Sunday 27 June, 2010

விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் - பிரேம் கோபால்

எனக்கு நடனத்தின் மீது தனி ஈடுபாடு உண்டு. நாம்தான் ஆட முடியவில்லையே, அடுத்தவர் ஆடுவதையாவது பார்ப்போம் என்ற ஆவல்தான். நடனத்தின் மூலம் கொண்டு வரமுடியாத உணர்வுகளே இல்லை. கோபம், அழுகை, தாபம், பொறாமை..என்று பல. சிலநேரம் நடனம் ஆடுபவர்களை பார்த்து பொறாமையாக இருக்கும். அற்புதமான கலை அவர்களுக்கு அநாயசமாக வருவதால். நடனம் கற்றுக் கொள்வது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. நீங்கள் நடனம் கற்றுக் கொள்ளும் முன்பு யாரையாவது காதலித்தால் முதலில் அந்த காதலியை தள்ளி வைக்க வேண்டும்(ஊர விட்டு தள்ளி வைக்கிறோம்லே..). ஏனென்றால் உங்களுக்கு முதல் காதலியாய் இருக்கப்போவது நடனம்தான்.

எனக்கும் சிறு வயதில் இருந்தே, நடனம் ஆட ஆசைதான். அதுவும் கிளாசிகல் டான்ஸ் ஆட..இந்த பதிவில் பக்கத்தில் உள்ள என் படத்தை பாருங்கள்..நான் பரதநாட்டியம் ஆடினால் எப்படி இருக்கும்..காமெடியாக இருக்குமல்லவா..ஆனால் அப்போதெல்ல்லாம் நான் வெட்கப்படவில்லை. எப்படியாவது கிளாசிகல் டான்ஸ் ஆடியே தீரவேண்டும் என்பதால் என் அம்மாவை நச்சரித்தேன். என் தொந்தரவு தாங்க மாட்டாமல் எங்கள் ஊர் அக்ரஹாரத்தில் உள்ள டான்ஸ் டீச்சரிடம் சேர்த்து விட்டார்கள்.

அங்கு கிடைத்த வரவேற்பை எழுத ஆரம்பித்தால் பதிவர் டோண்டு தேடி வந்து அடிப்பார் என்பதால், சுருக்கமாக “எனக்கு டான்ஸ் வரவில்லை…” என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். கமல் பாணியில் சொல்லப்போனால், இன்னும் காளிவரம் கொடுக்கவில்லை என்பதோடு என்னை தேற்றிக் கொண்டேன்.

எனக்கும் டான்ஸ் ஆட வாய்ப்பு வந்தது பள்ளி நாட்களில். என்னுடைய பள்ளியில் ஆண்டுவிழாவுக்காக கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். என்னுடைய வகுப்பினில் இருந்து டான்ஸ் நிகழ்ச்சி. வழக்கம் போல் நான் ஒதுங்கியே நிற்கவே சனியன் சடை போட்டு இழுத்தது. முதல் வரிசையில் ஆடும் ஒரு பையனுக்கு உடம்பு சரியில்லாததால் என்னை அழைத்தார்கள். நானும் வேறு வழியில்லாமல் கலந்து கொள்ள வேண்டியாதாக ஆயிற்று. அதுவும் ஏதோ ஒரு ஆனந்தபாபு பாட்டுக்கு. நம்ம ரேஞ்சுக்கு ஒரு மைக் மோகன் பாட்டைக் கொடுத்தால், கரும்பு கடிப்பது மாதிரி மைக்கை பிடித்துக் கொண்டு தலையை ஒரு லெப்ட் ரைட் ஆட்டிவிட்டு போகலாம். அல்லது பாக்யராஜ் பாட்டை போட்டால், காலையில் எழுந்து எக்ஸர்சைஸ் பண்ணி விட்டு போகலாம். ஆனந்தபாபு பொதுவாக நடப்பதே, ஒரு மாதிரி டான்ஸ் மாதிரிதான் நடப்பார். கலங்கி போனேன்.

ஆனாலும் வெட்கப்படாமல் பிராக்டிஸ் செய்தேன். ஒருவழியாக மூன்று முறை ஒத்திகை பார்த்து, மேடைக்கு சென்றாகிவிட்டது. டான்ஸ் மூவ்மெண்டுகளில் கவனம் செய்த நான் உடையில் கவனம் செலுத்தாதது அன்று நான் செய்த ஒரே தவறு. முதல் வரிசையில் ஆடும் பையன் கொஞ்சம் குண்டாக இருந்ததால் அவனுக்குரிய உடையை கொடுத்திருந்தார்கள். குண்டு கல்யாணம் போடவேண்டிய பேண்டை ஓமக்குச்சி போட்டால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது. பெல்ட் போட்டாலும் இடுப்பில் நிற்கவில்லை. பேண்ட் சுத்தமாக இடுப்பில் என்ன, முழங்காலில் கூட நிற்கவில்லை.

