
என்னவென்று தெரியவில்லை. இந்த வாரம் எனக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இவ்வளவு நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இதுவரை நான் இருந்ததில்லை. இந்த வாரம் முழுவதும் எனக்கு வித்தியாசமான அனுபவங்களையும், கணங்களையும் கொடுத்திருக்கின்றன. நான் இவ்வளவு மகிழ்ச்சியாக ஒரு பதிவு இட்டதில்லை. காரணம் அப்பா, அம்மா..
இந்த வாரம் திங்களில், அம்மா, அப்பா சென்னைக்கு வந்திருந்தார்கள்..நான் இதுவரை பலமுறை அழைத்திருக்கிறேன். சென்னைக்கு வர என்றுமே அவர்கள் விரும்பியதில்லை. எப்போதும் இருமாப்பாக நிற்கும் அடுக்குமாடி குடியிருப்புகளும், ஏதோ சொத்தை திருட வந்தமாதிரி முறைத்து கதவை சாத்திக் கொள்ளும் அண்டை வீட்டுக்காரர்களும், எப்போதும் பரபரப்பாக காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல் திரியும் நகர மக்களும், எப்போதும் காது வழியே சென்று மூளை வரை கேட்கும் வாகன சத்தங்களும், “அய்யே..ஒத்திக்கப்பா..” என்று எந்த டிக்சனரியிலும் இடம்பெறாத சென்னை தமிழ் வார்த்தைகளும், அசின் கலரில் சென்றாலும், திரும்பும் போது என் கலருக்கும் மாற்றி விடும் வாகனப் புகையும், கேனில் அடைக்கப்பட்டு தவணைமுறையில் திறந்து விடப்படும் குடிதண்ணீரும், வேளச்சேரியிலிருந்து கிண்டிக்கு போக மனசாட்சியே இல்லாமல் ஆட்டோ டிரைவரால் கேட்கப்படும் நூறு ரூபாயும், “நாங்களும் பணம் வைச்சிருக்கோம்ல” என்று காண்பிப்பதற்காக வலுக்கட்டாயமாக சத்யம் தியேட்டரில் வாங்கப்படும் 40 ரூபாய் பப்ஸூம், “எக்ஸ்கீயூஸ்மீ ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ” என்று சோழவந்தான்காரனிடம் இளக்காரமாக கேட்கப்படும் ஆங்கிலமும் என் பெற்றோர்களுக்கு அன்னியமாகவே தெரிகின்றன. ஏதோ இன்னொரு கிரகத்தில் வாழ்வதாகவே உணர்கிறார்கள். இதற்காகவே எத்தனை முறை அழைத்தாலும் அவர்கள் சென்னைக்கு வருவதில்லை.
ஆனால் இந்த முறை தட்டிக் கழிக்க முடியவில்லை. காரணம் அப்பா. அப்பாவிற்கு கடந்த ஒரு வருடமாக காது கேட்பதில்லை. சிறிது சிறிதாக கேட்கும் திறன் மங்கிய காது, கடந்து ஒரு வருடமாக முழுவதும் செயல் இழந்தது. அப்பாவிற்கு புரியவைப்பதற்காகவே நாங்கள் சத்தமாக பேச பழகிக் கொண்டோம். சைகைகளையும் பயன்படுத்த ஆரம்பித்தோம். ஆனாலும் அவருக்கு இது ஒரு குறையாகவே பட்டது. இருவர் சாதரணமாகவே பேச ஆரம்பித்தாலே ஏதோ ரகசியம் பேசுவதாய் எண்ணிக் கவலைப்பட ஆரம்பித்தார்கள். சத்தமாய் பேசி, பேசி அலுத்துப் போனதாலோ என்னவோ, சில விஷயங்கள் அப்பாவிடம் சொல்லுவது தவிர்க்கப்பட்டது. பின்னால் தெரிய வரும்போது அப்பா மிகவும் கவலைப்பட்டார்கள்..”என்ன செவிடன்னு நினைச்சுக்கிட்டுதான இதெல்லாம் சொல்லலை” என்று வெளிப்படையாக கோபப்பட்டார்கள். ஒருமுறை நண்பர்களோடு வாக்கிங் செல்லும்போது பேசப்பட்ட விஷயத்தைப் பற்றி அப்பா விளக்கம்கேட்க “உனக்கு ஒன்னும் புரியாது..” என்று நண்பர்கள் கிண்டல் செய்ய, மிகவும் வருத்தப்பட்டு போனார்கள்.
