Sunday, 28 November, 2010

“தக்காளி…!*&!&$##$$*#@%...” என் கையில மாட்டுனான்…”

மதுரை என்றாலே எனக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. புழுதியிலும், வெயிலிலும் அலைந்து கிடந்த மண்ணல்லவா. இப்போதும், என் உடம்பில் அந்த வாசம் ஒட்டிக்கொண்டே இருக்கும். என்னதான் பகுமானத்துக்கு அமெரிக்காவில் பர்கரை கடித்தாலும். இன்னமும் முக்குகடை பணியாரத்திற்கு நான் அடிமை. சென்னையில் எந்த தெருவிலாவது பணியாரம் சுடும் ஆயாவைப் பார்த்ததுண்டா. இன்று சென்றாலும் சோழவந்தான் வீதிகளில் பார்க்கலாம். அந்த ஆயா பணியாரம் சுடும் அழகை அருகில் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருப்போம். அதிகபட்சம் ஒரு பணியாரம் 25 பைசா விலையேறி இருக்கும். 4 ரூபாய்க்கு, காலை உணவையே முடித்துவிடுவோம்.

மதுரையை அவ்வளவு சீக்கிரம் மறக்கவும் முடியாது. எங்காவது “வந்துட்டாயிங்க..போயிட்டாங்க” என்ற வார்த்தையைக் கேட்டால், என்னை அறியாமல் நான் திரும்பி பார்ப்பேன். உடனே அவர்களிடம் சென்று நான் கேட்கும் முதல்கேள்வி “என்னண்ணே..மதுரையா..”. அப்படித்தான் அவன் எனக்கு அறிமுகமானான். பெயர் வினோத். மதுரைக்காரன். இங்கு போன மாதம்தான் வந்திருந்தான். யாரைப் பார்த்தாலும் திருதிருவென்று முழித்தான். என்னை விட 5 வயது கம்மி. சின்னப்பையன் போல் இருந்தான்.

“என்ணண்ணே..இங்கிட்டு ஒரு எழவும் புரிய மாட்டிங்குது. இவிங்க இப்படித்தான் இருப்பாயிங்களா..” என்றான். சிரித்துக் கொண்டன். அந்த தமிழை கேட்க ஆசையாய் இருந்தது. வாய் நிறைய “அண்ணே..அண்ணே..” என்றுதான் கூப்பிடுவான்..

“அண்ணே..எப்படிண்ணே இருக்கீங்க..”

“அண்ணே..டைம் என்னண்ணே..”

“அண்ணே..கிளம்பலாமாண்ணே..”

“அண்ணே..ரொம்ப நன்றிண்ணே..”

இப்படி வாய் முழுக்க அண்ணன்கள். ரொம்பவும் மரியாதை கொடுத்தான்..

“டேய் வினோத்து. என்னை பெயரை சொல்லியே கூப்புடுடா..”

“போங்கண்ணே..உங்களைப் போயி..”

ரொம்ப ரொம்ப நெஞ்சை நக்கினான். நானும் அவனை விட 5 வயது மூத்தவன் என்பதையே மறந்துவிட்டேன். என் நண்பனாகவே பழக ஆரம்பித்தேன். முடிந்தவரை அவனுக்கு உதவி செய்தேன். நம்ம ஊர்க்காரனாச்சே என்ற பாசம்தான் அதிகம் இருந்தது. இப்படி போய் கொண்டிருந்த போதுதான் ஒருநாள் என்னிடம் கேட்டான்..

“அண்ணே..தண்ணியடிப்போமா..”

