Saturday 27 April, 2013

தமிழேண்டா.....


தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்ற சொல்வடையை கேட்கும்போது நக்கலாக "என்ன கவுத்துவிடும் குணமா" என்று கேட்பதுண்டு. பொதுவாக "தமிழனுக்கு தமிழனே உதவி செய்ய மாட்டாண்டா..அப்புறம் எங்கே முன்னேறுவது" என்று பல பேர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்..

ஆனால் உதவி செய்வதற்கு முதலில் ஒன்றிணைய வேண்டுமே..தமிழன் முதலில் எங்கே இருக்கிறான் என்றாவது தெரியவேண்டுமே..தமிழ்நாட்டில் பிரச்சனையில்லை..ஆனால் தொலைதூரத்து தேசங்களில்..

எனக்கென்னமோ, தமிழை வளர்ப்பதிலும், தமிழ்மொழியின் அருமையை எடுத்துகூறுவதிலும், தமிழ்நாடடிலுள்ள தமிழர்களை காட்டிலும், புலம்பெயர்ந்த தமிழர்களும், அயல்நாட்டில் வசிக்கும் தமிழர்களும், செய்யும் முயற்சிகள் எவ்வளவோ மேலாக இருக்கிறது..

அமெரிக்காவை, ஒரு மினி தமிழ்நாடு என்று கூறலாம்..வால்மார்ட்டிலோ அல்லது ஏதாவது வணிக வளாகங்களிலோ நம்ம ஆட்களைப் பார்த்துவிட்டால் ஒரு பொறி வருமே..

"நீங்க தமிழா.."

என்று கேட்கும்போது கண்களில் தெரியும் ஆர்வம், நம்மையும் தொற்றிக்கொள்ளும்..

அப்படி "நீங்க தமிழா" என்று கேட்ட ஒருவரிடம் "இல்லீங்க..நான் ராசா" என்று கடித்தபோது.."கண்டிப்பாக நீங்க தமிழ்தான்..இப்படி கடிக்கிறீங்க" என்றார்..

அமெரிக்காவில் முதல்முதலாக வந்தபோது சுற்றி முற்றி தெரியாத, அயல் நாட்டு முகங்களையே பார்த்து பயந்து போயிருந்த எனக்கு "அட..நம்ம ஊரு தாம்பா..இதுவும்..நாங்க இருக்கோம்" என்று தைரியம் தந்தது, இந்த ஊர் தமிழ்மன்றம்..அதாவது "ஜாக்சன்வில் தமிழ்மன்றம்..."

ஜாக்சன்வில் தமிழ்மன்றாம் நான்குபேரோடு ஆரம்பிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டு, இப்போது நூற்றுகணக்கானோர் உறுப்பினர்களாக இருப்பதைப் பார்த்தபோது, வியந்தேன்..

தமிழ்மன்றம் என்றால் சற்று பேருக்கு, நாலு பேர் கூடுவது..கதைகள் பேசுவது என்றில்லாமல், நிச்சயமாக, ஒரு அருமையான அமைப்பாகவே செயல்படுகிறார்கள்.."ஓ..மாம்..இட்ஸ் டூ ஹாட்" என்று நுனிநாக்கு ஆங்கிலம் பேசும், இங்கு பிறந்த தம் குழந்தைகளுக்கு, தமிழின் பெருமையை, பொறுமையாக எடுத்து சொல்லுகிறார்கள்....பயப்படவைக்கும் கலாச்சரம் நிறைந்த அமெரிக்காவில், முடிந்த வரை நம் பண்பாடு கலாச்சார பெருமைகளை சொல்லி கொடுத்து வளர்ப்பது, உண்மையிலேயே நம்மை பெருமைப்பட வைக்கிறது..

தமிழ்மணம் கமழவைக்கும் நிறைய விழாக்கள், மாதந்தோறும் நடத்துகிறார்கள்..அமெரிக்காவில் வந்து "வாங்க பங்காளி..." வாடா மச்சி.."
"வணக்கம் மாப்பிள்ள.." என்றெல்லாம் கேட்கும்போது, ஏதோ தமிழ்நாட்டிலேயே இருப்பது போல ஒரு உணர்வு..அப்படி நடந்த அருமையான ஒரு நிகழ்ச்சி, அருமையான "மூவேந்தர் விழா..."



இந்த மூவேந்தர் விழாவுக்கு, அனைவரும், தாம் பிறந்த ஊரின் அடிப்படையில் "சேரர்..சோழர்..பாண்டியர்" என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒரு வாரமாகவே தயார்படுத்துதல் நடந்தது..முதல்படியாக, மூவேந்தர்களைப் பற்றி 3 கேள்விகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டு, பதிலளிக்கும் உறுப்பினர்களுக்கு, புள்ளிகள் தரப்பட்டனர்.."நமீதா நாய்குட்டி பேர் என்ன" போன்ற கேள்விகள் இல்லாமல் உண்மையிலேயே மூவேந்தர்களின் வரலாற்றைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விகள் சிறப்பு...

