Saturday, 16 January, 2010

ஊர்ப்பொங்கல்


உங்களுக்கு ஒரு புதிர். நீங்களும் நானும் ஜென்ம விரோதிகள். நானோ பரம ஏழை. குறைந்த செலவில் உங்களை தீர்த்துக்கட்ட வேண்டும். எவ்வளவு செலவாகும்…யோசியுங்கள்..யோசியுங்கள்..விடை என்ன தெரியுமா..2 ரூபாய்..எப்படியா?? விளக்கத்தை பதிவின் கடைசியில் தெரிந்து கொள்ளுங்கள்..

தமிழ்நாட்டு நியதிப்படி, இந்த பொங்கலை ஊருக்கு சென்று கொண்டாடுவது என தீர்மானித்திருந்தேன். புதன் கிழமை இரவு பஸ் பிடிப்பதற்கு கோயம்பேடு சென்றேன். சென்ற புதன் கிழமை கோயம்பேடு சென்றீர்களா..சென்றிருக்க மாட்டீர்கள். ஏனென்றால் சென்றிருந்தால் இதைப் படித்துக் கொண்டு இருக்க முடியாது. எங்கு பார்த்தாலும் டிராபிக்..சென்னையில் உள்ள 20% மக்கள் அனைவரும் கோயம்பேடு சென்றால் , டிராபிக் போலிஸ் என்னதான் செய்வார்கள். பாவம் முழி பிதுங்கி விட்டது…வடபழனியிலிருந்து கோயம்பேடு செல்வதற்குள் நடுவில் உள்ள தியேட்டரில் ஒரு முழு படம் பார்த்து விடலாம்..யப்பா..எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.இன்னும் 2012ல் உலகம் அழிகிறதோ இல்லையோ, சென்னை அழிந்து விடும். ஒரு நரகத்தை சாரி ஒரு நகரத்தை ஒரு கோடிபேர் அழுத்தினால் அது என்னதான் செய்யும்..

பஸ் போக்குவரத்து விதிப்படி, 10:30 மணிக்கு கிளம்ப வேண்டிய பஸ் 12:30க்குதான் கிளம்பியது. ஒரு டிராவல்ஸ் பஸ்தான். டிரைவர் “அடியே..நாங்களும் வால்வோ பஸ் ஓட்டுவோம்ல” என்றபோதே நான் சுதாரித்து இருக்கவேண்டும். நடுவழியில் அரசு பேருந்துக்கு இதழோடு இதழாக முத்தம் கொடுத்ததன் விளைவு, அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொருங்கியிருந்தது. அதுகூட எனக்கு கோபமில்லை. இவ்வளவு நடந்திருக்கிறது. என் பஸ்ஸில் இருக்கும் அனைவரும் குறட்டை விட்டு தூக்கம்..ஒரு பயபுள்ளையும் எழுந்து வரவில்லை. தூக்கம் கலைஞ்சிடுமாம்.இதில் என் பக்கத்தில் உள்ள ஒரு ஆள்
“ஏ.சி” யைப் போடுங்கப்பா, என்று சொல்லியபோது எனக்கு கடுப்பு உச்சத்தில் ஏறியது. ஒருவழியாக எல்லா பார்மாலிட்டிகளும் முடிந்து மதுரை வருவதற்கு 09:30 ஆகி இருந்தது. அங்கிருந்து என்னுடை ஊர் சோழவந்தான் அடைந்தேன்.

4 வருடம் கழித்து செல்கிறேன். நாகரித்தின் பூச்சு, சில இடங்களில் தெரிந்தாலும் இன்னும் மண் மணம் மாறாமல் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமை. காண கண் கோடி வேண்டும். பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் காற்று வந்து உங்களை தாக்கும் பாருங்கள்..புழுதி, பெட்ரோல் கலக்காத காற்று..ஆஹா..இதெல்லாம் கிராமத்தில் மட்டுமே கிடைக்கும். வருடத்திற்கு ஒருமுறையாவது கிராமத்திற்கு சென்று விடுங்கள்..நல்ல காற்றாவது கிடைக்கும்..

வீடு சென்று கதவைத்தட்டினேன். அம்மாதான் திறந்தார்கள்..அப்படியே வந்து கட்டிக் கொண்டார்கள்..மாசு கலக்காத அன்பு. அம்மாவிடம்தான் கிடைக்கும்..கண்களை கவனித்தேன்..கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது..

“ராசா..நல்லா இருக்கியாப்பா..பயணம் நல்லா இருந்ததா..”
“நல்லா இருந்ததும்மா..அப்பா எங்க..”
“உள்ள இருக்காங்கப்பா..இங்கேருங்க..இங்கேருங்க..பையன் வந்து இருக்கான் பாருங்க..”

அப்பா எழுந்து ஓடிவந்தார்..அவருடைய கண்களிலும் தண்ணீர்..

