Thursday 31 October, 2013

ஆரம்பம் – விமர்சனம்


இப்போதெல்லாம் விமர்சனம் எழுதவே பயமாக இருக்கிறது, கழுத்தில் யாரோ கத்தியை வைத்தாற் போலவே ஒரு பிரமை. ஒரு படம் சரியில்லை என்று எழுதினால்..”டேய்ய்ய்ய்ய்..ஊருப்பக்கம் வாடா..” ங்கிற மாதிரி அன்பான கமெண்டுகளும், அருமையான தமிழ்சொற்களை கொண்டு, “தே..சு..” போன்ற வார்த்தைகளாய் கொண்டு அழகாக எழுதப்பட்ட மெயில்களும், வரவேற்கின்றன..மாறாக ஒரு பட்த்தை பாராட்டி எழுதினால் “என்னய்யா விமர்சனம் எழுதுற..மொக்கை பட்த்த போய் நல்லா இருக்குங்குற” என்று வரும் மெயில்கள் கலங்கடிக்கவும் செய்கின்றன..

ஆனாலும், நாமெல்லாம் எழுதாவிட்டால், வீட்டு முன்னால் அமர்ந்து கொண்டு உண்ணாவிரதம் மேற்கொள்வோம் என்று நாடே கொந்தளிப்பதால், உங்களுக்கு “ஆரம்பம்” விமர்சனம். என் கழுத்து மற்றும், இதர பாகங்களின் நலம் வேண்டி, பட்த்தில் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன்..எல்லோரும் படித்து, சந்தோசமாக இருக்கவும்..

படத்தின் கதை இதுதான். மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிக்கிறது. மூன்று குண்டு வைத்த்துவிட்டு ஸ்டைலிசாக வருவது ஹீரோ அஜீத். அதன் தொடர்ச்சியாக, சென்னையிலிருந்து மும்பை வரும் கம்யூட்டர் ஹாக்கரான ஆர்யா மும்பை வரும்போது கட்த்தப்படுகிறார். அவரை வைத்து, ஒரு சானல் நெட்வொர்க்கையே முடக்குகிறார் அஜீத். காரணம், பிளாஷ்பேக்காக விரிகிறது. ராணா, மற்றும், அஜீத் பாம் ஸ்குவார்டாக வேலை பார்க்கிறார்கள். முடியும்போது, தீவிரவாதிகளிடம் இருந்து நம்மை...இது..மக்களை காப்பாற்றுகிறார்கள். அந்த படையினருக்கு, அமைச்சரவையிலிருந்து புல்லட்ப்ரூட் ஜாக்கெட் கொடுக்கிறார்கள்..ஆனால்..அதில்..ஊழல்..அதன் காரணமாக, ராணா..அது வந்து..அது வந்து..அது..முதல்ல கழுத்துல இருந்து கத்திய எடுங்க பாஸ்..கதையெல்லாம் சொல்ல மாட்டேன்..

இனி பட்த்தில் உள்ள நல்ல விஷயங்கள் மட்டும்..
·         
முடிந்தவரை ஸ்டைலிஷாக எடுக்க விஷ்ணுவர்த்தன் எடுக்க முயற்சி செய்திருக்கிறார்..அஜீத் ஸ்டைலிஷாக நடக்கும்போது, தியேட்டரில் விசில் சத்தம் காதை பிளப்பது உறுதி..
·         கதை வித்தியாசமா இருக்கிறது..நண்பனுக்காக பழிவாங்கும் கதை, இதுவரை தமிழ்சினிமாவில் சொல்லப்படவில்லை எனவே நினைக்கிறேன்..இன்னும் சொல்லப்போனால், பழிவாங்கும் கதைகளையே தமிழில் பார்த்த்தாக நினைவில்லை.

