Tuesday, 16 October, 2012

நமீதாவின் திகைப்பூட்டும் கவர்ச்சிஇப்படியெல்லாம் தலைப்பு போடுபவனல்ல நான்..ஆனால், இந்தப் பதிவை எல்லோரையும் படிக்கவைக்க வேறு வழியில்லை. ஏனென்றால், “டெங்குவை தவிர்ப்பது எப்படி”, அல்லதுடெங்கு பரவ யார் காரணம்என்று தலைப்பு போட்டால் யாரும் ஓபன் பண்ணி கூட பார்ப்பதில்லை. ஆனால் அதேநமீதாவின் கவர்ச்சிப்படம்என்று தலைப்பிட்டால், டெங்கு காய்ச்சல் வந்து, கையை தூக்கமுடியாமல் இருந்தால் கூட, காலால், இந்த லிங்கை கிளிக் பண்ணி பார்ப்பதற்கு ரெடியாக இருக்கிறார்கள். நானும் அந்த லிஸ்டில் இருப்பேன் என்று சொல்ல தயக்கமும் இல்லை. தப்பு என்று சொல்லவில்லை..ஆனால், அதே நேரத்தில் விழிப்புணர்வு பதிவுகளையும் படிப்பதில் அக்கறை கொண்டால், மிகுந்த மகிழ்ச்சி..

நீங்கள் என்னை திட்டுவதென்றால், இப்போதே திட்டிவிடலாம். ஆனால் இந்தப் பதிவு, ஒரு இரண்டு உயிரை காப்பாற்றுமென்றால், அந்த திட்டுக்களை வாங்க நான் தயார்.

போனமுறை ஊருக்கு வந்திருந்தபோது, டெங்கு காய்ச்சல், இன்று பெண் சாப்ட்வேர் இஞ்சினியர்கள் ஆபிசுக்கு வருவது போல, தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்ததுஅதுவும் திருநெல்வேலி பகுதிகளில் ஆடிய ஆட்டத்தில் சாவு எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருந்தது. என்னுடைய மாமனார் வீட்டிற்கு செல்வதற்காக, திருநெல்வேலி செல்லவேண்டிய நிர்பந்தம்.

எனக்கு என்ன கவலை என்றால், எனக்கு டெங்கு வந்தால் கூட, சமாளித்துவிடுவேன்…(அதாவது நாங்கெல்லாம் விசயகாந்து மாதிரி..புல்லட்டு தன்னை நோக்கி வந்தாக்கூட திருப்பி விட்டுருவோம். அதனால டெங்கு காய்ச்சல் வந்தா கூடஇவண்ட ஏண்டா வந்தோம்னுயோசிக்கும். ஆனால் ஒன்னும் தெரியாத பச்சப்புள்ளைக்கு வந்தா

எனக்கு என் மகனை திருநெல்வேலிக்கு கூட்டிகொண்டு வர பயமாக இருந்தது. அதனாலேயேமுடியாதுஎன்று சொல்லிவிட்டேன். ஆனால் முதல்முறையாக என் பையனைப் பார்க்க சொந்தக்காரர்கள் மிகவும் ஆசைப்படுவதால், ஒருவித பயத்துடனேயே வந்தேன்

ஆனால் அங்கு இருந்த ஒவ்வொரு நாளும், வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்த மாதிரி இருந்தது. அதற்கேற்றார்போல, பக்கத்து ஊரில், டெங்குவினால் இருவர் இறந்துபோக, எப்படி இருக்கும் எனக்கு..

எரியும் நெருப்பில் என்னை ஊற்றினார் போல, என் மகனுக்கு உடம்பு முழுவதும் தடிதடிப்பாக ஆனது. லைட்டாக வயிற்றுபோக்கும், காய்ச்சலும் வர, மனதால் செத்தே விட்டேன்..என் பையனை தூக்கி கொண்டு ஓடினேன்..எவ்வளவு வரம் வாங்கி, இந்தப் பையனை பெற்றிருகிறோம்..என்னால், ஒரு நிமிடம் கூட என் பையன் இல்லாமல் இருக்க முடியாது..

டாக்டரிடம் போய் கெஞ்சினேன்….சில டெஸ்டுகள் எடுக்கவேண்டும் என்று என்னை காத்திருக்க சொன்னார்..நான் காத்திருந்த அனைத்து நிமிடங்களும் நரகவேதனை..கடைசியாக வந்து என்னிடம் அவர் சொல்லிய வார்த்தைகள் தான் என் வாழ்க்கையை எனக்கு திருப்பி கொடுத்தது..