இதற்கு மேல் கஷ்டப்படக்கூடாது என்று அப்பாவை உடனே கிளம்பி வரச்சொன்னேன். முன்னதாக மந்தவெளியில் உள்ள பிரபல இ.என்.டி மருத்துவரிடம் ஒரு மாதத்திற்கு முன்னரே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி விட்டேன்.. திட்டமிட்டபடி செவ்வாய்கிழமை மருத்துவரிடம் அப்பாவை அழைத்து சென்றேன். காதுகளைப் பரிசோதித்த மருத்துவர் சில டெஸ்ட்களை பரிந்துரை செய்தார். புதன் கிழமை டெஸ்ட் எடுக்கப்பட்டது..”வயதாகிவிட்டதால் இனி சர்ஜரி செய்ய வேண்டாம்” என்று காதுகேட்கும் மிஷின் வாங்க அறிவுரை செய்தார்கள். காது கேட்கும் மிஷின் வாங்க அடையாரில் உள்ள ஒரு இடத்திற்கு சென்றேன். அங்கு உள்ளவர், மருத்துவர் பரிந்துரைகளை சரிபார்த்துவிட்டு இரண்டு மிஷின்களை எடுத்து ஒலி அளவை சரி செய்தார். முடித்தபின்பு அப்பா காதில் மெதுவாக பொருத்தினார்.
அப்போது அப்பா முகத்தை கவனித்தேன். இதுவரை அப்பாவை அவ்வளவு சந்தோசமாக பார்த்ததில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பா என்னிடமும் முதலில் பேசிய வார்த்தை..”மண்ணாங்கட்டி..இது உருப்படுமா… பக்கத்து வீட்டுக்காரனைப் பாருடா..அவன் ******* வாங்கி குடி..” நான் படிக்க மறுத்து கிரிக்கெட் விளையாட செல்லும்போது கோபத்தில் கூறிய வார்த்தைகள். அன்றிலிருந்து அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லராக தெரிந்தார். அதுவும் கிரிக்கெட் ஒளிபரப்பாகும் சமயங்களில் டீ.வியைப் பூட்டி வைக்கும்போது அப்படியே எழுந்து அடிக்கலாமா என்று தோணியது. சிறுபிள்ளைத்தனமாக அதையும் முயற்சி செய்தேன். நண்பனோடு சேர்ந்து தெருமுனையில் ஒளிந்து கொண்டு அப்பாவை கல்லால் அடிப்பதாய் திட்டம். ஆனால் “வாத்தியார் அடிப்பாருடா” என்று கடைசி நிமிடத்தில் நண்பன் பின்வாங்க, திட்டம் முடியாமல் போனது. அம்மா, தியாகத்தின், அன்பின் அடையாளமாக இருந்திருக்கிறார்கள் என்றால் அப்பா எனக்கு எப்போதும் கண்டிப்பின் சின்னமாக இருந்திருக்கிறார்கள். ஏதாவது ஒரு சினிமாவிற்கு செல்லும்போது கூட ஒரு மாதத்திற்கு முன்னமே அனுமதி வாங்க வேண்டும். ஆனால் இவற்றுக்கெல்லாம் பலன் நான் பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தபோது தெரிந்தது. என்னை திண்டுக்கல்லில் ஒரு ஹாஸ்டலில் சேர்த்து வீட்டு அந்த பழைய தகர பெட்டியை தலையில் வைத்து ரோட்டில் நடக்கும்போதுதான் அப்பாவின் அன்பு தெரிந்தது. அம்மாவினுடைய அன்பு வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் அப்பாக்கள் செய்யும் தியாகங்கள் வெளியில் தெரிவதில்லை. அதெல்லாம் உணரத்தான் முடியும். அன்றுதான் நானும் உணர்ந்தேன். என்னதான் திட்டினாலும் அனைத்தும் என் நன்மைக்கே. என் முன்னேற்றத்துக்கே.நான் படிபடியாக வளர்வதைப் பார்த்து மறைவாக நின்று சந்தோசப்பட்ட ஜீவன். அதெற்கெல்லாம் மூலகாரணமாக இருந்து தன் உழைப்பை அர்ப்பணித்த ஜீவன். அப்பாவின் தியாகமெல்லாம் வெளியில் தெரிவதில்லை..
