Sunday, 5 June 2011

அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???

ஏறக்குறைய மூன்று வாரங்களாகிவிட்டது தமிழகத்தில் புரச்சி ஏற்பட்டு. தமிழகம் தலைகீழாக மாறிவிட்டதா..தமிழகத்தில் குடும்ப ஆட்சி ஒழிந்துவிட்டதா..தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறிவிட்டதா, என்ற கேள்விகள் அவசரக்குடுக்கைத்தனமாக இருந்தாலும், அதற்கு ஏதாவது அறிகுறிகள் தென்படுகிறதா என்பது தவிர்க்கமுடியாத மற்றும் நியாயமான கேள்வி. உண்மையிலேயே ஏதாவது அறிகுறி தென்படுகிறதா என்று கேட்டால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தென்படவில்லை.

சமச்சீர் கல்வி பற்றி பரிசீலிப்போம் என்று கல்விஅமைச்சர் பதவியேற்ற முதல்வாரத்தில் சொல்லியபோது, “ஆஹா..திருந்திட்டாயிங்க போலிருக்கு” என்று சொல்லியவர்கள் வாயில் வண்டி, வண்டியாக மண் அள்ளி போட்டிருக்கிறது தமிழக அரசு. “அதெப்படி..இது கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த திட்டமாச்சே, அதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்ற மனப்பான்மையே இதற்கு காரணம். கலைஞர் ஆட்சியில் கொடுத்ததாக சொல்லப்பட்ட புளுத்த அரிசி, அம்மா ஆட்சியில் தங்கமாக ஜொலிப்பதன் காரணம் மட்டும் இன்னும் புரியவில்லை..நடப்பது அம்மா ஆட்சியல்லவா. தொட்டதெல்லாம் தங்கமாகும்.

“நான் ஆட்சியமைத்த அடுத்தநாளே, செயின் திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டதாக கேள்விப்படிகிறேன்” என்று முதல்வர் பெருமிதபுன்னகையோடு சொல்லி வாய்மூடுவதற்குள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பழகருப்பையா மனைவியின் கழுத்தில் உள்ள செயினை யாரோ அறுத்துவிட்டதாக செய்திகள் வந்தன. ஆந்திராவுக்கு ஓடுறதுதான் ஓடுறோம், கடைசி, கடைசின்னு ஒரு செயினை அறுத்துட்டு ஓடுவோமே என்று திருடன் இதை செய்திருக்கிறான், என்ற புரிந்துணர்வு உங்களுக்கு வந்துவிட்டாலே போதும், நீங்கள் தமிழன் என்ற அடையாளத்தை இன்னும் இழக்காமல் இருக்கிறீர்கள் என்னும் பெருமிதம் அடையலாம்..

“பார்த்தியா..அம்மாதான் வருவாருன்னு கரெக்டா கணிச்சேன் பார்த்தியா” என்று பல ஜோசியர்கள் அம்மாவின் அப்பாயிண்ட்மெண்டுக்காக காத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.. திங்கள் கிழமைக்கு அடுத்து செவ்வாய்கிழமை என்று கரெக்டாக கணித்து சொல்லி, நீங்களும் ஜோசியர் ஆகலாம் என்பதால், இந்த குற்றச்சாட்டை எளிதாக புறம்தள்ளிவிடமுடியும்.

ஆனாலும் அம்மா ஆட்சியில் சில ஆறுதல்கள் உண்டு. செல்லும் வழியெங்கும் ட்ராபிக் நிறுத்தியதாக கேள்விப்படவில்லை. இதுவே சென்னைவாசிகளுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம். அடுத்து “தங்கதாரகையே..தைரியலட்சுமியே, பாசத்தலைவனே” என்று யார் பதவிக்கு வந்தாலும் பேசும் நாக்குகளுக்கும், ஒரு தடா..முதல்வர் எந்த பாராட்டுவிழாவிலும் கலந்துகொள்ளபோவதில்லையாம்..முதல்வர் ஆரம்பித்த இலவச அரிசி வழங்கும் திட்டம் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டதும் இன்னொரு அதிர்ச்சி..