“ஒன்னும் இல்ல சார்..சாதாரண கொசுக்கடிதான்..அலர்ஜி மாதிரிதான்..”

யப்பா..எனக்கே இப்படி இருந்திருந்தால், டெங்கு நோயினால் தங்கள் பிள்ளைகளை இழந்த மக்களுக்கு எப்படி இருந்திருக்கும்..எவ்வளவு கனவு கண்டிருப்பார்கள்..என்னவெல்லாம் சீராட்டி இருப்ப்பார்கள்..அனைத்தும் ஒரு நொடியில் போயிருக்கும்..ப்ச்…

மிகவும் மனக்கலக்கத்தோடு, மதுரை சென்றேன்..அண்ணன் வீட்டுக்கு..அங்கு நான் பார்த்த காட்சிதான், எனக்கு இந்த பதிவு எழுத தூண்டியது..

வீடு நன்றாகத்தான் கட்டியிருந்தார்..ஆனால் வீட்டிற்கு முன்பாக ஒரு பெரிய காலி இடம்..அந்த காலி இடம் முழுவதும் சாக்கடைத்தண்னி..அது முழுக்க கொசுக்கள் ஆய்ந்து கொண்டிருந்தது..அந்தப் பக்கம் ஒரு பெரிய குப்பைத் தொட்டி..கார்ப்பரசேன் குப்பைத் தொட்டி..முழுக்க குப்பை..வழிந்து கொண்டிருக்க, தெரு முழுக்க பாராபட்சமில்லாமல் இறைந்து கொண்டிருந்தது..அதுமுழுக்க கொசுக்களும், ஈக்களும்..இனி, என் அண்ணனுக்கும் எனக்கு நடந்த உரையாடல்..

“ஏண்ணே..என்னண்ணே, இப்படி கிடக்கு..”

“என்ன..எப்படி..”

“இல்ல..இப்படி சாக்கடை தேங்கி நிக்குது..முழுக்க கொசுவா ஆயுது..அதுமில்லாம, குப்பைய வந்து அள்ள மாட்டாய்ங்களா.தெரு முழுக்க சிந்திருக்குது..அதுலயும் கொசு..பின்ன இப்படி இருந்த டெங்குவராம என்ன செய்யும்..”

“அடங்கொன்னியா..அமெரிக்காவுல இருந்து வந்திருக்கீங்களாமா..டேய்..இந்த தெரு என்னைக்குடா நல்லா இருந்துச்சு..எப்பதுமே இப்படித்தானடா இருக்கு..”

“அடக்கொடுமையே..நான் வேணா அலும்பு பண்ணுறதா இருக்கட்டும்..உங்க தெருவுக்குன்னு ஒரு கவுன்சிலர் இருப்பாருல்ல..அவர் என்ன பண்ணுறாரு..புகார் கொடுக்க வேண்டியதுதானே..”

“அவர, ஓட்டு போடுறப்ப பார்த்தது….”

“யாரு..இந்த தெருவை சிங்கப்பூரா மாத்துவேன்னு சொல்லிட்டு போனரே..அவரா..”

“ஆமாண்டா..தெரு சிங்கப்பூர மாறுதோ இல்லையோ..அவரு ரெண்டு தடவை சிங்கப்பூர் போயிட்டு வந்துட்டாரு..எல்லாம் கமிஷன் காசுதான்…”

“சரி..நீங்கெல்லாம் ஒன்னு பண்ணலாம்ல..”

“என்ன..”

“இந்த தெருவுல உள்ளவங்கல்லாம், ஆளுக்கு ஒரு ஐநூறு ரூபா போட்டு, ஒரு பெரிய குப்பைத்தொட்டி வாங்கி வச்சிட்டு, எல்லாரும் அதிலேயே போடலாம்ல..யாராவது ஒருத்தர், மாநகராட்சிகிட்ட பேசி, இந்த தெருவை க்ளீன் பண்ணச்சொல்லலாம்ல..”

“ஓ..அமெரிக்க ரிட்டர்னாம்மாம்…இதெல்லாம் நடக்குற காரியமா..தம்பி..40 வருசமே இப்படியே வாழ்ந்துட்டோம்..அப்படியே இருப்போமே..என்ன கேடு கெட்டது..”