என்னிடம் உள்ள ஒரே கெட்டபழக்கம் தண்ணியடிக்க பழகாததுதான். அடிபம்பில் கூட இரண்டு வாளி தண்ணியடிப்பேன், ஆனால் மருந்துக்குகூட மது(தியேட்டர் இல்லைண்ணே) பக்கம் செல்ல மாட்டேன். ஒரு புடலங்காய் சத்தியமும் இல்லை. நான் அந்த பக்கம் செல்ல நினைத்தாலே, அய்யனார் வேஷம் போட்ட வினுசக்கரவர்த்தி மாதிரி எங்கப்பா கையில் அருவாளோடு நாக்கை துருத்திக் கொண்டு ஓடிவரும் காட்சி என்முன் தோன்றுவதால். ஆனால் எனக்கு புடித்தது தண்ணியடிப்பவர்களுக்கு கம்பெனி கொடுப்பது. ஏனென்றால் தண்ணியடிக்கும் இடங்களில்தான் சைடுடிஷ் காரம்சாரமாக கிடைக்கும். கேட்க, கேட்க கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். மற்றும் தண்ணியடித்தவர்களின் உளறலை கேட்க சிரிப்பாக இருக்கும். அதனால் உடனே ஒத்துக்கொண்டேன். வினோத்து வீட்டில் பாட்டில் ஓபன் பண்ணுவது என்று முடிவானது.

கரெக்டாக 9 மணிக்கு சாமியைக் கும்பிட்டு பாட்டிலை ஓபன் பண்ணினான்..

“சாமி..நல்லா போதை ஏறணும்..”

ஓபன் பண்ணுவதற்கு முன்னால், மரியாதை தெரிஞ்ச பய, பவ்யமாக என்னிடம் கேட்டான்..

“அண்ணே..உங்க முன்னாடி சரக்கு அடிக்கபோறேன் தப்பா எடுத்துக்க மாட்டிங்கள்ள..”

எனக்கு புல்லரித்துப்போனது. என்ன ஒரு பாசம்..என்ன ஒரு பாசம்..

“தம்பி..நீ எனக்கு தம்பி இல்லைடா..நண்பேண்டா..ஒரு வார்த்தை கேட்ட பார்த்தியா…அதுவே எனக்கு போதும்டா..தைரியமா அடி..”

கண்ணை மூடிக்கொண்டு முதல் ரவுண்டு உள்ளே விட்டான்..நானும் இருக்கிற சைடுடிஷ்களை காலி பண்ண ஆரம்பித்தேன்.

“அண்ணே..எனக்கு நீங்கதாண்ணே உண்மையிலேயே அண்ணே..நீங்க இல்லாம எனக்கு யாருமே இல்லேண்ணே..நீங்க ஹெல்ப் பண்ணலைண்ணா..ப்ச்..”

ரொம்ப பீல் பண்ணினான்..

“விடுடா தம்பி..நம்ம ஊர்க்காரனாயிட்ட..”

இப்போது ரெண்டாவது ரவுண்டு உள்ளே விட்டான்..

“அண்ணே..நீங்க அண்ணே..நானு தம்பி..”

“ஆமாண்டா தம்பி..”

“இல்லை..நீங்க ஒத்துக்க மாட்டீங்குறீங்க..நீங்க தம்பி..நான் அண்ணே..சாரி..சாரி..நீங்க அண்ணே..நான் தம்பி..”

“ஓகே தம்பி..நான் வரட்டா..”

என்ன நினைத்தானென்று தெரியவில்லை..மூன்றாவது ரவுண்டையும் உள்ளே விட்டான்..

“டே..அண்ணே..உக்காரு..”

சரி பயபுள்ள வேற யாரையாவது சொல்லுறான்னு அங்கிட்டு பார்த்தா ஒருத்தனையும் காணோம். ஆஹா..அப்ப என்னையத்தான் சொல்லுறானா..

“டே..தம்பி..என்ன இது..”

“டே..வெளக்கெண்ண..உக்காருடா..ஒரு தடவை சொன்னா கேட்காது..புடிங்கி” ங்கிறான்..எனக்கு ஆடிப்போயிருச்சுண்ணே..

