Saturday, 31 July, 2010

எந்திரன் பாடல் விமர்சனம்

பொதுவாக நான் “தல” என்று கூப்பிடுவது, ஏ.ஆர் ரகுமானை மட்டும்தான். தமிழனனின் இசையை உலக அளவில் உயர்த்தியவர். இரண்டு கைகளில் ஆஸ்காரை தூக்கியபோது அதன் கனம் தலையில் ஏறாமல் பார்த்தவர். அவருடைய பணிவு இன்னும் வியக்க வைக்கும். ஏதாவது ஒன்று அவருக்கு பிடிக்காமல் போய்விட்டால் அந்த இடத்தை விற்று நகர்ந்துவிடுவாராம். கத்தி பேசுவதோ, சத்தம் போடுவதோ அவருக்கு பிடிக்காத ஒன்று. நாம் குறட்டை விட்டு தூங்கும் இரவுதான் அவருக்கு வேலைநேரம். பலபேரின் ரோல் மாடல். தமிழிசை இளையராஜாவிடம் அடிமைப்பட்டு கிடந்தபோது, என்னாலும் முடியும் என்று ஜெயித்துக் காட்டியவர். அவரிடம் பிடிக்காத ஒன்று, தமிழ் சானல்களில் கூட பிடிவாதமாக ஆங்கிலத்தில் பேசுவது.

ரஜினி படத்திற்கு முதல்முதலாக முத்து படத்தில்தான் ஆரம்பித்தார். பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக, அவருடைய படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். படையப்பா, பாபா, சிவாஜி என்று அவருடைய படங்களுக்கு தனித்துவம் வாய்ந்த இசை, பாடல்களை பேசவைத்தன. பொதுவாக சங்கர் படங்களில் ஸ்லோ பாடல்களை கேட்பது கடினம். ஒரு மாதிரி துள்ளலோடுதான் இருக்கும். பாடல்கள் காட்சிகளின்போது கூட ரசிகர்களை கட்டிப்போட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.

எந்திரன் பட பாடல்களை கேட்க நேர்ந்தது. ஏ.ஆர் ரகுமான் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார். இனிமேல் போவதற்கு என்ன இருக்கிறது என்றே கேட்க தோன்றியது. அனைத்தும் கலக்கல். வைரமுத்துவின் வைரவரிகளுக்கு வைரமே பரிசளிக்கலாம்,நாம் கோடிஸ்வரானாக ஆன பிறகு… உங்களுக்காக ஒரு விமர்சனம்.

1. அரிமா, அரிமா – ஹரிஹரன், சாதனா சர்கம்

போர் முரசு போல ஆரம்பிக்கும் இந்த பாடல் “இவன் பேரை சொன்னதும்” என்று ஆரம்பிக்கும்போது, காதுகளை தயார் செய்து கொள்கிறோம். மெல்லிய குரலாலே பழக்கப்பட்டுபோன ஹரிஹரன் குரல் சற்று ஓங்கி மயக்க வைக்கிறது. சாதனா சர்கம், தண்ணீருக்கு பதில் தேன் குடிப்பார் போலிருக்கிறது. மயக்க வைக்கிறார்..மூன்று நிமிடம் சொக்கிப்போகிறோம்

2. 2. பூம், பூம் ரோபா டா – யோகி, கிர்த்தி, டான்வி, ஸ்வேதா

யோகி யின் குரலை முதல்முதலாக “எங்கேயும், எப்போதும்” பாடலில் கேட்டபோது, அவர் குரலை ஏ.ஆர் ரகுமானின் இசையில் கேட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன். இதோ எந்திரனில்..சிவாஜியில் வரும் “அதிரடிக்கார மச்சான்” பாட்டின் அடுத்த வெர்சன். ஏர்.ஆர் ரகுமானின் பேவரைட் ஸ்வேதா குரல் சொக்க வைக்கிறது. தாளம்போட வைக்கும் பீட்..கண்டிப்பாக இன்னும் 2 வருடங்களுக்கும் பப்களில் இந்த பாட்டுதான்…

3. சிட்டி டான்ஸ் ஷோகேஸ் – பிரதீப் விஜய், பிரவீன் மணி, யோகி

பூம், பூம் பாடலின் மியூசிக்கல் வெர்சன். டான்ஸ் ஆடுபவர்கள் எல்லாம் ரெடியாகி கொள்ளுங்கள். ஒரு வருடத்திற்கு இந்த பாடல்தான். கலக்கல் இசை..

4. இரும்பிலே ஒரு இதயம் – ஏ.ஆர் ரகுமான், க்ரிஸ்ஸி

காந்தக்குரல் ஏ.ஆர் ரகுமான். அவருடைய குரலில் உள்ள அதே காந்தம் இப்போதும் ஈர்க்கிறது. வாய்ஸ்களுக்கிடையே வரும் அந்த பீட் தாளம்போட வைக்கிறது. நடு நடுவே வரும் அந்த ராப் குரல், மற்றும் ஏ.ஆர் ரகுமானின் வாய்ஸ், திரும்பவும் அதிரவைக்கும் இசை, என்று ஒரு ப்யூசனே நடத்தி விடுகிறார்…ம்..என்னத்த சொல்ல..

5. காதல் அணுக்கள் – விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல்

யாரிந்த விஜய் பிரகாஷ்..காதல் அணுக்கள் என்று ஆரம்பிக்கும்போது நம் உடம்பில் உள்ள அணுக்கள் ஆட ஆரம்பிக்கிறது. நிறைய பேரின் ரிங்க் டோன் ரெடியாகி கொண்டிருக்கிறது. ஓசன்னா பாடல் போல் இந்த பாடல் ஹிட் ஆகும் என்பது சந்தேகம் இல்லை. கொஞ்சம் ஜீன்ஸ் பாடல் மட்டும் அடிக்கடி வருகிறது. ஸ்ரேயா கோஷல் சரியாக பாடவில்லையென்றால் மட்டுமே ஆச்சர்யம். வழக்கம்போல் வழமையான குரலால் அசத்துகிறார்.