சொல்லுங்கள்..இனிமேல் என்ன நான் பேசமுடியும்..ஒன்னு சொல்லுறேண்ணே..டெங்கு காய்ச்சலை கவர்மெண்டு ஒழிக்கலை, ஒழிக்கலைன்னு கோஷம் போடுறதை நான் ஒத்துக்கவே மாட்டேன்..தப்பு முழுக்க நம்ம பேருல வைச்சுக்கிட்டு, கவர்மெணடையே குற்றம் சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி..

தெரு முழுக்க, சாக்கடையை தேங்கவிடுறோம்..சாக்கடை மேலேயே குப்பையக் கொட்டுறோம்..தெரு முழுக்க குப்பை நாறி கிடந்தாலும், நாய், எலி செத்து நாத்தம் புடிச்சு கிடந்தாலும், மூக்கைப் பொத்திக்கொண்டு ஓடுகிறோம்..என்னைக்காவது, இதையெல்லாம் அப்புறப்படுத்த, அல்லது, மீண்டும் குப்பையாக்காமல் இருக்க நம்மாளான ஏதாவது செஞ்சுருக்கமோ..இல்லையே..பின்ன டெங்கு என்ன, பன்னி காய்ச்சல், மலேரியா, வாந்திபேதி..எல்லாம், அட்டெண்டன்ஸ் போட்டுக்கிட்டு வராம என்ன பண்ணும்..

எவ்வளவோ வெட்டியானதெல்லாம் படிக்கிறோம்….பதிவுலகத்துல மணிக்கணக்கா சண்டை போடுறோம்..அப்படியே தயவுசெய்து, கீழே தட்ஸ்தமிழில் உள்ள, இந்த லிங்கை கிளிக் பண்ணி, பத்து நிமிஷம் ஒதுக்கி படிச்சிருங்கண்ணே..டெங்குவின் அறிகுறி என்ன.டெங்கு வந்தால் என்ன செய்யவேண்டும்னு அருமையா சொல்லியிருக்காய்ங்கண்ணே..


இதப்படிச்சு, பத்துபேரு கூட வேணாம்னே..ஒரு உசுரு காப்பற்றப்பட்டால் போதும்ணே…நான், இந்தப்பதிவு எழுதனுக்கு ஒரு அர்த்தம் கிடைச்சுரும்ணே..அப்படியே அந்த லிங்கில் உள்ளத நாலு பேருக்கு பேசுறப்ப சொன்னிங்கன்னா, அவிங்களுக்கு, ஒரு விழிப்புணர்ச்சி வரும்ணே..செய்விங்கதானே..

இனிமேல் ஒரு உசுரு கூட டெங்குனால போகக்கூடாதுண்ணே…..

(அம்புட்டையும் படிச்சுட்டு..”ஏண்ணே.நமீதா கவர்ச்சிப் படம் எங்கண்ணே..போட மறந்துட்டீங்க..அப்படின்னு எந்த பயபுள்ளையாவது கேட்டீங்கன்னா, அதுக்கும் பதிலு இருக்கு..மேலே இருக்குற கொசு பேரு நமீதாவாம்..கவர்ச்சியா இல்ல..ஹி..ஹி..)

Saturday, 13 October, 2012

மாற்றான் - மரணமொக்கைநீங்கள் படத்தயாரிப்பாளரா..கதை, திரைக்கதையே இல்லாமல் உங்கள் படம் ஓடவேண்டுமா..எந்த கஷ்டமும் படவேண்டியதில்லை.. என்னிடத்தில் வாருங்கள்..உங்கள் படத்தைமரணமொக்கைஎன்று எழுதுவேன்..உங்கள் படம் ஹிட்டு..

என்னது நம்பமாட்டீங்களா..என் கடந்தகால விமர்சனங்களையும், கணிப்புகளையும் அலசி பாருங்க சார்..குறிப்பாக தாண்டவம் படத்திற்கு முதல் விமர்சனம் நான்தான் எழுதினேன் என்று நினைக்கிறேன்..படம் எனக்கு பிடித்திருந்தது..விக்ரமுக்கு ஒரு ஹிட் என்று எழுதிட்டு பார்க்குறேன்..ங்கொய்யால..அம்புட்டு பயபுள்ளைகளையும், அந்த படத்தை வாரு, வாருன்னு வாறி, “மரணமொக்கைன்னு எழுதி, விக்ரம் கேரியரை, டிபன் கேரியரா மாத்திட்டாய்ங்க..மூணு மணிநேரம், மாற்றான் என்ற மரணமொக்கை படத்தை பார்த்துட்டு வந்துமாற்றான் மரணமொக்கைன்னு எழுதப்போறேன்..எல்லாம் சேர்ந்து ஹிட் ஆக்கிருய்ங்கய்யா..நீங்கெல்லாம், நல்லா வருவீங்கய்யா..

