Friday 28 October, 2011

ஏழாம் அறிவு – சர்..புர்…கர்..




ஒரு மனிசனுக்கு நிம்மதி இருக்கவேணாமாண்ணே..எப்ப பார்த்தாலும் நொச்சு, நொச்சுன்னு இருந்தா கடுப்பா இருக்காது..என் வீட்டுக்காரம்மாவைத்தானே சொல்லுறேன்..இந்த பாழாப்போன ஏழாம் அறிவு பார்த்ததும்தான் பார்த்தோம், எப்ப பார்த்தாலும் “ஏங்க விமர்சனம் எழுதலையா..”, “ஏங்க விமர்சனம் எழுதலையா” ன்னு ஒரே நொம்பலம்தான்.

“அடியே..இப்ப எதுக்கு விமர்சனம் எழுத சொல்லுற..நம்மளை படிக்குறதே பத்து பேரு, அதிலயும் ரெண்டு, ஐயோ, கைதவறி உங்க பிளாக்கை ஓபன் பண்ணிட்டேன்னு மெயில் அனுப்புறான்..இந்த லட்சணத்துல நான் விமர்சனம் வேற எழுதணுமா..”

“அட..என்னங்க இப்படி பேசுறீங்க..ஊருக்குள்ள, பெரிய பதிவரு பொண்டாட்டின்னு ஒரு கெத்து பார்ம் பண்ணியிருக்கேன்..இப்ப விமர்சனம் எழுதலைன்னா, ஊருக்குள்ள நாலு பேரும் மதிப்பாய்ங்களா..”

“அய்யோ..கடவுளே..தயவுசெஞ்சு இப்படியெல்லாம் ஏத்திவிடாதே..ஊருக்குள்ள உண்மை தெரிஞ்சா நாலு பய மதிக்க மாட்டாய்ங்க..”

அவ்வளவுதாண்ணே..ஒருநாள் முழுதும் மூஞ்சியை உம்முன்னு வைச்சிக்கிட்டா..எனக்கு சங்கடமா போச்சு…சரி, இதுக்கு மேல எழுதலைன்னா, ஆறாம் அறிவே இல்லைன்னு நினைச்சுடுவான்னு பயந்தே போயிட்டேன்..

“சரி..வா..விமர்சனம் எழுதுறேன்..அந்த லேப்டாப்பை எடு”

ரொம்ப சந்தோசத்தோடு எடுத்துக்கொடுத்தா

“ஓகே..நான் சொல்லுறேன்..நீயே எழுது..”

அவளுக்கு சந்தோசம் தாங்கலை..

“சரி..சொல்லுங்க..”

“படத்தின் கதை என்னன்னா..”

“என்னங்க..இதோட 100 பேரு படத்தோட கதைய எழுதியிருப்பாய்ங்க..படத்தோட மெயின் பாயிண்டை சொல்லுங்க…”

“படத்துல முதல்ல வர்ற 20 நிமிடங்கள், ஹாலிவுட் தரத்துக்கு எடுத்துருக்காய்ங்க..டைரக்டரு தீயா வேலை செஞ்சுருக்காரு,.,உண்மையிலே ஒரு ஆங்கில படம் பார்ப்பது போன்ற உணர்வு…கைகொடுங்கள் முருகதாஸ்..”

“என்னங்க..உங்களுக்கு என்ன ஆச்சு..அவருக்கு ஏங்க கை கொடுக்குறீங்க..ஜெட்லி படம் பார்த்த மாதிரி இருந்துச்சு..சூர்யா காமெடி பண்ணியிருக்காரு..இப்படிங்குறாரு, கீழ இருக்குற புழுதி எல்லாம் கிளம்பது..அப்படிங்குறாரு..அங்குட்டு நாலு பேரு விழுகுறாய்ங்க..சரி..அப்படியே ஹாலிவிட்டு தரமா இருந்தாலும், அதையெல்லாம் பாராட்டுனா, ஊருக்குள்ள உங்கள பதிவராகவே மதிக்க மாட்டாய்ங்கங்க..தயவுசெய்து, ஏதாவது திட்டி எழுதுங்க..”

“ஆஹா…சரி..விடு..இதை எழுது..நம்ம உலகநாயகன் மக, சுருதிஹாசன் என்னமா நடிச்சுருக்காய்ங்க..சூர்யாவை வைச்சு ஆராய்ச்சி பண்ணுறதாகட்டும்..வில்லனை கண்டு மிரளுதறாகட்டும்..பின்னுறாங்க..”

“அது சரி..புடலங்காய்க்கு பேண்டு சட்டைய போட்ட மாதிரி இருக்காங்க..தமிழை இதுக்கு மேல யாரும் கொலை பண்ண முடியாதுங்க..குத்துயிரும் கொலையியுருமா, தமிழ் மேல புல்டோசர் விட்டு ஏத்தியிருக்காய்ங்க..சும்மா பேசுறீங்க..

“அய்யோ கடவுளே..இப்ப பாரு..தமிழுக்கு புதுவரவு அந்த சீனாக்கார வில்லன்..பார்வையாலே என்னமா மிரட்டுறாரு..அவரோட பாடிலாங்குவேஜ்ஜூ..யம்மா சொல்லவே வேணாம்..அவருதான் படத்தோட ஹீரோ..”

“போங்க…ங்க….வில்லனா அவரு..சரியான மைதா மாவு…எப்ப பார்த்தாலும், யாரையாவது பார்த்துக்கிட்டே இருக்காரு..அதுவும், ஒரு நிமிசம்தான்..அதுக்குள்ள எல்லாரும் மயங்கி அவரு சொல்லுறதையெல்லாம் செய்யுறாங்களாம்..காதுக்குள்ள வண்டி, வண்டியா, பூ இல்லீங்க..ஒரு பூக்கூடையே சொருகியிருக்காய்ங்க..தயவுசெஞ்சு இப்படியெல்லாம் எழுதாதீங்க..கை அழுகிடும்..”

“அடியே..அந்த ஹாரிஸ் ஜெயராசு…சூப்பரா பாட்டு..”

“வேண்டாம்..கொலைவெறியில இருக்கேன்..பாட்டாங்க போட்டுருக்காரு..எல்லாம், சர்ச்சுல கேக்குற மாதிரியே இருக்கு..நம்ம பையனுக்கு போட்டு காண்பிக்கிற “டிவிங்கிள், டிவிங்கிள்” பாட்டை கூட விடலைங்க..அந்த மனுசன்..அதையும் காபி அடிச்சு, சைனீஸ் பாட்டுன்னு சொல்லி..வேண்டாம்..ஆத்திரம் ஆத்திரமா வருது..”


