Thursday, 28 July, 2011

ஆண்மை தவறேல் - திரைப்பட விமர்சனம்

அந்த காலத்தில் எல்லாம், பெண்கள் வேலைக்கு செல்லவே அனுமதிப்பதில்லை. பெண்ணடிமைத்தனத்தின் உச்சமாக இருந்த காலம் அது. பின்னர் சிறிது மாறி, பெண்களும் வேலைக்கு செல்லலாம் என்ற நிலை வந்தது. ஆனால் 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வரவில்லையென்றால், பெண்ணின் நடத்தைப் பற்றியெல்லாம் கேள்வி எழுந்தது. எழுப்பியவர்கள் எல்லாம் ஒழுக்கம்கெட்ட ஆண்கள். பின்னர் படிபடியா அது மாறி “பெண்கள், இரவு வேலைக்கு சென்றால் தான் என்ன” என்ற நிலைமை வந்தது. எல்லாம் இந்த சாப்ட்வேர் ஏற்படுத்திய மாற்றங்கள். பெண்கள் துணிந்து வேலைக்கு வந்தனர். கம்பெனிகளே, இரவு வாகன வசதி, பிக் அப், டிராப் போன்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவே, வீட்டிலும் கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனால், யார் வீட்டிலாவது, இந்த படத்தைப் பார்த்தால், பெண்களை இரவுவேலைக்கு அனுப்புவது சந்தேகம். அப்படி ஒரு அதிர்ச்சியை எனக்கு ஏற்படுத்தியது சமீபத்தில் நான் பார்த்த படமான “ஆண்மை தவறேல்..”

யுத்தம் செய் படத்தில் சொன்னதுபோல், எத்தனை பேர் பெண்களை வேலைக்கு அனுப்பிவிட்டு, நெருப்பில் வயிற்றைக் கட்டி உக்கார்ந்திருக்கிறார்கள். ஆனால், இரவுவேலை செய்யும் பெண்கள் பாதுக்காப்பாகத்தான் இருக்கிறார்களா.அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கிறதா, என்பதை பொட்டில் அறைந்தாற் போல் சொல்லியிருக்கிறது இந்த படம்.

படத்தின் கதை இதுதான். நாயகி ஒரு கால்செண்டரில் வேலை செய்பவள். இரவு 9 மணிக்கு கிளம்பி, காலை 6 மணிக்கு வீடு திரும்பும் வேலை. அப்பாவியான அம்மாவை ஏமாற்றிவிட்டு வழக்கம்போல சொங்கியான காதலனுடன் ஊர்சுற்றுகிறாள். அப்படி ஒருநாள் வேலைக்கு செல்லும்போது, கடத்தப்படுகிறாள். ஒரு சிவப்பு நிற வேனில் மூன்று ஆட்கள். இன்னும் சிலபெண்களை கடத்துகிறார்கள். வேன் கோவா நோக்கி செல்லுகிறது. போகும் வழியில், எதுக்கும் இருக்கட்டுமே என்று இரண்டு பெண்களை கடத்துகிறார்கள். மொத்தம் நாலு பெண்கள், மூன்று ரவுடிகள்.எப்படி இருக்கும். ஒவ்வொரு நிமிடமும் நரகமாகிறது அந்த பெண்களுக்கு, அவர்களை தேடி, தன்னந்தனியாக செல்லும் நாயகனோடு, இணைந்து கொள்கிறார், காவல்துறையை சேர்ந்த சம்பத்.

கடத்தலின் பிண்ணனியை இயக்குநர் விலாவரிக்கும்போது, முதுகுத்தண்டு சில்லிடுகிறது. அதிர்ந்து போகிறோம். பெண்களை கடத்திக்கொண்டு கோவாவில், ஒரு வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். அவர்கள் அங்கு பெண்மை சோதிக்கப்படுகிறது. பெண்மை இழந்திருந்தால், அங்கேயே லோக்கல் ரவுடிகளிடம் விற்றுவிடுகின்றனர்.இல்லாவிட்டால் ஆரம்பிக்கிறது, இண்டெர்நெட்டில் ஏலம் என்னும் கொடுமை. ஆன்லைனில் பெண்களை இண்டெர்நேஷனல் வரை ஏலம்விடுகிறார்கள்..அப்படி நாயகி ஏலம்விடும்போது, வழக்கம்போல ஹீரோ வந்து காப்பாற்றுகிறார் என்பது வழக்கமான கிளைமாக்சாக இருந்தாலும், அதைக் கொண்டு சென்ற விதம், பரபர..

