
“நீங்க ஏங்க அந்த இடத்துக்கு போனீங்க..”
“ப்ச்..சரி..விடு..தெரியாம பேசிட்டான்..”
“தெரியாம பேசுனா, என்ன வேணுன்னாலும் பேசிறதா..ஒரு முறை வேணாம்..”
“உங்கிட்ட சொன்னது தப்பா போச்சு..இதுதான் எதையும் உங்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லுறது..”
“என்ன இருந்தாலும்..”
“விடுன்னா, விட்டுடணும்..” முதன்முதலாக மனைவியிடம் கத்தினேன்..அடங்க மாட்டாமல் சமையலறை சென்றாள். இன்னும் அவள் கோபம் தணியவில்லை..அவள் கோபத்தின் பிரதிபலிப்பு சமையல் பாத்திரங்களின் சத்ததில் தெரிந்தது..அமைதியாக அறைக்கு சென்றேன்..என் அறை என்றும் நிசப்தமாக இருக்கும். அவ்வப்போது ஒலிக்கும் கடிகார ஓசையைத் தவிர. அந்த அமைதியான சூழ்நிலையிலும் அமைதி இல்லாமல் தவித்தது என் மனம்…
“ராகவ்..”
என் மனத்திற்கு மிகவும் பிடித்த பெயர்..ஐந்து வருடத்திற்கு முன்பாக சந்தித்திருப்பேன்…பழகிய சிலநிமிடங்களில் ஒட்டிக்கொண்டான், ஏதோ பலவருடங்கள் பழகிய மாதிரி..
“டே..குருவி வீட்டு முன்னாடி கூடு கட்டிருக்குடா..” என்று உலக அதிசயமாக சொல்லுவான்..பேசுவதற்கு எதுவும் காரணம் வேண்டுமே..அதையும் ரசிப்பேன். எங்கள் வீட்டில் நடக்கும் எந்த ஒரு விஷேசத்திற்கும், முன்னிருந்து வேலை செய்வான். அம்மா, அப்பாவும் என்னைப் பற்றி எதுவும் கேட்பதனால், முதலில் ராகவிடம் தான் கேட்பார்கள்..”அம்மா..நான் பார்த்துக்குறேன் அவனை..நீங்க கவலைப்படாம இருங்க” என்று அவன் அளிக்கும் உறுதி, அம்மாவுக்கு நிம்மதியை தந்தது. என்னை சிறுபிள்ளையாக்கிய வாக்கியமாக இருந்தாலும், நட்பிற்காக அதனை ரசித்தேன்..
ஒரு கட்டத்தில், என் குடும்பத்தில் ஒருவனாகிப் போனான், ரேஷன் கார்டில் பேர் போடலாமா என்று கூட யோசித்தது உண்டு. என் திருமணத்திற்கு வந்தவர்கள் கேட்ட முதல் கேள்வி..”என்னப்பா உனக்கு தம்பி ஒருத்தன் இருக்கானா..சொல்லவே இல்லையே..”. அவர்களிடம் பெருமையாக சொன்னேன்..”என் நண்பன்..”
அந்தப் பெருமையெல்லாம், நேற்று வரைதான். எல்லாம் சுக்குநூறாகிப்போனது என் மனம் போலவே..
”தண்ணியடிக்கலாமாடா”.
நேற்று அவன் கேட்ட இந்த வார்த்தை புதிதாய் இருந்தது. தண்ணி அடிப்பான் என்ற விஷயமே எனக்கு நேற்றுதான் தெரிந்தது..
“டே ராகவ்..தண்ணியடிப்பியா..சொல்லவே இல்லை..”
“இல்லைடா..அப்பப்ப..நான் என்ன மொடாகுடிகாரனா..என்னைக்காவது ஒருநாள் குடிச்சா தப்பில்லைடா..”
“ம்..சரி..வேறு ஏதாவது பண்ணலாம்..மூவி..கிரிக்கெட்..”
