Tuesday, 30 November, 2010

நந்தலாலா – இது படம்யா……

பொதுவாக எனக்கு அறிவுசெருக்கு உள்ளவர்களை பிடிப்பதில்லை. நீங்கள் திட்டினாலும் பரவாயில்லை, இந்த காரணத்திற்காகவே எழுத்தாளர் சுஜாதா, பாலகுமாரன், இளையராஜா போன்றவர்களை பிடிப்பதில்லை. ஆனால் அவருடைய படைப்புகளை அல்ல. “தயவு செய்து இனிமேல் புத்தகங்களை பரிசாக அனுப்பாதீர்கள் ” என்று சுஜாதா சொல்லியபோது, அவரை பார்க்கவேண்டுமென்று எனக்கிருந்த ஆர்வம் சடுதியில் மறைந்து போனது. ஆனால் கடைசியில் அவர் இறந்த பின்பு புகைப்படத்தைதான் பார்க்க முடிந்தது. அதுபோல்தான் இளையராஜா. நான் பண்ணுவதுதான் இசை என்று சொல்லியபோது, கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஆனால், அதற்காக இரவு வேளைகளில் அவருடைய பழைய பாடல்களைக் கேட்பதை நிறுத்தவில்லை. இன்னமும் அவருடைய இசைதான் எனக்கு தாலாட்டு. அதுபோல்தான் மிஷ்கின். அஞ்சாதே படத்தைப் பார்த்தபோது, அவர் மீதிருந்த ஆர்வம், அவருடைய சில பேச்சுகளை படிக்கும்போது சுத்தமாக போயிருந்தது. அதனால், “அப்படி என்னதான்யா எடுத்திருக்கான்” என்று ஒரு கோபத்துடன்தான் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.

பல விமர்சனங்களை எல்லோரும் படித்திருப்பதால், திரும்பவும் கதையை சொல்லி போரடிக்க விரும்பவில்லை. டைட்டில் கார்டிலிருந்து இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் ஆரம்பித்து விடுகிறது. அந்த இசை மெல்ல மெல்ல உங்கள் மனதை ஆக்ரமித்து காட்சிகளாக விரியும்போது மிஸ்கினின் ஆளுமை தொடங்குகிறது. ரேடியோ பெட்டியை உடைக்கும்போது சட்டென்று தொடங்கிய ஆச்சர்யம், கிளைமாக்ஸ் வரை தொடர்ந்து, முடிக்கும்போது கண்ணீர் துளியாக வருகிறது.

இந்த படத்தில் மிஸ்கின்ன் உடைத்த தமிழ்சினிமாவின் கிளிஷேக்களை சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிபட்ட கேமிரா கோணங்கள் இந்திய திரையுலகத்திற்கே புதுசு எனலாம். அடிக்கடி கால்கள் நடப்பதை கொண்டே காட்சிகளை விவரிக்கும் ஸ்டைலாகட்டும், கேமிராவை ஒரு இடத்தில் வைத்துவிட்டு பிம்பங்களை நடமாடவிடும் ஸ்டைலாகட்டும், கதாபாத்திரங்களோடு கூடவே ஓடும் கேமிரா கோணங்களாகட்டும், மகேஷ் முத்துசாமி என்பவர் தமிழ்திரை உலகின் தவிர்க்கமுடியாத ஒளிப்பதிவாளராக போகிறார் என்பதற்கு சான்று

இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதை ஏதோ செய்வார்கள். பைக்கில் வரும் அந்த ஜப்பானிய குண்டர்கள். இளநீர் விற்கும் அந்த தாத்தா, வழிகாட்டும் ஊனமுற்றவர், ஹனிமூன் ஜோடிகள், ரோமியோக்கள், ஆங்கிலத்தில் பேசினால் அமைதியாகும் போலிஸ்காரர்கள், பாலியல் தொழில் பேசும் ஸ்னிக்தா, 12 நொடிகள் வரும் நாசர், 1 நிமிடம் வரும் ரோகிணி..இப்படி பல..அனைத்தும் படம் முடிந்தபின்பும் அப்படியே கண்ணுக்குள் நிற்கின்றன. இன்னும் பலவருடங்களுக்கு, இந்த படம் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு பாடமாக இருக்கும்.

சிறுவனாக நடித்த அந்த சிறுவன் அஸ்வத், மனதை கவர்கிறான். வயதுக்கு மீறி இல்லாமல், சராசரி சிறுவனாகவே காட்டியிருப்பது சிறப்பு. மிஸ்கின் இந்த படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகர் விருது வாங்காவிட்டால்தான் ஆச்சர்யம். மனிதர் அனாசயமாக நடித்து தள்ளிவிட்டார். நிமிடத்தில் வரும் அழுகை, கோபம், சிரிப்பு, கண்ணீர்..அப்பப்பா..அதுவும் அம்மாவை பார்த்தவுடன், அவருடைய நடிப்பை பார்த்து வியந்து போனேன். சிறுவன் கோபத்தில் “மெண்டல்” என்று சொன்னவுடன், ஆற்றாமையால் அழும் அந்த நடிப்பு, உண்மையிலேயே அனைவரையும் அழவைக்கும்.