6. கிளிமாஞ்சாரோ – ஜாவித் அலி, சின்மயி

என்னடா, இன்னும் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் படத்துக்கு சின்மயி பாடவில்லையே என்று நினைக்கும்போது இந்த பாடல் வந்து விடுகிறது. ஆஹா..ஆஹா..என்று இடையில் கேட்கும் அந்த குரல் அதையே திரும்பவும் சொல்ல வைக்கிறது. ஆனால் மொத்தமாக பார்க்கும்போது இந்த பாடல்தான் படத்தில் சராசரி. என்னை அவ்வளவாக கவரவில்லை என்றே சொல்லுவேன். ஆனால் வரிகளின் பலத்தால் ஹிட் ஆகலாம்

7. புதிய மனிதா – எஸ்.பி.பி, கதிஜா ரகுமான், ரகுமான்

ரஜினியின் ஓபனிங்க் சாங்காக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ஓபனிங்க் சாங்கின் அந்த பெப் இல்லாமல் ஆரம்பிக்கிறது..முதலில் ஏ.ஆர் ரகுமான் குரலில் மெதுவாக ஆரம்பிக்கும் சாங்க், எஸ்.பி.பி குரல் ஆரம்பிக்கும்போது பற்றிக் கொள்ளுகிறது. காலை சாப்பாடு சாப்பிடாமல் அப்பன் ஆட்டோ ஓட்டி சம்பாதித்த 500 ரூபாய்க்கு வாங்கிய டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு “தலைவா..தெய்வமே.,” என்று ரசிகர்கள் அடித்தொண்டையில் கத்தும் வாய்ப்பு நிறைய உண்டு. அவரும் ஏ.சி ரூமில் அமர்ந்து கொண்டு..”ம்..நிறைய திங்க் பண்ணனும்..அரசியல்னா சும்மாவா..இந்த படத்தோட 100 டேஸ் பங்க்சனுல நான் முடிவை சொல்றேன்..” என்று ஆரம்பிக்கும்போது “இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்..” என்று பி.எஸ் வீரப்பா குரலில் எனக்கும் கத்த ஆசைதான்..ஆனால் வீட்டில் நிறைய வேலை இருப்பதால் போயி பொழைப்பை பார்க்கணும்..வரட்டா…

ஒரு நிமிடம்

“நீ எனக்கு கால் பண்ணி எவ்வளவு நாள்..சாரி..எவ்வளவு வருசம் இருக்கும்..”

“ம்…ப்ச்..இப்ப என்ன பண்ணுற…”

“ம்..வால்மார்ட்ல உனக்குதான் ப்ரூட்ஸ் வாங்கிக்கிட்டு..ஏ..என்ன வாங்கி வரச்சொன்ன..ஆப்பிளா..ஆரஞ்சா…”

“அதுக்குள்ள மறந்துட்டியா..ஆரஞ்சு..ஆப்பிள்தான் நான் சாப்பிட மாட்டேனே..”

“மறந்துட்டேன்..”

“வரவர உனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு..”

“ஆமா..எல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணுனதுக்கு அப்புறம்தான்..”

“அடேங்கப்பா..இவர் பெரிய துரை..உனக்கு ஞாபக மறதி வியாதின்னு தெரிஞ்சிருந்தா உன்னைக் கல்யாணம் பண்ணியிருக்கவே மாட்டேன்..”

“ஆஹா..அப்படின்னா..நான் குதிரையில வந்து உன்னை தூக்கிட்டு போயிருப்பேன்..”

“குதிரை பாவம்டா..”

“சரி..பேச்ச மாத்தாத..நீ இனக்கு கால் பண்ணி எவ்வளவு நாள் இருக்கும்..”

“ஆமா..போடா..நான் ஆசியா கண்டத்துலயும், நீ ஐரோப்பா கண்டத்துலயும் இருக்குறோம் பாரு..இருக்குறது ஒரே வீடு..ஆபிஸ விட்டா நேரா வீட்டுலதான் வந்து இருக்க…இதுல அய்யாவுக்கு போன் வேற பேசணுமாக்கும்..”

“ப்ச்..பேசணும்..அப்பதான ஆபிஸ்ல எல்லாரும் பெருமையா பார்ப்பாங்க..பாரு இப்பதான் கல்யாணமாயிருக்கு..அமெரிக்காவுக்கு வேலை விஷயமா வந்தா கூட இன்னமும் ஹனிமூன் மூடுலதான் இருக்கான்னு..”

“ச்ச்ச்சீ..இப்படி ஒரு பெருமையா..வெட்கமா இல்லை..போடா..”

“எனக்கு எதுக்கு வெட்கம்..பொண்டாட்டி கூட பேசுறதுக்கு நான் பெருமையில்லபடணும்..சரி..நீ இல்லைன்னா விடு..எத்தனையோ பேரு.,.”

“ஓ..அய்யாவுக்கு இப்படி ஒரு நினைப்பு இருக்கோ..வீட்டுக்கு வா..சப்பாத்தி கட்டை ரெடியா இருக்கு,,,”

“ஹா..ஹா..நான் அப்பவே எடுத்து ஒளிச்சு வைச்சுட்டனே..ஹே..இரு ஒரு நிமிசம்..பில் போட்டுறேன்… ஹௌ மச்..”

“56 $”

“தாங்க்யூ..ஹேவ் அ குட் டே…”

“ஏ..லைன்னுல இருக்கியா..”

“ம்..56 $ ஆ..”

“எல்லாம் நீ தின்னுற தீனிதான்…ஹே..எனக்கு ஒரு ஆசை..கல்யாணத்துக்கு பின்னாடி நீ ஒரு தடவை கூட என் போனுக்கு கால் பண்ணினது இல்லைல..இப்ப கட் பண்ணுறேன்..கால் பண்ணுறியா..”

“ஆமா..இன்னும் பத்து நிமிசம்..வீட்டுல இருப்ப..இப்ப எதுக்கு கால் பண்ணனும்..”

