Tuesday 29 March, 2011

டி ராஜேந்தரின் பரபரப்பான ஆங்கில உரை


ஏ யப்பே..சிரிச்சு முடியல...))))

Sunday 27 March, 2011

என்னை மன்னிச்சிருடா

கெஞ்சல் தொணியில் கேட்டேன். நான் இதுவரை யாரிடம் இப்படி கெஞ்சியதில்லை. ஆனால், என் உயிர் நண்பனிடம் இப்படி கேட்டதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

அவனுக்கும் எனக்கு நடந்த வாக்குவாதம் வாய்மீறவே, கோபமான வார்த்தைகள் பரிமாறப்பட, தேவையில்லாத வார்த்தைகள், என்னிடமிருந்த வந்தன. அவனும் அதை எதிர்பார்க்கவில்லை. ஒருநிமிடம் அதிர்ந்தவன், ஒன்றும் பேசாமல் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

கோபம்தான் எவ்வளவு பெரியவியாதி. இந்த உலகத்தில் நடக்கும் அத்தனை கொலைகளுக்கும், கோபம்தான் முதல்படி. கோபம்தானே அத்தனைக்கும் காரணகர்த்தா. ஒருநிமிட கோபத்தில் சுயஉணர்வு இழந்து, கொலை செய்து, இன்றும் வீடிழந்து, குடும்பம் இழந்து , சிறையில் கஷ்டப்படுவர்களிடம் கேட்டு பாருங்கள், இன்னமும் சொல்வார்கள்..”சே..அந்த ஒருநிமிட கோபத்தை கட்டுப்படுத்தியிருந்தா, இந்த நிலைமைக்கு ஆயிருப்பேனா சார்..”

அந்த கோபம்தான் அன்றும் எனக்கு வந்தது. உணர்வுகளுக்கு அடிமையாகிப்போனவன் தானே மனிதன். நானும், மனிதன் என்று நீருபித்தது, அந்த கோபம். கோபத்திற்கு அடுத்தபடி, வார்த்தைகள். பெரியவர்களை கேட்டு பாருங்கள், சொல்வார்கள்..”வார்த்தைகளுக்கு வலிமை உண்டு..” அதனால்தான், பேசும்போது, அளந்து, அளப்பரிந்து பேசவேண்டுமென்று சொல்வார்கள். ஆனால் கோபம்தான் அனைத்தையும் மறக்கடித்து விடுமே, அளந்தாவாது, அளப்பரிந்தாவது..சடசடவென்று கொட்டியது, இனி அள்ளமுடியாது என்று தெரிந்தும்.

என்னால் சாப்பிடமுடியவில்லை. அவனுக்கு என்ன சமாதானம் சொல்லுவதென்றும் தெரியவில்லை. ஆற்றமாட்டாமல் அவனை செல்பேசியில் அழைத்தேன். எப்போது தொலைபேசினாலும் முதல் மணி அழைப்பிலே “சொல்லுடா” என்று நட்போடு சொல்பவன், இன்று முழு மணி அழைப்பிற்கு பின்பும் எடுக்கவில்லை. விடாது தொடர்ந்து முயற்சித்தேன். ம்..ஹீம்..எடுக்கவில்லை. சரி. எஸ்.எம்.எஸ் அனுப்ப்பலாமென்று, நினைத்து “என்னை மன்னிச்சிருடா..” என்று அனுப்பியும் பதில் ஏதுமில்லை.

ஒன்று, இரண்டு..என்று ஔவையார் பாடியதுபோல், 20 எஸ்.எம்.ஸூக்கள் ஆகின. அனைத்தும் ஒரே சேதியை சொல்லியன “சாரிடா..என்னை மன்னிச்சிருடா..” சுவற்றில் எறிந்த பந்தாக அனைத்தும் திரும்பிவந்தன. எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை. உறங்க பிடிக்கவில்லை. எதுவும் பிடிக்கவில்லை. பைத்தியமாகிப்போனேன்..நட்புக்கு என்ன அவ்வளவு வலிமை. அத்தனையும் மறக்கடித்துவிடுகிறதே…

ஹாலில் கிடந்த இருக்கையில் அமர்ந்தபடியே தூங்கிப்போனேன். காலையில் எழுந்தவுடன், மனைவி அருகில், கவலையாய் அமர்ந்திருந்தாள்..

“என்னங்க..என்ன ஆச்சு..”

“ப்ச்..மனசு சரியில்லை..விடு..”

“நேத்து ஒன்னுமே சாப்பிடலை…சேர்லயே தூங்கிட்டீங்க.யார்கூடவும் பேசமாட்டுறீங்க.. என்ன ஆச்சு..எதுவும் பிரச்சனையா..”

“மனசு சரியில்லைன்னு சொல்லுறேன்ல..இப்ப விடுறியா..” கத்தினேன்..மறுபடியும் கோபம். ஆனால் இந்தமுறை வார்த்தைகளில் நிதானித்தேன்.

மனைவி, என் மனம் அறிந்தவள். அமைதியாக எழுந்து போனாள். தேநீர் கொடுத்துவிட்டு அவள்வேலைகளில் இயல்பானாள். அவ்வப்போது என்னை ஓரக்கண்ணால், “நன்றாக இருக்கிறானா..” என்று பார்த்தபடி..எனக்கு கஷ்டமாக இருந்தது..அவளை கூப்பிட்டேன்..

“தப்பு பண்ணிட்டேன்..”

“என்ன ஆச்சுங்க..” என்றாள் தலைகோதியபடி..ஆறுதலாக..

“நான் அவனை அப்படி பேசியிருக்ககூடாது..எவ்வளவு கடுமையா நடந்துகிட்டேன்..”

அப்படியே நடந்ததை ஒப்பித்தேன்..ஒரு நிமிடம் யோசித்தவள் ஒன்றும் பேசவில்லை. எழுந்து சமையலறை சென்றாள்.. எனக்கு ஆச்சர்யம். ஆறுதல் சொல்வாள் என்று எதிர்பார்த்த எனக்கு அதிர்ச்சி..அவள் பின்னால் சென்று கேட்டேன்..

