Monday, 31 May, 2010

என்ன பங்காளி..சாப்பிட்டீங்களா..இருந்து ஒருவாய் சாப்பிட்டுதான் போகணும்..

கடந்த மாதம் மதுரையில் என் உறவினர் வீட்டில் விசேஷம் வைத்திருந்தார்கள். வரவேற்பிற்காக ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். பொதுவாக எனக்கும் வரவேற்பிற்கும் ரொம்ப தூரம். முகத்தில் போலி சிரிப்பை வைத்துக் கொண்டு “நல்லா இருக்கீங்களா..என்ன ஆளையே காணோம்” என்று முந்தா நாள் பார்த்தவர்களை பார்த்து கேட்க, அவரும் அசடு வழிந்து “இல்லீங்க..கொஞ்சம் வேலை அதிகம்” என்று சொல்ல, நம் பண்பாட்டை காப்பாற்றியதாக பெருமை கொள்ள எனக்கு பிடிப்பதில்லை. அதுவும், நான் வீட்டு கடைசிப் பையன் என்பதால் ஒருவேலை செய்ய விடமாட்டார்கள். ஏதாவது வேலை செய்யலாம் என்று அருகில் இருந்த பெரிய அண்டாவை எடுத்து சமையலறையில் வைத்தால் “யோவ்..இப்பதான்யா அந்த அண்டாவை கழுவறுதுக்கு எடுத்து வெளியே வைச்சோம்” என்று சத்தம் போட்டார்கள்.

உங்களுக்கு கல்யாணம் ஆகாவிட்டால்,விசேசங்களில் அடிக்கடி கேட்கும் டயலாக்..”என்னப்பா...எப்ப கல்யாண சாப்பாடு போடப்போற..” கல்யாணம் முடிந்துவிட்டால் கேட்கும் டயலாக்குகள்..”என்ன வீட்டில எதுவும் விசேசம் இருக்கா..” தாங்க முடியாமல், ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்..பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த என் அண்ணன் கடுப்பாக என் அருகில் வந்தார்..

“டே..ராசா..விசேச வீட்டுக்காரன் மாதிரியா இருக்க..ஏதோ விருந்தாளி மாதிரில்ல நின்னுக்கிட்டு இருக்க.,.”

“ஏண்ணே..ஒரு வேலையும் பண்ண விட மாட்டுறீங்க..நான் என்ன பண்ண..”

“ஏண்டா..வந்தவங்களை..வாங்க..சாப்பிட்டீங்களா..சாப்பிடுங்க..” ன்னு கூப்புடுறதுக்கு தனியா சொல்லித்தரணுமா…”

சொல்லி விட்டு கிளம்பி விட்டார்..எனக்கும் சங்கடமாக போய்விட்டது. இப்ப யாரையாவது கூப்பிட்டு “சாப்பிட்டீங்களா” ன்னு கேட்கணுமே..யாரையாவது கூப்பிட்டு கேட்கலாமுன்னு பார்த்தா, எல்லாரும் கொலைவெறியில திரியிறாயிங்க..பந்தில இடம் கிடைக்காத கோபம், அனைவரின் கண்களிலும் தெரியவே..ஒருவர் மட்டும் பரபரப்பாக வந்து கொண்டிருந்தார்..மாட்டுனாருய்யா என்று அவரின் கையை உரிமையாக பிடித்துக் கொண்டேன்..

“என்ன பங்காளி..சாப்பிட்டீங்களா..இருந்து ஒருவாய் சாப்பிட்டுதான் போகணும்..”

ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்தார்.

“இல்ல தம்பி நாங்க எல்லாம் கடைசியா சாப்பிடுறோம்..”

“என்னது..கடைசியா..என்னண்ணே..நீங்கதான் முக்கியமான ஆளு…நீங்க சாப்பிடலைன்னா எப்படி..வாங்க முதல்ல..”

“வேணாம் தம்பி..நான் போகணும்..வேலை இருக்கு..”

“அண்ணே..அப்படி எல்லாம் சொல்லக்கூடாது..ஒரு வாய் சாப்பிட்டுதான் போகணும்..”

அப்படியே கையை உதறினார்..கடுப்பு கண்களில் தெரிய..