படத்தின் உயிர்நாடியே இளையராஜாதான். பல விமர்சனங்களில் சொல்லியது போல், தியேட்டருக்கு சென்று கண்ணை மூடி உக்கார்ந்து கொள்ளலாம். பிண்ணனி இசையே பல சேதிகள் சொல்லும். எங்கு எங்கு மௌனம், எங்கு எங்கு துள்ளலிசை, எங்கு எங்கு மெலடி என ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். சும்மாவா சொல்கிறார்கள் இசைஞானியென்று..

ஒரு படம் இவ்வளவு அதிர்வுகளை ஏற்படுத்தமுடியுமா என்று கேட்டால், இந்த படம் ஏற்படுத்தும். இந்த படத்திற்கு தேசிய விருது கொடுக்காவிடில், அப்படிபட்ட தேசியவிருது, நமக்கு தேவையில்லை. இந்த படம் காபி என்று சொன்னால், “இருந்து விட்டு போகட்டுமே” என்றுதான் சொல்லுவேன். எனக்கு இதுதான் உலகசினிமா..என் பகுதி வாழ்வியலை சொன்ன சினிமா. நாம் அன்றாடம் உபயோகிக்கும் அனைத்தும் ஏதோ ஒன்றின் நகல்தானே. அதற்காக நாம் அதை உபயோகிக்காமலா இருக்கிறோம். மிஷ்கின் அந்த படத்தை டப்பிங்க் செய்து “பாருங்கடா என் படத்தை” என்று சொல்லியிருந்தால் கோபப்படலாம். ஆனால் கதாபத்திரங்களை நம்மோடு பயணிக்கவிட்டிருக்கிறாரே..இரண்டரை மணிநேரம் அவர்களோடு ஒன்றிப்போகிறோமே..இதற்கு மேல் என்ன வேண்டும்..காபியாவது…புடலங்காயாவது…

முடிவாக சொன்னால், நந்தலாலா – இதுபோன்று இனிமேல் இந்தியாவில் படம் எடுக்கமுடியாது..

Sunday, 28 November, 2010

“தக்காளி…!*&!&$##$$*#@%...” என் கையில மாட்டுனான்…”

மதுரை என்றாலே எனக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. புழுதியிலும், வெயிலிலும் அலைந்து கிடந்த மண்ணல்லவா. இப்போதும், என் உடம்பில் அந்த வாசம் ஒட்டிக்கொண்டே இருக்கும். என்னதான் பகுமானத்துக்கு அமெரிக்காவில் பர்கரை கடித்தாலும். இன்னமும் முக்குகடை பணியாரத்திற்கு நான் அடிமை. சென்னையில் எந்த தெருவிலாவது பணியாரம் சுடும் ஆயாவைப் பார்த்ததுண்டா. இன்று சென்றாலும் சோழவந்தான் வீதிகளில் பார்க்கலாம். அந்த ஆயா பணியாரம் சுடும் அழகை அருகில் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருப்போம். அதிகபட்சம் ஒரு பணியாரம் 25 பைசா விலையேறி இருக்கும். 4 ரூபாய்க்கு, காலை உணவையே முடித்துவிடுவோம்.

மதுரையை அவ்வளவு சீக்கிரம் மறக்கவும் முடியாது. எங்காவது “வந்துட்டாயிங்க..போயிட்டாங்க” என்ற வார்த்தையைக் கேட்டால், என்னை அறியாமல் நான் திரும்பி பார்ப்பேன். உடனே அவர்களிடம் சென்று நான் கேட்கும் முதல்கேள்வி “என்னண்ணே..மதுரையா..”. அப்படித்தான் அவன் எனக்கு அறிமுகமானான். பெயர் வினோத். மதுரைக்காரன். இங்கு போன மாதம்தான் வந்திருந்தான். யாரைப் பார்த்தாலும் திருதிருவென்று முழித்தான். என்னை விட 5 வயது கம்மி. சின்னப்பையன் போல் இருந்தான்.

“என்ணண்ணே..இங்கிட்டு ஒரு எழவும் புரிய மாட்டிங்குது. இவிங்க இப்படித்தான் இருப்பாயிங்களா..” என்றான். சிரித்துக் கொண்டன். அந்த தமிழை கேட்க ஆசையாய் இருந்தது. வாய் நிறைய “அண்ணே..அண்ணே..” என்றுதான் கூப்பிடுவான்..

“அண்ணே..எப்படிண்ணே இருக்கீங்க..”

“அண்ணே..டைம் என்னண்ணே..”

“அண்ணே..கிளம்பலாமாண்ணே..”

“அண்ணே..ரொம்ப நன்றிண்ணே..”

இப்படி வாய் முழுக்க அண்ணன்கள். ரொம்பவும் மரியாதை கொடுத்தான்..

“டேய் வினோத்து. என்னை பெயரை சொல்லியே கூப்புடுடா..”

“போங்கண்ணே..உங்களைப் போயி..”

ரொம்ப ரொம்ப நெஞ்சை நக்கினான். நானும் அவனை விட 5 வயது மூத்தவன் என்பதையே மறந்துவிட்டேன். என் நண்பனாகவே பழக ஆரம்பித்தேன். முடிந்தவரை அவனுக்கு உதவி செய்தேன். நம்ம ஊர்க்காரனாச்சே என்ற பாசம்தான் அதிகம் இருந்தது. இப்படி போய் கொண்டிருந்த போதுதான் ஒருநாள் என்னிடம் கேட்டான்..

“அண்ணே..தண்ணியடிப்போமா..”