“அடியே..எப்ப பார்த்தாலும் குத்தம் சொல்லிக்கிட்டு இருப்பியா..”தமிழன் பெருமைய” எவ்வளவு அழகா சொல்லியிருக்காரு டைரக்டரு..அப்படியே புல்லரிச்சு போச்சுடி..தயவு செஞ்சு இதையாவது குத்தம் சொல்லாதே…”

“ஐயோ..கடவுளே..உங்களுக்கு என்ன ஆச்சு..தமிழன இதுக்கு மேல கேவலப்படுத்தமுடியாது..சரி..உங்க சந்தோசத்துக்காக அப்படியே இருக்கட்டும்..ஆனா, அத அப்படியே பாராட்டி எழுதக்கூடாது..”இன்னும் கொஞ்சம் டிரை பண்ணியிருந்தா, ஒரு அழகான காவியம் கிடைச்சிருக்கும்….புட்டேஜ் கொஞ்சம் ஜாஸ்தி..எடிட்டிங்க்ல கொஞ்சம் வேலை செய்திருக்கலாம்..கேமிராவுல ஓரத்துல கொஞ்சம் அழுக்கு இருந்துச்சு..ஹீரோ ரெண்டாவது சீனுல பாதி தம்முதான் புடிச்சாரு..அடுத்த சீனுல புல் தம்மு இருந்துச்சு..கண்டினியூட்டி மிஸ்ஸிங்குன்னு” சினிமா தெரிஞ்ச மாதிரியே எழுதணும்..அப்பதான்., “ஆஹா..சூப்பர் விமர்சனம்..உங்க விமர்சனம் படிச்சுட்டுதான் படத்துக்கே போகப்போறோம்..”200 ரூபாய் மிச்சம்” ன்னு, கமெண்டு போடுவாய்ங்க..அப்பதான, ஊருக்குள்ள பெரிய பதிவருன்னு மதிப்பாய்ங்க..என்ன நான் சொல்லுறது..”

“தயவு செய்ஞ்சு..தயவு செய்ஞ்சு..ஆளை விடுறியா..நான் விமர்சனமே எழுதலை..”

“அது எப்படிங்க..விடமுடியும்..அதெல்லாம் எழுதியாச்சு..சரி..விமர்சனத்துக்கு தலைப்பு சொல்லுங்க..”

“இதுல என்னடி தலைப்பு வைக்கிறது..”ஏழாம் அறிவு – விமர்சனம்…”

“என்னங்க..இப்படி அப்பாவியாய் இருக்கீங்க..இப்ப பாருங்க, தலைப்ப..

“என்ன…??”

“ஏழாம் அறிவு..சர்..புர்..கர்…”

“அடியே..அது என்னடி சர், புர்..கர்..”

“எவனுக்கு தெரியும்..வித்தியாசமா இருக்குல்ல…”

ஊருக்குள்ள ஒரு விமர்சனம் எழுத விடுறாய்ங்களா பாருங்கண்ணே..


Sunday 23 October, 2011

சோறு(கவிதை இல்ல..வயித்தெரிச்சல்)




நமக்கு ஏற்கனவே உடம்பு கொஞ்சம் உப்பலா, இருக்கும். இதுல தொப்பை வேற சேந்துட்டா சொல்லவா வேணும். கொஞ்ச நாளா, காலுல அரிப்பு வந்தாக்கூட குனிஞ்சு சொரிய முடியலண்ணே..குனிஞ்சா, நெஞ்சுக்கும், காலுக்கும் நடுவுல ஏதோ பெருசா ஒன்னு(நோ..நோ..அப்படியெல்லாம் தப்பா நினைக்ககூடாது) தடுக்குதுண்ணே..பார்த்தா, வஞ்சனையில்லாம வளர்ந்து கிடக்குது நம்ம தொப்பை. ஆஹா, இதை, இப்படியே விட்டா நம்ம செருப்பை நாமளே போடமுடியாம போயிடுமேன்னு பயம் வந்திருச்சுண்ணே..

சரி, நம்ம ஊரு பசங்க, நிறைய பேரு, வத்தலும் தொத்தலுமாத்தாண்ணே இருக்காயிங்கன்னுட்டு அவிங்ககிட்ட அட்வைஸ் கேட்டேன். அதிலிருந்து ரெண்டு விசயம் தெரிஞ்சுச்சு..

1)      ஜிம்முக்கு போயி நல்லா எக்சர்ஸைஸ் பண்ணு
2)      சோத்தை நல்லா பாத்தி கட்டி அடிக்கிறத நிப்பாட்டு..

சரி, முதல்ல ஜிம்மில இருந்து ஆரம்பிப்போம்னு, பக்கத்துல இருக்குற ஜிம்முக்கு போனேன்.. அதுவும் எப்ப, சாயங்காலம் 6 மணிக்கு. நம்மதான் காலங்காத்தால என்னைக்கு எழுந்திருச்சுக்கோம், கத்திய வைச்சு குத்தினாலும், தட்டிவிட்டுட்டு தூங்கிக்கிட்டே இருப்போமுல்ல..அதனால தான் சாயங்காலம் 6 மணிக்கு..

ஜிம்முக்கு போய் பார்த்த, மறு நிமிசமே லைட்டா கண்ணை கட்டுச்சுண்ணே..யப்பே..எம்புட்டு மிசினு,,எம்புட்டு கஷ்டம்..ஒரு மிசினு பார்த்தா, ஓடிக்கிட்டே இருக்கு..அதுல ஏறி நம்ம பசங்க, நாய் துரத்துற மாதிரி ஓடிக்கிட்டே இருக்காயிங்க..அதுக்கு பேரு “டிரெட் மில்” லாம்..நமக்கெல்லாம் ஊருபக்கத்துல இருக்க “காட்டன்” மில்லுதான் தெரியும்..சரி, நம்மளும் ஏறி ஓடி பார்ப்போமேன்னு ஏறுரேன், யாத்தே, என்னமா சுத்துது..”டே..டே..யாராவது வந்து ஆப் பண்ணுங்கடா” ன்னு சொன்னாக்கூட ஒரு பய இரக்கம் காட்டமாட்டீங்குறாய்ங்க..

அதை சமாளிச்சுட்டு வெளியே வந்தா, ஒரு இரும்பு கம்பி மேல தொங்குண்ணே..அத பிடிச்சு இழுங்குறாய்ங்க..ஏண்டா அது பாட்டுகிட்டு தொங்கிக்கிட்டுதானடா இருக்கு, அதை ஏண்டா இழுக்கணும்னு கேட்டா, அது ஒரு எக்ஸைர்சைசாம்..சரி, இழுத்துதான் தொலைவேமேன்னு இழுத்தா, பாதிதுரம்தான் வருது..அப்புறம் கஷ்டப்படு இழுத்தா, காலு, கையெல்லாம் இழுக்குது..

அப்புறம்,மாடிப்படி மாதிரி ஒன்னு வைச்சுருக்காய்ங்க..அதுல உக்கார்ந்து, உக்கார்ந்து எந்திரிக்க சொல்லுறாய்ங்க..அதை பார்த்தவுடனே நம்ம ஊரு கக்கூஸுல ஆய் போற மாதிரியே, ஞாபகம்தான் வருது..கஷ்டப்பட்டு அதையும் பண்ணுனேன்..அப்பறம் இம்மாந்தண்டி இரும்பு கம்பியை வயித்துல புடிச்சு அமுக்கிகிட்டு, பின்னாடி போகச்சொல்லுராய்ங்க..முன்னாடி போகச்சொல்லுறாய்ங்க..நமக்கு கடுப்பாய்டுச்சுண்ணே..