“டே..தம்பி..உனக்கு தலைக்கு போதை ஏறிருச்சு..ஒழுங்கா தூங்கு..”

“போடா..சொம்பு..ஒருதடவை சொன்னா தெரியாது..வூட்டுல போயி என்னத்த புடுங்க போற..உக்காரு ஒழுங்கா..இல்லைண்ண்ணா…இந்த பாட்டில வுட்டு மண்டையில ஆட்டிப்புடுவேன்”

ஆத்தாடி..எனக்கு கொலைநடுங்கிப்போச்சுண்ணே..உசிருக்கு பயந்து அப்படியே உக்கார்ந்துட்டேன்.. இன்னொரு ரவுண்டு உள்ளே விட்டான்..

“என்ணண்ணே..தப்பா எடுத்துக்காதண்ணே..நீ அண்ணே..நான் தம்பி.. சொல்லு..நீ யாரு..”

உசிரு பயத்துல தானா வார்த்தை வந்தது..

“அ…ண்…ணே..”

“நானு..”

“த..ம்…பி..”

உடனே ஆரம்பித்தான்..

“அண்ணே..உங்களுக்கு எவ்வளவு கொடுமை செய்திருக்கேன்..நாம சின்னபுள்ளையில எம்புட்டு பாசமா இருந்துருப்போம்..”

“டே..வினோத்து..ஒரு மாசமா தாண்டா உன்னோட பழக்கம்..சும்மா குடிச்சுப்புட்டு உளறாதே..”

“என்னது..நான் குடிகாரனா..நான் உளறுனா..டே…ய்….”

அவ்வளவுதாண்ணே..அவ்வளவு கெட்ட வார்த்தையை ஒரே வாயிலிருந்து அப்பதான் முததடவையா கேக்குறேன். சிலவார்த்தையெல்லாம் சின்னபுள்ளையில கேட்டது..காதை பொத்திக்கொண்டேன்..திடிரென்று பயபுள்ள இறங்கிட்டான்..

“அண்ணே..சாரிண்ணே..நல்லா..ஏறிரு..ச்..சிண்ணே..நீங்க கூட ரெண்டு..ரெண்டா..தெரியிறீங்க..ண்ணே..”

சொல்லிக்கொண்டே..பொத்தென்று கீழே விழுந்தான்..ஆஹா..பயபுள்ளைக்கு அடிபட்டுட போகுதுன்னு அவனை அப்படியே தூக்கினேன். அந்த நேரம் பார்த்து எடுத்தான் பாருங்க..ஒரு வாந்தி..அவ்வளவுதான்..அவ்வளவு சாக்கடையும் என்மேல்தான்..ஏறக்குறைய குளித்தேவிட்டேன்…அந்த நாத்தம் தாங்கமாட்டாமல் நானும் எடுத்தேன் வாந்தி..

பின்பு என்ன..அவனை எழுப்பி குளிக்கவைத்து..படுக்கையில் போட்டு விட்டு..நானும் குளித்து திரும்ப வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது..வாழ்க்கையே வெறுத்துப்போனேன்..திரும்ப வந்து பார்த்தால் ஆளைக்காணோம்..கட்டிலுக்கு கீழே மல்லாக்க விழுந்து கிடந்தான்..திரும்பவும் உளறினான்..

“ஆ….ஏய்..யா..ரு..யா..அங்க..நிக்க்கு..ற..து..ஐ…லவ்..யூ…என் ..வா..ழ்க்க்..கை..யில்..நடந்த…சம்ப்ப..வங்க..ள்..