என்னிடம் உள்ள ஒரே கெட்டபழக்கம் தண்ணியடிக்க பழகாததுதான். அடிபம்பில் கூட இரண்டு வாளி தண்ணியடிப்பேன், ஆனால் மருந்துக்குகூட மது(தியேட்டர் இல்லைண்ணே) பக்கம் செல்ல மாட்டேன். ஒரு புடலங்காய் சத்தியமும் இல்லை. நான் அந்த பக்கம் செல்ல நினைத்தாலே, அய்யனார் வேஷம் போட்ட வினுசக்கரவர்த்தி மாதிரி எங்கப்பா கையில் அருவாளோடு நாக்கை துருத்திக் கொண்டு ஓடிவரும் காட்சி என்முன் தோன்றுவதால். ஆனால் எனக்கு புடித்தது தண்ணியடிப்பவர்களுக்கு கம்பெனி கொடுப்பது. ஏனென்றால் தண்ணியடிக்கும் இடங்களில்தான் சைடுடிஷ் காரம்சாரமாக கிடைக்கும். கேட்க, கேட்க கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். மற்றும் தண்ணியடித்தவர்களின் உளறலை கேட்க சிரிப்பாக இருக்கும். அதனால் உடனே ஒத்துக்கொண்டேன். வினோத்து வீட்டில் பாட்டில் ஓபன் பண்ணுவது என்று முடிவானது.

கரெக்டாக 9 மணிக்கு சாமியைக் கும்பிட்டு பாட்டிலை ஓபன் பண்ணினான்..

“சாமி..நல்லா போதை ஏறணும்..”

ஓபன் பண்ணுவதற்கு முன்னால், மரியாதை தெரிஞ்ச பய, பவ்யமாக என்னிடம் கேட்டான்..

“அண்ணே..உங்க முன்னாடி சரக்கு அடிக்கபோறேன் தப்பா எடுத்துக்க மாட்டிங்கள்ள..”

எனக்கு புல்லரித்துப்போனது. என்ன ஒரு பாசம்..என்ன ஒரு பாசம்..

“தம்பி..நீ எனக்கு தம்பி இல்லைடா..நண்பேண்டா..ஒரு வார்த்தை கேட்ட பார்த்தியா…அதுவே எனக்கு போதும்டா..தைரியமா அடி..”

கண்ணை மூடிக்கொண்டு முதல் ரவுண்டு உள்ளே விட்டான்..நானும் இருக்கிற சைடுடிஷ்களை காலி பண்ண ஆரம்பித்தேன்.

“அண்ணே..எனக்கு நீங்கதாண்ணே உண்மையிலேயே அண்ணே..நீங்க இல்லாம எனக்கு யாருமே இல்லேண்ணே..நீங்க ஹெல்ப் பண்ணலைண்ணா..ப்ச்..”

ரொம்ப பீல் பண்ணினான்..

“விடுடா தம்பி..நம்ம ஊர்க்காரனாயிட்ட..”

இப்போது ரெண்டாவது ரவுண்டு உள்ளே விட்டான்..

“அண்ணே..நீங்க அண்ணே..நானு தம்பி..”

“ஆமாண்டா தம்பி..”

“இல்லை..நீங்க ஒத்துக்க மாட்டீங்குறீங்க..நீங்க தம்பி..நான் அண்ணே..சாரி..சாரி..நீங்க அண்ணே..நான் தம்பி..”

“ஓகே தம்பி..நான் வரட்டா..”

என்ன நினைத்தானென்று தெரியவில்லை..மூன்றாவது ரவுண்டையும் உள்ளே விட்டான்..

“டே..அண்ணே..உக்காரு..”

சரி பயபுள்ள வேற யாரையாவது சொல்லுறான்னு அங்கிட்டு பார்த்தா ஒருத்தனையும் காணோம். ஆஹா..அப்ப என்னையத்தான் சொல்லுறானா..

“டே..தம்பி..என்ன இது..”

“டே..வெளக்கெண்ண..உக்காருடா..ஒரு தடவை சொன்னா கேட்காது..புடிங்கி” ங்கிறான்..எனக்கு ஆடிப்போயிருச்சுண்ணே..

“டே..தம்பி..உனக்கு தலைக்கு போதை ஏறிருச்சு..ஒழுங்கா தூங்கு..”

“போடா..சொம்பு..ஒருதடவை சொன்னா தெரியாது..வூட்டுல போயி என்னத்த புடுங்க போற..உக்காரு ஒழுங்கா..இல்லைண்ண்ணா…இந்த பாட்டில வுட்டு மண்டையில ஆட்டிப்புடுவேன்”

ஆத்தாடி..எனக்கு கொலைநடுங்கிப்போச்சுண்ணே..உசிருக்கு பயந்து அப்படியே உக்கார்ந்துட்டேன்.. இன்னொரு ரவுண்டு உள்ளே விட்டான்..

“என்ணண்ணே..தப்பா எடுத்துக்காதண்ணே..நீ அண்ணே..நான் தம்பி.. சொல்லு..நீ யாரு..”

உசிரு பயத்துல தானா வார்த்தை வந்தது..

“அ…ண்…ணே..”

“நானு..”

“த..ம்…பி..”

உடனே ஆரம்பித்தான்..

“அண்ணே..உங்களுக்கு எவ்வளவு கொடுமை செய்திருக்கேன்..நாம சின்னபுள்ளையில எம்புட்டு பாசமா இருந்துருப்போம்..”