“என்ன நான் செஞ்சது தப்புதானே..நீ என்ன சொல்லுற..”

“ப்ச்..” மௌனமானாள்..

“இப்படி ஒன்னும் சொல்லாமல் இருந்தால் எப்படி…சொல்லு..நான் செஞ்சது தப்புதானே..”

ஒரு சின்ன பெருமூச்சுக்கு அடுத்து நிதானமாக சொன்னாள்..

“நீங்க இதுவரைக்கும், மனிதர்களிடம்தான் நட்புவைத்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்..”

எனக்கு திரும்பவும் கோபம் வந்தது..

“நான் செஞ்ச தப்புக்கு என் நண்பனை ஏண்டி மனிதன் இல்லைன்னு சொல்லுற..”

“பின்ன மனுசனா..”

“திரும்ப, திரும்ப என்னை கோபமூட்டுறே..எனக்கு விளக்கம் சொல்லு..ஏன் அப்படி சொன்ன..”

நிதானித்து சொன்னாள்..

“மன்னிப்பு கேட்பவன் மனிதன். மன்னிக்கிறவன் கடவுள்..உங்கள் நண்பன், கடவுளாக வேண்டாம்..முதலில் மனிதனாகட்டும்..அதற்கு பின் நண்பனா என்று விவாதிப்போம்..”

சொல்லிவிட்டு அவள்வேலையில் பிசியாகிப்போனாள்..ஏனோ அந்த வார்த்தைகள் என்னிடம் பலகேள்விகளை எழுபபியது. மெல்ல, மெல்ல எழுந்து என் அறைக்கு வந்தேன். செல்பேசி மணி அழைக்கவே, நிதானமாக எடுத்தேன்..

“நண்பன் காலிங்க்” என்று இருந்தது

Thursday 24 March, 2011

முந்தும் திமுக..தடுமாறும் அதிமுக

இந்த தேர்தலில் என்னால் ஓட்டுபோடமுடியாவிட்டாலும், தமிழக அரசியலில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு ஓரளவிற்கு அத்துப்படி. காலையில் எழுந்து காபி குடிக்கிறேனோ இல்லையோ, தினப்பத்திரிக்கை படிக்காமல் ஒருபோதும் இருந்ததில்லை. தமிழக சட்டசபை தேர்தல் சூடுபிடித்திருக்கும் இந்தவேளையில், ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற பரபரப்பு, உலகக்கோப்பையை யார் வாங்கப்போவது என்பதை(கண்டிப்பா, இந்தியாவுக்கு இல்லைன்னு தெரியும்..பாகிஸ்தான்???) விட மேலோங்கியே இருக்கிறது.

இணையதளங்களைப் படிக்கும்போது, அதிமுக கூட்டணியே வெற்றிபெறும் என்ற கூற்று முன்னோக்கி இருக்கிறது. அது என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான இணைய எழுத்தர்களுக்கு கலைஞரைப் பிடிக்கவில்லை. ஈழத்தமிழ் படுகொலைகளை கண்டித்து உறுதியான முடிவு எடுக்காதது, ஸ்பெக்ட்ரம் பற்றிய ஆழமான பார்வை, குடும்ப அரசியலை முன்னெடுப்பது, இந்த காரணங்களே கலைஞரை வெறுப்பதற்கு முன்னோக்கிய காரணங்களாக இருக்கின்றன.

ஆனால் மொத்தம் 20% பேர் உபயோகிக்கும் இணையத்தின் கணிப்புகளையும், கருத்துக்களையும் ஒரேயடியாக நம்பிவிடுவதில்லை(கவனிக்கவும்..முழுவதுமாக இல்லை). ஏனென்றால் நாள்தோறும் கூலிவேலை செய்து வயிற்றைக் கழுவும், ஏழைமக்களையும், மாதச்சம்பளம் வாங்கி குடும்பத்தை நகர்த்தும் நடுத்தர மக்களின் எண்ணங்களை, இணையதளங்கள் பிரதிபலிக்கின்றனவா என்று கேட்டால், துரதிருஷ்டவசமாக இல்லை என்றே சொல்லுவேன்.

கடந்த இரண்டு வாரங்களாக, எங்கள் ஊரிலும், மற்ற ஊர்களிலும் உள்ள நண்பர்கள், உறவினர்கள் என்று கணிசமான பேர்களிடம் பேச நேர்ந்தது. அவர்கள் யாரும் இணையத்தை உபயோகித்ததில்லை. அனைவரும் தினக்கூலி, மாதக்கூலி வாங்கும் நடுத்தர மக்கள். இவர்கள்தான், அடுத்த முதல்வரையும், தமிழக அரசியலையும் தீர்மானிப்பவர்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு உறுதியாக உண்டு. அப்படி பேசியதில் இருந்து நான் கவனித்த விஷயங்கள் சிலவற்றை தொகுத்துப் பார்த்தபோது எனக்கு கிடைத்தது.

1) கலைஞர் ஆட்சியின் மேல் பரவலாக ஆதரவோ, குற்றச்சாட்டோ இல்லை. “பரவாயில்லைங்க” என்ற கருத்தே மேலோங்கி இருந்தது

2) ஸ்பெக்ட்ரம் நகர்ப்புறங்களில் வேண்டுமானால் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் கிராமங்களில்..ம்..ஹீம்..நிறைய பேருக்கு, ஸ்பெக்ட்ரம் என்றாலே தெரியவில்லை. தெரிந்தவர்களும் “யாருதான் கொள்ளை அடிக்கலை” என்ற மனநிலையில் இருப்பது ஆச்சர்யம்

3) திமுகவின் இலவசங்கள் பலரைக் கவர்ந்திருக்கிறது. இந்த ஆட்சியில் கிடைத்த இலவச தொலைக்காட்சியில் சன்செய்திகள் பார்ப்பதாக சொல்லும்போதே இதை உணரமுடிகிறது

4) அதிமுகவிற்கு ஓட்டுப்போடும் மனநிலையில் சிலர் இருந்தாலும், ஏனோ சிறிது தயக்கம் இருக்கிறது. முந்தைய அதிமுக ஆட்சியின் பாதிப்பா, அல்லது “அம்மா வந்தா ஓவராகிடுமோ” என்ற பயமா என்று தெரியவில்லை. இந்த குழப்பமே, அதிமுகவிற்கு பாதகமாக வர வாய்ப்பில்லை

5) கலைஞரின் குடும்ப அரசியலும், ஆதிக்கமும் பரவலாக அனைவருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் இவையெல்லாம் கலைஞருக்கு எதிரான ஓட்டாக மாறாதது, அதிர்ஷ்டம் அல்லது துரதிருஷ்டம்(முறையே திமுக மற்றும் அதிமுக)

6) விஜய்காந்த் பெற்ற நடுநிலை ஓட்டுகள் அப்படியே ஜீரோ

ஆகிப்போனது. அம்மாவிடம் சரண்டைவார் என்று எதிர்பார்த்ததாகவே அனைவரும் கூறினர்.

