Thursday 22 September, 2011

விஜய் டிவியின் நீயா நானா – கொலையா கொல்லுறாய்ங்கப்பா

இந்த விசய் டிவியில ஞாயிற்றுக்கிழமையான்னா, மிச்சம் இருக்குற உசுரை எடுக்குறதுக்குன்னே, ஒரு ப்ரோகிராம் போடுறாய்ங்கண்ணே..பார்க்கவே, பல்க்கா, இந்த வேகாத வெயிலயும், கோட்டு சூட்டு போட்டுகிட்டு, ஒரு மனுசன், பேரு கோபிநாத்தாம்..வாயைத் தொறந்தா, பேசிக்கிட்டே இருக்காருண்ணே..சரி, பயபுள்ளைக்கு ஏதாவது வியாதி இருக்கும்போலிருக்கேன்னு நினைக்ககூட முடியல, ஏன்னா சிலநேரம், ரொம்ப நல்லா பேசுறாருங்கிறதனால தான். அதுவும் இல்லாம, சானலை அங்கிட்டு திருப்புனா, “யேய்..என்னடா ராஸ்கல்..என்ன கொரியோகிராப் பண்ணியிருக்க..பேசாத..” என்று கலா மாஸ்டர் பண்ணும் அடாவடி தாங்கமுடியாமலும் தான்..

இப்படித்தான், போனவாரம் என்னடா, ஒரே பொண்ணுங்களா இருக்கேன்னு நீயா நானா பக்கம் திருப்ப ஆரம்பிச்சேன்..டாப்பிக்கு “எது சிறந்தது…டஸ்க்கா(மாநிறம்), பேர்(வெள்ளைத் தோலாம்மா..)” நம்மளுக்கெல்லாம் டாஸ்மார்க்குதான் தெரியும் தவிர, டஸ்க்கெல்லாம் இப்பத்தான் கேள்விப்படுறேன்.. சரி, பயபுள்ளைக நல்லாத்தான் இருக்குதுகன்னு நம்பி உக்கார்ந்தா, அவிங்க பேசுற கேட்டு பி.பி ஏறுதுண்ணே. அதுவும், நம்ம ஊரு பொண்ணுங்ககிட்ட , அழகைப் பத்தி கேட்டாலே “ஹே..ஐம் ஹேவிங்க் லாங்க் ஹேர்யா…ஐ பீல் ஷையா..” என்று எல்லாத்துக்கும் “யா..யா” போட்டே உசிரை எடுக்குங்க..அதுல மைக்க வேற கொடுத்துட்டா சொல்லவா வேணும்…யப்பே, ஒரு பொண்ணு என்னடான்னா, அதுக்கு ப்யூச்சர் நல்லா இருக்காம், 40 பேரு ப்ரோபோசல் பண்ணியிருக்காய்ங்களாம்,, இன்னொரு பொண்ணு, மூக்கு நீட்டிக்கிட்டு இருக்காம்,,அது சூப்பரா இருக்காம்..இன்னொரு பொண்ணுக்கு நெத்தி அகலாம இருக்காம்..அதனால பஸ்ஸடாண்டுல நிக்கவே முடியலயாம், பசங்க சுத்தி, சுத்தி வர்றாயிங்களாம்…இன்னொரு ஆண்டிக்கு காலேஜ் போற வயசுல பொண்ணு இருக்காம், இப்ப கூட ஒரு ப்ரோபோசல் இருக்காம்..யோவ்..என்னங்கயா இது..எனக்கு பார்க்குறப்பய கண்ணைக் கட்டிக்கிட்டு வந்துச்சுண்ணே…

இதுல வேற இந்த கோபிநாத்து, ரெண்டு பொண்ணுங்களை ஏத்தி விடுறாரு..அய்யோ..அதுதான் டெய்லி பஸ்ஸடாப்புல பார்க்குறோமே..அன்னைக்கு பஸ்ஸடாப்புல நிக்குறேன்..பக்கத்துல ஒரு பொண்ணு, ஒரு பொண்ணுக்கிட்ட பேசுதாம்…

“ஹே..1 கேஜி இங்கிரீஸ்டு யா…ஐ ஃபீல் சேட்..”