ஆரண்யகாண்டம் சம்பத்துக்கு கால்ஷீட் பிரச்சனை போல..பயங்கர பில்டப்பாக அறிமுகமாகும் இவர், 10 நிமிடத்தில் காணாப்போகிறார். திரும்பவும் கிளைமாக்சில் வந்து எட்டிப்பார்க்கும்போது, “என்னா விளையாடுறீங்களா” என்று கேட்கத்தோன்றுகிறது. ஆனால் கிடைத்த கொஞ்ச நேரத்தில் ஓரளவுக்கு நன்றாக நடித்திருப்பதால் மன்னித்துவிடலாம். சொத்தையான ஒரு ஹூரோ, எக்ஸ்பிரஷனே இல்லாமல் நடிக்கும்போது கடுப்பு வருகிறது, ஆனால் கிளைமாக்சில் பறந்து, பறந்து ஜேம்ஸ்பாண்ட் மாதிரி, சண்டை போடும்போது , “பாறேன்..இந்த பிள்ளைக்குள்ள ஏதோ இருந்திருக்கு பாரேன்” என்று கேட்கத் தோன்றுகிறது. கும்பலிடம் மாட்டிக்கொண்டு, ஒவ்வொரு நிமிடமும் நடுங்கும் ஹீரோயின் நன்றாக நடித்திருக்கிறார். வேனில் கடத்திவரும் கும்பலும் ஆர்ப்பாட்டமில்லாமல் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இயக்குநரின் ஹோம்வொர்க்குக்கு ஒரு சல்யூட். பெண்களை கடத்தும் கும்பலின் நெட்வொர்க்கை டீட்டெயிலாக சொல்லும்போது, திடுக்கிடவைக்கிறார். ஆனாலும் அழுத்தமான எந்த காட்சியும் இல்லாதது படத்தில் குறை(பின்ன குறை சொல்லலைன்னா, ஒருபய மதிக்க மாட்டுறாய்ங்களே). கேபிள் சங்கர் பாணியில் சொல்வதென்றால், இன்னும் மெனக்கெட்டிருந்தால், ஒரு அருமையான சஸ்பென்ஸ் படத்தை கொடுத்திருக்கலாம்.. இசை, கேமிரா(என்னது எங்க இருக்கா..??) பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. கடைசியாக வில்லனாக வரும் பஞ்சு அருணாசலம் அவர்களின் மகன்..”சாரி..சார்.உங்க முகத்துக்கு சுத்தமாக பொருந்தவில்லை..”

இதுபோன்ற படங்கள் கண்டிப்பாக அங்கிகரிக்கப்படவேண்டும். நாலு பாட்டு, நாலு பைட் என்று வழக்கமான மசாலா இல்லாமல், பெண்களின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு படம் இல்லை, பாடமே நடத்தியிருக்கிறார்கள். இந்த படம் ஓடுகிறதா, இல்லை, ஓடவில்லையா, எப்போது வந்தது என்றெல்லாம் தெரியாது..ஆனால் பெண்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய விழிப்புணர்வு படம். ஏனென்றால், இங்குதான் சதைக்கு அலையும் ஓநாய்கள் நிறைய இருக்கின்றன…

6 comments:

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

thalaivare.. ithil home work ellaam illai.. trade enkiRa padadathin uttalakkadi.. torrent download panni parunga..:)

ஓநாய் said...

//இங்குதான் சதைக்கு அலையும் ஓநாய்கள் நிறைய இருக்கின்றன//
நம் காலாச்சாரம் தான் ஓநாய்களை உருவாக்குகின்றன. என் நீங்களே ஒரு நாள் ஓநாயாக மாறாக் கூடும்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல விமர்சனம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

என்று என் வலையில்

டி.வியாடா நடத்துறிங்க

அவிய்ங்க ராசா said...

ஆஹா..அப்படியா கேபிள் அண்ணே..பயபுள்ள ஹாலிவுட் பட சீடியா பார்த்து ஹோம்வொர்க் பண்ணியிருப்பார் போல,,

ஓநாய் நண்பர்..அதென்ன காலாச்சாரம்

நன்றி ராஜா..

! சிவகுமார் ! said...

இந்தப்படம் உங்க ஊர்ல எந்த தியேட்டர்ல ஓடுது சார்? சென்னைல 'ராஜ்' னு ஒரு 'தமிழ்' படம் போடுற தியேட்டர்ல மட்டும்தான் ஓடிக்கிட்டு இருக்கு..

Post a Comment