7) ஒரு மாற்றம் வரட்டுமே என்று அதிமுகவிற்கு ஓட்டளிக்க போவதாக சிலர் கூறினர்

8) வைகோவை வெளியேற்றியதை நிறைய பேர் ரசிக்கவில்லை. “பாவம்யா அவரு” என்ற மனநிலையே நிறைய பேரிடம் இருக்கிறது.

அனைத்தையும் தொகுத்துப் பார்த்தபோது. இந்தமுறையும் கலைஞர் முதல்வராகிவிடுவார் என்றே தோன்றுகிறது. ஆனால் சென்றமுறை போல எளிதாக இல்லை. மிகவும் குறைந்த வித்தியாசத்தில். ஆனால் உலகத்திலேயே மிகவும் சீக்ரெட்டான இடமான தமிழகமக்களின் இதயம் என்ன சொல்லப்போகிறது என்று மே 13 ஆம் தேதி தெரிந்துவிடும்.


Saturday 19 March, 2011

திமுக தேர்தல் அறிக்கை – எல்லாம் ப்ரீ

கோவாலை அவ்வளவு சந்தோசமா பார்த்ததே இல்லைண்ணே..பற்றாக்குறைக்கு கூட ஒரு பயபுள்ள வேற கொடுக்கு மாதிரி வந்தான்..

“ராசா..ராசா.ரொம்ப சந்தோசமா இருக்கேண்டா..”

“முதல்ல..கூட இருக்குறவன் யாருன்னு சொல்லு..”

“அய்யோ..இவனை உனக்கு இன்ட்ரியூஸ் பண்ண மறந்துட்டேன்..ஹல்லோ..மீட் மிஸ்டர் ராசா..அவிங்க ராசா..”

“ஹாய் ராசா..ஐ ஆம் சுப்பையா..கிறுக்கு சுப்பையா..”

“ஆமா..ரெண்டு நாட்டு தலைவர்கள் மீட் பண்ணிக்குறாங்க..தமிழுல பேசுங்கடா, ங்கொய்யாலே..”

“ஆமா….சுப்பையா ஓகே..அதென்ன கிறுக்கு சுப்பையா..கோவாலு என்னடா இது..”

“ராசா..அது போகப்போக விளங்கும்..”

“சார்..நீங்கதான் அவிங்க ராசாவா…சார்..நான் உங்க பரம் ரசிகன் சார்..உங்க பிளாக்கு படிக்காம தூக்கம்…..”

“டே..சுப்பையா..”

“கால் மீ கிறுக்கு சுப்பையா..”

“ஆமா..ரொம்ப முக்கியம்..எம்.பி.பி.எஸ் பட்டம் பாரு..இனிமேல் யாரையும் நான் நக்கல் விடுறதா இல்லை. விளையாட்டா எடுத்துக்குருவாங்கன்னு சொல்லி, சும்மா ஜாலிக்கு நக்கல் விட்டா, ரொம்ப சீரியசா எடுத்துக்குறாங்க….நம்ம விடுற நக்கல் எல்லாம் பத்தி படிச்சுட்டு ஜாலியா சிரிச்சுட்டு ஆரோக்யமா எடுத்துக்குருவாங்கன்னு பார்த்தா, ஏதோ கொலைக்குத்தம் பண்ணுன மாதிரி திட்டுறாயிங்க..எதுக்குடா, அவிங்களை நக்கல் பண்ணி, நம்மளை நாமே தாழ்த்திக்கணும்..”

“ஏன் சார்..அவிங்க எல்லாம், டி.வில வர்ற அசத்தப்போவது யாரு, மிர்ச்சி சிவா நடிச்ச தமிழ்ப்படம் இதையெல்லாம் உர்ருன்னு உக்கார்ந்து பார்ப்பாயிங்களோ..”

“அட கிறுக்கு சுப்பையா..கோர்த்து விட்டுறாதடா….அவிங்களை பகைச்சுக்கிட்டதால கெட்ட, கெட்ட வார்த்தையில வர்ற இமெயிலை படிச்சுட்டு நானே குழம்பி போய் இருக்கிறேன். அவிங்களையெல்லாம் கிண்டல் பண்ணி பகைச்சுக்காதேடான்னு, நான் பதிவுலகம் வர்றப்பயே நண்பன் சொன்னான்..நாந்தான் கேக்கல..”

“ராசா சார்..இதென்ன சார்..பழைய படத்துல தாதா கிராமத்தையே அடிமையா வைச்சுக்குற மாதிரி சொல்லுறீங்க..அப்ப புதிய பதிவர்கள் யாரும் தைரியமா எழுத முடியாதா சார்..”

“எழுதுங்க..அரசியல்வாதிகள் பத்தி எழுதுங்க..அவிங்களுக்கு அரசியல்வாதிகள் எவ்வளவோ மேல்..நக்கல் விட்டாலும் சிரிச்சுட்டு போய்கிட்டே இருப்பாயிங்க..அட சுப்பையா..என்னைய மாட்டி விடுறதுலேயே இருக்கேயாடா..ஆமா கோவாலு ரொம்ப சந்தோசமா இருந்த மாதிரி இருந்துச்சு..என்ன விஷயம்..”

“வீட்டுக்கு லேப்டாப், மிக்சி, கிரைண்டர் வரப்போகுதுல்ல..அதுவும் ஓசியா..”