“யோவ்..யாருய்யா நீ….நான் பாயாசம் ஊத்துற ஆளுய்யா..உள்ள பாயாசம் இல்லாம அடிதடி நடந்துக்கிட்டு இருக்கு..வெளியே வந்து பாயாச சட்டி எடுத்துட்டு போகலாமுன்னு பார்த்தா..நீ அலும்பு பண்றியா..*****”

அவர் கெட்ட வார்த்தை பேசும்முன்பு கையை விட்டுவிட்டேன்..என்னால் இதற்கு மேல் பொறுக்கமுடியவில்லை. காலையில் சாப்பிடாததால் பசிவேறு வயிற்றை கிள்ளியது. சரி சாப்பிட்டு வரலாம் என்று டைனிங்க் ஹாலைநோக்கி சென்று பார்த்தவன் அதிர்ந்தே விட்டேன். மகாபாரதப் போர், டிவியில் தான் பார்த்திருக்கிறேன். அன்றைக்குதான் நேரில் பார்க்கிறேன். எல்லாரும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார்கள். ஒருத்தர் எல்லாம் சாம்பார், ரசம், மோர், திரும்பவும் சாம்பார் என்று வாழ்க்கை ஒரு வட்டம் என்று நிரூபித்து கொண்டிருந்தார்..ஒவ்வொருத்தர் முகத்திலும் ஒரு கொலைவெறி தெரிந்தது.

“டேய்..வெண்ணை..சாம்பார் கொண்டு வாடா..எம்புட்டு நேரமா கூப்பிடுறது..”

“ரசத்து மேல சாம்பாரை அப்படியே ஊத்துங்க பார்ப்போம்..”

“யோவ்..அப்பளம் எங்கயா…பொரியல காணோமேயா..”

“பாயசத்தை அப்படியே கப்புலயும் ஊத்தப்பு..ஏதோ வீட்டு சொத்து போற மாதிரி இம்புட்டுகாண்டு ஊத்துறியே..”

“அடியே..லட்டு என்ன இம்புட்டு சின்னதா இருக்கு..ஏமாத்துறீங்களா..”

“பங்காளி..பக்கத்து இலைக்காரர் எம்புட்டு நேரமா பொரியல் கேட்டுக்கிட்டே இருக்காரு..அப்படியே எனக்கும் வைப்பா..”

ஒருத்தருக்கு பாயசத்தில் அப்பளம் சரியாக நொறுங்காமல் தகராறு செய்ததால் “சொத்” தென்று ஒரு குத்துகுத்த, பாயசம் பக்கத்தில் இருப்பவர்கள் முகத்தில் தெரிக்கவே..”எம்புட்டு பார்த்திருக்கோம்.” என்று துடைத்து விட்டு புல்கட்டு கட்டிக்கொண்டுருந்தனர்..எனக்கு தலை சுற்றிக் கொண்டுவந்தது. அப்படியே கைத்தாங்கலாக ஒரு இடத்தை பார்த்து உக்கார்ந்தால் எதன் மேலேயோ உக்கார்ந்தது போல் இருந்தது. எழுந்து பார்த்தால் அவ்வளவு பெரிய துண்டுண்ணே..ஒரு பத்து சீட்டுக்கு விரித்திருந்தார்கள்..அதன் நுனியைப் ஒரு மீசைக்காரர் பிடித்திருந்தார்..”தம்பி..அப்பவே சீட்டு போட்டுட்டோம்..” என்று முறைத்தார்..முறைப்பிலும் “எம்.எல்.ஏ” சீட்டு வாங்கிட்டோமுல்ல என்ற மாதிரியான பெருமிதம் தெரிந்தது. திரும்பி பார்க்கிறேன்..ஒரு சீட்டுக்கூட இல்லை. அவ்வளவுதான் எழுந்து வெளியே வந்து, பார்க்கிறேன்…ரஜினி பட ரிலீஸ் மாதிரி வெளியில கதவை தள்ளிக்கிட்டு ஒரு கூட்டம்..கதவை அடைத்துக்கொண்டு ஒருத்தர் நின்று காவல் காத்து கொண்டிருந்தார்..அங்கு நடந்த தள்ளுமுள்ளுவில் ஜெயிக்க முடியாமல் என்னை அப்படியே பொடணியை புடித்து ரோட்டில் தள்ளிவிட்டார்கள். சிறுவயதில் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணியபோது “ஒருநாளைக்கு சோத்துக்காக தெருவில் நிப்படி” என்று அப்பா திட்டியது நினைவுக்கு வந்தது..கடுப்புல எந்திருச்சு வெளியே வர்றேன்..என்னை மாதிரி அங்கிட்டு நின்னுக்கிட்டு இருக்குறவன் கேக்குறான்..