திரும்பவும் அவனை படுக்கபோட்டுவிட்டு அவனருகில் ஒரு சேர் போட்டு உக்கார்ந்து கொண்டேன்..பய போதையில் எங்கயாவது போய் விட்டால் பிரச்சனையாகிவிடுமோ என்ற பயம்தான்..காலை 5 மணிவரைக்கும் முழித்தே இருந்தேன்..அசதியில் அப்படியே தூங்கிப்போனேன்..துக்கத்தில் யாரோ காதுக்குள் மணியடிக்கும் சத்தம் கேட்டு மெதுவாக கண்ணைத்திறந்து பார்க்கிறேன்..எதிரே நம்ம வினோத்து நெற்றி நிறைய திருநீரோடு, இடுப்பில் வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு, தெய்வ கடாஷமா..பயபக்தியோடு..பூஜை மணியை ஒரு கையில் ஆட்டிக்கொண்டு..,இன்னொரு கையில் திருநீரை நீட்டுறான்..

“அண்ணே..துண்ணூரை எடுத்துக்கங்கண்ணே..”

எனக்கு இருந்த கொலைவெறியில் ஒன்றும் பேசவில்லை..அவனே பேசினான்..

“என்னண்ணே..இம்புட்டு நேரமா தூங்குறது..உடம்புக்கு ஏதும் பிரச்சனையாண்ணே..ஏதோ வாந்தி எடுத்த மாதிரி தெரியுது..

எனக்கு வந்த ஆத்திரத்துக்கு. கையில் எதுவும் கிடைக்கலை..அங்கிட்டு கிடந்த பாட்டிலை எடுத்து அவனைநோக்கி ஓடினேன்..அன்னிக்கு ஓடி ஒளிஞ்ச பையன்..இன்னும் என் கையில சிக்கலை..

“தக்காளி…!*&!&$##$$*#@%...” என் கையில மாட்டுனான்…”

29 comments:

..:: Mãstän ::.. said...

<<<
அந்த ஆயா பணியாரம் சுடும் அழகை அருகில் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருப்போம்.
>>>

என்னண்ணே இப்படி ஆயிட்டீங்க???

<<<
ஆனால் எனக்கு புடித்தது தண்ணியடிப்பவர்களுக்கு கம்பெனி கொடுப்பது. ஏனென்றால் தண்ணியடிக்கும் இடங்களில்தான் சைடுடிஷ் காரம்சாரமாக கிடைக்கும்.
>>>
ஹா ஹா... :) எனக்கு என்னவோ உங்க நேர்மை புடுச்சுருக்கு

அவிய்ங்க ராசா said...

///////////////////////

27 November 2010 11:15 PM
///////////////////////////
ஆஹா..அதையேதான் நானும் கேக்குறேன்...ஏண்ணே இப்பிடி..._))

வெறும்பய said...

ஹா ஹா.. படிக்கும் போதே அந்த பய புள்ள மண்டையில பாட்டில விட்டு ஆட்டனும் போலிருக்கே.... பக்கத்தில உக்காந்து அனுபவிச்ச உங்களுக்கு எப்படி இருக்கும்... வருத்தமாவும் இருக்கு.. அனா சிரிப்பும் வருது...

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்குங்க! பயங்கரமா சிரிச்சேன்!

philosophy prabhakaran said...

எழுத்து நடை வசீகரமா இருக்கு...

சிங்கக்குட்டி said...
This comment has been removed by the author.
சிங்கக்குட்டி said...

(த)க்காளி... நம்ம மக்க எல்லாம் கோவகாரன்னாலும் பாசகாரன்ல்ல பங்கு...!

நீங்க தண்ணி அடிக்காத பார்டின்னாலும், நாம் மண் வாசனை மாறாம, தம்பிய அடிச்ச மப்பு தெளியாம அணைச்சு கூட்டிகிட்டு போய், இட்லி கடை அக்காகிட்ட, சூடா நாலு இட்லி, கொஞ்சம் கெட்டி சட்டினி கூடவே தக்காளி சட்னிய விட்டு, நடுவுல சாம்பார்ல இட்லிய நீந்த விட்டு அப்படியே ஒரு கரண்டி ஆம்லேட் சொல்லி முடிச்சதும், ஒரு கோலி சோடாவுல வாய கொப்பழிச்சு, மீதி சோடாவ சல்லுனு முகத்துல அடிச்சு அந்த பிசு பிசுப்பு போக ஒரு வாட்டர் பக்கெட்டை கடிச்சு சர்ர்ன்னு முகத்துல விட்டு, பழைய தினதந்தி பேப்பர கசக்கி முகத்த துடைக்க சொல்லி இருந்தா...!