“ச்…சொன்னக் கேட்கணும்..வாழ்க்கையில ஒரு தடவையாவது உங்கிட்ட இருந்து எனக்கு கால் வரணும்..”

“ம்ம்..இப்ப எங்க இருக்க..”

“கார் பார்க்கிங்க் வந்துட்டேன்..கார் எடுக்கணும்..சூப்பரா இருக்குல்ல அமெரிக்கா..எப்போதும் கார்..பெரிய பெரிய மால்ஸ்..ஷாப்பபிங்க்..லைட்டிங்க்..டாலர்..அனுபவிக்கிறோம்ல..”

“என்ன இருந்தாலும்..நம்ம ஊரு..நம்ம ஊருதான்..”

“தூக்கி குப்பையில போடுடி என் பொண்டாட்டி....அமெரிக்கா, அமெரிக்கா..தான்..சொர்க்கம்..இப்ப கட் பண்ணுறேன்..கால் பண்ணுறியா..வாவ்..உன் முதல் காலை நான் அட்டெண்ட் பண்ணப்போறேன்..…நீ கால் பண்ணுனா மட்டும் கேக்குற மாதிரி ஒரு காலர் ட்யூன் செட் பண்ணியிருக்கேன் தெரியுமா..என்ன சொல்லு..உனக்கு புடிச்ச சாங்க்..அங்காடித்தெரு பாட்டு..”உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்…” ஏ..ஒரு நிமிசம் இரு..யாரோ வெள்ளைக்காரன் ஏதோ கேக்குறான்..”

“……………..”

“வாட்…நோ..ஐ டோண்ட் ஹேவ் எனி டாலர்..”

“…….”

“நோ…வெயிட்..வெயிட்…டோண்ட் ஷூட் மீ..”

“-------“

ட்ட்ட்ரக்…ட்ரக்க்……ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷூட்…

“ஏ..என்னடா அங்க சத்தம்..என்ன நடக்குது..”

பீப்..பீப்…பீப்…பீப்..பீப்…

“-------------“

“-------“

“-------“

.பீப்…பீப்..வொய்ப் காலிங்க்..வொய்ப் காலிங்க்…வொய்ப் காலிங்க்…

“உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்…”

“-----------------------------“

“---------------------“

“---------------“

“----------“

“------“

“----“

“---“
“--“

“-“

“”

Wednesday, 28 July, 2010

மனதை மயக்கும் பாடல்(18++)


சில பாடல்கள் மனதை தொடும். சில பாடல்களை கேட்கும்போது ஒரு வித்தியாசத்தை உணரலாம். மூளைக்குள் புகுந்து நியூரான்களைத் தொட்டு அப்படியே டிராவல் பண்ணி, இதயத்தில் சென்று ஆரிக்கிள், வெண்டிரிக்கிள்(பத்தாவது அறிவியலில் 90 மார்க்...ஹி...ஹி..) எல்லாவற்றையும் தொட்டு மெய்மறக்க செய்யும். தினமும் ஆபிஸ் செல்லும்போது , காரில் எப்.எம் மில் கேட்ட ஒரு பாடல் மனதை என்னமோ செய்தது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றாம் நித்தியானந்தர்-ரஞ்சி போல ஒரு மெஸ்மரிசம் செய்தது.

முதல் தடவை கேட்டபோது அவ்வளவாக கவரவில்லை. ஆனால் தினமும் கேட்க, கேட்க, அந்த பாடலைக் கேட்காமல் ஆபிஸ் செல்ல முடியவில்லை. நீங்களும் கேட்டு பாருங்களேன் கீழே உள்ள லிங்கை கிளிக்கி...

ராபின் திக்கேவின் "இட்ஸ் இன் த மார்னிங்க்" என்ற இந்த பாடலை இன்னமும் நம்ம ஊரில் காபி அடிக்காமல் இருப்பது ஆச்சர்யம்.இங்கு எல்லா எப்.எம் களிலும் இந்த பாடல்தான் சக்கைப்போடு போடுகிறது.

எச்சரிக்கை : பாடல் கொஞ்சம் அஸ்குபிஸ்காக இருப்பதால் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கவேண்டும்(சொன்னா கேட்கவா போறீங்க)..அலுவலகத்தில் திறக்காமல் இருப்பது நலம். அப்புறம் வேலை போச்சு, மேனேஜர் திட்டுறாருன்னு , டாடா சுமோ, குவாலிஸ், ஆட்டோ போன்றவைகளை, பிளேனில் அனுப்பக்கூடாது(உபயம்: லக்கிலுக்) சொல்லிப்புட்டேன்..


Sunday, 25 July, 2010

நாங்களும் சூப்பர் சிங்கர் தாண்டி…

உலகத்துலயே எனக்கு ரொம்ப புடிச்ச விஷயம் என்ன தெரியுமா….பணம், காசு, கார், பங்களா..ம்..ஹூம்..துக்கம்தாண்ணே..அதுவும் இங்க அமெரிக்காவுல அடிக்கிற குளிருல நல்லா கால் வரைக்கும் இழுத்து போர்த்திகிட்டு முரட்டு தூக்கம் போடுறதில்ல நம்மளை அடிச்சுக்க ஆளே இல்லைண்ணா பார்த்துங்களேன். அந்த நேரத்துல கத்திய எடுத்து யாரும் குத்துனாக்கூட ஏதோ கொசு கடிக்குதுன்னு தட்டிவிட்டுட்டு தூக்கத்தை கண்டினியூ பண்ணுவோம்ல..போன வாராம் இப்படி ஒரு அசதியில தூங்குறேன்..காதுக்குள்ள கொய்ங்கினு ஒரு சத்தம்…

எனக்கு கடுப்பா வந்துருச்சுண்ணே..வேண்டா வெறுப்பா கண்ணைத் தொறந்து பார்த்தா என் வீட்டுக்காரிதாண்ணே..நல்லா ஏழு ஊருக்கு கேட்குற மாதிரி பாடிக்கிட்டு இருந்தா…

“ச…ச…ரி…..ரி….க..ம…ப..த..நி…சா…”

“அடியே..இது என்ன கொடுமை..மணி என்ன தெரியுமா..நாலரைடி..”