“என்ன பங்காளி..சாப்பிட்டீங்களா..இருந்து ஒருவாய் சாப்பிட்டுதான் போகணும்..”

Tuesday, 25 May, 2010

விமானத்துல போறது தப்புங்களாயா???

போன தடவை மாதிரி இல்லாமல் இந்த முறை விமானப்பயணம் நல்லபடியாக அமைய வேண்டும் என்று வேண்டினேன். கத்தார் வழியாக,வாஷிங்க்டன் என்று சொன்னபோது எனக்கு புது அனுபவமாக இருக்கும் என எண்ணினேன். இதுவரை எந்த அரபு நாடுகளுக்கும் நான் சென்றதில்லை. அட்லீஸ்ட், விமான நிலையமாவது செல்கிறோமே என்று சிறிய சந்தோசம். அதுவும் பயணம், ஏர் இந்தியா மூலம் இல்லை என்று உயிருக்கு உத்தரவாதம் கொடுக்கவே, சந்தோசம் இரட்டிப்பாகியது.

கத்தார் ஏர்லைன்ஸ் நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் இந்திய உணவுகள் கிடைக்கும் என்று என் நண்பன் வயிற்றில் பால் வார்த்தான். பொதுவாக அமெரிக்க ஏர்லைன்ஸ்களில் கொடுக்கப்படும் உணவுகள் எனக்குப் பிடிப்பதில்லை. அதுவும் சிக்கனை பாதிவேகவைத்து , காய்கறிகளை பச்சையாக வைத்து “சார்..புட் பிளீஸ்” என்று கொடுக்கும்போது அப்படியே திருப்பி கொடுத்துவிடுவேன். டாய்லெட்டில் பேப்பர் யூஸ் பண்ணும் பழக்கம் எங்கள் பரம்பரைக்கே இல்லை என்பதுவும் அதற்கு காரணம். அதுவும் விமான டாய்லெட்டுகள் ஓமக்குச்சி நரசிம்மனுக்காக மட்டுமே கட்டப்பட்டன என்பது என் கருத்து. தப்பி தவறி கையை காலை நீட்டினால் அவ்வளவுதான். கொஞ்சம் பெரியதாக வைக்கலாமே, என்று விமான பணிப்பையனாக வேலை பார்க்கும் என் நண்பனிடம் கேட்டேன். “2 சீட் போயிருமில்ல” என்றான்..வருங்காலத்தில் அம்பானியாக வருவான் போலிருக்கிறது. சில ஏர்லைன்ஸ்களில் முன்சீட்டில் உள்ளவர்கள் நம் மடியில்தான் தான் படுத்து கிடப்பார்கள். அவர்கள் இருக்கையை புஷ்பேக் பண்ணினால் உங்கள் மடிக்குதான் வரும். முன்சீட்டில் அழகிய இளம்பெண்கள் இருப்பது உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொருத்தது..

முதல் விமான பயணம் வேண்டுமானால் முதல் ஒரு மணிநேரம் திரில்லாக இருக்கும். ஆனால், 14 மணிநேரம் பயணம் வாழ்க்கையே வெறுத்துவிடும். முன்னால் உள்ள டி.வியில் எவ்வளவு படங்கள்தான் பார்க்கமுடியும். சுறாவுக்கு தப்பித்து விமானத்தில் வந்தால் வில்லு படம் போட்டார்கள். ஆணியே புடுங்கவேண்டாம் என்று ஆப் பண்ணிவிட்டேன். இன்னொரு முக்கியமான விஷயம், ஜன்னலோர சீட் கிடைக்கிறதோ இல்லையோ அடுத்து 14 மணி நேரத்திற்கு யாரோடு குடும்பம் நடத்தப் போகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். சிலநேரம் அது உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் என்பது என்னுடைய அனுபவங்களில் ஒன்று. போன முறை ஒரு இந்திக்காரர் வந்து, எனக்கு இந்தி கற்று கொள்ளும் ஆசையை சுத்தமாக நீக்கிவிட்டார்.