·         அஜீத், மிகவும், ஸ்டைலிஷாக, அழகாக இருக்கிறார்..அடிக்கடி ஸ்டைலிஷாக கண்ணாடியை மாட்டும்போதும், கழட்டும்போதும், நடக்கும்போது செமையாக இருக்கிறார்..பில்லா, மங்காத்தா படங்களிலும் இதே போன்று நடந்து இருந்தாலும், இந்த நடை வித்தியாசமாக இருப்பது மிக்ச்சிறப்பு..இந்த முறை எடை குறைத்து மிகவும் சிலிம்மா இருப்பது நன்றாக இருக்கிறது..

·         ஆர்யா பற்றி சொல்லியே ஆகவேண்டும். முதல் பாதியில் கம்யூட்டர் தட்டி, 10 நிமிட்த்தில் ஒரு சானலையே ஹாக் செய்வது, “வாவ்..” கிளைமாக்ஸ் காட்சியில், துப்பாக்கி எடுத்து, ராணுவ வீர்ர் போல அவர் சுடும் சண்டை காட்சிகள் அப்படியே ஆக்சன் மூவி ப்ளாட்

·         நயன்தாரா மிகவும் சீரியசாக நடித்திருப்பது சிறப்பு.. கொடுத்த பாத்திரத்தை சிரத்தை எடுத்து செய்திருக்கிறார். குறிப்பாக வில்லனை கவர்ச்சி காட்டி ஏமாற்றும் இட்த்தில், கைதட்டல் பெறுகிறார்

·         பட்த்தில் நடித்த அமைச்சர் வில்லன் கிளைமாக்ஸ் காட்சியில் சந்தானம் இல்லாத குறையை போக்குகிறார்..குறிப்பாக அவருடைய முகபாவனையும், டயலாக்குகளும், “ஹா..ஹா.”

·         டாப்சி, ராணா, அப்புறம் அதுல் குல்கர்னி போன்றோர், பட்த்தில் இருப்பது, பட்த்திற்கே இன்னுமொரு சிறப்பு

·         யுவன்சங்கர் ராஜா பாடல்கள் முணுமுணுக்க வைக்கிறது..குறிப்பாக “ப்ப்ரப்ப்ப..ப்ப்பரப்ப..ப்ப்பரப்ப..பான்..ப்ப்பரப்ப..பான்..ப்பரப்பான்” என்ற தீம் ம்யூசிக் கேட்க கேட்க காதுகளுக்கு இனிமை..

·         முதலில் இருந்து கடைசிவரைக்கும், விறுவிறுப்பாக கொண்டு சென்று, ஏதோ ஹாலிவுட் பட்த்தை பார்த்த திருப்தி தருகிறார் இயக்குநர்

·         தியேட்டரில், பார்கார்ன், கூல்டிரிங்க்ஸ் நன்றாக இருந்த்து..குறிப்பாக கொக்க்கோலாவில் ஐஸ் கேட்காமலே, அவர் ஐஸை போட்டு அன்பாக கொடுத்த்து அவருக்கு என்மேல் இருக்கும் அன்பை புரியவைத்த்து. எனக்கு ஜலதோசம் இருக்கிறது, வேண்டாம் என்று திருப்பி கொடுத்தாலும், “இல்லை சாப்பிட்டே ஆகவேண்டும்” என்று அன்பு கட்டளையிட்டபோது, என் கண் கலங்கியது..

முடிவாக, இந்த தீபாவளி சிறப்பாக தொடங்கப்போகிறது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு..சிந்திக்க தூண்டும் படங்கள், இப்போதெல்லாம் வர துவங்கியிருப்பது, தமிழ்சினிமாவை எங்கயோ கொண்டு போகப்போகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும்..


முடிவாக படம் சிறப்பு..சிறப்பு..சிறப்பு..இந்த வருட்த்தின் ப்ளாக்பஸ்டர் என்பதை சொல்லத் தேவையில்லை..

Tuesday 29 October, 2013

ஒரே மாதத்தில் தனுஷ் போல உடம்பு வேண்டுமா..