“ஓ..எந்திரிச்சுட்டேளா…செத்த நாழி இருங்கோ…நன்னா ஸ்நானம் பண்ணிண்டு ஒரு காபி எடுத்துண்டு வர்றேன்..”

“அடிப்பாவி..நேத்து வரைக்கும் நல்லாதாணடி பேசிக்கிட்டு இருந்த…அதுக்குள்ள என்னடி..”

“ஏண்ணா..அப்படியெல்லாம் சொல்லப்படாது..ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல பாடப்போறோன்னோ இல்லியோ…”

“அய்யயோ..இந்தக் கொடுமை எப்ப..நாம அமெரிக்காவுலலே இருக்கோம்..”

“நேக்கு எல்லாம் தெரியும்..அதுக்கென்ன இப்போ..அதுதான் அவாளே சொல்லிட்டாளே..உலகத்துல இருக்குற எல்லாம் கலந்துக்கிடலாம்னு சொல்லி…”

“அடியே அபிஷ்டு..அய்யயோ..கொஞ்ச நேரம் பேசினா எனக்கும் பாஷை மாறுதே..நாமதான் சென்னை போகமாட்டமே…”

“நாமன்னு சொல்லப்படாது..நீங்கன்னு சொல்லுங்கோ..”

“இது என்ன கூத்து..”

“ஆமாங்க..போன வாராமே..என் குரலை சிடில பதிவு பண்ணி விஜய் டிவிக்கு அனுப்பிட்டேன்..”

“செத்தான் விஜய் டிவிக்காரான்…”

“என்ன..என்ன சொன்னேள்…”

“தயவு செய்து எப்போதும் போல பேசுறியா..இப்படியெல்லாம் பேசுனா உடனே செலக்ட் பண்ணிருவாய்ங்களா..நல்லா பாடுனாதான் செலக்ட் பண்ணுவாயிங்க..”

“ஒரு முயற்சிதாங்க..சரி..நான் ஒரு பாட்டு பாடுறேன்..ஸ்ருதி நல்லா இருக்கா பாருங்கோ..”

“ஸ்ருதி பக்கத்து வீட்டு பொண்ணாச்சே…நல்லாதான் இருக்கும்..”

“உதைபடுவேள்..நான் என் குரலோட ஸ்ருதிய சொன்னேன்..”

“சரி பாடி தொலை..”

“மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன…”

“அய்யோ கடவுளே..நாலரை மணிக்கு எனக்கு ஏழரையா…”

“ஏங்க..என் பாடல் பற்றி உங்கள் கமெண்ட்ஸ்..”

“நல்லாதான் பாடுற..என்ன..ஸ்ருதி அங்கெங்க போயிடுது..லாண்டிங்க் நோட்ஸ் சரியில்ல..”

“அந்த நோட்ஸ் வேணுன்னா இண்டியன் ஸ்டோர்ஸ்ல வாங்கி வந்துடுறீங்களா..”

“அப்புறம்..மேல் ஸ்தாயில பாடுறச்ச..மூச்சு வாங்குது..நல்லா மூச்சை இழுத்துப் புடி..”

“ஏங்க செத்துற மாட்டோமா..”

“அதெல்லாம் மாட்டே..அப்புறம்..பிரத் கண்ட்றோல் இல்ல..”

“என்னது பெர்த் கண்ட்றோலா..”

“அடியே..அது பிரெத் கண்ட்ரோல்லு..அப்புறம்..கமகம், இன்னும் நல்லா இருக்கணும்..”

“நான் வேணுன்னா ப்ரூ போடட்டுங்களா..”

“அய்யோ..இது வேற கமகம்..அப்புறம்..வாய்ஸ் அப்ப்பப கிராக் ஆகுது…”

“யாரைப் பார்த்து கிராக்கென்னு சொன்னீங்க..” ன்னு சொல்லிட்டு அழுக ஆரம்பிச்சுட்டா….

“சூப்பர்..யூ.ஆர்..செலக்டட்..”

“என்ன..உண்மையாதான் சொல்லுறீங்களா…”

“பின்ன...நம்ம ராகினிஸ்ரீ எப்படி அழுதுச்சு தெரியுமா….”

“வாவ்..அப்ப நானும் செலக்ட் ஆகிடிவேன் போலிருக்குங்க…”

“சரி..முதல் ரவுண்டுல செலக்ட் ஆனா உன்னோட பீலிங்க் எப்படி இருக்கும்…”

“பின்ன..ஞான் செல்க்ட் ஆனால்..குறைச்சு குறைச்சு சந்தோசம் படும்..எண்ட குருவாயூரப்பன் அருளாலதான் ஞான் செலக்ட் ஆனேன்..இப்படிதான் ஞான் கொச்சின்ல..”

ஆஹா..அண்ணே..பைனல் வரைக்கும் வந்துருவா போலிருக்கே…

Monday, 19 July, 2010

துடிக்க துடிக்க ஒரு காதல்

“நீ யாரையாவது காதலிச்சிருக்கியா....”

இந்த கேள்வியை அவளிடம் கேட்பதற்கு முன்பு எவ்வளவு முறை யோசித்திருப்பேன். எத்தனை தடவை கண்ணாடி முன்பு சொல்லிப் பார்த்திருப்பேன்.

“காதல் பத்தி உங்க அபிப்ராயம் என்ன..”..ம்..ம்ம்..சரியா வரலையே..”எப்படிபட்ட ஆளை காதலிப்பீங்க….”..ப்ச்..இன்னும் கூட பிரண்ட்லியா வரலாம்..