“டே..வினோத்து..ஒரு மாசமா தாண்டா உன்னோட பழக்கம்..சும்மா குடிச்சுப்புட்டு உளறாதே..”

“என்னது..நான் குடிகாரனா..நான் உளறுனா..டே…ய்….”

அவ்வளவுதாண்ணே..அவ்வளவு கெட்ட வார்த்தையை ஒரே வாயிலிருந்து அப்பதான் முததடவையா கேக்குறேன். சிலவார்த்தையெல்லாம் சின்னபுள்ளையில கேட்டது..காதை பொத்திக்கொண்டேன்..திடிரென்று பயபுள்ள இறங்கிட்டான்..

“அண்ணே..சாரிண்ணே..நல்லா..ஏறிரு..ச்..சிண்ணே..நீங்க கூட ரெண்டு..ரெண்டா..தெரியிறீங்க..ண்ணே..”

சொல்லிக்கொண்டே..பொத்தென்று கீழே விழுந்தான்..ஆஹா..பயபுள்ளைக்கு அடிபட்டுட போகுதுன்னு அவனை அப்படியே தூக்கினேன். அந்த நேரம் பார்த்து எடுத்தான் பாருங்க..ஒரு வாந்தி..அவ்வளவுதான்..அவ்வளவு சாக்கடையும் என்மேல்தான்..ஏறக்குறைய குளித்தேவிட்டேன்…அந்த நாத்தம் தாங்கமாட்டாமல் நானும் எடுத்தேன் வாந்தி..

பின்பு என்ன..அவனை எழுப்பி குளிக்கவைத்து..படுக்கையில் போட்டு விட்டு..நானும் குளித்து திரும்ப வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது..வாழ்க்கையே வெறுத்துப்போனேன்..திரும்ப வந்து பார்த்தால் ஆளைக்காணோம்..கட்டிலுக்கு கீழே மல்லாக்க விழுந்து கிடந்தான்..திரும்பவும் உளறினான்..

“ஆ….ஏய்..யா..ரு..யா..அங்க..நிக்க்கு..ற..து..ஐ…லவ்..யூ…என் ..வா..ழ்க்க்..கை..யில்..நடந்த…சம்ப்ப..வங்க..ள்..

திரும்பவும் அவனை படுக்கபோட்டுவிட்டு அவனருகில் ஒரு சேர் போட்டு உக்கார்ந்து கொண்டேன்..பய போதையில் எங்கயாவது போய் விட்டால் பிரச்சனையாகிவிடுமோ என்ற பயம்தான்..காலை 5 மணிவரைக்கும் முழித்தே இருந்தேன்..அசதியில் அப்படியே தூங்கிப்போனேன்..துக்கத்தில் யாரோ காதுக்குள் மணியடிக்கும் சத்தம் கேட்டு மெதுவாக கண்ணைத்திறந்து பார்க்கிறேன்..எதிரே நம்ம வினோத்து நெற்றி நிறைய திருநீரோடு, இடுப்பில் வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு, தெய்வ கடாஷமா..பயபக்தியோடு..பூஜை மணியை ஒரு கையில் ஆட்டிக்கொண்டு..,இன்னொரு கையில் திருநீரை நீட்டுறான்..

“அண்ணே..துண்ணூரை எடுத்துக்கங்கண்ணே..”

எனக்கு இருந்த கொலைவெறியில் ஒன்றும் பேசவில்லை..அவனே பேசினான்..

“என்னண்ணே..இம்புட்டு நேரமா தூங்குறது..உடம்புக்கு ஏதும் பிரச்சனையாண்ணே..ஏதோ வாந்தி எடுத்த மாதிரி தெரியுது..

எனக்கு வந்த ஆத்திரத்துக்கு. கையில் எதுவும் கிடைக்கலை..அங்கிட்டு கிடந்த பாட்டிலை எடுத்து அவனைநோக்கி ஓடினேன்..அன்னிக்கு ஓடி ஒளிஞ்ச பையன்..இன்னும் என் கையில சிக்கலை..

“தக்காளி…!*&!&$##$$*#@%...” என் கையில மாட்டுனான்…”

Sunday, 14 November, 2010

நீயெல்லாம் எதுக்குடா கல்யாணம் பண்ற…

(மனைவியின் பார்வையில்)

காலையில் சுடசுட பெட் காபி..

வேண்டுமானால் முதுகுக்கு சோப்பு…

ஆவிபறக்க இட்லியும் சட்னியும் ரெடியாக..

அயர்ன் பண்ணி தயாராக சட்டை பேண்ட்…

நீ டீசண்டாக காட்சியளிப்பதற்கு ஷூ பாலிஸ்..

ஒருவாயில் இட்லியோடு நீ படிக்கும் தட்ஸ்தமிழ்..

“அய்யோ..இண்டியன் எகனாமி கோயிங்க் டவுண்” என்று கத்தல்..

இரவு எழுதிய பதிவுக்கு எத்தனை ஓட்டு என்று பார்வை..

சாப்பிடும்போது நண்பனின் பதிவு பற்றி போன் பேச்சு..

நீ கொட்டிக்கொள்ள ரெடியாக இருக்கும் லஞ்ச் டிபன்பாக்ஸ்.,.

புறப்படும்போது எந்திரத்தனதனமான ஒரு டாட்டா..

சாயங்காலம் திரும்பி வரும்போது கடனுக்கு ஒரு புன்னகை…

லேப்டாப்பை திறந்து “ஏ..மனிதா..” என்று ஒரு பதிவு..