இந்த முறை யார் என் பக்கத்து சீட் என்று பார்க்க ஆசையாக இருந்தேன். ஒருவேளை ஏதாவது மாடலிங்க் பெண்மணி வந்து “எக்ஸ்கியூஸ்மி” என்று சொன்னால் எப்படி ரியாக்ட் செய்வது என்று நினைத்து பார்க்கும்போது, அவுட் ஆப் போகஸில் என் மனைவி கேபின் பேக்கேஜில் இருந்து பாஸ்போர்ட்டை எடுத்தாலே, பூரிக்கட்டையை எடுப்பது போல் இருந்தது. இந்த முறை பூரிக்கட்டையை, பூரி செய்வதற்கு மட்டுமே உபயோகிக்கவேண்டும் என்று அவளிடம் சத்தியம் வாங்கி கொண்டேன்.

பின்னால் திரும்பி கோவாலைப் பார்த்தேன். கோவாலும் ஆவலாக இருந்தான், பக்கத்து சீட்டுக்கார ஆளைப் பார்ப்பதற்கு. அடிக்கடி விமான பணிப்பெண்ணிடம் “எச்சூஸ்மி..ஹூ இஸ் ஹியர்” என்று ஆங்கிலத்தில் மிரட்டி கொண்டிருந்தான். நம்ம ஊருப்பையன் ஒருவன் என்னுடைய சீட் நோக்கி வந்து கொண்டிருந்தான்...காதில் இன்னமும் செல்போன் வழியாக பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தான். என் சீட் பக்கத்தில் வந்து நம்பரை ஒருமுறை சரிபார்த்தான். என்னைப் பார்த்தான். முகத்தில் அதிர்ச்சி..ஏமாற்றம்…அவனும் மாடலிங்க் பெண்ணை எதிர்பார்த்திருப்பான் போலும்..ஏமாற்றத்தை தாங்கி கொள்ளாமல் “இதுதான என் சீட்டு” என்று கேட்டான். வேறு வழியில்லை. “படம் எப்ப போட்டாயிங்க” என்பது போல் “எப்ப கிளப்புவாயிங்க” என்றான். “பைலட் ஒன்னுக்கடிக்கப் போயிருக்கிறார். வந்துருவார்” என்றேன். “மதுரையா சார்” என்றான்.

கோவாலு நிலைமையை பார்க்கலாம் என்றால் அவன் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான்..கண்களில் கொஞ்சம் கண்ணீர் தெரிந்தது..

“டே..கோவாலு,.”

“ராசா..சீட் மாத்திக்கலாம்டா…நீ இங்கிட்டு வந்துருடா..”

“ஏண்டா..”

“திரும்பிப் பாருடா..”

திரும்பிப் பார்த்தால் ஒரு குஜராத்தி பெண்மணி கோவாலு பக்கத்து சீட்டில். வயது ஒரு 75 இருக்கும். பீடாவைப் போட்டுவிட்டு எச்சில் துப்ப இடம் தேடிக் கொண்டிருந்தார்கள். கோவாலு மிரண்டு போயிருந்தான்.

“ராசா..கண்டிப்பா சீட்டுலதான் உக்காரணுமா..லைட்டை ஆப் பண்ணின பிறகு இப்படி தரையில படுத்துக்கவா..”

“அடங்கொய்யாலே கோவாலு..இது என்ன அரசு விரைவு பேருந்தா..வழியில துண்ட விரிச்சி படுத்துக்குறதுக்கு…சீட்டுக்கு போடா..”

“ராசா..எனக்கு இந்தி தெரியாதுடா..”

“கோவாலு..நீ என்ன குவிஸ் போட்டியிலயா கலந்துக்கப் போற..”

“ராசா..அவுங்க வேற பீடா போட்டிருக்காங்க..டிஸ்யூ பேப்பர் கிடைக்கலைன்னு என் பார்ஸ்போர்ட்டை கிழிச்சுரப் போராயிங்கடா…நீயே என் பார்ஸ்போட்டை வைச்சிருடா..”

பார்க்க பாவமாக இருந்தது..கோவாலு வேண்டா வெறுப்பாக சீட் நோக்கி போய்கொண்டிருந்தான். திரும்புறேன். நம்ம ஊருக்காரப்பையன் கூப்பிட்டான்..

“பாஸ்ஸூ..”

“சொல்லுங்க..”

“இதுல சன்.டிவி வருமா..”

Friday, 21 May, 2010

அவிங்க ராசா தளம் ஹேக்கிங்க் – வெளிநாட்டு சதியா????

