Tuesday 14 May, 2013

இரு மரணங்கள்


பொதுவாகவே நான் எழுதப் பயப்படும் அல்லது சங்கடப்படும் விடயம் மரணம்தான்..காலை செய்தித்தாளை படிக்கும்போது, கடவுளை வேண்டி கொள்வதும் அதுதான்.."கடவுளே..இன்றைக்கு எந்த மரணச்செய்தியும் வந்திருக்க கூடாது.." ஆனால், மரணம் பற்றிய செய்தி இல்லாமல் எந்த ஒரு செய்திதாளையும் இதுவரை பார்த்ததில்லை..

பிறப்பை எவ்வளவு கொண்டாடுகிறோமோ, இறப்பை அவ்வளவு பயத்துடன் எதிர்நோக்கவேண்டியிருக்கிறது..யாரும் மரணத்தை விருப்பப்பட்டு அழைப்பதில்லை. தற்கொலை செய்பவர் கூட, விருப்பப்பட்டு அதை தேர்ந்தெடுப்பதில்லை..

பிறப்பு, இறப்பு வாழ்க்கையில் சகஜம் என்று தேற்றுதலுக்கு வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நெருங்கிய அல்லது தெரிந்த ஒருவரோ இறந்துபோகும்போது, மனம் அடையும் துயரத்துக்கு அளவே இல்லை..

சிறுவயதிலிருந்து என் கூடவே, இருந்த ஒரு நண்பன், நான் பத்தாவது படிக்கும் வயதில் இறந்துபோனான்..நேற்று வரை என்னுடன் கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருந்தவன், அன்று மட்டும் வரவேயில்லை..வீட்டுக்கு வந்தபிறகு..அம்மா மெதுவாக சொன்னார்கள்..

"ராசா..உன் பிரண்டு செத்துட்டாண்டா.."

நான் கேட்ட முதல் மரணச்செய்தி அதுதான்..எனக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை..

"என்னம்மா சொல்லுற..."

"வாடா..அவிய்ங்க வீட்டுக்கு போய் பார்த்துட்டு வந்துருவோம்..."

மாட்டவே மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்..எப்படி அவனை பார்க்கமுடியும்..நேற்றுவரை என்னுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவனை, பிணமாக, படுக்கப்போட்டிருந்தால் எப்படி இருக்கும்..

என்னால் அவனைப் பார்க்கவே முடியாது என்று சொல்லிவிட்டேன்...

இன்னும் கூட என் நண்பனின் அண்ணனை, ஊரில் பார்க்க நேர்ந்தால், அவர் என்னிடம் கண்ணீருடன் கேட்பது..

"கடைசி வரைக்கும் வரலைல ராசா.."

"என்னால, அவனை அந்த கோலத்தில் பார்க்க முடியாதுண்ணே..."

இந்த வாரம் நான் கேட்ட, இரண்டு மரணச்செய்தியும், அந்த நிலைதான்..முதலில் நண்பர் பதிவர் பட்டாபட்டி..நான் பதிவுலகத்திற்கு வந்து, ஐந்துவருடங்களுக்கு மேல் இருக்கும்..அப்போதெல்லாம் இரண்டு பதிவர்கள், கேலி, கிண்டல் என பதிவு போட்டு கலக்கு, கலக்கென்று கலக்குவார்கள்..அவர்கள், பட்டாபட்டி, ரெட்டைவால்(என்று நினைக்கிறேன்)

நான் தவறாது படிக்கும் பதிவுகளில் நண்பர் பட்டாபட்டி பதிவுகள் தான் முதல்..அரசியல் நையாண்டி ஆகட்டும்.,சினிமா கலாய்ப்பு ஆகட்டும், எல்லாவற்ற்றிலும் கலக்கல்தான்..நான் ஒருநாள் அவருடைய பதிவுகளில் சென்று.."உங்கள் பிளாக்கை ரசிக்கும் வாசகனில் நானும் ஒருவன்" என்று கமெண்ட் செய்தினேன்..அவ்வளவுதான் செம கலாய்ப்பு..எனக்கோ, சந்தேகம்..
"என்னய்யா..நல்லதுதானே சொல்லியிருக்கிறேன்.." அப்புறம், அவர்களே சொன்னார்கள்..

"தப்பா எடுத்துக்காதிங்க பாஸூ..முதல் வாட்டி வர்றீங்க..அதுதான் கலாய்ச்சோம்.."

சிரித்துக் கொண்டேன்..அதற்கப்புறம் கமெண்டுகள் எதுவும் போடாவிட்டாலும், அவர் எப்போது பதிவு போட்டாலும், கமெண்டு போட்டாலும், தேடிப்பிடித்து படிப்பேன்..அவர் இப்போது இல்லை என்கிறபோது, என்னால் இன்னுமும் நம்பமுடியவில்லை.."சும்மாதான் கலாய்ச்சேன்.." என்று இதற்கும் சொல்லுவாரா என்று என் மனம் ஏங்குகிறது..ஆனால்...

அடுத்து என்னை பாதித்த மரணம்..என் பெரியப்பா பையன்..அதாவது எனக்கு அண்ணன் முறை...கம்பம் அருகில் உள்ள கிராமத்தில் சந்தோசமான குடும்பம்...ஞாயிற்று கிழமை, தோப்புக்கு சென்றிருக்கிறார்..அங்கு கீழே விழுந்து கிடந்த தென்னை மட்டையை எடுக்கும்போது, அதில் சுத்தியிருந்த , ஒரு கட்டுவிரியன் பாம்பு கடித்ததில்., விஷம் ஏறி...

ப்ச்.....அவர் போய் சேர்ந்துவிட்டார்..ஆனால் அவரை விட்டு பிரிந்து வாடும் என் பெரியப்பா குடும்பம்...

ஐயோ....மரணம்தான் எவ்வளவு கொடிது...


3 comments:

Unknown said...

என்ன ராசா பன்றது எல்லோரும் சந்தித்து ஆக வேண்டிய ஓன்று

நம்மால் வருத்த பட மட்டுமே முடியும்

அம்பாளடியாள் said...

நண்பனின் பிரிவால் வாடும் உங்கள் உள்ளம் அமைதி பெறவும் அவருடைய ஆன்மா சாந்தியடையவும் இறைவனருள் கிட்டட்டும் :(

அம்பாளடியாள் said...
This comment has been removed by the author.

Post a Comment