அலறியே போனேன். ஆடமுடியாது என்று தகராறு செய்தேன். ஆசிரியர் மிரட்டலால் வேறு வழியில்லாமல், ஒரு கையால் அவிழ்ந்து விழும் பேண்டை பிடித்துக் கொண்டு ஒரு கையால் டான்ஸ் மூவ்மெண்டுகள் கொடுக்கவேண்டும். ஒரு வழியாக சமாளித்து ஆடிக்கொண்டிருந்தேன். பாடலில் ஒரு வரி வரும்..”பச்சை பசேலென்று குலுங்கும் சோலைகள்..” அந்த வரிக்கு ரெண்டு கையை தூக்கி ஆடவேண்டும். மறதியில் இரண்டு கைகளையும் தூக்கவே, அவ்வளவுதான்..அதற்கு முந்திய வாரம்தான், அப்பாவிடம் சண்டை போட்டு காசு வாங்கி இரண்டு உள்ளாடைகள் கடையில் வாங்கியிருந்தேன். அவைகள்தான் பலபேர்களின் கண்களையும், என்னுடைய மானத்தையும் காப்பாற்றியது.

அந்த நிகழ்ச்சிக்கு அப்பால், நான் எந்த டான்ஸ் ஆட்டத்திற்கும் போவதில்லை. ஆனாலும் ஏதாவது ஒரு டான்ஸ் ஷோ என்றால், பர்கர் கூட சாப்பிடாமல் பார்ப்பேன். அப்படி நான் வாரம்தோறும் பார்க்கும் நிகழ்ச்சிதான் விஜய் டீவியின் ஜோடி நம்பர் ஒன். சிலநேரம் அங்கு நடக்கும் டிராமாக்கள் என்னதான் கடுப்பேத்தினாலும், பங்குபெறுபவர்களின் திறமையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

அதில் கலந்து கொள்பவர்களில் என்னைக் கவர்ந்தவர், பிரேம் கோபால். யப்பா..என்ன திறமை. என்ன நளினம். என்ன அசைவுகள். நடனத்தை வெறியுடன் காதலிக்கும் ஒருவனால் மட்டுமே இது போல ஆட முடியும். போன வெள்ளிக்கிழமை விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்காக பிரேமினியுடன் சேர்ந்து ஒரு ஆட்டம் போட்டிருப்பார் பாருங்கள். அவர் ஆட்டத்திற்கு நான் ஆடிப்போனேன். என்ன ஒரு ஆட்டம். ஒவ்வொரு நரம்பும் டான்ஸ் ஆடியது. போன முறை ஈழ்த்தமிழர்கள் பாடும் அவதியை ஒரு நடனத்தில் கொண்டு வந்து எல்லோரையும் கலங்க வைத்த இவர் ஒரு ஈழத்தமிழர். அந்த நடனத்தை பார்த்தபோது அன்று இரவு சாப்பாடு சாப்பிடமிடியவில்லை. என்ன ஒரு வீச்சு. பல குறும்படங்கள் சொன்ன கருத்தை ஒரே நடனத்தில் கொண்டு வந்த அற்புத கலைஞன். ஆனாலும் கண்டிப்பாக அவர் பைனலில் ஜெயிக்க மாட்டார். ஏனென்றால் மக்கள் வாக்கெடுப்பு ஒன்று நடத்துவார்கள். முடிவாக தேர்ந்தெடுக்கப்பட போகிறவர், விஜய் டிவியின் செல்லப்பிள்ளை திவ்யதர்சினி.

பிரேம் கோபாலின் அந்த வெள்ளிக்கிழமை நடனத்தைப் பார்க்க கீழ்கண்ட லிங்கை கிளிக்கவும்.

http://www.youtube.com/watch?v=OrUnS8vLsFE

அவரின் ஈழம் சம்பந்தப்பட்ட நடனத்தைப் பார்க்க இங்கு கிளிக்கவும்.

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

Saturday 19 June, 2010

ராவண் - பொகுத் அச்சா ஹே.


