Saturday 22 January, 2011

தி பக்கெட் லிஸ்ட் – விமர்சனம்

ஒரு திரைப்படத்தால், உங்களை அழவைக்கமுடியுமா..முடியும் என்றே நான் சொல்லுவேன், அந்த திரைப்படத்தோடு, இரண்டு அல்லது மூன்று மணிநேரம் வாழஆரம்பிக்கும்போது. அந்த திரைப்படத்தோடு, நீங்கள் பயணிக்கும்போது. நான் கடைசியாக அழுதது, வீராச்சாமி பட கிளைமாக்ஸ் பார்த்து. டயலாக் பேசிக்கொண்டு உலக நடிகர் டி.ஆர் மற்றும் தமிழக மர்லின் மன்றோ மும்தாஜ் செத்து விடுவார்கள். அப்போதுதான் அடக்கமாட்டாமல் கண்ணீர் விட்டேன். ஆனால் சோகக்கண்ணீர் இல்லை. நகைச்சுவை தாங்கமாட்டாமல் விழுந்து விழுந்து சிரித்ததால் வந்த ஆனந்த கண்ணீர். ஆனால் படம் ஆரம்பிக்கும்போது, ஒரு சோகக்கண்ணீர் விட்டேன். டி.ஆரின் ஓபனிங்க் சாங்கை பார்த்து தாங்கமாட்டாமல், திரையரங்கின் வாசலை நோக்கி ஓடியபோது, கதவை திறக்காமல் வில்லன் சிரிப்பு சிரித்த வாட்ச்மேனின் காலைபிடித்து கதறியபோது வந்த கண்ணீர்.

ஆனால், நேற்று ஒரு ஆங்கிலபடம் பார்த்தபோது, என்னை அறியாமல் அழுதேன். உணர்ச்சிவசப்பட்டு. படத்தின் பெயர் “தி பக்கெட் லிஸ்ட்” , எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் படம்பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், படம் தொடங்கிய சிறிது நேரத்திலே, படத்தோடு ஒன்றிப்போனேன். படத்தின் கதை இதுதான். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர், ஆஸ்பத்திரியில் அருகருகே அனுமதிக்கப்படுகிறார்கள். முதலாமவர், மிக புத்திசாலியான மெக்கானிக் வேலை செய்யும் கார்டர், இரண்டாமவர் பிசினஸ் பில்லியனரான எட்வர்ட் கோல். முதல் சந்திப்பிலேயே எட்வர்டுக்கு கார்டரை பிடிக்கவில்லை.

ஒரு சாமானியன், என் படுக்கைக்கு அருகிலேயா என்ற மனப்பான்மையோடு அவரை வெறுக்க தொடங்குகிறார். ஆனால் எவ்வளவு நேரம்தான் ஒரு அறையில் வெறுப்போடு இருக்க முடியும். மெல்ல, மெல்ல கார்டடோடு பழகத் தொடங்கும் எட்வர்ட், சிலநாட்களில் அவருடைய தோழமையை உணருகிறார்.


அப்படி கடக்கும் காலங்களில்தான், இருவருக்கும், இடிபோல ஒரு செய்தி வருகிறது. நுரையீரல் புற்றுநோய் அவர்களை அழித்துக் கொண்டிருக்கிறது, இன்னும் 6 மாதங்கள் தாங்குவது கடினம் என்று. உடைந்து போகிறார்கள். குறிப்பாக கார்டர். மிக புத்திசாலியான கார்டர், தன் வாழ்க்கையில் செய்யவேண்டிய அல்லது அடையவேண்டிய லட்சியங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டு அதை எழுதியும் வைத்திருக்கிறார். இருப்பது 6 மாதங்கள் என்று தெரிந்த பின்பு, ஆற்ற மாட்டாமல், அந்த காகிதத்தை கசக்கி எறிகிறார்.

அதை, எதேச்சையாக பார்த்த எட்வர்ட், தன் நண்பனுக்காக ஒரு காரியத்தை செய்ய துணிகிறார். அவரிடம் கோடிக்கணக்கான பணம் இருக்கிறது. ஆனால் இறந்தபின்பு அதனால் யாருக்கு பலன். இருக்கப்போகும் 6 மாதங்களிலாவது, இந்த வாழ்க்கையை அனுபவிப்பது என்று முடிவெடிக்கிறார்கள். கார்டாரின் லிஸ்டில் உள்ள எல்லா இடங்களுக்கு சென்று, அவற்றை அனுபவிப்பது என்று முடிவு செய்கிறார்கள்.

முதலாவது ஸ்கை டைவிங்க், பிரான்சில் டின்னர், பிரமிடில் வாக்கிங்க், ஆப்பிரிக்காவில் சவாரி, பிடித்த காரில் ரேஸ், சீனப்பெருஞ்சுவரில் சைக்கிள் பயணம், தாஜ்மகாலில் ஒரு நடை, எவரெஸ்ட்டில் மலையேற்றம் என்று ஒவ்வொரு இடத்திலும் குழந்தை போல் குதூகலிக்கிறார்கள், இன்னும் 6 மாதங்களில் சாகப்போகிறோம் என்பதை மறந்து.