“அட கோவாலு..எதுவும் லாட்டரி கிடைச்சிருக்கா..சொல்லவே இல்லை..”

“போடாங்க..திமுக தேர்தல் அறிக்கைய பார்த்தேயில்ல..கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், வீட்டுக்கு மிக்சி கிரைண்டர்..அமர்க்கப்பளப்படுதுல்ல..”

“அட கோவாலு..நீ எப்படா கல்லூரி மாணவனானே??”

“நம்ம ஏரியா கவுன்சிலர புடிச்சா, நம்மளும் கல்லூரி மாணவந்தான்..”

“அட நாதாரி..ஏதோ ஏழைபாழைங்க வாங்கிட்டு போனாலும் பரவாயில்லை..அமெரிக்காவுல 2 லட்சம் வாங்குற உனக்கு எதுக்குடா…”

“ராசா..சார்..எல்லாத்தையும் பீரியா கொடுக்குறோமுன்னு கலைஞர் சொல்லிட்டாரே..இனிமே மாச சம்பளத்தை வைச்சு என்னசார் பண்ணுறது..”

“உன்னை கிறுக்கு சுப்பையான்னு சொல்லுறது கரெக்டாதாண்டா இருக்கு..இன்னும் அம்மா தேர்தல் அறிக்கை வரலையில்ல..அதுவரைக்கும் பொறு..”

“இனிமேல் என்னசார் பீரியா கொடுக்கமுடியும்..அதான் கலைஞர் எல்லாத்தையும் ப்ரீயா கொடுக்குறேன்னு சொல்லிட்டாரே..”

“டே சுப்பையா..”

“கால் மீ கிறுக்கு சுப்பையா..”

“ரொம்ப முக்கியம்..கொடுக்குறதுக்கு பொருளாடா இல்லை..நீ வாடகை வீட்டுல இருந்தா , உனக்கு அந்த வீடு ப்ரீ..ஓனர் பய ஒன்னும் கேக்கமுடியாது..”

“சார்..அப்படியே அமேரிக்கால நான் தங்கியிருக்குற வீட்டுக்கும்..”

“அது, ஒபாமா அடுத்த தேர்தல் அறிக்கைல வரும்..”

“அப்புறம்..”

“அப்புறம்..இப்ப எல்லாம் பொதுமக்கள் கஷ்டப்பட்டு காலையில எழுந்து வேலைக்கு போய் கஷ்டப்படுறாங்கல்ல..இனிமேல் அதுவேண்டாம்..”

“எப்படி..”

“ஒவ்வொரு வீடா அரசு ஊழியர்கள் வந்து மூணுவேளையும் சோறு பொங்கி குழம்பு வைச்சு, கையில செலவுக்கு 200 ரூபா கொடுத்துட்டு போவாங்க..”

“ராசா சார்..என்னதான் சோறு பொங்கி கொடுத்தாலும், எழுந்து கைய கழுவிட்டு சாப்பிடணுமுல்ல..சிரமமா இருக்காதா..”

“அதுக்குதான், போட்டிருக்காங்க இன்னொரு திட்டம்..”சோத்துக்கு நாமே” திட்டம்..யாரும் எழுந்து சாப்பிடவே வேண்டியதுல்ல..அப்படியே உக்கார்ந்தா போதும்..சமைக்கிற ஊழியர்களே, அப்படியே ஊட்டிவிட்டு, பாட்டி வடை சுடுற கதை சொல்லி உன்னை தூங்க வைச்சிட்டுதான் போவாங்க..”

உடனே கிறுக்கு சுப்பையா அழ ஆரம்பிக்கிறான்..

“ஏண்டா சுப்பையா அழுகுறா..”

(அழுதுகிட்டே..)

“கால் மீ கிறுக்கு..”

“அடி செருப்பால…பெரிய டாக்டர் பட்டம்..எதுக்குடா அழுவுற..”

“இந்த நேரம் பார்த்து, ஊரில இல்லாம போயிட்டேனே சார்..இந்நேரம் ஊரில இருந்தா, இப்படி அமெரிக்கால இருந்து கஷ்டப்பட்டிருப்பேனா..போங்க சார்..”

Thursday 17 March, 2011

வைகோ – விடுறா, விடுறா சூனா பானா

(பட உதவி நன்றி – நண்பர் கார்க்கி)

மானமிகு புரச்சிப்புயல் வைகோ ஐயா அவர்களுக்கு,

ஐயா, அது என்னமோ தெரியலைங்கயா, அந்த “மானமிகு” ன்னு டைப்படிக்கும்போது மட்டும் கை நடுங்குது.. சரி கழுத மானம் கிடக்குது விடுங்க, எழுத வந்த விசயத்துக்கு வர்றேன்..அது வந்துயா, ரொம்ப நாளா, உங்களுக்கு ஒரு கடுதாசி எழுதணும்னு ஆசைய்யா..இன்னைக்குதான் டைம் கிடைச்சிச்சு..

ஒரு 12 ம் வகுப்பு படிக்கும்போது நினைக்கிறேன்யா..சரியா கூட ஞாபகம் இல்லை..வைகோ ன்னு ஒருத்தர் திமுகவை விட்டு வெளியே வந்துட்டாருன்னு பயபுள்ளைங்க சொன்னாய்ங்க. நமக்கெல்லாம் அப்ப அரசியலுங்குறது, காலையில பல்லு விளக்குற மாதிரி..காலையில பேப்பரை படிச்சுட்டு அப்படியே மறந்துருவோம். அப்பதான் ஒரு சேக்காளி, நீங்க பேசுன கேசட்டை கொடுத்தான். அப்பதான்யா முதமுறையா உங்க பேச்சை கேட்டேன்.

சத்தியமா சொல்லுறேன்யா..எந்திருச்சு நின்னு கைதட்டுனேன். என்னா ஒரு பேச்சு. அப்படியே நாடிநரம்பெல்லாம் சுண்டி இழுத்துச்சுயா..உங்க பேச்சுல காட்டிய பைபிள் மேற்கோளாகட்டும், உலக அரசியலைப் பற்றிய உங்க பார்வை ஆகட்டும், இளைஞர்களை கட்டி இழுத்து, அப்படியே உங்க பக்கம் தூக்கிட்டு போகும்னு, உங்க பேச்சை கேக்குற யாருன்னாலும் சத்தியம் செய்வாய்ங்க.

