Thursday, 31 May, 2012

போயிட்டு வர்றேங்கபிளாக்கர், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள், சமூக பிரச்சனையை முன்நிறுத்துகிறதோ இல்லையோ, தனிமனிதனின், விருப்பு, வெறுப்புகளை, பதிவு செய்வதில், முண்ணனியில் இருக்கிறது..உதாராணமாக,ஒருவன் காலையில் எழுந்து ஒன்னுக்கு போவதை கூட , பேஸ்புக் ஸ்டேட்டஸில் "இன்று ஒன்னுக்கு போனேன்"
என்று எழுதமுடிகிறது..யாராவது கேள்விகேட்டால், "அடிங்க..என்னோட ஸ்டேட்டசுடா..நான் என்ன வேணுனாலும்
எழுதுவேன்.." என்று பதிலளிக்க சுதந்திரம் கிடைக்கிறது..


பிளாக்ஸ்பாட் இருந்தால், இன்னும் சவுகரிய்ம். ரொம்ப இன்னோவேட்டிவாக, "காலை கதிரவன் தன் செங்கதிர்களை வீசிக்கொண்டிருந்தவேளையில், கண்முழித்தேன்..மற்றும் ஒன்னுக்கு போனென்.." என்று எழுதினால்
"நல்ல பதிவு..", "தொடருங்கள்..", "கண்கலங்கவைத்துவிட்டிர்கள்" என்று கமெண்டு கிடைக்கும், இல்லையென்றால் நீங்களே கமெண்ட் போட்டு கொள்ளலாம். அதற்கு "நான் போன ஒன்னுக்கு" என்று கேட்சியாக தலைப்பு வைத்து விட்டால், கண்டிப்பாக ஒன்னுக்கு சூடாக இருக்கிறதோ இல்லையோ, உங்கள் பதிவு, சூடான பதிவுகளில்
இடம் பெற வாய்ப்பு உண்டு..


ஆனாலும், இதில் ஒரு சவுகர்யம் உண்டு.".ஊருக்கு வர்றேண்டி", என்று எழுதிய அதே வேளையில் "ஊருக்கு
போறேண்டி" என்று பதிவு எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது. சந்தோசம்..


இங்கு வந்து 3 வாரங்கள் ஆகிறது. ஒவ்வொரு வாரமும், வித்தியாசமான அனுபவங்கள். வந்த முதல் வாரத்தில் "ஓ..வாட் எ வெதர்..ஆல் பொல்யூசன்..கரெப்சன்..ட்ராஷ்.." என்று பந்தா காட்டினாலு, ஒருபயலும் கண்டுக்காததால், "சரி..சோத்தைப் போடுங்க..அப்படியே பொரியலை சைடுல வைச்சி, அப்பளத்தை, ஒரு அடி அடிக்கணும்" என்று நம்மூர் பாசத்தைக் காட்டும்போதுதான் "அட, பன்னாடை ராசா..இதுதான் நிரந்தரம்' என்று எண்ண வைக்கிறது. ஆனாலும், இந்த மூன்று வாரங்கள், என் வாழ்க்கையில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த எண்ணி தோற்று போயிருக்கிறது. நிறைய நண்பர்களை பார்க்க சந்தர்ப்பம்..பேச சந்தர்ப்பம்..பழக சந்தர்ப்பம்.,
என்று மூன்று வாரங்கள் போனதே தெரியவில்லை..ஏர்போட்டில் நான் வரும்போது, ஆரவாரமாக வரவேற்ற சொந்த பந்தங்கள்..இன்னும் அதே ஆராவரத்தோடு, ஆனால், உள்ளத்தில் சோகத்தோடு
வழியனுப்புகின்றன..சொந்த பந்தங்கள், பற்றி ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், ஏதாவது ஒன்றென்றால் துடிதுடித்து போய்விடுகிறார்கள்..எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்...


"4 பேனை போட்டால் கூட அடிச்சு தூள் கிளப்பும் வெயில்.."

"மோரை கொஞ்சம் டம்ளருல ஊத்தி அடிங்கப்பா" என்று பாசத்தோடு கூடிய வார்த்தைகள்

"பாரின் செண்டு வாங்கிட்டு வந்திருக்கீகளா" என்ற உரிமையுடன் கூறும் பக்கத்துவீட்டு நண்பன்

"ஆசையோடு என்னுடனே ஒட்டிக்கொண்ட பல்சர்..."