தக்காளி..இந்தப் படத்தை பார்க்குறதுக்கு, இந்த ஊரு தியேட்டருல  2 மணிநேரம் காத்துக்கிடந்தேய்யா..2 மணிநேரம் கழிச்சு, தியேட்டருல போய் உக்கார்ந்தா, உங்களுக்கு , பணம் உத்தரவாதம் இல்லையோ..தூக்கம் உத்தரவாதம்..ஆவ்..

கதையெல்லாம், எல்லாப்பேரும் சொல்லிருப்பாய்ங்க..நம்ம மத்ததை பேசுவோம்..ஒட்டிப்ப்பிறந்த இரட்டைக்குழந்தை என்று வித்தியாசமாக ஆரம்பிக்கும் திரைக்கதை, முதல்ல ஸ்டெயிட்டா போகுது, அப்புறம் லெப்டுல திரும்புது..அப்புறம் ரைட்டு..அப்புறம் ஸ்டெய்ட்டு..அப்புறம் பேக்..அப்புறம் லெப்டு..அப்புறம்அடப்போங்கைய்யா..எங்கிட்டு போகுதுன்னு டைரக்டருக்கே தெரியலை..

சூர்யா, வழக்கம்போல கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்..ஆனால், பாவம்..அவர் என்ன பண்ணமுடியும்..இப்படி ஒரு திரைக்கதையை வைத்துக்கொண்டு..ஒரு சூர்யாவை காதலிக்கும், காஜல் அகர்வால், அந்த சூர்யா இறந்தபின்பு, “அந்த முட்டாய் இல்லைன்னா என்ன..இன்னொரு முட்டாய் இருக்க்குல்லஎன்று அடுத்த காட்சியிலேயே, அடுத்த சூர்யாவைக் காதலிப்பது, அமெச்சூர்தனத்தின் உச்சகட்டம்..

முதல் பாதியில் அவ்வப்போது வரும், நகைச்சுவை மட்டுமே, படத்திற்கு சிறிய ஆறுதல்..ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நம்மளே ஸ்கிரினூக்குள்ள கையை விட்டு பிரிச்சுவிட்டுருவோமான்னு தோணுது, இயக்குநருக்கு கிடைத்த வெற்றி..அதாவது, மக்களை வெறியேத்தியதற்கு..

நம்ம ஊரு டாட்டாசுமோ மாதிரி, இரண்டு கார்களில் உக்ரைனின் ராணுவத்தளபதி வருவதும், அவரை நம்ம ஊரு பயபுள்ளைக போட்டுத்தள்ளுவதெல்லாம், செம காமெடி..குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் வருமே ஒரு இழுவை..இது..சாரி..தூக்கம்..பொண்டாட்டி போன் பண்ணின பின்புதான் எழுந்தேன்னா பார்த்துக்குங்களேன்..

ஹாரிஸ் ஜெயராஜ், வழக்கம்போல் அவருடைய பாடல்களை, அவரே சுட்டு போட்டிருக்கிறார்..இங்கு கேண்டினில் பப்ஸ் எதுவும் கிடைக்காதது ஏமாற்றமாக இருக்கிறது..படத்தில் வில்லனாக வருபவர் மட்டும் கொஞ்சம் கவர்கிறார்..மத்தபடி, கொஞ்சம் கூட நம்ப முடியாத காட்சிகளும், நத்தை போல இழுக்கும், இரண்டாவது பாதியும், படத்தை மரணமொக்கையாக்குகின்றனஆனாலும், நான் எழுதிட்டேனுங்குறதினால, நீங்களெளல்லாம் சேர்ந்து ஹிட் ஆக்குவீங்க்ன்னு தெரியும்..ஆனாலும் சொல்லவேண்டியது, என் கடமை..இந்த விமர்சனத்தை படிச்சுட்டு,, இரண்டு, மூணு உசுரு காப்பற்றப்படட்டுச்சுன்னா, எனக்கு போதும்யா..

முடிவாக மாற்றான் – மரணமொக்கை..