அன்னைக்குதான்யா, வாழ்க்கையில நான் முதல்முறையா ஏமாறுரோம்னு தெரியாம ஏமாந்தது.ரெண்டு மூணு நாள், தொடர்ச்சியா உங்க பேச்சுதான்யா எனக்கு சோறு, தூக்கம் எல்லாமே. ஒரு கையில புஸ்தகம், காதுக்கு உங்க பேச்சு..ம்..அதெல்லாம் சொர்க்கம்யா..

அடுத்து, அதிமுக தலைவியை எதிர்த்து நீங்க நடைபயணம் போனப்ப அப்படியே புல்லரிச்சு போச்சுய்யா..தமிழகத்துக்கு உண்மையிலேயே விடிவுகாலம் வந்துருச்சுன்னு சத்தம் போட்டு கத்தனப்ப பக்கத்து வீட்டுக்காரன் என்னை ஒருமாதிரியா பார்த்தான்யா….அப்பயே சுதாரிச்சுருக்கணும். விட்டுட்டேன்..பயபுள்ள இளரத்தம் பாருங்க..

திடிரீன்னு நண்பன் ஒருத்தன் “பாருடா உங்க தலைவரு கலைஞர் கூட சேர்ந்துக்கிட்டாருன்னு” கிண்டல் பண்ணப்ப, நான் நம்பவேயில்லையா..”போடா..மத்த அரசியல்வாதி மாதிரி இவரு இல்லைடா…இளைஞர்கள் இவரை நம்பிதாண்டா இருக்காங்க..அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு” ன்னு சொல்லிக்கிட்டே பேப்பரை புரட்டுறேன், தலை, லைட்டா கிர்ருன்னு சுத்துச்சுயா..நீங்க திமுக வைவிட்டு வந்தப்ப தீக்குளிச்ச அந்த புள்ளைங்க முகம்தான்யா எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு. அப்பவே எனக்கு பாதி நம்பிக்கை போச்சுயா..சரி, சந்தர்ப்பம் ன்னு நினைச்சு மனசை ஆத்திக்கிட்டா..இல்லை சந்தர்ப்பவாதம்னு தெரியுறதுக்கு நாலு, அஞ்சு வருசம் ஆச்சுயா..

அதுவும், எப்ப தெரியுமா,,,”நீங்க அருமை சகோதரி” ன்னு போன எலக்சனுல சொன்னப்ப..அது எப்படிங்கய்யா..உங்களை ஜெயிலுல போட்டதையெல்லாம் மறந்து, ஒருநிமிசத்துல கூட்டணி சேர்ந்து அருமை சகோதெரின்னு சிரிக்க முடியுது. உங்களை ஜெயிலுல போட்டப்ப, அடித்தொண்டை கிழிய “தமிழக அரசின் அராஜகம் ஒழிய” ன்னு கத்துன தொண்டனை ஒரு நிமிசம் நினைச்சு பார்த்தீங்களாயா..அதுசரி..எலக்சனுக்கு அப்புறம்..தொண்டனாவது, புடலங்காயாவது.. அதுவும் உங்க லட்சியமா நினைக்குற ஈழத்துக்கு எதிரான நிலைப்பாட்டோட இருக்குறவங்களோட..போங்கையா..அதிலருந்து , இந்த அரசியல் மேல இருக்குற கொஞ்சநஞ்ச மரியாதையும் விட்டுப்போச்சுய்யா..

இதோ, திரும்பவும், உங்க அருமைச்சகோதரி, உங்களை ஒரு பொருட்டாவே மதிக்காம, அவமானப்படுத்தினாலும், இன்னும் பொங்கியெழாம இருக்குறதை நினைச்சு, எனக்கு ஒன்னும் ஆச்சர்யம் இல்லைங்கையா..ஏன்னா, நமக்கு தன்மானத்தைவிட எலக்சன் சீட்டுதானய்யா முக்கியம்..

சரி விடுங்கையா..ரொம்ப நாளா உங்ககிட்ட ஒருகேள்வி கேக்கணும்னு, நெஞ்சுகுழியில தவிச்சுகிடக்குய்யா..நம்ம கட்சிப்பெயருல “மறுமலர்ச்சி, மறுமலர்ச்சி” ன்னு ஒன்னு இருக்குலயா..அது எந்த கடையிலயா கிடைக்குது..


Sunday 13 March, 2011

ஓ ஜப்பான்....

முந்தைய கம்பெனியில் நான் வேலை செய்தபோது, என்னுடைய பிராஜெக்டில், ஜப்பானிய நண்பர் ஒருவர் உண்டு. முதலில் சற்று சங்கோஜமாக பழகிய எனக்கு, பிற்காலங்களில் மிகவும் நெருங்கிய நண்பராகிப்போனார். நட்பைக் காட்டிலும், நான் அவரிடம் வியந்த ஒன்று, வேலையில் ஒன்றிப்புத்தன்மையும், நேரம்தவறாமையும். “அது எப்படியா..24 மணிநேரமும் வேலையைப் பற்றியே சிந்தனை” என்று கிண்டலடித்தால், பதிலுக்கு புன்னகையே தருவார்.

ஒருமுறை அவர் ஒரு பிரசென்டேசன் கொடுக்கவேண்டும். காலை 9 மணி என்று நேரம் ஒதுக்கப்பட்டது. நாம்தான் என்றைக்கு அலுவலகத்திற்கு 9 மணிக்கு செல்கிறோம்.. சர்வசாதரணமாக 9:30 மணிக்கு கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு செல்கிறேன். மனுசன் 08:30 மணிக்கெல்லாம் வந்து பிரசெண்டேஷனை ரெடி பண்ணிவைத்துவிட்டு, தனியாக ப்ராக்டிஸ் செய்துபார்க்கிறார். என்ன ஆச்சரியம் என்றால், அந்த அறையில் யாருமே இல்லை.