வீட்டுக்கு வந்து ஒரு தூக்கம் போட்டேன் பாருங்க..நாலு பேரு சேர்ந்து முக்குத்தெருவுல வைச்சு அடிச்சு அனுப்பினா, எப்படி தூக்கம் வரும் பாருங்க, அது மாதிரிண்ணே..எந்திருச்சு பாக்குறேன், மணி, 12:30ன்னு காட்டுது..அடக்கொடுமையே,இம்புட்டு சீக்கிரமான்னு கதவை தொறந்தா, மத்தியானம் 12:30 ண்ணே..என்ன நடந்ததுன்னு தெரியலை..காலைத் தூக்கி ஒரு எட்டு நடக்க முடியலை..யாரோ, இரும்பு கம்பியால, காலுல அடிச்ச மாதிரி, வலிண்ணே…தவழ்ந்து, தவழ்ந்துதான் போய் தண்ணியைக் குடிச்சேன்..

சரி, இனிமேலு, ஜிம்முக்கு போனா, நாளைக்கழிச்சே, நம்மளுக்கு பால் ஊத்திருவாயிங்கன்னு கன்பார்மா தெரிஞ்சதால, ரெண்டாவது வழியை தேர்ந்தெடுப்போமுன்னு நெனைச்சேன்..சோறு சாப்பிடாம, வெறும் சப்பாத்திய சாப்பிடுறது. நமக்கெல்லாம் சப்பாத்திங்குறது, மாத்திரை மாதிரிதேன்..ச்சீ..ச்சீ..இதையெல்லாம் எப்படிதான் சாப்பிடுறாயிங்களோ நெனைப்பு..ஆனா, வேற வழியில்லை பாருங்க..

நம்மெல்லாம் தண்ணிகுடிக்காம கூட இருந்திருவேன், ஆனா, மதியானம் ஆனா,இந்த சோறை சாப்பிடாம இருந்ததே இல்லைண்ணே..நல்லா, தட்டுமுழுக்க சோத்தை பாத்திமாதிரி வைச்சுக்கிட்டு நடுவுல ஒரு குழியைத் தோண்டி, சாம்பாரை ரொப்பி, அடிச்சோமுன்னா, ரெண்டுநாளைக்கு தாங்குமுல்ல..அப்புறம், ஜீரணத்துக்கு, ரசம், குளிர்ச்சிக்கு மோர், தயிரெல்லாம், சைடுலதான்..சாப்பிட்டு, முரட்டுதூக்கம் போட்டா, நயந்தாரா வந்து கூட டூயட் பாடுவாங்கல்ல..

ஆனா, கருமம், இந்த வயித்துக்கு(தொப்பைக்காக), இதையெல்லாம், அடக்கிக்கிடு, வெறும் சப்பாத்தியை மட்டும் சாப்பிட்டுட்டு , ரெண்டு நாளு இருந்துட்டேன். கொடுமை என்னன்னா, வூட்டுக்காரம்மா கடுப்பேத்துற மாதிரியே, நல்ல சோத்தை தட்டுல வைச்சிக்கிட்டு, சிக்கன் மசாலா, மீன் பொரியலுன்னு சாப்பிட்டா எப்படி இருக்குமுன்னு..ஆனாலும் நான் கலங்கலையே..வயித்துல ஈரத்துணியை கட்டிக்கிட்டு, இன்னும் ரெண்டுநாளு இருந்துட்டேன்ணே..
நேத்து, வூட்டுக்காரம்மா சும்மா இல்லாம, கமகமன்னு சாம்பார், ரசம்னு வைச்சிக்கிட்டு சாப்பிடுறத பார்க்கமுடியாம கிளம்புனா, கேக்குறா..

“ஏங்க..ஒரு வாய் சாப்பிட்டா, டயட்டு ஒன்னு கெட்டு போகாது..நெறைய சாப்பிட்டாத்தான் வெயிட்டு போடும்…”

மனசே இல்லாம, சரி, ரொம்ப கம்பெல் பண்ணுறாளென்னு, ஒரு, வாய்ண்ணே..ஒரே, ஒரு வாய்தான் வைச்சிருப்பேன்..கபாலத்துல இருந்து, உள்ளங்கால் வரைக்கும், சாம்பாரா, ஓடுது..போங்கடா நீங்களும் உங்க டயட்டும், அடிச்சேன் பாருங்க ஒரு அடி..வூட்டுக்காரம்மாவுக்கு சாப்பாடு இல்லை…

சாப்பிட்டுட்டு குற்ற உணர்ச்சில வயித்தை தொட்டு பார்க்குறேன்..வயிறெல்லாம் சோறாத்தான் இருக்கு..அப்படியே குமுறி, குமுறி அழுகை வருது..ரெண்டாவது ஆப்சன் சரிப்பட்டு வராது போல..ஏண்ணே, யாராவது துணைக்கு ஜிம்முக்கு வர்றீங்க..?????

Thursday 20 October, 2011

திருச்சி இடைத்தேர்தல் முடிவும், உள்ளாட்சித் தேர்தலும்


நீங்கள் இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும்போது, திருச்சி இடைத்தேர்தலின், இரண்டாவது கட்ட முடிவு வந்து கொண்டிருக்கும். முதல் கட்ட முடிவுப்படி, அதிமுக, இழுத்துக்கோ, பறிச்சிக்கோ என்று முண்ணனியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. பெங்களூர் நீதிமன்றத்துக்கு புறப்பட்டுக்கொண்டிருக்கும், அம்மாவுக்கு, இது கண்டிப்பாக இனிப்பான செய்தியாக இருக்காது. மாபெரும் வெற்றியை எதிர்பார்த்த அதிமுகவினருக்கு, இந்த துக்கடா வெற்றி கண்டிப்பாக மகிழ்ச்சியைத் தரப்போவதில்லை.

ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் சிறையில், போட்டியிடும் வேட்பாளரே சிறையில், பெரிய அளவில் பிரச்சாரம் இல்லாதிருந்தும், திமுக மயிரிழையில் தோல்வியைத் தழுவினாலும், இதுவே அவர்களுக்கு உற்சாக டானிக்காக அமையப்போகிறது. “இந்த ஆட்சியினருக்கு சரியான பாடம் புகட்டிவிட்டனர்..” என்று கலைஞரும், “இந்த ஆட்சிக்கு இது ஒரு எச்சரிக்கை மணி” என்று நடுநிலையாளர்களும், இன்னும் கொஞ்ச நாளைக்கு கதற கதற பேட்டி கொடுக்கபோவதையும் பார்க்கபோகிறோம்.