“தமிழக அரசு சரியான நேர்கோட்டில் செல்கிறது” என்று விஜய்காந்த் கூறியதில் ஆச்சர்யபட ஒன்றும் இல்லை. அப்படித்தானே பேசவேண்டும், அடுத்த மூன்று வருடங்களுக்கு. வழக்கம்போல கலைஞரும் “உடன்பிறப்பே” என்று கடிதம் எழுதுவிட்டு கனிமொழிக்காக தில்லி சென்றிருக்கிறார். இனிமேலும் எதற்கு மத்திய அரசில் பங்கு வகிக்கவேண்டும் என்று நியாயமான கேள்வி எழுப்பினால் உங்களைப்போல முட்டாள் யாருமே இல்லை. மீதி இருக்கும் அமைச்சர்களை எப்படி காப்பாற்றுவது. ஆனாலும் கலைஞர் ஒன்றும் செய்யவேண்டியதில்லை என்றே சொல்லுவேன். நாலு வருடம் அறிவாலயத்தில் ஓய்வு எடுத்துவிட்டு, கடைசிவருடம், “தமிழக அரசின் அராஜகங்கள் பாரீர்” என்று அவ்வப்போது குரல்கொடுத்தால் போதும், அடுத்த ஆட்சி கலைஞர் கையில். அட,குரல்கூட கொடுக்கவேண்டாம், அமைதியாக இருந்தாலே போதும், கண்டிப்பாக அடுத்து திமுக ஆட்சிதான். ஏனென்றால், 5 வருட காண்டிராக்ட் முடிந்து தமிழக மக்கள் நியதிப்படி, அடுத்த காண்டிராக்ட் அவர்தானே எடுக்கவேண்டும்

எண்ணைய்சட்டி போல் இருக்கிறது, தண்ணி டாங்கு போல இருக்கிறது என்று காரணம் காட்டி, பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய தலைமைச்செயலகத்திற்கு என்ன கதி என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழகஅரசின் கொள்கைவிளக்க துறை என்று ஆரம்பித்து, அனைத்து அலுவலர்களும் பச்சை நிற உடை அணிந்து, அந்த அலுவலகத்தில் வேலைபார்க்கும் நிலை வந்தாலும் ஆச்சர்யபடுவதில்லை. கடற்கரையோரம் சிலம்பை நீட்டிக்கொண்டு நிற்கும் கண்ணகிக்கும் இப்பவே லைட்டா காய்ச்சல் அடிப்பதாக காற்றுவாக்கில் செய்திகள் வருகின்றன.

அரசுவேலை பார்ப்பதற்கு, கல்லூரி படிப்பெல்லாம் படிக்கவேண்டும் என்ற தகுதி போய், நாக்கை வெட்டலாமா, விரலை வெட்டலாமா என்று பலபேர் யோசித்துக்கொண்டிருப்பதாகவும் கேள்விப்படுகிறேன்..”நம்ம நாக்கைதான் வெட்டணுமா..புருசன் நாக்கை வெட்டுனா, எங்களுக்கு வேலை தருவாய்ங்களா பாஸ்” என்று மனைவிமார்கள் வாய்ப்பு தேடிகொண்டு இருப்பதும் காற்றுவாக்கில் வந்து கிலியேற்படுத்துகின்றன. மனைவி காய்கறி வெட்டும்போது, கண்டிப்பாக வாய்மூடி இருக்கவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.

மொத்தத்தில் மூன்று வார தமிழக ஆட்சி ஓகே என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. ஆனால் “அது வேற வாயி..இது நாற வாயி” என்பது போல், இன்னும் சசிகலா என்னும் பேட்ஸ்மேன் களத்திலேயே இறங்காததால் எதையும் உறுதியாக சொல்லமுடியவில்லை..