அதுக்கு இந்த பொண்ணு..

“நோ யா..யூ ஹேவ் டூ பி இன் டயட் யா..”

“யா..கரெக்ட்..ஐ ம் கோயிங்க் டூ ரெடியூஸ்ட் டூ ஒன் இட்லி..”

அதாவது, மதிய சாப்பாடுக்கு ரெண்டு இட்லி சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சாம்..இனிமேல் ஒரு இட்லிதானாம்மா… அடங்கொன்னியா..எக்மோரு பக்கம் போனா, பிளாட்பாராத்துல 2 இட்லி கூட கிடைக்காம, ஒரு கூட்டமே பட்டினியில படுத்துக்கிடக்காய்ங்க..இதுக டயட்டுக்காக பட்டினி கிடக்குதுங்க…ஏண்ணே, உலகம் அவ்வளவு சீக்கிரம் அழியும்ங்கிறீங்க???

அப்புறம், மைதா மாவுக்கு நல்லா போர்வை போத்தின மாதிரி சீப் கெஸ்டாம்..பேரு ஜனனி ஐயராம்…காலுமேல காலு போட்டிக்கிட்டு பேசுறப்ப, நம்ம நாடு சீக்கிரம் வல்லரசா ஆகிடுமோ, பயம் வந்துருச்சுண்ணே..அந்த சைடு ஹிப்பி வைச்சிக்கிட்டு ஒரு புள்ள இங்கிலீபிசுல பிச்சி உதறுத பார்த்து நமக்கு கை காலெல்லாம் நடுங்குதுண்ணே..நல்ல வேளையா கடைசியல, நம்ம காலேஜ் பசங்ககிட்ட ஒரு சர்வே எடுத்தாய்ங்க..நம்ம பசங்களை கண்டிப்பா பாராட்டணும்னே..எங்கம்மா அடிக்கடி சொல்லுற, “ஏலே..செவத்த தோலை பார்த்து மயங்கிறாதடா..” ங்கிற மாதிரி “மாநிறமே சிறந்ததுன்னு தீர்ப்பு சொல்லிருக்காய்ங்க..நல்லா இருங்கயா.

எல்லாத்துக்கும் கோவாலுக்கிட்ட கருத்து கேட்போமே, இதுக்கும் கேட்காம இருந்த வரலாறு மன்னிக்காதேன்னு கோவாலுகிட்ட கேட்டேன்,..

“கோவாலு..எந்த பொண்ணுங்க அழகுடா….மாநிறமா, செவத்த தோலு..”

பாவிப்பய சொல்லுறான்..

“ராசா..எதுனா இருந்தா என்னடா..பிகரு பார்க்க சூப்பரா, அம்சமா இருக்கா..அது போதும்டா…கோழி குருடா இருந்தாலும்..”

எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வந்துச்சுண்ணே..இனிமேலு தாங்கமுடியாதுன்னு நல்லா போர்வையா பொத்திக்கிட்டு தூங்குனா, 4 மணிக்கு அலாரம் வைச்சு எழுப்பி வூட்டுக்காரம்மா கேட்குறா…

“ஏங்க..நான் டஸ்க்கா, பேர்(fair) ஆ….”

Tuesday 20 September, 2011

எங்கேயும், எப்போதும் திரைப்படம் – டைரக்டரு நின்னுட்டாண்ணே.


