கடந்த மாதம் மதுரையில் என் உறவினர் வீட்டில் விசேஷம் வைத்திருந்தார்கள். வரவேற்பிற்காக ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். பொதுவாக எனக்கும் வரவேற்பிற்கும் ரொம்ப தூரம். முகத்தில் போலி சிரிப்பை வைத்துக் கொண்டு “நல்லா இருக்கீங்களா..என்ன ஆளையே காணோம்” என்று முந்தா நாள் பார்த்தவர்களை பார்த்து கேட்க, அவரும் அசடு வழிந்து “இல்லீங்க..கொஞ்சம் வேலை அதிகம்” என்று சொல்ல, நம் பண்பாட்டை காப்பாற்றியதாக பெருமை கொள்ள எனக்கு பிடிப்பதில்லை. அதுவும், நான் வீட்டு கடைசிப் பையன் என்பதால் ஒருவேலை செய்ய விடமாட்டார்கள். ஏதாவது வேலை செய்யலாம் என்று அருகில் இருந்த பெரிய அண்டாவை எடுத்து சமையலறையில் வைத்தால் “யோவ்..இப்பதான்யா அந்த அண்டாவை கழுவறுதுக்கு எடுத்து வெளியே வைச்சோம்” என்று சத்தம் போட்டார்கள்.
உங்களுக்கு கல்யாணம் ஆகாவிட்டால்,விசேசங்களில் அடிக்கடி கேட்கும் டயலாக்..”என்னப்பா...எப்ப கல்யாண சாப்பாடு போடப்போற..” கல்யாணம் முடிந்துவிட்டால் கேட்கும் டயலாக்குகள்..”என்ன வீட்டில எதுவும் விசேசம் இருக்கா..” தாங்க முடியாமல், ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்..பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த என் அண்ணன் கடுப்பாக என் அருகில் வந்தார்..
“டே..ராசா..விசேச வீட்டுக்காரன் மாதிரியா இருக்க..ஏதோ விருந்தாளி மாதிரில்ல நின்னுக்கிட்டு இருக்க.,.”
“ஏண்ணே..ஒரு வேலையும் பண்ண விட மாட்டுறீங்க..நான் என்ன பண்ண..”
“ஏண்டா..வந்தவங்களை..வாங்க..சாப்பிட்டீங்களா..சாப்பிடுங்க..” ன்னு கூப்புடுறதுக்கு தனியா சொல்லித்தரணுமா…”
சொல்லி விட்டு கிளம்பி விட்டார்..எனக்கும் சங்கடமாக போய்விட்டது. இப்ப யாரையாவது கூப்பிட்டு “சாப்பிட்டீங்களா” ன்னு கேட்கணுமே..யாரையாவது கூப்பிட்டு கேட்கலாமுன்னு பார்த்தா, எல்லாரும் கொலைவெறியில திரியிறாயிங்க..பந்தில இடம் கிடைக்காத கோபம், அனைவரின் கண்களிலும் தெரியவே..ஒருவர் மட்டும் பரபரப்பாக வந்து கொண்டிருந்தார்..மாட்டுனாருய்யா என்று அவரின் கையை உரிமையாக பிடித்துக் கொண்டேன்..
“என்ன பங்காளி..சாப்பிட்டீங்களா..இருந்து ஒருவாய் சாப்பிட்டுதான் போகணும்..”
ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்தார்.
“இல்ல தம்பி நாங்க எல்லாம் கடைசியா சாப்பிடுறோம்..”
“என்னது..கடைசியா..என்னண்ணே..நீங்கதான் முக்கியமான ஆளு…நீங்க சாப்பிடலைன்னா எப்படி..வாங்க முதல்ல..”
“வேணாம் தம்பி..நான் போகணும்..வேலை இருக்கு..”
“அண்ணே..அப்படி எல்லாம் சொல்லக்கூடாது..ஒரு வாய் சாப்பிட்டுதான் போகணும்..”
அப்படியே கையை உதறினார்..கடுப்பு கண்களில் தெரிய..
“யோவ்..யாருய்யா நீ….நான் பாயாசம் ஊத்துற ஆளுய்யா..உள்ள பாயாசம் இல்லாம அடிதடி நடந்துக்கிட்டு இருக்கு..வெளியே வந்து பாயாச சட்டி எடுத்துட்டு போகலாமுன்னு பார்த்தா..நீ அலும்பு பண்றியா..*****”
அவர் கெட்ட வார்த்தை பேசும்முன்பு கையை விட்டுவிட்டேன்..என்னால் இதற்கு மேல் பொறுக்கமுடியவில்லை. காலையில் சாப்பிடாததால் பசிவேறு வயிற்றை கிள்ளியது. சரி சாப்பிட்டு வரலாம் என்று டைனிங்க் ஹாலைநோக்கி சென்று பார்த்தவன் அதிர்ந்தே விட்டேன். மகாபாரதப் போர், டிவியில் தான் பார்த்திருக்கிறேன். அன்றைக்குதான் நேரில் பார்க்கிறேன். எல்லாரும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார்கள். ஒருத்தர் எல்லாம் சாம்பார், ரசம், மோர், திரும்பவும் சாம்பார் என்று வாழ்க்கை ஒரு வட்டம் என்று நிரூபித்து கொண்டிருந்தார்..ஒவ்வொருத்தர் முகத்திலும் ஒரு கொலைவெறி தெரிந்தது.
