Wednesday 1 February, 2012

நான் பிறந்தநாள்



உலகத்திலேயே கொடுமை என்ன தெரியுமா..அறிவுரை கேட்பதுதான்...அதுவும், ஒன்றுமே தெரியாத பூஜ்யமாக்கப்பட்டு
"இதை கேட்டாத்தாண்டா நீ உருப்படுவ..." என்ற தொணியில் அறிவுரை கேட்கும்போது, நாம் இன்னும் குழந்தையாகவே இருக்கிறமோ
என்று அச்சப்படவைக்கும்..அப்படிப்பட்ட அறிவுரைகள் என் வாழ்வில் நிறைய கிடைத்தன..வலுக்கட்டாயமாக காதைப் பொத்திக்
கொண்டாலும்...


"இன்னும் கல்யாணம் ஆகலையா..."


"என்னப்பா..பொண்ணு பார்க்கவா..."


"வாங்கப்பூ..எப்ப கல்யாணச் சாப்பாடு போடப்போறீங்க..."


எனக்கு இருபத்தைந்து வயது ஆனதை, அடிக்கடி ஞாபகப்படுத்தின. "நல்லா இருக்கியா" என்ற சம்பிராதய வார்த்தைகளுக்கு அடுத்து
மளமளவென்று விழுந்த அறிவுரைகள் தான் மேலே கூறியவைகள். ஒரு கட்டத்தில் "ஐய்யய்யோ..நமக்கெல்லாம் கல்யாணமே நடக்காதோ"
என்று பயப்படவைத்த வார்த்தைகள் இவைகள் தான். அதுவும், "மாப்பிள்ளை கலரு கம்மின்னா" அவ்வளவுதான்...எல்லாப் பெண்களும்
அரவிந்த்சாமியே எதிர்நோக்கி இருந்தால், நம்மை மாதிரி அடுப்புல வெந்த சாமிகள் எல்லாம் எங்கு போவது. ஒரு கட்டத்தில்
"அடப்போங்கையா..நான் சாமியாரகப் போறேன்' என்று வெறுப்பாகா சொன்னால் கூட, "ஐய்..உனக்கு பல பொண்ணு கேக்குதா.." என்ற 
கிண்டல் வேறு...


வேறு வழியில்லாமல் எனக்கு திருமணமும் நடக்க., பல பேருக்கு ஆச்சரியம்..."ஆஹா..கல்யாணம் நடந்துருச்சா..என்ன அறிவுரை சொல்லுவது"
என்று பல்லை கடித்து யோசித்ததில், சிக்கியது அடுத்த வார்த்தை...


"என்ன தம்பி..வீட்டுல விஷேசம் இல்லையா..."


எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை..."என்னங்க கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆகுது..எங்க வீட்டுல அடுத்து யாருக்கும் கல்யாணம் பண்றதா
ஐடியா இல்லை" என்று சொல்ல ஆரம்பித்தால்...


"அடப்போங்க தம்பி..எப்போதுமே உங்களுக்கு தமாசுதான்..." என்று என் சீரியசை தமாஷாக்கினார்கள்..


ஆஹா..எது சொன்னாலும் கோல் போடுறானே என்று எண்ணினார்கள் போல, இந்த முறை டோனை சற்று மேலோக்கினார்கள்....


"என்ன தம்பி...வீட்டுல பொம்மையெல்லாம் எப்ப வாங்கப் போறீங்க..."


சிலேடையா பேசுறாங்களாம்...அப்ப தான் என்னுடைய மரமண்டைக்கு புரிந்தது..அடப்பாவிங்களா..ஆரம்பிச்சுட்டீங்களா..கல்யாணம் பண்ணி,
ஒரு வருசம் தான ஆகுது என்று அலுத்தால்,,,,இந்த முறை செண்டிமெண்டாக "ஏம்பா..பேரப்புள்ளைகள கொஞ்சணும் என்று எங்களுக்கு 
ஆசை இல்லையா" என்று செண்டிமெண்ட்....எனக்கு பயமாகிவிட்டது..ஆஹா..சமுதாயக் கடமை மாதிரி ஆக்கிட்டாய்ங்களே என்ற பயமே, 
பாதி வாழ்க்கையை நிறைத்திருந்தது,...


திருமணம் ஆகி, ஒன்றரை வருடங்கள் ஆகியது, இன்னும் சவுகர்யமாக போய் விட்டது..அவ்வளவுதான், அறிவுரைகள் சகட்டுமேனிக்கு பறந்துவந்தன.
சில நேரங்களில்,முகமூடி போட்டுக்கொண்டு வெளியே செல்லலாமா என்ற எண்ணம் வேறு...


அப்போதுதான், அந்த செய்தி வந்தது...அறிவுரை சொல்லியவர்களை எல்லாம் தெருவில் நிறுத்தி, சத்தம் போட்டு சொல்லலாம் போல இருந்தது...


"எனக்கு சிங்கக்குட்டி பொறந்துருக்காண்டா...""


சிறிது யோசித்தவர்கள்...தயக்கமில்லாமல் கேட்டார்கள்...


"பையன் என்ன..உன் கலரா..கன்னங்கரேருன்னு,,,,"


சொல்லும்போது, மனத்தில் அவ்வளவு குரூரம்..உதட்டில் கேலிச்சிரிப்பு... நான் பயப்படவில்லை...


"ஆமாண்டா..என் கலருதாண்டா..அதுக்கென்னா..சிங்ககுட்டிடா..தரணி ஆளுவான் பாரு.."  


சொல்லும்போது நான் அடைந்த பெருமிதத்துக்கு அளவே இல்லை...


