Thursday, 13 January 2011

வர்றீயா…(18+)

“வர்றீயா…”

இந்த வார்த்தையைக் கேட்டபோது பொத்துக்கொண்டு வந்தது. ஏதோ, தீயை அள்ளி ஊற்றியதுமாதிரி..

“இந்தா..எதுன்னாலும் கூப்பிடு..ஆனா, வர்றீயான்னு மட்டும் சொல்லாதே..”

“அடியே சரசு..உன்னை மாதிரி ஆளுங்களையெல்லாம் வர்றீயான்னு கூப்பிடாம, “வருகவே, வருகவே” ன்னு அரசவைத் தமிழ்ல்லயா கூப்பிடிவாயிங்க..பெரிய பிகு பண்ணிக்குறா..வாடி..”

“ஆமாண்டா..நான் உடம்பைத்தான் விக்குறேன்..ஆனா, மனசை இல்லடா..எங்களுக்கும் மனசுன்னு..”

“ப்ச்..இந்தா பிலிம் டயலாக்கெல்லாம் பேசாத..வர்றீயா..வரமாட்டியா..வரலைன்னா வேற கிராக்கியா இல்ல..”

வயிறு பசித்தது. மனசு வேண்டாம் என்றாலும், பாழாய்ப்போன இந்த வயிறு விடவில்லை..

“சரி..வந்து தொலை..ஆனா காசு கைக்கு மேல வந்துடணும்..அதுக்கப்பறம் ஏதாவது சால்ஜாப்பு சொன்ன..நான் பொல்லாதவ ஆயிடுவேன்..”

மானுக்கு பின்னால், மண்டியிட்டு வரும் புலி மாதிரி பின்னால் வந்தான். அப்போதுதான் தெருவோரம். பையனுக்கு ஒரு 22 வயது இருக்கும். கண்டிப்பாக கல்லூரியில் படிக்கும் வயதுதான். தெருவோரம் நின்று கொண்டு என்னையே பார்த்து கொண்டிருந்தான்.

“அடியே .எங்கூட வரும்போது அங்கிட்டு எவனைப் பார்க்குற..”

“ச்சீ..பொச கெட்டவனே..அந்த புள்ளைய பார்த்தா, சின்ன பையனா தெரியுறான். தம்பி வயசு இருக்கும்யா..நாக்கு அழுகிபோயிடும்..”

“எங்க நானும் பார்க்குறேன்.. யாரு அப்படி ஒரு இளவரசன்..”

பார்த்தவன் தீயை மிதித்தாற்போல கத்தினான்..

“அடியே..வா..வா..வேற இடத்துக்கு போயிரலாம்..அவன் இங்கேயும் வந்துட்டான்..பார்த்தான் காசு கேட்பான்..”

“ஏ..இரு.யாரு அவன்..உண்மையை சொல்லு..”

“அது..அது..வந்து..என் அண்ணம் பையந்தான்..அண்ணன்தான் குடிகாரனாயிட்டான்..குடும்பத்தை பார்க்குறது இல்ல..எப்ப பார்த்தாலும் டாஸ்மார்க்தான்…அதுதான் அவன் குடும்பத்தை..நாந்தான்..”

“அப்படின்னா..”

“ப்ச்..உனக்கு விலாவரியா சொல்லணுமாக்கும்..பச்சையா சொல்லுறேண்டி..நாந்தான் வைச்சிருக்கேன்..அப்ப அப்ப போவேன்..அதுக்கு பிடிச்ச வினைதான், இது..எப்ப பார்த்தாலும் காசு, காசுன்னு..அப்படி என்னதான் மெடிக்கல் காலேஜூல படிக்கிறாயிங்களோ..3 மாசம் ஆனா செமஸ்டர் பீசாம்..நம்மளால கட்ட முடியாதுப்பா..இதோ, இப்பகூட அதுக்குதான் வந்து நிக்குறான்..ஆளை விடுங்கடா சாமி..”

“பாவி மனுசா..நீதான் இப்படி சீரழிஞ்சு போயிட்ட..அதுவாவது நல்லா படிக்கட்டுமேயா..எங்கிட்ட கொடுக்குற காச, பாவம் படிக்குற அந்த பிள்ளைக்கு கொடுத்த புண்ணியமாவது கிடைக்குமில்ல..”