நெடுநாளைக்கு அப்புறம், ஒரு படம் பார்த்தபின்பு மனதை ஏதோ செய்தது. தூக்கம் வரவில்லை. எப்போதும் அதைப் பற்றிய நினைவுகள். யார் சொன்னது, திரைப்படம் ஒரு பொழுது போக்கு சாதனம் என்று. சரியான கருத்தை சொல்லும் திரைப்படம், ஒரு பாடம். அப்படி கடைசியாக நான் பார்த்த மன்னிக்க, படித்த பாடம் “எங்கேயும், எப்போதும்” திரைப்படம்.

கே.பி.என் பஸ் மோதி, 20, 30 பேர் இறந்தபோது நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். எல்லாரும் அதை ஒரு செய்தியாக படித்துவிட்டு ஒரு “உச்” கொட்டிவிட்டு அடுத்த வேளை பார்க்க சென்று விடுவோம். ஆனால் அதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம், கனவுகள், ஆசைகள், பாசங்கள். இமைப்பொழுதில் அனைத்தும் அப்படியே மண்ணாய் போகிறது.

நீங்க, திட்டுனாலும் பரவாயில்லைண்ணே..நம்ம ஊர்க்காரயிங்களுக்கு பட்டாலும் புத்தி வராது. நைட்டு 9 மணிக்கு சென்னையில பஸ்ஸ எடுப்பாய்ங்க. 4.30 மணிக்கெல்லாம் மதுரை வந்துருவாயிங்க.. என்ன ஒரு வேகம்.. 100, 110 கி,மீ அசுரவேகம்..சத்தியமா சொல்லுறேண்ணே..ராத்திரி பயணம் செய்யும் எந்த ஒரு ஆம்னி பஸ்ஸிலயும் நான் தூங்குனதேயில்லை. யப்பா….நான் சொல்லுறதுக்கு விளையாட்டா இருக்குற மாதிரி நினைச்சீங்கன்னா, ஒரு 10 நிமிசம் டிரைவர் சீட்டு பக்கத்துல உக்கார்ந்து பாருங்க..அரை மணிநேரத்துக்கு மேலே உங்களால உக்காரவே முடியாது…அவ்வளவு அஜாக்கிரதையான வேகம். அதுல பாதி தூக்கம் வேற..என்னைக்கும் டிரைவர் பக்கத்துல உக்கார்றவர், டிரைவருக்கு பேச்சு கொடுத்துக்கிட்டே வரணும். ஆனா, ஒரு பஸ்ஸுல கூட அப்படி பார்த்ததேயில்லை.

ஆனாலும் நம்ம ஊருக்காரயிங்க திருந்தவே மாட்டாயிங்கண்ணே..போன வாரம் தான் ஆக்சிடெண்ட் நடந்திருக்கும், அதை பேப்பருல படிச்சுக்கிட்டு, திரும்பவும் அதே ஸ்பீடுல தான் போவாயிங்க..அப்படி அந்த ஸ்பீடுல போய் என்னதான் கழட்டபோறாயிங்களோ தெரியலை..வாயில நல்லா வருது…

மத்தபடி படத்தை பத்தி விமர்சனம் எழுதுற மூடுல இல்லைண்ணே..குறுகுறுப்பான அஞ்சலி காதலும், ஒரு நாளில் முளைத்த அனன்யா காதலும், பஸ் பயணத்தில் உருவான அந்த அழகான அவசரக் காதலும், ஒரு நொடியில் அந்த விபத்தில் தூள்தூளாகப் போகும்போது, மனசை ஏதோ செய்யுதுண்ணே..

அண்ணே..இந்த படத்தை பார்த்தவுடனாவது திருந்துவோம்ணே..ஸ்பீடா போயி, ஒன்னத்தையும் கிழிக்கப்போறதுல்ல..பாதுகாப்பான வேகத்துல, ஜாக்கிரதையா போவோம்ணே..ஒரு நிமிசம்ணே..இதுவரை சேர்த்துவைச்ச கனவு, ஆசை எல்லாம் தூள் தூளாகி போகிடும்ணே..