இப்படி பல தடவை கண்ணாடி முன்னால் நின்று என்னையே அவளாக நினைத்துக் கொண்டு சொல்லிக் கொண்டேன்..மனதுக்குள் உள்ளூற பயம்தான்..ஆனால் என்ன பண்ண முடியும். இதற்கு அடுத்து சொல்லப்போகும் வார்த்தை தானே என் வாழ்க்கையே மாற்றப்போகிறது…

நித்யா..என் வாழ்க்கையில் அதிகம் உச்சரித்த, உச்சரிக்க ஆசைப்பட்ட பெயர்..விண்ணைத்தாண்டி சொல்லவேண்டுமானால், என் வாழ்க்கையே புரட்டிப்போட்டவள். என் முகத்தையும் அடிக்கடி கண்ணாடியில் பார்க்கவைத்தவள். எப்போதும் கலைந்தே கிடைக்கும் பரட்டைத்தலையே சீவுவதற்காக இரண்டு ரூபாய் கொடுத்து சீப்பு வாங்க வைத்தவள்..அனைத்தும் அவள் என்னிடம் பேச ஆரம்பித்தவுடன்.

முதுகலை கல்லூரியில் நான் சேர்ந்த முதல் நாள். அனைத்து பேரும் என்னிடம் பேசினர்..அவளைத் தவிர..

“விடுடா..ராங்கியா இருப்பா..”

“மச்சான்..ஆளைப்பார்த்தவுடனே தெரியலை..இதெல்லாம் படிப்பு கேசுடா..நம்ம மாதிரி ஆளுங்ககிட்டல்லாம் ஒட்டாது..”

“இல்லடா..மாப்பி..அவ திமிரா இருக்குறமாதிரி தெரியலை..ஒருவேளை நாமளா போய் பேசணுமோ..”

“இதோடா..இதோ..இந்த பஸ் ஸ்டாண்டுலதான் நிக்குறா….இம்புட்டு பேரு முன்னாடி “நீங்க அழகா இருக்கீங்க” ன்னு எல்லாரும் கேட்கும்படி சொல்லு பார்ப்போம்..சொல்லிட்டா மவனே..இன்னைக்கு நான் டிரீட்டு..சொல்லலே…ஒருவாரம் புல்லா நீதாண்டா டிரீட்டு..”

எனக்கு சவாலாக தோன்றியது..

“டே..வெண்ணை..டிரீட் ரெடியா வை..ஒரு நிமிசத்தில சொல்லுறேன் பாரு..”

மனதுக்குள் வைராக்கியத்துடன் சென்றேன்..பஸ் ஸ்டாண்டில் தேவதையாய் அவள். பலபேரின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தாள்…அவளருகில் சென்றேன்..

“எக்ஸ்கியூஸ்மி..”

அப்போதுதான் அவள் பார்வையை இவ்வளவு அருகில் பார்க்கிறேன். என்ன பார்வை அது..இவள் மட்டும் விடுதலைக்கு முன்பு பிறந்திருந்தால் இந்தியாவுக்கு விடுதலையே கிடைத்திருக்காது. என்னை ஒரு நிமிஷம் அடித்து போட்டது. சொல்ல வந்த வார்த்தைகள் என் மனதுக்குள்ளே அடங்கிப்போனது. என் வாழ்க்கையில் முதல்முறையாக ஊமையாகிப்போனேன்..

“எஸ்..”

அப்படியே சிலையாகிப்போனேன்…ஒரு பெண்ணின் பார்வைக்கு இப்படி ஒரு சக்தியா..

“எஸ் வாட் டூ யூ வாண்ட்..”

“ம்ம்ம்..இல்ல..நீங்க எங்க கிளாஸ்தான..”

க்ளுக்கென்று சிரித்தாள். பெண்கள் சிரிப்பதற்கு அர்த்தம் தேடினால் உலகத்தின் முதல் முட்டாள் நீங்கள்தான். ஆனால் அவள் சிரிப்பில் அர்த்தம் தெரிந்தது…”வாடா..ஜொள்ளு பார்ட்டி..”

சுதாரித்துக் கொண்டேன்..

“ஹி..ஹி..வாட் த ஸ் டைம் நௌ..”

வாய் குழறினாலும் எனக்கு அவ்வளவுதான் ஆங்கிலத்தில் பேச வரும்..நண்பனுக்கு ஒரு வாரம் டிரீட் கொடுக்க அப்பாவிடம் நிறைய பொய் சொல்லவேண்டியிருந்தது…

அவள் பார்வைக்காகவே அடிக்கடி கல்லூரி செல்ல ஆரம்பித்தேன்..சனி ஞாயிறு வந்தாலே கடுப்பாக இருந்தது. மெல்ல, மெல்ல அவளும் என்னிடம் பேச ஆரம்பித்தாள்..பஸ் ஸ்டாண்டில் என் ஊருக்கு செல்லும் வழித்தடம் தான் அவளுக்கும் என்பது நிறைய வசதியாகிப்போனது.. நிறைய பேசுவோம்..சம்பந்தமில்லாமல்..எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தாள். ஆங்கில புத்தகங்கள்..அனைத்தும் என் அலமாரியில் உறங்கின..”சிட்னி ஷெல்டன்..என்னமா எழுதுறான் பாரேன்..” கூசாமல் பொய் சொன்னேன்…அவ்வளுக்கு கஜல் பாடல்கள்தான் புடிக்கும் என்பதால் மொழி தெரியாவிட்டாலும் என்னை நானே பழக்கி கொண்டேன்.., சில கஜல் பாட்டுகளை போட்டபோது “இழவு வீட்டுல பாடுறமாதிரி இருக்கு..முதல்ல..அந்த கருமத்தை ஆப் பண்ணுடா..” என்று அம்மாவிடம் திட்டு வாங்கியதாக ஞாபகம்...சிட்டி முழுவதும் நாங்கள் நடக்காத தெருக்களே இல்லை என்றாகி விட்டாது..”டே..ஜஸ்ட் பிரண்ட்ஷிப் தாண்டா..” நண்பர்களிடம் பொய் சொன்னாலும் மனம் குதுகலித்தது..