“ராசா..இப்பதான் வந்தியா..2 மாசமாயிடுச்சுடா உன்னைப் பார்த்து” கலங்கினார்கள்..

“அழுகாதிங்கப்பா..ஏற்கனவே அவியிங்க ராசா அடிக்கடி நெஞ்சை நக்குற மாதிரிதான் பதிவு போடுறாரு..போரடிக்குதுன்னு கமெண்ட் வருது..இதுக்குமேல போனா ஓவராயிடும்…”

“என்னப்பா ராசா..ஒன்னும் புரியலையே..”

“இல்ல..குளிக்கனும்..வெண்ணித்தண்ணி போடுறீங்களா..”

“ப்ரூ இருக்கேடா” என்பது மாதிரி “ஹீட்டர் இருக்கேடா” என்று சொன்னார்கள். பாத்ரூம் முழுவதும் கீசர் ஹீட்டர்தான் அடைத்து இருந்தது.. எனக்காக ஒரு ரூமில் ஏ.சி போட்டிருந்தார்கள். ஏதோ நான் ஏசியிலே பிறந்து தவழ்ந்த மாதிரி..கடைசி வரைக்கும் நான் ஏசி போடவேயில்லை. அதற்குள் என் நண்பர்கள் வந்துவிட்டார்கள்.

“வாடா..அமெரிக்கா பங்க்ஸ்(பங்காளியின் சுருக்கமாம்)..நீ வர்றதா அம்மா சொன்னாங்க..அதான் வந்தோம்..துண்டை எடுத்துட்டு வாடா..ஆத்துக்கு போவோம்..”
“டே..நான் இங்கிட்டே குளிச்சிக்குறேன்..”
“பாருடா..அமெரிக்காகாரனுக்கு வெக்கத்தை..நாலாப்பு படிக்குறப்ப துணியில்லாம ஆத்துல குளிச்ச பயதான நீயி..புதுசா எங்கிட்டு வெக்கம்.”

இதற்கு மேல் போனால் மானம், மரியாதை போய்விடும் என்பதால் துண்டை எடுத்துக் கொண்டு உடனே கிளம்பி சென்றேன். கிராமத்து நட்பு இருக்கிறதே, அது வித்தியாசமானது. கூப்பிடுவது கூட கெட்ட வார்த்தையில்தான் கூப்பிடுவார்கள்..ஆனால் ஏதாவது ஒன்னுன்னா உசிரையே கொடுப்பார்கள். எங்கள் ஊர் ஆறு இன்னும் சுருங்கியிருந்தது. ஆனால் ஆற்றை சுற்றிலும் உள்ள தென்னைமரங்கள்..வயல்வெளி..பச்சை பசலேன்று..அதுவும் காலைவேளையில்..கிராமத்தை விட்டு வரவே மாட்டீர்கள்…ஆற்றில் குளிக்க சில பழக்கங்கள் இருக்கின்றன.ஓடும் தண்ணீரில் கன்னாபின்னவென்று குளிக்க மாட்டோம். ஏனென்றால் கரையோரம் ஒதுங்குபவர்கள் எல்லாம் ஓடும் தண்ணிரீல்தான் கழுவிவிடுவார்கள். அதனால் அழகாக ஒரு ஊற்று தோண்டுவோம். அதுவும் ஆங்கில “டீ” வடிவத்தில். புதிய தண்ணீர் ஊற்று எடுத்து வரும். சுத்தமாக இருக்கும்..அதில்தான் குளியல்..4 சுவற்றில் நாம் குளிப்பதெல்லாம் என்ன குளியல்..பசுமை சூழ வெட்டவெளியில் ஊற்றுதண்ணியில் ஒரு முறை குளித்துப் பாருங்கள்..சொர்க்கமே கிடைக்கும்..

பொங்கல்தான் கிராமங்களுக்கு தீபாவளி பண்டிகை. தெருவெங்கும் கோலாகலம்..தெருவுக்கு தெரு மைக் செட் போட்டு கலக்குவார்கள்..முதலில் “விநாயகனே..வினை தீர்ப்பவனே..” என்றுதான் ஆரம்பிக்கும்..அடுத்த பாட்டே “நான் அடிச்ச தாங்க மாட்ட..” என்று களைகட்ட ஆரம்பிக்கும்.அனைவர் முகத்திலும் உற்சாகம்..தெருவில் நடந்தால் பார்ப்பவர் அனைவரும் மாமன் மச்சான் தான்..ஒவ்வொரு வீதியிலும் ஒரு இளைஞர் நற்பணி மன்றம் இருக்கும்..ஒலிம்பிக் ரேஞ்சுக்கு விளையாட்டுப் போட்டிகள் தூள் பரக்கும்..தெருவில் இறங்கி நடந்தால் தெரு முழுவதும் வண்ணக்கோலம் தான். சிறந்த கோலத்திற்கு பரிசு வேறு.. “இந்த விழாவை சிறப்பிக்க வந்திருக்கும் நம்ம மாமா ஒச்சுப்புலி அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்” என்று குரல் மைக் செட்டில் கேட்கும்..ஒச்சுப்பிலி மாமா போன வாரம்தான் ஜெயிலில் இருந்து வந்திருப்பார்..புல் மப்பில் வேறு இருப்பார்..”இங்கு குழுமியிருக்கும் கோடான கோடி பெருமக்களே” என்றுதான் ஆரம்பிப்பார்..அவரைத் தள்ளிக் கொண்டு போவதற்குள் படாதபாடு ஆகிவிடும்..