படத்தை பார்த்த அடுத்த நாளு, ஆபிஸிலிருந்து வீட்டுக்கு வர்றதுக்கு அவசரம் அவசரமா வண்டியை எடுத்து, ஆக்சிலேட்டரை அழுத்துறேண்ணே..80 மைல் வேகம் எடுக்கவே, ஒரு நிமிசம்ணே,..ஒரே நிமிஷம்..ஆசை, ஆசையாக நான் பெத்த மகன் கண்முன்னாடி நின்னாண்ணே…அப்படியே 50க்கு வந்துட்டேண்ணே…ஒரு பயபுள்ள கூட திட்டிட்டு போறாண்ணே…

வீட்டுக்கு வர்றேன்.வீட்டுக்காரம்மா குழந்தையோட வெளியே நிக்குறா..அப்படியே வந்து என் மகனை, அள்ளி, எடுக்குறேன்..கள்ளம் கபடம் இல்லாம ஒரு சிரிப்பு சிரிப்பு சிரிச்சான் பாருங்க…ப்ச்….கொஞ்ச நேரம் பயகூட விளையாண்டுட்டு, கடைக்கு போகலாம்னு வண்டியை எடுக்குறேன்…வீட்டுக்காரம்மா சொல்லுறா…

“ஏங்க..பத்திரமா போயிட்டு வாங்க..நாங்க வெயிட் பண்ணுறோம்…”

வண்டியை எடுக்கவே, திரும்பவும் பையன்தாண்ணே ஞாபகத்துக்கு வர்றான்..அங்க நிக்குறாண்ணே அந்த டைரக்டரு….

Sunday 18 September, 2011

அன்னா ஹசாரே, நரேந்திர மோடி, அப்பாலிக்கா நான்

அடுத்த உண்ணாவிரதம் ரெடியாகிவிட்டது, அமர்க்களமாய். நம் ஏடுகளுக்கும், சானல்களுக்கும் சொல்லவா வேண்டும். “அன்னா” இல்லை “அண்ணா..”, ஐயோ “அண்னா..”, ஒருவேளை, “அன்ணா” உண்ணாவிரதம் இருந்தபோது, மாய்ந்து கட்டிகொண்டு, விளம்பர இடைவேளைக்கு பிறகு ஒளிபரப்பப்பட்ட ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் செம சக்சஸாகி, தொடர்ச்சியாக 50 வது நாளாக அரங்கம் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, மத நல்லிணக்கத்துக்கு ஆதரவான, குஜராத்தை வளர்ச்சிப்பாதையில் சைடுவாக்கில் கொண்டு செல்பவரான சொல்லப்படும், நரேந்திர மோடியின் உண்ணாவிரதமும் வந்தால் எப்படி இருக்கும்..எந்திரன் படம் ரீலிசான அடுத்த வாரம் ராணா ரீலிசானல் எப்படி இருக்குமோ அப்படி…

ஆனால் இந்த தடவை உண்ணாவிரதம் இருப்பது மோடி என்பதுதான் நகைச்சுவைக்குரியது, அதுவும் வடிவேலு பாணியில் சொல்லவேண்டுமானால் “சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..”, சரி உண்ணாவிரதம் இருந்துட்டுப்போகட்டும், ஆனால் அதை மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாக என்று சொல்லும்போதுதான் விழுந்து விழுந்து சிரிக்கவேண்டியிருக்கிறது. இது எப்படி தெரியுமா இருக்கிறது, “தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக ராஜபக்சே உண்ணாவிரதம்”. என்ன, படிக்கும்போது சிரிப்பு வருகிறதா…

அதுவும் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் பல இடங்களிலும் உண்ணாவிரதமாம். கேட்டால், உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டதாம். அடங்கொன்னியா..உச்சநீதி மன்றம் “நரேந்திர மோடி” தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை. வழக்கு குறித்து மேற்பார்வை தேவையில்லை என்றுதான் சொல்லியிருக்கிறது.