துரை டயர்டாயிட்டாரு என்பதற்காக ப்ரூ காபி..

“ஓ.மை..காட்..மொத்தம் நாலு ஓட்டுதானா..” என்று புலம்பல்..

“பதிவுலகம் ஏண்டா இப்படி” நாராசமான போனில் உரையாடல்..

“சாம்பருல கொஞ்சம் உப்பு கம்மி..” கோபமான குரலில் திட்டு..

எத்தனை ஓட்டு,கமெண்ட் என நிமிடத்திற்கு நிமிடம் பார்வை..

“சூப்பர்,கலக்கல்.” பொய்யாக நண்பனின் பதிவுக்கு கமெண்ட்…

நல்லா போர்வை போத்தி குறட்டை விட்டு கேவலமான தூக்கம்..

நீயெல்லாம் எதுக்குடா கல்யாணம் பண்ற…

Saturday, 13 November, 2010

என்கௌண்டர்(18+)

“வாடா..கிளம்பு..இன்னைக்கு உனக்கு பரலோகம்தான்..”

பூட்ஸ் காலால் முகத்தில் உதை விழுந்தபோது எனக்கு வலிக்கவில்லை. எல்லாம் மறத்து போயிருந்தது..

“சாவுடா..நாயே..நீயெல்லாம் மனுசனடா..த்தூ…பச்சை குழந்தையைப் போயி கொன்னிருக்கேயேடா..மனசாட்சியே இல்லை..” முகத்தில் உமிழ்ந்தார்..துடைத்துக் கொண்டேன்.

“அங்கிள்..என்னை விட்டுருங்க..அங்கிள்…” இன்னும் அந்த குழந்தையின் சத்தம் என் காதுகளில் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த சத்தம்..இதுவரை என்னை இரவுகளில் தூங்கவிடவில்லை. இப்போது பகலிலும்..

எனக்கு மன்னிப்பே இல்லை. மனதளவில் எப்போதோ இறந்துபோய்விட்டேன். எப்போதும் நான் வந்தால் ஓடிவந்து என்னை கட்டிகொள்ளும் மனைவி, கன்னத்தில் அறைந்தாள். “த்தூ.. சாவுயா..” என்று துப்பினாள்..”நீதான் என் உலகம்..” இந்த வார்த்தைகளைத் தவிர அவள் வாயில் இருந்து எந்த வார்த்தையும் கேட்டதில்லை. அனைத்து திட்டுகளையும் அன்றுதான் பேசினாள். முடிவாக சொல்லினாள்..”இவனை தூக்கில போடுங்க சார்..இவன் கட்டுன தாலி எனக்கு தேவையில்லை..” சிறைக்கு போகும்முன் நான் கடைசியாக கேட்ட வார்த்தைகள். அதன் பின்பு, எதுவும் எனக்கு கேட்கவில்லை.

தரதரவென்று இழுத்துகொண்டு போய் வண்டியில் ஏத்தினார்கள். எப்போதும் என்னோடு வரும் காவலர்களுக்கு பதிலாய், புதிதாக 4 காவலர்கள். அனைவரும் இடுப்பில் பிஸ்டல் சொருகியிருந்தார்கள். எனக்கு புரிந்துபோனது. என்கவுண்டர். முதல்முதலாக சந்தோசப்பட்டேன். இன்று எனக்கு விடுதலை. இந்த நரகவாழ்க்கையிலிருந்து. அந்த பிஞ்சுகளை கொலை செய்தபோது கூட என் கைநடுங்கியது. இப்போது நடுங்கவில்லை. சாவை எதிர்நோக்கியிருந்தேன். நிறைய நாட்களுக்கு பின்பு சிரித்தேன்.

“பாருங்க சார்..நாய்க்கு சிரிப்பை..இவனையெல்லாம் மரியாதையா சுடக்கூடாது சார்..ஓடவிட்டு சுடணும்..விடுங்க சார்..இங்கயே போட்டு தள்ளிரலாம்..”

“சும்மா இருக்கமாட்டீங்க….பிளானை சொதப்பிரக்கூடாது..” உயரதிகாரி அதட்டினார்..

வண்டி கிளம்பியது..

என் அருகில் அமர்ந்த காவலர் தள்ளி உக்கார்ந்துகொண்டார். என் கை உரசுவது கூட அவருக்கு பிடிக்கவில்லை அருவருப்பாக உணர்ந்தார். கண்களில் வெறுப்பு தெரிந்தது. அனைவர் முகத்திலும் ஒரு படபடப்பு இருந்தது. இன்னும் 20 நிமிடங்கள் தான். எல்லாம் முடிந்துவிடும்..பல்லை கடித்து கொண்டேன்.என் மனம் போலவே வண்டியும் தள்ளாடி சென்றது.ஒரு இடத்தில் நின்றது.

ஒருவர் தவிர அனைவரும் இறங்கினர். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர். அந்த ரோட்டில் யாருமே இல்லை. ஒரு ஈ காக்கா கூட..உயரதிகாரி அங்கு நின்றுகொண்டிருந்த நான்கு அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்டு கொண்டிருந்தார்..சரசரவென்று காரியம் நடந்தது. இரண்டு பேர் வண்டியின் முன்பக்கம் நின்று காவல் காத்து கொண்டனர். இரண்டுபேர் வண்டியின் பின்பக்கம் நின்று காவல்… அதிகாரி என்னிடம் வந்தார்..என் முகத்தை பார்க்ககூட அவர் விரும்பவில்லை.

