
போன வாரம் நண்பரின் மகளுக்கு பிறந்தநாள். அப்போது செல்ல முடியாததால், நேற்று அவர் வீட்டிற்கு கிப்ட் எடுத்துக் கொண்டு சென்றேன்..நண்பரின் மகள் பெயர் “ரேணு”. 8ஆம் வகுப்பு படிக்கும் வயதில் உள்ளவர்..அன்போடு வரவேற்கப்பட்டு இருக்கையில் அமர்ந்தேன்..
“ரேணு எங்க..கிப்ட் கொடுக்கனுமே..”
“அவ..கொல்லைப்புறத்துல இருக்கா..”
“கொஞ்சம் கூப்பிடுங்களேன்..அவ கையிலே கிப்ட் கொடுத்துருவோம்..”
“அய்யோ..இப்ப கூப்பிட்டா அவ வரமாட்டாளே…நாமளே போயிருவோம்..”
எனக்கு வியப்பாக இருந்தது..சரி, புள்ள பரிட்சைக்கு படிக்குது..டிஸ்டர்ப் பண்ணாம போயி கொடுத்துருலாம்னு போனா, ஆத்தாடி..தூக்கி வாரிப் போட்டுருச்சுண்ணே..ஒரு பெரிய சுவர் மேல ஏறி நின்னுக்கிட்டு பேலன்ஸ் பண்ணி நடந்துக்கிட்டு இருக்குண்ணே..எனக்கு குலையே நடுங்கிப் போயிருச்சு..
“என்னண்ணே..புள்ளைய சர்க்கஸ்ல எதுவும் சேர்த்து விடப் போறீங்களா..”
“அத ஏம்பா கேக்குற..விஜய் டீ.வியில “அணு அளவும் பயமில்லை” ன்னு ஒரு ரியாலிட்டி ஷோ போடுறாயிங்கள்ள..அதைப் பார்த்த்தில இருந்தே இப்படித்தான்..ஏதாவது சுவர் இருந்தா ஏறி குதிக்கிறா..பல்லி, எலி, கரப்பான் பூச்சி இருந்தா, விரட்டி விரட்டி ஓடுறா..இவ இருக்குற பயத்துலயே ஒரு புழு பூச்சியும் வர மாட்டிங்குது..இப்ப பிஸ்கட் வாங்கித்தர சொல்ற மாதிரி பாம்பு வாங்கித்தரனும்னு அடம்புடிக்கிறா..ஏம்பா, உங்க வீட்டுல ஏதாவது பாம்பு இருந்தா சொல்லுப்பா..தண்ணிப்பாம்பா இருந்தாலும் அட்ஜட் பண்ணிக்கலாம்..ஏதாவது கேட்டா “அணு அளவும் பயமில்லைன்னு கட்டை விரலை உயர்த்திக் காட்டுறா..ஏம்பா, ஏதாவது டாக்டர்கிட்ட காட்டலாம்”
“அடப்பாவி..இந்த வியாதிக்கு பேரு “ரியாலிட்டி ஷோ”போபியா…இது டாக்டர்கிட்ட காட்டினா சுகமாகாது..வீட்டுல டீ.வியா..லேப்டாப்பா??..”
“டி.வி இருக்கு..”
“ரெண்டு மாசத்துக்கு ஆன் பண்ணாதே..முக்கியமா விஜய் டீ.வியை கட் பண்ணு..பாதி சுகமாகிடுவா..”
“ஹூம்..என்ன பண்றது..நல்லா படிக்கிற பொண்ணு..எல்லா நாலேஜ்ஜூம் இருக்கு..தினமும் எல்லா இ-பேப்பரும் படிக்கிறா..எல்லா அரசியல் நிகழ்ச்சிகளும் இவளுக்கு அத்துப்படி….ஐ.ஏ.எஸ் படிக்கனும்னு மூச்சுக்கு மூனு தடவை சொல்லுறா…ஆனால் இந்த விஜய் டீ.வி பார்த்துதான் கொஞ்ச நாளா இப்படி..நீ வேனுன்னா கொஞ்சம் கூப்பிட்டு அறிவுரை சொல்லேன்..”
“அறிவுரைதானே..கண்டிப்பா..எத்தனை பேருக்கு சொல்லி இருக்கோம்….காசே கொடுக்காம கொடுக்குறது இது ஒன்னுதானய்யா..கூப்பிடு..”
“ரேணு..இங்க வா..இங்க வந்து யாரு வந்துருக்கான்னு பாரு..பக்கத்து வீட்டு அங்கிள் வந்து இருக்காரு..”
