிருக்கிறார்..

அவருக்கு 3 மகன்கள்… 2 மகன்கள் சென்னையில் வேலைப் பார்க்கிறார்கள். 1 பையன்தான் என் பக்கத்து வீட்டில் இருக்கிறான். பாட்டி இறந்து விட்டார்..நான் அமெரிக்கா கிளம்பும் போது, சென்னை போயிருப்பதாக சொன்னார்கள்.. அவருடைய கடைசி பையனிடம் காரணம் கேட்டேன்..

“ஆமா..பெரிசு, எப்ப மண்டையப் போடும்னு தெரியல..ஒரு சொத்தும் சேர்த்து வைக்கலை..நானே காப்பாத்தனும்னு எனக்கு விதியா என்ன..ரெண்டு பேர் இருக்காயிங்கள்ள..அவிங்க வீட்டுலயும் கொஞ்ச நாள் இருக்கட்டுமே..என்ன குடியா முழுகிப் போகுது..”

எனக்கு இந்த மாதிரி ஆட்களைப் பார்க்கும் போது பாரதியார் கோவம்தான் வரும்..பக்கத்துல ஏதாவது கல்லை எடுத்து அவன் மண்டையில போட்டுவிடலாம் போல ஆத்திரம்..இத்தனைக்கும் அந்தப் பையனுக்கு ஒருமுறை மஞ்சள் காமாலை வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தப் போது, அவனை மடியில் போட்டு வாட்ச்மேன் தாத்தா கதறியது இன்னும் என் நெஞ்சில் உள்ளது..என்ன மனுசங்க இவிங்க..பணத்தை எடுத்துதான் டெய்லி சாப்பிடுவாயிங்களா..மனுச உயிருக்கு மதிப்பே இல்லையா..வயதாகிவிட்டால் செத்து விட வேண்டுமா..ஒன்னும் சொல்லாமல் அமெரிக்கா கிளம்பி வந்துவிட்டேன்..இரண்டு வருடம் கழித்து இப்பத்தான் அவரைப்பற்றி கேள்விப்படுகிறேன்…

என்னால் இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் வாட்ச்மேன் தாத்தா வீட்டிற்கு போன் பண்ணியிருந்தேன்..கடைசிப் பையனின் மனைவிதான் எடுத்தார்..

“நான் ராசா பேசுறேன்..தாத்தா இருக்காரா..”

“அதுவா..அங்க உக்கார்ந்து இருக்கு..இருங்க கூப்பிடுறேன்..”

கொஞ்ச நேரம் கழித்து..பையனின் மனைவியே திரும்பவும் எடுத்த்தார்..

“அது வரமாட்டிங்குது..யார் கூடவும் பேச விரும்பலையாம்..”

“பரவாயில்லை..நான் கூப்பிடுறேன்னு சொல்லுங்க..”

சிறிது நேரம் கழித்து தாத்தாதான் எடுத்தார்..

“தாத்தா..நான் ராசா பேசுறேன்..என்ன ஆச்சி..”

ஒன்றும் பேசவில்லை..எதிர்முனை தாத்தா வாய்விட்டு அழுகும் சத்தம்தான் கேட்டது…தாத்தா அழுது நான் பார்த்ததேயில்லை..எப்போதும் சிரித்த முகமாகத்தான் இருப்பார்..எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது..

“என்ன தாத்தா..சின்னப்பிள்ளை மாதிரி அழுகுறீங்க..என்ன நடந்துச்சு..”

“ராசா..ஏண்டா உசிரோட இருக்கோம்னு இருக்குடா..கடவுள் ஏண்டா எங்களை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் சாவு சீக்கிரம் தரமாட்டிங்குறார்..”

“தாத்தா..என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க..ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க..”

“ராசா..நான் சம்பாதிக்குற வரைக்கும்தாண்டா மதிப்பு இருந்துச்சு..இவிங்க எல்லாம் வளர்ந்து என்னை காப்பாத்துவாய்ங்கன்னு கூட எதிர்பார்க்கலைடா..ஆனா ஒரு மனுசனா கூட மதிக்க மாட்டீங்குறாயிங்கடா..சொத்து சேர்த்து வைக்கலையாம்..நான் பார்த்தா வாட்ச்மேன் உத்தியோகம் வைச்சு என்ன சொத்துடா சம்பாதிக்க முடியும்..ஒவ்வொரு மகன் வீட்டுக்கும் சோத்துக்கு நாய் மாதிரு அலைஞ்சேண்டா..ஒவ்வொருத்தன் வீட்டுலயும் ஒரு வாரம்..என்னப் பொழைப்புடா சாமி இது..

எனக்கும் தன்மானம் இருக்கு ராசா.சென்னையில ஒரு வீட்டுல வாட்ச்மேனா வேலைக்கு சேர்ந்தேன்டா..ரெண்டு மாசம் நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு..திடீர்ன்னு அந்த வீட்டுப் பொண்ணு நகை காணாமல் போகிடுச்சாம்..என்னை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டுப் போய் அடிச்சே மிரட்டுறாய்ங்கடா….வயசானவர்ன்னு கூட பார்க்காம் நெஞ்சில மிதிச்சாயிங்கடா..வெள்ளைக்காரன் மிதிச்சப்பக் கூட நாட்டுக்காக மிதிவாங்கிறோம்னு சந்தோசமா இருந்துச்சுப்பா..இப்ப மிதிக்குறப்ப வலிகூட இல்லைப்பா..ஏன்னா என் உசிரு போய் எவ்வளவோ நாளு ஆச்சே..வெறும் உடம்பை அவுங்க என்ன செய்து விட முடியும்..எல்லாம் மறத்துப் போச்சுப்பா..ஏம்பா..எனக்கு ஒரு சந்தேகம்..ஏழையா பொறந்தது தப்பாப்பா..நாங்க எல்லாம் உயிர் வாழத் தகுதியே இல்லையாப்பா..”