வாரத்திற்கு ஒருமுறையாவது ஜிம்முக்கு சென்றுவிடுவதுண்டு.  அபார்ட்மெண்டிலேயே ஜிம் இருப்பது, மிகவும் வசதியாக இருப்பதும், “நேத்து வரைக்கும் நல்லா இருந்தான்யா,,இன்னைக்கு லைட்டா, நெஞ்சு வலிக்குதுண்ணான், அதுக்குள்ள போய் சேர்ந்துட்டான்யா..அதிகம் வயசெல்லாம் இல்ல, உங்க வயசுதான் இருக்கும்” என்று பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி நண்பர்கள் சொல்லும்போது, “அய்ய்யோ..அடுத்த நம்மளோ” என்ற பயமும் ஒரு காரணம்.

இந்த உலகத்தில் உயிர்பயத்தை விட ஏதும் இருக்கிறதா என்ன..டிரட்மில்லில் ஓடும்போது, வயிறு, கை, கால் எல்லாம் தனிதனியா வலி பிரித்து எடுக்கும். நெஞ்சு வலி வேண்டாமென்றால், இந்த வலியெல்லாம் பொறுத்துக்கடா ராசா என்று எங்கேயோ ஒலிப்பதால், பல்லைக் கடித்துகொண்டு, ஒரு 20 நிமிடமாவது ஓடிவிடுவேன்..
நேற்று அப்படி டிரட்மில்லில் ஓடி கொண்டிருந்தபோது, எதிர்த்த மாதிரி, டி.வியில் ஒரு விளம்பரம் ஓடி கொண்டிருந்த்து. நான் பொதுவாக ஓடும்போது, டி.வி பார்ப்பதில்லை. அல்லது டி.வி பார்க்கும்போது ஓடுவதில்லை. ஏனென்றால், “நேத்து வரைக்கும் நல்லா இருந்தான்யா” டைப் விளம்பரங்கள் கண்ணில் பட்டு, கலவரம் பண்ணி, பதட்ட்த்தை கூட்டுவதால்..

அப்படி கண்ணில் பட்ட ஒரு விளம்பரம் “இனிமேல் எதுக்குய்யா, இந்த டிரட்மில்லில் வீணாஓடிக்கிட்டு” என்று ஒருநிமிட்த்தில் என்னை முடிவெடுக்க வைத்தது. ஒரு மாத்த்தில் 30 எல்.பி(அதாவது கிலோ அளவிலான, அமெரிக்க கணக்கீடு) சுலபமாக குறைக்க முடியும். எந்த ஜிம்முக்கும் போகவேண்டாம், மணிக்கணக்கில் எக்சர்சைஸ் பண்ண வேண்டாம். எங்கள் ப்ராடெக்டை, நீங்கள் சாப்பிடும் எந்த உணவிலும், லைட்டா தூவி விட்டால் போதும், அது எந்த உணவாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு மாதத்தில் பாருங்கள், அதிசயத்தை என்றார்கள்..

அதுவும் சும்மா இல்லை. உசிலை மணி மாதிரி ஒருவர் படம், அதுவே எங்கள் ப்ராடெக்டை உபயோகிக்க ஆரம்பித்த பின்பு என்று “அவரோ, அல்லது அவரு தம்பியோ”, அர்னால்ட் பாடி காட்டி கொண்டிருந்தார்..அட, அப்படியா என்று வாயை மூடிவதற்குள்..”நீங்கள், இதை ஒரு மாத்த்திற்கு, சும்மா யூஸ் பண்ணலாம். நாங்கள் உங்களுக்கு ஒரு மாத்த்திற்கு இலவசமாக சாம்பிள் கொடுப்போம் என்றார்கள்..

ஆஹா, சோனமுத்தான்..இப்படி ஒரு அல்வாவை வைச்சுக்கிட்டு, இம்புட்டு நாளைக்கு கஷ்டப்பட்டிருக்கோமே, என்று டிரட்மில்லை உடனே நிறுத்தினேன்..துண்டை எடுத்து முகத்தை துடைத்துகொண்டு வீட்டுக்கு சென்று, உடனே லேப்டாப்பை தூக்கியவுடன் மனைவி பயந்தே விட்டாள்..