“போடி..பெரிய புண்ணியவதி..அட்வைஸ் சொல்லுற..இப்ப வரப்போறியா இல்லையா..”

இழுத்து அருகிலிருக்கும் அறைக்குள் நுழைந்தான். மிருகம் போல் படர்ந்தான்..

“யோவ்..”

“ப்ச்..இப்ப என்னா..”

“பாவம்யா..அந்த புள்ள..படிக்கட்டும்யா..எனக்கு கொடுக்குற காசை அங்க கொடுத்துருயா..”

“இந்தா..நீ எதுக்கு இம்புட்டு பிரயாசைப்படுற..அவன் என்ன உன் தம்பியா..”

ஏனோ, இந்த வார்த்தை என்னை ஏதோ செய்தது..என் தம்பி ஞாபகத்துக்கு வந்தான். அவனைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும்போது, எனக்கு 10 வயது இருக்கும்..

“பசிக்குதுக்கா..” என்ற சொல்லை என்னால் தாங்க முடியவில்லை. ஓடினேன், ஓடினேன், பல இடங்களுக்கு..வீட்டுவேலை செய்ய..வயசுக்கு வந்தபோது, ஒருவரும் வீட்டுவேலை செய்யவிடவில்லை. அக்கறையாய் மனைவி அடுப்பாங்கறையில் காபி போட்டு கொண்டிருக்க, விலகியிருக்கும் என் முந்தானையிலேயே அவர்கள் கண்கள் நிலை கொண்டிருந்தது. த்த்தூ…அரிப்பெடுத்த ஜென்மங்கள்..அப்படி என்னதான், இந்த சதையில் இருக்கிறதென்று தெரியவில்லை, அம்மாவிடம், தங்கையிடமும் இல்லாதது..

“சரசு,,பொண்டாட்டி..ஊருக்குப்போறா..வந்துரு..”

கூச்சமில்லாமல் கேட்டார்கள். செருப்பை எடுத்து அடிக்கலாம் போல் இருந்தது. அடித்து, செருப்பு பிய்ந்துபோனால் கூட காசுக்கு அவர்கள் முன்னால்தானே நிற்கவேண்டும்..படுக்கையில் ஒருவனும் மனிதனாய் இல்லை. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன்..அந்த ஒரு வார்த்தையைக் கேட்பதற்கு

“அக்கா..நான் டாக்டராயிட்டேன்..”..

ஆமாம், படுக்கையில் எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை, இந்த ஒரு வார்த்தையைத் தவிர..எப்படியாவது தம்பியை டாக்டராக்கிவிடவேண்டும்..

அவனும் டாக்டரானான்..சந்தோசமானேன்..இந்த நரக வாழ்க்கையிலிருந்து விடுதலை..இனி தம்பி பார்த்துக் கொள்வான்..ஆசையாய் அவனை ஓடிப்போய் கட்டிக் கொண்டேன்..

“தம்பி..பாசாயிட்டயாம்ல..ரொம்ப சந்தோசம்டா..”

“தள்ளிப்போ..எவங்கூட படுத்துட்டு வர்ற,.”

அப்படியே தள்ளிப்போனேன்..இதற்கு மேல் வாழவிரும்பவில்லை. யாருக்காக வாழவேண்டும். தற்கொலைக்கு நிறைய முறை முயற்சி செய்தும், எமன் கூட கருணை காட்டவில்லை. ஒருவேளை எமனுக்கும் ஏதாவது ஆசை இருக்குமோ..

பழைய ஞாபகங்கள் என்னை அழுத்த அப்படியே தூங்கிப்போனேன்..எழுந்து பார்த்தால், கூட இருந்தவனை காணவில்லை. டேபிளின் மேல் காசுவைத்திருந்தான். ஆயிரம் ரூபாய்..அனைத்தும் அழுக்கு படிந்திருந்தன..என்னைப்போல…பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்..