என்னால் ஒன்றும் பேச முடியவில்லைண்ணே..ஏனென்றால் அவர் கேட்கும் கேள்விகளுக்கு என்னிடத்தில் விடையும் இல்லை..


செக்சி மற்றும் ஜிம் பாடி

என் உசிரை எடுக்குறதுக்குன்னே கடவுள் கோவாலை படைச்சிருப்பார் போலண்ணே….உசிரை உறிஞ்சி எடுத்துருவான்….என்னது கோவாலைத் தெரியாதா..என்னண்ணே..கொஞ்சம் எட்டிப்பாருங்க.உங்களுக்கும் கடவுள் அது போல ஒரு நண்பனைக் கொடுத்துருப்பான்..பேரு வேணா வேற இருக்கலாம்..எனக்கு கிடைச்ச கோவாலு உண்மையிலயே ஒரு அப்பாவியா அல்லது அடப்பாவியான்னு தெரியாம இவ்வளவு நாள் முழிச்சுருக்கேண்ணே..

நம்ம கோவாலுக்கு கொஞ்சம் சாம் ஆண்டர்சன் உடம்புண்ணே..அதனாலயே நம்ம அர்னால்டு மாதிரி ஆளுங்களைப் பார்த்தா கொஞ்சம் ஏக்கமா பார்ப்பான்….எப்படியாவது அர்னால்ட் மாதிரி இல்லைன்னாக் கூட ஒரு ராமராஜன் பாடியாவது கொண்டு வந்துடனும்னு மூக்கம்புட்டு ஆசையா இருந்தாண்ணே..அவனும் ரெண்டு வேலை சாப்பிடாம, வயித்துல ஈரத்துணியக் கட்டிக்கிட்டு அலைஞ்சுப் பார்த்தான்..வயிறு வலி வந்து டாக்டர் பீஸ் குடுத்ததுதான் மிச்சம்..ஒரு தடவை எல்லாம் ஒரு வாரம் முழுக்க வெறும் காய்கறி, பழம்தான்..நாங்க எல்லாம் அவனைக் கடுப்பேத்துறதுக்குன்னே, நல்லா சிக்கன், மட்டனுன்னு வெட்டுவோம்..பாவம் பய, ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது..ஓய்ஞ்ச வாழைப்பழம் மாதிரி ஆகிடுவான்..அதுக்கடுத்து சாப்பிடுவான் பாருங்க….ஒரு வருசமா, ரூமுக்குள்ள அடைச்சு வைச்சிருந்த மாதிரி..2 கிலோ கம்மி பண்ணியிருந்தான்னா, 6 கிலோ ஏறியிருப்பான்..

ஒரு முறை பரபரப்பா எங்கிட்ட வந்தான்…

“ராசா…பக்கத்துல ஜிம் ஒன்னு ஆரம்பிச்சிக்கிராயிங்கடா..செலவு கம்மியாம்டா..நான் போகப் போறேன்..”

“சரி, நீ திரும்பவும் ஆறு கிலோ ஏத்தப்போற..நல்லாப் போயிட்டு வாடா..”

“மச்சான்..நீயும் வரனும்டா..கம்பெனிக்கு..”

“அடப்பாவி..ஏதோ சின்னப்புள்ளையில ஒன்னுக்கு போறதுக்கு கம்பனிக்கு கூப்புடுற மாதிரி கூப்பிடுற..எனக்கும் ஜிம்முக்கும் ஆகாது..நான் வரலைடா..”

“டே..நானும் நீயும் இப்படியாடா பழகியிருக்கோம்….வாடா..”

“இத விட கேவலமா பழகியிருக்கோம்..ஆள விடு..”

சின்னக் குழந்தை மாதிரி நச்சரிக்குறான்னே..சரி தொல்லை தாங்க முடியாம் சரின்னு சொல்லிப்புட்டேன்..நாளைக்கு வந்து கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிக் கிளம்பிப் போயிட்டேன்..எத்தனை மணிக்குன்னு ஒரு வார்த்தை கேக்காததுதான்னே நான் வாழ்க்கையில பண்ணுன ரெண்டாவது தப்பு..முதல் தப்பு எதுன்னு கேக்குறீங்களா..அவன் பிரண்ட்ஷிப் புடிச்சதுதான்..நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, நானெல்லாம் தூங்க ஆரம்பிச்சா, கத்திய வைச்சு குத்தினாலும். கொசு கடிக்குதுன்னு தட்டி விட்டு கண்டினியூ பண்றவன்….அன்னிக்கு வேற சரியான கனவு..சிம்பு டைரக்ட் பண்ணி பேரரசு நடிக்கிற மாதிரி..இதுல பேரரசு குளோசப்ல வேற பஞ்ச் டயலாக் பேசுறாரு..அலறிட்டேண்ணே..பக்கத்துல “ராசா..ராசா..”ன்னு பாசமா யாரோ கூப்பிடுற மாதிரி இருந்துச்சுண்ணே..

ஆஹா..பேரரசுக்கு நம்ம பெயர் எப்படிடா தெரியும்னு பயந்துப் போய் கண்ணத் தொறந்தா, பேய் மாதிரி நம்ம கோவாலு நிக்குறாண்ணே..

“ராசா..டவுசரப் போடுடா..ஜிம் போகலாம்..”

“அடங்கொய்யாலே..மணி என்னத் தெரியுமா..நாலு மணிடா..தூங்க விடு..”