பய புள்ள உடனே தெளிஞ்சு, அண்ணேணேணேணே... உங்கள போயின்னு பாசத்துல திரும்ப நெஞ்ச நக்கிருப்பான் :-).

ஏன்னா நம்ம மக்க எல்லாம் கோவகாரன்னாலும் பாசகாரன்ல்ல.

ராஜ நடராஜன் said...

//ஆனால் எனக்கு புடித்தது தண்ணியடிப்பவர்களுக்கு கம்பெனி கொடுப்பது. ஏனென்றால் தண்ணியடிக்கும் இடங்களில்தான் சைடுடிஷ் காரம்சாரமாக கிடைக்கும்.//

இந்த டெக்னிக் நல்லாயிருக்குதே:)

ராஜ நடராஜன் said...

//துக்கத்தில் யாரோ காதுக்குள் மணியடிக்கும் சத்தம் கேட்டு மெதுவாக கண்ணைத்திறந்து பார்க்கிறேன்..எதிரே நம்ம வினோத்து நெற்றி நிறைய திருநீரோடு, இடுப்பில் வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு, தெய்வ கடாஷமா..பயபக்தியோடு..பூஜை மணியை ஒரு கையில் ஆட்டிக்கொண்டு..,இன்னொரு கையில் திருநீரை நீட்டுறான்..//

ஹா!ஹா!ஹா!சிரிப்பதை,ரசிப்பதை கட்டாயம் பதிவு செய்திடனும்:)))))

நா.மணிவண்ணன் said...

அண்ணே இதே மாதரி அனுபவம் எனக்கும் இருக்குனே என்ன நீங்க மட்டை ஆகிடீங்க ஆனா நானும் என் பிரென்ட்சும் போலீஸ் காரர் கிட்ட
அடிவாங்கீட்டு நம்ம ஊரு தெப்பக்குளம் மைய மண்டபத்துல பிச்சகாரைங்களோட பிச்சக்காரைங்களா தலைக்கு செருப்ப தலைகானிய வச்சு படுத்து தூங்குநோம்னே .இதுக்கு எல்லாம் காரணம் என் பிரெண்டு பைய வாந்தி எடுத்து அதுலே படுத்து புரண்டானாலதானே .போலீஸ் செவுள சேத்து விட்டதுல அடிச்சா போதையெல்லாம் எறங்கி போயி வீட்டுக்கும் போகமுடியாம

MaduraiMalli said...

mynaa review engae bossu?

நாஞ்சில் பிரதாப்™ said...

haha...பாசக்கார பயலுக அப்படித்தாம்ணே...மப்புல ஏதாச்சும் உளறியிருக்கும் பயபுள்ள.... நம்மபயதாம்ணே விட்டுப்புடிங்க...;))

அவிய்ங்க ராசா said...

///////////////////////
வெறும்பய said...
ஹா ஹா.. படிக்கும் போதே அந்த பய புள்ள மண்டையில பாட்டில விட்டு ஆட்டனும் போலிருக்கே.... பக்கத்தில உக்காந்து அனுபவிச்ச உங்களுக்கு எப்படி இருக்கும்... வருத்தமாவும் இருக்கு.. அனா சிரிப்பும் வருது...
27 November 2010 11:38 PM
///////////////////////
ரெண்டு நாளா..அவன் என் கையில சிக்கல..கிடைச்சான்...))

அவிய்ங்க ராசா said...