இன்னுமும் அந்தப்பையன் நின்றிருந்தான்..அப்படியே என் தம்பியைப் பார்ப்பது போல இருந்தது..சட்டென்று முடிவெடுத்தேன்..அந்த காசை அப்படியே அவனிடம் கொடுத்துவிடுவதென்று..அவனுக்காவது உதவட்டுமே. அவசரம், அவசரமாக என்னிடம் ஓடிவந்தான்..என் தம்பியைப் போலவே..

“வாப்பா..”

“சித்தப்பா..போயிட்டாரா..”

“ம்ம்...எல்லாம் சொன்னாரு..என்ன செமஸ்டர் பீசு கட்டணுமா..இந்தா..”

ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அப்படியே அவன் கையில் திணித்தேன்..மிரண்டான்..பின்வாங்கினான்..

“ப்ச்..இல்ல வேண்டாம்.."

“வாங்கிக்க..சொன்ன கேளு..”

“வேண்டாம்…”

"அப்ப என்னதான் வேணும்..”

கண்களில் ஒரு பயம் தெரிந்தது..சுற்றும் முற்றும் பார்த்தவன், கேட்டான்..

“வர்றீயா..”

21 comments:

சேலம் தேவா said...

யதார்த்தத்தின் வலி..!! சூப்பர்ண்ணே..!! இதுபோல் சிறுகதைகள் எழுதி மேலும் புகழ் பெற வாழ்த்துகள்..!! அதோட பொங்கல் வாழ்த்துகளும்..!! :-))

Anonymous said...

super innum ethirparkirom.unmaille nalla pathivo

Pradeep said...

antha naal ghabagam vanthathu nanbanae... nanbanae...

Anonymous said...

Hi , really the story is and touching the heart.
the last word in the story is superbb..
keep it up.
this is bala from muscat
emali id is rgbcool@gmail.com
Happy pongal too..

Mano said...

Awesome story.. really touching... All the best.

vasu balaji said...

செம ராசா:(

Jaaffer Sadiq said...

Rasa anne...pathivu supperb.. adi pinniteenga ...

க ரா said...

ராசா என்ன இது... சந்தோசமா எதுனாச்சும் படிக்கலான்னு வந்தா.. மனுசா (: ஏன் இப்படி

tamilan said...

உனக்கு இப்போது ஒரு தேவடியாள் வேண்டுமா? குடும்பஸ்திரீ வேண்டுமா? அதாவது இந்த லோகத்தில் நீ விரும்பிய பெண்கள் அல்லது அந்த லோகத்தில் நீ விரும்புகிற பெண்கள் யார் வேண்டும் உனக்கு..? எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம்.

CLICK TO READ - உடலுறவுக்கு தட்டுபாடில்லாத சுவர்க்கம். இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 89.

....

ரஹீம் கஸ்ஸாலி said...

அருமையான கதைன்னே....வர்றீயா-வில் ஆரம்பித்து வர்றீயா-வில் முடிந்த வர்றீயா கதை அருமை

Raju said...

enna saar kathai ithu? mind thoughts?

டக்கால்டி said...

இறுதி முடிவு பஞ்ச்!!!

அவிய்ங்க ராசா said...

நன்றி தேவா, அனானி, பிரதீப், பாலா, வானம்பாடிகள், மனோ, ராஜூ, வெறும்பய, டகால்டி, ராமசாமி, ஜாபர்,தமிழன், ரஹீம்..

Anonymous said...

superp... keep it up

ஜெய்லானி said...

மனசை தொட்ட கதை :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான கதை சார்....!

Anonymous said...

anne ungalukku annan erukangala?!?!?!?! ........ kluck (siripu).

Ththu..... (Thu nnu sonnen)

பிரபாகரன் said...

"""ஒருவேளை எமனுக்கும் ஏதாவது ஆசை இருக்குமோ.."""

Super!

taaru said...

கதை OK type.ஒரே மாதிரி எழுதுராப்போல தோணுது.... வேற மாதிரி முயலவும் அண்ணே...!!! [கோவிச்சுபபியா?]

காவலன் விமர்சனம் வேணும் , எழுதுவியாண்ணே?!!!

இளைய கவி said...

! சூப்பர்ண்ணே..

டக்கால்டி said...

தல நீங்க என் நண்பன் அருணோட நண்பர்னு தொலைப்பேசினான். விவரம் அறிந்ததில் மகிழ்ச்சி...

Post a Comment