இந்த தீர்ப்பு காங்கிரசுக்கு புளியை கரைத்ததோ, இல்லையோ கண்டிப்பாக அத்வானி ஐயாவுக்கு புளியைக் கரைத்திருக்கும். பின்ன, காங்கிரஸ் கன்னாபின்னாவென்று ஆண்டுகொண்டிருக்கும் இந்தவேளையில் நைசாக நடுவில் புகுந்து ஆட்டையைக் கலைத்துவிட்டு, பிரதமராகலாம் என்ற எண்ணத்தில் வண்டி வண்டியாக மண் விழுந்தால் எப்படி இருக்கும்.

ஆனால், இதற்கு பின்னால் உள்ள அரசியல் பலபேருக்கு புரியவில்லை. மோடி எப்படி திடீர் கதாநாயகனனார் என்றால், “குஜராத்” முன்ணனி மாநிலமாக திகழ்கிறதாம்….எப்படி, “பிணங்களில்” மேல் ஏறி நின்று மருத்துவம் பார்ப்பது போல..6 மாத கர்ப்பினியை கதற கதற வயிற்றைக் கிழித்து கருவை நெருப்பில் தூக்கி எறிந்து வெறித்தனமாக சிரித்த சிரிப்பெல்லாம் மறந்துவிட்டது, குஜராத் வளர்ச்சி பாதையில் செல்கிறதல்லவா. பேக்கரியில் நுழைந்து, குழந்தை, பெண்கள் என்று பாராமல், கதவைப்பூட்டி உயிரோடு எரித்தது மறந்துவிட்டது..குஜராத் வளர்ச்சிப்பாதையில் செல்கிறதல்லவா…

போனவாரம், இங்கு உள்ள ஒரு ஷாப்பிங்க் மாலுக்கு சென்றிருந்தேன்..தாகத்திற்கு , ஒரு ஜூஸ் கடை பக்கம் ஒதுங்கவே, கடைக்காரார் இந்தியர்..

“மதராசி…???”

“இல்லை..தமிழன்…”(விசயகாந்து மட்டும் இதை கேட்டிருக்கணும்.)

“ஓ..” என்று சொல்லிவிட்டு ஹிந்தியில் பேசவே, நமக்கு தான் ஹிந்தி தூரமாச்சே…

“சாரி..சார்.ஹிந்தி தெரியாது…”

உர்ரென்று பார்த்தார்..

“சாருக்கு எந்த ஊரு..”(சோறு போடும் ஆங்கிலத்தில்)

“குஜராத்த்த்த்த்த்…”

என்று சொல்லிவிட்டு சும்மா இருந்தால் பரவாயில்லை…சொரிஞ்சுவிட்ட மாதிரி கூடவே..

“நம்பர் ஒன் ஸ்டேட் இன் இண்டியா” என்றார்..

எனக்குப் பொத்துக்கொண்டு வந்தது..

“எதுல சார்..கொலை பண்ணுறதுலயா…”

அவ்வளவுதான்..டென்சன் ஆகிவிட்டார்..

“ஓ..மேன்..வீ ஹேவ் ஆல் பாக்டரிஸ்..இண்டஸ்டிரி…மோடி இஸ் நம்பர் ஒன் சீப்மினிஸ்டர்”

“சூப்பர்..உங்கள் பிரதமர் மோடிக்கு அமெரிக்கவிசா மறுக்கப்படது..எதற்கு தெரியுமா..” என்றேன்..

“தேட்ஸ்..தேட்ஸ்….தேட்ஸ்..” என்று தடுமாறினார்..