பொதுவாக நான் ஹிந்தி படங்கள் பார்ப்பதில்லை. திராவிட பராம்பரியத்தில் இருந்து வந்தவன் என்பதற்காகவெல்லாம் இல்லை. மொழி தெரியாமல், டவுசர் கிழிந்து விடும் என்பதால்(வாழ்க திராவிட பாரம்பரியம்)... ஹிந்திக்கும் எனக்கும் புளோரிடாவுக்கும், கலிபோர்னியாவுக்கும்..சரி..விடுங்க..சோழவந்தானுக்கும், ஆட்டையாம்பட்டிக்கும் உள்ள தூரம்... கல்லூரியில் படிக்கும் போது சேட்டு பிகர்களை பார்ப்பதற்காக
ஷெனாய் மாதிரி டிரஸ் பண்ணிக்கொண்டு "எக்ஸ்கியூஸ்மி..குச்சு, குச்சு ஹோத்தா ஹே என்று சொல்ல நினைத்து டங்க் ஸ்லிப் ஆகி கெட்ட வார்த்தையாகி வாங்கி கட்டிக்கொண்ட அனுபவங்கள் உண்டு. இன்னும் நம்பவில்லையென்றால், இந்த பதிவின் தலைப்பைப் பார்த்தாலே புரிந்திருக்கும்.

இங்கு புளோரிடாவில் ராவண் படம் ரிலீஸ் என்ற கேள்விப்பட்டு அவசரமாக சென்றவன் போஸ்டரை பார்த்தவுடன், ரஞ்சிதா இல்லாத நித்தியானந்தம் போல்
ஏமாறறம் அடைந்தேன். இது தமிழ் படம் இல்லை. ஹிந்திப்படம்..சப்டைட்டில் எல்லாம் போடுவார்கள் என்று நண்பர்கள் சொன்னவுடன் தான் நிம்மதியே வந்தது.

இப்போது விமர்சனம். மணிரத்னத்தின் கலியுக ராமாயணம். மணிரத்னத்தின் அந்தக்கால படைப்புகளை கண்டு வியந்திருக்கிறேன். அவரது, தளபதி, மௌனராகம்,
அஞ்சலி, நாயகன் படங்களை பார்த்தபோது, கமர்ஷியல் சாக்கடையிலிருந்து தமிழ்சினிமாவை மீட்டெடுக்க வந்த அவதார புருசனாகவே எனக்கு தெரிந்தார்.
ஆனால் அந்த அவதார புருஷனே "திருடா, திருடா" என்று கமர்ஷியல் சாக்கடையில் விழுந்தபோது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. காம்ப்ரமைஸ் பண்ணாத
அடுத்த படைப்புகளான "பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து." என்று மீண்டு எழுந்தார். இப்போது ராவணன்..சாரி..ராவண்..

ஐஸ்வர்யாராயின் புருசன் அபிஷேக்பச்சன் தான் ராவணன்..ஹி..ஹி..இன்னும் பாதிப்பு போகலை....ஐஸ்வர்ராய்தான் லோகட் வெள்ளுடை அணிந்த சீதை.
நம்ம அந்நியன் அம்பி விக்ரம் தான் வில்லன் ராமன். மரத்திற்கு மரம் தாவும் பாரஸ் ஆபிசர் கோவிந்தாதான் அனுமன்.. கேங்க் ரேப் பண்ணுவதற்காக திரை உலகிற்கு
அர்ப்பணிக்கப்பட்ட பிரியாமணிதான் சூர்ப்பனகை. இப்போது கதை புரிந்திருக்குமே. கரெக்ட்..சூர்ப்பனகையை நாசம் செய்த போலீஸாரை பழிவாங்குவதற்காக
ஐஸை அல்லது ஐஸ்கட்டி போன்ற ஐஸ்வர்யா ராயை(ஏ..அந்த பூரிக்கட்டையை உள்ள வை..எத்தனை தடவை சொல்லுறது..பூரிக்கட்டையை பூரிக்கு மட்டும்
உபயோகிக்கனும்னு..) ராவணன் கடத்தி செல்கிறார். ராவண் நல்லவன் என்பதால் பதினாலு நாட்கள் சுண்டு விரல் கூட படாமல் ராமயணத்தை கட்டிக்காட்கிறார்.
இடையில் அனுமானான கோவிந்தா தூது செல்கிறார். கடைசியில் ராமன் வழக்கம்போல் சீதையை சந்தேகப்பட்டு விட தீக்குளிக்க..சாரி..டீக்குடிக்க செல்வது போல
ராவணனை பார்க்க போகிறார்..அப்போது மறந்திருந்த ராமன் மணிரத்னம் சொல்லியும் கேட்காமல்..பட்..பட்..டிஷ்யூம்..சீதையின் மேல் கொண்ட காதலுடன்
ராவண்...இருங்க..தண்ணி குடிச்சுக்குறேன்..