“அய்ய்ய்யோ..என்ன்ங்க ஆச்சு..உடற்பயிற்சி செய்வது எப்படின்னு பதிவு போடப்போறீங்களா..”

“அடிப்போடி..ஒரு மாசத்துக்குள்ளே உன் புருஷன் தனுஷ் மாதிரி ஆகலை..ஆகலை என்ன..ஆகி காட்டுறேன்...”

என்று அவசரமாக அந்த விளம்ப்ர சைட்டுக்கு சென்றேன்..அருமையாக வரவேற்றார்கள்..”வாருங்கள்..வாருங்கள்..எங்கள் பக்கத்துக்கு வந்தற்கு நன்றி.நீங்கள் ஒல்லியாவதற்கு நாங்க கேரண்டி” என்று பிரீத்தி மிக்சி கேரண்டி மாதிரி வீடியோ விளம்பரம் கொடுத்தார்கள்..”நான்தான் முகேஷ்” மாதிரி, ஒருவர் வந்து, “நான்தான் மார்க்..உங்களை மாதிரிதான் நானும், இந்த உடல் பருமனால் மிகவும் அவதிப்பட்டேன்..இதோ, இந்த ப்ராடெக்டை, டெய்லி உணவில் தூவிவிட்டேன்..அம்புட்டுத்தான்(மர்கயா???), என்னுடைய வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறிபோனது” என்றார்.

“அடியே..நானும் தலைகீழா மாறுரேண்டி” என்றேன்..

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நல்லாத்தானே ஜிம்முக்கு போய்க்கிட்டிருந்தீங்க..என்ன ஆச்சுங்க” என்றாள்..

“அதெல்லாம் சொல்ல முடியாது..இப்பவே என்னை ஒரு போட்டோ எடுத்து வைச்சிக்க,..” என்றேன்..

மனைவி பதறிப்போனாள்..

“அய்ய்யோ..ஏங்க..உடம்புக்கு ஏதாவது” என்றாள் பதட்ட்த்துடன்..

“அடியே..முடிவே பண்ணிட்டயா..எப்படி ஆகுறேன் பாரு” என்றேன் கர்வத்துடன்..

கிரெடிட்கார்டு எல்லாம் கேட்டார்கள்..ஒரு மாச சாம்பிளுக்கு எதுக்குய்யா கிரெடிட்கார்டு என்று யோசிக்கும்முன்பே, “பணமெல்லாம் எடுக்க மாட்டோம்..ஒரு மாசம் கடந்த பின்பு, கண்டிப்பாக நீங்கள் இந்த ப்ராடெக்டை வாங்கவேண்டும் என்று அடம்பிடிப்பீர்கள்..அப்புறம், நீங்க எதுக்கு வேஸ்டா, க்ரெடிட்கார்டு நம்பெரெலாம் கொடுத்துக்கிட்டு..இப்பவே கொடுத்தீங்கன்னா, உங்க அனுமதியின் பேருல பணம் எடுத்துட்டு(ஓடிடுவோம்..??) சொல்லிடிவோம் என்றார்கள்..

அப்பயே எனக்கு மைல்டா ஒரு டவுட்டு வர, எதுக்கும் நம்ம கோவாலுவ ஒரு வார்த்தை கேட்டுருவோம் என யோசித்தான்..தாமதிக்காமல் போன் செய்யவே..

“கோவாலு..உங்கிட்ட ஒரு ஹெல்ப்டா” என்றேன்..

“ராசா...நானே உங்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன்..சம்பளம் வந்தவுடேனே, அப்படியே ஊருல இருக்குற அக்கவுண்டுக்கு துடைச்சு அனுப்பிச்சுட்டேன்..ஒரு பத்து டாலர் கிடைக்கும்..??”

“அட நாதாரி நாயே..பணமெல்லாம் கேட்கவரலை..ஜிம்முல எக்சர்சைஸ் பண்ணுறப்ப, டி.வியில ஒரு விளம்பரம்” ங்கறேன்...

“ராசாஆஆஆ... அத மட்டும் வாங்கிறதடா”ங்கறான்..