“ப்ச்..வேணாண்டா..ஏதோ மனசுக்கு சந்தோசமா இருக்குடா..தண்ணியடிச்சா நல்லா இருக்கும்போல தோணுது..”
ஒத்துக்கொண்டேன்..நான் தண்ணியடிக்காவிடிலும், அவன் கூட இருந்தால், சந்தோசப்படுவான் என்ற ஒரே காரணத்திற்காக..
இருவரும் பார் சென்றோம்..
“நீ அடிப்பியா..”
“இல்லைடா ராக்வ்..நீ அடி..நான் பெப்சி எடுத்துக்குறேன்..”
மெது, மெதுவாக ஆரம்பித்தோம்..அவன் ஸ்டைலாக கோப்பையை சிப் செய்தபோது, எனக்கு வியப்பாக இருந்தது.
“இவ்வளவு நாளு, நீ குடிப்பேன்னு எனக்கு தெரியாதுடா ராகவ்..”
“ஹா..ஹா..இத மைக் போட்டு சொல்லிக்கிட்டா இருப்பாங்க..அப்பப அடிக்குறதுதான்..ஒன்னு தெரியுமா..டெய்லி குடிச்சாத்தான் தப்பு..இதுமாதிரி, அக்கேசனலா குடிச்சா ஒன்னும் ஆகாது….”
இரண்டாவது ரவுண்டு உள்ளே போனபோது அவனுக்கு கண்கள் கொஞ்சம் சிவப்பாக மாறியது..மெல்லியதாக உளற ஆரம்பித்தான்..
“நண்பா..டே..இப்ப…எதுக்கு குடிக்குறோம்..மனசுல உள்ள எல்லாத்தையும் மறக்குறது..”
“இப்ப என்ன நடந்துச்சுன்னு மறைக்குறதுக்கு குடிக்கிற..”
“ப்ச்..எவ்வளவோ இருக்கு..நான் காதலிச்சேன் தெரியுமா..அது உனக்கு தெரியுமா..”
எனக்கு ஆச்சரியம்..குடிபோதையில் ஏதோ பேசுகிறான் என்று டாபிக் மாற்றினேன்..இன்னொரு ரவுண்ட் சென்றான்..
“சரி..விடு..நேற்று, ஷாப்பிங்க் போறப்ப..”
“டே..இரு..பேச்ச மாத்தாத..நான் சொல்லுறத கேக்காத நீ என்னடா புடுங்கி நண்பன்..”
முதன்முதலாக அந்த வார்த்தையை அவன் வாயிலிருந்து கேட்கிறேன். சரி..அவன் அவனாக இல்லை என்று தெரிந்தது. பேசியது அவன் இல்லை..போதை..சரி கிளம்புவது நல்லது என்று அவனை கிளப்ப முயற்சித்தேன்..
“சரி..ராகவ்..போகலாம்..”
“டே..வெண்ணை..பேசுறோம்ல..அது என்ன மருவாதை இல்லாம உக்காருடா..”
அதட்டினான்..நிதானத்தின் எல்லை கடந்ததாக எனக்கு தோன்றியது. அவன் போக்கிலே செல்லலாம் என்று நினைத்தேன்..
“சரி..ராகவ்..உனக்கு என்ன பிரச்சனை..”
“அவ…..யாருடா..அவ..என் காதல்டா..அவ..கி…ட்ட..இன்னும் என் காதலை…சொ…ல்..ல..ல..டா..…” குழறினான்.
“டே..ராகவ்..விடு..யாரை அப்படி நீ லவ் பண்ணுன…”
“ப்ச்..சொன்னா நீ மனசு சங்கடப்படுவ…”
“மாட்டேன்..சொல்லு…”
“வே…ணா….ண்…டா..”
“சொல்லுடா..”
தலையை முற்றிலுமாக கவிழ்த்துக்கொண்டான்..மெதுவாக அந்த வார்த்தையை முழுங்கி சொன்னான்…
“உன் தங்கச்சி தாண்டா..”