அப்பேர்பட்ட அப்பாவின் முகத்தில் அன்றுதான் நான் அவ்வளவு சந்தோசத்தைப் பார்க்கிறேன்.
“எனக்கு நல்லா கேட்குதுப்பா..”
“அப்பா..நான் பேசுறது.,.கடைக்காரர் பேசுறது..”
“எல்லாம் கேட்குதுப்பா..”
கடைக்காரர் முயற்சித்தார்..
“அய்யா..நான் தூரமா தள்ளி நின்னு கேள்வி கேக்குறேன். கேக்குதான்னு சொல்லணும்..அதுக்கேத்த மாதிரிதான் நான் மிஷின் ஒலி அளவை செட் பண்ண முடியும்..புரியிதா..”
அப்பா தலை ஆட்டினார்கள்..அவர் கேள்வி கேட்க ஆரம்பித்தார்..
“அய்யா..எந்த ஊரு..”
“சோழவந்தான்..”
“என்ன வேலை பார்க்குறீங்க..”
“ரிட்டையர்ட் வாத்தியார்..”
“இப்ப எங்க வந்திரிக்கீங்க..”
“சின்ன மகன் வீட்டுக்கு..”
“எப்படி கவனிச்சுக்கிறாங்க..”
“உசிரையே விடுறாங்க..”
“சந்தோசமாக இருக்கீங்களா..”
“இதுக்குமேல் எனக்கு என்ன வேணும்..”
கடைக்காரர் என்னைக் கூப்பிட்டு அப்பாவை ரோட்டோரம் அழைத்து சென்று ஒலி அளவுகளை சரிபார்க்க சொன்னார்கள். நானும் அழைத்து சென்றேன்..
“அப்பா..வெளியில சத்தம் எல்லாம் கேக்குதா..”
அப்பா குழந்தையாகிப்போனார்கள்..
“ஹை..ஆட்டோ சத்தம்..ஏதோ குழந்தை அழுகுதுப்பா..அப்புறம் ரேடியோவில ஏதோ பாட்டு போடுறாயிங்க….பஸ் ஹாரன்….யாரோ யாரையோ திட்டுறாயிங்க..”
ஐந்து நிமிடத்திற்கு குழந்தையாகிப்போனார்கள். அவர்களை அப்படியே விட்டு விட்டேன். அவர்களால் ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை. ஒரு வருடமாக உங்களை இருட்டறையில் விட்டு விட்டு வெளியே கொண்டு வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். நான்கு நாட்கள் பட்டினி போட்டு விட்டு, சாப்பாட்டை காட்டினால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது அப்பாவினுடைய சந்தோசம். ஐந்து நிமிடம் கழித்து கடைக்குள் சென்றோம்..கடைக்காரரிடம் விலையைக் கேட்டேன்..
“எவ்வளவுங்க..”
“ஓரு மிஷின் 30,000 ரூபாய்..இரண்டு மிஷின் சேர்த்து 60,000 ரூபாய்..”
அவ்வளவுதான் அப்பா முகம் இருண்டு போனது. இதுவரை இருந்த சந்தொசமெல்லாம் சுத்தமாக வடிந்து போனது. வெளிச்சத்திலிருந்து திரும்பவும் இருட்டிற்கு கொண்டு போனது போல் உணர்ந்தார்கள். என்னை தனியே அழைத்தார்கள்..