“ஏன்யா..ரொம்பதான் பண்ணுற..09:00 மணிக்குன்னா, 09:00 மணிக்கு ஆரம்பிக்கணுமா..முன்னபின்ன இருக்கலாம்ல..” என்றேன்..

சிரித்துக்கொண்டே சொன்னார்..

“நண்பா..என் வேலை 9 மணிக்கு ப்ரசென்டேஷன் ஆரம்பிப்பது..அதை செய்யாவிட்டால், நான் பார்க்கும் வேலைக்கு துரோகம் செய்வதுபோல்..நான் துரோகியாக வாழ விரும்பவில்லை..”

செருப்பால் அடித்தது மாதிரி இருந்தது. அவ்வளவு டெடிகேஷன். நான் அந்த கம்பெனியை விட்டு வந்தாலும், அடிக்கடி அவரிடம் தொலைபேசியில் உரையாடுவது வழக்கம். முதலில் போனை எடுத்தவுடன், வணக்கம் சொல்லிவிட்டு முதலில் அவர் கேட்கும் கேள்வி “வேலை எப்படி போகுது..” சிலநேரங்களில் அவருடன் பேசும்போது, நானெல்லாம் இன்னும் வேலை செய்ய ஆரம்பிக்கவில்லையோ என்று தோணும். எப்போதும் சுறுசுறுப்பு. ஒழுங்கு, நேரம்தவறாமை..

இரண்டு நாட்களுக்கு முந்தி, ஜப்பானில் சுனாமி என்று கேள்விபட்டவுடன் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. நம்ம ஊருக்குதான் நிலநடுக்கம் சுனாமி என்பது பெரிய செய்தி. ஜப்பானில் இது அவர்களுக்கு வருடம் ஒரு பருவம் மாதிரி. எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பார்கள். நிலநடுக்கம் முடிந்தவுடன், அவர் அவர்கள், தங்கள் வேலையை பார்க்க போய்விடுவார்கள். அப்படி ஒன்றுதான் என நினைத்து அந்த வீடியோவைப் பார்த்தபோது, அதிர்ந்து போனேன்.

முதலில் லாங்க்ஷாட்டில் ஆரம்பித்த, அந்த வீடியோவில் , ஏதோ குப்பையை தண்ணீர் அடித்து வருவதுபோல் எண்ணினேன். ஆனால் அருகில் செல்ல, செல்ல ஒரு நிமிடம் விக்கித்துப்போனன், அனைத்தும் வீடுகள் மற்றும் கார்கள். சுனாமி கோரத்தாண்டவம் ஆடி, அனைத்தையும் இழுத்துக்கொண்டு, ஒரு கப்பலை அப்படியே இழுத்து சென்றபோது, எந்த மனிதனும் கலங்காமல் இருக்க மாட்டான்.

எவ்வளவு உயிர்கள்…எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்..நல்ல வேலை, நல்ல வீடு, அமைதியான குடும்பம்..அனைத்தும் ஒரு நொடியில் தகர்ந்து போயிற்றே. சுனாமி அழித்து சென்றது, உயிரில்லா வீடுகளையும், வாகனங்களையும் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் அமைதியையும், கனவுகளையும்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல், ஜப்பானில் உள்ள அணு உலைகள் இரண்டு பாதிக்கப்பட்டு கதிர்வீச்சை வெளியிட ஆரம்பித்துள்ளன. அவற்றை தற்காலிகமாக கட்டுப்படுத்துவிட்டாலும், ஜப்பானிய அரசு கொஞ்சம் கலங்கித்தான் போனது. அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன், நம்ம ஊர் அரசியல்வாதிகளின் வார்த்தை அளவில் இல்லாமல், செயல் அளவில்.

இரண்டால் உலகப்போரில், அணுகுண்டு வீசி தாக்கப்பட்டபோது, அடைந்த மனநிலையே இப்போது ஜப்பானியர்களும் இருப்பதை உணரமுடிகிறது. கடின உழைப்பால் ஒரு தேசத்தையே கட்டி எழுப்பி, தொழில்நுட்பதுறையில், இன்று முதலாவதாக வந்த ஒரு தேசத்திற்கு, இது ஒரு சின்ன பின்னடைவாக இருக்குமே தவிர, கதை முடிந்தது என்று கனவிலும் வலுவிலக்க மாட்டார்கள்.


சுனாமி பற்றிய வீடியோ பார்த்தபோது, முதலில் எனக்கு ஞாபகம் வந்த என் ஜப்பானிய நண்பருக்கு உடனே தொலைபேசினேன்..

குரல் சற்று கலங்கித்தான் இருந்தது..

“விஷயம் கேள்விப்பட்டேன்..என்னுடைய அனுதாபங்கள்..ஊரில் எல்லாரும் நலமா..??”

“ராசா..எங்கள் குடும்பம் தற்போது அங்கு இல்லாவிட்டாலும், உறவினர்கள் நிறைய உண்டு. இரண்டு குடும்பங்கள், சுனாமி தண்ணீரில் அடித்து சென்றதாக கேள்விப்பட்டேன். அவர்கள் எனக்கு நெருங்கிய சொந்தங்கள்..”

பேசும்போது அவருக்கு அழுகை மீறிக்கொண்டு வந்தது..என்னால் அவருக்கு என்ன சமாதனம் சொல்லமுடியவில்லை….சிறிதுநேர மௌனத்திற்கு பின்பு அவரே சொன்னார்..

“ராசா..இன்னும் 5 நிமிடத்தில் ஒரு வேலையை செய்து முடிப்பதாக உறுதி அளித்துள்ளேன்..தொடர்ந்து பேசமுடியாததற்கு வருத்தம். பிறகு பேசுகிறேன்..”

லைன் கட் ஆகிப்போனது..