அடுத்து கோலகலாமாக விழா இன்று நடந்தது..முகப்பிலேயே "மூவேந்தர் விழாவுக்கு வருக..வருக.." என்று அன்பான அறிவுப்பலகை வரவேற்க..முதலில் நுழைந்தவுடன் என் கண்ணில் பட்டது என்ன தெரியுமா..
தமிழனின் குளிர்பானமான "மண்பானை மோர்"..நான் ஐந்து குவளை குடித்துவிட்டு, கழிப்பறையை நோக்கி ஓடியது இன்னொரு கதை..ஆனால் போய்விட்டு வந்து ஆறாவது குவளை அடிக்கும் அளவுக்கு, மோரின் சுவை..ஊருப்பக்கம் தர்ற மோரெல்லாம், மோரே இல்லீங்க..அவ்வளவு அருமையான மோர் அமெரிக்காவில்..



அப்படியே நடந்து வந்தால், மூவந்தர் பற்றிய வரலாற்றினை, அருமையான படங்களாகவும், கார்ட்டுன்களாகவும் அள்ளித் தருகிறார்கள்..அதைப் படித்து கொண்டே இருக்கும்போது, "உன்னை அறிந்தால்..நீ உன்னை அறிந்தால்" என்று தலைவர் பாட்டு, ஒலிபெருக்கிகளில்..ஆஹா..அப்படியே கேட்டுகொண்டு நடந்தால்.."வாங்க...வாங்க" என்று இனிமையாக ஒருவர் வரவேற்றால், எப்படி இருக்கும்..அப்படியே நம்ம ஊர் தெருவுக்குள் நடப்பது போன்று ஒரு பிரமை..அருகில் அம்மா, அப்பா இல்லாதது ஒன்றுதான் குறை..அதுவும் "வாங்க மாம்ஸ்" என்று நண்பன் வந்து தோளில் கைபோடும்போது, அம்மா, அப்பா அருகில் இல்லாத குறையை போக்குகிறது..

மதிய உணவிற்கு கூட்டாஞ்சோறு..சும்மா, பர்கர், பிட்சாவெல்லாம் இல்லீங்கோ..சரவணபவன் மீல்ஸ் மாதிரி, அனைத்து வகை பச்சடிகளும், அரிசி உணவுகளும்..சாப்பிட்டுவிட்டு தூக்கம் போடலாம் என்று நினைத்தால்.."மன்னிக்கவும்..விளையாட்டெல்லாம் இருக்கு."



அந்தப்பக்கம் , இரண்டு குழந்தைகள், கிட்டி விளையாண்டு கொண்டிருப்பதை பார்க்கும்போது.."சே..கிட்டியெல்லாம் விளையாண்டு, எம்புட்டு நாளாச்சு" என்று மன கொசுவர்த்தியை ஓடவிட்டேன்..அப்படியே ஒரு பொங்கல் விழாவுக்கு மதுரைப் பக்கம் என்ன நடக்குமோ, அதே மாதிரியான விளையாட்டுக்கள்..கபடி..ஓட்டப்பந்தயம், பானை உடைக்கும்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி..என்று அனைத்து விளையாட்டுகளையும் குதுகலமாக விளையாண்டபோது, எம் தெருக்களில் பொங்கல் திருவிழாவுக்கு அமர்க்களப்படுத்தியதுதான் நினைவுக்கு வந்தது..

கலந்து கொண்டது, நான்கு, ஐந்து மணிநேரம்தான்..ஆனால் அனைத்தும் நம் தமிழ்மண்ணை, என் முன் கொண்டு நிறுத்தின..அந்த ஐந்து நிமிடமும், அனைவரும் குழந்தையாகினார்கள்..

"ஏ..இவன் கல்லாட்டாம் ஆடுறாண்டா..",
"என்னடா மச்சி..பார்த்து எம்புட்டு நாளாவுது.."
"மருதப்பக்கம் நல்ல மழையாமே.."
"வீட்டுல எல்லாரும் சவுக்கியமா..."
"அய்யா..கபடி..கபடின்னு மூச்சுவிடாம பாடணும்.."

அந்த ஏரியா முழுக்க தமிழ்மணம்தான்...அந்த இடத்தை விட்டு கிளம்ப மனமே இல்லை...ஒருவழியாக கிளம்பி..காரை கிளப்பும்முன்பு..என் காலரை தூக்கி விட்டு கொண்டு பெருமையாக சொன்னேன்...

"தமிழேண்டா..."

6 comments:

Unknown said...

பகிர்வுக்கு நன்றி ராசா

அவிய்ங்க ராசா said...

நன்றி நண்பர் சக்கரகட்டி..

சேக்காளி said...

கொண்டாடுங்க. வாழ்த்துக்கள்

இவன் சிவன் said...

அருமை...வாழ்த்துக்கள்

அவிய்ங்க ராசா said...

நன்றி சேக்காளி..சிவன்..

வரதராஜலு .பூ said...

நல்ல கொண்டாட்டம்தான்.

Post a Comment