கடைசியாக தீர்மானித்தேன்..அவளிடன் என் காதலை சொல்லி விடுவது....நாளைக்கே…அப்படி என்னை நான் தயார் செய்ததுதான் முதல் பாராவில் நீங்கள் படித்தது..எனக்குள் நானே பலமுறை சொல்லிப் பார்த்த பின்பு முடிவாக அவளிடம் சென்றேன்..

“நித்யா..”

“சொல்லுடா.”

“ப்ச்..ஒன்னுமில்ல விடு..”

“ஏதோ சொல்ல வந்த..என்ன விஷயம் சொல்லு...

“பரவாயில்லை..விடு..”

“ஹே..இப்ப சொல்லப்போறியா..இல்லையா..”

“ம்..அது வந்து..நீ யாரையாவது காதலிச்சிருக்கியா..”

டக்கென்று கேட்டுவிட்டேன்..அவள் முகத்தை பார்த்தேன்..குழப்ப ரேகைகள்..அவள் “இல்லை” என்று சொல்லவேண்டும்..திரும்ப அதே கேள்வியை அவள் என்னிடம் கேட்பாள்..அப்போது “நீதான்” என்று சொல்லவேண்டும் இதுதான் என் திட்டம்..

அவள் யோசித்தாள்..எனக்கு பயமாக இருந்தது..கடைசியாக அதை சொன்னாள்..

“எஸ்..ஐயாம் இன் லவ் வித் மை ஸ்கூல்மேட்..”

அப்படியே நொறுங்கிப்போனேன்..ஒருவருட சொர்க்கத்தை யாரோ ஒரு நிமிடத்தில் பிடுங்கியதாக இருந்தது..மனக் கோட்டை எல்லாம் மண் கோட்டையாகிப்போனது..முதல்முறையாக தற்கொலை பண்ணலாம் என்ற எண்ணம் வந்தது..

“டே..நான் ஏற்கனவே உங்கிட்ட சொல்லாமுன்னு நினைத்தேன்.அவன் பேர் ஆனந்த்..என் ஸ்கூல் மேட்..ஆறு வருசமா லவ் பண்ணுறோம்..அவன் எவ்வளவு நல்லவன் தெரியுமா..ஹி இஸ் நைஸ் மேன்..”

பேசிக்கொண்டே இருந்தாள்..எதுவும் என் காதில் விழவில்லை..தற்கொலை பண்ணுவதற்கு முன்பாக ஆனந்தைப் தீர்த்துக்கட்டலாமா என்று எண்ணிக்கொண்டேன்..இதற்கு மேல் அங்கு உட்கார பிடிக்காமல் நடைபிணமாய் எழுந்து நடந்தேன்.

அதற்கு மேல் அந்த கல்லூரியே எனக்கு பிடிக்காமல் போயிற்று..அவளைப் பார்க்க பிடிக்காமல் கல்லூரியை மட்டம் தட்ட ஆரம்பித்தேன். பஸ் ஸ்டாண்டே கதியாக கிடந்த நான் பஸ்ஸில் போவதே வெறுக்க ஆரம்பித்தேன். பேர்வெல் பார்ட்டி கூட செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன்..வீட்டில் மிகவும் பயப்பட்டார்கள்..பேய் ஏதாவது அடிச்சிருக்கும் என்று எண்ணி கோயிலுக்கு கூட்டி சென்றார்கள்..அப்பா, அவருக்கு தெரிந்த ஒரு மேனேஜரை வைத்து ரெக்மண்டேசனில் வேலை வாங்கி தந்தார்கள்..

வேலைப் பளுவில் அனைத்து கவலையும் மறந்து போனது. வாழ்க்கை ஓட்டத்தில் ஐக்கியமாகிப்போனேன்….படிபடியாக உயர்ந்து அதே கம்பெனியில் ப்ராஜெக்ட் லீட் ஆனேன். பெற்றோர்கள் கடமையை முடிக்க எனக்கு திருமணம் பேசினார்கள்…அதுவும் முடிந்தது..

உலகத்தில் யாருக்கும் அப்படி ஒரு மனைவி அமையாது..உள்ளங்கையில் வைத்து தாங்கினாள்..எனக்கு காய்ச்சல் வரும் முன்பே அவள் கலங்கினாள். சலிக்காமல் அனைத்து வேலைகளையும் செய்தாள். அனைத்தையும் மறந்து போனேன்..அன்பின் அடையாளமாக எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது..வாழ்க்கை இப்படியாக ஓடிக் கொண்டு இருந்தபோதுதான் அவனை சந்தித்தேன்..என் கல்லுரி நண்பன்..ராஜேஷ்..என்னைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்தவன்,....

“ஹே..ராஜேஷ்..எப்படி இருக்க..”

“நான் நல்லா இருக்கண்டா..நீ.”

“ம்..நல்லா இருக்கேன்..”

“டே..சொல்ல மறந்துட்டேன்..நேற்று அவளைப் பாத்தேன்..”

“யாரு..”

“அதுதாண்டா..காலேஜ்ஜுல விழுந்து விழுந்து லவ் பண்ணினுயே..நித்யா.. அவதாண்டா..”

அந்தப்பெயரை கேட்டவுடன் என் இதயம் ஒரு நிமிடம் நின்றது..எனக்கு என்ன சொல்வதென்று தெரியலை..

“டே..என்னடா..ஏதாவது பேசுடா..”

“ம்ம்…என்ன பண்றாலாம்..”

“கல்யாணம் ஆகிடுச்சு..ரெண்டு குழந்தையாம்..சந்தோசமா இருக்கா..”

“அப்படியே இருக்க சொல்லு..நான் வர்றேன்..”

எழ முயற்சித்தேன்..

“டே..அப்புறம் ஒரு விஷயம்.” நண்பன் இழுத்தான்..

“பேச்சுவாக்குல நீ அவளை லவ் பண்ணுன மேட்டரை சொல்லிட்டேன்.. அவ உங்கிட்ட பேசனும்னு சொன்னா..உன் செல்போன் நம்பரை கொடுக்க தயக்காம இருந்துச்சு..அதுதான் உன் வீட்டு நம்பரை கொடுத்துட்டேன்...”