கடந்த ஒரு வாரமா என்னோட தளத்திற்கு சென்றால், அழைப்பிதழ் இல்லாமலே தமிழர்ஸ் என்ற தளத்திற்கு இட்டு சென்றது. சரி, நம்ம தளத்தையும் ஒரு தளமா மதிச்சு ஹேக் பண்ணிட்டாயிங்களோன்னு பயமா இருந்தாலும், உள்ளுக்குள்ளாற பிரபல பதிவரா ஆயிட்டமோன்னு ஒரு சந்தோசம் வேறண்ணே. ஒருவேளை வெளிநாட்டு சதியான்னு நினைச்சுப் பார்த்தால், உள்நாட்டுலேயே நமக்கு சோத்துக்கு வக்கில்லை(ஒன்லி பர்கர்தான்,.,,ஹி..ஹி..), சரி ப.சிதம்பரம் சார்கிட்ட கேட்கலாமுன்னு நினைச்சா, அவரு தளத்தையே ரெண்டு மூணு நாளா காணோமாம்...

அந்த சந்தோசம், ஒரு வாரம் கூட நீடிக்கலைண்ணே..ஒரு நண்பரின் அறிவுரையின் பேரில், தமிழர்ஸ் மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையை நீக்கினால் இந்தப் பிரச்சனை திர்ந்து பொசுக்குன்னு போயிடுச்சு…வேலியில போற ஓணானை எடுத்து கக்கத்துல விட்ட கதையா, இந்த தமிழர்ஸ் மற்றும் தமிழ்10 ஓட்டுப்பட்டையை வைச்சுக்கிட்டு ஒரு வாரமா இல்லாத பாடு பட்டுட்டேண்ணே(என்னது..ஒரு வாரமா ரொம்ப சந்தோசமா இருந்திங்களா..)

ஆனாலும் ஒரு வாரமா எத்தனை மெயில்கள், எத்தனை போன் கால்கள்..அவிங்க ராசா..உங்க தளத்தை பார்க்க முடியவில்லையே என்று..கண்ணுல தண்ணி வந்திருச்சுண்ணே..(ஒரு பயபுள்ள மெயில் அனுப்பல..நானே என்னோட தளத்தைப் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்…ஏண்ணே..எம்மேல இம்புட்டு பாசமா..)..ஆனாலும் விடமாட்டோமில்ல..மாசத்துக்கு ஒரு பதிவாவது போட்டு உங்களை சாகடிக்காம எப்படி விடுவோம்..ஹி..ஹி..

அப்புறம்..சொல்ல மறந்து விட்டேன்..சுறா படம் பார்த்ததிலிருந்து இப்படிப்பட்ட நாட்டில் வசிக்க கூடாது என்று திரும்பவும் அமெரிக்கா வந்து விட்டேன். கடந்து வாரம்தான்..இங்கு வந்து பார்த்தால், இங்கேயும் சுறா ரிலிஸ்..ஏண்ணே..அண்டார்டிகாவில் சுறா ரிலீஸ் ஆயிருக்கா???

(அலும்பு தொடரும்)

Monday, 3 May, 2010

சுறா – பார்றா….

சுறா படம் ரிலீஸ் என்று தெரிந்தவுடன் முதலில் நான் செய்த காரியம் என்ன தெரியுமா..கோவாலு கண்ணில் படாமல் ஒளிந்ததுதான்..கோவாலு, விஜய்யின் தீவிர ரசிகர் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் வெறியன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். கோவாலுக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு, தான் சாகும்போது கூட, நானும் சாக வேண்டும் என்று எதிர்பார்ப்பான். அதனால், எப்போது விஜய் படம் பார்த்தாலும் எனக்கும் ஒரு டிக்கெட் ரெடியாகவே எடுத்து வைத்திருப்பான். நாங்கள் இரண்டு பேரும் ஜோடியா, செத்து, செத்து விளையாடுவோம்.

ஆனால் இந்தமுறை நான் சுதாரித்துக் கொண்டேன். போன் எடுத்தாதானே கோவாலு வரச்சொல்லுவான். அவனிடம் வரும் எந்த போன் காலும் அட்டெண்ட் பண்ணக் கூடாது என முடிவு பண்ணினேன். அதானல் போனை ஆப் பண்ணிவிட்டு நல்லா தூங்குறேன்…யாரோ காலங்காத்தால காலிங்க் பெல் அடிச்சாயிங்க..சரி பேப்பர்காரந்தான்னு நம்பி போய் கதவைத் திறந்ததுதான் நான் அன்னிக்கு பண்ணின பாவகாரியம். சனி, சந்துக்குள்ளயும் புகுந்து துரத்துவாயிங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். அன்னைக்குதான் நேரில பார்த்தேன். கோவாலு நல்லா 2 கோட்டிங்க் பவுடர் போட்டிக்கிட்டு நிக்கிறாயிங்கண்ணே(ஐநாக்ஸ் போறாராம்மா…)

“டே ராசா..என்ன போன் டெட்டா..”