கோவாலுக்கிட்ட புடிக்காதது எது தெரியுமா..அடம் புடிப்பாண்ணே..நச்சரிச்சே தூக்கத்த கலைச்சிட்டான்..நான் வேற பேரரசு பார்த்த கோவத்துல இருந்தேன்னா..முணங்கிக்கிட்டே எழுந்து தயாராகிப் போனேன்..ஜிம் போய் ரிசப்சன் போனா..பாசமா வரவேற்தாயிங்க..40 டாலர் கட்டிட்டு கோச்சை அறிமுகப்படுத்துறேன்னு கூட்டிக்கிட்டு போனாயிங்க..போய் பார்த்தா..ஆத்தாடி..நல்லா ஓங்குதாங்க அர்னால்டு அண்ணன் மாதிரி ஒருத்தர் நிக்குறாருண்ணே..பேர் “மார்க்”..எனக்கு குலை நடுங்கிருச்சுண்ணே…நம்மெல்லாம் அவர் பக்கத்துல நின்னா ஏதோ யானைப் பக்கத்துல கொசு நின்ன மாதிரி இருந்துச்சுன்ணே..நான் மெதுவா கோவாலுக்கிட்ட சொன்னேன்..

“கோவாலு..இப்பக்கூட ஒன்னுமில்லை..40 டாலர் போனா போயிட்டுப் போகுது..இப்படியே கொல்லைப்புறம் வழியா ஓடிப்போகிடலாம்..”

அவ்வளவுதான்..கோவலுக்கு கோவம் வந்துருச்சு..”ஏண்டா உடம்பு ஆரோக்கியத்து மேல உனக்கு அக்கறையே இல்லையா” ன்னு ஹார்லிக்ஸ் மம்மி மாதிரி பேச ஆரம்பிச்சுட்டான்..மார்க் கேட்டாரு..

“மிஸ்டர் கோபால்..உங்களுக்கு என்ன மாதிரி உடம்பு வேனும்னு சொல்லுங்க..அதுக்கேத்த மாதிரி உங்களுக்கு பயிற்சி கொடுக்குறேன்..”

“மார்க்..எனக்கு..வந்து…ம்..நல்லா கட்டுமஸ்தா, ஜிம் பாடியா..செக்சியா சிக்ஸ் பேஸ் வேண்டும்..”

அடப்பாவி, வினைய 40 டாலர் குடுத்து வாங்குறேயேடா..பயிற்சி முடிஞ்சப்பிறகு நம்ம பேஸ்ஸே இருக்குமான்னு சந்தேகமா இருக்கு..இதுல சிக்ஸ் பேஸ் வேறயாடா..

“மிஸ்டர் கோபால் பயிற்சி கொஞ்சம் கடுமையா இருக்கும்..பரவாயில்லையா..”

சரின்னு கோவாலு தலையாட்டுனதுதான் கோவாலு வாழ்க்கையில பண்ணுன முதல் தப்புன்னு நினைக்குறேன்னே..முதல்ல எளிமையாத்தான் கோச் ஆரம்புச்சாரு..போகப் போக கொடுத்தார் பாருங்க பயிற்சி..ஸ்..அப்பா..கோவாலு ஒரு கட்டதுல கதறிட்டாண்ணே..நானெல்லாம் அவ்வளவு பெரிய இரும்பெல்லாம் காய்லாங்கடையிலதான்னே பார்த்து இருப்பேண்ணே..நல்லா தூக்கி தலையச் சுத்தி 20 சுத்து சுத்த சொல்லுறாருண்ணே..ஒரு தடவைக்கு மேல எனக்கு கிறு கிறுன்னு வந்துருச்சுண்ணே..கண் முழி பிதிங்கிறுச்சுண்ணே..அப்படியே பின்னாடித் திரும்பி கோவாலு என்ன செய்றான்னுப் பார்த்தா..பாவம்னே..நல்லா இரும்புக் கம்பிய எடுத்து வய்த்துல அடி, அடி அடிண்ணே..கோவாலு கண்ணுல தண்ணி முட்டிக்கிட்டு வந்துருச்சு….சரி அந்தப்பக்கம் ஏதாவது கொல்லைப்புறக் கதவு தொறந்து கிடந்தா ஓடிப்போயிடலாம்னு பார்த்தா, ஒரு நாயை வேற அந்தப் பக்கம் கட்டி வைச்சுருந்தாயிங்க..

ஒரு வழியா எங்க உடம்புல மட்டும் உசிரை வைச்சுட்டு மத்தது எல்லாம் எடுத்தட்டு மார்க் சொல்றாரு..

“இன்னைக்கு இது போதும்..நாளைக்கு கண்டினியூ பண்ணலாம்..”

நாளை வரைக்கும் எனக்கு உசிரு இருக்குமான்னு சந்தேகமா இருந்துச்சுண்ணே..கோவாலைப் பார்த்தேன்..நல்லா தண்ணியில முக்கி பிழிஞ்ச டவல் மாதிரி ஆயிட்டான்..அப்படியே வீட்டுக்கு போய் படுக்கையில சரிஞ்சுட்டேன்..இதுல என் பொண்டாட்டி வேற “என்னங்க..இப்பயே ரெண்டு கிலோ குறைஞ்ச மாதிரி இருக்கு” ன்னு கடுப்பேத்துனா..அவகிட்ட பேசக்கூட வாயைத் தொறக்க முடியல..சைகையிலே..”என்னை ஒரு 24 மணி நேரத்துக்கு எழுப்பாதே” ன்னு சொல்லிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டேன்..எங்க ஆரம்பிச்சேன்..வாங்குன அடியில அதுவா வருது..

என்ன நடந்துச்சுன்னே தெரியலண்ணே..யாரோ கூப்பிடுற மாதிரி இருந்துச்சு..

“என்னங்க..என்னங்க..ஒரு நாள் முழுக்கத் தூங்கிட்டு இருக்கீங்க..என்ன ஆச்சுங்க..மறுநாள் காலை ஆகிடுச்சு..ஒரு வாயாவது சாப்பிடுங்க..”