இந்த முடிவு, உண்மையிலேயே, அம்மா ஆட்சி பற்றி மக்களின் கருத்துக்கணிப்பா என்று கேட்டால், 50% ஆமாம் என்றும், 50% இல்லை என்றும் சொல்லமுடியும். சமச்சீர்கல்வி, மின்வெட்டு, துப்பாக்கிச்சூடு, என்று அம்மா ஆட்சியில் டேமேஜ் ஆயிருந்தாலும், சட்டம் ஓழுங்கு(ஆந்திராவில் இருந்து அவ்வப்போது வந்து செயின் அறுத்து செல்வதை தவிர), இலவச பொருட்கள்(ரேசன் அரிசி சூப்பருல), போனமுறை போல ஆடம்பரம் இல்லாமல் எளிமை என்று சில நல்ல விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஓட்டுபோட்டால்தான், தொகுதிக்கு நல்லது நடக்கும் என்ற நப்பாசையும், அதிமுக பக்கம் சாயவைப்பதால் தான் இந்த 50%-50%

உள்ளாட்சி தேர்தலிலும் இந்த நிலைதான் வரப்போகிறது என்று எதிர்பார்க்கிறேன். ஆனால், எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், இந்த உள்ளாட்சித்தேர்தலில் தான், இந்த அல்லக்கை கட்சிகளின் பலம் தெரியவரும். கண்டிப்பாக டெபாசிட் கிடைக்குமா என்று கூட தெரியவில்லை.. விஜயகாந்துக்கு இது கண்டிப்பாக அக்னிபரிட்சையாகத்தான் இருக்கும், ஏற்கனவே, விஜயகாந்தை மதிக்காத அம்மா, இந்த தேர்தலில், டெபாசிட் காலியானால், சொல்லவா வேண்டும்..

நான் ஏற்கனவே சொல்லியபடி, பொறுத்திருந்து பாருங்கள்., இன்னும் சிறிது காலத்தில் நடக்கப்போகும் நாடகங்களை. விஜயகாந்த், கம்னியூஸ்ட், மதிமுக கட்சிகள் எல்லாம், “தமிழனத்தலைவர் கலைஞர்” என்று சொல்லிக்கொண்டு, அறிவாலயம் பக்கம் திரும்ப, “அன்புத் தங்கச்சி” என்று அந்த பக்கத்தில் வரும் சத்தத்தை நீங்கள் அடையாளம் காணாவிட்டால், நீங்கள் “பவர் ஸ்டாருன்னா யாருப்பா” என்று கேட்கும் அளவுக்கு அப்பாவியாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனாலும் கலைஞர் எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம். “2016” ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில், தமிழக மக்களின் மூன்றாம் விதிப்படி, சராமரியாக, உதயசூர்யனில் ஓட்டு குத்தப்பட்டு, மதுரையும் கூடிய சீக்கிரம் மீட்கப்படும். அதன் பிறகு, வழக்கம்போல, இந்த ஆட்சியின் அராஜகத்தைப் பாரீர் என்று ஜெயா டிவியில் ஒளிபரப்பட, “தைரியலட்சுமி” என்று சொன்ன அதே சூப்பர்ஸ்டார், “முத்தமிழ் அறிஞர்” என்று “பாசச்தலைவனுக்கு” நடக்கபோகிற பாராட்டு விழாவில் சூப்பர்ஸடார் சொல்ல, விளம்பர இடைவேளைக்கு நடுவில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு, ஓட்டுபோட்ட தமிழன், பக்கோடா சாப்பிட்டுகொண்டே பார்த்துக்கொண்டிருப்பான் 2021ல் அம்மாவுக்கு ஓட்டுபோடுவதற்கு..,

Wednesday 12 October, 2011

நீங்க கேபிள் சங்கர் ஆளா..லக்கிலுக் ஆளா..


கொலைவெறிய கெளப்புறதுக கோவாலுதாண்ணே, நம்பர் ஒன்னு. சுனாமி மாதிரி ஏதாவது கிளப்பிவிட்டுக்கிட்டு போய்கிட்டே இருப்பான். காலங்காத்தால 4 மணிக்கு கொலைவெறியை யாராவது கெளப்புவாயிங்களா..கெரகம் காலையில 4 மணிக்கு வந்து வீட்டு பெல் அடிக்குது..அன்னைக்கு பார்க்குறதுக்கு வேற பதட்டத்துல வேற இருந்தானா, பயந்தே போயிட்டேன்…

“கோவாலு..என்ன ஆச்சுடா..ஷேர் மார்க்கெட் டவுன் ஆயிடுச்சா..”

“இல்லடா ராசா..”

“பின்ன..லத்திகா படம் ஓடி 250 நாள் ஆகிடுச்சா..”

“ஐயோ இல்லடா..”

“பின்ன..”

“ராசா..உண்மையைச் சொல்லுடா..நீ கேபிள் சங்கர் ஆளா, லக்கிலுக் ஆளா..”

“டே கோவாலு..உனக்கே இது நியாயமா இருக்காடா..காலையில 4 மணிடா..கொசு கூட குறட்டை விட்டு தூங்கும்டா..இந்த நேரத்துல வந்து கொலைவெறிய கிளப்பாதடா..”

சும்மா இருந்தாவே, என் வூட்டுக்காரம்மா, ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பா..இங்கே ஆயிரத்தெட்டு கேள்வி இருந்தா, சொல்லவா வேணும்…

“ஏங்க யாருங்க அது..ரைபிள் சங்கரு…எதுவும் உலகத்தலைவரா..”

“ம்…கழகத்தலைவரு..அடியே..அவரு ரைபிள் சங்கர் இல்ல..கேபிள்..கேபிள்..சங்கர்..உன் புருஷன் மாதிரியே அவரும் பெரிய எழுத்தாளரு..பிளாக்கெல்லாம் எழுதுவாரு..”

“அய்யய்யோ…அவருக்கும் லக்கோ லக்குக்கும் என்ன பிரச்சனையாம்…”

“வேண்டாம்டி..அவரு லக்கிலுக்கு…டே..கோவாலு..என்னதாண்டா பிரச்சனை…”

“மொதல்ல்..கேபிள் சங்கர் எழுதின இந்த லிங்கைப் படி” ன்னான்..

படிச்சிட்டு கண்கலங்கிடுச்சுண்ணே…

“கோவாலு..தமிழேண்டா..கேபிளு நின்னுட்டாருல்ல..அதெப்படிடா, அவிங்க அப்படி போர்டு வைக்கலாம்..தமிழன்னா இளக்காரமா..கேட்டாருல்ல ஒரு கேள்வி…நின்னுட்டோமில்ல..”

“அப்ப..நீ கேபிளு ஆளா…எதுக்கு லக்கி எழுதின இந்த பதிவையும் படிச்சுடு…”

படிச்சுட்டு இன்னொரு கண்ணும் கலங்கிருச்சுண்ணே..

“கோவாலு..சூப்பருடா..இதுவும் நியாயம்தானடா..எப்ப பார்ததாலும் “தமிழன், தமிழன்” சொல்லுறதுல அர்த்தம் இல்லைலடா..”ஹெல்ப்”ன்னு சொன்னா, அத ஏத்துக்கறதுல என்ன தன்மானம் தடுக்குது..சரியா சொன்னாருடா லக்கி..”

“டே ராசா..வெறியேத்தாத…ஒன்னைச் சொல்லு..நீ கேபிளு ஆளா..லக்கி ஆளா..”

“நான்..லக்கி சங்கர் ஆளு..”

கோவாலு டென்சனாயிட்டான்..

“டே ராசா..காலங்காத்தால கடுப்பேத்துற…நீ யாரோட ஆளு…”

“கோவாலு..விட்டுருடா..”