“டேய்..வெண்ணை..சாம்பார் கொண்டு வாடா..எம்புட்டு நேரமா கூப்பிடுறது..”
“ரசத்து மேல சாம்பாரை அப்படியே ஊத்துங்க பார்ப்போம்..”
“யோவ்..அப்பளம் எங்கயா…பொரியல காணோமேயா..”
“பாயசத்தை அப்படியே கப்புலயும் ஊத்தப்பு..ஏதோ வீட்டு சொத்து போற மாதிரி இம்புட்டுகாண்டு ஊத்துறியே..”
“அடியே..லட்டு என்ன இம்புட்டு சின்னதா இருக்கு..ஏமாத்துறீங்களா..”
“பங்காளி..பக்கத்து இலைக்காரர் எம்புட்டு நேரமா பொரியல் கேட்டுக்கிட்டே இருக்காரு..அப்படியே எனக்கும் வைப்பா..”
ஒருத்தருக்கு பாயசத்தில் அப்பளம் சரியாக நொறுங்காமல் தகராறு செய்ததால் “சொத்” தென்று ஒரு குத்துகுத்த, பாயசம் பக்கத்தில் இருப்பவர்கள் முகத்தில் தெரிக்கவே..”எம்புட்டு பார்த்திருக்கோம்.” என்று துடைத்து விட்டு புல்கட்டு கட்டிக்கொண்டுருந்தனர்..எனக்கு தலை சுற்றிக் கொண்டுவந்தது. அப்படியே கைத்தாங்கலாக ஒரு இடத்தை பார்த்து உக்கார்ந்தால் எதன் மேலேயோ உக்கார்ந்தது போல் இருந்தது. எழுந்து பார்த்தால் அவ்வளவு பெரிய துண்டுண்ணே..ஒரு பத்து சீட்டுக்கு விரித்திருந்தார்கள்..அதன் நுனியைப் ஒரு மீசைக்காரர் பிடித்திருந்தார்..”தம்பி..அப்பவே சீட்டு போட்டுட்டோம்..” என்று முறைத்தார்..முறைப்பிலும் “எம்.எல்.ஏ” சீட்டு வாங்கிட்டோமுல்ல என்ற மாதிரியான பெருமிதம் தெரிந்தது. திரும்பி பார்க்கிறேன்..ஒரு சீட்டுக்கூட இல்லை. அவ்வளவுதான் எழுந்து வெளியே வந்து, பார்க்கிறேன்…ரஜினி பட ரிலீஸ் மாதிரி வெளியில கதவை தள்ளிக்கிட்டு ஒரு கூட்டம்..கதவை அடைத்துக்கொண்டு ஒருத்தர் நின்று காவல் காத்து கொண்டிருந்தார்..அங்கு நடந்த தள்ளுமுள்ளுவில் ஜெயிக்க முடியாமல் என்னை அப்படியே பொடணியை புடித்து ரோட்டில் தள்ளிவிட்டார்கள். சிறுவயதில் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணியபோது “ஒருநாளைக்கு சோத்துக்காக தெருவில் நிப்படி” என்று அப்பா திட்டியது நினைவுக்கு வந்தது..கடுப்புல எந்திருச்சு வெளியே வர்றேன்..என்னை மாதிரி அங்கிட்டு நின்னுக்கிட்டு இருக்குறவன் கேக்குறான்..
“என்ன பங்காளி..சாப்பிட்டீங்களா..இருந்து ஒருவாய் சாப்பிட்டுதான் போகணும்..”
10 comments:
Anne sappteengala, oru vai sapputtu thaan poganum.. vannganne..
காப்பி சாப்டீங்கலான்னா டீ சாப்டீங்கலான்னா
அண்ணே. இந்த ஜிப்பா என் கண்ணுக்குள்ளே நிக்குதுன்னே.. ஜிப்பா சூப்பர்... ரெண்டு வாரத்துக்கு முன்னாடி எனக்கு நடந்த மாதிரியே இருக்கு... விழுந்து சிரித்தேன்...
madhuraila ippdina chennai la epadi irukum? konjam yositchu paarunka!
இதுக்குதான் பந்திக்கு முந்துன்னு சொன்னாங்க!!! ஹய்யோ...ஹய்யோ..!!!
கலைஞ்சு கிடக்கிறது உங்க இலையா???
www.narumugai.com
ரசித்தேன்.
http://visaran.blogspot.com/
//“என்ன பங்காளி..சாப்பிட்டீங்களா..இருந்து ஒருவாய் சாப்பிட்டுதான் போகணும்..”//
எங்கூர்ல (கோயமுத்தூர்) இதயெல்லாம் இப்ப உட்டுட்டோம். வேணும்னா அவங்கவங்க போய்ச்சாப்டுக்க வேண்டியதுதான்.
கல்யாண வீட்டை நல்லா ரசித்து இருக்கீர்கள்..ரசம் சூப்பர்
நல்லா பந்தி விசாரிச்சீக தம்பி! அனுபவித்து சிரித்தேன்.அழகா எழுதுறீய... வாழ்த்துக்கள்
மோகன்ஜி,ஹைதராபாத்
http://vanavilmanithan.blogspot.com
Post a Comment