“ராசா..எனக்கு இந்த மிஷின் வேணான்டா..”
“ஏம்பா..”
“அறுவதாயிரம் சொல்லுறாயிங்க..அம்புட்டு காசா..நான் இருக்குறது எவ்வளவு நாளோ..இப்படியே கழிச்சிட்டு போறேண்டா..இம்புட்டு காசு வேணான்டா..”
நான் யோசிக்கவேயில்லை. அப்பா முகத்தில் நான் பார்த்த அந்த பத்து நிமிட சந்தோசத்திற்கு அறுபதாயிரம் என்ன கோடி ரூபாய் கொடுக்கலாம். ஒரு மாதத்தில் சம்பாதித்துவிடுவேன் இந்த காசை..ஆனால் அப்பா முகத்தில் சந்தோசத்தை…ஒன்றுமே பேசமால் உள்ளே சென்று என்னுடைய கிரடிட்கார்டை கொடுத்தேன் என் அப்பா எவ்வளவு சொல்லியும் கேட்காமல்.
வீடுவரைக்கும் சிறிது வருத்தத்தோடுதான் வந்தார்கள். வீடு வந்தவுடன் சகஜ நிலைக்கு வந்தார்கள். அம்மாவிடம் காது கேட்பதை பெருமையாக சொன்னார்கள்..”இனிமேல் எனக்கு தெரியாமல் நீ எதுவும் ரகசியம் பேச முடியாதே..” என்று குதுகலித்தார்கள். இரண்டு நாட்களாக அதிகம் சத்தம் கொடுக்கும் பொருட்களுக்கு அருகில் நின்றார்கள். இரண்டு நாட்களும் சொர்க்கத்தை உணர்ந்தார்கள்.
எல்லாம் முடித்துவிட்டு நேற்றுதான் முத்துநகர் எக்ஸ்பிரஸ் செல்லும் ரயிலில் ஏற்றுவதற்கு சென்றேன். அம்மா, அப்பாவை அமரச் சொல்லிவிட்டு உணவு, தண்ணீர் வாங்கி கொடுத்தேன்.
“நீ கிளம்புப்பா..டிரெயின் கிளம்பப்போகுது..”
“சரிங்கப்பா..பத்திரமா போயிட்டு வாங்கப்பா..”
கிளம்பினேன். டிரெயின் மெதுவாக நகர ஆரம்பித்தது. திடிரென்று “ராசா” என்று அப்பா கூப்பிடும் சத்தம். ரயிலிலிருந்து அவசரமாக இறங்கி என்னை நோக்கி வந்தார்கள்..வந்தவுடனே என் கையை இறுகப் பற்றினார்கள். எத்தனை முறை என்னை அடித்த கை இன்று அன்பாக…இவ்வளவு இறுக்கமாக என் அப்பா இதுவரை என்னைப் பிடித்ததில்லை..
“நன்றிப்பா..”
எதற்குமே கலங்காத அப்பா முகத்தில் இன்றுதான் முதல்முறையாக கண்ணீரைப் பார்க்கிறேன்..நான் ஒன்றும் பேசவில்லை..
அவசரம் அவசரமாக ரயிலில் ஏறினார்கள்.. ரயில் என்னை விட்டு அகல, ஒரு வாரமாக எனக்கு கிடைத்த அன்பும் என்னை விட்டு அகலுவதாக உணர்ந்தேன். சிறிது, சிறிதாக என்னை விட்டு அகன்ற அந்த ரயில் தூரத்தில் ஒரு புள்ளியாகிப்போனது. முழுவதும் அகலும்முன்பு ரயிலின் சைரன் சத்தம் மட்டும் பெரியதாக ஒருமுறை கேட்டது..
என் அப்பாவிற்கும் அந்த சத்தம் கேட்டிருக்கும்தானே…