Saturday 25 September, 2010

சூழ்நிலை கைதிகள்

உடம்பு கொஞ்சம் வெயிட் போட ஆரம்பித்து விட்டதால், சாயங்கால வேளைகளில் வாக்கிங்க் செல்ல பழகிகொண்டேன். எங்கள் அபார்ட்மெண்டில், ஒரு பெரிய குளம், அதைச்சுற்றி சிறிய புல்வெளி அழகாக அமைந்திருக்கும். அந்த புல்வெளியில் தினமும் வாக்கிங்க் செல்வதை பழக்கமாக்கி கொண்டேன். சுத்தமான காற்று, பச்சை பசலேன்று பூமித்தாய் மேல் போர்வை போர்த்தினார்போல் அழகு, எப்போதோ கிடைக்கப்போகும் மீனுக்காக இன்னும் ஒற்றைக் காலில் நிற்கும் கொக்குகள், வாயை அடக்காமாட்டாமல், வேர்க்க விறுவிறுக்க நடைபோடும் பெருசுகள், அம்மா வருகிறார்களா, என்று திரும்பி பார்த்துக் கொண்டே ஓடும் குழந்தைகள், அந்த நடையைப் பார்த்து பார்த்து களிப்புறும் பெற்றோர்..என்று அந்த ஏரியாவே ரம்யமாக காட்சியளிக்கும். ஓடுவதால் உடம்பு குறைகிறதோ இல்லையோ, எப்போதும் கணிப்பொறியைக் கட்டி அழும், என் போன்றோர்க்கு இதெல்லாம் ஒரு வரப்பிரசாதம்..

நேற்றும் இதுபோன்று வாக்கிங்க் செல்லும்போது அந்த பெண்மணியைப் பார்த்தேன். வயது சுமார் 65 இருக்கும், பார்த்தவுடனே தெரிந்து கொள்ளலாம், நம்ம ஊரிலிருந்து வந்தவர்கள் என்று. குளத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். பார்வையில் ஒரு வெறுமை தெரிந்தது. நான் மதுரைக்காரன் என்று எப்போதும் என் நெற்றியில் ஒட்டியிருப்பதால், சுலபமாக என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்..

“தம்பிக்கு மதுரையா..”

“ஆமாம்மா..நீங்க..”

“திருமங்கலம்….நல்லா இருக்கீங்களா..”

“நல்லா இருக்கேம்மா..என்ன இந்த பக்கம்..”

ஏதோ காய்கறி சந்தைக்கு வந்தாற்போல கேட்டேன். சிரித்துக் கொண்டார்கள்.

“பையன், இங்கதான வேலை பார்க்குறான். மருமகளுக்கு இப்பதான் பிரசவம் ஆச்சு...அதான் உதவிக்கு வந்தேன்..”

“அமெரிக்கா வந்து எவ்வளவு நாள் ஆச்சு..”

“ம்ம்..பையன் வந்து ஒரு 3 வருசம் இருக்கும். நான் போன மாசம்தான் வந்தேன்..”

எனக்கு நேரமாகிவிட்டதால், விடைபெறலாம் என்று எண்ணினேன்,,

“சரிங்கம்மா..இன்னொருநாள் பார்க்கலாம்..கிளம்புறேன்..”

சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று எத்தனித்தேன்..

“தம்பி..”

குரலில் ஒரு தழுதழுப்பு கேட்டு திரும்பி பார்த்தேன். அந்த அம்மாதான். அதிர்ந்து போனேன். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அடுத்த வார்த்தையிலேயே அழுது விடுவார்கள் போல தெரிந்தது..

“அய்யோ.என்னமா..என்ன ஆச்சு..ஏன் ஒருமாதிரி இருக்கீங்க..”

“கொஞ்சம் இருந்து பேசிட்டு போப்பா..மனசுக்கு ஆறுதலா இருக்கும்..”

“ஏம்மா..”

“இந்த ஊருல பேசுறதுக்கு யாருமே இல்லையேப்பா..வாழ்க்கையே வெறுத்து போச்சு..எவ்வளவுநேரம், அந்த நாலு சுவத்தைப் பார்த்து கிட்டே இருக்குறது..எப்படி தம்பி, இங்க இருக்கீங்க..”