“ராசா..நீ, இப்ப சொல்லைன்னா, அன்னா ஹசாரே மாதிரி இங்கேயே உக்கார்ந்து சத்யாகிரகம் இருப்பேன்..”

“டே..கோவாலு..வேணாண்டா…சரி..கேட்டுக்க..நானு.இந்த பதிவையெல்லாம் படிச்சு மண்டையை பிச்சுக்குற ஆளு..இவ்வளவு கேக்குறயே கோவாலு..நீ யாரு பக்கம்..”

அதுக்கு பயபுள்ள சொல்லுறான்..

“நான் பக்கத்து வீட்டு புவனா பக்கம்..”

(பின் குறிப்பு : யாரையும் புண்படுத்த எழுதப்பட்டதல்ல.)

Monday 10 October, 2011

அக்ரஹாரத்து வீட்டு நண்பன்



(முன் குறிப்பு – இந்தப் பதிவு, எந்த சமூகத்தையும், இழிவுப்படுத்துற்காகவோ, தூக்கிப் பிடிப்பதற்காகவோ எழுதப்படவில்லை. எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பதிவு செய்வதே நோக்கம்)

சமீபத்தில் கடைக்கு செல்லும்போது, சிறுவயதில் என்னுடன் படித்த பள்ளிக்கூட நண்பனைப் பார்த்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இரண்டு வருடங்கள் தான் இருக்கும் அவனுடன் என்னுடைய நட்பு. என்னை பார்த்தவுடன், அவனும் மிகவும் சந்தோசப்பட்டான்..

அவன், அவனுடைய மனைவி, குழந்தை..எல்லாரையும் அறிமுகம் செய்துவைத்தான்..

“இங்க வந்து, 6 மாசம் தான் ஆச்சு..எல்லாமே புதுசா இருக்கு ராசா..”

“அதெல்லாம் போகப்போக பழகிடும்..கவலைப்படாதே..”

“சரி..வீட்டுக்கு வா…அம்மாவும் வந்திருக்காங்க..”

எனக்கு கொஞ்சம் தயக்கம்.

“இல்லடா..அது வந்து..”

“அதெல்லாம் ஒன்னுமில்ல..நீ வர்ற” என்றான் உரிமையாக..தயக்கத்திற்கு காரணம் நண்பனுடைய அம்மா..

நான் பத்தாவது படிக்கும்போதுதான் அவன் எனக்கு அறிமுகமானான். மிகவும் இயல்பாகவும், நட்பாகவும் பழகுவான். ஒருநாள் வீட்டிற்கு க்ரூப்ஸடடிக்கு அழைத்திருந்தான்..அவனுடய தெரு அக்ரஹாரம் என்றவுடன் தான், அவன் ஐயங்கார் சமூகத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்தது.

எங்கள் ஊரில், தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ, சாதி கண்டிப்பாக இருக்கும்..ஒவ்வொரு தெருவுக்கும், சாதி பெயர்தான். “செட்டியார் தெரு..முதலியார் தெரு..அகமுடையார் தெரு..” என்று. ஒவ்வொரு தெருவிலும் 100% அந்த சமூகத்துமக்கள் தான் வாழ்வார்கள். அடுத்த சமூகத்திற்கு, மறந்தும் வீடு கொடுப்பது கிடையாது. பொங்கல் திருவிழா என்றால், ஒவ்வொரு தெருவிலும் உள்ள அண்டுசிண்டுகள் தொல்லை தாங்கமுடியாது. “எங்க சாதிக்காராய்ங்க” என்று பெருமை வேறு.

அக்ரஹாரம் என்பது, எங்கள் ஊருக்கு நடுவில் இருக்கும். மிகவும் அமைதியாக இருக்கும். கோலி, பம்பரம், கிட்டிப்புல் என்று எதுவும் பார்க்கமுடியாது. சிலநேரங்களில் “ஸ்ரீராம்”, “விக்னேஷ்”, “முரளி” என்று பெயர்கொண்ட சிறுவர்கள் மட்டும், கிரிக்கெட் விளையாடுவதுண்டு. ஆனால் வீடு ஒவ்வொன்றும் படு நீநீநீளமாக இருக்கும். நீளத்தை பார்ப்பதற்கென்றே, நாங்கள், வீட்டுக்குள் எட்டிப்பார்ப்போம். கண்டிப்பாக வீட்டில் ஒரு மகனாவது, மருமகனாவது, அமெரிக்காவில் வேலை செய்து கொண்டு இருப்பார்கள். வீட்டிற்கு முன் பெரிய திண்ணை இருக்கும். முக்காடு போட்டு கொண்டு, காலை நீட்டிக்கொண்டு, கண்டிப்பாக ஒரு பாட்டி உக்கார்ந்து ஏதாவது பாக்கு மென்றுகொண்டிருக்கும். போவோர் வருவோர்களை, கண்ணாடியை தூக்கி பார்க்கும் அழகே தனி..எல்லார் வீட்டிலேயும், கண்டிப்பாக சங்கராச்சாரியார் புகைப்படம் இருக்கும். பூஜை அறை இல்லாமல் வீடே இல்லை. வெளிப்பக்கத்தில் ஒரு துளசி மாடம்.  

மேற்கூறியவை மட்டுமே, அந்த வயதில் அக்ரஹாரத்தை பற்றிய என்னுடைய புரிதலாக இருந்தது. ஆனாலும், எப்படியாவது, ஒரு வீட்டுக்குள் புகுந்து பார்த்துவிடவேண்டும் என்று அவா எனக்கு கொழுந்துவிட்டு எரிந்தது. மிகுந்த ஆவலோடு, காலை 9 மணிக்கு அவன் வீடு சென்றேன். வெளியே நின்று அவன் பெயரை சொல்லி கூப்பிட்டேன்..சற்றுநேரம் கழித்து, ஒரு அம்மா எட்டி பார்த்தார்கள். அவர்களுக்கு நடுவயது இருக்கும். அவர்கள் முகத்தில் ஒரு சின்ன குழப்பம்..

“என்னப்பா, என்ன வேணும்..”
“விக்னேஷ் இருக்கானா…அவன் வரச்சொல்லியிருந்தான்..”

சற்றுநேரம் யோசித்தார்கள்..

“செத்த நாழி இருப்பா..விக்னேஷ்..விக்னேஷ்..பிரண்டு வந்திருக்கான் பாரு…”

நண்பன் வந்தான்..

“வாடா ராசா…உள்ளார வா..” என்றான்..உள்ளே நுழைய எத்தனிக்கவே, அம்மா கேட்டார்கள்

“ஒரு நிமிஷம்பா…எந்த தெரு..”

சொன்னேன்..எனக்கு அப்போது, அதன் அர்த்தம் தெரியவில்லை..அவர் முகம் சற்று மாறியது…

“அப்படி திண்ணையில உக்காருப்பா..” என்று சொன்னவர்கள், விக்னேஷை அழைத்து உள்ளே சென்றார்கள், சலசலவென்று சிறு பேச்சு சத்தம்..எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படியாவது ஒரு ஐயர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அப்போது இருந்தது.,.விக்னேஷ் கண்ணீரோடு வெளியே வந்தான்…

“ராசா..வா..இன்னைக்கு வெளியே போய் படிக்கலாம்..”

எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது…

“ஏண்டா…”

“அது..அது..வந்து…பாட்டிக்கு உடம்புக்கு முடியல..அதனால..”

“அதனால என்ன…நானும் பாட்டியை பார்க்குறேண்டா..” என்றேன் வெள்ளந்தியாய்..

“ப்ச்..இல்லடா..நீ வேற சாதியில்ல…அதனால் தான் அம்மா யோசிக்குறாங்க” …தயங்கி தயங்கி சொன்னான்..முழுதாக காற்று நிரம்பிய பலுனை, ஊசிவைத்து உடைத்தமாதிரி இருந்தது. கடைசி வரைக்கும் ஒரு ஐயர் வீட்டுக்குள் நுழைய முடியவில்லையே என்ற வருத்தம் மிகுந்தது..

“சரி..தாகமா இருக்கு..கொஞ்சம் தண்ணியாவது…” என்றேன்

வீட்டிற்குள் சென்றவன் வர ரொம்ப நேரம் ஆனது..சிறிதுநேரம் கழித்து வந்தவன் கையில் ஒரு சின்ன பிளாஸ்டிக் குவளை..அவர்கள் வீட்டு நாய்க்கு வைக்கும் குவளை போல இருந்தது..என்னால் தாங்க முடியவில்லை..

“ஏண்டா..” என்றேன்..
“இல்லடா..பாட்டி தான்…நீ வாடா உனக்கு வெளியே ஏதாவது வாங்கி தர்றேன்…”

என்னால் தாங்கமுடியவில்லை..அந்த இடத்தை விட்டு ஓட்டமாக ஓடினேன்..ஓடினேன்…ஓடினேன்..விடு வந்துதான் நின்றேன்..அம்மா சமையல் செய்து கொண்டு இருந்தார்கள்..ஓடிச்சென்று கட்டிக்கொண்டேன்…அப்படியே அணைத்துக்கொண்டார்கள்..
“யம்மா…”

“ஏம்பா..எம்புள்ள ஏன் அழுவுது..யாராவது அடிச்சாய்ங்களா..

“இல்லம்மா..விக்னேஷ் வீட்டுக்கு போனேன்மா..உள்ள விடமாட்டுங்குறாய்ங்க” என்று விசும்பி,விசும்பி அழுதேன்…

கண்ணீரை துடைத்துவிட்டார்கள்..

“நீ ஏம்பா, அங்கெல்லாம் போறீங்க..”

“அவந்தான்மா கூப்பிட்டான்..”

“அவிங்கள்ளாம் உசந்த சாதிப்பா..அவிங்க வீட்டுக்குள்ளார விடமாட்டாய்ங்க..”

“ஏம்மா..நாமளும் உசந்த சாதிதான்னு சொன்னே..”

“இல்லப்பா..நம்மளை விட அவிங்க இன்னமும் மேல..”

என்றார்கள். என்னால் எந்த சமாதானத்தையும் ஏற்று கொள்ளமுடியவில்லை..அந்த வயதில் அந்த ஏமாற்றத்தை தாங்கமுடியவில்லை. ஆனாலும் விக்னேஷ்ஷிடம் இதை சற்றும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் விக்னேஷ் எனக்கு முழுமையான நண்பான இருந்தான். அதற்கப்புறம், கல்லூரியிலும், வேலை செய்யும் இடத்திலும், எனக்கு நிறைய அய்யங்கார் நண்பர்கள்..எல்லாரும் என்மேல் மிகவும் நட்பாக இருந்தார்கள்.. எந்த வேறுபாடும் பார்க்கவில்லை..நான் சாப்பிட்ட எச்சில் பாத்திரத்தில் சாப்பிட்டார்கள்..நான் குடித்த கூல்டிரிங்க்ஸை வாங்கி குடித்தார்கள்…

காலம் எல்லாவற்றையும் மாற்றி இருந்தது…படித்தது வேலைக்கு சென்று அமெரிக்கா வரும்வரை விக்னேஷை பார்க்கமுடியவில்லை. இதோ, இன்று, வேறு தேசத்தில் விக்னேஷ்..தயங்கி, தயங்கி உள்ளே சென்றேன்..

அதே அம்மா..மிகவும் வயதாக…ஆனால் முகத்தில் எந்தவித சலனத்தையும் பார்க்கமுடியவில்லை..விழுந்து, விழுந்து கவனித்தார்கள்..சிலநேரங்களில் என் அம்மாவை பார்ப்பது போல இருந்தது…எனக்கு ஐயர் வீடுகளில் பிடித்த, வத்தகுழம்பு, சுட்ட அப்பளம் வந்தது..சுடசுட பில்டர் காபி…வெளுத்து வாங்கினேன்..கிளம்பும் வரைக்கும் அதே சிரிப்பு..யப்பா..காலம்தான் எவ்வளவு மாறியிருக்கிறது..மாற்றியிருக்கிறது..

எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு காரைக்கிளப்ப எத்தனித்தபோது,,வீட்டிலிருந்து அம்மா ஓடிவருவதை கண்டேன்..கார் கண்ணாடியை கீழே இறக்கினேன்..

“ராஜா..”

“என்னம்மா…”

“ஊருக்கு வந்தா கண்டிப்பா, அக்ரஹாரத்துக்கு வீட்டுக்கு வாப்பா”

இந்த முறை கண்டிப்பாக செல்லவேண்டும்.

Sunday 2 October, 2011

விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் – கடுப்பேத்துறாய்ங்க மைலார்ட்

ஏண்ணே.நாமளே, ஆபிசுல ஓயாம வேலை பார்த்துட்டு ஏதோ, கிடைச்ச நேரத்துல எண்டெர்டெயிண்மெண்டுக்காக டி.வி பார்க்குறோம். அதுலயும் தீயைப் பொருத்தி வைச்சா எப்படி இருக்கும்..சத்தியமா சொல்லுறேண்ணே..விஜய் டிவி பார்க்கணுமுன்னு எனக்கு ஆசையே இல்லை..ஆனா, எல்லாரும் நம்மளை மாதிரி இருக்கணுமில்ல..வீட்டுக்காரம்மாவுக்கு ஜோடி நம்பர் ஒன்னு பார்க்கலைன்னா, கையும் ஓட மாட்டீங்குது, காலும் ஓட மாட்டீங்குது. இட்லி சட்டில மாவை ஊத்திட்டு, தண்ணி ஊத்த மறந்துடுறா..கடைசியில இட்லிய பிஸ்கட்டு மாதிரி சாப்பிட வேண்டியிருக்கு..உலகத்துலயே இட்லி பிஸ்கட்டு சாப்பிடுற முதல் ஆளு நானாதான் இருக்கும். அந்த கருமத்துக்காகவே பார்க்க வேண்டியிருக்கு..

அப்படித்தாண்ணே, இன்னைக்கு, கொள்ளிக்கட்டைய எடுத்து நானே சொறியிற மாதிரி, வாலண்டியரா, நானே அடுப்புல போய் உக்கார்ந்தேன்..

“அடியே..இந்த ஜோடி நம்பர் ஒன்னு போடலியா..”