“பக்கத்து வீட்டு அங்கிளா..யாரு டாடி..அண்டங்காக்காவுக்கு கருப்பு பெயிண்ட் அடிச்ச மாதிரி ஒருத்தர் இருப்பாரே..அவரா…”
கிரகம் புடிச்சதுங்க..சின்னக் குழந்தைக்கு எப்படில்லாம் சொல்லிக் கொடுத்துருக்காயிங்க பாருங்கண்ணே..
“அங்கிள அப்படி எல்லாம் சொல்லக்கூடாதும்மா..ஓடியா..”
ரேணு துள்ளிக் குதித்து ஓடி வந்தாள்..என்னைப் பார்த்துமே..
“அங்கிள் அணு அளவும் பயமில்லை..”
“வாம்மா..ரேணு..பிலேட்டட் ஹேப்பி பர்த்டே..இந்தா கிப்ட்..அதென்ன அனு அளவும் பயமில்லை..”
“அது அங்கிள்..இந்த ஆம்பிளைங்க எல்லாம் எங்களை கொடுமைப்படுத்துறாயிங்களா..அவிங்களை எல்லாம் எப்படி சமாளிக்கனும்னு எங்க அனு ஆண்டி சொல்லிக் கொடுத்து இருக்காங்க..”
“ரேணும்மா..அப்படி எல்லாம் தப்பா சொல்லக் கூடாதும்மா….அனு ஆண்டி எல்லாத்தையும் ஏத்தி விடுறாங்களே..ஒரு நாளாவது அந்தம்மா எதுலயாவது கலந்துகிட்டாங்களா..அதெல்லாம் ரியாலிட்டி ஷோ வுக்குதாதாம்மா..நல்லா பார்த்தேன்னா..அதுல கலந்துக்கிட்டவுங்க யாராவது அழுதா, நல்லா கேமிராவை பக்கத்துல கொண்டு வந்து “நல்லா அழுவுங்க..இன்னும் நல்லா பீல் பண்ணி அழுவுங்க..” ன்னுதான் சொல்லுவாங்க..நல்லா அழுவ அழுவதான் டீ.ஆர்.பி ரேட்டிங்க் கூடும்..”
“நீங்க..சும்மா சொல்லுறீங்க அங்கிள்..எல்லாம் எங்க நல்லதுக்குதான்..அதில்லாம உங்களுக்கும் உபயோகமா இருக்கும்..”
“என்னது..எனக்கு என்ன உபயோகம்..”
“ஆமா..வீட்டுல ஆண்ட்டி அடிக்கிறப்ப..அப்படியே சுவர் ஏறி குதிச்சு ஓடிப் போயிடலாம்ல..”
எனக்கு தூக்கி வாரி போட்டதுண்ணே..எங்க வீட்டுல நடக்குறதெல்லாம் எப்படி லீக் ஆகுதுன்னு தெரியலண்ணே..ஆஹா..இப்படியே விட்டா நம்ம பொழைப்பே நாறிப் போயிருமுன்னு டாபிக்கை மாத்தினேன்..
“ஆமா..நீ டெய்லி நியூஸ் பேப்பர் படிப்பேன்னு அப்பா சொன்னாங்க..வெரிகுட்..எங்க சொல்லு பார்ப்போம்..ஈழத்துல என்ன நடக்குது…”
“அத விடுங்க அங்கிள்..எனக்கு தமிழக அரசுமேல கோவம்..”
எனக்கு பயமா போச்சுண்ணே..
“என்னமா சொல்லுற..”
“பின்ன என்ன அங்கிள்..சினிமாவுல இருக்குர எல்லாத்துக்கும் ஒவ்வொரு அவார்ட் கொடுத்து இருக்காங்க..எனக்கு பிடிச்ச நடிகர் “போண்டா மணி..” வடிவேல்கிட்ட எப்படி அடிவாங்கிறாரு தெரியுமா..அவருக்கு இந்த வருசத்துக்கு சிறந்த நடிகர் கொடுக்கலாமில்ல..ஏன் அங்கிள் கொடுக்கல..அட்லீஸ்ட் ஒரு கலைமாமணி…”
“எனக்கு தெரியலையேம்மா.. ஒருவேளை அடுத்த வருசம் நடிகை புவனேஸ்வரிக்கு கலைமாமணி கொடுக்கறப்ப அவருக்கும் கிடைக்கலாம்..”
“நம்ம வேணா, போண்டா மணி சாருக்கு போன் பண்ணி, கலைஞர் தாத்தாவை புகழ்ந்து ஒரு கவிதை எழுத சொல்லாமா அங்கிள்..”
