Wednesday, 11 December, 2013

சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா சார்

மகனின் உடல்நிலை காரணமாக ஒரு வாரம் வீட்டிலேயே தங்க வேண்டியிருந்த்து. காலையில் சாப்பாடு, நடுவே தூக்கம், மதியம் சாப்பாடு பின்பு ஒரு தூக்கம், இரவில் சாப்பாடு, பின்பு நீண்ட தூக்கம். வடிவேலு சொல்லியது போல “சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா சார்..இருக்குற எல்லா டவுட்டும் வந்து தொலைக்கும். நடுநடுவே இது போல  “ஊர் ஏன் சார் இப்படி இருக்குது..இது மாறாதா சார்..” என்று ஏதோ புதியதாக கேள்வி கேட்பது போன்ற பதிவு எழுதுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..சும்மா இருந்தாதான் இது போன்று யோசிக்க தோன்றும் என்ற வரலாற்று உண்மை இன்றுதான் புலப்பட்டது.

கிடைத்த வேளைகளில், எனக்கு உற்ற நண்பனாக இருந்த்து, தினத்தந்தியும், அவ்வப்போது கிடைக்கும், இணைய இணைப்பும் தான். கடைசியாக தினத்தந்தி செய்தித்தாள் படித்து, நான்கு வருடங்கள் இருக்கும். கண்டிப்பாக ஏதாவது புரட்சி செய்திருப்பார்கள் என்று ஆவலாக பார்த்தபோது, நான் பார்த்த ஒரே புரட்சி “கன்னித்தீவு” கதைப் பட்த்தை கலரில் அமைத்த்துதான். என்ன ஒரு புரட்சி.ஆங்க்..மறந்துவிட்டேன், இன்னொரு புரட்சி, விளம்பரங்களுக்கு நடுநடுவில் ஆங்காங்கு செய்திகளும் வந்திருந்தன.

ஆனால் தினமலர் போல “ஒரு சதக், குபீர், திடுக், கபால்” போன்ற தலைப்புகள் வராதது கொஞ்சம் ஆறுதல். டீசண்டாக “கள்ள காதலில் ஈடுபட்ட வாலிபர் குத்திக்கொலை”, “குடித்துவிட்டு மணமேடைக்கு வந்த மணமகனை மறுத்த பெண்” என்று எழுதியிருந்தார்கள். அதுவரைக்கும் மிக்க மகிழ்ச்சி.

ஒரு பக்கம் முழுவதும், சினிமா விளம்பரங்களா அடுக்கியிருந்தனர். அதுவும் சில படங்களை “வரலாறு காணாத வெற்றி”, தியேட்டர் முழுக்க வெடிச்சிரிப்பு”,”இளைஞர்கள் கொண்டாடும்” என்று தலைப்பிட்டபோது, பிதாமகனில் சூர்யா, “சரோஜாதேவி, யூஸ் பண்ணின சோப்பு டப்பா சார்..வாங்க சார், வாங்க..” என்று கூவுவது போல இருந்த்து..

மணப்பந்தல் பக்கமும் மாறவில்லை. அதே “நன்றாக  படித்த, உயரமாக, சிகப்பாக, **** இனத்தில், வீட்டை முறையாக கவனித்து கொள்ளும், மணமகள் தேவை..”. இப்படி விளம்பரம் கொடுத்த அந்த அரவிந்த் சாமியை ஒரு நாள் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது..ங்கொய்யால, அனைவரும், ஐஸ்வர்யாராய்க்கு ஆசைப்பட்டால், மற்றவர்களெல்லாம் எங்கு செல்வது. அதிலும், இன்னொரு விளம்பரம் பார்த்தபோது, பி.பி கண்டபடி எகிறியது. அது,

“ஆன்சைட்டில்(அமெரிக்கா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை) மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும், உயரமான, படித்த(ங்கொய்யால அப்பறம் எப்படிடா ஆன்சைட்), சிகப்பான, சென்னையில் சொந்த வீடு வைத்திருக்கும் மணமகன் தேவை..”

இரண்டு விஷயங்கள் மட்டும், இதில் தெரிந்து கொண்டேன்..

“மணமகன்/மணமகள்” கண்டிப்பாக சிகப்பாக இருக்கவேண்டும்.

“ஒரு ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், ரேஞ்சுக்கு மணப்பெண்/மணமகன் கிடைத்தால் தேவலாம்..”