“என்னால கையத்தூக்க முடியலடி..நீ..ஒன்னு பண்ணு..காபிய நல்லா ஆற வைச்சு, ஒரு ஸ்ட்றா போட்டு கொண்டுவா..உறிஞ்சி, உறிஞ்சி குடிச்சுக்குறேன்..”

யாரோ கதவைத் தட்டுற மாதிரி இருந்துச்சுண்ணே..என்னால எழுந்து நடக்க முடியாததால் மனைவி போய் கதவைத் தொறந்தா..பார்த்தா நம்ம கோவாலு என்னை நோக்கி ஓடி வர்றான்..

“ராசா..இன்னைக்கு நம்ம ஜிம் போக முடியலைல்ல..அந்தக் கோச் மார்க் வீடு தேடியே வந்துட்டான்..காரை வெளிய நிப்பாட்டிக்கிட்டு வீட்டு வெளியே நிக்குறான்டா..நான் பின்புற கேட் வழியா ஏறிக் குதிச்சு ஓடி வந்துட்டேன்டா..உன்னோட அட்றஸ்ஸூம் அவன் கிட்ட இருக்குடா..அவன் இங்க வந்தா என்னைக் காட்டிக் கொடுத்துராதடா..என் உசிரைக் காப்பாத்துடா..” ங்கிரான்..

ஜிம் போய் சிக்ஸ் பேஸ் வாங்க நினைச்சது தப்பாண்ணே…

Saturday 8 August, 2009

கருப்பனுங்க

அமெரிக்காவில் நிறவெறி இருக்கிறது என்று பலவித செய்திகளில் படித்திருப்போம்..உண்மையில் நிறவெறி இருக்கிறதா??..உண்மையை சொல்லப் போனால் வெள்ளையர்களிடம் இருக்கும் நிறவெறியைக் காட்டிலும் சில இந்தியர்களிடம் தான் நிறவெறி அதிகமாக இருக்கிறது என்று சொல்லுவேன்..அதிர்ச்சியாக உள்ளதா..எனக்கும்தான்..இரண்டு மூன்று அனுபவங்களைப் பெறும்முன்பு..

பொதுவாக கருப்பாக இருப்பவர்களெல்லாம் ஒருவித தாழ்வு மனப்பான்மையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்..எனக்கெல்லாம் கருப்பாக இருப்பதுதான்னே பெருமை..எந்த நிலையில் கேட்டாலும் சத்தம் போட்டு சொல்லுவேன் நான் கருப்பனென்று..உடம்பு தோலில் என்ன இருக்கிறது..இந்த தோல் எவ்வளவு நாள் வரும் என்று நம்ம ஆளுங்களுக்குத் தோணுவதில்லை..மூப்பெய்து தோல் சுருங்கி கால் தள்ளாடும்போது தெரியும், எது உண்மையென்று..அதுவரையில் சில ஆளுங்க போடும் ஆட்டம் இருக்கிறதே..அய்யோடா..

எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் மிகவும் கொடியதுண்ணே..நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது எனக்கு இயற்பியல் எடுத்த ஆசிரியர் மிகவும் பணத்தாசை பிடித்தவர்ண்ணே..அவரிடம் டியூசன் செல்லவில்லையென்றால் அவ்வளவுதான்..அவர்களை எவ்வளவு அவமானம் செய்ய வேண்டுமோ, அவ்வளவும் செய்வார்..நம்மெல்லாம் டியூசன் படிக்கிற அளவுக்கு காசு வைச்சிருந்தோம்னா எதுக்குன்னே ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறோம்..ரெண்டு வேலை கஞ்சி குடிச்சுத்தாண்ணே நம்மளையெல்லாம் படிக்க வைச்சாயிங்க..சோழவந்தான் புழுதிக்காட்டுல வெயிலுல விளையாண்டு ஆத்துல புரண்ட நமக்கு சேட் வீட்டுப் பையன் கலராண்ணே வரும்..ஆனாலும் இறுமாப்போடத் திரிவோம்ணே..

ஒருநாள் அந்த இயற்பியல் வாத்தியார் டீயூசன் படிக்காத ஓரே காரணத்துக்காக என்னை கஷ்டமான கேள்வி கேட்டு டேபிள் மேலே நிக்க வைச்சாருண்ணே..அந்த அவமானத்தைக் கூட என்னால் தாங்க முடிஞ்சதுண்ணே..அடுத்து சொன்னார் பாருங்கண்ணே..

“எல்லாரும் இவனைப் பாருங்கடா..எந்த ஊருடா இவன்..ஆளும் கலரும்..டே..ராசா..என்ன கலருடா நீயி..உங்க வீட்டுல நீ பிறக்குறப்ப தாருல முக்கி எடுத்தாயிங்களா..நீ வெள்ளைக் கலரு சோப் போட்டாலும் அது கருப்பாயிடும்டா..நீங்களெல்லாம் ஏண்டா பொறக்குறீங்க..”

எவ்வளவுதான் இறுமாப்பா இருந்தாலும் சின்னப் பையந்தானுங்கண்ணே..ஹாஸ்டலுக்கு வந்து தேம்பி தேம்பி அழுதேண்ணே..முதல் முறையா என்னை நானே வெறுத்த மாதிரி இருந்தது..கருப்பாக பிறந்தால் செத்துவிட வேண்டுமோ??அம்மாவைப் பார்க்கும்போது கேட்டேன்..

“அம்மா..நம்ம வீட்டுல எல்லாரும் கலரா இருக்காங்களம்மா..என்னை மட்டும் ஏம்மா கருப்பா பெத்த..”

அப்படியே கட்டி அணைச்சுக்கிட்டாங்கண்ணே..காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே..