எனக்கு அவனை ஓங்கி அறையலாம் போல இருந்தது..நாலு திட்டு திட்டிவிட்டு வீடுநோக்கி சென்றேன்..எப்போது என்னைப் பார்த்தவுடன் அழகாக கட்டிக்கொள்ளும் என் குட்டிப்பாப்பா அன்றும் என்னை வந்து கட்டிக் கொண்டாள்..

“வாடா..வாடா..செல்லம்..அப்பா உனக்கு என்ன வாங்கி வந்துருக்கேன் பாரு..டடாய்ங்க்..ஐஸ்கிரீம்ம்ம்..”

“ஐ..ய்..சூப்பர்..தேங்க்ஸ் டாடி..”

குதூகலித்தாள்..ஒடி வந்து முத்தம் கொடுத்தாள்..

“டாடி…ஒரு ஆண்டி உங்களை கேட்டு போன் பண்ணியிருந்தாங்க..அம்மா கிச்சன்ல இருந்ததால நான் தான் எடுத்தேன்..அப்பா வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டேன். யாரு டாடி.”

“ம்ம்..ராங்க் நம்பரா இருக்கும்பா..இனிமேல் அந்த ஆண்டி போன் பண்ணினா அப்பா செத்துட்டாருன்னு சொல்லு..”

அர்த்தம் புரியாமல் தலையாட்டினாள்..

“எங்க போன..செல்லம்….அம்மா தேடுறேன் பாரு..”

கையில் பிசைந்த சோறுடன் என் மனைவி..

“வந்துட்டீங்களா..இவ பண்ணுற சேட்டை தாங்க முடியலை பாருங்க..ஒரு வாய் சோறு வாங்க மாட்டிங்குறா,.,,இவள கண்டிக்க மாட்டிங்களா..”

“நான் சாப்பிட மாட்டேனே..” பழிப்பு காட்டி ஓடினாள்..என் குழந்தை..பின்னாலே என் மனைவி..

“இப்ப சாப்பிடிறயா..இல்லையா..அம்மா அடிப்பேன்..”

“ம்..ஹூம்..”

“சாப்பிடுடா..என் செல்லம்ல..”

“ம்…ஹீம்..”

“புஜ்ஜிம்மால்ல..செல்லம்ல.. குட்டி பாப்பா சாப்பிடுமாம்..அம்மா கார்ட்டுன் போடுவாங்களாம்..”

“ம்..ஹூம்..”

“ஏ..நில்லு..ஓடாத..பாப்பா..நில்லு..பாப்பா…நித்யா குட்டி….”

Wednesday, 14 July, 2010

மதராசபட்டினம், அம்பாசமுத்திரம் அம்பானி, பா.ரா பழனிச்சாமிஆணி அதிகமாகிவிட்டதால் இப்போதெல்லாம் வாரத்திற்கு ஒரு பதிவு கூட போடமுடிவதில்லை(சந்தோசமா இருக்குமே..) அட்லீஸ்ட் மாதத்திற்கு ஒரு பதிவு எழுதாவிட்டால், செம்மொழி மாநாட்டை நடத்தவே மாட்டேன் என்று கலைஞர் அடம்பிடித்ததால், பதிவை தவிர்க்க முடியவில்லை(கடுப்பா இருக்குமே..) ஆணி அதிகம் இருந்தாலும், திரைப்படங்களைப் பார்ப்பதை குறைக்க முடியவில்லை(குழப்பமா இருக்குமே..). அப்படி சென்ற வாரம் பார்த்த படங்களின் விமர்சனம் இதோ.

மதராசப்பட்டினம்

டைட்டானிக் பார்த்திருக்கீறீர்களா..பார்க்காவிடில், உங்களுக்கு ஏதோ ஹார்மோன் கோளாறு இருக்கிறது என்ற பயத்திலாவது பார்த்திருப்பீர்கள். அதில் இரண்டு கிலோ எடுத்துக் கொள்ளுங்கள், லகான்?? ஹிந்தி தெரியாவிட்டாலும், சேட்டு பிகர்களை சைட் அடிப்பதற்காகவே, ஈகா தியேட்டருக்கு சென்றிருப்பீர்கள். அதிலிருந்து இரண்டு கிலோ எடுத்துக் கொள்ளுங்கள். நாடோடித் தென்றல்?? என்னது பார்க்கலையா..அப்பறம் எப்படியா உங்களுக்கு ரஞ்சிதாவை தெரியும்..? என்னது யாரது ரஞ்சிதாவா..? இப்படி கேட்டால் நீங்கள் இன்னும் காற்று வர கதவை திறக்கவில்லை என்றாகும். அதிலிருந்து (அண்ணே..படத்திலிருந்து..) இரண்டு கிலோ எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்குங்கள். சுவை சேர்க்க, கொஞ்சம் காமெடி, சுதந்திர போராட்ட வரலாறு..என்று சேர்க்கலாம்..நன்றாக கலக்குங்கள்..இப்போது சுவையான மதராசப்பட்டினம் ரெடி..என்னது ஸ்டவ்வை பத்த வைக்கலையா..போங்கையா….

என்னதான் பலபடங்களின் கலவையாக இருந்தாலும், சுவையான பண்டம் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். சுதந்திர போராட்ட காலத்தில் சூப்பர் பிகரான வெள்ளைக்காரப் பொண்ணு(பரம்பரை புத்தி போகலை பாரு..) எமி ஜாக்சனுக்கும் எப்போதும் கீச்சு குரலில் பேசும் சலவைத்தொழிலாளி ஆர்யாவுக்கும்..அதாண்ணே..அந்த இது..அந்த இது..பேர் என்ன..ம்..சூப்பர் பிகர்களைப் பார்க்கும்போதெல்லாம் வயசு பசங்களுக்கு வருமே..ம்..காதல்..அது பற்றிக் கொள்கிறது. நம்ம ஊருன்னா அருவாளை தூக்குவோம்.இவிங்க துப்பாக்கி தூக்கி ஆர்யாவையும், எமி ஜாக்சனையும் துரத்து துரத்துன்னு துரத்துறாயிங்க..படம் பார்க்குற நமக்கே மூச்சு வாங்குதுன்னா பார்த்துங்களேன். கடைசியா ஆர்யா கொடுத்த தாலியை எடுத்துக்கொண்டு ஆர்யாவைப் பார்ப்பதற்காக லண்டனில் இருந்து சென்னை வருகிறார், கேத் வின்ஸ்லெட்..சாரி..வெள்ளைக்காரப்பெண். அப்போது அவர் நினைவுக்கு வருவதைப் படமாக எடுத்திருக்கிறார்கள்.,