“ஐயா..குஜராத்துக்கும் எனக்கும் ஏதோ ஜென்மப்பகையெல்லாம் இல்லை. காந்தி பிறந்த மண் என்று எல்லோருக்கும் நல்ல மதிப்பே இருந்தது..ஆனால் மதத்தின் பெயரால் கொன்று கை முழுவதும் ரத்தக்கறையல்லா, படிந்திருக்கிறது, இப்போது..அதை எப்போது கழுவப்போகிறீர்கள்” என்றேன்…வெறித்துப்பார்த்தவர்

“ஜூஸ் ரெடி” என்றார்..சிரித்துக்கொண்டு வாங்கிவிட்டு நகர்ந்தேன்.

மும்பை குண்டுவெடிப்பாகட்டும், கோத்ரா ரயில் எரிப்பாகட்டும், குஜராத் கலவரமாகட்டும், நம்மில் பலபேருக்கு அது செய்திகளாகவே இருக்கிறது, நம் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்படாதவரை…யோசித்துப் பாருங்கள்..செல்லம், செல்லமாக பார்த்து பார்த்து நீங்கள் வளர்த்த ஒரு பச்சிளம் குழந்தையை தீயில் தூக்கி எறிந்தால் எப்படி இருக்கும். இதுதான் குஜராத்திலும் நடந்தது.

காலையில் பரபரப்பாக வேலைக்கு சென்ற உங்கள் மனைவியோ, கணவனோ, துடிக்க துடிக்க ரத்த வெள்ளத்தோடு, துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி கிடந்தால் எப்படி இருக்கும்…இதுதான் நடந்திருக்கிறது மும்பை குண்டுவெடிப்பிலும், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டிலும் இதுதான் நடந்தது…

செல்லமாக வளர்த்த சிறுவனும், மகன் வளர்ச்சியை பூரிப்பாக பார்க்கும் நீங்களும் மொத்தமாக உயிரோடு வேகும்போது எப்படி இருக்கும்..ஒரிசாவில் பாதிரியாருக்கு இதுதான் நடந்தது..

ஆனால் நெருப்பில் கருகியவை உடல்கள் அல்ல..சகமனிதனனின் உணர்வுகள்..கனவுகள்..எல்லாவற்றிற்கும் ஒரே காரணம், இந்தப் பாழாய்ப்போன மத வெறி..…அப்படி என்னதான் வெறியூட்டுகிறது, இந்த மதம்..எந்த மதம், “ரெண்டு மசூதியை இடித்துவிட்டு வா” என்று சொல்லுகிறது..எந்த மதம் “நாலு, இந்துக்களை சுட்டுவிட்டு வா” என்று சொல்லுகிறது..எந்த மதம், “பாதிரியாரை” எரித்துவிட்டு என்று சொல்லுகிறது..”

என்றைக்கு மதம், சாதி அடையாளங்களை மறந்து, சகமனிதனை, மனிதனாய் பார்க்கிறமோ, அன்றுதான், “நான் இந்தியன்” என்று பெருமை கொள்வதில் அர்த்தம் இருக்கும்..அன்று தான், “எங்கள் மாநிலம்தான் முதல்” என்று மார்தட்டுவதில் அர்த்தம் இருக்கும்..

இல்லையென்றால் “அவிங்களுக்கு வேணும்”, “எங்களை அடிச்சீங்கல்ல..வாங்குங்கடா..”, “அவிங்களுக்கு வீடு தரக்கூடாது” என்று ஆரம்பித்து, மெல்ல, மெல்ல வெறியேறி, ஒரு கட்டத்தில், “நாம் மனிதன்” என்ற அடையாளத்தையே இழந்துவிடுவோம்..

இந்துவோ, முஸ்லீமோ, கிருஸ்தவனோ, நம்மைப்போல, உணர்வு கொண்ட மனிதன் என்று மனிதாபிமானத்தோடு நினைத்தாலே போதும், மனிதம் வளரும். இல்லையென்றால், “இந்தியா, ஒரு மதச்சார்பற்ற நாடு..வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கோஷங்கள் “ஜனகனமன” என்று அர்த்தம் தெரியாமல், தேசியகீதம் பாடுகிற மாதிரி இருக்கும்..