உலகத்திற்காக மட்டுமல்ல..நமக்காகவும், ஒரு குழந்தை வேண்டும்...எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், வீட்டிற்கு சென்று அந்த பிஞ்சின்
முகம் பார்த்தால் போதும், அனைத்தும் பஞ்சு பஞ்சாய்..அப்படியே நம்மை கண்ணாடியில் பார்ப்பது போன்று இருக்கும்...
அந்த குழந்தையின் சிரிப்பே போதும்...அனைத்தையும் மறந்துவிட..


அதுவும் என் பையன்...அவன் சிரிக்கும்போது, எனக்கு அழுகை வரும்..ஏதோ சாதித்துவிட்டதாய்..அப்படி செத்து போய்விடலாம் போல்..
கள்ளம் கபடமில்லா சிரிப்பு..அதுவும், குட்டிப்பையன், உடனே சிரிக்க மாட்டான்..அலுவலகம் சென்று கதவை திறந்தவுடன்..உர்ரென்று
ஒரு முறை முறைப்பான்..நாம் ஒன்றும் சொல்லாமல், இருக்கையில் அமர்ந்தால், மெதுவாக, மெதுவாக..நம்மை நோக்கி நடந்து
வந்து, திடிரென்று ஓடி வந்து கட்டிக்கொள்வான் பாருங்கள்...அந்த சிரிப்பு..இன்னும் என் மனதுக்குள்..ஆயிரம் முத்தங்களாவது தந்திருப்பேன்
அவனுக்கு..ஒவ்வொன்றுக்கும், முகத்தை திருப்பிக்கொள்வான்..என் மீசை குத்துவதால்..ஆனால், அவன் எனக்கு ஒரே முத்தம்தான்
கொடுத்திருப்பான்....அது ஆயிரம் முறை என் மனதுக்குள் அப்படியே பசுமையாய்...


என்னை நானே பார்க்கவைத்தவன்., என் குட்டிப்பையன்..எனக்கு கர்வத்தையும், அங்கிகாரத்தையும் கொடுத்தவன், என் குட்டிப்பையன்..
என்னை எனக்கே அடையாளம் காட்டியவன் அவன்..அதனால் தான், அவன் பிறந்தநாளான பிப்ரவரி 1 ஆம் நாளான இன்று,
நானே இன்னொருமுறை பிறந்ததாய் உணருகிறேன்...


அவனுக்கு நான் என்ன செய்திடமுடியும்...."பிறந்த நாள் வாழ்த்த்துக்கள் என் செல்லமே" என்று சொல்லக்கூட கூச்சமாய் உணர்கிறேன்..
எனக்கே நான் எப்படி வாழ்த்துச் சொல்ல.....


(மேலே உள்ள படம்..அவன் அசந்த நேரம் பார்த்து நான் கிளிக்கியது.,...)

10 comments:

வினையூக்கி said...

Birthday wishes

Anonymous said...

தற்செயலாக தான் உங்கள் வலைப்பதிவைக் காண நேர்ந்தது.....
பின்னூட்டு எழுதுவது, இது என் இரண்டாம் முறை......
பொதுவாக, தாய்மை பற்றியே சொல்லக் கேட்டு வளர்ந்த நாம் - அப்பாவின் அன்பின் வெளிபாட்டைக் காண்பது அரிது, அதுவும் ஒரு வலைப்பதிவில் மிக அரிது ( நான் கண்ட வரை). உங்களின் இந்தப் பதிவு என் (எதிர்கால) எண்ணங்களை எதிரே காண்பது போல் ஒருணர்வை ஏற்படுத்தியது. எவ்வளவு பாசம், அன்பு இருந்தால் - இவ்வளவு உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பீர்கள். இந்தக் குழந்தையின் வரவை நீங்கள் எவ்வளவு எதிர்பார்த்து இருந்தீர்கள் என்பது உங்கள் வார்த்தைகளில் அழகாக செதுக்கி உள்ளீர்கள்... "அப்பா" என்று சொல்லக் கேட்பது எவ்வளவு இனிமையான உணர்வு....!!!!
ஒரு தந்தையின் மகிழ்ச்சியை கண்டிப்பாக இதற்கு மேல் வெளிப்படுத்த முடியாது.....
ஆழ்ந்த, அற்புதமான வார்த்தைகளின் கோர்வை.... உள்ளத்தின் உணர்வுகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடு.....
வாழ்த்துக்கள் - உங்களுக்கு அல்ல, உங்கள் குழந்தைக்கு.....அருமையான் அப்பா
அவனுக்கு கிடைத்ததற்கு... :-)

Vijayashankar said...

குழந்தைக்கு வாழ்த்துகள். பேர் என்ன ஜூனியர் விக்டருக்கு? கலரில் என்ன இருக்கு. அதை ஒரு அட்வாண்டேஜாக எடுத்துக்கொள்ளுங்க.

அவிய்ங்க ராசா said...

Thanks Vinaiyooki,,,,,

Thanks for the wonderful comments "En pakkangal.."

Thanks Vijayshankar. My baby name is "Benito.."

Sorry for not typing in tamil since my software is not working....)

Anonymous said...

Happy B'day Benito.

ILA (a) இளா said...

அருமையான பதிவு. வாரிசுக்கு வாழ்த்துகள்!

அவிய்ங்க ராசா said...

Thanks friend and ILA....

Saravana said...

Anbu kanindha pirandha naal vaazhthukkal iniyanukku! (Peyar theriyaadhadhaal enakku pidaththa peyarai sootti konden :) )

குடந்தை அன்புமணி said...

பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா

பாவா ஷரீப் said...

birthday wishes rasaanna

Post a Comment