Thursday 10 March, 2011

ராசாவுக்கு கொலைமிரட்டல்

நமக்கெல்லாம் தூக்கம்தாண்ணே சொர்க்கம். அடிக்கிற குளிருல, நல்லா போர்வைய போர்த்திக்கிட்டு தூங்குனா, நயன்தாரா, நமீதா, திரிஷா ன்னு மூணு டூயட் பாடி முடிச்சிருலாம்,, முந்தாநேத்து அப்படித்தான், செம தூக்கம் தூங்கிகிட்டு இருக்கேன், “நீயெல்லாம் ஒரு மனுசனா” ன்னு யாரோ திட்டுற மாதிரி ஒரு பிரமை. சரி நம்மளை யாரு திட்டபோறான்னு அலட்சியத்துல தூங்குனா, முகத்துல யாரோ சுடுதண்ணிய ஊத்துற மாதிரி சூடுண்ணே..அலறிகிட்டு எழுந்தா, வூட்டுக்காரம்மாதான்..பத்ரகாளி மாதிரி நின்னுக்கிட்டு இருக்கா..என்னால நம்பவே முடியலைண்ணே..என் வூட்டுக்காரம்மாவுக்கு கோவம் வந்தா, பக்கத்துல இருக்குற சப்பாத்திக்கட்டைய எடுத்து ரெண்டு போடுவாளே தவிர “நீயெல்லாம் மனுசனா” ன்னு மட்டு மரியாதை இல்லாம பேசக்கூடிய ஆளு இல்லைண்ணே….

“அடியே..நீயா…”

“அப்புறம் என்ன எதிர்த்த வூட்டுக்காரியா..”

“இருந்தா நல்லாத்தான் இருக்கும்…” ஏதோ பேச்சுவாக்குல சொல்லிட்டேன்..அவ்வளவுதான்..அடுப்புல கடுகுதாளிக்கிற மாதிரி தாளிச்சு எடுத்துட்டா..கொஞ்சநேரம் கழிச்சு சுனாமி ஓஞ்சவுடனே, நானே கேட்டேன்..

“அதுசரி..காலையில ஏன் என்னை திட்டுன..”

“இன்னைக்கு என்ன நாளு..”

“ம்..என்ன நாளு..,.நம்ம கல்யாண நாளா..”

“அதை ஏன் ஞாபகப்படுத்துறீங்க..”

“பின்ன..தமிழகத்தின் செல்ல சீமாட்டி நமீதா அவதரித்த நாளா…”

“…….”

“சரி..விடு…நீயே சொல்லு,,”

“மகளிர் தினம் ங்க..”

“ஆமால..நல்லது..”

“என்னது..நல்லதா…எனக்கு வாழ்த்து சொன்னீங்களா..உங்களை நம்பி தினமும் படித்து, தினமும் வாசகர் கடிதம் எழுதுற பல்லாயிரக்கணக்கான(ஆத்தாடி..தலையில்ல சுத்துது) மகளிருக்கு வாழ்த்து சொல்லி பதிவு எழுதுனீங்களா..”

“ஏ..யப்பே..ஏதாவது சரக்கு இருந்தா பதிவு போடலாம்..ஒன்னுமே சரக்கு இல்லாதப்ப வெறும் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி எப்படி பதிவு எழுதுறது..”

“ஆமா..இல்லன்னாலும்…”

“அடியே..ஒரு நிமிசத்துல பிரபலபதிவரை அசிங்கப்படுத்திட்டே..பின்னாடி ரொம்ப பீல் பண்ணுவ..”

“ஏங்க..இப்படி பேசுறீங்க..உங்களுக்கு பொறுப்புணர்ச்சியே இல்லியா..இந்த லட்சணத்துல, உங்க எழுத்துல ஜெயமோகன் சைடுவாக்குல உக்கார்ந்து இருக்குறாரு, பாலகுமாரன் ஒருக்களிச்சு படுத்துக்கிட்டு இருக்காருன்னு கமெண்ட்டு வேற வருது..”

“ஆஹா..அடியே..அது நம்ம கோவாலு ஓசிசரக்குக்கு ஆசைப்பட்டு போட்ட கமெண்ட்டுடி..வாங்கி தரலைன்னதும், அடுத்த பதிவுல எவ்வளவு அசிங்கம், அசிங்கமா திட்டுனான் தெரியுமா..,”

“ப்ச்..அதெல்லாம் தெரியாது…மகளிரை மதிக்காத உங்களுக்கு எதுக்கு நானு, சோறு பொங்கி தரணும்..”

“வாவ்..இன்னைக்கு வீட்டுல பர்கரா…”

“மன்னாங்கட்டி..”

“என்னது,,மன்னாங்கட்டி ப்ரையா…”

அவ்வளவுதான்னே..அன்னைக்கு முழுக்க சோறு இல்லை..சோறு கிடைக்காம, ஒவ்வொரு வீடு வீடா அலைஞ்சேன்..அன்னைக்கு பார்த்து ஒவ்வொருத்தன் வூட்டுலயும் பழைய கஞ்சிதான்..அந்த ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை சொல்லியிருந்தா, எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா..அந்த வார்த்தை..

"மகளிர் தின வாழ்த்துக்கள்..”

இப்படிக்கு

அவிங்க ராசா(கழுத்து பக்கம் கத்தியோடு)

Saturday 5 March, 2011

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெளியேற்றம் – கோவாலு அதிர்ச்சி

இன்னைக்கு கோவாலு செம டென்சனா வந்தாண்ணே..

“ராசா..ராசா..எங்கடா இருக்க..”

“மனிதன் ஒரு சமூக குட்டி.இல்ல..குரங்கு..அய்யோ..மிருகம்..கரெக்ட்டு..விலங்குன்னு கூட சொல்லலாம்..”

“ராசா..என்னடா பண்ணுற..நாலாம் வகுப்பு புத்தகம் எதுவும் படிக்கிறீயா,,,”

“சீ..சீ..இல்லடா..என்னை சீண்டுறவங்களுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்..”

“அதுக்கு ஏண்டா பாவம் சமூகத்தை புடிச்சு இழுக்குற..அது என்ன பாவம் பண்ணுச்சு..”

“இல்ல..என்னை சீண்டினா..அப்படிங்குறதுக்கு ஒரு நாலு பாராகிராப் தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன்..”