“தம்பி ராசா..கலருல என்னடா இருக்கு..சாமியெல்லாம் உன் கலர்தாண்டா….உன்னைக் கேலி பண்றவங்களுக்கெல்லாம் உடம்புதாண்டா வெள்ளை, மனசு கருப்புடா..உனக்கு உடம்பு கருப்புடா..மனசு தங்கம்டா..நீ நல்லா படிச்சு முன்னேறுடா….அதுதாண்டா உலகம்..”

வெறி கொண்டு படிச்சேன்னே..12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியலில் 182 மார்க்....பள்ளியில் இயற்பியலில் நாந்தான் முதல்.. மார்க் சீட்டு வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்..இயற்பியல் வாத்தியார் நின்றுருந்தார்..

“ராசா..ஹெட்மாஸ்டர் கூப்பிட்டு என்னைப் பாராட்டினார்..நீதான் நம்ம பள்ளிக்கூடத்துல முதல்…”

நீங்க நம்புறீங்களோ நம்பலையோ தெரியாதுண்ணே..எங்க இருந்து இந்த வேகம் வந்ததுன்னு தெரியலண்ணே..

“ஏன் சார்..கருப்பா இருக்கிறவய்ங்க்ளெல்லாம் படிக்கக் கூடாதா..நாங்களெல்லாம் பொறந்தது தப்பா சார்..இனிமேல் யாரோட மனசையும் இப்படி கொலை பண்ணாதிங்க சார்..”

அதுக்கப்பறம் கல்லூரியில் படிக்கும்போது இதைப்பற்றி நினைப்பே வந்ததில்லை, என் கல்லூரி ஆண்டு விழா வரும்வரைக்கும்..கல்லூரி ஆண்டு விழாவுக்கு ஒரு பிரபலத்தை அழைத்திருந்தனர்..நாமதான் முந்திரிக் கொட்டை மாதிரி எல்லாத்தையும் முன்னின்று செய்வோமே..எல்லா வேலையும் பார்த்துவிட்டு அவரை ரிஷப்சனில் நின்று வரவேற்க வேண்டும்..நல்லா டிரஸ் போட்டு நின்று இருந்தேன்..என் கூட படிக்கும் ஒரு குஜராத்திப் பையன் வந்தான்.,.

“ராசா..நீ..இங்க நிற்க வேண்டாம்..நான் வரவேற்கிறேன்..”

“ஏண்டா..நாந்தானே எல்லா வேலையும் செய்தேன்..என்னப் பிரச்சனை.”

“இல்ல..நீ கருப்புல..வரவேற்கும்போது கொஞ்சம் கலரா இருந்தா நல்லா இருக்கும்னு புரொபசர் நினைக்கிறாரு..”

எனக்கு செருப்பைக் கழட்டி அடித்த மாதிரி இருந்துச்சு..சொன்ன புரபசர் யாருண்ணா, சேட் வீட்டுக்காரரில்ல..நம்ம திண்டுக்கல்லுகாரர்..எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்த எனக்கு ஏன் இந்த தகுதி மட்டும் பறிக்கப்பட்டது..அந்த கேள்விக்கு பதில் கூட நான் நினைத்துப் பார்க்க விரும்பாமல் வீடு சென்றேன்.

கல்லூரி மட்டும் இல்லைண்ணே..இங்க அமெரிக்காவுல நம்ம ஆளுங்ககிட்டயும் இந்த அழுக்கு மனப்பான்னை இருக்குண்ணே..அது ஏனோ தெரியல..அடுத்தவங்க மனசை சாகடிக்கும் குரூரப் புத்தி இயல்பாக வந்து விடுகிறது..இந்த ஊருல கருப்பா உள்ளவங்கெல்லாம் கடின வேலை செய்வதால் கொஞ்சம் ஓங்குதாங்க இருப்பாங்கண்ணே..நம்ம ஆளுங்களுக்கதான் கலர்காரங்களாச்சே..அவர்கள் கண்டு பிடிக்க கூடாது என்று இந்தியிலோ, தமிழிலிலோ கமெண்ட் அடிப்பாயிங்க பாருங்க..யாராவது..கருப்பு இனத்தவர் ரோட்டில் நடந்து போனால் போதும்..

“டே..மச்சான்..கருப்பனுங்க வர்றாங்க..பத்திரமா நடந்துப் போ..அந்த நாயிங்கள நம்ப முடியாது..திருட்டுப் பசங்க..”

நான் அமெரிக்காவில் வந்து இறங்கும்போது, நம்ம பசங்க எனக்கு கிடைத்த முதல் அறிவுரை..”கருப்பனுங்கள நம்பாதே..திருடனுங்க..”

ஏன் இப்படி..திருடனுங்க எல்லாம் கருப்பனுங்கதானா..எனக்கு நம்ம ஆளுங்க புத்திப் பார்த்து மனசே வெறுத்துப் போச்சுண்ணே..அதுல என்னை அவமானப்படுத்த வேண்டுமே..அப்பதானே நம்ம ஆளுங்க மனசு நிறையும்..

யாராவது கருப்பு இனத்தவர் நடந்து வந்தால் போதும், குரூர புத்தி வந்து விடும்..

“ராசா..என்ன உன் இனத்து ஆளுங்க வர்ராயிங்க..எதுவும் மாநாடு போடுறீங்களா..பார்த்துடா உங்க கலரப் பார்த்து, ஆப்பிரிக்கா காட்டுல உள்ள மிருகங்கெளெல்லாம் பயந்துடப் போகுது..”

நான் சிரித்துக் கொள்வேன்..என்ன செய்ய..உன் மனதில் உள்ள மிருகத்தை விட ஆப்பிரிக்கா காட்டில் உள்ளது எவ்வளவோ மேல்..