"இப்ப கிளம்பிருவோம் சார்" என்று 2 மணிநேரம் நின்ன இடத்திலேயே ஓட்டிய சென்னை-மதுரை ஆம்னி பஸ் டிரைவர்

"சார்..எந்த ஊரு" என்று ஆழம்பார்க்கும் கால்டாக்சி டிரைவர்

"பார்த்து போட்டுக்கொடு சாரே" என்று மீட்டருக்கு மேல் 50 ரூபாய் கேட்கும் ஆட்டோக்காரர்

"ஜஸ்ட் 80 ரூபிஸ் ஒன்லி" என்று சிரிக்காமல் வெஜ்பப்ஸூக்கு கேட்ட :சத்யம் சினிமாஸ் கேண்டின்காரர்

எப்போதும் கூலாகவே இருக்கும் மதுரை ஜிகர்தண்டா..

"பாருங்க மாமா..இவன் கிள்ளி கிள்ளி வைக்கிறான்.." போலிக்கோபம் காட்டும் சிறுமியான அக்கா மகள்..

முதன்முறையாக வயித்தை கலக்கிய "போவண்டோ" குளிர்பானம்..

பகுமானத்துக்கு கடித்த சென்னை கே.எப்.சி சிக்கன் பர்கர்..

"சாவுங்கடா" என்று சிம்பாளிக்காக சொல்லும், 10 மணிநேர பவர்கட்..

"பக்கத்துகடை அல்வா போலியானது..ஏமாந்துவிடாதிர்கள்..ஒரிஜினல் லாலா கடை அல்வா" என்று எழுதப்பட்ட திருநெல்வேலி பஸ்ஸடாண்ட் கடைப்பலகை..

"காலை 6 மணிக்கு கூட கிடைக்கும் சோழவந்தான் முக்குகடை டீ..வடை.."

"சில்லரைய குடுங்க சார்..." சில்லரையைப் பையைக் குலுக்கிகொண்டே சலித்துகொள்ளும் நடத்துனர்.
.
"அந்தக்காலத்துல நேதாஜி ராணுவத்துல" என்று ஆரம்பிக்கும் பக்கத்து வீட்டுப் பெரியவர்


கடைசியாக

"இன்னும் ஒரு நாள்தானப்பா" என்று கண்ணீரை காட்டமால் மனதுக்குள் அழும் அம்மா..

என்று எல்லாவற்றையும் மிஸ் பண்ணிவிட்டு கிளம்பும்போது, ஏதோ, இதயத்தில் இருந்து, எதையோ உருவிக்கொண்டு போவது போல் இருக்கிறது. குறிப்பாக சில நண்பர்களுக்கு நான் கொடுத்த, சங்கடங்கள், குழப்பங்கள் எல்லாவற்றுக்கு "சாரி" என்ற ஒருவாரத்தை போதாது..ஏனென்றால் சிலவார்த்தைகளை நிமிடத்தில் சொல்லிவிடலாம்..
"சாரி..தேங்க்யூ" போன்றது போல..ஆனால், அவற்றுக்கு காரணமான காரியங்கள் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு, ஆயிரம்முறை "சாரி" க்கள் சொன்னாலும் போதாது.. ஆனால் என்னால் முடிந்தது, இந்த "சாரி" மட்டும்தான்...
நண்பர்களை திரும்பவும் என்னால் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை.. ஆனால் உங்களோடு இருந்த
இந்த மூன்றுவாரங்களும், வாழ்நாளில், இன்னமும் என் மனதுக்குள்ளே பசுமையாய்...


"போயிட்டு வர்றேங்க..."

2 comments:

bandhu said...

எவ்வளவு தடவை போனாலும் அங்கே இறங்கும்போது இருக்கும் சிலிர்ப்பும் திரும்ப ஏறும்போது இருக்கும் சலிப்பும் மாறுவதே இல்லை!

Anonymous said...

எல்லாத்தையும் இழந்து விட்டு வெளிநாட்டில் வாழ்பவர்கள், ஏன் போதுமான (!!) பணம் சேர்ந்த பிறகும், தாய்நாட்டுக்கு வர மறுக்கிறார்கள்? பாசத்தை பணம் சரிகட்டி விடுகிறதா?

Post a Comment