சம்மட்டியால் அப்படியே தலையில் போட்டமாதிரி இருந்தது. அவனை அண்ணன், அண்ணன் என்றுதான் கூப்பிடுவாள்..அவன் வீட்டுக்கு வந்தாள் கூட “எங்கண்ணன், வந்துட்டான்..” என்று கத்திக்கொண்டு வாசல் செல்வாள்.. ஏதாவது சண்டை வந்தல் கூட, “நீ போ..ராகவ்தான் என் அண்ணே..நீ வேற யாரோ..” என்று அவன் கரம்பற்றி கொள்வாள்..அவளைப்போய்…
“டே..ராகவ்..அவ உனக்கு தங்கச்சிடா..அவளைப்போய்….இன்னமும் உன்னை அண்ணனாத் தாண்டா நினைச்சுக்கிட்டு இருக்கா..எப்படிடா உனக்கு இப்படி நினைக்கத் தோணுச்சு..”
“டே.வெண்ணை..ஊருல உள்ள எல்லா பிகரும் எனக்கு தங்கச்சின்னா நான் எங்க போறது..நான் அவளை லவ் பண்ணுறேன்..அவகிட்ட சொல்லுவேன் என் காதலை..நீ என்ன புடுங்க முடியும்..”
“டே..நீ நிதானத்துல இல்லை..வார்த்தை மீறுது.” .எச்சரித்தேன்..
அவன் கண்கள் கோபத்தால் மேலும் சிவந்தது.. என்னை நிமிர்ந்து பார்த்து, அப்போதுதான் அந்த வார்த்தையை சொன்னான்..
“மவனே..அவளை தூக்குறேன்..தூக்கிட்டு வந்து…..*******”
எந்த அண்ணனும் தன் தங்கச்சியைப் பற்றி கேட்கக்கூடாத வார்த்தை..அப்படியே அவன் கழுத்தைப் பிடித்தேன்..அங்கேயே அவனை கொன்றுவிடலாம என்று தோண்றியது..இதுவரை பாசமாக அவன் கழுத்தைப் பிடித்த என் கைகள், இதோ, இன்று வெறியாய்…இருக்கிற கோபத்தில், அவன் முகத்தில் தூ என்று உமிழ்ந்து அவசரமாக கிளம்பி, விடு சென்று..இதோ, என் தனியறையில்..
போதைதான், ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது. இதுவரை காட்டிய அன்பு, நம்பிக்கை, பாசம், நட்பு எல்லாம். ஒரே நிமிடத்தில் தூளாகிப் போனதேன்..
“ராகவ்தான் எங்களுக்கு ரெண்டாவது பையன்” என்ற அம்மாவின் அன்பு,
“ராகவ் அண்ணா..வர்றப்ப எனக்கு சாக்லேட்..ஓகேயா” என்ற தங்கச்சியின் பாசம்..
“இவருகிட்ட கொஞ்சம் புத்தி சொல்லுங்க ராகவ்” என்ற மனைவியின் நம்பிக்கையும்..
“என்னடா ராகவ்..நீ என் நண்பண்டா..” என்ற நட்பும்..ஒரு நிமிடத்தில் தூளாகிப்போனது..செல்பேசி அழைக்கவே, எடுத்தேன்..ராகவ் தான்..
“டே..சாரிடா..டே..மாப்பிள்ளை..மன்னிச்சுருடா..நேத்து நான் நிதானத்தில் இல்லை…சாரிடா..என்ன பேசுனேன்னு தெரியலை..போதை ஏறிருச்சுடா..அந்த பாழாப்போன சரக்கு..மண்டையில ஏறி..டே….டே..இருக்கியா..டே..இருக்கியா…”
முதன்முறையாக அவன் குரலைக் கேட்க எனக்கு பிடிக்கவில்லை…செல்பேசியை துண்டித்தேன்..அப்படியே நட்பையும்…