இப்படித்தான் இங்கு உள்ள ஒரு நண்பனுக்கு கருப்பர்கள் என்றாலே ஒரு அலர்ஜி..அவர்களைக் கண்டாலே இந்தியிலே திட்டுவான்..ஒரு முறை நான் அவனுடன் தூரப்பயணம் மேற்கொண்டிருந்த போது நாங்கள் சென்ற கார் ஒரு கம்பத்தில் மோதி நிலை குலைந்தது..எனக்கு சின்ன அடி..அவனுக்கு சரியான அடி….கையிலுள்ள தோல் கிழிந்து ரத்தம் ஓடுகிறது..எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..911 க்கு கால் பண்ணலாம் என்று பார்த்தால் விழுந்த வேகத்தில் செல்போன் வேலை செய்யவில்லை..என்னாலும் நடக்க முடியவில்லை..இரவாகியதால் யாரும் அந்தப் பக்கம் நடந்துகூட வரவில்லை..

இன்னும் கொஞ்ச நேரம் போனால் என் நண்பனின் கதியை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை..அந்த நேரம் பார்த்து என் நண்பன் “ஆப்பிரிக்க மிருகம்” என்று அழைக்கும் கருப்பினத்தவர்(26 வயது இருக்கும்) நடந்து வந்து கொண்டிருந்தான்..பார்த்தவுடனே பதறிப் போய்விட்டான்னே..தன்னோட இரண்டு கைகளிலாலும் என் நண்பனை தூக்கிக் கொண்டு அப்படியே ஓடுறான்னே..பக்கத்தில்தான் ஆஸ்பத்திரி உள்ளதாம்..அப்படியே என் நண்பன் உடம்பில் உள்ள ரத்தம் முழுக்க அந்தக் கருப்பன் மீது..என் நண்பனைக் காப்பாற்றி விடவேண்டுமென்று வெறி..

“பிரதர்..டோண்ட் வொர்ரி..என்னைக் கெட்டியாக பிடித்துக் கொள்..நான் உன்னை எப்படியும் காப்பாற்றி விடுவேன்..”

நானும் அவன் கூட ஓடுறேன்னே..அப்படியே அவன் குழந்தையத் தூக்கிட்டு ஓடுற மாதிரி இருந்துச்சு..அவன் என் நண்பனை தூக்கிக் கொண்டு ஓடும்போது காலணி கழன்று விழ, அதைப் பற்றி கவலைப்படாமல் கல்லு, மண் பார்க்காம ஓடுனான் பாருங்க..தெய்வம்னே..

மருத்துவமனை அடைந்தப் போதுதான், எனக்கு மூச்சே வந்தது..என் நண்பனை ஆஸ்பத்திரியில் அனுமதித்து கிளம்ப எத்தனித்தான்..என் நண்பன் அவன் கையப் பிடித்துக் கொண்டான்..

“ரொம்ப நன்றி சார்..நீங்க இல்லையின்னா நான் இறந்திருப்பேன்..”

“ஹே..கம் ஆன் மேன்……நாமெல்லாம் மனுசங்கதானே..”

அவனை அப்போதுதான் பார்த்தேன் அவன் உடம்பெல்லாம் என் நண்பனின் ரத்தம்..சட்டை கிழிந்திருந்தது..காலணி கழண்டு விழுந்தும் கல் மண் பார்க்காமல் ஓடியதால் அவன் பாதங்களில் ஒரு கல் கிழித்து சிறிது ரத்தம் வந்தது..அவனுடைய ரத்தமும், என் நண்பனுடைய ரத்தமும் ஒரே கலருதாண்ணே..


Thursday 6 August, 2009

சாரு - விஜய் டீவி - நீயா நானா

போன வாரம் நெட்டில் ஆனந்த விகடன் “மேய்ந்து(நன்றி லக்கி)” கொண்டிருந்த போது எதேச்சையாக கண்ணில் பட்டது அந்தப் பக்கம்..சாரு விஜய் டீ.வி யை வாரு, வாருன்னு வாரியிருந்தார் அவர் கலந்து கொண்ட “நீயா, நானா” ஷோவுக்கு பணம் வரவில்லையென்று....கொஞ்சம் மோரு சாப்பிட்டுக் கொண்டு(ஒன்னுமில்லண்ணே..காமெடிக்காக குறள் டீ.வி பார்க்கிறேன்), ஆராய்ந்து படித்த போதுதான் தெரிந்தது..தப்பு யார் பக்கம் என்று..

யாருய்யா அது சாரு யாருன்னு பின்னூட்டம் போடுறது..தினமும் ஒரு லட்சம் வாசகர்கள் படிக்கும்(ஹிட் கவுண்டர்..நானும் மாத்தனும்னே..30,000 தான் காமிக்குது..) சைட்டுக்கு சொந்தக்காரர்னே..அவரோட சைட்டுக்கு ஒரு நாளைக்குப் போனால் டெய்லி அவரைப் படிக்கும் வியாதி உங்களைத் தொத்திக் கொள்ளும்..ஒன்று அவரைத் திட்டுவதற்கு, மற்றொன்னு அவரை சிலாகிப்பதற்கு..நான் முதல் வகையறா..

என்னதான் அவரைப் பிடிக்கவில்லையென்றாலும் தப்பு விஜய் டீ.வி பக்கம்தான் இருக்கிறது என்பது என்னோட கருத்து..முதலில் அவரைக் கூப்பிடுவதற்கு முன்னால் தெளிவாக சொல்லி இருக்க வேண்டும்..பேமண்ட் கொடுப்பார்களா, இல்லையென்று..மற்றொன்று அலைக்கழிப்பது..இவ்வளவு பெரிய ஸ்டார் குழுமத்தின் சானல் ஒன்று, ஒரு மனிதரை பணத்துக்காக இவ்வளவு அலைக்கழித்திருக்க வேண்டாம்..அவரை கூப்பிட்டு அவமானப்படுத்துதல் போல இருந்தது..கோபிநாத்தும், அந்த நிகழ்ச்சியின் டெக்னீசியனும் சும்மாவா வேலைப் பார்க்கிறார்கள்..அல்லது அந்த நிகழ்ச்சியின் ஸ்பான்சர்களுக்கு இலவசமாகவா விளம்பரம் தருகிறார்கள்..