படஉதவி - நன்றி பேஸ்புக் நண்பர்

Monday, 1 October, 2012

சாட்டைதமிழ் சினிமா உலகத்தில் நல்ல படங்களே அரிதாக வருகின்ற இந்த காலத்தில், அதைப் போக்கும் வகையில் தற்போது வந்த படமே அறிவழகன் இயக்கி, சமுத்திரக்கனி இயக்கியுள்ள சாட்டை திரைப்படம். அரசு பள்ளிக்கூடங்களில் நடக்கும், அவலநிலையை செவிட்டில் அறைந்தாற்போல சொல்லியிருக்கும், இத்திரைப்படம், ஏறக்குறையநம்மவர்படத்தின் கருவோடு ஒத்துப்போயிருக்கிறது. ஆனால் நம்மவர் படத்தின் தோல்விக்கும், இந்தப் படத்தின் வெற்றிக்கும், ஒரே காரணம், சாட்டைப் படம், ஏதோ 2 மணிநேரம் அரசு பள்ளியேலேயே நாமும் இருந்தோம் என்ற உணர்வை ஏற்படுத்தியதுதான். நம்மவர் படத்தில் மேலிட்ட அந்த அதிமேதாவித்தனமும், நாடகத்தனமும், இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கூட காண்பிக்கப்படவில்லை, கிளைமேக்ஸ் காட்சியில், கத்தியை எடுத்துவரும் .ஹெச்,எம் தவிர..மற்றபடி, மனது சற்று உலுக்கிப்போடும்இந்த சாட்டை திரைப்படம், பல விருதுகள் வாங்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த படம் பார்க்கும்போது, உங்களுக்கு, ஏற்பட்ட உணர்விற்கும், எனக்கு ஏற்பட்ட உணர்விக்கும், ஒரு சிறிய வித்தியாசம் இருக்கலாம். ஏனென்றால், நான் பத்தாம் வகுப்பு வரை படித்தது, சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் என்ற சிறிய கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி. அதனாலேயே, இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும், என்னால், என் பள்ளிக்கூட அனுபவங்களோடு பொருத்தி பார்க்க முடிகிறது. இந்தப் படத்தில் வரும் சமுத்திரக்கனி போல இல்லாவிட்டாலும், முடிந்தவரை, பசங்களை, படிப்பின்மேல் ஆர்வம் ஏற்படவைத்த ராஜேஸ்வரி டீச்சர். தம்பி ராமையா போல், பள்ளிக்கூட மாணவர்களை ஸ்டிரைக்குக்கு தூண்டி விட்ட, உடற்கல்வி ஆசிரியர். தொப்புள் தெரியும்படி உடை உடுத்திவரும், கணக்கு டீச்சர். வகுப்பறையிலேயே தூங்கும், வயதான வரலாறு டீச்சர்வீட்டு வேலைகளையே முழுநேரம் பார்க்கவைக்கும், தமிழ் ஐயா..என்று அனைத்து கேரக்டர்களும், இன்னும் என் கண் முன்னால்..

நன்றாக நினைவிருக்கிறது. என்கூட படிக்கும், நண்பன் முருகபாண்டிக்கும் எனக்கும் தான் பயங்கரபோட்டி..யார் நன்றாக படிப்பது என்று..அப்புறம் சேர்ந்தவன் ஹெச்.சரவணன்..அதுவரை, இரண்டாவது ரேங்க் வாங்கி கொண்டிருந்தவனை, மூன்றாவது ரேங்க் வாங்கவைத்தவன். சற்றே பணக்காரப் பையன். டியூசன் வேறு தனியாக சென்று கொண்டிருந்தான். முருகபாண்டியை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். மிகவும், ஏழையான குடும்பம். அப்பா, அரிசிக்கடை வைத்திருந்தார்..சந்தையில், இந்தப்பையன் சென்று பகல் முழுவதும், வேலை பார்த்துவிட்டு, இரவு அந்த சிம்னி விளக்கில்தான் படிப்பான்..கரண்ட் பில் வரும் என்று வீட்டில் லைட்டெல்லாம் அணைத்துவிடுவார்கள். சிலநேரம், தெரு டியூப் லைட்டு வெளிச்சம்தான் அவனுக்கு ஒளி..