சாயங்காலம் ஆனால் கபடிப்போட்டி, சைக்கிள் போட்டி, இன்னிசை நிகழ்ச்சி..ஆடல் பாடல்..இன்னிசை நிகழ்ச்சியில் ஏழு கட்டையில் பாடகர் பாடினாலும்..”ங்கொய்யாலே..என்னாமா பாடுறான்யா..” என்று மார்கழி பஜனை மாதிரி தொடையைத் தட்டிக்கொண்டு ரசிப்போம்..ஆடல் பாடல் நிகழ்ச்சி ஆரம்பித்தால் போதும், முன்வரிசையில் அமர்ந்திருக்கும் சின்னஞ்சிறுசுகளை துரத்தி விடுவோம்..வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் பெண்கள் “களவாணிப் பசங்க” என்று சாபம் கொடுத்தபடியே உள்ளே செல்வர்..அவ்வளவுதான் குத்தாட்டம் ஆரம்பிக்கும்..யாராவது ஒரு பெண் ஆடினால் போதும்..அதகளாமாகி விடும்..நம்ம ஒச்சுமாமா புல் மப்பில் 100 ரூபாய் நோட்டை எடுத்து கொண்டு புயலாக கிளம்பி விடுவார்..அவரை தடுத்தி நிறுத்துவதற்கு ஒரு பாதுகாப்பு படையே தேவைப்படும்..ஊரே குத்தாட்டம் போட்டு ஆடி ஒரே அலப்பறைதான்….பாதிபேர், புல் மப்பில் தெருவிலே சாக்கடை பக்கதிலேயே தூங்கி விடுவாயிங்க..

அடுத்த நாளில் பார்த்தால் இதற்கெல்லாம் நேர் எதிர்..எல்லாரும் நல்ல பிள்ளை மாதிரி, கோயிலை நோக்கி படையெடுப்பாயிங்க..திருநீரை முகம் முழுவதும் அப்பிக் கொண்டு “துண்ணூரை வைச்சிக்க பங்ஸ்” என்ற பயபக்தியுடன் நீட்டும்போது அடப்பாவிகளா..நேத்து தண்ணியப் போட்டு இவ்வளவு அலப்பறை பண்ணுனவனாடா நீ என்று கேட்க தோன்றும்..ஹீம்..இதெல்லாம்..சுகமான அனுபவம்..கிராமத்தில் மட்டும்தான் கிடைக்கும்..

பொங்கல் விடுமுறை அனுபவித்து விட்டு நேற்று இரவு சென்னை நோக்கி கிளம்பினேன்..இன்று காலை கிண்டியில் இறக்கி விட்டார்கள்..ஊரே இழவு வீடு மாதிரி இருந்தது..ஒருவேளை பொங்கல் எல்லாம் இங்கிட்டு கொண்டாட மாட்டயிங்களோ..வேளச்சேரிக்கு ஆட்டோ புடித்தேன்..வழக்கம் போல் முகமூடி மாட்டாமல் கொள்ளைக் காசு கேட்டார்கள்..ஆட்டோவில் வரும்போது ஆட்டோக்காரர் பேச்சு கொடுத்தார்..
”என்னப்பா..இன்னா ஊரு”
“மருத அண்ணே..”
“ஆளப்பார்த்தாலே தெரியுது..” (எப்படித்தான் கண்டுபிடிப்பாயிங்களோ)
“ஏண்ணே..பொங்கல் இங்க கொண்டாட மாட்டாயிங்களா,.,.தெருவில ஒன்னையும் காணோமே..”
“தெருவில என்ன பண்ணனும்..அதுதான் வீட்டுல பொங்கல் வைக்கிறோம்ல”

எனக்கு கோபமாக வந்தது..

“ஏண்ணே..ஊராண்ணே..இது..பொங்கல் திருவிழா மாதிரியா இருக்கே,.”

அவ்வளவுதான் ஆட்டோ டிரைவர் காண்டாகிவிட்டார்..