“டே..கோவாலு, என்னடா சொல்லுற..முழுசா கூட சொல்ல்லியேடா..”

“இல்லடா ராசா, அதமட்டும் வாங்கிறாத..”

“ஏண்டா கோவாலு..நான் தனுசு மாதிரி ஆகுறது உனக்கு பிடிக்கலையா”

“நீ எங்க கூடவே ரொம்ப நாளைக்கு இருக்கணும்டா” ங்கறான்..அப்படியே ஆடிப்போயிட்டேன்...அப்புறம் சொல்லுறான்..

“ராசா, நாலு மாசம் முன்னாடி, ஒரு பத்து நாள் லீவு போட்டிருந்தேன் ஞாபகம் இருக்கா..”
“ஆமா..ஏதோ லைட்டா காய்ச்சல் ரெஸ்ட் எடுக்குறேன்னு சொன்ன..வரக்கூட வேணாம்..பரவிடும்னு வேற சொன்னயேடா..”

“ஆமாண்டா ராசா..அது காய்ச்சல் இல்லடா..எல்லாம் அந்த கருமம் பிடிச்ச அந்த ப்ராடெக்டை ரெண்டு நாளைக்கு சாப்பிட்துனாலதாண்டா..விடாம முன்னாடியும், பின்னாடியும் போகுது..யாருனாலயும் ஸ்டாப் பண்ண முடியல..அப்புறம் ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் நாலு டிரிப் ஏத்துனாய்ங்கடா..நாலு நாளைக்கு பெட் ரெஸ்ட் எடுக்க சொன்னாய்ங்க..அந்த டாக்டரு, என்ன அசிங்கம், அசிங்கமா திட்டுனான் தெரியுமாடா..இன்னும் லைட்டா உடம்பெல்லாம் அரிக்கிற மாதிரி இருக்குடா” ங்குறான்..

என்னுடைய தனுஷ் கனவெல்லாம், ஒரு நிமிட்த்தில் சுக்கு நூறாகியது..

ஏண்ணே..யாருக்காவது தனுஷ் மாதிரி ஆகணும்னு ஆசையிருக்கு???”

Sunday 27 October, 2013

சென்னை எக்ஸ்பிரஸ் – மூடர் கூடம்


“என்னது காந்தி செத்துட்டாரா” என்பது போல, இப்போதுதான் இரண்டு படங்களை தாமதமாக பார்க்க நேர்ந்தது. ஒன்று கோடியில் சம்பாதிக்கும் ஷாருக்கானின் “சென்னை எக்ஸ்பிரஸ்” , இரண்டாவது, தெருக்கோடியில் வாழும் மக்களுக்காக எடுக்கப்பட்ட மூடர் கூடம்.

இரண்டும், இருவேறு அரசியல்களை முன்னிறுத்துகிறது, உதாரணமாக, சென்னை எக்ஸ்பிரஸில் வரும் ஒரு டயலாக்..

“கிட்ட வராதே தங்கபாலி..ஜோரா உதைச்சுடுவேன்..”

வசனம் எழுதிய அந்த புண்ணியவானைத் தான் ஜோரா உதைக்கணும்போல இருக்கிறது. அது என்னய்யா ஜோரா உதைக்கணும்.. என்னதான் வடஇந்தியாவிற்கு படிக்க சென்றாலும், ஒரு கிராமத்துப்பெண் இப்படியா பேசுவாள். மணிரத்னமும், வடஇந்தியாக்காரர்களும், கிராமத்து படம் எடுத்தால் இப்படித்தான் இருக்கும், ராவணன், கடல் படம் போல.