அடக்கொடுமையே..இது குழந்தை இல்லண்ணே..வீட்டுக்கு ஆட்டோ அனுப்புறதுக்கு இதுவே மீட்டர் மேல காசு கொடுக்கும் போலயே..இடத்தக் காலி பண்றதுதான் பெட்டர்ன்னு நினைச்சு எழும்ப முயற்சி பண்ணினேன்..அடுத்த குண்டைப் போட்டுச்சுண்ணே..
“அங்கிள்..கமல் ஒரு கடவுளா..”
“ஆத்தாடி..அப்படியெல்லாம் இல்லையேம்மா..”
“பின்ன ஏன் அங்கிள்..விஜய் டீ.வியில கோபி அங்கிள் கமல் ஒரு சரித்திரம்..வரலாறு, புவியியல், பூகோளம்..புத்தகம்..கடவுள்..உதாரண புருசன்” னு சொல்லுறாரு..அதுவும் கமல் அங்கிளுக்கு முன்னாடியே..கமல் அங்கிளுக்கு கூச்சமா இருக்காதா..”
“தெரியலையேம்மா..வீட்டுல ஏதோ குக்கர் சத்தம் கேட்குது..நான் வேணா அப்புறம் வரட்டா..”
“இருங்க அங்கிள்..என் கேள்விக்கு பதில் சொல்லுங்க..அப்புறம்..கமல் அங்கிளோட பேட்டி காணுறப்ப..ஒரு பொண்ணு..”கமலைப் பார்த்தது நான் செய்த பாக்கியம்” ன்னு கட்டிப்பிடிச்சு அழுகுது..அவரும் நல்லா அழுவுறாரு..இதுல கோபி அங்கிள் வேற..நல்லா அழுவுங்க..கேமிராமேன்..நல்லா போகஸ் பண்ணுங்க சொல்லாத குறைதான்..ஏன் அங்கிள் மூச்சுக்கு மூணு தடவை, கமல் அங்கிள்., “என் ரசிகர்கள் வித்தியாசமானவங்க” ன்னு சொல்லுறாரு..இதுதான் வித்தியாசமா..தனிமனித ஆராதனை இல்லையா..கமல் அங்கயே அந்தப் பொண்ண கண்டிச்சுருக்க வேணாம்மா..போங்க அங்கிள் என்ன பகுத்தறிவு..”
“தாயே..பகுத்தறிவு குழந்தையே….தெரியாம உங்கிட்ட வாயைக் கொடுத்துட்டேன் சாமி..நான் கிளம்புறேன்..”
“இருங்க அங்கிள்..நானும் பிளாக் எழுதப்போறேன்..என்ன பெயர் வைக்கலாம்..”
“ரேணும்மா..வேணாம்மா..அது ரத்த பூமி..காலை வைச்சுடாதேம்மா..உனக்கு பதிவுலகம் பத்தி என்ன தெரியும்..”
“போலி..”
“அட..உனக்கு அவ்வளவு தெரியுமா..”
“இல்ல அங்கிள்..அம்மா “போலி” செஞ்சு வைச்சிருக்காங்க..சாப்பிட்டுதான் போகனும்னு சொல்ல வந்தேன்..”
“தாயே..நீ சாப்பிடுற போளியை சொன்னயா..நான் கூட வேறு ஏதோன்னு நினைச்சுட்டேன்..நல்லா நாக்கை மடக்கி “போளி” ன்னு சொல்லனும்மா..நுனி நாக்கில “போலி” ன்னு சொல்லி டெர்ரராக்க கூடாது..”
“ஏன்..அங்கிள்..எதுவும் பிரச்சனையா..”
ஆஹா..இது வீட்டிக்கு ஆட்டோ இல்லை..ஹெலிகாப்டர் அனுப்புற மேட்டராச்சே..இதுக்கு மேல முடியாதுடா சாமின்னு வாசல் படியை நோக்கி ஓடுனேன்னே..
“அங்கிள் ..பொறுங்க..இதை வாங்கிட்டுப் போங்க..”
சரி..குழந்தை ஏதோ ஆசையா கூப்பிடிதுன்னு பக்கத்துல போனேன்னே.,..
“அணு அளவும் பயமில்லை” ன்னு சொல்லிக்கிட்டே..கைய நல்லா மடக்கி வயித்துல ஒரு குத்து குத்துச்சு பாருங்கண்ணே..காலையில சாப்பிட்ட புரோட்டா தொண்டை வரைக்கும் வந்திருச்சுண்ணே..அப்படியே கதவைப் புடிச்சுக்கிட்டு தாவி தாவி வீடு வரைக்கும் வந்து வீட்டு வாசலுக்கு வர்றேன்..டீ.வில ஒடுது..”
“டாடா..டோ.கோ,மோ..அணு அளவும் பயமில்லை..”
"ங்கொக்காமக்கா..அணு அளவும் நாசாம போங்கடே..