“இல்ல ஆளுதான் டெட்டு..”

“சரி..அதை விடு..டக்குன்னு கிளம்பு..இன்னும் ஒரு மணி நேரத்துல் ஷோ போட்டுருவாயிங்க..”

“கோவாலு..ஒரு மாதிரி தலை வலிக்குதுடா..இன்னைக்கு வேணான்டா..”

“டே ராசா..சொன்னா கேளு..என்ன கத்த வைக்காத..”

“வேணான்டா..நான் உண்மைத்தமிழன் விமர்சனத்தைப் படிச்சிக்குருவேன்…காவல்காரன் வேணும்னா வர்றேன்டா..தயவு செய்து..”

“டே..ராசா..சொன்னா கேளு..படம் ஹிட்..நம்பலைன்னா பாரேன்..உங்க பதிவர் லக்கிகூட சூப்பர் ஹிட்டுன்னு எழுதுவார்..”

“கோவாலு..அவர் என்னைக்கு வேட்டைக்காரனை சூப்பர்ஹிட்டுன்னு சொன்னாரோ, அப்பவே அவர் விமர்சனத்தை படிக்கிறத நிப்பாட்டிட்டேன்..”

“ராசா..அப்ப நண்பன் கூப்பிட்டா வர்றமாட்ட..”

“யாரோ நண்பன்னு சொன்னியே கோவாலு..வெளியே நிக்கிறானா..தள்ளு பார்க்கணும்..”

அவ்வளவுதான் கோவாலு டென்சனாகிட்டான்..

“நீ..இப்ப வரலைன்னா டிக்கெட்டை கிழிச்சிப் போட்ருவேன்..”

கூட்டமா சாகுறதுல எவ்வளவு விருப்பம் பாருங்கண்ணே..அன்னைக்கு எனக்கு ஏழரை நாட்டு சனிதான் சட்டை போட்டு விட்டது..போற வழியில ஏதாவது ஆக்சிடெண்ட் நடக்காதான்னு கடவுளை வேண்டிக்கிட்டே பைக்குல உக்கார்ந்தேன். அன்னைக்கு கடவுளும் சதி பண்ணிட்டார்,..

விஜய்யின் ஓபனிங்க் சீனைப் பார்த்தவுடன் கோவாலு துள்ளி குதிக்கிறான்..

“ராசா..பார்த்தியாடா..இளைய தளபதிய..பின்னுராருல்லா..”

“கோவாலு..லைட்டா வயித்த கலக்குற மாதிரி இருக்கு..நீ வேணா பார்த்துட்டு வர்றியா..”

“ராசா..கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறியா..தளபதி பஞ்ச் டயலாக் பேசப் போறாரு..”

“மேல கை வைக்கிறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு…”

எனக்கு முதல்முறையாக வாமிட் சென்சேசனாக இருந்தது. அப்படியே அவர் இந்த டயலாக்கையும் சொல்லி இருக்கலாம்..

“படத்தைப் பார்க்குறதுக்கு முன்னாடி, ஒரு தடவைக்கு முன்னாடி..”

கோவாலு, தமன்னா டான்ஸ் பார்த்து மும்மரமாக, அப்படியே எழுந்து ஓடினேன்..ஓட்டம்னா ஓட்டம் அப்படி ஒரு ஓட்டம்..வீடு வந்தவுடன் கொஞ்ச நேரம் டி.வி பார்க்கலாமுன்னு ஆன் பண்ணினா..

“மேல கை வைக்கிறதுக்கு முன்னாடி..”

என்னது விமர்சனமா…???

வேட்டைக்காரனுக்கு நான் எழுதிய விமர்சனம்..

“விஜய் திருந்தவில்லை.திருந்தவும் மாட்டார்..”

சுறாவுக்கு விமர்சனம்..

“இந்த ஜென்மமில்லை..ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் விஜய் திருந்த மாட்டார்.”