“இறங்குடா..”.

இறங்கினேன்..என்னை பார்த்தார், ஒரு பூச்சி போல.. பிஸ்டல் பக்கம் கை சென்றது.

“ம்ம்..சரி..ஓடு..”

“ப்ச்..இல்லை சார்..இப்படியே போட்டிருங்க..பரவாயில்லை..”

அவர் கண்களில் சிறு குழப்பம் தெரிந்தது. ஓடி சென்று இன்னொரு அதிகாரியிடம் பேசினார்..தலையை ஆட்டினார்..எனக்கு பொறுமையில்லை. இதோ..இன்னும் 5 நிமிடம்தான்.. ஓடி என்னிடத்தில் வந்தார்..வந்த வேகத்தில் பிஸ்டலை எடுத்து என் தலையில் வைத்தார்..அப்போதுதான் அந்த எண்ணம் எனக்கு தோன்றியது..

“சார்..”

“என்ன..”

“ஒருநிமிசம் சார்,,கடைசியாய்..ஒரு தம் போட்டுக்குறனே..அடிச்சு ரொம்ப நாள் ஆச்சு சார்..ப்ளீஸ்..”

திரும்பவும் அவர் கண்களில் குழப்பம்..ஓடினார்..பேசினார்..தலையாட்டினார்..திரும்பி வந்தார்..கையில் ஒரு சிகரெட்..பத்த்வைத்து என்னிடம் தந்தார்..

ஆசையாய் வாங்கி அப்படியே இழுத்தேன். அந்த போதை அப்படியே என் நெஞ்சு கூட்டுக்குள் இறங்கியது..வாழ்க்கையின் கடைசி சிகரெட்..எப்படி இருக்கும்…அப்படியே சொர்க்கத்தில் இருப்பதாய் உணர்ந்தேன். அவசரம் அவசரமாய் இன்னும் இழுத்தேன். சிகரெட்டும் என்னை போலவே செத்துக் கொண்டிருந்தது.... அதற்கும் அன்று கடைசிதானே..அதுவும் என்னை வெறுப்பாய் சுட்டு தீர்ந்துபோனது.. ஆயத்தமானேன். திரும்பவும் பிஸ்டல் என் நெற்றிப்பொட்டில்.. அவருடைய கண்களை கவனித்தேன். பயம் தெரிந்தது. அவருக்கு ஏன்….எனக்கு புரியவில்லை. கைகளில் சின்ன நடுக்கம்..பாவம்..புதுசு போல..சிரித்து கொண்டேன்..

“சார்..”

இந்தமுறை கடுப்பாகி போனார்..

“இந்தவாட்டி என்னடா..”

“என் பொண்ணு சார்..நல்லா படிப்பா சார்..பர்ஸ்ட் ரேங்க்குதான் எடுப்பா..அவளைப் பார்த்தீங்கன்னா நல்லா படிக்க சொல்லுங்க சார்…”

இந்தமுறை அவர் விரல் டிரிக்கரை நோக்கி போக பல்லைக் கடித்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டேன்..

“ட்ட்ட்ரக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்……………..”

Sunday, 7 November, 2010

மிக்சர் ஜூஸ்

இந்த வார வாழ்த்துக்கள்

மழை வந்து இந்த வார தீபாவளியை கெடுத்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். தீபாவளி கொண்டாடலாமா, வேண்டாமா என்பது விவாதத்திற்குரியது என்றாலும், இதுபோல திருவிழா காலங்களில்தான், மனம் நிறைய அனைவருக்கும் வாழ்த்து சொல்லும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. செலவுகளை மீறி, அனைவரின் முகத்திலும் சந்தோசத்தை பார்க்க முடிகிறது. அந்த பட்டாசுகளை வெடிக்கும்போது அனைவரும் குழந்தைகளாக மாறிப்போகிறோம். அன்றைக்காவது கோயிலுக்கு சென்று நம் பக்தியை உறுதிப்படுத்துகின்றோம். அதனால், ஆண்டுதோறும் தீபாவளி கொண்டாடுவது அவசியமே என்று கூறி வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு(ஆஹா..தீபாவளி பட்டிமன்றம் பார்த்த எபெக்டோ…). மறுபடியும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். நானும் என் மனைவியும், இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு சென்றோம். அங்கு ஒன்று கவனித்தேன்.. கோயிலில் கூட்டம் அதிகமானதால் பார்க் பண்ண இடம் கிடைக்கவில்லை. பக்கத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பார்க்கிங் அனுமதித்தார்கள். டிராபிக்கை சரி பண்ணியது, அரபுநாட்டை சேர்ந்த ஒரு இஸ்லாமிய அன்பர்.