அன்னா ஹசாரே, நரேந்திர மோடிக்கு அடுத்து, இனிமேல் யாரும் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது, என்று என் தலைமையில் , மெரினாவில் உண்ணவிரதம் இருக்கப்போவதாய், உத்தேசம்..யாராவது வர்றீங்களா, கையில் மெழுகுவர்த்தியோடு..

Sunday 11 September, 2011

செய்திகள் வாசிப்பது…

சில செய்திகளை கேட்கும்போதும், கேள்விப்படும்போதும், இன்னும் 21 ஆம் நூற்றாண்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது. சாதி பெயரை சொல்லி ஊர்வலங்கள், அதன் தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு, 3 பேர் பலி…நிலவுக்கே ராக்கெட் அனுப்பினாலும், “அங்கயும், எங்க சாதிக்காரய்ங்கதான்யா முதல் காலடி எடுத்து வைக்கணும்” என்று சண்டை வரும்போல.. அதுபோல டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு..”ஆஹா..இந்தியா வல்லரசாகப்போகிறது” என்று கூவிக்கொண்டிருக்கும் கனவான்களே, இங்கே கவனியுங்கள்…”இன்னும் கற்காலத்தில் தான் இருக்கிறோம், சாதி, மத உணர்வுகளுக்கு அடிமையாய்…”

செப்டம்பர் 11..அமெரிக்கர்களுக்கு மறக்கமுடியாத நாள்..எல்லா நாட்களையும் போல அந்தநாளும் விடிந்து, ஆனால் மறக்கமுடியாத இழவு நாளாகிப்போனது. தீயிலிருந்து தப்பிப்பதற்காக ஏறக்குறைய 50வது மாடியில் இருந்து விழுந்த அந்த வீடியோவை, இன்று பார்த்தாலும் நெஞ்சு பதறுகிறது..”அமெரிக்கா மட்டும் யோக்கியமா” என்று வாதம் செய்தாலும், இறந்த 5000 பேரும் அப்பாவிகள். எவ்வளவு கனவுகள், அனைத்தும் ஒரு நிமிடத்தில் மண்ணாகிப்போனது.. இன்னும் அமெரிக்கர்களுக்கு மறக்க முடியாத நாள்..

மங்காத்தா பார்க்கவில்லையென்றால் ஊருக்குள் ஒருமாதிரி பேசுவாய்ங்க என்ற பயத்தாலேயே, உள்ளூர் தியேட்டரில் பார்க்க நேர்ந்தது. பொதுவாக ஹீரோ ஒர்ஷிப் எனக்கு பிடிக்காது. ரஜினிகாந்த், விஜய், அஜீத் நடிகர்களின் நடிப்பை பிடிக்குமே தவிர, அவர்களின் “சூப்பர் ஸ்டார், தல, தறுதல, டாக்குடரு, தலைவலி” பட்டங்களை அல்ல. மொக்கையாக நடித்தால் கேலி செய்யும் அதே வேளையில் நன்றாக நடித்தால் பாராட்டவும் செய்யவேண்டும். அப்படி பார்த்தால், இந்த படத்தில் வில்லத்தனத்தில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்..”50% வில்லன், கிளைமாக்ஸ் நல்லவன், சந்தர்ப்பவசத்தால் வில்லன்” என்று பாசாங்கு காட்டாமல் 100% வில்லன் என்று கதாபத்திரத்தை உருவாக்கியதற்கே விளையாட்டு பிள்ளை “வெங்கட் பிரபுவுக்கு” ஒரு சபாஷ். ஆனால் தினமும் ஒரு ஆங்கிலபடம் பார்க்கும் எனக்கு எல்லா சீன்களும் ஒவ்வொரு ஆங்கிலபடத்தில் பார்த்ததுபோல் இருந்தது..அதுவும் அந்த டிராபிக் சிக்னலை மடக்குவது, அப்படியே ஒரு ஆங்கிலபடத்தில் சுட்டது..என்ன செய்வது..காலையும் கையையும் கட்டிக்கொண்டு காப்பி குடிக்க வேண்டியதுதான்.