“ஆஹா,,மறந்துட்டேங்க…” அப்படின்னு வர்றா இட்லி மாவுக்கரண்டியோட..

“தயவுசெஞ்சு..இட்லி ஊத்திட்டு, மறக்காம தண்ணி ஊத்திட்டு வா..ஜோடி நம்பர் ஒன்னு எங்கயும் போயிறாது..”

“கண்டிப்பாங்கன்னு” சொல்லிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வந்தாண்ணே…நிகழ்ச்சி ஆரம்பிச்சாய்ங்கண்ணே…

நம்ம ஊரு, சூனியக்காரக் கிழவிக்கு பேண்டு சட்டை போட்டமாதிரி தலைமுடிய வைச்சிக்கிட்டு, ஒரு பாப்பா வந்து ஏதோ பேசுச்சுங்கண்ணே..அவுங்க தான் காம்பியராம்..அப்புறம்கேப்டன் பிரபாகரனுல இடுப்பை ஆட்டி, ஆட்டி ஒரு ஆண்ட்டி ஆடுனாய்ங்கள்னே..அவியிங்க பேரு என்ன…ஆங்க்.ரம்யா கிருஷ்ணனாம்…அந்த ஆண்ட்டியும் வந்து ஏதோ பேசுனாய்ங்க

அப்புறம் வந்து ஒரு பயபுள்ள ஜோடி பரவாயில்லாம ஆடுச்சுங்கண்ணே…பேரு ரஹ்மான் பிரதர்சாம்…பயபுள்ளைங்க ஏதோ செண்டிமெண்டா இருக்கட்டுமுன்னுட்டு, அம்மா செண்டிமெண்டு பாட்டை எடுத்து ஏதோ பரவாயில்லாம ஆடுனாய்ங்க..அவியிங்களுக்கு தெரியாது, அம்மா செண்டிமெண்டுன்னாவே, “அவியிங்க ராசா” ன்னு..அந்த காலத்துல பலபேரை அழுக வைச்சிருக்கோமுல்ல…இப்பதான் தடுக்கிவிழுந்தா, பலபுள்ளைங்க, “பால்வாடி ஆயாவுக்கு ஒரு கடிதம்” ன்னு செண்டிமெண்டா எழுதுறனாலே, ஸ்டாப் பண்ணிவைச்சிருக்கோம்..

அடுத்து, இரண்டு பொண்ணுங்க, ஒரு பொண்ணு பேரு ஜாக்குலின்னாம்..நல்லாத்தாம் ஆடுச்சுங்கண்ணே..நம்மளுக்குதான் பொம்பளை புள்ளைங்க எப்படி ஆடுனாலும் புடிக்குமே..அந்த நேரம் பார்த்து, வூட்டுகாரம்மா..ஏங்க, சாம்பாரு ஏதோ தீயுற வாசம் வருதுன்னு சொல்லி அனுப்புச்சுண்ணே…கடுப்புல உள்ள போயிட்டு வர்றதுக்குள்ளே, இந்த புள்ளைங்க டான்ஸ் ஆடி முடிச்சுருச்சுங்கண்ணே…எனக்கு கஷ்டமா போச்சு..

அடுத்து ஆடுனாய்ங்க பாருங்க, அது ஆட்டம்..நம்ம பிரேம் கோபாலு, விவேக்…பின்னி பிடலெடுத்துட்டாய்ங்க..யப்பே, உடம்பா, அது ரப்பரா..அங்கிட்டு போறாயிங்க..இங்கிட்டு வர்றாயிங்க…கைய தூக்கி காலு மேல போடுறாய்ங்க..காலை தூக்கி, கை மேல போடுறாய்ங்க..தலையை தூக்கி கேப்புல வுடுறாயிங்க..பிச்சிட்டாயிங்கண்ணே..அப்பவே தெரியும்ணே..அவிங்கதான் ஜெயிக்கப் போறாயிங்கன்னுட்டு

அடுத்து ரெண்டு பொண்ணுங்க..அதுல பல்க்கா, ஜோதிகா மாதிரியே ஒரு பொண்ணு, பேரு ஜெயலட்சுமியாம்..அது கூட ஏதோ ஒரு பொண்ணு ஆடுச்சு…ஸ்டார்டிங்க் நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு..அதுக்கு மேல சொதப்புனாய்ங்க பாருங்க..ஒரு பொண்ணு, அது பாட்டுக்கிட்டு ஆடுது..இன்னொரு பொண்ணு, ஏதோ டீ குடிக்க போற மாதிரி கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிட்டு, அது பாட்டுக்கு ஆடுது….எனக்கு “கெக்கெபிக்கே, கெக்கெபிக்கே” ன்னு ஒரே சிரிப்பு…கடைசியில அந்த பொண்ணு ஒரே அழுகாச்சி..நம்ம விஜய் டிவிக்குதான் யாராவது அழுதா ரொம்ப பிடிக்குமே,,உடனே கேமிராவை தூக்கிட்டு வந்துட்டாயிங்க..அந்த பொண்ணு சரியா ஆடலையாம்..அதுக்கு ஒரே அழுகாச்சி..அடங்கொன்னியா..நாங்ககூடதான், உங்க டிராமாவையெல்லாம், உண்மைன்னு நம்பி இம்புட்டு நேரம் பார்த்துக்கிடு இருந்தோம்..நாங்க அழுதோமான்ன என்ன..

சரி…இவிங்க ஆடுறப்ப, இவிங்க அம்மா ஒருத்தங்க, ஆடுற ஆட்டம் இருக்கே..யப்பா..அதுகள விட, இவிங்க நெறைய எக்ஸ்பிரசன் கொடுக்குறாயிங்க..உடனே விஜய் டிவியும் கவர் பண்ணிடுறாய்ங்க..சரி. ஒழுங்கா ஆடலை, இவிங்களதான் எலுமினேட் பண்ணுவாயிங்கன்னு பார்த்தா…அடப்பாவிங்களா, இவிங்க பைனலுக்கு செலக்டாம்…போங்கடாங்..உங்க தீர்ப்புல தீய பொருத்தி வைக்க..என்ன அநியாயம்ணே….எல்லாருக்கும் நல்லா தெரியுது,..ஒரு இழவும் ஆடாத, ஜெயலட்சுமி ஜோடி செலக்டடாம்,..ஓரளவுக்கு ஆடுன, ஜாக்குலின் ஜோடி, எலுமினேட்டடாம்..அக்கிரமண்ணே..என் பொண்டாட்டு பொங்கி எழுந்து, டிவிய உடைக்க போய்ட்டாங்கண்ணே..நான் பண்ணுற சாம்பாருல உப்பு கம்மியா இருந்தா கூட இவ்வளவு கோபப்படமாட்டாண்ணே..அம்புட்டு கோபம்..ஆத்தாடி, பத்ரகாளியா மாறிட்டாண்ணே…எனக்கு வேற கொலை பசிண்ணே..அப்படியே நைசா கேட்டேன்…

“சரி..விடு..எல்லாம் டிராமா…நீ போய் இட்லிய எடுத்துக்கிட்டு வா”..