எட்வர்ட் ஒரு பெண்பிரியர், ஆனால் கார்டரோ அவருக்கு நேர் எதிர், மனைவியைத் தவிர யாரையும் தொட்டதில்லை. அதனால் எட்வர்ட் நண்பனுக்காக ஒரு விபச்சார பெண்ணை அறிமுகம் செய்கிறார். அதை மறுத்த கார்டர், தன் மனைவி மேல் உள்ள பாசத்தை பற்றி சொல்ல எட்வர்ட், தன் நண்பன் இனிவரும் காலங்களில் மனைவியோடுதான் இருக்கவேண்டும் என்று உணர்ந்து அவரை வீட்டிற்கு அனுப்பிவைக்கிறார்.

இருவரும் திரும்ப அமெரிக்காவில் அவரவர் வீட்டிற்கு செல்ல, கார்டர் வீட்டில் நிறைய சந்தோசம்..ஒரு சந்தோசமான இரவில் கார்டர்..அப்படியே விழுகிறார்..

இதற்குமேல் படத்தை பார்த்து பயணியுங்கள். கார்டராக நடித்த மோர்கன் ப்ரீமேன் என்று ஒரு நடிகர் நடித்திருக்கிறார் பாருங்கள்..இதுவல்லவா நடிப்பு..தன் நண்பனின் பாசத்தை உணருவதாக ஆகட்டும், தன் குடும்பம் தன்னை கண்டுகொள்ளவில்லை, என்று குமுறுவதாக இருக்கட்டும், விபச்சார பெண்ணை அறிமுகம் செய்யும் நண்பனை கிண்டல் செய்வதாக இருக்கட்டும்..நீ நடிகன்யா..

அவருக்கும் சளைக்காமல், ஒரு நடிகர். எட்வர்ட் கோல் ஆக நடித்திருக்கும் ஜாக் நிக்கல்சன். என்ன ஒரு அலட்டலான் நடிப்பு..வலி தாங்கமுடியாமல் அவர் துடிக்கும்போது, சத்தியமாக அழுதுவிட்டேன். நண்பனின் தவிப்பு அறிந்து ஒவ்வொரு முறையும் ஆறுதல் சொல்லும்போது, இப்படி ஒரு நண்பன் இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒவ்வொருவரையும் ஏங்கவைக்கிறார்..

படத்தோடு வாழவைப்பதே, இந்த பட இயக்குநருக்கு வெற்றி. இரண்டு கதாபாத்திரங்களும் அழும்போது, நாமும் அழுகிறோம், சிரிக்கும்போது நாமும் சிரிக்கிறோம். குழந்தைகளாகும்போது நாமும் குழந்தைகளாகிறோம். அந்த கிளைமாக்சில் கண்ணீர்விடுகிறோம்.

படம் முடிந்தவுடன், உங்கள் கண்களில் எட்டிப்பார்க்கும் ஒரு துளி கண்ணிரே, இந்த படத்தின் வெற்றிக்கு சாட்சி…நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக பாருங்கள்.

11 comments:

ராம்ஜி_யாஹூ said...
This comment has been removed by the author.
ஜீவன்சிவம் said...

படம் எப்படியோ தெரியவில்லை. உங்களின் விமர்சனம் அருமை. உங்களின் விமர்சனதிற்க்காகவே படம் பார்க்க தோன்றுகிறது..படம் பார்த்துவிட்டு வருகிறேன்.

ramalingam said...

பக்கெட் லிஸ்ட்டை விட முதலில் போட்ட அண்டா லிஸ்ட் அருமையாக இருந்தது.

ramalingam said...
This comment has been removed by the author.
Unknown said...

Check the movie called "Putham Puthu Payanam". This is by K.S.Ravikumar in early 90s. Pretty much same story but 4 youngsters who have cancer and about to die. You would see some familiar faces but popular now.

Philosophy Prabhakaran said...

பின்னர் நெகிழ்ச்சியாக சென்றாலும் ஆரம்பித்தில் உங்கள் நகைச்சுவை உணர்வையே அதிகம் ரசித்தேன்...

Philosophy Prabhakaran said...

// நான் கடைசியாக அழுதது, வீராச்சாமி பட கிளைமாக்ஸ் பார்த்து. டயலாக் பேசிக்கொண்டு உலக நடிகர் டி.ஆர் மற்றும் தமிழக மர்லின் மன்றோ மும்தாஜ் செத்து விடுவார்கள். அப்போதுதான் அடக்கமாட்டாமல் கண்ணீர் விட்டேன். ஆனால் சோகக்கண்ணீர் இல்லை. நகைச்சுவை தாங்கமாட்டாமல் விழுந்து விழுந்து சிரித்ததால் வந்த ஆனந்த கண்ணீர். //

நீங்க சாம் ஆண்டர்சனின் யாருக்கு யாரோ ஸ்டெப்னி பாருங்க... அருமையான படம்...

taaru said...

ஆகா.... இவுங்க ரெண்டு பேரும் நடிச்ச / வாழ்ந்த படமா... கண்டிப்பா பாத்துடலாம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இன்னைக்கே பார்த்திர வேண்டியது தான்...

அவிய்ங்க ராசா said...

நன்றி

ராம்ஜி, ஜீவன், ராமலிங்கம்,சாட், பிரபாகர், தாரு, வெறும்பய

டக்கால்டி said...

படம் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்

Post a Comment