சற்று தாமதமாக “காஞ்சனா” பார்க்க நேர்ந்தது. பக்கத்தில் பிகர் எதுவும் இல்லாததால், பேய்காட்சிகள் எதுவும் பயமுறுத்தவில்லை. ஆனாலும் லாரன்சிடமிருந்து ஒரு இன்ப அதிர்ச்சி.. திரைக்கதையை கொண்டு சென்றவிதம் ரசிக்கவைத்தது. நந்தலாலா போன்ற படங்கள் மட்டுமில்லை, இதுபோன்ற மக்களை கவரும் கமர்சியல் படங்களும் நல்ல படங்கள் தான்..உடனே தோழர் ஷகீலா நடித்த “சாயக்கடை சரசு” நல்ல படம்தானே என்று கேட்காதீர்கள்

“அன்னா தான் இந்தியா, இந்தியாதான் அன்னா” என்ற கோஷத்தை கேட்டபோது “இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா” என்று கேட்டது போல் இருந்தது. கிளம்பிட்டீங்களா, நாட்டுக்காக ஒருத்தர் உண்ணாவிரதம் இருக்காரு, ஆதரிக்காவது வேண்டாம், அட்லீஸ்ட் எதிர்க்காமல் இருக்கலாமே என்று கார்ப்பரேட்தனமாக கேட்டாலும், என்னுடைய ஒரே பதில் “முதலில் நாம் லஞ்சம் வாங்காமல் இருந்தாலே போதும், இந்த உண்ணாவிரதம், உண்ணும்விரதம் எதற்குமே வேலையில்லை.”

நம்ம சீமான் கலக்குறார் போலத் தெரிகிறது..சீமான் பேச்சை கேட்டு துடித்த ரத்தம் எல்லாம், “தமிழ்நாட்டில் ஒரு புரட்சி ஏற்படுத்திவிட்டு, அமைதியாக அமர்ந்திருக்கும் தம்பி விஜய்” என்று ஒரு மேடையில் சொன்னபோதே அடங்கிப்போனது. “இப்போது , அம்மாவுக்கு 40 சீட்டுகளையும்” பெற்றுத்தருவோம்” என்று சொன்னபோது, கெக்கெபிக்கே, கெக்கபிக்கே என்று சிரிக்க தான் தோன்றியது..”கடைசியில இப்படி காமெடி பீஸாக்கிட்டய்ங்களே தலைவா..”

என்னதான் இரண்டாம் கருத்து இருந்தாலும், நம் முதல்வரிடம் பிடித்தது அந்த தில்லு. அந்த தில்லுதான் பிரச்சனையும் கூட..ஆனாலும் பேரறிவாளன், சாந்தன் உட்பட மூன்று பேரை தூக்கிலிடுவதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று நிறைவேற்றிய அந்த தில்லு எனக்கு பிடித்திருந்தது..ஹேட்ஸ் ஆப் அம்மா…

“நன்றியோடு விடைபெறுகிறேன்” என்று எழுதத்தான் கீபோர்டை எடுத்தேன். ஆனால் சொறி பிடிச்ச வாயும், வெறி பிடிச்ச நாயும் சும்மா இருக்காது என்பது போல், இந்த பதிவை எழுத நேர்ந்தது.வழக்கம்போல படித்துவிட்டு கமெண்ட் பகுதியில் இரண்டு திட்டு திட்டிவிட்டு போங்கள்..புண்ணியமாப் போகும்.. மற்றபடி பதிவுலத்தை விட்டுபோவதாய் இல்லை, கூகிள்காரன் செருப்பை கழட்டி அடித்து வெளியேற்றும் வரை..