மணிரத்னத்திற்கு ராமன் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. மசாலா பட வில்லன் ரேஞ்சுக்கு "அவனை வெட்டுங்கடா.." என்பது போல் எடுத்திருக்கிறார்.
அடிக்கடி ராமாயணத்தை நினைவூட்டுவதற்காகவே "பத்து தலை ராவணன்.." மரத்திற்கு மரம் தாவும் அனுமன் என்று வலிய திணித்திருக்கிறார். ஆனால் மனிதர் எடுத்து
கொண்ட கடின உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும். ஒவ்வொரு காட்சியுலும் மணியின் கைவண்ணம் தெரிகிறது. அதுவும் மலை உச்சி, சேறு சகதி என்று உசிரை
கொடுத்து உழைத்திருக்கிறார்கள். இதை போன்று முயற்சிகளை பாராட்டி ஏற்று கொள்ளாவிட்டால், குருவி, வில்லு பார்ட் 2 வந்து உயிரை மொத்தமாக எடுத்து விடும்
அபாயம் உண்டு.

அடுத்து பாராட்டபடவேண்டியர்கள்,கேமிராமேன் சந்தோஷ்சிவன், ஆஸ்கார் தலைவன் ஏ.ஆர் ரகுமான். பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள். அதுவும் இயற்கை கொஞ்சும் அந்த
மலை உச்சி ஷாட்டுகள். தண்ணீருக்குள் ஐஸ்வர்யாராய் ஷாட்டுகள், ஒளிப்பதிவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்கிறது(எங்க செக்கண்ட் புளோருக்கா, என்று கேட்பவர்கள்
சீதையின் சாபம் அடையக் கடவது)..பீரா, பீரா..என்று பாடல் கேட்கும்போது, கோவாலு "இங்க இருக்கு பீரு" என்று பீர்பாட்டிலை காண்பித்தபோது பற்றிக்கொண்டு வந்தது.
ஏ.ஆர் ரகுமான் உலகதரத்தை எப்போதோ அடைந்துவிட்டார் என்பது தெரியும், ஆனால் அதை மெயின்டெயின் பண்ணுகிறார் என்பது இந்த படத்தை பார்த்தால் தெரியும்.
இசை அன்னை நமக்கு கொடுத்த வரம் ஏ.ஆர் ரகுமான்..படம் முடிந்து வரும்போது கோவாலிடம் "கேமிரா சூப்பருல்ல" என்றபோது "என்னடா ராசா..படம் முழுக்க கவனமா
பார்த்தேன் ஒரு எடத்துல கூட கேமிராவை காமிக்கவில்லையே" என்றபோது கோவாலுவின் குழந்தை மனதை கண்டு புளகாகிதாம்..சாரி..புளிகாகிதான்..ஐயோ..புளங்காகிதம்
அடைந்தேன்.

அடுத்து ராவண் அபிஷேக் பச்சன்..பாவம் புள்ள ரொம்ப கஷ்டப்பட்டிருக்கு..சேறு, சகதியுமாக புள்ளைகளை பார்த்தபோது "பாவம்..யாரு பெத்த புள்ளைகளோ" என்று பக்கத்தில்
உக்கார்ந்திருந்த வெள்ளைக்கார தாத்தா பர்கரை மென்று கொண்டு கார்த்திக் குரலில் சொன்னபோது கண்கலங்கியது. அடுத்த பச்சை மண்ணு ஐஸ்வர்யாராய்..புள்ள..
என்னாம நடிச்சிருக்கு..ஆனால் விக்ரம் ஐஸ்வர்யாராயை கட்டிபிடிக்கும்போது அபிஷேக் பச்சனுக்கு வரவேண்டிய புகை, தியேட்டரில் உக்கார்ந்திருந்த எல்லார் காதிலும் வந்ததை
பார்த்தபோது அவருடைய அழகின் வீச்சு தெரிந்தது. இதிலிருந்து ஒரு பயபுள்ளை கூட ஐஸின் நடிப்பை பார்த்திருக்காது(நான் உள்பட) என்பது திண்ணம். விக்ரம் தனக்கு கொடுத்த
வில்லன் கேரக்டரை சரியாக செய்து எல்லாரிடம் வாங்கி கட்டிக்கொண்டார்..ஆனால் மனசாட்சியே இல்லாத அந்த கேரக்டர், மணிரத்னத்தின் குரூர படைப்பு. வழக்கம்போல்
பிரியாமணி, ஷாப்பிங்க் போவது போல கேங்க் ரேப் ஆகி இறந்து போய் பரிதாபத்தை கட்டி கொள்கிறார். கோவிந்தா அடிக்கடி மரத்திற்கு மரம் தாவி தான் அனுமன் என்பதை
நினைவுபடுத்துகிறார்.