நாட்டில் எத்தனை சாதிகள் இருக்கின்றன என்று தெரியவேண்டுமானால், நேராக இந்தப் பக்கத்திற்கு வந்துவிடுங்கள்..

அடுத்து மாவட்ட செய்திகள் என்று ஒரு நாலு பக்கத்தை நிரப்புகிறார்கள்..யப்பா, படித்துவிட்டு, கையில் ரத்தம், கித்தம் இருக்கிறதா என்று ஒருதடவை பார்த்து விடுங்கள். அவன் பொண்டாட்டியை, இவன் இழுத்துட்டு ஓடிட்டான், இவன் பொண்டாட்டியை அவன் இழுத்துட்டு ஓடிட்டான். வாலிபர் பழிக்கு பழியாக கழுத்தை அறுத்து கொலை, மாமியாருடன் ஓட்டம், மூளை சிதறி விழுந்தது, வாலிபர் தற்கொலை”
கொஞ்சம் ஆறுதலான ஒரே பக்கம் விளையாட்டு மற்றும் வணிகவியல் செய்திகள். படிக்க கொஞ்சம் டீடெய்லாக இருக்கின்றன.

படித்த அனைத்துப் பக்கங்களிலும், இன்னமும் எனக்கு புரியாத, அல்லது புடிபடாத ஒரே பகுதி, “ஆண்டியார்”. அரைகுறையாக ஆடை அணிந்த ஒரு பெண், ஒரு ஆணை ஆசையாக பார்ப்பதுபோல ஒரு படம் அதற்கு பக்கத்தில் நாம்ம் போட்ட ஆண்டியார் பாடுகிறார்..”இப்படி, இப்படியே பூட்டி கொண்டால், எப்படி, எப்படி நான் திறந்திடுவேன்..”
என்ன்ங்கய்யா இது..இந்த பாட்டும், படமும் எதற்கு, அல்லது யாருக்கு. இதை யோசித்து, யோசித்து, நாலு பெரியவர்களிடம் கேட்டால் “பாட்டு சொன்னால் அனுபவிக்கணும், ஆராயக்கூடாது” என்கிறார்கள்..யாருக்காவது தெரியுமா..??

பொதுவாக சொல்லவேண்டுமென்றால், தினத்தந்தியை எவ்வளவுதான் விமர்சனம் செய்தாலும், காலை வேளைகளில், அதைப் படித்தபின்புதான், ஒரு நாள் பூர்த்தியான உணர்வு. நம் போன்ற நடுத்தரவர்க்கம் படிக்கும் வகையில், எளிமையான கட்டமைப்பு, முடிந்தவரை விளக்கமான செய்திகள் என்று தவிர்க்கமுடியாத்து போல் தான் இருக்கிறது..


அப்புறம் பொழுது போகாமல் கே.டிவியில் “ரெட்” என்று ஒரு படம் பார்த்தேன். அந்தப்படத்தில் அஜீத், “ஹல்லோ..ஹலோ..எங்க ஓடுறீங்க..கொஞ்சம் நில்லுங்க.ஹல்லோ..”

Monday, 9 December, 2013

சுத்தம் என்பது நமக்குமூன்று நாட்களாக பையனுக்கு இடைவிடாத காய்ச்சல். தந்தைகளுக்கு வாழ்க்கையின் கொடுமையான தருணமே, பிள்ளைகள் வலியால் துடிக்கும்போதுதான். எதற்கு அழுகிறான், ஏன் அழுகிறான் என்று தெரியாமல், மகன் விழுந்து, விழுந்து அழும்போது பார்க்க கொடுமையாக இருக்கும்.

இரத்த பரிசோதனை எடுத்து பார்த்தபோது, டைபாய்ட் என்று சொன்னார்கள். டெங்கு வரவில்லை என்று சந்தோசப்படுவதா, அழுவதா என்று தெரியவில்லை. 

எதுவும் சாப்பிட அடம்பிடிக்கிறான். சகஜமாக விளையாட முடியவில்லை. எப்போதும் அழுகைதான். காய்ச்சல் வேறு 104 பாரன்ஹீட். படிபடியாக காய்ச்சல் குறைந்தாலும், இன்னும் அவன் சகஜமாகவில்லை. ஏதோ ஒரு கண்டத்திற்கு இழுத்து வந்தாற் போல உணர்கிறான். மனிதர்களை கண்டால் அலறுகிறான்.

டைபாய்ட் பற்றி விவரங்கள் படித்தேன். சுத்தமில்லாத தண்ணீர் மற்றும் உணவினால் டைபாய்ட் பரவுவதாக சொல்கிறார்கள். இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், அதிகம் இந்த நோய் பரவுவதாக சொல்கிறார்கள்.