இந்த வார நிகழ்ச்சி

பொதுவாக தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை நான் விரும்பி பார்ப்பதில்லை, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தை தவிர. ஆனால் இந்த வருட தீபாவளி நிகழ்ச்சிகளில் இரண்டு என் கவனத்தை ஈர்த்தது. ஒன்று எப்படி பேட்டி இருக்ககூடாது என்பது, மற்றொன்று எப்படி பேட்டி இருக்கவேண்டும் என்பதற்கு. முதலாவது வகை சன்.டிவியில் ஒளிபரப்பான நடிகர் ரஜினிகாந்த் பேட்டி. மீடியாவின் ஹாட்கேக்கான ரஜினிகாந்த் உங்கள் எதிரில். அனைவரின் கவனமும் பேட்டிமீதுதான். அடி பின்னியிருக்கவேண்டாமா. இருப்பதிலேயே மோசமான பேட்டி காண்பவர் விஜயசாரதிதான் என்பேன். அவர் உட்கார்ந்து இருக்கும் தொனியை பார்த்தாலே சொல்லிவிடலாம். ஏதோ வாத்தியாருக்கு பயந்த மாணவன் போல, சீட்டின் நுனியில். மனிதருக்கு சுத்தமாக ஆளுமை இல்லை. எப்பொழுது பார்த்தாலும், சன்.டிவி தயாரித்த இந்த படம் பற்றிய அனுபவங்கள் என்ற ஒரே உப்புமா கேள்விதான். அதற்கு ஒரு ரஜினி ரசிகரை வைத்து கேட்டிருந்தாலே ஒழுங்காக கேட்டிருப்பார். கடைசியில் அமெச்சூர்தனமாக ஒரு முத்தம் வேறு. ஒரு கேள்விக்காவது ரஜினி முழுவதுமாக பதிலளித்தாரா என்று கேட்டால்..ம்..ஹூம்..கேட்டால், ஸ்டைல் என்பீர்கள்.

இரண்டாவது வகை, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபிவித் அனுவில் கமல் பேட்டி. இது பேட்டி..அனைத்து கேள்விகளும் அவரின் பால்ய காலத்தின் நினைவுகளுக்கு இழுத்து சென்றது. நம்மையும்தான். அனைத்து கேள்விகளும், அருமை. அனுவின் கேள்விகளில் ஒன்றை கவனித்தால் ஒன்று தெரியும். எதிரில் உள்ளவர் மறந்து போன அவருடைய வாழ்க்கை நிகழ்வை அழகாக ஞாபகப்படுத்தி, அவருடைய வாயிலிருந்தே அனைத்தையும் சொல்லவைப்பார். ஏதோ கமலோடே ஒரு மணிநேரம் பயணம் சென்றது போன்ற உணர்வு.

இந்த வார எதிர்பார்ப்பு

மைனா படம். தீபாவளி வந்த படங்களில் நன்றாக இருப்பதாக கேள்விபட்டேன். இதுபோன்ற படங்கள் எடுக்கும்போது பருத்திவீரன் சாயல் இல்லாமல் எடுப்பது மிகவும் கடினம். ஏனென்றால், பருத்தி வீரன் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அவ்வளவு. ஆனால் படத்தின் இயக்குநர் பிரபு சாலமன் ஓவராக பேசிய அளவுக்கு படம் இல்லை என்று கேள்விப்பட்டேன். டைரக்டர் சார், கண்டிப்பாக இது நல்ல படம். மிகவும் கஷடப்பட்டுள்ளீர்கள், தெரிகிறது. படத்தைப் பற்றி பார்த்தவர்கள் பேசட்டுமே…

இந்த வார பாடல்

சில முத்தான பாடல்களை கேட்கும்போது, ஏண்டா இந்த படங்களில் வந்தது என்று எண்ணத்தோன்றும்., அப்படி சமீபத்தில் நான் கேட்டது, “அன்பு” என்ற படத்தில் வந்த “தவமின்றி கிடைத்த வரமே” என்ற வித்யாசாகரின் இந்த பாடல்.

http://www.youtube.com/watch?v=Yn9rKYZWgyA

பாடலை எவ்வளவு கேவலமாக படம்பிடிக்கவேண்டுமோ, அவ்வளவு கேவலமாக படம்பிடித்திருக்கிறார்கள். பாடலை மட்டும் கேட்பது நலம்

அடுத்தது, இளையராஜா மற்றும் சுவர்ணலதாவின் அட்டகாசமான இந்தப் பாடல். பாடல் ஆரம்பிக்கும்போது வரும் அந்த கிதாரின்(???) வாசிப்புக்கு நீங்கள் மயங்காவிடில், பக்கத்தில் உள்ள மருத்துவரை தைரியமாக அணுகலாம். ஆனால் படமாக்கிய விதம்??? குடும்பத்தோடு படம்பார்க்க நேர்ந்தால், அடிக்கடி பாக்யராஜ் போல நாணயங்களை கீழே போடவேண்டியிருக்கும்.

http://www.youtube.com/watch?v=iBpFOpWVf2s&feature=related

இந்த வார பதிவு

நமக்குதான் கவுஜ எழுத வரவில்லை, அட்லீஸ்ட் எழுதுபவர்களையாவது, உற்சாகப்படுத்துவோமே. சமீபத்தில் படித்த பாலாஜி சரவணனின் இந்த கவுஜ, சாரி, கவிதை கவர்ந்தது. குறிப்பாக கவிதையின் முடிவில் வரும் அந்த மூன்று வரிகள்

http://balajisaravana.blogspot.com/2010/11/blog-post.html

இந்த வார படம்

போனமுறை ஒரு ஆங்கில படத்தில் நடித்தவரின் பெயரை தவறாக சொல்லி நிறைய பல்புகள் வாங்கியிருந்தேன். ஆனாலும் இந்த முறை முடிந்தவரை சரியாக சொல்லியிருக்கிறேன்.

சமீபத்தில் பார்த்த ஒரு படம் "பெல்காம் 123" - (Pelham 123). டிரிவால்டோ, டென்ஷல் வாஷிங்க்டன் நடித்த இந்த படம் கண்டிப்பாக உங்களை கவரும்.

