Sunday, 3 November, 2013

கமல்ஹாசனின் பாராட்டு மன்றம் – தங்க மீன்கள் – வணக்கம் சென்னை


ஜெயா தொலைக்காட்சியில், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்ட கமலுக்கான பாராட்டு மன்றத்தில்..மன்னிக்க, பட்டிமன்றத்தில் கமல் ஒரு இடத்தில் சொன்னார்..
“நான் இங்கு நடுவராக வரவில்லை, குற்றவாளியாக வந்திருக்கின்றேன்..அதுவும், அறிவு பாத்திரத்தை ஏந்திக்கொண்டு..இரண்டு பக்கங்களிலும், ஏதாவது கிடைக்கும், அதை என் பாத்திரத்தில் ஏந்தி கொள்வேன்”

உறுதியாக சொல்லுவேன், அவர் கிளம்பி செல்லும்போது, வெற்று பாத்திரமாகவே சென்றிருப்பார். என்ன கொடுமை என்றால், தமிழாசிரியர், அறிவுசார் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் ஐயாவும், இதில் ஒரு பேச்சாளர்..
தன்னைப் பற்றி இரண்டரை மணிநேரம் புகழ்ந்து பேசுவதை கேட்க எத்தனை பேருக்கு வாய்க்கும்.. இன்று கமலுக்கு வாய்த்திருக்கிறது. அதுவும் தீபாவளியை ஏற்று கொள்ளாத நாத்திகர் என்று சொல்லி கொள்ளும் கமலுக்கு தீபாவளி அன்று கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்.

பத்து பேரும் பேசியது அமெச்சூர்தனத்தின் உச்சம் என்றால், கமல் பேசியது, குழப்பத்தின் உச்சம். பேசிய பத்து பேரில், ஏறக்குறைய எல்லோரும், கமல் புராணம் பாடுவதில் இருந்த அக்கறையை, சிறிதளவேனும், தலைப்பைப் பற்றி தயார் செய்வதிலும் காட்டியிருக்கலாம்..
இந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாக ஆளுமை அல்லது கலைஞன் என்று கர்வப்பட்டு கொள்ளும் அதே நேரத்தில், அவரும் புகழ்போதைக்கு அடிமையாகிவிட்டாரோ என்ற பயமும் ஏற்படுகிறது. இன்னும் விட்டால் “ஆழ்வார்பேட்டை ஆண்டவா..”, “உலக நாயகனே” போன்ற பாடல்கள்தான் அவரை உலகத்தரத்திற்கு எடுத்து சென்றன என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் இவ்வளவு புகழ்ந்த ஒருவராவது “விஸ்வரூபம்” பிரச்சனை பற்றி ஒரு வார்த்தை பேசவேண்டுமே..மூச்..

இதில்வேறு ஒருவர் ஜெயாடிவிக்கு வருவதை பற்றி “அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே” என்று முன்பே சொல்லிவிட்டாராம். நான் இதுவரை மிகவும் புத்திசாலியாக ரஜினிகாந்த் மட்டும்தான் என்று எண்ணி கொண்டிருந்தேன்..ஆனால் கமல் ரஜினியையும் மிஞ்சிவிட்டார்..

பட்டிமன்றத்தின் முடிவில், கமல் படத்திலேயே இருந்த காமெடிதான் நினைவுக்கு வந்தது.

கமல் : என்னப்பா தேடுற..

கவுண்டமணி : இல்ல இங்க சந்துருனு ஒரு மானஸ்தான் நின்னுக்கிட்டு இருந்தான்..அவனை தேடிக்கிட்டு இருக்கிறேன்..

தங்க மீன்கள் – வணக்கம் சென்னை

தீபாவளிக்கு என்ன செய்வது என்றே தெரியாமல், வீட்டில் முடங்கியபோது, இரண்டு படங்களை பார்க்க நேர்ந்தது.. இன்று ஒரு வித்தியாசமான உலகத்திற்கு நம்மை கூட்டி செல்லப்போகிறது, என்று ஆவலுடன் பார்த்த தங்கமீன்கள். இரண்டாவது, வணக்கம் சென்னை..

பொதுவாக ஒரு படத்தை, ஒரு தடவைக்குமேல் பார்த்ததில்லை, தியேட்டருக்கு சென்று. மூன்று தடவை பார்த்த ஒரே படம் “கற்றது தமிழ்”. மனதை அவ்வளவு உலுக்கிபோட்ட திரைப்படம். அதில், ஒரு பத்து மடங்கை கூட தங்கமீன்கள் தரவில்லை.
படத்தில் அவர் சொல்ல நினைப்பது, அப்பா, மகள் பாசமா, இல்லை தனியார் பள்ளிகளுக்கு அவர்மேல் உள்ள கோபமா என்ற தெளிவு இல்லாமல் இருந்தது. கற்றது தமிழ் படத்தில், ஜீவா அஞ்சலி பாத்திரங்களில் நம்மை ஒன்ற செய்த ராம், இந்த படத்தில், என்னதான் பாடுபட்டாலும், அப்பா-மகள் பாசத்தில் ஒன்ற செய்யமுடியவில்லை. அவர் அழவேண்டுமே என்பதற்காகவே படைக்கப்பட்ட சில் சீன்களால் கூட என்னை ஒன்ற வைக்கமுடியவில்லை..இத்தனைக்கும் படம் பார்க்கும்போது, மடியில் என் பையன்.

அடுத்து பார்த்தது, அதற்கு நேரதிரான அமெச்சூரான “வணக்கம் சென்னை..” இந்திய கவர்மெண்ட் சில பேரை நாடுகடத்தலாம் என்று யோசித்தால், தயவுசெய்து, சிவாவை நாடுகடத்துங்கள் என்று மனு போடலாம் என்று இருக்கிறேன். ஒரே மாதிரியான உடல்மொழி, கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாத நடிப்பு, நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை..


எனக்கு மட்டும் ஏன் சார் தீபாவளி இப்படி விடியுது..