இரண்டாவது ரேங்க் வாங்கி கொண்டிருந்த எனக்கு, மூன்றாம் ரேங்க் வாங்கியவுடன் வெறி வர ஆரம்பித்தது..வீட்டிற்கும், பள்ளிக்கூடத்திற்கும், 3 கிலோமீட்டர் இருக்கும். பாலம் வழியாக நடந்து சென்றுதான் படிப்போம். நடக்கும்போதெல்லாம் படித்தேன். விளையாட செல்லமாட்டேன்..ஒலியும், ஒளியும் பார்ப்பதில்லை..வெறி வைத்து படித்தேன்..ஒரு முறை மயங்கிவிழுந்த பின்புதான் எனக்கே தெரிந்தது, என் வெறி. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து, ரிசல்டும் வந்தது. முருகபாண்டி – 465. நான் 450..ஹெச்.சரவணன் – 425..வாடிப்பட்டி வட்டத்தில் முதலாவது முருகபாண்டி

என் பையனுக்கு இத்தனை ஆற்றல் உள்ளதா, என்று என் பெற்றோர் வியந்தது அப்போதுதான். “இவனை பெரிய ஆளாக்கணும்டாஎன்று அப்பா, என் அண்ணாவிடம் சொன்னது, இன்னமும் என் காதுகளில். மார்க்கை பார்த்துவிட்டு, திண்டுக்கல் செயிண்ட்மேரிஸ் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடவேண்டும் என்று உடனே கிளம்பினார்கள்..அன்றைக்கெல்லாம் வாடகை கார்பிடிப்பது என்பது பெரிய விஷயம். அப்பா, இருந்த சந்தோசத்தில், கையில் இருந்த காசையெல்லாம் புரட்டி, கார் பிடித்து, செயிண்ட்மேரிஸ் பள்ளிக்கு கூட்டிச்சென்றார்கள். தலைமையாசிரியர் மதிக்ககூடவில்லை..

எங்க ஸ்கூலுல 50 பேரு 450 எடுத்திருக்காங்க சார்..சீட்டு கிடைக்கிறது கஷ்டம்..அதுவும் அரசு பள்ளின்னு வேற சொல்லுறீங்க..அப்படி போய் உக்காருங்க..”

சார்..கவர்மெண்டு ஸ்கூல படிச்சு நல்ல மார்க்கு வாங்கிருக்கான் சார்..கொஞ்சம் தயவு பண்ணி சேர்த்துக்குங்க சார்என்று என் அப்பா கெஞ்சியது, இன்னமும் ஞாபகத்துக்கு வருகிறது.. கடைசியாக சேர்த்து கொள்ளப்பட்டு, அங்குள்ள ஹாஸ்டலிலும் அட்மிட் செய்யப்படேன்..அதுவரை சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்த எனக்குசிறைச்சாலைஎன்றால் எப்படி இருக்கும் என்று காட்டியது, அந்த ஹாஸ்டல். காலையில் 04:30 மணிக்கு எழுவது..எழாவிட்டால், குச்சி எடுத்து அடி..05 மணிக்கு, மைதானத்தில் உள்ள ஷவரில் குளியல்(ஒரு ஷவரில் இரண்டுபேர். விசில் அடிக்கும்போது தண்ணிவரும்..குளிக்கவேண்டும்..திரும்பவும் விசில் அடித்தால், தண்ணி நின்றுவிடும். சோப்பு போடவேண்டும். திரும்பவும் விசில் அடித்தால் தண்ணிவரும்..அவ்வளவுதான். அதிகபட்சம், 5 மணித்துளிதான்..) திரும்பவும் 05:30 மணிக்கு சர்ச்..06 மணிக்கு படிப்பு, 07 மணிக்கு சாப்பாடு, 08 மணிக்கு படிப்பு, 09 மணிக்கு வரிசையாக ஸ்கூல், 05 மணிக்கு விளையாட்டு, 6 மணிக்கு படிப்பு, 08 மணிக்கு சாப்பாடு, 09 மணிக்கு படிப்பு. 10 மணிக்கு தூக்கம்..இன்னமும் அந்த டைம்டேபிள் அப்படியே ஞாபகம் இருக்கிறது..அம்மா மடியிலே தூங்கி பழகியிருந்த எனக்கு, நரகத்தில் விட்டால் போல இருந்தது..அப்போதெல்லாம், தொலைபேசி என்ற ஒரு வஸ்துவே, இல்லாமல் இருந்தது. வீட்டிலிருந்து அம்மா லெட்டர் போடுவார்கள். மாதத்திற்கு ஒருமுறை..10 முறை அதையே மறைத்து வைத்து படித்தேன். பெண்களை பார்ப்பதே அபூர்வமாக இருந்தது.