எப்போதும் பார்த்த மருத்துவமனைதான். ஆனால் இப்போது பார்க்கும்போது அசூசையாக இருக்கிறது. இத்தனைக்கும் நான் மகனை கொண்டு சென்றது, தனியார் மருத்துமவனை. எங்கு பார்த்தாலும் , எச்சில் துப்பிய கறைகள். அதில் ஈக்கள் மொய்க்கின்றன. கழிவறை பக்கம்,சாக்கடை தண்ணீர் தேங்கி, கொசுக்கள் மொய்த்து கொண்டு இருக்கின்றன.
அதற்கு பக்கத்திலேயே, கவலை தோய்ந்த முகங்களோடு, பிள்ளைகளை அணைத்து கொண்டு பெற்றோர்கள். காய்ச்சலோடும், வயிற்று வலியோடும், அம்மா மடியில் சாய்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள். “டோக்கன் போடணும் சார்” கறாராக பேசும் உதவியாளர்கள். “ரிச் கெட் ரிச்சர், புவர் கெட் புவர்.” இட்த்திற்கு சம்பந்தமே இல்லாமல் சத்தமாக ஹாலில் ஓடிகொண்டிருக்கும், டி.வியில் ரஜினி. அதையும் ஆர்வத்தோடு பார்த்து கொண்டிருக்கும், ஆண்களும், பெண்களும்.

இந்த மொத்த சூழ்நிலையும் பார்க்கும்போது, கடவுளை காண்பதற்கு அனைவரையும் க்யூவில் நிற்பதுபோன்ற உணர்வு. பவ்யமாக, பயந்து, பயந்து உள்ளே செல்லவேண்டியிருக்கிறது. “என்னா செய்யுது..” இதுதான் முதல்வார்த்தை. பேசுவதை கவனிப்பாரா, இல்லையா என்று தெரிவதற்குள், அடுத்த பதில் வந்து விழுகிறது..”டெஸ்ட் எடுத்திருங்க”

“சார் காய்ச்சல் சரியாகிடுமா” என்று பயந்து பயந்து கேட்டால், “ம்..அதெல்லாம் ஆகிடும்.” அடுத்து என்று வாசலில் உதவியாளரை பார்க்கிறார்..உதவியாளர் வந்து “வாங்க சார்..” என்று இழுத்து செல்லாத குறையாக இழுத்து செல்கிறார்கள்..

அடுத்த வார்த்தை பேசுவதற்குள், அவருடைய செல்பேசி அழைக்கிறது..”ஓகே..ஓகே..முடிச்சிடலாம், சாதாரணம்தான்..” என்று பேசிக்கொண்டே, “இன்னும் நீங்க கிளம்பலையா” என்று பார்க்கிறார். அவமானத்தில் கூனிகுறுகி வெளியே வந்தால், குழந்தையை அணைத்து கொண்டு, கண்ணில் பயத்துடனும், ஏக்கத்துடனும், கடவுளை காண்பதற்கு நிற்கிறார் அடுத்த பெற்றோர்..

மருந்துகளை வாங்கி கொண்டு வெளியே வந்தால் “******** குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை” என்ற பெயிண்ட் போன போர்டு நம்மை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறது.  அதற்கு கீழே, சாக்கடை தண்ணீரும், குப்பையும், மக்கி போய், செத்த எலி ஒன்றின் மேல் ஈக்கள் மொய்த்து கொண்டிருக்கின்றது.

“ஓட, ஓட விரட்டி படுகொலை..உயிரோடு எரிப்பு”, அடுத்த டீ கடையில் தினத்தந்தி வெளியில் தொங்கிகொண்டிருக்கிறது..

பக்கத்து தெருவில் கல்யாண வீட்டில் பாட்டுச்சத்தம் காதை பிளக்கிறது..


“சுத்தம் என்பது நமக்கு, சொர்க்கம் உள்ள வீடுதான்...”

Saturday, 7 December, 2013

சொர்க்கமே என்றாலும்...அமெரிக்க விசா முடிந்து தாய்நாட்டுக்கு துரத்தி அல்லது அனுப்பி(என்று டீசண்டாக சொல்லலாம்) விட்டார்கள். போன திங்கள்கிழமை, தாய்மண்ணை மிதித்தபோது, அடிவயிற்றிலிருந்து, “தாய் மண்ணே வணக்கம்” என்று ஏ.ஆர் ரகுமான் கத்த தோன்றியது. ஆனால் விமானத்தில் கொடுத்த காய்ந்து போன ரொட்டியால் வாயை திறக்க சிரமமாக இருந்தது.