இந்த வார பொன்மொழி

“ஒன்று தூங்கு..இல்லை தூங்கவிடு….” – மேன்சனில் கேட்டது


Thursday, 4 November, 2010

கேப்பி டீவாளி

கடந்த மூன்று தீபாவளி கொண்டாடும்போது, பெற்றோர் அருகில் இல்லையே என்று ஏங்கியது உண்டு, இந்தமுறையும் அப்படியே. ஆனாலும், ஏதோ, அம்மா, அப்பா அருகில் இருப்பதுபோன்ற உணர்வு. இந்த முறை எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. ஒரு பயபுள்ளையாவது தமிழில் “தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று சொன்னால் மட்டும்தான் திரும்பவும் வாழ்த்து சொல்வதென்று சபதம் செய்தேன். தூங்கப்போகும் முன் “நண்பேன்டா” என்ற ரிங்க்டோன் கேட்டு அவசரமாக எடுத்தால் நம்ம கோவாலு..

“ராசா..”

“சொல்லுடா..”

“கேப்பி டீவாளி..”

“அப்படின்னா..”

“அதுதாண்டா..கேப்பி டீவாளி..”

“அடங்கொய்யாலே..அப்படின்னா என்னடா..”

“அதுதாண்டா..டீவாளி..”

“ஓ..”

“நீ திரும்பவும் சொல்லமாட்டேங்குற..”

“சொல்லுறேன்..”

“போடாங்க..முதல உனக்கு சொன்னேன் பாரு..நான் போயி நமீதா பேட்டி பார்க்கணும்..வைச்சுறேன்..”

வைத்துவிட்டான்..அட்லீஸ்ட் ஒருஆள் கேப்பி டீவாளி..அய்யோ..தீபாவளி நல்வாழ்த்துக்கள் சொல்லுவானான்னு பார்ப்போம் என்று நினைக்கும் வேளையில் வூட்டுக்காரம்ம கூப்பிட்டாள்..

“என்னங்க..உங்களுக்கு வாழ்த்து சொல்லணும்னு நினைச்சேன்..மறந்து போயிட்டேன் பாருங்க..”

ஆஹா..நம்ம வூட்டுக்காரி தமிழிலுல தான் சொல்லுவான்னு நினைச்சு, நம்பி அவளைப் பார்க்குறேன்..

“கேப்பி டீவாளிங்க..ஹி..ஹி..”

“அடியே..வால்மார்ட் போனா, பில் போடுறவியிங்க கூட தமிழுல பேசுவேயேடி..இப்ப என்ன கேப்பி டீவாளி..”

“எல்லாரும் சொல்லுறாயிங்க..அதுதான்..”

இனிமேல் என்னத்தை பேசுறதுன்னு பீல் பண்ண, வீட்டிலிருந்து போன் அழைப்பு..ஆஹா..அம்மா..கண்டிப்பாக தமிழில்தான் சொல்லுவார்கள். அம்மாவுக்கு ஆங்கிலம்வேறு தெரியாததால், எனக்கு நம்பிக்கை இருந்தது, போனே எடுத்தேன்..

“ராசா..”

“அம்மா..”

“கேப்பி டீவாளிப்பா..””

வெறுத்தே போய்விட்டேன்..

“யம்மா..நீங்களுமா..”

“ஏம்மா..எதுவும் தப்பா சொல்லிட்டேனா..”

“இல்லீம்மா..எப்போதும் தமிழிலதான பேசுவீங்க..”

“அய்யா..அப்ப..கேப்பீ டீவாளிங்குறது தமிழ் இல்லையா..எல்லாப் பேரும் சொல்லுறாயிங்களேப்பா..”

வைத்துவிட்டேன். சரி டீ.வியைத் ஆன் செய்தால், நமீதா சிரித்துக் கொண்டே சொன்னார்.,.

“மச்சான்ஸ்..ஹேப்பி டீவாளி..”

ஆப் செய்துவிட்டேன். மனைவி பொறுக்கமாட்டாமல் கேட்டே விட்டாள்..

“என்னங்க..யார் வாழ்த்து சொன்னாலும் திரும்ப, சொல்லமாட்டுங்குறீங்க..என்ன ஆச்சு..”

“ஒருத்தராவது தமிழுல சொல்லமாட்டுங்குறாயிங்களே..”

“என்னங்க….பேசுறப்பவே 10 வார்த்தையில 8 வார்த்தை இங்கிலீஸூல பேசுறீங்க..அப்ப மட்டும் என்னவாம்..கேப்பி டீவாளின்னு சொன்னா என்ன,தீபாவாளி நல்வாழ்த்துக்கள்னு சொன்னா என்ன, மனசார சந்தோசத்தோடு சொல்லுறாயிங்களா..அது போதுங்க..அத விட்டுட்ட ஏதாவது குதர்க்காம யோசிச்சீங்க, மதியானத்துக்கு சாப்பாடு கிடைக்காது பார்த்துக்குங்க..”

ஆஹா..இது ரொம்ப டேஞ்சராச்சே என்று எல்லாருக்கும் போன் பண்ணி வாழ்த்து சொல்லலாம் என்று செல்போனை எடுத்தேன்.

ஆஹா..அவசரத்துல ஒன்னு சொல்ல மறந்துட்டனே..

“கேப்பி டீவாளிண்ணே..”