Sunday, 14 February, 2010

தீராத விளையாட்டு பிள்ளை-விமர்சனம்

காதலர் தினத்தன்று ஐநாக்ஸ் சென்றிருந்தேன். காதலிக்க அல்ல. சென்னை எவ்வளவு தூரம் மேல்நாட்டு கலாச்சாரப் போர்வையைப் போர்த்தியிருக்கிறது என்று பார்ப்பதற்கு. சும்மா சொல்லக்கூடாது, கணுக்காலிருந்து முட்டிக்கால் வரை ஏறியிருக்கிறது. எப்போதும் அலட்சியப்பார்வையுடன் ஹைடெக் பெண்கள் ஸ்டைலாக நடந்து போவதைப் பார்ப்பதற்கே, தீராத விளையாட்டுப் பிள்ளைகளாக ஒரு இளைஞர் கூட்டம். எப்படியாவது ஒரு காதலி கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் ஒவ்வொருத்தர் முகத்திலும் தெரிந்தது., ஜோடியாக செல்லும் ஆட்களைப் பார்க்கும்போது வயிறும், மனதும் கருகும் வாசனையும் அரங்கு முழுவதும் நிரம்பி இருக்கிறது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாக “டூ சாண்ட்விச் ப்ளீஸ்” என்று அப்பன் நெற்றி வியர்வை விழுந்து சம்பாதித்த 500 ரூபாய் அநியாயமாக தூக்கி எறியப்படுகிறது. அதை வாங்கி ஸ்டைலாக இளம்பெண்கள் பார்வையில் படும்படி எடுத்து செல்லும்போது அவர்கள் முகத்தில் உள்ள பெருமிதத்தைப் பார்க்க வேண்டுமே.

இதில் கீழ்தளத்தில் விளம்பரத்திற்காக அமைக்கப்பட்ட கவுண்டரில் இருந்து மைக்கை எடுத்துக் கொண்டு “எக்ஸ்கியூஸ்மீ..டிட் யூ பைண்ட் யுவர் லவ்வர்” என்று இளவட்ட பசங்களை துரத்தினர். அவர்களும் “ஆக்சுவலி” என்று ஆரம்பித்தபோது அவசரமாக இடத்தை காலி பண்ணினேன்.

மனைவி ஏதாவது படம்பார்க்கலாம் என்று சொன்னதால் ஐநாக்ஸ் தியேட்டர் சென்றோம். “தீராத விளையாட்டு பிள்ளை”, “கோவா”, மற்றும் “ஓநாய் மனிதன்” ஆகிய மூன்று படங்களுக்குதான் டிக்கெட் கிடைத்தது. ஓநாய் மனிதனை தினமும் கண்ணாடியில் பார்ப்பதால், கோவா, தீராத விளையாட்டுப்பிள்ளை இரண்டில் ஏதாவது என் நினைத்து சென்றால், தீராத விளையாட்டுப்பிள்ளைக்கு டிக்கெட் கிடைத்தது. இனி விமர்சனம்..

வாழ்க்கையில் எதை செய்தாலும் பெஸ்ட் வேண்டுமென்று நினைப்பவர் விஷால். அப்படி நானும் நினத்திருந்தால் இந்த படத்துக்கு சென்றிருக்கவே மாட்டேன். சிறுவயதிலிருந்தே ஒரு பேனா வாங்குவதற்கு கூட பத்து பேனாவை எடுத்து எழுதிப்பார்த்து ஒரு பேனாவை செலக்ட் செய்கிறார். ஆனால் அதற்காக வாழ்க்கை துணையையும் மூன்றில் ஒன்றாய் செலக்ட் செய்ய நினைத்து அவர் படுத்தும் மன்னிக்கவும் படும் கஷ்டங்கள்தான் கதை. சென்னையில் இதுபோன்ற குணாதிசியம் கொண்டவர்கள் குறைவு என்பது “தமிழ்படம்”, கோவா” ‘தீராத விளையாட்டுப்பிள்ளை” என்ற மூன்றில் இதை செலக்ட் செய்து வந்திருந்தபோது தெரிந்தது.

விஷால் காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். சிலநேரம் சிரிக்க வைக்கிறார். ஆனால் கடுப்பேத்தவில்லை என்பது ஆறுதல். ஆனால் எதற்கெடுத்தாலும் “நாங்க எல்லாம் ஆம்பிளைங்க”,”பெண்கள் இப்படித்தான் டிரஸ் உடுத்த வேண்டும்” என்று ஆணாதிக்க டயலாக் பேசும் விஜய், சிம்பு வரிசையில் இணைந்துவிட்டார். அடிக்கடி பேசும் பஞ்ச் டயலாக்குகள், புரட்சி தளபதி சீக்கிரம் அரசியலில் சேர்ந்து அமைச்சரோ, முதலமைச்சராகும் வாய்ப்புகளைத் தெரிவிக்கின்றன. அதற்கு சாட்சியாக முதல் வரிசையில் அமர்ந்து விசிலடிக்கும் கூட்டமும், இதுவரையிலும் ஓட்டே போடாததை பெருமையாக நினைக்கும் கடைசி வரிசை கூட்டமும் கைதட்டும்போது உணர முடிந்தது.