இட்லியோடு, நாலுவகை சட்னி சாப்பிடு பழகிய எனக்கு, அந்த ஹாஸ்டல் சாப்பாடு, நரகல் போன்ற தோற்றம் தந்தது. அப்படியே திண்டுக்கல் பஸ்ஸில் அடிபட்டு செத்துவிடலாமா என்ற எண்ணம் கூட வந்தது..அனைத்தையும் பொறுத்துகொண்டேன், மாதத்திற்கு ஒருமுறை அம்மாவை பார்ப்பதற்கு..மாதத்திற்கு ஒருமுறைதான் ஹாஸ்டலில் பெற்றோர் அனுமதி. முதல் ஞாயிறன்று..அம்மாவும் அண்ணனும் வாசலில் ஒரு டிபன் பாக்ஸோடு உக்கார்ந்திருப்பார்கள். படிப்பு அறையில் இருந்து, என் பார்வை முழுவதும், அவர்கள் மேல்தான் இருக்கும்..அந்த மணி அடித்ததும்..அப்படியே ஓடி வந்து கட்டிக்கொண்டு அழுவேன்..”யம்மா..ஜெயிலு மாதிரி இருக்கும்மா..கூட்டிட்டு போயிரும்மா..” என்று கதற..”இன்னும் ரெண்டு வருசம் கண்ணு..பொறுத்துக்கப்பா..இங்கதான் படிப்பு நல்லா இருக்கும்பா..உன் வாழ்க்கை நல்லா இருக்கும்பாஎன்று கெஞ்சுவார்கள்..அம்மாவே ஊட்டி விடுவார்கள்..போகும்போது, அம்மா புடவை தலைப்பை பிடித்துக்கொள்வேன்பிரிய மனமில்லாமல் செல்வார்கள்..

அங்கு உள்ள பணக்கார பசங்களோடு என்னால் போட்டி போடமுடியவில்லை. அனைவரும் டியூசன் சென்றார்கள்..நுனிநாக்கில் ஆங்கிலம் பேசினார்கள்..பதினொன்றாம் வகுப்பில் நான் வாங்கிய மார்க் 600/1200…வீட்டில் பயந்து போனார்கள். என்னை மேலும் பயமாக்கியவர், 12ஆம் வகுப்பின் இயற்பியல் ஆசிரியர்..அவர் தனியாக டியூசன் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார்..டேஸ்காலர் பசங்களெல்லாம், அவரிடம் டியூசன் சென்று கொண்டிருக்க, என்னால் செல்ல முடியவில்லை. டியூசன் வராத பசங்களை, அவர் படுத்திய பாடு சொல்லி மாளாது..வந்தவுடன், இரண்டு கேள்விகள், டியூசன் வராத பசங்களாய் பார்த்து கேட்பார். சொல்லாவிட்டால், பெஞ்ச் மேல் ஏறவைத்து, பிரம்பை எடுத்து அடி பிண்ணிவிடுவார்..

என் வீட்டில் கூட என்னை அடித்ததில்லை. ஒரு கட்டத்தில் எனக்கு மறத்துவிட்டது. அவர் எந்த கேள்வி கேட்டாலும், சொல்லிவிடவேண்டும், என்று வெறி கொண்டு படித்தேன். சிலநேரங்களில், அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லியதால் அவரே தடுமாறினார்..அதுவரை உடம்பில், அடிவாங்கியிருந்த எனக்கு, மனரீதியான அடியை கொடுத்தது, அந்த வார்த்தைதான்..ஒருமுறை பதில் சொல்லாதபோது..”உன்னையெல்லாம் ஏண்டா பெத்து போட்டாய்ங்க..காக்கா கலருல..நீயெல்லாம் சோப்பு போட்டா, அந்த சோப்பே கருப்பாயிரும்டா..” என்றார்அதுவரை வைராக்கியமாக இருந்த, எனக்கு, அந்த வார்த்தைகள் தூக்கிப்போட்டது….ஹாஸ்டலில் போய், பாத்ரூமுக்கு சென்று அழுதேன்..அழுதேன்..இனிமேல் இந்த நரகத்தில் இருக்ககூடாது, என்று, என் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி, யாருக்கும் சொல்லாமல் திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்தேன்..

ஏதோ ஒரு எண்ணம்..”நான் ஏன் போகவேண்டும்..படிக்கணும்டாஎன்று ஒரு வெறி..பத்தாம் வகுப்பில் வந்ததே அந்த வெறிதிரும்பவும் படிக்க ஆரம்பித்தேன்..இயற்பியல் ஆசிரியர் சொன்னதெல்லாம், என் மனதுக்குள் ஏறவில்லை..”1013” மார்க்..அந்த காலத்தில் எல்லாம், 1000 மார்க் எடுப்பதெல்லாம் சாதரணமில்லை..எனக்கே, என்னை பிடித்துபோனது..ஏதோ சாதித்ததாய் தோன்றியது..பள்ளியில் 1000 மார்க் எடுத்தவன் லிஸ்டில், இந்த அரசுபள்ளி மாணவன் என்றபோது, எனக்கே, என்னை நினைத்து பெருமையாக தோன்றியது..