சென்னை ஏர்போர்ட் செமையாக மாறிவிட்டது என்று சிலபேர் சொன்னார்கள். அவர்களைப் பார்க்கும்போது சட்டையைப் பிடித்து கேட்கவேண்டும். இமிக்ரேசனில் “வணக்கம் சார்” என்று சொன்னபொது, “முதல்ல பாஸ்போர்டை கொடு” என்பதுபோல் பார்த்தார்கள். சரி, அவ்வளவுதான் நமக்கு மரியாதை என்று, லக்கேஜ் எடுக்கும் கெரசல் சென்றேன். என்ன ஒரு ஆச்சரியம். அனைத்து லக்கேஜ்களும், பழுதில்லாமல் வந்து சேர்ந்தது. ஒவ்வொன்றையும் எடுத்து வைக்க சிரமப்பட்ட போது, யாரோ ஒரு நண்பர் “இருங்க வாத்யாரே” என்று எடுத்து கீழே வைத்தார்..”ரொம்ப நன்றிங்க” என்றேன்..”பார்த்து போட்டு குடு சார்” என்றார்..”அப்படிண்ணா..” என்றேன்..”என்ன சார் பெரிசா கேட்கபோறோம், ஒரு 100 டாலர்(அதாவது 6000 ரூ) தா சார்” என்றார்..

அதாவது, அங்கு வந்த லக்கேஜை கீழே எடுத்து வைக்க(என்னை கேட்காமல்) 6000 ரூபாய்..ஆஹா..பேசாம இங்கயே வேலைக்கு சேர்ந்துவிடலாமோ என்று தோன்றியது..ஒரு நாளைக்கு பத்து லக்கேஜ்(100*10 – 1000 டலார் = 60000 ரூபாய் ஒரு நாளைக்கு). மாதம் ஒரு நாள் வேளை பார்த்தால் போதும், “போங்கடா, நீங்களும் உங்க சாப்ட்வேர் வேலையும் என்று சொல்லத் தோன்றியது.

அடுத்து எல்லா லக்கேஜையும் எடுத்து காரில் வைத்து கிளம்பும்போது, இன்னொருவர் வந்தார்..”சார்..பார்த்து போட்டு கொடுங்க சார்” என்றார்..”இது எதுக்குண்ணே” என்றேன்..”பார்க்கிங்க் சார்” என்றார்..”ஆமா பார்க்கிங்க்” என்றேன், கிரேசி மோகன் போல. “பார்த்து கொடு சார்” என்றார்..எனக்கு ஒன்று புரியவில்லை. முந்தின ஆளாவது, லக்கேஜை எடுத்துவிட்டு 100 டாலர் கேட்டார், இவர் எதற்காக கேட்கிறார் என்று புரியவில்லை..

நான் ஏற்கனவே சொல்லியது போல..சென்னை ஏர்போர்ட் ரொம்ப மாறிடுச்சு சார்” என்று சொன்னவரை தேடி கொண்டிருக்கிறேன்..

அமெரிக்காவிலிருந்து வந்து ஆரம்பிச்சிடடீங்களா என்று கேட்பவர்களுக்கு, இதை எழுதுவதற்கு அமெரிக்காவிலிருந்து ரிட்டர்ன் ஆகியிருக்கவேண்டும் என்பதில்லை. நம்ம ஊரு அமிஞ்சிக்கரை ரிட்டர்ன் போதும்..

சும்மா சொல்லக்கூடாது, வெளிநாடுகள் தான் நம்மை எந்த அளவுக்கு மாற்றி விடுகிறது. 30 வருடங்கள், புழுதியிலும், வியர்வையிலும் புரண்ட மண்ணையே, 3 வருடத்தில் அன்னியப்படுத்திவிடுகிறதே. தெருவோரத்தில் கிடக்கும் சாக்கடை தண்ணீரும், குப்பையும் புதிதாக பார்ப்பதுபோல இருக்கிறதே. அநியாயமாக யாராவது நடந்து கொண்டால், கோபெமல்லாம் வருகிறதே..இந்த வியாதிக்கு பேர்தான் "என்.ஆர்.ஐ" போபியாவோ??

ஊருக்குபோய் நன்றாக குளித்துவிட்டு, மொட்டைவெயிலில் நின்றால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கிறேன்..