இந்த முறை அழுதே விட்டார். அவசரமாக சேலை தலைப்பை எடுத்து துடைத்தார்..

“கண்ணுல ஏதோ விழுந்துருச்சி போல..” மறைக்க முயற்சி செய்தார்கள்.. ஆனால் முடியவில்லை..

“ஏம்மா..மகனும், மருமகளும் இருக்காங்கள..அவங்ககூட பேசலாம்ல.”

“எங்கப்பா..பையன் 9 மணிக்கு போயிட்டு 8 மணிக்கு வர்றான். மருமக, 9 மணிக்கு போயிட்டு 7 மணிக்கு வர்றா..வந்தவுடனே களைப்புல தூங்கிறாங்க..அவுங்களை சொல்லியும் குத்தமில்லை..நாந்தான்..”

“ஏன்..”

“காலையிலிருந்து அந்த நாலு சுவத்துக்குள்ளாற எவ்வளவு நேரம்தான் டி.விய பார்த்துகிட்டே இருக்குறது. குழந்தைய வேற பார்த்துக்கணும்.. சரி..வெளிய வந்து நாலு மனுச மக்கள பார்க்கலாமுன்னு பார்த்தா, வெறிச்சோடி கிடக்குது. பக்கத்து வீட்டுக்காரங்க கூட வெளியே வரமாட்டுறாங்க…ஒரு கடை கண்ணிக்கு கூட போக முடியல..ப்ச்..ஏதோ ஜெயிலுக்குள்ள இருக்குற மாதிரி இருக்குது..நீங்க எப்படிப்பா இருக்கீங்க..”

“வேற என்னமா பண்ணுறது. பொழைப்பு ஓடணும்ல..உங்க கணவரை கூப்பிட்டு வந்துருக்கலாமுல..”

“இல்லப்பா..ஊருப்பக்கம் சொத்து கிடக்கு..பார்த்துக்குற ஆள் வேணுமில்ல..அதான் அங்கேயே இருக்காரு..40 வருசம் தம்பி..ஏன் கூடயே இருப்பாரு..ஒருநாள் கூட பிரிஞ்சு இருக்கமாட்டாரு..இப்ப எப்படி இருக்காரோ..மாத்திரை கூட சரியா போடுறாருன்னு தெரியலை.”

குரலில் பிரிவின் வலி தெரிந்தது..

“அய்யோ தம்பி..பாவம் என்னோட கஷ்டத்தை உங்ககிட்ட சொல்லி உங்களையும் கஷ்டப்படுத்துறேன்..நீங்க ஏதோ அவசரமா போகனுமுன்னு சொன்னீங்கள்ள..கிளம்புங்கப்பா..”

குரல்தான் போகச்சொல்லியது... மனசு இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பா என்று சொல்லுவது போல தோன்றியது. அலுவலக வேலையாக அவசரமாக செல்லவேண்டி இருந்ததால், கிளம்ப வேண்டியிருந்தது..

“சரிங்கம்மா..அந்த பக்கம் வந்தா வீட்டுக்கு வாங்க..23 நம்பர்தான்..”

“கண்டிப்பா..நீயும் இந்தப்பக்கம் வர்றப்ப கொஞ்சம் பேசிட்டு போப்பா..மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்..”

மனதுக்கு கஷ்டமாக இருந்தது. பெற்றோர்கள்தான் எவ்வளவு பெரிய தியாகிகள்..ஒவ்வொரு முறையும், எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றே எண்ணி கொண்டிருக்கிறோம். ஆனால், தன் கடைசிநிமிடத்தில் கூட “சாப்பிட்டயா..” என்று மகனையோ, மகளையோ பார்த்து கேட்கும் எண்ணம் யாருக்கு வரும். ஒவ்வொரு நிமிடமும், தன் மகளுக்கோ, மகனுக்கோ வாழும் நடமாடும் தியாகிகள்..