ராமாயணத்தை காபி அடித்திருந்தாலும், இது போன்ற படைப்புகள்தான் இந்திய சினிமாவின் ஆணிவேர். இந்திய சினிமாவை வேறு பாதைக்கு எடுத்து செல்ல உதவும் பாலம்.
மணிரத்னத்தின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் ஜொலிக்கிறது. எடுத்து கொண்ட முயற்சிக்காக கண்டிப்பாக பார்த்து பாராட்டவேண்டிய படம்.

முடிவாக ராவண், என்னுடைய இந்தியில் சொல்வதென்றால்,,..."பொகுத் அச்சா ஹே..."

Saturday 5 June, 2010

அறிவிருக்காடா உனக்கு.



உங்களை அறிவிருக்கா என்று யாராவது கேட்டால் உங்களுக்கு கோபம் வரும்தானே. ஆனால் என்னை யாராவது கேட்டால் என் பக்கத்து வீட்டுக்காரர்தான் நினைவுக்கு வருவார். நான் பொதுவாக யாரிடம் ஒட்ட மாட்டேன்(அது மூஞ்சியைப்பாத்தா தெரியுதுண்ணுலாம் சொல்லக்கூடாது). நெரிசல் மிகுந்த அபார்ட்மெண்ட்களில் பக்கத்து வீட்டில் கொலை நடந்தால் கூட பேப்பரைப் பார்த்துதான் தெரிந்து கொள்வோம். சென்னை நரக மன்னிக்கவும் நகர வாழ்க்கை அப்படி.

அப்படி சென்னையில் நான் ஒரு அபார்ட்மெண்டில் வாழ்ந்தபோது..(இந்த இடத்தில் கொசுவர்த்தி சுருள் போட்டுக்கொள்ளவும்..) பக்கத்து வீட்டில் ஒரு மதுரைக்காரர் குடும்பம் குடி வந்தது. நமக்குதான் மதுரைக்காரயிங்கன்னாவே எக்ஸ்ட்ரா பாசமாச்சே.நன்றாக பழக ஆரம்பித்தேன். அவருடைய மனைவியும், என்னுடைய மனைவி ஒரு அசோசியேசன் அமைக்கும் அளவுக்கு நண்பர்களாகிவிட்டார்கள். எனக்கு அவர்கள் வீட்டில் மிகவும் பிடித்தது அவர்களுடைய 2 வயது குழந்தை. குழந்தையைப் பார்த்தால் குற்றம் கூட மறந்து போகும் என்பார்கள். மிகவும் க்யூட்டான குழந்தை. எப்போதும் துறுதுறுவெறுன்று இருக்கும். எனக்கு பொதுவாக
குழந்தைகள் என்றால் சற்று எக்ஸ்ட்ரா பாசம். அதுகளுடைய சிரிப்புதான் எந்த உள்நோக்கமும் இல்லாதது. உலகத்தையே மறக்க வைக்கும் சக்தி உடையது. குழந்தையின் சிரிப்பைப் பார்க்கும்போது எல்லாவற்றையும் மறந்து போவோம்.

நண்பருடைய குழந்தை என் விட்டிற்கு வந்தாலே நான் குஷியாகி விடுவேன். அதனுடன் விளையாடுவதற்கென்றே தனிநேரம் ஒதுக்க ஆரம்பித்தேன்.
முதலில் அக்குழந்தை என்னை பார்க்கும்போது எல்லாக் குழந்தைகளைப்போல பூச்சாண்டி என்று பயந்து அழுதது. அதுக்கப்புறம் இந்த பூச்சாண்டி
பழகிவிட்டது. சிறிது காலங்களில் பக்கத்து வீட்டு நண்பரை விட அந்த குழந்தைதான் எனக்கு சிநேகிதமாகி போய்விட்டது.