அய்யா கனவான்களா..படம் எடுப்பதற்கு முன்பு, ஸ்டடி, ஸ்டடி என்று ஒன்று சொல்லுவார்களே..அதை பண்ணினீர்களா..அல்லது, உங்களுக்கு தமிழக கிராமம் அல்லது தமிழ்பேசும் கிராமம் இப்படித்தான் இருக்கும், என்று பைவ்ஸ்டார் ஹோட்டலில், பீர் அடித்துகொண்டு நீங்கள் நடத்தும், டிஸ்கசனில் யாராவது சொன்னார்களா. இதே பிரச்சனைதான் மணிரத்னத்திற்கும். ராவணன் படத்தில் காண்பிக்கும், ஒரு கிராமத்தை எங்காவது தமிழகத்தில் பார்க்கமுடியுமா..பாரதி கவிதை பேசி கொண்டு, “மே” என்று கேனத்தனமாக கத்தும்படியா எங்கள் கிராமத்து இளைஞர்கள் இருக்கிறார்கள்.

ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு, கருப்பு பெயிண்ட் அடித்துகொண்டு, “எலே..ஜோசப்பு..அங்க எங்கவுலே நிக்கீரு” என்றால் தூத்துக்குடி, கன்னியாகுமாரி கடல்பக்கமா..அய்யா மணிரத்னம் மற்றும் வடஇந்தியா இயக்குநர்களே, உங்களுக்கு கோடி புண்ணியம்..உங்களுக்கு ஏத்த மாதிரி “சக்தி.நான் உன்னை விரும்புறேன்னு நினைக்கல” என்று பல்லை கடித்து கொண்டு டயலாக் பேசும் மாதவன் மாதிரி, சிட்டி இளைஞர்களை வைத்தே படத்தை எடுங்கள்..எங்கள் கிராமத்தை விட்டுவிடுங்கள்..புண்ணியமா போகும்..

எனக்கென்ன கோபமென்றால், சத்யராஜ், சத்யராஜ் என்று ஒரு நடிகர் படத்தில் நடித்தாக சொன்னார்கள்..அவரை கடைசி வரைக்கும் கண்ணில் காட்டவில்லை...பல்லை கடித்துக்கொண்டு, எப்போது, அருவாளும் கையுமாய், எண்ணை வடிந்த முகத்தோடு, ரவுடி மாதிரி, வேட்டியை தூக்கிகொண்டுதான், எங்கள் கிராமத்து இளைஞர்கள் தெரிகிறார்கள் என்றால், எப்போதும், பான்பராக் போட்டுகொண்டு , புளிச், புளிச்சென்று கண்டபடி சுவற்றில் துப்பும், வடஇந்திய இளைஞர்கள்தான் எங்களுக்கு தெரிவார்கள்..



அடுத்து பார்த்த படம் “நாய், பொம்மைக்கெல்லாம்” ப்ளாஷ்பேக் வைத்து புரட்சி செய்த “மூடர் கூடம்”. “படத்தில ஒரு ஜோக்கு கூட இல்ல மச்சி..மொக்கை” என்று புலம்பி கொண்டு பலபேர் தியேட்டரை விட்டு வெளியே வந்திருக்ககூடும், இந்த படத்தை நகைச்சுவை படமாக எண்ணி கொண்டு சென்றவர்கள். ஆனால், இந்த படம்போல ஒரு சீரியஸ் படம் சமீபத்தில் பார்த்ததில்லை. ஒவ்வொரு சீனிலும், செவிட்டில் அறைந்தார்போல ஒரு கருத்து சொல்கிறார், இயக்குநர் நவீன், ஆனால் கருத்து சொன்னது தெரியாமலே..அதுதான் அதகளம்..

முக்கியமாக, சென்ட்ராயன் பேசும் ஒரு உரையாடல்..

“ஒரு வெள்ளைக்காரண்ட தமிழ்ல பேசுவாயடா??”

“இல்லை சார்..”

“ஏன்..”

“ஏன்னா, அவனுக்கு தமிழ் தெரியாது..”