“அமெரிக்கா போயிருந்தேன்..மகனையும் மருமகளையும் பார்த்தேன்..” என்று அவர்கள் சொல்லும் பெருமித குரலுக்கு பின்னால் எத்தனை தியாகங்கள். சோகங்கள்.. பலவித எண்ண ஓட்டங்களுடன் அவர்களிடம் விடைபெற்று வீட்டுக்கு சென்றேன்..

மனைவி இருந்தாள்..

“என்னங்க..வீட்டுல இருந்து உங்கம்மா கால் பண்ணியிருந்தாங்க..”

“என்ன சொன்னாங்க..”

“அதாங்க..அம்மா இங்க வர்றதுக்கு விசா அப்ளை பண்ணியிருந்தோம்ல..அப்பாயிண்ட்மெண்ட் தேதி வந்துருச்சாம்..ஏதோ கேள்வி கேக்கணுமாம்..

“ “

“என்னங்க..குழந்தைய நல்லா பார்த்துக்குருவாங்கள்ள..”

6 comments:

MaduraiMalli said...

Raasa ignore this santhosh baffoon.. BTW,wishes on your good news

இவன் சிவன் said...

ராசான்னே நீங்க சீரியஸா பதிவு எழுதினாலும் பசங்க கமெண்ட்ல காமெடிபண்ராயிங்க...இந்த அரைவேக்காடுகளை கண்டுக்காதீங்க... பதிவு அருமை. வாழ்த்துக்கள்!!

Viji said...

அண்ணா
நீங்க சொல்லி இருக்குறது ரொம்ப சரி,நம்ப ஆசைக்காக நம்ப அப்பா அம்மாவை வரவளைகிறோம்,ஆனா அவங்க இங்க வந்து ரொம்ப கஷ்டபடரங்க.என் அப்பா,அம்மா இப்பதான் வந்துடு போன்ணங்க.அவங்களுக்கு அவங்க எடம் தான் வசதி.நம்ப சந்தோஷத்துக்காக அவங்கள கஷ்டபடுதறது ரொம்ப தப்பு.என்ன தான் புள்ளைங்க,பெற குழந்தைய பர்கர சந்தோசம் இருந்தாலும் உள்ளுகுளர அவங்க மனசு நம்ப நாட நினச்சு என்குது.

உங்க மனைவிய உடல்நலம் விசாரிச்சத சொல்லுங்க.முதல் பிரசவமா,ரெண்டாவதா?

அவிய்ங்க ராசா said...

நன்றி சந்தோஷ்,

வாழ்த்துக்கு நன்றி மதுரைமல்லி(நண்பன்????)
நன்றி சிவன்
நன்றி விஜி..உங்கள் கருத்தோடு 100% ஒத்துப்போகிறேன். வாழ்த்துக்கு நன்றி.முதலாவது...

Viji said...

அண்ணே
பேசாம blogku கொஞ்ச நாள் லீவ் விடுங்க.இந்த கொசு தொல்லைலம் அடங்கட்டும். மனைவிகூட நெறைய நேரம் செலவு பண்ணுங்க.பாவம் அவங்க.

Anonymous said...

நிஜம் தான் ராசா..நான் கூட சிங்கையில் இருந்தப்போ அம்மா,அப்பாவை கூட்டிகிட்டு வரணும்னு முயற்சி எடுத்ததுண்டு. மெட்ராச விட்டு நான் வரமாட்டேன்பா, எங்கள வற்புறுத்தாதனு சொல்லிட்டாங்க. நேத்து கூட ஒரு அமெரிக்க ஆத்தா இன்று போய் நாளை வானுடுச்சி. கொஞ்சம் வருத்தம் தான். அமெரிக்க வரமுடியலயேன்னு. இருந்தாலும் இனி நான் குடும்பத்தோட இருப்பேன்னு நெனைக்கும் போது விசா ரிஜெக்ட் ஆனது பெரிய வருத்தமா தெரியல. விசா கொடுத்திருந்தா நானும் சில நாட்களில் சூழ்நிலை கைதியாகி இருப்பேன். - பயபுள்ள.

Post a Comment