ஆனால் படம் போரடிக்காமல் போகிறது. படத்தில் உள்ள ஒவ்வொரு கேரக்டரும்(விமானம் பறந்தாலே குண்டு போடுறாயிங்க என்று ஓடும் நபரும், எப்போது தூங்கி கொண்டே இருக்கும் கிராமத்து ஆளும், அந்த பள்ளிக்கூட வாத்தியாரும், குஸ்தி வாத்தியார், பரிதாபமாக சாகும் அந்த சுதந்திரப்போராட்ட வீரரும் பச்சக்கென்று மனதில் ஒட்டி விடுகிறார்கள். முதல் பாராட்டு ஆர்ட் டைரக்டருக்கு..நம்ம சென்னைதானா, என்று வியப்பூட்டும் வகையில் கலைநயமிக்க செட்டுகள். கண்டிப்பாக விருது உண்டு. அடுத்து டைரக்டர் விஜய்..இப்படி ஒரு படத்தை தந்ததற்காவே முதலில் பாராட்டு. போரடிக்காமல் திரக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த பாராட்டு, வெள்ளைக்காரப்பெண் எமிஜாக்சனுக்கு. கிஸ் அடிக்க நிறைய வாய்ப்புகள் இருந்தும் டீசன்டாக நடித்து பலபேர் வயிற்றில் எரிச்சலை கிளப்பியிருக்கிறார். ஆர்யா நடிப்பில் இரண்டு படி முன்னேற்றம். இந்தப் படம் கண்டிப்பாக அவருக்கு ஒரு மைல் கல்.

இன்னும் கொஞ்சகாலம் இருந்திருக்காலமோ என்று வருந்த வைக்கும் அனிபாவின் நடிப்பு, அந்த குஸ்தி சண்டை, நீரவ்ஷாவின் கேமிரா.. ஜீவி பிரகாஷின் இசையில் உதித்நாராயணன் கொல்லும் “வாம்மா துரையம்மா..” என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

இறுதியாக மதராசபட்டினம்..டைட்(டா) டானிக் குடிச்ச மாதிரி ஒரு கிக்கு..

பா.ரா பழனிச்சாமி

முதலில் எனக்கு கைகொடுத்து விடுங்கள். இந்திய தொலைக்காட்சி வரலாற்றில்..ஐயோ..தமிழ் பதிவுலகிலே முதல் முறையாக யாருமே விமர்சனம் எழுதாத ஒரு படத்திற்கு விமர்சனம் எழுதிகிறேன்.சத்யராஜ் ஒரு படத்தில் சொல்லுவார்..ஆப்பு என்பது யாரும் நமக்கு ஸ்பெசலாக வைப்பதில்லை..அங்கெங்கு பிக்ஸ் ஆகி இருக்கும்.அதில் நாமாக சென்று அமர்ந்து கொள்வோம். அப்படி நானாக தேடி சென்ற ஆப்புதான் இந்த படம். விவசாய விஞ்ஞானியான சுந்தரம் மாஸ்டர் தன் குடும்பத்தை அழித்தவர்களையும், தியட்டரில் பொறுமையின் சிகரமாக அமர்ந்திருக்கும் நாலு பேர்,ஆபிரேட்டர், முறுக்கு விற்பவர் என்று அனைவரையும் கொல்வதே உதை..சாரி கதை..இந்த படம் நடித்ததற்கு பதில் சுந்தரம் மாஸ்டர் “சூப்பர்..சூப்பர்..சூசூசூசூப்பர்” என்று கடித்து குதறும் ஜோடி நம்பர் ஒன்னுக்கு ஜட்ஜாகவே இருந்திருக்கலாம். ஒரே ஆறுதல், படத்தின் இசை. சில பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றன.

இறுதியாக பா.ரா பழனிச்சாமி..ப்ரீயா டிக்கெட் கிடைச்சா கூட போயிடாதீங்க(படம் இன்னும் ஓடுதா..??)

அம்பாசமுத்திரம் அம்பானி

காமெடி கருணாஸை ஹீரோவாக்கியிருக்கும் படம். அம்பானியாக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வரும் ஒருவன், அம்பானியானானா அல்லது போனியானான என்பது கதை. கதையின் ஹீரோவாக கருணாஸ் ஜெயித்து விட்டார் என்றே சொல்லாம். உண்மையிலேயே மனிதர் நடிக்கிறார். அதுவும் அனைத்தையும் இழந்து விட்டு, ரயில் நிலையத்தில் புலம்பும் நடிப்பு கலக்கல். கலகலப்பாகவும், அதே நேரத்தில் லாஜிக்காவும் கதையை அமைத்து டைரக்டர் ஜெய்த்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் வரும் ஹீரோயின் கவர்ச்சியும், பாக்யராஜ் பாணி காட்சிகளும், குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்களை முகம் சுழிக்க வைக்கின்றன. இசையமைப்பாளராக கருணாஸ் ஜஸ்ட் பாஸ். வித்தியாசமான அதே நேரம் ஆச்சர்யமான கிளைமாக்ஸ் படத்தை வெற்றி படமாக்குகிறது. கருணாஸ் கூடவே இருக்கும் பொடிப்பையன், திடிரென்று வில்லனாக மாறுவது யாருமே எதிர்பார்க்காத ஒன்று.

இறுதியாக அம்பாசமுத்திரம் அம்பானி – ஏலே..அசத்திப்புட்டாயிங்கல்ல..