“என்னை பார்த்தா, இங்க்லீசுல 10 மார்க்குக்கு மேல எடுக்குற மாதிரி தெரியிதா..இல்லை, சீன் படம், சண்டை படத்தை தவிர, வேற ஏதாவது, இங்க்லீசு படம் பார்க்குறமாதிரி தெரியுதா..அப்புறம் ஏண்டா, எங்கிட்ட இங்க்லீசு பேசுற”

சும்மா பந்தாவுக்கு இங்க்லீசு பேசும், பயபுள்ளைகளை நிறுத்தி வைத்து, அறைந்தார்போல இருக்கிறது. நீயா நானாவில் பலமுறை கவனித்திருக்கிறேன்...நிகழ்ச்சிக்கு யாராவது ஒருத்தர், தமிழ் தெரிந்தாலும், வலுக்கட்டாயமாக இங்க்லீசில் பேசியே ஆகவேண்டும் என்று பேசுவார் பாருங்கள்..கொடுமையாக இருக்கும்..ஏண்ணா இப்படி..

சுருக்கமாக சொல்லவெண்டுமென்றால்


“ஏண்டா பார்த்தேன் என்று சிந்திக்கவைத்தது சென்னை எக்ஸ்பிரஸ்”

“ஏண்டா சிந்திக்கணும் என்று பார்க்கவைத்தது மூடர்கூடம்”

Saturday 5 October, 2013

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ரிஸ்வான் பாய்.


கண்கூசும் அளவுக்கு எங்கு பார்த்தாலும், மின்விளக்குகள். முகத்தில் ரெடிமேட் 
புன்னைகையோடு சிரிக்க. சிரிக்க இளம்பெண்கள். “ந்ன்னாயிட்டு பாடிட்டு.. எந்து செய்யுது..” மாநிலம் மாறி வந்து விட்டோமோ என்று எண்ணம் வரவைக்கும் அளவுக்கு வீசப்படும் வார்த்தைகள். பேஷன் ஷோவையும் மிஞ்சும் உடை அலங்காரங்கள். நுனிநாக்கு ஆங்கிலங்கள்..ஒப்பனைகள்..உலகத்தமிழர்கள் உற்றுநோக்கும் பிரமாண்டமேடை..இவ்வளவு கலர்புல்லான ஒரு அரங்கத்தில், அவரை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்..

வெள்ளைத்தோல் இல்லை. துள்ளல் நடை இல்லை, சவரம் செய்த பொலிவான முகம் இல்லை. ஸ்டைலான ஜீன்ஸ், டிசர்ட் இல்லை. உடலை சுற்றி முழுவதுமாக போர்த்தப்பட்டாற் போன்ற ஜிப்பா உடையில், நான்கு பேர் தூக்கி வீல் சேரில் வைத்து, மெதுவாக வீல்சேரை தள்ள, அரங்கின் நடுவில் வந்து , அமைதியாக முதல் பாடலை அவர் பாட ஆரம்பித்தபோது, அரங்கமே ஒரு நிமிடம் அதிர்ந்து போனது..

அவர்தான் விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கரின் ஒரு பங்கேற்பாளரான “ரிஸ்வான் பாய்” என்று செல்லமாக அழைக்கப்படும் “ரிஸ்வான்..”

மாற்றுத்திறனாளிகளும் யாவருக்கும் சளைத்தவர்களில்லை என பலதுறைகளில் இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது..பொதுவாக, இசையில் அவர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு அபரிதமானது. பஸ்ஸ்டாண்ட்களில் நிற்கும்போது, எங்கிருந்தோ வரும் “கடல் மேல் பிறக்கவைத்தான்” என்ற பாடல் சட்டென்று ஈர்க்கும். யாரென்று திரும்பி பார்த்தால், ஒரு போர்வை மேல் அமர்ந்து கொண்டு நான்கு மாற்றுத்திறனாளிகள். போர்வை முழுக்க சிதறிய சில்லறைகள். கையில் ஒரே ஒரு ஆர்மோனியம், மற்றும், சின்னதாய் ஒரு டிரம். அவ்வளவுதான்,..ஆனால், மனம் முழுக்க நம்பிக்கையோடு பாடப்படும் அந்தப் பாடலை கேட்கும்போது, மனதை ஏதோ செய்யும்..இவ்வளவு திறமை இருக்கிறதே..ஏன் இவர்களுக்கு, ஒரு மேடை கிடைப்பதில்லை என்று எண்ணத்தை, அரங்கேற்றிய விஜய் டிவிக்கு ஒரு ராயல் சல்யூட்..