“ஆமா..இவரு பெரிய கவர்ச்சி நடிகை..உன்னை சீண்டுறாயிங்க..நானே ரொம்ப டென்சனா வந்துக்கிட்டு இருக்கேன்…”

“ஏண்டா கோவாலு..என்னடா ஆச்சு……நடுநிசிநாய்கள் எதுவும் துரத்துச்சா..”

“ஐயோ..இல்லடா ராசா..”

“பின்ன..??”

“காங்கிரசு கூட்டணியில் இருந்து திமுக வெளியே போயிடுச்சாம்டா..”

“டே..கோவாலு நல்லா சொல்லு..தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரசு வெளியே ஓடிடுச்சா..இல்லாட்டி, காங்கிரசு கூட்டணியில் இருந்து திமுக வெளியே ஓடிடுச்சா..”

“ராசா..பூவை, பூவுன்னு சொல்லலாம், புய்ப்பம்னு சொல்லலாம், இல்லாட்டி நீ சொன்ன மாதிரியும்..”

“கோவாலு..கொலைவெறிய கிளப்பாத..நீதான் புரச்சித்தலைவிக்கு தொண்டனாச்சேடா..உனக்கு சந்தோசமாத்தானடா இருக்கும்..நீ ஏண்டா டென்சனாகுற..”

“போடாங்க..ஏதோ காங்கிரசு தி.முக பக்கம் இருக்குறதால, நாங்க ஈசியா ஜெயிச்சுடுவோம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்..இப்ப அந்த நினைப்புல மண் விழுந்துரும் போல இருக்கேடா..”

“அதுதான் மதுரை சிங்கம் விசயகாந்து இருக்காருலடா..”

“அதுதாண்டா எங்க பெரும் கவலையே..”

“ஏண்டா..உங்க தலைவி, குடிகாரன்னு சொன்னதை நிரூபிக்கிற மாதிரி. பாட்டிலும் கையுமா பிரச்சாரத்திற்கு வருவாரா..”

“டே..அததான் நாங்க எப்பவுமே மறந்துட்டோம்டா..இப்பதான் நாங்க கூட்டணி வைச்சுக்கிட்டோம்ல..”

“இதெல்லாம் உடனே மறந்துருங்கடா..ஆனா, ஆட்சிக்கு வந்தவுடனே, மக்களை மறந்துருடாதீங்கடா..ஆமா..அப்பவே கேக்கணும்னு நினைச்சேன்..தொகுதி பங்கீடு விசயமா, உங்க மதுரை தங்கம், தலைவிய பார்த்து பேசப்போனப்ப , மதுரை தங்கத்தோட , இளைஞர் அணிச் செயலாளருன்னு யாரோ இருந்தாரே..யாருடா..”

“அதுதாண்டா..இளைஞர்களின் வெடிவெள்ளி..சாரி..விடிவெள்ளி..சுதீஷ்….தலைவரோ மச்சான்..”

“அடப்பாவி..கலைஞர் குடும்ப அரசியல் நடத்துறாருன்னு சொல்லித்தாண்டா, எதுக்குறீங்க..இதுக்கு பேரு என்னடா..”

“அது..அது வந்து..”

“சரி..அதை விடு..இன்னமும் அரசியலுக்கு வருவாருன்னு, நீ பல்லு விளக்காம கூட காத்துக்கிட்டு இருக்குற, உங்க ரசினிகாந்து என்னடா பேசாம இருக்காரு..”

“அவருதான் ராணா படப்பிடிப்புல பிசியால இருக்காரே..”

“ஏதோ, எல்லாத்தையும் கூப்பிட்டு விருந்து வைக்கிரேன்னெல்லாம் சொன்னாரேடா..செம விருந்து போல..”

“கடுப்பேத்தாதடா ராசா..தலைவருக்கு எத எப்படி, என்னைக்கு பண்ணனும்னு நல்லா தெரியும்.,.சரியான நேரத்துல வாய்சு கொடுப்பாரு பாரேன்..”

“எது..அம்மா ஜெயிச்சப்பிறகு, “தைரியலட்சுமிக்கு வாழ்த்துக்கள்” ன்னு மேடையில பேசப்போறாரே..அத சொல்லுறியா..”

“அதெல்லாம், அரசியல் சாணக்கியத்தனம்டா..உனக்கு என்ன தெரியும்..”

“நல்லா தெரியும்டா..நீ ஒவ்வொரு படரீலீசு அன்னைக்கு கட் அவுட்டுக்கு பால் ஊத்திக்கிட்டு வெயிட் பண்ணிக்கிட்டே இரு..அவரும் “ஆக்சுவலி..காதல் அணுக்கள் பாட்டுக்கு டான்ஸ் மூவ்மெண்ட் ரொம்ப டப்” ன்னு சன் டிவியில பேட்டி கொடுப்பாரு..நாடு விளங்கிரும்..”

“ஆமா..இப்ப அப்படியே நாடு பூத்துக்குலுங்குற மாதிரி…அதுதான்..2G, 3G ன்னு கோடி, கோடியா பிச்சுக்கிட்டு போகுதே..அப்புறம் என்ன”

“சரியா சொன்னடா..கோவாலு..யாரு வந்தா நாட்டுக்கு நல்லதுடா..”

“இளைய தளபதி டாக்குடரு விசய்…”

“டே..கோவாலு..கொலைவெறியில இருக்கேன்..”

“ம்….இவிங்களுக்கெல்லாம் மாற்றா..யாராவது ஒருத்தரு..ம்..யாரு வரலாம்….ஐ..கண்டுபிடிச்சுட்டேன்..ஏன் பதிவர்களெல்லாம் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிக்ககூடாது..”

“கோவாலு..10 பேரு சேர்ந்து, சங்கமே ஆரம்பிக்க முடியல..கட்சி ஆரம்பிக்கவா..சுத்தம்…..சரி..இந்த தேர்தலுல யாருக்கு ஓட்டுபோடபோற..??”

“இரட்டை இலைக்குதான்..”

“மவனே..அம்மா ஆண்டிபட்டில இருந்து கிளம்புறப்ப, கிண்டியில டிராபிக்கை நிறுத்திருவாய்ங்க..இப்பவே ரெடியாகிக்க…”