மற்றொன்று நேரம் தவறியது..விஜய் டீ.வியின் நேர ஒழுங்கு பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கிறேன்..ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அத்தனை பேரையும் இரவு 12 மணி வரைக் காக்க வைத்திருக்கிறார்கள்..ஏன் இப்படி..பங்கேற்பாளர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா..

என்னுடைய நண்பன் ஒரு வருடத்துக்கு முன்னால் இந்த ஷோவுக்கு போய் இருந்தான்..ஷோ முடிந்து வீட்டுக்கு வந்தவன் வாய் விட்டு கதறியது இன்னும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது..தெரிந்தவர்கள் யாரோ, அவர்களுக்கு மட்டுமே பேச வாய்ப்பு கொடுக்கிறார்கள்..அப்படி யாரிடமாவது மைக் போய் விட்டால்., மைக் கனெக்சனை கட் பண்ணி விடுகிறார்கள்..என் நண்பன் போய் அமைப்பாளரிடம் கேட்டதற்கு வந்த பதில்..”பிடிச்சிருந்தா இரு..இல்லைனா நடையைக் கட்டுக்கிட்டே இரு..”,

அப்புறம் அந்தக் கூட்டத்தில் யார் சென்டிமென்டான ஆளு என்று அடையாளம் பார்த்துக் கொள்கிறார்கள்..அவர்களை அதிகம் பேச வைத்து, அழ வைத்து..அதை டிரெய்லர் வேறு போட்டுக் கொள்கிறார்கள்..என் நண்பன் அந்த நிகழ்ச்சிக்காக நன்றாக தயார் பண்ணி இருந்தாலும் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை..என்னக் கொடுமை இது...சமுதாயத்தில் நடக்கும் நியாய அநியாயங்களை “நீயா நானா” வில் அலசுவதாக சொல்கிறார்கள்..இந்த அநியாயத்தையும் அலசுவார்களா..அது எப்படி..விளம்பரதாரர், டீ.ஆர்.பி ரேட்டிங்க் வேண்டுமே.

அது சரி, இப்பேர்பட்ட நிகழ்ச்சியில் சாரு, ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறீர்களா..அதுதான் அவரே சொல்லி விட்டாரே..”எனக்கு சினிமாவில் தலைகாட்ட ஆசை..சரி அதுக்கு முன்னாடி டீ.வியிலவாவது தலை காட்டலாமே என்று ஒரு நப்பாசைதான்..”

என்னத்தைச் சொல்லண்ணே..நீங்க என்ன நினைக்கிறீங்க..யாரு மேலத் தப்பு?? பின்னூட்டம் போடுங்கண்ணே..ஒருவேளை இதையெல்லாம் பார்க்குற நம்ம மேல இருக்குமோ??

Tuesday 4 August, 2009

பதிவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை

போன வாரம் என்னுடைய நண்பர் ஒருவரை ஒரு ஹோட்டலில் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. நண்பரும் ஒரு பதிவர்தான்..புதிதாக திருமணம் ஆனவர்..மனைவியுடன் ஹோட்டலுக்கு சாப்பிட வந்திருந்தார்..பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தோம்..அவருடைய மனைவி நம்ம ஊருப்பக்கம்..அவர் மனைவியுடைய உறவினர்கள் பற்றி விசாரிக்கும் போதுதான் தெரிந்தது, எனக்கு தூரத்து சொந்தம். தங்கை முறை வந்தது..நண்பருக்கு அவசரமாக போன் வந்ததால் எழுந்து வெளியே சென்று பேசிக் கொண்டிருந்தார்..உறவினர் என்பதால் நலம் விசாரிப்பதற்காக கேட்டேன்..

“என்னம்மா..திருமணம் மற்றும் அமெரிக்க வாழ்க்கை எப்படி இருக்கு..”

அவரிடம் எந்த பதிலும் வரவில்லை..எனக்கும் என் மனைவிக்கும் அதிர்ச்சியாகிவிட்டது..என் மனைவி கொஞ்சம் அருகில் சென்று கேட்டாள்..

“என்னக்கா..எதுவும் பிரச்சனையா..?”

அவ்வளவுதான்..அந்த பெண் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிக்கவே எனக்கு தூக்கி வாரிப் போட்டது..இதற்கு மேல் கேட்பது நாகரிகம் இல்லாததால் நான் ஒன்றும் பேசவில்லை..ஒரு வழியாய் அழுகையை நிறுத்தி விட்டு தொடர்ந்தார்..