அதனாலேயே, இந்த சாட்டை திரைப்படம் எனக்குள் பல உணர்வுகளை கிளறிவிட்டது..என் வாழ்க்கையில், இந்த மாற்றத்திற்கு காரணம், இரண்டு பேர்..ஒருவன் 10ஆம் வகுப்பு முருகபாண்டி..என்னதான், அடித்தாலும், என்னை, எனக்கு அடையாளம் காட்டிய அந்த இயற்பியல் ஆசிரியர்..இருவரையும் போனமுறை ஊருக்கு சென்றபோது பார்க்க முடிந்தது, எனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவம். முருகபாண்டியை வீட்டுக்கு சென்றபோது பார்த்தேன்..மிகவும் ஒடுங்கி போயிருந்தான்

படிக்கணும் ஆசைதாண்டா..பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருக்கும்போது., பெங்களூர் டைட்டன் தொழிற்சாலையிலிருந்து வந்திருந்தாய்ங்க..ஏதோ டெஸ்ட் வைச்சாய்ங்க..நான் மட்டும் தான் பாஸ் ஆனேன்..3000 ஆயிரம் ரூபாய் சம்பளம்..வாட்சுக்கு முலாம் பூசுற வேலைடாவீட்டுல கஷ்டமுனால, உடனே படிப்பை நிறுத்திட்டு அனுப்பிட்டாய்ங்கடா..சே..தெரியாம வந்துட்டண்டா..வேலை பின்னி எடுக்குறாய்ங்கடா..உடம்பு புல்லா ஒரே அலுப்புடா..எப்படிடா இருக்க

என்று கேட்டபோது, வறுமைதான், நம்நாட்டு மக்களின் சாபம் என்று கண்கூடாக தெரிந்தது..அவன் மட்டும் படித்திருந்தால் சத்தியமாக சொல்லுகிறேன்..கண்டிப்பாக ஒரு விஞ்ஞானி ஆகியிருப்பான்..ஆனால் இந்த வறுமைதான் எத்தனை பேருடைய கனவுகளை சிதைக்கிறது..

அந்த இயற்பியல் ஆசிரியரை, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும், பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸில்தான் பார்த்தேன்..மிகவும் தளர்ந்திருந்தார்..எப்போதும், மிடுக்காக இருக்கும், முகம் முழுவதும் சுருக்கம்..ரிட்டையர்டு ஆகியிருந்தார்..நானேதான் சென்று அறிமுகமானேன்..

சார்..நான் ராசா.உங்க மாணவன்..”

என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை..எவ்வளவு மாணவர்களை பார்த்திருப்பார்..

அப்படியாப்பா..ரொம்ப சந்தோசம்..இப்ப என்ன பண்ணுற..”

சென்னையில ஒரு கம்பெனியில வேலை பார்க்குறேன் சார்…”

அவரைப் பற்றி கேட்டேன்..என்னை பிரம்பால் அடித்த அந்த இயற்பியல் சாரா என்று என்னால் நம்பமுடியவில்லை..அந்த கர்வம்..தேஜஸ்..எல்லாம் காணாமல் போயிருந்து..அன்று பயணம் முழுவதும் நான் தூங்கவில்லை..அவருடைய வாழ்க்கை பற்றியும், என் வாழ்க்கை பற்றியும், முழுக்கதான் அந்த பயணம் முழுவதும்..கிளம்பும்போது என் கையை பிடித்து கொண்டு சொன்னார்..

தம்பி..உங்களுக்கு எப்ப பாடம் எடுத்தேனுன்னு ஞாபகமில்லை..ஆனால் ஒன்னு மனசிலே இருக்கு தம்பிபசங்களை நல்லா படிக்க வைச்சிருணும் தம்பி.அதுதான், அவிங்களுக்கு நம்ப கொடுக்குற கொடை..வாழ்க்கை எல்லாம்..அதுதான் தம்பி சோறு போடும்….”

பிரிய மனமில்லாமல் கிளம்பினேன்..

ஆமாண்ணே..பசங்கள நல்லா படிக்க வைச்சிரணும்ணே…”