அதுக்கு கோபத்துல அவ சொல்லுறாண்ணே…

“போடாங்க…நானே விஜய் டிவி மேல கொலை வெறியுல இருக்கேன்…இட்டுலியும் கிடையாது..ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது…”

அப்படியே ஆடிப்போயிட்டேண்ணே….ஆஹா..விஜய் டி.விக்காரய்ங்க இதுவரைக்கு, வீட்டுக்கு வெளியேதான் உசுரை எடுத்துக்கிட்டு இருந்தாய்ங்க..இப்ப சோத்துக்கே வைச்சாய்ங்களா ஆப்பு..என் வீட்டுக்காரம்மா கண்ணுல அம்புட்டு கொலைவெறியை அன்னிக்குதான் பார்ர்குறேன்..ஆஹா..இதுக்கு மேல பேசுனா உயிர்சேதாரம் ஆகிப்போயிடுமுன்னு, நைசா, அடுப்பாங்கரைக்கு போயி, வெந்துக்கிட்டு இருக்குற ரெண்டு இட்லிய எடுத்து சாப்பிடலாமுன்னு போறேன்…பாவி மக..இட்லி மாவு ஊத்திருக்கா, சட்டியில தண்ணிகூட வைச்சிருக்கா…ஆனா, அவசரத்துல ஸ்டவ்வ பத்த வைக்காம போயிருக்காண்ணே…கடுப்புல ஒரு டம்ளரு தண்ணிய குடுச்சிட்டு ரூமுக்கு வர்றேன்..வூட்டுக்காரம்ம கேக்குறா…

“ஏங்க..மானா, மயிலாட..எத்தனை மணிக்கு..”

கடுப்பேத்துறாயிங்க மைலார்ட்..

Saturday 1 October, 2011

வெடி – திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவின் கேடு என்ன தெரியுமா..ஒரு பக்கம், “எங்கேயும் எப்போதும்” போன்ற இயல்பான யதார்த்தமான திரைப்படங்கள் வந்து, 4 படிகள் உயர்த்திக் கொண்டு போகும். ஆனால், திடிரென்று சில படங்கள் எண்டிரியாகி, தமிழ்சினிமாவை, 8 படி கீழிறிக்கி அதள பாதாளத்திற்கு கொண்டு சென்று, மிதித்துவிட்டு கேலியாக சிரிக்கும். அப்படி ஒரு படம் தான், சமீபத்தில்,வெளியான “வெடி..”

படுபில்டப்பாக கல்கத்தா வந்து சேரும், விஷால், ஒரே அடியில், பாட்டிலை, ஒரு ரவுடி மண்டையில் விட்டு ஆட்டும்போதே தெரிந்து விடுகிறது..அடுத்த 2 மணி நேரத்துக்கு நமக்கு எமகண்டம் தான்..அவசரம் அவசரமாக ஓட நினைக்கும்போது, தியேட்டர் வாசலில், உருட்டு கட்டை இல்லாமல் நிற்கும், தியேட்டர்காரர்களை பார்த்து, வரும் ஒன்னுக்கை கூட அடக்கிக்கொண்டு உட்கார நேர்கிறது…

சரி கதைக்கு(இருக்கா என்ன) வருவோம். தங்கையை தேடு கல்கத்தாவிற்கு வரும் விஷாலை, ஒரு கும்பல் வெறி கொண்டு தேடி அலைகிறது(படம் முடிந்த பின்பு, டைரக்டரை நாம் தேடுவது போல).. அவரும் சளைக்காமல் , எல்லார் மண்டையிலும் நல்லா பாட்டிலை விட்டு ஆட்டுகிறார். அதற்கப்பறம், பார்த்தாலே, கெக்கெபிக்கெ, கெக்கெபிக்கெ என்று சிரிப்பு வரும் வில்லன் சாயாஜி ஷிண்டே தான் நம்ம விஷாலையும் தங்கையும் கொல்ல அனுப்பியது என்றால்..ஏனென்றால் அதற்கு ஒரு பிளாஷ்பேக்காம்(கொடுமைடா சாமி..) ஷாயாஜி ஷிண்டே, பிரபல ரவுடியாம்..தூத்துக்குடியே ஆட்டிப்படைக்கிறாராம்(அம்மாவுக்கு தெரிஞ்சது…மவனே என்கவுண்டர்தான்). அந்த ஊருக்கு அசிஸ்டெண்ட் கமிஷனராக வரும் விஷாலுக்கும், வில்லனுக்கும் நடக்கும் மோதலில், நம்ம விஷாலு, வில்லனை கன்னாபின்னாவென்று அலையவிடுகிறார்..அதற்கு பழிவாங்கதான், விஷாலை கொல்ல அனுப்புறாய்ங்களாம்..நடுநடுவே, நம்ம டி.ஆருக்கு பிடித்த தங்கச்சி செண்டிமெண்ட், சமீரா ரொட்டி..இது..சமீரா ரெட்டியோடு காதல் என்று..அய்யோடா சாமீமீமீ..யாராவது காப்பத்துங்களேன்..

விஷால், “அவன், இவன்” படத்தில் நடித்து, சேர்த்து வைத்திருந்த எல்லா நல்லபெயரையும், ஒரே நிமிடத்தில் பாழக்கியுள்ளது மட்டுமில்லாமல், பயங்கர எக்ஸ்பிரஷன்களாம் கொடுத்து, கொடுமைப்படுத்துகிறார்..வெந்து போயி சொல்லுறோம் சாமி..இந்த பாவமெல்லாம் சும்மாவே விடாது…சாயாஜி ஷிண்டே நடித்த ஒரே நல்ல படம் “பாரதி” என்று நினைக்கிறேன்..தாங்கலை…வில்லத்தனம் என்ற பெயரில் சரி காமெடி செய்கிறார்…விவேக் தயவு செய்து ரிட்டையர்டாகி விடலாம்..மருந்துக்கு கூட சிரிப்பு வருவேனான்னு அடம்பிடிக்கிறது….படம் பார்த்து முடித்துபிறகு, “கோவாலு” கூட பேசும்போது கூட சிரிப்பு வரவில்லையென்றால் பாருங்களேன்...தயவுசெய்து சார்…ப்ளீஸ்…..

சமீரா ரெட்டி, வழக்கம்போல, ஹீரோவோடு புரண்டு புரண்டு லவ் செய்கிறார்..கவர்ச்சி காட்டுறாராம்மா…படத்தில் உள்ள ஒரே ஆறுதல், விஜய் ஆண்டனியின் பாடல்களும், அவ்வப்போது வரும் சில சண்டை காட்சிகளும் தான்…விவேக் போதாது என்று, ஊர்வசி, ஸ்ரீமன் என்று வந்து படுத்தி எடுக்கிறார்கள்…

டைரக்டர் பிரபுதேவாவாம்..சார்..இப்பதான், தமிழ்சினிமா கொஞ்சம் நல்ல பாதையில் போய்கிட்டு இருக்கு..எவ்வளவோ புதிய இயக்குநர்கள் வாய்ப்புத்தேடி, ஸ்டூடியோ வாசலில் நிற்கிறார்கள்..தமிழ்சினிமாவை ஒரு படி ஏத்தலைனாலும் பரவாயில்லை…இப்படி…..

உங்க கையை காலா நினைச்சு கேக்குறோம் சார்….