“அண்ணா..ஏண்டா திருமணம் செஞ்சோம்னு இருக்கு..எப்ப பார்த்தாலும் ப்ளாக்,ப்ளாக்தான்….இரவில் 2 மணி வரைக்கும் ப்ளாக் எழுதுறார்..தினமும் ஒரு பதிவு..காலையில் எழுந்தவுடனே பல் கூட விளக்குவதில்லை..தனக்கு எத்தனை ஓட்டு மற்றும் ஹிட்ஸ் வந்திருக்கு என்று பார்க்கிறார்..யாராவது பின்னூட்டம் இட்டால் அதற்கு கமெண்ட்ஸ் எழுதுகிறார்..ஆபிஸ் செல்கிறார்..இரவு 6 மணிக்கு வருகிறார்..திரும்பவும் எல்லாரோட பதிவுகளை படிக்க ஆரம்பிக்கிறார்..திரும்பவும் பதிவு எழுதல்..என்ன வாழ்க்கைண்ணே..அப்புறம் எதுக்கு என்னைத் திருமணம் செய்துக்கணும்..நான் வீட்டில் ஒரு விருந்தினர் போலக் கூட இல்லை..ஒரு பொம்மை போல் இருக்கிறேன்….ஒரு நாய்குட்டி வளர்த்தாக் கூட அதுகூட கொஞ்சம் நேரம் செலவழிப்போம்ணே..அது போலக் கூட நான் வீட்டில் இல்லைண்ணே..எனக்கும் மனசு இருக்குலண்ணே..யாரோ கண்ணுக்கு தெரியாதா நாலுபேர் பாராட்டுக்காகவும், வாழ்த்துக்காகவும் பல மணி நேரத்தை செலவழிக்கும் அவர், கண்ணுக்கு நேரா அவருக்காகவே வாழ்ந்துக்கிட்டு இருக்குற ஒரு உயிருள்ள மனுசியோட ஒருமணி நேரம் செலவழிக்க முடியாதாண்ணே..அவருக்காகத்தானே எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன்..ஏண்ணே..அவர் எனக்காக நேரம் செலவழிக்கணும்னு நான் கேக்குறது தப்பாண்ணே..நானும் மனுசிதானண்ணே..”

என்னால எதுவும் பேச முடியவில்லைண்ணே..

“ஏம்மா..அவன் கிட்ட இது பத்தி சொல்லி இருக்கலாமே..”

“இல்லை அண்ணா..எதுவும் தப்பா நினைச்சுக்கிறுவாரோன்னு பயமா இருக்கு..”

என் நண்பனை தனியே கூப்பிட்டு விவரம் சொன்னவுடனே அதிர்ந்து விட்டான்..

“ராசா..என்னடா சொல்லுற..இது எனக்கு தெரியவே தெரியாதுடா..அவ ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்டா..நான் பதிவு எழுதுறதை அவ ரசிக்குறான்னுல நினைச்சுக்கிட்டு இருந்தேன்..சே..அவ மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்..பாவிடா நான்..”

அண்ணே..இது சொல்லுறதுனால நீங்க என்னைத் திட்டுனாலும் பரவாயில்லை..அல்லது இதை 10001 அறிவுரையாகவோ ஆலோசனையாகவே எடுத்துக்கிட்டாலும் பரவாயில்லை..கீழே உள்ளதை மட்டும் பதிவை படிச்சு முடிச்சவுடனே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க..

1) பதிவு எழுதுவதை பொழுதுபோக்காக மட்டுமே வைத்து இருங்கள்..அதுவே வாழ்க்கை இல்லை..

2) தினமும் ஒரு பதிவு போட வேண்டிய அவசியம் இல்லை..தினமும் பதிவு எழுதுவதால், உங்களுக்கும் எதுவும் கின்னஸ் அவார்டு கொடுக்கப் போவதில்லை..

3) உங்களுடைய தனிப்பட்ட மற்றும் அலுவலக வாழ்க்கை மிகவும் முக்கியம்..பதிவுலக நேரம் அந்த வாழ்க்கையை தின்று விட அனுமதிக்காதீர்கள்

4) வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் எதுவும் சொல்லவில்லை என்று நினைக்காதிர்கள்..அவர்கள் உள்ளே புழுங்கி கொண்டிருக்கலாம்..ஒருநாள் வெடித்து தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கலாம்

5) முடிந்த வரை, அலுவலகத்தில் பதிவு எழுதுவதையோ, கமெண்ட் போடுவதையோ நிறுத்துங்கள்..எவ்வளவோ பேர் வேலைக்காக க்யூவில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கால்கடுக்க நிற்கிறார்கள்..நமக்கு ஒரு வேலை கொடுத்து, நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்..பதிவு திறக்கும்முன் ஒரு கணம் உங்களை அந்த கம்பெனியின் முதலாளியாக நினைத்துப் பாருங்கள்..அப்புறம் தெரியும்..

6) முகம் தெரியாத நண்பர்களின் பாராட்டுகளுக்கு நேரம் செலவழிக்க ஆசைப்பட்டு நமக்காக வாழ்ந்து கொண்டு இருக்கும் உறவுகளை இழந்து விடாதிர்கள்

7) உங்களுக்கு உள்ள அதிகப்படியான நேரத்தை மட்டுமே பதிவுலகத்தில் செலவழியுங்கள்..உங்கள் பெற்றோர் , மற்றும் குழ்ந்தையின் சிரிப்பைக் காட்டிலும் பதிவு முக்கியமில்லை..ஒரு வாரம் முழுவதும் உங்கள் தனிப்பட்ட, மற்றும் அலுவலக நேரம் தவிர எதுவும் கிடைக்கவில்லையென்றால், கவலைப்பட வேண்டாம்..நீங்கள் பதிவுலம் பக்கம் வரவில்லையென்று யாரும் சாப்பிடாமலோ, ஸ்டிரைக் பண்ணப் போவதில்லை..அவரவருக்கு சொந்த வாழ்க்கை உள்ளது..

8) பதிவுலகம் ஒரு போதை என்று சொல்லி தப்பிக்க வேண்டாம்..போதை என்றால் அதற்கு அடிமையாவது நம்முடைய தவறு….ஒவ்வொருவருடைய உயர்வுக்கும், தாழ்வுக்கும் அவரே பொறுப்பு..தவிர பதிவுலகம் உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை..

ஏதோ மனசுக்கு பட்டது சொன்னேன்னே..என் நண்பனுக்கு நடந்தது போல் நம்மில் யாருக்கும்…..இருங்கண்ணே., ஏதோ போன் கால் வருது..ஊருல இருந்து அம்மாண்ணே..அவிங்கதான் முக்கியம்..