நண்பர் மிகவும் மரியாதைக்குரியவர்..என்னை "பாஸ்..வாங்க பாஸ்.." என்றுதான் அழைப்பார். கொஞ்சம் மொட்டைபாஸ் போன்று எண்ணம் அளித்தாலும்
நான் ஒன்றும் சொல்வதில்லை. மனிதர்களை எப்படி அழைத்தால்தான் என்ன. மரியாதை மனதில் இருந்தால் போதும். நானும் அவ்விதமே அவரிடம் பழகுவேன்.

அந்த நாளை என்னால் மறக்கமுடியாது. அக்குழந்தை தவழ்ந்து , தவழ்ந்து என் வீட்டிற்கு வந்தது. பொதுவாக என் நண்பர்தான் தூக்கி வருவார். வீட்டை எட்டி பார்த்தேன். யாரும் இல்லை.
ஒருவேளை வேலையாய் இருக்குமோ என எண்ணிக்கொண்டேன். சிறிதுநேரம் அதனுடன் விளையாட ஆரம்பித்தேன். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. குழ்ந்தை வீல் என்று அழுக ஆரம்பித்தது. எப்போதும் சிரித்து கொண்டே இருக்கும் அக்குழந்தை அழுது அப்போதுதான் பார்க்கிறேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சிரிக்கும் குழந்தையிடம் விளையாட மட்டுமே தெரிந்த எனக்கு அழும் குழந்தையை சமாளிக்க முடியவில்லை நானும் என்ன என்னமோ செய்து பார்க்கிறேன். முடியவில்லை. அன்று பார்த்து என் மனைவி கூட வீட்டில் இல்லை. குழந்தையை தூக்கிக் கொண்டு பக்கத்தில் உள்ள கடைக்கு ஓடினேன். என் நேரத்திற்கு எல்லா கடையும் அடைத்திருந்தது. கொஞ்சம் தூரமாக உள்ள கடைக்கு ஓடிச்சென்று ஒரு சின்ன பொம்மை மற்றும், ஒரு சிறிய பிஸ்கட் வாங்கி கொடுத்தவுடன் தான் குழந்தையிம் அழுகை அடங்கியது.

நிம்மதியாக வீடுநோக்கி வருகிறேன். வீடு அல்லோல்கல்லோல் பட்டிருந்தது. நண்பர் குழந்தையைத் தேடி அலைந்திருப்பார் போல். என்னுடைய வீடி முழுவதும் தேடியிருக்கிறார். இல்லை என்றவுடன் மிகவும் டென்சனானது முகத்தில் தெரிந்தது. ஓடி வந்து என் கையில் உள்ள குழந்தையை வாங்கி இல்லை, பிடிங்கி கொண்டார். அவருடைய முகம் கோபத்தில் சிவந்திருந்தது,கோபத்தில் அவர் முகம் மட்டுமல்ல உடம்பு முழுக்க வேர்த்திருந்தது. அவரை இந்த கோலத்தில் இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். எப்போதும் பாஸ் பாஸ் என்று அழைக்கும் அவர் முதல்முறையாக கத்தினார்

"அறிவிருக்காடா உனக்கு.."

நான் உண்மையிலேயே இதை எதிர்பார்க்கவில்லை. நண்பரிடம் நிறைய தடவை பேசியிருக்கிறேன். அவர் பாஸ், பாஸ் என்று அழைப்பதைப் பார்த்து கூச்சமாக "நமக்குள்ள என்ன பிரண்ட்..வாடா, போடான்னே கூப்பிடலாமே.." என்றேன். "போங்க பாஸ்..உங்களைப்போயி.." என்று சிரிப்பார்..அவரா இப்படி..என்னால் நம்ப முடியவில்லை..

"ஹே..இல்லை..குழந்தை அழுதது. என்ன பண்றதுன்னு தெரியலை..பக்கத்தில் உள்ள கடைக்கு கூட்டிக்கிட்டு போய்.."
"அதுக்கு..எங்க வேணுன்னாலும் தூக்கிட்டு போயிருவியா..பெத்தவங்க நாங்க எதுக்கு இருக்கோம்..என்னை வந்து கூப்பிட்டயா.."
"இல்லை..உங்க வீட்டில யாரும் இல்லை.."
"இல்லைன்னா காலிங்க் பெல்லாவது அடிச்சிருக்கலாமில்ல.."
"பதட்டத்துல தோணலை..பிரண்ட்.."
"போடாங்க..நீயெல்லாம் ஒரு மனுசனா..ஒரு நிமிசத்துல என் செல்லம் இல்லாம நான் தவிச்சிப் போயிட்டேன் தெரியுமா.."