ரிஸ்வான் பாய் கர்நாடக சங்கீதம் படித்த்தாய் தெரியவில்லை..”வீட்டில் உக்கார்ந்து கொண்டு, ஏதோ திரையிசை பாடல்களை முணுமுணுத்து கொண்டே, இசையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட்தாக” சொல்கிறார். தன் உடலில் உள்ள குறைபாட்டை இதுவரை அவர் ஒரு பொருட்டாக கூட நினைத்த்தில்லை..அவர் மனதில் உள்ள ஒன்றே ஒன்றுதான், அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது..அது, “நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை..”



அவருடைய “இளங்காத்து வீசுதே..” பாடலை கேட்டபோது, நம்மை இன்னொரு உலகத்திற்கு எடுத்து சென்றது..அருமையான கஜல் பாடல் ஒன்றை பாடியபோது, அவருக்கே அந்த பாடல் படைக்கப்பட்ட்து போல் இருந்த்து..கிராமாத்து பாடலான “வெட்டிவேரு வாசம்” பாடலை பாடியபோது, கிராமத்து மணம் நமதருகில் வந்த்து..
அனைத்து பாடல்களிலும், அவருடைய குரலில் இருந்த்து ஒன்றே ஒன்றுதான்..உறுதியான நம்பிக்கை.

பக்தி பாடல்கள் சுற்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, “கடவுளிடம் என்ன வேண்டி கொள்வீர்கள்..அடுத்த நொடி தாமதிக்காமல், அவர் அளித்த பதில்..”நான் இருக்கிறேனா, இல்லையோ..ஆனால், உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் என் பாடல் ஒலித்து கொண்டிருக்கவேண்டும்..”

ரிஸ்வானின் பலமே, ஒரு பாடலை ஒப்புக்கு பாடாமல், அந்த பாடலின் உணர்வை அப்படியே கொண்டுவருவதுதான்..இந்த வாரத்தில் அவர் விரும்பி பாடிய “உயிரே, உயிரே” பாடலில் அவர் சில தவறுகள் செய்தபோதும், நடுவர்களால், அவர் பாடலில் கொண்டு வந்த உணர்வை குறை சொல்ல முடியவில்லை..

ஆனாலும், தவிர்க்க முடியாமல் அவர் போட்டியிலிருந்து விலக்கப்பட்ட போது, யாரையும் அவர் நிந்திக்கவில்லை. அழுது வடியவில்லை, மாறாக புன்னகையையே பதிலாக தந்தார். அவர் முகத்தில் சின்ன சோகத்தை கூட பார்க்கமுடியவில்லை..
“எனக்கு மிக சந்தோசம்..விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள்..எனக்கு நீங்கள் கொடுத்த வீல் சேரை இங்கு விட்டு செல்கிறேன்..எதற்கு தெரியுமா..அடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், என்னைப்போல ஒருவன் வரவேண்டும்.. வந்து ஜெயிக்க வேண்டும்” என்று சொல்லிய வார்த்தைகளுக்கு மேல் என்ன வேண்டும்..அனைத்து மாற்று திறனாளிகளுக்கு கொடுக்கப்பட்ட உற்சாக டானிக் அல்லவா..

கடைசியாக, அனைவரிடம் விடை பெற்று, கைகூப்பி விட்டு, வாகனத்தில் தவழ்ந்து சென்று அவர் ஏறியபோது, மனதை ஏதோ செய்த்து. அதுவரை அடக்கிகொண்டிருந்த அழுகை, வெட்கத்தை விட்டு வெளிவர, அதை அடக்க்கூட மனமில்லாமல் அழுதேன்...

அவர் ஒரு போட்டியில் பாடிய அருமையான பாடல் ஒன்று மனதில் இன்னமும் சன்னமாக என் காதுகளில் ஒலிக்கிறது...

“ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது..”

போய் வாருங்கள் ரிஸ்வான் பாய்...