//////////////////////
எஸ்.கே said...
ரொம்ப நல்லாயிருக்குங்க! பயங்கரமா சிரிச்சேன்!
28 November 2010 12:41 AM
//////////////////////
நன்றி எஸ்,கே

அவிய்ங்க ராசா said...

////////////////////////
philosophy prabhakaran said...
எழுத்து நடை வசீகரமா இருக்கு...
28 November 2010 1:26 AM
/////////////////////////
நன்றி பிரபாகரன்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
சிங்கக்குட்டி said...
(த)க்காளி... நம்ம மக்க எல்லாம் கோவகாரன்னாலும் பாசகாரன்ல்ல பங்கு...!

நீங்க தண்ணி அடிக்காத பார்டின்னாலும், நாம் மண் வாசனை மாறாம, தம்பிய அடிச்ச மப்பு தெளியாம அணைச்சு கூட்டிகிட்டு போய், இட்லி கடை அக்காகிட்ட, சூடா நாலு இட்லி, கொஞ்சம் கெட்டி சட்டினி கூடவே தக்காளி சட்னிய விட்டு, நடுவுல சாம்பார்ல இட்லிய நீந்த விட்டு அப்படியே ஒரு கரண்டி ஆம்லேட் சொல்லி முடிச்சதும், ஒரு கோலி சோடாவுல வாய கொப்பழிச்சு, மீதி சோடாவ சல்லுனு முகத்துல அடிச்சு அந்த பிசு பிசுப்பு போக ஒரு வாட்டர் பக்கெட்டை கடிச்சு சர்ர்ன்னு முகத்துல விட்டு, பழைய தினதந்தி பேப்பர கசக்கி முகத்த துடைக்க சொல்லி இருந்தா...!

பய புள்ள உடனே தெளிஞ்சு, அண்ணேணேணேணே... உங்கள போயின்னு பாசத்துல திரும்ப நெஞ்ச நக்கிருப்பான் :-).

ஏன்னா நம்ம மக்க எல்லாம் கோவகாரன்னாலும் பாசகாரன்ல்ல.
28 November 2010 1:40 AM
////////////////////////
அண்ணே..இது ஓவர் பாசம்..பயபுள்ள என்ன அசிங்கமா பேசுனான் தெரியுமா..))

அவிய்ங்க ராசா said...

////////////////////////////
ராஜ நடராஜன் said...
//ஆனால் எனக்கு புடித்தது தண்ணியடிப்பவர்களுக்கு கம்பெனி கொடுப்பது. ஏனென்றால் தண்ணியடிக்கும் இடங்களில்தான் சைடுடிஷ் காரம்சாரமாக கிடைக்கும்.//

இந்த டெக்னிக் நல்லாயிருக்குதே:)
28 November 2010 3:21 AM
ராஜ நடராஜன் said...
//துக்கத்தில் யாரோ காதுக்குள் மணியடிக்கும் சத்தம் கேட்டு மெதுவாக கண்ணைத்திறந்து பார்க்கிறேன்..எதிரே நம்ம வினோத்து நெற்றி நிறைய திருநீரோடு, இடுப்பில் வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு, தெய்வ கடாஷமா..பயபக்தியோடு..பூஜை மணியை ஒரு கையில் ஆட்டிக்கொண்டு..,இன்னொரு கையில் திருநீரை நீட்டுறான்..//

ஹா!ஹா!ஹா!சிரிப்பதை,ரசிப்பதை கட்டாயம் பதிவு செய்திடனும்:)))))
28 November 2010 3:26 AM
////////////////////////////
நன்றி நடராஜன்..

அவிய்ங்க ராசா said...