அவர் கண்கள் கலங்கியது. அப்பா பாசம்....முதல்முறையாக அவர் கண்களில் கண்ணீரைப் பார்க்கிறேன்..குழந்தையை எடுத்து அப்படி உச்சிமோர்ந்தார்..அப்படியே நெஞ்சோடு அணைத்து
கொண்டார்.."என் தங்கமில்ல..அப்பாவை விட்டுட்டு எங்கடா போயிட்ட.." சின்ன பிள்ளை போல அழ ஆரம்பித்தார்..குழந்தையை கொஞ்சிக்கொண்டே வீட்டிற்குள் சென்று படார் என்று கதவை
சாத்தினார்..என்னை யாரோ செருப்பால் அறைந்தது போல்

மெதுவாக வீடு நோக்கி சென்று அமர்ந்தேன். என் செல்பேசி அழைக்கும் சத்தம் கேட்டது. அவசரமாக சென்று எடுத்தேன்..

"அப்பா காலிங்க்" என்று இருந்தது..

"ராசா..எப்படிடா இருக்க.."
"ம்..நல்லா இருக்கேன்.."
"அப்ப ஒரு கால் பண்ணினேன்..யாருமே எடுக்கலை.."
"இல்லை..வெளியே போய் இருந்தேன்.."
"சரி சொல்லு..விசா இண்டெர்வியூக்கு போறேன்னு சொன்னியே...என்ன ஆச்சு.."

குரலில் கவலை தெரிந்தது.

"கிடைச்சிருச்சுப்பா..அடுத்த வாரத்தில் அமெரிக்கா கிளம்புறேன்.."

அவ்வளவுதான் எதிர்முனையில் சத்தமே இல்லை. பலத்த மௌனம்..இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை போலும்..

"அப்பா..அப்பா..ஹலோ..ஹலோ.."

இன்னும் மௌனம்..சிறிது நேரம் கழித்து பேசினார்கள்..

"நான் வேணுமின்னா கேன்சல் பண்ணிடவாப்பா...."

வார்த்தைகள் அவசரமாக வந்து விழுந்தன..

"அறிவிருக்காடா உனக்கு.."



Wednesday 2 June, 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார கசப்பு

வேறு என்ன பதிவுலகம்தான். கடந்த ஒரு வாரமாக பயங்கர அடிதடி..பதிவுலகம் அமைதியாக இருக்க நாம் பிரார்த்தனை..யோவ்..யாருய்யா பேசிக்கிட்டு இருக்கும்போது கல்லைக் கொண்டி எறியுறது…என்னது நான் அல்லக்கையா..நீதான்யா அல்லக்கை..நோ..நோ..நோ பேட் வேர்ட்ஸ்….நோ…ஒன்லி பூட்ஸ்..யூ மீன்ஸ் வேஸ்ட்லேண்ட்….ஓ காட்..ஹே….மை இமேஜ் டோட்டல் டேமேஜ்..மீ பதிவர் நோ..ஐ கம் ஜஸ்ட் பார் பொழுதுபோக்கிங்….மீ கோ..பதிவர் கம்ஸ்..

இந்த வார சிரிப்பு

வேறு யாரு..சாரு நிவேதிதாதான்..போன வாரம் நீயா நானாவில் சாருவைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. வேறு வழியில்லாமல் மன்னிப்புக்கேட்டார்..அல்லது மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார்..நான் ஏற்கனவே சொல்லியபடி, நீயா நானா, நிகழ்ச்சி, ஜோடிக்கப்பட்ட ஒன்று. என் நண்பர்கள் பலர் அதில் கலந்து கொண்ட அனுபவம் ஒன்று. அதை நடத்துபவர் கீ கொடுக்கப்பட்ட ஒரு பொம்மை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். யாராவது மாட்டினால் அழவைத்துவிட்டு அதை அடிக்கடி டிரெயிலரில் போட்டு நிகழ்ச்சியைப் பிரபலபடுத்திவிடுவார்கள். சாரு அதில் மாட்டிக்கொண்டது துரதிருஷ்டம்தான்.