படத்தில் மூன்று ஹீரோயின்கள். ஒருமுறையாவது முழுசாக உடுத்தி பார்க்க ஆசைப்பட்டு படம் கடைசிவரையில் முடியவில்லை. கவர்மென்ட் குடியிருப்பில் தங்கியிருக்கும் நடுத்தர குடும்பத்து ஹீரோயின் கூட டவுசர் போட்டு கொண்டு திரிவது தமிழ்படங்களின் தலையெழுத்து அல்லது இளைஞர் கூட்டத்துக்கு அதிர்ஷ்டம் என்று சொல்லலாம். மூன்று ஹீரோயின்களில் ஒருத்தர் கூட கடைசிவரை நடிக்கவில்லை. கவர்ச்சி காட்டுவதில் ஒரு பங்காவது நடித்திருக்கலாம். படத்தின் முதல் ஹீரோ கேமிராமேன் அரவிந்த்கிருஷ்ணாவை சொல்லலாம். தெளிவான காட்சிகள். ஒவ்வொன்றும் கலர்புல்லாக.

முதல் பாதி முழுவதும் நகைச்சுவை கலாட்டா. சந்தானம், மயில்சாமி கூட்டணி நகைச்சுவையில் தியேட்டரே அதிர்கிறது. இடைவேளை வரை படம்போவதே தெரியவில்லை. இடைவேளைக்கு அப்புறம் உயிர் போவதே தெரியவில்லை. ரொம்ப சோதிக்கிறார்கள். அதுவும் கிளைமாக்சை நோக்கி சீரியசாக நகரும்போது நாமும் எக்சிட்டை நோக்கி நகரும் எண்ணம் வருகிறது. ஆனால் அவ்வப்போது பிரகாஷ்ராஜ் வந்து கலகலப்பாக்குவதால் கொஞ்சம் தப்பிக்க முடிகிறது. இப்படி இசையமைத்தால் யுவனும் காணாமல் போகும் வாய்ப்பு உள்ளது. பப்ஸ் 50 ரூபாய் விற்றாலும் பரவாயில்லை என்று பாடல் காட்சிகளில் எல்லாம் எல்லோரும் கேண்டின் நோக்கி ஓடுகிறார்கள்.

ஆனாலும் முதல்பாதி நகைச்சுவை காட்சிகளுக்காகவும், அவ்வப்போது வரும் வித்தியாசமான காட்சிகளுக்காகவும் இயக்குநருக்கு பாராட்டுகள். இடைவேளைக்கு பின்னால் வரும் சவால் காட்சிகள் சோதித்தாலும், படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகளுக்காக படத்தை ஒருமுறை பார்க்கலாம், வேறு நல்ல படங்களுக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால்.

இறுதியாக தீராத விளையாட்டு பிள்ளை – விளையாட்டு கொஞ்சம் ஓவர்தான்.


8 comments:

Cable Sankar said...

புத்தக வெளீயீட்டு வரச்சொன்னா.. படம் பாக்க போயிட்டீங்களா.?

இருங்க உங்களூக்கு 10 புக் பார்சல் அனுப்பறேன்.:)

taaru said...

மொதல்ல ஒரு மெசேஜ் அப்புறமா விமர்சனம்.. புதுசா இருக்கே...!!
அப்போ நம்மள மாதிரி யூத் எல்லாம் படத்த ஒரு தபா பாக்கலாம்ரீறு? விடுங்க பாத்துருவோம்...

Anonymous said...

நீங்க இந்தியா போனதுல இருந்தே ரொம்ப கோவமா இருக்கிங்களேப்பு. கொஞ்கம் கூலாகுங்கய்யா.

taaru said...

ரைட்டு விடுங்க.. அடுத்த வாரம் கௌதம் வாசுதேவ் மேனன் படம் வருதுல..அப்போ பாத்துக்கலாம்...

அவிய்ங்க ராசா said...

////////////////////
Cable Sankar said...
புத்தக வெளீயீட்டு வரச்சொன்னா.. படம் பாக்க போயிட்டீங்களா.?

இருங்க உங்களூக்கு 10 புக் பார்சல் அனுப்பறேன்.:)
14 February 2010 9:00 PM
////////////////////////
மன்னித்துவிடுங்கள் அண்ணா..சிறு வேலை ஆகிவிட்டது. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்..

அவிய்ங்க ராசா said...

//////////////////
taaru said...
மொதல்ல ஒரு மெசேஜ் அப்புறமா விமர்சனம்.. புதுசா இருக்கே...!!
அப்போ நம்மள மாதிரி யூத் எல்லாம் படத்த ஒரு தபா பாக்கலாம்ரீறு? விடுங்க பாத்துருவோம்...
14 February 2010 9:25 PM
/////////////////////
taaru said...
ரைட்டு விடுங்க.. அடுத்த வாரம் கௌதம் வாசுதேவ் மேனன் படம் வருதுல..அப்போ பாத்துக்கலாம்...
18 February 2010 2:05 AM
///////////////////////
சிம்பு படத்தையா..சரி..விதி உங்களை எப்ப விட்டது..)))

அவிய்ங்க ராசா said...

///////////////////////
ruary 2010 9:25 PM
Anonymous said...
நீங்க இந்தியா போனதுல இருந்தே ரொம்ப கோவமா இருக்கிங்களேப்பு. கொஞ்கம் கூலாகுங்கய்யா.
17 February 2010 11:19 AM
///////////////////////
ஆஹா..அப்படியா தெரியுது..)))

அனு win கனவுகள் said...

”வாழ்க்கையில் எதை செய்தாலும் பெஸ்ட் வேண்டுமென்று நினைப்பவர் விஷால். அப்படி நானும் நினத்திருந்தால் இந்த படத்துக்கு சென்றிருக்கவே மாட்டேன்.”

நல்ல பஞ்ச் ! ! ! படம் பார்க்காமலேயே பார்த்த எஃப்க்ட் இருக்கு.. நன்றி

Post a Comment