/////////////////////////////
நா.மணிவண்ணன் said...
அண்ணே இதே மாதரி அனுபவம் எனக்கும் இருக்குனே என்ன நீங்க மட்டை ஆகிடீங்க ஆனா நானும் என் பிரென்ட்சும் போலீஸ் காரர் கிட்ட
அடிவாங்கீட்டு நம்ம ஊரு தெப்பக்குளம் மைய மண்டபத்துல பிச்சகாரைங்களோட பிச்சக்காரைங்களா தலைக்கு செருப்ப தலைகானிய வச்சு படுத்து தூங்குநோம்னே .இதுக்கு எல்லாம் காரணம் என் பிரெண்டு பைய வாந்தி எடுத்து அதுலே படுத்து புரண்டானாலதானே .போலீஸ் செவுள சேத்து விட்டதுல அடிச்சா போதையெல்லாம் எறங்கி போயி வீட்டுக்கும் போகமுடியாம
28 November 2010 3:41 AM
///////////////////////////
ஹா..ஹா.ஒரு படத்துல கவுண்டமனியும் சத்யராஜூம் அலும்ப் பண்ணுவாயிங்களே..))

அவிய்ங்க ராசா said...

////////////////////
MaduraiMalli said...
mynaa review engae bossu?
28 November 2010 4:07 AM
////////////////////
போட்டிருவோம்..

அவிய்ங்க ராசா said...

///////////////////////
நாஞ்சில் பிரதாப்™ said...
haha...பாசக்கார பயலுக அப்படித்தாம்ணே...மப்புல ஏதாச்சும் உளறியிருக்கும் பயபுள்ள.... நம்மபயதாம்ணே விட்டுப்புடிங்க...;))
28 November 2010 7:38 AM
///////////////////////
மப்புல உளறுனத கூட மன்னிச்சு விட்டுருலாம்ணே..ஆனா காலையில துண்ணூரை பூசிக்கிட்டு நான் வாந்தி எடுத்தனானு கேக்குறாண்ணே..)))

vaarththai said...

:)

Jaaffer Sadiq said...

semaiya kalaichirukaan.... intha CITIZENS se nambave kudaathu nnneee

மோதி said...

http://marmayogie.blogspot.com/2010/11/blog-post_29.html
Check this one payapullainga nalla thaan thruduraanga... i remember i read this post last year in your blog

Thekkikattan|தெகா said...

கரெக்டாக 9 மணிக்கு சாமியைக் கும்பிட்டு பாட்டிலை ஓபன் பண்ணினான்..//

haahaha.... kalakkals! enjoyed!!

அவிய்ங்க ராசா said...

/////////////////////
vaarththai said...
:)
28 November 2010 8:29 AM
////////////////////////
நன்றி..

அவிய்ங்க ராசா said...

//////////////////////
Jaaffer Sadiq said...
semaiya kalaichirukaan.... intha CITIZENS se nambave kudaathu nnneee
28 November 2010 8:24 PM
//////////////////////
குடிமகன்கள் அலும்புதான்..)))

அவிய்ங்க ராசா said...

/////////////////////////
மோதி said...
http://marmayogie.blogspot.com/2010/11/blog-post_29.html
Check this one payapullainga nalla thaan thruduraanga... i remember i read this post last year in your blog
29 November 2010 6:14 AM
/////////////////////
தகவலுக்கு நன்றி..நானும் பார்த்தேன்..அதிர்ந்தேன். படத்தை மற்றும் மாற்றியிருக்கிறார்கள். ஒரு வரி விடாமல் அப்படியே..அட்லீஸ்ட் ஒரு நன்றியாவது போட்டிருக்கலாம்...ம்..என்ன செய்ய..(((

அவிய்ங்க ராசா said...

///////////////////////////
Thekkikattan|தெகா said...
கரெக்டாக 9 மணிக்கு சாமியைக் கும்பிட்டு பாட்டிலை ஓபன் பண்ணினான்..//

haahaha.... kalakkals! enjoyed!!
29 November 2010 6:29 AM
/////////////////////
நன்றி தெக்காட்டான்..

சதீஸ் கண்ணன் said...

very nice to read. Enjoyed a lot.

Post a Comment