இந்த வார துணைநடிகர்கள்

எதேச்சையாக விஜய் டீ.வி அவார்ட்ஸ் பார்க்கநேர்ந்தது. போனவருடம் சிறந்த நடிகர்களை விட சிறந்த துணை நடிகர்களே அதிகம். என்னை மிகவும் கவர்ந்தவர்களும் அவர்களே. அதிலும், நாடோடிகள் படத்தில் வரும் காதுகேட்காத கேரக்டரில் வரும் பரணி, சிறந்த கண்டுபிடிப்பு. கலக்கியிருப்பார். நான் கடவுளில் வரும் அனைத்து கேரக்டர்களின் நடிப்பும் சிறப்பு. ரேணிகுண்டாவில் வரும் அந்த சிறுவனின் நடிப்பும் பிரமாதம். என்னை விருது கொடுக்க சொன்னால் கீழ்கண்டவாறுதான் கொடுப்பேன்.

1. சிறந்த நடிகர் – ஆர்யா(நான் கடவுள்)

2. சிறந்த நடிகை – பூஜா(நான் கடவுள்)

3. சிறந்த புதுமுக நடிகை – அனன்யா(நாடோடிகள்)

4. சிறந்த கேமிராமேன் – ஈரம் படத்தின் கேமிராமேன்

5. சிறந்த புதுமுக நடிகர் – விமல்(பசங்க)

6. சிறந்த டைரக்டர் – பாண்டியராஜ்(பசங்க)

7. சிறந்த திரைக்கதையாசிரியர் – சமுத்திரக்கனி(நாடோடிகள்)

8. சிறந்த குணசித்திர நடிகர் – பரணி(நாடோடிகள்)

9. சிறந்த குணசித்ர நடிகை – அபிநயா(நாடோடிகள்)

10. சிறந்த வில்லன் – நான் கடவுளில் பயமுறுத்துபவர்

11. சிறந்த வில்லன் சிறப்புப் பரிசு – நந்தா(ஈரம்)

12. சிறந்த படம் – பசங்க

13. சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம்(சிவா மனசில சக்தி)

14. சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார்(சிவா மனசில சக்தி)

15. சிறந்த பாடகர் – கார்த்திக்(விழி மூடி யோசித்தால்)

16. சிறந்த பாடகி – அனுராதா ஸ்ரீராம்(லேசா பறக்குது)

17. சிறந்த இசை அமைப்பாளர் – ஹாரிஸ் ஜெயராஜ்

18. சிறந்த கண்டுபிடிப்பு – தமன்

19. சிறந்த துள்ளலிசை பாடல் – ஆத்திச்சூடி(த.நா), கரிகாலன்(வேட்டைக்காரன்)

20. சிறந்த மெலோடி – நான் போகிறேன் மேலே மேலே – நாணயம்

லேசா பறக்குது – வெண்ணிலா கபடி குழு

மழை வருதே – பசங்க

விழி மூடி யோசித்தால் – அயன்

மழையே, மழையே – ஈரம்

ஒரு சின்னத்தாமரை - வேட்டைக்காரன்

21. சிறந்த எடிட்டிங்க் – ஈரம் படத்தின் எடிட்டர்

22. சிறந்த டான்ஸ்மாஸ்டர் – ஷோபி(ஆத்திச்சூடி)

23. சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் – நான் கடவுள் ஸ்டண்ட் மாஸ்டர்

24. சிறந்த டீம் ஒர்க் – நாடோடிகள் படக்குழு

ஏதோ எனக்கு தெரிஞ்சது!!!!

இந்த வார கொடுமை

மங்களூர் விமானவிபத்து. கேள்விப்பட்டதிலிருந்து நெஞ்சு பதறுகிறது. எத்தனை உயிர்கள்.எத்தனை குடும்பம். எத்தனை கனவுகள். அத்தனையும் ஒரு நிமிடத்தில் பஸ்பமாகிவிட்டது. அனைத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் என்னுடைய அனுதாபங்களும், ஆறுதலும்..எதிர்காலத்தில் இதுபோல விமானவிபத்து நடக்காமல் இருக்க அரசு ஆவண செய்யவேண்டும்

இந்த வார சாப்பாட்டுக்கடை

அடிக்க வரக்கூடாது சொல்லிப்புட்டேன். இங்கு அமெரிக்காவில் மெக்டோனால்ட் போலவே தெருவெங்கும் பர்கர் கிங் என்று ஒரு புட் செயின் இருக்கிறது. அங்கு ஒரு சிக்கன் பர்கர் வாங்கி சாப்பிட்டால், பதிவுலகம் பற்றிய கவலை பஞ்சாய் பறந்து போகும். நீங்களும் டிரை பண்ணுங்களேன்(அதென்ன பேசிக்கிட்டு இருக்கும்போது கை நீட்டுற பழக்கம்..)))