7 comments:

Ashwin-WIN said...

//“அது வேற வாயி..இது நாற வாயி” என்பது போல், இன்னும் சசிகலா என்னும் பேட்ஸ்மேன் களத்திலேயே இறங்காததால் எதையும் உறுதியாக சொல்லமுடியவில்லை..//
ஸ்ட்டார்டிங் எல்லாம் ஒரு மாதிரிதான் இருக்கு. பினிஷிங் என்னமாதிரி இருக்கப்போதோ.

//ஓடுறோம், கடைசி, கடைசின்னு ஒரு செயினை அறுத்துட்டு ஓடுவோமே என்று திருடன் இதை செய்திருக்கிறான், என்ற புரிந்துணர்வு உங்களுக்கு வந்துவிட்டாலே போதும்,//
ஹா ஹா நல்லாத்தான்யா ஜோசிக்குரீங்க..

Ashwin Win
அஷ்வின் அரங்கம்.

Dr. Selvaganesan said...

புதிதாக வரும் எல்லா அரசுகளும், சிறிது காலத்திற்கு மிக உத்தமமாக நல்ல முறையில் ஆட்சி செய்வார்கள். குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் தெரியும் சேதி.

pemmukutti said...

//ஏனென்றால், 5 வருட காண்டிராக்ட் முடிந்து தமிழக மக்கள் நியதிப்படி, அடுத்த காண்டிராக்ட் அவர்தானே எடுக்கவேண்டும்//

மக்களோட தார்மீக கோபத்தை இப்படி நீங்க கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்.

ஆட்சி மாறும் என தெரிந்துமே அரசியல்வாதிங்க ஆடுகிற ஆட்டம் தாங்க முடியல. இதுல தொடர்சியா ஒருவரே ஆட்சில இருந்தா தமிழ்நாட்டு விளங்கிடும்

கவிதை பூக்கள் பாலா said...

nallathan irukku
inkeyum anka
http://redhillsonline.blogspot.com/

Lali said...

//கடற்கரையோரம் சிலம்பை நீட்டிக்கொண்டு நிற்கும் கண்ணகிக்கும் இப்பவே லைட்டா காய்ச்சல் அடிப்பதாக காற்றுவாக்கில் செய்திகள் வருகின்றன.

அரசுவேலை பார்ப்பதற்கு, கல்லூரி படிப்பெல்லாம் படிக்கவேண்டும் என்ற தகுதி போய், நாக்கை வெட்டலாமா, விரலை வெட்டலாமா என்று பலபேர் யோசித்துக்கொண்டிருப்பதாகவும் கேள்விப்படுகிறேன்..”நம்ம நாக்கைதான் வெட்டணுமா..புருசன் நாக்கை வெட்டுனா, எங்களுக்கு வேலை தருவாய்ங்களா பாஸ்” என்று மனைவிமார்கள் வாய்ப்பு தேடிகொண்டு இருப்பதும் காற்றுவாக்கில் வந்து கிலியேற்படுத்துகின்றன. மனைவி காய்கறி வெட்டும்போது, கண்டிப்பாக வாய்மூடி இருக்கவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.//

சும்மா போட்டு தாக்கிட்டீங்க! ஆனாலும் அத்தனையும் உண்மை உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை :)
http://karadipommai.blogspot.com/

அவிய்ங்க ராசா said...

நன்றி அஸ்வின்
நன்றி ரமேஷ்
நன்றி எஸ்
நன்றி பெம்முக்குட்டி
நன்றி பாலா
நன்றி லாலி..

Anonymous said...

கொலைஞர் ஆட்சிக்கு வந்து இன்னும் நாட்டை சுரண்டி குடம்பத்தை வளர்க்கலைன்னு ரொம்ப வருந்திறாப்ல இருக்கு!

Post a Comment