“அடியே..ஊர்க்காரயிங்களுக்கெல்லாம் கொழுப்பு ஜாஸ்தியாகிடுருச்சுடி..ஊரில இருந்து வர்றப்ப ஒரு மஞ்சப்பையே தூக்கிக்கிட்டு வர்றது..நல்லா முன்னேறுன பிறகு சென்னையை திட்டுறது..அடீங்க..”

இதற்கு மேல் பேசினால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாததால் அமைதியாகி விட்டேன்..வீடு செல்லும்முன் பக்கத்து வீட்டுக்காரருக்கு பொங்கல் வாழ்த்து சொல்லிவிடலாம் என்று கதவை தட்டினேன்..ரொம்ப நேரம் கழித்து பக்கத்து வீட்டுக்காரர் கதவைத் திறந்தார்..அதுவும் கால் கதவுதான்..கதவின் இண்டு வழியாக எட்டிப் பார்த்தார்..

“இன்னா..இன்னா வேணும்..”
“நான் பக்கத்து வீட்டுலதான் இருக்கேன்..”
“இருந்துக்கோ..அதுக்கு என்ன இப்ப..”
“பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லலாம்னு.,,.”
“ஓ..ஹேப்பி பொங்கல்..”

சொல்லி விட்டு கதவை சாத்திக் கொண்டார்..டி.வி ஓடும் சத்தம் மட்டுமே காதில் கேட்டது..

“இந்தப் பொங்கலை வேட்டைக்காரனோடு கொண்டாடுங்கள் உங்கள் சன் டீ.வியில்..டீலா..நோ டீலா.,.”

(பதிவின் தொடக்கத்தில் கேட்கப்பட்ட புதிருக்கான விளக்கம்..2 ரூபாயில் உங்களை தீர்த்துக்கட்டுவது எப்படி..தமிழ்நாட்டில் உள்ள 2 ரூபாய் கொடுத்து போகும் எந்த நவீன பொதுக் கழிப்பறையில் உங்களைத் தள்ளி கதவை சாத்திவிடுவேன்..நாற்றம் தாங்க முடியாமல் நீங்களே தற்கொலை பண்ணிக் கொள்வீர்கள்..யப்பா என்னா கப்பு…)

கழிப்பறை ஓனர்களுக்கு ஒரு வேண்டுகோள்..தயவு செய்து “கழிப்பறை” என்று மட்டும் எழுதுங்கள்..”நவீன கழிப்பறை” என்று எழுத வேண்டாம்..எழுதியே தீருவேன் என்று அடம்பிடித்தால்
“பின்நவீனத்துவ” கழிப்பறை என்று வேண்டுமானால் எழுதிக் கொள்ளுங்கள்..

12 comments:

Ullagaram Jamaal said...

Pongal nal vaalthukkal rasa.. ungal padhivai virumbi padipavan... Ungal ellam padhivugalaiyum nagoor dhargavil kalvettaaga padiyanum.

சிங்கக்குட்டி said...

பொங்கல் பதிவுல கூட இப்படி ஒரு குத்தலா :-)

ஆனாலும் இடுகை அருமை.

வானம்பாடிகள் said...

:)).ஆக எப்படியோ ஊருக்கு போக டிக்கட் கிடைச்சதா:))

Ramesh said...

// “பின்நவீனத்துவ” கழிப்பறை //

Aha! :-)

ஆரூரன் விசுவநாதன் said...

ரசிக்கும் படியான பகிர்வு.......மிகவும் ரசித்தேன்////

என்ன கொடும சார் said...

அது சரி கெப்பிட்டல் "டி" யா ஸ்மோல் "டி"யா?

Anonymous said...

எங்கோ படித்தது.
அதே கழிப்பறை + கம்பியுட்டரில் பில் = நவீன கழிப்பறை
- நவாப்ஜான்

குப்பன்.யாஹூ said...

for writing post it may be easy and fun, but in reality villages and farming do not provide job and employment.

villages are good for touring or one or two days stay.

அவிய்ங்க ராசா said...

Thanks Kuppan. Nhavab, vaanambadi, aruran, ramesh, singa kutti, jamal..

taaru said...

ஊருக்கு வந்து இருந்தீகளா? சொல்லவே இல்ல.. நல்லாருங்கண்ணே...
ரெண்டு இடத்துல கலங்கடிசுட்டீங்க .. வாழ்த்துக்கள்..

மணிப்பக்கம் said...

// “கழிப்பறை” என்று மட்டும் எழுதுங்கள்..”நவீன கழிப்பறை” என்று எழுத வேண்டாம் //

இதே டயலாக்-கை நான் எனது நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன்! ;)

விடுங்க ராசா,

இது மாதிரி நிறைய .. 'சிங்காரசென்னை' ....

பாவக்காய் said...

raasa, kalakkal post... i was laughing like anything.. thanks buddy..

Post a Comment